Friday, July 31, 2009

சிலப்பதிகார வழித்தடத்தில்...

தமிழ்ப் பாரம்பரியம் குழுமம் சார்பில், நாளை (சனிக்கிழமை), 1 ஆகஸ்ட் 2009 மாலை 5.30 மணிக்கு, B.சிவகுமார், ‘சிலப்பதிகாரம் - ஒரு பயண காவியம்’ என்ற தலைப்பில் பேசுவார்.

சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், நாட்டியவடிவமாக, நாடகமாக, ஓவியமாக, இசையாக என்று பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது சிவக்குமார் சிலப்பதிகாரத்தை ஒரு graphic novel-ஆக படைக்க முனைந்துள்ளார். இந்த முயற்சியில் இறங்கியபின் இதற்காக இக்காவியம் நடைபெற்றதாகக் கூறும் வழித்தடங்களின் வழியாக இவரும் பயனித்துள்ளார். தற்போது அந்த இடங்களெல்லாம் எவ்வாறு உள்ளது என்பதையும் நமக்குக் படமாகக் காட்ட உள்ளார்.

சிவகுமார், இரா.நடராசன் எழுதிய ‘ஆயிஷா’ குறுநாவலை குறும்படமாக இயக்கியவர். பின்னர் சில குறும்படங்களைத் தயாரித்துள்ளார். உலக அளவில் குறும்பட விருதுகளைப் பெற்றுள்ளார். நல்ல ஓவியரும்கூட. பாரம்பரிய கலைச் சிற்பங்களை தத்ரூபமாக பென்சில் ஸ்கெட்ச் செய்வார். தற்போது அவர் ஈடுபட்டிருக்கும் ஒரு செயலில், மகாபலிபுரத்தின் சிற்பங்களையும் குகைக் கோயில்களையும் ஸ்கெட்ச் செய்துள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.

நிகழ்ச்சி நடக்கும் இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கடநாராயணா சாலை, தி.நகர்.

Wednesday, July 29, 2009

ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2009, காலை 11.00 மணிக்கு, சென்னை, நுங்கம்பாக்கம், லேண்ட்மார்க் (அபெக்ஸ் பிளாஸா) புத்தகக் கடையில், ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’ புத்தகத்தின் தமிழாகத்தின் முதல் பாகம் வெளியீடு நடைபெற உள்ளது.

குஹா கலந்துகொண்டு புத்தகத்தைத் தான் எழுதியது பற்றி விவரிக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதி புத்தகத்தைப் பற்றியும் அதன் தமிழாக்கத்தைப் பற்றியும் பேசுகிறார்.

இப்பொது வெளியாவது புத்தகத்தின் முதல் பாகம் மட்டுமே. இது 640 பக்கங்கள் (நூலின் பின்குறிப்புகளுடன் சேர்த்து), விலை ரூ. 250. புத்தகத்தின் தமிழ்த் தலைப்பு: ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’.

இந்த முதல் பாகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில், இந்தியா சுதந்தரம் பெற்றது; இந்தியப் பிரிவினையும் படுகொலைகளும்; சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் ஒன்றிணைப்பது; காஷ்மீர் பிரச்னையின் ஆரம்பம்; பிரிவினையின்போது இந்தியா வந்த அகதிகளை குடியமர்த்துவது; இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது ஆகியவை உள்ளன.

இரண்டாம் பகுதியில் முதல் இந்தியப் பொதுத் தேர்தல்; நேருவின் வெளியுறவுக் கொள்கை; மொழிவாரி மாநிலங்கள் உருவாதல்; அணைகள் கட்டுதல் மற்றும் தொழில்மயமாதல்; சட்டங்களை உருவாக்குதல்; காஷ்மீர் பிரச்னை; வட கிழக்கு பிரச்னை ஆகியவை உள்ளன.

மூன்றாம் பகுதியில், கேரள கம்யூனிச அரசு உருவானது, கலைக்கப்பட்டது; சீனாவுடனான போரும் தோல்வியும்; காஷ்மீரில் அமைதி ஏற்படுதல்; சிறுபான்மையினர் பிரச்னைகள்; நேருவின் மறைவு ஆகியவை உள்ளன.

***

அடுத்த சில மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும். அதில் நேருவின் மறைவுக்குப் பிறகான இந்திய வரலாறு இருக்கும். அதுவும் சுமார் 600 பக்கங்களுக்கு மேல் வரும். அதுவும் ரூ. 250 விலையாகும்.

Tuesday, July 28, 2009

பெரியார் எழுத்துகளும் காப்புரிமையும்

நேற்று சென்னை உயர்நீதி மன்றம் பெரியார் எழுத்துகளை பெரியார் திராவிடக் கழகம் புத்தகங்களாகக் கொண்டுவருவது பற்றி ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. முழுத்தீர்ப்பையும் நான் இன்னமும் படிக்கவில்லை; தினமணி, தி ஹிந்து செய்திக் குறிப்புகளை மட்டுமே படித்துள்ளேன்.

