[எனது கணினியில் அடைந்துகிடக்கும் பல பழைய கோப்புகளை அழிக்கும் வேலையில் உள்ளேன். கீழே உள்ள கட்டுரை ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து கேட்டு, 17-09-2005 அன்று நான் எழுதிக்கொடுத்தது. அவர்கள் ஏதோ காரணத்தால் பிரசுரிக்க இயலாது என்று சொல்லிவிட்டனர். ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த தரம் இல்லாது இருந்திருக்கலாம். எனவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே பிரசுரமாகிறது:-) எழுத்துப் பிழைகள் இருக்கலாம். சில கருத்துப் பிழைகளும் இருக்கலாம். தகவல்கள் பழையவை. நிச்சயமாக இன்று மாறியிருக்கும்.]
கடந்த காலாண்டில் (அதாவது ஏப்ரல், மே, ஜூன் 2005இல்) இந்தியாவில் மொத்தமாக 10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் 45 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகும் என்று சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை வருடத்துக்கு 25-30% அதிகமாகிக் கொண்டே போகும். ஆனால் நம் மக்களுக்கு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று புரிந்துவிட்டால் இந்த எண்ணிக்கை இன்னமும் பலமடங்கு அதிகமாகும்.
இன்று கிட்டத்தட்ட அனைவருக்குமே மொபைலின் தேவை நன்றாகப் புரிந்துள்ளது. இப்பொழுது வரும் மொபைல் விளம்பரங்கள் ஏன் ஒருவருக்கு மொபைல் தேவை என்றெல்லாம் விளக்கிச் சொல்வதில்லை. ஆனால் இன்னமும் மக்களுக்கு கம்ப்யூட்டரின் தேவை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஓரளவு தெரிந்திருந்தாலும் என்ன மாதிரியான கம்ப்யூட்டரை வாங்கவேண்டும் என்று புரிவதில்லை.
இன்றைய தேதியில் கம்ப்யூட்டர் என்றாலே அத்துடன் இண்டெர்நெட் கனெக்ஷன் (இணைய வசதி) என்பதையும் சேர்ந்தே பெற வேண்டியுள்ளது. இணைய வசதி இல்லாத கம்ப்யூட்டர் கிட்டத்தட்ட வேஸ்ட் என்றே சொல்லிவிடலாம்.
மொபைலைப் போலவே இணைய வசதி உள்ள கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு பிறருடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் (Email) மூலம் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளலாம். மெசஞ்சர் எனப்படும் முறையில் உலகின் எந்தக் கோடியில் இருப்பவராக இருந்தாலும் அவருடன் எழுத்து மூலம் நேரடியாக உரையாடலாம். நல்ல பிராட்பேண்ட் (அகலப்பாட்டை) இணைய வசதியிருந்தால் எதிராளியுடன் பேசலாம். பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம்! இலவசமாக! டிஜிட்டல் கேமரா ஒன்று கையில் இருந்தால் அதில் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். ஒருவருடன் மெசஞ்சரில் எழுதிக்கொண்டோ, பேசிக்கொண்டோ படங்களை அவருக்கு அனுப்பி வைக்கலாம். வெப் கேமரா எனப்படும் கருவியை வைத்துக்கொண்டு விடியோ கான்ஃபரன்சிங் செய்யலாம்.
இந்தக் கடைசி விஷயம் எவ்வளவு பவர்ஃபுல் என்றால் அதுவே இப்பொழுது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைக்கான விளம்பரமாக உள்ளது. வேலைக்காக அமெரிக்காவில் கணவன். இந்தியாவில் மனைவி, குழந்தை. தினமும் பிராட்பேண்ட் இணைப்பின் மூலம் இரண்டு பக்கத்தினரும் முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொள்கிறார்களாம்! தனிக்கட்டணம் எதுவும் கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
இதைத்தவிர சிறு குழந்தைகளுக்கு சிடியில் பாப்பாப் பாட்டு போட்டு சோறு ஊட்டிவிடுவது முதல், லேடஸ்ட் விசிடி, டிவிடி ஹாலிவுட் படங்கள் பார்ப்பது வரையில், இணையத்தில் மேய்ந்து பள்ளிக்கூட/கல்லூரி புராஜெக்ட் வேலைகளைச் செய்வது, சொந்தமாக வலைப்பதிவுகள் வைத்துக்கொண்டு எழுத்தாளராகி, புத்தகங்கள் பதிப்பிக்கும் அளவுக்கு முன்னேறுவது என்று ஏகப்பட்ட விஷயங்களைச் செய்யலாம்.
