Thursday, July 21, 2011

வர்ச்சுவல் மர்டாக் - ரூப்பர்ட் மர்டாக்கின் வாழ்க்கை அலசல்

[புதிய புத்தகம் பேசுது இதழில் வெளியான என் புத்தக அறிமுகம். இதை இதற்குமுன் என் வலைப்பதிவில் வெளியிட்ட ஞாபகம் இல்லை என்பதால் இங்கு மீள்பதிவு.]

வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ்பாடும் ரகத்திலேயே அமைகின்றன. சில சமயங்களில் ஒருவரது புகழைக் குலைக்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் எழுத்தாளர் தகவல்கள் அனைத்தையும் அழகாக திரட்டிக் கொடுத்தால், வாசகர்கள் தாங்களே சில முடிவுகளுக்கு வரமுடியும்.

தொழில் முனைவோரின் வாழ்க்கை வரலாற்றி எழுதுபவர்களுக்கு உள்ள பெரிய சிக்கல், சரியான தகவல் முழுமையாகத் தெரியாமல் இருப்பதே. நாடுகள், பேரரசுகளாக எப்படி ஆயின என்பதற்கு தெளிவான வரலாறுகள் உள்ளன. ஆனால் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறு நாட்டில் இருந்த ஒருவர் இன்று உலக ஊடக சாம்ராஜ்ஜியத்தை எப்படிக் கட்டி எழுப்பினார் என்பதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிது கிடையாது.

ரூப்பர்ட் மர்டாக் என்ற ஆஸ்திரேலியரது தந்தை கீத் மர்டாக் மாரடைப்பால் இறந்தபோது, ரூப்பர்ட் பிரிட்டனில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அவசரமாகத் திரும்பிய ரூப்பர்ட், அதன்பின் தன் கல்லூரிப் படிப்பை முடிக்கவே இல்லை. அவரது தந்தை அவருக்கு விட்டுச் சென்ற சொத்து ஒரு சாதாரண, குறைவான எண்ணிக்கையில் விற்கும் செய்தித்தாள்தான். அதிலிருந்து ரூப்பர்ட் மர்டாக் எப்படி கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு, சினிமா என்று உலகின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் என்பதை புத்தக ஆசிரியர் நீல் செனோவித் பிரமாதமாக எடுத்துக்காட்டுகிறார்.

அவசரப்படாதீர்கள்... இது ஒன்றும் ரூப்பர்ட் மர்டாக் புகழ்பாடும் புத்தகம் அல்ல. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிம் என்ற வகையில் செனோவித், மர்டாக்கின் சாம்ராஜ்ஜியம் எப்படி செங்கல் செங்கல்லாக உருவானது என்று கையில் லென்ஸை எடுத்துக்கொண்டு தேடி அலைகிறார். அப்படி செனோவித் காட்டும் உருவம் மிகவும் பயங்கரமானது. ரூப்பர்ட் மர்டாக்கின் வளர்ச்சியில் பல பயங்கரங்கள் கண்ணுக்குப் புலப்படுகின்றன.

செய்தித்தாள்கள் தரும் பலத்தை மர்டாக் எப்படி கையில் எடுத்துக்கொண்டு, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளைத் தன் கைக்குள் வளைத்துப்போடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியரான மர்டாக், பிரிட்டனில் இரண்டு டேப்லாய்ட் செய்தித்தாள்களான சன், நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆகியவற்றுடன் பிரிட்டனில் மதிப்பு மிக்க தி டைம்ஸ் ஆகியவற்றையும் தன்வசப்படுத்துகிறார். அவற்றின் துணைகொண்டு, அதுநாள் வரை பொதுவாக கன்சர்வேடிவ் கட்சியை ஆதரித்துக்கொண்டிருந்தவர், திடீரென லேபர் கட்சியின் டோனி பிளெய்ரை ஆதரிக்கிறார். பிளெய்ர் ஜெயித்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதைத் தொடர்ந்து, பிளெய்ரின் உதவியைப் பெற்று தனக்கு எதிராக வரக்கூடிய சட்டங்கள் நிறைவேறாமல் பார்த்துக்கொள்கிறார். தனக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுமாறு பார்த்துக்கொள்கிறார்.

பிரிட்டனில் ஊடகங்களைக் கையகப்படுத்தும் மர்டாக், தனக்கு எதிராக இருக்கும் தொழிற்சங்கங்களை எதிர்த்துப் போராடி உடைக்கிறார். பின்னர், அரசியல் துணையுடன், செய்தித்தாள்களோடு கூட, செயற்கைக்கோள் வழி ஒளிபரப்புச் சேவை (இன்று நம் நாட்டில் டி.டி.எச் என்கிறோமே) ஒன்றைத் தருகிறார். இவை பணம் கொழிக்கும் தொழிலாக மாற, அவர் கால்பந்து ஆட்டங்களை தன் தொலைக்காட்சியில் காண்பிக்கும் உரிமத்தைப் பெறுகிறார். இங்கெல்லாம் அவருக்குச் சாதகமாக பல இடங்களில் சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. இத்தாலியில் மர்டாக் ஒரு நிறுவனத்தை வாங்குவதற்கு, பிளெய்ரின் அலுவலகத்திலிருந்து போன் மூலம் உதவி கிடைக்கிறது.

அடுத்து அமெரிக்காவில் தன் பார்வையைப் பதிக்கும் மர்டாக், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தன் ஆஸ்திரேலியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து, அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுகிறார். அப்படி இருந்தால்தான், அவரால் அந்த நாட்டில் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒன்றை நடத்தமுடியும்.

இன்று மர்டாக்கின் ஊடக சாம்ராஜ்ஜியம் இல்லாத கண்டங்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அனைத்தும் எப்படி உருவானது என்பதில் நிறைய அசிங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. மோசமான, மூன்றாந்தர நாளேடுகள் அம்மண அழகிகளின் படங்களையும் சமூகத்தின் கேவலங்களையும் வெளியே காண்பித்தே பணம் சம்பாதித்தவை. சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசியில் ஒட்டுக்கேட்டு அந்தத் தகவல்களைச் செய்திகளாக ஊடகங்களில் வெளியிடுவது. அறியப்பட்ட கிரிமினல்களோடு சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் கம்பெனிகளை உருவாக்குவது. பல நிறுவனங்களை உருவாக்கி, எது எந்த நிறுவனத்தை கண்ட்ரோல் செய்கிறது என்பதே வெளியே தெரியாமல், எல்லா நாட்டிலும் ஒட்டுமொத்தமாக வரிகளை ஏய்ப்பது. வங்கிகளிடம் எக்கச்சக்கமாக, பொய்க்கு மேல் பொய் பேசி கடன்கள் வாங்குவது. பிற பங்குதாரர்களை ஏதோ விதத்தில் ஏமாற்றி, நிறுவனத்தில் தன் பங்குகளை அதிக சதவிகிதத்தில் வைத்திருப்பது. இப்படிப் பலப்பல தில்லுமுல்லுகள்.

நீல் செனோவித், ஆஸ்திரேலியாவின் ‘ஆஸ்திரேலியன் ஃபைனான்ஷியல் ரிவ்யூ’ என்ற பத்திரிகையில் இதழாளராகப் பணிபுரியும்போது இந்தப் புத்தகத்தை எழுதினார். அவரது தினசரி வேலையில், மர்டாக்கின் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று கண்காணிப்பதும் ஒன்று. செனோவித் தோண்டித் துருவி பல கட்டுரைகள் எழுதியதன் காரணமாக, ஆஸ்திரேலிய அரசு மர்டாக்கின் நிறுவனங்கள்மேல் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. ஆனால் அதனால் மர்டாக்மீது எந்த வழக்கும் நிரூபணமாகவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால், மர்டாக் செய்த அனைத்துமே தில்லுமுல்லும், அவருக்குக் கிடைத்த பணமும் வளர்ச்சியும் முற்றிலும் அதிர்ஷ்டம் என்றும் சொல்லிவிட முடியாது. அவரிடம் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது. அந்த வெறியுடன் கூட, சட்டத்தைத் தன் இஷ்டத்துக்கு வளைத்தால் அதனால் தவறில்லை என்று எண்ணும் மனமும் இருந்தது. அத்துடன் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை உடனுக்குடன் பாய்ந்து கவ்விக்கொள்ளும் வேகமும் இருந்தது. ஒரு காலத்தில் அரசுகளும் விளையாட்டு அமைப்புகளும் மர்டாக்கைக் கண்டு நடுங்கினார்கள். 1990-களின் மத்தியில், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒரு தலைமை நிர்வாகி என்னிடம் நேரடியாகவே, மர்டாக்குக்கு கிரிக்கெட் உரிமம் எதையும் கொடுக்கமாட்டோம்; அவர் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் என்றார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அதே அமைப்பே உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமத்தை மர்டாக்கின் நிறுவனத்துக்கு விற்றது.

மர்டாக் தொட்ட அனைத்திலும் ஜெயிக்கவில்லை. மாபெரும் தோல்விகளை அவர் சந்தித்துள்ளார். ஆனால் அவற்றைமீறி பல வெற்றிகளையும் அவர் குவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் (2008-09) அவரது குழுமம் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதை அவர் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், அவரது சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளும், அவருக்கு அடுத்து யார் அவர் உருவாக்கியுள்ள மிகப்பெரிய நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தப்போகிறார் என்ற கேள்வியும்.

