குரு படம் பார்த்தேன். அபத்தமாக எடுக்கப்பட்ட படம். கதையும் இல்லை. திரைக்கதையும் மோசம். ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று சினிமா எடுக்கும் மணிரத்னம், ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடலாம்.
படம் திருபாய் அம்பானி கதையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் கிழித்தெடுக்கப்பட்ட துணிக்கந்தல்களை சீமை சரக்குடன் ஒட்டவைக்கப்பட்டது. இந்தப் படத்தை மார்க்ஸியப் பார்வையில் விமர்சித்து எழுதும் அளவுக்கு எனக்கு புத்தி கிடையாது. அதற்கு (தகவல் பிழைகளைத் தவிர்த்துவிட்டு!) இந்த மாத உயிர்மையைப் படிக்கவும்.
பொதுவாக இந்திய சினிமாக்காரர்கள் எந்த ஒரு தொழில்முனைவரையும் அவர் எழுப்பும் தொழிலுக்குப் பின்னால் உள்ள உழைப்பையும் ஒழுங்காகக் காட்டியதில்லை. பாடி முடிக்கும்போது பால்கார அண்ணாமலை பத்து மாடி பங்களாவுக்குச் சொந்தக்காரராக மாறியிருப்பதுபோலத்தான் மணிரத்னத்தின் குரு சில போட்டோக்கள் எடுத்துமுடிக்கப்படும்போது பல யூனிட்டுகள் உள்ள தொழிற்சாலையைக் கட்டிமுடித்திருக்கிறார்.
குருவிடம் என்ன திறமை உள்ளது, தொலைநோக்குப் பார்வை உள்ளது, யாரிடமும் இல்லாத எதைக்கொண்டு அவர் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார் என்று எங்குமே விளக்குவதில்லை. ஒரு காட்சியமைப்பில்கூட அவரது ஸ்மார்ட்னெஸ் வெளிப்படுவதில்லை. 'இல்லை' என்ற சொல்லைத் தன் காது கேட்காது என்பதைத்தவிர குருவிடம் வேறு பொன்மொழிகள் கிடையாது.
கடினமான உழைப்பு என்பது வேறு, சட்டப்பூர்வமான, நியாயமான தொழில் நடத்துவது வேறு என்பதை மணிரத்னம் எங்கும் வேறுபடுத்திக் காட்டுவதில்லை.
-*-
சோசியலிசம் பேசப்பட்ட சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவில் கோட்டா, உரிமங்கள் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. கோட்டா என்றால் ஒரு தொழிற்சாலை இந்த அளவுக்குத்தான் பொருள்களைத் தயாரிக்கலாம் என்று அரசு அனுமதி தரும். அந்த அளவோ அல்லது அதற்குக் குறைவாகவோதான் ஒரு தொழிற்சாலை பொருள்களைத் தயாரிக்கலாம். உதாரணத்துக்கு ஓர் இரும்புத் தொழிற்சாலைக்கு 5 டன் உருக்கை மட்டுமே தயாரிக்கும் உரிமம் அளிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு துளி மேல் தயாரிக்கக்கூடாது. மீறிச் செய்தால் குற்றம். பல துறைகளில், உரிமம் இல்லாமல் பொருள்களைத் தயாரிக்க முடியாது. இதைத்தான் லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜ் என்று ராஜாஜி தாக்கினார். இவ்வாறு பல தொழில்துறைகளையும் மத்திய அரசு தன் கிடுக்கிப் பிடியில் வைத்திருந்தது.
இந்தக் காலகட்டத்தில் எப்படியாவது ஆட்சியில் இருப்பவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு லைசென்ஸ், பெர்மிட் அல்லது அதிகமான கோட்டாவைக் கையகப்படுத்தியவர்கள் நிறையப் பணம் செய்தார்கள்.
சிலர் கோட்டாவைமீறி உற்பத்தி செய்தனர். அப்படி உற்பத்தி செய்த அதிகமான பொருள்களை கள்ளச் சந்தையில் ரசீது இல்லாமல் தள்ளிவிட வேண்டும். அதன்விளைவாக இரண்டு கணக்குகளை வைத்திருக்கவேண்டும். கள்ளத்தனமாக விற்கும் பொருளுக்கு ஆயத்தீர்வை (excise duty) கட்ட வேண்டாம். அந்த வருமானத்தை கணக்கில் வைக்காததால் அந்த வருமானத்துக்கு வரி கட்டவேண்டாம். இப்படிச் சம்பாதிக்கும் கள்ளப் பணத்தை பிற கெட்டவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக மேற்கொண்டு லைசென்ஸ் பெற அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உபயோகிக்கலாம்.
