Saturday, January 28, 2006

தமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்

கொல்காதா, தில்லியில் மட்டுமல்ல; திருச்சியிலும் பாண்டிச்சேரியிலும் தற்போது புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன.

பாண்டிச்சேரி காந்தி திடல், பீச் ரோட் - 23 ஜனவரி முதல் தொடங்கி 3 பிப்ரவரி முதல் நடக்கிறது.

திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி (சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில்) - 27 ஜனவரி தொடங்கி 6 பிப்ரவரி வரை நடக்கிறது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 பிப்ரவரி தொடங்கி பத்து நாள் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது.

அனைத்து இடங்களிலும் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டால்கள் உள்ளன.

Friday, January 27, 2006

கொல்காதா முதல் தில்லி வரை

கொல்காதாவிலிருந்து நேற்று கிளம்பி தில்லி வந்தோம். தில்லியில் பிரகதி மைதானில் உலகப் புத்தகக் கண்காட்சி, கிட்டத்தட்ட 1,000 பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று ஆரம்பம்.

தமிழிலிருந்து ஐந்துபேர் கலந்துகொள்கிறார்கள். காலச்சுவடு, சுரா புக்ஸ், பாவை பதிப்பகம், அமுதம் (தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகங்கள் சங்கம்??), சாந்தா பதிப்பகம் ஆகியவை. கிழக்கு பதிப்பகம் போன்ற பலரது புத்தகங்கள் சில காலச்சுவடு கடையில் உள்ளன. சுரா புக்ஸ் ஸ்டாலில் அவர்களது தமிழ், மலையாளம், ஆங்கிலப் புத்தகங்கள் உள்ளன.

மொத்தமாக எட்டு அரங்குகளில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கு எண் 1 ஆங்கிலப் புத்தக விற்பனையாளர்கள், சமூகம், தொழில்நுட்பம் போன்ற சில குறிப்பிட்ட துறைகளில் ஆங்கிலத்தில் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள். அரங்கு 2, 3, 4 மூன்றிலும் ஹிந்தி பதிப்பாளர்கள் மட்டும். கிட்டத்தட்ட 300 ஹிந்தி பதிப்பாளர்கள் வந்துள்ளனர். அரங்கு 5-ல் பிற மொழி - சமஸ்கிருதம், மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, குஜராத்தி ஆகியோர் உள்ளனர். அரங்கு எண் 6-ல் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டும்!

அரங்கு எண் 14-ல் அறிவியல், தொழில்நுட்பப் பதிப்பகங்கள், வெளிநாட்டுப் பதிப்பகங்கள். அரங்கு எண் 18-ல் இந்தியாவிலிருந்து ஆங்கிலத்தில் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் என்று வகை செய்யப்பட்டுள்ளன.

இன்று அரங்குகள் 1 முதல் 5 வரை பார்த்தோம். அதற்குள் கால்கள் கெஞ்சின. மீதி நாளைதான். ஆங்கிலம் (அரங்கு 18) மிகப்பெரியதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இங்கு பார்த்தவை பற்றி விரிவாக எழுத நிறைய நேரம் செலவாகும். அவை பிறகு.

Thursday, January 26, 2006

கொல்காதா புத்தகக் கண்காட்சி 2006

[கல்கத்தாவா, கொல்கத்தாவா - இரண்டும் இல்லையாம். 'கொல்காதா'தான் சரி என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.]

கொல்காதா புத்தகக் கண்காட்சியைப் பார்க்க நேற்றும் இன்றும் இங்கு வந்திருக்கிறேன். 9 லட்சம் சதுர அடியில் 'மைதான்' என்னும் பரந்த வெளியில் கிட்டத்தட்ட 600 புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், 180 வங்க மொழி சிறு பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ளும் இந்த 31வது வருடப் புத்தகக் கண்காட்சி உலகிலேயே ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்கு அடுத்த இரண்டாவது பெரியது என்று சொல்லப்படுகிறதாம்.

சென்னையில் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு இங்கு வரும் எனக்கு பிரமிப்பு மட்டும்தான் உள்ளது. சில ஃபோட்டோக்கள் எடுத்துள்ளோம், ஆனால் இணையத்தில் சேர்க்க ஓரிரு நாள்கள் ஆகும்.

முக்கியமாக:

1. சென்னையில் ஒரு புத்தக ஸ்டால் 100 சதுர அடி, 150 சதுர அடி, அல்லது 200 சதுர அடி. அவ்வளவே. கொல்காதாவிலோ, 120 சதுர அடியில் ஆரம்பித்து 1500 சதுர அடி வரையில் ஸ்டால்கள் வழங்குகிறார்கள்.

2. சென்னையில் அத்தனை ஸ்டால்களுமே ஒரே மாதிரியான வடிவமைப்புடன் கூடிய நீள்சதுர அமைப்பு. கொல்காதாவிலோ இடத்தை உங்களிடம் கொடுத்து உங்களையே வேண்டிய மாதிரி உள் அலங்காரம், வெளி அலங்காரம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள். அப்பப்பா! ஆளை மயக்கும் வடிவமைப்பு, உள்ளே முழுக்க முழுக்க ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட ஸ்டால்கள். அலங்காரத்தைப் பார்த்தால் இது ஒரு தாற்காலிக அமைப்பு என்றே சொல்லமுடியாது. நிரந்தரமான கடைகளைவிட அழகாக உள்ளன. இன்றோ, நாளையோ நான் சேர்க்கும் படங்களைப் பாருங்கள்.

3. எத்தனை பேர்கள் வருவார்கள் என்று சரியாக யாரும் சொல்லவில்லை. ஆனால் சென்னையைப் போன்று பலமடங்கு கூட்டம் இங்கு வருமென்று தோன்றுகிறது. சென்னையில் சுமார் ரூ. 6-8 கோடி விற்பனை ஆகியிருக்கும். கொல்காதாவில் ரூ. 22 கோடி விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறார்களாம். 60% ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள். 40% வங்க மொழி.

4. மிகப்பெரிய வங்க மொழிப் பதிப்பகம் - ஆனந்தா பதிப்பகம் - இது ஆனந்த பாஜார் பத்ரிகா குழுமத்தின் (ஆங்கிலத்தில் Telegraph செய்தித்தாள், வங்க மொழியில் ஆனந்த பாஜார் பத்ரிகா என்ற தின்சரி, தேஷ் என்ற பெயரில் மாதம் இருமுறை இலக்கிய இதழ், வேறு சில வார/மாத இதழ்கள், பெங்குவின் பதிப்பகத்தின் இந்தியக் கூட்டாளி, ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சியின் இந்தியக் கூட்டாளி), முதல் நாளே எக்கச்சக்கமான கூட்டத்துடன் இருந்தது. பலருடைய ஸ்டால்களிலும் நேற்றுதான் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. இன்றுதான் முழுமூச்சுடன் கண்காட்சி தொடங்கும்.

5. நுழைவுக் கட்டணம் ரூ. 5. சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் (Senior Citizens) கட்டணம் கிடையாது.

கொல்காதா புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்கள் Publishers' & Booksellers' Guild.

Tuesday, January 24, 2006

ஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு

இந்திய விமான சேவையில் புரட்சி நடக்கும் நேரம் இது. பல புதிய விமான நிறுவனங்கள் உரிமம் பெற்று சேவையை ஆரம்பித்துள்ளனர். 1993-1995-ல் கூட இப்படித்தான் இருந்தது. பல புதிய நிறுவனங்கள் தோன்றின. ஜெட் ஏர்வேய்ஸ்கூட அப்பொழுதுதான் (1993-ல்) ஆரம்பித்தது. மோடிலுஃப்ட், NEPC, ஈஸ்ட் வெஸ்ட், தமானியா போன்ற, இப்பொழுது காணாமல் போயுள்ள, சில நிறுவனங்களும் அந்த நேரத்தில்தான் ஆரம்பித்தன. ஏர் சஹாரா ஆரம்பித்ததும் 1993-ல்தான்!

ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் நரேஷ் கோயலுக்கு எங்கிருந்து ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் அளவுக்குப் பணம் வந்தது என்று பல கேள்விகள் எழுந்தன. பின்னணியில் சில நிழலுலக ஆசாமிகள் இருப்பார்களோ என்று பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்தக் கேள்விகள் எல்லாமே காணாமல் போய்விட்டன.

சஹாரா இந்தியா பரிவார் - ஏர் சஹாராவின் தாய் நிறுவனம் - 1978-ல் வெறும் ரூ. 2,000 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்கிறார்கள். இந்த நிறுவனத்தைப் பற்றி அவ்வளவு உயர்வாக நான் கேள்விப்பட்டதில்லை. உத்தரப் பிரதேசத்தின் பல கோடி சிறு முதலீட்டாளர்களின் சீட்டுத் தொகையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நிறுவனம் என்று கேள்விப்பட்டுள்ளேன். இவர்கள் பல தொழில் துறைகளில் முதலீடு செய்துள்ளனர். விமானச் சேவை ஒன்று. தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற மீடியா துறை ஒன்று. இந்தியாவெங்கும் பல நகரங்களில் சாடிலைட் குடியிருப்புகள் கட்டுவதாக ஒரு மாபெரும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நுழைந்துள்ளனர். சஹாரா இணையத்தளத்துக்குச் சென்றால் தாம் என்னென்னவெல்லாமோ செய்வதாகச் சொல்கிறார்கள்.

சஹாரா பற்றி இந்தியர்கள் அதிகமாகத் தெரிந்துகொண்டது அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சட்டையை ஸ்பான்சர் செய்தபோதுதான்.

-*-

1997க்குப் பிறகே இந்தியன் ஏர்லைன்ஸை அடுத்து ஜெட், சஹாரா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே உள்நாட்டு விமானச் சேவையை அளித்து வந்தன. சிறிது சிறிதாக ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக மாறியது. சிறந்த சேவையை நாடும் வாடிக்கையாளர்கள் ஜெட் ஏர்வேய்ஸை மட்டுமே பயன்படுத்தினர். இந்தியன் ஏர்லைன்ஸின் கஸ்டமர் சர்வீஸ் மோசமாக இருந்தது. ஆனால் ஜெட்டின் சேவையின் நம்பகத்தன்மை அதிகமானதாக இருந்தது.

இந்திய அரசு வெளிநாட்டு விமான சேவையையிலும் தனியாரை அனுமதிக்கத் தொடங்கியபோது சஹாரா, ஜெட் ஆகிய இருவருக்கும் அனுமதி கிடைத்தது.

இரண்டு வருடத்துக்கு முன்னர் இந்திய அரசு மீண்டும் தனியார் நிறுவனங்களை உள்நாட்டு விமானச் சேவையை வழங்க அழைத்தது. ஏர் டெக்கான் அப்பொழுது குறைந்த விலைச் சேவையை வழங்க முன்வந்தது. No-frills விமானச் சேவை ஐரோப்பாவில் பிரசித்தம். இந்தியாவில் ஏர் டெக்கான் இந்தப் புரட்சியைக் கொண்டுவந்தது. பல ஐரோப்பிய நகரங்களுக்கு இடையேயான விமானச் சேவைக் கட்டணம் மயக்கத்தை வரவழைக்கும். 40, 50 பவுண்டுகளுக்கு பிரிட்டனின் ஒரு நகரத்திலிருந்து கிரீஸ் நாட்டின் ஒரு நகரத்துக்குப் பறந்து செல்லலாம். ஆனால் இந்த இரண்டு விமான நிலையங்களுமே முக்கியமான நகரங்களாக இருக்காது. அங்கிருந்து பஸ்/ரயில் பிடித்து வெளியே செல்வதற்கு பறப்பதுக்கு ஆகும் செலவைவிட அதிகம் ஆகும். இது நமக்கு ஒன்றும் புதிதல்ல. திருச்சியிலிருந்து சென்னை வர ரயிலில் ரூ. 100ஐவிடக் குறைவு. ஆனால் எழும்பூரிலிருந்து நங்கநல்லூர் ஆட்டோவில் செல்ல அதற்குமேல் ஆகிவிடும்.

