Wednesday, October 29, 2003

சாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற்றி

சில தினங்கள் முன்னால் தமிழக அரசு மணல் தோண்டுவது/விற்பது ஆகியவற்றைத் தனியாரிடமிருந்து பறித்து தாங்களே செய்வதாகச் சொன்னார்கள். தற்பொழுது 'இந்தியாவில் செய்த வெளிநாட்டு மது' (!! Indian made foreign liqour - IMFL என்பதன் மொழியாக்கம்) விற்பனை செய்வதைத் தனியாரிடமிருந்து பறித்து அதைத் தாங்களே செய்வதாகச் சொல்கிறார்கள்.

சாதாரணமாக அரசு தொழில் உற்பத்தி, வியாபாரம் ஆகியவற்றில் இறங்காமல் அரசாட்சி செய்வதில் மட்டும் முனைப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். ஆனால் மேற்குறிப்பிட்ட இரண்டும் ஊழல் மலிந்து, பொறுக்கிகளின் சாம்ராஜ்ஜியமாக இருக்கிறது.

மணல் குவாரி பிரச்சினை கொடுமையானது. கனிம வளம் போல மணலும் (ஆறுகளில் தண்ணீர்தான் இல்லை, மணலாவது இருக்கிறதே!) பொதுச் சொத்து. அதைத் திருடி அதிக லாபத்துக்கு விற்று வந்த காண்டிராக்டர்களும் கழகக் கட்சிக்காரர்களும் எதிர்த்த நேர்மையான அதிகரிகளை லாரி ஏற்றி கொன்றிருக்கின்றனர். ஆனால் அரசிடம் வந்து விட்டது என்பதற்காக ஊழல் நடக்காமல் இருக்கப் போவதில்லை. ஒருவேளை கொஞ்சம் குறையலாம்.

இந்த சாராய சமாச்சாரம்தான் கொஞ்சம் இடிக்கிறது. இங்கும் ஊழல், அரசை ஏமாற்றுதல் எல்லாம் இருக்கிறது. அதற்காக அரசு இந்தத் துறையை ஏற்று நடத்துவது சரியாகத் தோன்றவில்லை. அதனை விடுத்து மீண்டும் ஏலத்துக்கு விட்டு தனியாரிடமே இந்த வேலையை ஒப்படைப்பதே சரியானதாகும். ஏலம் எடுப்பவர்களுக்கான குறைந்த பட்சத் தகுதி, ஒருவருக்கு ஒரு கடைக்கு மேல் தருவதில்லை, அப்படி ஏலம் எடுப்பவர் வருமான வரி செலுத்த வேண்டும், அதற்கான PAN எண்ணைக் கொடுத்துதான் ஏலம் எடுக்க முடியும் என்றெல்லாம் செய்து பினாமிகளை ஒழிக்கலாம்.

மதுவிலக்கு என்றெல்லாம் பேசுவதில் இனியும் அர்த்தமில்லை. பியர் போன்றவை இன்னும் சிலகாலத்தில் பாதி வீடுகளில் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பெறும். பூச்சி மருந்துள்ள சாஃப்ட் டிரிங்க்ஸ் குடிப்பதை காட்டிலும் பியர் எவ்வளவோ மேல்!

ஜெயலலிதாவின் குட்டிக் கதைக்கு மு.க. பதில்

இதையெல்லாம் வலைப்பதித்துக் கொண்டே போனால் வேறு ஒன்றும் உருப்படியாக எழுத முடியாது. இஷ்டம் இருப்பவர்கள் படித்துக் கொள்ள இங்கே போகவும். ஆனால் ஒன்று இவர் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலும், அவர் குற்றச்சாட்டுக்கு இவர் குட்டிக் கதையுமாக கலகலப்பாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

Tuesday, October 28, 2003

ஜெயலலிதாவின் குட்டிக் கதைகள்

எனக்கு முதல்வர் ஜெயலலிதாவின் குட்டிக்கதைகள் மீது பயங்கர ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் விடாது இவைகளை வலைப்பதிவிட வேண்டும் என்று ஆர்வம். இன்று முதல் ஆரம்பிக்கிறேன்.

தினமலர் தினசரி இவைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அத்தனையும் தினமலர் ஆன்லைனில் இருக்காமல் போகலாம். கீழ்க்கண்ட 'format'ஐ நடைமுறைப் படுத்துகிறேன்: எங்கு பேசினார் - ஆன்லைன் சுட்டி இருந்தால் அது - கதைச் சுருக்கம் - யாரைப் பற்றி.

நேற்றையது: இடம்: தஞ்சாவூர்; நாள்: 27 அக்டோபர் 2003; மேடை: அரசு திட்டப் பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா

கதை:
ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தான். ஒரே நேரத்தில் ஆறு, ஏழு பேரை அடித்து வீழ்த்தும் ஆற்றல் பெற்றவன். இதில் வேடிக்கை என்னவென்றால், காற்றடித்தால் பறந்து விடும் நோஞ்சான் ஒருவன், இவனைத் தொடர்ந்து அடித்து வந்தான். பயில்வான் திரும்ப அடிக்கவில்லை. ஏன் திரும்பித் தாக்கவில்லை என்பது ஊர் மக்களின் கேள்வியாக இருந்தது. பயில்வானிடம் இதுபற்றி மக்கள் கேட்டனர். அத்துடன் "திருப்பி அடி, திருப்பி உதை" என்று கூக்குரல் இட்டனர். இவர்களைப் பார்த்த பயில்வான் கோபமடைந்தான். "என்னை என்ன ஏமாளி என்றா நினைத்தீர்களா?, நான் யார்?, ஒரு லட்சம் ரூபாய் பந்தயம் கட்டினால் தான் சண்டை போடுவேன், பைசா ஏதும் தராமலேயே ஒருவரை அடி என்கிறீர்களே, பணம் வாங்காமல் சண்டை போட நான் என்ன ஏமாளியா?" என்றான்.

யாரைப் பற்றி:
கருணாநிதி "இவர்கள் ஆட்சி செய்வார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் சென்று காவிரித் தண்ணீரை கொண்டு வர வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தாராம். அதற்கு பதில்தான் மேற்கூறிய குட்டிக் கதை.

குருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்து சரி�

குருமூர்த்தியின் கருத்துகளில் ஒருசிலதான் ஏற்புடையதாக உள்ளது.

1. எல்லாப் கிராமப் பஞ்சாயத்தும் வலயப்பட்டி போல தவறாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று எப்படி நீதிபதி முடிவு செய்ய முடியும் என்று கேட்பது சரியான கேள்வியே. ஆனால் என்னுடைய கேள்வி இந்த கிராமப் பஞ்சாயத்துகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதே? இதில் ஏதேனும் இடம் பெண்களுக்கு உண்டா? எந்த சாதி அடிப்படையில் இந்த பஞ்சாயத்துக்காரர்கள் உள்ளனர்? இது வழிவழியாக தந்தைக்குப் பின் மகன் என்று வருகிறதா? இதில் ஒரு பொறுக்கு உறுப்பினராக இருக்கிறான் என்றால் அவனை மாற்ற என்ன வழி உள்ளது?

கோர்ட்டுக்குப் போய் கஷ்டப்பட்டாலும் நமக்கு சரியான தீர்ப்பு கிடைக்காவிட்டால் மேற்கொண்டு போராட வழி உள்ளதே? இந்தப் பஞ்சாயத்து கொடுக்கும் தீர்ப்பு நமக்கு பாதகமானதாக இருக்கும் பட்சத்தில் தீர்ப்பை பத்து பேர் கையில் கம்புகளுடனும், வீச்சரிவாளுடனும் அல்லவா நிறைவேற்றக் காத்திருக்கிறார்கள்?

2. Conciliatory approach பற்றி பேசும் குருமூர்த்தி தன்னுடைய அனுபவங்களைப் பற்றி சொல்கிறார். இரு தரப்பும் இவரை ஏற்ற பின்னர்தான் இவரால் சரியான தீர்ப்பை (இருவருக்கும் ஒத்து வரக்கூடிய தீர்ப்பை) வழங்க முடிந்தது. மக்களுக்கு இந்த கிராம பஞ்சாயத்தின் மேல் எந்த வகை நம்பிக்கை இருக்கிறது? என்னை இந்தப் பஞ்சாயத்தில் நிறுத்தும் போது எனக்கு இந்தப் பஞ்சாயத்தில் நம்பிக்கை இல்லை என்று நான் சொன்னால் இவர்கள் கேட்பார்களா? அடி, உதை எனக்குத்தானே விழும்?

3. கடவுள் முன் பொய் சொல்வானா ஒருவன்? கோர்ட்டில் தைரியமாக சொல்கிறானே என்கிறார். இன்னுமா கிராமங்களில் மக்கள் கடவுள் நம்பிக்கை காரணமாக மட்டுமே உண்மை சொல்லி வாழ்ந்து வருகிறார்கள்? அப்படியானால் கிராமங்கள் எல்லாம் ஒழுக்கத்தின் உச்ச கட்டமாக இருக்க வேண்டுமே? பொய், திருட்டு, அடுத்தவன் குடியைக் கெடுப்பது என்பது எங்கும் பரவு உள்ளதல்லவா? (நகரங்களில் அதிகமாகவே காணப்படுகிறது.) கடவுள் பற்றி கவலைப்படாது அடுத்தவனை வெட்டுபவன் பொய் சொல்ல மட்டுமா அம்மன் மீது பயப்படுவான்?

4. நீதிபதி கற்பகவிநாயகம் அரசுக்கு அவசரச் சட்டம் இயற்றச் சொன்னது அதிகமானது, தேவையற்றது என்று நினைக்கிறேன். நீது வழங்குவதோடு இருந்திருக்கலாம் அவர். சும்மா "உங்களை தமிழ்நாட்டை விட்டே ஒழித்து விடுவோம்", "ஒரு வருடம் ஜெயிலில் போடுவோம்" என்று தாதாக்கள் மாதிரி சொல்லியிருக்க வேண்டியதில்லை. குருமூர்த்தி சொல்வது போல கிராமப் பஞ்சாயத்துகள் "social capital". அவைகளை ஒழிக்க வேண்டியதில்லை. ஆனால் இந்தப் பஞ்சாயத்துகள் அனைத்து மக்களுக்கும் உகந்தவாறு இருக்க வேண்டுமே என்ற கவலைதான். பெண்களுக்கு இந்தப் பஞ்சாயத்தில் எப்போது இடம் கிடைக்கும்? எல்லா சாதியினருக்கும் ஒழுங்கான தீர்ப்பு கிடைக்குமா?

அப்படி ஒருவருக்கு சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஊர்க்கட்டுப்பாடு என்று சொல்லாமல் அவர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு எந்த இடர்ப்பாடும் இருக்கக் கூடாது.

5. தமிழக அரசு நிச்சயமாக இந்த கிராமப் பஞ்சாயத்துகளை ஒழுங்கு படுத்த ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அது அவசரச் சட்டமாக இருக்கக் கூடாது (ordinance), ஆனால் ஒழுங்காக சபையைக் கூட்டி விவாதித்து இயற்றப்பட்ட சட்டமாக இருக்க வேண்டும்.

அவசரச் சட்டம் இயற்றுவதை மிக அவசரமான, முக்கியமான, தலைபோகிற காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சட்ட மன்றங்கள் எதற்காக இருக்கின்றன?

குருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்துகள்

சுகந்தி வழக்கு பற்றிய தீர்ப்பை சொல்லிய பின் நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் இவ்வாறு சொல்லியுள்ளார்: "இது போல கிராம பஞ்சாயத்தார்கள் மரத்தடியில் அமர்ந்து கொண்டு அபராதமும், தண்டனையும் விதிப்பதைத் தடுக்க - அதுபோல அத்துமீறி அதிகாரம் செய்வதையும் தடை செய்ய - ஒரு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்."

