Sunday, December 30, 2007

நேபாள மன்னராட்சியின் முடிவு

பேநசீர் புட்டோவின் படுகொலையால் பக்கத்து நாடான நேபாளத்தில் நடப்பது வெளியே தெரியாமல் அமுங்கிவிட்டது.

மன்னர் ஞானேந்திரா பிப்ரவரி 2005-ல் நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தார். ஏப்ரல் 2006-ல் நாட்டில் பொதுமக்கள் தெருவுக்கு வந்து புரட்சி செய்தனர். ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ராணுவம் மன்னரிடமிருந்து சற்றே விலகியது. மாவோயிஸ்டுகளும் குடியாட்சி முறைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட, மன்னர் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டி வந்தது.

அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.

புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவர கட்சிகளும் மாவோயிஸ்டுகளும் முடிவு செய்தனர். ஆனாலும் உடனடியாக மன்னரை என்ன செய்வது என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. கடைசியாக மாவோயிஸ்டுகளின் வற்புறுத்தலால் இரண்டு நாள்களுக்கு முன்னதாக மன்னர் என்னும் பதவியை ஒழித்துக்கட்ட நாடாளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.

ஏப்ரல் 2008-ல் அரசியல் அமைப்புச் சட்ட சபை தேர்வாகும்போது நேபாளம் ஒரு குடியரசாகும்.

மக்கள் புரட்சிக்கு சரியாக இரண்டாண்டுகள் கழித்து மன்னர் பதவிக்கு மூடுவிழா நடத்த உள்ளனர்.

அதைத் தொடர்ந்து நாட்டில் எந்தக் குழப்பமும் வராமல் அனைத்துக் குழுவினரும் வலுவான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுவோம்.

முந்தைய பதிவுகள்:
நேபாள் குடியாட்சிக்கு ஆபத்து
Viva Le Nepal
மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே!

Friday, December 28, 2007

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian Writing

Indian Writing - Stall Number 162

Indian Writing பதிப்பின் நோக்கம் இந்திய மொழிகளிலிருந்து தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்துக்கு மாற்றுவது. முதலில் தமிழில் ஆரம்பித்துள்ளோம். அடுத்து மலையாளம் ஆரம்பமாகவுள்ளது.இதுவரையில் 20 புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அவைதவிர, மூன்று ஒரிஜினல் ஆங்கில நாவல்களையும் பதிப்பித்துள்ளோம். இவை மூன்றுமே இந்த கதாசிரியர்களின் முதல் முயற்சிகள்.

சமீபமாக வந்துள்ளவற்றுள் முக்கியமாகச் சொல்லப்படவேண்டிய நான்கு நாவல்கள்:

1. இரா.முருகனின் அரசூர் வம்சம் - The Ghosts of Arasur
2. யூமா வாசுகியின் ரத்த உறவுகள் - Blood Ties
3. ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு - Lizzy's Legacy
4. சா.கந்தசாமியின் சூரிய வம்சம் - Sons of the Sunமுந்தைய பதிவு: ஆடியோவில் தமிழ் சிறுகதைகள்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்

ஆடியோ புத்தகங்கள்: சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 114

தமிழில் உலகத்தரத்திலான எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தொடங்கி இன்றுவரை பல எழுத்தாளர்கள், சிறுகதையின் பல சாத்தியங்களை முயன்று பார்த்துள்ளனர். தேர்ந்தெடுத்த பல எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை ஆடியோ வடிவில் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். குறைந்தது நூறு (100) சிறுகதை ஆசிரியர்கள்; ஆளுக்குப் பத்து சிறுகதைகளாவது, என்பது திட்டம்.

அதன் முதல்படியாக, பத்து சிறுகதை எழுத்தாளர்களது கதைகளை - தனித்தனியாக - ஆடியோ சிடி (எம்.பி.3 வடிவில்) கொடுத்துள்ளோம். முதல் பத்தில் வருபவர்கள்: புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, தேவன், அ.முத்துலிங்கம், இரா.முருகன், சுப்ரமண்ய ராஜு.