தனியார் நிறுவனங்கள்மீது கடும் காழ்ப்புணர்வைக் கொண்ட சோசலிச சிந்தாந்திகள் வேறு சில கட்டுப்பாடுகளையும் நிறுவனங்கள்மீது விதித்திருந்தனர். IPO - பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிடுவதைத் தீர்மானிக்க என்றே ஒரு துறை இருந்தது. அந்தத் துறையின் அதிகாரிகள் ஒரு நிறுவனம் பங்குச்சந்தைக்குச் செல்ல அனுமதிக்கலாமா, கூடாதா, அனுமதித்தாலும் ஒரு பங்குக்கு என்ன விலை இருக்கவேண்டும், எவ்வளவு பங்குகளை வெளியிடலாம், யார் அவற்றை வாங்கலாம் என்று அனைத்தையும் தீர்மானம் செய்தார்கள். Book building route என்று எதுவும் கிடையாது. இந்தத் துறை அதிகாரி தீர்மானம் செய்வதுதான் பங்கின் விலை. சந்தை நாசமாகப் போகட்டும்!
ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தால் பங்கு ஒன்றுக்கு எவ்வளவு டிவிடெண்ட் (பங்காதாயம்) கொடுக்கலாம் என்பதையும் அரசே தீர்மானித்து உச்ச வரம்பு வைத்திருந்தது! நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர், பிற முழுநேர டைரக்டர்கள் எவ்வளவு சம்பாத்தியம் பெறலாம் என்றும் உச்சவரம்பு விதிக்கப்பட்டிருந்தது.
நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் (corporate tax) மிகக் கடுமையாக இருந்தது. சம்பாதித்த லாபத்தில் 90% வரை (ஆமாம்!) வரியாகக் கட்டவேண்டிய நிலை இருந்தது.
அடுத்ததாக ஏற்றுமதி, இறக்குமதி. ஒரு பொருளை, கருவியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய ஒன்று அனுமதி தேவை, இரண்டு அந்நியச் செலாவணி தேவை, மூன்று அந்த இறக்குமதியின் மேலான சுங்க வரியைக் கட்டவேண்டும். பல நேரங்களில் சுங்க வரி பொருளின் விலையைப் போன்று பல மடங்கு இருக்கும். $100 விற்கும் பொருள் கைக்கு வந்து சேர $400 ஆகிவிடும். அந்த அந்நியச் செலாவணியைப் பெறத் திண்டாட வேண்டும். இதுவும் பெரும் ஊழலுக்கும் கள்ளக்கடத்தலுக்கும் வழி வகுத்தது என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த நேரத்தில் Import Credit என்ற முறை புகுந்தது. பொருள்களை இறக்குமதி செய்ய கோட்டா இருந்தது. இந்த கோட்டாவுக்கு அடிப்படைக் காரணம் மிகக் குறைவாக அந்நியச் செலாவணி கையிருப்பு நம்மிடம் இருந்ததுதான். கோட்டாவுக்கு மேற்கொண்டு இறக்குமதி செய்ய விரும்பினால் என்ன செய்வது? அந்த இறக்குமதியாளர் தானே கொஞ்சம் ஏற்றுமதி செய்தால், அந்த ஏற்றுமதியின் மதிப்பின் அளவுக்கு மேற்கொண்டு இறக்குமதி செய்யலாம். இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு கட்டுக்குள் இருக்கும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.
இவ்வாறு இறக்குமதி செய்யும் பொருளுக்கும் சுங்க வரி கட்டவேண்டும். அப்படி அதிகச் செலவு செய்தாலும் அதை இந்தியாவுக்குள் விற்கும்போது லாபம் கொள்ளை கொள்ளையாகக் கிடைக்கும் என்று தெரிந்த இறக்குமதியாளர்கள் உப்பு, புளி, மிளகாய் என்று ஏற்றுமதி செய்யத் தொடங்கினர். தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களை வாங்குபவர் யாரும் இல்லை என்று தெரிந்தால்கூட பொய்யாக செங்கல்லையும் சுண்ணாம்பையும் குப்பைகளையும் அடைத்து, அவற்றை, வெளிநாடுகளில் தாங்களே ஏற்படுத்தி வைத்திருக்கும் தங்களது பினாமி நிறுவனங்களைக் கொண்டே வாங்கி import credit-களை சேர்த்து வைத்தனர். அதன்மூலம் அரிய பொருள்களை இறக்குமதி செய்து சுங்கவரி கட்டி, அதற்கும் மேல் லாபம் பார்த்தனர். இத்தனையிலும் பாதிக்கப்பட்டது இந்திய மக்கள்தாம்.
