Tuesday, June 30, 2009

பிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா?

சனிக்கிழமை அன்று பெங்களூரிலிருந்து ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த ‘பிரபாகரன்: வாழ்வும் மரணமும்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படித்து அதிர்ச்சியில் இருந்தார் அவர்.

“அதெப்படி சார், பிரபாகரன் இறந்துட்டார்னு நீங்க அட்டைல போடலாம்?” என்றார். “உங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கு? உங்களுக்கு அந்தத் தகவலை யார் கொடுத்தா? நிதர்சனம்.நெட் பாத்தீங்களா, தலைவர் நவம்பர் 27-ம் தேதி வெளில வருவேன்னு அதுல சொல்லியிருக்காரே பாத்தீங்களா?” என்று கேட்டார்.

“ஈழத்துல தமிழன் செத்துகிட்டிருக்கான். நீங்க மரணம்னு போட்டதால தங்களுக்கு இருக்கற ஒரே ஆதரவும் போயிடுச்சேன்னு ஈழத் தமிழர்கள் அதிர்ந்துபோயிடுவாங்களே” என்றார்.

தமிழகத்திலும் உலக அளவிலும் அனைத்து ஊடகங்களிலும் வெளியான ஒரு செய்தி. ஆனாலும் அதை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கக்கூடாது என்றார் அந்த வாசகர்.

உரையாடல், விவாதமாகி, பிரச்னை வலுப்பதற்கு முன்னதாக முற்றுப்புள்ளி வைத்தேன். “ஐயா, உங்களோட உணர்வுகளைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

***

பிரபாகரன் கொலை செய்யப்பட்டாரா, இல்லையா? நீ நேரில் பார்த்தாயா என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இதுவரை தி ஹிந்து பலமுறை பிரபாகரன் மரணம் பற்றி செய்திகளை வெளியிட்டது. ஆனால் இம்முறையும் அப்படியே என்று சொல்லிவிடலாமா? இப்போது சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்ட செய்திகளையும் விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்தே வந்த தகவல்களையும் பார்த்தால் ஒன்றை மட்டும்தான் சொல்லமுடியும்.

பிரபாகரன் உயிருடன் இல்லை.

இதனால் ஈழப் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த விதத்திலும் உதவிகள் சரியாகச் செல்லப்போவதில்லை என்பதே என் கருத்தாக இருந்தது. அது நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தியா 500 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லியும் இலங்கை அரசு நிவாரணப் பணிகளில் மெத்தனமாக இயங்குகிறது என்று ப.சிதம்பரம் சொல்கிறார். போர் என்று வரும்போது இந்தியாவின் பணத்தை மிக நன்றாகவும் ஆர்வத்துடனும் செலவழித்த இலங்கை, நிவாரணம் என்று வரும்போது மெத்தனம் காட்டுவது இயற்கையே.

விடுதலைப் புலிகள் அழிந்துபோனால், அடுத்த நாளே இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து, தமிழர்களுக்கு நன்மைகள் வாரி வழங்கப்படும் என்று இந்தியாவைச் சேர்ந்த புலி எதிர்ப்பு அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தியாவில் உள்ள ஒரு மூத்த, புலி எதிர்ப்பு அரசியல்வாதியை (முன்னாள் மத்திய அமைச்சர்) சில வாரங்களுக்கு முன் சந்தித்தேன். பிரபாகரன் இல்லை என்றானபிறகு தமிழர்களுக்கு எந்த விதத்தில் நன்மை கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று கேட்டேன். ராஜபக்‌ஷே தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும், கட்டாயமாக தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்று தான் நம்புவதாகவும் சொன்னார். இலங்கையின் ஹார்ட்லைன் அரசியல்வாதிகள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டேன். அவர்களைச் சரிக்கட்டுவது ராஜபக்‌ஷேயின் பிரச்னை என்றார்.

அதுதான் பிரச்னை. எந்த சிங்கள அரசியல்வாதியும் தமிழர்களின் நலன் பற்றி சிந்திப்பதே இல்லை. புலிகளை ஒழிக்கவேண்டும் என்பது ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருந்தது. ஒழித்தாகிவிட்டது. அடுத்த சில நாள்கள் விடுமுறை. சில மாதங்களுக்குப் பின், வேண்டுமென்றால் ஏதாவது கமிட்டி அமைத்து, சில பல வட்டமேஜை மாநாடுகளை நடத்தி, பிறகு மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலை ஆயாசத்தைத் தருகிறது. எந்த விதத்திலும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை மாற்றமுடியாத நிலையில் வாக்காளர்கள் இருப்பது வருத்தத்துக்கு உரியது.

நிவாரணப் பொருள்களை ஏந்திவந்த வணங்காமண் கப்பல் இலங்கையிலிருந்து துரத்தப்படுகிறது. அது சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, அங்கிருந்தும் துரத்தப்படுகிறது. கப்பல்துறை அமைச்சர் வாசன், இலங்கையை எப்படியாவது அந்தப் பொருள்களை ஏற்றுக்கொள்ளவைப்போம் என்கிறார். ஆனால் இலங்கை கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. இந்த எளிதான விஷயத்தில்கூட இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும்போது, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற இந்தியாவால் என்ன செய்துவிட முடியும்?

முடியலாம். அதற்கு இந்தியத் தலைமையிடம் ஒரு சீரிய மாற்றம் வரவேண்டும். அது குற்ற உணர்ச்சியினால் விளைந்ததாகவும் இருக்கலாம். இலங்கைத் தமிழர்களின் ரத்தம் தம் கையில் என்ற குற்ற உணர்ச்சி.

அது ஒன்றால் மட்டும்தான் இந்தியத் தரப்பில் மாற்றம் ஏற்படக்கூடும். பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தங்களது போராட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. திமுக தொண்டர்களும் தமது கட்சியின் தலைமைக்கு நெருக்கடி தந்து இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும்.

Sunday, June 28, 2009

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா?

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வே வேண்டாமே என்கிறார்.

இது யஷ் பால் கமிட்டி பரிந்துரையின் பேரில் வந்துள்ளது என்று நினைக்கிறேன். யோசித்துப் பார்த்ததில் இது நியாயமாகவே எனக்குப் படுகிறது. இதை ஆப்ஷனல் என்று வைத்துவிட்டால், சரியாகத்தான் இருக்கும். பள்ளி இறுதித் தேர்வு என்று ஒரு தேர்வு இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.

11, 12 வகுப்புகளில் எந்த அடிப்படையில் ஒரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட பாடத் துறை தரப்படும் என்ற கேள்வி எழும். சமீபத்தில் தான் விரும்பிய ஒரு பாடத் துறை கிடைக்காத ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியை வலைப்பதிவுகளிலும் பத்திரிகைகளிலும் பார்த்தோம். அந்தப் பிரச்னையை எதிர்கொள்வது வேறு விஷயம்.

அடுத்து முக்கியமானது பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கு எந்த அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பது என்ற கேள்வி. இந்தப் படிப்புகளுக்கு ஒருவர் போக விரும்பினால், முன்னதாகவே முடிவு செய்து, ஆப்ஷனல் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி, பின்னர் இந்தப் படிப்புகளுக்குப் போகவேண்டும். இதனால் பல மாணவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத குழப்பம் ஏற்படலாம்.

அடுத்தது, பள்ளி விட்டு பள்ளி மாறும்போது. பத்தாம் வகுப்புத் தேர்வையும் ஒரு பள்ளிக்கூடமே நடத்தி மதிப்பெண்கள் கொடுக்கும்போது, மாணவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற விரும்பினால் அந்த மாணவரது தரம் என்ன என்பதை எப்படி அறிந்துகொள்வது? இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று தோன்றுகிறது. இப்போது ஒன்பதாம் வகுப்பிலோ, பதினொன்றாம் வகுப்பிலோ மாறும்போது என்ன நடக்கிறதோ, அதையோ பத்தாம் வகுப்பு முடித்து மாற்றும்போது செய்துகொள்ளவேண்டியதுதான்.

மற்றொரு சிக்கல்: இப்படி ஏதாவது நடைபெறுவதாக இருந்தால், மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து சில சட்டங்களை இயற்றவேண்டும். கல்வி என்பது concurrent list-ல் உள்ளது. சில மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் நிறைய குழப்பங்கள் வரக்கூடும்.

கல்வித் துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு இருக்காது என்றே நினைக்கிறேன்.

எந்த மாற்றம் கொண்டுவந்தாலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். என் கருத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒழித்துவிடலாம்; வேண்டுபவர்களுக்கு ஆப்ஷனலாக வைத்துக்கொள்ளலாம் என்பதே.

Saturday, June 27, 2009

வடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்

கிழக்கு புத்தகக் கண்காட்சிகள் இப்போது சென்னையில் கீழ்க்கண்ட இடங்களில் நடக்கின்றன:

பொன்மனம் திருமண மண்டபம்
சரவண பவன் ஹோட்டலுக்கு எதிரில்
115/213, ஆர்காட் ரோடு
வடபழனி, சென்னை 600026

எம்.கே.பி (மகாகவி பாரதி நகர்) பஸ் ஸ்டாண்ட் அருகில்
356-A, வெஸ்ட் அவென்யூ
எம்.கே.பி நகர், சென்னை 600039

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், முதல் மற்றும் நான்காம் மாடிகளில்
மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில்
ரெங்கநாதன் தெரு
தி.நகர், சென்னை 600017

அத்துடன் ஏற்கெனவே பெரம்பூரிலும் நடந்து வருகிறது.

ஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)

சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். அவர்கள்: நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; சட்ட அமைச்சர் அம்பேத்கர். அம்பேத்கர் தனக்கு நிதி போர்ட்ஃபோலியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று ஓரிடத்தில் படித்தேன். (கிறிஸ்டோஃபர் ஜாஃப்ரிலாட் எழுதிய Dr Ambedkar And Untouchability: Analysing And Fighting Caste என்ற புத்தகத்தில் என்று நினைக்கிறேன்.) ஆக, அம்பேத்கரை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டுவந்து இவருக்கு நிதித்துறை என்னும் மிக முக்கியமான பொறுப்பை நேரு கொடுக்கக் காரணம் என்ன? இவர் பொருளாதாரத் துறையில் என்ன சாதித்திருந்தார்?

அமைச்சரவை தொடர்பாக காந்தியிடம் ஆலோசிக்காமல் நேருவும் படேலும் முடிவெடுத்திருக்க மாட்டார்களே? காந்திக்கு சண்முகத்தைத் தெரியுமா? காந்தி என்ன சொல்லியிருப்பார்?

நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பியது ஏன்? காங்கிரஸ்காரர்கள் என்ன கலகம் செய்து இவரைத் துரத்தினர்?

இந்த மனிதர் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் மிகக் குறைவே. சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஒரு பிஎச்.டி ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் ஜனரஞ்சக வடிவத்தை தமிழ்ப் புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிடப் போகிறது.

அதனை எடிட் செய்யும்போதுதான் இந்த மனிதரின் பல குணங்கள், சாதனைகள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுல் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை.

இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்னை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் முகமது அலி ஜின்னா போல, ஆங்கிலேயர்களுடன் கருத்து வேற்றுமை இருந்தாலும், தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆங்கில அரசு சார்பில் இவருக்கு ஏதாவது ஒரு பதவி இருந்துவந்தது. ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். உதாரணமாக அட்லாண்டிக் பிரகடனம் தொடர்பாக இவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுடன் பேசியது.* (இதுபற்றி தனியாக எழுதவேண்டும்.)

இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய Balance of Payment சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

கோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவையில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். (உரையா, ஆய்வுக்கட்டுரையா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பிரதி கிடைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.) தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார்.

மேலே நான் சொன்னது மிகச் சில துளிகளே. இவரது வாழ்க்கையில் தெரிந்துகொள்ள சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன.

தனிவாழ்வில் நிறைய சொத்து சேர்த்துள்ளார். பொதுவாழ்வில் நிறைய சாதித்துள்ளார். ஒருவிதத்தில் பார்த்தால் உலகளாவிய பெருமை பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ஆனால் இவர்மீது வெளிச்சமே விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

Sunday, June 21, 2009

கல்விக் கடன்

இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காடி சானலில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான ஒரு நேரடி நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டேன். கடந்த வாரத்தில் ஏற்கெனவே ஒருமுறை கலந்துகொண்டிருந்தேன்.

நிகழ்ச்சியை நடத்துபவர் ஷண்முக சுந்தரம். அவர் இன்று காலையில்தான் கல்விக் கடன் தொடர்பாக ஒரு நேரடி நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சியிலும் நேயர்கள் தொலைபேசி மூலம் தங்கள் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம். இன்று கலந்துகொண்ட விருந்தினர்களில் ஒருவர் இந்தியன் வங்கியின் சேர்மன் சுந்தர ராஜன். இந்த நிகழ்ச்சி பற்றியும் எந்த மாதிரியான கேள்விகள் வந்தன என்றும் ஷண்முக சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தேன்.

கல்விக்குக் கடன் தருவதில் வங்கிகள் சுணக்கம் காட்டுகின்றன. வினவு போன்றவர்கள் என்னவோ சூட், கோட், டை கட்டியவர்களுக்கு மட்டும் கடன் தருவதாக எழுதிக் குழப்புகின்றனர்.

கடன் பெற யார் தகுதி உடையவர்? உயர் கல்வி நிறுவனம் எதில் இடம் கிடைத்திருந்தாலும் போதும், அந்த நபர் கல்விக் கடன் பெறத் தகுதி உடையவர் ஆகிறார். அவர் தனது அட்மிஷன் ஆவணங்களை எடுத்துச் சென்றால் போதும். கூட, கையெழுத்து போட அவரது பெற்றோர் ஒருவர். 4 லட்ச ரூபாய் வரை கடன் பெற இது போதும். இதற்கு மேல் வேறு எதுவும் வேண்டாம். அதற்குமேல், 7.5 லட்ச ரூபாய் வரை கடன் வேண்டுமென்றால் சொத்து ஆவணங்கள் வேண்டும்.

இந்தக் கடனை கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இங்குதான் இரண்டாம் பிரச்னை ஆரம்பமாகிறது. (முதல் பிரச்னை கடன் பெறுவதிலேயே உள்ளது. அது பின்னர்.) பொறியியல் கல்லூரிகளின் கட்டணம் ஆண்டுக்கு 80,000 ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது கல்விக் கடன் பெற்று ஒருவர் பிழைத்துவிடலாம். மேற்கொண்டு ஆகும் இதர செலவுகளுக்கு - புத்தகங்கள், துணி, ஹாஸ்டல் - பெற்றோர்கள் அல்லது உறவினர்கள்/நண்பர்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். ஆனால் கல்வி நன்கொடை (அதாவது லஞ்சம்) போன்றவற்றுக்கு இந்தக் கடன் உதவி செய்யாது.

இப்போது முதல் பிரச்னைக்கு வருவோம். 4 லட்சம் வரை உடனடியாகக் கடன் கிடைக்கும் என்னும்போது, பிரச்னை ஏதும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். பிரச்னை, கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிடும் மாணவர்களால் ஏற்படுகிறது. 60% கடன்கள் திருப்பிக் கட்டப்படுவதில்லையாம். இப்படி வாராக் கடன்கள் இருக்கும் ஒரு நிலையில் மேற்கொண்டு எந்த வங்கிதான் கல்விக் கடன் தர முற்படும்? ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கடன் தராமல் இருக்கவே வங்கிகள் முற்படும். தனியார் வங்கிகள் கிட்டவே நெருங்கா.

இதனை எப்படி மாற்றுவது?

எப்படி ஒரு வீட்டை, நிலத்தை வாங்கும்போது நில ஆவணம் மார்ட்கேஜ் செய்யப்படுகிறதோ, அதேபோல, கடன் வாங்கும் நபரை மார்ட்கேஜ் செய்தால்தான் வாராக்கடன்கள் குறைக்கப்படும். இதுவரை கடன் வாங்கிய மாணவர்கள் இரண்டில் ஒருவர் செய்துள்ள ஏமாற்றால்தான் இனி வரும் மாணவ சமுதாயத்துக்குக் கடன்கள் கிடைப்பதில்லை. இதைக் குறைக்க, கல்விக் கடன் கோரும் ஒவ்வொரு மாணவர்மீதும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

1. ஒரு மாணவர் வாங்கியுள்ள கல்விக் கடன் பணம் கட்டணத்துக்கு என்று நேரடியாக கல்வி நிறுவனத்துக்குப் போகவேண்டும். அந்தக் கடனுக்கு மாணவர், வங்கி, கல்வி நிறுவனம் என்ற மூவரும் உடந்தையாக இருக்கவேண்டும்.

2. மாணவர் கல்வி நிறுவனம் வாயிலாக கேம்பஸ் நேர்முகம் மூலம் வேலை பெறுகிறார் என்றால் அந்தத் தகவலை கல்வி நிறுவனம் வங்கிக்கு அறிவிக்கவேண்டும். தொடர்ந்து, வேலை கொடுத்துள்ள நிறுவனம், மாணவர், வங்கி என்று முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, மாணவரது மாத வருமானத்தில் குறிப்பிட்ட பங்கு மாதாமாதம் வங்கிக்குச் செல்லுமாறு செய்யவேண்டும்.

3. பாஸ்போர்ட்டில் ECNR என்று ஸ்டாம்ப் செய்திருப்பார்கள். அதேபோல பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது, கட்டிமுடிக்கப்படவில்லை என்ற ஸ்டாம்ப் இருக்கவேண்டும். இது கொஞ்சம் கஷ்டமானது, இதைச் செயல்படுத்த எந்த முறையைப் புகுத்தவேண்டும் என்று சற்றே யோசிக்கவேண்டும். மாணவர்கள் கடனைக் கட்டினால்தான் இந்த ஸ்டாம்ப் நீக்கப்படும், அதன் பின்னரே அவர்கள் வெளிநாடு செல்லலாம் என்ர முறை வரவேண்டும். அல்லது அவர்கள் வெளிநாட்டுக்க்ப் போவது மற்றொரு மேல்படிப்பு என்றால், அதற்கேற்றார்போல் அவரது வங்கி அதனை ஏற்றுக்கொண்டு no objection சான்றிதழ் தரவேண்டும். அதன்பின்னரே எமிக்ரேஷன் துறை அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கும்.

4. சொந்த முயற்சியில் வேலை பெறுபவர்களை எப்படிக் கண்காணித்து அவர்களை கடன்களைத் திரும்பச் செலுத்துமாறு செய்வது என்று யோசிக்கவேண்டும்.

ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? இந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியர்கள் நியாயமாக நடந்துகொள்வதில்லை என்பது தெளிவு. எங்காவது அரசை, வங்கிகளை ஏமாற்ற வழி இருக்கிறது என்றால் ஓர் இந்தியன் அந்த ஏமாற்றும் காரியத்தைச் செய்கிறான் என்பதைத்தான் 60% கடன்கள் திரும்பச் செலுத்தப்படாதது தெரிவிக்கிறது. எனவே, வருங்கால மாணவர்களுக்கு கல்விக் கடனால் நன்மை வரவேண்டும் என்றால் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன.