அவருடன் பல காலம் வாழ்ந்த அவரது இரண்டாவது மனைவி அன்னா, (முதல் மனைவியுடனான திருமணம், ஆகி சில வருடங்களிலேயே உடைந்துவிட்டது), மர்டாக் 65 வயதைத் தாண்டியதும் அவருடன் விவாகரத்து செய்தார். இது ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் அதற்குக் காரணம் இருந்தது. அந்த வயதில் தன் கணவர் ஓய்வு பெறவேண்டும் என்று மனைவி விரும்பினார். ஆனால் மர்டாக் ஓய்வு பற்றி கவலைப்படவில்லை. அத்துடன், ரூப்பர்ட்-அன்னா தம்பதிகளின் மூன்று குழந்தைகளுக்கும் இடையில் வீட்டிலேயே போட்டியை ஊக்குவித்தார். இன்று அம்பானி குடும்பத்தைப் பார்ப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள். அனில் அம்பானி - முகேஷ் அம்பானி இடையேயான மோசமான உறவால், எரிவாயுவின் விலை போல பல விஷயங்களில் மிகப்பெரும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அன்னா, தன் பிள்ளைகள் இடையே தேவையில்லாத உரசல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை. ஆனால் ரூப்பர்ட் இதைப்பற்றிக் கவலைப்படாமல் நடந்துகொண்டார். அதனைப் பொறுத்துக்கொள்ளாத அன்னா, விவாகரத்து கோரி, விலகிக்கொண்டார்.

அதனால் மர்டாக் என்ன செய்தார்? சிறிதும் கவலைப்படவில்லை. அப்போது சீன அரசாங்கத்திடம் தொலைக்காட்சி உரிமம் பெற அவர் போராடிக்கொண்டிருந்தார். எனவே மூன்றாவதாக சீனப் பெண் ஒருத்தியை மர்டாக் மணந்துகொண்டார். விரைவில் சீன அரசிடமிருந்து தொலைக்காட்சி உரிமத்தையும் பெற்றார்.

இந்த ஒரு நிகழ்ச்சி பொதும், மர்டாக்கின் குணத்தைப் புரிந்துகொள்ள. ஒரு மனிதன், தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; சட்டங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், எத்தனைதான் புத்திசாலியாக இருந்தாலும், மிகவும் ஆபத்தானவன். அப்படிப்பட்ட மனிதனுடன் உறவாடும் பிரரும் நாட்டின் அரசுகளும் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதரான மர்டாக்கின் தொழில் வாழ்க்கையைப் பற்றி மிக ஆழமாக அலசி விவிரிக்கிறது இந்த நூல். இந்தியாவில் பல தொலைக்காட்சி சேனல்களை நடத்தும் மர்டாக்கைப் பற்றி இந்திய மக்களும் இந்திய அரசும் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்கவேண்டும்.

Virtual Murdoch: Reality Wars on the Information Highway
Neil Chenoweth
Vintage
Published in 2001

Tuesday, July 19, 2011

நாய்களைத் தின்னும் நாய்கள்

ரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்னும் டாப்லாய்ட் பத்திரிகை சென்ற வாரம் இழுத்து மூடப்பட்டது. பிரிட்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மூன்றாம்தர வாரப் பத்திரிகை இது.

பிரிட்டனில் ஒரு காலத்தில் தீவிர சபாத் நிலவியிருக்கவேண்டும். அதாவது தேவன் ஓய்வெடுத்திருந்த ஏழாம் நாளான ஞாயிற்றிக்கிழமையன்று மனிதர்களும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பது. பின்னர் ஏதோ ஒரு பிஷப், பத்திரிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பார். வாரம் முழுதும் சன் என்ற டாப்லாய்ட். ஞாயிறு அன்று நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட். அதேபோல வாரம் முழுதும் தி டைம்ஸ். ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ். வாரம் முழுதும் கார்டியன். ஞாயிறு அன்று அப்சர்வர்.

இணையத்தைக் கரைத்து மேயும் உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்றாலும் சுருக்கமாக இந்தப் பத்தியில் சொல்லிவிடுகிறேன். சன்னும் நியூஸ் ஆஃப் தி வேர்ல்டும் அரை நிர்வாண - முழு நிர்வாண அழகிகள், கிசுகிசு, கள்ளக்காதல், கொலை, கொள்ளை, அரசியல் ஊழல் அது இது என்று செய்திகளைப் போட்டு விற்கும் பத்திரிகைகள். இதில் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆட்கள், கூலிப்படைகளை வைத்து, தனி மனிதர்களது டெலிஃபோன் மெசேஜ்களை ஒட்டுக்கேட்டு அதைக்கொண்டு எக்ஸ்க்ளூசிவ் ஸ்கூப் செய்திகளை எழுதினார்கள் என்பது குற்றச்சாட்டு. தனி மனிதர்கள் என்றால் இதில் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த கார்டன் பிரவுனின் தனிப்பட்ட தகவல்கள், அவரது மகனின் வியாதி, அவர் யாரிடமிருந்து எந்த விலைக்கு வீடு வாங்கினார் முதற்பட எல்லாம் அடக்கம்!

இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியாகும் அதே நேரம், ரூப்பர்ட் மர்டாக், ஸ்கை என்ற தொலைக்காட்சி விநியோக நெட்வொர்க்கையும் அதன் பல்வேறு சானல்களையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் இருந்தார். ஏற்கெனவே அதன் சுமார் 40% பங்குகள் அவர்களிடம்தான் இருந்தன என்றாலும் 100% பங்கையும் பெறும் முயற்சியில் இருந்தார்.

ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டு வெளியாகி, அதில் உண்மை இருக்கிறது என்று தெரியவந்ததும் பல தலைகள் உருண்டுள்ளன. ஸ்கையைக் கையகப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார் மர்டாக். தலைமை அலுவலர்கள் சிலர் வேலையிலிருந்து விலகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து யார்டு லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறை ஆணையர் பதவி விலகியுள்ளார். (இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு ஆலோசகர் வேலை அளித்தார் என்பது அவர்மீதான குற்றச்சாட்டு.) மர்டாக் குடும்பத்துக்கும் சம்பந்தப்பட்ட ஒரு நபருக்கும் நெருங்கிய நண்பரக இருக்கிறார் என்பது இப்போதைய பிரிட்டன் பிரதமர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

இந்த விஷயத்தை வெளியே கொண்டுவருவதில் கார்டியன் என்ற போட்டிப் பத்திரிகை பெரும் முயற்சி எடுத்துள்ளதுதான் இதில் ஆச்சரியம். பொதுவாக உலகெங்கும் உள்ள எழுதப்படாத விதி, ஒரு பத்திரிகையை இன்னொரு பத்திரிகை காட்டிக்கொடுக்காது என்பதுதான். ஆனால் அந்த விதி இங்கே மீறப்பட்டுள்ளது என்று கதறுகிறது மர்டாக்கின் மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது. இப்போது தி ஹிந்து குடும்பத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடுமிப்பிடிச் சண்டையைப் பற்றி ஏதோ ட்விட்டர் புண்ணியத்திலும் வலைப்பதிவு புண்ணியத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியவருகிறது. இந்திய இதழியல் உலகத்தின் குழப்படிகள் பற்றித் தெரியவேண்டும் என்றால் தி ஹூட், சான்ஸ் செரீஃப் போன்ற இடங்களைப் பாருங்கள். ஆனால் கட்டாயமாக மைய நீரோட்ட இதழ்களில் ஒன்றும் கிடைக்காது.

Wednesday, July 13, 2011

சரவணனுடன் ஒரு நேர்முகம்

சரவணன், ‘மனம் மலரட்டும்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருபவர். பலரிடமிருந்து நன்கொடைகள் பெற்று, திருப்பத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு ட்யூஷன் வகுப்புகளை இலவசமாக நடத்திவருகிறது இந்த அமைப்பு. இதன்மூலம் பல பிள்ளைகள், பொறியியல் படிப்புகளில் சேர வழி செய்துகொடுத்துள்ளார். அதனைப் பாராட்டி சமீபத்தில் பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் இவருக்கும் இவரது அமைப்புக்கும் விருது ஒன்றைக் கொடுத்தது.

சரவணன் கையில் ஒரு பைசா இல்லாமல், பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். நிறைய தைரியம்தான்!

இன்று என்னுடன் பேச வந்திருந்தார். அதனை அப்படியே ஒரு வீடியோவாக எடுத்து உங்கள் அனைவருக்கும் காட்டலாம் என முடிவெடுத்து உடனேயே அவரைப் பிடித்துவிட்டேன். தமிழகத்தில் கல்வி பற்றி ஆர்வம் உள்ளவர்கள் இந்த வீடியோவைக் கட்டாயம் பார்க்கவும்.



சரவணனைத் தொடர்புகொள்ள: 99528-59239 அல்லது manam.malarattum@gmail.com

கவிஞர் வைரமுத்து புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்துக்கு, அவருடைய அனைத்துப் புத்தகங்களுக்கும் வாசகர்களுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி தரப்படும். இந்தச் சலுகை ஒரு வாரத்துக்கு மட்டுமே. உடனடியாக, உங்களுக்கு விருப்பமான வைரமுத்து புத்தகங்களை இணையம் மூலம் வாங்குங்கள்.

