தொழில் வளர்ச்சியை மட்டுமே
முன்வைக்கும் பலரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு
எதிரான போராட்டமாகப் பார்க்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டால், அல்லது
தமிழகத்திலிருந்து துரத்தப்பட்டால், அதன் காரணமாகத் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி
பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.
சூழல் கேட்டை முன்வைத்து இன்று
தமிழகத்தில் நான்கு பெரும் பிரச்னைகள் பேசப்படுகின்றன. அவை (1) காவிரிப் படுகை
ஹைட்ரோகார்பன் மண்டலம் (2) கூடங்குளம் (3) தேனி நியூட்ரினோ (4) ஸ்டெர்லைட். இதில்
ஸ்டெர்லைட் மிகக் கோரமான சில
சம்பவங்களுக்குப் பிறகு இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் சில
ரசாயன, உலோக உற்பத்தித் தொழில்கள்மீதும் கடும் அழுத்தம் சுமத்தப்படும்.
இந்தப்
பிரச்னைகளின் அடிநாதமாக நான் பார்ப்பது, சூழல் கேட்டை மட்டுமல்ல. இந்தத் தொழிற்சாலைகள்
அல்லது பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும்போது அப்பகுதி மக்கள் எந்தவிதத்திலும்
பங்காளிகளாகச் சேர்க்கப்படுவதே இல்லை. இது நிலம் கையக்கப்படுத்துதல் அல்லது குறைகேட்பு
என்பதைத் தாண்டிய ஒன்று.
குறைத்த சர்ச்சைக்குரியது
என்பதனால், தேனி நியூட்ரினோ ஆய்வகத்தை எடுத்துக்கொள்வோம். சிலபல பொய்க்கதைகளைத்
தாண்டி, உண்மையிலேயே இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்குப் பெரிய பிரச்னை ஏதும்
இல்லை; சிறிய சில பிரச்னைகள் நிச்சயமாக இருக்கும். நிலம் கையகப்படுத்தக்கூட
வேண்டியதில்லை. நீர் ஆதாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது. பாரம்பரிய காட்டு
மேய்ச்சல் உரிமை பாதிக்கப்படுமா? அரசு இதற்கான உறுதிமொழிகளைக் கொடுத்துவிடலாம்.
அதற்குமேல்? அதற்குமேல் இந்தப் பகுதி மக்களுக்கு இந்த மாபெரும் பல நூறு கோடி
ரூபாய்த் திட்டத்தால் ஒரு நன்மையும் இல்லை. அறிவியலுக்கான பொது நன்மை என்று அரசு
பேசுகிறது. பெருந்தீமை விளையலாம் என்று போராட்டக்காரர்கள் பேசுகிறார்கள்.
நீங்கள்
சராசரி, ஏழைப் பொதுமக்கள் என்றால் என்ன சொல்வீர்கள்? அரசை நம்பமாட்டீர்கள்.
ஏனெனில் இதுநாள்வரை அரசு நம்பகத்தன்மையோடு நடந்துகொண்டதில்லை. மக்களை
மதித்ததில்லை. அதிகாரத் திமிர் கொண்ட ஐஏஎஸ் அலுவலர்களும் ஐபிஎஸ் அலுவலர்களும் ஏழை
மக்களை எத்திவிட்டுச் செல்பவர்கள். இங்குதான் அமைப்பு சறுக்குகிறது.
அறிவியல்
வளர்ச்சியினால் என்ன நன்மை என்பதெல்லாம் கிடக்கட்டும். வேறு என்ன புதிய நன்மைகளை
இந்தப் பகுதி மக்களுக்கு ஒருவர் செய்யமுடியும்? ஐம்பது கிமீ விஸ்தீரணத்தில் உள்ள
அனைத்து கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீரைக் குழாயில் தர முடியுமா? அந்தப்
பகுதி மக்கள் வியக்கும் வகையில் அற்புதமான மருத்துவமனை ஒன்றை நிறுவி, டெர்ஷியரி
கேர் வரை இலவசமாகச் செய்துதர முடியுமா? நான்கைந்து உயர்தரப் பள்ளிக்கூடங்களை
நிறுவி அப்பகுதிக் குழந்தைகள் அனைவரையும் தூக்கி உயர்த்தமுடியுமா?
