Saturday, May 29, 2010

மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா

நாளை (ஞாயிறு) 30.05.2010 அன்று மாலை 6.00 மணிக்கு, திருநெல்வேலி ம.தி.தா இந்து மேல்நிலைப் பள்ளியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியிட்டு விழா நடைபெறும்.

தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிடுபவர், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன். சிறப்புரை வழங்குபவர் சாலமன் பாப்பையா.

இந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்திருந்த பல நூறு வாசகர்களிடையே இருந்து 10 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் பத்து பேரும்தான் புத்தகத்தில் முதல் பத்து பிரதிகளை மேடையில் பெற்றுக்கொள்கிறார்கள்.

முன்பதிவு செய்த (சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள்) மதியின் கையெழுத்திட்ட புத்தகம் அனுப்பிவைக்கப்படும். திங்கள், செவ்வாய் முதற்கொண்டு முன்பதிவு செய்தவர்களுக்குப் புத்தகங்கள் செல்லத் தொடங்கும்.

புத்தக வெளியிட்டு விழாவுக்கு அனைவரும் வருக.

Thursday, May 27, 2010

சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்

நேற்று மாலை மியூசிக் அகாடெமியில் மீடியா ஒன் குளோபல் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் வழங்கிய ‘சிலப்பதிகாரம்’ நாட்டிய நாடக நிகழ்ச்சியைப் பார்த்தேன். பாதி இருக்கைகள்தான் நிரம்பியிருந்தன. அதிலும் பாதிப் பேர் இலவசமாக வந்து பார்த்து பாதியில் எழுந்து சென்ற பெரிய மனிதர்கள்.

முரளிதரன் என்பவரது திட்டமிடலில் உருவாக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சி. இவரே கோவலனாக வருகிறார். இவரது மனைவி (சித்ரா?) கோப்பெருந்தேவியாக வருகிறார். மற்றவர்கள் பெயரை நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை. மிக முக்கியமான பாத்திரங்களான மாதவி, கண்ணகி இருவருள், கண்ணகியாக வந்து நாட்டியமாடியவர் நிஜமாகவே மிக அருமையாகச் செய்தார். இவர்தான் நாட்டிய நாடகத்தின் உயிர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இணையான பாத்திரமான மாதவியாக வந்தவர் தனது நாட்டியத்தை அதன் உயரத்துக்குக் கொண்டுசெல்லவில்லையோ என்றுதான் தோன்றியது.

சரியாக 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்காதது வருத்தத்தை அளித்தது. நேரத்தின் முக்கியத்துவத்தை நம் மக்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்களோ. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் நீண்ட அறிமுகம். பின்னர் இளங்கோவின் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்தது நாட்டிய நாடகம். பொதுவாக இதுபோன்ற நாடகங்களின் ஓப்பனிங் பிரம்மாண்டமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும்... சரியாக இசை அமைக்கப்படவில்லை. ஆனால் உடனடியாக நாட்டியத்தில் பிடித்துவிட்டார்கள். அடுத்து சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விஜயர்களை ஜெயித்து, இமயத்திலிருந்து கல்லைத் தூக்கி எடுத்துவரச் செய்து கண்ணகிக்குக் கோயில் உருவாக்குவது. சுற்றியுள்ள மக்கள் ‘கண்ணகி யார், கண்ணகி யார்’ என்று கேட்க, கதை சொல்லி, மாநாய்கன், மாசாத்துவான், கண்ணகி, கோவலனை அறிமுகம் செய்கிறார்.

அடுத்த காட்சியில் நேராக கோவலன் - கண்ணகி திருமணம் தாண்டி இருவருக்கும் இடையிலான காதல் - மாசறு பொன்னே, வலம்புரி முத்தே. திருமணத்தைக் காட்டியிருந்தால் அதில் மாபெரும் சாத்தியங்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.

தொடர்ந்த கடைவீதிக் காட்சியில் கண்ணகியை அழைத்துக்கொண்டு செல்லும் கோவலன், மாதவி மன்னர் அவையில் நாட்டியமாட இருப்பதை அறிகிறான். மன்னரவைக்குச் செல்கிறான். இந்தக் காட்சியில் மாதவியின் நடனம் அசத்தலாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இதுதான் மாதவிக்கான ஓப்பனிங் காட்சி. ஆனால் நடனம் அந்த அளவுக்கு உலுக்கி எடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து. சோழ அரசன் 1008 கழஞ்சு மதிப்புள்ள ஒரு மாலையையும் தலைக்கோல் என்ற பட்டத்தையும் மாதவிக்குக் கொடுக்கிறான்.

மாதவியின் தாய் அந்த மாலையை கூனியிடம் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி, அங்கே விற்கச் சொல்கிறாள். அந்த மாலையை வாங்கக்கூடியவன்தான் மாதவிக்கு வேண்டியவன் என்று தீர்மானிக்கிறாள். சிக்குகிறான் கோவலன்.

கோவலன் - மாதவி காட்சிகள் மிக நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. இந்திர விழாவில் இருவரும் பங்குகொள்வது, காதல் செய்வது, பாடுவது, ஆடுவது அனைத்துமே சிறப்பு. பானைகளின்மீது நடனம் செய்யும்போது மாதவியாக வந்தவர் கவனமாக அதிகம் முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை! ஆனால் கூட ஆடிய சிறுவயதுப் பெண்கள் சிறப்பாக ஆடினர் என்றே சொல்லவேண்டும். இந்தக் காட்சியில் கோவலன், மாதவி, பணிப்பெண்கள் அன்ன வடிவப் படகில் காவிரியில் வந்து இறங்குவது அழகாகச் செய்யப்பட்டிருந்தது.

அடுத்த காட்சியில் கோவலன், மாதவி ஊடல். இருவரும் மாறிமாறிப் பாட, கோவலன் கோபம் கொண்டு வெளியேறுகிறான். உடனேயே மாதவி மனம் வெறுத்து, புத்த மதம் சார்ந்த துறவி ஆவதுபோலக் காட்டியுள்ளனர். கதைப்படி அதற்கெல்லாம் நிறைய காலம் இருக்கிறது.

கண்ணகி வருத்தத்தில் இருக்க, அவளுடைய தோழி, சோமகுண்டம், சூரியகுண்டம் சென்று நீராடி, காமக்கடவுளை வழிபட்டால் கோவலன் மீண்டும் கிடைப்பான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோவலன் திரும்பிவருகிறான்.

அடுத்த காட்சியில் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை நோக்கிச் செல்கிறார்கள். மதுரையில் மாதரி என்பவளிடம் கண்ணகியை விட்டுவிட்டு, கோவலன் சிலம்பை எடுத்துக்கொண்டு கடைவீதி செல்கிறான். அவனை பாண்டிய மன்னனிடம் மாட்டிவிடுகிறான் பொற்கொல்லன். கோவலனின் கழுத்து வெட்டப்படுகிறது.

துர்நிமித்தங்கள் நடப்பது கண்டு மாதரியும் பிற ஆய்ச்சியர்களும் குரவைக் கூத்து ஆடுகிறார்கள். கூத்து முடியும்போது ஒருத்தி ஓடிவந்து கோவலன் கொலை ஆன செய்தியைக் கூறுகிறாள். இந்த இடத்தில் கண்ணகியின் நடிப்பு டாப் கிளாஸ்.

அழுகிறாள், விழுகிறாள், இடை இடையே சிரிக்கிறாள். காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் என்று சூரியனைக் கேட்கிறாள். சூரியன், இல்லை இல்லை என்று சொல்ல, கண்ணகியின் முகத்தில் தெறிக்கும் கோபம், சோகம், அழுகை அனைத்தும் சேர்ந்து நாட்டிய நாடகத்தின் உச்சமே இந்தக் காட்சியாகத்தான் இருந்தது. மன்னவனே ஆனாலும் அவனைக் கேட்காமல் விடேன் என்று பொங்கிப் புறப்படுகிறாள் கண்ணகி.

அரண்மனைக்குள் நுழைந்து அரசனை சூடாக நான்கு கேள்விகள் கேட்டுவிட்டு மாணிக்கப் பரல்கள் கொண்ட தன் சிலம்பை அவள் போட்டுடைக்க அரசன் அதிர்ந்துபோய் உண்மை தெரிந்து மாண்டுபோக, மதுரை எரிகிறது. இந்தக் காட்சியும் மிகச் சிறப்பாக மேடையில் கொண்டுவரப்பட்டது என்றுதான் சொல்வேன்.

கண்ணகி கையில் ஒரு சிலம்புடன் செல்லும்போது அவள் காலிலும் ஒரு சிலம்பு இருந்தது. கழட்டிப்போட மறந்துவிட்டார்கள். என் அருகில் இருந்தவர் என்னைப் பிடித்து வாட்டி எடுத்துவிட்டார். அதெப்படி சார், ஒரு சிலம்பை கோவலன்கிட்ட கொடுத்துட்டாங்க, இன்னொண்ணு கைல இருக்கு, அப்ப எப்படி கால்ல ஒண்ணு இருக்கும்? ஆமாங்க, அவங்க செஞ்சது தப்புதான்! என்று நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.

மற்றபடி குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் கடைசி இரண்டு காட்சிகளுக்காகவே மனத்தைக் கொள்ளை கொண்டது. இசை சுமார் ரகம்தான். பின்னணிப் பாடகி ஜானகி இரண்டு பாடல்களைப் பாட வந்திருந்தார். அவருக்கு ஆகும் வயதில் குரல் போய்விட்டது. அவர் பாடாமல் இருப்பதே நலம். நாட்டியம் பொதுவாக நன்றாக இருந்தது. முக்கியப் பாத்திரங்கள் அளவுக்கு, கூட ஆடிய அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்தனர். எல்லாமே நாட்டியம் கற்றுக்கொண்டுவரும் 12-20 வயதுப் பெண்கள் என்று நினைக்கிறேன்.

பெரும்பாலும் இளங்கோவின் வரிகளை மட்டுமே கொண்டிருந்தாலும் ஆங்காங்கே இரண்டு மூன்று இடங்களில் சொந்த வரிகளைப் புகுத்தியிருந்தனர். அதன் காரணம் புரிகிறது. மாதவியின் ஆரம்ப நாட்டியத்துக்கு பாடல் வரிகள் தேவைதான். ஆனால் அந்தப் பாடல்கள் சுமார் ரகம்தான்.

***

இன்று முடிந்தால் சென்று பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள். ரூ. 500, ரூ. 300, ரூ. 200 டிக்கெட்டுகள்.

***

துளசி பதிவு: சிலப்பதி’ஹாரம்’

Wednesday, May 26, 2010

ஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை

ஐஃபோன் பிளாட்ஃபார்மில் App எழுதத் தெரிந்தவர்கள், freelance-ஆக அதுபோன்ற செயலிகளை எழுதித்தர விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் நிறுவனத்துக்கு சில செயலிகள் தேவைப்படுகின்றன.

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: software@nhm.in

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவதி மருந்து

ஜூன் 4, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் (எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை) போலி மருந்து / காலவதி மருந்து ஆகியவை கிளப்பியுள்ள பிரச்னை குறித்தும், அது தொடர்பாக இந்திய மருந்துக் கொள்கை குறித்தும் பேச திரு சுகுமாரன் வருகிறார்.

சுகுமாரன், FMRAI (Federation of Medical and Sales Representatives Association of India) அமைப்பின் அனைத்திந்திய முன்னாள் துணைத் துலைவர். TNMSRA (Tamil Nadu Medical and Sales Representatives Association) அமைப்பில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.

அனைவரும் வருக.

சிங்கப்பூர் டயரி - 6

சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 52 லட்சம். இதில் சீனர்கள் 75%, மலாய் இனத்தவர் 13.5%, இந்தியர்கள் 9%, மிச்சம் இதர. இந்தியர்களில் சரி பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். சிங்கப்பூரின் தேசிய மொழிகள் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ். இவ்வாறாக மிகச்சிறியதோர் மொழிக்குழுவின் மொழிக்கு உயர்ந்த தகுதியை சிங்கப்பூர் வழங்கியிருந்தாலும் அங்கே உருப்படியான தமிழ்ப் புத்தகக் கடை ஒன்றும் கிடையாது.

சிங்கப்பூர் தமிழ்ப் புத்தகச் சந்தையை மூன்றாகப் பிரிக்கலாம். (1) சிங்கப்பூர் நூலகம் (2) தமிழ்ப் பள்ளிகள், மாணவர்கள் (3) தமிழ் படிக்கும் சிங்கப்பூர்வாசிகள்.

சிங்கப்பூர் நூலகத்துக்குத் தமிழ்ப் புத்தகங்களை வழங்க என்று ஐந்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவர்களைத் தவிர வேறு யாரும் நேரடியாக சிங்கப்பூர் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கமுடியாது.

தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்ப் புத்தகங்களில் பெரும்பாலானவை சிங்கப்பூர் நூலகத்தில் கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள கிளை நூலகங்களில் இந்த நிலை கிடையாது. கன்னிமரா நூலகத்திலும்கூட இந்த நிலை கிடையாது. உண்மையில் இந்தியாவில் பதிப்பிக்கப்படும் அனைத்து நூல்களிலும் ஒரு பிரதி சென்னை கன்னிமரா நூலகத்துக்கும், மும்பை, கொல்கத்தா, தில்லி நூலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும். ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் இதனைச் செய்வதில்லை. நூலக ஆணைக்கு விண்ணப்பிக்கும் புத்தகங்களை மட்டும் இந்த நூலகங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

தமிழ்நாட்டு நூலக ஆணையம் ஆண்டுக்கு ஒருமுறை புத்தகங்களைக் கோரிப் பெறுகிறது. அதுவும் எப்போதும் இரண்டு ஆண்டுகள் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் நூலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையாளர்கள் ஐவரும் மாதத்துக்கு இருமுறை புதிய புத்தகங்களை விண்ணப்பித்து, மாதிரி பிரதியும் கொடுக்கிறார்கள். அவற்றில் பல தேர்வு செய்யப்பட்டு, சிங்கப்பூர் நூலகத்தால் வாங்கப்படுகின்றன.

கதைகள் என்றால் அதிகப் பிரதிகள் வாங்கப்படுகின்றன. கதை அல்லாதவை குறைவாகவே வாங்கப்படுகின்றன. மதம் சார்ந்த புத்தகங்கள் அவ்வளவாக வாங்கப்படுவதில்லை.

அடுத்தது பள்ளிக்கூடச் சந்தை. மேலே குறிப்பிட்ட ஐந்து புத்தக வியாபாரிகள்தான் பள்ளிக்கூடங்களுக்கும் புத்தகங்களை வழங்க முற்படுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள், மலேசியாவில் அச்சாகும் தமிழ்ப் புத்தகங்கள், இலங்கைப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தருவித்து பள்ளிக்கூட நூலகங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல நேரங்களில் பள்ளிக்கூடங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள்.

கடைசியாக பொதுமக்களுக்கு விற்பது. மொத்தம் உள்ள ஐந்து முக்கிய புத்தக வியாபாரிகளின் இருவர் (அபிராமி பப்ளிகேஷன், விஸ்வநாதன் பப்ளிகேஷன்) வீட்டிலிருந்து வியாபாரம் செய்பவர்கள். இவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தையும் பள்ளிக்கூடங்களையும் மட்டுமே நம்பி இருக்கிறார்கள். GGS பப்ளிகேஷன் என்பவர்களது ஷோரூம் செராங்கூன் சாலையில் லிட்டில் இந்தியா ஆர்கேடில் உள்ளது. ராஜி பப்ளிகேஷன் ஷோரூம் செராங்கூன் பிளாஸா அருகிலேயே டல்ஹவுஸி சந்தில் உள்ளது. குமரேஷ் எண்டெர்பிரைசஸ் ஒரு ஷோரூமாக அமைக்கவில்லை. செராங்கூன் சாலையில் செராங்கூன் பிளாஸாவில் அலுவலகமாக உள்ளது.

ஆனால் முக்கியமான பிரச்னை அவர்களது விற்பனை விலையில்தான். இந்தியாவில் ரூ. 100 விற்கும் ஒரு புத்தகத்தை சிங்கப்பூர் தேசிய நூலகம் சிங்கை $22 என்ற விலை (மைனஸ் டிஸ்கவுண்ட்) என்று ஏற்றுக்கொள்கிறதாம். யார் எவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள் என்பது அந்தந்த விற்பனையாளரைப் பொருத்தது. ஆனால் விற்பனையாளர்களுக்கு ரூ. 100 என்றால் $22 என்ற மைண்ட்செட் வந்துவிடுகிறது. GGS-ல் நான் பார்த்தபோது, ரூ. 100 புத்தகத்துக்கு $25 என்று லேபல் ஒட்டியிருந்தார்கள். அதாவது எட்டு மடங்கு விலை! இந்த விலையில் யாருமே இந்தப் புத்தகங்களை வாங்கமாட்டார்கள். மற்ற இருவரில் ராஜி $15 என்ற விலைக்கு விற்பதாகவும் குமரேஷ் $10 என்ற விலைக்கு விற்பதாகவும் சொன்னார்கள். முஸ்தபாவிலும் தமிழ்ப் புத்தகங்கள் விற்கப்படுவதாகவும், ரூ. 100 விலை கொண்ட புத்தகம் சுமார் $12 என்ற கணக்கில் கிடைக்கக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது.

ரூ. 100 என்றால் இப்போதைக்கு சுமார் $3. இந்தப் புத்தகம் ஏதோ ஒரு வகையில் $5 என்ற விலைக்கு மிகாமல் கிடைத்தால் சிங்கப்பூர் தமிழர்கள் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பேசாமல் சென்னை போகும்போது வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவார்கள். அப்படிச் செய்யவும் செய்கிறார்கள். ஆனால், புத்தகங்கள் உடனுக்குடன் வாங்கிப் படிக்கப்படவேண்டும். ஆறப்போட்டால் பிறகு படிக்கத் தோன்றாது. ஒரேயடியாக 100 புத்தகங்களை வாங்கிச் சென்றால் படிக்க நேரம் இருக்காது. பணம் வீணாவதுபோலத் தோன்றும். பெரும் மூட்டையை இந்தியாவிலிருந்து சுமந்து வருவதுபோலத் தோன்றும். ஒருவித அலுப்புதான் ஏற்படும். புத்தகம் வாசகர் கைக்குப் போய்ச் சேரவேண்டும். அவரது வீட்டுக்கு அருகில் கிடைக்கவேண்டும். விலை ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும்.