சிறுகதைகள் வாசிப்பது குறைந்து வரும் இந்த சமயத்தில், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.முந்தைய பதிவு: மதியின் அடடே கார்ட்டூன் தொகுதிகள்

Thursday, December 27, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்

சென்னை புத்தகக் கண்காட்சி 4-17 ஜனவரி 2008, பூந்தமல்லி நெடுங்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் பல்வேறு பதிப்புகள் கீழ்க்கண்ட அரங்குகளில் இருக்கும்.

1. கிழக்கு பதிப்பகம் (இலக்கியம் தவிர்த்து பிற புத்தகங்கள்) + வரம் வெளியீடு + நலம் வெளியீடு: அரங்கு எண் P28

2. பிராடிஜி புத்தகங்கள்: அரங்கு எண் 359, 360

3. ஆடியோ புத்தகம்: அரங்கு எண் 114

4. இண்டியன் ரைட்டிங் (ஆங்கிலப் புத்தகங்கள்): அரங்கு எண் 162

கிழக்கின் இலக்கியப் புத்தகங்கள் ‘விருட்சம்' அரங்கில் மட்டுமே கிடைக்கும். அரங்கு எண்: 378, 379

பேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போரும்

இனி சந்தேகமே இல்லை. பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடிக்கப்போகிறது - அல்லது வெடித்தே விட்டது. பேநசீர் புட்டோ இன்று ஏகே 47 துப்பாக்கிகளால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கழுத்தில் பாய்ந்த ஒரு குண்டால் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பேநசீர் பேசவேண்டிய ஒரு கூட்டத்தின்மீது தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. பேநசீரைக் கொலை செய்யப்போவதாக தாலிபன்கள் ஏற்கெனவே மிரட்டியுள்ளனர்.

இது தாலிபன்கள் செய்த காரியமா அல்லது முஷரஃப் அல்லது ஐ.எஸ்.ஐ தாலிபன்கள் போர்வையில் தாங்களே செய்ததா என்று தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கும்?

1. தேர்தல் நிறுத்தப்பட்டு முஷரஃப் மீண்டும் நெருக்கடி நிலையை விதிப்பார்.

2. இம்முறை அரசியல்வாதிகளுக்கு பதில் தாலிபன்களை நிஜமாகவே அடித்துப் பிடிக்கலாம். பதிலுக்கு தாலிபன்கள், அடிப்படைவாதிகள் திருப்பித் தாக்கினால் பெரும் குழப்பம் விளையும்.

3. சிந்தில் - பேநசீரின் கோட்டை - கடுமையான அடிதடி நடக்கும். மிலிட்டரியும் பேநசீரின் ஆதரவாளர்களும் தினமும் மோதுவார்கள். முஷரஃப்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று பேநசீர் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

4. பலூசிஸ்தான் இந்த நேரத்தை ஆதாயமாக எடுத்துக்கொண்டு, தனியாகப் பிரிவதற்கான சாத்தியங்களை ஆராயலாம்.

5. வாசிரிஸ்தான் போன்ற இடங்களில் தாலிபன்களுடன் சண்டைபோடுவதற்கு பதிலாக பாகிஸ்தான் மிலிட்டரி முக்கியமான நகரங்களிலேயே இந்தச் சண்டைகளில் ஈடுபடவேண்டும். இதனால் தாலிபன்களுக்குத்தான் ஆதாயம்.

6. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு என்ன ஆகுமோ என்று அமெரிக்கா, இந்தியா வயிற்றில் புளியைக் கரைக்கும்.

7. காஷ்மீர் போராளிகளுக்கு ஸ்பெஷலாக உதவி செய்ய பாகிஸ்தானிடம் இப்போது நேரம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு இந்தியா உடனடியாக காஷ்மீர் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதைச் செய்யலாம்.

8. இந்தியா எல்லையில் கவனமாக இருக்கவேண்டிய நேரம் இது. பாகிஸ்தான் ராணுவத்தின் சில பகுதிகள் சொந்தமாக இந்தியப் படைகளுடன் சண்டைபோட முயற்சி செய்யலாம்.