இதில் இன்னுமொரு முக்கிய விஷயம் - அத்தனையையும் ஒரே நேரத்தில் செய்யலாம்! அதாவது உங்கள் நண்பர்கள் பத்து பேருக்கு ஒரே மின்னஞ்சலை அனுப்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், இரண்டு நண்பர்களுடன் மெசஞ்சரில் சாட்டிங் செய்யலாம். அதே நேரத்தில் சிடியில் இளையராஜாவின் திருவாசகம் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். வலையுலாவியில் (Browser) கிரிக்கெட் ஸ்கோர் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கத்தில் கூகிள் தேடு இயந்திரத்தில் தேவையான விஷயங்களைத் தேடிக்கொண்டிருப்பீர்கள்.
தசாவதானியாவது அவ்வளவு எளிது - கையில் ஒரு கம்ப்யூட்டரும், இணைய வசதியும் இருந்துவிட்டால்!
இன்னும் எவ்வளவோ சொல்லலாம். வங்கிக் கணக்குகளை முழுக்க முழுக்க கவனித்துக்கொள்ளலாம். கிரெடிட் கார்ட், தொலைபேசிக் கட்டணம் என்று பலவற்றை வீட்டில் இருந்தவாறே கட்டலாம். ரெயில்வே டிக்கெட் புக் செய்யலாம். வீட்டுக்கே தபாலில் அனுப்பிவிடுவார்கள். வீட்டில் இருந்தவாறே உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் தங்க, வைர நகைகளைக் கூட இணையம் வழியாக விற்பனை செய்கிறார்கள்!
இதெல்லாம் சரி, எந்த கம்ப்யூட்டரை வாங்குவது?
கம்ப்யூட்டர் வாங்கும்போது சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. ஏகப்பட்ட விளம்பரங்கள் வருகின்றன. ரூ. 10,000க்கு கம்ப்யூட்டர் என்கிறார்கள். மறுபக்கம் ரூ. 20,000, ரூ. 30,000 என்றெல்லாம் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்கிறார்கள். எதை வாங்குவது? லாப்டாப் கம்ப்யூட்டர் என்று கையடக்கமாக, தோல்பையில் போட்டு தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் இளம் ஆண்களையும் பெண்களையும் பார்த்திருப்பீர்கள். அதை வாங்கலாமா என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.
முதலில் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி என்ன காரணத்துக்காக உங்களுக்கு கம்ப்யூட்டர் தேவை என்பது. பிறருடன் தொடர்பு வைத்துக் கொள்ளவா? படிப்பின் காரணமாகவா? பொழுதுபோக்குச் சாதனமாகவா? இல்லை உங்களது வேலையைத் திறம்படச் செய்து அதன்மூலம் அதிகப் பணம் சம்பாதிப்பதற்கா? இந்தக் கேள்விக்கான விடையிலிருந்துதான் நீங்கள் எந்த மாதிரியான கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்க வெண்டும் என்று சொல்லலாம்.
இரண்டாவது உங்கள் பட்ஜெட். நம் ஆசை எப்படி இருந்தாலும் நம்மால் இவ்வளவுதான் செலவு செய்ய முடியும் என்று இருந்தால் அதற்குள்ளாகத்தானே வாங்க முடியும்?
மூன்றாவது இணைய வசதி. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் விரும்பிய கம்ப்யூட்டரை வாங்கிவிட முடியும். ஆனால் இணைய வசதி என்பது நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தது. இந்தியாவில் பல இடங்களில் இப்பொழுது அகலப்பாட்டை வசதிகள் (அகல அலைவரிசை என்று பி.எஸ்.என்.எல் கூறுகிறது) முழுமையாகக் கிடைப்பதில்லை. அகலப்பாட்டை இல்லாவிட்டால் பல காரியங்களைச் செய்வது எளிதாக இருக்காது. சாதாரண டயல்-அப் இணையம் மூலம் நண்பர்களுடன் பேசுவது கடினம். விடியோ கான்ஃபரன்சிங் பற்றியெல்லாம் மறந்துவிடலாம். கனமான டிஜிட்டல் கேமரா படங்களை அனுப்புவதோ பெறுவதோ கடினம். ஆக நீங்கள் வசிக்கும் இடத்தில் அகலப்பாட்டை கிடைக்கிறதா என்று பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அது கிடைக்காவிட்டால் விலை அதிகமான சூப்பர் டூப்பர் கம்ப்யூட்டரை வாங்கிவைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க வேண்டியிருக்கும்.