ஏர் டெக்கான்தான் முதன்முதலில் விமானக் கட்டணத்தை வெகுவாகக் குறைத்த நிறுவனம். அவர்களது சேவையில் பல குறைபாடுகள் இருந்தாலும் விமானங்கள் கிளம்ப தாமதமானாலும் பலமுறை விமானப் பயணமே ரத்து செய்யப்பட்டாலும் பலரும் ஏர் டெக்கான் சேவையை விரும்பி ஏற்கிறார்கள். அதற்குக் காரணம் விலை குறைவாக இருப்பதே. ஜெட் ஏர்வேய்ஸ் தன் சேவையை பிரீமியம் சேவையாகவே கருதினாலும் ஏர் டெக்கான் வந்தபிறகு குறைந்தவிலை கூப்பன்களை வழங்குகிறார்கள். ஆறு கூப்பன்கள் ரூ. 26,000க்குக் கிடைக்கிறது. அதாவது ஒரு டிக்கெட் ரூ. 4,000 - இதில் எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். அதேபோல check fares என்ற வகையில் ஒரே பாதைக்கு எப்பொழுது டிக்கெட் எடுக்கிறோமோ அதைப் பொருத்து விலை மாறும்.

இதுபோன்ற வசதிகள் ஏர் டெக்கான் நுழைந்ததால் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இப்பொழுது ஏர் டெக்கானை அடுத்து ஸ்பைஸ் ஜெட், கிங்ஃபிஷர், கோ - ஏர், பாரமவுண்ட் என்று மேலும் சில விமானச் சேவைகள் வந்துள்ளன. இவை அனைத்துமே சற்றே மாறுபட்ட சேவையை அளிக்க முற்படுகின்றன. பாரமவுண்ட் தங்கள் சேவையை 'எகானமி கிளாஸ் கட்டணத்தில் பிசினஸ் கிளாஸ் சேவை' என்று வர்ணிக்கிறார்கள். கிங்ஃபிஷர் தங்கள் இருக்கைகள் அனைத்துக்கும் தொலைக்காட்சி வசதிகளைக் கொடுக்கிறார்கள். (கொச்சி - பெங்களூர் மார்க்கத்தில் இந்த மாதம் கிங்ஃபிஷர் விமானம் ஒன்றில் வந்தேன்.) கோ (Go), ஸ்பைஸ் இரண்டுமே குறைந்த கட்டண வசதி என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

-*-

புதுப்புது விமானச் சேவை நிறுவனங்கள் வந்ததில் இருந்தே ஜெட்டின் லாபம் குறைந்துள்ளது; சஹாரா இன்னமும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஜெட்டின் லாபம் குறைய மற்றுமொரு காரணம் ஏவியேஷன் எரிபொருள் விலை அதிகரித்திருப்பது. முன்னெல்லாம் ஏவியேஷன் எரிபொருள் விலை அதிகமானால் கூசாமல் டிக்கெட் விலையை ஏற்றுவார்கள். ஆனால் இப்பொழுது அதெல்லாம் முடியாது. ஏர் டெக்கான், இன்னபிற குறைந்தவிலை விமானச் சேவை இருக்கும்வரை விலையை இஷ்டத்துக்கு ஏற்ற முடியாது.

சஹாராவின் சுப்ரோதா ராய் சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே ஏர் சஹாராவை விற்றுவிடத் தீர்மானித்தார். அப்பொழுது கிங்ஃபிஷர் விஜய் மால்யா ஏர் சஹாராவை $400 மில்லியன் கொடுத்து வாங்க விரும்பினார். ஆனால் சுப்ரோதா ராய் அந்த விலையை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக ஜெட் ஏர்வேய்ஸ் $500 மில்லியன் கொடுத்து ஏர் சஹாராவை வாங்க முடிவு செய்தது.

இந்த இணைப்பு என்னைப் பொருத்தவரை அவசியமானது. ஏர் சஹாராவால் தனியாக இயங்க முடியாது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்துக்கு ஒரு தலைவர் கிடையாது. சுப்ரோதா ராய் பல விஷயங்களில் கையை விட்டுவைத்துள்ளார். சமீபத்தில் அவரது உடம்பு சரியில்லை என்றும் அவர் தன் நிறுவனங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் ஜெட் ஏர்வேய்ஸ் மார்க்கெட் லீடர். இந்திய விமானச் சந்தை பெரிதாகிக் கொண்டே வருகிறது. எனவே தாற்காலிகமாக லாபம் குறைந்தாலும் ஜெட்டின் லாபம் வரும் நாள்களில் அதிகமாகும். விற்பனையும் அதிகமாகும்.

ஜெட் - சஹாரா மோனோபொலி என்ற வரையறைக்குள் வராது. இதை விமானத்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலும் குறிப்பிட்டுள்ளார். ஏர் டெக்கான், கிங்ஃபிஷர், கோ - மூன்றும் பெரிதாக வளர வாய்ப்புகள் உள்ளன.

ஜெட்டுக்கு இந்த மெர்ஜரினால் ஒரு மிகப்பெரிய வசதி கிடைத்துள்ளது. வெளிநாட்டு விமானச் சேவை உரிமத்தைப் பெற ஒரு தனியார் விமானச்சேவை நிறுவனம் குறைந்தது ஐந்து வருடங்களாவது உள்நாட்டில் சேவை அளித்திருக்கவேண்டும். அப்படி இருந்த இரண்டு நிறுவனங்கள் ஜெட், சஹாரா மட்டுமே. அவையிரண்டும் இப்பொழுது இணையப்போகின்றன என்பதால் அடுத்த மூன்று வருடங்களுக்கு வேறெந்த இந்திய விமானச்சேவை நிறுவனத்துக்கும் வெளிநாடுகளுக்குப் பறக்கும் உரிமம் கிடைக்காது. ஏர் டெக்கான் விரும்பினால் இன்னமும் மூன்று வருடங்கள் கழித்து இந்த உரிமத்தைப் பெறமுடியும்.

இந்த மெர்ஜரை அடுத்து, இன்னமும் சில வருடங்களில் ஜெட் ஏர்வேய்ஸ் உலக அளவில் முதல் ஐந்து விமானச்சேவை நிறுவனங்களுக்குள் ஒன்றாக வர வாய்ப்புகள் உள்ளன.

ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம்

சென்ற வாரம் வியாழன் அன்று Madras Institute of Development Studies அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உட்கார அவசர அவசரமாக சில நாற்காலிகளைப் பிற அறைகளிலிருந்து எடுத்து வந்தனர். அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன், எஸ்.முத்தையா, ஐராவதம் மகாதேவன் போன்ற பலரும் வந்திருந்தனர். சைவ சிந்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் முத்துக்குமாரசுவாமி வந்திருந்தார். இவர் ஏ.கே.செட்டியாருடன் பழகியவர். தமிழில் ஏ.கே.செட்டியார் எடுத்திருந்த காந்தி ஆவணப்படத்தைப் பார்த்தவர். தெய்வராயன் என்பவர் வந்திருந்தார். இவரது வீட்டில்தான் கடைசி நாள்களில் ஏ.கே.செட்டியார் வசித்தாராம்.

தமிழில் எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ஓடுவது. 1942-ல்(?) தமிழ் பின்னணிக்குரலுடன் காண்பிக்கப்பட்ட படம் பின்னர் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. அப்பொழுது பல தியேட்டர்கள் இந்தப் படத்தைக் காண்பிக்க விரும்பவில்லை. கடைசியாக சென்னை ராக்சி தியேட்டரில் காண்பிக்கப்பட்டதாம். அப்பொழுது பத்து வயதான ஐராவதம் மகாதேவன் ராக்சி தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். இந்திய விடுதலைக்குப் பின்னர் ஹிந்தி பின்னணிக் குரலுடன் இந்தப் படத்தை Films Division காண்பித்துள்ளனர்.

ஏ.கே.செட்டியார் தக்கர் பாபா வித்யாலயாவில் 1950களில் தமிழில் எடுத்த படத்தைக் காண்பித்ததாக முத்துக்குமாரசாமி சொன்னார்.

ஆனால் தமிழ்/தெலுங்கு/ஹிந்தி 2.30 மணிநேரப் படம் மொத்தமாகக் காணாமல் போய்விட்டது. இப்பொழுது கிடைத்திருப்பது அமெரிக்க ஆங்கிலப் பின்னணிக் குரலுடன் ஹாலிவுட்டில் ரீ-எடிட் செய்யப்பட்ட படம்.

ஏ.கே.செட்டியார் தன் கையில் இருந்த footageகளுடன் அமெரிக்கா சென்று அங்கேயே படத்தை சுமார் ஒரு மணிநேரத்துக்குச் சுருக்கியுள்ளார். இதில் பல பகுதிகள் விடுபட்டுப்போயுள்ளன.

படம் காந்தி சுட்டுக்கொல்லப்படுவதிலிருந்து தொடங்குகிறது. அடுத்து போர்பந்தர். காந்தியின் திருமணம். காந்தி பாரிஸ்டர் பட்டம் பெறுவது, தென்னாப்பிரிக்கா செல்வது, இந்தியா வருவது. இந்தியாவில் நடக்கும் பல்வேறு காங்கிரஸ் மாநாடுகள். தண்டி உப்பு சத்தியாக்கிரகம் - இது அற்புதமான படமாக்கல். காந்தியும் அவரது தொண்டர்களும் ஓடி ஓடி தண்டி கடற்கரைக்குச் சென்று கடல் நீரைப் பிடித்து பாத்திரங்களில் காய்ச்சுவது; சில தொண்டர்கள் ஆங்கிலேய உப்பளங்களுக்குள் நுழைய முற்படுவது; காவலர்கள் அவர்களை அடித்துத் தள்ளுவது; காந்தியைச் சிறை செய்வது - என்று நீண்டு செல்லும் காட்சி. ஒத்துழையாமை இயக்கம், காந்தி இங்கிலாந்து செல்வது, அங்கு பலரையும் சந்திப்பது, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம், காந்தி பிர்லா ஹவுஸில் சிறை வைக்கப்படுவது; மஹாதேவ் தேசாய், கஸ்தூர்பா காந்தி மரணம்; இந்திய விடுதலை, பிரிவினையை அடுத்த வன்முறைகள், நோவாகாலி பயணம், காந்தி கொலை, காந்தியின் இறுதி யாத்திரை, காந்தியைப் பற்றிப் பிறர் சொன்னவை.

பல முக்கியமான தலைவர்கள் காண்பிக்கப்படுகின்றனர். மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் எனப் பலரும் காண்பிக்கப்பட்டாலும் அம்பேத்கார் பற்றி ஒரு வார்த்தை இல்லை. (படம் முடிந்ததும் ஒருவர் இதைப்பற்றிப் பேசினார்.)

வேங்கடாசலபதி, தியோடர் பாஸ்கரன் ஆகியோர் படத்தைப் பற்றிப் பேசினர்.