அச்சில் உள்ள அவருடைய புத்தகங்களின் முழுப் பட்டியலைக் காண இங்கு செல்லுங்கள்.

Tuesday, July 12, 2011

போன் அடியுங்கள். புத்தகம் வீடு தேடி வரும்.

நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனத்திலிருந்து புதியதொரு சேவையைத் தொடங்கியுள்ளோம். புத்தகங்கள் வேண்டும் என்றால் உடனடியாக உங்கள் தொலைபேசியைக் கையில் எடுத்தால் போதும். போன் அடியுங்கள். அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். அல்லது மிஸ்டு கால் கொடுங்கள். நாங்கள் திருப்பிக் கூப்பிடுவோம். உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை - தமிழோ, ஆங்கிலமோ - எங்களிடம் தெரிவியுங்கள். அந்தப் புத்தகங்களை உங்களுக்கு அனுப்பிவைக்கிறோம். வி.பி.பி அல்லது கூரியர் சேவை மூலமாக அனுப்புகிறோம்.

இந்தச் சேவைக்கு Dial For Books என்று பெயரிட்டுள்ளோம்.

ஏன் இந்தச் சேவை?

எங்களிடம் புத்தகம் வாங்க விரும்பும் சிலர், இணைய வசதி அற்றவர்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் புத்தகக் கடை வசதி இல்லை அல்லது அவர்கள் புத்தகக் கடைகளை நோக்கிச் செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள் (உடல்நிலை, முதுமை...)

எனவே, அவர்கள் பலரது வேண்டுகோளுக்கு இணங்க தொலைபேசி மூலம் புத்தகம் என்ற இந்தச் சேவை. கிழக்கு பதிப்பகப் புத்தகங்களுக்கு என்று மட்டுமின்றி, தமிழ்ப் பதிப்பகங்களின் புத்தகங்கள் என்று விரிவாக்கியுள்ளோம். அத்துடன் ஆங்கிலப் புத்தகங்கள் வேண்டும் என்றாலும் அவற்றையும் வாங்கி அனுப்புகிறோம்.

எனவே, முயற்சி செய்து பாருங்கள். சில சிறு சிறு பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இவற்றைச் சரி செய்துவிடுவோம்.

நீங்கள் அழைக்கவேண்டிய எண் 94459 - 01234 அல்லது 9445 97 97 97

இந்தச் சேவை தொடர்பாக ஒரு வலைப்பதிவையும் தொடங்கியுள்ளோம். அங்கே இது தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம். விளக்கங்களைப் பெறலாம்.

Wednesday, July 06, 2011

ஸ்ரீநிவாச ராமனுஜன்

[அம்ருதா இதழில் கடந்த இரு மாதங்களாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிறு சிறு மாற்றங்களுடன்.]

ஐரோப்பிய கணித அறிஞர்கள் சிலரின் வாழ்க்கையை விவரிக்க ஆரம்பித்த தொடர் இது. ஆனால் அதற்குள்ளாக இந்தியா உருவாக்கிய ஒரே மாபெரும் கணித மேதையைப் பற்றிச் சொல்லிவிட ஆசை. ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வசித்த ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கையை இன்றுவரை இந்தியர்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர்கள் அறிந்தாரில்லை.

ராமானுஜன் ஒரு கணித மேதை என்று நாமும் தபால் தலைகள் வெளியிட்டுச் சிறப்பித்துவிட்டோம். பாடப் புத்தகங்களில் ஒருவேளை அவரது பெயர் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் என்னதான் செய்தார், ஏன் அவருக்கு இத்தனை பேரும் புகழும் உலக அளவில் இருக்கிறது என்பதைக் கணிதம் அறிந்த பெரும்பாலானோர்கூடப் புரிந்துகொள்வதில்லை. இன்று இந்தியாவில் மிகச் சில கணித விற்பன்னர்கள் மட்டுமே ராமானுஜனின் பெருமையை முழுதாக உணர்ந்துள்ளனர்.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ராமானுஜன் செய்த எதுவும் பன்னிரண்டாம் வகுப்பு கணிதப் புத்தகத்தில் தரக்கூடிய அளவு எளிதானதல்ல. ராமானுஜன் சமன்பாடு, ராமானுஜன் தேற்றம் என்று பெயரிட்டு, பள்ளிக்கூட அளவில் தரக்கூடிய அளவுக்கு சுளுவானதல்ல. ஒருவர் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படிக்கும்போதுகூட ராமானுஜனின் கண்டுபிடிப்புகளுடன் பரிச்சயம் இன்றி இருக்கக்கூடும்.

அப்படியானால் ராமானுஜன் என்னதான் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே வெறுமனே புகழாரம் மட்டும் சூட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா நாம்? உண்மையில் ஓரளவுக்குக் கணிதம் படித்திருக்கும் எனக்கு ராமானுஜனின் கணிதத்தை விளக்கிச் சொல்வது, அதுவும் எளிமையாக நம் வாசகர்களுக்கு விளக்கிச் சொல்வது மிகவும் கடினம். என் நம்பிக்கை எல்லாம், ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் எப்படி கணிதத்துறையிலும் அறிவியல் துறையிலும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாக உள்ளது என்று தமிழ் மக்களுக்குப் புரியும்படி விளக்கும் ஒரு புத்தகத்தை உருவாக்குவதுதான்.

ராமானுஜன் தானாகவே தோன்றிய சுயம்பு. மாபெரும் கணித மேதைகள் எல்லோருமே அப்படித்தான் தோன்றுகிறார்கள். அவர்களால் எண்களுடன் நேரடியாகப் பேசமுடியும். எண்களின் உலகுக்குள் நுழைந்து வெளிவரமுடியும். அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், கணித மொழியை எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது சாமானியர்களான நமக்கு எளிதில் புரிவதில்லை.

ராமானுஜனின் திறமைகள் ஓரளவுக்கு முழுமையாக வெளிவரக் காரணம் காட்ஃப்ரே ஹரால்ட் ஹார்டி என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர். ராமானுஜனின் உண்மையான திறமையைப் புரிந்துகொண்டு, அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்து, அவருக்குக் குருவாக இருந்து, சீடனாகவும் இருந்து, கற்பித்து, கற்றுக்கொண்டு, ராமானுஜன் இறந்தபிறகும் ராமானுஜனின் கணிதத்தை வெளியுலகுக்குக் கொண்டுசென்றதற்கு நாம் அனைவருமே ஹார்டிக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்.

அதே அளவுக்கு, ஜார்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் ஆகிய இருவருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ராமானுஜன் பல நோட்டுப் புத்தகங்களில் தன் கணித ஆராய்ச்சிகளை விட்டுச் சென்றிருந்தார். அதில் சில யார் கண்ணிலும் படாது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆவணக் காப்பகத்தில் கிடந்துள்ளன. அவற்றை மீட்டெடுத்து அவற்றில் உள்ள தகவல்களை வெளியுலகுக்குக் கொண்டுசென்றவர் ஆண்டிரூஸ். அவருக்கு அடுத்து, அவருடன் சேர்ந்து, ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள் அனைத்தையும் தொகுத்து, சமன்பாடுகளை நிரூபிக்கும் விதத்தைக் கொடுத்து, ராமானுஜன் கணிதத்தைக் கற்க விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பது புரூஸ் பெர்ண்ட்தான்.

புரூஸ் பெர்ண்ட் மே மாத இறுதியில் சென்னையில் சில இடங்களில் சொற்பொழிவாற்ற வருகிறார். அவரிடமிருந்து ராமானுஜனின் கணிதச் சாதனைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் நான் இருக்கிறேன். எனவே இந்த மாதம், ராமானுஜனின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்கிறேன். அடுத்த மாதம், ராமானுஜனின் கணிதச் சாதனைகள் பற்றியும் அவர் விட்டுச் சென்ற வழியில் இன்று பிற கணித விற்பன்னர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறேன்.

*

ராமானுஜன் பிறந்தது 22 டிசம்பர் 1887-ல். கும்பகோணத்தில் துணிக்கடை நடத்திவந்த ஒருவரிடம் கணக்கராகப் பணியாற்றி வந்த ஸ்ரீநிவாசன் அவரது தந்தை. கோமளவள்ளி அவரது தாய். கோமளவள்ளியின் தகப்பனார் ஈரோட்டில் நீதிமன்றத்தில் அமீனாவாகப் பணியாற்றிவந்தார். அந்த ஊரில்தான் ராமானுஜன் பிறந்தார்.

ராமானுஜனுக்கு அடுத்துப் பிறந்த மூன்று குழந்தைகள் உடனேயே இறந்தும் விட்டன. பின்னர் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ராமானுஜனுக்கு ஒரு தம்பி பிறந்து உயிருடன் வெகு காலம் இருந்தார்.