இல்லாவிட்டால், நியாயமானவர்களுக்கும் ஒழுங்காகக் கடன்கள் கிடைக்காமல் போய்விடும்.

கிழக்கு மொட்டைமாடி: மியூச்சுவல் ஃபண்ட்

வெள்ளிக்கிழமை (19 ஜூன் 2009) அன்று நடைபெற்ற இரண்டாவது பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான உரையாடலில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி ஸ்ரீகாந்த் மீனாக்ஷி பேசுவது, கேள்விகள், உரையாடல் என அனைத்தும், ஒலிப்பதிவாக.

அடுத்த வாரம், 26 ஜூன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, கிரெடிட் கார்டுகள் பற்றி. அனைவரும் வருக.

கிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி

18 ஜூன் 2009 தொடங்கி, 17 ஜூலை வரை பெரம்பூரில் கிழக்கு பதிப்பகத்தின் தினசரி புத்தகக் காட்சி நடைபெறும்.

இடம்:
140, மாதவரம் ஹை ரோடு
பெரம்பூர்
சென்னை 600 011

இப்போது புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை, திருவேற்காடு ஆகிய இடங்களில் கண்காட்சி தொடர்ந்து நடந்துவருகிறது. ராயபுரம் கண்காட்சி முடிந்துவிட்டது.

Friday, June 19, 2009

தமிழ் விக்கிபீடியா ஒலிப்பதிவு


சென்ற வாரம், சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த தமிழ் விக்கிபீடியா பற்றிய ரவிசங்கரின் பேச்சு, அதைத் தொடர்ந்த உரையாடல், கேள்வி பதில்களின் ஒலிவடிவம் இதோ.

சூப்பர் பார்கெய்ன், சூப்பர் டீல்

சிடிபேங் கிரெடிட் கார்டில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்பில் பெட்ரோல் போட்டால் 2.5% காசு திரும்பக் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? கூடவே XTRAREWARDS என்ற ரிவார்ட்ஸ் புரோகிராம் உண்டு. நீங்கள் பெட்ரோல் போடும்போது கூடவே அந்த ரிவார்ட்ஸ் கார்டைக் கொடுத்தால் அதில் சில புள்ளிகள் ஏறும். அந்தப் புள்ளிகளைக் கொண்டு நீங்கள் இலவசமாகச் சில பொருள்களைப் பெறலாம்.

இது தெரியுமா உங்களுக்கு?

அதேபோல, சென்னையில் சில கடைகளில் பிராண்டட் பொருள்களுக்கு நல்ல டிஸ்கவுண்ட் எப்போதும் கிடைக்கும். அந்தக் கடைகள் எங்கே உள்ளன என்று தெரியுமா?

கிழக்குக் கடற்கரைச் சாலையில் வரிசையாக பல ‘seconds showroom’ உள்ளன. அவற்றில் பிராண்டட் பொருள்கள் (சேதாரமானவை; ஆனால் துளிக்கூட என்ன பிரச்னை என்று தெரியாதவை) மாபெரும் டிஸ்கவுண்டில் கிடைக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

ரிவார்ட்ஸ் பாயிண்ட்கள் என்றால் என்ன? நீங்கள் கிரெடிட் கார்டில் கிடைக்கும் ரிவார்ட்ஸ் பாயிண்டுகளை எப்போதேனும் உபயோகமாகப் பயன்படுத்தியது உண்டா?

இதுபோன்ற பல விஷயங்களைப் பற்றிய உரையாடல் சென்ற வெள்ளி (12 ஜூன் 2009) அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடைபெற்றது. அதன் ஒலிவடிவம் இதோ.

இன்று மாலை நடக்க உள்ள மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான உரையாடலுக்கு, கட்டாயம் வாருங்கள்.

மேற்கு வங்கக் கலவரம்

கடந்த சில நாள்களாக மேற்கு வங்கத்தில் நடைபெறும் அதிரடித் தாக்குதல்கள் பயமுறுத்துகின்றன. மாவோயிஸ்டுகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் சேர்ந்து காவல்துறையினரையும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களையும் தாக்கிக் கொன்றுள்ளனர். சில பகுதிகளை (லால்கார்) “கைப்பற்றி” அந்தப் பகுதிகள் “விடுதலை செய்யப்பட்டுள்ளதாக” அறிவித்துள்ளனர். இப்போது காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் சேர்ந்து கலவரக்காரர்களை அடித்து நொறுக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

சில கேள்விகள்:

1. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் காவலர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து எந்தவித அட்டூழியங்களைச் செய்துள்ளனர்? எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் திரிணமுல் காங்கிரஸும் இதை ஒட்டி வெள்ளை அறிக்கை தயாரிப்பார்களா?

2. மாவோயிஸ்டுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை அளிப்பவர்கள். அவர்களுக்கு சரியான கொள்கை உறுதிப்பாடு ஏதும் இல்லை. அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்ற ஒரே கொள்கைதான். ஆனால் அரசுகளின் உதவாக்கரை மனப்பான்மையால் பெரும்பாலான பின்தங்கிய பழங்குடி மக்களும் கிராமப்புற ஏழைகளும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை உடனடியாகத் தடுக்கும் வகையில் மக்களுக்கு நலத்திட்டங்களைச் செய்ய மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசே ஏன் தடுமாறுகிறது? சட்டிஸ்கர் அல்லது ஆந்திராவில் பிரச்னைகள் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில்?

3. திரிணமுல் இந்தக் குழப்பத்தில் எந்த மீனைப் பிடிக்க நினைக்கிறது? தீதி மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கும்மி அடித்தால், நாளை அவரையே தீர்த்துக்கட்டவும் மாவோயிஸ்டுகள் தயங்கமாட்டார்கள் என்பது அவர் அறியாததா?

4. “காவல்துறை அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு” என்ற அமைப்பு உருவானது நந்திகிராம் வன்முறைகள் தொடர்பாகத்தானே? ஏன் நந்திகிராம் தொடர்பாக ஒரு வெளிப்படையான விசாரணை கமிஷன் அமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நஷ்ட ஈட்டைக் கொடுத்து, பிரச்னையை மூடாமல், வளரவிடுகிறது கம்யூனிஸ்ட் அரசு?

5. மாவோயிஸ்டுகளை ஒழிக்க ராணுவ, பாரா மிலிட்டரி படைகள் மட்டும் போதாது. அவர்கள் உருவாவதற்கான காரணிகளை முதலில் அழிக்கவேண்டும். புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் காங்கிரஸ் அரசு அதற்கு என்ன செய்யப்போகிறது?

கச்சத்தீவு

யாருக்காவது கச்சத்தீவு பிரச்னை என்ன என்று தெளிவாகத் தெரியுமா? எனக்குத் தெரியாது.

‘கச்சத்தீவை மீட்பது’ என்றால் என்ன? கச்சத்தீவு என்பது எவ்வளவு சதுர மீட்டர் பரப்பளவு? அதன் strategic importance என்ன? அதனால் இந்திய மீனவர்களுக்கு என்ன ஆதாயம்? அதை ஏன் இந்திரா காந்தி இலங்கைக்குகத் தூக்கிக் கொடுத்தார்? அதை ஏன் கருணாநிதி தடுக்கவில்லை; அல்லது இன்று சொல்வது போல எதிர்த்தார்? அதை எம்.ஜி.ஆர் ஆதரித்தாரா, எதிர்த்தாரா? அதற்குப்பின் வந்த பல தமிழக முதல்வர்களும் சட்டமன்றங்களும் கச்சத்தீவை மீட்கச் சொல்லி ஏன் தீர்மானம் போடவில்லை? அப்படியே தீர்மானம் போட்டாலும் மத்திய அரசை இது எந்த வகையில் கட்டுப்படுத்தும்?

கருணாநிதி இன்று சொல்கிறார்: “அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தால் தீர்மானம் கொண்டுவருவோம்.” ஏன், தீர்மானம் கொண்டுவந்துதான் பாருங்களேன், அனைவரும் ஆதரிக்கிறார்களா, இல்லையா என்று. யாராவது ஒருவர் மட்டும் ஆதரிக்கவில்லை என்றால் தீர்மானம் கொண்டுவரக்கூடாதா என்ன? ஏதோ சட்டமன்றத்தில் நிறைவேறும் அனைத்து விஷயங்களும் ஏகமனதாக ஆதரித்துக் கொண்டுவந்தாற்போல இவர் ஏன் பேசுகிறார்?

அன்னை சோனியா உடனடியாக கச்சத்தீவை மீட்டுத் தராவிட்டால் அண்ணா சமாதி முன் அரை நாள் உண்ணாவிரதம் என்ற பல்ட்டி உண்டா, கிடையாதா?

இலங்கை கச்சத்தீவை வைத்துக்கொண்டு என்ன செய்ய முயற்சி செய்கிறது? இப்போது இந்தியா இலங்கைக்குக் கொடுத்திருக்கும் லீஸ் இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்குச் செல்லும்? அந்த லீச் முடியும்போது ராகுல் காந்தியின் மகன் (அவர் யாரையாவது கல்யாணம் கட்டி, குழந்தை பெற்றபின்...) பிரதமராக இருப்பாரா? அப்போதாவது கச்சத்தீவு இந்தியாவுக்கு மீண்டும் வந்துவிடுமா?

விவரம் தெரிந்தவர்கள் விரிவாக எடுத்துரைத்தால் மகிழ்வேன்.