இந்தச் சிக்கலுக்கு ஏதோ ஒரு தீர்வு நிச்சயம் சாத்தியம். தமிழ்ப் பதிப்பாளர்கள் இது தொடர்பாக யோசிக்கவேண்டும்.

Tuesday, May 25, 2010

சிங்கப்பூர் டயரி - 5

நீண்ட நாள்களுக்குப்பின் எழுதுகிறேன். இடையில் எழுத அவ்வளவாக நேரம் கிடைக்கவில்லை.

செவ்வாய்க்கிழமை அன்று பெரும்பாலும் ஓய்வெடுத்தேன். அன்று மாலை சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நான் பேசினேன். சுமார் 40-45 பேர் வந்திருந்தனர். பேச்சு ஆரம்பிக்கும் நேரத்தில் 15 பேர் இருந்திருப்பார்கள்.

தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை பற்றியும் எதிர்காலம் பற்றியும் பேசினேன். அதைப் பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி? நான் எழுத்தாளரோ, விமரிசகரோ கிடையாது. ஆனால் ஏதோ சில ஆண்டுகளாக பதிப்புத் துறையில் இருப்பதை வைத்துக்கொண்டு என் கருத்துகளைப் பேசினேன். இந்தப் பேச்சுக்காக நான் தயார் செய்திருந்த சிலவற்றை ஒரு முழுக் கட்டுரையாக என் வலைப்பதிவில் சேர்க்கிறேன்.

இறுதியாக நான் தொகுத்துச் சொன்னது இவைதான்:

1. வணிகக் காரணங்களால் தமிழ் இலக்கியம் (கதை, நாடகம், கவிதை) பெரும்பான்மை மக்களைச் சென்று சேர்வதில்லை. எனவே வணிகம் பற்றிக் கவலைப்படாத இணையம் மூலமாகவே அடுத்த பத்தாண்டுகளில் பெரும்பான்மை இலக்கியம் முதலில் அரங்கேறும். இன்று இணையத்தைப் புழங்குபவர்கள் குறைவாக இருந்தாலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகப்போகிறது. எனவே இலக்கியம் படைக்க ஆசைப்படுபவர்கள் இணையத்தை உடனடியாக நாடுவது நலம்.

2. படைப்பிலக்கியத் தரத்தை அதிகரிக்க மொழிபெயர்ப்புகள்தான் உதவப்போகின்றன. தமிழ் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் உலக இலக்கியத்தின் தரம் எப்படி உள்ளது என்பதை எடுத்துக்காட்ட அன்னிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் நிறைய நடக்கவேண்டும். அதேபோல தமிழ் எழுத்தாளர்கள் எவ்வளவு தரமான படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்பதை உலகம் அறியச் செய்ய தரமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மிக மிக அவசியம்.

3. தமிழ் எழுத்தாளர்கள் அவசரமாகவும் அவசியமாகவும் சிறுவர் இலக்கியத் துறையில் இறங்கவேண்டும். பள்ளிகளில் தமிழ் பயிற்றுவித்தல் மிக மோசமாக இருக்கும் இன்றைய நிலையில் நாளைய சமுதாயம் தமிழைத் தேடிப் படிக்கவேண்டிய காரணங்களை இன்றே உருவாக்கவேண்டும். எனவே இங்கும் வணிக சாத்தியங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலையின்றி தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் உடனடியாக சிறுவர்களை, குழந்தைகளை தம் எழுத்துத்திறன் கொண்டு ஈர்க்கவேண்டும். பாடல்களாக, அற்புதக் கதைகளாக, சொல் சித்திரங்களாக அடுத்த சில தலைமுறைகளை வசீகரிக்காவிட்டால் நாளைக்கு இந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் படிக்க ஆளே இருக்காது.

உரையாடலுடன் அந்த நாள் முடிவுற்றது.

***

சிங்கப்பூரில் சீன உணவகங்கள் இரவு 9.30-க்குள் மூடிவிடுகிறார்கள். மீண்டும் கோகுல் சென்றுதான் சாப்பிட்டோம். அங்கும் எங்களை ஓட ஓட விரட்டிவிட்டார்கள். சென்னையில் இரவு 12 வரை ஏதேனும் உணவுக்கடை திறந்திருக்கும். ஆனால் சிங்கப்பூரில் அதற்கு வாய்ப்பே இல்லை.

சிங்கப்பூரர்கள் காலை சீக்கிரமே அலுவலகம் வந்துவிடுகிறார்கள். நாள் முழுக்க, கடுமையாக உழைக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்கூட காலை 6.30 மணிக்கே கிளம்பிவிடவேண்டும்! சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் சூரிய உதயமே 7 மணி அல்லது அதற்குப் பிறகுதான்! எனவே இரவில் பெரும்பாலும் சீக்கிரம் கடை அடைத்துவிடுகிறார்கள்.

அடுத்த நாள் (புதன்) சில நண்பர்களைச் சந்திக்கவும், தமிழ்ப் புத்தகங்களை விற்பனை செய்பவர்களைச் சந்தித்துப் பேசவும் என்று ஒதுக்கிக்கொண்டேன்.

Thursday, May 20, 2010

சிங்கப்பூர் டயரி - 4

சனி, ஞாயிறு அன்று நடந்த பயிலரங்குதான் சிங்கப்பூர் பயணத்தின் முதன்மை நோக்கம். முதன்மை ஆதரவு அளித்தது (போக வரச் செலவு, தங்கும் செலவு, இப்படி) தேசிய புத்தக வளர்ச்சிக் குழுமம். அடுத்த வார இறுதியில் மலேசியாவில் இதேபோன்ற பயிலரங்கம். ஆனால் இடையில் என்ன செய்வது? நான் சிங்கப்பூரிலேயே இருக்க முடிவு செய்திருந்தேன். ராகவன் தந்தைக்கு 75-வது பிறந்தநாள் விழா. அதனால் சென்னைக்குச் சென்றே ஆகவேண்டிய நிலைமை.

ஆனாலும் திங்கள் அன்று விடாமல் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்வி அமைச்சகத்தின்கீழ் வருவார்கள். அப்போது (தமிழ்) பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதும் அவர்கள் பணியில் ஒன்று. பிறகு மீண்டும் ஆசிரியப்பணிக்குச் செல்வார்கள்.

இப்படி பாடப்புத்தகம் எழுதும் ஆசிரியர்களுக்குத்தான் திங்கள் பயிலரங்கு நடைபெற்றது.

பாடப்புத்தகம் எழுதுவதில், அதுவும் தமிழில் பாடப்புத்தகம் எழுதுவதில் எங்களுக்கு எந்த முன் அனுபவமும் கிடையாது. அதை முன்னமேயே அவர்களிடம் சொல்லியிருந்தோம். அவர்கள், தாங்கள் தயாரித்திருந்த சில பாடப்புத்தகங்களை எங்களுக்கு அனுப்பியிருந்தனர். தொடக்கக் கல்வி 6 வகுப்புகள், உயர்நிலைக் கல்வி 4 வகுப்புகள் என அனைத்துக்கும் அவர்கள் தயாரித்திருந்த பாடங்களை மேலும் எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பது தொடர்பான கலந்துரையாடலாக இருந்தது அன்றைய நிகழ்வு.

சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் தமிழ்ச் சூழலிலேயே இல்லை. அவர்கள் வாழ்வது ஆங்கிலச் சூழலில். எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில். வீட்டில்கூட தமிழ் அதிகம் பேசுவதில்லை என்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் எதை தமிழ்ப் பாடமாக வைத்தால் அவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள் என்பதே பெரிய விவாதமாக இருந்தது.

அவர்கள் தற்போது தயாரித்துவரும் ஓரிரு பாடங்களை எடுத்துக்கொண்டு, அவற்றை திரையில் எடிட் செய்து காண்பித்தார் ராகவன். அதைத் தொடர்ந்து மேலும் விவாதம் நடைபெற்றது.

அமர சித்திரக் கதைகளை எப்படித் தமிழாக்கம் செய்கிறோம் என்பதை நான் திரையில் காண்பித்தேன். அவற்றை சிறுவர்கள் படித்துப் புரிந்துகொள்ளுமாறு செய்ய என்னவெல்லாம் செய்கிறோம் என்பதையும் காண்பித்தேன். குழந்தைகளுக்கான புத்தகங்களில் பேச்சுத் தமிழ் இல்லாமல், எழுத்துத் தமிழாகவே இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் விரும்புவதைப் புரிந்துகொண்டேன். அமர சித்திரக் கதைகளிலும் அதையேதான் இலக்காக நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் மிக எளிமையான மொழி. எப்படி வார்த்தைகளைக் குறைத்து, அதே பொருளைத் தருமாறு செய்கிறோம் என்பதைப் பற்றிப் பேசினேன்.

குறுகிய நேரத்தில் நாங்கள் நடத்திய பயிற்சியை அங்கு குழுமியிருந்த அனைவரும் நன்கு விரும்பினர் என்றே தோன்றியது. ஆனால் இதை விரிவாகச் செய்யவேண்டுமானால் நாங்களும் அதிகம் தயாரித்துக்கொள்ளவேண்டும்; காலமும் மூன்று நாள்களாகவாவது இருக்கவேண்டும்.

சிங்கப்பூர் தமிழ் பாடப்புத்தக ஆசிரியர்களின் ஆர்வம் வியக்கவைக்கிறது. மாணவர்களுக்கு எப்படியாவது நல்ல தமிழை போதிக்கவேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் வெளிப்படையாகத் தெரிகிறது. பொதுவாக நாம் இப்படிப்பட்டவர்களை தமிழ்நாட்டில் எங்காவது ஓரிடத்தில் மட்டும்தான் பார்க்கமுடியும். அவர்களும்கூட பாடப்புத்தகம் தயாரிக்க வழியற்றவர்களாக இருப்பார்கள்.

சிங்கப்பூரின் செயல்திறன் மிக்க திட்டத்தில், நல்ல ஆசிரியர்கள் இனங்காணப்பட்டு மேலே வருகிறார்கள். அவர்களது திறமை சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களைப் பார்த்தால் ஆயாசமே மிஞ்சுகிறது. அதுவும் அறிவியல், வரலாறு போன்ற புத்தகங்கள் படிக்கச் சகிக்காமல் உள்ளன.

நிச்சயமாக இந்த ஆண்டு தமிழில் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் எழுதுவதில் இறங்கப்போகிறோம்!

***

மாலை பயிலரங்கு முடிந்த உடனேயே ராகவன் நேராக ஏர்போர்ட்டுக்குச் செல்லவேண்டும். பெட்டிகளை அள்ளிக்கொண்டு வழியில் சிம்லின் கோபுரத்தில் நிறுத்தி, ஒரு எலெக்ட்ரானிக் பொம்மையை வாரிக்கொண்டு நேராக விமான நிலையம் விரைந்தார். அங்கே விமானம் தாமதம் என்ற அறிவிப்பு.

ராகவனுக்கு சிங்கப்பூரை முழுமையாகப் பார்க்கமுடியவில்லையே என்ற ஆதங்கள் உள்ளது. அதனால் என்ன? மீண்டும் வராமலா போய்விடப்போகிறோம்?

செவ்வாய் அன்று தேசிய நூலகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசவேண்டும். அதுபற்றி நாளைக்கு.

(இப்போது மலேசியா வந்துவிட்டேன்.)

Wednesday, May 19, 2010

தி.நகரில் கிழக்கு ஷோரூம்

பொதுவாக கிழக்கு ஷோரூம் பல்வேறு இடங்களில் தொடங்கப்படும்போது முதல் வரிசையில் நான் இருப்பது வழக்கம். ஆனால் இப்போது சிங்கப்பூரில் இருப்பதால் முடியவில்லை.

அதிகம் சத்தம் போடாமல் தி.நகரில், பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் 100 சதுர அடிக்கும் குறைவான குட்டி இடத்தில் ஒரு ஷோரூமைத் தொடங்கியுள்ளோம்.


முகவரி:

கிழக்கு புத்தக ஷோரூம்
3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ் (தரைத்தளம்)
57, தெற்கு உஸ்மான் சாலை (ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்)
தி.நகர்
சென்னை - 600 017
தொலைபேசி: 044-42868126
மொபைல்: 95000-45640

சென்னையின் பிற பகுதிகளில் இருப்பவர்கள் எல்டாம்ஸ் ரோடுக்கு வரமுடியாவிட்டாலும் எப்படியும் தி.நகருக்கு ஷாப்பிங் போவீர்கள். சென்னையின் எந்த மூலையிலிருந்தும் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வர இரண்டு பஸ்களில் ஏறி இறங்கினால் போதும். இறங்கி, அப்படியே புத்தகத்தை வாங்கிக்கொண்டு, உடனே மீண்டும் பஸ்ஸில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிடலாம்.

Tuesday, May 18, 2010

சிங்கப்பூர் டயரி - 3

முதல் நாள் பயிலரங்கு முடிந்ததும், சனி மாலை அன்று கோகுல் உணவகம் சென்று சாப்பிட்டோம். ’மாக் மீட்’ என்ற செயற்கையாக இறைச்சி போலத் தோற்றம் அளிக்கும் தோஃபு கட்டிகள் போட்ட உணவுகள் பல. ஆனால் மெனுவில் சிக்கன், மட்டன் என்றுதான் எழுதியுள்ளார்கள். அதைப் பார்த்ததுமே ராகவனுக்கு ஒரே நடுக்கம்.

ரோஜா(க்) என்ற உணவை நாங்கள் விரும்பிச் சாப்பிட்டோம். சில பழங்கள், தோஃபு என அனைத்தும் கலந்து வறுத்து, கருநிற சாறு ஒன்றில் தோய்த்து, மேலே எள்ளுப்பொடி எல்லாம் போட்டு, சற்றே அசட்டுத் தித்திப்பும் ஆங்காங்கே கொஞ்சம் காரமும் கலந்து சுவையாகவே இருந்தது. மீ கொரெங் மிகக் காரம். அரிசிக் கூழ் கேக், காய்கறிகள் கலந்த ஒரு சாலடும் அதனுடன் சூப் மாதிரி பதத்தில் இருந்த டிரெஸ்ஸிங்கும் கொஞ்சம் சுமார்தான்.

ராகவனுக்கு சிங்கப்பூர் சாலைகள்மீது அபாரக் காதல் ஏற்பட்டுவிட்டது. எங்கும் குண்டு குழிகளே தென்படவில்லை என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘கன்னம்’ மாதிரி வழவழவென்று இருப்பதாகச் சொன்னார். வாயில் மாவா/வஸ்து போட்டாலும் இதுபோன்ற மழமழ ரோட்டில் துப்பச் சிறிதும் தோன்றக்கூடாது என்பதால்தான் சாலையை இவ்வளவு அழகாகப் போட்டுள்ளார்கள் என்பது அவரது கருத்து. அதனால் வாஷ் பேசின் அல்லது குப்பைத்தொட்டி தேடித் தேடி, துப்பினார்!

சிங்கப்பூரில் 7 மணிக்கு முன்னால் சூரியன் உதிப்பதே இல்லை. அதனால் முதல் நாள் சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை. அதிகாலையில், யாருமற்ற சாலையில், ஒரு சுத்திகரிப்புப் பெண்மணி கையில் நீண்ட குச்சியை வைத்துக்கொண்டு சின்னச் சின்னத் தாள்களையும் சேகரித்துக் கொண்டிருப்பதை, 14-ம் மாடியிலிருந்து 20 நிமிடமாகப் பார்த்துக்கொண்டிருப்பதாக ராகவன் சொன்னார். சுத்தம் என்பதை அடைய வெறும் சட்டங்கள் போட்டால் மட்டும் முடியாது. ஒரு தேசத்தின் மக்களுக்கு, அவர்களது ரத்தத்திலேயே இந்த உணர்வு புகுந்துகொள்ளவேண்டும்.

எப்படியோ சிங்கப்பூரில் இது நடந்துள்ளது. என்ன செய்தால் சிங்கப்பூர் அழுக்காகும் என்று குரூரமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது.

இரண்டாம் நாள் அமர்வு. உரையாடல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில் ராகவன் கொடுத்த ‘சிறுகதை’ பிரசெண்டேஷனை இங்கே மீண்டும் கொடுத்தார். பயங்கர வரவேற்பு. தொடர்ந்து புனைகதைகளை எடிட் செய்வது பற்றி நான் கொஞ்சம் பேசினேன்.

மதிய உணவு இடைவேளையின்போதும் ஒரு வானொலி பேட்டி, ஒரு தொலைக்காட்சிப் பேட்டி.

மதியம் மொழிமாற்றம் பற்றியும், மொழிமாற்றப் பிரதிகளை எடிட் செய்வது பற்றியும் பேசினேன். கடைசியாக கேள்விகள், பதில்கள். ஒரு சிலர், ஏதோ ஒரு புத்தக வெளியீடு இருக்கிறது என்று கிளம்பிச் சென்றுவிட்டனர்.

***

ஒரு அனானி, இரண்டு நாள்களும் போர் அடித்தது என்று எழுதியிருந்தார். இருக்கலாம். அதனை அவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் சொன்னால் நன்றாக இருக்கும். அடுத்த முறை, இன்னும் சிறப்பானவர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்கள். எங்களை வரவழைத்து இந்தப் பயிலரங்கை நடத்த சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டுக் கழகமும் தேசிய நூலகமும் நிறையப் பணம் செலவு செய்திருக்கிறார்கள். பணம் விரயமாகக் கூடாது அல்லவா.

***

எடிட்டிங் ஏன் அவசியம் என்ற எண்ணம் அங்கு வந்திருந்த பலருக்கும் ஏற்பட்டது என்றே நினைக்கிறேன். இதுதான் முதல் நோக்கமே. என் எழுத்துக்கு எடிட்டிங்கே தேவை இல்லை; நான் எழுதியதில் ஒரு வரியைக் கூடத் தொட யாருக்கும் அனுமதி இல்லை என்ற எண்ணம் போய், எழுத்தை மெருகேற்ற, புத்தகத்தின் வடிவத்தைச் சரியாக்க, எழுத்தாளரின் நோக்கத்தைக் குலைக்காமல் அவருக்குப் பெருமளவு உதவ எடிட்டர்கள் தேவை என்ற எண்ணம் வந்துவிட்டால் போதுமானது.

