சனிக்கிழமை (22 ஜூலை 2006) அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான என் பார்வை.
1. விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து: கடன் ரத்து பற்றி நான் நிறைய எழுதியுள்ளேன். இப்பொழுதுதான் ஓரளவுக்கு எப்படி கடன் ரத்தை சரிக்கட்டப்போகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
மொத்தம் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவுக் கடன்: ரூ. 6,866 கோடி. கூட்டுறவு வங்கிகள் நபார்ட் வங்கியிடமிருந்து கடன் வாங்கி அதிலிருந்து விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து வந்துள்ளது. மேற்படிக் கடன் ரத்தால் கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்குக் கொடுக்கவேண்டிய கடன் ரூ. 1,668 கோடியை இனி தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். ஆக தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குத் திருப்பித் தரவேண்டிய கடன் தொகை: ரூ. 5,198 கோடி. இந்தப் பணத்தை ஒரேயடியாக கூட்டுறவு வங்கிகளுக்குத் தராமல் ஐந்தாண்டுகளில் தருவதாகச் சொல்கிறார்கள். முதல் கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ. 1,000 கோடியைத் திருப்பித் தருகிறார்கள்.
இதனால் கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள், இந்த வங்கிகளில் பணத்தை வைப்பு நிதியாக வைத்துள்ளவர்கள் ஆகியவர்களுக்குத் தொல்லை தரக்கூடியது. வங்கி ஊழியர்கள் சிலர் வலைப்பதிவு வைத்துள்ளார்கள். அவர்கள் இதைப்பற்றி மேற்கொண்டு அலசவேண்டும். சில கூட்டுறவு வங்கிகள் திவாலாக வாய்ப்புகள் உள்ளன.
மஹாராஷ்டிராவையும் தமிழ்நாட்டையும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மஹாராஷ்டிராவில் 633 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றுக்கு மொத்தமாக 4,232 கிளைகள் உள்ளன. தமிழகத்திலோ 133 கூட்டுறவு வங்கிகளும் 180 கிளைகளும் உள்ளன. 2005-ல் மஹாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரூ. 65,398 கோடி பெறுமான டெபாசிட்கள் இருந்தன. தமிழகக் கூட்டுறவு வங்கிகளிலோ மொத்த டெபாசிட்கள் ரூ. 3,022 கோடி. இதிலிருந்தே தமிழகக் கூட்டுறவு வங்கிகள் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளன என்பது தெரியவரும். கூட்டுறவு வங்கிகள் தமது டெபாசிட்டிலிருந்தும் நபார்ட் போன்ற வங்கிகளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் வாங்கிய கடன்கள் மூலமும் விவசாயக் கடன்களைக் கொடுத்து வந்தன. இதிலிருந்து ரூ. 5,198 கோடியை அரசியல் காரணங்களால் துடைத்து எறிந்துவிட்டு, வெறும் ரூ. 1,000 கோடியை மட்டும் இந்த ஆண்டுக்கு என்று கொடுத்தால் தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு வங்கிகள் பிழைப்பு நடத்தும்? அவர்களுடைய பேலன்ஸ் ஷீட் எப்படி இருக்கும்? இந்த வங்கிகளில் பணம் போட்ட, கடன் வாங்காத டெபாசிட்தாரர்களின் நிலை என்னாகும்?
தமிழக அரசு என்ன செய்திருக்கலாம்? விவசாயிகளது கடன் ரத்து செய்யப்படவேண்டியது அவசியம் என்று உணர்ந்தால் அந்தப் பணத்தை கடன் பத்திரம் (Bonds) வெளியிடுவதன்மூலம் பொதுமக்களிடமிருந்து திரட்டி கூட்டுறவு வங்கிகளுக்குக் கொடுத்து அவற்றுக்கு பாதகம் வராமல் காக்கலாம். இப்பொழுது தமிழக அரசு செய்திருப்பது கண்டிக்கவேண்டியது.
2. பிற விவசாயத் திட்டங்கள்:* விவசாயக் கடன்களுக்கான வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகள் நஷ்டமடையாமல் இருக்க அரசே இந்த இழப்பை ஈடுகட்டும். => இது நல்ல விஷயம். வரவேற்கப்படவேண்டியதுதான்.
* விவசாயம் தொடர்பான (நீர்ப்பாசனம்) செலவுகள் சென்ற ஆண்டில் ரூ. 854 கோடியாக இருந்தது இந்த ஆண்டு ரூ. 977 கோடியாக உயர்த்தப்படுகிறது. நல்ல விஷயம்.
* மூன்று இடங்களில் குளிர்சாதன வசதி கொண்ட வணிக முனையங்களும், மேலும் மூன்று இடங்களில் குளிர்சாதனக் கிடங்கு வசதிகளும் தொடங்கப்பட உள்ளன. இதுவும் மிக நல்ல விஷயம். ஆனால் ஆறு போதமாட்டா. முப்பது தேவை (மாவட்டத்துக்கு ஒன்றுவீதம்). ஆனால் வரும் வருடங்களில் வருடத்துக்கு ஆறு வீதம் செய்தால் அதுவும் நல்லதுதான். பாராட்டுகள்.
