ஞாநி தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி எழுதிய 'ஓ பக்கங்கள்' கட்டுரை ‘விருப்பப்படி இருக்க விடுங்கள்', உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.
ஞாநிக்கு கருணாநிதி மீது எந்தக் கரிசனமும் கிடையாது. அவரது எழுத்துக்களைப் படித்துவருவோர் அனைவருக்கும் இது தெரியும். அப்படிப்பட்ட நிலையில் ‘வஞ்சக் கரிசனத்துடன்', “அய்யோ பாவம்! ஒரு கிழவரை இப்படிப் போட்டு வாட்டி வதைக்கிறார்களே” என்று ஞாநி எழுதினால் அதைவிட கயமைத்தனம் ஏதும் இருக்கமுடியாது.
ஞாநிக்கு பல நோக்கங்கள் இருந்திருக்கலாம்.
வயதானவர் மாநிலத்தின் முக்கியமான பதவியில் இருந்தால் மாநிலத்தின் நலனுக்குக் கேடு என்று அவர் கருதியிருந்தாரானால் அதை வெளிப்படையாக எழுத்தில் காட்டியிருக்கலாம்.
இல்லை, கருணாநிதியை தனக்குப் பிடிக்கவில்லை என்று ஞாநி நினைத்திருந்தாரானால், அதையும் நேரடியாகச் சொல்லி, இவரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு யாரையாவது முதல்வராக்குங்கள் என்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம். (அது நடக்காது என்பதை ஞாநி உணர்ந்திருப்பார்.)
ஜெயமோகன் ஒருமுறை சுந்தர ராமசாமி/காலச்சுவடு பற்றி எழுதும்போது, யானைப்பாகன், கிழ யானையைக் காட்டிப் பிச்சையெடுத்து சம்பாதிப்பதைப்போல என்று (கேவலமாக) எழுதியிருந்தார். ஞாநியும் அதைப்போலவே கருணாநிதியின் பிள்ளைகள் தங்கள் தகப்பனை தங்களது சொந்த விருப்பங்கள் காரணமாக, தள்ளாத வயதிலும் தெருவில் அழைத்துவந்து அவரைச் சுரண்டி, அவரை வைத்து வித்தை காட்டிப் பிழைப்பு நடத்துகின்றனர் என்று பொருள்பட எழுதியிருப்பது கண்டனத்துக்குரியது.
ஞாநி ஒரே சீராக நடுநிலையுடன் தனது எழுத்தைச் செய்வதில்லை. கருணாநிதியை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவை எதிர்ப்பதில்லை.
ஞாநி சில விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் குணம் உடையவர். மாற்றுக் கருத்துகள் தொடர்பாக என்ன ஆதாரம் கிடைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனது கருத்தை மாற்றிக்கொள்ள மறுப்பவர்.
இப்படி ஞாநியைக் குறைசொல்ல எவ்வளவோ இருக்கிறது.
-*-
ஞாநிக்கு பேச்சு, எழுத்து சுதந்தரம் இருந்தாலும் கண்ணியமற்ற முறையில் சிலவற்றை எழுதினால் அதனால் கோபம் கொள்பவர்கள் கண்டனக் கூட்டம் நடத்துவதில் தவறில்லை. அப்படி நடந்த கூட்டம்தான் வாணி மஹாலில் சனிக்கிழமை நடந்த ஒன்று.
ஆனால் ஞாநியைக் கண்டித்த சிநேகிதர்கள் (அவர்கள் அனைவரும் ஞாநியுடன் இப்பொழுதும் நல்ல பரிச்சயம் வைத்திருப்பவர்களாம்), பல அபத்தங்களையும் வாரி உதிர்த்தனர்.
மேற்படி விஷயத்தில் ஞாநியைக் கண்டிக்க ஆயிரம் முகாந்திரங்கள் இருந்தாலும் மேலும் பலவற்றை இழுக்கவேண்டுமே. அதைச் சரியாகக் கண்டறிந்து 20-20 கிரிக்கெட் போட்டியின் தரத்தில் தடாலடியாக ஆரம்பித்து வைத்தார் தொடக்க ஆட்டக்காரரான கவிஞர் அறிவுமதி.
