Saturday, December 31, 2005

ராமைய்யாவின் குடிசை

நாகையை ஒட்டிய கீழவெண்மணி படுகொலைகள் மீதான விவரணப்படம் ஒன்று வெளியாகப்போகிறது என்ற தகவல் ஜூன் முதற்கொண்டே சிறுபத்திரிகைகள் பலவற்றிலும் வெளியானது. குறுந்தட்டு வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் மதுமிதாவின் பதிவில்: ஒன்று | இரண்டு

திண்ணை இணைய இதழில் டிஜிகே என்பவர் எழுதியுள்ள அறிமுகம்.

நேற்று இந்த விவரணப் படம் எனக்குக் கிடைத்தது. இதைப் பார்ப்பதற்குமுன் ஓரளவுக்கு எனக்கு இந்த விஷயம் பற்றித் தெரியும். சம்பவம் நடந்தபோது நான் பிறக்கவில்லை என்றாலும் என் தந்தையிடமிருந்து இதுகுறித்து பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அப்பொழுது கதை கேட்கும்போது இந்தச் சம்பவம் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. அதன்பின் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் வழியாகத்தான் ஓரளவுக்குக் கோர்வையாக என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துகொண்டேன். குருதிப்புனல் ஒரு நாவல்தான். உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதிய அ-புதினம் அல்ல. ஆசிரியர் இல்லாத சில பாத்திரங்களை உருவாக்குகிறார். ஆனால் நிலக்கிழார், விவசாயக் கூலிகள், ரவுடிகள், வன்முறை ஆகிய சம்பவங்களைப் பொருத்தமட்டில் அதிகம் விலகுவதில்லை. இந்தச் சமபவம் மீதான கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் எழுதிய எதையும் நான் இதுவரையில் படித்ததில்லை. (அவை எனக்குக் கிடைத்ததில்லை)

அந்த வகையில் பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. இந்த ஆவணப்படத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் பேசுகிறார்கள். நிலக்கிழார்களின் கூலிப்படையினர், காவல்துறை ஆகியோரால் தாக்கப்பட்டு, இன்னமும் உயிருடன் இருக்கும் கிராம மக்கள் பேசுகிறார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் அப்பொழுதைய தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் உறவினர் பேசுகிறார். அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி பேசுகிறார். சம்பவத்துடன் தொடர்புகொண்ட உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்.

கீழவெண்மணியில் நடந்தது என்ன? உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடந்து வந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் கொடுமைதான் தஞ்சை மாவட்டத்திலும் கீழவெண்மணியிலும். ஒருசில நில உடைமைக்காரர்கள் கையில் ஆயிரக்கணக்கில் ஏக்கர்கள். ஏகப்பட்ட ஏழைகள் கையில் ஒரு துளி நிலம் கூடக் கிடையாது. ஏழைகள் நிலக்கிழார்களின் வயல்களில் கூலிக்கு வேலை செய்யவேண்டும். அப்படி வேலை செய்து சம்பாதித்தால்தான் சாப்பாடு.

வேலை என்றாலே கொடுமைதான். நேர வரைமுறை கிடையாது. வேலையை மேற்பார்வை செய்ய நிலக்கிழார், அவரது ரவுடி கும்பலுடன் இருப்பார். நிலக்கிழாரைப் பார்த்தாலே நடுங்கும் மக்கள். குறைந்த கூலி. ஏதேதோ 'குற்றங்களுக்காக' சவுக்கடி தண்டனை. பணம் அபராதம் என்று எத்தனையோ.

கம்யூனிஸ்டுகள் தஞ்சை மாவட்டம் வந்து விவசாயக் கூலிகளை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைக்காகப் போராட ஆரம்பித்தனர். இது நிலக்கிழார்களை மிகவும் தொந்தரவு செய்தது. நிலக்கிழார்கள் தமக்கென ஒரு சங்கம் ஆரம்பித்தனர். (முதலில் 'உணவு உற்பத்தியாளர் சங்கம்', பின் 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்று பெயர்மாற்றம்.) டிசம்பர் 1968 சம்பவம் நடக்கும் நேரத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் கோபாலகிருஷ்ண நாயுடு.

விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தில் சேரக்கூடாது என்றும் அனைவரும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

நாயுடுவின் வயலில் வேலை செய்வதில் சில பிரச்னைகள் எழுந்தன. இதனால் நாயுடு வெளியூரிலிருந்து விவசாயக் கூலிகளை அழைத்து வந்து வேலை செய்ய நினைத்தார். அதனை உள்ளூர் கூலிகள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரவுடன் எதிர்த்தனர். இதற்கிடையில் நாயுடுவின் வீட்டுக்கருகே ஓர் இளம்பெண்ணின் சடலமும் கிடந்தது. இந்தக் கொலைக்கு நாயுடுதான் காரணம் என்று ஊர் கொதித்தது. அந்த மாதம் முழுவதுமே பிரச்னை வளர்ந்தவண்ணம் இருந்தது. நாகையில் கூட்டம் கூடிப் பேசிவிட்டு வெண்மணி திரும்பிக்கொண்டிருந்த விவசாயக் கூலிகளை சிக்கல் அருகில் கூலிப்படை ஒன்று தாக்கி ஒருவரைக் கொன்றது. வெண்மணி கிராமத்தின் நாட்டாமை, பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரை நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரச் சொல்லி ஒரு ரவுடி கும்பல் மிரட்டி அவர்களது டீக்கடையை அடித்து நொறுக்கியது.

அந்த நேரம் வெண்மணி மக்கள் திரண்டு தங்களைத் தாக்கிய ரவுடிகளில் ஒருவரை பிடித்து அடிக்கத் தொடங்க, மற்றவர்கள் ஓடிவிட்டனர். மாட்டிய ரவுடி (பக்கிரிசாமி, நாயுடுவின் ஆள்) அடிபட்டு இறந்துவிட்டார். இதனால் வெகுண்ட நாயுடு இன்னமும் நிறைய ரவுடிகளை அழைத்துக்கொண்டு வெண்மணி கிராமத்தைத் தாக்க வந்திருக்கிறார். கூட்டமாக வந்த பலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வந்துள்ளனர். வெண்மணி கிராம மக்கள் தாங்கள் தாக்கப்படுவோம் என்று நினைத்து தங்களால் முடிந்த அளவு கம்புகள், கற்கள் என்று வைத்திருந்தாலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எதிர்கொள்ளமுடியவில்லை. சிறிது சிறிதாக அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பெயர, தாக்குதல் தொடர, வீடுகளுக்குத் தீவைப்பு நிகழ்ந்துள்ளது. சற்றே பெரிய குடிசைக்குள் நுழைந்து தங்களைக் காத்துக்கொள்ள முயற்சி செய்த 44 பேர்கள் எரிந்து கருகியுள்ளனர். அவர்கள் அனைவரும் எரிந்தது ராமைய்யா என்பவரின் குடிசையில்.

இரவில் அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்ற கிராம மக்கள் பலரும் அடுத்த நாள் காலையில் வந்துதான் எத்தனை பேர் எரிந்தனர், எந்த உறவினர் உயிருடன் இருக்கிறார், செத்துவிட்டார் என்று கண்டறிந்துள்ளனர். இறந்ததில் 5 பேர் ஆண்கள். மீதி அனைவரும் பெண்களும் குழந்தைகளும்.

கோரம் இத்துடன் நிற்கவில்லை. இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காவல் தரப்பில் எரிந்து இறந்தவர்கள் 42 பேர் என்று முடிவாகி (ஆனால் இறந்தது 44 பேர் என்கிறார்கள் கிராம மக்கள்), அதற்கென ஒரு வழக்கு போடப்பட்டு அதில் 23 பேர் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்படுகின்றனர். கோபாலகிருஷ்ண நாயுடு குற்றவாளி நம்பர் 1. அதேபோல ரவுடி பக்கிரிசாமி கொல்லப்பட்டதற்காக வெண்மணி கிராம மக்கள் (அதாவது செத்தது போக மீதமிருந்தவர்கள்) மீது ஒரு வழக்கு, அதிலும் குற்றவாளிகள் 23 பேர். இரண்டு வழக்குகளும் ஒருசேர நாகை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கின்றன.

பக்கிரிசாமி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; மீதி அனைவருக்கும் ஏதோ சில வருடங்களாவது தண்டனை. அதேபோல 42 (44) பேர் எரியுண்ட வழக்கில் நிலச்சுவான்தார்கள், ரவுடிகளுக்கு ஆளுக்கு சில வருடங்கள், ஆனால் யாருக்கும் ஆயுள் தண்டனையில்லை. மேல் முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு.

உயர் நீதிமன்றம் பக்கிரிசாமி கொலை வழக்கின் தீர்ப்பை உறுதி செய்கிறது! ஆனால் 42 (44) பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியங்கள் சரியாக இல்லை என்று அத்தனை பேரையும் - 23 பேரையும் - விடுதலை செய்கிறது!

வழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது. பக்கிரிசாமி கொலைவழக்கின் தீர்ப்பு இந்தியாவின் உச்சபட்ச நீதிமன்றத்தில் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றமும் கோபாலகிருஷ்ண நாயுடு முதல் பிற 22 பேர்கள் மீதும் குற்றம் ருசுவாகவில்லை என்று விடுதலை செய்கிறது!

இந்த ஆவணப்படத்தில் 42 (44) பேர் எரிந்த வழக்கில் குற்றவாளி 4-ஆக இருந்த ஒரு நிலக்கிழார், தான் எவ்வாறு அலிபி தயார் செய்தேன் என்று விளக்குகிறார். அதை செஷன்ஸ் நீதிமன்றம்முதல் உச்ச நீதிமன்றம்வரை ஏற்றுக்கொண்டுள்ளது.

-*-

இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில் - டிசம்பர் 1968 - 13 வயதான நந்தன் என்ற சிறுவன், 12 வருடங்கள் கழித்து - டிசம்பர் 1980-ல் - சில நண்பர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறார். ஆக, நியாயம் சட்டத்துக்கு வெளியில்தான் கிடைத்திருக்கிறது. (நந்தன், பிறர் இதற்காக சிறைதண்டனை அனுபவித்து வெளியே வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.)

-*-

அனைவரும் பார்க்கவேண்டிய ஆவணப்படம். விசிடி விலை ரூ. 250 என்று வைத்திருக்கிறார். இது அதிகமாகத் தோன்றுகிறது. இந்தப் படம் பரவலாகக் கவனிக்கப்படவேண்டும் என்றால் விலை ரூ. 50-75 என்ற அளவில் இருக்க வேண்டும்.

அடுத்து இந்தப் படம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படப் போவதில்லை. ஏனெனில் இது கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்து எடுக்கப்பட்ட படம். நாரேஷனில் 'இயக்கம்', 'செங்கொடி', கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றி என்றெல்லாம் நிறைய வருவதால் தமிழக தொலைக்காட்சிகள் (சன், ராஜ், விஜய் etc.) இந்தப் படத்தின்மீது ஆர்வம் காட்டமாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிதான் இதனை கிராமம் கிராமமாக தங்களது இயக்கத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் படம் போய்ச்சேரவேண்டிய மத்தியதர மக்களுக்கு இது போய்ச்சேராது.

எனவே சில மாறுதல்களுடன் கட்சி சார்பற்றதாக மாற்றினால், இன்னமும் கொஞ்சம் sophistication-ஐ அதிகரித்தால், ஆங்கிலத்தில், ஹிந்தியில், பிற இந்திய மொழிகளில் டப்பிங் செய்தால் இந்திய அளவில் சில தொலைக்காட்சிகளில் காண்பிக்க முடியும். அதேபோல உலக அளவில் காண்பிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. தொழில்நுட்ப ரீதியில் சுமார்தான்.

இதுபோன்ற ஒரு விஷயத்தில் ஏன் தொழில்நுட்பம், எடிடிங் ஆகியவற்றைப் பற்றிப் பேசவேண்டியுள்ளது என்றால் இன்று இந்தச் சம்பவத்தைப் பலரிடமும் கொண்டுசேர்க்க அதெல்லாம் தேவையாக உள்ளது. ஏற்கெனவே பாரதி கிருஷ்ணகுமார் எடுத்துள்ள footage-ஐக் கொண்டே இன்னமும் சிறப்பான ஆவணப்படத்தைத் தயாரிக்க முடியும்.

Friday, December 30, 2005

ஆல்ஃபா

ஆல்ஃபா






ரிலையன்ஸ் டிமெர்ஜர்

பங்குச்சந்தையை கவனமாகப் பார்த்து வருபவர்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் தன்னிலிருந்து புதிதாக நான்கு நிறுவனங்களை வெளிக்கொணர்ந்து அவற்றையும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்போகும் விஷயம் தெரிந்திருக்கும்.

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிரச்னையின் முடிவாக ஒவ்வொருவருக்கும் இன்ன தொழில்கள் என்று பிரிவாகியுள்ளது. அதில் அனில் அம்பானிக்குக் கிடைத்தது தொலைதொடர்பு (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்ஃபோகாம்), மின்சாரம் (ரிலையன்ஸ் எனர்ஜி) மற்றும் நிதி (ரிலையன்ஸ் கேபிடல்). முகேஷ் அம்பானி தக்கவைத்துக்கொள்வது பெட்ரோலியம் சுத்திகரிப்பு, நைலான், பிளாஸ்டிக், துணிமணி வகையறாக்கள் (ரிலையன்ஸ் இண்டஸ்டிரி), பெட்ரோலியம், இயற்கை எரிவாயு தோண்டி எடுத்தல் ஆகியவை.

இதில் பல ரிலையன்ஸ் இண்டஸ்டிரியின் தனித்துறைகளாக இருப்பதால் அந்த நிறுவனத்தைப் பல துண்டுகளாகப் பிரிக்கவேண்டிய நிலைமை. கடைசியாக மும்பை உயர்நீதிமன்ற ஒப்புதல் கிடைத்த பிரிவுத்திட்டத்தின்படி, நான்கு புது நிறுவனங்கள் உருவாக்கப்படும்:
* ரிலையன்ஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்
* ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
* ரிலையன்ஸ் எனெர்ஜி வென்ச்சர்ஸ்
* குளோபல் ஃப்யூயல் மேனேஜ்மெண்ட்

இதில் முதல் மூன்றும் அனில் அம்பானி ஆதிக்கத்தில் இருக்கும். கடைசி (குளோபல் ஃப்யூயல் மேனேஜ்மெண்ட்) எண்ணெய் தோண்டுதலுக்கான முகேஷ் அம்பானி ஆதிக்கத்தில் இருக்கும் நிறுவனம்.

ஏற்கெனவே அனில் அம்பானி ஆதிக்கத்தில் ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃபோகாம், ரிலையன்ஸ் எனெர்ஜி என்ற மூன்று நிறுவனங்கள் உள்ளன. அதில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தவிர்த்த இரண்டும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள். இந்த ரிலையன்ஸ் டிமெர்ஜருக்கு (பிளவு) பிறகு மூன்று மெர்ஜர்கள் (சேர்த்தி) நடக்க உள்ளன. அதில் இரண்டு சேர்த்தி ஏற்கெனவே சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்ட பங்குகளுக்கானது.
1. ரிலையன்ஸ் கேபிடல் + ரிலையன்ஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்
2. ரிலையன்ஸ் எனெர்ஜி + ரிலையன்ஸ் எனெர்ஜி வென்ச்சர்ஸ்

அனில் அம்பானி மேற்படி இரண்டு மெர்ஜர்களும் வெகு சீக்கிரமாக நடந்தேறும் என்று சொல்லியிருக்கிறார்.

மற்றொரு சேர்த்தி: ரிலையன்ஸ் இன்ஃபோகாம் + ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இது ரிவர்ஸ் லிஸ்டிங் வகையைச் சாரும். எனெனில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிஸ்ட் செய்யப்படாத நிறுவனம், ஆனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை விட அளவிலும், வருமானத்திலும் மிகப்பெரியது. இவ்வளவு பெரிய ரிவர்ஸ் லிஸ்டிங் இந்தியாவில் நடந்தது கிடையாது. இதனால் இது நடக்கும் குறுகிய கால அளவில் இந்தப் பங்குகளின் விலைகளில் பெரிய விளையாட்டு நடக்கும்.

