இரண்டு நாள்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் ஹிந்துத் திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.ஒரு திருமணம் ஒட்டவைக்க முடியாத அளவுக்கு உடைந்துவிட்டால் விவாகரத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்பதுதான் அது. இப்பொழுது இருக்கும்
ஹிந்துத் திருமணச் சட்டம் (1955)-ன்படி, கீழ்க்கண்ட காரணங்களுக்காக விவாகரத்து கோரலாம்.
கணவன், மனைவி இருவருள் ஒருவர்:
1. கள்ள உறவு வைத்திருந்தால் (adultery)
2. மற்றவரைத் துன்புறுத்தினால் (cruelty)
3. விட்டுவிட்டு ஓடிவிட்டால் (குறைந்தது இரண்டு வருடமாவது ஆகியிருக்கவேண்டும்!)
4. ஹிந்து மதத்தைவிட்டு மாறினால்
5. மனம் பேதலிக்கப்பட்டால்
6. தொழுநோயால் பீடிக்கப்பட்டால்
7. அடுத்தவரைப் பற்றும் பால்வினை நோயால் பீடிக்கப்பட்டால்
8. துறவு பூண்டால்
9. இறந்துவிட்டார் என்று கருதப்பட்டால்
பாதிக்கப்பட்ட மற்றவர் விவாகரத்து கோரலாம். மேலும்,
(10) நீதிமன்றத்தில் மனு செய்து ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் உரிமையை (judicial separation) பெற்றபின் ஒரு வருடமோ, அதற்கு மேலோ ஆகியும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால், விவாகரத்து கோரலாம்.
(11) இருவரும் தானாகவே பிரிந்து இருக்கும்போது ஒருவர் நீதிமன்றத்தில் மனு செய்து சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கலாம். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவர்கள் இருவரையும் சேர்ந்து வாழப் பணிக்கும்போது (Restitution of Conjugal Rights) அதை மறுத்து, சேரவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து செய்யக் கோரலாம்.
இந்தக் காரணங்களுக்கு மேலாக, இப்பொழுது உச்சநீதிமன்றம் இன்னொரு புதிய காரணத்தையும் சேர்க்கலாம் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் - இருவரும் ஒருமனதாக அதை ஒப்புக்கொண்டால் - அதாவது திருமணத்தை இனியும் ஒட்டவைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் அந்த விவாகத்தை ரத்து செய்யலாம் என்பதே அது.
உண்மை என்னவென்றால் மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த வகை விவாகரத்துதான் அதிகம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஒரு வாரத்துக்குள்ளாகப் பிரிய முடியும்.
ஆனால் இதுநாள்வரையில் இந்த வசதி இந்தியாவில் இல்லை. இனிச் சட்டம் இயற்றினால்தான் இந்த வசதி ஹிந்துக்களுக்குக் கிடைக்கும். முஸ்லிம் திருமணங்களில் இதை எளிதாகச் செய்யமுடியும். (அதாவது திருமணம் நீடிக்கவேண்டாம் என்று இரு தரப்பினரும் முடிவுசெய்துவிட்டால்...)
====
இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவருவதைப் பற்றி All-India Democratic Women's Association (AIDWA) கவலை தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தம் பெண்களுக்கும் நன்மை செய்யக்கூடியதே என்றாலும் ஆண்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படுத்துவார்கள் என்று AIDWA நினைக்கிறது. அதற்கென அவர்கள் சொல்லும் காரணமும் சரியானதே. AIDWA தலைவி சுபாஷினி அலி சொல்கிறார்:
Government should not take such a step in the absence of legislation on women's rights to marital property, child support and adequate maintenance. Given the status of deserted women and children, a law to get divorce on this ground would worsen their position. Indian women do not have the right to any of the assets in the matrimonial home even after years of marriage.
ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து. முதலில் விவாகரத்தின்போது சொத்துக்களைப் பிரிப்பது, குழந்தைகளுக்கான செலவை ஏற்பது, ஆணோ/பெண்ணோ - அவர்களுக்கான ஜீவனாம்சத்தைச் சரியாகக் கணக்கிடுவது, அதைக் கட்டாயமாகச் செலுத்த வகை செய்வது ஆகியவற்றுக்கான சட்டங்களை இயற்றியபின், அத்துடனே உச்சநீதிமன்றத்தின் யோசனையையும் நிறைவேற்றலாம்.