ராமானுஜனின் படிப்பு முழுவதுமே கும்பகோணத்தில்தான் இருந்தது. முதலில் காங்கேயன் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் டவுன் ஹை ஸ்கூலிலும். சாதாரண பள்ளிக் கல்வியின்மூலம் யாரும் கணித மேதை ஆகிவிட முடியாது. ராமானுஜனின் கணிதத் திறனைத் தூண்டிவிட்டதில் இரு புத்தகங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஒன்று எச்.எல். லோனியின் முக்கோணவியல் பற்றிய புத்தகம். அடுத்தது ஜி.எஸ். கார் என்பவர் அடிப்படைக் கணிதச் சூத்திரங்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருந்த புத்தகம். இவை பொதுவாகக் கல்லூரியில் இருப்போர் படிக்கவேண்டிய புத்தகங்கள். ஆனால் ராமானுஜன் உயர் நிலைப் பள்ளியில் சேரும்போதே இந்தப் புத்தகங்களைப் பார்வையிடும், ஆழ்ந்து கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணம் ராமானுஜனின் வீட்டின் அருகில் தங்கிப் படித்த கல்லூரி மாணவர்கள்.

இவ்வாறு தன் கையில் கிடைத்த புத்தகங்களில் உலகத்தில் ஆழ்ந்துபோன ராமானுஜன், மிகச் சிக்கலான கணித உண்மைகளை ஆசிரியர் யாருமின்றித் தானே புரிந்துகொள்ள ஆரம்பித்தார். விரைவில் இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களால் எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டார் அவர். ஆனால் அது அவரது கல்வியைப் பாதிக்கத் தொடங்கியது. பள்ளிக் கல்வியை எளிதாகக் கற்று மதிப்பெண்கள் பெற்ற ராமானுஜனால் கல்லூரியை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை.

கணிதம் அவருக்கு எளிதென்றாலும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். இரண்டு வருடங்கள் தேர்வு எழுதியும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. பின்னர் சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால் இங்கும் அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் தேர்வில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. ஆக 1904 முதல் 1907 வரை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பரீட்சையில் தோல்வி அடைந்தார்.

1908-ல், ராமானுஜனுக்கு ஜானகி என்ற சிறுமியை மணம் முடித்தார் ராமானுஜனின் தாய். கல்லூரிப் படிப்பைப் பெறமுடியவில்லை. வேலையும் இல்லை. மணமோ ஆகிவிட்டது. அடுத்த சில ஆண்டுகள் மாணவர்களுக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுத்து ஒப்பேற்றினார். பணம் படைத்தவர்களிடம் தனது கணித நோட்டுப் புத்தகங்களைக் காண்பித்து உதவித்தொகை கேட்டார். இப்படி இருந்த நிலையில் 1912-ல் சென்னை துறைமுகத் துறையில் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் எழுத்தராக ராமானுஜனுக்கு வேலை கிடைத்தது.

ராமானுஜனின் மேலதிகாரியாக இருந்தவர் நாராயண ஐயர். துறைமுகத்தின் முதன்மை அதிகாரி சர் ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் என்பவர். இருவரும் ராமானுஜனின் உண்மையான கணித ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அவருக்குச் சிரமமான வேலைகளைத் தராமல், கணிதத்தில் மூழ்க உதவினர். இந்த வேலையில் இருக்கும்போதுதான் ராமானுஜன் இங்கிலாந்தில் இருக்கும் பல்வேறு கணிதப் பேராசிரியர்களுக்குக் கடிதம் எழுதி, தான் கண்டுபிடித்த சிலவற்றை மாதிரிகளாக அனுப்பிவைத்தார்.

அப்படி அனுப்பிய பல கடிதங்கள் குப்பைக்கூடைக்குப் போயின. ஆனால் 1913-ல் ஹார்டி தனக்குக் கிடைத்த கடிதத்தைக் குப்பையில் போடவில்லை. மாறாக, தன்னுடன் வேலை செய்யும் லிட்டில்வுட் என்பவருடன் சேர்ந்து அந்தக் கடிதத்தில் உள்ளவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்துவிட்டு இந்த ஆள் லேசுப்பட்டவரில்லை என்பதை முடிவு செய்தார்.

அடுத்த பல மாதங்கள் ஹார்டியும் ராமானுஜனும் கடிதப் போக்குவரத்தில் ஈடுபட்டனர். ராமானுஜன் எப்படியாவது இங்கிலாந்துக்கு வந்துவிட்டால் அவருக்குப் பெருத்த வரவேற்பு இருக்கும் என்று முடிவெடுத்தார் ஹார்டி. ஆனால் ஆசாரமான குடும்பத்தில் பிறந்த காரணத்தால் கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்ற மூட நம்பிக்கை ராமானுஜனைத் தடுத்தது. பின்னர் ஒருவழியாக 1914-ல் இங்கிலாந்து செல்ல ராமானுஜன் ஒப்புக்கொண்டார்.

இதற்கு ஆகும் செலவை யார் ஏற்றுக்கொள்வார்கள்? சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், சென்னை மாகாண கவர்னர் ஆகியோர் முயற்சியால் சென்னை பல்கலைக்கழகம் இந்தச் செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. 1914 மார்ச்சில் இங்கிலாந்து செல்லும் கப்பல் கிளம்பியது.

கேம்பிரிட்ஜ் சென்ற ராமானுஜன் அங்குள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்துகொண்டார். அவரது ஆராய்ச்சிகள் விரைவாகச் செல்லத் தொடங்கின. உணவு, குளிர் ஆகியவற்றில் சில சுணக்கங்கள் இருந்தாலும் ராமானுஜன் ஓரளவுக்கு அவற்றை எதிர்கொண்டு வாழத் தொடங்கியிருந்தார். ஆனால் அதே ஆண்டு முதல் உலகப்போர், ஜூன் 1914-ல் வெடித்தது. இந்தப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா என்று அனைத்துப் பெரிய நாடுகளும் ஈடுபட்டன. இது இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. ராமானுஜனின் வாழ்க்கையையும்தான்.

11 செப்டம்பர் 1914 அன்று ராமானுஜன் தன் தாய்க்கு முதல் உலகப்போர் குறித்து நீண்ட கடிதத்தை (தமிழில்) எழுதினார். அதிலிருந்து சிறு பகுதி கீழே:

இப்பொழுது நடக்கிற சண்டைபோல் வேறு ஒரு சமயமும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான ஜனங்கள் சண்டை. ஒரு கோடி இரண்டு கோடியில்லை. ஜர்மானியர்கள் அனேக பட்டணங்களையெல்லாம் கொளுத்தி, எல்லா ஜனங்களையும் குழந்தை முதல் பெண்கள், பெரியவர்கள் எல்லாரையும் வெட்டி எறிந்துகொண்டிருக்கிறார்கள். பெல்ஜியம் என்ற சின்ன தேசத்தை அனேகமாய் நாசம் செய்துவிட்டார்கள்.

...

இது பூமியில் சண்டை, சமுத்திரத்தில் நடுவில் இருந்துகொண்டு சண்டைபோட்டு அனேக கப்பலை முழுக்கடிக்கிறார்கள். இது இரண்டு விதம். நேராக கப்பலை சுடுகிறதொன்று; தெரியாமல் தண்ணிக்கு கீழாக போய் கப்பலை முட்டி கவிழ்த்து விடுகிறதொன்று. இது மட்டுமல்ல. ஆகாசத்தில் வெகு தூரத்தில் விமானங்களில் ஏறி வந்து ஆகாசத்திலிருந்தபடியே குண்டு வைத்து ஊரை நாசம் செய்கிறார்கள். ஆகாசத்தில் விமானங்கள் வருவதை பார்த்துவிட்டால் ஊரிலிருந்து விமானங்கள் கிளம்பி ஆகாசத்தில் வெகுவேகமாகப் பறந்துபோய், விமானங்களை மோதவிட்டு, விமானங்கள் உடைந்துபோய் சாகிறார்கள்.
லிட்டில்வுட் போரில் ஈடுபட சென்றுவிட்டார். மற்ற பல பேராசிரியர்கள் போர் காரணமாகத் தங்கள் ஆராய்ச்சி ஆர்வத்தை இழந்துவிட்டனர். ஆனால் ஹார்டியும் ராமானுஜனும் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். போர் தீவிரமாக நடக்கும்போதும் 1915-ல் ராமானுஜன் மிக அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். அவற்றுக்காகவே ராமானுஜனுக்கு இன்றைய டாக்டரேட் பட்டத்துக்கு இணையாக டிரினிடி கல்லூரி பி.ஏ (ஆராய்ச்சி) என்ற பட்டத்தை மார்ச் 1916-ல் வழங்கியது. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் இரண்டாண்டு ஃபெயில், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாண்டு ஃபெயில் ஆகிய அவமரியாதைகளை இந்தச் சிறப்புப் பட்டம் துடைத்தது.

1916-லும் தொடர்ந்தது கணித ஆராய்ச்சி. ஆனால் ஏப்ரல் 1917-ல் உடல் நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார் ராமானுஜன். உடனடியாக இந்தியா அனுப்பினால் அங்கே குடும்பத்தார் கவனித்துக்கொள்வார்கள். ஆனால் அப்போது முதலாம் உலகப்போர் தொடர்ந்து தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. இங்கிலாந்தின் பயணிகள் கப்பல்களைக்கூட ஜெர்மனி குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தது. எனவே போர் முடியும்வரை ராமானுஜனை இங்கிலாந்திலேயே வைத்திருப்பது என்று முடிவானது. உணவு இப்போது பெரும் பிரச்னை ஆயிற்று.