முக்கியமாக கீழ்க்கண்ட குழப்பங்கள் நிலவப்போகின்றன:

1. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பிளக்கப்போவதால் அந்தப் பங்கின் விலை குறையும். இதனால் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பெரியதாகப் பிரச்னை ஏதும் இருக்காது. குறைந்த விலையை ஈடுகட்டும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் அவர்களுக்கு இலவசமாக ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கிடைக்கும்.

ஆனால் பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்கள் (சென்செக்ஸ், நிஃப்டி) ஆகியவை சட்டென்று குறைய வேண்டியிருக்கும். ஏனெனில் இந்தக் குறியீட்டு எண்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் கனம் அதிகம். இதனால் இந்தக் குறியீட்டு எண்கள் மேல் உள்ள Nifty futures ஆகியவற்றில் நடக்கும் வர்த்தகங்கள் பிரச்னையில் முடியும்.

2. அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில index fund என்ற ஒரு நிதியை நடத்துவார்கள். அதில் இண்டெக்ஸில் இருக்கும் பங்குகளை மட்டும்தான் வாங்குவார்கள், விற்பார்கள். ஆனால் புதிதாக டிமெர்ஜ் ஆகும் குட்டி நிறுவனங்கள் எதுவும் இண்டெக்ஸில் வராது. அந்த நிறுவனங்களின் பங்குகளை இண்டெக்ஸ் பண்ட்கள் சீக்கிரமாக விற்றுவிடவேண்டியிருக்கும். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பங்குகளின் விலை சட்டெனக் குறையப் போவதால் இந்த இண்டெக்ஸ் நிதிகளின் NAVயில் மாற்றம் ஏற்படும். இது சிறு முதலீட்டாளர்களைக் குறுகிய காலத்தில் பாதிக்கலாம்.

பங்குச்சந்தையைப் பற்றி மேலும் நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த டீமெர்ஜரை கவனமாகப் பார்த்தல் நலம். நேரடியாக நீங்களே முதலீடு செய்யாத நிலையில் தினம் தினம் இந்த ஷேர்கள் என்ன விலைக்குச் செல்கின்றன, சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை எந்த எண்ணிக்கையில் உள்ளன என்று குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும். ஜனவரி 18, ஜனவரி 25, ஜனவரி 27 ஆகிய தேதிகளைக் கவனமாகப் பார்க்கவும்.

Thursday, December 29, 2005

தவமாய் தவமிருந்து

சற்றே நம்பிக்கைக் குறைவுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன்.

ஆனால் படம் நன்றாக இருந்தது. 'ஆட்டோகிராப்'-ஐ விட நன்றாக இருந்தது. ஆட்டோகிராபில் கதையம்சம் குறைவு. நிறைய இடங்கள் வலுவற்றதாக இருந்தன. செயற்கை அங்கங்கே தூக்கல். ஆனால் 'த.த'வில் நல்ல, வலுவான கதை இருந்தது.

தமிழ்ப் படங்களுக்கான பெரிய குறை, படத்தை ஜவ்வாக இழுத்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் கொண்டுவர வேண்டியிருப்பதுதான். பல சிறுகதை எழுத்தாளர்கள் கதையை நன்றாக முடித்தபின்னும் கடைசியாக இன்னமும் ஒரு பாரா சேர்த்துவிடலாம் என்று நினைத்து சொதப்புவது போல, சேரன் இங்கும் செய்துள்ளார். "ஏம்ப்பா, நான் உனக்கும் ஏதாவது குறை வச்சிருக்கேனா?" என்று தந்தை (ராஜ்கிரண்) கேட்டு, மகன் ராமலிங்கம் (சேரன்) நெகிழ்ச்சியுடன் மறுப்பதும், அத்துடன் தந்தை உயிர் பிரிவதுமான காட்சியுடன் படத்தை நிறுத்தியிருக்கலாம். அதற்குப் பிறகான பல நிமிடங்கள் கதையில் எதையும் புதிதாகச் சொல்வதுமில்லை, காட்டுவதுமில்லை.

படத்தில் சில கவனக்குறைவான விஷயங்கள் இருப்பதை அருணின் விமரிசனமும் எடுத்துக்காட்டியது. உதாரணத்துக்கு ஒவ்வொரு காலத்திலும் காட்சிகளை சரியாக அமைத்த டைரக்டர், அந்தந்த காலத்தின் பணத்துக்கான மதிப்பு பற்றி கவனம் கொள்ளவில்லை. 1977-ல் 2,000 போஸ்டர் ஒட்ட ரூ. 1,000 கூலி ஒத்துவரவில்லை. (ரூ. 100 போதும்!).

1991, ராஜீவ் காந்தி கொலை நேரத்தில், தமிழகத்தில் ஊருக்கு ஊர் கலவரங்கள் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. அப்படி ஏதும் நடந்ததாக எனக்கு நினைவில்லை.

சாதாரண எஞ்சினியரிங் படித்த ராமலிங்கம் சடசடவென மதுரையில் வேலை பார்த்து ஹோண்டா காரும் லக்சுரி அபார்ட்மெண்டும் - எப்படி முடியும் என்று புரியவில்லை. சொந்தத் தொழில் செய்வதாகக் காட்டவில்லை. சம்பளத்துக்குத்தான் வேலையில் இருக்கிறார். வெகு நாள்கள் ஸ்கூட்டரில்தான் பயணம் செய்கிறார். அடுத்த கட்டத்தில் எங்கிருந்தோ ஹோண்டா கார் வருகிறது. இதுபோன்ற குறைகள் பலவற்றையும் ஒரு நல்ல துணை இயக்குனரை அருகில் வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதும்போதே தவிர்த்திருக்கலாம்.

நாராயணன் சரண்யா நடிப்பு பற்றி சிலாகித்துள்ளார். சில இடங்களில் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் பல இடங்களில் (முக்கியமாக ஆரம்பத்தில்) அவரது நடிப்பு எரிச்சலைத் தந்தது. வயதான காலத்துக்கான ஒப்பனை சரண்யாவுக்குப் பொருந்தவில்லை. (இந்தியன் படத்திலும் சுகன்யாவுக்கான வயதான கால ஒப்பனை முகத்தில் ரப்பர் முகமூடியை ஒட்டிவைத்தது போன்று அசிங்கமாகத் தெரிந்தது நினைவிருக்கலாம்....) முகத்தின் சுருக்கங்கள் மிகவும் செயற்கையாக இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

ராஜ்கிரண் நடிப்பு பற்றி அனைவருமே நல்லதாகப் பேசிவிட்டார்கள். மிக நல்ல, யதார்த்தமான நடிப்பு. அந்தப் பாத்திரத்தை வேறு யாருமே இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்கமுடியாது என்று சொல்லலாம். சேரனின் நடிப்பில்தான் குறை. பிற அனைவரும் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார்கள். இரண்டு பெண் புதுமுகங்களும் மிக நன்றாக நடித்துள்ளனர்.

சேரனின் இந்தப் படம் தமிழ் சினிமாவில் மேலும் சில நல்ல படங்கள் உருவாவதற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்!

தேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி

தேன்கூடு என்னும் தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களில் பெரும்பாலானோருக்கு இதுபற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கலாம்.

தமிழ்மணம் போன்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் இந்தத் திரட்டியில் வேறு சில வசதிகளும் உள்ளன. உபயோகித்துப் பார்க்கவும்.

Friday, December 23, 2005

இட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்

இன்றைய தி ஹிந்துவில் இருந்து

இட ஒதுக்கீடு பற்றிய அரசியல் அமைப்புச் சட்ட மாற்றத்தை வரவேற்கும் சுவாமி அக்னிவேஷ், அதே நேரம் சிறுபான்மை கல்விக்கூடங்களுக்கு விலக்கு அளித்திருப்பது கூடாது என்று அதனை எதிர்க்கிறார்.

மக்களவையில் 104வது அரசியலமைப்புச் சட்ட மாற்ற மசோதா புதன்கிழமை நிறைவேறியது. நேற்று மாநிலங்கள் அவையிலும் நிறைவேறியுள்ளது.

ஆனால் இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் தனியான சட்டங்களைக் கொண்டுவரவேண்டும். அதுவரையிலும் அந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இப்பொழுது இயற்றப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சட்ட மாற்றம் தனியார் கல்லூரிகளில் சமூகம்/கல்வி ஆகியவற்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யக்கூடிய அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. அவ்வளவே.

ஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்

மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி, ஏ.கே.செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று இன்றைய தி ஹிந்து செய்தி குறிப்பிடுகிறது. செட்டியார் இந்த ஆவணப்படத்தை 1940-ம் ஆண்டு எடுத்திருக்கிறார். "மஹாத்மா காந்தி - இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி" என்று தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 55 நிமிடங்கள் செல்கிறதாம்.

ஆனால் வெங்கடாசலபதிக்குக் கிடைத்தது இந்தப் படத்தின் அமெரிக்க வடிவம். செட்டியார் தான் ஏற்கெனவே எடுத்த படத்தை ஹாலிவுட்டில், 1953-ல், மீண்டும் எடிட் செய்துள்ளார். இதில் சில மாறுதல்கள் இருப்பதுடன், பின்னணிக் குரல் ஆங்கிலத்தில் உள்ளது.

தமிழ், ஆங்கில வடிவங்கள் இரண்டுமே பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டது என்றே ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நினைத்திருக்கிறார்கள். ஆங்கில வடிவம் இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் இருந்து கிடைத்துள்ளது. பின் மற்றுமொரு காப்பி யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் கிடைத்துள்ளது.

தமிழ் வடிவமும் அதன்பின் தெலுங்கு டப்பிங்குடனும் இந்தப் படம் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பிறகு ஆங்கிலேய அரசாங்கத்தால் பிரச்னை வரும் என்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை ஆனபோது, ஹிந்தி டப்பிங்குடன் இந்தப் படம் காண்பிக்கப்பட்டுளதாம்.

காபிரைட் ஏதும் இல்லை என்ற காரணத்தால் இந்தப் படம் விசிடி, டிவிடி மூலம் பரவலாக அனைவரும் பார்க்கக் கிடைக்க வேண்டும்.

Thursday, December 22, 2005

சாகித்ய அகாதெமி விருதுகள் - 2005

G.திலகவதி2005-ம் வருடம் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது திலகவதி (ஐ.பி.எஸ்) அவர்களுக்குச் சென்றுள்ளது. அவரது கல்மரம் என்ற நாவலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருது கிடைத்த பிற மொழிகளுக்கான இலக்கியவாதிகள்:

சாகித்ய அகாதெமி விருது கிடைத்த பிற மொழி இலக்கியவாதிகள்:

G.V.கக்கநாடன் (மலையாளம்)
ராகவேந்திர படேல் (கன்னடம்)
அப்பூரி சாயாதேவி (தெலுங்கு)
(இறந்த) அருண் கோலாட்கர் (மராத்தி)
N.ஷிவதாஸ் (கொங்கணி)
மனோஹர் ஷ்யாம் ஜோஷி (ஹிந்தி)
ஜபீர் ஹுசைன் (உருது)
ராமசந்திர பெஹெரா (ஒரியா)
சுரேஷ் தலால் (குஜராத்தி)
தோலான் ராஹி (சிந்தி)
சேத்தன் சுவாமி (ராஜஸ்தானி)
குர்பச்சன் சிங் புல் (பஞ்சாபி)
க்ரிஷன் ஷர்மா (டோக்ரி)
ஹமீதி காஷ்மீரி (காஷ்மீரி)
விவேகானந்த் தாக்கூர் (மைதிலி)
சுவாமி ராமபத்ராசார்யா (சமஸ்கிருதம்)
நபகிஷோர் சிங் (மணிபுரி)
யேஷே டோர்ஜே தோங்ச்சி (அசாமி)
கிருஷ்ண சிங் மோக்டான் (நேபாலி)
மங்கல்சிங் ஹஸோவேரி (போடோ) - முதல்முறையாக இந்த மொழிக்கு வழங்கப்படுகிறது
ஜாதூமணி பேஸ்ரா (சந்தாலி) - முதல்முறையாக இந்த மொழிக்கு வழங்கப்படுகிறது

தகவல்: NewKerala.com, UNI

ஈரோடு தமிழன்பனுக்கு சாகித்ய அகாதெமி 2004
வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதெமி 2003

இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மீதான அரசியலமைப்புச் சட்ட மாற்ற மசோதா நிறைவேறியது.

பாஜக அரசு கொண்டுவந்த மசோதாவில் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்வி நிறுவனங்களையும் மசோதாவுக்குள் இணைக்க வேண்டும் என்ற பாஜகவின் பரிந்துரை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது. பாஜக உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த மசோதா குடியரசுத் தலைவர் கையெழுத்திடப்பட்டதும் சட்டமாகும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் தத்தம் மாநிலங்களில் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மீது சில விதிமுறைகளைப் புகுத்தலாம். அடுத்தக் கல்வியாண்டு வெகு அருகிலேயே இருப்பதால் சில மாநிலங்கள் அவசரச்சட்டங்களாக (Ordinanace) கொண்டுவந்த பின்னர் சட்டசபைகளில் சட்டங்களை இயற்றலாம்.

அதே நேரம் சில தனியார் கல்லூரிகள் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டும் போகலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த விஷயத்தின் மீதான என் முந்தைய பதிவுகள். இவை இந்த விவகாரத்தின் வரலாற்றை ஓரளவு தெரிவிக்கும்.

இட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி
இட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

Monday, December 19, 2005

தமிழ் பதிப்புலகம் பற்றி...

நான் பதிப்புலகம் பற்றி எழுதியதிலிருந்து நிலா சில கேள்விகளைத் தன் பதிவில் வைத்துள்ளார்.

அதில் எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு பதிகள் இங்கே.

1. "இன்றைய நிலையில் அநேகமாக தமிழ் எழுத்தாளர்கள் தமது புத்தகப் பதிப்புக்கு ஆகும் செலவைத் தாமே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள்" என்கிறார் நிலா.

இன்றைய தமிழ்ப்புத்தகப் பதிப்புத் தொழிலில் படைப்பாளர்கள் நிலையிலிருந்து பார்க்கும்போது மூன்றுவிதமாகப் பிரிக்கலாம்.

(a) பதிப்பாளர் புத்தகத்தைத் தம் செலவில் பதிப்பித்து, விற்கும் ஒவ்வொரு பிரதிக்கும் எழுத்தாளர்களுக்கு சரியான ராயல்டி வழங்குவது. எழுத்தாளர் கணக்கு கேட்டால் சரியான விளக்கம் கொடுப்பது. எழுத்தாளர் கேட்காமலேயே என்ன விற்பனை ஆகியுள்ளது போன்ற விவரங்களைத் தருவது, புத்தக விற்பனைக்கான statementகள் தருவது ஆகியவை.

(b) மேலே உள்ளதுபோல நடக்காவிட்டாலும் ஏதோ கொஞ்சமாவது ராயல்டி என்ற பெயரில் கொடுப்பது; புத்தகம் எத்தனை ஃபார்ம் என்று கணக்கிட்டு ஃபார்முக்கு இத்தனை ரூபாய் என்று ஒட்டுமொத்தமாக ஒரு சிறிய தொகையை வழங்குவது; ராயல்டிக்கு பதிலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிகளை எழுத்தாளருக்கு வழங்குவது; அல்லது ராயல்டி என்ற பெயரில் எதுவும் கொடுக்காவிட்டாலும் புத்தகத்தைப் பதிப்பிக்க எழுத்தாளர்களிடமிருந்து காசு கேட்காமல் இருப்பது!