இதுபற்றிய குருமூர்த்தியின் கருத்து மேற்கோள்களாக:

"... வலயப்பட்டி பஞ்சாயத்தார்கள் அந்தத் தவறை செய்ததற்காக எல்லா கிராம பஞ்சாயத்தார்களும் அப்படியே செய்வார்கள் என்று முடிவு செய்வது மிகவும் தவறு."

"... ஒட்டுமொத்தமாக கிராமப் பஞ்சாயத்துகளில், வலயப்பட்டியில் நடந்தது போலத்தான் தீர்ப்புகள் கொடுக்கப்படுகின்ரன என்கிற அடிப்படையில் சட்டம் கொண்டு வருவது விவேகமானது இல்லை. இதற்கு சினிமா கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீதிபதி கூறியது போல, மரத்தடியில் வெற்றிலை, பாக்கு, தண்ணீர் கூஜாவுடன் அம்மன் சிலை மின்னால் அமர்ந்து, அநியாயம் செய்யும் பஞ்சாயத்துகள்தான் பெரும்பாலும் சினிமாவில் சித்தரிக்கபடுகின்றன."

"நம் சமுதாயம், ஊர் ஒற்றுமை அவசியம் என்பது கூட கிராமங்களில் முக்கியமான அம்சங்களாக இருப்பது மக்களை தன்னடக்குகிறது. இதுதான் பஞ்சாயத்து முறையின் அடிப்படை. எது தர்மம், எது நியாயம் என்பதில் சட்டம் தனி மனிதனை மதிக்கிறது - பஞ்சாயத்து பொது சிந்தனையை முன்வைக்கிறது."

"இப்போது வெள்ளைக்காரர்கள் மூலமாக நம் நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் நீதிமுறை, வாதி - பிரதிவாதி அதாவது எதிரி-விரோதி என்கிற அடிப்படையிலான adversarial நீதிமுறை. நம் நாட்டில் பாரம்பரியமான நீதிமுறை, சமாதானமாகப் போக வைக்கும் conciliatory-யை அடிப்படையாகக் கொண்டது."

"நீதிமன்றத்தில் ஒரு சாட்சி கூசாமல் பொய் சொல்வதை நம்மால் பார்க்க முடியும். எப்படி பொய் சொல்வது என்று வக்கீல்களே சாட்சிக்கு சொல்லியும் கொடுப்பார்கள், ஆனால் கிராமங்களிலோ, மற்ற இடங்களிலோ நடக்கிற பஞ்சாயத்தில் கடவுள் முன் யாரும் பொய் சொல்ல பயப்படுவார்கள்."

"அம்மன் சிலை முன் நடக்கும் பஞ்சாயத்தில் பொய் சொல்வதற்கு சாட்சிகள் தயங்குவார்கள். அதே சாட்சிகள் நீதிமன்றங்களில் தயக்கமே இல்லாமல் பொய் சொல்வார்கள்."

"நீதிமன்றங்களில் தீர்த்து வைக்க முடியாத பல வழக்குகளை, இந்த பாரம்பரிய பஞ்சாயத்துகள் தீர்த்து வைப்பதை நானே பார்த்திருக்கிறேன். அதே சமயம், பல முக்கியமான வழக்குகள் நீதிமன்றத்தில் மாட்டிக் கொண்டு வருஷக்கணக்கில் திண்டாடுகின்றன என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான். அதனால் இப்போது யார் என்னைக் கேட்டாலும் 'நீதிமன்றம் போகாமல் எப்படியாவது உங்கள் சச்சரவைத் தீர்த்துக் கொள்ளுங்கள்' என்றுதான் யோசனை கூறுகிறேன்."

இவ்வாறு சொல்லிவிட்டு தான் பங்கு பெற்ற பஜாஜ் குடும்ப சச்சரவு மற்றும் எல்&டி/கிராசிம் தகராறு பற்றியும் அவை எப்படி நீதிமன்றங்களுக்குப் போகாமல், 'out of court settlement' இல் முடிந்தன என்பதையும் சொல்கிறார்.

அடுத்து என் கருத்து.

குருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்துகள்

துக்ளக் 29 அக்டோபர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 56ஆவது பகுதியிலிருந்து

[முன்கதை: சுகந்தி என்ற பெண்மணி தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் விவாகரத்து கோரியிருக்கிறார். வலயப்பட்டி என்று கிராமத்தில் வசித்து வந்த இவர், கணவனுடன் பிரிந்து வேறிடத்தில் வசித்து வந்திருக்கிறார். சுகந்தியின் கணவன் வலயப்பட்டி பஞ்சாயத்திடம் புகார் செய்ய - இந்தப் பஞ்சாயத்தானது குடியுரிமைச் சட்டத்தில் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, ஆனால் வழக்குகளை தள்ளுபடி செய்யும் கிராம நிறுவனம், சினிமாக்களில் காண்பிக்கப்படும். - வலயப்பட்டி பஞ்சாயத்தார் சுகந்தியை கணவனுடன் சேர்ந்து வாழச் சொல்லியுள்ளனர். அதற்கு அவள் மறுக்க சுகந்தியை அபராதம் கட்டச் சொல்லியுள்ளனர். சுகந்தியிடம் பணம் இல்லை என்பதால் அவளையும், அவளது தாயையும் தங்கள் முன் கீழே விழுந்து வணங்கச் சொல்லி, ஒவ்வொரு முறை கீழே விழுவதற்கும் இத்தனை பணம் குறைத்துக் கொண்டு கடைசியாக அபராதத் தொகை ரூ. 19,058.75 என்று முடிவாக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்ய, வழக்க்கு நீதிபதி கற்பக விநாயகம் அவர்களிடம் வந்திருக்கிறது. தவறு செய்த பஞ்சாயத்துக் காரர்களை தண்டித்த பின் நீதிபதி "உங்களுக்கு வேலை வெட்டியில்லை... அதனால்தான் நீங்கள் சீட்டாடிக் கொண்டும், குடித்துக் கொண்டும் அலைகிறீர்கள். மற்ரவர்களை அழைத்து வக்கிரமான சந்தோஷம் அடைகிறீர்கள்" என்றும் "உங்களுக்கு வேலை வெட்டி இல்லையென்றால், நீங்கள் ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு சட்டத்துக்கு விரோதமாக தீர்ப்பு கொடுக்கக் கூடாது. நாங்கள் இதுபோன்ற பழக்கங்களை நிறுத்துவோம். இதுபோன்ற வழக்குகளை நடத்த சட்டம் இருக்கும்போது நீங்கள் யார் அவர்களை ஊரை விட்டுத் தள்ளிவைப்போம் என்று மிரட்ட...? நீங்கள் அவர்களை ஊரை விட்டுத் தள்ளி வைத்தால், நீங்கள் தமிழ்நாட்டை விட்டே தள்ளி வைக்கப் படுவீர்கள். இனிமேல் ஏதாவது விஷமம் செய்தால் உங்களை ஓராண்டுக்கு சிறையில் தள்ளுவோம்" என்று கருத்து கூறியிருந்தார்.]

இதுபற்றிய குருமூர்த்தியின் கருத்துகள் மற்றும் என் கருத்துகள் பின்னர்.

குருமூர்த்தியின் 'மிருக பலி' பற்றிய கருத்துகள்

துக்ளக் 22 அக்டோபர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 55ஆவது பகுதியிலிருந்து

"மிருகங்களை பலியிட்டு கடவுளை வழிபடுவது சரியா அல்லது தவறா என்கிற விவாதமே தவறானது - என்று நினைக்கிறேன். அதாவது மிருகபலி சரியா தவறா என்பதல்ல விவாதம். அதை சரியா தவறா என்று விவாதிக்கலாமா என்பதுதான் என் கேள்வி."

"... கீதையில் கிருஷ்ண பகவான், 'என்னை யார் எப்படி அணுகுகிறார்களோ, அவர்களை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறுகிறார். இப்படித்தான் கடவுளை அணுக வேண்டும் என்று கூறாத ஒரே மதம் ஹிந்து மதம்தான். அப்படியிருக்க, இப்படியொரு விவாதம் - அதாவது கடவுளுக்கு பலியிடுவது சரியா தவறா என்கிற விவாதம் - ஏன் ஏற்பட்டது?"

"[கண்ணப்ப நாயனார் கதையைச் சொல்லி] ஆக, கடவுளை இப்படித்தான் வழிபட வேண்டும் என்பதோ, இவர்தான் கடவுள், மற்றவை சைத்தான்கள் என்று கூறுவதோ - பாரத நாட்டின் பாரம்பரியம் கிடையாது. இது கிறிஸ்துவ, இஸ்லாமிய மத பாரம்பரியம். இந்த எண்ணம் நம் நாட்டில் நவீனம் என்கிற முறையில் ஹிந்து மதத்திற்குள்ளேயும் புக ஆரம்பித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம்."

"இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஹிந்து முண்ணனி போன்ற ஹிந்து இயக்கங்கள் கூட (கிறிஸ்துவ - இஸ்லாமிய முறையில்) இப்படி வழிபடுவது தவறு என்று கூறுவதுதான். திரு. ராமகோபாலனின் வழிகாட்டுதலில், அவரக்ளுடைய தவத்தின் ஆசியில் வளர்ந்த ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களில் நானும் ஒருவன். ஆனால் அவர் கூறும் இந்தக் கருத்து, ஹிந்து பாரம்பரியத்தை ஒத்த கருத்து அல்ல."

"மேலும் மத நம்பிக்கைகள் புனிதமானவை. மற்ற மதத்தினரை, மற்ற மத நம்பிக்கைகளை, நேரிடையாக பாதிக்காமல் இருக்கும் நம்பிக்கைகள் எல்லாமே புனிதமானவை. மிருக பலியிட்டு வழிபடுவது, வேறு எந்த மதத்தையும் நேரிடையாக பாதிக்கவில்லை. எப்படி தீ மிதிப்பது, வேல் குத்திக் கொள்வது போன்ற வழிபாட்டுப் பழக்கங்கள் வழக்கத்தில் இருக்கிறதோ - அப்படித்தான் பலியிடுவதும் மற்றவையும்."

"மிருகத்தை பலியிடுவது சரியா தவறா என்பதை விவாதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது."

===

இந்தக் கருத்துகள் அனைத்துடனும் எனக்கு முழு உடன்பாடு.

Monday, October 27, 2003

குருமூர்த்தியின் துக்ளக் கட்டுரைத் தொடர்

ஆன்லைனில் கிடைப்பதில்லை இவை. கடந்த இரு வாரங்களில் சுவாரசியமான விஷயங்கள் பற்றி எழுதியிருக்கிறார். முதலாவது கிடா வெட்டல் பற்றி. இரண்டாவது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கற்பக வினாயகத்தின் 'மரத்தடிப் பஞ்சாயத்து' பற்றிய கருத்துகள் பற்றி.

மேற்கோள்களோடு இதுபற்றி பின்னர் எழுதுகிறேன்.

குருமூர்த்தி தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். ஸ்வதேஷி ஜாகரண் மஞ்ச் என்னும் அமைப்பில் உள்ளவர். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்.

சில மாதங்களுக்கு முன்னால் பஜாஜ் குடும்பம் (இரு சக்கர மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் பஜாஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிபர்கள்) சொத்துத் தகராறில், அண்ணன் தம்பிகளுக்கிடையே சமரசம் செய்து வைத்தவர். பின்னர் கிராசிம் நிறுவனத்துக்கும், எல் & டி நிறுவனத்துக்கும் இடையேயான தகராறையும் சுமூகமாகத் தீர்த்து வைத்தவர்.