9. பிரச்னை மிகவும் பெரிதானால் பாகிஸ்தான் அகதிகள் இந்தியாவுக்கு வர நேரிடும். அதை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பதையும் கவனிக்கவேண்டும்.

முந்தைய பதிவுகள்:
பாகிஸ்தானில் நெருக்கடி நிலை
மசூதியின் நிறம் சிவப்பு
பாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா
பாவம் முஷரஃப்!

நீல பத்மநாபனுக்கு தமிழில் சாகித்ய அகாதெமி விருது

நேற்றே இந்தத் தகவல் கிடைத்தது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இன்று தினசரிகளில் வந்துவிட்டது.

நாகர்கோவிலைச் சேர்ந்த நீல பத்மநாபனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி இலக்கிய விருது கிடைத்துள்ளது. அவரது இலையுதிர் காலம் என்ற நாவலுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

நீல பத்மநாபனது இரண்டு மிக முக்கியமான, அதிகமாகப் பேசப்பட்ட நாவல்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்ற எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தேடிக்கொண்டிருந்த சமயம், ஏதோ காரணத்தால் இவருக்கு ஏற்கெனவே சாகித்ய அகாதெமி கிடைத்திருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் இதுவரையில் கிடைக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது! இவருடைய பள்ளிகொண்டபுரம் என்ற நாவலின் ஆங்கில வடிவத்தை Where The Lord Sleeps என்று பதிப்பித்துள்ளோம்.

நீல பத்மநாபன் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதும் திறன் வாய்ந்தவர். இவரது சில சிறுகதைகளை விரைவில் மலையாளத்தில் வெளியிட உள்ளோம்.

நீல பத்மநாபனுக்கு வாழ்த்துகள்!

முந்தைய பதிவுகள்:
சாகித்ய அகாதெமி விருதுகள் - 2005
ஈரோடு தமிழன்பனுக்கு சாகித்ய அகாதெமி 2004
வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதெமி 2003

Tuesday, December 25, 2007

NHM Writer - தமிழில் எழுத

இன்று மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களில் (விண்டோஸ்) தமிழில் எழுத சில மென்பொருள்கள் பயன்பட்டுவருகின்றன. பல எழுத்துக்குறியீடுகள் இன்னமும் புழக்கத்தில் உள்ளன. எழுத்துக்களை உள்ளிடுவதிலும் பல முறைகள் புழக்கத்தில் உள்ளன. டைப்ரைட்டிங் முறை; தமிழ்99 முறை; ஃபொனெடிக் எனப்படும் ஒலிவடிவ உள்ளீடு, பாமினி, இன்னபிற.

நாளையே புதிய யூனிகோட் குறியேற்றம் தமிழில் வரலாம். (வராமலும் போகலாம்.)

அதேபோன்று இந்திய மொழிகள் பலவற்றிலும் பல எழுத்துக்குறியீடுகள், பல உள்ளீட்டு முறை ஆகியவை இருக்கலாம்.

உலக மொழிகள் பலவற்றுக்கு இன்று யூனிகோட் எழுத்துகளை அடிக்க மென்பொருள் இல்லாமல் இருக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வாக, மிகச் சிறிய ஒரு கோப்பாக, ஒரு செயலியை வடிவமைத்துள்ளோம். பெயர் NHM Writer. இப்போதைக்கு தமிழில் பல்வேறு உள்ளீட்டு முறைகளில், எழுத்துக் குறியீடுகளில் எழுத்துகளை உருவாக்க உதவும் ப்ளகின் (plugin). சுமார் 800 கிலோபைட் அளவுள்ளது. மேலும் இந்த மென்பொருளை பொதித்துக் கொண்டால், விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் தமிழ் யூனிகோட் உடையாமல் தெரிய என்ன செய்யவேண்டுமோ அதனையும் செய்துவிடும்.