Thursday, June 18, 2009

கிழக்கு மொட்டைமாடி: கிரெடிட் கார்ட் மியூச்சுவல் ஃபண்ட்

சென்ற வாரம் ‘நல்ல டீல்’ பற்றி மிகவும் சுவாரசியமான கூட்டம் கிழக்கு மொட்டைமாடியில் நடைபெற்றது. அதன் விவரங்களை இந்த வாரம் எழுத நினைத்து இதுவரை செய்யமுடியவில்லை.

அதன் ஆடியோவையும் அதுபற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் நாளைக்குள் எழுதிவிடுகிறேன். அதற்குள் அடுத்த வாரம்! வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை மாலை 6.00 மணிக்கு ‘கிரெடிட் கார்டுகள்’ பற்றிய நிகழ்ச்சி. திடீர் மாற்றம்: தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை ‘மியூச்சுவல் ஃபண்ட்’ பற்றி கலந்துரையாடல். ‘கிரெடிட் கார்ட்’ அடுத்த வாரத்துக்குத் தள்ளப்படுகிறது.

உங்களது அனுபவங்கள், நிபுணர்களின் அனுபவங்கள் என்று கலந்து உரையாடுவோம்.

Fundsindia.com , கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் இந்த மொட்டை மாடி சந்திப்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும்.

சென்ற வாரப் பதிவு

சுயநிதி கல்லூரிகளில் ரெய்டு

இப்போது சென்னையில் சில சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ரெய்டு ஒரு நல்ல விஷயமாகத் தோன்றுகிறது. மீனாக்ஷி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ வேங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ரெய்டுகள் நடந்துள்ளன.

ஆனால், இந்த மூவர் மட்டும்தான் குளறுபடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்ப முடியவில்லை. டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் கல்லூரிகளிலும் ரெய்டு நடக்கும் என்று நம்புவோம்.

எனக்குத் தெரிந்து தமிழகத்தில் மொத்தம் இருக்கும் சுமார் 300 தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஓரிரண்டில் மட்டும்தான் திருட்டுத்தனம் நடப்பதில்லை. ஷிவ் நாடாரின் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி நியாயமான கல்லூரி என்று கட்டாயமாகச் சொல்லிவிடமுடியும். அங்கே அதிகமான கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. அப்படிப்பட்ட கல்லூரிகள் வேறு எவை என்று தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆனால், ஒரு விதத்தில் இந்த செலக்டிவான ரெய்டே நல்ல விஷயம் என்று தோன்றுகிறது. இதன் காரணமாக, தனியார் பொறியியல் கல்லூரி ‘ஓனர்கள்’ குழுவில் விரிசல் ஏற்படும். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க முயற்சி செய்தால் அது மிகவும் நன்றாக இருக்கும்.

ஆனால், இதனால் நிரந்தரத் தீர்வு ஏதும் இருக்காது. தனியார் பொறியியல் கல்லூரிகளை நடத்துபவர்கள் பெரும்பாலானோர் திட்டமிட்டேதான் இந்தக் கொள்ளையைச் செய்கின்றனர். அதே நேரம், அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை மட்டும் வைத்துக்கொண்டு தரமான கல்வியைத் தரவும் முடியாது. (ஷிவ் நாடார் கல்லூரியில் மேற்கொண்டு தேவைப்படும் பணத்தை அவரது அறக்கட்டளை வழங்குகிறது.) எல்லோரும் தேச சேவை என்று தங்கள் பணத்தைப் போட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி நடத்தவேண்டும் என்பது அவசியமில்லை. எனவே தேவையான செலவுகளுக்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

Monday, June 15, 2009

சிரி சிரி சிரி

ஞாயிறு, 14 ஜூன் 2009 அன்று அம்பத்தூர் நகைச்சுவை அமைப்பினர் (ஹியூமர் கிளப்) அவர்களது மாதாந்தரக் கூட்டத்துக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அவர்களது போதாத வேளை...

நான் அப்படி ஒன்றும் முசுடு கிடையாது. ஆனால், வெட்டி ஜோக் அடிப்பது, சிரிப்பு மேட்டர் போடுவது என்பது என் வாடிக்கை அல்ல. விட்டால், ‘சிரிப்புகள் பலவிதம், அவையாவன... 1, 2, 3...’ என்று பட்டியல் போட்டுப் பதிவெழுதத் தோன்றும். நான்கு முறை கேட்டு உறுதி செய்துகொண்டேன். கூட்டம் ஏற்பாடு செய்பவர்கள், பல நேரங்களில் பேச ஆள் கிடைக்காமல் திண்டாடுவார்கள். இன்விடேஷன் அடிக்க ஒரு நாள்தான் பாக்கி என்னும்போது ஒருவர் மற்றவரிடம் அவசர அவசரமாகப் பேசி, கிடைத்த நான்கு பேரில் முதல் ஆசாமியை ஃபோனில் தொடர்புகொண்டு, அவர் சரி என்று சொன்னதும் டக்கென்று ஃபோனை வைத்துவிட்டு இன்விடேஷன் அடித்துவிடுவார்கள்.

அம்பத்தூர் என்பது அடுத்த ஊர். அண்ணா நகர் போய், திருமங்கலம் போய், முகப்பேர் போய், போய் போய் திடீரென ஒரு புது ஊர். அங்குள்ள மக்கள் சென்னைவாசிகள் போலவே இல்லை. யாரோ ஓர் ஆசாமி பேசுவதைக் கேட்க 60 பேர் வரை வந்திருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் சீரியல்கள், சினிமா ஏதும் போடுவதில்லையா, அல்லது அவையெல்லாம் அம்பத்தூரில் தெரிவதில்லையா?

எனக்கு இந்த செயற்கைச் சிரிப்புகளில் நம்பிக்கை இல்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழியிலும் நம்பிக்கை இல்லை. மனிதன் ஒருவன்தான் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு என்றெல்லாம் சொல்லப்படும் சொத்தைவாதமும் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் நேற்று முதல் பரிசு வாங்கிய ஒரு ஜோக் நிஜமாகவே சிரிக்கவைத்தது.

சவுதி அரேபியாவில் ஒரு ஜெர்மன்காரன், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியன் மூவரும் குடித்துவிட்டு மாட்டிக்கொண்டார்களாம். உடனே அரபு ஷேக் அந்த மூவரையும் பிடித்து கசையால் அடிக்க உத்தரவிட்டாராம். ஆளுக்கு இருபது கசையடி. இந்த மூவரும் அய்யா, சாமி என்று அழுது கெஞ்ச, போனால் போகிறது என்று கசையடியை குறைக்காமல், ஆளுக்கு ஒரு வேண்டுகோள் செவி சாய்க்கப்படும் என்று ஷேக் அனுமதி கொடுக்கிறார்.

ஜெர்மன்காரன், தனக்கு முதுகில் கட்டிக்கொள்ள ஒரு தலகாணி (தலையணை) வேண்டும் என்று கேட்கிறான். அதை அவன் முதுகில் கட்டிக்கொள்ள, பத்து அடியில் தலகாணி பிய்ந்துவிடுகிறது. மீதி அடியில் அவன் சுருண்டு விழுகிறான். அடுத்து பாகிஸ்தானி. அவன் இரண்டு தலகாணி வாங்கிக் கட்டிக்கொள்கிறான். அது பதினைந்து கசையடியைத் தாங்கிக்கொள்ள, மிதி ஐந்தில் அவனும் சுருண்டுவிழுகிறான். கடைசியாக இந்தியன். அவன் முறை வரும்போது ஷேக், இந்தியா ஓர் உன்னதமான நாடு என்பதால் இரண்டு வேண்டுகோள்களைக் கேட்கலாம் என்கிறார்.

இந்தியன் சொல்கிறான்: “ஐயா, கசையடியைக் குறைக்கவேண்டாம், 20 என்பதை 100 ஆக்குங்கள்.”

ஷேக்குக்கு ஒரே ஆச்சரியம். சரி அப்பா, இரண்டாவது வேண்டுகோள் என்ன?

“அந்த பாகிஸ்தானியைத் தூக்கி என் முதுகில் கட்டுங்கள்!”

இப்படியாக ஆளாளுக்கு வந்து ஒரு/பல ஜோக்குகளைச் சொல்ல, அரங்கம் கலகலக்க, பட்டாணி சுண்டல் வந்தது; பின்னர் காப்பி வந்தது. கடைசியாக நான் பேசும் முறையும் வந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டு அவர்களைச் சிரிக்கவைத்தேன் என்று நினைக்கிறேன். அல்லது விருந்தாளி மனம் நோகக்கூடாது என்பதனால் அவர்கள் சிரித்துவைத்தார்களா என்றும் தெரியவில்லை.

இந்த மாதிரி மைலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியிலும் மாதாமாதம் இரண்டா ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஹியூமர் கிளப் உறுப்பினர்கள் ஒன்றுசேர்கிறார்களாம். விரும்புபவர்கள் அங்கு போய் சிரிக்கமுடியுமா என்று பாருங்கள்.

திருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி

இன்று (15 ஜூன் 2009), திருவேற்காட்டில் கிழக்கு பதிப்பகம் நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறது.

இடம்:

ஏ.வி.திருமண மண்டபம்
130 சன்னதித் தெரு
கருமாரியம்மன் கோவில் அருகில்
திருவேற்காடு
சென்னை 600 077

நாள்: ஜூன் 15 முதல் ஜூன் 23 வரை (9 தினங்கள் மட்டுமே)

இப்போது ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் ராயபுரம் ஆகிய இடங்களில் கிழக்கின் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

Thursday, June 11, 2009

சுயநிதி பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது அவசியமா?

