Wednesday, September 30, 2015

டிக்கெட் முன்பதிவு + மின் ரயில் பயணம்

சில ஆண்டுகளுக்குமுன் கிண்டி ரயில்வே நிலையத்தில் எனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை குறித்து எழுதியிருந்தேன்.

ரயில் டிக்கெட் வித்தவுட்


கோவில்பட்டியிலிருந்து சென்னை பயணம். எழும்பூர் வரை முன்பதிவு செய்த டிக்கெட் என்னிடம் இருந்தது. என் வீடு அப்போது கிண்டியில். எனவே தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி கிண்டி வந்து சேர்ந்தேன். டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்து, தாம்பரம் முதல் கிண்டி வருவதற்கான முறையான டிக்கெட் இல்லை என்பதால் அபராதம் விதித்தார். அப்போதுதான் நான் செய்வது ரயில்வே விதிமுறைகளின்படித் தவறானது என்று எனக்குத் தெரியவந்தது.

ஆனாலும் இதில் உள்ள நடைமுறைப் பிரச்னை, பயணிகளின் அசௌகரியம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ரயில்வே அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அவ்வாறு எழுதப்போவதாகச் சொன்னபோது பலரும் கேலி செய்தனர் என்பது வேறு விஷயம்! என்னைப் போலவே ஏகப்பட்ட பேர் புகார் செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

30/7/2015 அன்று ரயில்வே நிர்வாகம் விதியை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்கவேண்டியதில்லை.

ஆர்.டி.ஐ செய்து தகவல் பெற்றுத்தந்த பாலாஜிக்கு நன்றி. ரயில்வேயிலிருந்து வந்துள்ள கடிதத்தை இத்துடன் இணைக்கிறேன். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதி என் கவனத்தை ஈர்த்த “பிச்சைக்கார”னுக்கு நன்றி.


Monday, September 14, 2015

இந்துஸ்தான் யூனிலீவர் - கொடைக்கானல் பாதரசக் கழிவுகள்

திரைக்கலைஞர்கள் ரோகிணியும் பாபி சிம்ஹாவும் இந்துஸ்தான் லீவர் நிறுவனப் பொருள்களைக் குப்பையில் போடும் காட்சியை தொலைக்ஆட்சியில் பார்த்தேன். கொடைக்கானலில் பாதரசம் கொட்டப்பட்டு அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது + ஊழியர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக இந்துஸ்தான் யூனிலீவர்மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் ராப்பிசைப் பாடகி ஒருவர் ஒரு பாடல் பாடி அது வைரலாகப் பரவியிருந்தது. அதில் கொடைக்கானல் வீறிட்டெழுந்து போராடும் என்று சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது திரைக்கலைஞர்கள் சிலர் போராட்டத்தில் இறங்கியுள்ளன்ர்.

தொழிற்சாலைகள் என்றாலே சூழலைப் பாதிப்பவர்கள் என்ற எண்ணம் பொதுமக்கள் பலரிடமும் உள்ளது. இது ஓரளவுக்கு உண்மைதான். பெருமளவு வேதிப்பொருள்களை உற்பத்தி செய்வோர், மின்சாரம் தயாரிப்போர், பலவிதமான வேதி, உயிரியல், கதிரியக்கக் கழிவுகளை வெளியிடுவோர், தாதுக்களைத் தோண்டி வெளியில் எடுப்போர், தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுப்போர் என்று அனைவருமே சூழலைப் பாதிக்கிறார்கள். உலகின் பல பாகங்களிலும் இதுதான் நிலைமை. மேற்கத்திய உலகில் இந்த அழிவுகள் குறித்த அறிவு பெருகி, அரசுகள் வலுவாகி, மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணம் மேலோங்க, தொழிற்சாலைகள் கழிவுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பதற்கான விதிமுறைகள் உருவாயின. மேலை நாடுகளில் இது மிகவும் தீவிரமாகப் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இந்த விதிமுறைகளை மேலை நாடுகளில் ஒழுங்காகப் பின்பற்றும் பன்னாட்டு நிறுவனங்களே, மூன்றாம் உலக ஏழை நாடுகளில் காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றனர்.