இந்தப் படம் விலைக்குக் கிடைக்குமா என்று சிலர் என் பதிவில் கேட்டனர்; அங்கு நிகழ்ச்சியின்போதும் கேட்டனர். இந்தப் படத்தின் காப்புரிமை ஏதோ அமெரிக்க நிறுவனத்திடம் உள்ளது. வேங்கடாசலபதி அமெரிக்கப் பலகலைக்கழகம் ஒன்றில் நூலகத்திலிருந்து ஒரு நகல் வாங்கியுள்ளார். அவ்வளவே. அகடமிக் விஷயங்களுக்காக என்று பலரைக் கூப்பிட்டு போட்டுக் காண்பிப்பது ஒன்று. ஆனால் இதை டிவிடியாக அச்சடித்து விற்பனைக்குக் கொண்டுசெல்வது வேறு. அதற்கு இந்தப் படத்தின் உரிமையாளர்கள் யார் என்று தேடி, அவர்களிடமிருந்து விற்பனை உரிமையைப் பெற்று அதன்பின்னரே கமர்ஷியலாக வெளியிட முடியும்.

அதுவரையில் இந்தப் படம் பரவலாக மக்களுக்குக் கிடைக்காது.

Thursday, January 19, 2006

AK செட்டியார்; ஆனந்த விகடன்

சில நாள்களுக்குமுன் ஏ.கே.செட்டியார் காந்தியைப் பற்றி எடுத்த படம் ஒன்றை ஆ.இரா.வேங்கடாசலபதி கண்டுபிடித்திருப்பது செய்தியாக வந்தது என்று குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அந்தப் படம் காண்பிக்கப்பட இருக்கிறது. தி ஹிந்து இன்றைய நிகழ்ச்சிகள் பட்டியலிலிருந்து:

The Hindu : Engagements : In Chennai Today:

"Madras Institute of Development Studies: Screening of AK Chettiar's documentary on Mahatma Gandhi, II Main Rd., Gandhi Nagar, Adyar, 3.30 p.m."

அதேபோல இன்று ஆனந்த விகடனின் கதை பற்றிய ஒரு பேச்சும் உள்ளது.

"Madras Management Association: Talk on Story of Ananda Vikatan, Hotel Accord Metropolitan, GN Chetty Rd., 6 p.m."

நான் இரண்டுக்கும் செல்லப்போகிறேன்.

Wednesday, January 18, 2006

தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் மிக அதிகம் விற்ற புத்தகம் காந்தியின் "சத்திய சோதனை". கிட்டத்தட்ட 5000க்கும் மேல். இந்த வருடமும் இதே புத்தகம்தான் நம்பர் 1 - 6000க்கும் மேல் விற்றதாகத் தெரிகிறது.

இதைத் தவிர சர்வோதய இலக்கியப் பண்ணை கடையில் பல பிரதிகள் காந்தியின் வெவ்வேறு எழுத்துகள் விற்பனையாயின.

கண்ணதாசன் பதிப்பகம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சுயசரிதை - "அக்னிச் சிறகுகள்" - உடன் "சத்திய சோதனை"யையும் சேர்த்து ஒரே கட்டாக ரூ. 100க்கு விற்பனை செய்தது.

சர்வோதயாவில் காந்தியின் எழுத்துகள் என்று ஒரு பேக்கேஜ் கிடைக்கிறது. இதில் மொத்தம் நான்கு புத்தகங்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் கிடைக்கிறது. ஆங்கிலக் கட்டின் விலை ரூ. 140. தமிழின் விலை ரூ. 180. இதில் முதல் புத்தகம் "சத்திய சோதனை". இரண்டாவது புத்தகம் "தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்". மற்ற இரண்டும் காந்தியின் பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கியவை.

"சத்திய சோதனை" எனக்கு ஏமாற்றத்தைத் தந்த ஒரு புத்தகம். இதைப்பற்றி விரிவாக வேறொரு நாள் எழுதவேண்டும். அதே அளவுக்கு என்னைத் திகைப்பில் ஆழ்த்திய புத்தகம் "தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்". இந்தப் புத்தகம் ஆங்கில வடிவில் தனியாகவும் கிடைக்கிறது. ("Satyagraha in South Africa", விலை ரூ. 20.) தமிழில் தனியாகக் கிடைப்பதில்லை (இப்பொழுதைக்கு). மொத்தக் கட்டாக (ரூ. 180) மட்டுமே கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்தை நான் முழுவதுமாகப் படித்து முடிக்கவில்லை. பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் வாங்கிவிட்டு இப்பொழுதுதான் படிக்க எடுத்திருக்கிறேன். அற்புதமான மொழிநடை. காந்திக்கு வாசகனை எளிதில் சென்றடையக்கூடிய மொழிநடை வாய்த்திருக்கிறது. புத்தகம் முழுவதுமே அவர் நம் அருகில் நின்றவாறே கதை சொல்கிறார். காட்சிகள் நம் கண் முன்னே விரிகின்றன.

புத்தகத்தை முடித்ததும் அதைப்பற்றி எழுதுகிறேன். இந்தப் புத்தகம் ஒவ்வோர் இந்தியனும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். (பிற நாட்டவர்களும்கூட.)

Satyagraha in South Africa, M.K.Gandhi, (Translated into English from Gujarati by Valji Govindji Desai), Navajivan Publishing House, Original Gujarati Version Edition 1924, English Translation First Edition 1928, Current revised edition 1950, Current reprint 2003. Crown size, Pages 320, Price Rs. 20

Tuesday, January 17, 2006

விகடன், குமுதம், பிறர்

நேற்று முடிந்த சென்னை புத்தகக் காட்சியின்போது பல பதிப்பகங்களின் கடைகளை அருகில் இருந்து பார்க்க முடிந்தது. எங்கள் கடையிலும் பிறரது கடைகளிலும் வாசகர்கள் எப்படி புத்தகம் வாங்குகிறார்கள் (Purchase Behaviour), விற்பனை முகவர்கள் வாசகர்களுடன் எப்படி ஊடாடுகிறார்கள் என்பதைக் கவனிக்க முடிந்தது. பொதுவாக ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் எம்மாதிரியான விற்பனை நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு கவனிக்க முடிந்தது.

விகடன் பிரசுரம்தான் இந்தப் புத்தகக் காட்சியில் தமிழ் பதிப்பாளர்களிலேயே அதிக விற்பனை படைத்திருக்கும் கடை என்று ஊகிக்க முடிகிறது. விகடனின் புத்தகங்கள் அனைத்துமே அவர்களது வார/மாத இதழ்களில் வந்திருக்கும் தொடர்களின் தொகுப்புதான் - ஒரேயொரு புத்தகத்தைத் தவிர ("காசு மேல காசு"). 'காசு மேல காசு', கிழக்கு பதிப்பகத்தின் 'அள்ள அள்ளப் பணம்' புத்தகத்தைப் போன்றது. விகடன் குழும இதழ்களின் வாசகர்கள் இந்தத் தொடர்களை ஏற்கெனவே படித்து ரசித்தவர்கள். எனவே புத்தக வடிவில் பெற விரும்பி வாங்கியுள்ளனர். விகடன் கடையில் எப்பொழுதும் கூட்டம்தான். வந்த அனைவரும் கையில் புத்தகம் எதையாவது வாங்காமல் திரும்பவில்லை. ஆனால் புத்தகத்தை விகடன் ஸ்டாலில் தேடிப்பெறுவதுதான் கடினமாக இருந்தது.

வரிசையாகப் புத்தகங்களைக் கொட்டி வைத்திருந்தனர். இன்னது இங்குதான் கிடைக்கும் என்று உத்தரவாதமாகச் சொல்லமுடியாது. கஸ்டமர் சர்வீஸ் என்று எதுவுமே அந்த ஸ்டாலில் கிடையாது. அதிகபட்சமாக "வேகமா போயிக்கிட்டே இருங்க சார், கூட்டம் போடாதீங்க" என்று திருப்பதி கோயில் பாணியில் மிரட்டல் மட்டும்தான். எந்தப் புத்தகம் எங்கு இருக்கிறது என்று வழிகாட்ட யாரும் இல்லை. ஒரு புத்தகம் வாங்கினால் அவருக்கு வேறு என்னென்ன புத்தகங்கள் உபயோகமாக இருக்கும் என்றெல்லாம் சொல்ல யாரும் இல்லை.

பில் போடும் இடத்தில் மிகக் கடினமான முறை செயல்படுத்தப்பட்டு இருந்தது. புத்தகத்தைக் கொடுத்து டோக்கன் வாங்கவேண்டும். பின்னர் வாசலுக்கு வந்து டோக்கனைக் கொடுத்து காசைக் கொடுத்து பையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். கடனட்டை வசதி உண்டு, ஆனால் குறைந்தது ரூ. 500க்குமேல் செலவு செய்தால்தான் கடனட்டையைப் பயன்படுத்தலாம்.

விகடனின் புத்தகங்கள் உருவாக்கப்பட்டவிதம் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லாமே பளபளா glossy newsprint தாளில் பலவண்ண அச்சில் உருவாக்கப்பட்ட புத்தகங்கள். அனைத்துமே வார/மாத இதழ் பாணியில் பக்கத்துக்குப் பக்கம் சின்னச் சின்னக் கட்டங்களில் துணுக்குச் செய்திகளாகவும் கார்ட்டூன் படங்களாகவும் கிளிப் ஆர்ட் படங்களாகவும் இருந்தன. வார/மாத இதழ்களுக்கும் அச்சுப் புத்தகங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டு. விகடன் பிரசுரப் புத்தகங்கள் சிலவற்றில் multi-column முறையில்கூட அச்சாக்கம் செய்திருந்தனர்! (வந்தார்கள்.. வென்றார்கள்!)

விகடன் வார/மாத இதழ்க் கண்ணோட்டத்திலிருந்து வெளிவரவேண்டும். லே அவுட் என்றாலே மேகஸின் மட்டும்தான் என்பதிலிருந்து மாறவேண்டும்.

ஆனாலும், முன்னமே சொன்னதுபோல விற்பனையில் விகடன்தான் இந்தப் புத்தகக் காட்சியின் சூப்பர் ஹீரோ!

-*-

விகடன் பற்றிப் பேசினால் உடனே குமுதம் பற்றிப் பேசியே ஆகவேண்டும். விகடன் நம்பர் 1 என்றால் குமுதம் நம்பர் பத்தாயிரம். குமுதத்துக்கு புத்தகங்கள் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஆனாலும் ஒரு டபுள் ஸ்டால் எடுத்து வாசல் வளைவில் விளம்பரம் செய்து, பெயருக்கு பத்து புத்தகங்களை உருவாக்கி கடையில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

விகடனின் திட்டமிட்ட உழைப்பு குமுதத்துக்குத் துளிக்கூட இல்லை என்பது அவர்கள் கொண்டுவந்திருக்கும் புத்தகங்களில் தெரிந்தது. குமுதம் பத்து நாள்களில் அடைந்த விற்பனையை விகடன் ஒரு மணிநேரத்தில் பெற்றிருக்கும் என்று நினைக்கிறேன்.