ஆனாலும் knee-jerk எதிர்வினை ஒன்றை ஆற்றவேண்டும் என்ற ஆவலால் அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பெரியாரின் எழுத்துகள் பரவலாக அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த பற்று உண்டு என்பதை முதற்கண் disclaimer ஆகச் சொல்லிக்கொள்கிறேன். ராமச்சந்திர குஹாவுடன் சில மாதங்களுக்குமுன் பேசும்போது, அவர், பெரியார் எழுத்துகள் ஏன் ஆங்கிலத்தில் தரமாகக் கிடைக்கவில்லை என்று கேட்டார். பெரியார் எழுத்துகள்மீதான காப்புரிமைப் பிரச்னையையும் நீதிமன்ற வழக்கு பற்றியும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

அதே நேரம், நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பு சரியல்ல என்று நினைக்கிறேன். சுருக்கமாக, நீதிபதி சொல்வது இதைத்தான்: பெரியார் எழுத்தின்மீது உள்ளது அறிவுசார் சொத்துரிமை. (அது அசையும், அசையாச் சொத்துகள்போல அல்லாத வேறு ஏதோ தனிப்பட்ட உரிமை போல நீதிபதி குறிப்பிடுகிறார்.) பெரியார் தன் எழுத்துகள்மீதான காப்புரிமையை வெளிப்படையாக, எழுத்துபூர்வமாக யாருடைய பெயருக்கும் மாற்றித்தரவில்லை. எனவே வீரமணியோ பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கமோ அந்த எழுத்துகளுக்கு உரிமை கோரமுடியாது. வீரமணியால், தன்னிடம் அந்தக் காப்புரிமை உள்ளது என்று நிரூபிக்க முடியவில்லை. எனவே அந்த எழுத்து அனைவருக்கும் சொந்தம்; எனவே யார் வேண்டுமானாலும் அதைப் பதிப்பிக்கலாம்.

ஆனால், காப்புரிமை யார் பெயருக்கும் தனியாக மாற்றித்தரப்படவில்லை என்றால், அது சம்பந்தப்பட்ட நபரின் வாரிசுகளுக்குப் போய்ச்சேரும். என் சொத்துகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது குறிப்பிட்ட அறக்கட்டளைக்குப் போய்ச்சேரும் என்று ஒருவர் உயில் எழுதிவைத்தால், அசையும், அசையாச் சொத்துக்களோடு, அறிவுசார் சொத்தும் அதில் அடங்கும், என்பது என் கருத்து.

எனவே பெரியார் எழுத்து எல்லோருக்கும் சொந்தம் என்று நீதிபதி சொன்னது ஏற்கமுடியாதது என்றே கருதுகிறேன். பெரியார் வாழும் காலத்தே அவர் உருவாக்கிய அறக்கட்டளை (பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கம்) ஒன்றுக்கு அவர் அனைத்துச் சொத்துகளையும் எழுதிக்கொடுத்துவிட்டார் என்றால், தனியாக அறிவுசார் சொத்துக்களை எழுதிக்கொடுக்கவேண்டும் என்று அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். பெரியார் இறந்து 60 ஆண்டுகள் கழித்து, அவரது எழுத்துகளை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம்.

இந்தப் பிரச்னை நீதிமன்றங்களுக்கானதல்ல என்பது என் கருத்து. இது நிர்வாகத்துக்குட்பட்டது. பெரியார் திராவிடக் கழகத்தினர் என்ன செய்தனர் என்பது பற்றி முழுமையாக எனக்குத் தெரியாது. காப்புரிமைச் சட்டம் 1957-ல் முக்கியமான ஒரு பிரிவு உள்ளது:

31. Compulsory licence in works withheld from public.-(1) If at any time during the term of copyright in any Indian work which has been published or performed in public, a complaint is made to the Copyright Board that the owner of copyright in the work- (a) has refused to republish or allow the republication of the work or has refused to allow the performance in public of the work, and by reason of such refusal the work is withheld from the public;

...

the Copyright Board, after giving to the owner of the copyright in the work a
reasonable opportunity of being heard and after holding such inquiry as it may deem necessary, may, if it is satisfied that the grounds for such refusal are not reasonable, direct the Registrar of Copyrights to grant to the complainant a license to republish the work, perform the work in public or communicate the work to the public by [broadcast], as the case may be, subject to payment to the owner of the copyright of such compensation and subject to such other terms and conditions as the Copyright Board may determine; and thereupon the Registrar of Copyrights shall grant the license to the complainant in accordance with the directions of the Copyright Board, on payment of such fee as may be prescribed.

(2) Where two or more persons have made a complaint under sub-section (1), the licence shall be granted to the complainant who in the opinion of the Copyright Board would best serve the interests of the general public.

இதன்படி, பெரியார் திராவிடக் கழகம், நேராக காப்புரிமை ஆணையத்திடம் சென்று முறையிட்டிருக்கலாம். அவர்கள் விரும்பிய குடியரசு இதழின் எழுத்துகள், இதுவரை வீரமணியால் பதிப்பிக்கப்படவே இல்லை என்கிறார்கள் பெ.தி.க. அது உண்மையானால், நீதிமன்றமே செல்லாமல், மேலே சொன்ன ஷரத்தின்படி, காப்புரிமை ஆணையத்திடம் அனுமதி பெற்று அந்தக் கட்டுரைகளை பெ.தி.க புத்தகமாகக் கொண்டுவரலாம். அதை காப்புரிமை ஆணையம் மறுத்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்லலாம். ஆனால் பெரியாரின் பிற எழுத்துகளை

இதை பெ.தி.க முயன்றார்களா என்பதைத் தெரிந்துகொள்ளாமல்தான் இதனை எழுதுகிறேன் என்பதையும் குறிப்பிட்டுவிடுகிறேன்.