சுயநிதி கல்லூரிகள் அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகமாக, ‘ரசீது’ இல்லாமல், மேஜைக்குக் கீழாகப் பணம் வாங்குகின்றனர் என்பது அகில உலகமும் தெரிந்த செய்தி. பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் இந்த விஷயத்தைப் பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார். ஆட்சியில் இருப்பவர்கள் இதை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்களை நடத்துவதே அரசியல்வாதிகள்தான். ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு என்று திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் என்று முன்னாள்/இந்நாள் மாண்புமிகுக்கள்தான் பல பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லுரிகளையும் நடத்திவருகின்றனர். இல்லாவிட்டால் சாராய வியாபாரிகள். இன்னமும் கருணாநிதி குடும்பத்தினர் நேரடியாக கல்வி நிறுவனங்கள் அமைப்பதில் ஏன் ஈடுபடவில்லை என்று புரியவில்லை.

ஆனால் ஒருவகையில் பார்த்தால் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் அரசு இந்தக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துவதுதானோ என்றும் தோன்றுகிறது.

நல்ல, தரமான பொறியியல் அல்லது மருத்துவக் கல்வியைத் தர ஒரு தனியார் நிறுவனத்துக்கு நிறையப் பணம் செலவாகிறது. பொறியியல் கல்லூரி ஒன்று வெறும் 35,000/40,000 ரூபாயில் ஒரு செமஸ்டர் கல்வியைக் கொடுத்துவுட முடியாது. அதுதான் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகை. எனவே நியாயவான்கள் இந்தக் கல்வி தரும் விஷயத்தில் ஈடுபடுவதே இல்லை.

எனவே அயோக்கியர்கள் இதில் இறங்குகிறார்கள். பொறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவது; யாருக்கு எவ்வளவு தரவேண்டுமோ தந்து, மாநில அரசு அனுமதி, ஏ.ஐ.சி.டி.ஈ அனுமதி என்று அனைத்தையும் வாங்குவது; முதல் பேட்ச் தொடங்கி ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று மாணவர்களிடமிருந்து வசூல் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் காசிலேயே கட்டடம் கட்டுவது என்றுதான் இத்தனை சுயநிதி கல்லுரிகளுமே வளர்ந்துள்ளன. ஓரிரு விதிவிலக்குகள் மட்டுமே உண்டு.

கட்டடங்கள் பிரமாதமாக இருந்தாலும், ஆசிரியர்கள் தரமாக இருப்பதில்லை. ஏனெனில் இந்தக் கல்லூரியை நடத்தும் புண்ணியவான்களுக்கு உருப்படியான கல்வி தரவேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை. [ஒரு பொறியியல் கல்லூரி கல்வித் தந்தையை நான் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கப் போய், என் பின்னணியைக் கேள்விப்பட்ட அவர், என்னை அவரது கல்லூரிக்கு வருகைதரு பேராசிரியராக ஆகமுடியுமா என்று கேட்டார். எனக்கும் மெக்கானிகல் எஞ்சினியரிங்குக்கும் இன்று ஸ்நானப் பிராப்திகூட இல்லை, நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று சொன்னாலும் அவர் என்னை விடுவதாக இல்லை. எங்களுக்குத் தேவை பெயரளவுக்கு சில ‘பிஎச்.டி’ ஆசாமிகள்; படிப்பு சொல்லித்தருவதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள் என்றார். அவரிடமிருந்து அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிவரவேண்டியதாயிற்று.]

இப்படி மோசமான ஆசிரியர்கள் இருந்தும், இந்தக் கல்லூரிகளுக்கு ஏன் மாணவர்கள் விழுந்தடித்துக்கொண்டு போகிறார்கள்? ஏன் லட்ச லட்சமாக தூக்கிக்கொடுக்கிறார்கள்?

ஏனென்றால் அந்த அளவுக்கு கிராக்கி உள்ளது. எஞ்சினியரிங் படித்தால்தான் (புரோகிராமிங்!) வேலை கிடைக்கும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு ஏற்றார்போலவே இன்ஃபோசிஸ் முதற்கொண்டு பல கம்பெனிகளும் எஞ்சினியரிங் படித்தவர்களாகப் பார்த்து பொட்டி தட்டும் வேலை கொடுக்கிறார்கள். எனவே இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எவ்வளவு லட்சத்தை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர்.

எனவே இன்று பணம் உள்ளவர்களுக்கு (அல்லது பணத்தைத் தேற்றத் தெரிந்தவர்களுக்கு) மட்டும்தான் பொறியியல் படிப்பு என்றாகிவிட்டது. (மருத்துவப் படிப்புக்கு தேவையான இடங்கள் வெகு குறைவு. எனவே அங்கே 40, 50 லட்சமும் அதற்குமேலும் என்று பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் கையில் அத்தனை பணம் இருந்தால், அதை ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டுவைத்தே பல ஆண்டு காலம் சௌக்கியமாக உயிர்வாழமுடியுமே? எதற்கு டாக்டருக்குப் படிக்கவேண்டும்?)

அப்படி இருக்கும்போது அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த நிலையை மாற்றிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்போதைய நிலையில் ஒரு நிறுவனத்திடம் எக்கச்சக்கமாக பணம் கொடுத்த ஒருவர் ஓராண்டுக்குள் அந்த நிறுவனத்திடமிருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர முயன்றால் அவர் கட்டிய கேபிடேஷன் ஃபீஸ் காலிதான். திரும்பக் கிடைக்காது.

இதற்கு பதிலாக, பேசாமல் பொறியியல் துறையில் கட்டணத்தைக் கட்டுப்படுத்துவது என்பதையே நீக்கிவிட்டால் என்ன? எந்த முறையாக இருந்தாலும் ஏழைகளுக்கு வழி இல்லை. அவர்கள் அரசுக் கல்லூரியில் சேர்ந்தால் அல்லது தனியார் கல்லூரியில் அரசு கோட்டாவில் உள்ளே நுழைந்தால்தான் உண்டு. குறைந்தபட்சம் பணம் படைத்தவர்கள் மற்றும் மிடில் கிளாஸ்காரர்களாவது ஒழுங்காகப் பிழைத்துப் போகட்டுமே?

ஒரு கல்லூரி எத்தனை வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதித்தால் அதனால் யாருக்கு நஷ்டம்? ஒருவருக்கும் இல்லை. சொல்லப்போனால் பலருக்கும் லாபம்தான். எப்படி என்று பார்ப்போம்.

1. கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அனைத்தும் வெள்ளைப் பணமாக இருக்கவேண்டும். ரசீது கொடுக்கவேண்டும்.

இப்படிச் செய்வதால் பணம் கட்டுபவர்களுக்கு ஒருவித ‘பாதுகாப்பு’ கிடைக்கிறது. சரியான கல்வி கிடைக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குச் செல்லமுடியும். இரண்டு நாள்கள் முன்பு இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் தேசிகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மாணவர் தான் இத்தனை பணம் கொடுத்ததையும் தனக்கு அவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிப்படி கல்வி கொடுக்கவில்லை என்பதையும் நிரூபித்தால், நுகர்வோர் நீதிமன்றங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வகை செய்யமுடியும்.

கல்விக் கடன் வாங்குவது எளிதாகிறது. கறுப்பில் லஞ்சப் பணம் கொடுக்கும்போது, வங்கிகள் அதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கல்விக்கான கடனைத் தரமுடியாது. ஆனால் வெள்ளையாக, ரசிதுடன் செல்லும்போது சரியான கடன்கள் பெற வாய்ப்புள்ளது.

2. ஒவ்வொரு கல்லூரியும் எத்தனை பணம் கேட்கிறார்கள் என்பது தெளிவாக ஓரிடத்தில் தொகுப்பாகக் கிடைக்கும். இதனைக் கொண்டு ஒரு நுகர்வோர் தனக்கு ஏற்ற கல்லூரி எது என்று முடிவுசெய்யமுடியும். அசிங்கமான பேரங்கள் நடக்கவேண்டிய அவசியம் இல்லை.

3. ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றால் பல நல்ல, திறமையுடைய, லாப நோக்குடைய கல்வியாளர்கள் நியாயமான பொறியியல் கல்லூரி நிறுவனங்களை ஏற்படுத்துவார்கள்.

4. எந்தக் கல்லூரியிலிருந்தும் எந்தக் கல்லூரிக்கும் எந்த ஆண்டிலும் மாற்றல் செய்துகொள்ளலாம் என்ற வசதியை ஏற்படுத்திக்கொடுக்கலாம். அதன்மூலம் மோசமான கல்லூரியில் மாட்டிக்கொண்டவர்கள் எளிதாக நல்ல கல்லூரிகளுக்கு இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் நகர முடியும். ஒட்டுமொத்தமாக முதலாம் ஆண்டில் லஞ்சப் பணம் கொடுத்தவர்கள் இன்று அதே கல்லூரியிலேயே மாட்டிக்கொண்டு திண்டாடுவது நடைபெறாது. அந்தந்த செமஸ்டருக்கான கட்டணத்தை மட்டும்தான் நீங்கள் கட்டவேண்டியிருக்கும்.

5. அனைத்துக் கல்லூரிகளின் ‘விலைப் பட்டியலும்’ தெளிவாகத் தெரியும்போது, ரேட்டிங் நிறுவனங்கள் எந்தக் கல்லூரியில் விலை அது தரும் சேவையுடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்லது ஏற்கமுடியாதது என்று தெளிவாகச் சொல்லமுடியும். இன்று அப்படி முடியாது.