(c) எழுத்தாளரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அல்லது அவருக்கே வட்டிக்குக் கடன்கொடுத்து, அந்தப் பணத்தை வைத்துக்கொண்டே புத்தகம் போடுவது; பதிப்பித்த புத்தகங்களை எழுத்தாளரிடம் கொடுத்து அவரையே விற்பனை செய்துகொள்ளச் சொல்வது; சிலசமயம் புத்தகங்கள் நன்றாக விற்கும்போதும், மேற்கொண்டு மறு அச்சுகள் வெளியாகும்போதும் எழுத்தாளருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருத்தல், ராயல்டி என்ற பேச்சையே எடுக்காமல் இருத்தல்; ராயல்டி பற்றி எழுத்தாளர் பேசினால் உடனே தொழிலே மோசமான நிலையில் உள்ளது என்று அழுதல் போன்ற பலவகை.

எழுத்தாளர்கள் பலருக்கும் இங்கு நேரடி அனுபவம் இருக்கும். அனுபவம் ஏதும் இல்லாமல் புரளிகளை மட்டும் வைத்துக்கொண்டு நான் இதில் மேற்கொண்டு எதுவும் பேசக்கூடாது. நியாயமில்லை.

கிழக்கு பதிப்பகம் (a) முறைப்படிதான் நடந்து வருகிறது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

2. "தவிர, பணம் இருந்தால் எந்தக் குப்பையையும் புத்தகமாகப் போடலாம் என்ற நிலையைப் பார்க்கிற போது புத்தகம் எழுதும் ஆசையே விட்டுப் போகிறது என்பதுவும் நிதர்சனம்" என்கிறார் நிலா.

உலகின் எல்லா நாடுகளிலுமே Vanity Publishing என்பது உண்டு. எழுத உந்துதல் இருப்பவர்கள் தாம் எழுதியதை அச்சில் பார்க்க ஆசைப்படுவதில் தவறில்லை. இன்னும் சில வருடங்களில் 'தற்பெருமைக்காகப் பதிப்பித்தல்' அதிகரிக்கும்; அதற்கான செலவும் குறையும். On-demand Publishing இயந்திரங்கள் இந்தியாவுக்கு வர ஆரம்பித்ததும் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அழகாகக் கணினியில் வடிவமைக்கப்பட்டு, பத்து, இருபது பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்பட்டுக் கையில் கிடைக்கும். இது ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களுக்கு ISBN எண் முதற்கொண்டு வழங்கப்பட்டு அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இருபது பிரதிகளும் விற்றபின், மேலாக இன்னோர் இருபது பிரதிகளை அச்சடிக்கலாம்!

அப்படியான புத்தகங்களில் பல வைரங்களும் கூடக் கிடைக்கும்.

இப்படி தற்பெருமைப் புத்தகங்கள் வருகின்றனவே என்று விசனப்பட்டு திறமையுள்ள எழுத்தாளர்கள் எழுதாமல் போனால் அது தவறு. குடியாட்சியில் பொதுஜனங்களுக்குள்ள சில அடிப்படை உரிமைகளுள் ஒன்று தன் எழுத்தைத் தானே பதிப்பிப்பதும்தான்!

3. இப்பொழுது எழுத்து என்பதைச் சற்று கவனமாகப் பார்ப்போம்.

படைப்பாளிகள் தங்களது கிரியேடிவ் திறமையைக் காண்பிக்கும் கவிதைகள், புனைகதைகள் (சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்), துண்டு துண்டான கட்டுரைகள் என்று பலவற்றையும் எழுதுகிறார்கள். அவையனைத்தும் அனைத்து மொழிகளிலும் கிடைக்கின்றன. இந்த எழுத்துகள் அனைத்தையும் objective ஆக - இது சிறந்தது, இது மோசமானது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரே எழுத்தாளரின் பல படைப்புகளில் பல நல்லவையாகவும் பல தரம் குறைந்தவையாகவும் இருக்கும். ஓர் எழுத்தாளர் தனக்கென ஒரு ப்ராண்ட் பெயரைப் பெறுவதற்கு முன்னால் அவரது புனைவுகள் பதிப்பிக்கப்படுவதில் பல சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தன் எழுத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் விடாமுயற்சி தேவை. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் அந்த எழுத்தாளர் எதை எழுதினாலும் அதை வெளியிட, ராயல்டி கொடுக்க பல பதிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள்.

நான் குறிப்பிடும் எழுத்து வேறுவிதமானது. இது புனைவு அல்ல. நிஜங்களைப் பற்றியது. பல அறிவுசார் துறைகளைப் பற்றியது. இந்தப் புத்தகங்களை எழுத எழுத்துத்திறமைமட்டும் போதாது. விஷயஞானமும் தேவை. எதைப்பற்றி எழுதவேண்டுமோ அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் மேற்கொண்டு அந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் வேண்டும். அந்தத் துறையிலேயே பழம் தின்று கொட்டை போட்டிருத்தல் நலம். நான் சொல்வது துண்டு துண்டான கட்டுரைகளை அல்ல, முழுமையான புத்தகம்.

அத்தகைய அறிவுசார் விஷயங்களில் தமிழில் புத்தகங்கள் குறைவாக உள்ளன என்பதே என் ஆதங்கம். புனைவுகள் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். ஆனால் புனைவில்லாத, மக்களுக்குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் எழுதுவதற்கு ஆள்கள் இல்லை; குறைவாக இருக்கிறார்கள்; எழுதக்கூடியவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை; எழுதக்கூடியவர்கள் இருந்தாலும் பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவர்கள் குறைவு - இதைப்பற்றித்தான் நான் என் அமுதசுரபி கட்டுரையில் எழுதினேன்.

-*-

உலக அரசியல், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், கணிதம், கணினியியல், நுண்கலைகள், பொறியியல், நாம் அன்றாடம் வாழ்க்கையில் பயன்படுத்தும் இயந்திரங்கள்/கருவிகள், மருத்துவம், உடல்நலம், கல்வி, நிர்வாகவியல், மனிதவள மேம்பாடு, தனிமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள், நாடுகளின் வரலாறுகள், வளரும் இளைஞர்களின் வாழ்க்கை உயர்வுக்கான பாடங்கள் போன்ற பல விஷயங்களைத் தமிழில் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் எனக்குத் தேவையாக இருக்கிறார்கள். அப்படி உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். என் மின்னஞ்சல் முகவரி என் பதிவில் உள்ளது.

Sunday, December 18, 2005

தமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை

[டிசம்பர் மாத அமுதசுரபி இதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரையின் மூலவடிவம். இதழில் வெளியான கட்டுரையில் சில மாறுதல்கள் இருக்கலாம்.]

ஒரு சமுதாயத்தில் அறிவை வளர்த்தெடுத்து, காத்து, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான காரியத்தைச் செய்வது புத்தகங்கள்தாம். அறிவு என்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொதுச்சொத்து என்றாலும் கூட, அறிவை எடுத்துச் செல்ல உதவுவது மொழி என்ற காரணத்தால், ஒவ்வொரு மொழியும் உலக அறிவை எவ்வாறு தன் சந்ததிகளுக்குப் பாதுகாத்து வைக்கிறது என்பதைத் தனியாக கவனிக்க வேண்டும்.

பிரிட்டன் நாட்டில் 2004-ம் வருடத்தில் 1,60,000 புத்தகங்கள் - புதியவை, மீள்பதிப்பு செய்யப்பட்டவை அனைத்தும் சேர்த்து - பதிப்பாகியுள்ளன. இந்தப் புத்தகங்கள் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவை. குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டும் 10,000க்கு மேல். கணினி தொடர்பாக கிட்டத்தட்ட 5,000. பொருளாதாரத்தில் 5,000க்கும் மேல். கல்வி தொடர்பாக 2,500 வரை. பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம், கலை, இலக்கியம், சமயம் என்று ஒவ்வொன்றிலும் சில ஆயிரங்கள். கதைகள் மட்டும் 12,000க்கும் மேல். பாடப்புத்தகங்கள் தனியாக.

இப்படி எந்தப் பிரிவை எடுத்தாலும், ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளியாகின்றன. இதைத்தவிர அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் - ஏன் இந்தியாவிலும் கூடத்தான் - என்று ஆங்கிலத்தில் 3,00,000 புத்தகங்கள் வரை வெளியிடப்படுகின்றன.

முதலில், தமிழில் வெளியாகும் புத்தகங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறுவதே கடினம். தமிழக அரசும் சரி, பதிப்பாளர் சங்கங்களும் சரி, இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அறிவு சார்ந்த விஷயங்களில் தமிழில் எத்தனை புத்தகங்கள் வருகின்றன என்ற தகவல் நமக்குக் கிடைப்பதில்லை. எனவே புள்ளிவிவரம் சாராது, கண்ணில் பட்டதை வைத்துத்தான் பேசவேண்டிய நிலைமை.

கடந்த ஒன்றரை வருடங்களாக பதிப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். எனவே பிற பதிப்பகங்கள் என்ன மாதிரியான புத்தகங்களை உருவாக்குகிறார்கள் என்பதைக் கவனமாகப் பார்த்து வருகிறேன். அந்த வகையில் தமிழில் அறிவுசார் புத்தகங்கள் மிகக்குறைவு என்பதே என் கணிப்பு.

ஒரு வருடத்தில் தமிழில் வெளியாகும் புத்தகங்கள் - புதியவை, மீள்பதிப்பு செய்யப்பட்டவை - 10,000க்கும் குறைவுதான். சிலர் 5,000-7,000 இருக்கும் என்று கணிக்கிறார்கள். அதில் மிகக் குறைந்த அளவே அறிவு சார்ந்த விஷயங்கள். உதாரணத்துக்கு அறிவியலை எடுத்துக்கொண்டால் 20 புத்தகங்கள் வெளியாகி இருக்கலாம். கணினி சம்பந்தமாக 100 புத்தகங்கள் இருக்கலாம். பொருளாதாரம், சட்டம் போன்ற துறைகளில் ஒன்று கூட மிஞ்சாது.

ஏன் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படவேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். புத்தகம் என்று வரும்போது அதன் தரம் பற்றிப் பேசவேண்டும். மொத்தம் பதிப்பாகும் புத்தகங்களில் 1%க்கும் குறைவானவையே நல்ல தரத்தில் இருக்கும் என்று எடுத்துக்கொண்டால், மொத்த எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, தானாகவே தரமான புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

எதைப்பற்றி வேண்டுமானாலும் புத்தகங்களை எழுதினால் அவை விற்குமா என்று சிலர் கேட்கலாம். இது அவசியமான கேள்விதான். ஆனால் முயற்சி செய்யாமல் வெறும் கேள்வியோடு நிறுத்திவிட்டால் புத்தகங்கள் உருவாக்கப்படவே மாட்டா. புத்தகங்களை உருவாக்கி சந்தைக்குக் கொண்டுவந்தபின்னர்தான் விற்குமா, விற்காதா என்று தெரிய வரும்.

அதுதான் ஆங்கிலத்திலேயே புத்தகங்கள் கிடைக்கின்றனவே என்று பலரும் கேட்கலாம். உண்மைதான். ஆனால் நல்ல ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்கொண்டால் அவை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாராவதால் மிக அதிக விலை உள்ளவையாக உள்ளன. சராசரி விலையே $25 - ரூ. 1,000 க்கு மேல். அதே நேரம் பல மூன்றாம் தர ஆங்கிலப் புத்தகங்கள் சந்தையை ஆக்கிரமிக்கின்றன. ஆங்கிலத்தில் உள்ளன, வழவழ தாளில், நான்கு வண்ணப் படத்துடன் உள்ளன என்ற காரணங்களுக்காகவே பலரும் மோசமான புத்தகங்களை வாங்க நேரிடுகிறது.

ஆங்கில மீடியத்தில் படிப்பதால் மட்டும் ஆங்கில அறிவு தேவையான அளவுக்கு வந்துவிடுவதில்லை. அதனால் ஆங்கிலத்தில் பொது விஷயங்களைப் படித்துப் புரிந்துகொள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். ஒரு சில தமிழக நகரங்களைத் தாண்டி, ஆங்கிலத்தின் ஆதிக்கம் குறைவாகவே உள்ளது. வீடுகளில் மக்கள் இன்னமும் தமிழில்தான் பேசுகின்றனர். தமிழில் விளக்கினால்தான் பல விஷயங்களை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியும். ஆறு கோடி மக்கள் தொகையுள்ள தமிழ் சமுதாயம் திடீரென்று தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் கற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே தமிழ் சமுதாயத்தின் எதிர்காலம், தமிழில் அறிவுசார் விஷயங்களைக் காப்பாற்றி வைப்பதில்தான் உள்ளது.

நான் குறிப்பிடும் பிரச்னை தமிழில் மட்டுமல்ல, பிற இந்திய மொழிகளுக்கும் உண்டு என்றே நினைக்கிறேன்.

ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த இடைவெளிதான் பலரையும் ஆங்கிலத்தை நோக்கி இழுக்கிறது. இதை "என்ன இல்லை தமிழில்?" என்று மார்தட்டும் தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அரசியல் தளத்தில் இந்தப் புரிதல் இருந்தால் தமிழில் பல்வேறு விஷயங்களைப் பற்றிய நூல்கள் எழுதப்படுவதற்குத் தேவையான ஆதரவு அரசிடமிருந்து வரும். தமிழக நூலகத்துறைக்கு இதுபற்றிய புரிதல் இருந்தால் 'எடைக்குப் புத்தகம் வாங்கும்' வழக்கத்தை விடுத்து நல்ல நூல்களை அதிகமான பிரதிகள் வாங்கி ஊக்கப்படுத்துவார்கள்.

தமிழ் பதிப்புத் துறையில் இதுநாள் வரை இருந்துவரும் பதிப்பாளர்கள் இதுவரையில் ஆற்றியிருக்கும் தொண்டு மகத்தானதுதான். ஆனால் போதாது. பதிப்பாளர்கள் தத்தம் தொழிலுக்குக் கொண்டுவரும் மூலதனத்தை இன்னமும் அதிகரிக்கவேண்டும். தரமான புத்தகங்களை பல்வேறு அறிவுத்தளத்திலும் கொண்டுவர வேண்டும். இது ஓரிருவர் தனியாகச் செய்யக்கூடிய காரியமில்லை. பதிப்புத் தொழிலில் ஒரு பெரிய குறையாக நான் காண்பது பதிப்பாசிரியர் எனப்படும் ஒருவர் - பல துறைகளிலும் பரந்த அனுபவமுடையவர் - பதிப்பகங்களில் இல்லாதிருப்பதுவே. அதனால்தான் பல்வேறு அறிவுசார் துறைகளிலும் புத்தகங்கள் வருவது குறைவாக உள்ளது.

எழுத்தாளர்களிடத்தும் பல குறைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர். ஆசிரியர்கள் கல்வியைப் பற்றி எழுதுவதில்லை. ரேஷன் கடையில் வேலை செய்பவர் தனது வேலையைப் பற்றியும் அரசின் நியாய விலைக்கடைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றியும் எழுதுவதில்லை. பெட்ரோல் விற்பனைத் துறையில் இருப்பவர் பெட்ரோல் விலை ஏன் ஏறுகிறது, இறங்குகிறது என்பது பற்றி எழுதுவதில்லை. எழுத விரும்புவதில்லை, அல்லது தனக்கு எழுதத்தெரியாது என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்வதும் இல்லை. இதையெல்லாம் எழுதினால் யார் புத்தகமாகப் போடுவார்கள் என்று சிலர் யோசித்து, முயற்சியில் இறங்குவதில்லை. இன்னும் சிலரோ, எழுதினாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதுவது என்ற நினைப்பில் இருக்கலாம்.

பதிப்பாளர், எழுத்தாளர் ஆகியோரிடம் மாறுபட்ட சிந்தனை வரவேண்டும். இதுநாள் வரையில் தயாரித்துக்கொண்டிருக்கும், எழுதிக்கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு அப்பால் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்று இருவருமே சிந்திக்க வேண்டும்.