-*-
இந்தக் காலகட்டத்தில்தான் திருபாய் அம்பானியும் தொழில் செய்தார். ஜெஹாங்கீர் டாடாவும் தொழில் செய்தார். முன்னவர் நிச்சயமாக ஆட்சியில் இருப்பவர்களையும் அதிகாரிகளையும் தன் வசப்படுத்த முயற்சி செய்தார் என்றும் அரசின் ரகசிய ஆவணங்கள் வெளியாவதற்கு முன்னதாக தனக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. டாடாவோ விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள்ளாக, தன் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்துவிட்டு, இயங்கினார்.
டாடா கட்டிய ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசு தேசியமயமாக்கியது. இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்னமேயே இருந்த காரணத்தால் டாடா ஸ்டீல் (டிஸ்கோ) தேசியமயமாவதிலிருந்து தப்பித்தது.
அம்பானி தன்னைச் சுற்றியிருந்த கட்டுப்பாடுகளை நிச்சயமாக வெறுத்திருப்பார். வளைகுடா நாடுகளில் மேற்கத்திய பொறியாளர்கள் கட்டிய மாபெரும் தொழிற்சாலைகளை நேரில் பார்த்திருந்த அவர் இந்தியாவின் மோசமான சூழலை எதிர்கொள்வதற்குத் தேர்தெடுத்த முறை 'சட்டபூர்வமானதல்ல'. வளர்ச்சி ஒன்றே முக்கியம் - அடையும் இலக்கு முக்கியம், அதை அடையப் பயன்படுத்தும் வழி முக்கியமல்ல என்ற கொள்கையை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று ஆராய்ச்சியாளர்கள் சிந்தனையைச் செலுத்தலாம்.
He probably thought he was ethically and morally right, even if legally wrong.
ஆனால் டாடாவோ துளியும் சட்டத்தின் பாதையிலிருந்து விலகாமல் கடைசிவரை இருந்து போராடி, தனது அடுத்த தலைமுறை சட்டத்தின் பாதைக்குள் இருந்தவாறே மேற்கொண்டு வளர்ச்சியை அடைய முனைய வேண்டும் என்று விரும்பினார். அதைத்தான் இன்று ரத்தன் டாடா செய்கிறார்.
(நேற்று
CNN-IBN தொலைக்காட்சியில் பேட்டி அளித்த ரத்தன் டாடா இவ்வாறு கூறியுள்ளார்
Tata group chief Ratan Tata has said that though the licence permit raj was over, some businesses still believed they could get away with violating the law.
"There is always a view among some segments of industrial community that they are above the law and they can manage the environment. The licence permit raj is over but there are businesses that think they can get away with the violations of law. If the enforcements were stricter and more uniform, then India, would become a better place", he said in an interview to CNN-IBN.)
-*-
குரு படத்துக்கு மீண்டும் வருவோம். குருவின்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
1. கோட்டாவுக்கு மேல் உற்பத்தி செய்தார். (Legally wrong. Ethically?)
2. உதிரி பாகங்கள் என்று சொல்லி வாங்கி அவற்றை இணைத்து ஆறு இயந்திரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் பன்னிரண்டு இயந்திரங்களை அமைத்து அதிகமாக உற்பத்தியைச் செய்தார். (Legally wrong. Ethically?)
3. அதிக உற்பத்தி செய்வதைக் கணக்கில் காட்ட முடியாது. எனவே அவற்றை கள்ளச்சந்தையில் கணக்கு புத்தகத்தில் காட்டாமல் விற்றிருக்க வேண்டும். அப்பொழுது ஆயத்தீர்வை, வருமான வரி ஆகியவற்றைக் கட்டியிருக்க முடியாது. (Legally wrong. Also ethically wrong and corrupt.)
4. மந்திரிகளை, அதிகாரிகளை பணம் கொடுத்து வளைத்து தனக்கு வேண்டிய விஷயங்களை வேகமாகச் செய்துகொண்டார். (Legally and ethically wrong.)
இவை அனைத்துக்கும் பதில் சொல்லும் குரு, தான் கடின உழைப்பாளி என்று மட்டும் சொல்கிறார். கடினமாக உழைக்கும் ஒரே காரணத்துக்காக சட்டத்துக்குப் புறம்பாகவும் நேர்மை, நியாயத்துக்குப் புறம்பாகவும் நடக்க யாருக்கும் உரிமை கிடையாது. மணிரத்னத்தின் குரு, நாளைய தொழில்முனைவோரின் இலட்சிய நாயகராக இருக்கக்கூடாது.