மே 1918-ல், ராமானுஜனுக்கு ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி என்ற கௌரவம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் ஃபெலோவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, இனி அவர் ஹார்டி போல், கேம்பிரிட்ஜில் ஆராய்ச்சிகள் செய்யலாம். மாதச் சம்பளம் உண்டு. பிற மாணவர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருக்கலாம்.

ஆனால் அப்படி எதையும் அவரால் செய்யமுடியவில்லை. உடல்நிலை அதற்கு இடம் தரவில்லை. அதற்குள்ளாக முதல் உலகப்போர் முடிந்திருந்ததால், மார்ச் 1919-ல் கப்பலில் ஏற்றி அவரை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.

1917-ல் தொடங்கிய வியாதி அவரைத் தொடர்ந்து பீடித்தபடி இருந்தாலும் படுத்த படுக்கையாக இருந்தபடியே அவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். இறுதியாக 26 ஏப்ரல் 1920 அன்று சென்னை சேத்துப்பட்டில் தான் வசித்த வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 33-தான்.

ராமானுஜனின் தனி வாழ்வு மிகவும் சோகமாகவே இருந்தது. இந்தியாவில் இருந்ததவரை அவர் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை. மனைவியோ சிறுமி. வீட்டில் பெரும்பாலும் ஏழைமைதான். அவர் மிக மகிழ்ச்சியாக இருந்தது சென்னைத் துறைமுகத்தில் வேலை பெற்றபோதுதான். பின்னர் இங்கிலாந்து சென்றதும் முதல் உலகப்போர் தொல்லை. அப்படியும் அவர் மிகச் சிறப்பாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்யத் தொடங்கியிருந்தார். ஆனால் விரைவில் உடல் நலக்கோளாறு.

இந்தச் சில ஆண்டுகளுக்குள்ளாக அவர் செய்துவிட்டுப் போயிருப்பவை இன்று உலகின் பல முன்னணி கணித விற்பன்னர்களைத் தூக்கமிழக்கச் செய்துவருகிறது.

தொலைந்த நோட்டுப் புத்தகங்களும் கரைந்த மேதைமையும்

தன் 33-வது வயதில் இறந்துபோன ஸ்ரீநிவாச ராமானுஜன் தன் வாழ்நாளில் என்னதான் சாதித்தார்? எதன் அடிப்படையில் நாம் அவரைக் கணிதமேதை என்று கொண்டாடுகிறோம்? அல்லது பொதுவாக, ‘வெள்ளைக்காரனே சொல்லிட்டான்!’ என்ற அடிப்படையில் அவரை மேதையாக்கி, படம் வைத்து, பூ மாலை சார்த்தி பூஜிக்கத் தொடங்கிவிடுகிறோமா?

முதலில் ராமானுஜனின் கல்வியைப் பற்றிப் பார்ப்போம். ராமானுஜனுக்கு அடிப்படைக் கணிதக் கல்வி என்பது சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவில்லை. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, நம் பள்ளிக்கூடக் கணிதம் உசத்தியான பாடத்திட்டமாக இருப்பதில்லை. அதுவும் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் என்ன இருந்திருக்க முடியும்? கொஞ்சம் அல்ஜீப்ரா, கொஞ்சம் டிரிக்னாமெட்ரி (முக்கோணவியல்). கால்குலஸ் எனப்படும் நுண்கணிதம்கூட பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, அதிர்ஷ்டவசமாக, ராமானுஜனுக்கு லோனியின் ‘பிளேன் டிரிக்னாமெட்ரி’ என்ற புத்தகம் கிடைத்தது. உங்கள் கையருகே இந்தப் புத்தகம் இருந்தால் திறந்து பாருங்கள். நான் இதனைச் சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது தெருவோரத்தில் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இதில் டிரிக்னாமெட்ரியைத் தாண்டி மேலும் பல விஷயங்கள் உள்ளன. ஹை ஸ்கூல் படிக்கும்போதே இந்தப் புத்தகத்தை ராமானுஜன் கரைத்துக் குடிந்திருந்தார்.

பின்னர் ராமானுஜனுக்குக் கிடைத்தது ஜி.எஸ்.கார் எழுதிய ‘சினாப்சிஸ்’ என்ற புத்தகம். இது கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வசதியான, கணிதச் சூத்திரங்கள் மட்டுமே அடங்கிய ஒரு புத்தகம். இதில் செய்முறை இருக்காது. ஏன் இந்தச் சூத்திரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது என்ற பின்னணி இருக்காது. ஆனால் அந்தக் காலத்தில் கல்லூரி நிலைக் கணிதம் என்று சொல்லப்படும் அனைத்தும் அப்படியே சாறு பிழியப்பட்டு அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்தப் புத்தகம்தான் ராமானுஜனை ஒரு படி மேலே தூக்கிச் சென்றிருக்கவேண்டும் என்று அனைத்து நிபுணர்களும் கருதுகிறார்கள். ஓரளவுக்கு அடிப்படைக் கணிதம் தெரிந்திருந்த காரணத்தால், மீதியை இந்தச் சூத்திரங்களின் அடிப்படையில் ராமானுஜன் தானாகவே ‘டிரைவ்’ செய்து பார்த்திருக்கவேண்டும். அதாவது ஒரு கணிதச் சமன்பாட்டைப் பார்த்ததும் அது இப்படித்தான் வந்திருக்கவேண்டும் என்று யாருமே சொல்லித்தராமல் ராமானுஜன் தானாகவே அதன் ‘உண்மையை’ தருவித்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இதுமட்டும் போதுமா ஒரு மனிதன் கணித மேதையாக?

அடுத்த கட்டமாக ராமானுஜனுக்கு ஒரு பெரிய ‘லக்கி பிரேக்’ கிடைத்தது. கும்பகோணம் கல்லுரியில் அவரை ஃபெயில் ஆக்கிவிட்டனர். அதன் விளைவாக அவர் சென்னை வந்து சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம்.

இங்குதான் அவர் ஓரளவுக்கு உயர் கணிதத்தில் பயிற்சி பெற்றவர்களைச் சந்திக்க ஆரம்பித்தார். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் மிக முக்கியமான தொடர்பாகிறார். அவர்மூலம் ராமானுஜனுக்கு ஏராளமான கணிதப் புத்தகங்கள் கிடைத்திருக்கவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் ராமானுஜனுக்கு நிச்சயமாக உதவியிருக்கவேண்டும். மிகத் தெளிவான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்குச் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ராமானுஜன் நிச்சயமாக ஏ.எல். பேக்கர் எழுதிய ‘எல்லிப்டிக் ஃபங்க்ஷன்’ என்ற புத்தகத்தைப் படித்திருக்கவேண்டும் என்கிறார் புரூஸ் பெர்ண்ட் என்ற அமெரிக்க கணிதப் பேராசிரியர். கூடவே கிரீன்ஹில் எழுதிய ‘தி அப்ளிகேஷன்ஸ் ஆஃப் எல்லிப்டிக் ஃபங்க்ஷன்ஸ்’ என்ற புத்தகத்தையும் ராமானுஜன் படித்திருக்கவேண்டும் என்றும் யூகிக்க முடிகிறது. இந்தப் புத்தகங்கள் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் அப்போது இருந்தன என்றும் தெரியவருகிறது.

இந்தப் புத்தகங்கள் உயர் கணித ஆராய்ச்சிகளை நோக்கி ராமானுஜனை இழுத்துச் சென்றன.

கணித ஆராய்ச்சிகளை எப்படிச் செய்வது என்று வழிகாட்ட யாரும் இல்லையென்றாலும் சரியான பாதையை நோக்கிச் செல்வது எப்படி என்று தானாகவே ராமானுஜன் கண்டுபிடித்திருக்கவேண்டும்.

இந்தக் காலகட்டத்தின்போதுதான் ராமானுஜன் தன் நோட்டுப் புத்தகங்களில் சில குறிப்புகளை எழுதத் தொடங்கினார். அவை பெரும்பாலும் முடிவுபெற்ற சூத்திரங்களாக, சமன்பாடுகளாக இருந்தன. ஒரு சிலேட்டில் குச்சியை வைத்துக் கணக்கு போட்டுவிட்டு, இறுதி முடிவை மட்டும் தன் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ளத் தொடங்கினார் ராமானுஜன். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று: ஜி.எஸ்.கார் புத்தகத்தில் அப்படித்தான் முடிவுகள் இருந்தன. நிரூபணங்கள் கிடையாது. வெறும் முடிவுகள் மட்டுமே. இரண்டாவது, பண விவகாரம். ராமானுஜன் இந்தக் கட்டத்தில் கையில் பணமே இல்லாதவராக, தன் சாப்பாட்டுக்கு எப்படியாவது வழி தேடுபவராக இருந்தார். தொடர்ந்து கல்லூரித் தேர்வில் ஃபெயில் ஆகிக்கொண்டிருந்தார். ட்யூஷன் எடுத்துச் சம்பாதித்தார். அதுவும் தொடர்ந்து பணம் தரவிவில்லை. ஒருவிதமான யாசகத்தால்தான் அவரது வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. அப்படி இருக்கும்போது வேண்டிய அளவு காகிதம் வாங்க அவரிடம் பணம் இருந்திருக்கமுடியாது.