நான் முன்னமே சொன்னதுபோல, இது ஓர் அவசரப் பதிவு மட்டுமே. இந்தப் பிரச்னையின் பல அம்சங்களையும் தெரிந்துகொண்டு, விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

தி ஹிந்து
தினமணி

[காப்புரிமைச் சட்டத்தில் சில பகுதிகளை முழுமையாகக் கொடுக்க விட்டுவிட்டேன். இப்போது அவற்றைச் சேர்த்துள்ளேன்.]

Prodigy Spark - வெளியீட்டு விழா

நேற்று வேலூரில், சன்பீம் பள்ளியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் 'Prodigy Spark' என்ற பள்ளி மாணவர்களுக்கான மாத இதழ் வெளியிடப்பட்டது. சோதனை முயற்சியாக மூன்று இதழ்கள் கொண்டுவந்தபிறகு, நான்காவது இதழ் இப்போது அச்சில் உள்ளது; ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.

‘பிராடிஜி மேதை’ என்று தமிழில் ஒரு மாத இதழ் கொண்டுவருகிறோம். அதுவும் பள்ளி மாணவர்களுக்கானதே.

Prodigy Spark - Launch of a student magazine

இந்த இரண்டு இதழ்களும் கடைகளில் இன்னும் சில மாதங்களுக்குக் கிடைக்காது. கடைகளில் கிடைக்காமலேயே போகலாம். மேதை இதழ் இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தனிநபர் ஆண்டுச் சந்தா வகையில் கிடைக்கலாம்; இணையத்திலோ நேரிலோ அதற்கு சந்தா செலுத்தலாம். Prodigy Spark இதழ் இப்போதைக்கு பள்ளிக்கூடங்கள் வழியாகவே விநியோகிக்கப்படும். சில மாதங்கள் சென்று, அதை நன்கு மேம்படுத்தியபிறகு (பீட்டா வெர்ஷன்!) இணையத்திலோ நேரடியாகவோ ஆண்டுச் சந்தாவாகக் கிடைக்கும்.

Suki Sivam addressing school children

நேற்றைய நிகழ்ச்சியில் சுகி சிவம் சுமார் 1.5 மணி நேரம் பேசினார். புத்தகங்களை ஏன் தேடிப் படிக்கவேண்டும், புத்தகம் படிப்பதால் என்ன பயன் என்பது பற்றிய அவரது பேச்சு, நகைச்சுவை இழையோட, சுவாரசியமாக இருந்தது. சுமார் 2500 மாணவர்களும் சில ஆர்வமுள்ள பெற்றோர்களும் வந்திருந்தனர்.

Launch of Prodigy Spark - Students 1

Launch of Prodigy Spark - Students 2

Saturday, July 25, 2009

கிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸ்

நாளை 26 ஜூலை 2009, ஞாயிறு முதல் வாராவாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு பதிப்பகம் வழங்கும் “கிழக்கு பாட்காஸ்ட்” என்ற நிகழ்ச்சி ஆஹா எஃப்.எம் பண்பலை வானொலியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நடைபெறும்.

இணையத்தில் பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தலைப்புகளில், பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல்தான். கேள்வி பதில்தான். இது ரேடியோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயம். அமெரிக்காவில் Talk Radio நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏனோ தனியார் வானொலிகளில் கேட்கக்கிடைப்பதில்லை.

ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில் சென்னையில் கிடைக்கிறது. சென்னையைச் சுற்றி சில கிலோமீட்டர் பரப்பில் கேட்கலாம்.

நாளை வரும் நிகழ்ச்சி பங்குச்சந்தை குறித்தது.

Tuesday, July 21, 2009

கிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத்திவைப்பு

இன்று மாலை - 22 ஜூலை 2009 - செவ்வாய், கிழக்கு மொட்டைமாடியில் நடக்க இருந்த ‘முதலாளித்துவ பயங்கரவாதம்’ என்ற தலைப்பிலான பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து வர இருந்த சுப.தங்கராசுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் இன்று சென்னை வர இயலவில்லை. உடல்நிலை சரியானதும் மறு தேதி குறிப்பிடப்படும்.

Monday, July 20, 2009

ராமதுரை: சூரிய கிரகணம்

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ராமதுரை, சூரிய கிரகணம் தொடர்பாக ஆற்றிய காணொளிப் பேச்சு; ஒலியுடன் சேர்த்து.ஒலிப்பதிவு மட்டும் தனியாக வேண்டும் என்றால், இங்கிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

நேந்திர வறுவல் செய்வது எப்படி?

நேற்றி ஈரோட்டில் தெருவில் பார்த்த காட்சி.

தனியாக காயை சீவி, பின் கொதிக்கும் எண்ணெயில் போடுவது எல்லாம் வீடுகளுக்குத்தான் லாயக்கு. இங்கே நேராக சீவியிலிருந்து எண்ணெய்க்குள். சில விநாடிகளில் தகதகவென தங்கமாக மின்னும் நேந்திரம் சிப்ஸ் ரெடி.

