Wednesday, September 29, 2004

செம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் தமிழ்மொழியைச் செம்மொழியாக்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.

அப்பொழுது, இது எங்கு போய் முடியப்போகிறதோ என்று ஆதங்கப்பட்டிருந்தேன். இந்தியாவில் நடக்கும் அரசியலை சற்று கவனித்துப் பார்க்கிறவன் என்பதால் எழுதியது அது.

அப்பொழுது பல தமிழர் வலைப்பதிவுகளிலும் தமிழ் (மட்டும்) ஏன் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

கடந்த இரண்டு வாரங்களாக தினமணி நாளிதழில் செம்மொழி பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் மணவை முஸ்தபா, 20 செப்டெம்பர் 2004 அன்று, "செம்மொழிகள் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு அதில் தமிழ் முதலாவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது, அப்படியானால் ஏற்கனவே இருக்கும் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட சமஸ்கிருதம், பாரசீகம், அரபி ஆகிய மொழிகள் எந்தப் பட்டியலில் உள்ளன? தமிழ் இரண்டாவது (சற்றே குறைவுபட்ட) பட்டியலில் உள்ளதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த மொழிகள்தாம் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக்கும் (யாரால்?) நிலையில் இப்பொழுது ஆயிரம் ஆண்டுகள் என்று கொண்டுவந்திருப்பது எதனால்? அடுத்து ஐநூறு ஆண்டு பட்டியல் வருமா?" என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்.

திமுக மத்திய அமைச்சர் A.ராஜா அடுத்த நாள் தினமணியில் எழுதியிருந்த கட்டுரையில், பெரும் குண்டுகளைத் தூக்கிப் போட்டார். அதாவது இதுநாள் வரையில் மத்திய அரசு (மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்) எந்த மொழியையுமே செம்மொழி என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததில்லை. சமஸ்கிருதம், பாரசீகம், அரபி ஆகியவற்றுக்கு இதுநாள் வரை கிடைத்து வந்த அங்கீகாரம், பணம், விருதுகள் எல்லாமே பழக்கம் காரணமாக, மரபு காரணமாகத்தான். இப்பொழுதுதான் முதல் முறையாக அரசு ஒரு மொழி செம்மொழியாவதற்கு என்ன தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று தரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றார். "சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி செம்மொழியாக்கப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் சம்ஸ்கிருதமும், பாலியும், பாரசீகமும், அரேபியமும் அதிகாரபூர்வமான அரசு ஆணையுடன் கூடிய செம்மொழித் தகுதியைப் பெறுகின்றன என்பதுதான் உண்மையும் நடப்பும் ஆகும்." என்றும் சொன்னார். மேலும், அரசியல் காரணங்களால் தகுதி இல்லாத மொழிகள் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டு விடக் கூடாது என்ற கரிசனத்துடன் தேவையான கடுமையான தகுதி வரைமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளையின் தலைவர் தமிழப்பன் 23 செப்டெம்பர் எழுதிய கட்டுரையில், மணவை முஸ்தபாவுக்கு வந்த சந்தேகங்கள் அனைவருக்கும் வரக்கூடியதே என்றும், ஆயிரம் வருடங்கள் போதும் என்றால் இன்ன்னமும் பல இந்திய மொழிகள் செம்மொழிகளாகி விடுமே என்றும் காலப்பழமையை "ஈராயிரம் முதல் மூவாயிரம் ஆண்டுக்காலம் என்று வரையறுப்பதே சாலச் சிறந்ததாக அமையும்" என்றார்.

அதே நாள் வெளியான தினமணி தலையங்கம் உடனடியாக மத்திய அரசு, மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்து, தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டது.

27 செப்டெம்பர் தி டெலிகிராப், கொல்கொத்தா செய்தித்தாளில் சுஜன் தத்தா என்பவர் எழுதிய கட்டுரையில், நிபுணர்கள் எதிர்ப்பையும் மீறி(!) மத்திய அரசு அரசியல் காரணங்களால் தமிழை செம்மொழியாக்கியது என்று ஒரு போடு போட்டுள்ளார்! கூடவே கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜசேகரனும், முதல்வர் தரம்சிங்கும் கன்னடத்தையும் செம்மொழியாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். போகட்டும், குறைந்தது செம்மொழி என்பதற்கு இப்பொழுதைக்கு நிபுணர்கள் என்ன வரையறை வைத்துள்ளனர் என்று சொல்கிறார். அதைப் பார்ப்போம்.

1. மிகப் புராதனமான, அதாவது 1500, 2000 வருடங்களுக்கு முந்தையதாகவே எழுத்து முறையில் எழுதப்பட்டிருத்தல்
2. போற்றக்கூடிய கலாச்சாரம் என்று கருதக்கூடிய தொன்மையான பிரதிகள்
3. பிற மொழிகளிலிருந்து கிளைத்திராத, தானாகவே தோன்றிய இலக்கியப் பின்னணி
4. பண்டைச் செம்மொழிக்கும் அதன் பிந்தைய வடிவத்துக்கும், கிளைகளுக்கும் இடையில் பெரும் பிளவு

ஆக, 1000? 1500? 2000? அரசு என்னதான் சொல்கிறது? தமிழ்தான் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முதல் செம்மொழியா? (ஆகா, என்ன பாக்கியம்!) சம்ஸ்கிருதம் செத்த மொழி என்பதால் அதை அரசு செம்மொழியாக்காதா? (சுஜன் தத்தா அப்படித்தான் சொல்கிறார்.) அதுதான் கவிக்கோ அப்துல் ரகுமானே பாடிவிட்டாரே? தேவபாஷை பாடையிலே போகையில் தமிழ் மட்டும்தான் மக்கள் ஆடையிலே, பாடையிலே வளர்ந்தது என்று.

அடுத்த, அதிகாரபூர்வமான செம்மொழி கன்னடமா, இல்லை பாரசீகமா, அரபியா?

அரபி மொழியைச் செம்மொழி என்று அறிவித்தால் நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என்று பாஜக/வி.எச்.பி/ஆர்.எஸ்.எஸ் பயமுறுத்துவார்களா?

[அப்படியே காசியின் பதிவையும் ஒரு பார்வை பார்த்து விடுங்கள்.]

Tuesday, September 28, 2004

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

சனிக்கிழமை சத்யம் திரையரங்கில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படம் பார்த்தேன். படம் ஓடும்போது சந்தோஷமாக சிரித்தேன். கடைசிக் காட்சிகளில் கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன். மெடிகல் காலேஜ் கம் ஹாஸ்பிட்டலின் பொருந்தாத செட்டுகள் என் மனதை உறுத்தவில்லை.

மெடிகல் காலேஜ் பரிட்சைகள் எல்லாமே 'Choose the correct answer' முறையில் மட்டும்தான் அமைந்திருக்கும் என்பதை விது வினோத் சோப்ராவின் தயவால் அறிந்து கொண்டேன். மேலும் மெடிகல் காலேஜ் நுழைவுத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் மட்டும் போதும் (93.5%), 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதற்குமே தேவையில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். வசூல்ராஜா 12ஆவது பாஸ் செய்துள்ளாரா, 12ஆவதில் எந்த வகுப்பு எடுத்துப் படித்தார், எத்தனை வருடங்கள் முன்னால் என்பதையெல்லாம் மெடிகல் காலேஜில் யாருமே கேட்க மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்.

மெடிகல் காலேஜ் டீன் என்பவர் கல்லூரியை தன் சொந்தக் கல்லூரியாக நடத்துவார் என்பதையும் புரிந்து கொண்டேன். அவர் பைல்ஸ் ஆபரேஷன் செய்வார், உடம்பைக் கிழித்து உள்பாகங்களைக் காண்பிப்பார், அட்மிஷன் விஷயங்களை கவனித்துக் கொள்வார், மாபெரும் அரங்கில் புது மாணவர்களை வரவேற்பார், அவ்வப்போது இஷ்டத்துக்கு எந்த சப்ஜெக்ட் வேண்டுமானாலும் நடத்துவார், அதன்பின் கோபம் வரும்போதெல்லாம் சிரித்து சிரித்து சேஷ்டை பண்ணுவார் - இப்படி படத்திலேயே சகல கலா மாஸ்டர் மாஸ்டர் அவர்தான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

ஆனால் இதையெல்லாம் விட என் மனதை மிகவும் கவர்ந்தது சில மருத்துவச் செயல்முறைகள்தான்.

'கட்டிப்பிடி வைத்தியம்' எல்லா பிரச்னைகளையும் கிட்டத்தட்ட தீர்த்து விடும் என்று புரிந்து போனது. என் டாக்டர் ஏன் என்னைக் கட்டிப்பிடிக்கவே மாட்டேன் என்கிறார்? அடுத்த முறை போகும்போது கேட்க வேண்டும். கேரம் போர்டு வைத்தியம் பிரமாதம். வீல்சேர் கோமா கேஸ் வைத்தியம் சூப்பர். கடுகடு சிடுசிடு ஜானிடரை சிரித்த முகமாக்கிய அந்த ஒரு பேச்சும், கட்டிப்பிடி வைத்தியமும் 'A' கிளாஸ். ஆனாலும் அந்த வயிற்று கேன்சர் ஆசாமியை இப்படி அநியாயமாக சாகடித்திருக்க வேண்டாம். அதுவும் 'சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனா தானா டோய்' என்று அந்த 'காணாப்போன சிறுக்கி மகள்' பாடியதைக் கேட்டு, அவளோடு கும்மாளம் அடித்தபின் அவனைக் கொன்றிருக்க வேண்டாம். கடைசி நேரத்தில் அந்த 'சிறுக்கி மகள்' மீண்டும் வந்து ஆஸ்பத்திரியில் ஒரு சூப்பர் டான்ஸ் போட்டு கேன்சரிலிருந்து அவனை மீட்டெழ வைத்திருக்கலாம்.

படத்தில் அத்தனை பேரும் பிரமாதமாக நடித்திருந்தனர். கதை, வசனம், பாடல்கள், இசை அனைத்தும் அருமை. டைரக்ஷன் மனதைக் கொள்ளை கொண்டது. கேமரா, லொகேஷன் என்று அனைத்தும் பேஷ் பேஷ்.

இந்தப் படத்தை சிரத்தையாக வேலை செய்யும் டாக்டர்களுக்கு டெடிகேட் செய்திருப்பது மனதைத் தொட்டது. இந்தப் படம் இதயமே இல்லாத டாக்டர்களுக்கு சாட்டையடி! படத்தில் வரும் எல்லா டாக்டர்களுமே கெட்டவர்கள். ஏன் பாப்பு கூட. பாப்பு யாரா? பாப்புதான் ஜானகி, ஜானகிதான் பாப்பு. பாப்புவின் அற்புதமான இரண்டு நிமிடப் பேச்சால், வாழ்க்கை முழுவதும் தவறுகள் மட்டுமே செய்து வந்த டீன் வில்லன் ஒரு நொடியில் மனம் மாறுவது புல்லரிக்க வைக்கிறது. இனி உங்கள் வீட்டில் எந்த பிரச்னை வந்தாலும் கையில் மைக்கை வைத்துக் கொண்டு இரண்டு நிமிடம் தொடர்ச்சியாகப் பேசவும். கெட்டவர்கள் உடனேயே மனம் மாறிவிடுவார்கள்.

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா! வேட்டியப் போட்டுத் தாண்டவா?

வங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு

நேற்று (27 செப்டம்பர் 2004, திங்கள்) பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிரக்ஞா விஸ்வதர்ஷன் பேச்சுக்கள் வரிசையில் பேரா. எஸ்.ராதாகிருஷ்ணன் 'Role of NBFCs in Our Financial System' என்ற தலைப்பில் பேசினார். அதிலிருந்து நான் புரிந்து கொண்டவற்றை கட்டுரையாகத் தருகிறேன்.

-*-

வங்கியோ, வங்கியில்லா நிதி நிறுவனமோ இரண்டும் செய்யும் வேலை - 'x' இடமிருந்து பணத்தை வாங்கி, 'y'க்கு பணத்தைத் தந்து பணத்தைப் புரட்டுவது. கடன்வாங்கிய பணத்திற்கு கொடுக்கும் வட்டியை விட, கடன்கொடுக்கும் பணத்திற்கு அதிக வட்டி வசூலிப்பார்கள். இந்த வட்டி வித்தியாசத்திற்கு spread என்று பெயர். இப்படி அதிகம் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு நிர்வாகச் செலவுகள் போக லாபம் சம்பாதிப்பார்கள்.