-*-

பொதுவாக, தமிழ் பதிப்பாளர்களின் விற்பனை சாமர்த்தியம் குறைவு என்று தோன்றியது. கடனட்டை வசதியைக் கொடுத்த தமிழ் பதிப்பகங்கள் மொத்தமாக நான்கோ, ஐந்தோ. (விகடன், கிழக்கு, கவுரா ஏஜென்சீஸ், நர்மதா, அதிகபட்சமாக இன்னமும் ஒன்றோ, இரண்டோ இருக்கலாம்.) BAPASI கொடுத்த கடனட்டை வசதி போதவில்லை. ஒரு பழம்பெரும் பதிப்பகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிடம் சரியான சில்லறை இல்லை என்ற காரணத்தால் புத்தகத்தை விற்காமல் அனுப்பிவிட்டார்கள்! பலர் blunt-ஆக 'கடனட்டை வசதியெல்லாம் கிடையாது, இஷ்டமிருந்தால் காசு கொடுத்து வாங்கு, இல்லாவிட்டால் போ' என்றமாதிரி பேசினார்கள். கடை வாசலில் கல்லாப்பெட்டியில் மட்டும் உட்கார்ந்துகொண்டு உள்ளே நுழையும் வாடிக்கையாளர்களிடம் இன்முகம் காட்டாமல், ஒருவார்த்தைகூடப் பேசாமல் இருந்தார்கள் பலரும்.

ஒருசில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் பயங்கர சண்டைகள் வேறு போட்டார்கள்!

இன்னமும் பல உதாரணங்களைக் கொடுக்கலாம். ஆனால் நாகரிகமாக இருக்காது.

-*-

ஒருவிதத்தில் சென்னை புத்தகக் காட்சி வாடிக்கையாளர்களுக்கு சரியான வசதிகளைத் தருவதில்லை என்றே சொல்லலாம். தரை சமதளமாக இருப்பதில்லை. பலர் கால்கள் நொடித்துக் கீழே விழுந்தனர். (அமெரிக்காவாக இருந்தால் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றிருப்பார்கள்.) குடிதண்ணீர் வசதி குறைவு. உணவு வழங்கும் இடத்தில் சுத்தம், சுகாதாரம் குறைவு. உணவகத்துக்கு வெகு அருகில் வெளியில் கழிவுநீர் கொப்பளித்து வந்துகொண்டிருந்தது. அதைக் கையால் முகந்து பிளாஸ்டிக் பாத்திரங்களில் ஏந்திக் கொண்டிருந்தார் ஒருவர். (நான் அந்தப் பக்கம் போன மூன்று, நான்கு முறையும்!) கழிவறைகள் வசதி குறைவு. மாலை நேரத்துக்குப் பிறகு ஆண்கள் கழிவறை வாசலில் இருக்கும் ஒரேயொரு குழாயில் தண்ணீர் வருவது நின்றுவிடும். பெண்கள் கழிவறை வசதி பற்றி எனக்குத் தெரியவில்லை.

கடைகளில் - டபுள் ஸ்டாலில்கூட - ஒரேயொரு மின்விசிறிதான். அது பல நேரங்களில் போதவில்லை. ஸ்டாலுக்கு உள்ளாக இருந்த தரைவிரிப்பு மோசம். தடுக்கிக்கொண்டே இருந்தது. ஸ்டாலில் தரைப்பலகையே சமதளமாக இல்லை.

இத்தனை வசதிக்குறைவுகளையும்மீறி வாசகர்கள் ஏகோபித்த அளவில் வந்தார்கள். பலர் புத்தகம் வாங்குவதைக் கண்டு நான் பிரமித்துப் போனேன். நான்தான் அதிகம் புத்தகங்கள் வாங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பலரும் ஆர்வத்தோடு ஒவ்வொரு கடைகளிலும் வாங்கும் புத்தகத்தைக் கண்டு எனக்கு பயமே வந்துவிட்டது. சென்ற வருடத்தைவிட 30% ஆவது அதிக விற்பனை இந்த வருடம் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

-*-

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் முடிந்தவரை உழைத்தனர். அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது. அவர்களும் வெவ்வேறு பதிப்பகங்களின் உரிமையாளர்களே. அவர்களுக்கு தத்தம் பதிப்பகங்கள் தொடர்பாகப் பல வேலைகள் இருந்திருக்கும். புதுப் புத்தகங்களை உருவாக்க வேண்டும். தினசரி தங்களது கடைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் புத்தகக் காட்சி தொடர்பான பல முடிவுகளை எடுக்கவேண்டும். அதற்கெனவும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.

இதிலிருந்து மீண்டு புத்தக விற்பனைக்கான சந்தையை வெகுவாக விரிவாக்க என்ன செய்யலாம்? தெ.பு.ப.வி.ச வுக்காக தகுதி படைத்த முழுநேர ஊழியர்களை நல்ல சம்பளத்தில் அமர்த்தலாம். இவர்கள்மூலம் சென்னையில் மட்டுமல்லாது பிற முக்கிய நகரங்களிலும் வருடத்துக்கு ஒருமுறை சென்னையைப் போன்று மாபெரும் கண்காட்சியை அமைக்கலாம். ஒரு காலாண்டுக்கு ஒன்றுவீதம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான கண்காட்சிகளை அமைத்தால் அதன்மூலம் சந்தையும் விரிவடையும்; வாசகர்கள், பதிப்பாளர்கள் இருவருமே பலனடைவார்கள்.

ஆனால் தெ.பு.ப.வி.சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக கடந்த இரண்டாண்டுகளாக யாரையுமே சேர்க்கவில்லை என்று அறிகிறேன். புதிய ரத்தம் வந்தாலொழிய பல நல்ல மாறுதல்கள் ஏற்படா.

இந்த வருடம் தெ.பு.ப.வி.சங்கத்தில் சேர்ந்து தீவிர ஈடுபாட்டுடன் உழைக்க விரும்புகிறேன். பார்க்கலாம்...

Monday, January 16, 2006

கடைசியாக வாங்கிய புத்தகங்கள்

1. சினிமா ஓர் அறிமுகம், இரா.பிரபாகர், கனவுப்பட்டறை, 2003, பக்கங்கள் 136, டெமி, விலை ரூ. 70

2. திருக் குர்ஆன், மூலம்/தமிழாக்கம்/விரிவுரை, IFT வெளியீடு, உர்தூ உரை மூலம் மவுலானா சையத் அபுல் அஃலா மவுதூதி. மொழிபெயர்ப்பாளர்கள் மவுலவி A.குத்புத்தீன் அஹ்மத் பாகவி, மவுலவி R.அப்துர் ரவூஃப் பாகவி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், முதல் பதிப்பு 1996. இந்தப் பதிப்பு 2005, பக்கங்கள் 1228+, டபுள் கிரவுன், கெட்டி அட்டை, விலை ரூ. 290, இன்றைய சிறப்பு விலை (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு) - ரூ. 100

Sunday, January 15, 2006

நாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு

ஆண்டுக்கு ஆண்டு மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு ஆபத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பிற மதங்களின் புனிதப் பயணங்களைப் போல் அல்லாது ஹஜ்ஜில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. (1) அனைத்து முஸ்லிம்களும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். (2) இந்தப் பயணம் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் நிகழவேண்டும்.

இதன் விளைவாக ஆண்டுதோறும் மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. மிகச் சிறிய ஒரு நகரத்தால் தாங்கமுடியாத அளவுக்கு நகருக்கு வருபவர்கள் தொகை உள்ளதாம். இந்த வருடம் சட்டபூர்வமாக அனுமதி பெற்று வந்தவர்கள் 25 லட்சம் பேர் என்று சவுதி அரசு அறிவிக்கிறது. இதில் இந்தியர்கள் சுமார் 1.5 லட்சம் பேர் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவிலிருந்து மெக்கா ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது 10% அதிகரிக்கிறது. இனி வரும் வருடங்களின் இந்தச் சதவிகிதம் இன்னமும் அதிகரிக்கலாம்.

இதைத் தவிர அரசாங்க பெர்மிட் இல்லாமல் மெக்கா நகருக்குள் நுழைபவர்களும் உண்டாம். அந்த எண்ணிக்கை 15 லட்சம் வரையிலும்கூட இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பெர்மிட் இல்லாமல் நுழைபவர்கள் தங்குவதற்கு இடமின்றி தெருக்களில் வசிக்கவேண்டி உள்ளது.

இத்தனை கூட்டமும் காபாவைச் சுற்றிவரவேண்டும். மசூதியில் தொழவேண்டும். கடைசியாக 'சாத்தான் மீது கல்லை எறியவேண்டும்.' இந்தக் கல்லெறிதல்போதுதான் இரண்டு நாள்களுக்குமுன் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 360 பேர்களுக்குமேல் இறந்துள்ளனர். அதில் அதிகபட்சம் இந்தியர்கள் - 44 பேர். அதற்கு மேலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வாரம் நான் கோழிக்கோடு பயணம் செய்வதற்கு சென்னை சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தேன். (கோழிக்கோடு வழியாக மஸ்கட் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அது.) விமானநிலையம் முழுவதும் ஹஜ் பயணிகள்தான். ஆண்கள் வெள்ளை வேட்டியும் தோளைச் சுற்றி சுருட்டி அணிந்திருந்த வெள்ளைத்துண்டுமாகக் காட்சியளித்தனர். பெண்கள் உடைகளில் பல வித்தியாசங்கள் இருந்தன. கருப்பால் ஆன முழு அங்கியும், அதற்குமேல் பச்சை அல்லது நீல வண்ணத்தில் தலையைச் சுற்றி அணிந்த துணி இருந்தது. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர் போன்றவர் இருந்தார். அவர் கையில் மெகாஃபோன் ஒன்றை வைத்திருந்தார். அவ்வப்போது அந்த மெகாஃபோன் வழியாக தமது குழுவுக்கு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

மாலை தொழுகை நேரம். ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் தரையில் துணி அல்லது பாயை விரித்து தொழுதுகொண்டிருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் ஜெத்தா பயணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஏர் இந்தியா பணியாளர்கள் பொறுமையாக ஒவ்வொரு குழுவாக விமானத்துக்குள் ஏறுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்குள் என் விமானம் கிளம்ப வேண்டியிருந்தது.

அன்று விமான நிலையத்தில் நான் பார்த்த பலருள் எத்தனை பேர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததோ தெரியவில்லை.

-*-

அவ்வப்போது நடக்கும் அலஹாபாத் கும்பமேளா, கும்பகோணம் மகாமகம், வருடந்தோறும் நடக்கும் ஐயப்ப மகரவிளக்கு, பூரி ஜகந்நாதர் தேர் இழுத்தல் என இந்தியாவில் பல இடங்களிலும் கூட்ட நெரிசல், மிதிபாட்டில் சிக்கி உயிர்போதல், பக்தர்கள் பயணங்கள் போது நடக்கும் சாலை விபத்துகள் என்று பலவகைகளில் சாவு நிகழ்கிறது. இதற்கு அடிப்படையில் மோசமான திட்டமிடுதலே காரணம். சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளைத்தான் எளிதில் தடுக்கமுடியாது. ஆனால் மத சம்பந்தமான விஷயத்தில் முன்னறிவிப்பு இருப்பதால் இன்னமும் சிறப்பாகத் திட்டமிட முடியும்.

சவுதி அரேபியாவோ, இந்தியாவோ, மக்களின் உயிர் வீணாகப் போவதைத் தடுக்க தனி அமைச்சர்கள், அலுவலகங்களை ஏற்படுத்தி, நிபுணர்களைக் கொண்டு கூட்டங்களை நிர்வகிக்கவேண்டியது அவசியமாகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அதற்கென தனியாக ஒரு காவல்படை அமைத்து அவர்களுக்கு விசேஷப் பயிற்சி தருவதும் அவசியமாகிறது.