Saturday, July 18, 2009

பட்ஜெட்டும் வருமான வரியும்: பாலமுருகன்

Fundsindia.com மற்றும் கிழக்கு பதிப்பகம் நடத்திவரும் பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான உரையாடல் வரிசையில் வெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2009 அன்று பட்ஜெட், வருமான வரி ஆகியவை தொடர்பான உரையாடல் நடைபெற்றது. பாலமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

அதன் ஒலிவடிவம் இங்கே.

இதற்கு முந்தைய பேச்சுகளின் ஒலிவடிவத்தை இங்கே பெறலாம்.

.

அண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்

ஜூலை 15 தொடங்கி ஜூலை 26 வரை அண்ணா நகரில் கிழக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இடம்

ராமசாமி பார்வதி ஹால்
ஐயப்பன் கோவிலுக்கு எதிராக
223, Y பிளாக்
2வது அவென்யூ, 6வது மெயின் ரோடு
அண்ணா நகர், சென்னை 600040

ஜூலை 18 தொடங்கி (இன்று முதல்) மைலாப்பூரில் கிழக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இடம்

கிழக்கு புத்தகக் கண்காட்சி
78/237 ராமகிருஷ்ணா மடம் தெரு
மைலாப்பூர் குளத்துக்கு எதிரில்
அல்லயன்ஸ் பதிப்பகத்துக்கு அடுத்த கட்டடத்தில்
மைலாப்பூர்
சென்னை 600004

Wednesday, July 15, 2009

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: பட்ஜெட் 2009, வருமான வரி

வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை, Fundsindia.com மற்றும் கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான உரையாடலில் இந்த வாரம் - 17 ஜூலை 2009 - மாலை 6.00 மணிக்கு கடந்துமுடிந்த பட்ஜெட் பற்றியும், மாதச்சம்பளம் வாங்குவோருக்கான வருமான வரி எந்தவிதத்தில் மாற்றம் கண்டுள்ளது என்பது பற்றியும், மேலும் அது தொடர்பான பிற விஷயங்கள் பற்றியும் பேச வருகிறார்

பாலமுருகன், CFO, Cogzidel Consultancy Services Pvt. Ltd.

பட்ஜெட் மற்றும் வருமான வரி தொடர்பான உங்கள் கேள்விகளுடன், தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

இதற்குமுன் நடந்துள்ள பெர்சனல் ஃபைனான்ஸ் பாட்காஸ்ட் அனைத்தையும் இங்கு சென்று கேட்கலாம்.

.

Saturday, July 11, 2009

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டங்கள்

வரும் சில தினங்களில் கீழ்க்கண்ட மொட்டைமாடிக் கூட்டங்கள், சென்னை, ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தின் மொட்டைமாடியில் நடைபெறும்.

17 ஜூலை 2009 வெள்ளிக்கிழமை: பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான கூட்டம். பட்ஜெட் பற்றியதாக இருக்கலாம். மீண்டும் தகவலுடன் வருகிறேன். நேரம் மாலை 6.00 மணி.

18 ஜூலை 2009 சனிக்கிழமை: அறிவியல் பார்வையில் சூரிய கிரகணம். என்.ராமதுரை. காணொளிப் பேச்சு. மாலை 6.00 மணி. (22 ஜூலை 2009 அன்று முழு சூரிய கிரகணம் நடக்க உள்ளது என்பதை அறிவீர்கள்தானே?)

21 ஜூலை 2009 செவ்வாய்க்கிழமை: முதலாளித்துவ பயங்கரவாதம். சுப. தங்கராசு, பா. விஜயகுமார், பு.ஜ.தொ.மு, மாலை 6.15 மணி

Friday, July 10, 2009

Friday personal finance meeting postponed

Kizhakku mottaimaadi meet on personal finance today stands postponed to next week.

Thursday, July 09, 2009

ஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்

சீனாவில் இரண்டு முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர் உள்ளனர். உய்குர் இனத்தவர் மத்திய ஆசியா பகுதியை ஒட்டிய சீன மாகாணமான ஷின்ஜியாங்கில் வசிக்கின்றனர். இரண்டாவது குழு, ஹுவி எனப்படும் பல பழங்குடிகளை அடக்கியது. நிங்ஷா, கான்சு, கிங்காய், ஷின்ஜியாங், ஹெனான் போன்ற மாகாணங்களில் இவர்கள் உள்ளனர்.

சீனாவின் பெரும்பான்மை இனம், ஹான் சீனர்கள் எனப்படுவோர்.

ஹான் vs ஹுவி; ஹான் vs உய்குர் பிரச்னைகள் எப்போதும் இருந்தவண்ணம் உள்ளன. இப்போது உய்குர் இனத்தோர் உள்ள மாகாணத்தில் ஹான் சீனர்களுக்கும் உய்குர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்து, கலவரம் ஏற்பட்டு, 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 2004-ல் ஹெனான் மாகாணத்தில் ஹுவி-ஹான் சண்டை காரணமாகப் பலர் உயிரிழந்தனர்.

