Thursday, September 28, 2006

நாடு கட்டிய நாயகன்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'நாடு கட்டிய நாயகன்' என்ற புத்தகத்தின் பல பகுதிகள்
ஏற்கெனவே இணையத்தில் வெளியான ஒரு கட்டுரைத் தொடரிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்த விவரம்
தெரிய வந்ததால், இந்தப் புத்தகம் திரும்பப் பெறப்படுகிறது.

இதன் விற்பனையை முடக்கும் விதமாக, கடைகளில் உள்ள பிரதிகள் யாவும் திரும்பப் பெறப்படுகின்றன.

Monday, September 25, 2006

அப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்பவை

இன்று 'தி ஹிந்து'வில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் ஒரு நேர்காணல் வந்துள்ளது. அதில் ஒரு கேள்வி/பதிலை மட்டும் இங்கே தமிழாக்கியுள்ளேன்.

ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதி பவனுக்கிடையேயான நெடும்பயணத்தில் நெஞ்சில் நிற்கும் தருணங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

நான்கைச் சொல்லலாம். (ஆனால் ஐந்தை பதிலாகச் சொல்கிறார். - பத்ரி) 1980-ல் என்னுடைய குழு செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை - SLV-III - விண்ணில் செலுத்தியது மகிழ்ச்சியான தருணம். அந்தத் திட்டத்தின் தலைவனாக இருந்ததால் எனக்காகவும் என் குழுவுக்காகவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 1989-ல் அக்னி ஏவுகணை 2,000 கிமீ தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் நிலையை அடைந்தபோது மேலும் மகிழ்ச்சியடைந்தேன். மே 11, 1998 அன்று பொக்ரானில், 52 டிகிரி செண்டிகிரேட் தகிக்கும் சூரியனுக்குக்கீழ் நாங்கள் பல அறிவியலறிஞர்கள் நின்றுகொண்டிருந்தோம். அன்றுதான் இந்தியா அணு ஆயுத பலம் பெற்ற நாடானது. அன்று எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. 'இந்தியா 2020 தொலைநோக்குப் பார்வை' என்ற அறிக்கையைத் தயாரித்து, தொழில்நுட்ப அனுமாணிப்புக் குழுக்கூட்டத்தில் பிரதமரிடம் கொடுத்தபோது இன்னமும் அதிகமான மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேலாக, 1990-ல் ஹைதராபாத், நிஜாம் மருத்துவக் கல்வியகத்தின் எலும்பு மருத்துவர் B.N.பிரசாத், போலியோவினால் பாதிகப்பட்ட சிறுவர்கள் அணிந்துகொள்ளும் காலிப்பர்கள் 3 கிலோ எடையுடன் இருப்பதால், நடக்கச் சிரமமாக உள்ளதாகச் சொன்னார். நானும் எனது குழுவும் அடுத்த 10 நாள்கள் தொடர்ந்து வேலை செய்து வெறும் 300 கிராம் எடையுள்ள காலிப்பர்களைத் தயாரித்தோம். அந்த காலிப்பர்களை அணிந்த சிறுவர்கள் ஓடத் தொடங்கினர். அதுவரை தன் மகனைச் சுமந்து பள்ளிக்குச் சென்றுவந்த தாய் ஒருவர், யார் உதவியும் இன்றித் தன் மகன் ஓடுவது கண்டு கண்களில் நீர்சொரிய நின்றிருந்ததைப் பார்த்தேன். அந்தத் தாயின் கண்ணீர் எனக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுத்தது.

மற்றபடி, ராஷ்டிரபதி பவன் என்னைப் பொருத்தமட்டில் மக்களின் வீடு.

Sunday, September 24, 2006

போலியோ, உத்தர பிரதேசம்

சென்ற வாரம் காணாமல் போன செய்திகளில் இது ஒன்று. பங்களாதேசத்தைப் பற்றிய சில செய்திகளைத் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது.

உலக சுகாதார நிறுவனம் (WHO), சென்ற வாரம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில், முக்கியமாக உத்தர பிரதேச மாநிலத்தில், போலியோ தாக்குதல் அதிகமாகியுள்ளது என்றும், பங்களாதேசம் போன்ற போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா போலியோவை ஏற்றுமதி செய்யும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சென்ற ஆண்டு 66 போலியோ தாக்குதல்; இந்த ஆண்டோ 290 குழந்தைகள் போலியோ வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதில் 70% மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்கிறது புள்ளிவிவரம்.

ஏன் வெறும் 290-க்கு நாம் பயப்பட வேண்டும், இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது சின்ன தொகைதானே என்று சொல்லலாம். ஆனால் போலியோ நோய் ஒரு காலத்தில் உலகின் பல பகுதிகளையும் பீடித்தது. போலியோ என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றிக்கொள்ளும் தொற்றுநோய். மனிதக் கழிவிலிருந்து பரவும் நோய். பொதுவாக 3-5 வயதுக் குழந்தைகளை பாதிக்கும் நோய். என் பெரியம்மாவுக்கு (அம்மாவின் அக்கா) இந்த நோய் உள்ளது (இப்பொழுது அவருக்கு வயது 60க்கும் மேல்). போலியோ வைரஸ் நரம்பு மண்டலத்தை பாதித்து கை கால்கள் சூம்பிப்போய் குறைவளர்ச்சி அடைந்துவிடும்.

போலியோ வைரஸில் மூன்றுவகை உண்டு. அதில் ஒருவகை (Type 1) படுவேகமாக தொற்றக்கூடியது. இந்த வகை வைரஸ்தான் உத்தர பிரதேசத்தில் கண்டறியப்பட்ட 290 பேர்களுக்கும் உள்ளது என்று சொல்கிறார்கள்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உத்தர பிரதேசத்தில் ஒழிக்கப்படவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வந்து பரவி ஒரு தலைமுறை குழந்தைகளையே கை-கால் முடங்கியவர்களாக ஆக்கிவிடும்.

இதேபோல போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள அண்டை நாடுகளையும் இந்திய போலியோ அழிக்கக்கூடும்.

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் போலியோ வேக்சினேஷன் - சொட்டுமருந்து தினம் - வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். நான் என் பெண்ணுக்கு ஐந்து வயது ஆகும்வரை வருடாவருடம் சென்று சொட்டுமருந்து கொடுத்து வந்துள்ளேன். தமிழக அரசின் பணிகளிலேயே எந்தப் பிரச்னையும் இல்லாது மிக அருமையாக நடைபெறும் திட்டம் இது ஒன்றுதான். எந்தப் பாகுபாடும் இல்லாது குழந்தைகள் உள்ளே வருவதும், சொட்டுமருந்து கொடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சாக்லேட் கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுவதும் மட்டுமின்றி, மறுநாள் காலை தமிழகம் முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரம் உடனடியாகக் கொடுக்கப்பட்டுவிடும். ஒருவாரம் முன்னதாகவே தெருவுக்குத் தெரு ஆட்டோவில் பாட்டு போட்டபடி விளம்பரம். வீடு வந்து கதவைத் தட்டி, சின்னக் குழந்தைகள் உள்ளனரா என்று கேட்டு ஒரு பதிவேட்டில் பதிந்துகொண்டு, சொட்டுமருந்து போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வீட்டுக்கே வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போகிறார்கள்!

