Thursday, March 31, 2016

ஜெயமோகனின் காண்டீபம் - செம்பதிப்பு முன்பதிவு

ஜெயமோகனின் மகாபாரதத் தொடர் நாவல்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்ப் படைப்புலகில் இது மாபெரும் சாதனை. இதுவரையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திர நீலம் என்று ஏழு தொகுதிகள் வெளியாகியுள்ளன.

தற்போது எட்டாவது தொகுதியான ‘காண்டீபம்’ செம்பதிப்புக்கான முற்பதிவு தொடங்கியிருக்கிறது.
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான். 
மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து, கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல். 
வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது. 
இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை.
இதன் விலை ரூ. 900/- ஏப்ரல் 20-ம் தேதி வரையில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஆசிரியர் கையெழுத்துடன் மே முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். முன்பதிவு செய்ய நீங்கள் செல்லவேண்டிய இடம் இது.

வெண்முரசு தொடர்வரிசையில் உள்ள முந்தைய புத்தகங்களை வாங்க, கீழ்க்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துங்கள். இவை எல்லாமே பேப்பர்பேக் - சாதா அட்டைப் பதிப்புகள். இவை அனைத்தும் கெட்டி அட்டை, கிளாசிக் பதிப்புகளாகவும் கிடைக்கின்றன. ஏழில் சிலவற்றில் ஒருவேளை ஸ்டாக் இல்லாமல் போகலாம். அப்படியானாலும் மே முதல் வாரத்துக்குள் கிடைக்கும். சாதா அட்டைப் பதிப்புகள் எப்போதும் கிடைக்கும்.

இந்திர நீலம்
வெண்முகில் நகரம்
பிரயாகை
நீலம்
வண்ணக்கடல்
மழைப்பாடல்
முதற்கனல்

இவைதவிர, இவற்றிலிருந்து பிரித்தெடுத்து, சிறு நூலாக ஐந்து புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். விலை குறைவான, கையடக்கப் பதிப்புகள் இவை. பரசுராமன், திருதராஷ்டிரன், அம்பை, கர்ணன், துரோணர் ஆகியோரின் கதைகள் முறையே ஆயிரம் கைகள், இருள்விழி, எரிமலர், செம்மணிக் கவசம், புல்லின் தழல் என்னும் புத்தகங்களாக வெளியாகியுள்ளன.

ஆயிரம் கைகள்
இருள்விழி
எரிமலர்
செம்மணிக்கவசம்
புல்லின் தழல்

Tuesday, March 22, 2016

பேலியோ டயட் புத்தக விற்பனை

ஒவ்வொரு பதிப்பாளரும் ஒரு கனவுப் புத்தகத்தை எதிர்பார்த்தபடி இருக்கிறார். அந்தப் புத்தகம் பல பத்தாயிரம் பிரதிகள் விற்கவேண்டும் என்பது அவரது பெருவிருப்பம். அதுவும் அச்சாகி அடுத்த இரண்டு நாள்களில் ஆயிரம் பிரதி விற்பனை ஆகவேண்டும்.

அப்படி எங்களுக்குக் கிடைத்திருக்கும் கனவுப் புத்தகம்தான் நியாண்டர் செல்வன் எழுதியுள்ள “பேலியோ டயட்”.

நியாண்டர் செல்வன், பேலியோ டயட் எனப்படும் ஸ்டார்ச் இல்லாத, கொழுப்பு முதன்மையான உணவுமுறையை இணையத்தில் தமிழில் பிரபலப்படுத்தியவர். ஆரோக்கியம் & நல்வாழ்வு என்னும் ஃபேஸ்புக் குழுமத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருப்பவர். இந்தக் குழுமத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கொழுப்பு உணவுமுறை குறித்து தினமணி.காம் இணைய இதழில் நியாண்டர் செல்வன் தொடர்ந்து எழுதிவந்ததன் தொகுத்து மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் “பேலியோ டயட்” கிழக்கு வெளியீடு.