பல்லவி அய்யரின் Smoke and Mirrors (தமிழாக்கம் - சீனா: விலகும் திரை) புத்தகத்தில் ஹான் - ஹுவி தொடர்பாக அவர் எழுதியதிலிருந்து சில பகுதிகள் இதோ, உங்களுக்காக. படிக்கும்போது ஏதோ இந்தியாவைப் பற்றிப் படிப்பது போல இருந்தது.

***

ஹுவிக்கள்தான் உலகத்து முஸ்லிம்களிலேயே குறைந்த ஆசாரவாதிகள் என்று கருதப்பட்டார்கள். அவர்களில் பலர் குடிப்பதுண்டு; புகைப்பதுண்டு. யாரும் தாடி வளர்ப்பதில்லை. பெண்கள் பர்தா அணிவது மிகவும் அபூர்வம்.

ஆனால் தொழில் கட்டாயங்களினால் என்றைக்கு அவர்கள் வெளியே கிளம்பினார்களோ, அன்றைக்கே அவர்களின் தனிமையும் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் வாழ்க்கையில் கடுமையான இஸ்லாமிய சட்ட திட்டங்கள் நுழைய ஆரம்பித்தன. நிங்ஷாவின் மசூதிகளில் மக்கள் தினம் ஐந்து வேளை தொழுகை நடத்த வந்தார்கள். பெண்கள் தலையை மூடும் துணியை அணிய ஆரம்பித்தார்கள். ஆண்கள் நடுவே அரிதாக இருந்த குல்லாய், இப்போது அதிகத் தலைகளில் ஏறி உட்கார்ந்துகொண்டது.

2005-ல் சீனாவிலிருந்து 8,000 முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை சென்றார்கள் என்றார் மா. நூற்றுக்கணக்கான ஹுவி மாணவர்கள் மேற்படிப்புக்காக பாகிஸ்தான், சிரியா, சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்றார்கள்.

...

பல மசூதிகளில் பலருடன் பேசினேன். இஸ்லாமிய உலகத்தின் பொதுவான பிரச்னைகள் பற்றி அவர்களுக்கு நேரிடையாகக் கவலை இருந்தது. தாய் ஜி மசூதியின் பெண் இமாம் யாங், ‘முஸ்லிம்கள் எல்லோருக்கும் கெட்ட பெயர் வாங்கித் தருவது இந்த அமெரிக்காதான்’ என்று ஆவேசமாகச் சொன்னார். கோபத்தில் அவரது உடம்பு நடுங்கியது. ‘அமைதியை விரும்பும் மதம் எங்களுடையது’ என்றார். வகுப்பில் இருந்த ஐம்பது பெண்களும் தலையை ஆட்டி ஆமோதித்தார்கள். ‘இருந்தும் எங்களைப் பற்றி என்னென்ன பொய்யெல்லாம் பரப்புகிறார்கள் பாருங்கள்’ என்று கசப்புடன் அவர் சொல்ல, வகுப்பே சத்தமாக அவரை ஆதரித்தது.

...

நிங்ஷாவின் அரசு அதிகாரி ஒருவர் நீண்ட புகார்ப் பட்டியல் படித்தார். ‘முன்னேயெல்லாம் ஹுவிக்களும் எங்களைப் போலத்தான் வாழ்ந்தார்கள். பன்றி சாப்பிட மாட்டார்கள்; அதுதான் ஒரே வித்தியாசம். இப்போதெல்லாம் அவர்கள் தாங்கள் ஏதோ தனியாகப் பிறந்து வந்திருப்பதாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். என்னமோ வெளிநாட்டுக்காரர்கள் மாதிரியல்லவா அலட்டிக் கொள்கிறார்கள்!’ ஹுவி - ஹான் இனங்களுக்கிடையே நடந்த சின்னச் சின்னப் பிரச்னைகள் பெரிய தகராறில் முடிந்ததும் உண்டு.

2004-ல் இப்படித்தான் ஹெனான் மாகாணத்தில் ஒரு சாலை விபத்தில் ஆரம்பித்த சண்டை, ராணுவ ஆட்சி அறிவிப்பது வரை போய்விட்டது! ஒரு ஹுவி டிரைவர் வண்டி ஓட்டும்போது ஹான் பெண்ணை இடித்துவிட்டான். மோதியதற்கு நஷ்ட ஈடு தரமாட்டேன் என்று வாய்ச் சண்டையில் தொடங்கி, விரைவிலேயே கைச்சண்டையாகி, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் போர்க்களத்தில் இறங்கிவிட்டார்கள். அப்போது நடந்த கலவரத்தில் பலர் உயிரிழக்க நேர்ந்தது.

ஏற்கெனவே இருந்த டென்ஷன் போதாது என்று, அரசாங்கத்தின் திட்டங்களும் எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றின. ஹுவிக்களுக்கு அரசாங்கம் பல சலுகைகளைக் கொடுத்தது. உதாரணமாக, ஒற்றைக் குழந்தைச் சட்டம் ஹுவிக்களுக்குக் கிடையாது. (அவர்களில் அரசு ஊழியர்கள் இருந்தால் அவர்களுக்கு மட்டும் எப்போதும்போல ஒரே குழந்தைதான் அனுமதி.) பல்கலைக்கழகங்களிலும் அரசாங்க வேலைகளிலும் ஹுவிக்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.