Friday, October 24, 2003

தீபாவளி உலகமயமாக்கப் பட்டுள்ளது

ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் இன்று கொண்டாடுகிறாராம். (இராக்கில் கொஞ்சம் நிஜ ஏவுகணைகளை விட்டுக் கொண்டாடியிருக்கலாம்...) என் இந்தியரல்லாத பிரிட்டன் தோழர்கள் கூட தொலைபேசியில் கூப்பிட்டு 'happy Diwali' என்று சொல்லும்போது ஒருவகையில் மகிழ்ச்சியும், ஒருவகையில் சிரிப்பும் வருகிறது!

இந்தியத் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் எக்கச்சக்கமாக சர்வதேச தொலைபேசிக் கட்டணத்தைக் குறைத்துள்ளன. மின்னஞ்சல், செல்பேசியின் SMS என்று இப்பொழுதெல்லாம் தீபாவளி வாழ்த்துக்கள் மின்னணுக்களாகத்தான் வருகின்றன.

இன்னும் சில வருடங்களில் தீபாவளியும் கிறிஸ்துமஸ் போல் ஒரு உலகளாவிய வியாபாரப் பண்டிகையாகலாம்.

தீபாவளி விபத்துகள்

சென்னையில் தாயும், மகளுமாக இருவர் இறந்துள்ளனர். பதினைந்து குடிசை வீடுகள் தீ பற்றி எறிந்துள்ளன.

ஸ்ரீரங்கத்தில் என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள சில குடிசை வீடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிக பட்சமாக வெடிகள், ராக்கெட்டுகள் போன்றவற்றை வெடிக்கின்றனர். அதனால் ஏதேனும் சேதம் ஏற்படுவது இவர்களுக்குத்தான் அதிகம் என்று ஏன் புரியவில்லை?

இரவு முழுவதும் இங்கு வெடித்தனர். உச்ச நீதிமன்றத்தின் 'இரவு பத்து மணிக்கு மேல் வெடிக்கத் தடை' பற்றி யாருக்கும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

எப்பொழுது தீபாவளி வெடிகளை விட்டொழிக்குமோ? எப்பொழுது குறைந்த வாழ்க்கை வசதிகள் உள்ளவர்கள் இந்தப் 'பண்டிகை'க்காக பணத்தை வீண்செலவு செய்வதை நிறுத்துவார்களோ?

Wednesday, October 22, 2003

ரூ 1.5 லட்சத்துக்குக் கார்?

டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா ரூ 1 லட்சத்துக்கு கார் ஒன்று செய்து விற்பதுதான் தன்னுடைய கனவு என்று சொல்லியிருக்கிறார். டாடா நிறுவனமான டெல்கோ தற்பொழுது டாடா இண்டிகா என்ற சிறிய கார்களை விற்பதன் மூலம் முன்னணிக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கார் விற்பனையில் முதலாவதாக இருப்பது மாருதி சுசுகி நிறுவனம். அதன் சேர்மன் நகாநிஷி ரூ 1-1.5 லட்சத்துக்குள் விற்பனை செய்யுமாறு டாடா கார்களை உருவாக்கினால், தன் நிறுவனமும் போட்டி போடும் என்கிறார். மேலும் உலகிலேயே மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் கார் 'மாருதி 800' என்கிறார். மாருதி 800 கிட்டத்தட்ட ரூ 2.15 லட்சத்துக்குக் கிடைக்கிறது.

ரூ 1.5 லட்சத்துக்குள் ஒரு காரைச் செய்து விட முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்

இந்த விஷயம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ஆக, ஆக ஜெயமோகனின் புத்தகங்கள் நன்றாகவே விற்கும் போலவும் தெரிகிறது. அதை விரும்பித்தான் இந்த ஸ்டண்டா?

ஜெயமோகன் தான் மிகவும் மதித்த ஞானக்கூத்தன், கலாப்ரியா, வண்ணதாசன் போன்றவர்கள் இளையபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில் உடல் கூசிப் போகுமளவுக்கு கலைஞர் கருணாநிதியை ஒரு இலக்கிய கர்த்தா என்று புகழ்ந்து தள்ளி கட்சித் தொண்டனையும் ஒருபடி மிஞ்சி விட்டனர். கருணாநிதி ஒரு இலக்கியப் படைப்பாளியே இல்லை, வெறும் பிரச்சார எழுத்தாளர்தான் என்கிறார். உடனே ஜெயமோகனின் பேட்டி விகடனிலும், இன்னும் விரிவான பேட்டி துக்ளக்கிலும் வந்து விட்டது. விகடன் பேட்டிக்கு எதிர் வினையாக, கோபமடைந்த கருணாநிதியும் முரசொலியில் ஒரு கவிதை வெளியிட்டு விட்டார். இப்பொழுது ஞானக்கூத்தன், கலாப்ரியா, வண்ணதாசன் போன்றோர் விகடனில் ஜெயமோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலம் இந்தப் பிரச்சினை கணிந்து கொண்டே இருக்கும்.

மணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா

இன்றைய தினமலர் செய்தியில் மணிஷங்கர் தான் நாகப்பட்டிணம் கூட்டத்தில் ஜெயலலிதாவிடம் என்ன சொன்னேன் என்பதைப் பற்றி சொல்லியிருக்கிறார். "தொகுதி முன்னேற்றம் பற்றிய கூட்டத்தை அரசியலாக்கி விட்டீர்கள், நாய் போல் நாம் இங்கே சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமா?" என்றுதான் தான் கேட்டேன் என்கிறார். ஜெயலலிதாவோ தான் மணிஷங்கர் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

காங்கிரஸ்ஸின் இளங்கோவன் கடைசியாக உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர இனியும் [மோகன்தாஸ்] காந்தி வழியில் போனால் ஒத்து வராது, சுபாஷ் சந்திர போஸ் வழிதான் சரிப்படும் என்கிறார். வாழ்த்துக்கள்.

Tuesday, October 21, 2003

கவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை

கீழ்க்கண்ட கவிதை கவிதாசரண் செப்-அக் 2003 இதழில் வந்துள்ளது.

சாதித் தமிழ்

நமக்கு சாதி கெடையாது
நாமெல்லாம் தமிழ்ச் சாதின்னு
சொன்னவங்க மத்தியில்தான்
முப்பது வருஷமா
கவிதை எழுதிகிட்டு இருக்கிறேன்

ஒரு பயலும் மூச்சு விடல

கேட்டா
புதுக்கவிதைதான எழுதற
அதில என்ன இருக்குன்னு
புழுத்தியாட்டம் கேட்கறானுங்க

சரிதான்
வேற மாதிரி எழுதிப் பார்ப்பம்னு
இலக்கணம் தவறாம
மண்டைய உடைச்சிகிட்டு
மரபுக் கவிதை எழுதினா
அப்பவும்
ஒரு பயலும் என்ன
ஒப்புக்கிடல

கேட்டா
என்னா புதுசா
எழுதிக் கிழிச்சிட்டேன்னு
பொறுக்கியாட்டம் பேசறானுங்க

எனக்குத் தெரியும்
இதுவே நான்
பூணூல் சாதிக் கவிஞனாயிருந்தா
எழுதறதெல்லாம் இலக்கியம்னு
சொல்லியிருப்பானுங்க
சூத்திர சாதிக் கவிஞனாயிருந்தா
சும்மாவாச்சும் தூக்கியிருப்பானுங்க

என்ன செய்யறது
நான் ரெண்டு சாதியிலயும் சேராத
தாழ்ந்த சாதி தமிழ்க் கவிஞன்

தெரியாமத்தான் கேட்கறேன்
அவனவன் சாதித் தமிழ்தான்
அவனவனையும் உயர்த்துது
இதுல தாழ்ந்த சாதித் தமிழ்க் கவிஞன
எந்தத் தமிழ் உயர்த்துது?
எதனால் இந்த சுய பச்சாதாபம்? யார் மீது இந்தக் கவிஞருக்குக் கோபம் என்று புரியவில்லை.

Monday, October 20, 2003

மௌனியும் ஆல்பர்ட் ஃபிராங்க்ளினும்

அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதியில் (படைப்பாளிகளின் உலகம்) ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் என்பவரைப் பற்றி ஒரு கட்டுரை வருகிறது.

இவர் சென்னை அமெரிக்க தூதரகத்தில் 1963-1968 இல் கான்ஸல் ஜெனரலாக இருந்தவராம். தமிழ் இலக்கியத்தில் நல்ல ஆர்வமுடையவராம். தமிழ் சிறுகதைகள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.

முன்னர் soc.culture.tamil இல் மௌனி எழுதிய ஒரு சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் வந்திருந்தது, அதை மொழிமாற்றியவர் பெயர் ஆல்பர்ட் ஃபிராங்க்ளின்.

மேலும் கூகிளில் தேடுகையில் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் என்பவரது 'தமிழ்க் கதையை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது எப்படி' என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக மௌனியின் கதையிலிருந்து ஒரு பகுதி எடுத்தாளப்பட்டிருந்தது. இதிலிருந்து கிடைத்த தகவல்கள்:

  • அசோகமித்திரனும், ஆல்பர்ட் ஃபிராங்க்ளினும் சேர்ந்து மௌனியின் கதை ஒன்றை (பிரதக்ஷிணம்) ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது 1971இல் Adam International Review வில் வெளிவந்திருக்கிறது.
  • மௌனியின் 'சாவில் பிறந்த சிருஷ்டி' என்னும் சிறுகதை கமலா லக்ஷ்மன்/அடில் ஜுஸ்ஸாவாலா ஆகியோரால் மொழிமாற்றப்பட்டு 'Born of Death' என்று பெங்குவின் 1974 வெளியீடான 'New Writing in India' என்ற புத்தகத்தில் வந்திருக்கிறது.
  • 'Mauni: A writers' writer' என்ற புத்தகம் 1997இல் கதாவினால் அச்சிடப்பட்டுள்ளது. லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் இதில் மௌனியின் பதினோரு கதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.
  • எனக்குத் தெரிந்து நான் The New Yorker பத்திரிக்கையில் ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் மொழிமாற்றம் செய்த மௌனியின் இரண்டு கதைகளைப் படித்திருக்கிறேன். 1970களின் கடைசியிலோ, 1980களின் ஆரம்பத்திலோ இவை வெளிவந்திருக்க வேண்டும்.

தீபாவளி

அதிக ஆர்வமில்லாமல் இந்த வருடமும் தீபாவளி. ஸ்ரீரங்கம் போகவேண்டும். எல்லோருக்கும் இருக்கும் உற்சாகத்தைப் பார்க்கும் போது அதிசயமாய் இருக்கிறது.

அப்படி என்ன குதூகலிக்க இந்நாள் என்று.

எப்பொழுது வேண்டுமானாலும் துணி வாங்கிக் கொள்ள இப்பொழுது முடிகிறதென்பதால் தீபாவளியும் புதுத்துணியும் என்ற உறவு இல்லாமல் போனதாலா? இனிப்புகளும் அப்படியே. வேண்டும்போது வேண்டியதை வாங்கி உண்ண முடிவதாலும், உடுக்க முடிவதாலும், இந்த விழாக்களுக்கான அடிப்படைக் காரணங்களுடன் மனம் ஒன்ற முடியாததாலும் (நரகாசுரன் செத்தால் எனக்கென்ன? இராமனை அவனது நாட்டு மக்கள் வரவேற்றால் எனக்கென்ன?) தீபாவளி என்று ஒன்றின் மேல் பற்றுதல் இல்லை.