இந்தப் புத்தகத்தை ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம் செய்து எத்தனை பேர் வாங்குவார்கள் என்று பார்க்க முடிவு செய்தோம். புத்தகம் வரப்போகிறது என்ற தகவல் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழும உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஞாயிறு காலை இந்திய நேரப்படி தகவல் வெளியானதும், முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 400 புத்தகங்களுக்குமேல் இணையம் வழியாக ஆர்டர் வந்துவிட்டது. முதல் இரண்டு நாள்களில் 1,000 புத்தகங்களுக்கு ஆர்டர் வந்துவிட்டது. இன்றுமுதல் புத்தகங்கள் ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அடுத்தவாரம் முதற்கொண்டுதான் புத்தகம் தமிழகத்தின் கடைகளுக்கே செல்லப்போகிறது. ஆஃப்லைன் வாசகர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றியோ அல்லது இந்த உணவுமுறை பற்றியோ கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

பொதுவாக இணையக் குழுக்கள் புத்தகம் விற்க உதவா என்று பலர் பேசி நாம் கேட்டிருக்கிறோம். இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் பேசுவதற்குத்தான் லாயக்கு; புத்தகம் வாங்குபவர்கள் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் வேறு எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் கன்வென்ஷனல் விஸ்டம். ஆனால் “ஆரோக்கியம் & நல்வாழ்வு” போன்ற இணையக் குழுக்கள் மிகுந்த ஃபோகஸ் கொண்டவை. பேலியோ உணவுமுறையைப் பயன்படுத்திப் பயனடைந்தவர்கள் பலர் அங்கிருக்கிறார்கள். இந்த உணவுமுறைமூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா, ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியுமா, நீரிழிவு நோயை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்று விரும்பும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒரு மதம்போல இந்த உணவுமுறை “எவாஞ்சலைஸ்” செய்யப்படுகிறது. அதனால்தான் இந்த அளவுக்கு விற்பனையில் வெற்றிகண்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் விற்பனை வரலாறு படைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149680.html (ரூ. 150 மதிப்புள்ள இந்தப் புத்தகம் மார்ச் 26 வரை ரூ. 100-க்குக் கிடைக்கும்.) அடுத்த வாரத்துக்குள் டிஜிட்டல் வடிவில் டெய்லிஹண்ட், கூகிள் புக்ஸ் போன்ற இடங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும். ஃபோன்மூலம் வாங்க விரும்புபவர்கள் 94459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.

Thursday, March 17, 2016

தனிமனித சுதந்தரம் என்னும் உரைகல்

தற்போது நாட்டில் பேசப்பட்டுவரும் பல்வேறு பிரச்னைகளில் என்ன நிலைப்பாடு எடுப்பது  என்பதற்கு நான் பயன்படுத்தும் உரைகல், ‘தனிமனித சுதந்திரம்’ என்பது. இதற்கு அடிப்படையாக இருப்பது தனிமனிதவாதம் (Individualism) என்ற கோட்பாடும் லிபரலிசம் என்ற கோட்பாடும்.

நாம் அனைவரும் அடிப்படையில் தனி மனிதர்கள். பிற குழுக்களின் உறுப்பினர்களாக இருக்கும் அதே நேரத்தில், நம் தனித்துவம் என்பது இந்தக் குழுக்களால் எவ்விதத்திலும் நசுக்கப்பட்டுவிடக்கூடாது. நம் வாழ்க்கை என்பது நம் சுயத்தை உணர விழையும், நம் மீட்சியை நோக்கிச் செல்லும் நம்முடைய ஒரு தனிப்பட்ட பயணம்.

தனிமனிதவாதம் என்பது ஒரு கொள்கையாக ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டில்தான் வலுப்பெறத் தொடங்கியது. இதிலிருந்துதான் அரசனுடைய ஆட்சி என்ற கருத்து விலகி மக்களுடைய ஆட்சி என்ற கருத்து உருவானது. ‘நாம் யார்க்கும் குடி அல்லோம்’ என்பதுதான் இதன் அடிப்படை. நாம் யார்க்கும் கடன்படவில்லை, நம் முடிவுகளை நாமேதான் தீர்மானிக்கிறோம் என்னும் உறுதி இதன் அடிப்படை.