இந்துஸ்தான் யூனிலீவர் பிரச்னையை இதில் சேர்க்க முடியாது என்பது என் கருத்து. இந்தப் பிரச்னை குறித்து 1990கள் முதற்கொண்டு நான் கவனித்துவருகிறேன். கொடைக்கானலில் வெப்பமானிகளை (தெர்மாமீட்டர்) உருவாக்கும் தொழிற்சாலை ஒன்றை பாண்ட்ஸ் இந்தியா நிறுவனம் (பாண்ட்ஸ் டால்கம் பௌடர் தயாரித்துவந்த அதே நிறுவனம்தான்) நிறுவியிருந்தது. பாண்ட்ஸின் தாய் நிறுவனத்தை அப்போதைய இந்துஸ்தான் லீவரின் தாய் நிறுவனமான யூனிலீவர் வாங்கியதால் பாண்ட்ஸ் இந்தியாவும் இந்துஸ்தான் லீவரும் இந்தியாவில் இணைந்தன. அந்நிலையில் பாண்ட்ஸின் கையில் இருந்த கொடைக்கானல் வெப்பமானி தொழிற்சாலை இந்துஸ்தான் லீவர் கைக்கு வந்தது.

கொடைக்கானல் பகுதிகளில் உடைந்துபோன வெப்பமானியும் அதில் இருக்கும் பாதரசக் கழிவுகளுமாகச் சேர்த்து கொட்டிக் கிடப்பதை பொதுமக்கள் கண்டறிந்தனர். இந்தச் செயலைச் செய்தது தாங்கள் இல்லை என்றும் கிளாஸ் கழிவுகளை உள்ளூர் குப்பை வியாபாரி ஒருவருக்கு விற்றதாகவும் அவர்தான் இதனை வாங்கி கொடைக்கானலிலேயே கொட்டிவிட்டதாகவும் இந்துஸ்தான் யூனிலீவர் கூறுகிறது. அதே நேரம், இம்மாதிரியாக அபாயகரமான ரசாயனக் கழிவுகளை உள்ளூர் குப்பை வியாபாரியிடம் விற்றது தவறு என்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஒப்புக்கொள்கிறது. பாதரசத்தைக் கையாளும்போது மிகக் கவனமாகக் கையாளவேண்டும். மிக மோசமான ஒரு வேதிப்பொருள் இது.

இந்துஸ்தான் யூனிலீவர், தானாகவே முன்வந்து இந்தக் கழிவுகளை அகற்ற ஒப்புக்கொண்டது என்று தன் இணையத்தளத்தில் அறிவிக்கிறது. அதன்படி தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஒத்துழைத்து, அப்பகுதியில் உள்ள பெருமளவு பாதரசக் கழிவுகளை அகற்றியிருப்பதாகக் கூறுகிறது. மேலும் மண்ணைச் சரி செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறுகிறது.

இதற்கெல்லாம் முன்னதாகவே, பாதரசக் கழிவுகள் பற்றிய செய்தி வந்ததுமே, கொடைக்கானல் தொழிற்சாலையை உடனே மூடிவிட்டது இந்துஸ்தான் யூனிலீவர்.

இன்றுவரை நான் செய்திகளில் படித்ததுவரை, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்துஸ்தான் யூனிலீவர் தன்னுடன் ஒத்துழைக்க மறுத்ததாகச் சொல்லவில்லை. நீதிமன்றங்களும் இந்துஸ்தான் யூனிலீவரைக் கண்டித்ததாகத் தெரியவில்லை.

இன்னொரு பக்கம், மூடப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்த சில ஊழியர்கள், இங்கு வேலை செய்ததால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு நட்ட ஈடு வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தனர். இது முற்றிலும் வேறு விஷயம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

என் கருத்தில், தான் நேரடியாகச் செய்யாத ஒரு தவறைத் தட்டிக் கழிக்காமல், முழுமையாக ஏற்று, அதற்குத் தன்னைப் பொறுப்பாளி என்றே கருதி, அதனைச் சரி செய்யும் விதத்தில் மிகவும் நாணயமாக இந்துஸ்தான் யூனிலீவர் நடந்துகொண்டிருக்கிறது, தொடர்ந்து நடந்துவருகிறது என்றே நான் கருதுகிறேன். முழுமையான தகவல்கள் இல்லாமல் போராடும் திடீர்ப் போராளிகளுக்கு இவ்விஷயம் குறித்து அதிகம் ஒன்றுமே தெரியாது என்பதுதான் என் கருத்து.

போபால் விஷவாயு விஷயத்தில் டௌ கெமிக்கல்ஸ் என்ற கம்பெனியும் விஷவாயுப் பிரச்னைகளுக்குப் பிறகுதான் யூனியன் கார்பைட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. டௌ கெமிக்கல்ஸ் இன்றுவரை போபால் விஷவாயு சம்பவத்தில் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. ஆனால் இந்துஸ்தான் யூனிலீவர் தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் நடந்துகொள்ளப் பார்க்கிறது.

இந்துஸ்தான் யூனிலீவரை நான் பாராட்டுகிறேன். அதற்காகவெல்லாம் அவர்களுடைய பொருள்களை வாங்கமாட்டேன்! அவர்களுடைய பொருள்கள் நன்றாக இருந்தால் மட்டும்தான் வாங்குவேன்!