இப்படி ஏன் செய்யப்படுகிறது? இந்த நோயின் தீவிரம் கருதியும், இதை முற்றிலுமாக ஒழிக்காவிட்டால் ஒரு நாட்டின் மக்களுக்கு என்னவிதமான கஷ்டங்கள் வந்துசேரும் என்று உணர்ந்து எப்பொழுதும் ஒழுங்காகக் செயல்படாத மாநில அரசுகளும் மத்திய அரசுமே ஒழுங்காக வேலைசெய்கின்றன. உத்தர பிரதேசம் தவிர்த்து.

WHO அறிக்கையை அடுத்து அன்புமணி ராமதாஸ் 2007-க்குள் போலியோவை இந்தியாவிலிருந்து ஒழித்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். இதில் மத்திய அரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது. காசு கொடுக்கலாம். ஆனால் வேலையைச் செய்வது மாநில அரசின் ஊழியர்கள். ஆனால் உத்தர பிரதேச சுகாதார அமைச்சரோ கவலையே படாமல் இருக்கிறார்.
“It is a very serious issue and a necessary cause for panic,” says Ramadoss.

While Ramadoss has pressed the panic button at the Central level, UP health minister Ahmed Hasan doesn’t think there’s much to worry about.

“This is an entirely unnecessary panic. We have the support of people in UP and we have done this (polio eradication) before too,” says Hasan.
மற்றொரு பிரச்னையும் உள்ளதாகத் தெரிகிறது. Peninsula Online, Qatar-ல் வந்த ராய்ட்டர்ஸ் செய்தியின்படி
Another hurdle facing officials in the state of 170 million people, with a large Muslim minority, are rumours that polio drops are part of a Western ploy to make Muslim children sterile.
இந்த நோய் தாக்கியுள்ள குழந்தைகளில் 70% முஸ்லிம்கள் என்று பார்த்தால் இந்த வதந்திக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரலாம். அன்புமணி சொட்டுமருந்துக்கு பதில் ஊசி வழியாகத் தரும் போலியோ தடுப்பு மருந்தை உத்தர பிரதேசத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகச் சொல்கிறார்.

எதற்கெடுத்தாலும் ஃபாத்வா கொடுக்கும் முஸ்லிம் அறிஞர்கள் சிலர் இந்த விஷயத்தில் ஒரு ஃபாத்வா கொடுத்தால் நாட்டுக்கு நல்லதாக இருக்கும்: "போலியோ சொட்டுமருந்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏதும் வந்துவிடாது!"

போலியோ சொட்டுமருந்து பற்றிய என் முந்தைய பதிவு, 5 ஜனவரி 2004

Saturday, September 23, 2006

கேரளா நீதிமன்றம் கோலா தடையை நீக்கியது

கேரள அரசு CSE அறிக்கைக்குப் பின்னர் கோக கோலா, பெப்சி ஆகியவை மீது விதித்திருந்த தடை செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

1. உணவுப்பொருள்களைத் தடை செய்யும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
2. மஹாராஷ்டிர மாநில சட்டத்தின்படி அவசரகால நிலை காரணமாக உணவுப்பொருள்கள் விநியோகத்தை சில ஊர்களில் தடை செய்யலாம்; ஆனால் அதுபோன்ற சட்டங்கள் இல்லாததால் கேரளத்தில் இந்தத் தடை செல்லுபடியாகாது. மேலும் பொதுமக்களுக்கு பெருத்த ஆபத்து ஏதும் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
3. CSE ஓர் அரசு சாரா நிறுவனம். அதன் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. CSE பரிசோதனைக்கு எடுத்துக்கொண்ட சாம்பிளில் ஏதேனும் கலப்படங்கள் செய்யப்பட்டிருக்கலாம். எனவே CSE-யின் அறிக்கையை ஏற்றுக்கொண்டாலும் அதன் சாம்பிள் சரியானதுதான் என்று சொல்வதற்கில்லை.

மொத்தத்தில் இது இப்படித்தான் ஆகும் என்று எனக்கு அப்பொழுதே தெரிந்துவிட்டது. கேரள அரசு மூளையைச் சரியாக உபயோகிக்கவில்லை. எனது முந்தைய பதிவொன்றில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்:
கேரளா அரசின் தடை நிச்சயமாக நீதிமன்றங்களுக்குச் செல்லும். கேரளா சரியான முகாந்திரம் இல்லாமல் மாநிலம் முழுதும் தடை செய்துள்ளது என்று தோன்றுகிறது. தடை செய்ய விரும்பியிருந்தால் தானே சில பாட்டில்களைப் பறிமுதல் செய்து அரசு சோதனைக்கூடங்களில் பரிசோதனை செய்து அந்தத் தகவலின்பேரில் தடை செய்திருக்கலாம். மேலும் அத்துடன் நச்சுப் பொருளை உணவு என்று சொல்லி விற்றதாக பெப்சி, கோக் இருவர்மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் வாயிலாக வழக்கு தொடுத்திருக்கலாம்.

இப்பொழுது அவசரப்பட்டதனால் நீதிமன்றங்களில் தேவையின்றி காலம் கழிக்க நேரிடும்.
இத்துடன் இந்த விஷயம் பிசுபிசுத்துப் போய்விடும். சிலர் நீதிமன்றங்களால்தான் பிரச்னை என்று சொல்வர். ஆனால் நீதிமன்றங்கள் தம் வேலையை ஒழுங்காகத்தான் செய்கின்றன. அரசுகள்தாம் சரியான சாட்சியங்களைத் தயார் செய்துகொண்டு, நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். யோசித்து, ஓட்டைகள் இல்லாதவாறு சட்டங்களையும் அரசாணைகளையும் இயற்றவேண்டும்.

Friday, September 22, 2006

தொழில்முனைவர் நவநீத கிருஷ்ணன்

கடந்த ஞாயிறு (17 செப்டம்பர்), ஈரோட்டில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றிருந்தேன். அதில் ஒன்று மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்பாடு செய்திருந்த கூட்டம் - 'தொழில் முனைவோர் பயிலரங்கம்'. மாணிக்கம்பாளையம் என்ற ஈரோட்டை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, கரூர், திருப்பூர் நகரங்களில் பெரும் பலசரக்கு கடைகள், உணவகங்களை நடத்தும் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.



நவநீத கிருஷ்ணன் மிகவும் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர். நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர். அவரது இளமைப்பருவத்திலேயே அவருடைய தந்தையார் இறந்துபோய்விட்டார். நவநீத கிருஷ்ணன் அதிகம் படிக்கவில்லை. 6 அல்லது 7ம் வகுப்பு வரை படித்திருக்கலாம். எங்காவது சென்று ஏதாவது செய்து பிழைத்துக்கொள் என்று அவரது தாயார் சொல்லிவிட்டார். "என் தாயார் எனக்கு பஸ்/ரயில் கட்டணம் கையில் கொடுத்தாரா என்று கூட நினைவில்லை. ஆனால் ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். வேலையில் சேர்ந்து முதலாளிக்கு விசுவாசமாக, நம்பிக்கையாக நடந்துகொள் என்று சொல்லி அனுப்பினார்" என்கிறார் நவநீத கிருஷ்ணன்.

சென்னைக்கு எப்படியோ வந்துசேர்ந்த நவநீத கிருஷ்ணன் 1970களில் ஒரு காப்பித்தூள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 500க்க்கு விற்பனை நடக்கும் மிகச்சிறிய கடை. நவநீத கிருஷ்ணன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த முதலாளி அவரையே கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார்.