அதுதான் 2000 வருடப் பகைமை. தன் மூதாதையர் உழைப்பில் 'உண்டு', 'பேண்டு' இன்று சுகமாக இருக்கும் பார்ப்பனர்களை அறிவுமதி நன்றாகச் சாடினார். புரசைவாக்கமாக இந்த இடம் இல்லாமல் போய்விட்டதே, கொஞ்சம் நாகரிகமாகப் பேசவேண்டுமே என்று வருத்தப்பட்டார். ‘உங்கள் யாருக்காவது வசிக்க வீடில்லாமல் இருக்கிறதா' என்று பார்ப்பனர்களைக் கேட்டார். பார்ப்பனர்களை இவர் ஒன்றும் செய்யாவிட்டாலும் இணையத் தம்பிகள் ஒருகை பார்த்துவிடுவார்கள் என்று கோடி காட்டினார்.
அடுத்து பேசவந்தவர்களில் பலர் இந்த 2000 வருடப் பாரம்பரியச் சண்டை (அப்படி ஒன்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. எழுத்தாளன் சொன்னால் மேல் அப்பீல் கிடையாது) பற்றி பலரும் தொடர்ந்தார்கள்.
தோழர் மகேந்திரன் தொடர்ந்தார். பிரபஞ்சன் ஒருபடி மேலே போனார். அ.மார்க்ஸ் பற்றி சொல்லத் தேவையே இல்லை. பிரபஞ்சன் அதெப்படி ஊடகங்கள் எல்லாம் சட்டையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு பூணூல் போட்டுக்கொள்கிறார்கள் என்று கேட்டார்.
ஞாநிக்கான கண்டனக் கூட்டமா, தி.கவின் பார்ப்பன எதிர்ப்புக் கூட்டமா என்று புரியாத வகையில் இறையன்பன் குத்தூஸ் வந்து ஒரு பாடலைப் பாடினார். அதன் வரிகள் பின்வருமாறு:
வடக்கே ஒரு பார்ப்பன வேதாந்தி கலைஞரின் தலை கேட்கிறான்
இங்கே ஒரு பார்ப்பன அஞ்ஞாநி நஞ்சைக் கக்குகிறான்
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானை அடி என்றார் தந்தை பெரியார்
நம் சிந்தையெல்லாம் நிறைந்த தந்தை பெரியார்
தொண்டால் பொழுதளக்கும் தலைவரை
இங்கு கொச்சைப்படுத்துகிறான் ஒரு தறுதலை
பொறுமை கலைஞரின் பெருந்தன்மை
இது புரிந்திடுமா அஞ்ஞாநிக்குப் பேருண்மை
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்? இங்கே
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்?
பார்ப்பன அரசியலைப் புரிந்துகொள்ளடா
பார்ப்பன பத்திரிகை அரசியலைப் புரிந்துகொள்ளடா
தமிழா! தமிழா! தமிழா!
இந்தப் பாடல் பாடப்படும்போது இணையப் பிரமுகர்கள் இருவர் ‘அய்யோ' என்று தலையில் அடித்துக்கொள்வதைப் பார்க்க முடிந்தது.
இதற்கடுத்து தலைமையுரை ஆற்றிய பன்னீர்செல்வம், ஞாநியின் எளிமைப்படுத்தப்பட்டு வெகுஜன ஊடகங்களில் கொடுக்கப்படும் கருத்துக்களை எதிர்க்கவேண்டும் என்றார். ஆனால் அதே எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரம்தான் இந்த கண்டனக் கூட்டத்திலும் காணக் கிடைத்தது.
ஞாநி = பார்ப்பான்
விகடன் = பார்ப்பனப் பத்திரிகை
பார்ப்பான் = 2000 வருடப் பகைமை
கலைஞர் = பெரியாரின் வழிவந்த சூத்திரத் தலைவர்
பார்ப்பான் x சூத்திரன்
(ஞாநி + விகடன்) x கலைஞர் => எனவே விகடன் கட்டுரை
எனவே... போடு பார்ப்பான் தலையில் நாலு சாத்து!
-*-
அ.மார்க்ஸ் ஒரு கான்ஸ்பிரசி தியரியை முன்வைத்தார்.
கலைஞர் x மாறன் சகோதரர்கள் பிரச்னைக்குப் பிறகுதான் விகடன் கலைஞருக்கு எதிராக எழுதுகிறது... இதற்கு விகடன் டெலிவிஸ்டா - சன் டிவி சீரியல் வழியாக ஏதேனும் தொடர்பு இருக்குமோ...