அடுத்து, சிங்கப்பூரில் உள்ள சிலர், தாங்கள் தமிழ் எடிட்டர்களாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டால் அது போதும். அப்படி சிறந்த எடிட்டர்கள் ஆக, என்னவிதமான திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கட்டம்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களின் நோக்கத்தை ஓரளவுக்குப் பூர்த்தி செய்துள்ளோம் என்றே நானும் ராகவனும் நம்புகிறோம்.

***

ஞாயிறு மாலை லேசாகத் தூறிக்கொண்டே இருந்தது. தேக்கா மார்க்கெட், சிராங்கூன் சாலை ஆகிய இடங்களுக்கெல்லாம் சென்று அங்கே குவிந்திருக்கும் இந்தியர் கூட்டத்தைப் பார்க்கவேண்டும் என்று ராகவன் ஆசைப்பட்டார். ஆனால் மழை அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டுவிட்டது.

ஒலி எஃப்.எம் நண்பர்கள் சபா, சதக்கத் ஆகியோருடனும் வரதராஜன் என்பவருடனும் சேர்ந்து அன்று இரவு விவா சிடி சென்று மார்ஷே என்ற ஸ்விஸ் பிரான்சைஸ் உணவகத்தில் சாப்பிட்டோம். இக்தைப் பற்றி ராகவன் படங்களுடன் எழுதுவதாகச் சொல்லியிருப்பதால் நான் எழுதப்போவதில்லை.

அதற்குமுன், ராகவனின் ஆசைக்கு இணங்கி கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர் நண்பர்கள். சிங்கப்பூர் வந்து மணலைக் கண்ணிலேயே பார்க்கவில்லையே என்று ராகவனுக்கு ஆதங்கம். நச நசவென்ற தூறலுக்கு இடையே சிறிது நேரம் அங்கே நின்று கைக்கெட்டும் தூரத்தில் ஜோஹார் பாருவில் எரியும் விளக்குகளைப் பார்த்து, ‘அதோ மலேசியா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

***

திங்கள் அன்று கல்வி அமைச்சகத்தின்கீழ் வேலை செய்யும் தமிழ் பாடப்புத்தகங்கள் எழுதும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு. அது அடுத்த பதிவில்.

Sunday, May 16, 2010

சிங்கப்பூர் டயரி - 2

நேற்று எடிட்டிங் பயிலரங்கின் முதல் நாள். 30 பேருக்குத்தான் இடம் என்று சொல்லியும் கடைசி நேரத்தில் 38 பேர் உள்ளே இருந்தனர்.

சில அறிமுகங்களுக்குப்பின் நானும் தொடர்ந்து ராகவனும் அமர்வுகளை மாற்றி மாற்றி நடத்தினோம். நான் ஒரு அறிமுகம் தர, ராகவன் அ-புனைவுகளை எடிட் செய்வது பற்றிப் பேசினார். மதிய உணவுக்குப்பின் தூக்கம் வரும் நேரத்தில் நான் தமிழ் இலக்கணம் பற்றிப் பாடம் எடுக்கவேண்டிய கொடுமையான சூழல். ஆனால் ஓரிருவரைத் தவிர பிறர் யாரும் தூங்கவில்லை. அதன்பின் பயிற்சியாக ஒரு பக்கம் எழுதச் சொல்லி அதனை திருத்திக் கொடுத்தோம். அப்போது ராகவன், தனக்குச் சற்றும் பழக்கமே இல்லாத பாத் டப்பில் குளிக்க நேர்ந்ததைப் பற்றிய சோகமான நிகழ்வை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி அரங்கையே அதிரவைத்தார்.

எடிட்டர்கள் என்றால் தங்களது எழுத்தைச் சிதைக்க வந்த மாபாவிகள் என்று ஆரம்பத்தில் இருந்த எண்ணம் சற்றேனும் விலகியுள்ளது என்றுதான் நினைக்கிறேன்.

நேற்று வானொலிக்கு ஒரு பேட்டி, தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி என்று மதிய உணவு நேரத்திலும், பின்னர் இரவு 10-11 மணிக்கு வானொலியில் (ஒலி எஃப்.எம்) நீண்ட ஒரு கலந்துரையாடல் (அருண் மகிழ்நன், ராகவன், நான்) என்றும் நிகழ்ந்தன. கடுமையான அலுப்பில் வந்து விழுந்ததுதான். இன்று காலை இரண்டாம் நாள் அமர்வுகள் உள்ளன.

ராகவன் முந்தைய தினம் தூக்கம் வரவில்லை என்றும் நேற்று ஏதோ இரண்டு மணி நேரம் மட்டுமே ஓரளவுக்குத் தூங்க முடிந்தது என்றும் சொன்னார். காலை உணவில் ஒரு வழியாக அவருக்குப் பிடித்த ஏதோ கொஞ்சத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தேன். ஓரளவுக்குப் பசி அடங்கியிருக்கும்!

Saturday, May 15, 2010

சிங்கப்பூர் டயரி - 1

ஏர் இந்தியா மூலம் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகள் ஏர் ஹோஸ்டஸ்களை ரொம்பவே தொந்தரவு செய்கிறார்கள். சீட் பெல்ட் கட்டிக்கொள்ளுங்கள் என்று இருக்கும் சைகைகளை யாரும் சட்டை செய்வதில்லை. ஜாலியாக எழுந்து உலாத்தும் தமிழர்களை, இடம் சுட்டி ‘உட்கார், உட்கார்’ என்று சொல்வதே பணியாளர்களின் முழு நேர வேலையாக உள்ளது.

சிங்கப்பூர் குடியேறல் படிவம் நிரப்பத் தெரியாமல் பலர் தடுமாறுகிறார்கள்.

இரவு உணவு ‘மெட்ராஸ் வுட்லண்ட்ஸ்’-ல் மசால் தோசை, தயிர் சாதம். மசால் தோசை கொஞ்சம் சின்னதாக இருக்கிறது.

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் ஸ்வீ நேற்று காலமானார். பெரிய institution builder என்கிறார்கள். சிங்கப்பூரின் கல்வி அமைப்பை உருவாக்கியவர். பறவைகள் காட்சியகம் முதல் ஆபரா தியேட்டர் வரை அமைத்தவராம். இந்திய கல்வி முறை, ஜப்பானிய கல்வி முறை, சீனக் கல்வி முறை ஆகியவை பற்றி நன்கு ஆராய்ந்து படித்துவிட்டு, பிறகுதான் சிங்கப்பூரின் கல்வி முறை எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானித்து உருவாக்கினாராம்.

இந்தியா ஒரே நேரத்தில் அனைத்து தட்டுகளிலும் - ஆரம்பக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர் கல்வி என்று - பணம் செலவழித்ததால் கடைசியில் எதையுமே சரியாகச் செய்யவில்லை என்ற கருத்தை ஸ்வீ கொண்டிருந்தாராம். சிங்கப்பூரில், பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கக்கூடாது என்ற காரணத்தால், இருக்கும் பணத்தை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் செலவழிக்காமல், தொழில்கல்வியில் செலவிட்டாராம்.

கல்வி பற்றிய இவரது கருத்துகளைத் தேடிப் படிக்கவேண்டும்.

Thursday, May 13, 2010

மாருதியின் கதை

(புத்தகம் பேசுது மே 2010 இதழில் வெளியானது)


முயன்றால்... பொதுத்துறை நிறுவனத்தாலும் சாதிக்க முடியும்

The Maruti Story: How a public sector company put India on wheels, RC Bhargava with Seetha, Collins Business, Harper Collins, 2010

பொதுவாக இந்தியர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே இளப்பம்தான். வேலை செய்யாத சோம்பேறி ஊழியர்கள், லாபம் பற்றிக் கவலைப்படாத மேலதிகாரிகள், எப்படியெல்லாம் பணம் அடிக்கலாம் என்று அலையும் அரசியல்வாதிகள், அமைச்சர் பெருமக்கள், ஒரு வருடம் லாபம் என்றால், பத்து வருடன் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம், எப்பொதுவேண்டுமானாலும் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் யூனியன், அழுக்கு ஆஃபீஸ், மோசமான பொருள்கள், மொத்தத்தில் கேவலமான ஒரு அமைப்பு.

இந்த நிலையை மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு யாரும் உழைப்பதும் இல்லை. ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்களின் அமைப்பு அப்படிப்பட்டது. முதல் போடுவது அரசாங்கம். செயல்திறனோடு நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய முதன்மை அலுவலர்களுக்கு எந்தவித ஊக்கமும் கிடைக்காது; சொல்லப்போனால் அவர்களுக்கு அரசியல் இடையூறுகள் வந்தவண்ணம் இருக்கும். ஆட்சி மாற்றம் நடக்கும்போதெல்லாம் தலைமையே மாறும். பொய் வழக்குகள் போடப்படலாம்.

இவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் போன்ற அமைப்புகள் அற்புதமாக இயங்கி வருகின்றன என்றாலும் இவை ஒருவித மோனோபொலி அமைப்பில் வேலை செய்பவை. தனியார் அமைப்புகளிடமிருந்து போட்டி ஏதும் கிடையாது. நாட்டுக்குத் தேவையான முக்கியமான வேலையை இவை செய்வதால் அரசின் முதலீட்டுக்குக் குறைவும் இல்லை.

ஆனால் மாருதி அப்படிப்பட்ட அமைப்பு அல்ல. ஆரம்பம் முதலே இந்த அமைப்பில் அழுக்கும் ஊழலும் நிறைந்திருந்தது. கார் என்பது உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவையும் அல்ல. ஏற்கெனவே இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் கார் தயாரித்து வந்தன. இவை அனைத்தையும் தாண்டி மாருதி என்பது இன்று இந்தியாவின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனம் என்பதும் இந்தியா இன்று உலக அரங்கில் கார் பாகங்கள் தயாரிப்பிலும் கார் தயாரித்து வளர்ந்த நாடுகளுக்கும்கூட ஏற்றுமதி செய்வதில் வேகமாக முன்னேறி வருகிறது என்பதும் நிதர்சனம்.

இது எப்படி சாத்தியமானது?

ஆர்.சி.பார்கவா மாருதி நிறுவனத்தின் வளர்ச்சி காலகட்டத்தில் அதன் நிர்வாக இயக்குனராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு இப்போதும் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர். மாருதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அதன் முதல் செயல் தலைவராக ஆன கிருஷ்ணமூர்த்தியும் பார்கவாவும் எப்படி இந்த நிறுவனத்தை ஒரு மாதிரி நிறுவனமாக, தனியார் அமைப்புகளே பார்த்து அதிசயிக்கத்தக்கதாக மாற்றினார்கள் என்பதுதான் இந்தக் கதை. அதை பார்கவாவே சொல்லியிருக்கிறார்.

மாருதி கார் நிறுவனத்தை எமெர்ஜென்சி காலத்தில் ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பித்தது இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி. அப்போது இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாஸிடர் கார்களையும் பிரீமியர் பத்மினி நிறுவனம் ஃபியட் கார்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்தன. ஆனால் சஞ்சய் காந்தியால் மாருதி மூலமாக கார்களைக் கடைசிவரை உருவாக்கமுடியவில்லை. எமெர்ஜென்சிக்குப் பிறகான தேர்தலில் இந்திரா காந்தி தோற்க, இந்திராவும் சஞ்சயும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க, மாருதி திவாலானது.

ஆனால் விரைவில் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்தார். சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார். தன் மகனுக்கு ஞாபகார்த்தம் வேண்டும் என்று முடிவெடுத்த இந்திரா, திவாலாகி, துருப்பிடித்துப் போன உபகரணங்களைக் கொண்டிருந்த குப்பை மேடான மாருதி நிறுவனத்தை தேசியமயமாக்கி, அரசின் கைக்குள் கொண்டுவந்தார். அதற்கு மாருதி உத்யோக் என்று பெயர் மாற்றினர். தன் மகனின் பிறந்த நாள் அன்று மாருதி என்ற பெயரில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டு ஓடவேண்டும் என்று முடிவு செய்தார்.

1981-ல் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்ட மாருதி உத்யோக், 1982-ல் ஜப்பானின் சுசுகி கார் நிறுவனத்துடன் ஜாயிண்ட் வென்ச்சர் ஒப்பந்தம் போட்டது. 1983 டிசம்பர் 14 - சஞ்சய் காந்தியின் பிறந்த நாள் அன்று - ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பாகங்களை இந்தியா கொண்டுவந்து, மாருதி தொழிற்சாலையில் வெறுமனே ஒட்டவைத்த கார்கள் வெளியே அனுப்பட்டன.

இதுவே ஒருவிதத்தில் ஆச்சரியமூட்டும் வேகம். 1980-களின் ஆரம்பத்தில் அது சாத்தியமானதற்கு ஒரே காரணம், நியாயமான அரசு இயந்திரம் வழியாகச் செல்லாமல், இந்திராவுக்கு நெருங்கிய உறவினர்கள் வழியாக அனுமதிகள் பெறப்பட்டதுதான். இந்திராவின் மகன் ராஜிவ் காந்தி, நெருங்கிய உறவினர் மகன் அருண் நேரு ஆகியோர் பிரச்னைகளைச் சமாளிக்க, காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாவற்றுக்கும் ரப்பர் ஸ்டாம்ப் போட்டுக்கொடுக்க மாருதி கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

ஆனால் இந்திரா காந்தி இதனை வேறு மாதிரியாகவும் பார்த்தார். பி.எச்.இ.எல்லில் மிகவும் திறமையாகப் பணியாற்றியிருந்த கிருஷ்ணமூர்த்தியைக் கொண்டுவந்து மாருதியின் பொறுப்பை அவர் கையில் கொடுத்தார். என்ன ஆனாலும் சரி, செயல் திறன் அற்ற பொதுத்துறை நிறுவனம் போல இதனை நடத்தாதீர்கள்; என் மகன் சஞ்சயின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சிறப்பான ஒரு நிறுவனமாக ஆக்குங்கள் என்று வாய்மொழியாக அவருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சி.பார்கவாவை தன் தளபதியாக நியமித்துக்கொண்டார். மாறுபட்ட முறையில் அவர்கள் இருவரும் சேர்ந்து மாருதி உத்யோகை வடிவமைக்கத் தொடங்கினர்.

மாருதி பிற பொதுத்துறை நிறுவனங்களைப் போல அல்லாமல் மிகச் சிறந்த நிறுவனமாக ஆனது எப்படி என்பதற்கான காரணங்களை மூன்றாகக் கொள்ளலாம்.

முதலாவது ஜப்பானியக் கூட்டுறவு. அன்றும் சரி, இன்றும் சரி, சுசுகி ஜப்பானின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் அல்ல. அத்துடன் கூட்டணி அமைத்தது ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. சிறிய நிறுவனம் என்றாலும் சுசுகி, தரத்தில் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல; ஆனால் அத்துடன் செலவு செய்வதில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே லாபம் சம்பாதித்து வந்தது. ஆக, தரமான தொழில்நுட்பம், தொழிலில் சுத்தம், எதிலும் சிக்கனம் என்ற மும்முனைச் செயல்பாட்டை மாருதிக்கு அளித்தது. இந்தியர் மேனேஜர்கள் கைகளை அழுக்காக்கிக்கொள்ள விரும்பாதவர்கள். ‘அதெல்லாம் கீழே உள்ள தொழிலாளியின் வேலை’ என்று ஒதுங்கிக்கொள்பவர்கள். அவர்களது மனத்தை மாற்றி, தரம் வேண்டுமானால், நிர்வாகியும் தொழிலாளியும் ஒன்றாக உழைக்கவேண்டும், இருவருமே தத்தம் கைகளை அழுக்காக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலையைக் கொண்டுவர சுசுகியின் ஈடுபாடு உதவியது.

இரண்டாவது, தொழிலாளிகளுடனான உறவு. சில சின்னச்சின்ன விஷயங்கள் எப்படி தொழிலாளிகளை ஆர்வத்துடன் உழைக்கச் செய்யும் என்பதற்கு மாருதி அருமையான ஒரு எடுத்துக்காட்டு. சேர்மன், நிர்வாக இயக்குனர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையில் அனைவருக்கு ஒரே துணியில் தைத்த சீருடைதான் என்பதை மாருதி கொண்டுவந்தது. அனைத்து ஊழியர்களும் சேர்ந்து உணவு சாப்பிட ஒரே அறைதான்; எக்சிகியூட்டிவ்களுக்கு என்று தனியான, ‘உயர்தர’ அறை, ‘உயர்தர உணவு’ என்று கிடையாது என்று முடிவெடுத்தது. அனைவருக்கும் ஒரே கழிப்பிடம் என்று முடிவு செய்தது அடுத்து! தானாகவே ஊழியர்களை அழைத்து கட்சி சாரா யூனியன் ஒன்றை அமைக்க வைத்தது மாருதி. அடுத்து ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையைத் தீர்மானம் செய்வதில் காட்டிய புதுமையைச் சொல்லவேண்டும்.

அந்தக் கட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊக்கத்தொகை 8.33% (அதாவது ஒரு மாதச் சம்பளம்); அதிகபட்ச ஊக்கத்தொகை 12%. சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் அரசின் முன் அனுமதி பெற்று 15% வரை கொடுக்கலாம். நிறுவனத்துக்கு லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்தாலும் சரி. ஆனால் மாருதி, ஊழியர்கள் எந்த அளவுக்கு குறிப்பிடப்பட்ட இலக்குக்கு மேல் எட்டுகிறார்கள் என்பதைச் சரியாகக் கணிக்க ஒரு ஃபார்முலாவைக் கொண்டுவந்தது மட்டுமின்றி, அரசிடம் போராடி, போனஸ் என்பது உச்சவரம்பின்றி எந்த அளவுக்கும் போகலாம் என்று தீர்மானித்தது. அதன் விளைவாக மாருதி ஊழியர்கள் பல வருடங்களில் தங்கள் சம்பளத்தைப் போல ஒன்றரை மடங்கு பணத்தை போனஸாகப் பெற்றார்கள் என்கிறார் பார்கவா.