நவநீத கிருஷ்ணனின் நண்பர் ஈரோட்டில் பலசரக்குக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஒவ்வொரு மாதமும் அவர் சென்னைக்கு வந்து நண்பனைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னையில் தன் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு ஈரோட்டுக்குத் திரும்புவார். இவர்கள் இருவரும் பேசும்போது தமிழகத்தின் பல நகரங்களிலும் மாபெரும் பல்பொருள் அங்காடிகளைத் தொடங்குவதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்களாம். இருவருக்கும் கையில் காசில்லாவிட்டாலும் நெஞ்சில் தைரியமும் தகிக்கும் ஆசையும் சாதிக்கும் கனவும் இருந்தன.

1989-ல் இரண்டு நண்பர்களும் ஈரோட்டில் சொந்தமாக ஒரு கடையைத் தொடங்க முடிவு செய்தனர். கடை தரையளவுக்குச் சற்று கீழாக இருந்தது. அங்கெல்லாம் யாரும் வரமாட்டார்கள் என்று பலரும் பேசினர். அட்வான்ஸ் தரக்கூட இருவரிடமும் காசில்லை. ஒருவழியாக இடத்துக்குச் சொந்தக்காரரிடம் பேசி கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைத் தருவதென்று ஒப்புக்கொண்டனர்.

அங்கு ஆரம்பித்த கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈரோட்டில் மூன்று இடங்கள், கோவையில் இரண்டு இடங்கள், பொள்ளாச்சியில், கரூரில், திருப்பூரில் என்று வளர்ந்துகொண்டே போகிறது. குறைந்தது 15,000 சதுர அடி. கரூரில் 50,000 சதுர அடி. சமீபத்தில் திருப்பூரில் திறந்துள்ள கடை 1,50,000 சதுர அடிக்கு மேல்!

கடந்த 17-18 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி முழுவதும் கடின உழைப்பால். தன்னிடம் வேலை செய்பவர்களை மதித்து, திறமைக்கு முன்னிலை கொடுப்பதால். சிறு கடையாக இருக்கும்போதே வளர்ச்சியை முன்வைத்து மேனேஜர், சூப்பர்வைசர் என்றெல்லாம் ஊழியர்களை வரிசைப்படுத்த ஆரம்பிக்க, பலரும் கேலி செய்தார்களாம். ஆனால் நாளடைவில் இதுபோன்ற முறைப்படுத்தல் மூலமாக பெரிதாக வளரும்போது நிர்வாகத்தைத் திறம்படச் செய்யமுடிந்தது.

நவநீத கிருஷ்ணன் தனக்கு தொழிலில் ஏதாவது புரியவில்லையென்றால் அதை உடனடியாகப் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தயங்குவதில்லை என்கிறார். அவரது பல்பொருள் அங்காடிகளில் உணவகம் உண்டு. ஆனால் இதை நிர்வகிப்பதில் சில பிரச்னைகள் இருந்ததாம். உடனே தயங்காமல் சென்னை வந்து சரவணபவர் அண்ணாச்சி ராஜகோபாலைச் சந்தித்து உதவி கேட்டுள்ளார். அப்பொழுது நவநீத கிருஷ்ணனுக்கு ராஜகோபாலைத் தெரியாது (இருவரும் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்!). ராஜகோபால், கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஊழியர்கள் பத்து பேரை தன்னுடைய சரவணபவன் கிளைகளில் எடுத்துக்கொண்டு ஆறு மாதங்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்து திருப்பி அனுப்பினாராம். அந்த அனுபவத்தை வைத்து நவநீத கிருஷ்ணன் தன்னுடைய நிறுவனத்தில் உள்ள பிரச்னைகளைப் போக்கியதாகச் சொன்னார்.

அதேபோல ஈரோட்டில் முன்னணித் தொழில்முனைவோர்களாக இருக்கும் SKM மயிலானந்தன், சக்தி மசாலா துரைசாமி ஆகியோருடன் அவ்வப்போது தொடர்ந்து பேசி தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்.

கரோட்பதி கிளப் (கோடீசுவரர்கள் சங்கம்) என்ற அமைப்பைத் தான் ஏற்படுத்தியுள்ளதாகவும், திறமையும் ஆர்வமும் இருந்தால் அவர்களுக்கு தானே தேவையான பயிற்சிகள் கொடுத்து அவர்களைக் கோடீசுவரர்கள் ஆக்குவதே தன்னுடைய நோக்கம் என்கிறார் நவநீத கிருஷ்ணன். சிலரை அவ்வாறு செய்துள்ளதாகவும் சொல்கிறார்.

கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் தங்களுக்கும் அதுபோன்ற பயிற்சி கொடுப்பாரா என்றதற்கு தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் ஒருவரிடம் நிஜமாகவே முன்னேறுவதற்கான முனைப்பு உள்ளதா என்பதை பரீட்சித்துப் பார்த்து, பிறகே ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.

கூட்டத்தினர் நிறையக் கேள்விகளைக் கேட்டனர். அதற்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்தார் நவநீத கிருஷ்ணன். மிகுந்த வேலைப்பளுவுக்கு இடையேயும் ஒரு ஞாயிறு காலையை முழுவதுமாகப் பிறருக்காகச் செலவழித்தார் அவர்.

கூட்டத்தில் முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவை ஸ்டாலின் குணசேகரனும் நானும் பேசியிருந்தோம்.

ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 2

கடந்த திங்களன்று 'ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம்' நிகழ்வின் தொடக்கமாக ஜெ.ராம்கி எழுதிய மு.க புத்தகம் பற்றி மாலன் பேசியிருந்தார்.



அந்த நிகழ்வின்போது ஒலிப்பதிவு செய்த துண்டுகள் இங்கே:

1. புத்தகம் பற்றி மாலன் (MP3 கோப்பு, 14.3 MB)

2. ராம்கி, பத்ரி, பிறர், கேள்வி பதில்கள் (MP3 கோப்பு, 12.8 MB)

இந்த நிகழ்வில் இரண்டாவதாக, நாளை, 23 செப்டம்பர், சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, மைலாப்பூர் வித்லோகா புத்தகக்கடையில் வீயெஸ்வி எழுதிய எம்.எஸ் - வாழ்வே சங்கீதம் என்னும் புத்தகத்தைப் பற்றி கிரேஸி மோகன் பேச உள்ளார். வீயெஸ்வி ஆனந்த விகடன் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். கர்நாடக சங்கீத விமரிசனங்கள் எழுதுபவர்.

அனைவரும் வருக.

அப்புசாமி தாத்தாவோடு ஒரு மாலை

அப்புசாமி தாத்தாவின் முதல் புத்தகம் (கிழக்கு வழியாக) - அப்புசாமியும் 1001 இரவுகளும் வெளியானதை ஒட்டி எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனுக்கு ஒரு திடுக்கிடும் அதிர்ச்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தோம். இந்தப் புத்தகம் அச்சானது அவருக்குத் தெரியாது.

ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை அவர் 'அக்கறை' என்னும் நிகழ்வை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் gatecrash செய்தோம். புத்தக வரவைத் தெரிவிக்க ஒரு கேக் செய்திருந்தோம். அதில் அப்புசாமி, சீதாப்பாட்டி இருவரும் ஒருவரோடு ஒருவர் குத்துச்சண்டை போடுவது போன்ற படத்தை வரையச் செய்திருந்தோம். (படம் சுமார்தான்!)



உள்ளே நுழைந்து புத்தகம், கேக், ஒரு 'பட்டயம்' போன்றவற்றைப் பார்த்ததும் ஜ.ரா.சுவுக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி.



புத்தகத்துடன் நான், ஜ.ரா.சுந்தரேசன், ராணிமைந்தன்.