வெடிகள் மீது வெறுப்புதான் வருகிறது. வீண் சத்தமும், புகையும். சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன் உயிருக்குப் பெருத்த அபாயமும் கூட. குடிசை வீடுகளின் அருகே கூட எந்தக் கவலையும் இன்றி வெடி வெடிக்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன். எப்படி முடிகிறது இவர்களால்?

Sunday, October 19, 2003

அப்பாடா! கணினித் தொல்லை நீக்கம்

கடந்த இரண்டு வாரங்களாக என் வீட்டுக் கணினி பயங்கரத் தொல்லை கொடுத்து வந்தது. இன்று முடிந்தவரை அதனைச் சரி செய்துள்ளேன். என்ன, எல்லாவற்றையும் மீண்டும் install செய்ய வேண்டியாயிற்று.

இனி வார இறுதியிலும் தடங்கலின்றி வலைப்பதியலாம்.

கவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்

நேற்று கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய 'கவிதைக் கணம்' கூட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.

அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்ற பெரிய படைப்பாளிகள் வந்திருந்தனர். ராகாகியில் இருக்கும், நான் இதுவரை நேரில் சந்தித்திராத ஒரு சிலரைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது - வைதீஸ்வரன், ஹரிகிருஷ்ணன், வாஞ்சி, ஆசாத்.

இதுதான் நான் முதலில் பங்கு கொள்ளும் இலக்கியக் கூட்டம். அதிகமாக எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எனக்கு நானே எச்சரிக்கை விடுத்திருந்தாலும், கடைசியில் ஏமாற்றம்தான். இனிவரும் இலக்கியக் கூட்டங்களுக்கு என் மனதை இன்னும் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

நிகழ்ச்சி நடந்தது தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்பறையில். நான் ஒரு பள்ளி வகுப்பறைக்குள் கால் மிதிப்பது 17 வருடங்களுக்குப் பின்னர். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் வைதீஸ்வரனை ஆசிரியர் அமரும் நாற்காலியில் உட்கார வைத்தனர். வைதீஸ்வரனின் ஒரு கவிதையும் சில ஓவியங்களின் பெரிதாக்கப்பட்ட ஒளிநகல்களும் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னால் உள்ள கரும்பலகையில் ஒரு சில கணித சமன்பாடுகள் எழுதப்பட்டிருந்தன (நிகழ்ச்சி நடத்துபவர்களின் ஏற்பாடு இல்லை, முந்தைய வகுப்பில் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்!).

விருட்சம் அழகியசிங்கர் முதலில் (புதுமைப்பித்தன்?) கவிதை ஒன்றைப் படித்து நிகழ்ச்சியைத் துவக்கினார். அதன் பின் கி.ஆ.சச்சிதானந்தம் வைதீஸ்வரன் கவிதை பற்றிய தன் நினைவுகளைப் பற்றி, நினைவிலிருந்தே (எழுதி எதுவும் வைத்துக் கொள்ளாமலே) பேசினார். அவர் எடுத்துக் காட்டும் கவிதைகளில் தடங்கல் ஏற்படும் போதெல்லாம் வைதீஸ்வரன் அடிகளை நிரப்பினார். தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் நினைவிலா வைத்துக் கொண்டிருப்பார்?

அடுத்து இரா.முருகன் ராகாகி சார்பாக பேசினார். கிளப்பில் பரிமாறப்பட்ட வைதீஸ்வரன் படைப்புகளைப் பற்றி (கவிஞர் மட்டுமல்ல, ஓவியர் மற்றும் மேடை நாடகக்காரர்) சிறிது சொல்லிவிட்டு பரிசு ஒன்றையும் வைதீஸ்வரனுக்குக் கொடுத்தார்.

அதன்பின் வைதீஸ்வரன் கவிதைகள் பற்றிய விமரிசனம், திறனாய்வு, வாசகனின் அபிப்ராயம் என்று பலர் எழுதி வந்த கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தனர். சுப்ரமணியன் என்பவர் தான் விமரிசகன் இல்லை, திறனாய்வும் செய்யவில்லை, ஒரு வாசகனாக, வாசகனுடைய எண்ணங்களைப் பதிவு செய்கிறேன் என்ற பெருத்த பீடிகையோடு ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள், நெருக்கி எழுதிய தாள்களைப் படித்துப் பேசியிருப்பார். நன்கு செய்த ஆராய்ச்சிக் கட்டுரை போலிருந்தாலும் இது எழுத்து வடிவத்தில் இன்னும் உதவியாய் இருந்திருக்கக் கூடும்; இந்தக் கூட்டத்தில், துவக்க நிலை வாசகனான எனக்கு, அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. அதன் பின் கட்டுரை படித்தவர்கள் நேரத்தை இந்த அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் நேரம் ஓடிக் கொண்டே போனது. கவிதாயினி மாலதி மும்பையிலிருந்து எழுதி அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப் பெற்றது. அடுத்து பூமா ஈசுவரமூர்த்தி தன் கட்டுரையப் படித்தார். சிறிய கட்டுரை ஆனாலும் சுவையாயிருந்தது. அதன்பின் கிளப்பில் இருக்கும் பாரதிராமன் (அவரும் வந்திருந்தார்) எழுதியிருந்த கட்டுரையை லதா ராமகிருஷ்ணன் வாசித்தார்.

அடுத்து பிரியம்வதன்(?) என்பவர் எழுதிக் கொண்டு வராமல் தான் எவ்வாறு வைதீஸ்வரன் கவிதைகள் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதைப் பற்றிப் பேசினார். மரபுக் கவிதை, செய்யுள், புதுக்கவிதை பற்றியெல்லாம் பேசினார். அதில் உள்ள கருத்து எல்லோருக்கும் உடன்பாடாயிருந்திருக்காது. ("குறுந்தொகையிலும் எதுகை மோனையின்றி, கூற்று மட்டுமே பிரதானமாக ஒரு கவிதை உள்ளது" என்று எடுத்துக் காட்டினார். முன் அமர்ந்திருந்த ஹரியும் முருகனும் ஏதோ சொல்லிக் கொண்டனர். ஹரி இந்தப் பாட்டில் மோனை நிச்சயமாக உள்ளது என்று சொன்னமாதிரி என் காதில் விழுந்தது.)

விருட்சம் அழகியசிங்கர் வைதீஸ்வரன் கவிதைக் கணம் பற்றி வாசகர்களிடம் சொல்லி கருத்து கேட்டிருந்ததற்கு பதிலாக வந்த கடிதங்களைப் படித்தார். அதை அவர் படிக்கும் போது அறை முழுவதும் அவ்வப்போது தீபாவளி வெடிச்சிரிப்பு நிறைந்தது. ஒருசில

<துவக்கம்>
இவரது 'கிணற்றில் விழுந்த நிலவு' முதல் கவிதையிலேயே "திருஷ்டி கழித்து அவளை திருப்பி அனுப்பிவிடு" என்று வடமொழிச் சொல் வருகிறது. அதனால் மேற்கொண்டு இந்தக் கவிதைத் தொகுதியை நான் படிக்கவில்லை. இவரது பெயரிலேயே வைதீஸ்வரன் என்று வடமொழி எழுத்து வருகிறது. அதை இவர் மாற்றி வைதீசுவரன் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
<முடிவு>

<துவக்கம்>
இவரது கவிதைகள் எல்லாவற்றிலும் ஆண்களில் குரலே உள்ளது. பெண்களே இல்லை.
<முடிவு>

<துவக்கம்>
இன்னொரு அய்யரா? ஏன் நீங்கள் தலித் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதில்லை? தலித் கவிஞர்களுடன் கவிதைக் கணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை?
<முடிவு>

கிட்டத்தட்ட ஆறு மணிக்குத் துவங்கிய கூட்டம், இப்பொழுது மணி ஏழு நாற்பத்தி ஐந்து ஆகி விட்டது. நான் மிகவும் ஆவலோடு வைதீஸ்வரனைப் பேசச் சொல்லுவார்கள், அவரைக் கேள்விகள் கேட்பார்கள், அவருகும், அசோகமித்திரன் போன்றவர்களுக்கும் இடையில் ஏதாவது விவாதம் நிகழலாம், அதிலிருந்து ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று ஆவலோடு காத்திருந்தது நடக்கவில்லை. ஒருவேளை நான் எழுந்து வந்தபின் இவை அனைத்தும் நடந்திருக்கலாம்.

ஆனால் ஒரு மூத்த கவிஞரை, "புதுக்கவிதை"யை வழி நடத்தி வந்தவர்களில் ஒருவர் என்று நினைக்கப்படுபவரை சும்மா உட்கார வைத்துவிட்டு இத்தனை பேர்களும் தங்களது பாண்டித்யத்தை வெளிப்படுத்துவதா இம்மாதிரிக் கூட்டங்களின் நோக்கம் என்று எனக்குப் புலப்படவில்லை. ஒருவேளை கவிதைக் கணத்தின் குறிக்கோளே இதுவானதாக இருக்கலாம். ஆனால் இந்த நீண்ட கட்டுரை வாசிப்பு சரியானதாகத் தோன்றவில்லை. கட்டுரை எழுத்தில் பார்ப்பதில்தான் சுகமும், அறிவும் தரும். நேரில் பேசும்போது அதற்கேற்ற மாதிரி மேடைப்பேச்சு பாணியில் பேச வேண்டும். மேற்கோள்கள் தேவை, உட்கார்ந்திருப்போருடன் ஊடாடல் தேவை. ஒரு கேள்வி, சில பதில்கள், ஒரு கலந்துரையாடல். புதியவன் ஆனாலும் நான் சொல்வதைக் கேட்பார்களா?

அதேபோல் நேரத்துக்கு சற்று மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. இரண்டு மணி நேரம் என்பதே என்னைப் பொறுத்தவரை அதிகமானது. பத்து மணி நேரம் கூட இருக்கத் தயார், அதில் பயன் உண்டு என்றால். ஆனால் அவ்வாறு பயன் ஏதும் இருப்பதில்லை போலத்தான் தோன்றுகிறது. மூன்று பேருக்கு மேல் பேசக்கூடாது. 15 நிமிடத்துக்கு மேல் ஒருவரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. விழா நாயகனுடன் கலந்துரையாட 30-60 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும். கையில் செல்பேசி கொண்டு வந்திருக்கும் நண்பர்கள் நிர்தாட்சணியமாக அதனை 'மௌன'மாகவோ அல்லது அணைத்தோ விடுதல் நலம். நடுவில் எழுந்திருந்து வெளியே போய் (கூட்டத்தை நடத்தும் அழகியசிங்கரே இவ்வாறு செய்து கொண்டிருந்தார்) பேசி விட்டு வருவது கூட்டத்தில் உள்ள அனைவரையும், முக்கியமாக வைதீஸ்வரனையும் அவமதிப்பது போலாகும்.

அப்புறம் இந்த டீ, காபி. அவசியமே இல்லை என்று தோன்றுகிறது. அவை வேண்டுமென்றால், தெருவோரக் கடைக்குப் போய்க்குடித்துக் கொள்ளலாம். இல்லை, இடைவேளை உண்டாக்கி ஐந்து நிமிடங்கள் டீ, தம், செல்பேசிக்கு ஒதுக்கலாம்.

ஒரு சுய-ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் முன்னேறுதல் கடினம் என்று தோன்றுகிறது.