கம்ப்யூட்டரின் பாகங்கள் பற்றியும் ஆபரேடிங் சிஸ்டம் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். கம்ப்யூட்டரின் மூளை அதாவது கஷ்டமான கணக்குகளை எல்லாம் அநாயாசமாகப் போட்டுத் தள்ளும் சக்தி CPU எனப்படும். PC எனப்படும் கம்ப்யூட்டர்க்கான மூளையைத் தயாரிப்பவர்கள் மூன்று நிறுவனங்கள். இண்டெல், ஏ.எம்.டி, வயா. ஒரு காலத்தில் இண்டெலை விட்டால் வேறு வழியில்லை என்று இருந்தது. இப்பொழுது அப்படியில்லை. இண்டெல் நிறுவனம்தான் பெண்டியம், செலரான் என்ற இரண்டு சிப்களை உருவாக்குகிறது. இதில் பெண்டியம் என்பது அதிகத் திறனுடையது. செலரான் சற்றுக் குறைவு. விலையும்தான். ஏ.எம்.டி நிறுவனம் ஆப்டெரான், ஆத்லான் என்னும் பெயர்களில் சிப்களை வெளியிடுகின்றது. வயா நிறுவனம் அதே பெயரிலேயே ஒரு மிகக்குறைந்த விலை சிப்பை உருவாக்குகிறது.
விலை குறைவாக இருக்க வேண்டுமானால் இண்டெலின் செலரான் சிப், அல்லது ஏ.எம்.டியின் ஆத்லான் சிப் பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை வாங்கலாம். இந்தக் கம்ப்யூட்டர்களில் அதிவேக கிராபிக்ஸ் அடங்கிய விளையாட்டுகளை விளையாடுவது சிரமம். ஆனால் சிடி போட்டு பாடல்கள் கேட்பது, விடியோ படங்கள் பார்ப்பது, எழுதுவது, படிப்பது, பேசுவது ஆகிய அனைத்தையும் கஷ்டமின்றிச் செய்யமுடியும். நீங்கள் முதல்முதலாக PC வாங்குவதென்றால், செலவைக் குறைக்க ஆசைப்பட்டால் செலரான், ஆத்லான் உள்ள கம்ப்யூட்டர்யை வாங்கலாம். இண்டெல்தான் வேண்டும் என்று கிடையாது. ஏ.எம்.டி சிப் உள்ள கம்ப்யூட்டர்யை தைரியமாக வாங்கலாம். இரண்டுக்கும் நம்மைப் பொறுத்தவரையில் எந்த வித்தியாசமும் இல்லை.
பணம் சில ஆயிரங்கள் அதிகமானால் பரவாயில்லை, ஆனால் கம்ப்யூட்டர் வேகமாக வேலை செய்யவேண்டும் என்று விரும்பினால் பெண்டியம் அல்லது ஆப்டெரான் சிப்களைத் தேர்ந்தெடுங்கள்.
இந்த வயா சிப் இருக்கிறதே, அது தொடக்க நிலைக் கம்ப்யூட்டர்களில் இப்பொழுது சேர்க்கப்பட்டு வருகிறது. ரூ. 10,000க்குக் கம்ப்யூட்டர் என்று விளம்பரம் வருகிறதல்லவா, அதில் இந்த சிப்தான் உள்ளது. இது ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்யத் திணறும். எனவே மிகக் குறுகிய நோக்கத்துக்காகக் கம்ப்யூட்டர்யை வாங்குவதாக இருந்தால் - அதாவது மின்னஞ்சல் மட்டும் செய்வதற்கு, எழுத்து வேலைகளைச் செய்வதற்கு, இணையத்தில் உலா வருவதற்கு, எப்பொழுதாவது பாட்டு கேட்பதற்கு என்று இருந்தால் - வயா கம்ப்யூட்டர்யை வாங்கலாம்.