இந்திய அளவில் குடும்பம், சாதி, சமூகம், மதம், தேசம் போன்ற கட்டுமானங்கள் நம் தனித்துவ அடையாளத்தையும் நம் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பல்வேறு பக்கங்களுக்கு இழுத்துச்செல்ல முயற்சி செய்கின்றன. இந்த அமைப்புகளுக்குள் இருக்கும் அதே நேரம், இவை நம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காது இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் பெரும் சவாலே.

பிற நாடுகளில் குடும்பம், தேசம், மதம் போன்றவை வெவ்வேறு அளவுகளில் தனிமனிதர்மீது தாக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் இவற்றுடன் சாதி, சமூகம் இரண்டும் சேர்ந்துகொள்கிறது. சமூகம் என்பது இங்கே நம் சாதியைச் சேர்ந்த நம்முடைய நெருங்கிய உறவினர்களும் நம் சாதியைச் சேர்ந்த ஊர்க்காரர்களும் அடங்கிய ஒரு குழு.

இந்தியாவில் குடும்பமும் சாதி சமூகமும் மக்களுக்குப் பெரும் அரணாக விளங்குகின்றன. அதே நேரம் ஒரு பெரும் சிறைச்சாலையாகவும் விளங்குகின்றன. இந்த அமைப்புகளால் சில பயன்கள் கிடைக்கின்றன; ஆனால் சிலருக்கு இவை கடும் உளைச்சலையும் தருகின்றன. இதனால்தான் இந்தச் சிலர் இந்த அமைப்புகளிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேற விரும்புகிறார்கள். தனிநபருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்துக்கும் இடையேயான மோதலில் யார் பக்கம் நியாயம் என்ற கேள்வி வருமானால், நான் கண்ணை மூடிக்கொண்டு தனிநபர் பக்க நியாயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வேன். ஏனெனில் குடும்பம் முதற்கொண்டு தேசம் வரையிலான பிற அமைப்புகள் தனிநபர் என்பதற்குக் கீழ்ப்பட்ட நிலையில்தான் இருக்கவேண்டும்.

***

(1) இளவரசன்-திவ்யா, கௌசல்யா-சங்கர் காதலை, அவர்களுடைய திருமணத்தைத் தடுக்க அவர்களுடைய பெற்றோர்களுக்கே உரிமை இல்லை. இதுதான் தனிமனிதவாதமும் லிபரலிசமும் முன்வைக்கும் கருத்தாக்கம். பெற்றோருக்கே இடம் இல்லாதபோது சாதி, சமூகம் போன்றோருக்கு இங்கே சிறிதுகூட இடமில்லை. நாடகக் காதலா, ஏமாற்றா என்றெல்லாம் நாம் பேசவேண்டிய அவசியமே இல்லை. திவ்யாவோ, கௌசல்யாவோ, சங்கரோ, இளவரசனோ சுய நினைவுடன் இந்தச் செயலில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் நாளை அவர்கள் ஏமாற்றப்பட்டால் அது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்னை. அவர்களை அவர்களுடைய குடும்பங்கள் ஏற்காமல் போகலாம். ஆனால் கொடூரமான முறையில் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தற்கொலைக்குத் தூண்டி, வீடுகளை எரித்து, தெருவில் பட்டப்பகலில் வெட்டி வீழ்த்தி அராஜகம் புரிவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

இதுகுறித்த விவாதத்தில் ஈடுபடும் சிலர், ‘உன் பெண்ணை _________க்கு மணம் செய்து தருவாயா, தந்திருக்கிறாயா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். தனிநபர் சுதந்திரத்தை முன்வைக்கும்போது நாம் யாருக்கும் யாரையும் மணம் செய்துதருவதில்லை. அவரவர் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்கிறார்கள். அதை நாம் ஏற்றால் கூடி மகிழ்ந்து விழா கொண்டாடுவோம். ஏற்க மனம் இல்லை என்றால் விலகிப்போவோம். அவ்வளவுதான்.