அதே நேரம், தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்க என்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்தனர். எட்டு மணி நேரம் என்றால் எட்டு மணிநேரம் வேலை - நேரத்தை வீணாக்க அனுமதி கிடையாது. மதிய உணவு இடைவேளை என்பது வேலை நேரத்தில் சேர்த்தி இல்லை. இரு முறை ஏழரை நிமிடங்கள் என்று தேநீர் இடைவேளை. ஆக, ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஊழியரும் குறைந்தது 7 மணி 45 நிமிடங்கள் வேலை செய்தாகவேண்டும். தொழிற்சாலைக்கு 10-15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து உடைமாற்றி, தயாராக இருக்கவேண்டும்.

இடையில் ஒரு பெரும் வேலை நிறுத்தம், ஒரு சிறு வேலை நிறுத்தம் ஆகியவை தவிர தொழிலாளர் - நிர்வாகம் உறவில் பெரும் பிரச்னைகள் ஏதும் மாருதியில் வரவில்லை என்பது மிகவும் சந்தோஷமான விஷயம்.

மூன்றாவதாக மாருதி அரசுத்துறை நிறுவனமாக இருந்தபோதிலும் விற்பனை மேம்பாட்டிலும் வாடிக்கையாளர் உறவிலும் மேம்பட்ட சிந்தனைகளைக் கொண்டிருந்தது. பணம் கட்டி, மூன்று நான்கு வருடங்கள் காத்திருந்து மோசமான ஸ்கூட்டரையோ காரையோ பெற்றுவந்த காலத்தில், வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, தரமான கார்களை நல்ல ஷோரூம்களில் கொண்டுவந்து கொடுத்து, விற்பனைக்குப் பிறகான சேவையை அற்புதமாக மேம்படுத்தி, சர்வீஸிங்கில் கவனம் செலுத்தி, தரமான பார்ட்களை விற்பனைக்குக் கொண்டுவந்து, புதிய புதிய மாடல்களை வாங்கக்கூடிய விலையில் அளித்து... என்று மாருதி நிச்சயமாகவே இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதுமையைப் புகுத்தியது என்று சொல்லலாம்.

மாருதியின் வளர்ச்சி காரணமாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு ஊக்கம் பெற்றது. தாராளமயமாக்கல் காலத்தில் அதனால்தான் ஃபோர்ட், ஹுண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்தன. டாடா மோட்டார்ஸும் அதே வேகத்தில்தான் இன்று முக்கியமான ஒரு கார் தயாரிப்பு நிறுவனமாக ஆகியுள்ளது. இத்தனைக்கும் ஆதாரம் மாருதி சுசுகி போட்ட விதை. இன்று உலக அளவில் கார் நிறுவனங்கள் கதிகலங்கி இருக்கும் நிலையில் இந்திய கார் நிறுவனங்கள்தான் வளர்ச்சி முகமாக உள்ளன. எண்ணற்ற வேலைகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து தந்துள்ளன.

முயன்றால் அரசுத்துறை நிறுவனங்களும்கூட தனியார் நிறுவனங்களைவிடச் சிறப்பாக இயங்கமுடியும் என்பதற்கு மாருதியே எடுத்துக்காட்டு. இன்று மாருதியிலிருந்து அரசு விலகிவிட்டது. தன்னிடமிருந்த பங்குகளை சுசுகி நிறுவனத்துக்கும் இந்தியப் பொதுமக்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் விற்றுவிட்டது. ஆனால் டிஸ்-இன்வெஸ்ட் செய்த பிற நிறுவனங்களைப் போலன்றி மாருதியை உருவாக்கி டிஸ்-இன்வெஸ்ட் செய்ததில் அரசு பெருமை கொள்ளலாம். வருத்தப்படவேண்டிய அவசியமே இல்லை. இனியும் வரும் ஆண்டுகளில் மாருதி தன் முதன்மை நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

Wednesday, May 12, 2010

மாமல்லபுரம் - ஒரு சிறுவனின் பார்வையில்

சென்னை தக்கர் பாபா வித்யாலயா கட்டடத்துக்குள் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தங்குமிடம் உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களை அழைத்துக்கொண்டு, காந்தி ஸ்டடீஸ் செண்டர் அண்ணாமலை மாமல்லபுரம் சென்றார். செல்வதற்குமுன், பேரா. சுவாமிநாதனின் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷனை அவர்களுக்குப் போட்டுக் காண்பித்துள்ளார்.

ஒரு நாள் முழுவதும் சுற்றிவிட்டு வந்த குழந்தைகள் அடுத்த நாள் தாங்கள் பார்த்ததை படம் வரைந்து கட்டுரையாக எழுதியுள்ளனர். அதிலிருந்து மிகச் சிறப்பானதாக இருக்கும் ஒன்றை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதை வரி வரியாகப் படித்து ரசிக்கவேண்டும். பல விஷயங்கள் புலப்படும்! இதனை உருவாக்கிய சிறுவன் வீரமணி நான்காம் வகுப்பு படிக்கிறான்.


ஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகுதி

வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத்தொகுதி, விஷ்ணு திரிவிக்கிரமனாக விசுவரூபம் எடுத்து, வலக் காலை பூமியில் அழுந்தி, இடக்காலால் ஓங்கி, உயர்ந்து, வானைக் கீறிப் புறப்பட்டு ஆகாயத்தை அளக்க முனையும் அந்தக் கணத்தில் எடுக்கப்பட்ட ஒரு freeze frame.

எப்படி வராகம் விசுவரூபம் எடுத்துள்ளதோ அதற்கு இணையான, அதைவிடப் பெரிய விசுவரூபம் இது.

நரசிம்ம அவதாரம் எடுத்து, தன் பக்தன் பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிப்பட்டு, இரணியகசிபுவைப் பிளந்து கொன்று, ஆட்சியை பிரகலாதனுக்கு அளிக்கிறார் விஷ்ணு. பிரகலாதனின் பேரன் மகாபலி.

பாகவதத்திலும் வேறு சில இடங்களிலும் வாமன அவதாரம் பற்றி விரிவாக வருகிறது. பாகவதத்தின் வெர்ஷனை எடுத்துக்கொள்வோம். புராணங்களைப் பார்வையிடும்போது காலக்குழப்பங்கள் ஏற்படுவது இயற்கையே. எனவே கேள்விகள் கேட்காமல் கதையை மட்டும் பாருங்கள்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, அது தேவர்களுக்கு மட்டும் போய்ச் சேருமாறு செய்கிறார் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு. இதனால் தேவர்களின் கை ஓங்கியுள்ளது.

பிரகலாதனனின் மகன் விரோசனனின் மகன் மகாபலி. அசுரர்களின் தலைவனாக இருக்கும் மகாபலி தேவர்களுடனான போரில் கொல்லப்படுகிறான். ஆனால் அசுர குரு சுக்கிராச்சாரியாரின் தவ வலிமையால் மகாபலி மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான். கடும் போரில் தேவர்களையும் இந்திரனையும் அடித்து விரட்டி தேவலோகத்தைக் கைப்பற்றுகிறான்.

தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர்கள் இழந்த தேவலோகத்தை மீட்டுத்தர வாமனராக அவதாரம் எடுக்க முடிவெடுக்கிறார் விஷ்ணு. இந்திரனின் தாய் அதிதிக்கும் தந்தை காஸ்யபருக்கும் மகனாகப் பிறக்கிறார். இயல்பிலேயே குள்ள உருவம். உபநயனம் முடிந்து, தலையில் அரைக்குடுமி, மார்பில் பூணூல், கையில் சிறு குடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றுடன் கிளம்புகிறார்.

எங்கே கிளம்புகிறார்?

மகாபலி ஒரு மாபெரும் யாகத்தைச் செய்துகொண்டிருக்கிறான். வாமனர் நேராக அங்கே போகிறார். யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறைப்படி, மகாபலி, வாமனரை அழைத்து, கால் கழுவி, மரியாதை செய்வித்து, என்ன வேண்டுமோ அதை அவருக்குத் தருவதாகச் சொல்கிறான். மூன்றடி மண் போதும் என்கிறார் வாமனர்.

அந்தக் கட்டத்தில் சுக்கிராச்சாரியாருக்குப் புரிந்துவிடுகிறது, வந்திருப்பது சாதாரண ஆள் இல்லை என்பது. என்ன கபட நாடகம் என்பது புரியவில்லை. எனவே மகாபலியைத் தனியே அழைத்து, எதையும் கொடுக்காதே என்று எச்சரிக்கிறார். ஆனால் ஏற்க மறுக்கிறான் மகாபலி. தன் கையில் உள்ள கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து, தருவதாகச் சத்தியம் செய்ய மகாபலி முனையும்போது சுக்கிராச்சாரியர் வண்டாக மாறி கமண்டல ஓட்டையை அடைத்துக்கொள்கிறார். வாமனர் தன் குடையிலிருந்து ஒரு கம்பியை எடுத்து, ஓட்டையைக் குத்த நீர் வருகிறது. சுக்கிராச்சாரியாருக்கு ஒரு கண்ணில் பார்வையும் போய்விடுகிறது.

மூன்றடி மண் தருகிறேன் என்று மகாபலி வாக்குக் கொடுத்ததும், வாமனர் விசுவரூபம் எடுக்கிறார். ஓங்கி உயர்கிறார். மகாபலிக்கும் சுற்றி உள்ள அசுரர்களுக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; திகைத்து நிற்கிறார்கள்.

ஓரடியால் பூமியை அளந்து, இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்கிறார், திரிவிக்கிரமனாக உலகளந்த விஷ்ணு. அன்று ஞாலம் அளந்த பிரானின் மூன்றாவது அடியைத் தன் தலைமேல் வைத்துக்கொள்ளச் சொல்லி, கொடுத்த வாக்கைக் காக்கிறான் மகாபலி. மூவுலகும் ஈரடியால் அளந்த திரிவிக்கிரமன், தன் மூன்றாவது அடியால் மகாபலியை அழுத்த, பாதாள லோகத்துக்கு அனுப்பப்படுகிறான் மகாபலி.

Trivikrama Panel, Varaha Mandapam, Mamallapuram

வராக மண்டபச் சிற்பத் தொகுதியைப் பாருங்கள். பூமியில் ஒரு கால் பதிந்து நிற்க, சமநிலை மாறாது நிற்கிறார் விஷ்ணு. அவரது இடது கால் உயர்ந்து, உயர்ந்து அவரது தோளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. எத்திசையில் அந்தக் கால் செல்கிறது என்பதைக் காண்பிக்கிறது எட்டு கைகளில் ஒரு இடது கை. பிற மூன்று இடது கைகளில் ஒன்றில் வில், ஒன்றில் கேடயம், ஒன்றில் சங்கு. வலது கைகளில் ஒன்றில் உருவிய வாள், ஒன்றில் கதை, ஒன்றில் சக்கரம். நான்காவது வலது கை வானையே தாங்கிப் பிடிப்பதுபோல உள்ளது.

தரையில் மகாபலியும் அரக்கர்களும் நடப்பது தெரியாமல் திகைத்தபடி உள்ளது தெரிகிறது. ஒரு அசுரன் பயத்தில் வாளை உருவ, கைப்பிடியில் கையை வைத்துள்ளான்.

இவர்களுக்கு மேலே, திரிவிக்கிரமனின் இரு பக்கமும் தலைக்குப்பின் வட்டம் உள்ள இரு பறக்கும் வானவர்கள். அவர்கள்தான் சூரியனும் சந்திரனும். ஆக திரிவிக்கிரமனின் தலை சூரிய சந்திரர்களுக்கும் மேலே, நீள் விசும்பில் எங்கோ, எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சூரிய சந்திரர்கள் அருகே தலைகீழாகத் தொங்கியபடி, அல்லது விழுந்தபடி ஒருவன்.

இது திரிசங்குவோ என்கிறார்கள் சிலர். ஆனால் நமுசி என்ற அரக்கன் என்கிறார்கள் சிலர். மகாபலியின் யாகம் நடக்கும் இடத்துக்குள் வாமனர் நுழையும்போது, ‘இந்த ஆசாமி பிரச்னைக்குரியவர்’ என்று முதலில் கண்டுகொண்டது நமுசிதான் என்றும் அதனால் அவனை விட்டார் ஓர் உதை திரிவிக்கிரமர் என்றும் கதை.

சூரிய, சந்திரர்களுக்கும் மேல் தளத்தில் தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மா விஷ்ணுவின் ஓங்கி உயரும் பாதத்தை கமண்டல நீரினால் கழுவி பூஜிக்கிறார். சுட்டிக்காட்டும் திரிவிக்கிரமனின் விரலை மற்றொரு கையால் பிரம்மா பிடித்துள்ளார். பிரம்மாவின் அருகே, குதிரை முக தும்புரு மிருதங்கத்தில் இசைக்கிறார். தும்புரு தேவலோக கந்தர்வர்களில் ஒருவர். இசை விற்பன்னர். மறுபக்கம், சிவன் அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறார்.

திரிவிக்கிரமனின் இரண்டு காதுகளில் இருவேறு குண்டலங்கள் - பல்லவச் சிற்பங்கள் அனைத்திலும் இதனைப் பார்க்கலாம். விஷ்ணுவுக்கே உரித்தான் கச்சம், அழகான கிரீடம், கிரீடத்தில் மையத்தில் ஒரே ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது, வஸ்த்ர யஞோபவீதம், கழுத்தில் எளிமையான ஒரே ஒரு ஹாரம்.

நடுவில் ஒரு நாயகன், சுற்றி 10 பிற உருவங்கள் என்றிருந்தாலும் வேண்டிய அளவு white space இந்த தொகுப்பில் உள்ளது. நடுவில் இருப்பவர் மட்டும் அசையாது இருக்கிறார். சுற்றி உள்ள அனைவரிடமும் இயக்கம். ஒருவர் மிருதங்கம் வாசிக்கிறார், இருவர் பூஜிக்கிறார், இருவர் வானில் ஒளிவீசிப் பறக்கிறார்கள், ஒருவர் உதைத்த உதையில் பந்தாகப் பறக்கிறார், நால்வர் கையைக் காலை அசைத்தபடி உள்ளனர். சிவனிடம் அதிக இயக்கம் இல்லை.

***

இரண்டு நாள்களுக்கு முன் திருச்சி, திருவெள்ளறை, நாமக்கல், நார்த்தாமலை, மலையடிப்பட்டி, குன்றாண்டார்கோவில் ஆகிய இடங்களில் உள்ள குடைவரைக் கோயில்களைப் பார்த்துவிட்டு வந்தேன்.

நாமக்கல்லில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. நரசிம்மர் குகை, அனந்தசயனர் குகை. இந்த இரு குகைகளிலும் சுவர் புடைப்புச் சிற்பங்களில் திரிவிக்கிரமனை வடித்துள்ளனர். இரண்டிலுமே, கதை இன்னுமும் விரிவாக உள்ளது. குள்ள வாமனர் யாசகம் கேட்பதையும் மகாபலி கமண்டலத்திலிருந்து நீர் வார்ப்பதையும் சேர்த்தே வடித்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பிக்கு அதற்கான இடம் கிடைக்கவில்லை தெரிகிறது.

நாமக்கல் பற்றி தனியே எழுதவேண்டும். நரசிம்மர் குகையில் அற்புதமான நான்கு புடைப்புச் சிற்பத் தொகுப்புகள்: விஷ்ணு வைகுண்டத்தில் இருக்கும் காட்சி, நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் காட்சி, வராகம் பூமிதேவியைத் தூக்கிச் செல்லும் காட்சி, திரிவிக்கிரமன் ஓங்கி உலகை அளக்கும் காட்சி. இங்கே திரிவிக்கிரமன் இடக்காலால் ஆகாசத்தை அளக்கிறார்.

அனந்தசயனக் குகையில் திரிவிக்கிரமன் வலக்காலால் ஆகாசத்தை அளக்கிறார். அங்குள்ள அனந்தசயனர் வழிபாட்டில் உள்ளதால் சொல்லவொண்ணாக் கொடுமையை அனுபவிக்கிறார். நாமக்கல்லில் உள்ள அனைத்துச் சிற்பங்கள் மேலும் வழுவழுவென்று எண்ணெய்க் கரி கலவையைப் பூசி, அடியில் உள்ள கிரானைட் கல் தெரியாத அளவுக்கு ஆக்கி, அதன்மேல் மட்டமான வெள்ளை பெயிண்டால் கன்னாபின்னாவென்று நாமங்களை வரைந்து, அதற்கிடையே சிகப்பு பெயிண்டால் ஸ்ரீசூர்ணத்தைக் கிறுக்கி, இரண்டு வயதுக் குழந்தை கலர் கலர் கிரேயானை எடுத்து தி லாஸ்ட் சப்பர் ஓவியத்தின் இடையே கிறுக்கியதுபோலச் செய்திருக்கிறார்கள். வழிபடும் மூர்த்தி என்பதால் அந்த அனந்தசயனருக்கு அழுக்கு வஸ்திரம் சார்த்தி, ஆங்கங்கே கிரீடம் அது இது என்று அசிங்கமான அணிகலன்களையும் அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஒரிஜினல் சிற்பி கல்லில் வடித்த கிரீடம், கச்சத்தின் அழகையா இந்த அழுக்கு ஆடைகளும் அணிகளும் மீறிவிடப்போகின்றன? முட்டாள்கள்!

(தொடரும்)

விஜயின் பதிவில் கல்லிலே கலைவண்ணம் காணும் பல பதிவுகள் உள்ளன. கட்டாயமாகப் படியுங்கள்.

Tuesday, May 11, 2010

எழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்

உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான எழுதும் முறைகள் உருவாகியுள்ளன. இவை எழுத்து அமைப்பிலும் சரி, வரிவடிவிலும் சரி, எண்ணற்ற வேறுபாடுகள் கொண்டவை. சில எழுத்து அமைப்புகள் பட வடிவிலானவை. சில எழுத்து முறைகளில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் பல்வேறு ஒலிகளை உருவாக்கக்கூடியவை. வேறு சில எழுத்து முறைகளில் ஒரு எழுத்துக்கு ஒரே ஒரு உச்சரிப்புதான். சிலவற்றில் உயிர் எழுத்துகள் (vowels) என்பவையே கிடையாது. அனைத்துமே மெய் எழுத்துகள்தான்.