ஹுவிக்கள் தங்கள் இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தினார்கள். ‘கோட்டா இருக்கும்போதே எங்களில் ஒரு சிறிய பகுதிக்குத்தான் அது பயன்பட்டிருக்கிறது. எங்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் வறுமையில்தான் வாடுகிறோம்’ என்று சுட்டிக் காட்டினார்கள். உண்மையிலேயே ஹுவிக்களுக்கு அதிகம் வசதி வாய்ப்புக்கள் இல்லை. ஏதோ கடை வைத்திருப்பார்கள், அல்லது ‘முஸ்லிம் சாப்பாட்டு ஹோட்டல்’ நடத்துவார்கள். ஆனால் ‘இவர்களுக்கு மட்டும் என்ன சலுகை’ என்று ஹான்களுக்கு ஒரே எரிச்சல். நிங்ஷா பின்தங்கிய பிரதேசமாக இருந்ததால் வேலை வாய்ப்புக்களுக்கு எப்போதுமே கடும் போட்டிதான்.

...

என் பயணத்தின் இரண்டாம் நாள், மா கொஞ்சம் அப்பால் போயிருந்தபோதுதான் லியுவின் உண்மையான முகம் வெளிப்பட்டது. முதலில் எச்சரிக்கையாகப் பேச ஆரம்பித்தவர், வரவர உற்சாகம் அதிகரித்து, நிங்ஷாவின் முஸ்லிம்கள் பற்றி வெளிப்படையாகவே பல தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘ஹுவி முஸ்லிம்களுக்கு இங்கே நல்ல பெயரே கிடையாது தெரியுமோ? அவர்களுக்கும் நேர்மைக்கும் ரொம்பத் தூரம்!’ என்றார். ‘ஹான் சமூகத்தை சேர்ந்த டிரைவர்கள் ஹுவி ஏரியாவில் கார் ஓட்டக் கூடத் தயங்குவார்கள்’ என்று புதிர் போட்டார். ‘ஏன்?’ என்றேன். ‘தப்பித் தவறி ஒரு ஹுவியை இடித்துவிட்டால் போச்சு; அவர்களுடைய முழு சமுதாயமே திரண்டு வந்துவிடும். டிரைவரை அடித்தே கொன்றுவிடுவார்கள்!’ என்றார். ஆச்சரியம்தான். 2004-ல் நடந்த கலவரத்துக்குக் காரணம், இதற்கு நேர்மாறான விபத்து. அங்கே இடித்தவர் ஹுவி டிரைவர்; இடிபட்டவர்தான் ஹான்.

கடைசியாக லியு சொன்னதை வைத்துப் பார்த்தால், நிங்ஷாவின் இனப் பிரச்னை, பத்திரிகைகளில் சொல்லப்படுவதைவிட மிகவும் தீவிரமாக இருக்கும் போலிருந்தது. ‘இப்போதெல்லாம் நிங்ஷாவில் உள்ள ஒவ்வோர் அரசு அதிகாரிக்கும் இந்த ஹுவிக்களை சமாளிப்பதற்கே பொழுது சரியாக இருக்கிறது’ என்றார் லியு. இது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

***

மேற்கொண்டு இதைப்பற்றியும், மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் வாங்கவேண்டிய புத்தகம்: சீனா: விலகும் திரை, பல்லவி அய்யர், தமிழில் ராமன் ராஜா

Tuesday, July 07, 2009

Prabhakaran - The Story of his struggle for Eelam

நியூ ஹொரைசன் மீடியாவின் ஆங்கிலப் பதிப்பான Oxygen Books வாயிலாக, செல்லமுத்து குப்புசாமி ஆங்கிலத்தில் எழுதியுள்ள புத்தகம் Prabhakaran - The Story of His Struggle for Eelam வெளியாகிறது. நாளை சென்னை லாண்ட்மார்க்கில் கிடைக்க ஆரம்பிக்கும். விரைவில் இந்தியா முழுதும் கிடைக்கும்.

இணையத்தில் இன்றுமுதல் ஆர்டர் செய்யலாம். விரைவில் அமேசான் அமெரிக்காவில் கிடைக்க வழி செய்யப்படும்.

இது தமிழில் செல்லமுத்து குப்புசாமி எழுதிய பிரபாகரன் - ஒரு வாழ்க்கை என்ற புத்தகத்தின் ஆங்கில வடிவமே, என்றாலும் ஆங்காங்கே சிற்சில மாறுதல்களுடன் தமிழர்கள் அன்றிப் பிறரும் புரிந்துகொள்ள ஏதுவாகச் செய்யப்பட்டுள்ளது. இதன் tone தமிழ்ப் புத்தகம் போன்றதே.

கிழக்கு பிரத்யேக ஷோரூம் - மதுரை + ஈரோடு

இந்த வாரம் மதுரையிலும் அடுத்த வாரம் ஈரோட்டிலும் கிழக்கு பிரத்யேக ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.