அதற்கடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது RAM எனப்படும் மெமரி. ராம், ரேம் இரண்டுக்கும் இடைப்பட்ட உச்சரிப்பு. 64 மெகாபைட், 128 மெகாபைட், 256 மெகாபைட், 512 மெகாபைட், 1 கிகாபைட் என்ற கொள்ளளவுகளில் நிறுவப்படும். பல நேரங்களில் நல்ல வேகமான சிப் போட்டுவிட்டு மெமரியில் கோட்டைவிட்டு, எனது கம்ப்யூட்டர் ஏன் சரியாக, நினைத்தமாதிரி வேலை செய்யவில்லை என்று பலர் கேட்பார்கள். இன்றைய நிலையில் 256 மெகாபைட் மெமரியாவது இருப்பது நலம். 512 மெகாபைட் இருந்தால் உத்தமம். இன்னொரு 256 மெகாபைட் மெமரிக்காக நீங்கள் செலவழிக்கப்போவது வெறும் ரூ. 1,300 தான். ஆனால் அதனால் கிடைக்கும் பலன் எக்கச்சக்கம்.
அடுத்தது மல்ட்டிமீடியா PC என்பதற்கான உபகரணங்கள். வீட்டு உபயோகத்துக்கென வாங்கும் எந்தக் கம்ப்யூட்டரிலும் மல்ட்டிமீடியா விஷயங்களைச் சேர்த்தே வாங்குவது உசிதம். கம்ப்யூட்டர் ஒரு சிறந்த பொழுதுபோக்குக் கருவியுமாகும். ஒரு சிடி ரீடர் (அதாவது சிடி - காம்பாக்ட் டிஸ்க் - களைப் படிக்கும் கருவி), ஒரு சவுண்ட் கார்ட், இரண்டு ஸ்பீக்கர்கள் - இந்த மூன்றும் குறைந்தபட்சத் தேவைகள். சிடியைப் படிப்பதைப் போலவே சிடியில் எழுதவும் செய்ய முடியும். சாதாரண சிடிக்கு அடுத்த நிலையில் உள்ளது டிவிடி. ஒரு சிடியில் 650 மெகாபைட் அளவுக்கு சேமிக்கலாம். ஒரு டிவிடியில் 4.7 கிகாபைட்கள் அதாவது ஏழரை சிடிக்களின் உள்ள அளவுக்குச் சேர்த்து வைக்கலாம். இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி, ஒரே அளவில், வட்ட வடிவமாக இருக்கும்.
இப்படி சிடி, டிவிடி என்று இரண்டு இருப்பதால் இவற்றைப் படிக்க, எழுத என்று கீழ்க்கண்ட பல்வேறு வகைகளில் கருவிகள் உள்ளன.
பெயர் | என்ன செய்யலாம் | விலை சுமாராக |
---|
CD R | சிடியை மட்டும் படிக்கும், டிவிடியைப் படிக்காது. | ரூ. 750 |
DVD R | சிடி, டிவிடி இரண்டையும் படிக்கும். எதிலும் எழுதாது. | ரூ. 1,600 |
CD RW | சிடியை மட்டும் படிக்கும், சிடியில் எழுதும். ஆனால் டிவிடையைப் படிக்காது. | ரூ. 1,600 |
DVD R, CD RW | டிவிடியைப் படிக்க மட்டும் செய்யும். சிடியைப் படிக்கும், அதில் எழுதவும் செய்யும். | ரூ. 2,500 |
DVD/CD RW | டிவிடி, சிடி இரண்டையும் படிக்கும், இரண்டிலும் எழுதும். | ரூ. 3,500 |
ஆக, இதில் நமக்கு என்ன தேவை என்று பார்த்து வாங்கவேண்டும். டிவிடி படிக்கக்கூடிய வசதி இருந்தால்தான் டிவிடி சினிமாப் படங்களைப் பார்க்க முடியும். மற்றபடி பாடல்கள் நிறைந்த சிடி, விசிடி ஆகிய இரண்டையும் மேற்குறிப்பிட்ட எல்லாக் கருவிகளின் வழியாகவும் கேட்கலாம், பார்க்கலாம்.
ஸ்பீக்கர்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரூ. 200இலிருந்து ஆரம்பித்து. ஆனால் உங்களுக்கு நல்ல அகலப்பாட்டை இணைய வசதி இருந்தால் காதோடு இருக்கும் இயர்போனுடன் மைக் செட் ஒன்று வாங்கிவிடுங்கள். காதில் மாட்டிக்கொண்டு நண்பர்களோடு மணிக்கணக்கில் பேச வசதியாக இருக்கும்.