Friday, October 17, 2003

அயோத்திப் பிரச்சினை

முலாயம் சிங் யாதவ் தைரியமாக வி.இ.ப குண்டர்களைத் தூக்கி சிறையில் அடைத்துள்ளார். பாராட்டுவோம். வெங்கையா நாயுடு "ராம பக்தர்களை" உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உத்திரப் பிரதேசத்தில் இப்பொழுது பா.ஜ.பா ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே பயமாயிருக்கிறது.

Thursday, October 16, 2003

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்)

* மணிசங்கர் அய்யர் தாக்குதல் பற்றி. முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என்னை மணிசங்கர் தரக்குறைவாகப் பேசினார், அதற்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சபாநாயகர் காளிமுத்துவே சாட்சி. ஆனால் நான் கண்ணியமாக நடந்து கொண்டேன். தாக்குதல் நடந்தது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார். எப்படி நம்புவது? இதைப்பற்றிய நேற்றைய என் பதிவு.

* கலைஞர் கருணாநிதி ஜெயமோகன் தன்னை ஒரு தீவிர இலக்கியவாதி இல்லை என்று சொன்னதைக் கண்டிக்குமாறு முரசொலியில் ஒரு கவிதை எழுதித் தள்ளிவிட்டார். அதில் ஜெயமோகனை, 'வாலைச் சீண்டும் வானரம்', 'தீராவிடம்', 'தும்பறுந்த கன்று', 'நரி', 'பொன்னைப் (தன்னைப்) பார்த்து இளிக்கும் பித்தளை', 'கற்பூர வாசனை தெரியாத [கழுதை]', 'கபோதி', என்று தன் இலக்கியத் திறமைகள் அனைத்தையும் காட்டி விட்டார். இனியும் ஜெயமோகன் கலைஞரை ஒரு தீவிர இலக்கியவாதியாகக் கருதாவிட்டால் அடுத்து சோடா பாட்டில்கள், சைக்கிள் செயின்கள் மற்றும் இதர திராவிட சமாச்சாரங்கள் அனுப்பி வைக்கப்படும்!

Wednesday, October 15, 2003

இலக்கியவாதிகளும் துதிபாடிகளும்

நான் இலக்கியப் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு இதுவரை போனதில்லை. போன வாரம் திங்கட்கிழமை அன்று ஜெயமோகனின் எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன, அதற்கு ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ரா ஆகியோர் வரப்போகிறார்கள் என்றதால் போயிருந்தேன். லா.ச.ரா வரவில்லை. மற்ற இருவரும் வந்திருந்தனர்.

அதற்கு முந்தைய நாள் மற்றுமொரு புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இந்த விழாவில் இளையபாரதி ஏழு புத்தகங்களை வெளியிட்டாராம், அதையெல்லாம் விட முக்கியமாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி விழாவிற்கு வந்திருந்தாராம். இவ்விழாவிலும் அசோகமித்திரன் மேடையில் அமர்ந்திருந்திருக்கிறார். ஜெயமோகன் உட்பட பார்வையாளர்கள் முக்கால்வாசிப்பேர் இரண்டு கூட்டங்களுக்கும் போயிருக்கிறார்கள்.

முதல் நாள் நடந்த கூட்டம் கருணாநிதியின் இலக்கியத் திறமைகளைப் பாராட்டும் கூட்டமாக ஆகி இருந்திருக்கிறது. இதைப்பற்றி அடுத்த நாள் பேசுகையில் ஜெயமோகன் இவ்வாறு சொல்கிறார்:

"வண்ணதாசன் அங்கு பேசிய பிற திராவிட இயக்க பேச்சாளர்களை விடத் தரம் தாழ்ந்த ஒரு உரை ஆற்றினார். மு.கருணாநிதி அவர்களை மிக மிக ஆர்ப்பாட்டமான வார்த்தைகளால் புகழ்ந்து, அவரை ஒரு இலக்கிய மேதையாக வர்ணித்தார். கவிஞர் கலாப்ரியா மு.கருணாநிதியை தன் ஆதர்ச எழுத்தாளராகவும் தன்னுடைய வழிகாட்டியாகவும் சொல்லிப் புகழ்மொழிகளை அடுக்கினார்."

"அதைவிடக் கீழிறங்கி கவிஞர் ஞானக்கூத்தன் பிரதமர் வாஜ்பாய், மு கருணாநிதி ஆகியோரைத் தொட்டபோது தன்னுடைய கரங்களின் ஒரு அதிர்வு ஏற்பட்டது என்று சொன்னார்."

"அம்மேடையில் இன்குலாப் பேசிய பேச்சு கீழ்த்தரமான துதிபாடலாக இருந்தது."

"அந்த மேடையில் முற்போக்கு எழுத்தாளர்களான பா.கிருஷ்ண குமார், வேல ராமமூர்த்தி ஆகியோர் பேசிய சொற்கள் என்னை கூச வைத்தன."

இப்படி இந்த முற்போக்கு எழுத்தாளர்கள், தீவிர இலக்கியவாதிகள் ஏன் கருணாநிதியின் இலக்கியத் திறமை பற்றி துதிபாட வேண்டும்? பிரதமர் வாஜ்பாயி, கலைஞர் கருணாநிதி, (அல்லது எல்லோருக்கும் பிடித்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்) ஆகியோர் படைப்புகள் தீவிர இலக்கியம் எதிலும் சேர்த்தியில்லைதான். அவர்களது அரசியல் செல்வாக்கு, பதவி ஆகியவை தரும் மயக்கத்தில் எதற்காக இப்படி உண்மையான, நல்ல படைப்புகளைச் சாதித்த இலக்கியவாதிகள், தரமில்லா எழுத்துகளைப் படைப்பவர்களை பொய்த்துதி பாட வேண்டும்? எங்கே போயிற்று இவர்களது இலக்கிய நேர்மை? தைரியம்?

இளையபாரதி விழா மேடையில் பேசிய கவிஞர் அப்துல் ரகுமான் இவ்வாறு சொன்னாராம்:
[தான் உள்பட] திராவிட இயக்கம் உருவாக்கும் எழுத்து 97 சதவீதம், சிற்றிதழ் எழுத்தாளர்களும் முற்போக்கு எழுத்தாளர்களும் சேர்ந்து எழுதும் எழுத்து 3 சதவீதம். அந்த 3 சதவீதம், மற்றவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளே அல்ல என்று தங்களுக்குள் முணு முணுத்துவந்தார்கள். மு.கருணாநிதியின் இலக்கிய சாதனைகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இப்போது இளையபாரதி ஒரு பெரிய படைப்பாளி என்று சொல்கிறார்கள். கருணாநிதியை இலக்கியவழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் சொல்கிறார்கள். அந்த 3 சதவீதம் இறங்கி வந்திருக்கிறது .

பின்னர் பேசிய கலைஞர் "அவர்கள் [இந்த 3 சதவீதத்தினர்] நம் ஆதரவை, அங்கீகாரத்தைக் கேட்டு வந்திருக்கிறார்கள். அவர்களைப் புண்படுத்தாமல் இருப்பதே முறை" என்றாராம்.

ஜெயமோகன் கொள்ளும் வருத்தம் நியாயமானதே. இப்படியா முற்போக்கு, தீவிர இலக்கியவாதிகள் கேவலப்பட வேண்டும்?

ஜெயமோகன் தன் பேச்சை முடித்துக் கொள்ளும் போது ஆணித்தரமாக "இந்த மேடையில் நின்று அந்த 3 சதவீத முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன் , திரு மு.கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள், தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல." என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களோடு அவரது நேர்மையையும், தைரியத்தையும் கூடச்சேர்ந்து பாராட்ட வேண்டும்.

நினைத்ததை முடிப்பவன்

ராயர்காபிகிளப்பில் தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றிய விவாதம் நடக்கையில், பேச்சுணரி (speech recognition) வந்து விட்டால் இனி தட்டச்சு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதற்கு வெங்கட் பேச்சுணரியெல்லாம் பழைய விஷயம், இப்பொழுது நடக்கும் ஆராய்ச்சியெல்லாம் மனதில் நினைத்ததை கணினியில் நிகழ வைப்பது என்றார். நம்ப முடியவில்லை எனக்கும். அது பற்றி ஒரு கட்டுரைத் தொடரை ஆரம்பித்துள்ளார்.

நேற்று இதைப்பற்றிய செய்தி ஒன்றை 'தி ஹிந்து'வில் பார்க்க நேரிட்டது. கூகிளில் தேடியதில் சற்றே விரிவான கட்டுரை ஒன்று கிடைத்தது. இந்தச் செய்திப்படி குரங்குகளுக்கு மூளை வழியாக அனுப்பும் சிக்னல்கள் மூலம் ஒரு ரோபோ கையை இயக்கப் பயிற்சி கொடுத்துள்ளனராம்.

ராம பக்தர்களா? இல்லை குண்டர்களா?

விசுவ இந்து பரிஷதின் ராட்சதக் கூட்டம் அயோத்தியில் போய் இறங்குகிறது. இவர்களை ராம பக்தர்கள் என்றும் கர சேவகர்கள் என்றும் செய்தித்தாள்களும், வானொலிகளும் சொல்லுகின்றன. இது தவறான வருணனை. இவர்களை தடியர்கள், குண்டர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிக்க தோகாடியா தலைமையில் அயோத்தி செல்லும் இவர்களை சிறையில் அடைக்கத் தேவையான இடம் இருக்காது. ஆனால் இந்தத் தலைவர்களை அடைக்கத் தேவையான இடம் நிறையவே இருக்கிறது.

பிரதமர் வாஜ்பாயி வி.இ.ப மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சொல்கிறார். எப்படி நம்பிக்கை வைப்பது? நிலைமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று இப்பொழுதே தெரிந்து விட்ட காரணத்தால் உடனடியாக இராணுவத்தை அயோத்திக்கு அனுப்பி அத்துமீறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அயோத்தியில் நடப்பதின் எதிரொலி நாடெங்கும் கேட்கும்.

AIR FM Gold news analysis program

Every morning, between 8.45 AM and 9.00 AM, AIR FM Gold (105.0 FM) broadcasts a news analysis programme. Its quality can of course be a lot better but what is gratifying is the level of independence exhibited by people who come on the show. AIR is not any more a stooge in the hands of the ruling party.

In today's programme, news analyst was Malhotra (didn't pick up the initials). Election Commission has expressed its displeasure about the ruling BJP coalition's full page advertisements appearing on newspapers extolling their 4 years of great governance, particularly in those five states where elections are due and the model code of conduct has come in to place. The Election Commission has also strongly condemned distribution of school bags to students in Chattisgarh with Chief Minister Ajit Jogi's mugshot on it.

Commenting on this, Malhotra said "of course it is condemnable. It is your and my money which the Government is using to spend on some useless advertisements with the Prime Minister's mugshot on it. The Congress state governments spend money showing Sonia Gandhi's face. They should rather spend the money on some useful programme for the poor." All of us, sensible people, have similar views.

What is heartening is that AIR now gives a platform to express such views openly.

Tuesday, October 14, 2003

மணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்

நான் வளர்ந்த நாகையில், ஒரு பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும் வாய்ச்சண்டை போட்டு, அதன் பின் மணிசங்கரை ரௌடிகள் தாக்கியுள்ளனர்.