மதுரையில் வரும் வெள்ளிக்கிழமை (10 ஜூலை 2009)

கிழக்கு புத்தக ஷோரூம்
85, வடக்கு வாசல்
எஸ்.எஸ்.காலனி
மதுரை 625 010
தொலைபேசி: 99943-75439

ஈரோட்டில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (19 ஜூலை 2009)

கிழக்கு புத்தக ஷோரூம்
331/410, ஈ.வி.என் ரோடு
எல்.கே.எம் மருத்துவமனை அருகில்
சூரம்பட்டி 4 ரோடு
ஈரோடு 638 004
தொலைபேசி: 98427-57654

Sunday, July 05, 2009

ஆலவாய் - நரசய்யா

மாதாமாதம் முதல் சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தக்கர் பாபா வித்யாலயாவில் தமிழ் பாரம்பரியம் குழுமம் நடத்திவரும் பாரம்பரியம் தொடர்பான பேச்சுகளில் நேற்று நரசய்யா, ஆலவாய் என்ற புத்தகத்தைத் தான் எழுத முற்பட்டபோது செய்த ஆராய்ச்சிகள் பற்றிப் பேசினார்.

இந்தப் புத்தகம், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ. 275.


இந்தப் புத்தகத்திற்கான ஆராய்ச்சியை இரண்டு வருடங்களுக்கும் மேலாகச் செய்தத்தாகச் சொன்னார் நரசய்யா. தான் ஐராவதம் மகாதேவனிடம் கல்வெட்டுகளைப் படிக்கக் கற்றுக்கொண்டது, பல்வேறு மலைகள், கோயில்களுக்குச் சென்று அங்குள்ள கல்வெட்டுகளைப் படித்தது ஆகியவற்றை சுவைபட விளக்கினார். தனது காணொளிப் பேச்சின்போது பல சுவாரசியமான படங்களைக் காட்டிப் பேசினார். சமணர் படுகை (ஆனைமலை?) ஒன்றில் மகாவீரரின் பல சிற்பங்கள் அற்புதமாக இருந்தன.

முதலில் மதுரை என்ற பெயர் இலக்கியங்களில் எங்கெல்லாம் வந்துள்ளது என்பது பற்றிப் பேசினார். பின்னர் கல்வெட்டுகளில் மதுரை என்ற பெயர் அகப்பட்டுள்ளதா என்பது பற்றிப் பேசினார்.

சம்பந்தருடனான வாதத்தில் தோற்றபின் 8,000 சமணர்கள் கழிவில் ஏற்றப்பட்டனரா என்ற செய்தியை எடுத்துக்கொண்டு நரசய்யா சில நிமிடங்கள் பேசினார். பிந்தைய கால (1500-1600) நாயக்கர் ஓவியம் ஒன்றில் இது காட்சியாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தது அதற்கு 1,000 ஆண்டுகளுக்குமுன். ‘எண்ணாயிரம்’ என்பது ஓர் இடமாக இருக்கலாம் என்றும் சில சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று ஐராவதம் மகாதேவன் கருதுவதைச் சுட்டிக்காட்டினார்.

ஜேஷ்டாதேவி (மூதேவி) வழிபாடு பற்றி சில நிமிடங்கள் பேசினார். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர். பின்னர் 6-ம் நூற்றாண்டுக்குப்பின் மூதேவி வழிபாடு தமிழகத்தில் நடக்கவில்லை என்று தெரிகிறது. மதுரையில் ஒரு கோவிலில் இருந்த மூதேவி சிலையை அழகாகப் படம் பிடித்துக் கொண்டுவந்திருந்தார்.

எல்லிஸ் என்ற மெட்ராஸ் பிரெசிடென்சி கவர்னர் 1818-ல் சென்னையில் சில கிணறுகளை வெட்டி, ஏன் அதைச் செய்தேன் என்பதை திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் ஆசிரியப் பாவாக வடித்து வைத்திருந்தது இப்போது மதுரை மஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டு மோசமான நிலையில் இருந்ததாம். அதைச் சுத்தம் செய்து, எண்ணெய் தடவி, அழகான படமாக எடுத்ததைக் காண்பித்தார்.

மதுரையில் மதனகோபாலஸ்வாமி கோயில் வாசலில் இருந்த ஒரு மண்டபம் மொத்தமாக ஓர் அமெரிக்கப் பெண்மணியால் விலைக்கு வாங்கப்பட்டதையும் அந்த மண்டபம் இப்போது பென்சில்வேனியாவில் பல்கலைக் கழகம் ஒன்றில் இருப்பதையும் அது தொடர்பான தன் ஆராய்ச்சிகளையும் நரசய்யா விளக்கினார். அந்த மண்டபத்தை யார் விற்றது என்று தெரியவில்லை என்றும் இதுவரை அதை மட்டும் தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாதாந்தரக் கூட்டத்துக்கு இந்த அளவு மக்கள் கூட்டம் வந்தது கிடையாது. குறைந்தது 70 பேர் நேற்று வந்திருந்தனர்.