இந்த எழுத்து முறைகள் உருவாவதற்கு வெகு காலம் முன்பிலிருந்தே பல மொழிகள் பேச்சு வடிவில் இருந்துள்ளன. அந்த மொழிகள் ஒவ்வொன்றும் எண்ணற்ற சொற்களும் தெளிவான இலக்கணமும் கொண்டவையாக இருந்துள்ளன. அதன் பின்னரே எழுத்து முறை உருவாகியுள்ளது. சில மொழிகளுக்கு இன்றுவரை எழுத்து வடிவமே கிடையாது. (எழுத்து வடிவம் தேவையும் இல்லை!)

மொழி வேறு, எழுத்து முறை வேறு. ஒரு குறிப்பிட்ட எழுத்து முறைக்கே பல்வேறு வரிவடிவங்கள் உண்டு. இந்த வரிவடிவங்களும் காலத்தால் மாறிக்கொண்டே வருகின்றன.

சில எழுத்துமுறைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்து பின்னர் வழக்கொழிந்து காணாமல் போயுள்ளன. அவற்றை பிற்காலத்தில் வந்தவர்கள் எப்படி மீண்டும் கண்டுபிடித்தனர்? உதாரணமாக, பழங்காலக் கல்வெட்டுகளிலிருந்து எகிப்திய, சுமேரிய, இந்திய (பிரமி) எழுத்துக்கள் எப்படி கண்டுகொள்ளப்பட்டன? அதே நேரம், ஏன் சிந்து சமவெளியில் கிடைத்தவற்றை இன்றுவரை புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது?

இதுபோன்ற பலவற்றையும் ஒரு நாளில் சொல்லிவிட முடியாது. எனவே கிழக்கு மொட்டைமாடியில் ஒரு தொடரை ஆரம்பிக்கிறோம்.

பேராசிரியர் சுவாமிநாதன் மே 2010 தொடங்கி, ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், எழுத்து முறைகள் பற்றி கிழக்கு மொட்டைமாடியில் பேசுவார். முதலாவது கூட்டம் வியாழன், 13 மே 2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் எழுத்து முறைகள் பற்றிய அறிமுகம் இருக்கும். அதன்பின் ஒவ்வொரு மாதமும் எந்த தினத்தில் கூட்டம் நடக்கும், அது எதைப்பற்றியதாக இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நீங்கள் கலந்துகொள்வதோடு உங்கள் (10 வயதுக்கு மேற்பட்ட) குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். அவர்களுக்குப் புரியும் வகையில் இந்தப் பேச்சுத் தொடர் இருக்கும்.

Monday, May 10, 2010

சிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வு

வரும் வார இறுதியில் - 15, 16 மே 2010 - நியூ ஹொரைஸன் மீடியா சார்பில் பா.ராகவனும் நானும் சிங்கப்பூரில் (தமிழில்) எடிட்டிங் சம்பந்தமான ஒரு பயிற்சி அரங்கை நடத்துகிறோம். நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஆஃப் சிங்கப்பூர் ஏற்பாடு செய்திருக்கும் அமர்வு இது. (எப்படி இதில் பங்கெடுப்பது, எவ்வளவு கட்டணம், யாரிடம் தொடர்புகொள்ளவேண்டும் என்ற எதுவும் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் சிங்கப்பூரில் இருந்தால் NBDCS-ஐத் தொடர்புகொள்ளவும்.

அடுத்த வார இறுதியில் - 22, 23 மே 2010 - மலேசியாவில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இதே பயிற்சி அமர்வு நடைபெறுகிறது. மலேசியாவில் உள்ளவர்கள் இந்த அமர்வில் கலந்துகொள்ள விரும்பினால் இந்தச் சங்க நிர்வாகிகளை அணுகலாம். கட்டண விவரம், எவ்வளவு பேர் பங்குகொள்ளலாம் என்பதையும் அவர்களிடமே கேட்டு அறிந்துகொள்க.

Thursday, May 06, 2010

பூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி

தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். பல புராணங்களிலும் (வராக புராணம் முதற்கொண்டு) தென்படும் கதை இது.

பூமியைச் சுருட்டி எங்கோ கடலுக்கு அடியில் பாதாளத்தில் கொண்டுபோய் வைத்துக்கொண்டான் ஹிரண்யாக்ஷன். (இவனும் ஹிரண்யகசிபுவும் சகோதரர்கள்; அசுரர்கள் - அடுத்த நரசிம்ம அவதாரத்தில் இடம் பெறுகிறான் ஹிரண்யகசிபு. தொடர்ந்து, அடுத்த வாமன அவதாரத்தில் இடம்பெறுகிறான் ஹிரண்யகசிபுவின் மகனான பிரகலாதனின் பேரனான மஹாபலி.) ஹிரண்யாக்ஷனை அழித்து, பூமியை மீட்கவேண்டும்.

விஷ்ணு, பன்றி வடிவில் அவதாரம் செய்து மண்ணைக் குடைந்து, கடலுக்கு அடியில் சென்று, ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமியை மீட்டு, மீண்டும் மேலே எடுத்துவந்து, இந்த உலகைக் காப்பாற்றுகிறார்.

இந்தியா முழுவதிலும் உள்ள பல இடங்களில் இந்த தீம் - பூமித் தாயுடன் உள்ள வராக மூர்த்தியைப் பார்க்கலாம். பல இடங்களில் வழிபடும் கடவுளாக இந்த பூவராகன் உள்ளார். மாமல்லபுரத்தில் இரு மண்டபங்கள் வராகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று வராக மண்டபம். அதில் ஒரு சுவற்றில் மேலே சொன்ன வராக நிகழ்வு உள்ளது. மற்றொன்று ஆதிவராக மண்டபம் எனப்படும் இன்றும் வழிபாட்டில் இருந்துகொண்டிருக்கும் விஷ்ணுவின் கோவில். அதன் உள்ளே வழிபடும் சிலை - சுதையால் ஆனது - பூமித் தாயை ஏந்தியுள்ள வராகம். இந்த சுதையால் ஆன சிலை சமீபத்திய உருவாக்கம். இந்த ஆதிவராக மண்டப வழிபாட்டுச் சிலையுடன் ஒப்பிட்டால், வராக மண்டபத்தின் பல்லவர் காலச் சிற்பம் எவ்வளவு உயர்ந்த தரம் கொண்டது என்று விளங்கும்.

Varaha Panel, Varaha Mandapam, Mamallapuram

வராக மூர்த்தி நீண்ட நெடிய உருவில், பக்கவாட்டில் பார்த்தபடி நிற்கிறார். இது விசுவரூபம். எப்படிச் சொல்வது? ஒரு கால், நாக அரசன் ஒருவனது தலைமீது அழுத்தியபடி உள்ளது. அவனைச் சுற்றி தாமரை மலர்கள் உள்ளன. சுற்றி அலை அலையாகச் செதுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் அது கடல் என்று பொருள்.

இடது மேல் மூலையில் தலையில் வட்டவடிவம் கொண்ட ஓர் உருவைப் பார்க்கலாம். அப்படி என்றால் அது சந்திரன் அல்லது சூரியன். எனவே வராகத்தின் தலை வானுலகம் வரை சென்றுவிட்டது. கால் கடல்மீது உள்ளது. எனவே விசுவரூபம். ஒரு தொடையில் பூமித் தாய் உட்கார்ந்திருக்கிறாள். வராகத்தின் மூக்கு பூமிதேவியின் மார்பை உரசி முகர்கிறது. அவள் முகத்தில் வெட்கம் தெரிகிறது. அவளது வலது பாதம், இடது பாதத்தின்மீது குறுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக, அவளது வலது தொடை, இடது தொடைக்குச் சற்று மேலாகச் செல்கிறது. வராக மூர்த்தி, வலக்கையால் அவளது பின்பக்கத்தை ஏந்தி, இடக்கையால் கணுக்காலைப் பிடித்து, அவள் விழாதவாறு அன்புடன் தாங்கிக்கொண்டிருக்கிறார். அவரது மற்ற இரு கைகளில் சங்கும் சக்கரமும். சக்கரம், பிரயோகச் சக்கரம் என்ற வடிவில் எறியும் விதத்தில் இருக்கிறது. பிற்காலச் சிற்பங்களில் சக்கரம் பட்டையாக இருக்கும்.

மகிஷனுக்கு எப்படி எருது தலை, மனித உடல், உடற்கூறு ரீதியில் அழகாகப் பொருத்தப்பட்டிருந்ததோ, அதேபோல இங்கு பன்றித் தலை மனித உடலில் கழுத்தருகே அழகாக ஒட்டவைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள். அழகான கிரீடம். கழுத்தில் எளிமையான மாலை. கையில் மணிக்கட்டிலும் தோள்பட்டையிலும் அணிகள்.

வலப்பக்கம் பிரம்மா நிற்கிறார். அவரது தலை கொஞ்சம் சிதைந்துபோயுள்ளது. அவருக்கு நான்கு கைகள். பொதுவாக வழிபாட்டுக்குரிய சிலையாக இருக்கும்பட்சத்தில் முக்கியக் கடவுளுக்கு மட்டும்தான் நான்கு கரங்கள் இருக்கும். அருகில் உள்ள மற்ற கடவுள்களுக்கு இரண்டு கரங்கள்தான் இருக்கும். சோமாஸ்கந்தர் என்றால் சிவனுக்கு மட்டும்தான் நான்கு கரங்கள். உமைக்கு இரு கரங்கள். அருகில் எப்போதும் நிற்கும் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும், குழந்தை சுப்ரமணியருக்கும் இரு கரங்கள்தான். ஆனால் இது கருவறையில் இல்லாமல், சுவற்றில் காணப்படும் சிற்பம் என்பதால் இங்கே பிரம்மாவுக்கு நான்கு கரங்கள் உள்ளன. பிரம்மாவின் ஒரு கையில் கரண்டி உள்ளது. யாகம் வளர்க்கும்போது நெய்யை எடுத்து நெருப்பில் போட உதவும் கரண்டி இது. பிரம்மாவுக்கு அருகில் ஒரு முனிவர் நிற்கிறார்.

மறுபக்கம், ஒரு பெண்ணும் ஒரு முனிவரும் கூப்பிய கைகளுடன் நிற்கின்றனர். நாக அரசனும் கரங்களைக் கூப்பியபடி நிற்கிறான். வராகம் கடலைப் பிளந்துகொண்டு செல்லும்போது கடல் அரசனான இந்த நாக அரசன் உதவவில்லை என்பதால் அவன் தலைமீது அழுத்திக்கொண்டு நிற்கிறார் வராக மூர்த்தி. கைகூப்பியபடி நிற்கும் அந்தப் பெண், நாக அரசனின் மனைவியாக இருக்கலாம். அவனைக் காப்பாற்றவேண்டி அப்படி அவள் இறைஞ்சலாம். அல்லது அவள், அருகில் நிற்கும் முனிவரின் மனைவியாக இருக்கலாம்.

***

சில்ப சாஸ்திரத்தின்படி, வராகம் பூமிதேவியின் உடலின் எந்தப் பகுதியை முகர்கிறதோ அதற்கு ஏற்றாற்போல அந்த நாட்டு அரசனுக்கு சில நன்மைகள் ஏற்படுமாம். எனவே அரசர்கள் தங்கள் தேவையைச் சொல்ல, அதற்கு ஏற்றாற்போல சிற்பிகள் வராக மூர்த்தியை வடிப்பார்களாம். நாங்கள் இந்த இடத்தைப் பார்வையிடச் சென்றபோது, கூட வந்தனர் கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்தபதிகளான உமாபதியும் வேழிநாதனும். நான் பலமுறை கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்தாலும், மார்பை முகரும் வராகம் அரசனுக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் என்பதை அவர்கள் சொல்லவில்லை. அது அவர்களது பரம்பரை ரகசியம்.

(தொடரும்)

டி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா?

(புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது. முழுமையான கட்டுரை இங்கே. சில பகுதிகள் மட்டுமே இதழில் வெளியானது. இம்முறை இந்தியா கோப்பையை ஜெயிக்கும் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன்!)

இதுவரையில் இரண்டு டி-20 உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. 2007-ல் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக. அதில் இந்தியாதான் சாம்பியன். அடுத்து 2009-ல் இங்கிலாந்தில். அதில் பாகிஸ்தான்தான் சாம்பியன். இப்போது ஏப்ரல் 30 2010 முதல் மேற்கிந்தியத் தீவுகளில், மூன்றாவது டி-20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது.

2007 தொடங்கி இன்றைக்குள்தான் எத்தனை மாற்றம்! முதல்முறையாக டி-20 உலகக்கோப்பை நடந்தபோது இந்திய ரசிகர்கள் பலருக்கும் அந்த ஆட்டம் புரியவே இல்லை. ஏன், இந்திய அணி வீரர்களுக்கும்கூடத்தான் புரியவில்லை. சச்சின் டெண்டுல்கர் உடல்நலம் நன்றாக இருந்தும்கூட இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றால் எந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்தப் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இன்றோ, பாரம்பரியமாக கிரிக்கெட் பார்க்கும் இந்திய ஆண்கள் தவிர்த்து, பெண்கள், குழந்தைகள், பாட்டிகள், தாத்தாக்கள் என்று அனைவருக்கும் டி-20 ஆட்டம் அத்துப்படி. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு யாருக்கும் டி-20 ஆட்டம் தெரிந்திருக்காது என்று அடித்துச் சொல்லலாம்.

இத்தனைக்கும் காரணம் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக். இன்று ஊழல், கறுப்புப் பணம், அழகிகளுடன் உல்லாசம் என்று இந்திய நாடாளுமன்றத்தில் சந்தி சிரிக்கும் அதே ஐ.பி.எல். ஒரு மத்திய அமைச்சர் பதவி விலகல், மேலும் இரு அமைச்சர்கள்மீது சந்தேகப் பார்வை, ஐ.பி.எல்லை நிர்வகித்து வரும் லலித் மோடிமீது எக்கச்சக்கக் குற்றச்சாட்டுகள், இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கக்கூடும் என்ற நிலை என அனைத்தையும் தாண்டி ஐ.பி.எல்தான் டி-20 கிரிக்கெட்டை இந்திய ரசிகர்களிடம் கொண்டுசென்றது. இதே ஐ.பி.எல் காரணமாகவே இந்தியா டி-20 உலகக்கோப்பையை இம்முறை எளிதில் வெல்லவும் கூடும்.

ஐ.பி.எல் கிடக்கட்டும். உலகக்கோப்பையை நோட்டம் விடுவோம். ஒரு நாள் (50 அல்லது 60 ஓவர்) உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா எந்தக் காலத்திலுமே தன்னம்பிக்கையுடன் விளையாடியதில்லை. 1983-ல் இந்தியா வென்றபோதும்கூட உலகத்தின் அவநம்பிக்கைகளைத் தாண்டி, ஒருவித அதிர்ஷ்டம் காரணமாகவே இந்தியா வென்றது என்று சொல்லலாம்.

உலகக்கோப்பையை வெல்ல ஒரு தனி மனநிலை வேண்டும். எக்கச்சக்க திறமை வேண்டும். பிரமாதமான செயல்திட்டம் வேண்டும். பயமறியா கேப்டன் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை வேண்டும். ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை ஆட்டங்களில் இந்தியாவிடம் இன்றுவரை - 1983 சேர்த்து - இந்த மனநிலை இருந்ததில்லை.

ஆனால் இப்போதைய டி-20 நிலையே வேறு. 2008, 2009, 2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 8 உள்ளூர் அணிகள் கலந்துகொண்ட ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய வீரர்கள் கடுமையாக மெருகேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60 ஆட்டங்கள். இந்தியாவின் முதல் நிலை ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஆட்டக்காரர்கள், ரிட்டயர் ஆன ஆட்டக்காரர்கள் என்று அனைவரும் விளையாடியிருக்கிறார்கள். அதுவும் தமக்குள்ளாக மட்டுமல்ல, உலகின் சிறந்த ஆட்டக்காரர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

எனவே 20 ஓவர்களில் எப்படிப் பந்துவீசவேண்டும், எப்படி முதல் சில ஓவர்களில் பேட்டிங் செய்யவேண்டும், எப்படி ரன்களை சேஸ் செய்யவேண்டும், எப்படி எதிரணி அடித்து நொறுக்கும்போது ரன்களை மட்டுப்படுத்துவது, எது பாதுகாப்பான ஸ்கோர் போன்ற பல வியூகங்களும் இந்திய வீரர்களுக்கு அத்துப்படி.

இதே நேரத்தில் பிற நாடுகளிலும் - முக்கியமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து - டி-20 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் இந்தியா அளவுக்கு பணபலத்துடன், உலகின் முன்னணி வீரர்களைக் கொண்டுவந்து நடப்பதில்லை. காமாசோமாவென்றுதான் நடக்கின்றன. பாகிஸ்தானிலும் கடந்த பல ஆண்டுகளாக டி-20 ஆட்டங்கள் உண்டு. ஆனால் இன்று பாகிஸ்தானில் யார் கிரிக்கெட் ஆடுகிறார்கள், யார் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதே புரியவில்லை.

முதல் டி-20 உலகக்கோப்பையின்போது இந்தியா ஜெயித்தது குருட்டு அதிர்ஷ்டம்தான் என்பேன். யாருக்குமே புரியாத ஒரு ஆட்டத்தில், கிடைத்த இடைவெளியில் ‘ஜஸ்ட் பாஸ்’ என்றுதான் இந்தியா ஜெயித்தது. முதல் சுற்றைக் கடந்து சூப்பர் 8 என்ற நிலையை அடைய அப்போது இந்தியா கஷ்டப்படவில்லை. ஆனால் சூப்பர் 8-ல் முக்கி முக்கித்தான் இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது. அதன்பின் இரு ஆட்டங்கள், இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு, மிகவும் திகிலான கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிகொண்டது.