இந்தியாவில் வங்கி ஒன்றை நடத்த வேண்டுமானால் ரிசர்வ் வங்கியிடம் தேவையான உரிமம் பெறவேண்டும். வங்கியல்லா நிதி நிறுவனங்களால் (NBFC) வங்கிகள் செய்யும் பல காரியங்களைச் செய்ய முடியாது: அவர்களது வாடிக்கயாளர்களால் வைப்பு நிதி தவிர பிற கணக்குகளைத் தொடங்க முடியாது. (No savings bank a/c, current a/c etc. only fixed deposit. No safe deposit.) காசோலைகளை அச்சிட்டுத் தர முடியாது. அன்னியச் செலாவணி மாற்றுதலில் ஈடுபட முடியாது. பணத்தை ஒரு ஊரிலிருந்து பிற ஊர்களுக்கு கட்டு கட்டுகளாக எடுத்துக் கொண்டு போக முடியாது.

இந்தியாவில் வங்கிகள் தொடங்கும் முன்னரே முறைசாரா வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தோன்றிவிட்டன. சென்னையில் இருக்கும் மைலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதி 130 வருடங்களுக்கு முந்தையது. இந்தியாவின் முதல் வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி தொடங்கி 103 வருடங்கள்தான் ஆகின்றது.

வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு இரண்டு முக்கியமான பணிகளைச் செய்தன: (1) வங்கிகள் தொடத் தயங்கும்/மறுக்கும் மக்களுக்கு, வெகு குறைந்த காலத்திலேயே சிறு-சிறு தொகைகளைக் கடன்களாகக் கொடுத்தன. (2) வங்கிகள் கொடுப்பதைவிட அதிக வட்டியை - எனவே அதிக வருமானத்தை - தம்மிடம் வைப்பு நிதிகளைக் கொடுத்திருப்போருக்கு அளித்து வந்தன.

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர்தான் இந்தியாவில் பல்வேறு விதமான நிதி நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் தோன்றத் தொடங்கின. பொருட்களைக் குத்தகைக்குக் (lease) கொடுத்து வருமானம் செய்யும் நிறுவனங்கள், வாடகை/வாங்கல் முறையில் - தவணை முறையில் (hire-purchase) - பொருட்களை வாங்க உதவும் நிறுவனங்கள், அடகு வைத்தல் மூலம் (mortgage) வீடு/நிலம் வாங்க உதவும் நிறுவனங்கள், பெனிபிட் பண்டு, நிதி, சகாய நிதி, சாஸ்வத நிதி என்று பல பெயர்களிலும் இயங்கும் 'நிதி'க்கள், சீட்டு நிறுவனங்கள் (chit fund என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. இது கேரளாவில் குறி(?) என்ற பெயரிலும், தமிழ்நாட்டில் சீட்டு என்ற பெயரிலும் தொடங்கியது என்கிறார் பேராசிரியர்) என்று பல்வேறு இந்தியாவிற்கே உரித்தான பழமையான நிதி நிறுவன முறைகள், புதுமையான மேற்கத்திய வங்கி மற்றும் நிதி நிர்வாக முறைகளோடு சேர்ந்து வசிக்க ஆரம்பித்தன.

இந்தியாவின் முதல் குத்தகை கம்பெனி First Leasing Company Of India Limited சென்னையில்தான் தொடங்கியது. வாடகை/வாங்கலுக்கு உதவி செய்யும் சுந்தரம் பைனான்ஸ் இந்தத் துறையில் இந்தியாவிலேயே இரண்டாவது பழமையான நிறுவனம் - சென்னையில்தான் (1924இல்) தொடங்கியது. [முதலாவது நிறுவனம் பூனாவில்(?) தொடங்கப்பட்டது என்றார் என்று நினைக்கிறேன்.]

குத்தகை கம்பெனிகள் பிறருக்குத் தேவைப்படும் பொருள்களை தங்கள் செலவில் வாங்கி, அதன் அனுபவ உரிமையை மட்டும் பிறருக்கு - மாத வாடகையில் - கொடுக்கும். சொத்து குத்தகை கம்பெனிகள் பெயரில் இருக்கும். இதனால் அந்தப் பொருளின் தேய்மானம் (depreciation) குத்தகை கம்பெனியின் கணக்குகளில் வரும். பொருளுக்கான விலை, லாபம் அனைத்தையும் முதல் மூன்று (அல்லது ஐந்து) வருடங்களுக்குள் சம்பாதித்து விடுவர். அத்துடன் தேய்மானம் மூலம் கிடைக்கும் வரிச்சலுகையும் உண்டு. பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து அதனை கிடைத்த விலையில் விற்கலாம். இப்படித்தான் குத்தகை கம்பெனிகள் லாபம் சம்பாதித்தன.

வாடகை/வாங்கல் முறையில் பொருளானது வாங்குபவருக்குச் சொந்தம். ஆனால் அவர் பணம் கட்டுவதை நிறுத்தி விட்டால் பண உதவி செய்த நிறுவனம் பொருளை ஜப்தி செய்யலாம். ஆனால் தேய்மானம் அதிகம் உள்ள பொருட்களை ஜப்தி செய்தும் எந்தப் பயனுமில்லை. வீடு, நிலம், தங்கம் போன்ற பொருட்களை அடகு வைக்கும்போது அதன் மதிப்பில் குறைவு ஏதும் (பொதுவாக) ஏற்படுவதில்லை.

சீட்டு முறை பழந்தமிழகத்தில் 'தான்யச் சீட்டு' என்று தானியங்களைக் கொண்டு செய்வதன் மூலம் பணம்/நாணயம் புழங்குவதற்கு முன்னேயே இருந்துள்ளது போலும். பத்து, பதினைந்து (அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை) பேர் ஒன்று சேர்ந்து மாதம் குறிப்பிட்ட பணத்தைக் கட்ட வேண்டும். அந்தப் பணத்தை உறுப்பினர்களுல் ஒருவர் ஏலத்தில் எடுப்பார். யார் குறைந்த அளவு ஏலம் கேட்கிறாரோ அவருக்கு அவர் கேட்ட பணம் போய்ச்சேரும். மீதிப் பணத்தில், சீட்டு நடத்துபவரின் தரகு போக மீதியை மற்ற அனைவரும் பிரித்துக் கொள்வார்கள். இந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதியை அடுத்த மாதம் கட்டினால் போதும். வரும் மாதங்களில் ஏற்கனவே ஏலத்தில் ஜெயித்தவர்கள் போக மீதிப்பேர்தான் ஏலத்தில் பங்கு பெற முடியும்.

இப்படி தமிழகம், கேரளாவில் தொடங்கிய சீட்டு முறை இப்பொழுது இந்தியா முழுதும் பரவியுள்ளது.

சராசரியாகப் பார்க்கும்போது, இதுபோன்ற சீட்டு முறைகளில் ஒருவருக்கு கிட்டத்தட்ட 16-18% வட்டியில் பணம் கடனாகக் கிடைக்கிறது. அதுபோல மற்றவர்கள் அனைவருக்கும் அவர்கள் மாதாமாதம் கட்டும் தொகைக்கு கிட்டத்தட்ட 12% வரை வட்டி வருமானம் போலக் கிடைக்கிறது. (Spread - இந்த இரண்டு விகிதங்களுக்கும் இடையிலான வித்தியாசம் சீட்டு நடத்துபவரின் கமிஷன்...)

'நிதி' என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட கம்பெனிகள். இவற்றில் சேமிப்பு வங்கிக் கணக்கு (Savings Bank a/c), வைப்பு நிதி (Fixed Deposits), Recurring Deposits ஆகியவற்றைத் தொடங்கலாம். நிதி, தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை வசதிகளை அளிக்கலாம். ஆனால் நிதியில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, அல்லது கடன் வாங்கவோ முதலில் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக வேண்டும். ஒரு ரூபாய் பங்கு ஒன்று வாங்கினால் போதும்! நிதி என்பது ஒரு சிறிய உள்வட்டத்தில் இயங்குவது. அந்த சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் அதில் உறுப்பினராக இருப்பார்கள். (மைலாப்பூர், ராயப்பேட்டை... இதுபோல) The Companies Act, 1956 இல் நிதி எப்படி இயங்க வேண்டும், அதற்கு என்னென்ன சலுகைகள் உண்டு என்பதை பகுதி 680A விளக்குகிறது. நிதி தன் உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் (பங்காதாயம் (அ) ஈவுத்தொகை) கொடுப்பதற்கு தனியாகக் காசோலைகளை அனுப்ப வேண்டியதில்லை. கம்பெனியின் உறுப்பினர்கள் அனைவருமே அந்த கம்பெனியிலேயே கடன் கணக்கோ அல்லது சேமிப்பு கணக்கோ வைத்திருப்பதால் ஈவுத்தொகையை நேரடியாக அவர்களது கணக்கிலே பற்று வைக்கலாம்.

நிதியில் முகம் தெரிந்தவர்கள், தங்கள் தேவைகளுக்கான கடன்களை மூன்று, நான்கு நாட்களுக்குள் பெற முடிந்தது. தங்கம் மற்றும் நிலத்தை அடமானம் வைத்து அதன்மீதுதான் கடன் வாங்க முடியும். அதேபோல ஒரு குறிப்பிட்ட neighbourhood இல் உள்ள முக்கியஸ்தர்கள்தான் அந்த நிதியின் இயக்குனர்களாக, அந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களாக இருந்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் தங்கள் சேமிப்புகளை இதுபோன்ற நிறுவனங்களில் வைத்தனர். அதற்கு ஏற்ப அதிக வட்டி வருவாயும் பெற்றனர்.

வெறும் ரூ. 10,000 முதல் இருந்தால் போதும். நிதி தொடங்கலாம் என்று இருந்தது.

1980-1996 நேரத்தில் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் காளான்கள் போல முளைத்தன. 1996இல் இவற்றுக்கு கெட்ட நேரம் தொடங்கியது. 1970களிலேயே வங்கிகள், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தம் தொழிலைப் பிடுங்கிக்கொண்டு செல்வதாக, ரிசர்வ் வங்கியிடம் புகார் கொடுக்க ஆரம்பித்தன. அப்பொழுது வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லாமலிருந்தது. 1977இல் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு வங்கியல்லா நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் உரிமை கொடுத்தது. ஆனால் ரிசர்வ் வங்கி அதிகமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவில்லை. கொண்டு வந்த சில கட்டுப்பாடுகள்:
1. ஒரு வங்கியல்லா நிறுவனம் எத்தனை பணத்தை வைப்பு நிதியாகப் பெறலாம் என்பதில் கட்டுப்பாடி. முதல் + மீதி (Equity + Reserves) எவ்வளவோ, அதைப்போல ஒரு குறிப்பிட்ட மடங்குதான் (பத்து மடங்கு) வெளியாரிடமிருந்து 'கடன்'களைப் பெற முடியும்.
2. இந்தக் கடன்களில் ஒரு குறிப்பிட்ட விகிதம் பிற வங்கிகளிடமிருந்தும், குறிப்பிட்ட விகிதம் வங்கியல்லா பிற நிதி நிறுவனங்களிடமிருந்தும் (Development Credit Institutions), மீதம்தான் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளாகவும் பெற முடியும்.
3. பொதுமக்களிடமிருந்து பெறும் வைப்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்துக்கு மேல் கொடுக்க முடியாது.
4. இடைத்தரகர்களுக்கு (வைப்பு நிதியைப் பெற்றுத்தருபவர்கள்) குறிப்பிட்ட அளவுக்கு மேல் கமிஷன் தர முடியாது.

நன்கு நடந்து வந்த இந்தத் தொழிலும் பேராசைக்காரர்கள், கெட்ட எண்ணம் படைத்தவர்கள் வந்ததால் நாசமடைந்தது. மேலும் வரைமுறையில்லாமல் இவர்கள் பலருக்குக் கடன் கொடுத்ததும் ஒரு காரணம். சென்னை ராயப்பேட்டை பெனிபிட் பண்டு 400 கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட்டுகளைப் பெற்றது. அதிலிருந்து ஒருவருக்கு மட்டுமே 140 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. அந்தப் பணம் திரும்பி வராமல் போகவே கம்பெனி முழுதாக மூழ்கிப் போனது.

ரிசர்வ் வங்கியின் பொறுப்பற்ற நடைமுறையும், கையாலாகத்தனமும் கூட ஒருவிதத்தில் காரணம். ராயப்பேட்டை பெனிபிட் பண்டை மேற்பார்வையிட்ட ரிசர்வ் வங்கி ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னது. ஆனால் சில நாள்களிலேயே அந்த கம்பெனி மூழ்கியது.