தேவை இருப்பவர்கள் ஒரு வெப்கேம் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் அறையில் நல்ல வெளிச்சம் இருந்தால்தான் எதிராளியால் உங்கள் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். அகலப்பாட்டை இல்லாவிட்டால் மிகச் சிறியதாக மட்டுமே முகங்களைப் பார்க்க முடியும்.
அடுத்து டிஜிட்டல் கேமரா. இதன் தேவையை இன்று அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். ஃபில்ம் சுருள் போடும் கேமராவை இன்று சாதாரண மக்கள் மறக்கத் தொடங்கிவிட்டனர். டிஜிட்டல் கேமராவில் வேண்டிய படங்களை எடுத்து நேரடியாக கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் சேர்த்துவிடலாம். பின் அதனை நண்பர்கள், உறவினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இது கம்ப்யூட்டரில் உள்ள USB port மூலம் இயங்குகிறது. டிஜிட்டல் கேமரா இப்பொழுது ரூ. 6500இலிருந்து கிடைக்கிறது.
இன்று யாரும் ஃபிளாப்பியைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் ஃபிளாஷ் டிரைவ் என்ற USB port வழியாக வேலை செய்யும் சிறு கருவி வந்துவிட்டது. இதை வைத்து ஒரு கம்ப்யூட்டரிலிருந்து கோப்புகளை எடுத்து இன்னொரு கம்ப்யூட்டருக்குக் கொண்டுசெல்ல முடியும். போர்ட்டபிள் எம்.பி3 பிளேயர்களைக் கூட இவ்வாறு கம்ப்யூட்டரில் சேர்த்து பாடல்களை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் கொண்டுசெல்ல முடியும். சில எம்.பி3 பிளேயர்களுடன் டிஜிட்டல் ஆடியோ ரெகார்டரும் இணைந்து கிடைக்கிறது. ஃபிளாஷ் டிரைவ் இப்பொழுது ரூ. 650இலிருந்து கிடைக்கிறது.
பிரிண்டர்கள் இன்று வெகுவாக விலை குறைந்து கிடைக்கின்றன. அறிமுக நிலையில் ரூ. 3,000க்குக் குறைவாக இங்க்ஜெட் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. பல வண்ணங்களில் அச்சிடலாம். டிஜிட்டல் கேமரா இருக்கும் காரணத்தால் இன்று ஸ்கேனர்கள் வாங்குவது வீடுகளுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. சில அலுவலகங்களில் வேலைக்கு ஏற்ப ஸ்கேனர்கள் வாங்க வேண்டியிருக்கலாம்.
அடுத்து இணைய இணைப்புக்கு. அகலப்பாட்டை இணைப்புக்கு USB வழியாக இயங்கும் பிராட்பேண்ட் மாடம் அல்லது ஓர் ஈதர்நெட் நெட்வொர்க் கார்ட் தேவைப்படும். டயல்-அப் என்றால் ஒரு சாதாரண மாடம் தேவைப்படும். இதையும் கம்ப்யூட்டர் வாங்கும்போதே வாங்கிவிடுவது நலம். பி.எஸ்.என்.எல் மாதம் ரூ. 250க்கு அகலப்பாட்டை இணைப்பு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் இருக்கும் தொலைபேசி எக்ஸ்சேஞ்சில் இந்த இணைப்பு கிடைக்கிறதா என்று கேட்டுப்பார்க்கவும். இன்னமும் சில மாதங்களில் சென்ன்னை நகரில் வயர்லெஸ் அகலப்பாட்டை இணைப்பு வரப்போவதாகச் சொல்கிறார்கள்.