இங்கே நாம் கவனிக்கவேண்டியது, எந்தத் தனி நபரையும் இன்னொருவர் கட்டுப்படுத்தக்கூடாது என்பதே. இங்கே வயது ஒரு பொருட்டல்ல. அதனால்தான் குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் நிலைநாட்ட முனைகிறோம். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் துன்புறுத்தக்கூடாது; உணவு கொடுக்காமல் தெருவில் ஓடவிடக்கூடாது. பிள்ளைகளைப் பெற்றால் அந்தப் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை எதையும் எதிர்பார்க்காமல் வளர்க்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அவ்வாறு செய்யமுடியாது என்றால் பிள்ளைகளைப் பெறாமல் இருக்கவேண்டும். பெற்று சோறு போட்ட காரணத்தினாலேயே யாரை மணம் முடிக்கவேண்டும், எந்தப் படிப்பு படிக்கவேண்டும், எந்த வேலையில் சேரவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளை வற்புறுத்த எந்தப் பெற்றோருக்கும் உரிமை இல்லை.

(2) அடிமை முறையை நாம் இதே உரைகல் கொண்டே எதிர்க்கிறோம். தனிநபர் ஒருவரது சுதந்திரத்தை நசுக்கி, அவரை அடிமையாக வைத்திருக்கும் எந்த முறையும் ஒவ்வாததே. தூக்கி எறியப்படவேண்டியதே.

(3) எந்த மதத்திலும் சேர, மாற, விலக எவருக்கும் உரிமை உண்டு. எந்த உணவையும் உண்ண எவருக்கும் உரிமை உண்டு. இவை மிக முக்கியமாண தனிநபர் சுதந்திரங்கள். ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றோ, இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ மதத்தில் சேரக்கூடாது என்றோ சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல ஒருவரை மதமாற்றம் செய்ய ஓர் அமைப்பை உருவாக்குவதையோ, அந்த அமைப்பின்மூலம் பெரும் மக்கள் திரளை மதமாற்றம் செய்ய முனைவதையோ யாரும் தடுக்கக்கூடாது.

ஆனால் இதற்கு எதிராக ஓர் அரசு சட்டங்களைக் கொண்டுவருகிறதே? உதாரணமாக நம் நாட்டின் பல மாநிலங்களில் மாட்டுக்கறி விற்கத் தடை இருக்கிறது. பல மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றியிருக்கிறார்கள், இயற்ற முனைகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி வருவதற்குமுன்னதாகவே இந்தச் சட்டங்கள் உள்ளன என்றாலும் இன்று பாஜகதான் இந்தச் சட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மிகவும் விரும்புகிறார்கள்.

அடிப்படையில் இந்தச் சட்டங்கள் யாவுமே மக்கள் விரோதச் சட்டங்கள்,. தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான சட்டங்கள். இம்மாதிரியான சட்டங்கள் உருவாவதைத் தடுக்கவேண்டியது தனிமனிதவாதத்தையும் லிபரலிசத்தையும் முன்வைக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்யவேண்டியது.

(4) இதே தனிமனிதவாதத்தின் அடிப்படையில்தான் அரசு தொழில்துறையில் ஈடுபடுவதை நான் எதிர்க்கிறேன். அரசு தொழில்துறையில் ஈடுபடும்போது ஏற்படும் சமமின்மை மோசமானது. இரு தொழில் நிறுவனங்களிடையே நிகழும் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் இடத்தில் இதே அமைப்பான அரசு உள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அரசு ஏகபோகம் என்பதையும் நாம் இதற்காகத்தான் எதிர்க்கவேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நான் ரயில்வே துறையில் ஈடுபட முடியாது. ஏனெனில் அரசு மட்டுமே இதனைச் செய்ய முடியும். இது தனிநபர் சுதந்தரவாதத்துக்கு எதிரானது. எனவேதான் அரசு ரயில்வே துறையிலிருந்து விலகி வழிவிட்டு, தனிநபர்கள் அத்துறையில் ஈடுபட வகை செய்யவேண்டும். தனியார்மயம் ஒன்று மட்டுமே தனிமனித சுதந்திரத்தை முழுமையாக உறுதிசெய்யும்.