* பாசனம், தண்ணீர் நிர்வாகம் தொடர்பாக பல நல்ல திட்டங்களை முன்வைக்கிறார்கள். செயல்பாடு எப்படி உள்ளது என்பதைக் கவனமாகப் பார்க்கவேண்டும்.
3. நியாய விலைக் கடைகள்: இதைப்பற்றியும் நான் ஏற்கெனவே நிறைய எழுதிவிட்டேன். நிதியமைச்சர், அரிசி மான்யமாக ரூ. 1,950 கோடி போதும் என்று சொல்கிறார். என் கணக்கின்படி ரூ. 2,500 கோடியாவது செலவாகும். எனவே இந்த நிதியாண்டு முடிந்ததும் அடுத்த நிதியாண்டின்போது குறிப்பிட்ட அமைச்சகம் வெளியிடும் Policy Notes மூலம் நிஜமாகவே எத்தனை செலவானது என்பதைப் பார்ப்போம்.
மேலும் அரிசி கடத்தல் அதிகமாகும் என்பதால் நியாய விலைப் பொருள்களைக் கடத்துபவர்களுக்கு குண்டர் சட்டத்தின்படி தண்டனை அளிக்கப்படும் என்கிறார். இதற்கு குண்டர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டி இருக்கலாம்.
4. அரசு
பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்களைக் குறைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர். இந்தச் செய்தி என் கண்ணில் படவில்லை. இது பற்றி மேற்கொண்டு விவரங்கள் ஏதும் தெரிந்தால் எனக்குத் தகவல் சொல்லவும்.
அண்ணா பல்கலைக்கழகம் போன்று திருச்சியிலும் கோவையிலும் இரண்டு பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும் என்கிறார். இது குழப்பத்தை விளைவிக்கும் என்பது என் கருத்து. முதலில் ஒவ்வொரு பிராந்தியப் பல்கலைக்கழகத்தின் கீழும் இருந்த பொறியியல் கல்லூரிகளை ஒன்றுதிரட்டி அவற்றை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வருமாறு அமைத்தனர். பின்னர் மீண்டும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளை மேய்க்க ஆங்காங்கே பல்கலைக்கழகங்களை அமைப்பதன் தேவை என்ன? மேலும் இதுபோன்ற கல்வித்துறை தொடர்பான Policy விஷயங்களை நிதியமைச்சர் ஏன் பட்ஜெட் அறிக்கையில் பேசவேண்டும் என்று புரியவில்லை.
மருத்துவக் கல்லூரிகள்: அவசியமான விஷயங்களை மேற்கொண்டு விளக்கங்கள் சொல்லாமல் விட்டுவிடுகிறார் நிதியமைச்சர். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் இதற்கான வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார் நிதியமைச்சர். தமிழகத்தில் இருக்கும் MBBS மருத்துவக் கல்லூரிகள் பத்து மாவட்டங்களுக்குள் அடங்கி விடுகின்றன. இதில் நான் நர்சிங், ஹோமியோபதி, ஆயுர்வேதம், பிஸியோதெரப்பி போன்றவற்றைச் சேர்க்கவில்லை. ஆக இன்னமும் 19 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கிடையாது. ஆனால் விழுப்புரத்தில் மட்டும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டும் கொடுக்கிறார்.
ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க எத்தனை செலவாகும்? ரூ. 100-150 கோடி ஆகும் என்கிறார்கள். அப்படியானால் 19 இடங்களில் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1,900 கோடி தேவை. பார்க்கப்போனால் இது பெரிய தொகையே அல்ல. (கலர் டிவி திட்டத்துக்கு ஆகும் செலவைப் பாருங்கள்!)
ஏன் பெரிய அளவில் இந்த வருடம் முதற்கொண்டே மீதமுள்ள 19 மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் அதற்காக ரூ. 1,900 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் அதிரடி அறிவிப்பு செய்யக்கூடாது? அல்லது குறைந்த பட்சம் இந்த ஆண்டு 9, அடுத்த ஆண்டு 10 என்று செய்யக்கூடாது?
ம்ஹூம். ஒன்றே ஒன்று.
எது முக்கியம், எது அவசரத் தேவை. மருத்துவக் கல்லூரியா, கலர் டிவியா?
5. தொழில்துறை: சிறப்புத் தொழில்பேட்டைகளில் (SEZ) ரூ. 100 கோடிக்கு மேல் முதலீடு செய்து கணினிகளைத் தயாரித்து விற்பவர்களுக்கு பத்து வருடங்களுக்கு மொத்த விற்பனை வரியிலிருந்தும் விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. பாராட்டுகள்.