மணிசங்கர் ஒன்றும் உத்தமர் இல்லை. இருந்தும் ஜனநாயகம் இப்படி நசிந்து விடக் கூடாது. மணிசங்கர் ஜெயலலிதா குருவாயூர்க் கோவிலுக்கு யானையை தானம் செய்ததைப் பற்றி கேலி பேசி, தான் அதே கோவிலுக்கு ஜெயலலிதாவை தானமாகத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை மனதில் வைத்துக் கொண்டு (யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பார்கள்) ஜெயலலிதா இந்தக் கூட்டத்தில் மணிசங்கரை வாயால் தாக்கியுள்ளார் (தைரியமிருந்தால் இந்தக் கூட்டத்தில், என் முன்னால் அதைச் சொல்லுங்களேன்...). காவிரி நீர் பிரச்சினை பற்றிப் பேசும்போது மணிசங்கர் முதலமைச்சரைக் குறை கூற, பதிலுக்கு ஜெயலலிதாவும் பிரச்சினை எல்லாம் மணிசங்கர் சோனியாவிடம் பேசி, சோனியா SM கிருஷ்ணாவிடம் பேசினால் சரியாகி விடும் என்று பதில் கொடுத்துள்ளார். கோபித்துக் கொண்டு மணிசங்கர் மேடையை விட்டு இறங்கிப் போய்விட்டாராம். அப்பொழுதே அவரைத் தாக்க ஒருசில அஇஅதிமுக பிரமுகர்கள் முயன்றதாகவும், அம்மாவின் கண்ணசைவால் அந்த முயற்சியை அப்பொழுது கைவிட்டதாகவும் செய்தி. ஆனால் சில மணி நேரத்துக்குள் காரை மறித்து, மணிசங்கரை அடித்து விட்டனர்.

கண்டிக்கப்பட வேண்டிய தாக்குதல் இது.

Monday, October 13, 2003

கடந்த வாரம்

* ராஹுல் திராவிட் இரட்டை சதம் அடித்தார், இந்தியா ஜெயிக்கவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு நேரம் ஒதுக்கிக் கிரிக்கெட் பார்க்க முடிந்தது. இந்திய அணியில் பந்து வீச்சு நிறைய முன்னேற வேண்டும், ஆஸ்திரேலியா சென்று அங்கு தாக்குப் பிடிக்க வேண்டுமானால்.

* அசோகமித்திரன் கதைகள் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - தண்ணீர், 18ஆவது அட்சக்கோடு, மானசரோவர். இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது அவரது கட்டுரைத் தொகுதி ஒன்று. ஏற்கனவே கையிருப்பில் இன்னும் பல படிக்க வேண்டியவைகள் உள்ளன. சுந்தர ராமசாமியின் மூன்று நாவல்கள் (ஒரு புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ சில குறிப்புகள் மற்றும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள்), ஜெயமோகனின் காடு மற்றும் அவரது விமரிசனப் புத்தகங்கள். அதைத் தவிர இன்ன பலவும். எல்லாம் முடிக்க இரண்டு மாதங்கள் ஆகிவிடும் - அதுவரை வேறெதுவும் வாங்காதிருக்க வேண்டும்.

* வாரக்கடைசியில் சேர்த்து வைத்திருந்த பல இதழ்களை ஓரளவுக்குப் படிக்க முடிந்தது. செப்டெம்பர், அக்டோபர் கணையாழி, செப்-அக் கவிதாசரண், அக் உயிர்மை. சிற்றதழ்களில் வரும் சிறுகதைகள் பல நன்றாக உள்ளது. வணிக இதழ்கள் முழுவதாக காலை வாரிவிட்ட இந்த நிலையில் சிற்றிதழ்களே காப்பாற்றி வருகின்றன. குமுதம், விகடன் கதைகளைப் படிக்கக் கூசுகின்றது இப்போதெல்லாம். கல்கியில் அவ்வப்போது நல்ல கதைகள் வருவது வரவேற்கத்தக்கது.

* அதுபோலவே கட்டுரைகளும். சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகள் பல முக்கியமானவை. அரசியல், சமூகம் பற்றி சிந்தனையைத் தூண்டும் வண்ணம் வரும் பல கட்டுரைகள் துரதிர்ஷ்டவசமாக பெரும்பான்மை சிந்திக்கக்கூடிய மக்களைப் போய்ச் சேருவதில்லை.

* நேற்று HBO வில் பார்த்த "The Net" என்னும் வெகு சுமாரான படம். சான்டிரா புல்லாக் நடித்தது. அமெரிக்காவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியமான mainframe கணினிகளில் பொதுமக்களைப் பற்றிய விஷயங்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. சோஷியல் செக்யூரிட்டி எண் முதல், கிரிமினல் ரெக்கார்ட் வரை உள்ள இந்தக் கணினிகளை ஊடுருவ (அதன் மூலம் நாட்டைத் தன் கைக்குள் வைத்துக்கொள்ள) முயலும் வில்லன் கிரேக் என்பவன் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத் தலைவன். அவனது Gatekeeper என்னும் காவல் மென்பொருளே இந்த வேலையை செய்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் இதனை அரசின் பல்வேறு துறைகளும் வாங்கி தங்கள் கணினிகளில் அமர்த்துகிறார்களாம்! எதிர்ப்பவர்களை, அவர்களது அரசாங்க ரெக்கார்டுகளை மாற்றுவதன் மூலமே தொலைத்துக் கட்டுகிறார்கள் வில்லர் கூட்டம்.

படம் எப்படியோ போகட்டும். பில் கேட்ஸின் மைக்ரோசாஃப் பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு இப்பொழுது அமெரிக்காவில் வந்துள்ளது.

Friday, October 10, 2003

ஸ்பெயின் காளை விளையாட்டு

நேற்று வேலையற்றுப் போய், கொத்துமேல் பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் 102 சானல்களையும் தொலை இயக்கி மூலம் திருப்பிக் கொண்டிருக்கையில் ஒரு ஸ்பானிஷ் தொலைக்காட்சி கண்ணில் பட்டது.

நல்ல கருப்பு நிறக் காளை. தடித்துக் கொழுத்து இருந்தது. நன்கு பருமனான இரு கொம்புகள், ஒரு சீராக வளைந்து, இறுதியில் கூர்மையாய் இருந்தது. வாலிலிருந்து கொம்பு வரை உடல் உயரிக் கொண்டு போயிருந்தது. நடுவில் சின்ன திமில். கனமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. கண்ணில் வெறி. ஒரு வட்ட விளையாட்டரங்கில் நடுவில் நின்று கொண்டு சுற்றியிருப்போரை முறைத்துக் கொண்டிருந்தது.

அரங்கினைச் சுற்றிக் கால்பந்துப் போட்டிக்குக் குழுமியிருக்கும் பார்வையாளர்கள் போல நெருக்கமான கூட்டம், ஆவலோடு அரங்கின் மையத்தை நோக்கியிருந்தது. அரங்கின் நடுவே காளையைத் தவிர ஆறு அல்லது ஏழு பேர்கள் குதிரை மேல் செல்லும்போது போட்டுக்கொள்ளுமாதிரியான இறுக்கமான கால்சராய் அணிந்து, சரிகை வேலைப்பாடுடைய மேல்சட்டை அணிந்து, கையில் ஆளுயர ஜப்பானிய விசிறி போன்ற காகிதத்தினாலான ஒன்றை வைத்திருந்தனர். ஒருவன் ஒரு குதிரை மீதமர்ந்து கையில் நீண்ட கம்பொன்று வைத்திருந்தான். அந்தக் கம்பின் நுனி கூர்மையாக இருப்பது போல் தோன்றியது. அந்தக் குதிரையின் கண்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தன. குதிரையின் உடம்பைச் சுற்றி கவசம் போல் அணிவித்திருந்தனர். அரங்கின் ஓரத்தில், ஓரிடத்தில் ஒரு சிறு மறைவு இருந்தது. அதன் பின்னர் இருவர் நின்று கொண்டிருக்க முடியும். அங்கு காளை அவர்களைத் தாக்க வந்தால் தப்பித்துக் கொள்ளுமாறு அந்த இடம் அமைக்கப்பட்டிருந்தது.

அரங்கின் மேல் ஒருவர் ஆட்டத்தின் நடுவர் போல அமர்ந்திருந்தார். அவர் அருகில் மூவர் மதிப்பெண்கள் கொடுப்பவர்கள் போலக் கையில் காகிதங்களும், எழுதுகோலும் வைத்திருந்தனர்.

சரியான நேரம் வந்ததும், நடுவர் சைகை காண்பித்ததும் மணி முழங்கியது. குதிரைக்காரன் காளையின் அருகில் சென்று அதனைக் குச்சியால் குத்தினான். கொதித்தெழுந்த காளை அந்தக் குதிரையை நெம்பித் தூக்கியெறிய முயற்சித்தது. குதிரைக்காரன் குதிரையைப் பின்வாங்கிக் கொண்டு சென்றான். அப்பொழுது முதலாமவன் காளையின் முன்னே சென்று தன் கையில் உள்ள பெரிய விசிறியை அசைக்க, காளை அவனை நோக்கிப் பாய்ந்தது. தேர்ச்சியுடன் அவன் பின்வாங்கி, கைவிசிறியைச் சுழற்றி நகர, காளை நேராக ஓடி அவனைத் தாண்டி சற்றே சென்று, தன் ஓட்ட வேகத்தைக் குறைத்தது. அப்பொழுது இரண்டாமவன் அதன் முன்னே போய் நிற்க, காளை மீண்டும் துரத்த விளையாட்டு தொடர்ந்தது.

அப்பொழுதெல்லாம் நடுவரும், மதிப்போரும் பதிப்பெண்கள் கொடுத்து வந்திருக்க வேண்டும்.

நடுநடுவே, காளை களைத்து நிற்கையில் குதிரைக்காரன் உசுப்பேற்ற வருவான், கம்பால் குத்துவான். இந்த விளையாட்டு தொடரும். சிறிது நேரத்தில் காளையின் முதுகிலிருந்து கொழகொழவென ஏதோ கசிவது போலிருந்தது. குருதியாக இருக்கலாம். ஆனால் அடுத்து நான் பார்த்தது நெஞ்சத்தைப் பதை பதைக்க வைத்தது.

ஆட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்திருக்க வேண்டும்.

திடீரென ஒவ்வொரு விளையாட்டு வீரனும் கையில் இருந்த விசிறியை எறிந்து விட்டு இரண்டு கூரிய சிறு அம்புகளைக் கொண்டு வந்தனர். டார்ட் போர்டு என்னும் அம்புகளை விட்டெறிந்து வட்டமான அட்டையில் குத்தும் விளையாட்டினைப் பார்த்திருப்பீர்கள். அதுமாதிரியான அலங்கரிக்கப்பட்ட அம்பு இது. கூரிய முனை, இடையில் மரத்தாலும், துணியாலும் ஆன அலங்காரம். கையால் இறுக்கிப் பிடிக்க ஏதுவான பிடி.

குதிரைக்காரன் காளையை உசுப்பி விட, ஒரு வீரன் காளையின் முன் சென்று என்னைக் கொம்பால் குத்து என்பது போல் நிற்க, காளை அவனை நோக்கி ஓடி வந்து, தன் கொம்பால் அவனைக் கொய்யக் குனியும்போது தன் இரு கைகளிலும் பற்றியுள்ள அம்புகளை அதன் திமில் இறங்கும் முதுகில் லாவகமாகக் குத்திவிட்டு காளை நிமிரும் முன் அந்த வீரன் நகர்ந்து கொள்கிறான். அரங்கமே ஆர்ப்பரிக்கிறது. காளை வலியில் துடித்தவண்ணம் முன்னே ஓடி, தன் எதிரி அங்கு இல்லாமையால் வேகம் குறைத்து நிற்கிறது. முதுகில் குத்திட்ட அம்புகள் அப்படியே முதுகிலேயே மாட்டிக்கொண்டு நிற்கின்றன. காளை தன் உடலை அப்படியே அசைத்து அந்த அம்புகளை உதிர்க்கப் பார்க்கிறது, முடியவில்லை. இதற்குள் இரண்டாமவன் அதன் முன்னே நிற்கிறான். அவனைத் கொந்த வரும்போது அவனும் தன் திறமையெல்லாம் காண்பித்து மற்றும் இரண்டு அம்புகளை முதுகில் குத்துகிறான். மீண்டும் வலி, வழியும் குருதி. ஆறாவது வீரன் தன் அம்புகளைக் குத்தி முடிக்கும் போது குருதி ஆறாகவே உடலைச் சுற்றி வழியத் தொடங்குகிறது.