வாசகர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தரமான புதிய முயற்சிகளை வாசகர்கள் வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது என் சொந்த முயற்சியிலேயே தெரிகிறது. அதனால் புத்தகம் விற்குமா என்று தயங்காது, தைரியமாக இந்த முயற்சியில் இறங்க வேண்டும். தமிழ் சமுதாயம் தொடர்ந்து வளர்ச்சியடைய, ஆங்கிலத்தை எட்டிப்பிடிக்க, தமிழில் அறிவு நூல்கள் பல்லாயிரம் கொண்டுவரப்பட வேண்டும்.

அது நடக்கும் வரையில் "தமிழில் எல்லாமே உள்ளது" என்று கூறுவதை நிறுத்த வேண்டும்.

Saturday, December 17, 2005

நுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை

சில தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் ஒன்று சேர்ந்து All India Medical and Engineering Colleges Association (AIMECA) என்ற அமைப்பைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது.

இன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியின்படி, AIMECA, நவம்பர் மாதத்தில், பல தேசியச் செய்தித்தாள்களில் தாம் ஒரு பொறியியல், மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த உள்ளதாகவும் அதில் கலந்துகொண்டால்தான் பல தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேரமுடியும் என்றும் விளம்பரம் கொடுத்ததாம். (என் கண்ணில் இந்த விளம்பரம் படவில்லை.)

இந்த விளம்பரத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வேல்'ஸ் காலேஜ் ஆஃப் பார்மசி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்ததாம். அந்த வழக்கின் இடைக்காலத் தீர்ப்பாக உச்ச நீதிமன்றம், தான் எந்தத் தனியார் அமைப்புக்கும் இப்படித் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி தரவில்லை என்றும் இதுபற்றிய ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் மைய அரசை இந்தத் தீர்ப்பு பற்றிய தகவலை தூரதர்ஷன், பிற ஊடகங்கள் மூலம் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

சற்று தோண்டிப் பார்த்ததில் AIMECA, அதன் தலைவர் TD நாயுடு ஆகியோர் பெரிய கில்லாடிகளாக இருப்பார்கள் போலத் தோன்றுகிறது. Hindustan Times - HT Horizons supplement, Wednesday 16 November 2005 இதுபற்றி ராதிகா சச்தேவ் என்பவர் எழுதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. எனக்கு ஆன்லைன் சுட்டி கிடைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, அந்தக் கட்டுரையினை முழுதாக இங்கே வெளியிடுகிறேன்... இந்தக் கட்டுரை எனக்கு ஒரு மின்னஞ்சல் குழு மூலம் கிடைத்தது.

A seat in a medical college assured for Rs 30 lakh?
By Radhika Sachdev
Hindustan Times - HT Horizons supplement
Wednesday 16 November 2005

Registered under Societies Registration Act (Registration No.401) this Chennai-based entity, AIMECA-AICET claims affiliation with nearly 1500 medical and engineering colleges, but a probe by HT Horizons revealed that the entity may have no legal authority from several of these colleges to conduct an All India Test (AICET) in order to fill up their "management quota" as allowed under a recent Supreme Court judgement As we carried out our investigation, it opened up a can of worms and out tumbled names Hon. Supreme Court Justice (Retd) Venkatachelliah, former CBI Director D.R. Karthikeyan and Praveen H. Parekh, President, Supreme Court Bar Association, who, an AIMECA information booklet claims are on its advisory panel, along with several other prominent personalities.

It started with an advertisement released by Chennai based All India Medical and Engineering Colleges Association (AIMECA) about their forthcoming All India Common Entrance Test (AICET). The advertisement appeared in all the leading newspapers on November 9, for the exam that is slated for November 17.

One highly agitated parent, a Deputy Director with UPSC, Kuldeep Singh called up the HT Horizons office to register his protest. "How can you carry advertisements released by fraudulent organisations? I made inquiries on behalf of my daughter, who is a Class XII student and discovered that this organisation is completely duplicitous."

Discrete inquiries done from HT Horizons's Chennai Office revealed the following "facts" about AIMECA:

They claim an association with nearly 1500 colleges across the country but when asked to furnish a list, they could not Their information booklet does provide a list, but clarifies that this is "only a tentative list of colleges." When pressed for further proof, the administrative staff produced letters from colleges that had accepted to subscribe to the All India Common Entrance test.

HT's Chennai office checked up with a few colleges listed in and around Chennai, and they denied any links with AIMECA. AIMECA is however a registered association under Societies Registration Act (Registration No 401) It further turned out through discreet inquiries that AIMECA has fought and is currently fighting several litigations both with the Tamil Naidu Government and the AICTE in Delhi. A call to the AICTE office in Delhi confirmed that they do not recognise AIMECA. They are not listed on the AICTE website.

The AIMECA brochure also claims that it has several prominent members on its advisory panel, including Hon. Supreme Court Justice (Retd) Venkatachelliah and former CBI Director D.R. Karthikeyan.

Meanwhile, inquiries with other parents revealed that they had heard of AIMECA, but they were turned off by the evasive replies of the organisation's administrative staff. Interestingly, AIMECA also runs a branch office at C - 91 Shanker Road, New Rajender Nagar, New Delhi - 110 060 but no Delhi phone number was provided in the advertisement nor are they listed with MTNL.

A website www.aimeca.org, www.aicet.org is however mentioned. Another web link www.karnatakacet.com/aimeca-aicet-Results.html that extols the services provided by AIMECA gives a cell phone no and email ID of one M.A. Saeed (098450 54546, saeed546@gmail.com).

HT Horizons called up Saeed as a decoy student and he demanded Rs 30,00,000 for a seat in either Mysore Medical College, Karnataka; or Bharatiya Vidyapeeth's Medical College, Pune, under the management quota. When told that the amount that he was demanding was very steep, Saeed said, "Rs 3.27 lakh is the college fee and the rest is the "cost" of the seat." Pressed further, he could not explain what he meant by this "cost" term, except to say that this is a "legal fee."

On inquiring if these two colleges have authorised AIMECA to recruit students under their management quota, Saeed said, "There is no authorisation, but we have our contacts." The procedure he said entailed taking the AICET exam conducted by AIMECA and "rest assured everything else will be arranged."

When asked if he could book us a seat in AIIMS instead, Saeed said, "No one in this country can promise you that!"

Later, we tried calling up T.D. Naidu, President, AIMECA (after securing the phone number from D.R. Karthikeyan's office in Delhi) but this turned out to be a defunct number. A physical verification of AIMECA's office in New Rajender Nagar led to the discovery that the address mentioned in the advertisement was that of a seedy hotel.

The hotel staff verified that a guest by the name of T.D. Naidu from Chennai does indeed book a room with them for a couple of days at a time, but expressed their displeasure at his using the hotel address on his business advertisements. "He comes with a briefcase, a few people come to meet him in the hotel and then he is gone," revealed a hotel staff.

Meanwhile, this correspondent managed to speak to ex-CBI Director D.R. Karthikeyan in Rome, who conceded that he knew T.D Naidu. "Naidu has been after my life, requesting me to join his advisory panel," but he hastened to add that, "Me and Justice Vekatachelliah have laid down certain conditions and norms for him to fulfil, such as the appointment of an ethical committee, a Board of Governors etc., in order to streamline the process of admissions to medical and engineering colleges. He should not have used our names on his publicity material. Please also speak to Justice Venkatachelliah in Bangalore about this issue," and hung up.

Justice Venkatachelliah said, "Praveen Parekh, President of the Supreme Court Bar Association introduced Naidu to me, as his client. The meeting was arranged at India Habitat Centre, New Delhi, two months ago. I advised Naidu to form an ethics committee and proposed the names of people, whom I thought should be put on this panel. It was an exploratory meeting and I did not charge Naidu any fee for this advice. I didn't even charge him anything for my three-day stay at IHC. I will speak to Parekh and ask him to get his client to delete my name from his advisory panel. I haven't known this gentleman for any length of time."

Praveen Parekh told HT Horizons that although he has been representing Naidu in the Supreme Court for the past year, he has not given Naidu any authority to use his name on his brochures. "A person comes to you and you take him as a bonafide client, without checking into his antecedents," he added. Parekh however agreed that he was "legal advisor" to AIMECA and that he had introduced Naidu to Justice Venkatachelliah.

Lastly, we contacted the two colleges named by Saeed: Mysore Medical College and Bhartiya Vidyapeeth Medical College in Pune.

Dr. D. Venkatesha, Principal of Mysore Medical College claimed he knew of no person by the name of T.D. Naidu, nor had he heard of any organisation by the name of AIMECA. "I joined this college two months ago, but I must tell you that this Naidu has no authority to promise anyone any seat in our medical college without our written consent."

Shivaji Rao Kadam, Pro VC of Bhartiya Vidyapeeth Medical College, Pune, who was in London, said, "I know Naidu. In fact everybody seems to know Naidu. But he and Saeed are mischievous fellows. If you want admission for anybody under the management quota, come straight to me. I will explain the procedure to you."

At the time of writing Naidu made three calls to this correspondent in half-an-hour spans. During the first call, he conceeded that Saeed was indeed his employee, but by the third call he had reversed his stand saying, "I don't know of anybody by the name of Saeed." He also mentioned that an entire list of colleges affiliated with AIMECA was filed with the Supreme Court. Now, if there were a few colleges who wanted to pull out of this agreement ---- such as Mysore Medical College --- he would have their names deleted from the list. He also hastened to clarify that, "Justice Venkatachelliah was in no way connected to AIMECA.."

இட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update

சுயநிதி, தனியார் professional கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, அடுத்த வாரமே கொண்டுவரப்படும் என்று பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார். ஏற்கெனவே கேபினட்டால் உருவாக்கப்பட்ட முன்வரைவு அப்படியே தாக்கல் செய்யப்படும் என்றும் அதில் எந்த மாறுதலும் செய்யப்படாது என்றும் சொல்லியுள்ளார்.

இப்பொழுதுள்ள வரைவில் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை பாஜக, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் இரண்டும் எதிர்த்திருப்பதை என் முந்தைய பதிவில் சுட்டியுள்ளேன்.

Friday, December 16, 2005

மைக்ரோசாப்ட்டின் இந்தியா முதலீடு

[குமுதம் இதழுக்காக நான் எழுதி அனுப்பியது. இதில் சில வரிகள் எடிடிங் செய்யப்பட்டதால் பதிப்பானதில் சில புள்ளிவிவரத் தவறுகள் வந்துள்ளன. இங்கு கொடுத்திருப்பது ஒரிஜினல், அன்-எடிடட் வெர்ஷன்.]

சென்ற வாரம் இந்தியா வந்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் அவரது நிறுவனம் இந்தியாவில் 1.7 பில்லியன் டாலர்கள் (7,820 கோடி ரூபாய்கள்) அளவுக்கு முதலீடு செய்யும் என்றார்.

பில் கேட்ஸின் முதலீட்டினால் இந்தியாவுக்கு நேரடியாக என்ன நன்மை? அடுத்த நான்கு வருடங்களில் இன்னமும் 3,000 பேர்களை மைக்ரோசாப்ட் வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லியுள்ளது. இந்தியாவின் மூன்று பெரிய ஐடி நிறுவனங்கள் - டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ - சேர்ந்து அடுத்த ஒரு வருடத்தில் 50,000 பேர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளப்போவதாகச் சொல்கிறார்கள். இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டும் அடுத்த ஒரு வருடத்தில் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுக்கப்போகிறார்கள். ஆக மைக்ரோசாப்ட் எண்ணிக்கை இதற்கு முன் சாதாரணம். அவர்களது முதலீடு வேறு எந்த வகையில் இந்தியாவுக்கு உதவப்போகிறது?

இந்த முதலீட்டின் பெரும் பகுதி மைக்ரோசாப்டின் ஆராய்ச்சிகளுக்கு, புதிய மென்பொருள்களை உருவாக்குவதற்குப் போய்ச்சேரும் என்று தோன்றுகிறது. இதனால் கூட நேரடியாக இந்தியாவுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. மைக்ரோசாப்டின் முக்கியமான சந்தையான அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுக்குத் தேவையான மென்பொருள்கள்தான் இந்த ஆராய்ச்சிச் சாலைகளில் உருவாக்கப்படும். இந்தியா இன்னமும் மைக்ரோசாப்டின் முக்கியமான சந்தை அல்ல. இந்தியாவுக்குத் தேவையான இந்திய மொழிகளிலான மென்பொருள்கள், இந்தியப் பொருளாதாரத்துக்கு அத்தியாவசியமான சிறு தொழில்களின் செய்திறனை அதிகரிக்கச் செய்யக்கூடிய மாதிரியான மென்பொருள்கள் ஆகியவற்றை மைக்ரோசாப்ட் உற்பத்தி செய்வதுபோலத் தெரியவில்லை. இன்னமும் அதிகத் திறமையுடைய, பேசக்கூடிய, பேச்சைப் புரிந்துகொள்ளக்கூடிய, கையெழுத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய கணினியை, அதற்கான மென்பொருளைத் தயாரிப்பதுதான் தன் கனவு என்கிறார் பில் கேட்ஸ். ஆனால் அது இந்தியாவுக்கு இப்பொழுது தேவையா, என்ன விலை ஆகும் என்பதைப் பற்றி பில் கேட்ஸ் பேசுவதில்லை. முதலீட்டின் இன்னொரு பங்கு மைக்ரோசாப்டின் விளம்பரங்களுக்குப் போய்ச்சேரும் என்று தோன்றுகிறது.

ஆக பில் கேட்ஸின் முதலீட்டினால் இந்தியாவுக்கு மிக அதிக நன்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் புதுத் தொழில்களை வரவேற்கக்கூடியமாதிரியான வென்ச்சர் கேபிடலில் இண்டெல் நிறுவனம் முதலீடு செய்வது போல மைக்ரோசாப்ட் செய்வதில்லை. பில் கேட்ஸ் வருவதற்கு சில நாள்கள் முன்னர் இந்தியா வந்திருந்த கிரெய்க் பேரெட் தன் பங்குக்கு 1.1 பில்லியன் டாலர்கள் (5,060 கோடி ரூபாய்கள்) முதலீடு செய்வதாகச் சொன்னார். அதில் கிட்டத்தட்ட 1,150 கோடி ரூபாய்கள் இந்த வென்ச்சர் கேபிடல் முறையில் பிற இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுபவை. அது மிக அதிக அளவில் இந்தியப் பொருளாதாரம் முன்னேற உதவியாக இருக்கும். நாளடைவில் அதிக வேலை வாய்ப்புகளையும் வழங்கும். பல தொழில் முனைவர்களையும் உருவாக்கும்.

எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்

சமீபத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் கூவம் கரையோரம் நடந்துள்ள நில ஆக்ரமிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பல்வேறு ஆசாமிகள் பொதுநிலத்தை ஆக்ரமிப்பு செய்திருந்தாலும் இதில் மிகவும் முக்கியமானது டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் செய்துள்ள ஆக்ரமிப்பு.

முன்னாள் அஇஅதிமுக பிரமுகரும் தற்போதைய புதிய நீதிக்கட்சியின் தலைவருமான AC சண்முகம் நடத்திவருவதுதான் டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி; அதன் அடுத்த கட்டமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம். மதுரவாயலில் தன்னிஷ்டத்துக்கு கூவத்தையொட்டி இந்தக் கல்லூரி, பொதுநிலத்தை ஆக்ரமித்து அங்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களைக் கட்டியிருந்தது. இதில்தான் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்கள் போதிக்கப்பட்டன; மாணவர்களுக்கான ஹாஸ்டல் இருந்திருக்கிறது.

மதுரவாயல் கலெக்டர் உத்தரவின்பேரில் ஆக்ரமிப்புகளை இடிக்க நகராட்சியினர் வர, நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றனர். ஆனால் நீதிமன்றங்கள் கட்டடத்தை இடிப்பதைத் தடைசெய்யவில்லை. இதனால் முந்தாநாள் முதல் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. தி ஹிந்து செய்தியில் பாதி இடித்த நிலையில் உள்ள கட்டடங்களைப் பார்க்கலாம்.