பட்டயத்திலிருந்து:

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து சூர்யா ஜோதிகா காலம் வரை மனித ஜென்மங்கள் கல்யாணம் செய்துகொண்டு - குழந்தைதானே பெற்றுக் கொள்கின்றன?

மாறுதலுக்கு நம் பாக்கியம் ராமசாமி மட்டும், தாத்தா - பாட்டி பெற்றுக்கொண்டவர்!

இவர் பெற்றெடுத்த ரெண்டு கிழத்துக்கும் விஷமம் ஜாஸ்தி! அதனால்தானோ என்னவோ, தொல்லை தாங்கமுடியாமல் அந்த ஜோடியைத் தமிழ்நாட்டுக்கே தாரை வார்த்துவிட்டார்.

'அப்புசாமி-சீதாவை அறியாத மூடனா நீ?' என்று கே.பி.எஸ் குரலில் பாடவே செய்யலாம். அந்தளவுக்கு அமெரிக்காவிலிருந்து அமிஞ்சிக்கரை வரை அடாவடி செய்துவிட்டு, இப்போது கிழக்கு பதிப்பகத்துக்கு வந்திருக்கிறார்கள்.

இன்னும் நூறு வருஷங்களுக்குப் பிறகும்கூட அப்புசாமி-சீதாப்பாட்டி தமிழ் நாட்டை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார்கள். இப்படி ஒரு வெடிச் சிரிப்பைத் தந்துவிட்டு, ஒண்ணுமே தெரியாமல் நமுட்டுச் சிரிப்பு சிந்தும் 'காமெடி கிங்' ஜ.ராசுவுக்கு அல்வா தரக்கூடாது என்பதால்தான் கேக் கொடுக்கிறோம்!

அக்கறையுடன் எங்கள் அடாவடியைச் சகித்துக் கொண்ட அக்கறைக்கு நன்றி!

முந்தைய பதிவு: அப்புசாமி, சீதாப்பாட்டி

Monday, September 18, 2006

ஃபிராங்க்ஃபர்ட், லண்டன், பாரிஸ்

அடுத்த மாதம் ஃபிராங்க்ஃபர்ட்டில் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சிக்காக ஜெர்மனி வரும் நானும் என் சக ஊழியர்களும் அப்படியே லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களுக்கும் வருகிறோம். கீழ்க்கண்ட நகரங்களில், கீழ்க்கண்ட தினங்களில் இருக்கிறேன்.

ஃபிராங்க்ஃபர்ட்: அக்டோபர் 3-9 (New Horizon Media Pvt. Ltd., Stall No. 97, India Pavilion)
லண்டன்: அக்டோபர் 10-12
பாரிஸ்: அக்டோபர் 13-15

தமிழ்ப்புத்தக விற்பனையாளர்களைச் சந்திக்க விரும்புகிறேன். என்னைச் சந்திக்க விரும்புவோர் bseshadri at gmail dot com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நன்றி.

Friday, September 15, 2006

Quillpad

கில்லி -> சாம்பார் மஃபியா -> மூலம் கண்டுபிடித்த தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் எந்தவித plugin-உம் இல்லாமல் எழுத உதவிசெய்யும் சாதனம் Quillpad [தமிழ் | ஹிந்தி | தெலுங்கு | மலையாளம் | கன்னடம்].

IE 6.0ல் மட்டும்தான் வேலை செய்யும் என்று பயமுறுத்துகிறார்கள். நம்பாதீர்கள். ஃபயர்ஃபாக்ஸில் நன்றாகவே வேலை செய்கிறது.

Phonetic keyboard முறையில் இயங்குகிறது.

Thursday, September 14, 2006

மதுரை மோஹன் போஜனாலய்

மதுரை. புத்தகக் கண்காட்சி. அதெல்லாம் பிற்பாடு.

முதலில் அவசியம் பேசவேண்டியது தன்னப்ப முதலி தெருவில் உள்ள மோஹன் போஜனாலய் எனப்படும் ராஜஸ்தானி உணவகம்.

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் சிறப்பான உணவு என்றால் அது மோஹன் போஜனாலய் வழங்கும் ராஜஸ்தானி உணவுதான் என்று தோன்றியது.

ஆடம்பரமில்லாத உணவகம். முதல் மாடியில் உள்ளது. தனியான அலங்காரங்கள் ஏதும் இல்லாத சாதாரண வீடு. சுவற்றில் ஒரு கிருஷ்ணர் படம் மாட்டியுள்ளது. கறவை மாடு. அதன் அருகில் பால் குடிக்க வரும் கன்றுக்குட்டியைத் தள்ளிவிட்டு குழந்தை கிருஷ்ணன் மாட்டின் மடியில் வாய் வைத்து பால் உறிஞ்சுகிறான். தாய் யசோதா கைவிரலை ஆட்டி, கண்களை உருட்டி கிருஷ்ணனை மிரட்டுகிறாள். மாடு, முழங்காலிட்டிருக்கும் கிருஷ்ணனின் பின்னம்பக்கத்தை வாஞ்சையுடன் தன் நாக்கால் நக்கிக்கொண்டிருக்கிறது.

உணவகத்தை நடத்துவோரின் சின்னக்குழந்தைகள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டும் அழுதுகொண்டும் சிரித்து விளையாடிக்கொண்டும் இருப்பது என்னவோ வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் உணர்ச்சியைத் தருகிறது.

நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார் ஒரு பணியாளர். தமிழர்தான். சமையல் செய்வோரும் சொந்தக்காரர்களும்தான் ராஜஸ்தானியர்கள் போல.

தண்ணீரை தம்ளர்களில் ஊற்றியவாறு ஆர்டரைப் பெற்றுக்கொள்கிறார் அவர். Unlimited தாலி. தட்டுக்கு ரூ. 40. வேண்டிய அளவு கோதுமை சுக்கா ரொட்டிகள். நான்கைந்து பதார்த்தங்கள் தொட்டுக்கொள்ள. ஊறுகாய்கள், வெங்காயத் தயிர்ப்பச்சடி. ஊறவைத்த பச்சை மிளகாய். குறையக் குறைய தட்டை நிரப்புகிறார்கள். ரொட்டிகள் வந்தவண்ணம் உள்ளன. வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும் கேட்காது மேலும் இரண்டு ரொட்டிகளை நம் தட்டில் வைக்கிறார்கள்.

ஆம்ரஸ் எனப்படும் மாம்பழ பானம் (கெட்டியானது), தித்திக்கும் ரஸமலாய் (இவை உணவோடு சேர்த்து அல்ல. தனியாகக் கட்டணம் உண்டு). வேண்டிய அளவு சாதம், ரசம், மோர்/தயிர் ஆகியனவும் உண்டு.

அடுத்த நாள், ஞாயிறு, இரவு சீக்கிரம் ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்ததால் இப்படி ஆடம்பரமாக, விலாவாரியாக உட்கார்ந்து சாப்பிட முடியாது என்று தோன்றியது. ஆனாலும் விட மனமில்லாமல் மோஹன் போஜனாலய் சென்று விஷயத்தைச் சொன்னோம். நேரம் இல்லை, சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கவேண்டும் என்றோம். கை கழுவி வருவதற்குள் தட்டில் சுடச்சுட நான்கு ரொட்டிகள், அனைத்து பக்க பதார்த்தங்களுடனும் தயாராக இருந்தது. விலை ரூ. 12 மட்டுமே!

வயிற்றுக்கு சிறிதளவும் பிரச்னை தராத, அற்புதமான உணவு.