1996இல் சென்னையைச் சேர்ந்த CRB Capital Markets என்னும் வங்கியல்லா நிதி நிறுவனம் மூழ்க ஆரம்பித்தது. அவர்கள் பொதுமக்கள் வைப்புத்தொகையையும் மற்ற பணத்தையும், பல்வேறு தவறான காரியங்களுக்காகப் பயன்படுத்தி வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிறுவனம் மூழ்கப்போவதாக புரளி (நிசமாகவும் இருக்கலாம்!) கிளம்பியது. இதனால் பீதி அடைந்த மக்கள், தங்கள் வைப்பு நிதிகளைத் திரும்பப் பெற முயன்றனர். ஆனால் CRBயால் திரும்பித் தர இயலவில்லை. மேலும் பீதியடைந்த பொதுமக்கள் இதர நிதி நிறுவனங்களில் தாங்கள் போட்டுவைத்திருந்த பணத்தையும் வெளியே எடுக்க முனைந்தனர்.

ரிசர்வ் வங்கியோ, கஷ்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள் அத்தனையையும் மேற்கொண்டு வைப்பு நிதிகளைப் பெறத் தடை செய்தது. அதே நேரம் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தரவும் அழுத்தியது. இது முடியாத காரியம். பணத்தைப் புரட்டுவதனால் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்களின் கழுத்தை ரிசர்வ் வங்கி அழுத்திப் பிடித்தது. அத்தோடு நியாயமாக இயங்கிக் கொண்டிருந்த அனைத்து வங்கியல்லா நிதி நிறுவனங்களையும் இரும்புக் கரம் கொண்டு ரிசர்வ் வங்கி அடக்க ஆரம்பித்தது.

அதுவரையில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு இனி லைசன்ஸ் உண்டு என்றும், அவர்கள் அனைவரும் உடனடியாக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 1999இல் 40,000 எண்ணிக்கையில் இருந்த நிறுவனங்களில் பலவற்றை ரிசர்வ் வங்கி தொழிலிலிருந்து விலகிப்போகச் சொன்னது. அப்படியும் 10,000 நிறுவனங்கள் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தன. ஆனால் இதுவரை வெறும் 674 நிறுவனங்களுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி லைசன்ஸ் கொடுத்துள்ளது! எந்தவித அவசரமும் இல்லாமல் மீதமுள்ள உரிம விண்ணப்பப் படிவங்களை ரிசர்வ் வங்கி கிடப்பில் போட்டு வைத்துள்ளது. அதிக எண்ணிக்கையில் NBFCக்கள் வேண்டாமே என்ற எண்ணம் ரிசர்வ் வங்கிக்கு.

மேலும் வங்கிகளின் மீது விதிக்கப்படும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் (Capital Adequacy Ratio norms) போன்றவற்றை NBFCக்கள் மீதும் விதிக்கத் தொடங்கியது ரிசர்வ் வங்கி.

இதனால் NBFCக்கள் காணாமல் போக, பொதுமக்கள் வேறு வழியின்று பணத்தை வங்கிகளில் கொண்டு சேர்த்தனர். இதனால் வங்கிகளில் liquidity - பணத்தாராளம் - அதிகமானது. வங்கிகளும் கவலையே படாமல் இந்தப் பணத்தை ரிசர்வ் வங்கியிலும், நம்பகத்தன்மை அதிகமான அரசின் கில்ட் போன்றவற்றிலும் போட்டுவைத்து விட்டு சும்மா இருக்கின்றன. வட்டி விகிதம் குறையக் குறைய, பொதுமக்களின் சேமிப்பின் வருமானம் குறையத் தொடங்கியது.

மேற்கத்தியப் பொருளாதாரம் நுகரும் கலாச்சாரத்தின் பின்னணியில் உருவானது. அதனால் வட்டி விகிதம் குறையக் குறைய, அவர்கள் அதிகமாகக் கடன் வாங்கி, அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் இந்தியப் பொருளாதாரம் சேமிப்பின் அடிப்படையில் கட்டப்பட்டது. அதனால் வட்டி விகிதம் குறைவது இந்தியாவிற்கு நல்லதல்ல. அத்துடன் informal அடிப்படையில் பணம் கடன் கொடுப்பது நின்று போனது பல கீழ்நிலை மக்களைத்தான் பாதித்துள்ளது. இவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை - ரிஸ்க் அதிகம் என்பதால். ஆனால் வங்கிகள் விடாமல் பணத்தேவையற்றவர்களைப் பின்தொடர்ந்து 'நீங்கள் கடனைக் கட்டிவிட்டீர்கள், அதனால் மேலும் கடன் வாங்குங்கள்' என்று நச்சரிக்கின்றன. ஆக, தேவையானவர்களுக்குக் கடன் கிடைக்காமல், தேவையில்லாதவர்களைப் பணம் பின்தொடர்கிறது!

நிதியமைச்சர் சிதம்பரம் வங்கிகளை விவசாயத்துறைக்கு கடன் கொடுக்கச் சொல்கிறார். ஆனால் வங்கிகளோ, விவசாயத்திற்குக் கடன் கொடுத்தால் அது NPA - Non Performing Asset ஆகிவிடுமோ என்று பயப்படுகின்றன. ஆனால் முறைசாராத்துறையில் இருக்கும் தனியார்கள், கிராமங்களில் பணத்தை இதுபோன்றவர்களுக்குத்தான் வட்டிக்குக் கொடுக்கின்றனர் (மிக அதிக வட்டியில்!).

இதற்கிடையில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அவசர அவசரமாக யாருமே 9%க்கு மேல் ஆண்டு வட்டி வசூலிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றியது. இது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். ஜி.வி என்னும் சினிமாக்காரர் தற்கொலை செய்து கொண்டது கந்துவட்டியினால்தான் என்பதால் இப்படி ஒரு சட்டம் இயற்றியிருக்க வேண்டாம். [இது பற்றிய என் முந்தைய பதிவு இங்கே. - பத்ரி] ஒரு பக்கத்தில் சிடிபேங், கிரெடிட் கார்டுகள் மூலம் மாதத்திற்கு 2.5% வரை வசூல் செய்கிறது! ஆனால் தமிழகத்தில் கடன் கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 9% மேல் வட்டி வசூலிக்கக் கூடாதாம்!

எந்தவொரு தொழிலை எடுத்துக்கொண்டாலும் அதில் சில நிறுவனங்கள் போண்டியாகும். கெட்டவர்கள் வருவார்கள், பணத்தைத் திருடுவார்கள். அதற்காக அந்த தொழிலையே ஒட்டுமொத்தமாக மூடிவிடுவது நியாயம் ஆகாது. சாலையில் இரண்டு பேர் மீது பஸ் மோதிவிட்டது என்பதனால் தெருவில் நடக்காமலா இருக்கிறோம்?

வங்கியில்லா நிதி நிறுவனங்கள் மிக அவசியம். அவை [கடன் வாங்கும்] வாடிக்கையாளர்களிடையே நெருக்கமான உறவுகளை வைத்துள்ளன. தமது informal முறையால் வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை இருக்கும்போது பணம் திருப்பிச் செலுத்தும் தவணையை மாற்றி அமைக்கின்றன. சுந்தரம் பைனான்ஸ் கொடுக்கும் கடன்கள் 99.5% திருப்பித் தரப்படுகின்றன! இதற்குக் காரணம் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தமக்கு முகம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறார்கள். பொதுமக்களிடம் தமது உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் வங்கிகள் இதயமற்ற, முகமற்ற சேவையை அளிக்கின்றன. அவை வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. பணம் அதிகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நேரடி முகம் காண்பித்து சேவையைக் கொடுக்கின்றன. பணத்தின் அவசியத் தேவை உள்ளவர்களைப் புறக்கணிக்கின்றன.

ரிசர்வ் வங்கியால் NBFCக்க்களையும் அவை இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆற்றும் சேவையினையும் சரியான முறையில் இதுவரை புரிந்துகொள்ள முடிந்ததில்லை. எனவே NBFCக்களை ரிசர்வ் வங்கியின் இரும்புப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். புதிதாக வேறு ஒரு கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்மாணித்து அதன் கையில் NBFCக்களை ஒப்படைக்க வேண்டும்.

Monday, September 27, 2004

பொங்குதமிழ் - கனடா இலங்கைத் தமிழர் பொதுக்கூட்டம்

சனி அன்று (25 செப்டம்பர்) கனடாவில், டொராண்டோவில் இலங்கைத் தமிழர் குடியேறிகள் (Sri Lankan Tamil Immigrants) மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 75,000 பேர் கலந்துகொண்டனர் என்று எல்.டி.டி.ஈ செய்தி நிறுவனம் கூறுகிறது. அத்துடன் கனடா பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சரி, கூட்டம் எதைப்பற்றியது? இலங்கையில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என்றும், அதில் கனடா அரசாங்கமும் ஈடுபடவேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்காக.

ஆனால் இப்படி ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாகவோ, நடந்து விட்டதாகவோ இந்திய ஊடகங்கள் எமக்குத் தெரிவிக்கவேயில்லை. ஹிந்துஸ்தான் டைம்ஸ் மட்டும் ஒரு சம்பந்தமில்லா செய்தியில், நான்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் (எல்.டி.டி.ஈ ஆதரவாளர்கள்) கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறுகிறது.

'தி ஹிந்து'வுக்கு இலங்கை சம்பந்தமாகச் சொல்வதற்கு கருணாவின் உறவினர்கள்/நண்பர்கள் இருவர் கொழும்பிலும், மட்டக்கிளப்பிலும் கொல்லப்பட்டது மட்டும்தான் தெரிகிறது.

தமிழ் செய்தித்தாள்களான தினமணி, தினமலர் ஆகியவையும் ஒரு செய்தியும் வெளியிடவில்லை. மேலோட்டமாக, கூகிளில் தேடியதில் எந்த இந்தியச் செய்தி ஊடகமும் பொங்குதமிழ் பற்றி செய்தி எதையும் வெளியிடவில்லை என்று தெரிகிறது.

தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் எதுவும் பொங்குதமிழ் பற்றிய செய்தி ஒன்றையும் வெளியிடவில்லை.

பிபிசியிலும் - உலகச்சேவை தொலைக்காட்சியிலும், இணையத்திலும் - செய்தி வரவில்லை.

எல்.டி.டி.ஈ செய்தி நிறுவனம் தமிழ்நெட் இணையத்தளத்திலும், ஈழத்தமிழர்கள் வலைப்பதிவுகளிலும் மட்டும்தான் - ஒருவேளை சில கனேடிய ஊடகங்களில் கூட இருக்கலாம் - இந்தமாதிரியான ஒரு மாபெரும் கூட்டம் நடந்துள்ளது என்பதையே அறிந்துகொள்ள முடியும்.

ஊடகங்கள் எல்லாக் குழுவினரின் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் செய்திகளை மறைப்பதில் என்ன பிரயோசனம்?

Wednesday, September 22, 2004

'தி ஹிந்து'வில் http://tamilblogs.blogspot.com/

இன்று 'தி ஹிந்து'வில் வெளியாகியுள்ள மேலோட்டமான ஒரு செய்தியில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றி ஒரு வரியும், தமிழ் வலைப்பதிவுகளில் முகவரியாக http://www.tamilblogs.blogspot.com/ வும் வெளியாகியுள்ளது.

"There is also a dedicated group of people blogging in Tamil (www.tamilblogs.blogspot.com)."

செய்தியை எழுதியவர் (கார்திக் சுப்ரமணியன்), தமிழில் வலைப்பதிபவர்களை ஒரு வார்த்தை கேட்டுப் பேசவேண்டும் என்று நினைக்கவில்லை போலும்.

தமிழ்க்குடிமகன் மரணம்

முன்னாள் தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் மாரடைப்பால் காலமானார். மதுரை யாதவா கல்லூரி முதல்வராக இருந்த தமிழ்க்குடிமகன், திமுக சார்பாகப் போட்டியிட்டு 1989-1991இல் தமிழக சட்டமன்ற அவைத்தலைவராக இருந்தார். பின் மீண்டும் திமுக 1996இல் ஆட்சிக்கு வந்தபோது தமிழ் வளர்ச்சித்துறை, இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்.

2001இல், திமுக தேர்தல் சீட்டு கொடுக்கவில்லை என்பதால் அதிமுகவில் இணைந்தார்.

அவரது தமிழ்ப்பற்று அனைவரும் அறிந்ததே.

1997இல் சென்னையில் சைபர் குளோப் என்னும் நிறுவனத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் அந்த நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கையை இணையத்தில், தமிழில், நேர்முகம் செய்ய முயன்றோம். அப்பொழுது அமைச்சர் தமிழ்க்குடிமகனை அணுகி அதுபற்றிப் பேசினோம். இணையம் பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும், இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியது என்றார்.