இந்த ஆக்ரமிப்புகளால்தான் வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்களுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் கருதிகின்றனர். இப்பொழுதைய வெள்ளத்தை சாக்காக வைத்துக்கொண்டு ஆக்ரமிப்புகளை ஒரேயடியாக தட்டித் தரைமட்டமாக்கிவிடலாம். ஆனால் ஒருவகையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு நடந்துகொள்வதற்குக் காரணம், அஇஅதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற குட்டித்தலைவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதாகவும் இருக்கலாம். அப்படியானால் ஜெயலலிதாவுக்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பகுதி பொறம்போக்கு நிலத்தை வளைத்துப்போட்டுச் செய்யப்படும் திருட்டுத்தனங்கள்தான் என்று பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது. இதில் எதிர்க்கட்சியினராகப் பார்த்து அவர்களில் யார் யாரெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகக் கல்லூரிகளைக் கட்டியிருக்கிறார்களோ அதையெல்லாம் ஜெயலலிதா இடித்துவிடலாம். அடுத்த ஆட்சி மாற்றத்தின்போது திமுக மிச்சம் இருக்கும் அஇஅதிமுக பிரமுகர்களின் சட்டத்துக்குப் புறம்பான கல்லுரிகளை ஒருகை பார்க்கலாம். அப்படியாவது திருடர்கள் ஒழிக்கப்படுவார்கள்.

சண்முகம் அம்மாவிடம் கருணை காட்டச்சொல்லி எழுதிய கடிதம் தி ஹிந்துவில் இங்கே. தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டுவிட்டார். அத்துடன் தன் கல்லூரி தொடர்பான வேறொரு 'மிரட்டல் வழக்கில்' முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார் சண்முகம்.

Thursday, December 15, 2005

டூரிங் டாக்கீஸ்

இந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ஒத்துவராதது. பதியவேண்டியவை என நான் நினைத்துப் பதியாமல் வைத்திருப்பது நிறைய. ஆனாலும் பிரகாஷின் அன்புத்தொல்லைக்காக...

நான் நாகப்பட்டினத்தில் அவ்வளவாக சினிமா பார்த்தது கிடையாது. மொத்தமாக 10, 12 பார்த்திருந்தால் அதிகம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் சமயத்தில் அந்த ஊரில் மூன்று தியேட்டர்கள். எல்லாமே சென்னை ரேஞ்சுக்குப் பார்த்தால் டப்பா தியேட்டர்கள். முதன்முதலாகப் பார்த்தது தசாவதாரம்; பின் ஏதோ ஒரு ஐயப்பா என்று வருடத்துக்கு ஒன்றாக அப்பா, அம்மா கூட்டிக்கொண்டு போகும் சாமி படங்கள். மூன்றாவது படிக்கும்போது தெருப்பையன்களை (என்னைவிடப் பெரிய பசங்கள்) நம்பி ஏதோ ஒரு சாமி படத்துக்கு அனுமதித்து அனுப்பி விட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே செய்த சதியோ என்னவோ, சாமிப்படம் டிக்கெட் கிடைக்காமல் சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை) - அதில் 'அண்ணன் ஒரு கோயில் என்றால்' என்ற பாடல் வரும் என்று நினைக்கிறேன் - ஓடும், பக்கத்தில் இருக்கும் இன்னொரு தியேட்டருக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அதுதான் நான் முதலில் பார்த்த செகுலர் படம். போரடித்தது.

அதன்பின் அம்மாவுடன் சென்று பார்த்த லஷ்மி பூஜை என்ற விட்டலாசார்யா படம். அம்மாவுக்கு அது விட்டலாசார்யா படம் என்று தெரியாது. ஏதோ "நல்ல சாமி படம்" என்று நினைத்து என்னையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

அதன்பின் ஆறாவது படிக்கும்வரையில் எந்தப் படமும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதன்பின் கூட்டாளிகள் மாறினாலும் எனக்கு சினிமா பார்க்கும் பழக்கமே வரவில்லை. ஆறாவதில் பள்ளிக்கூட விடுமுறைக்காக சில நண்பர்களோடு 'கிழக்கே போகும் ரயில்' பார்த்தது ஞாபகம் வருகிறது. ஏன் அந்தப் படம் என்று இப்பொழுது ஞாபகமில்லை.

அதுவரையில் நான் எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் படங்கள் எதுவுமே திரையில் பார்த்ததில்லை! ஆனால் ஒரு ராதிகா படம்! அதன்பின் தியேட்டரில் ஏதோ காரணத்துக்காக உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல்தான் இருக்கும். பின் நான் பார்த்த முதல் ஜிலுஜிலு படம் கமல் நடித்த சகலகலாவல்லவன்.

இப்படியே எனது eclectic mix தொடர்ந்தது - மை டியர் குட்டிச்சாத்தான், மிருதங்கச் சக்ரவர்த்தி என்று காலமாறுதல் குழப்பங்களை ஏற்படுத்தும் படவரிசை.

12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார். அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படம் என்றாலே ('காந்தி' தவிர பிற படங்களை) பலான படங்கள் என்று எங்கள் ஊர் மக்கள் கருதிய காலம். அந்தப் படங்களுக்கு பெண்களுக்கு டிக்கெட் தர மாட்டார்கள்.

ஆனால் உண்மையிலேயே ஒரு பலான சீன் கொண்ட படத்தை பள்ளிக்கூடத்தின் ஆதரவில் பார்க்க நேர்ந்தது. Ape, Super Ape என்ற படம். பள்ளிச்சிறுவர்களுக்காக என்று பாதிக்காசில் ஓட்டிய படம். 50 பைசாவோ என்னவோ டிக்கெட் என்று நினைக்கிறேன். எட்டாவது படிக்கும்போது. கூட்டமாக எல்லோரும் போனோம். நோவாவின் கப்பலில் உள்ள மிருகங்கள் மாதிரி ஜோடி ஜோடியாக மிருகங்கள் கலவியும் கருத்தரித்தலும் குழந்தை பிறத்தலும் என்று தொடங்கி கடைசியில் ஆணும் பெண்ணும் உடலில் துணியின்றி கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியில் அரங்கு முழுதும் நிறைந்த எட்டாவது படிக்கும் பையன்கள் ஓவென்று கத்த... கட்!

நாகையிலிருந்து சென்னை வந்தால் அங்கு ஐஐடியில் முதல் வருடம் சுத்தமாக ஒரு படம் பார்க்கவில்லை. ஓப்பன் ஏர் தியேட்டர் (ஓஏடி) முழுதும் கூட்டம் நிறைந்திருந்தாலும் சனிக்கிழமை மாலைகளில் லைப்ரரிக்குச் சென்று ஏதோ ஸ்பெஷல் கடமை ஆற்றுவதால் நான் பிற மாணவர்களை விட ஏதோவிதத்தில் உயர்ந்தவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப்போனேன்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஓஏடியில் படங்கள். அப்பொழுது எல்லாமே ஆங்கிலப்படங்கள்தான். நான் முதன்முதலில் நல்ல சினிமாப் படங்களை (அத்துடன் பல குப்பைகளையும்) பார்க்கத் தொடங்கியது அப்போதுதான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் எல்லா வெஸ்டர்ன் படங்களும். பல கிளாசிக் படங்கள். ஏன் ஜேம்ஸ் பாண்ட் என்றொரு ஜந்து இருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. முதன்முதலில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்து அடைந்த கிளர்ச்சிக்கு ஈடே கிடையாது! மழையில் நனைந்துகொண்டு படம் பார்ப்பது (மேலே கூரை கிடையாது), தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் "Volume!" என்று கத்தி ரகளை செய்வது, புரொபசர்களின் பெண்களை சைட் அடிப்பது என்று... ஹூம்!

மூன்றாவது நான்காவது வருடங்களில் தொழில்நுட்பம் அதிகம் தெரிந்துகொண்டதால் நண்பன் ஒருவனின் வீட்டில் இருந்த உடைந்து போயிருந்த புரொஜெக்டரை பிற நண்பர்களோடு சேர்ந்து சரிசெய்து, 16மிமீ ஜெர்மன் படங்களை (ஊமைப்படங்கள், ஆனால் அந்தப் படங்களுக்குச் சத்தம் தேவையில்லை!) ஹாஸ்டல் ரூமுக்குள் வைத்து ரகசியமாகப் பார்த்தது; ஹாஸ்டல் soc sec (அதாவது social affairs secretary), விடுமுறை சமயத்தில் ஹாஸ்டலுக்கு வாடகைக்குக் கொண்டுவரும் விடியோ டெக்கைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து தரமணியிலிருந்து கொண்டுவந்த சில 'உயிரியல் சோதனைப் படங்களை' பார்த்தது ஆகியவை இந்தப் பதிவில் தவிர்க்கப்படலாம். ஏனெனில் இது டூரிங் டாக்கீஸ்...

செமஸ்டர் லீவில் நாகை செல்லும்போது பார்த்த படங்கள் என்று ஞாபகம் இருப்பது ஒன்றிரண்டுதான்... நானும் அறுசுவை பாபுவும் விக்ரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது டிக்கெட்டைத் தொலைத்துவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்; மணிரத்னம் என்ற ஆள் அக்னி நட்சத்திரம் என்ற சூப்பர் படம் எடுத்திருப்பதாக நண்பர்களுடன் சென்று பார்த்தது; நாகார்ஜுனா, அமலா நடித்த தெலுங்குப் படமான ஏதோ ஒன்று தமிழில் 'சிவா' என்று டப்பானது என்று நினைக்கிறேன். அது... அவ்வளவுதான்.

அக்னி நட்சத்திரத்துக்குப் பிறகு சென்னையில் வேறு ஏதேனும் மணிரத்னம் படம் ஓடினால் மட்டும் போய்ப் பார்த்திருக்கிறேன். பி.டெக் முடித்ததும் நண்பர்கள் அனைவரும் - தமிழ்ப் பசங்கள் மட்டும் - அஷோக் நகர் உதயம் தியேட்டரில் பார்த்த ஏதோ ஒரு கார்த்திக் படம் - கார்த்திக், பானுப்ரியா - "தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்..." படம் பெயர் ஞாபகம் இல்லை. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அமெரிக்கா வாசம்.

மல்ட்டிபிளெக்ஸில் முதலில் படம் பார்த்தது இதாகா கிராமத்தில்தான்! ஐவரி மெர்ச்சண்ட் படம் ஒன்றைப் பார்க்கப்போய் அந்தச் சின்னத் திரையரங்கில் மொத்தமாக எங்களையும் சேர்த்து மூன்றே பேர்கள்தான் - ஆச்சரியமாக இருந்தது. ஹவுஸ் ஃபுல்லானால் மொத்தம் 120 பேர்தான் உட்கார முடியும். ஆனாலும் நான் இதாகாவில் பார்த்த படங்களில் இரண்டு மூன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் பார்க்க 10, 15 பேர் வந்திருந்தாலே அதிகம். ஜுராசிக் பார்க் போன்ற சில படங்கள்தான் அரங்கு நிறைந்து பார்த்திருக்கிறேன்.

கார்னல் யுனிவர்சிட்டியில் வில்லார்ட் ஸ்டிரெயிட் ஹால் என்ற இடத்தில் வாரம் ஒரு படம் போடுவார்கள். அங்கு நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேயை முதலில் அங்குதான் பார்த்தேன். என் கூட வசித்த நண்பர்கள் என்னை மாதிரியில்லை - சினிமாவை ஆழ்ந்து ரசிப்பவர்கள். நல்ல இலக்கியம் படிப்பவர்கள். அவர்களோடு சேர்ந்து இருந்ததால் நிறைய சினிமாக்கள் பார்க்கக் கிடைத்தன, புத்தகங்களும் ஓரளவுக்குப் படிக்கக் கிடைத்தன. அதன்பின் நான் கிரிக்கெட்/கிரிக்கின்ஃபோ மீது பழியாக சினிமாவை மறந்து விட்டேன்.

இப்பொழுதெல்லாம் எப்பொழுதாவதுதான் சினிமா பார்க்கிறேன். சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில் இருந்தால்தான் போகிறேன். (வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால்.) சீரியஸ் சினிமாமீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. தமிழ் சினிமாமீது சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் சந்திரமுகி, அந்நியன் போன்ற படங்களை விடுவதில்லை! அவ்வப்போது சில ஆங்கிலப் படங்கள் நல்லதாகக் கண்ணில் படுகின்றன.

டெய்ல்பீஸ்: திருப்பூர் தமிழ்ச்சங்க விழாவுக்கு நான், முருகன், ராகவன், ரூமி எல்லோரும் போயிருந்தோம். நானும் முருகனும் திருப்பூரைச் சுற்றிவரும்போது 'கிச்சா வயசு 16' படம் கண்ணில் பட்டது. மாலை விழாவுக்கு முன் ஏன் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது என்று நான் முருகனைக் கேட்க, அவர் மதியம் படம் பார்த்தால் தலை வலிக்கும் என்றும், தன்னால் வரமுடியாது என்றும் சொன்னார். ஆனால் நான் விடவில்லை. தனியாகச் சென்றேன். படம் பார்க்க என்னுடன் இருந்தவர்கள் மொத்தமாகவே 10 பேர்தான் என்று நினைக்கிறேன். படம் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாகை தியேட்டர்களில் படம் பார்த்ததுபோன்ற ஓர் நாஸ்டால்ஜிக் உணர்வு. அழுக்கு தியேட்டர். ஏசி கிடையாது. ஃபேன் தடதடவென ஓடும் சத்தம். சுவரெங்கும் காவிக்கறை. சீட் பிய்ந்து தேங்காய் நார் வெளியே தெரியும்.

ஆனால் டிக்கெட் 10 ரூபாயோ என்னவோதான்!

இன்றுகூட நாகப்பட்டினத்திலும் பிற தமிழக டவுன்களிலும் தியேட்டர்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தியேட்டர்களில்தான் கோடம்பாக்கத்தின் கனவுகள் நனவுகளாகின்றன!

பிரகாஷின் கட்டளைப்படி அடுத்து நான் tag செய்யவேண்டிய ஆள் நாராயணாம்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

மேலே பொறியியல் என்று சொன்னாலும் இது professional courses - மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், நர்சிங் - என அனைத்தையும் குறிக்கும்.

சுயநிதி professional கல்லுரிகளில் அரசுகள் தத்தம் மாநிலங்களில் செயல்படுத்தும் இட ஒதுக்கீடுகளை வற்புறுத்தி நுழைக்க முடியாது என்றும் மாநில அரசுகள் தம்மிஷ்டத்துக்கு தனியார் கல்லுரிகளின் கட்டணங்களை வரைமுறைப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட பெஞ்ச் தீர்ப்பு சொன்னது.

அதை எதிர்த்து தமிழக அரசு கொண்டுவந்த மறு பரிசீலனை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் மைய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்து மாநில அரசுகளுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கலாம் என்று கேபினட் முடிவு செய்தது. இதுபற்றிய தி ஹிந்து செய்தி இங்கே. இந்த அரசியலமைப்புச் சட்ட மாறுதல் வரைவு இதுவரையில் பொதுமக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்படவில்லை. ஆனால் செய்திகளின்படி, சிறுபான்மையினர் கல்விக்கூடங்கள் தவிர்த்து பிற சுயநிதி professional கல்லூரிகளில் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டினைப் புகுத்தலாம் என்று சட்ட வரைவு சொல்வதாக அறிகிறோம்.

இதில் "socially and educationally backward classes, besides the Scheduled Castes and the Scheduled Tribes" என்று குறிப்பு வருகிறது. Socially backward classes - சாதிகளின்படி பிற்படுத்தப்பட்டோர் என்பது நன்கு விளங்கக்கூடியது. இதில் பிற பிற்படுத்தப்பட்டோர் - Other Backward Classes - உண்டா என்று Parliamentary Forum of OBC MPs என்னும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளதாம். OBC யார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

பாரதீய ஜனதா கட்சி, சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் இந்த சட்ட வரைவைத் தம் கட்சி எதிர்க்கும் என்று கூறியுள்ளது. கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம்.