மொத்தத்தில், பொறியியல் கல்லூரிகள் கட்டுப்படுத்தப்படவேண்டும்; ஆனால் கட்டணத்தைப் பொருத்தமட்டில் கூடாது என்பதே என் கருத்து. கட்டுப்பாடு, அவர்களது கல்வியின் தரத்தில் இருக்கவேண்டும். அவர்கள் தரும் வசதிகளில் இருக்கவேண்டும். கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த வேலையை சரியாகச் செய்யாவிட்டாலும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்குச் செல்வது எளிதாகிவிடும் என்பதால் கல்லூரிகள் வேறு வழியின்றி உள்கட்டமைப்புகளை உருப்படியாக்குவார்கள்.

இதனால் ஏழை மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு வட்டியில்லாக் கடன், மானியம் ஆகியவற்றைத் தரலாம். பிரச்னை தீர்ந்துவிடும். அல்லது அரசு தன் செலவில் மேலும் பல கல்லூரிகளைக் கட்டலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ராயபுரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி

சென்னையின் பல இடங்களில் கிழக்கு நடத்தும் புத்தகக் கண்காட்சியில், அடுத்து, இன்றுமுதல், ராயபுரத்தில் கண்காட்சி தொடங்குகிறது. இது ஆறு நாள்களுக்கு மட்டுமே. மேலும் தொடரும் என்றால் பின்னர் தகவல் தெரிவிக்கிறேன்.

இடம்:

ராசி மகால் கல்யாண மண்டபம்
123, எம்.எஸ்.கோவில் தெரு
ராயபுரம் அஞ்சல் அலுவலகம் எதிரில்
ராயபுரம்
சென்னை 600 013

நாள்: 11 ஜூன் 2009 முதல் 16 ஜூன் 2009 வரை

இப்போது ஆழ்வார்பேட்டையிலும் புரசைவாக்கத்திலும் கண்காட்சிகள் நடைபெற்றுவருகின்றன.

Tuesday, June 09, 2009

ஆஸ்திரேலிய இனவெறித் தாக்குதல்கள்

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள்மீது கடந்த சில வாரங்களில் இனவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. எதிர்பார்த்ததுபோலவே, ஆஸ்திரேலிய காவல்துறை, இந்தத் தாக்குதல்கள் இனவெறியினால் அல்ல என்று சாதித்துள்ளனர். பல இந்தியர்களுமேகூட, ‘It is not racist, it is opportunistic’ என்று சொல்கின்றனர்.

இது முழுமையான அபத்தம்.

இனவெறி என்பது எங்கும், எப்போதும் பரவியுள்ளது. நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது, இது அவ்வளவாகத் தலைதூக்குவதில்லை. எப்போது பொருளாதார வளர்ச்சி குன்றுமோ, முதலில் தலையை வெளியே காட்டுவது இனவெறித் தாக்குதல்கள்தான். பொதுவாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பலவீனமான இரை கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பலவீனமான இரைதான் இந்தியர்கள்.

பலரும் குறிப்பிட்டுள்ளதுபோலவே, சில வருடங்களுக்குமுன் ஆஸ்திரேலியாவில் சீனர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதற்குமுன் ஐரோப்பியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பான்மையினர் பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் அனைத்து இந்தியர்களுமே ஆஸ்திரேலியர்களின் வேலைகளைப் பிடுங்கிக்கொள்பவர்கள் இல்லை. டாக்ஸி ஓட்டுபவர்கள் சிலர் உள்ளனர். மென்பொருள் ஆசாமிகள் சிலரும் உள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்றவர்கள். கைக்காசு செலவு செய்து ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு நன்மை செய்பவர்கள்.

ஆனால் இந்த உண்மைகள் ஆஸ்திரேலிய குடிகார ரவுடிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இப்போதைக்கு இந்தியர்களைத் தாக்கினால் ஜாலியாக உள்ளது என்றால் தாக்கித்தான் வைப்போமே என்பதுதான் அவர்களது எண்ணம்.

இந்தியர்கள் மைய நீரோட்டத்தினருடன் சேர்வதில்லை என்றெல்லாம் சொல்வது 21-ம் நூற்றாண்டுக்கு அழகல்ல. அவரவர், அவரவர் கலாசாரத்துடன் ஆங்காங்கே தனித்து வாழ்வதிலும் பிரச்னை இல்லை என்பதுதான் இன்றைய புரிதல். இந்தியர்கள் மட்டுமல்ல, சீனர்கள், கொரியர்கள் என்று எந்த ஆசிய கலாசாரத்தை எடுத்துக்கொண்டாலும், தங்களுக்குப் பிடித்த வகையில் தாங்கள் தனிக் குழுவாக வாழ்வதில்தான் அவர்களுக்குச் சந்தோஷம் என்றால் அதனால் பிறருக்கு எந்தக் கெடுதலும் இல்லை.

இந்தத் தாக்குதல்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. ஐரோப்பாவிலும், ஏன் அமெரிக்காவிலும்கூட இந்தியர்கள் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். நடந்துமுடிந்த ஐரோப்பிய தேர்தலில் குடியேற்றத்துக்கு எதிரான, வலதுசாரி, தேசியவாதக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இன்றைய பொருளாதார நிலையில் அவர்கள் ஜெயிப்பது எதிர்பார்க்கப்பட்டதே.

எனவே இந்தியர்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். தங்களுக்குத் தேவையான வசதிகளை முடிந்தவரை இந்தியாவிலேயே உருவாக்கிக்கொள்ள முற்படவேண்டும். பிற நாடுகள் இப்படித்தான் இந்தியர்களை நடத்தவேண்டும் என்று நாம் எந்த அளவுக்கு வற்புறுத்தமுடியும் என்று தெரியவில்லை. ஒரு நாட்டு மக்களின் அல்லது அந்த மக்களில் சிலரின் நடத்தை அவர்களது வாழ்க்கைத்தரத்தை ஒத்தே இருக்கும். அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறையும்போது, பிறர்மீது (முக்கியமாக ‘அந்நியர்கள்’மீது) எரிச்சல் ஏற்படுகிறது. அது வன்முறையாக மாறுகிறது.

Monday, June 08, 2009

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா

13 ஜூன் 2009, சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார்.

அவர் அனுப்பியுள்ள சிறு அறிமுகம் இதோ:

இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய வட்டத்தில் உழல்வதாகவும் உள்ளது. கல்வி நோக்கில் ஒரு தலைப்பு குறித்துத் தேடினால், தகவலை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள் குறைவே.

ஆங்கிலத்தில் இந்தத் தேவையை நிறைவு செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆங்கில விக்கிபீடியா. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கலைக்களஞ்சிய ஆங்கிலக் கட்டுரையைப் புரிந்து பயன்படுத்தும் மக்கள் 30 விழுக்காடாவது இருப்பார்களா என்பது கேள்விக்குரியது.

ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிபீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம். கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ் விக்கிபீடியாவில் 18,000+ கட்டுரைகளே உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு குறுங்கட்டுரைகள். இன்னும் பல முக்கிய துறைகளைக் குறித்து அடிப்படைக் கட்டுரைகள்கூட இல்லை. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும்.

தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:

* கணினியில் தமிழில் எழுதத் தெரியாமை.
* தமிழில் கோர்வையாகக் கட்டுரை எழுத இயலாமை.
* இணையம் குறித்த அடிப்படை அறிவின்மை. வலையில் எழுதும் பழக்கமின்மை.
* சரியான கணினி, இணைய வசதிகள் இல்லாமை.

தமிழ் வலைப்பதிவர்கள், இந்தத் தடைகளைக் கடந்தவர்கள். பல நாடுகளில் இருந்து பல துறைகள் குறித்து எழுதக்கூடியவர்கள். எனவே, வலைப்பதிவர்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும், ஏறத்தாழ பத்து தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களித்து வருகிறார்கள். வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கான தடைகள்:

* பிளாகர், வேர்டுபிரெசு போல மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்த இலகுவாக இல்லாமை.
* வலைப்பதிந்தால் மறுமொழிகள், நண்பர்கள், ஊடக வாய்ப்புகள் என்று பயன்கள் கிட்டுவது போல விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பதால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி.
* விக்கிபீடியா செயல்படும் தன்மை பற்றி தெளிவின்மை. (நான் எழுதும் கட்டுரையை இன்னொருவர் எப்படித் திருத்தலாம், திருத்தினால் நான் எழுதியது வீணாகாதா, விக்கிபீடியா நடுநிலையானதா, மற்ற பங்களிப்பாளர்களிடம் மல்லுக்கட்டி நேரம் போகுமா, ஆங்கில விக்கிபீடியா போல் இங்கும் பிரச்னை வருமா... போன்ற கேள்விகள்.)

வலைப்பதிவர்கள் மனத்தில் இருக்கும் இக்கேள்விகளுக்கு விடை அளிக்கும் முகமாகவும், கூடிய பங்களிப்புகளை வேண்டியும் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்:

* விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்.
* விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது எப்படி? ஒரு பத்து நிமிட அறிமுகம்.
* விக்கிபீடியாவுக்கு வலைப்பதிவர்கள் எப்படிப் பங்களிக்கலாம்?
* கேள்வி-பதில், கலந்துரையாடல்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மேலதிகப் பயிற்சி பெற விரும்புபவர்கள் சூன் 14, சென்னையில் நடக்கும் விக்கிபீடியா பட்டறையிலும் கலந்து கொள்ள வரவேற்கிறோம். விவரங்களுக்கு http://bit.ly/7Wofa பார்க்கவும்.

கிழக்கு திருச்சி பிரத்யேக ஷோரூம்

சென்னை, வேலூருக்கு அடுத்தபடியாக, திருச்சியில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது.

