கடன் பற்றி பல்வேறு கலாசாரங்களிலும் மதங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இஸ்லாம், வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிப்பதில்லை. யூதர்களும் ஆரம்பத்தில் வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிக்கவில்லை. ஆனால் நாளடைவில், யூதர் அல்லாதோருக்கு யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பகாலக் கிறிஸ்தவமும் வட்டிக்குக் கடன் கொடுத்தலைக் கடுமையாக எதிர்த்தது. எனவே இயல்பாகவே ஐரோப்பா முழுமையிலும் கிறிஸ்தவர்கள் கடன் வாங்குபவர்களாகவும் யூதர்கள் அவர்களுக்குக் கடன் கொடுப்பவர்களாகவும் ஆனார்கள்! பின்னர் வங்கித் தொழில் என்ற ஒன்று ஐரோப்பாவில் ஆரம்பித்ததும், யூதக் குடும்பங்களே அதில் முதன்மையாக இருந்தன. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் நடந்தபின்னும் இதுவே தொடர்ந்தது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் பற்றியும் அதற்கான விதிகள் பற்றியும் நாரத தர்மசாஸ்திரம் விரிவாகவே பேசுகிறது. பாஸ்கராசார்யா போன்றோரின் கணிதப் புத்தகங்களில் வட்டியைக் கணக்கிடுவது எப்படி என்றெல்லாம் கணக்குகள் வருகின்றன. தமிழ்க் காப்பியங்களில் வருவோர், வட்டிக்குக் கடன் வாங்கி, பொருள் வாங்கி, வாணிபம் செய்து பொருள் ஈட்டுதல் அல்லது பொருள் இழத்தல் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம். கம்ப ராமாயணம், கடன் பெற்றார் நெஞ்சம் போல ராவணன் கலங்கியதைச் சொல்வதிலிருந்து கடன் வாங்கினவர் கடனைத் திருப்பச் செலுத்த முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதை அறியலாம். இந்தியாவில் சில குறிப்பிட்ட சாதியினர் கடன் தருதலில் ஈடுபடுவதைப் பார்த்துள்ளோம்.
நெதர்லாந்தில் தொடங்கிய நவீன வங்கிச் சேவை இங்கிலாந்தை அடைந்து, அங்கிருந்து ஐரோப்பாவில் பரவி, பிரிட்டிஷார் மூலமாக இந்தியாவுக்கும் வந்தது. சென்னையில் ஆர்பத்நாட் வங்கி மூழ்கியதை அடுத்து இந்தியர்கள் தங்களுக்கென சுதேசி வங்கி ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டே இந்தியன் வங்கி, சில செட்டியார்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியா சுதந்தரம் பெறுவதற்குமுன்னரேயே பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தன. சுதந்தரத்துக்குப் பிறகு, இந்திரா காந்தி காலத்தில் பல பெரிய வங்கிகள் கட்டாயமாக தேசியமயமாக்கப்பட்டன. இந்தியன் வங்கியும்கூட அப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1990-களின் தாராளமயமாக்கலின்போது தனியாரும் வங்கிகள் தொடங்கலாம் என்று உரிமம் தரப்பட்டு சில தனியார் வங்கிகள் உருவாகின. முற்றிலும் அந்நிய நாட்டின் வங்கிகளும் இந்தியாவில் சேவையைத் தர முடியும். இந்திய வங்கிகளில் அந்நிய நாட்டு அமைப்புகள் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருக்கமுடியும்.
பெருமளவு வங்கிச் சேவைகள் வளர்ந்தாலும் இவை ஏழைகளைச் சென்றடைவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். காரணம், இந்த வங்கிகள் அனைத்துமே, கடன் பெறத் தகுதியானோர் என்போருக்கே கடன் தரலாம். யாருக்குக் கடன் பெறத் தகுதி உண்டு என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பதற்கான சில விதிமுறைகள் (norms) உள்ளன. இதில் பெரும்பாலான மக்கள் விலக்கப்பட்டுவிடுவார்கள்.
வீட்டுக்கு எதிராகக் கடன், தங்கம் அல்லது பிற மதிப்புள்ள சொத்துகளுக்கு எதிராகக் கடன் என்பது கால காலமாக நிகழ்ந்துவரும் ஒன்று. வீடு கட்டக் கடன், வாகனம் வாங்கக் கடன் ஆகியவை கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்தன. கிரெடிட் கார்டுகள், என்ன ஏது என்று கேள்வி கேட்காமல், ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கக்கூடிய அளவுக்குத் தனிநபர் கடன்களை அளித்தன. இதற்கான வட்டி அதிகம். பின்னர் வங்கிகள் நேரடியாகவே பெர்சனல் லோன் என்ற தனிநபர் கடன்களை எந்தவித பாதுகாப்பும் வைத்துக்கொள்ளாமல் தர ஆரம்பித்தன. ஒரு முறை கடன் வாங்கி சரியாகத் திருப்பிக் கட்டியிருந்தால் தானாகவே அடுத்தமுறை அதிகக் கடன் தர வங்கிகள் தயாராக இருந்தன.