தொலைக்காட்சியில் முதல்வர் வாசிக்கும் பட்ஜெட் அறிக்கையை வைத்து அவசர அவசரமாக, எதையோ எழுதி, அதைத் தமிழாக்கி, தமிழ் எழுத்துக்குறியீடு, எழுத்துரு சரிசெய்து போடுவதற்குள் 'தாவு தீர்ந்துவிடுகிற' வேலை அது. ஆர்வத்தால் அதில் ஈடுபட்டிருந்தோம். எங்களுக்கு உதவிசெய்யும் வகையில், தனக்குக் கிடைத்த பட்ஜெட் அறிக்கையை, பட்ஜெட் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறபோதே எங்களுக்குக் கொடுத்துவிட்டார்.

'தமிழ் இணையம்' மாநாடுகளில் விடாது பங்கேற்பவர். 1997இல் சிங்கப்பூர் வந்திருந்தார். 2003 ஆகஸ்டில் கடைசியாக சென்னையில் நடந்த மாநாட்டில் சில அமர்வுகளில் பார்வையாளராக அமர்ந்திருந்தார்.

டிசம்பர் 2004இல் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் 'தமிழ் இணையம் 2004'இல் தமிழ்க்குடிமகனைப் பார்க்க முடியாது. அவரது மறைவுக்கு இரங்குவோம்.

Thursday, September 16, 2004

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த

கடந்த இரண்டு நாள்களாக செய்தித்தாள்களில், ரிசர்வ் வங்கி CRRஐ அதிகரித்துள்ளது என்று படித்திருப்பீர்கள். இந்த ரிசர்வ் வங்கியின் முயற்சி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த என்றும் படித்திருப்பீர்கள்.

பணவீக்கம் (inflation) என்றால் என்ன? கொஞ்சமாக இருக்கும் பொருள்களை, அதிக அளவு பணம் துரத்துகிறது, அதனால் அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்க, பலர் தயாராக இருக்கின்றனர், இதனால் பொருள்களின் விலை கிடுகிடுவென ஏறுகிறது. ஒரு ரூபாய்க்கு அதுவரை கிடைத்து வந்த பொருள் இனியும் அந்த விலைக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அதாவது மற்றொரு வகையில் பார்த்தால் ஒரு ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. இதுதான் பணவீக்கம். இந்தப் பணவீக்கம் சில மாதங்கள் முன்னர் வரை 5% சமச்சீராக இருந்து வந்தது. கடந்த நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்தொடங்கி சென்ற வாரம் 8.33% தொட்டது.

இதனை இரண்டு வகைகளில் சமாளிக்கலாம். அதிக அளவில் இருக்கும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். அல்லது பொருள்களை இன்னமும் ஏராளமாக உற்பத்தி செய்யவைக்கலாம். ஆனால் ஓர் அரசால் மிகக்குறுகிய காலத்தில் ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்ய வைக்க முடியாது, ஆனால் குறுகிய காலத்தில் வெளியே புழங்கும் பணத்தைக் குறைக்க முடியும். இந்தச் செயலை ஓர் அரசு எப்படிச் செய்கிறது என்று பார்க்கலாம்.

CRR என்றால் Cash Reserve Ratio. வர்த்தக வங்கிகள், தம்மிடம் உள்ள வைப்பு நிதிகளிலிருந்து (உடனடியாக வெளியேற வேண்டிய தொகையை விடுத்து) ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டும். இந்த விழுக்காடுதான் CRR.

எடுத்துக்காட்டாக ரிசர்வ் வங்கி CRR 4.5% என்று தீர்மானித்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள வைப்பு நிதி (நீங்களும், நானும், பிறரும் போட்டு வைத்திருக்கும் பணம்) ரூ. 50,000 கோடி என்று வைத்துக் கொள்வோம். பாரத ஸ்டேட் வங்கி, இதிலிருந்து 4.5% அதாவது ரூ. 2,250 கோடியை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள பணத்தை தன்னிஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - பிறருக்குக் கடனாகக் கொடுத்து அதிலிருந்து லாபம் ஈட்டலாம்.

திடீரென்று ரிசர்வ் வங்கி CRRஐ 5% ஆக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது பாரத ஸ்டேட் வங்கி ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய பணம் எவ்வளவு? 5%(50,000) = ரூ. 2,500 கோடி. அதாவது பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக, தான் ஏற்கனவே ரிசர்வ் வங்கியில் போட்டுவைத்திருக்கும் பணத்திற்கு மேலாக ரூ. 250 கோடியைப் போடவேண்டியிருக்கும்.

CRR உயர்த்தப்பட்டதனால் வங்கிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கவிருந்த கடன் அளவு குறைந்து போகிறது. இதனால் வங்கிகள் 'வீடு வாங்கக் கடன்', 'வண்டி வாங்கக் கடன்', காரணமில்லாக் கடன் (பெர்சனல் லோன்) ஆகிய அனைத்தையும் குறைக்க வேண்டி வரும். இதனால் பொதுமக்களுக்கு செலவு செய்யக் கிடைக்கும் பணம் குறைகிறது.

புதுமையாக இருக்கிறதா? இன்று நாம் செலவு செய்யும் பணம் அனைத்தும் நம் சம்பாத்தியத்தால் - வருமானத்தால் மட்டும் வருவதில்லை. மிக அதிகமான அளவிற்கு, கடன் பணம்தான் உபயோகப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் விற்கும் மோட்டார் வண்டிகளில் 80% மேலான வண்டிகள் கடன்கள் மூலமாகத்தான் வாங்கப்படுகின்றன. இன்றைய தேதியில் 90% மேலான வீடுகள் கடன்கள் மூலமாகத்தான் வாங்கப்படுகின்றன. இதைத்தவிர எண்ணற்ற செலவுகள் - வெளியூர் சுற்றிப்பார்ப்பது, புது மியூசிக் சிஸ்டம் வாங்குவது என தள்ளிப்போடக்கூடிய செலவுகளில் பெரும்பாலானவை காரணமில்லாக் கடன்கள் மூலமாக நடைபெறுகின்றன. அதைத்தவிர ஸீரோ விழுக்காடு கடன்கள் என்று நுகர்பொருட்கள் பல - வாஷிங் மெஷின், டிவி, குளிர்பதனப் பெட்டி என அனைத்தும் - கடன்களை ஆதாரமாக வைத்தே வாங்கப்படுகின்றன. இந்த நடப்பு பெருநகரங்களில் மட்டும் நடப்பதல்ல. சிறுநகரங்களிலும் கூடத்தான்.

மொத்தப் பணப்புழக்கம் குறையும்போது வாஷிங் மெஷின் வாங்குவது மட்டுமல்ல, செருப்பு வாங்குவது, வெங்காயம் வாங்குவது என அத்தனையுமே குறைகிறது (cascading effect). 'ஒரு மாதம் தள்ளி முடிவெட்டிக்கொள்ளலாம், மூஞ்சியில் முடி விழுந்தால் பரவாயில்லை' போன்ற முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ஆக, வங்கிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கும் கடன் குறையும்போது பொதுமக்கள் செய்யும் செலவும் குறைகின்றது. இதனால் குறைந்த அளவுள்ள பணமே (எல்லாவிதப்) பொருட்களையும் பின்தொடர்கின்றன. பணம் பொருட்களைத் துரத்துவதற்கு பதில், பொருட்கள் பணத்தைத் துரத்துகின்றன. பொருட்களின் விலை குறையத் தொடங்குகிறது.

இவ்வாறாக ரிசர்வ் வங்கி வெளியே புழக்கத்தில் இருக்கும் பணத்தினை உறிஞ்சித் தன்னகத்தே வைத்துக்கொள்வதால், குறுகிய காலத்தில் பணவீக்கத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.

CRR சில வருடங்களுக்கு முன்னால் 7.5% இருந்தது. பின், பொருளாதாரத்தை வளப்படுத்த ரிசர்வ் வங்கி CRRஐச் சிறிது சிறிதாகக் குறைத்து 4.5% ஆக்கியது. இதனால் வர்த்தக வங்கிகளிடம் அதிகமான பணம், பிறருக்குக் கடன் கொடுக்கக் கிடைத்தது. தொடர்ந்து வங்கிகளிடையே ஏற்பட்ட கடுமையான போட்டியில், கடன் மீதான வட்டி விகிதம் குறைந்து கொண்டே வந்தது. வீட்டின் மீதான கடன் வட்டி 12-13% இலிருந்து குறைந்து 7.5% வரை வந்தது. இப்பொழுது சற்றே அதிகரித்து 8% ஆகியுள்ளது. அதுபோல மூன்று வருடங்களுக்கு முன் தனியார் வங்கிகள் காரணமில்லாக் கடன் மீதான வட்டியாக 20% (அதற்கு மேலும்) வரை வசூலித்து வந்தனர். இப்பொழுது அது 12-14% வரை குறைந்துள்ளது.

CRR அதிகமானதோடு மட்டுமில்லாமல், ரிசர்வ் வங்கி தன்னிடம் வர்த்தக வங்கிகள் வைத்திருக்கும் பணத்திற்கான வட்டியையும் அதிரடியாகக் குறைத்துவிட்டது. இதுநாள் வரை ரிசர்வ் வங்கி தன்னிடம் வங்கிகள் கொடுத்து வைத்திருக்கும் பணத்திற்கு 6% வட்டி கொடுத்தது. இப்பொழுது 3.5% மட்டும்தான் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் வங்கிகளின் வருமானம் குறையும் - எனவே பங்குச்சந்தையில் இருக்கும் வங்கிகளின் பங்கு விலை குறையும் - குறைந்துள்ளது. வங்கிகள் தாம் தாராளமாகக் கொடுத்து வந்திருக்கும் கடன்களை சற்றே நிறுத்தி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தையும் அதிகப்படுத்தலாம். உடனடியாகச் செய்வார்களா என்று தெரியவில்லை.

கடந்த இரண்டு வருடங்களில் வட்டி விகிதம் மிகக்குறைவாக இருந்ததால் பல நிறுவனங்கள் பெருத்த செலவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த எண்ணி முதலீடு செய்வதற்காக கடன்கள் வாங்கியிருந்தனர், மேற்கொண்டு வாங்குவதாக இருந்தனர் (for Capital expenditure). வட்டி விகிதம் கூடுவதாக இருந்தால், பல நிறுவனங்கள் தொழில் விரிவாக்கலை நிறுத்தலாம், அல்லது தள்ளிப்போடலாம். இதனாலும் வேலை வாய்ப்புகள் குறையும். பொதுமக்களுக்கான சேவை வசதிகளும் குறையும்.

மோட்டார் வண்டிகள் வாங்கக் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்தால், பொதுமக்கள் வாங்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவுபடும். இதனால் மோட்டார் நிறுவனங்களின் (மாருதி, டாடா மோடார்ஸ், ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ்) வருமானம், லாபம், பங்கு விலை பாதிக்கப்படும். அந்நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளில் தடங்கல்கள் ஏற்படும். வேலை வாய்ப்புகளும் குறைவுபடும். அதுபோலவே மற்ற பெரிய நுகர்பொருள் நிறுவனங்களின் வருமானங்களும், லாபமும் பாதிக்கப்படும்.

ஆனால் தற்போதுள்ள பண வீக்கம் + விலையேற்றம், வெளியே அதிகமான பணப்புழக்கம் இருப்பதனால் மட்டும் வந்தது போலத் தோன்றவில்லை. பெட்ரோல் விலையேற்றம் இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஆனாலும் குறுகிய காலத்தில் பணவீக்கத்தைக் குறைத்து, விலையேற்றத்தைத் தவிர்க்க CRR உபயோகமாக இருக்கும்.

அத்துடன் மற்ற சில முயற்சிகளும் தேவை. பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் YV ரெட்டி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். வரும் நாள்களில் அரசின் மற்ற முயற்சிகள் என்னவென்று தெரிய வரும்.

Tuesday, September 14, 2004

ஹல்லோ மைக் டெஸ்டிங்

க்ருபாஷங்கர் தொடங்கி வைத்து, பின் கொஸப்பேட்டை அருளுடன் வளர்ந்தது... அதில் எனக்குத் தெரிந்த அரைகுறை ஜாவாஸ்கிரிப்டை வைத்து சில மாற்றங்களைச் செய்துள்ளேன். இப்பொழுதைக்கு கொஞ்சம் திருப்தியாக உள்ளது.

வேண்டிய அளவு மாற்றங்கள் செய்து பிறரும் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Sunday, September 12, 2004

the joker was here

சாரு நிவேதிதாவைத் தெரியுமா? அவரது எழுத்துகள் வசீகரம் மிக்கவை. நான் அவரது நாவல்களையோ, சிறுகதைகளையோ இதுவரை படித்ததில்லை. இப்பொழுது உயிர்மை போன்ற இதழ்களில், மற்றும் சாருஆன்லைன்.காம் இணையத்தளத்தில் இருக்கும் கட்டுரைகளைப் படித்துள்ளேன். ஸீரோ டிகிரி, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் போன்ற படைப்புகளைப் பற்றிக் கேட்டிருக்கிறேன். இன்னமும் அவற்றைப் படிக்கவில்லை.