Saturday, January 14, 2006

நான் வாங்கிய புத்தகங்கள் - 2

1. ஞான மாலிகா, கவிஞர் கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதினேழாம் பதிப்பு ஆகஸ்ட் 2004, பக்கங்கள் 160, கிரவுன், விலை ரூ. 30

2. ராக மாலிகா, கவிஞர் கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதினைந்தாம் பதிப்பு ஆகஸ்ட் 2004, பக்கங்கள் 112, கிரவுன், விலை ரூ. 20

3. புஷ்ப மாலிகா, கவிஞர் கண்ணதாசன், வானதி பதிப்பகம், இருபதாம் பதிப்பு டிசம்பர் 2001, பக்கங்கள் 96, கிரவுன், விலை ரூ. 18

4. பிழை இல்லாமல் எழுதுவோம், செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், மாணவர் பதிப்பகம், 2004, பக்கங்கள் 96, கிரவுன், விலை ரூ. 40

5. சட்டமன்றம் ஓர் அறிமுகம், டாக்டர் க. பழனித்துரை, நியூ எட் பதிப்பகம், 1995, பக்கங்கள் 112, கிரவுன், விலை ரூ. 30

6. நியாய வணிகம், சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய வெளிச்சம், (No Nonsense Guide to Free Trade by David Ransom), தமிழாக்கம் பாமயன், அசுரன், அமைதி அறக்கட்டளை, திண்டுக்கல், மார்ச் 2003, பக்கங்கள் 102, டெமி, விலை ரூ. 25

7. உலக வங்கியின் ஆரோக்கியமற்ற போக்குகள், (Unhealthy Trends, The World Bank, Structural Aid & The Health Section in India Published by Public Interest Resource Group, Delhi), தமிழாக்கம் நெடுஞ்செழியன், குமாரசாமி, புருஷோத்தம், ரமேஷ் பாபு, வெளியீடு: பகவதி சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனம் & அமைதி அறக்கட்டளை, அக்டோபர் 1995, பக்கங்கள் 48, டெமி, விலை ரூ. 30

சன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்

இப்பொழுது தனியார் பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலம் நடந்துகொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன், சில நகரங்களில் மட்டும் நகருக்கு இரண்டு அல்லது மூன்று நிலையங்களுக்கான ஏலம் நடைபெற்றது. சென்னையில் இரண்டு நிலையங்கள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ரேடியோ மிர்ச்சி, சன் டிவி குழுமத்தின் சூர்யன் எஃப்.எம். பிற மாநகரங்கள், சில குட்டி நகரங்கள் என்று அப்பொழுது வழங்கப்பட்ட பண்பலை உரிமத்தில் பல பிரச்னைகள் இருந்தன. விதிக்கப்பட்ட உரிமக் கட்டணம் அதிகமாக இருந்தது. வருடா வருடம் இந்தக் கட்டணம் 15% அதிகரிக்கும் என்ற பயமுறுத்தல் வேறு.

இதனால் அனைத்து பண்பலை வானொலிகளும் நஷ்டத்தில் இயங்கின. பின்னர் பண்பலை வானொலி உரிமக் கட்டணத்தின் மாற்றம் நடைபெற்றது. செல்பேசி நிறுவனங்கள் போல முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு ஏலத்தொகையும், அதற்குப் பின்னர் வருடா வருடம், வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமும் என்றானது.

அதன்படி இன்னமும் பல நகரங்களுக்கு பண்பலை வானொலி உரிமங்கள் வழங்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை ஏலம் நடக்கிறது. சென்ற வெள்ளியன்று நடந்த ஏலத்தில் சென்னையில் பண்பலை வானொலி நிலையங்களை நடத்த மேலும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Radio Mid-Day, Adlabs Film Pvt, Muthoot Finance, Music Broadcast, Malar Publication, Noble Broadcasting ஆகியோரே இவர்கள்.

இந்த ஏலம் நடைபெறும் முறை எப்படியென்றால் மொத்தம் ஆறு புது நிலையங்கள்தான் என்பதை அரசு முன்னதாக அறிவித்துவிடும். எத்தனை பேர் வேண்டுமானாலும் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள என்று சில தகுதிகள் இருக்கின்றன. அப்படியான தகுதியுடைய பலரும் கலந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட ஏலத்தொகையை துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்துவிடலாம். அதிகமாக ஏலத்தொகையைத் தர ஒப்புக்கொண்ட முதல் ஆறு பேர்களுக்கு வானொலி நிலையங்களை அமைக்கும் உரிமை கிடைக்கும். தாம் தர ஒப்புக்கொண்ட தொகையை முழுவதுமாகத் தரமுடியாமல் போனாலோ, அல்லது வேறு காரணங்களுக்காக அந்த நிறுவனம் தடை செய்யப்பட்டாலோ ஏலத்தில் அடுத்ததாக இருக்கும் நிறுவனம் இடத்தைப் பிடிக்கும்.

ஆளுக்கு தனியாக ஒரு பண்பலை வரிசை ஒதுக்கப்படும். இப்படி மேற்குறிப்பிட்ட ஆறு பேர் கட்டியிருக்கும் நுழைவுக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Radio Mid-Day (இதில் பிபிசி ஒரு பங்குதாரர்) - ரூ. 12.27 கோடி
Adlabs Film Pvt (ரிலையன்ஸ் - அனில் அம்பானியுடையது) - ரூ. 9.09 கோடி
Muthoot Finance (தமிழகத்தில் இருக்கும் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி) - ரூ. 8.02 கோடி
Music Broadcast (ரேடியோசிட்டி -> மிட்டல் + நியூஸ்கார்ப்) - ரூ. 8.00 கோடி
Malar Publication (தினமலர் குழுமம் - மதுரை) - ரூ. 6.30 கோடி
Noble Broadcasting (யார் என்று தெரியவில்லை) - ரூ. 5.00 கோடி

===

நம் சன் டிவி குழுமம் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாமா?

KAL ரேடியோ (கல் அல்லது கால் என்று உச்சரிக்க வேண்டுமா என்று தெரியவில்லை - கலாநிதி மாறனின் பெயரிலிருந்து முதல் மூன்று ஆங்கில எழுத்துகள்?) என்ற பெயரில் பெங்களூர் (ரூ. 20 கோடி), ஹைதராபாத் (ரூ. 15 கோடி) என்று இரண்டு ஊர்களிலும் உரிமை பெற்றுள்ளது.

அதேபோல சவுத் எசியா எஃப்.எம் என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு நிறுவனம் - மலேசியாவின் ஆஸ்ட்ரோவுடன் இணைந்து - மூலம் மேலும் சில நகரங்களில் உரிமை பெற்றுள்ளது - சூரத் (ரூ. 3 கோடி), பூனா (ரூ. 14 கோடி), லக்னோ (ரூ. 14 கோடி), நாக்பூர் (ரூ. 3 கோடி), கான்பூர் (ரூ. 8 கோடி), ஜெய்ப்பூர் (ரூ. 5 கோடி), அஹமதாபாத் (ரூ. 12 கோடி) என்று ஏழு நகரங்கள்.

நேற்று நடந்த ஏலத்திலும் சவுத் ஏசியா எஃப்.எம் நிறைய உரிமங்கள் பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் எந்தெந்த ஊர்களுக்கு என்ற செய்தி ஒலி/ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் கிடைக்கும்.

மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனம் NDTVயுடன் கூட்டுசேர்ந்து இந்தியா டுடே குழுமத்தின் எஃப்.எம் நிலையங்களையும் வாங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

===

இப்பொழுதைக்கு நான்கு பெரிய குழுக்கள் பண்பலை வானொலித் துறையில் போட்டிபோட இருக்கின்றன.

1. சன் டிவியின் நேரடி மற்றும் கூட்டு நிறுவன முயற்சிகள்
2. Entertainment Network of India Limited - டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் முயற்சிகள்
3. Adlabs - அனில் அம்பானியின் நிறுவன முயற்சிகள்
4. ரேடியோ மிட்-டே (+ பிபிசி)

இவர்களைத் தவிர வேறு பல மீடியா குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளனர், ஆனால் மேலே சொன்ன நால்வருடன் அவ்வளவாகப் போட்டிபோடும் அளவில் அல்ல.

உரிமம் பெற்றதும், வானொலி நிலையங்களை ஆரம்பித்து, சோதனை முயற்சிகளுக்குப் பிறகு முழுதாக நிகழ்ச்சிகளை உருவாக்கி அளித்து, தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, விளம்பரப் பணத்தைக் கொண்டுவந்து நிகர லாபம் ஈட்டவேண்டும். இதற்கு, குறைந்தது நான்கு வருடங்களாவது ஆகும்!

பார்க்கலாம், இந்த நால்வரில் யார் நீண்டு நிலைத்திருக்கும் பிராண்டை உருவாக்குகிறார்கள் என்று...

Thursday, January 12, 2006

நாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்

(முன்குறிப்பு: நேற்று வாங்கிய புத்தகத்தில் - பிழை இல்லாமல் எழுதுவோம், செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், மாணவர் பதிப்பகம், 2004, பக்கங்கள் 96, கிரவுன், விலை ரூ. 40 - 'தொலைபேசி' என்பது தவறு, 'தொலைப்பேசி' என்பதுதான் சரி என்ற விளக்கம் இருந்தது. ஏன் என்று காரணம் புரிந்ததால் இனி தொலைப்பேசி, தொலைத்தொடர்பு என்ற சொற்களையே தொடர்ந்து பயன்படுத்துவேன். இந்தப் புத்தகம் தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு அத்தியாவசியமானது என்று சொல்வேன். பல தவறுகளைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுத ரூ. 40 முதலீடுதான்!)

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அமர் சிங் - உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவின் வலதுகை - தனது செல்பேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று புகார் கூறினார். அதையடுத்து தில்லி காவல்துறை ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் முதலாளியையும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரையும் கைது செய்தது. அமர் சிங் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஜெயலலிதா, புத்ததேவ் பட்டாசார்யா, நிதீஷ் குமார் ஆகியோரின் ஆதரவைக் கேட்டார். தன் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்க வைத்தது சோனியா காந்தி என்றார். பின் மன்மோகன் சிங் அலுவலகத்துக்கும் இதில் தொடர்பு என்றார். பின்னர் மன்மோகன் சிங்கிடம் மன்னிப்பு கேட்டார். இப்பொழுதைக்கு காங்கிரஸ் கட்சி + சோனியா காந்தி காரணம் என்று சொல்லி, உண்மை வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக உச்ச நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவும் இதுதான் சாக்கு என்று தன் தொலைப்பேசியும் மத்திய அரசால் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஒரு குண்டு போட்டார்.

மத்திய சட்ட அமைச்சர் HR பாரத்வாஜ், இப்பொழுது பெரும்பாலான தொலைப்பேசி இணைப்புகள் தனியார் நிறுவனத்திடமிருந்து வருவதால், பிரச்னை அங்குதான் என்றும், ஒட்டுக்கேட்பதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றவேண்டும் என்றும் சொன்னார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ஷிவராஜ் பாடீல் தனியாக புதியதொரு சட்டம் தேவையில்லை என்றும் இப்பொழுது இருக்கும் சட்டமே போதும் என்றும் குறிப்பிட்டார்.

காவல்துறை தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது பலருடைய தொலைப்பேசிகளையும் ஒட்டுக்கேட்கின்றனர் என்பது நமக்குத் தெரிந்ததே. இது பல வருடங்களாக நடந்துவருகிறது. கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் நேரத்தில் பல தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தொடர்ச்சியாக மும்பை "அண்டர்வேர்ல்ட்" ஆசாமிகளின் தொலைப்பேசிகள் (எண்கள் தெரியவரும்போது) ஒட்டுக்கேட்கப்படுகின்றன.