1907-ல் வி. ராமசாமி ஐயர் என்பவர் பூனா நகரில் ‘அனலிடிக் கிளப்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இது 1910-ல் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி என்று பெயர் மாற்றம் பெற்றது. அது ‘தி ஜர்னல் ஆஃப் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி’ என்ற ஆய்விதழை வெளியிட ஆரம்பித்தது. இந்த ஆய்விதழ் ராமானுஜனுக்குப் பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த ஆய்விதழில் ராமானுஜன் பல கணிதப் புதிர்களை வெளியிட்டதோடு, பிறர் வெளியிடும் கணிதப் புதிர்களையும் விரைவாக விடுவித்தார். அத்துடன் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். 1911-ல் ‘பெர்னோலி எண்களின் சில குணாதிசயங்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டார். ஆக, இந்தக் கட்டத்தில் ராமானுஜனுக்கு கணித ஆய்வுக் கட்டுரைகளை எழுதக்கூடிய திறன் வந்துவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். மேலும் நம்பர் தியரி, கால்குலஸ் போன்ற பகுதிகளில் ராமானுஜனுக்கு மிக நல்ல புரிதல் வந்திருந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

சென்னைத் துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ராமானுஜனுக்கு நாரயண ஐயருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. நாராயண ஐயர் ராமனுஜனின் மேலதிகாரி என்றாலும் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். நாராயண ஐயர் கணிதத்தில் பட்டம் பெற்றதோடு மட்டுமின்றி, ஜர்னல் ஆஃப் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி இதழுக்குக் கணிதப் புதிர்களையும் அனுப்பிவந்தார். அந்தக் கட்டத்தில் இந்தியாவிலேயே கணிதத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் என்று பார்த்தால் நூறு பேர்களுக்கு உள்ளாக இருக்கும். அதில் ஒருவரான நாராயண ஐயர் ராமானுஜனின் நண்பராக வந்து சேர்ந்தது ராமானுஜனின் அதிர்ஷ்டமே.

மேலும் அந்தக் காலத்தில் கணித ஆராய்ச்சி என்றால் இந்தியாவில் மொத்தம் மூன்று இடங்கள்தான் இருந்திருக்க முடியும். கொல்கத்தா, மும்பை, சென்னை. அதில் சென்னையில்தான் முதல் பொறியியல் கல்லூரி நிர்மாணிக்கப்பட்டு உயர் கணிதம் தெரிந்த பேராசிரியர்கள் வேலையில் இருந்தனர். சென்னைத் துறைமுகத்தின் தலைவரான சர் ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் என்பவரே பொறியியல் மாணவர். அவரது ஆசிரியர்தான் கிண்டியின் உள்ள பொறியியல் கல்லூரியில் வேலை செய்துவந்தார்.

இந்த உறவுகளின் அடிப்படையில்தான் ராமானுஜன் சரமாரியாகக் கடிதங்கள் எழுதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரி ஃபெல்லோவான ஜி.எச். ஹார்டியின் கண்களைச் சென்றடைந்தார்.

கேம்பிரிட்ஜ் செல்வதற்குமுன்னரேயே கணிதத்தில் தானாகவே நன்கு தேர்ச்சி அடைந்திருந்தாலும் கேம்பிரிட்ஜில் முதல் வருடத்தில் தன்னிடம் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றையும் ராமானுஜன் களைந்தார். உயர் கணித ஆராய்ச்சி என்றால் என்ன, எப்படி அதனை அணுகவேண்டும், எங்கெல்லாம் புதைகுழிகள் உள்ளன, அவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது போன்ற அனைத்தும் இந்தக் கட்டத்தில்தான் ராமானுஜனுக்குத் தெரியவந்தன. அதே சமயம், ‘ரிகர்’ என்ற கணித வரைமுறைக்குள் முற்றிலுமாகச் சிக்கிக்கொள்ளாமல் கிரியேடிவிடி என்ற படைப்புத்தன்மை சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டது ராமானுஜனின் அதிர்ஷ்டமே.

முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தாலும் ராமானுஜனும் ஹார்டியும் சேர்ந்து 1915, 1916 ஆண்டுகளில் செய்த சாதனைகள் ஏராளம். வரிசையாகப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த ஆண்டுகளில் ராமானுஜன் வெளியிட்டார். முனைவர் பட்டம் கிடைத்தது. டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோ, ராயல் சொசைட்டி ஃபெல்லோ போன்ற பதவிகள் கிடைத்தன.

ஆனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட, தன் வாழ்நாள் இனி சொற்பம்தான் என்பதை ராமானுஜன் புரிந்துகொண்டார். எனவே முன்னைவிடக் கடுமையாக உணவு, நீரையும் மறந்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள் பற்றிச் சற்றே பார்ப்போம். இந்தியா வந்தபின்னும் தொடர்ந்து தன் ஆராய்ச்சிகளைக் கடித வடிவில் ஹார்டிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் ராமானுஜன். அவர் இறந்தபின், அவரது ஆராய்ச்சிகளை மொத்தமாகத் தொகுத்து, எடிட் செய்து, அவற்றை வெளியிடவேண்டும் என்று ஹார்டி விரும்பினார். வாட்சன், வில்சன் என்ற இரண்டு பிரிட்டிஷ் பேராசிரியர்கள் இந்தப் பணியில் இறங்கினார்கள். வில்சன் துரதிர்ஷ்டவசமாக விரைவிலேயே இறந்துபோனார். வாட்சன் மட்டும் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டார். அப்போது ராமானுஜனின் இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டும்தான் ராமானுஜனது எஞ்சியுள்ள ஆராய்ச்சிகள் என்று கருதப்பட்டிருந்தது.

இந்த இரண்டு புத்தகங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். வீணாகிப்போய்விடக்கூடாதே என்று ஒவ்வொரு பக்கத்தையும் லாமினேட் செய்துள்ளனர். ஆனால் அதன் காரணமாகவே இது விரைவில் வீணாகிவிடும் என்று தெரிகிறது. இந்த நோட்டுப் புத்தகங்களை மும்பையில் உள்ள டி.ஐ.எஃப்.ஆர் ஸ்கேன் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.

வாட்சன் இந்த இரு நோட்டுப் புத்தகங்களையும் எடிட் செய்யும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சோர்வு காரணமாகவும் வயதான காரணத்தாலும் மேற்கொண்டு ஆராயாமல் அவற்றைக் கைவிட்டிருந்தார். பின் அவர் இறந்துவிட்டார்.

ஹார்டியிடம் ஆராய்ச்சி செய்த கடைசி மாணவரான ராங்கின், வாட்சனின் மனைவியிடம் பேசி, அவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதிகள், துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றைப் பெற்று அவற்றை கேம்பிரிட்ஜின் டிரினிடி கல்லூரி நூலகத்தில் கொடுத்தார். அவர்கள் அதனை கேடலாக் செய்துவைத்திருந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜ் ஆண்டிரூஸ் என்ற பேராசிரியர் ராமானுஜனின் கணிதத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கினார். டி.ஐ.எஃப்.ஆர் வெளியிட்ட நோட்டுப் புத்தகங்களிலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர், வாட்சன் என்னதான் செய்திருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள டிரினிடி கல்லூரியின் நூலகத்துக்குச் சென்றார். அங்கே வாட்சனின் காகிதங்கள் என்று அவர்கள் வைத்திருந்த கட்டுக்குள் தோண்டித் துருவியபோது ராமானுஜன் கைப்பட எழுதிய மேலும் சில காகிதங்கள் கிடைத்தன. அதுநாள்வரை யாருக்குமே தெரிந்திராத ஒரு விஷயம் இது. சொல்லப்போனால் வாட்சனுமே அந்தக் காகிதங்களைப் பார்வையிட்டிருக்கவில்லை.

ராமானுஜன் இறந்தவுடன் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து யாரோ இரண்டு பேர் வந்து ராமானுஜனின் காகிதங்களையெல்லாம் சேகரித்து அவற்றை ஹார்டிக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஹார்டி அதற்குள் போக விரும்பாமல் அந்தக் கட்டை அப்படியே வாட்சனிடம் கொடுத்திருக்கிறார். வாட்சன் அவற்றுக்குள் புகாமல் அப்படியே விட்டுச் சென்றிருக்கிறார். இபோது ஆண்டிரூஸ் கையில் அவை சிக்கின. இதனை ஆண்டிரூஸ் ‘ராமானுஜனின் தொலைந்த நோட்டுப் புத்தகம்’ என்று பெயரிட்டு அழைத்தார்.

ஆண்டிரூஸை அடுத்து அமெரிக்கக் கணிதப் பேராசிரியர் புரூஸ் பெர்ண்டும் ராமானுஜன் ஆராய்ச்சியில் இறங்கினார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தனர். ராமானுஜனின் இரண்டு நோட்டுப் புத்தகங்கள், தொலைந்த நோட்டுப் புத்தகம் ஆகிய மூன்றையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு சமன்பாட்டையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். அவை சரியா என்று பார்க்கவேண்டும். சரி என்றால் நிரூபிக்கவேண்டும். இல்லை என்றால் எங்கே தவறு என்று சொல்லவேண்டும். தவறைச் சரி செய்யமுடியுமா என்றால் முயலவேண்டும். இவற்றைத் தொகுத்துப் புத்தகங்களாகக் கொண்டுவரவேண்டும்.