இப்போதைக்கு விண்டோஸ் எக்ஸ்பியில் முழுமையாகவும், விண்டோஸ் விஸ்டாவில் ஓரளவுக்கும் சோதனை செய்யப்பட்டு இயங்குறது. ஓரிரு பிழைகள் இருக்கலாம். தெரியவந்தால் அதனைச் சரி செய்து தருகிறோம்.

எந்தப் புதிய மொழியாக இருந்தாலும், எழுத்துக் குறியீடாக இருந்தாலும், உள்ளீட்டு முறையாக இருந்தாலும், அவற்றை ஒரு xml கோப்பாக உருவாக்கி பயனரே சேர்த்துக்கொள்ளலாம். உடனே அந்த மொழி, குறியீடு, உள்ளீட்டு முறைக்கு ஏற்றவாறு இந்தச் செயலி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். புதிதாக மென்பொருளை மாற்றி வடிவமைக்க வேண்டியதில்லை.

இந்த மென்பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம்.

மென்பொருளைக் கீழே இறக்கிக்கொள்ள

இந்த மென்பொருளை லினக்ஸுக்கு திறமூல அடிப்படையில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்த வேலை முடிந்ததும், அதுபற்றிய தகவலை அளிக்கிறேன்.

இந்த மென்பொருளுடன், ஃபொனெடிக் முறையில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்றவற்றுக்கு யூனிகோட் எழுத்துக்களை அடிக்கும் வண்ணம் உருவாக்கியுள்ளோம். கூடியவிரைவில் டைப்ரைட்டிங் முறையையும் சேர்த்து வெளியிடுவோம்.

இதுகுறித்து மேற்கொண்டு தகவல் வேண்டினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Saturday, December 22, 2007

கார்ட்டூன்கள்: மதியின் 'அடடே' - 6 தொகுதிகள்

கடந்த பத்தாண்டுகளாக மதி தினமணி நாளிதழில் கார்ட்டூன்கள் வரைந்து வருகிறார். இதுவரை இரண்டு கார்ட்டூன் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது கிழக்கு, மதியின் தேர்ந்தெடுத்த பாக்கெட் கார்ட்டூன்களை ஆறு தொகுதிகளாகக் கொண்டுவருகிறது.மதியின் கார்ட்டூன்களுக்காகவே தினமணி வாங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆர்.கே.லக்ஷ்மண், சுதீர் தர் போன்றோரின் கார்ட்டூன் புத்தகங்கள் ஆங்கிலத்தில் பிரபலமாக விற்பனையாகின்றன. தமிழில் தினசரி செய்தித்தாள்களில் மதி வரைந்ததைப்போல் பல்வேறு துறைகளைப் பற்றி யாரும் செய்ததில்லை. எனவே தமிழில் அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களைப் பற்றிய கார்ட்டூன் புத்தகங்களும் இதற்குமுன் வந்ததில்லை.

மதியின் கார்ட்டூன்கள் தமிழக அரசியல், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம், பொதுஜனங்களின் கவலைகள், சினிமா, கலாசார மாற்றங்கள், நகர்ப்புற நெருக்கடிகள், சமூகச் சீரழிவுகள், கிரிக்கெட் என பல துறைகளை விமரிசிக்கிறது. ஒரு நூறு பக்கங்களில் சொல்லவேண்டியவற்றை சில கீறல்களில் மதி காட்டிவிடுகிறார்.

முந்தைய பதிவு: எம்.ஆர்.ராதா

Friday, December 21, 2007

திரைக்கலைஞர்கள் வாழ்க்கை: எம்.ஆர்.ராதா

சந்திரபாபு, சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு ஸ்மிதா, தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் - வரிசையில் அடுத்து இப்பொழுது கிழக்கு மூலம் வெளியாகிறது எம்.ஆர்.ராதா. ராதா-எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டமுழு விவரங்களும் சுதாங்கனின் சுட்டாச்சு, சுட்டாச்சுவில் ஏற்கெனவே பதிவாகியிருந்தன.