Educationally backward classes என்பது யாரைக் குறிக்கும் என்று தெரியவில்லை. முஸ்லிம்கள் இப்பொழுதைக்கு நேரடியாக BC என்ற வரைமுறைக்குள் வரவில்லை என்பதனால் இது சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆந்திராவில் இப்பொழுது முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு தருவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம், மசோதாக்கள் ஆந்திர உயர் நீதிமன்ற அளவில் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை EBC என்னும் பிரிவு இதைக் கருத்தில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இதனால் பல குழப்பங்கள் வரும் என்றுதான் நினைக்கிறேன்.

அடுத்த வாரமே தாக்கல் செய்யப்போவதாகச் சொன்ன அரசு இப்பொழுது மீண்டும் இந்தச் சட்ட வரைவை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாம்.

Tuesday, December 13, 2005

நரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்

nanopolitan வழியாக:

சில நாள்களுக்கு முன்னர் நரேந்திர ஜாதவ் எனும் ரிசர்வ் வங்கி அதிகாரி பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தேன்.

இவர் "Untouchables: My Family's Triumphant Journey Out of the Caste System in Modern India" என்னும் புத்தகத்தின் ஆசிரியரும் கூட.

இவர் indiatogether.org தளத்துக்குக் கொடுத்திருந்த ஒரு செவ்வி இங்கே: A Dalit straddles the financial world

நாணயம், அந்நியச் செலாவணி, டாலர்-ரூபாய் உறவு, பொருளாதார விஷயங்களில் அரசின் தலையீடு, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் தேவை போன்ற சில விஷயங்கள் பற்றி இந்த நேர்முகத்தில் பேசியிருக்கிறார்.

ஹைதராபாத் புத்தகக் கண்காட்சி

சென்ற வெள்ளி, சனி ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தேன். இந்த நேரத்தில் மதியம் கடுமையான வெய்யிலும் இரவு நேரங்களில் குளிருமாக உள்ளது. இதனால் மதியம் 2.30க்குத் தொடங்கும் புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டம் குறைவாகவே வருகிறது. வெப்பம் என்றால் கடுமையான வெப்பம். சென்னை போன்று வியர்வை வருவதில்லையே தவிர உதடுகளும் தோலும் வறண்டுபோய் எரியத் தொடங்கும் அளவுக்கு வெப்பம். முப்பது கடைகளைத் தாண்டுவதற்குள் தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது!

இது இருபதாவது வருடமாக நடக்கும் கண்காட்சியாம். சென்ற வருடம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாகவும் இந்த வருடம் 1.5 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் சில செய்திகள் தெரிவித்தன. (ஒப்பீட்டுக்கு, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 5-6 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆவதாகக் கணிப்புகள் கூறுகின்றன.)

கிட்டத்தட்ட 200 கடைகள். நிசாம் கல்லூரி மைதானத்தில் தட்டிகள் வைத்துக் கட்டி எழுப்பியிருந்த கடைகள். பெங்களூர் அளவுக்கு அழகாக இல்லை. சொல்லப்போனால் சென்னையை விட மோசமாகத்தான் இருந்தது. 200 கடைகளில் அதிகபட்சம் 25 தெலுங்கு பதிப்பாளர்கள் இருந்தால் அதிகமே. ஓரிரண்டு உருது பதிப்பகங்களும் சில ஹிந்திப் புத்தக விற்பனையாளர்களும் இருந்தனர்.

தமிழுடன் ஒப்பிடும்போது தெலுங்குப் புத்தகங்கள் பரிணாம வளர்ச்சியில் மிகுந்த பின்னணியில் உள்ளன. இலக்கியப் புத்தகங்கள், பிற அ-புனைவு/அறிவுசார் நூல்கள் என அனைத்திலும் குறைவுபட்டதாகவே இருந்தன. இரண்டே இரண்டு பதிப்பகங்கள்தான் நல்ல முறையில் நூல்களை அச்சிட்டு, கட்டு கட்டி வெளியிட்டிருந்தன. (பீகாக், ப்ரத்யுஷா). பிற பதிப்பகங்கள் அனைத்துமே பளபளா அட்டை, 1940-1950 காலத்தைய கோட்டோவியங்கள் அலங்கரிக்கும் அட்டைகள்; மிக மெலிதான, விஷய ஞானம் குறைவான உள்ளடக்கம் என்ற நிலைதான்.

இந்திய மொழிகள் போகவேண்டிய தூரம் மிக அதிகம்.

தமிழிசை விழா

தமிழிசைச் சங்கத்தின் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் சார்பில் இந்த வாரம் 17-18 (டிசம்பர் 2005) தேதிகளில் சென்னை போக் (செவாலியே சிவாஜி கணேசன்) சாலை, முருகன் திருமணக்கூடத்தில்மண்டபத்தில் ஓர் இசைவிழா நடக்க உள்ளது.

[குறிப்பு (14 டிசம்பர் 2005): மேற்படி நிகழ்ச்சி தமிழிசைச் சங்கத்தின் சார்பில் நடைபெறுவது அல்ல. பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் சார்பில் நடைபெறுவது. இதன் தலைவர் ராமதாஸ். கோகுலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கிறார். தமிழிசைச் சங்கம் என்பது வேறு. அதன் வருடாந்திர நிகழ்ச்சிகள் இந்த வருடமும் நடைபெறுகின்றன. தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.]

தமிழ்ப்பண்கள் - சமயச்சார்பற்ற மற்றும் இந்து, இஸ்லாமிய, கிறித்துவப் பாடல்கள் - பாடப்படும் என்று தெருவில் வைக்கப்பட்டிருந்த ஒரு தட்டியின் மூலம் அறிகிறேன்.

இந்த விழா மூன்றாவது வருடமாகத் தொடர்ந்து நடக்கிறது. தமிழிசைச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஓய்வுபெற்ற குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி P.R.கோகுலகிருஷ்ணன். இந்த விழாவுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர் பாமக தலைவர் ராமதாஸ். பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் தலைவர் பாமக ராமதாஸ். இந்த விழாவினைத் தொடக்கி வைக்க வருபவர் தமிழிசைச் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி P.R.கோகுலகிருஷ்ணன்.

-*-

தமிழ் இசை - அதாவது புராதனமான தமிழ்ப்பண்கள், தமிழில் இயற்றப்படும்/பட்டுள்ள கீர்த்தனைகள், பாடல்கள் ஆகியவை சென்னை இசைவிழாக்களில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. நல்ல பெயர் பெற்ற தமிழ்ப் பாடகர்கள், முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களைப் பாடி இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தாலும்கூட ம்யூசிக் அகாடெமி, நாரத கான சபா போன்ற இடங்களில் கச்சேரி என்று வந்துவிட்டால் அந்தப் பாடல்களை - அவை எவ்வளவுதான் உள்ளத்தை உருக வைக்கக்கூடியனவாக இருந்தாலும் - கண்டுகொள்வதில்லை.

அவ்வப்போது ஒரு துக்கடாவாக ஒரு திருப்பாவை, ஒரு பாரதியார் பாடல், ஒரு பாபனாசம் சிவன் பாடல் - அவ்வளவுதான். எம்.எஸ்ஸுக்குப் பிறகு ஆய்ச்சியர் குரவையை இசை உலகமே மறந்துவிட்டது போலும். (சிலப்பதிகாரம் இசைத்தட்டு ஒன்று வாங்கியுள்ளேன். இன்னமும் போட்டுக்கேட்க நேரமில்லை.)

இதற்கு மாற்றாக தமிழிசையை முதன்மைப்படுத்தி சென்னை இசை மாஃபியாவை மீறி இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் தமிழிசைச் சங்கத்துக்கும் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்துக்கும் நமது பாராட்டுகள்.

தமிழிசையை மைய நீரோட்டத்துக்குள் கொண்டுவரமுடியும் என்றே நினைக்கிறேன். அதற்குச் சில வருடங்கள் பிடிக்கலாம். இன்னமும் அதிகமான புரவலர்கள் தேவை. இரண்டு நாள்கள் மட்டும் நடக்கும் விழா போதாது. 10-15 நாள்கள் தொடர்ச்சியாக நடக்கும் விழாக்கள் - பல இடங்களிலும் - தேவை. முக்கியமான சபாக்களை தமிழிசை ரசிகர்கள் ஊடுருவி உறுப்பினர்களாக வேண்டும். பின் தேர்தல்களில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு டிசம்பர் இசை நிகழ்ச்சியிலும் குறைந்தது 25% முழுத்தமிழ் இசைக்காக நேரம் ஒதுக்கவேண்டும். பாடகர்களை தமிழிசையை அதிகப்படுத்தச் சொல்லவேண்டும். சென்னை இசை மாஃபியாக்களை ஒழிக்க இது ஒன்றுதான் வழி.

Thursday, December 08, 2005

ஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்

இப்பொழுது ஹைதராபாதில் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. டிசம்பர் 1-11 வரையில். நிஜாம் கல்லூரி மைதானத்தில். தமிழ்ப் பதிப்பாளர்கள் யாரும் கடைகள் போட்டிருப்பதாகத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் போகவில்லை. பெங்களூர் போல ஹைதராபாதில் தமிழ்ப் புத்தகங்களுக்கு சந்தை இருக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் நான் போகிறேன். நாளையும், மறுநாளும் கண்காட்சிக்குப் போய் எந்த மாதிரியான புத்தகங்கள் அங்கு விற்பனையாகின்றன என்று பார்த்துவிட்டு வருவேன்.

ஹைதராபாத் புத்தகக் கண்காட்சி பற்றிய தி ஹிந்து செய்தி

சென்னையில் 6-16 ஜனவரி 2006இல் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது. இம்முறையும் காயித்-ஏ-மில்லத் அரசினர் கலைக்கல்லூரியில்தான். இதுவே இந்தக் கல்லூரியில் நடக்க உள்ள கடைசி சென்னைப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்படுகிறேன். அடுத்த வருடம் இன்னமும் பெரியதாக, தீவுத்திடலில் நடக்கலாம்...

இந்தியாவுக்கு விடுமுறையில் வர விரும்பும் தமிழர்கள் 6-16 ஜனவரியை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Wednesday, December 07, 2005

கிரேஸி மொபிசோட்

பிசினஸ் ஸ்டாண்டர்ட்: Hutch ties up with Tamil playwright Crazy Mohan

செல்பேசிகள் இப்பொழுது வெறும் தொலைபேசிகளாக மட்டும் இயங்குவதில்லை. உலகெங்கிலும் ஓர் ஊடகமாக மொபைல் ஃபோன்கள் கருதப்படும் நிலை இன்று.

பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் triple play, quadruple play என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

டிரிபிள் பிளே என்றால் செல்பேசியின் மூலமாக வழங்கப்படும்
1. தொலைபேசிச் சேவை (voice)
2. இணைய இணைப்பு (data)
3. தொலைக்காட்சிச் சேவை (broadcast video அல்லது on-demand video)
என்ற மூன்றும் ஒருங்கே கிடைப்பது - வயர்லெஸ் வழியாக.

இதனால் கம்பி வழியாக தொலைபேசி, இணைய, தொலைக்காட்சி சேவைகளைக் கொடுத்து வந்தவர்கள் கொஞ்சம் பயந்து போனார்கள். அதனால் அவர்கள் உருவாக்க்கிய 'கெத்'தான் வார்த்தைதான் குவாட்ருபிள் பிளே.

கம்பி வழியாகக் கொடுக்கப்படும்
1. தொலைபேசிச் சேவை (voice)
2. அதிவேக இணைய இணைப்பு (data)
3. தொலைக்காட்சிச் சேவை (cable TV/DTH...)
4. அத்துடன் வயர்லெஸ் தொலைபேசிச் சேவையும் கூட...

நாம் இப்பொழுதைக்கு செல்பேசிகளை மட்டும் கவனிப்போம்.

இந்தியாவைப் பொருத்தவரை செல்பேசிகள் இன்னமும் பிறரிடம் பேசுவதற்கான சாதனமாக மட்டுமே பெரும்பாலர்களால் கருதப்படுகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதை இப்பொழுதுதான் பலர் பயன்படுத்துகின்றனர். தமிழ், பிற இந்திய மொழிகளில் எளிதாக குறுஞ்செய்திகளை அனுப்பி, படிக்க முடியும்போதுதான் இதன் உபயோகம் அதிகரிக்கும். அதேபோல அதிவேக இணைய வசதிகள் இப்பொழுது இந்தியாவில் செல்பேசிகள் வழியாகக் கிடைப்பதில்லை. 3G சேவை இன்னமும் இந்தியாவில் கிடைப்பதில்லை.

இதன் காரணமாகவே நேரடி ஒளிபரப்பு சேவைகளை செல்பேசிகளில் பெறுவது முடியாத காரியம். நல்ல ஒளிபரப்புத் தரத்தில் விடியோ பார்க்கவேண்டுமானால் 300-400 kbps வேகமாவது இருக்கவேண்டும். சில மொபைல் நெட்வொர்க்கள் - ஹட்ச், ஏர்டெல் ஆகியோர் EDGE தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தங்களது நெட்வொர்க்களில் பார்க்கமுடியும் என்று சொல்கிறார்கள். என்னால் நம்பமுடியவில்லை. நான் இதுவரையில் பார்த்ததுமில்லை. ஆனால் என்ன பேண்ட்வித் இருந்தாலும் on-demand விடியோ துண்டுகளை செல்பேசிக்குள் இறக்கி, பின்னர் பார்க்கமுடியும்.

விடியோ துண்டுகள் பற்றி யோசித்த செல்பேசி நிறுவனங்களுக்கு முதல்முதலில் தோன்றியது - கிரிக்கெட். ஒவ்வொரு விக்கெட்டையும் துண்டாக வெட்டி மொபைல் போனுக்கு MMS செய்யலாமே என்று நினைத்தார்கள். செய்தார்கள். அதன்பின் புதிதாக வெளிவரும் சினிமாப்படங்களின் டிரெய்லர்கள். பாடல்களிலிருந்து சில துண்டுகள். இப்பொழுது விடியோ ரிங்டோன்கள்.

இதன் அடுத்தகட்டம்தான்...

மொபிசோட்கள்

எப்படி சினிமாவிலிருந்து தொலைக்காட்சி மெகா சீரியல்கள் உருவாயினவோ, அதன் மொபைல் வெர்ஷன்தான் மொபிசோட்கள் - மொபைல் எபிசோட்கள். சிறு சிறு துண்டுகளாக, அதே சமயம் முழுவதுமாக உள்ளடங்கிய துண்டுகளாக - ஒரு நாடகத்தையோ, கதையையோ வெட்டி, எடிட் செய்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். பின் அதனை செல்பேசிகளுக்கு டவுன்லோட் செய்து வேண்டியபோது பார்க்கலாம். ஒவ்வொரு மொபிசோடும் 2-3 நிமிடங்கள் செல்லும்.

கிரேஸி மோகனின் நாடகங்கள் இப்படியாக ஹட்ச் செல்பேசி வழியாக மொபிசோட்களாக வரப்போகின்றன.

பாபுலர் கலைஞர்கள் உருவாக்கும் content, மிகச் சீக்கிரமாகவே இப்படி வெவ்வேறு மொபைல் நெட்வொர்க்கள் மூலமாக வெளிவரத் தொடங்கும்.

அதைத்தொடர்ந்து அதிகம் தெரியாதவர்களின் படைப்புகளும் வெளியாகும்.

குறும்படங்களை எளிதாக இப்படி டவுன்லோட் முறையில் அனுப்பலாம். சின்னச் சின்ன அனிமேஷன் படங்களை உருவாக்கி டவுன்லோட் செய்ய வைக்கலாம். இதில் படைப்பாளிக்கு ஒரு வசதியும் உள்ளது. ஒவ்வொரு டவுன்லோடும் துளியளவாவது பணத்தை படைப்பாளிக்கு வழங்கும். ஒரு குறும்படத்தை டவுன்லோடுக்கு ரூ. 10 என்ற வீதத்தில் கொடுத்தால், ரூ. 5 படைப்பாளிக்குக் கிடைக்கும்.