சென்ற வாரம் அவரது 'நேநோ' என்னும் சிறுகதைத் தொகுதியை அன்புகூர்ந்து முத்துராமன் எனக்குப் படிக்கக் கொடுத்தான். முன்னுரையில் அசோகமித்திரன் இவ்வாறு சொல்கிறார்:
திரு சாரு நிவேதிதா அவர்களின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு முன்னுரை எழுதக் கேட்டுக் கொண்டபோது தயக்கத்துடன் ஒத்துக் கொண்டதற்குக் காரணம் அவருடைய பல நல்ல சிறுகதைகளை அவை பத்திரிகைகளில் வெளிவந்தபோது நான் படித்திருந்தாலும் அவருடைய வேறு சில படைப்புகள் என் தகுதிக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன.
இந்த மேற்கோள் என்னை மேலும் படிக்கத் தூண்டியது.

முதலில் புத்தகத் தலைப்பிலான கதையைப் படித்தேன். நிச்சயமாக அது அசோகமித்திரனின் தகுதிக்கு அப்பாற்பட்டதாகத்தான் தோன்றியது. அதனால் அடுத்து புரியும்படியான எல்லாக் கதைகளையும் தாண்டித் தாண்டி, அசோகமித்திரனின் தகுதிக்கு அப்பாற்பட்டவற்றை மட்டும் கூர்ந்து படிக்கத் தொடங்கினேன். பின்னொரு நாள், மேலும் விவரமாக சாருவின் படைப்புலகம் பற்றி எழுத விழைகிறேன். அதற்கு முன்னால், சாருவின் the joker was here என்னும் கதை? கட்டுரை? தெரியவில்லை - மீட்சி, 1990 இதழில் வெளிவந்த இந்தப் பிரதியின் முதல் சில வார்த்தைகளை ஒரு பெரிய மேற்கோளாக இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்...

விபச்சாரியின் யோனி வழி வழி ஒழுகும் விந்து குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டம்ளர் கரும் பலகை கிராமத்துச் சிறுமியின் மூக்குச் சளி குஷ்டரோகியின் நிணத்தில் மொய்க்கும் ஈ ஜிலேபி ஊறுகாய் முட்டை கால் பந்து கைப்பந்து சுருட்டு கணேஷ் பீடி வில்ஸ் ஃபில்டர் சாலையோரத்து sanitary napkin குடை சடை வடை படை முப்படை எப்படை அடை எடை இடை உடை கடை நடை நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது முடை ராக்கெட் பூசணிக்காய் அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே நட்சத்திரம் ஷூ பாலிஷ் ஷேக்ஸ்பியரின் கவிதை வரி நரி பரி கரி துரி ழுரி புரி ஒட்டகம் கழுதையின் குறி குதிரை வால் வானவில் நிர்மா குர்மா சுர்மா புர்மா மௌனியின் பூணூல் மௌனியின் cock புளி புலி முண்டக்கூவி பரதம் பதம் ரதம் பாதம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம் பம் பம் பம் பம் பம்பம்பம்பம் பும் பும் பும் பும் பும் பூம் பூம் பூம் பூம்பூம்பூம்பூம்பூ ம்பூ ம்பூ ம்பூ ம்ப்ஊம் புஊம் புஊம் புஊம்பு ஊம்பு ஊம்பு ஊம்பு ஊம்பு வறுத்த ஈரல் மம்மியின் panties முனியாண்டி விலாஸ் பிரியாணி முனியாண்டியின் கதை புத்தனின் குசு விசுவின் சிசு தமிள் ஒழுத்தாளனின் வண்ணான் கணக்கு புண்ணாக்கு வெங்காயம் சிந்துபாதின் கன்னித்தீவு வல்லாரை லேகியம் கருணைக் கிழங்கு பேரீச்சம் பழம் நிரோஷாவின் உதடு டிஸ்கோ சாந்தியின் தொடை காந்தியின் விரைக்காத குறி பூந்தி காராபூந்தி காராசேவு குருச்சேவு கொர்பச்சேவு துரு பிடித்த பிளேடு பன்றி வாயிலிருந்து ஒழுகும் பீ தமிள்ப்பீ குயில்ப்பீ குல்ஃபீ அணு தூண் இரும்பு எரும்பு பருப்பு உறுப்பு கருப்பு பல்லியின் நாக்கு யானை லத்தி அல்கூல் வடமூளியில் Bhagன்னா லிங்கம் wanன்னா அல்கூல் பகவான் is equal to லிங்க அல்கூல் மலப்புழு சீனி வெண்டைக்காய் சுண்டைக்காய் துண்டைக்காய் குண்டைக்காய் முண்டைக்காய் களி கலி வலி வளி உளி அலி எலி gas chamber பனிப்பாறை தொன்னூறு லட்சம் மனிதப் பிணங்கள் தாலி மீறிய சீலை கர்மா வர்மா தர்மா சண்டை சாண்டை பண்டை தண்டை கொலுசு புலுசு ஸ்க்ரூ டாலியின் மீசை மாரதோனாவின் கால் வான்கோவின் ஒற்றைக்காது சேகுவேராவின் துண்டிக்கப்பட்ட கை மாவோவின் கொசு வலை polpot-ன் முண்டாசு லார்வா வைரஸ் ஆபிதீனின் கோவணம் சாரு நிவேதிதாவின் ஆபாசக் கடிதம் ஆம்பளை பொம்பளை ...

அப்பா மூச்சிரைக்கிறது. இதற்குக் கொஞ்சம் தாண்டி முழு வரிகள் போல வருகின்றன. ஆனாலும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான் செல்கின்றது. அசோகமித்திரனின் தகுதிக்கு நிச்சயமாக மேல்தான்.

Saturday, September 11, 2004

மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்

இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்டில் சுர்ஜித்சிங் பல்லா மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான பிரச்னை பற்றி தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.

முதலில் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வாரியத்தின் இணையத்தளத்திற்குப் போய் அங்கே கிடைக்கும் சில எண்களை கவனமாகப் பார்க்கவும். மேலும் சென்சஸ் மேப்ஸ் தளத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை நுண்ணியமாக, மாநில அளவில், மாவட்ட/தாலுக்கா அளவில் பெற்றுக்கொள்ளலாம். (ஜாவா தேவை.)

முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்களா? இந்துக்கள் இன்னமும் சில வருடங்களில் சிறுபான்மையினராகி விடுவரோ என்றெல்லாம் பயம் சிலருக்கு.

முஸ்லிம் வாக்கு வங்கியை விட எனக்கு பயமளிப்பது வட இந்திய வாக்கு வங்கி. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மக்கள்தொகை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இன்றைய தேதியில் மக்கள் தொகை மாறியுள்ளதைக் கணக்கில் வைத்து புதுப் பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்க வேண்டி வந்தால் அவையனைத்தும் பீஹாரிலும், உத்திரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், குஜராத்திலும்தான் போய்ச்சேரும்.

1991-2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கண்டறிந்த, ஆனால் பேசப்படாத விஷயங்கள்: [மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை விலக்கி, மேலும் ஜம்மு & காஷ்மீரையும் விலக்கி - ஏனெனில் அங்கு 1991இல் சென்சஸ் நடைபெறவில்லை - பார்க்கும்போது]

மிகக் குறைந்த மக்கள்தொகைப் பெருக்க விகிதம் உள்ள மூன்று மாநிலங்கள்:
  • கேரளம்: 9.4%
  • தமிழகம்: 11.2%
  • ஆந்திரம்: 13.9%
மிக அதிக மக்கள்தொகைப் பெருக்க விகிதம் உள்ள மாநிலங்கள்:
  • பீஹார்: 28.4%
  • ராஜஸ்தான்: 28.3%
  • ஹரியானா: 28.1%
  • உத்திரப் பிரதேசம்: 25.8%
இதில் இந்துக்கள் 18% அதிகரித்துள்ளனர், முஸ்லிம்கள் 26% அதிகரித்துள்ளனர் என்பது பற்றி சிலர் கவலைப்படுகிறார்கள். எனக்கு வட இந்திய மக்கள் தொகை கன்னாபின்னாவென்று அதிகரிப்பது பீதியைக் கிளப்புகிறது. அரசியல் அதிகாரம் வடக்குக்கே அதிகமாக இருக்கும். அதனால் பணம் வீணாக அங்குதான் செலவழிக்கப்படும். அப்படி செலவழித்தும், வடக்கின் வளர்ச்சி தெற்கை விட மிகவும் குறைவாக இருக்கும். முக்கியமாக மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், சாலைகள், உணவுப்பொருட்கள், கல்வி, அடிப்படைச் சுகாதாரம் ஆகியவை. அப்படித்தானே இன்று இருக்கிறது? இதை மாற்ற, வடக்கில் கட்டின்றிப் பெருகும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, அங்கு கல்வி, வேலை வாய்ப்பு அதிகரிப்பது, அடிப்படை மருத்துவ வசதியை அதிகரிப்பது ஆகியவற்றில் மனதைச் செலுத்தாது, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவோ முஸ்லிம்கள் படுவேகமாக வளர்கிறார்கள் என்று கத்துகிறது.

மக்கள் தொகையை அதிரடியாகக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மாநிலங்கள் உடனடியாக அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட நான்கு மாநிலங்களான பீஜார், ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் மஹாராஷ்டிரம் (22.6%), மத்தியப் பிரதேசம் (24.3%), குஜராத் (22.5%), ஜார்கண்ட் (23.2%).

தெற்கில் மிக அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் கர்நாடகத்தில்தான் (17.2%).

சுர்ஜித்சிங் பல்லாவின் கட்டுரையில் ஷெட்யூல்ட் வகுப்பினரின் தொகைப் பெருக்கம் பற்றி இவ்வாறு சொல்கிறார்:
The real story of the census may not be the politically induced “analysis” of population growth among the Muslims but the sharp decline in growth rate among the scheduled castes/tribes (SC/ST)—from a growth rate of 2.7 per cent 1981–91 to only 2 per cent per annum, 1991–01. Unless the SC/STs have sharply escalated their income levels, it is unclear as to what might have caused this oversized drop. NSS data do not reveal a similar tendency—here the decline is only 0.1 percentage point.

One explanation is that there is no more “caste deflation”, i.e. households and individuals can benefit from reservations for OBCs, etc. so there is no need to classify oneself as an SC/ST.
இந்தக் கூற்று பொருந்தக்கூடியதா என்று பார்த்தேன். ஒவ்வொரு மாநிலத்திலும் ஷெட்யூல்ட் வகுப்பினரின் தோகைப்பெருக்கம் எப்படியுள்ளது என்று கவனித்தால், தமிழகத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஷெட்யூல்ட் வகுப்பினரின் பெருக்கம் மாநிலப் பெருக்கத்தை விடக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்த ஜனத்தொகை 11.2% அதிகரித்திருக்க, ஷெட்யூல்ட் வகுப்பினரில் தொகை 19% அதிகரித்திருந்தது. ஷெட்யூல்ட் வகுப்பினர் அதிக அளவில் இருக்கும் மஹாராஷ்டிரத்தில் மாநிலத்தொகை 22.6% அதிகரித்திருக்கையில், ஷெட்யூல்ட் வகுப்பினரில் தொகை 10.2% தான் அதிகரித்திருந்தது. இதேபோன்றுதான் மற்ற மாநிலங்களிலும்.

ஒருவேளை சுர்ஜித் பல்லா சொல்வதுபோல கடந்த 15 வருடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கென (OBC) இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருப்பதால், யாரும் வேண்டுமென்றே தான் SC என்று பொய்யாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்பதனால் இருக்கலாம். தமிழகத்தில் எம்ஜியார் காலத்திலிருந்தே (80களிலேயே) பிற்படுத்தப்பட்டோருக்கென இட ஒதுக்கீடு இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 09, 2004

பெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்

பாலாஜியின் பெஸ்லான் பயங்கரம் பற்றிய பதிவிற்கான பின்னூட்டம் இது.

பெஸ்லானுடன் அதற்கு முந்தைய வாரத்தில் வெடித்த இரண்டு விமானங்களையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இந்தத் தீவிரவாதிகள் நிச்சயமாக தம்மால் தப்பித்துப் போகமுடியும் என்று நினைத்து இந்தச் செயல்களைச் செய்வதில்லை.