அடுத்து ஆபரேடிங் சிஸ்டம். இப்பொழுதைக்கு இரண்டு கிடைக்கிறது. ஒன்று லினக்ஸ். முழுதும் இலவசம்! அடுத்தது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்.பி என்பது. இது இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. ஹோம் எடிஷன் எனப்படுவது ரூ. 3,750. நமக்கெல்லாம் இதுவே போதுமானது. சில அலுவலக வேலைகளுக்கு புரொஃபஷனல் எடிஷன் என்ற சற்றே உயர்ந்த வடிவம் தேவைப்படலாம். அது சுமார் ரூ. 7,000. பலரும் ஆபரேடிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரையில் அதற்கென தனியாக காசு கொடுக்காமல் பிறரிடமிருந்து பிரதி எடுத்துக் கொள்கிறார்கள். அது சட்டப்படி குற்றம். அதற்கு பதில் லினக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தை வைத்துக்கொள்ளலாம். பல குறைந்த விலை கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களும் இதனால்தான் தங்களுடைய கம்ப்யூட்டர்களுடன் லினக்ஸைக் கொடுக்கிறார்கள்.
லினக்ஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டரில் உங்கள் தேவைகள் அனைத்தையுமே செய்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்.பி கம்ப்யூட்டரில் Plug and Play எனப்படும் ஒரு வசதி உண்டு. அதன்படி டிஜிட்டல் கேமரா, விடியோ கேமரா, ஃபிளாஷ் மெமரி போன்ற பல உபகரணங்களையும் அப்படியே விண்டோஸ் எக்ஸ்.பி உள்ள கம்ப்யூட்டரில் இணைத்தாலே போதுமானது. கம்ப்யூட்டரே தானாகவே என்ன கருவி இணைக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து அதற்குத் தேவையான டிரைவர் மென்பொருள்களைச் சேர்த்து, அந்தக் கருவிகளை வேலை செய்ய வைக்கும். லினக்ஸில் இப்படி எளிதாகச் செய்ய முடியாது. உங்களுக்கு உதவ அருகில் கம்ப்யூட்டர் பற்றி நன்கு தெரிந்தவர் யாராவது இருந்தால் நிச்சயமாக லினக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தலாம்.
லினக்ஸில் ஒரு வசதி. வைரஸ் தொல்லைகள் ஏதும் கிடையாது. ஆனால் விண்டோஸ் எக்ஸ்.பி என்றால் ஆண்டி-வைரஸ் மென்பொருள் உங்களுக்குத் தேவைப்படும். இல்லாவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் தேவையற்ற தொல்லைகளுக்கு ஆளாகும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் அழிந்து போகலாம், படிக்க முடியாமல் போகலாம்.
இதைத்தவிர கம்ப்யூட்டர் வைக்க ஒரு மேசை, உட்கார முதுகுக்கு இதமான சுழல் நாற்காலி, மின்சார பாதிப்புகளுக்கு உட்படாமல் இருக்க ஒரு UPS என்று அதிகப்படி செலவுகள் இருக்கும்.
ஆக, ரூ. 10,000 என்று விளம்பரப்படுத்தப்படும் கம்ப்யூட்டரை வாங்க மொத்தமாக ரூ. 18,000 வரை செலவாகிவிடும். சுமாரான மேசை கம்ப்யூட்டராக வாங்க வேண்டுமானால் அது மட்டுமே ரூ. 18,000-20,000 ஆகிவிடும். அதற்கு மேல் பிற செலவுகள் இருக்கும். மிக நல்ல மேசை கம்ப்யூட்டர் வாங்க ரூ. 28,000 வரை ஆகிவிடும்.
அதைப் பார்க்கும்போது ஒரு லாப்டாப் வாங்கிவிடலாமே என்று கூடத் தோன்றலாம். ரூ. 36,500 முதல் (எல்லாச் செலவுகளையும் சேர்த்து) லாப்டாப்கள் இப்பொழுது கிடைக்கின்றன. கையோடு எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். UPS தேவையில்லை. மின்சாரம் போனாலும் ஓரிரு மணி நேரம் பேட்டரியிலேயே வேலை செய்யும்.
கம்ப்யூட்டர் விலைகள் கடும் போட்டியின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் வெகுவாகக் குறைந்து விட்டன. ஆனால் உலக அளவில் கம்ப்யூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிப்பதில்லை. அதனால் இனியும் கம்ப்யூட்டர் விலைகள் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் இன்னமும் திறன்மிக்க கம்ப்யூட்டர்கள் கிட்டத்தட்ட இப்பொழுதுள்ள விலையிலேயே கிடைக்கத் தொடங்கும்.
இதுதான் சரியான நேரம் கம்ப்யூட்டர் வாங்குவதற்கு. கம்ப்யூட்டர் வாங்குவதுடன் சரியான இணைய வசதியும் சேர்த்துத் தேடி வாங்குங்கள்.