நேரிடையாக அல்லாது இடைத்தரகர் மூலம் சென்றால் குறைந்தது ரூ. 2-3 கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் பல நல்ல குறும்படங்கள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. நல்ல சிறுகதைகளைப் படமாக எடுக்க இதைவிடச் சிறந்த வாய்ப்பு வேறெதுவும் இல்லை.

அத்துடன் இவ்வாறு உருவாக்கப்படும் மொபிசோட்களை அகலப்பாட்டை வழியாகவும் விற்பனை செய்யலாம்.

இது கவனத்துடன் பார்க்கப்படவேண்டிய ஒரு துறை.

சில மாதங்கள் சென்றபிறகு, கிரேஸி மோகனிடம் இதுபற்றிப் பேசி அவரது அனுபவத்தை இங்குப் பதிவிடுகிறேன்.

Monday, December 05, 2005

வோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை

ஈராக் உணவுக்காக எண்ணெய் திட்டத்தில் ஊழல்கள் நடந்தது குறித்து ஐ.நா சபை நியமித்திருந்த வோல்க்கர் குழு தனது அறிக்கையை வழங்கியது. அதில் இந்தியாவிலிருந்து அப்பொழுதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயரும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரும் அடிபட்டன. சதாம் ஹுசேன் அரசாங்கத்திடமிருந்து நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இருவருக்கும் எண்ணெய் எடுக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக வோல்க்கர் அறிக்கை கூறியது இந்தியாவில் அரசியல் புயலை ஏற்படுத்தியது.

முதலில் காங்கிரஸ் கட்சியும் நட்வர் சிங்கும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அவரது நண்பர் அண்டலீப் சேகாலும் ஈராக், ஜோர்டான் நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர் என்றும் சேகாலின் நிறுவனம் வழியாக (லஞ்சப்) பணம் ஈராக்குக்குச் சென்றுள்ளது என்றும் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Enforcement Directorate சேகால் அந்நியச் செலாவணி விஷயத்தில் ஏதேனும் திருட்டுத்தனங்கள் செய்துள்ளாரா என்று விசாரித்தது.

எதிர்க்கட்சிகள் நட்வர் சிங்கைப் பதவி விலகச் சொன்னார்கள். நட்வர் சிங் மறுத்தார். தான் தவறேதும் செய்யவில்லை என்றார். பிரதமர் மன்மோகன் சிங் நட்வர் சிங்கின் வெளியுறவுத்துறையைப் பிடுங்கிக்கொண்டு அவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருமாறு சொன்னார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி R.S.பாதக் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை ஏற்படுத்தினார்.

எதிர்க்கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்தனர்.

இந்த நேரத்தின் இந்தியாவின் க்ரோவேஷியா நாட்டுத் தூதர் அனில் மாதரானி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் நட்வர் சிங்கின் தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சிக் குழு தங்கியிருந்த ஹோட்டலுக்கு நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அண்டலீப் சேகாலும் பின்னர் வந்து சேர்ந்து கொண்டதாகவும், நட்வர் சிங் ஈராக் அதிகாரிகள் பலருக்கும் தன் மகனை அறிமுகம் செய்ததாகவும் கூறினார். அதே பேட்டியில் நட்வர் சிங் உணவுக்கான எண்ணெய் திட்டத்தின் கூப்பன்களை நட்வர் சிங் பெற்றுக்கொண்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

பின்னர், தான் அப்படி ஒரு பேட்டி அளிக்கவேயில்லை என்று மாதரானி மறுத்தார். இந்தியா டுடே பத்திரிகையின் துணை ஆசிரியர் தம்மிடம் இந்தப் பேட்டியின் ஒலிப்பதிவு இருப்பதாக, இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் கூறினார். உடனடியாக அனில் மாதரானி தன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அவரை முன்னரே வேலையிலிருந்து தூக்குவதாக முடிவு செய்துவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும் அதை நாம் நம்பத் தயாராக இல்லை.)

நட்வர் சிங், மாதரானி மீது அவதூறு வழக்கு தொடுப்பதாக பயம் காட்டினார்.

பாஜக, எதிர்க்கட்சிகள் நட்வர் சிங் கைது செய்யப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டனர். (ஏன் அவரைக் கைது செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள் என்று புரியவில்லை.) அத்துடன் "சோனியா காந்தி திருடர்" என்று நாடாளுமன்றத்தில் சத்தம் போட்டனர்; சபையை நடக்கவிடாமல் நிலைகுலையச் செய்தனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டல் குழுவிலிருந்து நட்வர் சிங் நீக்கப்பட்டார். அமைச்சர் கபில் சிபால், நட்வர் சிங் தானாகவே இதைப் புரிந்துகொண்டு அமைச்சரவையிலிருந்து விலகவேண்டும் என்கிறார். அம்பிகா சோனி, பிரதமர் ரஷ்யாவிலிருந்து வந்ததும் நட்வர் சிங்கை பதவி இறக்கலாம் என்பதாக சுட்டினார்.

இந்தியா திரும்பிய முன்னாள் தூதர் மாதரானியை Enforcement Directorate விசாரணை செய்கிறது.

நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங் சி.பி.ஐ விசாரணைக்குத் தாம் தயாராக இருப்பதாகவும், யாரோ ஒருவரைக் காப்பாற்ற தாம் (தானும் தந்தையும்) தயாராக இல்லை என்றும் இன்று சொல்லியிருக்கிறார்.

இதுதான் இப்போதைய நிலைமை.

-*-

இதுவரை நடந்ததைப் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் நட்வர் சிங் நிச்சயம் தப்பு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அது நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ, நட்வர் சிங் அரசியல் ரீதியாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அவரது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது. இந்த வாரமே அவர் அமைச்சர் பதவியை இழப்பார். அடுத்த தேர்தலுக்கு அவர் இருகக் மாட்டார். அவரது மகனும் ஒதுக்கப்படலாம் - இப்பொழுது ராஜஸ்தான் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

ஆனால் மிகவும் முக்கியமாக கேள்வி - இதில் சோனியா காந்தியின் பங்கு என்ன என்பதுதான். சோனியா காந்திக்குத் தெரிந்து எண்ணெய் ஒப்பந்தம் நடைபெற்றதா? அதில் சம்பாதித்த பணம் காங்கிரஸ் கட்சிக்குப் போனதா? சோனியா காந்தியின் குடும்பத்துக்குப் போனதா? இல்லை, நட்வர் சிங்குக்கும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமா?

சோனியா காந்தி தவறு செய்துள்ளார் என்றால், அதற்கு நட்வர் சிங் scapegoat-ஆகப் பயன்படுகிறாரா? (அப்படித்தான் ஜகத் சிங் சுட்டுகிறார்.)

சோனியா காந்தி தவறு செய்திருந்தால் அதை மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் ஏமாற்றி மூடப் பார்ப்பார்களா? அல்லது மன்மோகன் சிங் அவமானத்தால் பதவி விலகுவாரா?

இந்தப் பிரச்னையால் காங்கிரஸ் அரசு கவிழுமா? எந்த நேரத்தில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள்? சோனியா ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்தால் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்.

அரசு கவிழ்ந்தால் அடுத்து தேர்தல் வருமா? பாஜக நிச்சயமாக அதைத்தான் எதிர்பார்க்கிறது. எனவே இந்தப் பிரச்னையை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்தடிப்பார்கள்.

Sunday, December 04, 2005

நீதிபதி தினகர்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி N.தினகர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீரில் மிதக்கும் சென்னை

சென்னை என்பது எவ்வளவு பெரிய நகரம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

எங்கள் எல்லோருக்கும் ஒரே மழை. ஆனால் கோபாலபுரம், மைலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியில் பெரும் பிரச்னையில்லை.

வெள்ளிக்கிழமை கடும் மழைக்குப் பிறகு - 24 மணிநேரத்தில் 24 செ.மீ.க்கு மேல் - அவசர அவசரமாக பதிப்பகத்தின் அலுவலகம் சென்று தண்ணீரால் ஏதாவது பாதிப்பு உண்டா என்று பார்த்தேன். பிரச்னை அதிகம் இல்லை. இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு புத்தகக் கடை ஆரம்பித்திருக்கிறோம். (இன்னமும் திறக்கவில்லை.) அங்கு கடைக்குள் தண்ணீர் உள்ளே வந்திருந்தது.

இதெல்லாம் ஒன்றுமே இல்லை.

இன்று செய்தித்தாளைப் பார்க்கும்போது சைதாப்பேட்டையில் அடையாறு பாலத்தின் கீழ் சாலையைத் தொடுமளவுக்கு தண்ணீர் உயர்ந்திருப்பதைக் காண நேர்ந்தது. இப்படிக்கூட நடக்குமா என்று ஆச்சரியம். புற நகரில் எங்கு பார்த்தாலும் கடும் பிரச்னை. ஏரிகள் உடைப்பெடுத்து விட்டன என்று செய்திகள். தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது என்று தகவல்.

பொதுமக்கள் பலருக்கும் - முக்கியமாகத் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - பயம், பீதி. சென்னையில் வசித்துக்கொண்டு இப்படி வெள்ளத்தால் அவதிப்படப்போகிறோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

மாதச்சம்பளக்காரர்களுக்கு இருக்கும் பிரச்னையைவிட தினக்கூலித் தொழிலாளர்கள், சிறுதொழில் புரிவோர் ஆகியோரின் திண்டாட்டம் மிக அதிகம்.

-*-

இந்த மாதம் புத்தகப் பதிப்பகங்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். நூலகங்களுக்குக் கொடுக்கவேண்டிய புத்தகங்களை டிசம்பருக்குள் அச்சிட்டு, அனுப்பி வைக்க வேண்டும். ஜனவரியில் நடக்க இருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும். பல பதிப்பாளர்கள் நவம்பர், டிசம்பரில் மட்டும்தான் புத்தகங்களையே அச்சிடுவார்கள். பாரி முனையில் பேப்பர் வாங்கி, திருவல்லிக்கேணியில் அச்சடித்து, கட்டு கட்டி, தான் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் அச்சு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாது. பேப்பரைப் பிடித்து உள்ளே இழுக்கும்போது ஈரப்பதம் அதிகமாக இருந்தால் தாள்கள் சேர்ந்து சேர்ந்து வந்து அச்சிடும்போது சிக்கும். (இதைச் சாதாரண லேசர் பிரிண்டரிலேயே பார்க்கலாம்.)

பைண்டிங் செய்யுமிடத்தில் புத்தகங்கள் காயாது. அவசரமாக எடுத்தால் பிய்ந்துவிடும்.

மேலும் பிரிண்டிங் தொழிலில் ஈடுபடுபவர்கள் அடிமட்டக் குடிசைத்தொழில் காரர்கள். இவர்களது வேலை செய்யுமிடங்கள் மிக மோசமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பேப்பர்கள் கொட்டிக்கிடக்கும். பிளேட் செய்யத் தேவையான ரசாயனப் பொருள்களி்ன் கழிவுகள் சில இடங்களில். அச்சு மை கருந்திட்டாகச் சில இடங்களில். அச்சிடப்பட்ட தாள்களும், அச்சாகாத தாள்களும் வித்தியாசம் ஏதுமின்றிக் கிடக்கும். அதில் அழுக்குக் கை கால்கள் பட்டு நிறையத் தாள்கள் வீணாகும். பெரும்பாலும் தரைத்தளத்திலேயேதான் இவர்கள் வேலை செய்யும் இடங்கள் இருக்கும் - கனமான பேப்பர் கட்டுகளை எடுத்துவரவேண்டியிருப்பதால். கனமழை என்றால் தண்ணீர் உள்ளே புகுவது தடுக்க முடியாததாகிவிடும்.

சென்ற வருடம் டிசம்பரில்தான் சுனாமி அடித்து திருவல்லிக்கேணி அச்சுத்தொழிலில் ஈடுபடும் சில தொழிலாளர்களின் குடும்பங்கள் இழப்புகளைச் சந்தித்தன. இந்தமுறை உயிரிழப்பு இல்லை, ஆனால் பொருளிழப்பு அதிகம்.

இதையெல்லாம் தாண்டி, அடுத்த வருடத்துக்கான புதுப்புத்தகங்கள் உங்கள் கைகளுக்கு ஜனவரி முதல் வரும். வாங்கிப் படிக்கத் தவறாதீர்கள்.

Thursday, December 01, 2005

தமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு

பிரகாஷ் பதிவிலிருந்து: தமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்புக்கான அறிவிப்பு

தீவிர ஆர்வம் உள்ள, தகவல் தொழில்நுட்ப விஷயங்களில் பங்களிக்கக்கூடிய, சென்னையில் இருக்கும் அல்லது சென்னைக்கு வரக்கூடிய நண்பர்கள், பிரகாஷை அவரது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

இது, சும்மா சந்தித்து வடை, போண்டா, காபி சாப்பிடும் சந்திப்பல்ல, சீரியஸ் வொர்க்கிங் மீட்டிங் என்று கேள்விப்படுகிறேன்.

இட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி

தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை செல்லுபடியாகாது என்ற அதிரடித் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு அந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

அதையொட்டி உருவாக்கப்பட்ட ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், முந்தைய ஆகஸ்ட் 12 தீர்ப்பை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை என்று சொல்லி நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

இதுபற்றிய தி ஹிந்து செய்தி சற்று குழப்பமாக உள்ளது.

மறு பரிசீலனை மனு தள்ளுபடி செய்யப்பட்டதென்றால் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு என அளிக்கப்படும் ஒதுக்கீடு (Government Quota) ஏற்றுக்கொள்ளப்படாது என்று பொருள்.

இனி மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தைப் பொருத்துதான் மாறுதல்கள் இருக்கும். அப்படிக் கொண்டுவரப்படும் சட்டமும் கூட கவனமாக, நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுமாறு இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 12 தீர்ப்பைப் பற்றிய என் மற்றுமொரு பதிவு

Tuesday, November 29, 2005

கிரிக்கெட்டுக்காக ஒரு புதிய பதிவு

கிரிக்கெட் பற்றி நிறைய பதிவுகளை இங்கே எழுதுவதைத் தவிர்க்க, அதற்கென ஒரு தனிப் பதிவைத் தொடங்கியுள்ளேன். http://kirikket.blogspot.com/

கடந்த சில கிரிக்கெட் பதிவுகளை அங்கும் இட்டுள்ளேன்.

Monday, November 28, 2005

பிரையன் லாரா

உலகில் மிக அதிக ரன்கள் பெற்ற லாராவுக்கு வாழ்த்துகள். ஆலன் பார்டரின் மொத்த எண்ணிக்கையை லாரா தாண்டியுள்ளார். ஆனாலும் நடக்கும் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடலாம்.

டெண்டுல்கர்தான் முதலில் இந்தச் சாதனையைச் செய்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கடந்த சில டெஸ்ட்களில் டெண்டுல்கர் ரன்கள் குறைவாகப் பெறுவதும் லாரா மிக அதிகமாகப் பெறுவதும் வாடிக்கையாக இருந்தது.

லாராவுக்கும் டெண்டுல்கருக்கும் இனி எவ்வளவு டெஸ்ட்கள் பாக்கி இருக்கும் என்று தெரியவில்லை. டெண்டுல்கரால் இனி டெஸ்ட் மேட்ச்களில் எவ்வளவு ரன்கள் பெற முடியும் என்றும் தெரியவில்லை.

மற்றொரு புறம் இன்ஸமாம்-உல்-ஹக், ரிக்கி பாண்டிங், மாத்தியூ ஹெய்டன் ஆகியோர் சதங்களின் எண்ணிக்கையிலும் மொத்த ரன்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பாண்டிங் தன் இளம் வயது காரணமாக லாரா, டெண்டுல்கர் சாதனைகளை முறியடிக்கக்கூடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

இலங்கை அழிவை நோக்கி...

எதிர்பார்த்தவை அப்படியே நடக்கின்றன. இன்றைய மாவீரர் தின உரையில் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் நிலையை விளக்கிக் கூறியுள்ளார். (ஆங்கில வடிவம் இங்கே. தமிழ் வடிவம் இங்கே.)