ஆனால் ஒரு நீதிபதியை ஏற்றுக்கொள்ளச் செய்தால்தான் ஒட்டுக்கேட்கும் அனுமதி காவல்துறைக்குத் தரப்படும் என்று நினைக்கிறேன். அமர் சிங் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்க இதுபோன்ற ஓர் உத்தரவு போலியாகத் தயாரிக்கப்பட்டு தொலைப்பேசி நிறுவனத்தில் அதிகாரி ஒருவரை உள்கையாக வைத்து நிகழ்ந்திருக்கிறது என்று தில்லி போலீசார் கூறுகின்றனர்.

இதில் உண்மை வரும்வரை காத்திருப்போம்.

ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை மனத்தில் வைத்திருக்க வேண்டும். GSM செல்பேசிகளை ஒட்டுக்கேட்பது மிக எளிது. இதற்கான கருவிகள் சில நாடுகளில் நேரடிச் சந்தையிலும் பல நாடுகளில் கள்ளச் சந்தையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் Privacy சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. செல்பேசிகளை ஒட்டுக்கேட்கும் ஒருவரை சட்டபூர்வமாகத் தண்டிக்க வழி இருக்கிறதா என்று தெரியவில்லை.

அமர் சிங் பிரச்னையை முன்வைத்து மேற்படி கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

நாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்

கோப்ராபோஸ்ட்.காம் / ஆஜ்தக் தொலைக்காட்சி மூலம் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (10 மக்களவை, 1 மாநிலங்களவை) கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது விடியோவாகக் காண்பிக்கப்பட்டது. அதையடுத்து கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இந்த உறுப்பினர்கள் செய்தது மாபெரும் குற்றம் என்று முடிவுசெய்யப்பட்டு அவர்கள் அனைவரும் உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர்.

இந்திய நாடாளுமன்ற சரித்திரத்தில் இந்த முறையில் உறுப்பினர்கள் பதவி இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் கட்சித்தாவல் தடை சட்டத்தின் காரணமாக, தேர்தல் நேரத்தில் நடந்த முறைகேடுகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானித்ததன் விளைவாக என்று உறுப்பினர்கள் பதவி இழந்திருக்கிறார்கள். கட்சித்தாவல் தடை சட்டத்தால் பதவி இழந்தவர்கள்கூட நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.

ஆக நீதிமன்றம் நாடாளுமன்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்கவேண்டியுள்ளது. அவ்வாறு செய்யும்போது அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர்களாகவும், ஏற்கெனவே நாடாளுமன்றம் ஏற்படுத்தியுள்ள சட்டங்களைக் காப்பவர்களாகவும்தான் செயல்படுகிறார்கள்.

தற்போதைய பதவி விலக்கலில் பாதிக்கப்பட்ட சில எம்.பிக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் லோக்சபா, ராஜ்யசபா காரியாலயங்களுக்கு நோடீஸ் அனுப்பியது. அந்த நோடீஸை அலட்சியம் செய்யப்போவதாக நாடாளுமன்ற அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜீ குறிப்பிட்டுள்ளார். அதாவது சம்பந்தப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைக்க தில்லி உயர் நீதிமன்றத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது அவரது கருத்து.

அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல கட்சித்தாவல் தடைச்சட்டத்தால் பதவி இழந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றங்க்களுக்குச் சென்றுள்ளார்கள். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றங்களே ஒருவர் Representation of People's Act படி பதவி இழக்கக்கூடியவரா இல்லையா என்று தீர்மானிக்கிறது. ஆக நீதிமன்றங்கள் லெஜிஸ்லேச்சர் தொடர்பான விவகாரங்களில் தேவைப்பட்டால் ஈடுபடத்தான் செய்கின்றன. அவைத்தலைவர் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏற்படுத்தும் குழப்பங்கள் மீதாகவும் வழக்குகள் நீதிமன்றங்களில் நடக்கின்றன. (கவனிக்க்க: கோவா சட்டமன்றம்)

ஆக "நான் நீதிமன்றங்களுக்க்குக் கட்டுப்பட்டவன் அல்லன்" என்பதுபோல சாட்டர்ஜி பேசுவது சரியல்ல. இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை இவர் ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்குபதில் பேசாமல் நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பி, நாடாளுமன்றம் செய்தது ஏன் சரி என்று விளக்கலாம்.

சபாநாயகரும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து வாக்கெடுப்பின் மூலமாக வேறு ஓர் உறுப்பினரை பதவி விலகச் செய்யக்கூடும் என்பது அதிர்ச்சியான ஒரு விஷயம். காரணம் எதுவாக இருந்தாலும் சரி... நாளை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து அத்வானியை (ஏதோ காரணத்துக்காக) பதவி விலக்கலாம். எனவே நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எம்மாதிரியான சமயங்களில் இந்தப் "பதவி விலக்கல்" அங்கீகரிக்கக் கூடியது என்று விளக்குவது இப்பொழுது தேவையாக இருக்கிறது.

Wednesday, January 11, 2006

நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்

சென்னை புத்தகக் காட்சி நடக்கும் நேரத்தில் பல விஷயங்கள் நிகழ்ந்தேறுகின்றன. அனைத்தையும் பற்றி எழுத ஆசையிருந்தும் முடிவதில்லை.

சென்னையில் சமீபத்தில் நடந்த பிராமணர் சங்க மாநாடு. இதில் கலந்துகொண்ட சுஜாதா விகடனில் இதுபற்றி எழுதியிருப்பதாக ஸ்ரீகாந்த் எழுதியிருந்தார். கண்காட்சியில் நாராயணுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரும் இதுபற்றி சொன்னார். சுந்தரவடிவேல் பதிவில் உண்மையில் வெளியான கட்டுரை இருந்தது.

ஜாதி சங்கங்கள் இருப்பதே ஆபத்தான ஒரு விஷயம். இந்த ஜாதி சங்கங்கள் மாநாடுகள் நடத்துவதும் அதில் தங்களுக்கு எக்கச்சக்க அரசியல் அதிகாரம் இருப்பதாகவும் தங்களது ஆதரவு இல்லாமல் அரசியல் கட்சிகள் ஜெயிக்க முடியாது என்றும் கூக்குரல் இடுவதும் பொதுவாக அருவருக்கத்தக்கது. ஆனால் பிராமணர் சங்கம் தங்கள் ஆதரவில்லாமல் 20-25 சட்டமன்ற தொகுதிகளில் யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

பிற ஜாதி சங்கங்களைக் காட்டிலும் பிராமணர் சங்கம் ஆபத்தானது. இந்தச் சங்கத்தின் ஒரு முக்கியமான நோக்கம் பிராமணர்கள் பிறரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதை அழுத்திச் சொல்வது. "ஓ.சியில் 90 சதவீதம் பிராமண குழந்தைகள் வர வேண்டும்." என்றாராம் சரசுவதி ராமநாதன் என்பவர். ஆனால் உண்மை என்னவென்றால் கடந்த பொறியியல் நுழைவுத்தேர்வில் ஓ.சியில் 25% கூடப் பெறமுடியாத நிலைதான் பிராமணர்களுக்கு.

சுஜாதாவின் ஒப்பீடு அர்த்தமற்றது. எல்லா சமூகங்களிலும் ஏழைகளின் பொருளாதார நிலை கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். இதனால் பிற ஏழைகளுக்கும் தலித் ஏழைகளுக்கும் ஒரேமாதிரியான பிரச்னை என்று சொல்லிவிடமுடியாது. பிராமண சமூக ஏழைகள் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுபோன்ற வாய்ப்புகள் தலித்துகளுக்குக் கிடையாது. இப்பொழுதுகூட.

இதனால் பிராமண ஏழைகள் திண்டாடட்டும் என்று விட்டுவிடக்கூடாது. பிராமணர் சங்கம் என்று ஒன்று இருக்கவேண்டுமானால் அவர்களது நோக்கம் இதுபோன்ற ஏழை பிராமணர்களின் நிலையை முன்னேற்றுவதாக, கல்விக்குக் கடன் அல்லது மான்யம் அளிப்பதாக, வேலை கிடைக்க வகை செய்வதாக இருக்கவேண்டுமே அன்றி, கத்தியைத் தூக்குவோம் என்றெல்லாம் அபத்தமாகப் பேசுவதாக இருக்கக்கூடாது.

"நம்முடைய சாதனைகள்" என்று பாலசந்தர் குறிப்பிடுவது நன்றாக இல்லை. அதைப்போன்றே பிற பிரபலங்கள் பேசியதும்.

கடைசியாக சுஜாதா சொன்னதாக வரும் மேற்கோள்: "நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்." இப்படி சுஜாதா நிஜமாகவே நினைத்தார் என்றால் ... "அய்யோ, பாவம்" என்று மட்டும்தான் சொல்லலாம். சுஜாதாவின் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு உரைகள் எல்லாம் வெகு சாதாரணம் என்ற வகையைச் சார்ந்தவையே. சொல்லப்போனால் அவை உரைகளே அல்ல. சுமாரான நவீன தமிழ் வடிவம். விளக்கிச் சொல்லுதல், உட்பொருளைக் காணவைத்தல், இயற்றப்பட்ட காலம், இடம் ஆகியவை தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளைக் கொடுத்தல் என எதுவுமே இல்லாமல் செய்யப்பட்டவை இவை.

மேற்கண்டவற்றுக்கு பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் (உ.வே.சா போன்ற பிராமணர்களும்கூட) சுஜாதாவைவிட மிகச்சிறப்பான உரைகளை எழுதியிருக்கிறார்கள்.

நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்

சென்னை புத்தகக் காட்சியில் நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்:

1. காந்தி வாழ்க்கை, மூலம் லூயி ஃபிஷர், தமிழில் தி.ஜ.ர, பழனியப்பா பிரதர்ஸ், முதல்பதிப்பு 1962, இந்தப் பதிப்பு 1990, பக்கங்கள் 744, டெமி, கெட்டி அட்டை, விலை ரூ. 90 (இது மிச்சம் மீதி இருக்கும் பழைய பிரதி. தேடினால் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நான் வாங்கியதைப் பார்த்து வழியில் என்னிடம் கேட்டவர்களையெல்லாம் அந்தப் பக்கம் அனுப்பி வைத்தேன். அதனால் இன்று பிரதிகள் இருக்குமா என்றே சொல்ல முடியாது. புது அச்சாக்கத்தில் வந்தால் விலை ரூ. 300ஐத் தாண்டும்)

2. இந்திய தத்துவ ஞானம், கி. லக்ஷ்மணன், பழனியப்பா பிரதர்ஸ், முதல் பதிப்பு 1960, இந்தப் பதிப்பு 2005, பக்கங்கள் 440, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 84

3. கால்டுவெல் ஐயர் சரிதம், ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், முதல் பதிப்பு 1944, இந்தப் பதிப்பு 2003, பக்கங்கள் 136, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 30

4. கம்பா நதி, வண்ணநிலவன், அன்னம், முதல் பதிப்பு 1979, இந்தப் பதிப்பு 1994, பக்கங்கள் 112, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 22

5. மொழியும் அதிகாரமும், எல். ராமமூர்த்தி, அகரம், 2005, பக்கங்கள் 192, டெமி, சாதா அட்டை, விலை ரூ. 90