எண் 75, K1, ஷிஃபானா காம்ப்ளெக்ஸ், சாலை ரோட், தில்லை நகர், திருச்சி 620 018. தொலைபேசி: 276-4198, 276-6815

வரும் சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று காலை 10.00 மணிக்கு இந்த ஷோரூம் திறக்கப்படும். கே.ரங்கராஜன், செயலர், காவேரி மகளிர் கல்லூரி, திருச்சி, திறந்து வைக்கிறார். முதல் விற்பனையை ஆரம்பித்து வைப்பவர் என். நல்லுசாமி, சேர்மன், காவேரி காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருச்சி.

கிழக்கு மொட்டைமாடி சந்திப்பு: Personal Finance

வரும் 12 ஜூன் 2009, வெள்ளிக்கிழமை தொடங்கி, அடுத்த சில வாரங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணி அளவில் Personal Finance தொடர்பாக கலந்துரையாடல், நிபுணர்களின் பேச்சுகள் ஆகியவை கிழக்கு மொட்டைமாடியில் நடக்க உள்ளன.

Fundsindia.com மற்றும் கிழக்கு பதிப்பகம் சேர்ந்து நடத்தும் இந்தச் சந்திப்புகளுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

பெர்சனல் ஃபைனான்ஸ் (சரியான தமிழாக்கம்?) என்பது சேமிப்பு, காரணமில்லாத சொந்தக் கடன் (பெர்சனல் லோன்), வீட்டுக் கடன், வாகனக் கடன், தொழில் கடன், பங்குச்சந்தை முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், சிட் ஃபண்ட், வரி திட்டமிடல் போன்ற பலவற்றை உள்ளடக்கியது. இதில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

இதில் முதல் வாரம் பேச எடுத்துக்கொள்ளும் தலைப்பு “அன்றாட வாழ்வில் ‘பேரங்கள்’”. இங்கே ‘பேரம் பேசுதல்’ என்பது பொருள் வாங்கும்போது அல்லது சேவை பெறும்போது நாம் எவ்வளவு பணம் தரலாம் என்பதற்காகச் செய்யும் ‘bargain’ பேரம். அதேபோல, எங்கு, எப்போது போய் வாங்கினால் நல்ல ‘டீல்’ கிடைக்கும்? எப்படி குறைந்த விலையில் தரமான பொருள்களை, சேவைகளைப் பெறமுடியும்? எப்படி பேரம் பேசினால் விலையைக் குறைக்கமுடியும்? கிஃப்ட் கூப்பன்கள், ரிவார்ட் பாயிண்ட்கள், ஃப்ரீ ஆஃபர் போன்ற பல விஷயங்கள்... மொத்தத்தில் நுகர்வோர் பயனடைய சில குறிப்புகள்.

இப்படிப் பலவற்றைப் பற்றியும் நமக்குள் நாமாகக் கலந்துரையாடப் போகிறோம். Fundsindia-வின் மீனாக்ஷி ஸ்ரீகாந்த், வலைப்பதிவர் நாராயணன் இருவரும் வழிநடத்துவர். கூட்டத்துக்கு வருபவர்கள் தங்களது அனுபவங்களை முன்வைத்துப் பேசினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்த வாரங்களுக்கான தலைப்புகள், யார் எதைப் பற்றிப் பேசுவார்கள் என்பதை பற்றியும் உங்களிடம் பேசி, உங்களது கருத்துகளையும் எடுத்துக்கொண்டு முடிவு செய்வோம்.

Saturday, June 06, 2009

சுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்

தஞ்சாவூர் பிருகதீஸ்வரர் கோயிலின் கருவறையைச் சுற்றி உள்ள பிராகாரத்தில் பல சோழர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றைப் படம் பிடிப்பது மிகவும் கடினம். உள்ளே சென்று பார்க்க அனைவருக்கும் அனுமதி கிடைப்பதில்லை.

அங்கு உள்ள ஓவியங்கள் சிதிலமடையத் தொடங்கி வெகு நாள்கள் ஆகின்றன. இந்நிலையில் இந்திய தொல்லியல் துறையின் ஸ்ரீராமன் இந்த ஓவியங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கும் வேலையில் இறங்கி வெற்றி கண்டுள்ளார்.

சென்ற மாதம், சோழர் ஓவியங்களைப் பற்றி அவர் பேசினார். இன்று மாலை, அந்த ஓவியங்களிலிருந்து ஒரே ஒரு ஓவியத்தை - ‘சுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்’ என்ற பெயருடைய பேனலை - எடுத்துக்கொண்டு அதை நெருங்கிச் சென்று பார்த்து பேசுவார்.

இந்த ஓவியம் அரசனுக்கே மிகவும் பிடித்ததாக இருந்திருக்கவேண்டும். கடவுளுக்கு நெருங்கிய நண்பனாக சுந்தரர் இருந்ததுபோன்றே தானும் இருக்கவேண்டும் என்ற அரசனின் ஆசை இந்த ஓவியத்தில் தென்படுகிறது. மேலும் இந்த ஓவியத்தில் அந்தக் கால வாழ்க்கை எப்படி இருந்தது என்பதும் காணக்கிடைக்கிறது. இந்த ஓவியத்தை நாம் நெருக்கமாக அருகில் சென்று பார்க்கப்போகிறோம்.

ஸ்ரீராமன், பழங்கால வரலாறு மற்றும் தொல்லியலில் முதுநிலைப் பட்டமும் தொல்லியலில் முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். தற்போது இந்திய தொல்லியல் துறையில் துணை கண்காணிப்புத் தொல்லியலாளராக உள்ளார். இத்துறையில் இவருக்குச் சிறந்த அனுபவம் உள்ளது. கர்நாடகத்தில் பானஹள்ளி என்ற வரலாற்றுக்கு முந்தைய இடம், செஞ்சி என்ற இடைக்கால இடம், மஹாபலிபுரம் என்ற வரலாற்றின் ஆரம்பக் கட்ட இடம் போன்றவற்றில் நிறைய அகழ்வாராய்ச்சிகளைச் செய்துள்ளார். கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பல இடங்களை அகழ்வாராய்ச்சி செய்து அதன்மூலம் பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஹாரப்பா நாகரிகம் பரவியிருந்த லோத்தாலில் உள்ள அருங்காட்சியகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உள்ளே இருக்கும் கோட்டை அருங்காட்சியகம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இவர் பிருகதீஸ்வரர் கோயிலில் உள்ள விளக்க மையத்தைத் திட்டமிட்டு, வடிவமைத்து, உருவாக்கியுள்ளார். அதேபோல், பிருகதீஸ்வரர் கோயில் சோழ ஓவியங்களையும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சுவர் சிற்பங்களையும் ஆவணப்படுத்துவதைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்துள்ளார்.

திரு ஸ்ரீராமன், ஆராய்ச்சி இதழ்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தென்னிந்திய நினைவுச் சின்னங்கள் பலவற்றைப் பற்றியும் சிறு பிரசுரங்கள், கையேடுகளை உருவாக்கியுள்ளார். தற்போது, சோழர் ஓவியங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

***

நிகழ்வு நடக்கும் இடம், நேரம்:

வினோபா அரங்கு, தக்கர் பாபா வித்யாலயா
58, வெங்கட்நாராயணா சாலை, தி. நகர், சென்னை 17
6-6-2009, சனிக்கிழமை, மாலை 5.00 மணி

Friday, June 05, 2009

சீனாவைப் புரிந்துகொள்ளுதல்

டியானன்மென் படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரெஸ்திரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட்களால் சோவியத் ரஷ்யா உடைந்ததுபோல, ஒரு டியானன்மென்னால் சீனாவும் அழிய நேரிடலாம் என்று உலகம் நினைத்தது. ஆனால், சீனா, கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு, டியானன்மென் எழுச்சியை அடக்கியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றையாட்சியில் இருந்த சீனாவில் பலதரப்பட்ட மக்களும் ஆட்சியின் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஜனநாயகத்தை விரும்பியவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் எதிரிகள் என்று பலர்.

இவர்கள் அனைவரும் பெய்ஜிங்கின் டியானன்மென் சதுக்கத்தில் குழுமி, இடத்தை விட்டு அகல மறுத்து பொருளாதாரத்திலும் அரசியல் முறையிலும் சீர்திருத்தம் வரவேண்டும் என்று போராடினார்கள். ஆனால், ஒருங்கிணைந்த தலைமை இல்லாத காரணத்தாலும், கொள்கையில் முழுமையான தெளிவு இல்லாததாலும், கம்யூனிஸ்ட் கட்சி ராணுவத்தை ஏவி போராட்டக்காரர்களை கொன்று குவித்ததாலும், ‘புரட்சி’ முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை உடனடியாகச் செயல்பட்டு, 1990களில் மாபெரும் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது. ஜனநாயக முறை வழியாக அல்ல; பொருளாதாரத்தில் தாராளமயமாக்கலைக் கொண்டுவருவதன்மூலம். மக்களின் வசதி வாய்ப்புகள் பெருமளவு பரவின. உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு வெகுவாக அதிகரித்தது. நகர மக்கள் செல்வத்தில் புரண்டனர்.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இந்தக் காலகட்டத்தில்தான் சீனா வெகுவாக முன்னேறியது. அதிகமான சாலைகள் போடப்பட்டன. நகர வேலைவாய்ப்புகள் அதிகமாகின. ஆனால் இந்தக் காலகட்டத்தில்தான் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் சுரங்கங்களில் சாவுகளும் கலப்பட ஊழலும் பெருகின. எய்ட்ஸ் ஊழல் என்ற மாபெரும் ஊழலில் ஏழை மாகாணம் ஒன்றில் ரத்தம் சேர்க்கும் மோசடியில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு எச்.ஐ.வி கிருமி பரப்பப்பட்டது.