ஆனால் ராதா என்னும் சினிமாக் கலைஞனை, எம்.ஜி.ஆருடனான துப்பாக்கிச் சண்டையின் வில்லனாக மட்டும் பார்ப்பது அவருக்குச் செய்யும் அநீதி.

ராதா ஒரு மேவரிக். சிவாஜி, எம்.ஜி.ஆர் சினிமாக்களில் பிரபலமாவதற்கு முன்பிருந்தே ராதா, மேடை நாடகங்களில் முடிசூடாச் சக்ரவர்த்தியாக இருந்தார். தானே கதைகளை எழுதி முக்கியப் பாத்திரங்களில் நடித்தார். நடிக்கும்போதே இம்ப்ரவைஸ் செய்யக்கூடியவர். அப்பொழுதைய தமிழக அரசு அவரது நாடகங்களைத் தடை செய்ய முயன்றபோது, அதை எதிர்த்து, பலவிதமான தந்திரமான வழிகளில் போராடி, அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தவர்.

தனது மனத்தில் பட்டதை ஒளிவுமறைவின்றிப் பேசக்கூடியவர். சந்திரபாபுவைப் போன்றே.

இந்தப் புத்தகத்தில் இருந்து ராதாவின் வார்த்தைகளில் சில:

*

தூக்குமேடையில் ஒரு காட்சி. ராதா ஒரு பெண்ணைத் தன்னுடன் வைத்திருப்பார். வேலைக்காரன் வருவான்.

'யாருண்ணே இது?'
'அண்ணிடா.'
'அண்ணி காலைப் பாருங்க'
'என்ன?'
'யானைக்கால் மாதிரி இருக்கு.'
'போடா, பிள்ளையாருக்கே யானைத்தலை இருக்கு. இதுவரைக்கும் ஒருபயலும் கேட்கலை. கால் யானைக்காலா இருக்கறதை சொல்ல வந்துட்டான்.'

*

'உடனடியாக எல்லோரும் சேர்ந்து நான் நடத்தும் ராமாயணத்தை தடைசெய்ய ஏற்பாடு செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன். தடை செய்யப்பட்டால்தான் தற்பொழுது வந்திருக்கும் நாடகப் புதுச் சட்டத்தின் மூலம் ராமாயணம் பற்றி உயர்நீதி மன்றத்தில் விவாதிக்க முடியும். ராமன் குடிகாரன், கடவுளல்ல அயோக்கியன் என்பதை விவாதித்து சட்டத்தின் முலம் ராமாயணம் புனிதமான கதைதானா, மக்களுக்குத் தேவைதானா என்பதை முடிவு செய்ய முடியும். அப்பொழுதுதான் குடிகாரக் கடவுளான ராமன் கோர்ட்டின் மூலம் நாட்டில் தடுக்கப்படுவான். நாடும் நாட்டு மக்களும் ராமாயணத்தின் யோக்கியதையை, ஊழல்களை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். கோர்ட் ஏறட்டும், குடிகாரக் கடவுள் ராமன்!'

*

'பகவானுக்கு கோயில் கட்டுறேன்னு சொல்லுற. மனுசனுக்கு வீடு கட்டுற மாதிரி. பகவான் வர்ற மனிதர்களுக்கெல்லாம் தரிசனம் கொடுக்கறதுக்காக விசிட்டிங் ரூம் - கருவறை. கட்டியிருக்குற ஆல்ரைட். அதேபோல பகவானுக்கு ஆறுகால பூஜை ஆறு வேளை பிரசாதம் சமையல் பண்ண கிச்சன் ரூம் - மடப்பள்ளி. கட்டியிருக்குற ஆல்ரைட். அதே மாதிரி பகவான் தூங்குறதுக்கு பெட் ரூம் - சயன அறை. கட்டியிருக்குற ஆல்ரைட். நான் தெரியாமக் கேக்குறேன், இந்த ஆறுகால பூஜையில ஆறுவேளை பிரசாதம் சாப்பிட்ட பகவான், காலைல எழுந்தரிச்ச உடனே வெளிய போறதுக்கு ஏன்டா கக்கூஸ் கட்டல டேய்.'