(5) தேசியவாதம் என்பது அதீதமாகப் போய்விடக்கூடாது என்பதையும் இந்தத் தனிமனிதவாதமே நிலைநாட்டுகிறது. இப்போது என்னிடம் ஒருவர் வந்து “பாரத் மாதா கீ ஜெய்” என்று சொல் என்று சொன்னால் ‘போடா ம__!” என்றுதான் சொல்வேன். ‘நீ யார் என்னை வற்புறுத்துவதற்கு’ என்பதுதான் என் பதில். ஒவைசியோ வாரிஸ் பட்டானோ ‘பாரத் மாதா கீ ஜெய்’ அல்லது ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்லவேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. அதீத தேசியவாதிகள்  அடுத்தவர் வாழ்க்கையில் தேவையின்றித் தங்கள் மூக்கை நுழைக்கிறார்கள். நான் எப்போது எழுந்து நிற்கவேண்டும், எப்போது உட்காரவேண்டும், என்ன சொல்லவேண்டும், என்ன செய்யவேண்டும், என்ன சாப்பிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மீது கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இது முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

***

அரசு என்ற அமைப்பு முக்கியமானது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, நீதியை நிலைநாட்ட, பொது வளங்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க, வறியவர்களைக் காக்க, எதிரிகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற என்று ஒரு சமூகம் முன்வந்து அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஓர் அரசை உருவாக்குகிறது. அந்த அரசு மக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல; மக்களிடையே ஏற்படும் மோதல்களை சமரசமான வகையில் தீர்த்துவைப்பதற்காகத்தான் இருக்கிறது. அரசு என்பது மக்களுக்கு மேலானதாக எக்காலத்திலும் ஆகக்கூடாது. தனிமனித சுதந்திரத்தில் கைவைப்பதாக அது எக்காலத்திலும் இருக்கக்கூடாது.

ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள அரசமைப்புகளும் அவற்றின் அங்கங்களும் சிறிது சிறிதாகத் தங்கள் அதிகாரத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். கம்யூனிச அரசுகள் இதில் முழு மோசம். அவை தனிமனித சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை மதிப்பதே இல்லை. ராணுவ பலத்தைக்கொண்டு நடத்தப்படும் சர்வாதிகார ஆட்சிகள், அரசர்கள் அல்லது அமீர்கள் தலைமையிலான ஆட்சிகள் போன்றவையும் இதே மாதிரியான ஆபத்தைக்கொண்டவை. எனவேதான் இவை தூக்கி எறியப்படவேண்டும். சிறிது சிறிதாக இது நடந்துகொண்டிருக்கிறது.

மக்களாட்சியில் ஓர் அரசு அதிகாரத்தைத் தன்னகத்தே குவிக்கும் வேலையில் இறங்கினால் அதனைத் தடுத்து நிறுத்தவேண்டியது மக்களின் கடமை.

***

சாதிக்கு எதிராக, மதத்துக்கு எதிராகப் பேசுவோர் இந்த அமைப்புகளைத் தகர்க்கவேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். என் நோக்கம் இஃதல்ல. இந்த சாதி, மத அமைப்புகள் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இவற்றை அழிக்கும் போராட்டத்தில் நேர விரயம் செய்ய நான் விரும்பவில்லை. இந்த அமைப்புகள் தனி மனித சுதந்திரத்தின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதைத் தடுப்பதுதான் என் நோக்கம். அகமணமுறை என்னும் கட்டுப்பாடு, தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே அது போகவேண்டும். ஆனால் குறிப்பிட்ட பண்டிகையைக் கொண்டாடுவது, குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விரதம் இருப்பது, சூரியனைப் பார்ப்பது, சந்திரனைப் பார்ப்பது என்று எதைவேண்டுமானாலும் நீங்கள் செய்துகொள்ளுங்கள். சொல்லப்போனால் அதைச் செய்யாதே என்று நான் சொல்ல முடியாது. ஏனெனில் அப்படி நான் சொல்வது உங்கள் தனிமனித உரிமையைத் தகர்க்கக்கூடியது.

