கோப்ராபோஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் கருப்புப் பணத்தைச் சலவை செய்யும் வேலையை ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய மூன்று வங்கிகளும் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்குச் சான்றாக, அதன் நிருபர்கள் ரகசியமாகப் பிடித்த ஒளிப்பதிவுகளைக் காட்டியுள்ளது.
இந்த வங்கிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அல்லது அனைத்துத் தனியார் வங்கிகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். பொதுத்துறை வங்கிகள் இச்செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது குறைவாக இருக்கலாம். அல்லது ஒருசில அரசியல்வாதிகளுக்காக மட்டும் பொதுத்துறை வங்கிகளின் கதவுகள் இதற்கெனத் திறந்திருக்கலாம்.
நம் நாட்டில் எக்கச்சக்கமான கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. (1) ரியல் எஸ்டேட் துறை, (2) அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பெறும் லஞ்ச, ஊழல் பணம், (3) கடத்தல், திருட்டு, கஞ்சா, கொலை, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கப்படும் கருப்புப் பணம், (4) சினிமாத் துறையில் புழங்கும் பெருமளவு பணம், (5) தொழில் நிறுவனங்கள் இரண்டு கணக்குகள் வைத்துச் சம்பாதிக்கும் கருப்புப் பணம் என்று பலதைச் சொல்லலாம்.
ரிசர்வ் வங்கி இந்தக் கருப்புப் பணத்தின்மீது அழுத்தம் தரத் தர, இதனை வெள்ளையாக ஆக்குவதற்கு யாராவது முன்வரத்தான் வேண்டும். அதைத்தான் இந்தத் தனியார் துறை வங்கிகள் செய்கின்றன.
இந்தக் கருப்புப் பணம் நாட்டைவிட்டு வெளியே போய், பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்னும் முறை வழியாக இந்தியாவிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்று சுப்ரமணியன் சுவாமி கூறுகிறார். இந்த முறையைக் கொண்டுவந்தது பாஜக ஆட்சியின்போது யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்த காலத்தில் என்று ஞாபகம்.
இதற்கெல்லாம் முன்னர் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து ஒருமுறை அரசுக்கு வரி கட்டிவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளையாக ஆக்கிக்கொள்ளலாம் என்றார். அதன்படிக் கொஞ்சம் பணம் வெளியே வந்தது. ஆனால் மிகப் பெரும் தொகை வெளியே வரவே இல்லை.
சில அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. கருப்புப் பணம் இருக்கும்வரையில் கருப்பை வெள்ளையாக்கும் ஆசாமிகள் வந்துகொண்டே இருப்பார்கள்.
என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்?
1. ரியல் எஸ்டேட் டிரான்சாக்ஷனில் ஸ்டாம்ப் கட்டணத்தையும் லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியையும் கடுமையாகக் குறைக்கலாம். அதன்பிறகும் பொய்யாகப் பணத்தைக் குறைத்துச் சொல்பவர்களுக்குச் சிறை தண்டனை என்று சட்டத்திருத்தம் செய்யலாம். உதாரணமாக ஸ்டாம்ப் கட்டணத்தை வெறும் 1% என்றோ அல்லது 0.5% என்றோ ஆக்கிவிடலாம். தமிழகத்தில் 12% என்று இருந்தது இப்போது 8% என்று ஆகியுள்ளது. இதுவே மிக அதிகம். அதேபோல வீடு விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு 2% வருமான வரி கட்டினால் போதும் என்று சொன்னால் பெருமளவு கருப்புப் பணம் ஒழிந்துவிடும். இன்று கேபிடல் கெயின்ஸ் வரி (இண்டெக்சேஷனுக்குப் பிறகு) 20% என்று உள்ளது. (அல்லது உடனேயே அந்த லாபத்தை இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்யவேண்டும், அல்லது குறிப்பிட்ட சில கடன்பத்திரங்களை வாங்கி வரித்தொல்லையிலிருந்து மீளலாம்.) காசோலை, வரைவோலை வாயிலாக மட்டும்தான் ரியல் எஸ்டேட் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யமுடியும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.
2. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.
3. அரசியல் கருப்புப் பணம் போலவே, கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கும் பணமும் கருப்பாகவே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது. வரி கட்டி, வெள்ளையாகப் பணம் வைத்திருக்கும் கெட்ட காரியர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலர் லெஜிடிமேட் கம்பெனிகளையும் கூடவே வைத்து பணத்தை உள்ளே வெளியே செய்துகொண்டிருக்கலாம். அனைத்துவித கிரிமினல் தண்டனைகளுடன் அந்தக் கெட்ட காரியங்களைச் செய்பவர்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் இங்கு நல்ல பலன் கிடைக்கலாம்.
4. சினிமாத் துறையை நிஜமாகவே ஒழுங்குபடுத்த முடியும். அரசு மனது வைத்தால். இதுதான் உள்ளதிலேயே மிகவும் எளிதான ஒன்று. ஆனால் சினிமாத் துறையினரின் பலம் காரணமாக அவர்களுக்கு எந்தச் சிக்கலும் நேர்வதில்லை. தனிப்பட்ட முறையில் நடிகர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடப்பதாக ஒரு செய்தி வரும். அப்புறம் எல்லாம் அடங்கிவிடும். ஒவ்வொரு படக் கம்பெனியும் செய்யும் ஒவ்வொரு துண்டு துணுக்குச் செலவையும் ஒழுங்காக ஆடிட் செய்தாலே போதும். தவறு செய்பவர்களைத் தண்டிக்க என்று தனியான வருமான வரி தீர்ப்பாயங்கள் இருந்தாலே பிரச்னை ஓவர்.
5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.
வங்கிகளை நெருக்கிப் பிடிப்பதன்மூலம் அவர்கள் பணச்சலவை செய்வதை நிறுத்தலாம். அப்படியானால், அந்தக் கருப்புப் பணம் அதற்கான தனியான பொருளாதாரச் சுற்றில் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். கருப்புப் பணத்தின் ஊற்றையே ஒழிப்பதுதான் (அல்லது குறைப்பதுதான்) சரியான தீர்வு.