பெரிய அளவில் அரசு, பிற மக்கள் ஆகியோரிடத்தே அச்சத்தை மூட்டுவது. 9/11, பெஸ்லான், இதற்கு முன் ஏற்கனவே ரஷ்யாவின் 'ஆபரா ஹவுஸ்' ஒன்றில் நடந்தது ஆகிய அனைத்துமே ரஷ்ய மக்கள் மனதில் பெருத்த அளவு அச்சம் ஊட்டுவதாக இருந்தது. இதன்மூலம் செச்னியாவில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் இருக்கும் மற்றவர்களுக்கு ஒருவிதத்தில் அதைப்பற்றி தேடி அறிந்துகொள்ள உதவும் என்ற வகையில் இதுபோன்ற செய்கைகளை தீவிரவாதிகள் செய்கின்றனர்.

இதுநாள் வரையிலான தீவிரவாதச் செயல்களில் குழந்தைகளுக்கு எந்தக் கெடுதலும் வராதவாறு வெளியே அனுப்பி விடுவார்கள். பெண்களுக்கும் அவ்வாறே. ஆனால் இப்பொழுது அம்மாதிரியான எந்த 'நல்ல செய்கையும்' இருக்காது என்பதையே நவீனத் தீவிரவாதிகள் காட்டுகிறார்கள். பல பெண்களைக் கொலைசெய்தால் இதனால் இன்னமும் அதிக 'அச்சம்' ஏற்படும். குழந்தைகளைக் கொலை செய்தால் அதன் விளைவு இன்னமும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறார்கள் போலும்.

எந்தெந்த இஸ்லாமிய அமைப்புகள் இந்தக் கொடுமையைக் கண்டித்தது என்று தெரியவில்லை. அப்படியே அவை கண்டித்தாலும் விடாது செச்னியாவில் ரஷ்ய அரசு செய்யும் கொடுமையையும் ஒப்பீடாகக் கொண்டுவரும். இதை மொத்தமாக நான் தவறு என்று சொல்லமாட்டேன்.

முடிவு? அரசு கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தையும் சற்று கவனமாகப் பார்க்கவேண்டும். பெஸ்லான் கொடூரத்திலும் ஏற்கனவே உறவினர்களை இழந்த பயங்கரவாதிகள்தான் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்கிறார்கள். ரஷ்ய விமான விபத்துகளிலும் அப்படியே. ராஜீவ் காந்தி கொலையிலும் அப்படியே.

தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க அரசுகள் மக்களின் நியாயமான பிரச்னைகளை சரியாக அணுகவேண்டும்.

ஆனால் உலகின் தற்போதைய பல - பெரும்பான்மையான - பிரச்னைகளில் இஸ்லாம், முஸ்லிம்கள் ஈடுபட்டிருப்பது எதனால் என்ற கேள்வி நியாயமானதுதான். முழுமையாக எனக்குப் புரியாத விஷயம் இது.

Wednesday, September 08, 2004

சமாச்சார்.காம் - சைபர் கஃபே

போன வாரம் புதன், பத்து வருடங்களுக்கு முன்புதான் பிரிட்டனில், உலகின் முதல் சைபர் கஃபே தொடங்கப்பட்டது என்று ஐதீகம். அதுபற்றிய பிபிசி செய்தி இதோ.

சென்னையில் - இந்தியாவிலேயே என நினைக்கிறேன் - முதலில் தொடங்கப்பட்ட சைபர் கஃபேயில் எனக்கு ஓரளவுக்குப் பங்குள்ளது. போன வாரம் எழுதி இந்த வாரம் வந்திருக்கும் சமாச்சார்.காம் கட்டுரையில் சைபர் கஃபேக்கள் பற்றி. யூனிகோடில் இங்கே.

Anschluss with Sikkim and Manipur

William Shirer எழுதிய "The Rise and Fall of the Third Reich" என்னும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னர் 1995இல் அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தேன். இரண்டாவது முறையாக இப்பொழுது படிக்கும்போது பல விஷயங்கள் அதிகமாகப் புரிகின்றன. முக்கியமாக அடோல்ப் ஹிட்லரின் அரசியல் சூழ்ச்சிகள், தந்திரங்கள் முதலியன. ஹிட்லரின் முன்னால் நம்மூர் அரசியல்வாதிகள் வாயில் விரல்வைத்து சூப்பும் சிறுகுழந்தைகள்.

ஆனால், ஒரு விஷயத்தில் நம் அரசியல்வாதிகள், அது ஜவஹர்லால் நேருவாகட்டும், அவர் புதல்வி இந்திரா காந்தியாகட்டும், ஹிட்லரை அப்படியே முறையாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.

ஜெர்மனியை ஒட்டிய நாடு ஆஸ்திரியா. இரு நாடுகளிலும் பேசும் மொழி ஜெர்மன்தான். ஹிட்லர் பிறந்து வளர்ந்தது ஆஸ்திரியாவில்தான். பின்னர்தான் அவர் ஜெர்மனி சென்றார்.

ஜெர்மனியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஹிட்லர் - முதலில் சான்செலர் (பிரதமர்) ஆனார், பின்னர் அதிபர், சான்செலர் என்ற இரண்டு பதவிகளையும் ஒருங்கே வகித்தார் - ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு இணைக்க முற்பட்டார். அதற்கு அவர் பயன்படுத்திய ஜெர்மன் சொல் Anschluss. ஆஸ்திரியாவின் சான்செலர் எங்கெல்பெர்ட் டோல்பஸ் என்பவரை நாஸிக்கள் கொன்று விட்டனர். தொடர்ந்து குர்ட் ஷுஸ்னிக் என்பவர் ஆஸ்திரியாவின் சான்செலரானார்.

ஹிட்லர் ஷுஸ்னிக்கை ஜெர்மனிக்கு பேச்சுவார்த்தைக்காக வரச்சொல்லி, ஆஸ்திரியாவின் மந்திரிசபையில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ஜெர்மன் இராணுவம் ஆஸ்திரியாவில் புகுந்து அட்டகாசம் செய்யும் என்றும் மிரட்டினார். சீஸ்-இன்குவார்ட் என்னும் நாஸியை உள்துறை (காவல்துறை) அமைச்சராக்கவேண்டும் என்பது அதில் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. ஆனால் மந்திரிசபை மாற்றத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியது ஆஸ்திரியாவின் அதிபர் (பிரசிடெண்ட்) மிக்லாஸ். ஹிட்லர் ஷுஸ்னிக்கிற்கு மூன்று நாள்கள் அவகாசம் கொடுத்து ஆஸ்திரியா அனுப்பி வைத்தார். ஆனால் மிக்லாஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதற்கிடையே ஷுஸ்னிக்கும் நாடு தழுவிய தேர்தல் (ரெபரண்டம்) ஒன்றை வைத்து தன் நிலையை வலுவாக்க முயற்சித்தார். இதனால் கடுப்பான ஹிட்லர் தன் தூதர் ஒருவரை அனுப்பி ஷுஸ்னிக்கை மிரட்டி ரெபரண்டத்தை வாபஸ் பெற வைத்தார். பின் இதோ இராணுவம் உள்ளே புகுந்து உங்களை உதைக்கப் போகிறது என்று மிரட்டி ஷுஸ்னிக்கை ராஜினாமா செய்யவைத்து, மிக்லாஸை "பதவி நீக்கம்" செய்யவைத்து, சீஸ்-இன்குவார்ட்டை தானே சான்செலர், அதிபர் பதவிகளை எடுத்துக்கொள்ளச் செய்தார்.

தொடர்ந்து சீஸ்-இன்குவார்ட் அனுப்பியதாக (பொய்யான) ஒரு தந்தியை வைத்து ஜெர்மன் இராணுவத்தை ஆஸ்திரியா அனுப்பி, அதன்பின் மக்களிடையே ஒரு தேர்தல் வைத்தார். அந்தத் தேர்தலில் 99% மேற்பட்டோர் ஆஸ்திரியா ஜெர்மனியோடு இணைவதற்கு தாங்கள் ஒப்புக்கொள்வதாக வாக்களித்தனர்.

ஆக இப்படி இல்லாத தகிடுதத்தங்களெல்லாம் செய்து ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு இணைத்ததற்குப் பெயர்தான் Anschluss.

நேரு பிரதமராக இருந்தபோது இந்தியா எப்படி மணிப்பூரை தன்னோடு "இணைத்துக்கொண்டது" என்பது பற்றி தங்கமணியின் பதிவு விளக்குகிறது.

நான் முன்னமேயே, இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் சிக்கிம் இந்தியாவுடன் எப்படி "இணைக்கப்பட்டது" என்பதைப் பற்றி சிறிய குறிப்பொன்றை எழுதியுள்ளேன்.

இப்படிப்பட்ட பின்னணியில் நாம் எப்படி அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசமுடியும்?

ஐசிசி விருதுகள்

ஐசிசி நிறுவியுள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.

இந்த விருதுகள் யாருக்குக் கிடைக்கும் என்று நான் கணித்து ஆகஸ்ட் 19 தமிழோவியத்தில் எழுதியிருந்தேன். என் கணிப்பு எந்த அளவிற்கு சரியாக உள்ளது என்று பார்ப்போம்.

விருதுஎன் கணிப்புயாருக்குக் கிடைத்தது
சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்ராஹுல் திராவிட்ராஹுல் திராவிட்
சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்ரிக்கி பாண்டிங்ஆண்டிரூ பிளிண்டாஃப்
சிறந்த புதுமுகம்இர்ஃபான் பதான்இர்ஃபான் பதான்
வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர்ஜாக் கால்லிஸ்ராஹுல் திராவிட்
சிறந்த "சமர்த்தான அணி"நியூசிலாந்துநியூசிலாந்து
சிறந்த நடுவர்பில்லி பவுடன்சைமன் டாஃபெல்


ராஹுல் திராவிடுக்கு வாழ்த்துகள்!

ஐசிசி விருதுகள் இணையத்தளம்

Tuesday, September 07, 2004

ஈ.வெ.ராமசாமியும் ஆப்ரஹாம் கோவூரும்

ஈ.வெ.ராவின் 125வது பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து பல எழுத்துக்களும், பேச்சுக்களும், விவரணப் படங்களும் ஆக்கப்படுகின்றன. ஈ.வெ.ராவின் பெயர் தமிழ்ப் பகுத்தறிவு இயக்கத்துடன் இணைந்தது.

தென்னிந்தியப் பகுத்தறிவு வரலாற்றில் ஈ.வெ.ரா பெயரோடு மற்றொருவர் பெயரையும் குறிப்பிட வேண்டும். ஆப்ரஹாம் கோவூர் கேரளாவில் பிறந்து, பின் இலங்கைக்குச் சென்று வாழ்ந்து அங்கேயே உயிர் துறந்தவர்.

ஈ.வெ.ரா இந்துமதத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களை எள்ளினார். ஆப்ரஹாம் கோவூர் அத்துடன் நேரடியாக இந்துமத பாபாக்களுடன் மோதினார். தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக சக்தி உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிரூபிப்பதே கோவூரின் முக்கிய வேலையாக இருந்தது. Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, அதன் தலைவராக வெகு காலம் இருந்தார் கோவூர்.

கோவூரின் தந்தை ஒரு கிறித்துவ பாதிரியார். ஆனால் கோவூர் தன் மதத்தைத் துறந்து கடவுள் நம்பிக்கை இல்லாது கடைசிவரை நாத்திகராக வாழ்ந்தவர்.

கோவூர் மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் "Begone Godmen! Encounters with Spiritual Frauds" என்னும் புத்தகத்தை நான் வெகு நாள்களுக்கு முன்னர் (1993) படித்து அப்பொழுதைய soc.culture.tamil இல் அதிலிருந்து சில பகுதிகளை வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவுகளின் சுட்டிகள் இங்கே: ஒன்று | இரண்டு | மூன்று

கோவூரும், நாயக்கரும் ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்திருந்தனரா என்று தெரியவில்லை. காலச்சுவடு செப்டம்பர் 2004 இதழ் 'பெரியார் - 125' என்ற பெயரில் வந்துள்ளது என்றாலும் அதில் பெரியாருக்கு எதிர்மறையானதாகவே பல கட்டுரைகள் உள்ளன. இந்துமத மூடநம்பிக்கைகள், 'மகான்கள்' மீதான மூர்க்கமான பக்தி ஆகியவற்றை பெரியார் எதிர்த்ததைப் பற்றிய விரிவான அலசல் எங்குமில்லை.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'merit'

இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளில் ஆர்.ஜகன்னாதன் எழுதியுள்ள கட்டுரை சிந்தனையைத் தூண்டும்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற பேச்சு இப்பொழுது தொடங்கியுள்ளது. அதுபற்றி சில நாள்கள் முன்னர் வெங்கடேஷ் நேசமுடன் மின்னிதழில் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து நானும் அதுபற்றி எழுதியிருந்தேன்.