*

ராதா வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மட்டும் தன்னை முன்வைக்கவில்லை. அன்றைய சமூகத்தில் தனக்கு ஒவ்வாதவற்றையெல்லாம் உடனடியாகத் தனது நாடகத்தில் கேலி செய்தார்.

ராதாவுக்கு சினிமாவைவிட நாடக மேடையே அதிகம் பிடித்திருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில்தான் நாடகம் அழிந்து அதனிடத்தில் சினிமா உயரத் தொடங்கியிருந்தது. சினிமாவில் தனது இமேஜை ஒரு சிவாஜியும் ஒரு எம்.ஜி.ஆரும் வளர்த்துக்கொள்ள முயன்றதுபோல ராதா செய்யவில்லை.

தமிழ் மேடை நாடகத்தின் கடைசிப் பெரும் கலைஞன் எம்.ஆர்.ராதா.

முந்தைய பதிவு: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர்

தொகுப்புகள்: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர்

ஒவ்வோர் ஆண்டும், புத்தகக் கண்காட்சிக்காக, இலக்கிய வரிசையில் பெரும் தொகுப்புகள் ஒன்று அல்லது இரண்டை வெளியிடுவது கிழக்கின் வழக்கம்.

2005 கண்காட்சிக்கு அசோகமித்திரனின் கட்டுரைகளின் முழுத்தொகுப்பாக (ஒன்று | இரண்டு) கெட்டி அட்டை - சுமார் 1900 பக்கங்கள் - புத்தகங்களை வெளியிட்டோம். 2006-ல் ஆதவன், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்புகள். 2007-ல் இரா.முருகன் சிறுகதைத் தொகுப்பு, ஹோமரின் இலியட் என்னும் இதிஹாசத்தின் நாகூர் ரூமியின் தமிழ் மொழிபெயர்ப்பு. அந்த வரிசையில் இந்த ஆண்டு, இரண்டு முக்கியமான புத்தகங்களைக் கொண்டுவருகிறோம்.

ஒன்று இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களின் முழுத்தொகுப்பு. இதில் அவர் எழுதிய 15 நாடகங்கள் உள்ளன: மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால யந்திரங்கள், நந்தன் கதை, கொங்கைத் தீ, ஔரங்கசீப், ராமாநுஜர், இறுதி ஆட்டம், சூறாவளி, பசி, கோயில், தர்மம், நட்டக்கல், புனரபி ஜனனம், புனரபி மரணம், வீடு.

முன்னுரையில் இந்திரா பார்த்தசாரதி சொல்வதிலிருந்து ஒரு சிறு துண்டு இங்கே:
தில்லியில் அப்பொழுது ‘Enact’ என்ற ஒரு பத்திரிகையை ராஜேந்திர பால் என்பவர் நாடகத்துக்கென்றே நடத்தி வந்தார். இவரால்தான், இவர் நடத்தி வந்த பத்திரிகையால்தான், இன்று அகில இந்திய நாடக உலகில் அறியப்படுகின்ற மோஹன் ராகேஷ், விஜய் டெண்டுல்கர், கிரிஷ் கர்னார்ட், பாதல் சர்க்கார் முதலியவர்கள் பிரபலமானார்கள். ‘Enact’ ல், இவர்களுடைய நாடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பிரசுரமாகின. ‘போர்வை போர்த்திய உடல்கள்’ இப்பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியானது. மொழி பெயர்த்தவர் என்.எஸ்.ஜகன்னாதன். இதைத் தொடர்ந்து நான் எழுதிய பல நாடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘Enact’ ல் வெளிவந்தன. இவை ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் மொழிபெயர்ப்பாகி மேடை ஏறின. தில்லியிலும், பிற இடங்களிலும், நான் நாவலாசிரியன் என்பதைக் காட்டிலும், நாடக ஆசிரியனாக அறியப்பட்டதற்கு இதுவே காரணம். ‘நந்தன் கதையும்,’ ‘ஔரங்கசீப்’பும் தமிழில் மேடை ஏறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஹிந்தியில் அரங்கமேறின.