இரண்டாம் உலகக்கோப்பையின்போது இந்தியாவின் விளையாட்டு படுமோசமாக இருந்தது. சூப்பர் 8 போட்டிகள் மூன்றில் ஒன்றில்கூட இந்தியா ஜெயிக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என்று அனைத்திடமும் தோல்விதான். மாறாக பாகிஸ்தானோ சூப்பர் 8-ல் ஒரு தோல்வியுடன் அரை இறுதி சென்று அங்கே தென் ஆப்பிரிக்காவை ஜெயித்து, இறுதிப்போட்டியில் இலங்கையை வெற்றிகொண்டது.

ஃபார்ம் என்று பார்த்தால், அடுத்தடுத்து இரு உலகக்கோப்பைகளிலும் இறுதிப் போட்டியை அடைந்து, ஒன்றில் தோற்று அடுத்ததில் வென்ற பாகிஸ்தானைத்தான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு மூன்று பின்னடைவுகள். ஒன்று: இந்தியா-பாகிஸ்தான் ராஜீய உறவு சுமுகமாக இல்லாததால் அவர்கள் ஐ.பி.எல்லில் சேர்த்துக்கொள்ளப்படாதது. இரண்டு: பாகிஸ்தானில், இலங்கை அணி மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகே அந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்காமல் இருத்தல். மூன்று: சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றுவந்த பாகிஸ்தான் அணியின் சில வீரர்கள்மீது அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் ஒழுங்கீனம், மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற குற்றங்களைக் காட்டி சிலரை கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்துள்ளது.

மாறாக இந்திய அணியிலோ நல்ல தொடர்ச்சி. 2009 உலகக்கோப்பை அணியில் இருந்த 15 பேரில் 11 பேர் மீண்டும் 2010 அணியில் உள்ளனர். மாற்றப்பட்டுள்ள நால்வரும் சரியான மாற்றங்களே. இந்தப் பதினைந்து பேர்தான் இந்தியாவின் சிறந்த வீரர்கள் என்று சொல்லலாம். 2010 ஐ.பி.எல்லில் மிக அற்புதமாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் டி-20 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளாத ஒரு நிலைதான் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தரும். ஆனால் அவர் இல்லாமலேகூட இந்தியாவால் இந்த உலகக்கோப்பையை ஜெயிக்க முடியும்.

பிற நாடுகளின் நிலை என்ன? ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியான ஆஸ்திரேலியாவுக்கு இன்றுவரை டி-20 பற்றிய தெளிவான புரிதல் இல்லை. முதல் உலகக்கோப்பையின்போது அரை இறுதிவரை வந்த ஆஸ்திரேலியா, இரண்டாம் உலகக்கோப்பையில் அந்த நிலையை அடையவில்லை. இங்கிலாந்தோ, இலங்கையோ, நியூசிலாந்தோ இந்த வடிவத்தில் தங்கள் வலிமையை உலக அளவில் பறைசாற்றவில்லை.

எனவே இந்த முறை இந்தியாவும் கட்டாயமாக அரை இறுதி வரும். பாகிஸ்தான் கொஞ்சம் தட்டுத் தடுமாறி அரை இறுதி வரலாம். அதன்பின் யார் வேண்டுமானாலும் உலகக்கோப்பையை வெல்லலாம். இந்தியா இறுதிப் போட்டியை வெல்லாவிட்டால்தான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும்.

Tuesday, May 04, 2010

சுஜாதா புத்தகங்கள் மறுபதிப்பு

கிழக்கு பதிப்பகம், சுஜாதா குடும்பத்தினருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவருடைய பல புத்தகங்களை மறுபதிப்பு செய்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியின்போது 5 நாவல்கள் வெளியாகின. இப்போது மேலும் 12 புத்தகங்கள் அச்சாகி வந்துள்ளன. மேலும் 30 புத்தகங்கள் அச்சாக்கத் தயாராக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஜனவரியில் வெளியான புத்தகங்கள்:
ஆஸ்டின் இல்லம்
தீண்டும் இன்பம்
மீண்டும் ஜீனோ
நில்லுங்கள் ராஜாவே
நிறமற்ற வானவில்

நாளை முதல் கிடைக்க உள்ள புத்தகங்கள்:
24 ரூபாய் தீவு
அனிதாவின் காதல்கள்
நைலான் கயிறு
வாய்மையே சில சமயம் வெல்லும்
அப்ஸரா
ஆர்யபட்டா
கமிஷனருக்குக் கடிதம்
எதையும் ஒரு முறை
இதன் பெயரும் கொலை
மெரீனா
மூன்று நாள் சொர்க்கம்
ஊஞ்சல்

இதற்குமுன் இந்தப் புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பக்கம் தாண்டவில்லை என்றால், கூடச் சில சிறுகதைகள் அல்லது ஒரு குறுநாவல் என்று எதையாவது சேர்த்து வெளியிட்டார்கள். அப்படி வரும்போது இரண்டு புத்தகங்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் வந்துள்ளது. (உ.ம்: மூன்று நாள் சொர்க்கம் என்ற கதை.) ஆனால் மேலே நான் குறிப்பிட்டுள்ளவற்றுள் அந்த ஒரு கதை மட்டும்தான் உள்ளது. ஊஞ்சல் மட்டும் ஒரு நாடகம். மற்றவை எல்லாம் நாவலாக, தொடர்கதையாக எழுதப்பட்டவை.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜாதாவின் அனைத்துப் புத்தகங்களையும் வாங்க

அனந்தசயனச் சிற்பத் தொகுதி

எத்தனையோ கோயில்களில் பள்ளிகொண்ட விஷ்ணுவைப் பார்க்கலாம். அவர் வெறும் தரையில் படுத்திருக்கலாம் அல்லது பெரும்பாலும் பாம்புப் படுக்கையில் படுத்திருக்கலாம். சாதாரணமாக வணங்குதலுக்குரிய சிற்பங்களில் காணக்கிடைக்காத ஒன்று இங்கே மஹிஷாசுரமர்தினி மண்டபத்தில் காணப்படும் அனந்தசயனத் தொகுதியில் உள்ளது.

இந்தக் கதையும் மார்க்கண்டேய புராணத்தின் தேவி மஹாத்மியத்தில் வருவதுதான். மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை விஷ்ணு அழிக்கும் கதை. தேவி பாகவதத்தில் சற்றே மாறுபட்ட வெர்ஷன். மகாபாரதத்திலும் இந்தக் கதை வருகிறது.

முதலில் தேவி மஹாத்மிய வெர்ஷனைப் பார்ப்போம். பிரளயத்துக்குப்பின் இந்த உலகை மீண்டும் படைத்து, பிரம்மாவை உருவாக்கி, சிருஷ்டிக்கான செயல்களில் அவரை இறங்கவைத்தபின் விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்கிறார். அப்போது விஷ்ணுவின் காது அழுக்கு உருண்டு திரண்டு, அதிலிருந்து மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் வருகின்றனர்.

அவர்கள் இருவரும் பிரம்மாவைக் கொல்லச் செல்கின்றனர். பிரம்மாவோ பயந்து விஷ்ணுவிடம் ஓடுகிறார். விஷ்ணு யோகநித்திரையில் இருப்பதைப் பார்த்து, மாயையாகிய மஹா சக்தியை வழிபட ஆரம்பிக்கிறார். விஷ்ணுவின் யோகநித்திரைக்குக் காரணமே மாயைதான். பிரம்மாவின் புகழுரையைக் கேட்ட மாயை விஷ்ணுவிடமிருந்து விலகிக்கொள்ள விஷ்ணு விழித்தெழுகிறார். மது, கைடபனுடன் போர் புரிகிறார்.

போர் 5,000 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் விஷ்ணுவால் அரக்கர்களை ஒன்றும் செய்யமுடிவதில்லை. அப்போது மாயை அந்த அரக்கர்களைத் தழுவ, அவர்கள் இருவரும் விஷ்ணுவிடம், ‘நீ எங்களிடம் வரம் கேள்’ என்கின்றனர். ‘நீங்கள் இருவரும் என் கையால் இறக்கவேண்டும்’ என்ற வரத்தை விஷ்ணு கேட்கிறார்.

வரம் கேட்டால் கொடுத்துவிட வேண்டும்! அதனால் உயிரே போனாலும் சரி. அரக்கர்கள் விஷ்ணு கேட்டதைக் கொடுக்க, அவர் தன் சுதர்சனச் சக்கரத்தால் அவர்களது தலையைக் கொய்கிறார். பிரம்மா தப்பிக்கிறார்.

தேவி பாகவதத்தில் இன்னும் கொஞ்சம் உப்பு, மிளகாய் சேர்த்துத் தயாரித்துள்ளார்கள். இங்கேயும் விஷ்ணுவின் காது அழுக்கில் உருவானவர்கள்தான் இந்த அரக்கர்கள். இங்கேயும் அவர்கள் பிரம்மாவைப் பொலி போடச் செல்ல, அவர் ஓடிவந்து தேவியை வணங்க, அவள் விஷ்ணுவை விழிக்கச் செய்ய, போர் நடக்கிறது. ஆனால் போரில் விஷ்ணுவால் ஜெயிக்க முடிவதில்லை. சோர்ந்து போகிறார். ஆனால் அரக்கர்களோ சோர்வதில்லை. எனவே விஷ்ணு, அரக்கர்களிடம் பேசிவிட்டு டைம் அவுட் வாங்குகிறார்.

அப்போதுதான் விஷ்ணுவுக்கு விவரம் புரிகிறது. அரக்கர்கள் இருவரும் தேவியிடம் வரம் வாங்கியவர்கள். அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போதுதான் தங்கள் உயிரை விடுவார்கள். உடனே விஷ்ணு, தேவியை வேண்ட, அவள் அரக்கர்கள்மீது தன் கடைக்கண் பார்வையை காமக் கணைகளாக வீசுகிறாள். அப்போது விஷ்ணு அரக்கர்களிடம் தான் அவர்களது சண்டையை மெச்சி, அவர்களுக்கு வரம் தர விரும்புவதாகச் சொல்கிறார். ஆனால் தற்பெருமை மிக்க அரக்கர்கள், ‘உன் வரம் எனக்கு வேண்டாம். நீ வரம் கேள், நாங்கள் தருகிறோம்’ என்கிறார்கள். உடனே விஷ்ணு அவர்களைக் கொலை செய்ய வரம் கேட்டு, பெற்று, அவர்களது கழுத்தை அறுக்கிறார்.

மகாபாரதக் கதையில் தேவியோ, மாயையோ வருவதில்லை. விஷ்ணு மது, கைடபர்களை அழிக்கிறார்.

***

மஹிஷாசுரமர்தினி மண்டபக் காட்சியை இப்போது பாருங்கள்.

Anantasayana Panel, Mahishasuramardini Mandapam, Mamallapuram

மஹிஷாசுரமர்தினி தொகுப்புடன் ஒப்பிடும்போது மிகச் சில பாத்திரங்களே இங்கு உள்ளனர். பாற்கடல். ஆதிசேஷன் படுக்கையாக உள்ளது. ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷனைக் காண்பிக்கும்போது ஐந்து தலையை மட்டும் காட்டுவது வழக்கம். இங்கே ஐந்து தலைகளும் மிக அழகாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. புடைப்புச் சிற்பம் என்றாலுமேகூட ஆழத்தைக் காண்பிக்க, மூன்று தலைகள் செங்குத்தாக மேலே செல்லும்; மூன்று தலைகள் கிடைமட்டமாக இருக்கும். சேர்த்துப் பார்க்கும்போது ஆழம் வந்துவிடுகிறது அல்லவா? ஆதிசேஷன் சுருட்டிக்கொண்டிருப்பது பொதுவாக நாம் எப்போதும் பார்க்கும் வகையில் அல்ல. ஒரு கார்க்ஸ்க்ரூ மாதிரி சுருட்டிக்கொண்டுள்ளது.

விஷ்ணுவின் வலக்கை ஆயாசமாக நன்கு நீண்டுள்ளது. இடக்கை குத்திட்டு முழங்கைக்கு மேல்பகுதி எழும்பியுள்ளது. கழுத்தில் ஒரேயொரு எளிமையான மாலை. அந்த மாலையும் அழகாக புவி ஈர்ப்புக்குத் தோதாக கீழ் நோக்கிப் படர்ந்து விழுந்துள்ள அழகைப் பாருங்கள். தலையில் கிரீடம். எப்போதுமே விஷ்ணுவைக் காண்பிக்கும்போது தலையில் கிரீடம் இருக்கவேண்டும் என்பது சில்ப மரபு. அதனால்தான் தூங்கும்போதும் கிரீடம்!

கால்பக்கம் மதுவும் கைடபனும். ஒருவன் நன்கு திரும்பிக்கொண்டு முதுகில் கைவைத்து நிற்கிறான். மற்றொருவன் தாக்கத் தயாராக கையில் ஒரு கழியை வைத்துள்ளான். அவனும் பாதி திரும்பி, முகத்தை ஒரு கோணத்தில் வைத்துள்ளான். விஷ்ணு இன்னும் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவரது காலடியில் லக்ஷ்மி அவரை எழுப்பும் விதமாகத் துதிக்கிறாள். இந்தத் தொகுதியில் பிரம்மா கண்ணிலேயே படுவதில்லை. ஆனால் மேலே இருவர், கீழே இருவர் என்று நான்கு பேர் உள்ளனர்.

அவர்கள் ஆயுத புருஷர்கள் எனப்படுகிறார்கள். கீழே இருப்பது விஷ்ணுவின் ஆயுதங்களான சக்கரம், சங்கு ஆகியவற்றின் வடிவங்கள். மேலே இருப்பது கதை, வாள் ஆகியவற்றின் வடிவங்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேறு சில வானவர்களாக இருக்கலாம். மேலே உள்ளவர்கள் பறந்து செல்வதுபோலக் காண்பிக்கப்படுகிறார்கள். கால்களை அவர்கள் வைத்திருக்கும் விதத்திலிருந்து இதனை நாம் உணர்ந்துகொள்ளலாம். இங்கு மட்டுமல்ல, மாமல்லபுரச் சிற்பத்தொகுதிகள் பலவற்றிலுமே இதுதான் கன்வென்ஷன்.

விஷ்ணு நித்திரையில் இருக்க, தாக்கவரும் மது, கைடபர்களை ஆதிசேஷன், தானே ஒரு வழி பண்ணிவிட முடிவு செய்து, ஹூம் என்று விஷக் காற்றாக மூச்சுவிடுவதாகவும், அந்தக் காற்றின் வெப்பம் தாளாமல் அரக்கர்கள் உடலைத் திருப்பிக்கொண்டு, முதுகில் கைவைத்திருப்பதாகவும் ஒரு வர்ணனையாளர் சொல்கிறார்.

எதிரே இருக்கும் மஹிஷாசுரமர்தினி சிற்பத்தில் காணப்படும் களேபரங்களுக்கு மாற்றாக, இங்கே ஒருவித அமைதி தெரிகிறது, ஆனால் அதே சமயம் ஆக்‌ஷனும் உள்ளது.

(தொடரும்)

Monday, May 03, 2010

மஹிஷாசுரமர்தினி

மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவி மஹாத்மியத்தில் ஒரு கதை வருகிறது. மஹிஷாசுரன் என்ற அரக்கன், தலை எருதாகவும் உடல் மனித உடலாகவும் கொண்டவன். கடுந்தவம் புரிந்த இந்த அரக்கன், ஏகப்பட்ட வரங்களை வாங்கிக்கொண்டு தேவர்களை இம்சிக்கத் தொடங்கினான். இவனை இந்திரனாலோ வேறு எந்தத் தேவனாலோ, சிவனாலோ, விஷ்ணுவாலோ தனியாகச் சண்டைபோட்டு வெல்ல முடியாது.

எனவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தனர். தங்களது அம்சங்களை, தங்களது ஒட்டுமொத்த சக்தியை ஒன்றுதிரட்டி ஓர் உருவாக்கினார். உதித்தாள் துர்கை. சிவனின் அம்சம் அவளது முகம். யமனின் அம்சம் அவளது தலைமயிர். விஷ்ணுவின் அம்சம் அவளது கைகள். சந்திரனின் அம்சம் அவளது மார்பகங்கள். இந்திரனின் அம்சம் அவளது வயிறு. வருணனின் அம்சம் அவளது தொடைகளும் கால்களும். பூமியின் அம்சம் அவளது இடை. பிரம்மாவின் அம்சம் அவளது பாதங்கள். சூரியன், அவளது கால்விரல்கள். வசுக்கள், அவளது கைவிரல்கள். குபேரன் அவளது மூக்கு. பிரஜாபதி, அவளது பற்கள். அக்னி, அவளது மூன்று கண்கள். வாயு, அவளது காதுகள்.

இந்திரன் முதலான தேவர்கள், மும்மூர்த்திகள் தங்களது ஆயுதங்களையும் அவளுக்கு அளித்தனர். சிவன் திரிசூலத்தை அளித்தார். விஷ்ணு சக்கரத்தை. வருணன் சங்கை. அக்னி குத்தீட்டியை. மருதன் வில்லையும் நிறைய அம்புகளையும். இந்திரன் மின்னலையும் தன் யானை ஐராவதம் மூலமாக ஒரு மணியையும். யமன், ஒரு தடிக்கழியை. வருணன் சுருக்குக்கயிறை. பிரம்மா அக்‌ஷர மாலையையும் கமண்டலத்தையும் கொடுத்தார். சூரியன் அவளது உடலிலிருந்து வெளிப்படும் கிரணங்களை அளித்தான். காலம் அவளுக்கு வாளையும் கேடயத்தையும் கொடுத்தது.

பாற்கடல் அவளுக்கு கழுத்தில் நவரத்தின மாலை, அழியாத உடைகள், தலைக்குக் கிரீடம், காதுக்குக் குண்டலங்கள், கைக்கு வளையல்கள், அர்த்தசந்திர ஹாரம், வங்கி, சிலம்பு, விரல்களுக்கு மோதிரங்கள் ஆகியவற்றை அளித்தது. விஸ்வகர்மா ஜொலிக்கும் கோடரியையும் தகர்க்கமுடியாத கவசத்தையும் கொடுத்தார். கடல்கள் தாமரை மலர்களால் ஆன மாலையையும், கையில் பிடித்துக்கொள்ள ஒரு தாமரை மலரையும், மார்பில் அணிய ஒரு மாலையையும் கொடுத்தன. அவளது வாகனம் சிங்கம் - இமயமலை கொடுத்தது.