அரசு வேலையில் இருப்போருக்கு பொதுத்துறை வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தன. தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கௌரவத்துக்குப் பொருந்தினாற்போல கடன் கிடைத்தது. சுயதொழில் புரிவோருக்குக் கடன் பெறுதலில் சிக்கல் இருந்தது. ஆனால் இப்போது ஆண்டாண்டுக்குச் சரியாக வருமான வரி கட்டுவோருக்கு நல்ல கடன்கள் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு கிளினிக்கில் கருவிகள் வாங்கக் கடன் கிடைக்கிறது. சுயதொழில் புரிவோர் சில பல லட்சங்களுக்கு அல்லது கோடிகளுக்கு ஆலைக்கான கருவிகளை வாங்கக் கடன் கிடைக்கிறது.
ஆனால் தெருவோர ஏழைக்கு கையேந்தி பவன் வைக்கத் தேவையான 10,000 ரூபாய் அல்லது இஸ்திரி வண்டி அமைக்கத் தேவையான 5,000 ரூபாய்தான் கடனாகக் கிடைப்பதில்லை. இவர்கள் பெரும்பாலும் வட்டிக் கடைகளை நம்பி, வாழ்க்கையை அழிக்கவேண்டியுள்ளது.
***
பங்களாதேசத்துக்காரர் முகமது யூனுஸ். அது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பிஎச்.டி முடித்துவிட்டு அங்குள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்துவந்தார் அவர். முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் துருப்புகள் கிழக்கு பாகிஸ்தானில் அட்டகாசம் செய்து, அதன் விளைவாக அகதிகள் இந்தியாவுக்கு வந்ததும் இந்தியா தன் படைகளை அனுப்பி பங்களாதேசத்துக்கு விடுதலை பெற்றுத்தந்தது. உடனேயே தாய்நாட்டை முன்னுக்குக் கொண்டுவர என்று யூனுஸ் தன் வேலையை விட்டுவிட்டு பங்களாதேசத்துக்குத் திரும்ப வந்தார்.
அங்கே பல்கலைக்கழக வேலை ஒன்றை எடுத்துக்கொண்டு பொருளாதாரப் பாடத்தை நடத்தினார். ஆனால் வகுப்பறை பொருளாதாரமும் தெருவின் பொருளாதாரமும் ஒத்துப்போகாததைக் கண்டார். தன் மாணவர்களுடன் அருகில் இருந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் தினசரி வேலை என்ன, எப்படி வருமானம் பெறுகிறார்கள் என்று பார்வையிட்டார். அந்த கிராமத்துப் பெண்கள் பிரம்பு பிளாச்சால் கூடை முடைபவர்கள். கையில் காசு இல்லாத காரணத்தால் தரகர்களிடமிருந்தே மூலப்பொருளை வாங்கி, கூடை முடைந்ததும் அவற்றை தரகர்களிடமே அவர்கள் சொன்ன காசுக்கே விற்றுவந்தார்கள். நாள் முழுதும் வேலை செய்தாலும் கையில் கிடைப்பதோ சில டாக்காக்கள் மட்டுமே. சொந்தமாகக் கொஞ்சம் பணம் இருந்தால் தாங்களே மூலப்பொருள்களை வாங்கி, கூடைகளை முடைந்து நல்ல விலைக்கு விற்கமுடியும் என்றும் தங்கள் அதே உழைப்பை அதிக வருமானமாக மாற்றமுடியும் என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள்.
உடனேயே யூனுஸ் தன் கையிலிருந்து அவர்களுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்தார். அடுத்த சில நாள்களில் அந்தப் பெண்கள் பெறும் வருமானம் அதிகமானது. இதே செயலை நாடு முழுவதும் ஏன் செய்யக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது.
அப்போதுதான் இது எளிதான செயல் அல்ல என்பதை அவர் உணர்ந்தார். முதலில் வங்கிகள் இந்த மக்களுக்குக் கடன் தர விரும்பவில்லை. தானே சொந்தமாக அவர்களுக்கு ஜவாப்தாரியாக இருப்பதாக யூனுஸ் சொன்னதும் ஒரு வங்கி கடன் தர முன்வந்தது. ஆனால் ஒவ்வொரு கடன் விண்ணப்பத்திலும் யூனுஸ் கையெழுத்திடவேண்டியிருந்தது. வங்கிகளுக்கு அதிக விருப்பம் இல்லாத காரணத்தால் தானே ஒரு வங்கியை உருவாக்கிவிட யூனுஸ் நினைத்தார்.