6. குட்டி இளவரசன், அந்த்வான்த் செந்த் - எக்சுபெரி, தமிழில் ச.மதனகல்யாணி & வெ.ஸ்ரீராம், க்ரியா, ப்ரெஞ்ச் பதிப்பு 1946, தமிழ் முதல் பதிப்பு 1981, இந்தப் பதிப்பு 1994, பக்கங்கள் 100, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 100

7. எனது வாழ்வும் போராட்டமும், கான் அப்துல் கபார் கான், தமிழில் க.விஜயகுமார், தமிழோசை பதிப்பகம் - (My Life and Struggle by Khan Abdul Ghaffar Khan as narrated to K.B.Narang, English Translation by Helen H. Bouman - இந்தத் தமிழ் மொழியாக்கம் ஆங்கிலம் வழியாக.) பக்கங்கள் 224, டெமி, சாதா அட்டை, விலை ரூ. 100

8. காலம் 25ம் இதழ், அறிவியல் சிறப்பிதழ் (கண்டாவிலிருந்து வரும் காலாண்டிதழ்)

9. யூ ஆர் அப்பாயின்டட், 'மாஃபா' கே.பாண்டியராஜன், விகடன் பிரசுரம், பக்கங்கள் 182+, கிரவுன், விலை ரூ. 70

10. காசு மேல காசு, நாகப்பன் - புகழேந்தி, விகடன் பிரசுரம், பக்கங்கள் 252+, கிரவுன், விலை ரூ. 85

11. வந்தார்கள்.. வென்றார்கள்!, மதன், விகடன் பிரசுரம், பக்கங்கள் 188+, டபுள் கிரவுன், விலை ரூ. 95

Saturday, January 07, 2006

கிழக்கு புத்தகங்கள் - 4

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

மார்க்கெட்டிங் என்றால் என்ன? பலரும் விற்பனையை (sales) மார்க்கெட்டிங்குடன் குழப்பிக் கொள்கிறார்கள். விற்பனை ஊழியர்களை "மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ்" என்று அறிமுகம் செய்வார்கள். அதேபோல வேறு சிலர் மார்க்கெட்டிங் செய்வது என்றால் விளம்பரம் (அட்வெர்டைசிங்) செய்வது என்று நினைத்துக்கொள்வார்கள்.

தினம் தினமும் நாம் நுகர்வோராக வாங்கும் பொருள்களான சோப்பு, சீப்பு; பெறும் சேவைகளான முடிவெட்டிக்கொள்ளுதல், டை அடித்துக் கொள்ளுதல்; பார்க்கும் கிரிக்கெட் மேட்சுகள்; அதில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்; புதுவருடப் பிறப்பு என்கிற தினம், கிறிஸ்துமஸ் தினம், காதலர் தினம் போன்றவை, தீபாவளி, பொங்கல், அக்ஷய திருதியை, "புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா", "ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்" போன்ற கோஷங்கள் என அனைத்துமே மார்க்கெட்டிங் செய்யப்படும் பல்வேறு விஷயங்கள்.

மார்க்க்கெட்டிங் எனப்படும் செயல்முறையில் பல்வேறு பகுதிகளை மிக எளிதான இந்திய, தமிழக உதாரணங்கள் மூலம் யாரும் புரிந்துகொள்ளக்கூடியவகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

புத்தகத்தை எழுதிய சதீஷ் என்னுடன் கிரிக்கின்ஃபோவில் வேலை செய்தவர். அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்துவிட்டு இந்தியாவில் சில விளம்பர ஏஜென்சிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்தவர். இப்பொழுது சில தனியார் மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துகிறார். சில நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராக உள்ளார். ஒரு முக்கியமான விஷயம் - இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்னர் தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதுவதைத் தவிர சதீஷ் தமிழில் வேறெதுவும் எழுதியதில்லை!

இந்தப் புத்தகத்தை எழுதும் திட்டம் சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பக அரங்கில் நடந்தேறியது. புத்தகம் முடிவடைய ஒரு வருடம் ஆகியுள்ளது.

எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் வறண்ட ஆங்கிலப் பாடப் புத்தகங்களைப் படிப்பதைவிட, இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் மார்க்கெட்டிங் பற்றி எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். எல்லா நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் - அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் சேர்ந்து எப்படி தம் வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது, சந்தோஷப்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தினை நாடலாம். சாதாரண நம்மைப்போன்றோர் நாம் தினம்தினமும் ஒரு பொருளையோ சேவையையோ பெறும்போது எப்படி அந்தந்த மார்க்கெட்டர்களால் வழிநடத்தப்படுகிறோம் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தை உருவாக்கியதில் எனக்கு நிறைய மனநிறைவு கிடைத்தது.

Friday, January 06, 2006

கோழிக்கோடில் ஒரு மாலை நேரம்

(கிழக்கு புத்தகங்கள் - 3: ஆல்ஃபா)

மலையாள எழுத்தாளர்கள் இருவரது புத்தகங்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதைக் கொண்டாடும்விதமாக 5 ஜனவரி, வியாழன் அன்று ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பும் வழியில் இப்பொழுது பெங்களூர் விமான நிலையத்திலிருந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.

T.D.ராமகிருஷ்ணன் எழுதிய நாவலான 'ஆல்ஃபா' தமிழில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. K.P.ராமனுண்ணி எழுதிய நாவலான 'சூஃபி பரஞ்ச கதா' ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சாஹித்ய அகாதெமியால் வெளியிடப்பட்டுள்ளது. (அடுத்து இதன் தமிழாக்கம் கிழக்கு மூலம் வெளியாகும்.)

மலையாள எழுத்துலக ஜாம்பவான் M.T.வாசுதேவன் நாயர் தலைமை தாங்க கூட்டம் காலிகட் பிரெஸ் கிளப்பில் நடந்தது. தொலைக்காட்சி சானல்கள், செய்தித்தாள் நிருபர்கள் குவிந்திருந்தனர். (ஆனால் எம்.டி பேசி முடித்ததும் பலர் எழுந்து சென்றுவிட்டனர்.)

இதுவரையில் பிறமொழிகளிலிருந்து மலையாளத்துக்கு கிட்டத்தட்ட 5000-6000 நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவாம். ஆனால் மலையாளத்திலிருந்து பிறமொழிகளுக்குச் சென்றுள்ளவை சுமார் 2000 நூல்கள்தானாம். (தமிழுக்கு என்ன கணக்கு உள்ளது என்றாவது நமக்குத் தெரியுமா?) அதனால் பிறமொழிகளுக்கு மலையாளம் கொண்டுசெல்லப்படுவதை வரவேற்கவேண்டும், அதற்கான உதவிகளைச் செய்யவேண்டும் என்று எம்.டி..வாசுதேவன் நாயர் பேசினார்.

கிழக்கு இப்பொழுது ஈடுபட்டிருக்கும் ஒரு திட்டம் பிறமொழிகளிலிருந்து முக்கியமான நூல்களை தமிழுக்குக் கொண்டுவருவது. இதை கன்னாபின்னாவென்று செய்யாமல் ஒருமுகமாக, கவனமாகச் செய்ய விரும்புகிறோம். அதன்படி முதலில் நாங்கள் எடுத்துக்கொண்டிருப்பது மலையாளம். ஒவ்வோர் ஆண்டும் மலையாளத்தில் வெளியான சிறந்த 25 நூல்களை எடுத்துக்கொண்டு அவற்றை ஓர் ஆண்டுக்கு உள்ளாகவே தமிழுக்குக் கொண்டுவருவது. இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்தித் தருபவர் மலையாளம்-தமிழ் மொழிமாற்றத்தில் முக்கிய இடத்தைப் பெறுபவரான குறிஞ்சி வேலன். இவர் இதுவரை 32 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். இவருக்கு உறுதுணையாக ஆறு மொழிமாற்றுக் கலைஞர்களைக் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவரும் இந்த மொழிமாற்றத் திட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

25 சிறந்த நூல்கள்.... இது எந்த வகையில் சாத்தியம்? சில சிறந்த நூல்கள் எஙகள் கண்களில் படாமல் போகலாம். சில பட்டும், அதற்கான மொழிமாற்றும் உரிமை வேறு நிறுவனங்களுக்கு, தனியார்களுக்குப் போகலாம். பல்வேறு காரணங்களால் சில நூல்கள் தமிழாக்கம் செய்யப்படாமல் போகலாம். ஆனால் நாங்கள் கொண்டுவரும் நூல்கள் சிறப்பானவையாக, மலையாளத்தில் நன்கு பேசப்பட்டனவாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஆல்ஃபா இந்த வரிசையில் முதல் நூல். முதல் வருடத்தில் மொழிமாற்றப்படும் சில நூல்கள் கடந்த சில வருடங்களில் எழுதப்பட்டவை. ஆனால் அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாக புதிய நூல்களை மட்டுமே தேர்வுசெய்யத் தொடங்குவோம். 25 நூல்கள் என்பது அதிகமாகி 50 அல்லது அதற்கும் மேல் ஆகலாம்.

மலையாளம்->தமிழ் மொழிமாற்றத்தில் ஈடுபடவிரும்புபவர்கள், இரண்டு மொழிகளிலும் நல்ல திறமை உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Thursday, January 05, 2006

ஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு

AP quota: SC for status quo on HC order

ஆந்திராவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம்களுக்கு என்று தனியாக 5% இட ஒதுக்கீடு அவசரச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இப்பொழுது உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. உச்ச நீதிமன்றம் இதை அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் மூலம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கு 50% இட ஒதுக்கீடு பற்றிய வழக்கின் அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிய என் பதிவு.

Wednesday, January 04, 2006

நிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்

ராமைய்யாவின் குடிசையில் ஆரம்பித்த விவாதம் நிலச்சீர்திருத்தம் பற்றித் தொட்டது. அமார்த்ய சென் நேற்று ஹைதராபாதில் பேசும்போது சொன்னது இது:
The rapid growth of the country's economy in the recent past notwithstanding, India cannot become a major player in the global economy unless it completed the land reform process, Nobel laureate Amartya Sen said here on Tuesday.

It was important to unleash the kind of energy that China had done to emerge as a global player, for which land reforms were extremely important. The land reform process, which kept the economies of States like West Bengal, where it was fairly complete, floating, was substantially incomplete in the country.
மேற்கு வங்கத்தில் நடந்த மாதிரி, சீனாவில் நடந்தமாதிரி நிலச் சீர்திருத்தம் இந்தியா முழுக்க நடைபெற வேண்டும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம், The Long March, An Account of Modern China, Simone de Beauvoir, Phoenix Press, 1957, சீனாவின் நிலச்சீர்திருத்தம் பற்றி நன்றாகச் சொல்கிறது.

கிழக்கு புத்தகங்கள் - 2

ஆதவன் சிறுகதைகள்

ஆர்.வெங்கடேஷ் என்னிடம் ஏதேனும் ஆதவன் சிறுகதைத் தொகுப்புகள் உள்ளதா என்று ஒருநாள் கேட்டார். "ஆதவன் யார்?" என்பதுதான் என் பதில் கேள்வியாக இருந்தது.