இதையெல்லாம்
செய்துதரவேண்டியது அரசு அல்லவா என்று சொல்லி நியூட்ரினோ ஆய்வக அறிஞர்கள்
தப்பித்துப் போய்விட முடியாது. இந்தப் பலநூறு கோடி ரூபாய்த் திட்டத்தால் அந்தப் பகுதி
மக்களுக்கு ஒரு பியூன் வேலைகூடக் கிடைக்கப்போவதில்லை என்னும்போது அம்மக்கள் எப்படி
உங்கள் திட்டத்தில் பங்குதாரர் ஆவார்கள்?
சரி, இதையெல்லாம்
ஸ்டெர்லைட் செய்துகொடுத்திருந்தால் இம்மாதிரியான ஒரு வெறுப்பைச் சம்பாதிக்காமல்
இருந்திருப்பார்களா? முதலில் இதனை ஸ்டெர்லைட் நினைத்துக்கூடப் பார்த்ததாகத்
தெரியவில்லை. ஏதேனும் பிரச்னை வந்தால் ஆளும் கட்சிக்கு அள்ளிக்கொடுத்தால்
முடிந்தது என்ற பழைய மாதிரியை மட்டுமே மனத்தில் வைத்து நடந்துகொண்டிருக்கிறார்கள்
என்று தோன்றுகிறது.
ஸ்டெர்லைட்,
வெறுமனே கொஞ்சம் நிலத்தையும் துறைமுகத்தையும் மட்டும் மனத்தில் வைத்து ஆலையை
நடத்தியுள்ளது. இனியும் இது சாத்தியமில்லை. ஒவ்வோர் ஆலையும் அப்பகுதி மக்களுடைய
பங்களிப்போடு, அம்மக்கள் விரும்பும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதோடு,
சூழல் கேட்டைக் கடுமையாகக் குறைப்பதற்கான முதலீடுகளோடும்தான் இனி தமிழகத்தில்
செயல்பட முடியும். அல்லது குறுகிய காலத்திற்கு, இந்த அளவுக்கு நாட்டின் வேறு
மாநிலங்களுக்கு இடம் பெயர வேண்டியிருக்கும். ஆனால் இன்னும் சில வருடங்களில் அந்த
மாநிலங்களிலும் பிரச்னைகள் வரலாம். இப்படி மாநிலம் மாநிலமாக ஓடிச் செல்வதற்குபதிலாக,
ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுடன் நியாயமான ஒப்பந்தத்தில் ஈடுபடலாம். சூழலியல்
கேடுகள் நேராமல் என்ன செய்யப்போகிறோம் என்று நியாயமாக, அவர்கள் மொழியில்
விளக்குவது. இங்கே நம்பகத்தன்மை மிக மிக முக்கியம். அதன் தொடர்ச்சி, எதிர்த்துப்
பேசுபவர்களை நியாயமாக எதிர்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது. இரண்டாவது,
அப்பகுதி மக்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வது. அப்பகுதி மக்களைப்
பங்காளிகளாக ஆக்குவது.
கூடங்குளம்
இதில் எதையுமே செய்யவில்லை. குறைந்தபட்சம் சுற்றியுள்ள மக்களுக்கு தமிழில் அச்சடித்த
துண்டுச்சீட்டுகூடத் தரவில்லை. மேலிடத்திலிருந்து முடிவு செய்துவிட்டோம், உன்
வேலையைப் பார்த்துக்கொண்டு போ - என்பதுதான் அவர்கள் கருத்தாக இருந்தது,
இருக்கிறது. காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் திட்டமும் இப்படிப்பட்டதாகத்தான்
இருக்கிறது.
ஸ்டெர்லைட்டுக்கு
விழுந்த அடி, பிற ஆலை முதலாளிகளை இனியாவது விழித்தெழச் செய்யவேண்டும். மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கையூட்டு அளிப்பதற்குபதிலாக
சூழல் கேட்டைத் தாங்களாகவே முன்வந்து குறைக்க, நீக்க முயற்சிகளை மேற்கொள்வது, சுற்றியுள்ள
மக்களோடு தொடர்ந்து பேசுவது, அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்கேற்பது,
அதற்காகக் கணிசமான அளவு பணத்தை முதலீடு செய்வது போன்றவை மூலமாக மட்டுமே
நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் ஆலைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.