அப்போது ஜெனரல் எர்ஷாத், ராணுவப் புரட்சி மூலம் பங்களாதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தார். அவரது நிதியமைச்சராக இருந்தவர் யூனுஸின் நண்பர். அவர்மூலமாக எர்ஷாதின் அனுமதியுடன் கிராமின் வங்கி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரசு 60% பங்கும் கடன் பெறும் மக்கள் மீதம் 40% பங்கும் கொண்டதாகத் தொடங்கப்பட்ட வங்கியில் பின்னர் அரசின் பங்கு 40%-கக் குறைக்கப்பட்டது.
கிராமின் வங்கி குறுங்கடன் என்ற முறையைக் கொண்டுவந்தது. கொடுக்கப்படும் கடன் தொகை மிகக் குறைவானது. 2,000 டாக்கா அல்லது அதைப்போலத் தொடங்கி, பின்னர் 5,000 டாக்கா என்றுதான் ஆரம்பக் கடன் இருந்தது. இந்தத் தொகைக்கு வட்டி உண்டு. Equated Weekly Instalments எனப்படும் வாரா வாரத் தொகை மூலம் முதல், வட்டி இரண்டும் சேர்த்து அடைக்கப்படும். கிராமின் வங்கி தொடங்குவதற்கு முன்னமேயே யூனுஸ் நேரடி அனுபவமாக சிலவற்றைக் கண்டுகொண்டார்.
1. பெண்கள்தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். ஆண்கள் பணத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். அவர்களை நம்பிக் கடன் கொடுப்பது உருப்படாது.
2. விவசாயத்துக்குக் கடன் கொடுப்பது உபயோகமானதல்ல. ஏனெனில் எப்படியும் அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் கடனை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டே இருக்கும். எனவே தனியாரிடம் வாங்கும் கடனையும் திருப்பிச் செலுத்த விவசாயிகள் விரும்புவதில்லை.
எனவே பெண்களுக்குக் கடன் கொடுத்து, அவர்கள் ஏதேனும் சிறு தொழில் செய்வதுமூலம் அவர்கள் வாழ்க்கையை மாற்றலாம் என்று யூனுஸ் முடிவுசெய்தார்.
பெண்கள் கடனைத் திருப்பிக்கொடுப்பார்கள் என்றாலும் அவர்கள் கட்டாயமாகக் கடனைத் திருப்பிக்கொடுக்க என்ன செய்வது என்று யோசித்ததில் உருவானதுதான் குழுக்கடன். மொத்தம் ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களை கிராமின் வங்கி உருவாக்கும். இந்தக் குழுவில் ஒவ்வொருவர் வாங்கும் கடனுக்கும் மற்றவர்களும் சேர்ந்து பொறுப்பு. ஒருவர் கடனைக் கட்டாவிட்டாலும் மற்றவர்கள் கட்டவேண்டும். ஆனால் எந்தவித ஆவணமும் கிடையாது. அப்படி இருக்கும்போது மக்கள் ஏன் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும்?
ஒரு குழுவில் இருக்கும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கடன் கிடைக்காது. இருவருக்கு மட்டும்தான். அவர்கள் ஒழுங்காகக் கட்டினால்தான் மற்ற இருவருக்குக் கொடுக்கப்படும். நால்வரும் கட்டி முடித்தால்தான் குழுத் தலைவருக்குக் கடன் கிடைக்கும். அவர் ஒழுங்காகக் கட்டினால்தான் மீண்டும் அடுத்த கடன் குழுவின் பிற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். கடன்மூலம்தான் வாழ்க்கை உயருகிறது என்னும்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டியாகவேண்டிய கட்டாயமாகிறது.
இந்த முறையில் பிரச்னையே இல்லையா? மக்கள் எல்லாம் வளம் பெற்று பங்களாதேசம் உலகிலேயே முதன்மை நாடானதா? கடனுக்கு எதிரான இஸ்லாமிய முல்லாக்கள் நிறைந்த பங்களேதேசம் யூனுஸை எப்படி எதிர்கொண்டது? அரசியல் உலகில் அவருக்கு எந்த மாதிரியான சிக்கல்கள் எழுந்தன?
அடுத்த பாகத்தில் இவற்றைப் பார்ப்போம்.
(தொடரும்)