வெங்கடேஷ் தான் ஆதவனால் கவரப்பட்டதாகவும், தற்போது (அவர் என்னிடம் பேசியபோது) அவரது படைப்புகள் எதுவும் பிரசுரத்தில் இல்லை என்றும் அவரது கதைகள், கட்டுரைகள் அனைத்தையும் கொண்டுவர விரும்புவதாகவும் சொன்ன்னார். அதற்கு சற்றுப் பின்னர்தான் உயிர்மை வழியாக என் பெயர் ராமசேஷன் வெளியானது. அதற்குப் பிறகு மீண்டும் உயிர்மை வழியாக காகித மலர்கள் நாவலும் வெளியானது. அந்த சமயத்தில் வெங்கடேஷும் நானும் ஆதவன் மனைவியைத் தொடர்புகொண்டு ஆதவனது பிற படைப்புகளுக்கான பதிப்பிக்கும் உரிமையைப் பெற்றோம்.

முதலில் இரவுக்கு முன்பு வருவது மாலை என்ற பெயரில் அவரது குறுநாவல்களை தொகுப்பாகக் கொண்டுவந்தோம். வெங்கடேஷ் ஆதவன் சிறுகதைகளைத் தேடித் தேடித் தொகுத்து வைத்திருந்தார். அதில் பல அசோகமித்திரனிடமிருந்து வாங்கியது. அசோகமித்திரன் ஆதவன் சிறுகதைத் தொகுதி முதலில் இமயம் வெளியீடாக வந்திருந்தபோது மார்ஜினில் (வெகு)சில குறிப்புகள் எழுதிவைத்திருந்தார். அவை சுவையானவை. இப்படி மொத்தமாகக் கிடைத்த முந்தைய சில சிறுகதைத் தொகுப்புகளில் விடுபட்டிருக்கும் சிலவற்றைத் தேடி வெங்கடேஷ் அலைந்தார். கஸ்தூரி ரங்கனிடமிருந்து கணையாழி இதழ்கள் பல கிடைத்தன. அதிலிருந்து இரண்டு கதைகள் கிடைத்தன. அமுதசுரபி தீபாவளி மலரில் ஒரு கதை எழுதியிருக்கிறார் என்று தெரிந்ததும் திருப்பூர் கிருஷ்ணனிமிருந்து அதைப் பெற்றோம். தீபம் இதழ்களில் ஏதேனும் வந்தது விடுபட்டிருக்குமா என்று தேடினோம். எதும் இல்லை என்றே நினைக்கிறோம். கிட்டத்தட்ட ஆதவன் எழுதிய அனைத்து சிறுகதைகளும் (குழந்தைகள் கதைகளைத் தவிர) இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

ஆதவன் எழுத்தில் அத்தனையையும் கொட்டிவிடுவார். ஓர் ஆணின், பெண்ணின் மனநிலையை அப்படியே படம் பிடித்து நமக்கு ரன்னிங் கமெண்டரி தருவார். சின்னச்சின்ன விஷயங்களைக்கூட பத்திபத்தியாக எழுதிவிடுவார். சில சமயங்களில் நம்மை யோசிக்கவேவிடாது அதிகமாகப் பேசிவிடுகிறாரோ என்று தோன்றும்.

அவரது சிறுகதைகள் அச்சுக்குப் போவதற்குமுன் ஒன்றுவிடாமல் படித்து தவறு ஏதும் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டியது என் வேலை. அவரது கதைகளின் களமான தில்லி, அங்குள்ள இடங்கள், பெயர்கள், அலுவலகம், அலுவலகத்தில் நடப்பவை, அவர் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் (அவற்றின் தமிழ் transliteration) ஆகியவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவேண்டும். அவரது பத்திகள் மிகப் பெரியன. பல வாக்கியங்கள் நீண்டிருக்கும். கதை சொல்லும் பாணியில் நிறைய உரையாடல் வரும். அதில் ஆண், பெண் - யார் எதைப் பேசுகிறார் போன்ற குழப்பங்கள் அதிகம். அதையெல்லாம் சரி செய்யவேண்டிய வேலை.

இந்த வேலையை ரசித்துச் செய்தேன். என் பிற வேலைகளுக்கிடையே இந்த வேலையைச் செய்யவேண்டிவந்ததால் நிறைய நாள்கள் ஆயின. அவரது 60 கதைகளில் சில சொற்கள் மீண்டும் மீண்டும் வரும். அவை பற்றிய புள்ளிவிவரங்களை தனியாக (பின்னர்) ஒரு பதிவாக எழுதுகிறேன். அவர் மிக அதிகமாக உபயோகித்த சொல் "ஆபீஸ்."

ஆ.இரா.வெங்கடாசலபதி கொண்டுவந்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிக்குக் கடைசியில் பின்குறிப்புகளாகப் பலவற்றைச் சேர்த்திருப்பார். அதேபோல பின்குறிப்புகள் அல்லது அடிக்குறிப்புகள் சிலவற்றைச் சேர்க்கலாமா என்று யோசித்தோம். பின், வேண்டாம் என்று முடிவுசெய்து விட்டுவிட்டோம்.

ஆதவன் சிறுகதைகள் தொடும் பல விஷயங்கள் இன்றுகூட யாரும் தொட முயற்சி செய்யாதவை. பகிரங்கமாகப் புத்தகங்களின் கதைகளாக எழுத விரும்பாதவை. (அல்லது எழுதியிருந்தால் என் கண்ணில் படாதவை.) இவற்றையெல்லாம் தனியாகக் குறிப்பிட்டு எழுத ஆசை. இந்த மாதக் கடைசியில் பார்க்கலாம்.

Tuesday, January 03, 2006

29வது சென்னை புத்தகக் காட்சி

சென்னையில் நடக்கும் 29வது ஆண்டு புத்தகக் காட்சி இது. ஜனவரி 6 முதல் 16 வரை நடக்கிறது. இடம்: காயிதே மில்லத் கலைக்கல்லூரியின் பின்புறம்.

BAPASI இந்த காட்சிக்கென புது லோகோ ஒன்றை வடிவமைத்துள்ளது.



(நாயும் புத்தகம் படிப்பதைக் காணவும்!)

கிழக்கு பதிப்பகத்தார் இந்தக் கண்காட்சி தொடர்பான விஷயங்களைத் தர ஒரு வலைப்பதிவைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான விஷயங்கள் http://bookfair2006.blogspot.com/ என்ற முகவரியில் கிடைக்கும்.

கிழக்கு புத்தகங்கள் - 1

சென்ற வருடம் கிழக்கு பதிப்பகத்துக்காக நான் ஈடுபட்டு உருவாக்கிய புத்தகங்கள் மிகவும் குறைவு. "அள்ள அள்ளப் பணம்", மூன்று கிரிக்கெட் புத்தகங்கள் - அவ்வளவுதான்.

ஆனால் இந்த வருடம், கிரிக்கின்ஃபோ வேலையை விட்டுவிட்டு முழுவதுமாக கிழக்கில் ஈடுபட்டேன். என் பிரதான வேலை புத்தகங்களைத் தயார் செய்வதல்ல. ஆனாலும் ஈடுபாட்டின் காரணமாக சில புத்தகங்களில் வேலை செய்தேன். வரவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி நேரத்தில் (6-16 ஜனவரி 2006, காயிதே மில்லத் கல்லூரி, கிழக்கு ஸ்டால் எண் D-60) அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மூன்று விரல்

இரா.முருகன் எழுதிய நாவல். குமுதம்.காம் இணைய இதழுக்காக எழுதப்பட்ட தொடர்கதை. ஏற்கெனவே புத்தகமாக சபரி பதிப்பகம் மூலம் வெளிவந்தது. இதுதான் நான் வாங்கிப் படித்த முருகனின் முதல் புத்தகம். அவரது சிறுகதைகளை, கவிதைகளை, குறுநாவல்களை அதுவரையில் படித்திருக்கவில்லை நான். இரா.முருகன் யார் என்றே எனக்குத் தெரியாத நேரம் அது. நவீன தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அறிந்திருக்காத நேரம். ஜூலை 15, 2003-ல் நான் இந்தப் புத்தகம் பற்றி எழுதிய பதிவு இங்கே. அப்பொழுது கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கப்படவில்லை. கிழக்கு ஆரம்பிப்பதற்கான எண்ணம் கூட அப்பொழுது உருவாகவில்லை.

முதல் பதிப்பில் பரவலாக வெளியே தெரியாத புத்தகம் இது. இப்பொழுது இரண்டாம் பதிப்பில் பலரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். இந்த நாவல் முதலில் எழுதப்பட்ட நேரத்தைவிட இப்பொழுது மென்பொருள் எஞ்சினியர்கள் அதிகம். அவர்களது வாழ்க்கை சரியாக இதுவரையில் எங்குமே பதிவாகவில்லை.

மென்பொருள் வல்லுனர்களின் வாழ்க்கையை சுதர்சன் என்னும் மாயவரத்து இளைஞனின் பார்வையில் சொல்லும் கதை இது. சுதர்சன் லட்சக்கணக்கான மென்பொருள் புரோகிராமர்களின் வகைமாதிரி. எதைப் படித்தால் வேலை கிடைக்கும், உள்ள வேலையை எப்படித் தக்கவைத்துக் கொள்ளலாம், வேறு எந்த மொழியை/paradigm-ஐக் கற்று அடுத்த hot-topicக்குத் தாவலாம் என்று யோசிக்கும் கூட்டத்தின் பிரதிநிதி. இரவு பகல் பாராது உழைக்க வேண்டிய கட்டாயம். ஊர் விட்டு ஊர் சென்று, நாடு விட்டு நாடு சென்று அங்கு முகத்தில் அடிக்கும் அந்நிய கலாசாரத்தின் ஈர்ப்புக்கு மயங்கி ஆனால் தன் பின்னணியை விட்டுக்கொடுக்க முடியாத திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டியிருக்கும் மனிதன்.

தன் வேலைக்கு அப்பால் சொந்த வாழ்க்கை என்று ஒன்று உள்ளது என்பதையே எப்பொழுதாவதுதான் நினைப்பவன். ஆனால் அந்த வாழ்க்கையும் அவனுக்கு தீராத பிரச்னைகளை மட்டுமேதான் கொண்டுவருகிறது. பெற்றோரின் உடல் நலக் குறைவு, தந்தை பொய்க் குற்றச்சாட்டால் ஜெயில் செல்லவேண்டிய நிலைமை, தன் மீது காதல் கொண்ட பெண், ஆனால் தான் காதலிக்காத பெண் - உருவாக்கும் நெருக்கடிகள், எங்கோ லண்டனில் பார்த்துப் பழகிய பெண்ணின் மீதான ஈர்ப்பு தன்மீது உருவாக்கும் சுமை, என்று இன்னமும் பல சுற்றியிருக்கும் பெண்கள் உருவாக்கும் சூறாவளிக்குள் மாட்டுகிறான். முடிவாக 9/11 இரட்டை கோபுரத் தகர்வும் அதையொட்டிச் சரிந்த மென்பொருள் துறையும் இழக்கப்பட்ட வேலை வாய்ப்புகளும் அவனை எங்கேயோ கொண்டு சேர்க்கின்றன.

மென்பொருள் துறையைச் சார்ந்தவர்கள் அனைவருமே நிச்சயமாக இந்தக் கதையுடன் ஒன்றிப்போகமுடியும்.

எனக்கு மிகவும் பிடித்த முருகனின் படைப்பு இது. அவரது அரசூர் வம்சம் நாவலுக்கு முன்னர் எழுதப்பட்டது.

Sunday, January 01, 2006

செய்தியோடை மாற்றம்

இதுநாள் வரையில் என் பதிவின் செய்தியோடையை RSS ஆக வைத்திருந்ததை இப்பொழுது Atom செய்தியோடையாக மாற்றியுள்ளேன்.

புதிய செய்தியோடை முகவரி: http://thoughtsintamil.blogspot.com/rss/atom.xml