நாடகம் எழுதுவதை நான் மிகவும் விரும்புகின்றேன். ஆனால் என் பல நாடகங்கள் தமிழ் நாட்டில், நான் எழுதிய மொழியில், மேடையேறவில்லை என்ற குறை எனக்கு உண்டு.
மற்றொரு கெட்டி அட்டைப் புத்தகம், யுவன் சந்திரசேகரின் 37 சிறுகதைகளின் தொகுப்பு. அவரது முன்னுரையிலிருந்து சிறு பகுதி.
அப்பா, பகல் கனவுன்னா என்னப்பா?

அப்பா சொன்னார்: கனவுன்னா, தூங்கும்போது வரும். பகல் கனவு முழிச்சிண்டிருக்கும்போது வரும்.

வளர்ந்து வரும் பாதையில் நானாகச் சில வித்தியாசங்கள் தெரிந்துகொண்டேன். உளவியலாளர்கள் சொல்லும் கனத்த வித்தியாசம், பகற்கனவு மேல்மன ஆசைகள் உண்டாக்கும் சித்திரம்; கனவு ஆழ்மன விழைவுகளும் நிராசைகளும் உருவாக்குவது.

தவிர, யாருக்கும் தெரியுமே, கனவு தானாக வருவது. பகற்கனவு நாமாக உண்டாக்கிக்கொள்வது.

எனக்கு முக்கியமானதாகப் படும் இன்னொரு விஷயம், பகற்கனவை விட்ட இடத்திலிருந்து தொடர முடியும். கனவை அவ்வாறு தொடர்வதற்கில்லை. குறுக்கீடுகள் எதுவும் பகற் கனவைக் குலைப்பதில்லை.

எழுத்தைப் பொறுத்தவரை கனவும் பகற்கனவும் ஒருசேரப் பிணைந்த ஒரு புலமாகத் தோன்றுகிறது. என்ன எழுதவேண்டும் என்பது ஒரு கனவின் தன்மையோடுதான் கருக்கொள்கிறது. எப்படி எழுதவிருக்கிறோம் என்பது ஒரு பகற்கனவைப் போலவே வளர்ச்சி கொள்கிறது.

கடந்த எட்டு வருடங்களில் நான் தொடர்ந்து கண்டுவந்த கனவுகள் மற்றும் பகற்கனவுகளின் ஒரு பகுதிதான் இந்தத் தொகுப்பாக நிகழ்ந்திருக்கிறது.

பெரும்பாலான கதைகள் கிருஷ்ணன் என்ற மையக் கதாபாத்திரத்தின் வழியாகச் சொல்லப்பட்டவை. தன்மை ஒருமையில் கதை சொல்வதன் வசதி கருதி அவ்வாறு எழுதினேன். எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் கதையுடன் ஒருவித உணர்வுநெருக்கம் தன்னியல்பாகவே உருவாவதற்கும் தோதுவாக இருக்கும் என்று. பிழைதிருத்துவதற்காக இவற்றை மொத்தமாகப் படிக்கும்போது, கிருஷ்ணனின் வயது முதல் அவனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவன் எதிர்கொண்ட தருணங்கள், புறச் சூழல் இவற்றில் பலவிதமான தகவல் குளறுபடிகள் இருப்பதைக் கவனிக்க முடிந்தது. எல்லாக் கதைகளையும் கிருஷ்ணன் வழியாகச் சொல்வது ஒரு முன் தீர்மானத்தின்படி நடந்தது அல்ல என்பதாலும், இவை எல்லாமே தனித்தனிக் கதைகள் என்பதாலும் இவ்வாறு நேர்ந்துவிட்டிருக்கிறது.

தவிர, இவை புனைகதைகள்தாம்; என்னுடைய தன் வரலாறோ, கிருஷ்ணன் என்ற அசலான நபரின் வரலாறோ அல்ல என்பதால்,மேற்படி முரண்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
முந்தைய பதிவு: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்

Thursday, December 20, 2007

பணம்: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்

பங்குச்சந்தை தொடர்பாக 'அள்ள அள்ளப் பணம்' என்ற பெயரில் தொடராகப் புத்தகங்களைக் கொண்டுவருகிறோம். இந்தத் தொடர் புத்தகங்களின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன்.