குருவின் தவறான பாதையைப் பின்தொடரும் புலனாய்வு இதழாளரும் தவறு செய்கிறார். குரு குப்பைகளை ஏற்றுமதி செய்கிறார் என்பதைக் காட்ட அராபியர்கள் வேடமிட்ட இருவர் மும்பையிலேயே குப்பை டப்பாக்களைப் பிரிப்பதுபோலக் காட்டி இது வேறெங்கோ அரபு நாடு ஒன்றில் நடப்பதாகக் கதை எழுதுகிறார். இதன்மூலம் நியாயத்தை நிலைநாட்டத் தவறுகளைச் செய்யலாம் என்பதை வலியுறுத்துகிறார் மணிரத்னம். இதையே குருவும் தனது தற்காப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக உற்பத்தி நாட்டுக்கு நல்லது; எனவே அந்த நல்லதைச் செய்ய சட்டத்தை மீறுவது தவறாகாது என்று ஏதோ தர்மசூத்திரத்தை முன்வைத்து குரு சொல்லக்கூடும்.
ஒரு லிபரல் குடியாட்சி முறையில் இதுபோன்ற கருத்துகளுக்கு இடம் இருக்கக்கூடாது. End vs Means - இலக்கு மட்டும் நியாயமானதாக இருந்தால் போதாது. அந்த இலக்கை அடையும் வழியும் நியாயமானதாகவும் சட்டபூர்வமானதாகவும் இருக்கவேண்டும். சட்டம் சரியில்லை என்று தோன்றினால் சட்டத்தை உடைத்து, மாற்றப் போராடவேண்டும். சட்டத்தை மீறத்தொடங்கினால் நமது ஆட்சிமுறையும் வாழ்க்கைமுறையும் ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.
-*-
அம்பானியைத் தோலுரிக்க விரும்பிய ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸில் ஆசிரியராக இருந்த அருன் ஷோரி பிற்காலத்தில் மத்திய அமைச்சரானபோது அம்பானி போன்றோர் கோட்டா ராஜ்ஜியத்தை ஏமாற்றியது ஒருவகையில் சரிதான் என்பதுபோலப் பேசினார். அது தவறான கூற்று. ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது தவறை அனைவரும் குடியாட்சி முறையில்தான் எதிர்த்து மாற்றவேண்டும். காலனிய ஆட்சிமுறை பற்றியும் காந்தியின் சட்டமறுப்புப் போராட்டங்கள் பற்றியும் இங்கு பேசக்கூடாது. மணிரத்னம், காந்தியை குருவுக்கு ஆதரவாக இழுக்கிறார். இது தவறான வாதம். ஒருமுறை காந்தியின் Satyagraha in South Africa என்ற புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டு இந்த வாதத்துக்கு வாருங்கள்! வேறு எந்த வழியும் இல்லை; ஆட்சியாளர்களை மாற்றக்கூடிய உரிமை கிடையாது என்னும்போது சத்யாக்கிரகம் என்னும் முறை முன்வைக்கப்படுகிறது. அந்த முறையிலும்கூட சட்டத்தை மீறி, ஏமாற்றிப் பலன் பெறுவதை காந்தி முன்வைக்கவில்லை. சட்டத்தை மீறி, அதன் விளைவாகக் கைது செய்யப்பட்டு அந்த சட்டத்தினாலே கிடைக்கும் தண்டனையை முழுமனதாக விரும்பி ஏற்றுக்கொண்டு அதன்மூலம் எதிராளியை வெட்கித் தலைகுனிய வைத்து சட்டத்தை மாற்றக்கூடிய ஓர் ஆயுதம் சத்தியாக்கிரகம்.
குரு படம் சர்வதேச நிதியும் முதலாளித்துவமும் இணைந்து உழைக்கும் வர்க்க மக்களைச் சுரண்ட எடுத்த ஒரு படம் என்று நான் நினைக்கவில்லை. குழப்பமான கதையைக் கொண்ட, சரியான பாத்திர வார்ப்புகள் அமையாத, தெளிவான நல்ல சிந்தனையை மக்களுக்குக் கொடுக்காத, மோசமான ஒரு படம். சீரியஸான ஒரு படத்துக்கு இடையே தமிழ்/ஹிந்தி சினிமாவுக்கே உரித்தான தேவையற்ற சில அம்சங்கள். ஆடல் பாடல்கள் எவையும் கருத்தைக் கவருபவையாக இல்லை. வசனங்கள் சுமார்தான்.
-*-
அம்பானியைவிட ஜெஹாங்கீர் (ஜே.ஆர்.டி.) டாடா இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பார்.