மற்றபடி உபயோகமாக எதையும் சொல்லவில்லை.
6. கலர் டிவிக்கு என்று ரூ. 750 கோடி + 30,000 டிவிக்களுக்கான காசு (ஒரு டிவி = குறைந்தது ரூ. 3,333 என்றால் 30,000 டிவிக்கள் = ரூ. 10 கோடி) = ரூ. 760 கோடி. ஆக மொத்தம் இந்தாண்டு 22.5 லட்சம் 14" கலர் டிவிக்கள் வழங்கப்படலாம். ரூ. 750 கோடி = 22.5 லட்சம் குட்டி கலர் டிவிக்கள் = 8 புது மருத்துவக் கல்லூரிகள். இங்கு பணம் வீணாவதைவிட மருத்துவக் கல்லூரிகளாக மாறினால் சந்தோஷம். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
முதல் 30,000 கலர் டிவிக்களுக்கான டெண்டர் நேற்றோடு முடிவடைந்துவிட்டது. ஜெயித்தது யார்? என்ன விலைக்குத் தரப்போகிறார்கள் போன்ற விவரங்கள் கூடிய சீக்கிரம் வெளியாகும். பார்ப்போம்.
7. சாலைகள்: சாலைகள் பராமரிப்புக்கு என ரூ. 804 கோடி. புதிதாக சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ. 2,461 கோடி. மத்திய அரசின் புண்ணியத்தில், மத்திய அரசின் பணத்தில் 4,122 கிமீ கிராமச் சாலைகள் சீரமைக்கப்படுமாம். மதுரை, திருப்பூர் இரண்டுக்கும் தலா ரூ. 70 கோடி நகரச் சாலைகள் அமைக்க, சீராக்க.
(இந்தச் செலவு குறைவு. இதைப்போல இரண்டு, மூன்று மடங்கு சாலைகளில் செலவழிக்க வேண்டியிருக்கும்.)
8. மின்சாரம்: தமிழக அரசு மின்சார உற்பத்திக்கு என செலவழிக்கப்போவது =
ஜீரோ. ஜெயங்கொண்டம் திட்டத்தை நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனுக்குக் கொடுத்தாகிவிட்டது. கூடங்குளம் மத்திய அரசின் திட்டம். எனவே மாநில அரசின் பங்கு பிறர் தம் வேலையைச் செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்ப்பது.
அவ்வளவுதான்.
வருங்காலத் திட்டங்கள் =
ஜீரோ.
மற்றபடி மின்சார விநியோகம் தொடர்பாக அரசு கொஞ்சம் பணம் செலவழிக்கப் போகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைக் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றுக்கான மான்யத் தொகை ரூ. 1,530 கோடி.
9. சென்னை மெட்ரோ ரயில்: மெட்ரோவே சென்னைக்கு வழி என்று தீர்மானித்திருக்கிறார்கள். சரி, அதற்கு என்ன செலவாகும்? யார் செய்வார்கள்? தெரியாது. வரும் வருடங்களில் ஏதேனும் விடிவுகாலம் பிறக்கலாம். இந்த பட்ஜெட்டில் அதற்கெல்லாம் தொகை ஒதுக்கப்போவதில்லை. (மும்பை மெட்ரோ திட்டம் வேலை தொடங்கியாகிவிட்டது.)
10. தண்ணீர்: கிராமப்புறங்களில் குறைந்தபட்ச தண்ணீர் வழங்கும் திட்டங்களுக்கு ரூ. 411 கோடி. காவேரித் தண்ணீரை (??) ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டுசென்று அங்கு குடிநீர் வழங்க ரூ. 671 கோடி.
11. இலங்கைத் தமிழ் அகதிகளுக்காகும் செலவு: ரூ. 34.53 கோடி. (எதற்கெல்லாமோ ஏகப்பட்ட செலவுகள் செய்யும்போது இதனை ரூ. 100-150 கோடியாக உயர்த்தி அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வைத் தர முயற்சி செய்யலாம்.)
12. மத்திய அரசின்
ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். (ஏற்கெனவே தமிழக அரசில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாக உள்ளது. ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் வரும்போது அப்படியே ஏற்றால் கஜானா காலி!)
13. மதிப்புக் கூட்டு வரி ஜனவரி 2007 முதல் அமல். மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
14. "தமிழ்மொழியில் தயாரிக்கப்படும் உரிமம் அளிக்கப்பட்ட மென்பொருள்களுக்கு" விற்பனை வரி விலக்கப்படுகிறது. Will a macromedia flash content produced in Tamil (or in dual language - Tamil & English), packaged in a CDROM be considered as "Tamil software"?
15. மறுவிற்பனை வரி நீக்கப்படுகிறது. இது மிகவும் உபயோகமானது. நன்றி.
(மீதி அடுத்த பதிவில்)