களைப்பால் மூக்கில் இருந்து நுரை பொங்குகிறது காளைக்கு.

ஆறு வீரர்களுக்கும் முழு மதிப்பெண்கள்.

இந்த நேரத்தில் மூன்றாவது கட்டம் ஆரம்பமாயிருக்க வேண்டும். இப்பொழுது கையில் ஒரு கூரிய வாளையேந்திக் கொண்டு ஒரு வீரன் உள்ளே நுழைந்தான். பக்கத்தில் என் நான்கு வயது மகளும் பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கு மேல் இந்தக் காட்சியை என்னால் காணமுடியாது - என்னை விட என் மகளைப் பாதித்து விடக் கூடாது என்று சானலை மாற்றி விட்டேன்.

இதைக் காண்பித்தது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் TVE.

ரக்பி உலகக்கோப்பை விளையாட ஆஸ்திரேலியா போயிருக்கும் ஆட்ட வீரர்கள் உடலைக் கட்டோ டு வைத்திருக்க கிராதார்ஜுனீயத்தில் சொல்லப்பட்டது போல புதர்களில் பன்றிகளை ஓடவிட்டு, குதிரையில் போய்த் துரத்தி ஈட்டியால் குத்தி விளையாடினராம்.

கேளிக்கைகள் எப்படியெல்லாம் நடக்கின்றன?

மாத்தியூ ஹெய்டன்

டெஸ்டு கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த சாதனையை ஆஸ்திரேலியாவின் மாத்தியூ ஹெய்டன் இப்பொழுது செய்திருக்கிறார். எதிரணி ஜிம்பாப்வேதான் என்றாலும், இந்த சாதனை அபாரமானது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரயன் லாரா அடித்திருந்த 375 ஐத் தாண்டி இப்பொழுது 376 ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்று 400 ஓட்டங்கள் எடுக்கும் முதல் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

பிற்சேர்க்கை: ஹெய்டன் 380 உடன் ஆட்டமிழந்தார். 400 இன்னும் தொடமுடியா தூரத்திலேயே உள்ளது.

Thursday, October 09, 2003

ராஹுல் திராவிடின் இரட்டை சதம்

சொன்ன மாதிரியே அடித்து விட்டார்.

அடித்ததில் 77 ஓட்டங்கள் கவர் திசையில் வந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் மற்ற திசைகளிலும் அதிகமாக அடித்தார். எப்பொழுதும் செய்யாத, இறங்கி வந்து மேல் நோக்கி அடிக்கும் ஷாட் கூட இன்று அடித்தார், வெட்டோரியின் பந்தில். கொஞ்சம் புல் ஷாட்கள், ஃபைன்லெக் திசையில் ஒத்தி அடிக்கும் கிளான்ஸ் ஷாட், தர்ட்மேன் திசையில் அடிக்கும் ஸ்டியர் ஷாட், ஆன் டிரைவ், ஆஃப் டிரைவ் என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை அடிகளும் உண்டு.

இது மிக முக்கியமானதொரு இன்னிங்ஸ்.

கிரிக்கெட் ஆரம்பம்

நேற்று முதல் டெஸ்டு போட்டி இந்தியாவுக்கும் நியூஜீலாந்துக்கும் இடையே ஆரம்பம். அலுவலகத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தாலும், என் வேலை அதிகமாக இருந்ததால் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை.

தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் ராஹுல் திராவிடும், வெங்கட சாயி லக்ஷ்மனும் பிரமாதமாக ஆடினர். திராவிட் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 153 ஆட்டங்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். இரட்டை சதம் அடிக்க வாழ்த்துவோம்.

ராஹுல் திராவிடின் ஆட்டம் மிகவும் தேர்ச்சியானது. பொறுமை, நிதானம் ஒன்றுசேர்ந்து, எதைத் தடுத்தாட வேண்டும், எதை அடித்தாட வேண்டும், எதை விடுத்தாட வேண்டும் என்று சரியாக அளந்து, நிர்ணயித்து ஆடுபவர். பந்து அளவுக்குக் குறைந்து வீசப்படும் போது, பின்னங்காலில் சென்று அந்தப் பந்தைக் கவர் திசையில் அழகாக வெட்டி ஆடினார். அளவு கூடுதலாக வீசப்பட்ட போது முன்னங்காலில் சென்று அதே கவர் திசையில் செலுத்தி ஆடினார். நேற்றைய 110 ஓட்டங்களில் பாதிக்கு மேல் கவர் திசையிலேயே பெற்றார். இத்தனைக்கும் ஸ்டீபன் ஃபிளமிங்க் கவர் திசையில் 3 பேர்களைக் காவலுக்கு நியமித்திருந்தார். இந்த இன்னிங்க்ஸ் நிறைவு பெற்ற பின், திராவிடின் wagon wheel (எங்கெங்கு எவ்வளவு ஓட்டங்கள் எடுத்தார் என்பதனை) இங்கு கொடுக்கிறேன்.

Tuesday, October 07, 2003

புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்

அவ்வப்போது விளம்பரத் துறை சார்ந்தவர்கள் தங்களுக்கே தெரியாமல் ஒரு பூதத்தை புட்டியிலிருந்து வெளியே விடுவிப்பார்கள். அதனை மீண்டும் உள்ளே புக வைக்க முடியாது.

ஃப்ரூட்டி என்னும் மாம்பழ பானத்தை மறு-விற்பனைச் செலுத்தலுக்காக பார்லே கம்பெனிக் காரர்கள் எவரஸ்டு என்னும் விளம்பர நிறுவனத்தை அணுகினர். எவரஸ்டு சிருஷ்டிகார்த்தாக்கள் திகேன் வர்மா என்னும் பாத்திரத்தை உருவாக்கினர். ஃப்ரூட்டி என்று வெளியே தெரியாமலேயே, திகேன் வர்மாவைப் பற்றிய விஷயங்கள் வெளியே வர ஆரம்பித்தன.

திகேன் வர்மா யார், திகேன் வர்மா என்ன செய்யப் போகிறார் என்றெல்லாம் கேள்விகள் தெருவுக்குத் தெரு உள்ள விளம்பரப் பலகைகளில் தோன்ற ஆரம்பித்தன. அங்கிருந்து நீட்சி பெற்று செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும் வர ஆரம்பித்தன. திகேன் வர்மாவைப் பற்றி பல துணுக்குகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன. நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர். இப்படியாக இந்த viral marketing பரவி இந்தியா முழுதும் வியாபித்தது.

கடைசியாக திகேன் வர்மா 'ஃப்ரூட்டி' குடிப்பார், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றமாதிரி சப்பென்று முடித்து விட்டனர்.

இப்பொழுது திகேன் வர்மா மறக்கப்பட்டு விட்டார். ஃப்ரூட்டியும் அதிகமாக ஒன்றும் சாதித்து விடவில்லை.

ஆனால் புள்ளி ராஜா தோன்றி விட்டார். PSI என்னும் வாஷிங்டன் நிறுவனத்தின் இந்தியக் கிளையும் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு நிறுவனமும் ஒன்றுசேர்ந்து உருவாக்கியுள்ள இந்த விளம்பரம் 18-40 வயதிலான, பொருளாதார அடிப்படையில் கீழ்மட்டத்தில் உள்ள ஆண்களைக் குறிவைக்கிறது. உடலுறவு கொள்ளும்போது ஆணுறையை அவசியமாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்த வரும் இந்த விளம்பரங்கள் தமிழகத்தில் இப்பொழுது அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.

மேலும் விவரம் அறிய இந்த சுட்டியைப் பார்க்கவும்.

அணிதல் என்னும் சொல்லைப் பற்றி இராம.கி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இங்கே.

ஆணுறையை 'அணிவதா', 'மாட்டிக் கொள்வதா', 'போடுவதா'? ஆங்கிலத்தில் 'wear' என்னும் சொல்தான் பயன்படுத்தப் படுகிறது. தமிழில் ஆடை உடுத்தப்படும், அணிகலன்கள் அணியப்படும், போர்வை போர்த்தப்படும், இப்படி பல சொற்கள் இருப்பதால் புதிதாக ஒன்று (ஆணுறை) வரும்போது எது சரியான சொல் என்ற குழப்பம் வருவது இயற்கைதான். விவாதம் முடியும் வரை பொறுத்திருப்போம்.

Monday, October 06, 2003

ஜார்ஜ் புஷ்ஷின் கவிதை

அனைத்து செய்தித்தாள்களிலும், இணைய தளங்களிலும் மிகவும் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய செய்தி:

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் மிகவும் பெருமையுடன் தன் கணவர் ஒரு அரசியல்வாதி மட்டும் அல்ல, ஒரு கவிஞரும் கூட என்று சொல்லி ஜார்ஜ் புஷ் "இயற்றிய" ஒரு கவிதையையும் எடுத்துக்காட்டியுள்ளாராம். அந்த கவிப்பேரரசு "இயற்றிய" கவிதைதான் என்ன?

Roses are red, Violets are blue
Oh my lump in the bed, How I have missed you!

இந்தக் கவிதையில் ஜார்ஜ் தன் மனைவியை "lump in the bed" என்று பெருமையுடன் வர்ணிக்கிறார். இவர் இதற்கு முன்னரும், பலமுறை, லாராவை "the lump in the bed next to me" என்று பொதுவிடங்களில் சொல்லியிருக்கிறாராம்.

"lump in the bed next to me" என்பதை "என் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் சதைப் பிண்டம்" என்று தமிழாக்கலாமோ?

இந்தக் கவிதையைப் பார்க்கும்போது வாஜ்பாயி மற்றும் அப்துல் கலாமுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசே வழங்கலாம்!

ரஷ்யன் ரௌலெட்

டெரன் பிரௌன் தப்பி விட்டார். நேற்றைய சானல் 4 நிகழ்ச்சியில் ஒருவர் ஒரு குண்டை மட்டும் வைத்து துப்பாக்கி ஒன்றைக் கொடுக்க சரியாக ஐந்தாவது அறையில்தான் அந்த குண்டு உள்ளது என்பதைக் கணித்து, நான்கு முறை சுட்டபின், ஐந்தாவதற்கு முன் நிறுத்தி விட்டாராம். ஆனால் பிரிட்டனின் காவல்துறை அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சிக்குப் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Sunday, October 05, 2003

பைத்தியக்காரக் கேளிக்கைகள்

இன்று இரவு பிரிட்டன் நேரம் 9.00 மணிக்கு டெரன் பிரௌன் என்னும் மாயத்தோற்ற நிபுணர் தன் தலையில் துப்பாக்கியை வைத்து சுட, ஆனால் அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பார்.

ரஷ்யன் ரௌலெட் என்னும் இந்த விபரீத விளையாட்டு பிரிட்டனின் சானல் 4 என்னும் தொலைகாட்சிச் சானலில் ஒளிபரப்பப்படுமாம். ஏதேனும் தவறாகப் போய்விட்டால் என்ன செய்வது என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பப் போவதில்லையாம்.