கட்டாயம் போகவேண்டிய இடம்!

Wednesday, September 13, 2006

ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 1

வரும் வாரம் தொடங்கி அடுத்த பல வாரங்களில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களை, வாரம் ஒன்றாக - informal-ஆக - வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். புத்தகம் பற்றி ஒருவர் பேசுவார். எழுத்தாளரும் உடன் இருப்பார். வாசகர்கள் புத்தகத்தைப் பற்றியும் அது சார்ந்த களம் பற்றியும் உரையாடலாம்.

முதல் நிகழ்வு திங்கள், 18 செப்டம்பர் 2006 அன்று, மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. ராம்கி எழுதிய மு.க எனும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைப் பற்றி மாலன் பேசுவார்.

இடம்: சென்னை வித்லோகா புத்தகக் கடை (முகவரி இந்தச் சுட்டியைப் பின்தொடர்ந்தால் கிடைக்கும்)

வருக.

Tuesday, September 12, 2006

பிற்படுத்தப்பட்டோரில் 'மேல்தட்டு'

தி ஹிந்து செய்தி

மண்டல் கமிஷன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் - மேல்தட்டு - என்று பொருளியல் அடிப்படையிலும் படிப்பு/வேலை ஆகியவற்றின் அடிப்படையிலும் முன்னேறிய சிலரை விலக்கிவிட்டு பிறருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. இதை பின்வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்தது. National Commission for Backward Classes, தனது இணையத்தளத்தில் இந்த மேல்தட்டை வரையறுத்துள்ளார்கள். இது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்குப் பொருந்தும்.

மாநில அரசுகள் அனைத்தும் - தமிழகம் தவிர்த்து - தமக்கே உரிய வரையறையைக் கொண்டுவந்துள்ளன.

இதுவரையில் தமிழக அரசு மட்டும்தான் அதனைச் செய்யவில்லை என்றும் இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்றும் Voice (Consumer Care) Council என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. வாய்ஸ் அமைப்புக்காக வழக்கறிஞர் கே.எம்.விஜயன் வாதாடுகிறார்.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொறியியல் கல்லூரி காலி இடங்கள்

(சுயநிதி) பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 16,800 இடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசின் தொழில்கல்வி நுழைவுத்தேர்வு, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நடத்திய நுழைவுத்தேர்வு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் யாருமே இந்த இடங்களை எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே இந்த இடங்களை 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற எவரை வேண்டுமானாலும் வைத்து நிரப்பிக்கொள்ள அனுமதி கோரி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. நிகழும் கல்வியாண்டுக்கு (2006-07) மட்டும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதைப்பற்றிய தி ஹிந்து செய்தி.

ஆனால் மாநில அரசு பொறியியல் படிப்புக்கு "அதிகமான தகுதி"யை நிர்ணயித்திருந்தால் அந்தத் தகுதியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இயல்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் 60%-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். அதுதான் இப்பொழுதைய நடைமுறை. இந்தத் தகுதியை மாற்ற (குறைக்க) வேண்டுமானால் அரசு அதற்கென ஓர் அரசாணையைப் பிறப்பிக்கவேண்டும்.

கர்நாடகம் போன்ற மாநிலங்களில் 50% இருந்தால் போதுமானது. தமிழகத்திலும் இதனைச் செய்யலாம்.

ஆனால் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கேட்பதைப் போல 35% இருந்தாலே போதும் என்று சொல்வது சரியல்ல. சுயநிதிக் கல்லூரிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நடைபெறுகின்றன. அவர்களுக்கு தரத்தைப் பற்றிய எந்த குறிக்கோள்களும் கிடையாது. ஒரு படிப்புக்குத் தேவையான குறைந்தபட்ச விதிமுறைகள், தகுதிகளை மாநில அரசின் கல்வித்துறை வைத்திருக்கவேண்டும்.

ஏற்கெனவே தமிழகம் போன்ற மாநிலங்களில் புற்றீசல்கள் போல பொறியியல் கல்லூரிகள் கிளம்பியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை குறைந்தபட்ச கட்டுமானங்கள்கூட இல்லாதவை. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி கேவலமானது. இப்பொழுது பொறியியல் கற்று பட்டம் பெறும் மாணவர்களுள் 30% பேர் எந்த வேலையும் செய்ய லாயக்கற்றவர்கள் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் சில மாதங்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்.
About 30 per cent of engineering graduates were unemployable, as they lacked communication skills, Anna University Vice-Chancellor D. Viswanathan said. To mitigate this, the university had made communication and soft skills a mandatory subject for all courses.
மாணவர்களுக்கு சரியாகப் பேசத்தெரியவில்லை, எழுதத் தெரியவில்லை என்பதை மட்டுமே காட்டியிருந்தார் காரணமாக. ஆனால் பெரும்பான்மை மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவும் கிடையாது.

மதிப்பெண்கள் மட்டும் ஒரு மாணவனின் தகுதியை, திறமையை எடைபோடுவதில்லை. ஆனால் வெறும் 35% மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற மாணவன் பொறியியல் படிப்பை சரியாகப் படிக்க முடியாமல் திணறுவான் என்பது நிச்சயம்.

சுயநிதிக் கல்லூரிகளும் தமிழக அரசும் ஏதோ (வாய்மொழி) ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது போல தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Counsel V.G. Pragasam appearing for Tamil Nadu submitted that the State entered into an agreement with the colleges for admission in the ratio of 65:35 and permission for admission on the basis of higher secondary marks could be granted if the colleges adhered to the agreement.
இதுபோன்ற நிலையிலும்கூட மாநில அரசு 60% என்ற நிலையை சற்றே தளர்த்தி 50% என்றாக்கலாமே தவிர அதற்கும்கீழே குறைக்கக்கூடாது.

Monday, September 11, 2006

கொழும்பு புத்தகக் கண்காட்சி 2006

இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது இலங்கையில் கொழும்பு நகரில் செப்டம்பர் 16-24 தேதிகளில் புத்தகக் கண்காட்சி ஒன்று நடக்க உள்ளது என்றார்.

வெறும் தகவலுக்காக மட்டும்.

வித்லோகா புத்தகக் கடை

இது ஒரு விளம்பரம்.

சென்னை, மைலாப்பூரில் வித்லோகா என்னும் எங்களது புத்தகக் கடை ஒன்று உள்ளது.

* பெரும்பாலும் தமிழ்ப் புத்தகங்கள், கொஞ்சம் ஆங்கிலப் புத்தகங்கள்.

* முற்றிலும் குளிரூட்டப்பட்ட கடை.

* உள்ளே உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க, படிக்க நாற்காலிகள்.

* குளிர்ந்த குடிநீர்.

* உள்ளேயே கழிப்பறை வசதி!

* wi-fi இணைய வசதி. உங்கள் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வந்தால் சுகமாக உட்கார்ந்து இணையத்தில் உலாவலாம். இலவசமாக.

* மடிக்கணினி இல்லாதவர்கள், கடையில் இருக்கும் ஒரு கணினியில் வேண்டுமென்றால் உலாவலாம். இலவசமாக.

* வாரத்தில் ஏழு நாள்களும் திறந்து இருக்கும். காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை.

இனிமையாகப் பொழுதைப் போக்க விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் வித்லோகா வரலாம். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!