இதேபோல்தான் மூடநம்பிக்கை எனப்படும் பழக்கவழக்கங்கள். நரபலி - கட்டாயம் தடுக்கப்படவேண்டும். குழந்தைகளை வற்புறுத்தி நெருப்புமீது ஓடவைப்பது - தடுக்கப்படவேண்டும். அதேபோல்தான் வற்புறுத்தி ஒருவரை அலகு குத்திக்கொள்ளச் சொல்வதும் காவடி தூக்கச் சொல்வதும். ஆனால் நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், நீங்கள் விரும்பி அலகு குத்திக்கொண்டால், காவடி தூக்கினால் அல்லது தீமிதித்தால் அதனால் எனக்குப் பிரச்னை இல்லை. அது உங்கள் தனிமனித சுதந்திரம்.

மயானக்கொள்ளையில் ஆட்டைப் பச்சையாகக் கடித்து, குடலை மாலையாக அணிந்து, ரத்தம் குடித்தால் அல்லது ஏறுதழுவுதல் என்று மாட்டை ஓடவைத்து அதன்மீது நூறு பேர் பாய்ந்து விழுந்தால் என்ன செய்யலாம்? இவை சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவைகுறித்து நாம் விவாதிக்கலாம். மனிதர்களுடைய சுதந்திரத்துக்கு இணையாக மிருகங்களுக்கு எம்மாதிரியான சுதந்திரம் தரப்படவேண்டும்? இறைச்சிக்காக எவற்றை வளர்க்கலாம், கூடாது? வனவிலங்குகள் என்ற பட்டியலில் எவை வரலாம், கூடாது? சிங்கங்களை தனியார் காடுகளில் வளர்த்து அவற்றை வேட்டையாடும் உரிமத்தைத் தனியாருக்குத் தரலாமா? இவையெல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவை ஒரு சமூகத்தில் விவாதத்துக்கு உரியவை. கூடி முடிவெடுத்து ஒரு திசையை நோக்கிச் செல்லவேண்டும்.

***

நாட்டுக்கு எதிரான செயல், நாட்டைப் பிளவுபடுத்தும் செயல், பேச்சு ஆகியவற்றை எப்படி எடுத்துக்கொள்வது? தனிமனிதர்களுக்கு இதற்கான சுதந்திரம் உள்ளதா? கனையா குமார், உமர் காலித் ஆகியோர் பற்றிய கருத்து என்ன?

ஒருவருடைய சுதந்திரம் என்பது பிறரது சுதந்திரத்தைப் பறிக்காதவரைதான். பிற மனித உயிர்களுக்கு ஆபத்து வரும் என்றால் அரசு இயந்திரம் தலையிடவேண்டியிருக்கும். அவ்வகையில் மாவோயிஸ்ட் இயக்கங்கள் தடை செய்யப்படவேண்டியவை, அவ்வியக்கங்களின் போராளிகள், முடிந்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள். ஆனால் பிரிவினையைப் பேசுவது, காஷ்மிர் அல்லது தமிழ்நாடு தனியாகப் போகவேண்டும் என்று விரும்புவது ஆகியவை எவ்வகையிலும் பிறருடைய சுதந்திரத்தைப் பாதிப்பதில்லை. எனவே இவற்றைக் கட்டாயம் அனுமதிக்கலாம். கனையா குமாரோ, உமர் காலீதோ அல்லது ஜே.என்.யுவில் முகமூடி அணிந்துகொண்டு ஆசாதி, ஆசாதி என்று கூடிக் கும்மி அடித்த வெளியாரோ, இவர்கள் யார்மீதும் குற்றம் சாட்டவேண்டிய தேவையில்லை. அபத்த சட்டங்களைத்தான் தூக்கி எறியவேண்டும்.

ஆனால் ஆயுதம் தாங்கிப் போரில் ஈடுபடுவோர், பொதுநன்மையைக் குலைப்போர், குண்டுவைப்போர் ஆகியோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

*** முற்றும் ***