அ.மார்க்ஸ் அடுத்து கனிமொழி, இரவிக்குமார், சல்மா ஆகியோர்மீது கடுமையான ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
கலைஞர் மீது இன்று என்ன தைரியத்தில் இப்படி எல்லாம் எழுதமுடிகிறது? காலச்சுவடு கொண்டுவந்த பெரியார் சிறப்பிதழில் பெரியாரை அவமரியாதை செய்து (அவர் பெண்பித்தர்... தலித்களுக்கு எதிரானவர்...) எழுதியிருந்ததை யாருமே பெரிய அளவில் கண்டிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக இன்று யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறாகப் பேசமுடிகிறது. இதற்கு கனிமொழியும் பிறரும் பதில் சொல்லவேண்டும்.
இரவிக்குமாரும் சல்மாவும் அடுத்து பேசினாலும் இதைத் தொட்டே செல்லவில்லை. கனிமொழி பேசவில்லை. ஆனால் அவர் சார்பாகப் பேசிய பிரபஞ்சன், அந்த இதழுக்கு அடுத்த இதழிலிருந்து கனிமொழி காலச்சுவடு ஆசிரியர் குழுவிலிருந்து விலகிவிட்டார் என்ற தகவலை வெளியிட்டார்.
-*-
தினமணி, காலச்சுவடு, கார்ட்டூனிஸ்ட் மதி ஆகியோரும் திட்டு வாங்கினர்.
-*-
பேசிய பலரும் பெரியாரையும் கலைஞரையும் ஒப்பிட்டுப் பேசினர். இரவிக்குமார் தனது 20+ நிமிடப் பேச்சில் பெரியாரைக் கொண்டுவரவேயில்லை. பார்ப்பனர்களையும் இழுக்கவில்லை.
-*-
மனுஷ்ய புத்திரன் பேசும்போது பாய்ஸ் படப் பிரச்னையின்போது ஞாநி, எழுத்தாளர் சுஜாதாவின் ‘இருதய ஆபரேஷனை' குறிப்பிட்டு கேவலமாக எழுதியதை சொன்னார்.
-*-
இருவர் (அரசு, மணி), “இந்தாளு போடற நாடகமே புரியாது” என்று, ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவை ஒரு பிடி பிடித்தனர். அதைக் கண்டிக்க தனியாக ஒரு கூட்டம் நடத்தியிருந்தால் தேவலை.
-*-
விழாவின் முக்கியமான கான்ஸ்பிரசி தியரி - கிட்டத்தட்ட அனைவருமே ஏற்றுக்கொண்டது இதுதான்.
கலைஞர் இருந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிடுவார். அதைத் தடுக்கவேண்டும். எனவே சிலர் (பார்ப்பான்கள்?) ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டி இப்படி கலைஞருக்கு எதிரான காரியங்க்களில் இறங்கியுள்ளனர். பத்திரிகைகள் ஒன்றுசேர்ந்து கலைஞரைத் தாக்குவதற்கு இதுதான் காரணம். அங்கே டில்லியில் நீதிமன்றத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு முட்டுக்கட்டை போடுகின்றனர். இங்கே இவரை எப்படியாவது துரத்திவிட நச்சைக் கக்குகின்றனர்.
-*-
கண்டனக் கூட்டத்தில் பலரும் சொன்னது:
ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் ஆட்டோ போயிருக்கும். இங்கு கண்ணியமான முறையில் எழுத்து/பேச்சு சுதந்தரத்துக்கு எந்த பங்கமும் வராத வகையில், குடியாட்சி முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைதான். ஆனால் ஆட்டோ வரும் என்றெல்லாம் பயந்து அடுத்த ஜெயலலிதா ஆட்சியில் (அப்படி ஒன்று ஏற்பட்டால்) ஆட்சியாளரின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை நிறுத்தாதீர்கள்.
ஆட்டோ அனுப்பாத ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்போம். எந்த ஆட்சியாளர் காலத்திலும் ஆட்டோக்கள், ரவுடிகள் மூலம் நமது சுதந்தரம் தடைப்படுவதை அனுமதியோம்.
-*-
ஒலிப்பதிவுகள்மணிகண்டன்மதுமிதா