முகவரி :
வித்லோகா
புது எண். 238, பழைய எண். 187, ராபியா கட்டடம்
பீமசேனா கார்டன் தெரு
ராயப்பேட்டா ஹை ரோடை ஒட்டி, நோக்கியா ஷோரூம் அருகில்
மைலாப்பூர்
சென்னை 600 004

தொ.பே: 4231-2803/05

பி.கு: தமிழ் வலைப்பதிவுலகை சமீப காலமாகக் கலக்கிக் கொண்டிருக்கும் பாலபாரதி இங்குதான் இருக்கிறார்.

Thursday, September 07, 2006

மதுரை புத்தகக் கண்காட்சி

செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுரையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தேன்.

வரும் சனி, ஞாயிறுடன் கண்காட்சி முடிவடைகிறது. அந்த இரண்டு நாள்களிலும் நான் மதுரையில் 'கிழக்கு பதிப்பகம்' ஸ்டாலில் (எண் 52, 53) இருப்பேன். சென்றுவந்ததும் மதுரை கண்காட்சியைப் பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட் தருகிறேன்.

தென் தமிழ்நாட்டில் புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் சில இதழியல் மாணவர்கள் வட தமிழக மாவட்டங்களில் கருத்துக்கணிப்பு நடத்தி சில தகவல்களைச் சேகரித்துள்ளனர் என்று இன்றைய தி ஹிந்து செய்தித்தாளில் வந்துள்ளது. அதன் சாரம்:

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 329 பேர்களிடம் நடத்திய கணிப்பு.

* 50%-த்தினர் ஆங்கிலத்தில் படிக்க விரும்புகிறார்கள்.

* 40%-த்தினர் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்க விரும்புகின்றனர். 40% கடைகளுக்குச் சென்று வாங்குகின்றனர்.

* புத்தகம் வாங்கத் தூண்டுபவை - இதழ்களில் வரும் புத்தக விமரிசனங்கள், பிறரது பரிந்துரைகள், எழுத்தாளரின் புகழ்.

* 20% தன்னம்பிக்கை, ஆளுமை வளர்ச்சி தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிக்கின்றனர். 25% பொழுதுபோக்கு தொடர்பான புத்தகங்களைப் படிக்கின்றனர்.

முழுமையான அறிக்கை கிடைத்தால்தான் இந்தக் கணிப்பு எவ்வளவு உபயோகமானது என்று புரிந்துகொள்ள முடியும்.

Wednesday, September 06, 2006

'கட்டாயத் தமிழ்' சட்டத்துக்கு எதிராக வழக்கு

Tamil Nadu Learning Act, 2006 [PDF File], சில மாதங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டது. இதன்படி இந்தக் கல்வியாண்டு தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக இருக்கும். இதுவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் State Board, Matriculation, Anglo-Indian அல்லது Oriental பாடத்திட்டங்கள்மூலம் கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மத்தியக் கல்வித்திட்டங்களான CBSE, ICSE ஆகியவைகீழ் இயங்கும் பள்ளிகளை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது.

இந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கக்கோரி கன்யாகுமரி மாவட்ட மலையாள சமாஜம் என்னும் அமைப்பு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தி ஹிந்து செய்தியிலிருந்து
According to him [Samajam president K. Chandra Sekhara Pillai], Section 3 (2) of the Act stipulates that Tamil and English must be taught compulsorily while students who do not have either Tamil or English as their mother tongue can study their mother tongue as an optional subject. "Which means that linguistic minorities cannot have their mother tongue as a medium of instruction," he said, and sought to declare the Act as unconstitutional.
இந்த வாதம் அபத்தமாகத் தோன்றுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சுட்டியில் சட்டத்தின் முழு வரைவு உள்ளது. அதிலிலிருந்து Section 3 (2) என்ன என்று பார்த்தால்
For the purpose of sub-section (1), the pattern of education shall be as follows:-

Part-I Tamil (Compulsory)
Part-II English (Compulsory)
Part-III Other subjects (Mathematics, Science, Social Science, etc.)
Part-IV Students who do not have either Tamil or English as their mother tongue can study their mother tongue as an optional subject.
முழுச்சட்டத்திலும் எங்குமே கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் எந்த மொழியில் சொல்லித்தரப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப்படவில்லை. மலையாள சமாஜம் விரும்பினால் மலையாள மொழியிலேயே இந்தப் பாடங்களைக் கற்றுத்தரலாம். மேலும் இந்த மாணவர்களுக்கு மலையாளத்தையும் ஒரு பாடமாகக் கற்றுத்தரலாம். இந்தச் சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையிலேயே மலையாள சமாஜத்துக்குக் குழப்பம் இருந்திருந்தால் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு ஒரு கடிதம் எழுதி பிற பாடங்களை (கணக்கு, அறிவியல்...) மலையாளத்திலோ அல்லது பிற மொழிகளிலோ கற்றுத்தருவதில் ஏதேனும் பிரச்னை உண்டா என்று கேட்டு, பதில் பெற்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதால் மலையாள சமாஜத்தின் அடிப்படை நோக்கம் தமிழ் என்னும் பாடத்தைப் பயிலாமல் இருக்கவேண்டும் என்பதே என்பது வெளிப்படையாகிறது.

விரைவில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

Monday, September 04, 2006

அப்புசாமி, சீதாப்பாட்டி

குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ஜ.ரா.சுந்தரேசன் என்னும் அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் உருவாக்கிய கதாபாத்திரங்கள்தாம் அப்புசாமியும் சீதாப்பாட்டியும்.

குமுதத்தில் தொடராக பல கதைகளை அப்புசாமி, சீதாப்பாட்டி பின்னியிருக்கிறார்கள். இவை புத்தகங்களாகவும் வந்துள்ளன.

சிறுவயதில் இந்தக் கதைகளைப் படித்து எவ்வளவோ முறை சந்தோஷப்பட்டுள்ளேன்.

கிழக்கு பதிப்பகம் அடுத்த வாரம் முதல் வரிசையாக மாதம் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களாக அப்புசாமி சீரிஸைக் கொண்டுவரும்.

முதல் புத்தகம் 'அப்புசாமியும் 1001 இரவுகளும்.'

புத்தகம் முழுக்கப் படங்களுடன், நல்ல தாளில், நல்ல அச்சில், சேமித்து மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்து 'குபீர் குபீர்' என்று சிரிக்கக்கூடிய வகையில் அப்புசாமி புத்தகங்கள் இருக்கும்.

இந்தப் புத்தகங்களை முழுக்க முழுக்கப் படக்கதைகளாகவும் (காமிக்ஸ்) கொண்டுவர விரும்புகிறோம். விரைவில்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள்

வெள்ளி மாலை செங்கை ஆழியானின் புத்தக வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன்.

விழா அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த அனைவரும் வந்திருந்தனர். ஆசிரியர் குணராசாவைத் தவிர. யாழ்ப்பாணத்தில் இப்பொழுது கடும் போர் நடந்துகொண்டிருக்கிறது. தரைவழிப்பாதை மூடப்பட்டுவிட்டது. கப்பல் வழியாக அந்நிய நாட்டவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் பழமலய் இருவரும் புத்தகத்தில் உள்ள கதைகளைப் பற்றியும் ஈழத்தமிழ் சொல்லாடலைப் பற்றியும் மட்டுமே பேசினர். எஸ்.ராமகிருஷ்ணன் ஈழ இலக்கியம் தமிழகத்தில் அதிகம் தெரியப்படாமல் இருப்பதைப் பற்றி வருத்தத்துடன் பேசினார். "ஜன்னலைத் திறந்து வைத்தால் கடல் தெரிகிறது. கடல் வழியாக ஈழத்தில் விளக்கு எரிவது தெரிகிறது. ஆனால் இங்கு மக்கள் மனத்தை மூடிவைத்துள்ளனரே" என்றார். செங்கை ஆழியானுடைய தொகுப்பைப் பொருத்தவரையில் ராமகிருஷ்ணன் கூரிய விமரிசனத்தை முன்வைத்தார். "செ.யோகநாதன், செங்கை ஆழியான் போன்றவர்கள் வாழ்க்கை மீதான அவதானிப்புகளை வைக்கிறார்களே ஒழிய, அதன்மீதான விமரிசனங்களை வைப்பதில்லை. கூர்மையான அவதானிப்புகளை வைப்பதோடு எழுத்தாளனின் பணி முடிந்துபோய்விடுகிறது என்று எண்ணுபவர்கள்" என்றார்.