====
நான் சென்ற வாரம் எழுதியிருந்த
பிரிட்டனில் ஷரியா - சரியா? பதிவுக்கு
வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எதிர்வினை செய்திருந்தார்.ஏற்கெனவே நம் நாட்டில் பொது சிவில் சட்டங்கள் உள்ளன, யார் விரும்பினாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார் பிரபு. ஆனால் அதே சமயம் யார் விரும்பினாலும் அவரவர் மதத்துக்கென இருக்கும் தனிச்சட்டத்தையும் பின்பற்றலாம். அதுதான் என்னைப் பொருத்தவரை பிரச்னையே. ஹிந்துச் சட்டங்கள்தான் உயர்வு, முஸ்லிம் சட்டங்கள் தாழ்வு என்று நான் சொல்லவில்லை. இரண்டிலும் பல ஏற்கத் தகாத விஷயங்கள் உள்ளன. இரண்டிலும் பல நல்ல வழிகள் இருக்கின்றன. இவற்றைக் களைந்து ஒரே சட்டமாக, அனைவருக்கும் பொதுவாக இருக்கச் செய்வதில் யாருக்கு நஷ்டம் என்று பார்க்கவேண்டும்.
இது ஒருமைப்பாட்டு விஷயம் அல்ல. சட்டங்கள் நாம் வாழும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். தனித்தனியாக ஒவ்வொரு மதத்தினருக்கும் சட்டங்கள் என்றால் இந்தச் சட்டங்களில் ஒரேமாதிரியான திருத்தங்கள் ஏற்படுவதில்லை. சில மதத்துக்கான - முக்கியமாக சிறுபான்மை மதங்களுக்கான - சட்டங்கள் பின்தங்கிவிடுகின்றன. அதில் மாற்றங்களை ஏற்படுத்த அந்தந்த மதத்தின் முக்கியமான தலைவர்கள் விரும்புவதில்லை. Status quoதான் அவர்களுக்கு வசதி. எதிர்த்து நின்று போராட அந்தந்த மதங்களில் உள்ள பாதிக்கப்படுபவர்களுக்கு (பொதுவாக பெண்களுக்கு) போதிய சக்தி இல்லை.
ஆனால் பொதுவாக ஒரு சீரான சட்டம் இருந்தால் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தப்படும், மாற்றங்கள் தொடர்ந்து நிகழும். ஹிந்துச் சட்டங்களில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, முஸ்லிம் சட்டங்களில் எவ்வளவு மாற்றங்கள் இதுவரையில் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனித்துப் பார்த்தாலே இது தெரியவரும்.
மதக் கடமையையும் சட்டங்களையும் குழப்பிக்கொள்ளவேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர்க்கு விருப்பமான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம். (சர்ச்சிலோ, கோயிலிலோ, மசூதியிலோ, குருத்வாராவிலோ...) ஆனால் அந்தத் திருமணங்களும், தொடரும் விவாகரத்தும், சொத்துரிமையும் ஒரே சட்டத்தைப் பின்பற்றினால் அதன்மூலம் மக்களுக்கு நன்மை பிறக்கும் என்பது என் கருத்து. எனவே திருமணம் வெவ்வேறு முறைகளில் செய்யப்படக்கூடாது என்று நான் சொல்லவில்லை. திருமணத்தைப் பதிவு செய்வது ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
பிரபுவின் தீர்ப்பு: "தற்பொழுது நிலுவையிலுள்ள சட்ட முறைகளிலேயே அவ்வப்போது தேவையான மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்."
இது சரியாகப் படவில்லை எனக்கு. ஏகப்பட்ட சட்டத் திருத்தங்கள் தேவைப்படும். Uniformity இருக்காது. ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகள் என்ன என்பதைத் தனியாக விளக்கவேண்டும். ஒவ்வொரு சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர ஒவ்வொரு சமுதாயத்திலும் பெரும்பான்மை ஒப்புதல் பெறவேண்டும். சில நேரங்களில் இது சாத்தியமில்லாமல் போகும்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் பின்தங்கிவிட நேரிடும்.
"அதைப்பற்றிக் கவலைப்பட நீ யார்? அவரவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்று சிலர் சொல்லலாம். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் தலையிட பிறருக்கு உரிமை வேண்டியதில்லை. ஆனால் சமுதாயம், சட்டங்கள் என்று வரும்போது அனைவரும் ஒரேபோல முன்னேறிட உதவும் சட்டங்களை உருவாக்க பொதுக்கருத்து என்று ஒன்று வேண்டும். இதையெல்லாம் ஒவ்வொரு சமூகமும் தனக்குத் தானே முடிவு செய்துகொள்ளவேண்டும், பிறர் தலையிடக் கூடாது என்று சொல்வது சரியல்ல என்றே நினைக்கிறேன்.
ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமை கூடாது; இந்தியாவிலேயே தீண்டாமை கூடாது என்று சொல்ல முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்கும் முழு உரிமை உண்டு. அதற்காகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டு. அதேபோல பிற மதச் சட்டங்களிலோ, பிற சமுதாயங்களிலோ உள்ள பிரச்னைகளைப் பற்றிப் பேச, போராட மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.