குபேரன் மது நிரம்பிய குவளையைக் கொடுத்தான். ஆதிசேஷன் ரத்தின மாலை கொடுத்தான்.

தேவி, அவளது கணங்களுடன் போருக்குப் புறப்பட்டாள். மறுபக்கம் மஹிஷாசுரன் அவனது அரக்கப் படைகளுடன்.

அரக்கர்கள் தங்கள் ஆயுதங்களுடன் தேவிமீது பாய்கின்றனர். அவளோ அம்புகளைச் சரமாரியாக எய்துகொண்டே, தன் வாளினால் அரக்கர்களை சீவித் தள்ளுகிறாள். எதிர்கொண்டு மோதும் சிக்சுரன், சமரன், உதாக்ரன், கராளன், உத்தாதன், பாஸ்கலன், உக்ராஸ்யன், உக்ரவீர்யன், மஹாஹானு, பிதாலன், துர்தரன், துர்முதன் என அனைவரும் கொல்லப்படுகின்றனர். மஹிஷாசுரன் கோபம்கொண்டு தேவியைத் தாக்கவருகிறான். தன் கையிலிருந்த சுருக்குக் கயிறை அவன்மீது வீசி அவனை அவள் இறுக்கக் கட்ட, அவன் தன் எருது வடிவிலிருந்து வெளியேறி, கையில் கத்தியுடன் அவள்மீது பாய்கிறான். தேவி அவன்மீது அம்பை எய்து வெட்டுகிறாள். அவன் ஒரு யானையாக மாறுகிறான். யானை, அவளது சிங்க வாகனத்தை முட்டுகிறது. தேவி தன் வாளால் அந்த யானையின் தும்பிக்கையை அறுக்கிறாள். அவன் மீண்டும் எருது வடிவுக்கு மாறுகிறான்.

தேவி தன் கையிலிருக்கும் மதுக் கோப்பையால் மதுவைக் குடித்துவிட்டு கண்கள் ரத்தச் சிவப்பாகுமாறு சிரித்தாள். அவன்மீது பாய்ந்து குதித்து, அவனைக் கீழே தள்ளி, தன் ஈட்டியால் அவனைக் குத்தினாள். தன் வாளால் அவன் தலையை அறுத்துத் தள்ளினாள்.

கந்தர்வர்கள் பாட, அப்சரஸ்கள் ஆட, தேவர்களும் முனிவர்களும் அகமகிழ்ந்தனர்.

மஹிஷாசுரமர்தினி மண்டபத்தில் காணப்படும் தொகுதியில், தேவி சிங்க வாகனத்தில் வீற்றிருக்கிறாள். அவளது கணங்கள் அவளைச் சுற்றிச் சூழ்ந்துள்ளார்கள். அவளுடன் ஒரு பெண் போராளி உருவிய கத்தியோடு நிற்கிறாள். ஒரு அரக்கன் தலைகுப்புற விழுகிறான். அவனது மொட்டை மண்டை மட்டும்தான் காணக் கிடைக்கிறது. கீழே ஓர் அரக்கனுடைய அறுந்த தலை கிடக்கிறது. தேவியின் ஒரு கையில் வில், ஒரு கை தூணியிலிருந்து அம்பை உருவுகிறது. ஒரு கையில் வாள், ஒரு கையில் கேடயம். மஹிஷாசுரனின் வாள் இடுப்பில் உள்ளது. கையில் ஒரு தடிக்கழி. அதனை அவன் வாகாகக் கையில் பிடித்துக்கொண்டு, எதிர்ப்பைக் காட்டும் வகையில் உறுதியோடு நிற்கிறான். தேவியின் தலையிலும் மஹிஷனின் தலையிலும் குடைகள் இருக்கின்றன. இருவருக்கும் இடையேயான போரில் இன்னமும் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆனால் அரக்கர் படைகள் பின்வாங்கி ஓடும் நிலையிலும், தேவியின் கணங்கள் ஆக்ரோஷமாக முன் செல்லும் நிலையிலும் காணப்படுகின்றன.

Mahishasuramardini Panel, Mahishasuramardini Mandapam, Mamallapuram

பெர்ஸ்பெக்டிவ் வியூ, வானிஷிங் பாயிண்ட், பேலன்ஸ் என்றெல்லாம் ஓவியக்கலை தெரிந்தவர்கள் இந்தத் தொகுதியை நுட்பரீதியாக அலசலாம். அந்த அளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனால் அப்படியே ஒருகணம் நின்று பார்க்கும்போது தேவி மஹாத்மியம் உங்கள் கண்களில் ஓடும் என்பதை மட்டும் சொல்லமுடியும். எருதின் தலையை மனித உடலுடன் இணைத்து உயிரூட்டம் கொடுக்கமுடியும், அதுவும் கருங்கல்லில் என்பதை பல்லவச் சிற்பிகள் காண்பித்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் தேவியைவிட நம்மை ஈர்ப்பது, நம் நினைவைவிட்டு அகலாமல் இருப்பது வில்லனான மஹிஷனின் உருவம்தான்.

Mahishasura in close-up. Mahishasuramardini Mandapam, Mamallapuram

அடுத்தது, அதிரணசண்ட மண்டபத்தின் முன் இருக்கும் சிறு கல்லில் உருவாக்கப்பட்டுள்ள மினி-மஹிஷாசுரமர்தினி தொகுதி. இங்கே மஹிஷனின் ஆட்டம் முடிந்துவிட்டது. அவன் தலைமீதுள்ள குடை வீழ்ந்துவிட்டது. தலையில் கிரீடம் இல்லை. தேவியின் தலைமீது இன்னமும் குடை உள்ளது. மஹிஷன் பின்வாங்கி ஓடுகிறான். குட்டிச் சிங்க வடிவில் உள்ள ஒரு கணம், பாய்ந்து அவன் கையைக் கடிக்கிறது. எருது முகத்தில் களைப்பும் பயமும் தெரிகின்றன. புஸ் புஸ் என்று மூச்சுவிட்டு, நாக்கு வெளியே தள்ளியிருக்கிறது. சிங்க வாகனம் கால்களை உயத்தித் தாக்கத் தயாராக உள்ளது. தேவியும் கீழே இறங்குகிறாள். மஹிஷன்மீது பாய்ந்து, அவனைக் கீழே தள்ளி கழுத்தை வெட்டவேண்டியதுதான் பாக்கி. தேவி இறங்க வசதியாக அவள் காலடி எடுத்துவைக்க ஓர் ஆசனம் வைக்கப்பட்டுள்ளது.

Minor Mahishasuramardini Panel, Athiranachanda Mandapam, Mamallapuram

மாமல்லையில் துர்கை பல இடங்களில் காணப்படுகிறாள். வராக மண்டபத்தில், ஆதிவராக மண்டபத்தில், திரௌபதி ரதத்தில், திரிமூர்த்தி மண்டப சுவற்றில், கடற்கரைக் கோயில் பிரகாரத்தில் சிங்கவடிவிலான ஒரு கோயிலில், இன்னும் பல இடங்களில். கீழே திரிமூர்த்தி மண்டப சுவற்றில் அறுக்கப்பட்ட மஹிஷனின் தலைமீது நிற்கும் துர்கையைக் காணலாம். இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் தமிழகக் கோயில்களில் பலவற்றிலும் நாம் காணும் மஹிஷன் தலைமீது நிற்கும் துர்கையைப் பார்க்கிறோம். இதுதான் அவை அனைத்துக்கும் ஆதி வடிவமாக இருக்கவேண்டும்.

Durga as Mahishasuramardini, Trimurti Mandapam, Mamallapuram

(தொடரும்)

மாமல்லையின் சிற்பத் தொகுதிகள்

மாமல்லபுரத்தில் மண்டபங்கள், ரதங்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகியவற்றுடன் மிக எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கக்கூடிய சிற்பத் தொகுதிகளும் உள்ளன. வணங்கக்கூடிய தெய்வங்கள், தங்கள் பரிவாரங்களுடன் இருக்கும் சிற்பத் தொகுதிகள் ஒருபக்கம் என்றால், புராண, இதிகாசங்களிலிருந்து ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் சிற்பத் தொகுதிகள் மற்றொரு பக்கம்.

இங்கே நாம் இந்த புராண, இதிகாச சிற்பத் தொகுப்புகளை மட்டும் பார்ப்போம். இவற்றை சிறு குழந்தைகளுக்குக்கூட எளிதில் விளக்கிச் சொல்லிவிடமுடியும். கதை அல்லவா? இப்படித்தான் நான் என் மகளுக்கு மாமல்லபுரத்தை அறிமுகம் செய்தேன்.

மண்டபங்களுக்கு உள்ளாக நான்கு அற்புதமான சிற்பத் தொகுதிகள் உள்ளன: வராகத் தொகுதி, திரிவிக்கிரமத் தொகுதி, மஹிஷாசுரமர்த்தினி தொகுதி, அனந்தசயனத் தொகுதி. ஒரு மாபெரும் தொகுதி - மா தவத் தொகுதி (இமயமலைக் காட்சி) - அப்படியே ஒரு சிறு குன்றின்மீது செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, கோவர்த்தனத் தொகுதி, இப்படித்தான் ஒரு மலை மீது செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் நாயக்கர் காலத்தில் இதன்மீது ஒரு மண்டபம் (கிருஷ்ண மண்டபம்) எழுப்பப்பட்டு, கோவர்த்தனத் தொகுதியின் அழகு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர, சாலுவக்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தின் முன் இருக்கும் சிறு கல்லில் மற்றொரு மஹிஷாசுரமர்த்தினி தொகுதி காணப்படுகிறது. இமயமலைக் காட்சியின் மற்றொரு வடிவம் - மிகவும் சுமாரான தரத்தில் - மற்றொரு குன்றின்மீது காணப்படுகிறது. திரிமூர்த்தி மண்டபத்தின் பின்புறம் யானைகள், குரங்கு, மயில் கொண்ட ஒரு தொகுதி காணக்கிடைக்கிறது.

இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

(தொடரும்)

Sunday, May 02, 2010

பதிப்புக் காப்புரிமை - உரையாடல்

ஏப்ரல் 22 அன்று தமிழக நூலக ஆணையமும் புத்தகம் பேசுது இதழும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த ‘பதிப்புக் காப்புரிமை’ என்ற நிகழ்ச்சி எல்.எல்.ஏ கட்டடத்தில் நடைபெற்றது. அப்போதே இதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து நாள்கள் நழுவிவிட்டன. எனவே என் ஞாபகத்தில் இருப்பதை வைத்து எழுதுகிறேன்.

ஏகப்பட்ட பேர் பேச அழைக்கப்பட்டிருதனர். நான் கொஞ்சம் மெதுவாகத்தான் அரங்குக்குச் சென்றேன். சம்பிரதாயமான ஆசாமிகள் பேசிவிட்டுப் போயிருப்பார்கள்; உருப்படியான ஆசாமிகள் பேசுவதைக் கேட்கலாமே என்ற எண்ணம். நான் எதிர்பார்த்தபடியே சிலர் பேசிவிட்டுச் சென்றிருந்தனர். ஆனால் ஞாநியும் அப்போது பேசி முடித்திருந்தார். அவரது பேச்சு கடைசியில்தான் வரும் என்று நான் நினைத்தது தவறாகிவிட்டது. அவர் என்ன பேசினார் என்பதன் குறிப்புகளை அனுப்புமாறு அவரிடம் கேட்டிருக்கிறேன். எழுத்தாளர்களுக்கு குறைந்தபட்ச ராயல்டி என்று நிர்ணயிக்கவேண்டும் என்று அவர் பேசியதாகக் கேள்வி.

ஞாநி ராயல்டி சதவிகிதம் 10% அல்லது அதற்கும் குறைவாக இருப்பதை எதிர்க்கிறார் என்பதும், விற்பனையாளர்களுக்கான கமிஷனே 30-35% என்று இருக்கும்போது எழுதிய எழுத்தாளனுக்கு வெறும் 10% மட்டும்தானா என்னும் கேள்வியை முன்வைக்கிறார் என்பதும் நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். அது தொடர்பாக நான் முன்னமே எழுதியுள்ளேன். இதை மீண்டும் விரிவாக மற்றோர் இடத்தில் எழுத முற்படுகிறேன்.

இப்போது மீண்டும் பதிப்புக் காப்புரிமை கூட்டம். பதிப்புரிமை, காப்புரிமை என்ற இரண்டு வெவ்வேறு விஷயங்களை பச்சக் என்று ஒட்டி இந்த வார்த்தையை உருவாக்கிவிட்டார்கள் போல. ஒரு எழுத்தையோ, ஓவியத்தையோ, போட்டோவையோ... இப்படி ஏதோ ஒன்றைத் தம் சொந்த முயற்சியில், தம் சொந்த உழைப்பில் உருவாக்குபவர்களுக்குக் கிடைப்பதுதான் காப்புரிமை. அதன் வணிக சாத்தியங்களை அவர்கள் விரும்பினால் உரிமங்களாகப் பிறருக்குத் தரலாம். ஆனால் இதே ஆள்கள், பிறரிடம் சம்பளத்துக்காக வேலை செய்யும்போது உருவாக்கும் விஷயங்களுக்கு காப்புரிமை மாறுகிறது.

காப்புரிமை வைத்துள்ள ஒருவர் அந்தக் காப்புரிமையை பிறருக்கு ‘அசைன்’ செய்யலாம். அல்லது காப்புரிமையைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு, பதிப்புரிமையை மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு ஒரு பதிப்பாளரிடம் தரலாம்.

நான் போனபோது பேசிக்கொண்டிருந்த வழக்கறிஞர் துரைசாமி, பெரியார் எழுத்துக்களைப் பதிப்பிப்பது சம்பந்தமாக திராவிடர் கழகத்துக்கு எதிரான வழக்கில் ஈடுபட்டிருப்பவர் என்று புரியவந்தது. ஆனால் அது சம்பந்தமாகத் தன்னால் ஏதும் பேசமுடியாது என்றும் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் சொன்னார். அதற்குமேல் அந்தப் பேச்சிலிருந்து வேறு ஏதும் அறியமுடியவில்லை.

மொழிபெயர்ப்பு பற்றி இரா.நடராசன் பேசினார். துரதிர்ஷ்டவசமாக, கம்யூனிஸ்டுகளின் முற்றுமுழுதான கருத்துகளைப் பின்பற்றி, காப்புரிமை என்பதே காலனியாதிக்க முதலாளிய சுரண்டல் கருத்து என்பதை முன்வைத்து எங்கெல்ஸை மேற்கோள் காட்டி, டபிள்யூ.டி.ஓ, பான் ஒப்பந்தம் போன்ற பலவற்றைத் தொட்டுப் பேசி, இந்தியாவின் காப்புரிமை தொடர்பான கருத்துக்கள் அனைத்தும் தேவையே இல்லை என்பதாக முடித்தார். இந்தக் கட்டுரை புத்தகம் பேசுது இதழிலோ அல்லது காப்புரிமை தொடர்பான சிறப்பிதழ் ஒன்றிலோ வரும் என்று நினைக்கிறேன். அதை எழுத்துவடிவில் படித்துவிட்டு மறுப்பு எழுதவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
நடராசன் மட்டுமல்ல, அவருக்குமுன் பேசிய துரைசாமியும் மொழிமாற்றம் தொடர்பாகப் பேசும்போது குறிப்பிட்ட ஒன்றை நான் கட்டாயம் இங்கே மறுத்தே ஆகவேண்டும். ஆங்கிலத்தில் ஒரு படைப்பு வருகிறது. அதனை மொழிமாற்றிப் பதிப்பிக்க, மூல ஆசிரியரிடம் உரிமம் பெறவேண்டும். இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டாயிற்று என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தமிழ் வடிவத்தை தெலுங்கில் மொழிமாற்ற யாரிடம் உரிமை பெறுவது? யாரிடமும் உரிமம் பெறாமல் தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழிமாற்றி பதிப்பிக்கலாமா? நிச்சயம் அவ்வாறு செய்யலாம் என்றே நடராசன் பேசினார். இது முழுவதும் தவறு என்பது என் கருத்து.

முதலில் ஒரு படைப்பை மொழிமாற்ற யாரிடமும் உரிமை பெறவேண்டியதில்லை. அப்படி மொழிமாற்றி தனிச்சுற்றுக்கு அதனை அனுப்பும்பட்சத்திலும் யாரிடமும் உரிமம் பெறவேண்டியதில்லை. அதனை பொதுவில் பதிப்பித்து விலை வைத்து விற்க, அல்லது இலவசமாகவே இணையத்தில் பதிப்பிக்க என்று வரும்பட்சத்தில்தான் மூல ஆசிரியரிடம் அல்லது மூல ஆசிரியரின் மூல மொழிப் பதிப்பாளரிடம் உரிமம் பெறவேண்டும். அப்படிப்பட்ட மூலமொழியின் முதல் மொழ்பெயர்ப்பிலிருந்து மறு மொழிபெயர்ப்பு செய்யவும் யாரிடமும் உரிமம் கோரவேண்டியதில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. இங்கும் மூல மொழி எழுத்தாளரிடம் (அல்லது அவரது பதிப்பாளரிடம்) உரிமம் பெற்றாகவேண்டும் என்பது என் கருத்து. காப்புரிமை தொடர்பான சட்டங்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

முதல் மொழிபெயர்ப்பாளரிடம் அனுமதி பெறவேண்டுமா? அது அவரது மொழிபெயர்ப்பில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா என்பதை மட்டுமே பொருத்தது.