இப்படி ஆரம்பித்த ஆராய்ச்சியில் இன்று கிட்டத்தட்ட 90% முடித்துவிட்டனர். கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட கணித முடிவுகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் உள்ளன என்கிறார் பெர்ண்ட். அவற்றில் பத்துக்கும் குறைவானவையே தவறான முடிவுகள் என்கிறார் அவர். இந்த அளவுக்கு சக்சஸ் ரேட் கணிதத் துறையில் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.

ராமானுஜனின் ஆராய்ச்சிகளுக்கும் பிறரது ஆராய்ச்சிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் அவரிடம் கேட்டேன். பிறர் ஆராய்ச்சி செய்தால் மேற்கொண்டு அதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் மூடிவைத்துவிடுவார்கள்; ஆனால் ராமானுஜன் ஒரு நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பல அற்புதமான வைரங்களைத் தோண்டி எடுத்தபடியே சென்றுள்ளார்; அவர் பின்னால் நாங்கள் அனைவரும் சென்று அவர் தோண்டி எடுக்காத முத்துக்களைத் தோண்டி எடுக்கிறோம் என்கிறார் பெர்ண்ட். அந்த அளவுக்கு விரிவான ஒரு வீச்சு ராமானுஜனிடம் இருந்தது. அதே நேரம் புதிதாக வரும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் மேலும் செய்வதற்கும் இடமும் இருந்தது.

ராமானுஜனைப் பற்றி எழுதும்போது ஒருவரைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அவர்தான் பி.கே.சீனிவாசன். விரிவாகிவிடும் என்று அஞ்சிக் குறைவாகவே முடித்துக்கொள்கிறேன். பள்ளி ஆசிரியரான இவர் மட்டும் இல்லை என்றால் ராமானுஜன் பற்றிய துண்டுத் துணுக்குக் காகிதங்கள், படங்கள் போன்ற எவையுமே நமக்குக் கிடைத்திருக்காது. அதேபோல குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றவர் ராபர்ட் கனீகெல். ராமானுஜனின் முழுமையான வாழ்க்கை வரலாறை எழுதி நம் நாட்டவர்க்கே ராமானுஜனைப் பற்றி அறிமுகம் செய்தவர். அதன்பின் பேராசிரியர்கள் ஆண்டிரூஸ், பெர்ண்ட். அவர்கள் இல்லாவிட்டால் இன்று ராமானுஜனின் சாதனைகள் உலகில் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் ஹார்டி, லிட்டில்வுட். இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் ராமானுஜன் வெளியுலகுக்கு வந்திருக்க முடியாது.

இவர்கள் அனைவருக்கும் நமது வந்தனங்கள்.

Monday, July 04, 2011

இன்றுமுதல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவன்

இன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் எம்.ஏ வைணவம் படிப்புக்குப் பதிந்துகொண்டேன்.

வரிசை எண்ணைப் பார்க்கும்போது நான் இந்தப் படிப்புக்கு ஏழாவது மாணவன் என்று ஊகிக்கமுடிகிறது.

பதிந்துகொள்வது மிகவும் எளிதான வழிமுறைதான். ஒற்றைச் சாளரமுறையில் போனவுடனேயே முடிந்துவிடக்கூடிய காரியம். என் விண்ணப்பப் படிவத்தைச் சரிபார்க்கும்போது அவர்களுக்குச் சிறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஐஐடியில் டிரான்ஸ்ஃபர் சர்ட்டிஃபிகேட் (டி.சி) கொடுப்பதில்லை. இருந்தாலும், ஐஐடி சென்று மைக்ரேஷன் சர்ட்டிஃபிகேட் என்று ஒன்றை வாங்கியிருந்தேன். ஆனால் அதனால் பயன் ஏதும் இல்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது. அவர்களுக்குத் தேவை, என் பெயருடன் என் சரியான பிறந்த தேதி. அதைத்தான் அவர்கள் டி.சியில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்குபதில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அந்தத் தகவல் இருக்கும் என்றேன். அதனை எடுத்துக்கொண்டார்கள்.

பத்து நிமிடத்துக்குள்ளாக அட்மிஷனை முடித்து, கட்டணம் செலுத்த அனுப்பினார்கள். தொலைதூரக் கல்வி நிறுவனக் கட்டடத்தின் உள்ளேயே இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கவுண்டர் சரியான பாடாவதி. அதன்முன் சுமார் 12 பேர் ஆண்களும் பெண்களுமாக நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் பணம் பெற்று ரசீது தர வங்கி ஊழியர் அரை மணி நேரம் எடுத்துக்கொள்வார் போலத் தொண்றியது. வெளியே ஒரு இந்தியன் வங்கிக் கிளை தென்பட்டது ஞாபகம் வந்து அங்கு சென்று பணத்தைச் செலுத்திவிட்டு வந்து பார்த்தால் க்யூ அப்படியே தொங்கியபடி நின்றுகொண்டிருந்தது!

அடுத்து ரசீதைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, ஐடி கார்டையும் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன்.

முதலாம் ஆண்டில் மொத்தம் ஐந்து தாள்கள்:

1. வைணவ சமய வரலாறு. எழுதியவர் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார். புத்தகம் வைணவ சமய வரலாறு என்று சொன்னாலும் உண்மையில் இது ஸ்ரீவைஷ்ணவத்தின் - அதாவது ராமானுஜ பாரம்பரியமான விசிஷ்டாத்வைத உபயவேதாந்த வைணவத்தின் வரலாறு. வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும், பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் வைணவம் பற்றிய கருத்துகளிலிருந்து ஆரம்பிக்கும் புத்தகம், அடுத்து ஆழ்வார்கள் வரலாறுக்குச் செல்கிறது. அடுத்து நாதமுனிகள் தொடங்கி ராமானுஜர் வரை வருகிறது. இறுதியாக ராமானுஜருக்குப் பிந்தைய ஆசாரியர்கள் - வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் வரை சென்று முடிகிறது.

புத்தகத்தில் நிறைய எழுத்துப் பிழைகள்! பல்கலைக்கழகத்துக்கு உபயோகமாக, என் புத்தகத்தில் திருத்தங்களைச் செய்து ஆண்டிறுதியில் அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

2. தொல் இலக்கியங்களில் வைணவம். எழுதியவர் ஸுதர்சனர் எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். சமஸ்கிருதத்தில் புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், ஈஸாவாஸ்யோபனிஷத், தமிழில் பரிபாடல் ஆகியவற்றில் வந்துள்ள வைணவக் கருத்துகளை விளக்குகிறது இந்தப் புத்தகம். இதை நான் ரசித்துப் படிப்பேன் என்றே நினைக்கிறேன். முக்கியமாக பரிபாடலுக்கு - பரிபாடலின் வைணவப்பகுதிக்கு - எளிய தமிழில் உரை எழுதவேண்டும் என்று வெகு காலமாகவே நினைத்துவருகிறேன்.

3. திருமங்கையாழ்வார் பாசுரங்கள். எழுதியவர் முனைவர் இரா. ரங்கராஜன். பெரிய திருமொழியிலிருந்து சில பாசுரங்கள், சிறிய திருமடல், திருநெடுந்தாண்டகம் ஆகியவை மட்டுமே. சிறிய திருமடலும் பெரிய திருமடலும் தமிழ் பக்தி இலக்கியத்தின் மாஸ்டர்பீஸ். பெரிய திருமொழியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பாசுரங்களும் பிரமாதமானவை.

4. இரகசிய இலக்கியம். எழுதியவர்கள்: முனைவர் டி. ராஜலக்ஷ்மி, முனைவர் எம்.கே. சீனிவாசன். ரகஸ்யம் என்று சொல்லப்படுவது மூன்று மந்திரங்களான: (1) எட்டெழுத்து (ஓம் நமோ நாராயணாய) (2) த்வயம் எனப்படும் ‘ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே ஸ்ரீமதே நாராயணாய நம:’ (3) சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும், ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:’ இந்த மூன்று மந்திரங்களுக்கும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக நுணுக்கமான (எனவே ரகசியமான) பொருள் உள்ளது. ஆசாரியனிடமிருந்துதான் இவற்றைக் கற்கவேண்டும் என்பதன்மூலம் ஆசார்யனின் இடம் உயர்வாகக் குறிக்கப்படுகிறது.

வடக்குத் திருவீதிப் பிள்ளையின் பிள்ளை லோகாசாரியரின் யாத்ருச்சிகப்படி (இவரது முமுக்ஷுப்படி என்ற நூல் அதிகப் பிரபலமானது), ஸ்ரீவசனபூஷணம், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசார்யஹ்ருதயம், வேதாந்த தேசிகரின் ரஹஸ்யத்ரயஸாரம் ஆகியவற்றை முன்வைத்து வைணவ ரகசியங்கள் பற்றி இந்தப் பாடப் புத்தகம் விரித்துரைக்கிறது.

சமாஸ்ரயணம், பரன்யாசம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரும்பாலும் இந்த மந்திரத்தைக் கற்று தினசரி சொல்லிக்கொண்டிருந்தாலும் அதிகம் இதன் நுண்ணிய விளக்கங்களில் ஆழ்ந்திருக்கமாட்டார்கள்.