அடுத்த மாதம், சிலப்பதிகாரம் தொடர்பானது. சிலப்பதிகார வழித்தடத்தில் சென்று இன்றும் கண்களில் தென்படும் சுவையான இடங்களை சிலப்பதிகார நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திப் பேச உள்ளார் சிவக்குமார் என்னும் குறும்பட இயக்குனர். (இரா.நடராசனின் ஆயிஷா கதையை குறும்படமாக எடுத்தவர்.) நாள்: 1 ஆகஸ்ட் 2009, சனிக்கிழமை. பலர் நேரத்தை 5.00 என்பதிலிருந்து 5.30-க்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். அது தொடர்பான தகவலை ஜூலை கடைசி வாரத்தில் தருகிறேன்.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஜூலை 3-12

தற்போது நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பித்து, இது 12-ம் வருடம். 2004-ம் ஆண்டு நியூ ஹொரைசன் மீடியா ஆரம்பித்த முதல் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு வருகிறோம். இந்தமுறை நியூ ஹொரைசன் மீடியாவின் புத்தகங்கள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.

கடை எண் 5, 6: கிழக்கு பதிப்பகம்
கடை எண் 57: ப்ராடிஜி புத்தகங்கள்

இன்று மாலை (5-7-2009) நடக்கும் நிகழ்ச்சியில் எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் IIM நிர்வாகவியல் கல்லூரி என்ற புத்தகம் வெளியிடப்பட்ட உள்ளது.

Saturday, July 04, 2009

மருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி

Fundsindia.com, கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தின் நான்காம் வாரம், நேற்று வெள்ளிக்கிழமை, ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவக் காப்பீடு பற்றிப் பேசினார். அதன் ஒலிப்பதிவு இங்கே.

இதற்கு முந்தைய மூன்று வாரங்களின் ஒலிப்பதிவும் இங்கே கீழே கொடுத்துள்ளேன்:

வாரம் 3: கிரெடிட் கார்ட்
வாரம் 2: மியூச்சுவல் ஃபண்ட்
வாரம் 1: பார்கெய்ன், டீல்

Friday, July 03, 2009

‘ஆலவாய்’ பற்றி நரசய்யா

தமிழில் ‘மதராசபட்டினம்’ (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) என்றும் ஆங்கிலத்தில் ‘Madras : Tracing The Growth of The City Since 1639’ (Oxygen Books வெளியீடு) என்றும் சென்னை நகரின் வரலாற்றை எழுதியுள்ள கே.ஆர்.ஏ. நரசய்யா, இப்போது மதுரையின் வரலாற்றை ‘ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை’ என்ற புத்தகமாக தமிழில் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நாளை சனிக்கிழமை (4 ஜூலை 2009) மாலை 5.00 மணிக்கு வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நரசய்யா தான் ‘ஆலவாய்’ புத்தகத்துக்காகச் செய்த ஆராய்ச்சிகள் பற்றிப் பேச உள்ளார்.

தமிழ்ப் பாரம்பரியம் குழுமம் சார்பாக மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று நடக்கும் இந்த நிகழ்ச்சி இது.

ஐராவதம் மகாதேவனிடம் சென்று தமிழ் பிரமி எழுத்துக்களைப் படிக்கக் கற்றது, மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில், ஆனைமலை சென்று அங்குள்ள கல்வெட்டுகளைப் படித்தது, மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் செய்த ஆராய்ச்சிகள், ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சாமிநாதய்யர் நூலகம், MIDS, மாவட்டப் பொது நூலகங்கள் ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி நரசய்யா பேசுகிறார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள:
அ.அண்ணாமலை: gandhicentre@gmail.com; 94441-83198
பத்ரி சேஷாத்ரி: badri@nhm.in; 98840-66566
டி.கே.ராமச்சந்திரன்: tkramachandranias@hotmail.com; 99406-41144
எஸ்.கண்ணன்: 044-2498-5836
எஸ்.சுவாமிநாதன்: sswami99@gmail.com; 044-2461-1501

Thursday, July 02, 2009

மருத்துவக் காப்பீடு

வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை Fundsindia.com மற்றும் கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான கலந்துரையாடலில் நாளை, 3 ஜூலை 2009 வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு மருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.

இவர் எல்.ஐ.சி நிறுவனத்தின் சேர்மனாக இருந்தவர். கிழக்கு பதிப்பகம் சார்பாக இன்ஷூரன்ஸ் - புதையலா, பூதமா என்ற ஆயுள் காப்பீடு பற்றிய புத்தகத்தையும் ஆக்சிஜன் புக்ஸ் பதிப்பில் Small Print, Big Risk என்ற தலைப்பில் மருத்துவக் காப்பீடு பற்றிய புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர் இன்ஷூரன்ஸ் ஆம்பட்ஸ்மேன் ஆகவும் இருந்துள்ளார். இன்ஷூரன்ஸ் துறையில் நிறைய அனுபவம் கொண்டவர்.

கடந்த மூன்று வாரங்களிலிருந்து ஒரு சிறு மாற்றம் இந்த முறை இருக்கும். முதலில் கிருஷ்ணமூர்த்தி சுமார் 30 நிமிடங்கள் இந்தியாவில் கிடைக்கும் மருத்துவக் காப்பீடுகள் பற்றியும் அவற்றின் நிறை குறைகள் பற்றியும் பேசுவார். அதன் பிறகு கலந்துரையாடல்.

சென்ற வாரம் கிரெடிட் கார்ட் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலின் ஒலிப்பதிவு