இட ஒதுக்கீடு என்ற பேச்சு வரும்போது 'merit' (திறமை என்று சொல்லலாமா?) என்னும் சொல்லாட்சி வரத்தொடங்குகிறது. அதாவது இட ஒதுக்கீட்டில் உள்ளே வருபவர்கள் திறமை குறைந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் ஏன் இந்த 'பின் கதவு' வழியாக உள்ளே வர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இட ஒதுக்கீடு vs Affirmative action (பரிவுச் செயல்பாடு என்று சொல்லலாமா?) எது இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்று பின்னர் பார்க்கலாம்.

முதலில் இப்பொழுதைக்கு தனியார் துறையில் வேலைக்கு விண்ணப்பித்து வேலையில் சேருபவர்களைப் பார்ப்போம். உங்களுக்கு C++ மொழியில் நிரலி எழுதத் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். கையில் வேலை ஒன்றும் இல்லை. ஒரு வேலைக்கான விளம்பரத்தைப் பார்க்கிறீர்கள். அந்த அலுவலகம் சென்று உங்கள் விண்ணப்பத்தையும், உங்கள் தகுதிகளையும், திறமைகளையும், கற்றறிந்தவற்றையும் பட்டியலிட்டுக் கொடுக்கிறீர்கள். நேர்முகத் தேர்வு நடக்கிறது. அந்த நிறுவனத்தாருக்குத் தேவையான நுட்பறிவு உங்களுக்கு இருக்கிறது என்று தீர்மானிக்கிறார்கள். உடனே உங்களுக்கு வேலை கொடுக்கிறார்கள்.

ஆனால் அந்த நிறுவனத்தின் வேலையைச் செய்ய உங்களை விடத் திறமையானவர், நீங்கள் வாங்கும் அதே சம்பளத்தில் உழைக்கத் தயாராயிருப்பவர் இந்த உலகத்தில் இருக்கிறாரா? இந்த ஊரிலேயே இருக்கிறாரா? பதில்: நிச்சயமாக இருக்கிறார். அவரைத் தேடிப் பிடிக்க அந்த நிறுவனம் நிறைய அலைந்து திரிய வேண்டும். அதற்கான நேரமோ, ஆள்பலமோ அந்த நிறுவனத்துக்கு இல்லை. அவர்களுடைய தேவை உலகிலேயே மிகச்சிறந்தவர் ஒருவர் அவர்களிடத்தே வந்து வேலை செய்யவேண்டுமென்பதில்லை. மாற்றாக அவர்களது வேலையை செய்து கொடுக்கக்கூடிய தகுதி வாய்ந்தவராக முதலில் கண்ணுக்குத் தென்படுபவர் எவரோ, அவருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

விளம்பர வீண்செலவு செய்ய விரும்பாதவர்கள் என்ன செய்கிறார்கள்? தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம், "எமக்கு குறிப்பிட்ட வேலை செய்யக்கூடிய ஆள் ஒருவர் வேண்டும். உங்களுக்குத் தெரிந்தால் அனுப்பி வையுங்கள்." என்று சொல்கிறார்கள். அப்படி அனுப்பப்படும் ஆட்களில் ஓரிருவரைப் பார்த்துவிட்டு அதில் யார் குறிப்பிட்ட வேலையை திருப்தியாக செய்யக்கூடியவர் என்பதை முடிவு செய்து அவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆக தனியார் நிறுவனங்கள் அனைத்திலுமே தகுதி என்பதற்கு உச்சாணிக்கொம்பு என்று பொருள் எடுத்துக் கொள்வதில்லை. இது ஒலிம்பிக்ஸ் போட்டியில்லை. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் கட்டையை வைத்து அதை சரியாகத் தாண்டும் முதல் ஐந்து பேர்கள் (அல்லது பத்து பேர்கள்) எமக்குப் போதும் என்றுதான் தனியார் நிறுவனங்கள் வேலை செய்கின்றன. "அப்படித் தாண்டக்கூடியவர்கள் அனைவரும் சில குறிப்பிட்ட ஜாதியினைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான். பிற்படுத்தப்பட்டோரால், ஷெட்யூல்ட் வகுப்பு மற்றும் பழங்குடியினரால் தாண்டவே முடியாது. அவர்களை உள்ளே விட்டால் தகுதி குன்றி, தனியார் நிறுவனங்கள் செயலிழந்து போய்விடும்." என்பது போல பலர் பேசுகின்றனர். இன்று எகனாமிக் டைம்ஸ் விவாதங்கள் பகுதியில் FICCI யின் Secretary-General அமித் மித்ரா தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினால் தனியார் துறை நிறுவனங்கள் முற்றிலுமாக நசிந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜகன்னாதன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல என்.டி.டிவி விவாதத்திலும் குர்ச்சரண் தாஸ் இப்படித்தான் பேசியுள்ளார். ஆனால் இது போன்ற கருத்துகளை யாரும் சரியாக எதிர்ப்பதில்லை.

இட ஒதுக்கீட்டை விட குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீது பரிவுடன் செயல்படுவதுதான் சரியான முறை என்று ஜகன்னாதன் சொல்கிறார். அதற்கென தனியார் நிறுவனங்கள் - அதுவும் எக்கச்சக்க லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் - செயல்படவேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அப்படியே இட ஒதுக்கீட்டை அரசு தனியார் துறைகளில் வலியப்புகுத்தினாலும் ஒருசில பிற்பட்ட சமூகத்திலிருந்து இத்தனை விழுக்காடு மக்களை உள்ளே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிர, மூன்றாம் வகுப்பு பெயிலான குப்புசாமியை விளம்பரத்துறை மேலாளராகப் போடு, எழுதப்படிக்கவே தெரியாத லட்சுமியை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகப் போடு என்று சொல்லவில்லையே? எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இன்றைய தேதியில் 90% மேற்பட்டவர்களுக்கு ஒரு நிறுவனம்தான் தொழிலைக் கற்றுக்கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியுள்ளது. அப்படிச் செய்யும்போது பிற்படுத்தப்பட்டவர்களையும் மேலே தூக்கி விடுவது தனியார் நிறுவனங்களின் சமூகக் கடமைதானே?

இன்று 'முன்னேறிய சாதிகளின்' பிள்ளைகள் அனைவருமே அப்படியே நேராக தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலைக்குச் சென்றுவிடுகிறார்களா என்ன? தங்களுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் ஆகியோரின் சிபாரிசு (பரிந்துரை) வழியாகத்தானே பலரும் வேலை பெறுகிறார்கள்? என்னிடம் எத்தனையோ பேர் "பாவம் அந்தப் பையன்/பெண், வீட்டில் ரொம்பக் கஷ்டம், பாத்து ஏதாவது வேலை போட்டுக் கொடு, இல்லாட்டி வேறெந்த முறையிலாவது உதவி செய்" என்று பலரைக் காண்பித்துள்ளனர். இதே சிபாரிசை அரசே ஒரு சிலருக்குச் செய்வதில் தவறென்ன இருக்கிறது? - அதுவும் இது போன்ற சிபாரிசுகள் அவசியம் தேவைப்படுகிறவர்களுக்கு...

Saturday, September 04, 2004

பெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்

தீம்தரிகிட ஞாநி எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த பெரியார் ("அய்யா") தொலைக்காட்சித் தொடர் நேற்று முதல் தூரதர்ஷன் ("பொதிகை") தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது.

ஐந்து பாகங்களாக, (நேற்று தொடங்கி) ஒவ்வொரு வெள்ளியும் இரவு 8.30-9.00 மணிக்குக் காண்பிக்கப்படுகிறது இந்தத் தொடர்.

இதுபற்றி மேலும் விளக்கமாக ஞானி செப் 1-15 தீம்தரிகிடவில் எழுதியுள்ளார். அந்தப் பிரதியை எங்கேயே தொலைத்து விட்டேன், அதனால் அதிக விவரங்கள் தரமுடியவில்லை.

நேற்றைய பகுதி பற்றிய மிகக்குறுகிய விமரிசனம். பெரியார் பற்றி ஒரு பெண் விவரணப்படம் எடுப்பது போலத் தொடங்குகிறது கதை. ஞாநி கறுப்புச்சட்டை தோழர் குருசாமியாக படத்தில் வருகிறார்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம். கேமரா கோணங்கள் சரியாக இல்லை. ஞாநியும், விவரணப்படம் எடுக்கும் பெண்ணும், இரண்டு மாணவர்களும் பேசும் காட்சிகளில், ஞாநியின் பின்மண்டை மட்டும்தான் கண்களில் படுகிறது. இரண்டு கேமராக்கள் வைத்துப் படம் எடுத்திருந்தால் பேசுபவர் முகம் தேவையானபோது காட்டப்பட்டிருக்கலாம்.

எஸ்.வி.இராஜதுரை, வ.கீதா ஆகியோர் பெரியார் பற்றி எழுதிய புத்தகமே இந்தத் தொலைக்காட்சித் தொடருக்கு மூலம் என்று நினைக்கிறேன். அவர்களது பெயர்கள் கடைசியாக (நன்றி... எனச் சொல்லி) வருகின்றன.

வசனத்தில் ஒருவித செயற்கை காணப்படுகிறது. ஞாநி வரப்போகும் விவரணப்படத்தைப் பற்றிப் பேசும்போது அவசர அவசரமாகப் பேசுகிறார். ஆனால் விவரணப்படம் எடுக்கும் பெண்ணாக வந்தவர் (பெயர் மறந்து விட்டது) நடிப்பு, வசனம் பேசுவது இயல்பாக, நன்றாக வந்துள்ளது.

இளம் வயது இராமன் (பிற்காலப் பெரியார்) தன் சகாவிடம் பேசும்போதும் நடிப்பும், வசனமும் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம். இப்பொழுதுதான் பெரியாரின் சிறுகுழந்தைப் பருவம் தொடங்கியுள்ளது. அப்பொழுதே குவளையை வாயில் சூப்பி நீர் குடித்தால் 'தீட்டு' என்று ஓதுவார் வீட்டுப் பெண் சொல்வதைக் கேட்டு தன் பக்கத்தில் உள்ள சிறுவனிடம் அதெல்லாம் குப்பை என்று சொல்வதிலிருந்து, வீட்டில் தன் அப்பாவிடம் கை நிறையக் காசு வாங்க வந்திருக்கும் அந்தணர்கள் விடும் புராணக் கதைகளை வைத்து அவர்களையே மடக்குவது ("பூமியைச் சுருட்டி அக்குள்ளயே வச்சிண்டானா? அப்பன்னா அவன் எங்க நின்னான்? அவனும் பூமிக்கு மேலத்தான் நிக்கறான்னா அவனும் தன்னையே மடிச்சுண்டிருப்பானே? பூமிக்கு வெளிலன்னா எங்க நின்னான்? சூரியன் மேலயா?") என்று நாத்திகம், ஆசார எதிர்ப்பு ஆகியவை இளம் வயதிலேயே தொடங்குகிறது. சிறுவயதில் மிகவும் அதிகமாகப் பேசி, குறும்பு செய்வதால் கையிலும் காலிலும் சங்கிலியால் விலங்கு பூட்டி அதில் ஒரு பெரிய மரக்கட்டையை இணைத்து அந்த மரக்கட்டையைக் கையில் வைத்துக்கொண்டுதான் இராமன் அவ்வப்போது நடக்கவேண்டியிருந்தது என்று காட்டுகிறார் ஞாநி. இது உண்மையா? பார்க்க மிகவும் கொடுமையாக இருந்தது!

இராமனாக நடித்த சிறுவன் இன்னமும் நன்றாக நடித்திருக்கலாமோ என்று எதிர்பார்ப்பு எனக்கு. மேலும் இராமன் நாயக்கர் ஜாதி. அவர்கள் தமிழ் எந்தவித உச்சரிப்பில் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. சிறிய வயது இராமன் சீரியலில் பேசுவது பிராமண ஜாதியினர் பேசுவது போல இருக்கிறது.... பெரியார் தன் கல்லறையில் புரளக்கூடாது பாருங்கள்? பிற்காலத்தில் பெரியார் பேசிய/எழுதிய பேச்சுத் தமிழுக்கும் இந்தத் தொடரில் இதுவரை சிறுவன் இராமன் பேசியதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பிற்கால உச்சரிப்பு நடை வேண்டுமென்றே தானாகவே தனக்குள்ளே புகுத்தியதாக இருந்திருக்க முடியாது.

இவற்றையெல்லாம் பெரிய குறைகளாகச் சொல்லவில்லை. ரூ. ஐந்தரை லட்சத்தில், இரண்டரை மணிநேரம் படம் வருமாறு இயக்கியிருப்பது பிரம்மாண்டமான காரியம். மற்ற நான்கு பகுதிகளையும் வரும் மாதத்தில் பார்த்துவிட்டு அவ்வப்போது எழுதுகிறேன்.