கம்யூனிஸ்ட் சீனா, ஜனநாயக இந்தியா... இரண்டையும் இன்று ஒப்பிடாதவர்களே கிடையாது. இரண்டில் எந்த நாடு சிறந்த நாடு? எந்த நாடு மோசமான நாடு? எந்த வகையில் ஒரு நாடு மற்றதைவிடச் சிறந்தது? ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா?

இந்தியர்களாகிய நமக்கு சீனாவைப் பற்றித் தெரிந்தது மிகவும் குறைவு. சமீபத்தில் சீனா பற்றி வந்துள்ள புத்தகங்களில் மிகவும் சிறந்தது பல்லவி அய்யர் எழுதியுள்ள Smoke and Mirrors: An Experience of China. சீனாவில் ஐந்தாண்டு காலம் வாழ்ந்து, ஆசிரியராக, பத்திரிகையாளராக, மொழிபெயர்ப்பாளராக, தொழில் துறை ஆலோசகராக இருந்தவர். தனது அனுபவங்கள் வாயிலாக சீனாவைப் பற்றி நமக்குச் சொல்லுகிறார். சீனாவையும் இந்தியாவையும் பல இடங்களில் ஒப்பிட்டு இரு பக்கங்களிலும் உள்ள குறை நிறைகளை சீர்தூக்கி அலசுகிறார். ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பாக ஆங்கிலத்தில் வந்த இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழிமாற்றத்தை கிழக்கு பதிப்பகம் இந்த மாதம் வெளியிடுகிறது. “சீனா: விலகும் திரை” என்ற தலைப்பில் வெளியாகும் இந்தப் புத்தகம், 368 பக்கங்கள் கொண்டது; ரூ 200 விலை. ராமன் ராஜா, மிக அழகாக இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

டியானன்மென் விவகாரம், திபெத், சீனாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையே உள்ள உறவு, விரிசல், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது பெய்ஜிங்கில் ஏற்பட்ட மாற்றங்கள், பெய்ஜிங்கின் பாரம்பரிய ஹுடாங்கில் ஆசிரியர் வசித்தபோது சீன சமூகத்தை அருகில் இருந்து பார்த்தது, சீனாவின் உணவு, அதை எப்படி சைவ உணவு சாப்பிடும் இந்தியர்கள் எதிர்கொண்டார்கள், சீனாவில் இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் மத சுதந்தரம், சீனாவில் தொழில்முனையும் திறன், சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்படி சீனாவை அடக்கி ஆளுகிறது, அதே சமயம் எப்படி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர முன்வருகிறது என்பது, சீனாவில் ஆண்-பெண் உறவு, சமூகத்தில் பெண்களின் பங்கு என்று பலதரப்பட்ட விஷயங்களை அலசி ஆராய்கிறார்.

சீனா என்ற மாயத்திரைக்குப் பின்னால் இருக்கும் நாட்டையும் மக்களையும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் எனக்கு உதவியது.

தமிழ் வணிகம் பேட்டி



தமிழ் வணிகம் தளத்தில் என்னுடைய பேட்டி.

Thursday, June 04, 2009

ஷெர்லாக் ஹோம்ஸ்: ஒரு மோதிரம் இரு கொலைகள்

எனது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இப்போது வெளியாகியுள்ளது. ஷெர்லாக் ஹோம்ஸ் தொடரில் முதல் நூல். இதைத் தொடர்ந்து அடுத்த கதைகளையும் மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டேன்.

மொழிபெயர்ப்பு இப்போதெல்லாம் அலுப்பதில்லை. ஆனால் மொழிபெயர்த்து அச்சில் வந்ததைப் படிக்கும்போதும் பல வாக்கியங்களை மாற்றலாம் போன்றே உள்ளது. மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே முடிவுறாத ஒரு வேலை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் புத்தகத்தின் விலை தொடர்பாக சிலர் என்னைத் தொடர்புகொண்டனர். ஒரு புத்தகத்துக்கு விலை வைக்கும்போது அதனை எத்தனை பிரதிகள் அடிக்கிறோம், அது எப்படி விற்கும் என்ற யூகத்தை வைத்தே செய்கிறோம். அதன்படி, இந்த நூல் அதிகமாக விற்காது என்று நினைத்து, குறைவான பிரதிகள் அச்சடித்துள்ளோம். குறைவான பிரதிகள் அச்சாகும்போது, ஒவ்வொரு பிரதிக்கான அச்சுக் கூலி அதிகமாக ஆகும். அதன் காரணமாகவே விலை சற்று அதிகம்.

ஆனால், இந்தப் புத்தகம் வேகமாக விற்கும் என்பது முதல் இரு மாதங்களில் தெரிந்துவிடும். அப்படி ஆகும்பட்சத்தில் இதன் விலை குறைக்கப்படும்.

இந்தப் புத்தகம் பற்றிய பா.ராகவனின் பதிவு

Wednesday, June 03, 2009

Affiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள்

அமேசான் இணைய வர்த்தகத் தளத்தில் affiliate முறை ஒன்று இருப்பதைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பிர்கள். உங்களது இணையத் தளத்தின் மூலமாக யாரேனும் அமேசான் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கினால் அந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அமேசான் உங்களுக்கு அளிக்கும்.

நியூ ஹொரைசன் மீடியாவும் இதுபோன்ற ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. நியூ ஹொரைசன் மீடியாவின் இணைய வர்த்தகத் தளத்தின் affiliate ஆக, உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களது தளத்தில் நீங்கள் கொடுக்கும் தொடுப்பின்மூலம் ஒருவர் nhm.in இணையக் கடையில் புத்தகங்கள் வாங்கினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தொகை commission ஆக வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் மீண்டும் நேரடியாகவே எங்கள் தளத்துக்கு வந்து வேறு புத்தகங்களை வாங்கினால் அதற்குரிய கமிஷன் தொகையும் உங்களுக்கே கிடைக்கும்.

ஆனால் அந்த வாடிக்கையாளர் அடுத்து வேறு ஒரு தளத்தில் காணப்படும் affiliate சுட்டியின் மூலம் எங்கள் கடைக்கு வந்து புத்தகங்களை வாங்கினால் அன்றுமுதல் கமிஷன் தொகை கடைசியாக எந்தத் தளத்திலிருந்து வந்தாரோ அந்தத் தள உரிமையாளருக்குச் செல்லும். இதுவும் அமேசான் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தளத்தில் ஒரு குறிப்பிட்ட புத்தகம், ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் அனைத்துப் புத்தகங்கள், ஒரு குறிப்பிட்ட இம்பிரிண்டின் புத்தகங்கள், அல்லது எங்கள் நிறுவனம் விற்கும் அனைத்துப் புத்தகங்கள் என்று எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து அதற்கான விளம்பரங்கள் உங்கள் தளத்தில் வருமாறு செய்யலாம். விளம்பரங்களும் வெவ்வேறு அளவிலானவையாக இருக்குமாறு செய்யலாம். டெக்ஸ்ட் வடிவில் இருக்குமாறும் செய்யலாம்.

இது சோதனை முயற்சி என்பதால், சிலரை மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்க்க எண்ணியுள்ளோம். எனவே நீங்கள் அனுப்பும் அஞ்சலில் உங்கள் வலைப்பதிவு அல்லது இணையத்தள முகவரியையும் அனுப்புங்கள். நீங்கள் ஆல்ஃபா சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலோ (அல்லது இப்போதைக்கு உங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்றாலோ) அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு லாகின் வழங்கப்படும். அதில் நுழைந்து எப்படி affiliate code-ஐப் பெறுவது, எப்படி அந்த code-ஐ உங்கள் தளத்தில் சேர்ப்பது ஆகியவை உங்களுக்கு விளக்கப்படும்.

ஆரம்பத்தில் கமிஷன், அஞ்சல் செலவு தவிர்த்த விற்பனைத் தொகையில் 7.5% என்று இருக்கும். நாளடைவில் இந்த சதவிகிதம் மாறலாம். உங்களுடைய கமிஷன் தொகை மாதம் ஒரு முறை அல்லது அது ரூ. 500-ஐத் தாண்டியபின், நீங்கள் குறிப்பிடும் இந்திய முகவரிக்கு, காசோலையாக அனுப்பப்படும்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் வலைப்பதிவர்கள் மற்றும் இணையத்தளம் வைத்திருப்பவர்கள், உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி: affiliate@nhm.in

நன்றி.
பத்ரி

Tuesday, June 02, 2009

புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்காட்சி

ஜூன் மாதம் கிழக்கின் சென்னை சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.

ஜூன் 4 முதல் ஜூன் 16 வரை, கீழ்க்கண்ட இடத்தில் கிழக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

பாஞ்சாலை கோதண்டபாணி கல்யாண மண்டபம்
250/173, புரசைவாக்கம் நெடுஞ்சாலை
கெல்லீஸ்
சென்னை - 10

தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இது அபிராமி மெகா மாலுக்குப் பக்கத்தில் உள்ளது.

ஜூன் 4 முதலாக, ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பக அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஷோரூமிலும் சிறப்புக் கண்காட்சி நடைபெறும். இது இந்த மாதம் முழுமைக்கும் செல்லலாம். பிற கண்காட்சிகளில் கொடுக்கப்படும் அதே டிஸ்கவுண்ட் இங்கும், கண்காட்சி நடைபெறும் நேரத்தில் மட்டும் கிடைக்கும்.

இதற்குமுன் நடைபெற்ற கிழக்கு கண்காட்சிகள்:
மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாடி, ஈக்காடுதாங்கல்