பத்மாவதி விவேகானந்தன் அகடெமிகலாக எதோ பேசினார். தலித் இலக்கியத்தின் தந்தை டேனியல் என்றும் இலங்கையில் மூன்று பெரும் பிரிவாக - முற்போக்கு, நற்போக்கு, பொழுதுபோக்கு - இலக்கியம் உள்ளது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், முற்போக்கு இலக்கியம் என்றால் அது நற்போக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பினார். (இதற்கு பின்னால் எஸ்.பொ பதில் சொன்னார்.)

காந்தளகம் சச்சிதானந்தன் குணராசாவை நன்கு தெரிந்தவர். அவர் குணராசாவைப் பற்றிப் பேசினார். சிங்கள ஆட்சியாளர்கள்மீது ஈழத்தமிழ் மக்களுக்கு பெருத்த அதிருப்தி இருந்த நேரத்தில் குணராசா போன்றவர்கள் அரசு நிர்வாகச் சேவையில் இருந்தனர் என்றும் அதனால் மிகவும் கவனமாக கம்பியில் நடப்பதைப்போன்ற நிலையில் இருக்கவேண்டியிருந்தது என்றும் சொன்னார். குணராசா நிலவரை (map) நிபுணர் என்றும் இன்றும் இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது குணராசா வரைந்து கொடுத்த நிலவரை படங்களே என்றும் சொன்னார்.

ஒருமுறை கி.வா.ஜகனாதன் ஈழ இலக்கியங்களுக்கு அடிக்குறிப்பு கொடுக்கவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்து அது ஈழ எழுத்தாளர்களை மிகவும் வருத்தமுறச் செய்தது என்றார். ஈழத்தமிழ் என்று தனியான தமிழ் ஒன்றும் இல்லை. ஈழத்தவர் பயன்படுத்தும் அத்தனை சொற்களும் பழந்தமிழ் அகராதிகளில் உள்ள சொற்கள்தான் என்றும் தமிழகத் தமிழர்கள்தாம் அந்தச் சொற்களை மறந்துபோய்விட்டனர் என்றும் சொன்னார். ('நுளம்பி' போன்ற சில சொற்களைப் பற்றிப் பேசும்போது சொன்னது.)

சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள 'ஈழத்து பூதந்தேவனார்' பற்றியும் ஆங்காங்கே சில விவாதங்கள் எழுந்தன.

காலம் அதிகமாகிவிட்டபடியாலே வைகைச்செல்வி, நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் 2 நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

பா.ரவிக்குமார் ஒருவர்தான் அரசியலைப் பற்றிப் பேசினார். செஞ்சோலைத் தாக்குதல், இலங்கை அரசு NGO அமைப்பின் ஊழியர்களை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்துக் கொன்றது, வேலுப்பிள்ளை பிரபாகரன் எவ்வளவு சாமர்த்தியமானவர், பிபிசி ஆனந்தி பிரபாகரனின் பேட்டியின்போது தமிழ்ச்செல்வனின் சாதியைப் பற்றி அடிக்கோடிட்டது, அதற்கு பிரபாகரனின் கோபமான பதில், இப்பொழுது நடக்கும் சண்டை 'இறுதிப் போர்' என்று பலவற்றைப் பற்றிப் பேசினார்.

முடிவில் எஸ்.பொ பேசும்போது "நற்போக்கு இலக்கியம் = முற்போக்கு இலக்கியம் - (கைலாசபதி + சிவத்தம்பி)" என்ற சமன்பாட்டையும் (is equal to, bracket என்று இதே வடிவில் சொன்னார்), டேனியல் தலித் இலக்கியத்தின் தந்தை கிடையாது, அவர் முன்னிறுத்தும் சாதிக்கு எதிராகத்தான் பல போராட்டங்கள் நடந்தன என்றும் சொன்னார். (எனக்கு டேனியல் எழுத்திலும் யாழ்ப்பாண சாதிப் பிரச்னைகளிலும் எந்தப் பரிச்சயமும் இல்லை, அதனால் என்ன சொல்லப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் நான் இல்லை.)

பலருக்கும் நன்றி அறிவித்தலுடன் விழா முடிவுற்றது.

விழா நடக்கும்போதே நான் பெற்ற புத்தகத்திலிருந்து பல கதைகளைப் படித்து முடிந்துவிட்டேன். முடிந்தால் புத்தகம் பற்றிய என் கருத்துகளை வரும் நாள்களில் எழுதுகிறேன்.

Sunday, September 03, 2006

தலித் vs சூத்திரர்கள்

இப்பொழுது மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவர உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 27% கல்வித்துறை இட ஒதுக்கீட்டை 'உயர்சாதியினர்' பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஆச்சரியத்தை வரவழைப்பது சந்திர பன் பிரசாத் என்னும் தலித் அறிஞரின் எதிர்ப்பு. இதைப்பற்றி ஆங்கில வலைப்பதிவுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழில் இவற்றை அறியத்தரும் முயற்சியாக சில சுட்டிகள் மட்டும்.

1. சந்திர பன் பிரசாத்தின் நேர்முகம், அவுட்லுக் பத்திரிகையில் மார்ச் 2001-ல் வந்தது. அதில் பல விஷயங்களைப் பற்றிப் பேசும் பிரசாத், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டால் தலித்களுக்கு நன்மை இல்லாததோடு, தீமையும்கூட என்கிறார்.

2. சந்திர பன் பிரசாத் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் மே 2006-ல் எழுதியது (என்று நினைக்கிறேன்.) இங்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் MBC எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியான இட ஒதுக்கீடு வேண்டும் (இது தமிழகம் போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது) என்கிறார். பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் இடங்களை முன்னேறிய, நில உடைமை சாதிகளே கைப்பற்றும் என்கிறார்.

3. சந்திர பன் பிரசாத் எங்கெல்லாம் தடுமாறுகிறார் என்பதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார் ஷிவம் விஜ், நேபாளத்திலிருந்து வெளியாகும் ஹிமால் பத்திரிகையில் - செப்டம்பர் 2006. [ஷிவம் விஜ்ஜின் வலைப்பதிவு.]

தமிழகத்தைப் பொருத்தவரையில் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி என்னென்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்று எங்காவது வெளியாகியுள்ளதா?

[பி.கு: சந்திர பன் பிரசாத் எழுதிய கட்டுரைகளில் சுட்டிகள், www.ambedkar.org தளத்திலிருந்து]

பாப்பாபட்டி, கீரிப்பட்டி et al.