அடுத்து காந்தி கண்ணதாசன், பதிப்பகங்களும் காப்புரிமையும் என்பதுபற்றிப் பேசினார். தான் பஞ்சாபகேசன் என்ற வக்கீலிடம் ஜூனியராக இருந்தபோது அறிவுசார் சொத்துரிமை பற்றி சில வழக்குகளை எடுத்து நடத்தியது; கண்ணதாசன் என்ற படைப்பாளியின் மகனாக இருந்து பதிப்புரிமை தொடர்பான சில ஒப்பந்தங்களில் ஈடுபட்டது; இப்போது பதிப்பாளராக இருப்பது ஆகியவற்றைக் கொண்டு இது தொடர்பாகத் தன்னால் பேசமுடிவதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழ்ப் பதிப்பாளர்கள் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் எழுத்துபூர்வமாகச் செய்யாமல் இருப்பதன் குறைகளைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக தமிழ்ப் பதிப்புலகில் ‘அவுட்ரைட் ராயல்டி’ (சொல்லப்போனால் இதனை ராயல்டி என்றே சொல்லக்கூடாது - அவுட்ரைட் சேல் ஆஃப் காபிரைட் என்றுதான் சொல்லவேண்டும்) என்ற வகையில் வாய்மொழியாக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து படைப்பை வாங்கி அதனை பதிப்பித்தபின், எழுத்தாளர் அதிகமாக அச்சடிக்கப்படும் புத்தகங்களுக்கு ராயல்டி கோரமுடியும் என்பதனைச் சுட்டிக்காட்டினார். ஒரு காகிதத்தில் எழுதி வாங்கிக்கொண்டால் ஒழிய, இது பின்னர் பிரச்னையைத் தரும் என்றார்.

கண்ணதாசனின் எழுத்துகளை வானதி பதிப்பகம் பதிப்பிக்கும்போது எந்தவித ஒப்பந்தமும் எழுத்துவடிவில் இல்லை என்றார். ஆனால் பூம்புகார் பதிப்பகம் கண்ணதாசன் எழுத்துகளைப் பதிப்பிக்க வந்தபோது மூன்று பக்கங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றைக் கொடுக்க, அதை இவர் திருத்தி, குறைத்து ஒரு பக்க அளவில் வரும் ஒப்பந்தமாக மாற்றியதை நினைவுகூர்ந்தார்.

வழக்கறிஞர் செந்தில்நாதன் அடுத்து பேசும்போது காலச்சுவடு-புதுமைப்பித்தன் பதிப்பகம் இடையேயான காப்புரிமை வழக்கை விரிவாக விளக்கிக்கூறினார். (இது ஒரு தனிக்கதையாக எழுதப்படவேண்டிய பதிவு.)

இதற்குள் மிக அதிக நேரம் கடந்துவிட்டது. சிலர் கேள்விகள் கேட்கிறேன் என்ற பெயரில் தனித்தனியாக சொற்பொழிவாற்றி, சம்பந்தமில்லாத கருத்துகளை முன்வைத்தனர். அவசர அவசரமாக, கூட்டம் முடிக்கப்பட்டது. வெளியே வந்தும் சிலர் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

***

காப்புரிமை என்றாலே காப்புரிமை பெறுபவர் முதலாலியவாதி என்றும் அவர் பிறர் தன் படைப்புகளை எந்தவிதத்திலும் துய்க்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் என்பதுபோலவும், எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரனுக்கு நாலு சாத்து, முதலாளிக்கு நாலு சாத்து என்பதுபோலவும் பேசுவதன் அபத்தத்தை நம் மக்கள் உணரவேண்டும். ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது என்ற மேலை உலகின் சட்டவிதிகள்தான் இன்று நம்மை இயக்குகின்றன. இப்படிப் பேசும் பலரது வீடுகளையும் சட்டை வேட்டிகளையும் நாம் நம்முடையது என்று உருவிக்கொள்ள முடியாதவகையில் காப்பது எது? இந்த மேலை நாட்டுச் சட்டங்களும் விதிகளும்தானே? ஆனால் அதே மனிதன், தன்னுடையதை அடுத்தவனிடம் இலவசமாகக் கொடுக்க உரிமை உள்ளது.

நான் என் வலைப்பதிவில் எழுதுவதெல்லாம் என் காப்புரிமை கொண்டது. ஆனால் அதனை பிறர் எப்படிக் கையாளலாம் என்று Creative Commons Attribution 2.5 India License மூலம் சொல்லியிருக்கிறேன். அதன்படி யாரும் எனக்கு ஒரு பைசா தரவேண்டியதில்லை. ஆனால் அதே நேரம் கிழக்கு/ப்ராடிஜி வாயிலாக நான் எழுதி/மொழிமாற்றி வெளியிடும் புத்தகங்களின் காப்புரிமை முழுதும் என்னிடம் உள்ளது; அதன் பதிப்புரிமை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு நியூ ஹொரைஸன் மீடியாவிடம் உள்ளது. அதனை யாரும் எடுத்தாண்டு பணம் செய்ய உரிமை இல்லை. ஆக, என் இஷ்டப்படி என் படைப்புகளை - என் காப்புரிமை கொண்ட படைப்புகளை - இயக்கிக்கொள்ள எனக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை எனக்குத் தருவது இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957. இந்தச் சட்டம் இல்லையென்றால் இரா.நடராசனின் ‘ஆயிஷா’ கதையை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து எத்தனை பணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளமுடியும்.

இரா.நடராசன் பேசும்போது மொழிமாற்றல் தொடர்பாக ஏதோ ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் தனி உரிமை இருப்பதுபோலவும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அது இல்லை என்பதுபோலவும் சொன்னார். அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது தொடர்பாக கொஞ்சம் ஆராய்ந்துவிட்டு எழுதுகிறேன்.

(போதும். மிக நீண்டுவிட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.)

Saturday, May 01, 2010

பாடாய்ப் படுத்தும் வெயில்

(அம்ருதா மே மாத இதழில் வெளியானது.)

வெயில் காலம் என்றாலே திண்டாட்டம்தான். அதுவும் சென்னை மாதிரி இடத்தில். கத்திரி வெயில், சித்திரை வெயில் என்று புலம்புகிறோம். கொதிக்கும் வெயிலில் நடந்தால் தலை வலிக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் வியர்வை பெருக்கெடுத்து ஓடுகிறது. நாக்கு வறண்டு தாகம் எடுத்து, பாட்டில் பாட்டிலாக நீர் குடிக்கவேண்டியுள்ளது. தர்பூசணி, எலுமிச்சை பிழிந்த கரும்புச் சாறு, குளிரூட்டப்பட்ட கோக-கோலா, ஐஸ் போட்ட பழரசம், பானைத் தண்ணீர், நீர் மோர் என்று பதறுகிறோம்.

இதை எப்படி நாம் புரிந்துகொள்வது?

கோடையில் அப்படி நம் உடம்பில் என்னதான் மாறுதல் ஏற்படுகிறது?

கோடைக் காலத்தில், நாம் இருக்கும் பூமியின் பகுதி சூரியனுக்கு அருகில் செல்கிறது. பூமி சற்றே சாய்ந்த அச்சில் சுழல்வதால்தான் இது நிகழ்கிறது. பூமியை இரு அரைக் கோளங்களாக எடுத்துக்கொண்டால் வட அரைக்கோளத்தில் கோடைக் காலம் என்றால் தென் அரைக்கோளத்தில் அப்போது குளிர் காலம். உதாரணமாக இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் கோடைக் காலம் நடக்கும்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் குளிர். அதேபோல ஆஸ்திரேலியாவில் கோடைக் காலம் நடக்கும்போது இந்தியாவில் குளிர் காலமாக இருக்கும்.

சூரியனுக்கு அருகில் செல்கிறோம் என்றாலும் ஒரு அரைக்கோளத்தில் உள்ள எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரி அருகில் இருப்பதில்லை. நில நடுக்கோட்டுக்கும் கடக (அல்லது மகர) ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி சூரியனுக்கு நெருக்கமாக உள்ளது. இந்தப் பகுதியை வெப்ப மண்டலம் (ட்ராபிகல்) என்கிறோம். கடக ரேகையிலிருந்து இன்னும் கொஞ்சம் தாண்டி வட துருவத்தை நோக்கிப் போனால், வெப்பமண்டலத்தில் உள்ள அளவு வெப்பம் இருக்காது. சற்றுக் குறைவுதான். இந்தப் பகுதிக்கு மிதவெப்ப மண்டலம் (டெம்பரேட்) என்று பெயர். அதற்கும் அடுத்து, துருவம்வரை செல்லும் பகுதியில் அதிகபட்சமாக வெளிச்சம் இருக்கும். சூடு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கண் எதிரே ஐஸ் கட்டித் தரைகூட இருக்கும். இந்தப் பகுதிக்கு துருவ மண்டலம் (போலார்) என்று பெயர்.

கோடையில் வெப்ப மண்டலத்தில் சூடு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் ஏன் சென்னை போன்ற கடலோர நகரங்களில் இப்படி அதிகமாக வியர்க்கிறது? வீட்டில் உடை அணிந்துகொண்டு வாசல்வரை வருவதற்குள் தொப்பலாக நனைந்துவிடுகிறோமே?

இதற்கு காற்றின் ஈரப்பதம் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். காற்றில் ஓரளவுக்கு நீராவி உள்ளது. கடலோரப் பகுதிகளில் இந்த நீரின் அளவு அதிகமாக இருக்கும். ஆற்றங்கரை, குளக்கரை என்றாலும் அப்படியே. ஆனால் கடல் பகுதிகளில் மிக மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னையில் காற்றின் ஈரப்பதம் 93% என்று உள்ளது. கோவையில் சுமார் 75% மட்டுமே. அதாவது சென்னைக் காற்றில் கோவைக் காற்றைவிட அதிக நீராவி உள்ளது.

இதனால் சென்னையில் நமக்கு ஏன் வியர்க்கவேண்டும்?

மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படுகின்றன. பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள் எனப்படும். இந்தப் பெயர்களிலிருந்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்! குளிர் ரத்தப் பிராணிகள் எந்தச் சூழலில் உள்ளனவோ அந்தச் சூழலில் என்ன சூடோ அவற்றின் ரத்தமும் அதே சூட்டுக்கு வந்துவிடும்.

அதாவது குளிர்ந்த பாறை இடுக்கில் ஒரு பாம்பு இருக்கிறது; அந்த இடத்தின் சுற்றுப்புற வெப்பம் 15 டிகிரி செண்டிகிரேட் என்றால் பாம்பின் உடலில் ஓடும் ரத்தமும் கிட்டத்தட்ட 15 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும். அதே பாம்பு கொதிக்கும் 40 டிகிரி செண்டிகிரேட் மணலில் ஓடினால், அதன் ரத்தமும் கிட்டத்தட்ட 40 டிகிரி செண்டிகிரேடுக்கு வந்துவிடும். ஆனால் மனித ரத்தம் அப்படியல்ல. அது எப்போதுமே கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடுக்கு அருகில் இருக்கவே முயற்சி செய்யும்.

வெளியே கடும் குளிர். 10 டிகிரி செண்டிகிரேட் அல்லது அதற்கும் கீழே. உடனே உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். கம்பளி போல எதையாவது இழுத்துப் போர்த்திக்கொள்ள முற்படும். கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொள்ளத் தோன்றும். சூடாகக் கொஞ்சம் தேநீர் பருக விரும்பும். தம்மடிக்க ஆசைப்படும். எப்படியாவது உடல் சூட்டை, ரத்தத்தின் சூட்டை கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடில் வைக்க விரும்பும்.

அதேபோல கடுமையான வெயில். கொளுத்துகிறது. வெளியே இருப்பதோ 45 டிகிரி செண்டிகிரேட். என்ன செய்வது? உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றும். அந்த வியர்வை நீர் காற்றில் ஆவியாகும்போது சுற்றுப்புறம் சற்றே ஜில்லிடும். அதனைக்கொண்டு உடல் சூட்டைக் கொஞ்சம் தணித்து, மீண்டும் 37 டிகிரியை நோக்கி ஓடும்.

ஆனால் இங்குதான் காற்றின் ஈரப்பதம் தொல்லை கொடுக்கும். காற்றில் ஏற்கெனவே எக்கச்சக்கமாக நீராவி இருந்தால், மேற்கொண்டு நீர் ஆவியாக மறுக்கும். எனவே நம் உடலில் தோன்றும் வியர்வைத் துளிகள் ஆவியாகமல் அப்படியே தோல்மீதே வழியும். அதனால் எரிச்சல் ஏற்படும். வியர்வை பெருகி ஆறாகவே ஓடத் தொடங்கும். ஆனாலும் உடல் சூடு குறையாது. மேலும் மேலும் உடலில் உள்ள ரத்தம் தோல் பகுதிக்கு அருகில் வந்து தன்னிடமுள்ள அதிக சூட்டை வெளியேற்ற முற்படும். ஆனால் வெளியிலேயே சூடு அதிகமாக உள்ளதே? என்ன செய்வது?

இந்தக் காரணத்தால் மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையலாம். உடல் அசதி கொள்ளும். அப்படியே சாய்ந்து தூங்கிவிடலாமா என்று தோன்றும். அதனால்தான் நம்மை அறியாமலேயே வெயில் காலத்தில் மதிய நேரத்தில் ஒரு தூக்கம் போட்டுவிடுகிறோம்.

மற்றொரு பக்கம், உடல் சூட்டைத் தணிக்க நிழலாகப் பார்த்து உட்காருகிறோம். விசிறியால் அல்லது காற்றாடிகொண்டு நம் மீது காற்றை வீசுகிறோம். இந்தக் காற்று நம் உடலில் உள்ள ஈரத்தை அப்படியே அடித்துக்கொண்டு போய்விடும் என்ற விருப்பத்தில்தான். ஆனால் பல நேரங்களில் அதனாலும் பிரயோஜனம் இருக்காது.

அதனால்தான் ஏர் கண்டிஷனிங் என்பதைப் பெரிதும் பயன்படுத்துகிறோம். இந்த ஏர் கண்டிஷனர் என்ற கருவி, ஓர் அறையில் இருக்கும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதனால்தான் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உடனடியாக ஆவியாகிறது. மேலும் ஏர் கண்டிஷனர் குளிர்ந்த காற்றை உள்ளே சுழல வைக்கிறது. வெறும் குளிர்ந்த காற்றும் மட்டும் இருந்தால் பயன் இருந்திருக்காது. ஈரப்பதத்தையும் அந்தக் கருவி வெளியேற்றுவதாலேயே கோடையில் அது பயனுள்ளதாக உள்ளது.

அத்துடன் நாம் அவ்வப்போது அருந்தும் குளிர்ந்த நீர், பிற குளிர் திரவங்கள் என அனைத்துமே நம் உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.

மனிதர்கள்தான் ஏர் கண்டிஷனிங் போன்றவற்றைச் செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். பிற விலங்குகள் தமக்குள்ள அறிவைக் கொண்டு என்னென்னவோ செய்கின்றன. பொதுவாக விலங்குகள் வெப்பம் அதிகமாக உள்ள சமயத்தில் வெளியில் உலாத்தாமல், அந்த நேரத்தில் இரை தேடாமல் எங்காவது நிழலாகப் பார்த்து அமைதியாகப் படுத்து உறங்க முற்படும். யானை போன்ற மாபெரும் விலங்குகள் லிட்டர் லிட்டராக நீர் குடித்து, காதுகளை விசிறி விசிறி வெப்பத்தைத் தணிக்க முற்படும்.

இயற்கையில் அற்புதமாக வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் கரையான்கள் பெயர்போனவை. இந்தக் கரையான்கள் மாபெரும் புற்றுகளைக் கட்டுவதை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம். அவற்றுக்கு தவறாக எறும்புப் புற்று அல்லது பாம்புப் புற்று என்று நாம் பெயர்கொடுத்திருப்போம். விட்டால் பக்கத்தில் ஒரு சூலத்தைச் செருகி, வழிபடவே ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவற்றைக் கட்டுவது முழுக்க முழுக்க கரையான்கள். பார்க்க வெள்ளையாக இருக்கும். நம் வீடுகளில் உள்ள மரச் சாமான்களை, கதவுகளை எல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் மிக மோசமான உயிர் இவை.

இந்தக் கரையான்களில் சில மிக புத்திசாலி. இவை தமக்கு உணவாக சில பூஞ்சைகளை விவசாயமே செய்கின்றன. தங்கள் புற்றுக்களுக்கு உள்ளே, பூஞ்சைகளை சேகரித்து, அவை வளர ஆதரவாக மக்கிய இலைகளைக் கொண்டுவந்து போட்டு, வளர்ந்த பூஞ்சைகளை வெட்டி, சேகரித்துவைத்து, அவற்றைத் தின்கின்றன இந்தக் கரையான்கள். இந்தப் பூஞ்சைகள் வளர சரியான வெப்பம் தேவை. அதிகமாகவும் இருக்கக்கூடாது, குறைவாகவும் இருக்கக்கூடாது.

நாளின் பெரும்பகுதி சூரியன் உள்ளது, இரவில் சூரியன் மறைகிறது. இதேபோல கோடை, குளிர் என்று காலங்கள் மாறுகின்றன. கரையான்கள் எப்படி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன?

கரையான் புற்றில் அவை பல குழாய் போன அமைப்புகளை உருவாக்குகின்றன. புற்றில் நடுப்பாகத்தில்தான் கரையான்கள் வசிக்கின்றன. அங்கிருந்து தொடங்கி இந்தக் குழாய்கள் புகைபோக்கிகள் போல மேல் நோக்கிச் சென்று வெளிப்புறத்தை அடைகின்றன. வேண்டிய அளவு குழாய்களை மூடி அல்லது திறந்துவிடுவதன்மூலம் எவ்வளவு காற்று வெளியிலிருந்து உள்ளே வரும் என்பதை கரையான்கள் தீர்மானிக்கின்றன. அதைக்கொண்டு மையத்தில் இருக்கும் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவிலிருந்து அதிகம் நகராமல் கரையான்கள் பார்த்துக்கொள்கின்றன.

*

இன்று புவி சூடேற்றம் பிரச்னையாக ஆகியுள்ள நிலையில் நம் வீடுகளையும் நம்மால் கரையான்களைப் போல வடிவமைத்துக் கட்டமுடியும். இங்கும் அங்கும் சில ஜன்னல்களையும் துவாரங்களையும் முடுவதன்மூலமும் திறப்பதன்மூலமும் வீட்டில் பல பகுதிகளிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஏர் கண்டிஷனர்களைக் குறைக்கமுடியும்.

எந்த விதத்தில் ஆற்றலை வீணடிக்காமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பூமியின் வாழ்நாளையும், பூமியின் மனித சமுதாயத்தின் வாழ்நாளையும் நாம் நீட்டிக்கலாம்.