5. இறுதியாக வைணவத் தத்துவங்களின் பிரிவுகள் என்ற தாள். எழுதியவர் முனைவர் எம்.கே.சீனிவாசன். ஒருவிதத்தில் இதுதான் ‘இந்தியாவில் வைணவமும் பிற வைதீக சமயங்களும் - வரலாறு’ என்ற தலைப்பில் இருக்கக்கூடியது. உத்தர மீமாம்சைப் பின்னணியில் வந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சமயங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தில் ஆரம்பிக்கிறது. அடுத்து நிம்பார்கரின் த்வைத அத்வைத தத்துவம், விஷ்ணு ஸ்வாமியின் விசுத்த அத்வைதம், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அசிந்த்ய பேதாபேதம் (கௌடீய வைஷ்ணவம்), ராமானந்தரின் ஜானகீ வல்லபசம்பிரதாயம், வல்லபாசார்யரின் சுத்த அத்வைதம், சங்கர தேவரின் மஹாபுருஷ சித்தாந்தம், ஸ்வாமி நாராயணரின் நவ்ய விசிஷ்டாத்வைதம் ஆகியவை பற்றிய அறிமுகங்களையும் ஆசிரியர் கொடுத்துள்ளார். இவற்றில் தெற்கில் உள்ள சம்பிரதாயங்களைத் தவிர பிறவற்றைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய, அவை குறித்து எந்தப் புரிதலும் கிடையாது. எனவே இவற்றைப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது.

***

ஆழ்வார்கள் பற்றி இன்னுமொரு தாள் முதல் ஆண்டிலேயே இருந்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் + ஐந்தாம் தாள்களை ஒரே பாடமாகச் சுருக்கி வைத்துவிட்டு, பெரியாழ்வார்/ஆண்டாள் பாசுரங்களை ஒரு பாடமாகக் கொடுத்திருக்கலாம்.

***

இனி நான் எழுதவுள்ள வைணவம் சம்பந்தமான பதிவுகள் அனைத்துக்கும் ‘வைணவம்’ என்று tag கொடுத்து எழுதுகிறேன். இவற்றைத் தனியே சேர்த்துவைத்துப் படிக்க விரும்புபவர்களுக்கும் சரி, ஒதுக்க விரும்புபவர்களுக்கும் சரி, உபயோகமாக இருக்கும்.

Friday, July 01, 2011

தொல்காப்பியம் பற்றிப் பேசுகிறேன்: சனிக்கிழமை, 2 ஜூலை

நாளை, சனிக்கிழமை, தொல்காப்பியம் பற்றி, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் ஒன்றில் பேசுகிறேன். தியாகராய நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேரம்: மாலை 5.30 மணி.

நான் தமிழ் அறிஞன் அல்லன். தமிழ் இலக்கணம் என் துறை அல்ல. தொல்காப்பியத்தில் எனக்கு நாட்டம் ஏற்பட்டதற்குக் காரணம் தமிழில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் களைவதற்கு ஒரு மென்பொருள் உருவாக்குவது குறித்தே.

ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட மென்பொருள்கள் நன்றாக இயங்குவதை நீங்கள் அறிவீர்கள். இத்தனைக்கும் ஆங்கில மொழிக்கான இலக்கணம் கட்டுக்கோப்பானதல்ல. புறனடைகள் ஏராளம். அப்படி இருந்தும்கூட அம்மொழிக்கான இலக்கணத்தைக் கணினி அறியும்படிச் சொல்லித்தருவதில் மென்பொருளாளர்கள் வெற்றிகண்டிருக்கிறார்கள்.

ஆனால் அற்புதமான ஓர் இலக்கணம் கொண்ட மொழியான தமிழுக்கு இது இன்றும் சரியாகச் சாத்தியப்படாமல் உள்ளது. இன்றைய தமிழ், தொல்காப்பிய விதிகளிலிருந்து சற்றே நகர்ந்து வந்துள்ளது என்றாலும் அந்த நகர்வு குறைவானதே. உரைநடை பெரிதாக வளர்ந்த 19-ம் நூற்றாண்டிலும் ஆங்கிலத் தாக்கம் மிக அதிகமாக உள்ள இன்றைய 21-ம் நூற்றாண்டிலும்கூட தமிழின் விதிகள் தொல்காப்பியத்திலிருந்து மிக அதிகமாக நகர்ந்துவிடவில்லை. இது தமிழ் மொழியின் வலுவைத்தான் காட்டுகிறது.

தொல்காப்பியத்துக்குப் பிறகு பவணந்தி முனிவரின் நன்னூல் அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இலக்கண நூல். பின்னர் வீரமாமுனிவர் (ஜோசஃப் பெஸ்கி) தமிழிலக்கணத்தை லத்தீன் மொழியில் உரைநடையில் எழுதினார். அதன் ஆங்கில வடிவம் இன்று கிடைக்கிறது. இன்றைய தேதியில் தமிழ் உரைநடைக்கு அழகான இலக்கணம் வேண்டுமென்றால் ஒருவர் தாமஸ் லெஹ்மான் எழுதிய புத்தகத்துக்குச் செல்லவேண்டும்! மேலும் சில நல்ல புத்தகங்கள் இருக்கலாம்.

தொல்காப்பியத்தில் உள்ளவற்றை என் வசதிக்காக நான் இப்படி எடுத்துக்கொள்கிறேன்:
    (1) மொழியின் அடிப்படை இலக்கணம்: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய பகுதிகளில் சொல்லப்பட்டவை
    (2) பாவகைகள், எழுத்து, அசை, சீர், அடி தொடை, அணி முதலியன: பொருளதிகாரத்தின் சில பகுதிகள்
    (3) தமிழர் வாழ்க்கைமுறை பற்றியது: பொருளதிகாரத்தின் பிற பகுதிகள் - பாடுபொருள் பற்றிக் குறிப்பிடும்போது திணை, துறை தொடங்கி களவு, கற்பு, வாழ்க்கை என்று பலவற்றைக் கூறுகிறார் ஆசிரியர். இதுதான் விவாதத்துக்குரிய பகுதியும்கூட. திராவிட/தமிழுணர்வாளர்கள் எழுதும் உரைகள் பாரம்பரிய உரையாசிரியர்களிடமிருந்து விலகிச் செல்லும் பகுதியும் இதுதான். தொல்காப்பியர் பார்ப்பனரா, ஆரியத்தை உள்ளே புகுத்தினவரா, அல்லது ‘அவை’யெல்லாம் இடைச் செருகல்களா, அல்லது அவற்றை வேறு மாதிரிப் பொருள்கொள்ளவேண்டுமா போன்ற பிற

நாளைய பேச்சின்போது மேற்குறிப்பிட்ட மூன்றைப் பற்றியும் சொல்வேன் என்றாலும், எனக்கு ஆர்வத்தை அதிகம் அளிப்பது பகுதி (1). அதிலிருந்துதான் தமிழ் ஸ்பெல்செக்கர் போன்ற மென்பொருள்களை உருவாக்கமுடியும். இன்று தமிழ்ப் பா இறந்துவிட்டது. விளையாட்டாக யாராவது வெண்பா எழுதலாம். விருத்தம் வடிக்கலாம். (விருத்தம் தொல்காப்பிய காலத்துக்குப் பிற்பட்டது.) எனவே பகுதி (2) வெறும் விளையாட்டுக்கு மட்டுமே பயன்படும். பகுதி (3) ஓரளவுக்கு வரலாற்றுப் பார்வையைத் தரலாமே ஒழிய, இன்றைய வாழ்க்கை முறைக்கு உகந்தது என்று சொல்லமுடியாது. மணமகன், மணமகளுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தம் என்று தொல்காப்பியர் சொல்வது பாரத்மேட்ரிமனி தளத்துக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கலாம்:-)

அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடக்க உள்ள பேச்சில், கணினியில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை திருத்திகளை எழுதும்போது எம்மாதிரியான விதிகளை உள்ளிடவேண்டும், தொல்காப்பியம் தமிழுக்கு எப்படிப்பட்ட சேவையைச் செய்துள்ளது போன்றவற்றைப் பற்றிப் பேச உள்ளேன். இந்தி சேர்த்த பிற இந்திய மொழிகளில் இதைச் செய்ய எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவுக்குத் தொட உள்ளேன்.

இந்தக் காரணத்துக்காகவே தொல்காப்பியத்தைத் தமிழுக்கு அளிக்கப்பட்ட மிக முக்கியமான கொடையாகத் தமிழர்கள் கருதவேண்டும்.

கிழக்கு பதிப்பக அலுவலக இடமாற்றம்

சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து கிழக்கு பதிப்பக அலுவலகம் இடம் மாறப்போகிறது. புது இடம் சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலை என்றும் அவ்வை சண்முகம் சாலை என்றும் பெயர்கொண்டுள்ள சாலையில் அஇஅதிமுக கட்சி அலுவலகத்துக்கு எதிராக, (சற்றே கோணலாக) மாறப்போகிறது. மாற்றம் ஜூலை மாதம் முழுவதுமாக நடைபெறும் என்பதால் அலுவலகத்துக்குச் சடாரென வரும் நண்பர்கள் தவிர்க்கவும். புது அலவலக முகவரியையும் எப்போதிலிருந்து அந்த அலுவலகம் தொடங்கும் என்பதையும் பின்னர் பதிவில் தெரிவிக்கிறேன்.