மதுரை மாவட்டத்தில் இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டாகச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகள் தலித் மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் இங்கு தலித்களால் தலைவர் பதவியை ஏற்க முடிந்ததில்லை. (நாட்டார்மங்கலத்தில் முதல் ஐந்து வருடங்கள் 1996-2001 ஒரு தலித் பஞ்சாயத் தலைவர் இருந்தார். அடுத்த ஐந்து வருடங்கள் இங்கும் மற்ற மூன்று இடங்களைப் போலவே நடந்துள்ளது.)

இந்த நான்கு கிராமங்களிலும் தலித் மக்கள் (முக்கியமாக பள்ளர்கள்?) 10%-க்கும் குறைவானவர்கள். பெரும்பான்மை மக்கள் முக்குலத்தோர் சாதியான கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தலித்கள் அனைவருமே கள்ளர் இனத்தோரின் வயல்களில் வேலை செய்பவர்களாகவும் ஜீவிதத்துக்கு கள்ளர்களை நம்பி இருப்பவர்களாகவும் உள்ளனர்.

1996 முதற்கொண்டு இந்த கிராமங்களில் நடக்கும் தேர்தல், இடைத் தேர்தல்களின்போது

1. போட்டியிட விரும்பும் தலித்கள் மிரட்டப்பட்டுள்ளனர், தடுக்கப்பட்டுள்ளனர்.
2. கள்ளர்களிடம் வேலை செய்யும் தலித்கள் போட்டியில் இறக்கிவிடப்பட்டு ஜெயித்த ஒரு நாளைக்குள்ளாக பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
3. மர்மமான முறையில் போட்டியில் நின்ற ஒரு தலித் இறந்துள்ளார். (நரசிங்கம்)
4. அநியாயத்தை எதிர்க்கக்கூடிய சில தலித் குடும்பங்கள் கிராமத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் தலித்களுக்கு எப்படி பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒதுக்கிவைக்கலாம் என்று இங்குள்ள கள்ளர்கள் கேள்வி எழுப்புகின்றனராம். மேலும் பஞ்சாயத்து தலைவர்தான் ஊர்க்கோயில் அறங்காவலராகவும் இருக்கவேண்டும் என்ற ஓர் ஐதீகம் இருப்பதால் ஒரு தலித் கோயில் அறங்காவலராக இருப்பது 'தெய்வ குற்றம்' ஆகும் என்ற அபத்தமான கருத்தையும் ஊர் மக்கள் வலியுறுத்துகிறார்களாம்.

அரசியல்ரீதியாக இந்த நான்கு கிராமங்களிலும் இட ஒதுக்கீட்டை மாற்ற அரசு முயற்சி செய்யலாம் என்ற தகவல் கிடைத்ததால் பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்குவோம் என்று சொல்ல, இந்த நான்கு கிராமங்களிலும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்று அரசு சென்ற வாரம் அறிவித்தது.

ஆனால் இன்னமும் பல அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பிரச்னையில் எவ்வாறு ஈடுபடுவது என்று புரியவில்லை. இந்த கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மக்கள் கள்ளர்கள் என்பதால் இங்கு ஆதரவு பார்வர்ட் பிளாக், அஇஅதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்குத்தான். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியோருக்கு ஆதரவு மிகக்குறைவு.

பார்வர்ட் பிளாக் தமிழகத்தைப் பொருத்தவரை முக்குலத்தோர் ஜாதிக்கட்சி. எனவே அவர்கள் தலித் ஆதரவு நிலையை எடுக்க மாட்டார்கள். திமுக, அஇஅதிமுக ஆகியவை சென்னையில் ஒருமாதிரியும் மதுரை மாவட்டத்தில் வேறுமாதிரியுமான நிலையைத்தான் எடுக்க முனைவார்கள்.

எனவே சென்ற சில வருடங்களில் நிகழ்ந்த கோமாளிக்கூத்தே வரும் வருடங்களிலும் தொடரும்.

இதனை ஒரேயடியாக மாற்ற முடியாது; இது கள்ளர் சாதியினர் மனம் சம்பந்தப்பட்டது என்றாலும் அரசு சிலவற்றைச் செய்யலாம்.

1. பஞ்சாயத்துக்கு சரியான தேர்தல் நடந்து தலித் ஒருவர் தொடர்ந்து தலைவராக இல்லாவிட்டால் இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும்.

தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

மொத்தத்தில் economic embargo.

இந்தக் கஷ்டங்களிலிருந்து தலித்கள் தப்பிக்க அரசு அவர்களுக்கு மாதாமாதம் வாழ்வுக்குத் தேவையான உதவித்தொகை வழங்கும். அரசு இந்த கிராமங்களில் சிறப்புக் காவல்நிலையங்களை ஏற்படுத்தி, அதற்கு வெளி நகரங்களிலிருந்து காவலர்களை நியமித்து தலித்கள்மீது தாக்குதல் நடைபெறாவண்ணம் காப்பாற்றும்.

2. இந்த நான்கு பஞ்சாயத்துகளில் ஏதாவது ஒன்று தலித் ஒருவரை தலைவராகக் கொண்டு நடக்க ஏற்றுக்கொண்டால், அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகமான அளவு வசதிகள் செய்துதரப்படும். சாதாரணமாக ஒதுக்கப்படும் நிதி அளவு இரட்டிப்பாக்கப்படும். இங்கு வசிக்கும் அனைத்து சாதியினருக்கும் அரசு வேலைகளில் முன்னுரிமை முதற்கொண்டு பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இது வலிந்து செய்யப்படும் social re-engineering. ஆனால் இதைச் செய்யாமல் சென்னையில் கொடிபிடித்துப் போராடினால் யாருக்கும் பயன் கிடையாது. 'ஏதோ, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துவிட்டோம்' என்று கட்சிகள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு விழா எடுக்க மட்டுமே இந்த அடையாளப் போராட்டங்கள் உதவும்.

27 ஆகஸ்ட் 2006: Pappapatti, Keeripatti to stay reserved
29 ஆகஸ்ட் 2006: Parties welcome Government move
2 செப்டம்பர் 2006: தி ஹிந்துவில் ஒரு செய்தி அலசல் வந்திருந்தது. ஆனால் ஆன்லைனில் கண்டுபிடிக்க முடியவில்லை.

Friday, September 01, 2006

'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' நூல் வெளியீடு

இன்று மாலை (1-9-2006) 6.00 மணி அளவில் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஈழ எழுத்தாளரான செங்கை ஆழியான் (டாக்டர் கே.குணராசா) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பாக 'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' என்னும் நூல், மித்ர வெளியீடாக வெளியிடப்பட உள்ளது.

நூலை கவிஞர் த. பழமலய் வெளியிட, நான் பெற்றுக்கொள்கிறேன்.

நிகழ்வுக்கு அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். ஆசிரியரைப் பற்றிய அறிமுகத்தை யாழூர் துரை வழங்குகிறார். 'மித்ர' எஸ்.பொ உரையாடுகிறார்.

புத்தகத்தின்மீதான ஆய்வுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன், பத்மாவதி விவேகானந்தன், பா.ரவிக்குமார், மணா, வைகைச்செல்வி, நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் படைக்கின்றனர். நூலாசிரியர் செங்கை ஆழியான் ஏற்புரை, பின்னர் நன்றியுரை என்று நீண்ட நிகழ்ச்சி.

ஆயிரமாயிரம் ஆண்டுகள்


செங்கை ஆழியானின் இரண்டு நூல்கள் இணையத்தில் நூலகம் எனுமிடத்தில் மின் நூல்களாகக் கிடைக்கின்றன. முற்றத்து ஒற்றைப் பனை | சித்திரா பௌர்ணமி