அள்ள அள்ளப் பணம் - 1, ஜனவரி 2005 புத்தகக் கண்காட்சிக்குச் சற்றுமுன் வெளியானது. பங்குச்சந்தை பற்றிய அடிப்படைகளை எளிய மொழியில் விளக்கிப் புரிய வைத்தது.

இரண்டு வருடங்கள் கழித்து, அள்ள அள்ளப் பணம் - 2, ஜனவரி 2007 புத்தகக் கண்காட்சியின்போது வெளியிடப்பட்டது. இதில் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிக்கல் அனாலிசிஸ், அடிப்படைப் பொருளாதாரத்தை வைத்து சந்தை எப்படி நடந்துகொள்ளும் என்பதைக் கணிப்பது ஆகியவை இருந்தன.

இந்தமுறை, ஜனவரி 2008 புத்தகக் கண்காட்சிக்கு, இந்தத் தொடரின் அடுத்த பகுதியாக 'ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்' பற்றிய அறிமுகம் வருகிறது.

எதிர்காலப் பங்கு ஒப்பந்தங்கள், இன்று படுவேகமாக வளர்ந்து வரும் துறை. அதை எளிதாக, கதை வடிவில் சொல்லிப் புரிய வைக்கிறது இந்தப் புத்தகம்.

*

பங்குச்சந்தையா, மோசம் போய்விடுவோம் என்று சிலர் பயப்படலாம். ஆனால் அதே சமயம் பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபங்களை விடக்கூடாது என்று நினைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது இவர்களுக்கு உதவியாக இருக்கும்.

'நேசமுடன்' ஆர்.வெங்கடேஷ் எழுதியுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கையேடு இவர்களுக்குப் பயன்படும்.


முந்தைய பதிவு: லிவிங் ஸ்மைல் வித்யா

ஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை - லிவிங் ஸ்மைல் வித்யா

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4, 2008 அன்று தொடங்குகிறது. அதையொட்டி பல பதிப்பகங்களும் பல புத்தகங்களை சிறப்பாகத் தயாரித்திருப்பார்கள்.

நியூ ஹொரைசன் மீடியா சார்பாக, கிழக்கு பதிப்பகம், வரம் வெளியீடு, நலம் வெளியீடு, பிராடிஜி புத்தகங்கள் (தமிழ், ஆங்கிலம்), புலரி, இண்டியன் ரைட்டிங்க், ஆக்சிஜன் புக்ஸ், கிழக்கு/வரம் ஒலிப் புத்தகங்கள் என பல பதிப்புகள் வெளியாகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என்று நான் கருதுபவற்றை அடுத்த சில பதிவுகளில் எழுத உள்ளேன்.

முதலாவதாக

வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கைப் பயணம் பற்றிய நூல். இதன் சிறப்பு ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய வித்யா இன்று தொண்டு அமைப்பு ஒன்றில் பணிபுரிகிறார். அவர் எடுத்த முடிவால் அவரது வாழ்க்கையிலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்னைகள், இந்தியாவில் திருநங்கைகளின் நிலை, அவர்களது போராட்டம், அவர்களது அபிலாஷைகள் போன்றவற்றை இந்தப் புத்தகம் வெளிக்கொண்டுவருகிறது.

ஒவ்வோர் அத்தியாயமாக அவர் இந்தப் புத்தகத்தை அனுப்பும்போதும் நான் படித்துவந்தேன். இதை எழுதும்போது வித்யா எத்தனை மனச்சங்கடங்களை அனுபவித்திருப்பார் என்பதை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் புத்தகம் பலரையும் சென்றடையவேண்டும் என்பதால் உடனடியாகவே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கொண்டுவந்துவிடவேண்டும் என்று செயல்பட்டோம்.

திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.