Friday, September 03, 2004

வைகோ போடா வழக்கு

மத்திய அரசு நியமித்த போடா மறு ஆய்வுக் கமிட்டியின் உறுப்பினர்கள் நீதிபதி சஹார்யா, ரஹ்மான், இனாம்தார் ஆகியவர்கள் வைகோ மீது போடா சட்டப்படி வழக்குத் தொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும், அதனால் தமிழக அரசு வைகோ மீதான வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 8 ஏப்ரல் 2004 அன்று அறிவித்தது.

தொடர்ந்து ஆகஸ்ட் 2004இல் தமிழக அரசும் வைகோ மீதான வழக்கை இழுத்து மூடக் கேட்டு போடா சிறப்புத் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இன்று போடா நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து வைகோ மீதான வழக்கு தொடரும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் சஹார்யா கமிட்டி வைகோ மீதுள்ள வழக்கை முழுமையாக கவனிக்கவில்லை என்றும் இந்த வழக்கை திரும்பப் பெறுவதற்காக போடா மறு ஆய்வு கமிட்டி சொல்லியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் போடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் கூறியுள்ளார்.

என்.டி.டி.வி க்குப் பதிலளித்த வைகோ தான் இதை எதிர்பார்த்ததாகச் சொன்னார். தமிழக அரசு தன் மனுவை சரியாகத் தயாரிக்கவில்லையென்றும், அதே சமயம் போடா நீதிமன்றம் இப்படித்தான் முடிவு எடுக்கும் என்றும் தான் நினைத்ததாகவும், அதுவே சரியாகப் போயுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், மிகக் கவனமாக தான் எந்த நீதிபதியின் மேலும் குற்றம் சாட்டவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். திரும்பத் திரும்ப "My experience with this POTA court has been different." என்று மட்டுமே சொன்னார். (இல்லாவிட்டால் அடுத்து நீதிமன்ற அவதூறு வழக்கு என்று ஒன்று வரும்!)

POTA Special Court's behaviour is, indeed, different.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் எனது கட்டுரை.

Thursday, September 02, 2004

ராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்

Triumph of Truth, The Rajiv Gandhi Assassination, The Investigation, D.R.Kaarthikeyan and Radhavinod Raju, New Dawn Press Inc., April 2004, Pages 262, Price Rs. 500 in India, UKP 14.99 or USD 24.95 outside of India.

தமிழில் நல்ல துப்பறியும் கதைகள் குறைவு. வடுவூரார் எழுதிய ஆங்கிலத் தழுவல் கதைகளில் தொடங்கி, பின் சுஜாதாவால் ஹை-டெக் ஆக்கப்பட்டு வளர்ந்த துறை ராஜேஷ் குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர் காலத்திலிருந்து படுவீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இன்று உருப்படியாகச் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றுமே இல்லை எனலாம்.

இந்தியச் சூழலிலேயே - ஆங்கிலத்திலோ, அல்லது வேறு இந்திய மொழிகளிலோ - தொடர்ச்சியாக நல்ல துப்பறியும் கதைகள் இல்லை எனத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் கதைகளில் துளிக்கூட நம்பகத்தன்மை இல்லாமலிருப்பதுதான். இந்தியச் சூழலில் காவல்துறையால் என்ன செய்யமுடியும்? உள்ளூர்க் காவல்துறைக்கும், Central Intelligence Bureau (CBI) க்கும் என்ன வித்தியாசம்? உள்ளூர்க் காவல்துறையின் Q branch என்ன வேலை செய்யும்? மத்தியிலிருந்து இயங்கும் Intelligence Bureau (IB), Research and Ananlysis Wing (RAW) ஆகியவற்றுக்கு என்ன வேலை? இந்திய இராணுவம் தனக்கென ஏதேனும் நேரடியான உளவமைப்பை வைத்துள்ளதா? குற்றங்களைத் துப்பறியும் அமைப்புகளில் வேலைக்குச் சேர்பவர்களுக்கு எவ்வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது? மற்ற எந்தத் துறைகளிலிருந்து அதிகாரிகள் இந்தத் துறைக்கு வேலை செய்ய வருகிறார்கள்? தடயவியல், மற்ற அறிவியல் துறைகள் எந்த வகையில் பயன்படுத்தப் படுகின்றன? கணினி வழித் தகவல்கள், குற்றவாளிகள் பற்றிய தரவுத் தளம் எவ்வகையில் பயன்படுத்தப் படுகின்றன? இதுபோன்ற எந்தத் தகவலும் இல்லாமல் தமிழ்க் கதாசிரியர்கள் கதை எழுதுவதால் நமக்குப் படிக்கக் கிடைப்பது கீழ்த்தரமானவையாகவே உள்ளன.

ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை இந்தியாவை - குறிப்பாகத் தமிழகத்தை - உலுக்கிய ஒரு நிகழ்ச்சி. அந்தக் கொலைச் சதியின் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்க, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசேஷத் தனிப்படை (Special Investigation Team - SIT) இந்தியாவின் தலைசிறந்த காவல்துறை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்டது. SIT எவ்வாறு இந்தக் கொலையின் பின்னணியை குறுகிய காலத்தில் கண்டுபிடித்தது, அதன்பின் குற்றவாளிகள் மீதான குற்றத்தை நிரூபிக்கும் சாட்சியங்களை சேகரித்தது என்பதைப் பற்றிய விளக்கமான புத்தகத்தை கார்த்திகேயனே ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். உண்மை, புனைகதைகளை விட பயங்கரமானது, சுவாரசியமானது என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே தெரியும். இதைவிட வேகமாக நகரும் துப்பறியும் கதையை நான் படித்தது கிடையாது.

-*-

மஹாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோர் கொலைகளில் கொலையாளிகள் உடனடியாகப் பிடிபட்டனர், அல்லது கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலையில் யார் எதைச் செய்தனர் என்பதைக் கண்டுபிடிப்பதோடு, உடனடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் தப்பித்துச் சென்றுவிடாமல் அவர்களைப் பிடிப்பதும் முக்கியமான காரியமாக இருந்தது. இந்நிலையில்தான் CRPF இன் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த கார்த்திகேயன் கொலையைத் துப்புத் துலக்கக் கொண்டுவரப்பட்டார்.

முதலில் கொலை எப்படி நடந்தது என்பதைக் கட்டமைக்க வேண்டியிருந்தது. ஒரு பெண்ணின் உடலைச் சுற்றி டெனிம் துணியாலான பையுடனான மேற்சட்டை. அதில் அரைக் கிலோ RDX வெடிமருந்து பரப்பப்பட்டிருந்தது. அதற்குள் 2 மில்லிமீட்டர் விட்டமுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இரும்புக் குண்டுகள் நிரப்பப் பட்டிருந்தன. 9 வோல்ட் பேட்டரியின் மூலம் வெடிக்கக்கூடிய டெடோனேட்டர் ஒன்று வெடிமருந்தினுள் பொதித்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு தனி விசைகள் இருந்தன. முதலாவதைத் தட்டி, தயாரானபின், இரண்டாவதைத் தட்டினால்தான் வெடி இயங்கும். இதனால் தன்னேர்ச்சியாக வெடிப்பதைத் தவிர்க்கலாம்.

இந்த மனித வெடிகுண்டுதான் ராஜீவைக் கொலை செய்தது.

ராஜீவின் இறந்த உடலைப் பரிசோதிக்கும்போது 22க்கும் மேற்பட்ட கடுமையான காயங்கள் கண்டறியப்பட்டன. தலையின் மேல்பாகம் முழுவதுமாகக் கிழிந்து, அங்குள்ள எலும்புகள் அத்தனையும் நொறுங்கி, மூளை முழுவதுமாக வெளியே சிதறிப் போயிருந்தது. முகத்தின் அத்தனை திசுக்களும் எரிந்து, உதடுகள், மூக்கு, இரண்டு கண்கள் முழுவதுமாகச் சிதைந்து போயிருந்தன. கீழ்த் தாடை, மேல் தாடை இரண்டும் நொறுங்கி, மூக்கெலும்பும் சிதைந்து போயிருந்தது. வெடியிலிருந்து சிதறிய இரும்புக் குண்டுகள் மார்பில் துளைத்திருந்தன. அடிவயிறு கிழிந்து குடல் வெளியே வந்திருந்தது. இடது நுரையீரல் காணவேயில்லை. வலது கையில் விரல்கள் முழுவதுமாகச் சிதைந்துபோயிருந்தன. உடல் முழுதும் இரும்புக் குண்டுகள் புதைந்து கிடந்தன.

-*-

கார்த்திகேயனின் புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.

1. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு கார்த்திகேயன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுவது, SIT கொலை எப்படி நடந்திருக்கும் என்று கண்டறிந்து, இந்தச் சதியில் முக்கியமாக ஈடுபட்டவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது.

2. கொலையில் பங்குபெற்ற குற்றவாளிகள், அவர்களுக்கு நேரடியாக உதவியவர்கள், மறைமுகமாக உதவியவர்கள் ஆகியவர்களைப் பின்தொடர்ந்து பிடிப்பது

3. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்களை சேகரிப்பது, வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது அந்த வழக்குக்குத் துணையாக சாட்சியங்களை, மேலதிக விவரங்களை அளிப்பது

முதலிரண்டு பாகங்களும் வேகமாக, இதயத் துடிப்பை அதிகரிக்கும் வகையில் இந்தப் புத்தகத்தில் நகர்கிறது. மூன்றாவது பாகத்தில் கார்த்திகேயன் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தன் கோணத்தில் ஆழ்ந்து அலசி, விடுதலைப் புலிகளுக்கு ராஜீவ் கொலையில் உள்ள தொடர்பை ஆதாரப் பூர்வமாக விளக்குகிறார்.

புத்தகத்தின் வெகு சில இடங்களில் மட்டுமே கார்த்திகேயன் என்ற மனிதரைப் பற்றியும் காண முடிகிறது. மற்றபடி எடுத்துக்கொண்ட விஷயத்தை, தான் நேரடியாக ஈடுபட்டிருந்த போதிலும், சற்றே விலகி நின்றே மிக நேர்த்தியாக எழுதியுள்ளார்.

-*-

ஒன்றைத் துலக்கப் போய் இன்னொன்றை அறிந்து கொள்வது போல ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மற்றும் அவரது தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்டதையும் கார்த்திகேயன் தலைமையிலான குழு கண்டுபிடித்தது. விடுதலைப்புலிகள் குழுவைச் சேர்ந்த டேவிட், சிவராசன் ஆகிய இருவரும்தான் அந்தக் கொலைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரத்தையும் கார்த்திகேயன் தன் புத்தகத்தில் காட்டுகிறார். சிவராசன் பின்னர் ராஜீவ் காந்தி கொலைக்குப்பின் தப்பித்துச் செல்ல முயலும்போது கடல்புலியான டேவிட் படகுகளுடன் வேதாரண்யம் பகுதிக்கு வரும் வேளையில் விபத்தில் கொல்லப்படுகின்றனர்.

-*-

கொலைச்சதியில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனிடம் தொடர்பு கொள்ள வயர்லெஸ் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. வேறு தொலைதொடர்பு சாதனங்கள் இல்லாத நிலையில் வயர்லெஸ் ஒன்றை மட்டுமே நம்பியிருந்ததால் அதனாலேயே குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மாட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. இன்றைய நிலையில் தூக்கியெறியப்படும் சிம் கார்டுகளுடனான செல்பேசிகள், இணையம் ஆகியவை இருப்பது அந்நிய சக்திகள் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கு மிகவும் வசதியானது. இந்நிலையில் இந்திய உளவுத்துறையினரும், காவல்துறையினரும் எந்த அளவுக்கு இணையத்தில் பயிற்சி பெற்றவர்களாய், இணையம் வழியாக நடக்கும் ரகசியச் செய்திப் பரிமாற்றங்களை உடைக்கத் தெரிந்தவர்களாய், செல்பேசிகளைப் பின்தொடரும் வழி அறிந்தவர்களாய் உள்ளனர் என்று தெரியவில்லை.

-*-

இந்தப் புத்தகத்தைப் படித்தபோது பிரடெரிக் ஃபோர்சைத்தின் 'The Day of the Jackal' படித்த/பார்த்த உணர்விருந்தது. இரண்டு வித்தியாசங்கள் - இங்கு கொலை நடந்தது, இது உண்மை.

இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு உரிமை விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் கூடிய விரைவில் இந்தப் புத்தகம் தமிழில் வரும் என எதிர்பார்க்கலாம்.

-*-

சுப்ரமணியம் சுவாமி எழுதிய "ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகம் பற்றிய என் பதிவுகள் ஒன்று | இரண்டு

Wednesday, September 01, 2004

திராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்

என்.சொக்கன் எழுதி விரைவில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவரப்போகும் "திராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்" என்னும் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரை இந்த மாத திசைகள் இதழில்.