இந்த விபரீத விளையாட்டில் ஒரு பொதுஜனம் ஆறு ரவைகள் வைக்கக்கூடிய துப்பாக்கியில் ஒரே ஒரு ரவையை வைத்து அந்தத் துப்பாக்கியை டெரனிடம் தருவார். அதை அப்படியே பரிசோதிக்காமல் வாங்கி தன் தலையில் வைத்து உண்மையான குண்டு வரும் வரை டெரன் சுட்டுக் கொண்டே இருப்பாராம். ஆனால் குண்டு வரும் போது நிறுத்தி விடுவாராம்.

பைத்தியக்காரர்கள்.

===

இம்மாதிரியான மாயத் தோற்றக்காரர் ராய் ஹார்ன் என்பவர் புலிகளை மேடையில் கட்டுப்படுத்தி பல வருடங்களாக நிகழ்ச்சி ஒன்று நடத்தி வந்திருந்தார். இவரை வெள்ளி அன்று கடுப்பான ஒரு சைபீரிய வெள்ளைப் புலி தாக்கி, இப்பொழுது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

நான் இரு வாரங்கள் முன்பு தாய்லாந்து போயிருந்த போது திறந்த முதலை வாயில் தலையை விட்டார் ஒரு மேஜிக் ஆசாமி. இம்மாதிரியான விளையாட்டுகள் தேவைதானா? இவைதான் கேளிக்கைகளா? இதற்கு பதில் 'பாய்ஸ்' சினிமா போய் பார்த்துவிட்டு வரலாமே?

===

இதெல்லாம் ஒன்றுமே இல்லை. Hell on Earth என்னும் ஒரு பைத்தியக்கார இசைக்குழு அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையிலேயே ஒரு ஆசாமி தற்கொலை செய்து கொள்வதை நிறைவேற்றப் போவதாகச் சொல்ல, அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இருக்கவே இருக்கிறது இண்டெர்நெட் என்று இணையத்தில் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்தனர் பைத்தியக்காரர்கள். அவர்களது இணைய தளம் இப்பொழுது ஹாக்கர்களின் தாக்குதலுக்கு ஆளானதால் இந்தத் தற்கொலை நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நான்கு குரங்குகள்

காந்திக்குப் பிடித்தமான மூன்று குரங்குகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முதலாவது கண்களையும், இரண்டாவது வாயையும், மூன்றாவது காதுகளையும் பொத்திக் கொண்டிருக்கும். தாய்லாந்து கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளில் நான்கு குரங்குகள் உள்ளன. நல்ல அறிவுரைதான்!


Saturday, October 04, 2003

மடலும் மடல் சார்ந்த இடமும்

"கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் போல
மடலும் மடல் சார்ந்த இடமும் என்னுடையது
இதன் பெயர் மடலிலக்கியம்"

என்று ஜெயஸ்ரீ எழுதியிருந்தார்.

தமிழில் மடல் என்னும் சிற்றிலக்கியம் (உலா, கலம்பகம், தாண்டகம், பிள்ளைத் தமிழ் என்பன போன்று) ஏற்கனவே உள்ளது - ஆனால் அது கடிதம் சார்ந்தது அல்ல.

திருமங்கை ஆழ்வார் எழுதிய இரண்டு பிரபந்தங்கள் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்பன.

ஒரு ஆண், ஒரு பெண் மீது உள்ள காதலை பலமுறை வெளிப்படுத்தியும், அந்தப் பெண் அவனை ஏறிட்டும் நோக்காததால், அந்த ஆண் காதலை வெளிப்படையாகச் சொல்லுமாறு உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, கிழிந்த ஆடையை உடுத்தி, பனைக்கருக்கு ஒன்றை குதிரை வடிவத்தில் செய்து, அதன் மீது ஏறிக்கொண்டு தன் நண்பர்கள் மூலம் அதைத் தெருவில் இழுத்து வரச் செய்து, தெருவில் செல்கையில் அந்தப் பெண்ணை, ஊரார் காதுபட சத்தமாக ஏசி, அவள் மானத்தை வாங்கி, அதைப் பொறுக்காமலாவது அப்பெண் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதிக்கலாம் என்ற கொள்கையோடு நடந்துகொள்வதுதான் மடலேறுதல் அல்லது மடலூர்தல். இதைப் பற்றிப் பேசுவதுதான் மடல் இலக்கியங்கள்.

இது சங்க காலத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
(எத்தனை மருங்கினும் மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறியின்மை யான - தொல்காப்பியம்
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில் - திருக்குறள்)

ஆனால் திருமங்கை ஆழ்வார் அதனை ஏற்காது

அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவ துண்டு - அதனையாம் தெளியோம்
மன்னு வடநெறியே வேண்டினோம்

என்று பெரிய திருமடலில் பாடுகிறார்.

மடல் பற்றி 1996இல் நானும் மற்றவர்களும் எழுதிய ஒரு சில விளக்கங்கள் (ஆங்கிலத்தில்) இந்த இடத்தில் கிடைக்கின்றன.

பிரிட்டன் விவகாரங்கள்

அது வேற நாடுங்க. நம்ம கவலைகள் வேற, அவங்க கவலைகள் வேற. அப்பப்ப இரண்டு மாசத்துக்கு ஒரு தடவனாச்சும் நான் லண்டன் போக வேண்டி வரும். அப்பல்லாம் பீபீசீ தொலைக்காட்சி பாக்கறது, அந்தூரு பேப்பர் படிக்கறது. நெறய வெசயமெல்லாம் வித்தியாசமா இருக்கும். நம்மூர்ல சாப்பாட்டுக் கஷ்டம், பெட்ரோல் வெலயேத்தம், எப்பவும் நடக்குற ஊழல், அங்க இங்க குண்டு வெடிச்சுது, ஒரு ரயில் தொபக்குன்னு தண்டவாளத்த வுட்டு வெளில, ஜெயலலிதாவுக்கு இன்னொரு டாக்டர் பட்டம், புதுப் படம் ரிலீசானதுல எதுனாச்சும் ரகளை, அம்மா புச்சா எல்லோரும் கால்ல பச்சைக் கலர் செருப்புதான் போடணும்னு சட்டம் கொண்டாந்துருக்காங்க, காதல் தோல்வி, தற்கொலைகள் அப்புடின்னு நம்ம ஒலகம்.

ஆனா அங்க வேறங்க. பாத்ததுல, வித்தியாசமாப் பட்ட ரெண்டு சமாச்சாரத்த ஒங்ககிட்ட சொல்லிப் போடலாமினு தோணுச்சி.

1. நம்மூர்ல பசு மாட்டுக்கெல்லாம் செனையேத்தறது பத்தி தெரியுமில்லீங்களா? இதுல காள மாட்டோ ட விந்த எடுத்து குளிர்பதனத்துல வச்சிருப்பாங்க. வேணுங்கறப்ப பசு மாட்டக் கூட்டிவந்து அதுக்குள்ளாற வுட்டுருவாங்க.

பிரிட்டன்ல இது மாறித்தான் மனுசனுங்க (எல்லாருக்கும் இல்ல, வேணுங்குறவங்களுக்கு) செஞ்சுக்குறாங்கலாம். ஆம்பளங்கல்லாம் வயசான காலத்துல நமக்கு விந்து அதிகமாக இல்லாம போயிடலாம்னு தன்னோடத எடுத்து பத்திரமா வச்சுக்கலாமாம். ஆனா பொம்பளைங்களால அந்த மாதிரி அவங்களோட முட்டைய சேகரிச்சு பிற்காலத்துக்குன்னு வச்சிட முடியாது. (வெங்கட் அண்ணாச்சி சொன்னாமாறி கலை வெளிப்பாடு வேணா செய்யலாம், ஆனா செத்துப்போயிரும், ஒண்ணுத்துக்கும் பிரயோசனமாயிருக்காது). ஆனா அந்த முட்டைய கருத்தரிக்க வச்சி, அத கொஞ்ச மாசத்துக்கோ, வருசத்துக்கோ பத்திரமா வச்சிக்கலாம். அப்புறமா அந்த பொம்பளக்கி எப்ப தோணுதோ அப்ப எடுத்து கருப்பைக்குள்ள போட்டுக்கலாம். இதெல்லாமே ரிஸ்குதானுங்கோ. முக்காவாசி தபா கரு செதஞ்சி போயிடும். ஒளுங்கா சாமி வுட்ட வளில செய்யக்கூடாதா?

சரி... இப்ப என்னாத்துக்கு இதப்பத்தி பேச்சு அப்புடிங்கிறீங்களா? இதல்லாம் வகைப்படுத்தறாமாறி அந்தூர்ல சட்டம்லாம் கூட இருக்குதாம். ஒரு ஆம்பளயும் பொம்பளயும் விந்தையும், முட்டையையும் சேத்து கருத்தரிக்க வச்சி, அத பத்திரப்படுத்தி வச்சிருக்காங்க. அப்புறம் அந்த பொம்பள அத எடுத்து வவுத்துக்குள்ளாற வுடுறதுக்குள்ள அவுங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. அப்படி பிரிஞ்சுட்டா, அந்த ஆம்பளயோட அனுமதி இல்லாம அந்தப் பொம்பள அந்த கருத்தரிச்ச முட்டைய வவுத்துக்குள்ள போட்டுக்கக் கூடாதாம். இதான் சட்டமாம். ரெண்டு பொம்பளங்க இத எதுத்து கோர்ட்டுக்கு போயிருக்காங்க. ஏன்னா, அவங்களுக்கு இதுதான் ஆயிருக்கு. அவங்க முன்னாடி எந்த ஆளுங்ககிட்ட விந்த எடுத்துக்கிட்டு கருத்தரிச்சாங்களோ, அந்த ஆளுங்க பிரிஞ்சுபோயிட்டு, ரொம்ப வன்மத்தோட என்னோட விந்து ஒனக்கு ஒபயோகமா இருக்கக்கூடாது (அட சும்மா வீணாப்போற இதுக்கா இந்தக் கொடும?) அப்புடின்னு சொல்லிப்புட்டாங்களாம். கோர்ட்டு இப்ப இருக்கற சட்டப்படி ஆம்பளங்க உரிமயில்லாம பொம்பளங்க ஒன்னும் செய்ய முடியாது, சட்டத்த மாத்தற உரிம கோர்ட்டுக்குக் கெடயாது, அத பாராளுமன்றந்தான் செய்யணும் அப்புடின்னுப்புட்டாங்க.

2. பள்ளிக்கூடம் போகாம எம்புட்டுதபா நாமல்லாம் வூட்டுல கலியாணம், கருமாதி, திருவிழா அப்புடின்னு ஊரு சுத்தியிருக்கோம்? இப்ப பிரிட்டன்ல அரசாங்கம் இந்தாமாறி அப்பா, அம்மாவோட பசங்க ஸ்கூல் நடக்கற சமயம் கடை கண்ணிக்கு போயிட்டு சுத்திக்கிட்டிருந்தாங்கன்னா, இல்ல வீட்டோ ட இருந்தாங்கன்னா ஒடனே போலீஸ் மூலமா அந்த பெற்றோருங்களுக்கு 100 பவுண்டு ஃபைன் போடச் சொல்லியிருக்காங்கலாம்! அதாவது பள்ளிக்கூடத்துல சொல்லி பெர்மிஷன் வாங்காதவுங்களுக்குதான் இந்த ஃபைன். இருந்தாலும் பைத்தாரத்தனமாதான் இருக்கு.

வாழ்க பிரிட்டன் அரசு. நம்மூர்ல அரசாங்கத்துல இருக்கற கேனப்பசங்கள வுட அந்தூர்லயும் இன்னும் அதிகமா இருக்கானுவன்னு இதுலேர்ந்து தெரிஞ்சுக்கலாம்.