25-11-2005 அன்று மஹிந்தா ராஜபக்ஷே தான் பதவியேற்ற பின்னரான பேச்சில் தன் அரசின் நிலையை விளக்கினார். [இந்தப் பேச்சின் முழு வடிவத்தை இலங்கை அரசின் அதிகாரபூர்வ தளங்களில் தேடி அலைந்ததுதான் மிச்சம். இலங்கை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ தளத்தில் இன்னமும் சந்திரிகா குமரதுங்க சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். (ஞாயிறு 27-11-2005, 22:45 IST)] அந்தப் பேச்சில் ராஜபக்ஷே சொன்ன முக்கியமான சில விஷயங்கள்:

* தமிழர் தாயகம் என்று எதுவும் இல்லை. அதாவது தமிழர் பகுதிகள் என்று பாரம்பரியமாக அறியப்பட்ட இடங்களை மஹிந்தா அரசு ஏற்காது. இலங்கை முழுவதும் இலங்கையின் அனைத்து மக்களுக்குமானது.

* சந்திரிகா அரசால் கொண்டுவரப்பட்ட P-TOMS எனப்படும் கூட்டு சுனாமி நிவாரணக் கட்டமைப்பு கலைக்கப்படுகிறது. (இதன் மூடுவிழா ஏற்கெனவே இலங்கை உச்ச நீதிமன்றத்தால் செய்யப்பட்டுவிட்டது.) அதற்குப்பதில் ஜய லங்கா சுனாமி மறுசீரமைப்புத் திட்டம் என்பதை மஹிந்தா முன்வைக்கிறார். அதாவது சுனாமி மறுசீரமைப்புப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எந்த இடமுமில்லை என்பதுதான் இதன் சாரம்.

* விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொல்கிறார் மஹிந்தா. ஆனால் இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு ஒருங்கிணைந்த, சமஷ்டி முறை அல்லாத இலங்கைக்குள்ளாக இருக்க வேண்டும்.

இதற்கான பதிலாக பிரபாகரன் மாவீரர் தினத்தன்று கூறியது:

* ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களைச் சாடுகிறார். அவர்கள் மஹாவம்ச கருத்துருவாக்கத்திலிருந்து மீளவில்லை, இலங்கை புத்த பகவான் தமக்களித்த கொடை என்று மஹாவம்சத்தில் சொல்லியிருப்பதை சிங்கள பவுத்தர்கள் நம்புவதாகவும், இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தில் தனி இனமாக ஒரு மக்கள் இருப்பதையும் அவர்களுக்குத் தன்னாட்சி விருப்பங்கள் இருப்பதையும் சிங்களவர்கள் புரிந்துகொள்வதில்லை என்றும் சொல்கிறார் பிரபாகரன்.

* இந்தியா, பிற சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் மட்டுமே தாம் இலங்கை அரசுடன் பேசியதாகவும் பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதாகவும் சொல்கிறார்.

* ரணில் விக்ரமசிங்க அரசு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் செலுத்தவில்லை, விடுதலைப் புலிகளை ஏமாற்றி, இயக்கத்தைப் பிளவுபடுத்தி ஆயுதங்களைப் பிடுங்கிக் கொள்ள முயற்சி செய்தது என்கிறார். சந்திரிகாவும் ஏமாற்றுவதையே தொடர்ந்தார் என்கிறார்.

* சுனாமிக்கு சற்றுமுன்னர் "எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம்" என்கிறார். அதாவது போரை மீண்டும் தொடங்க எண்ணிய நேரத்தில் சுனாமி தலைப்பட்டது. தொடர்ந்து சந்திரிகா ஏற்படுத்திய P-TOMS குழப்பத்தில் போய் முடிந்தது.

* சமீபத்தில் நடந்த தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள் என்கிறார். (ஆனால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் குறைவாக இருந்த கிழக்குப் பகுதியில் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்தனர் என்பது அனைவருக்கும் தெரிகிறது.)

* சிங்கள புத்த இனவாதிகளின் வாக்குகளால் ஜெயித்த மஹிந்தா "தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ [...] புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது" என்கிறார்.

* கடைசியாக ultimatum.
பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை.

ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும்.

எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.
பிரபாகரனே சொல்வது போல மஹிந்தாவுக்கும் பிரபாகரனுக்குமான இடைவெளி மிகப்பெரிது. இந்த இடைவெளி அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கத்தான் செய்யும். குறையப்போவதில்லை. அதையடுத்து, பிரபாகரன் தீர்மானிக்கும் நேரத்தில், "தன்னாட்சியை நிறுவும் சுதந்திரப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்"; அதாவது சண்டை மீளும்.

அனைத்துமே ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட முறையில் நினைத்தது போலவே நடக்கிறது. இலங்கை மிக வேகமாக அழிவை நோக்கி முன்னேறுகிறது.

Sunday, November 27, 2005

Political Discourse in Tamil Nadu

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் கூட 'வளர்ச்சி' பற்றி மக்கள் சிந்திக்கும் நேரம் வந்திருக்கும்போது தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக மக்களுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதை விடுத்து வெட்டிப்பேச்சு பேசுவதில் சிறந்து விளங்குவதைப் பார்க்கமுடிகிறது.

அஇஅதிமுக, திமுக இரண்டும் தமிழ்நாட்டை எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வோம் என்று இதுவரையில் நமக்குச் சொல்லவில்லை. தற்போது நடக்கும் எதிர்பாராத இயற்கை அழிவுகளை அரசியலாக்கி வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதில் மட்டுமே திமுக கவனத்தைச் செலுத்துகிறது. அஇஅதிமுகவோ இந்த அழிவுகளே ஒரு வரப்பிரசாதம் போல நடுவண் அரசிடம் 3,000-4,000 கோடி ரூபாய்களை வாங்கி அதைப் பொதுமக்களிடம் கொடுத்து 'நான்தான் உங்கள் காப்பாளன்' என்று காட்டிக்கொள்ள விரும்புகிறது.

இந்த அரசியல் கூடத் தேவலாம் என்பது போலக் கூத்தடிக்கிறார்கள் பாமக, திருமாவளவன் கோஷ்டியினர். ராமதாஸ் கூட அவ்வளவாக திருவாய் மலர்வதில்லை. திருமாவளவன் நிகழ்த்தும் கூத்து தாங்க முடிவதில்லை. தலித்துகளுக்குச் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கும்பட்சத்தில் ஒரு 'சண்டியராக', தமிழ் பண்பாட்டுக் காவலராகத் தாண்டவமாடும் காட்சி சகிக்கவில்லை.

இன்று தமிழகத்தில் முக்கியமாகச் செய்யப்படவேண்டியவை - கிராமப்புறக் கல்வி, வரும் வருடங்களில் தண்ணீர்ப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது, வரும் வருடங்களில் விவசாயத்தை எப்படிக் கவனிப்பது, ஏழைமையை எப்படி குறைப்பது, தமிழகம் முழுவதுமே - முக்கியமாகத் தென் மாவட்டங்களில் - தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை எப்படி நிறுத்துவது, பெருக்கும் சென்னை ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த சாடிலைட் நகரங்களை உருவாக்குவது, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களை தொழில்கள் உருவாவதற்கு மாற்று நகரங்களாக முன்வைப்பது, குற்றங்களைக் குறைப்பது, அடிப்படைக் கட்டுமானங்களைப் படிப்படியாக அதிகரிப்பது, அண்டை மாநிலங்களோடு சுமுக உறவை வளர்ப்பது - இப்படி எத்தனையோ இருக்க, இது எதைப்பற்றியுமே யாருமே பேசுவதில்லை.

ஒருவிதத்தில் பாமகவாவது பொறியியல்-மருத்துவக் கல்வி பற்றி ஒரு குழுவை அமைத்து விவாதம் ஒன்றை ஏற்படுத்தி அதன் பரிசீலனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். (ஆனால் ஓர் இணையத்தளத்தை உருவாக்கி அதில் இந்தப் பரிசீலனைகளை வைத்தால் பொதுமக்களுக்குக் கருத்து சொல்ல வாய்ப்பு இருந்திருக்கும். செய்யவில்லை.) பிற கட்சிகள் இதுபோன்று எதையும் செய்யவில்லை.

தமிழகத்தின் அரசியல் வருங்காலம் பயத்தை ஏற்படுத்துகிறது.

குறும்படங்கள் பற்றி...

மொத்தம் பார்த்த 6 படங்களை மூன்று குழுக்களாகப் பிரிப்பேன். உமேஷ் குல்கர்னி இயக்கிய கிர்னி, ரிக் பாசுவின் Pre Mortem இரண்டும் - டாப் கிளாஸ். அடுத்து ரிக் பாசுவின் 00:00, முத்துக்குமாரின் பர்த்டே. அடுத்து அஜிதாவின் The Solitary Sandpiper, மாமல்லனின் இடைவெளி.

கடைசி இரண்டிலும் கதை எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஒருவேளை பிறருக்குப் புரிந்திருக்கலாம்.

முதலில் கிர்னி. இந்தப் படம்தான் கடைசியாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால் மனதை விட்டு இப்பொழுதும் நீங்கவில்லை. பூனா அல்லது மும்பையில் (இடம் சரியாகப் புரியவில்லை) உள்ள ஓர் ஏழைக்குடும்பம். உதிர்ந்து கொட்டவிருக்கும் அடுக்ககத்தில் வசிக்கும் அந்தக் குடும்பத்துக்கு சம்பாதிக்கும் தந்தை இல்லை. தாய் தன் ஒற்றை மகன், வயதான தந்தை (அல்லது மாமனார்) ஆகியோரைக் காக்கவேண்டும். வேலை ஏதும் கிடைக்காத நிலையில் வீட்டில் மாவரைக்கும் இயந்திரம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். பள்ளிக்கூடம் போகும் சின்னப்பையன் மனதை அந்த மாவரைக்கும் இயந்திரத்தின் (கிர்னி) சத்தம் எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. சின்னப்பையனின் காதுகளின் கிர்னியின் சத்தம் எப்பொழுதும் ரீங்கரிக்கிறது.
தாய்க்கு மாவரைக்க உதவி செய்வதில், மாவுப் பாத்திரங்களை அதற்குரியவர் வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பதில், அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் ஈடுபடுகிறான் சின்னப்பையன். தன் வயதொத்த பையன்களுடன் விளையாட முடிவதில்லை. பள்ளியில் பாடம் நடக்கையில் பையனால் அதைக் கவனிக்க முடிவதில்லை. தூங்கி வழிகிறான். வீட்டுப்பாடம் செய்யாததனால் பள்ளியில் தண்டனைக்கு ஆளாகிறான். பிற சிறுவர்களின் கேலிக்கு ஆளாகிறான். அவனது புத்தகங்கள், நோட்டுகளில் மாவு படிந்திருப்பதை வைத்து அவற்றைத் தூக்கிப்போட்டு விளையாடும் பிற பையன்களின் சேட்டைகள் சின்னப்பையனின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றன.

அன்றுதான் தாய் அந்த மாவு இயந்திரத்தின் கடைசி இன்ஸ்டால்மெண்டைக் கட்ட வங்கி சென்றிருக்கிறார். வீடு திரும்பிய பையன் வெறி பிடித்தவன் போல அந்த கிர்னியை நொறுக்கி தான் வசிக்கும் மாடியிலிருந்து கீழே தள்ளி முடிக்கிறான். அதே நேரம் அந்த மாவு இயந்திரத்தைத் தன் முழுச் சொந்தமாக்கிக்கொண்ட பெருமை முகம் கொள்ளாமல் தாய் வீட்டுக்குள் நுழைகிறாள். உள்ளே கண்ணில் கண்ணீருடன் பையன் சுவரோடு சேர்ந்து நின்று கொண்டிருக்கிறான்.

25 நிமிடங்களுக்குள் இந்தப் படத்தில் தாய், மகன் இருவரது முகங்களும் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்லிவிடுகின்றன? ஓர் ஓரத்தில் வயதான, படுக்கையோடே கிடக்கும் அசையாத கிழவர் மாறாத ஏழைமைக்கு ஒரு குறியீடு போலக் காட்சியளிக்கிறார்.

ரிக் பாசுவின் Pre Mortem இன்றைய நவீன இந்தியாவைப் பற்றிய கதை. படு வேகமாக நடக்கும் இந்தக் கதையில் பல விஷயங்கள் தொடப்படுகின்றன. கால் செண்டரில் பாப் என்ற பெயரை வைத்துக்கொண்டு டெக்சாஸ் வாடர் வொர்க்ஸ் கஸ்டமர் சர்வீசுக்காக அழைப்புகளை ஏற்பவன். அவனது 'வாடர்' உச்சரிப்பைச் சரி செய்யும் மேலதிகாரி. சதா வேலை வெலையென்று இருக்கும் கம்ப்யூட்டர் நிபுணன். அவனது இயந்திரமயமான வாழ்க்கையை வெறுக்கும் பொறுமையில்லாத மனைவி, ஒரு வீடியோப் படத்தை வைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போகிறாள். கால் செண்டர் ஆசாமி இரட்டை வாழ்க்கை, தனிமை ஆகியவற்றால் உந்தப்பட்டு மனம் குலைந்து நவீன இயேசு கிறிஸ்துவாக தன்னைச் சிலுவையில் அறைந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்வதோடு அதனை வெப்கேம் வழியாக உலகெங்கும் காண்பிக்கப்போவதாகவும் அறிவிக்கிறான். அதனைப் பற்றி பத்திரிகையில் எழுத விரும்பும் ஒரு பெண் இதழாளர் - முதலில் நியூஸ் என்ற காரணத்துக்காக மட்டுமே அதனைப் பின்தொடர்ந்தாலும் பின் அந்தத் தற்கொலையைத் தடுக்க விரும்புகிறாள். கடைசியாக சில திருப்பங்களுடன் தற்கொலை தடுக்கப்படுகிறது.

மேற்சொன்ன இரண்டு படங்களும் படமாக்கப்பட்ட விதம் அற்புதமாக இருந்தது. திரைக்கதையின் அடர்த்தி, எடிடிங்கின் தரம், சினிமடோகிராபியின் தரம், நடிப்பு, லொகேஷன், கலை - எல்லாமே வியக்கத்தக்க வகையில் இருந்தன.

பிற படங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

Saturday, November 26, 2005

தமிழக வெள்ளம், பொருள்/உயிர்ச்சேதம்

கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், அதன் தொடர்ச்சியாக பொருள், உடைமைகள் நாசம், பயிர்கள் நாசம் என்று தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது.

இம்முறை சென்னையில் அதிக மழை இல்லை. ஆனால் தென் தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் நிறைய மழை. மீண்டும் கொள்ளிடம் உடைத்துக்கொள்ளுமோ என்ற பயம் - கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை. பல சிற்றாறுகளில் காட்டு வெள்ளம். நேற்று நடந்த இரண்டு பஸ் அசம்பாவிதங்களில் 150 பேருக்கு மேல் பலி என்பது வருத்தத்தைத் தருகிறது. இந்தக் காட்டு மழையில், சிறு வாய்க்கால்கள் உடையலாம் என்ற நிலையில் அந்த பஸ்கள் அந்தப் பாதை வழியாகச் சென்றிருக்க வேண்டுமா?

இரண்டு இடங்களிலுமே ஓட்டுனர்களின் கவனக்குறைவால், எச்சரிக்கைகளையும் மீறி வண்டியை எடுத்துச் சென்றதால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் ஒன்று தனியார் வண்டி, மற்றொன்று அரசுப் பேருந்து.

இங்கு சன் நியூஸ் தொலைக்காட்சியின் கவரேஜைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மனுஷ்ய புத்திரன் தன் வலைப்பதிவில், சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.

இந்த உளவியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. மழையின் தீவிரம் அதிகம்தான், மழையால் பாதிப்புகளும் அதிகம்தான். ஆனால் சன் நியூஸ் எல்லாவற்றையும் இருநூறு மடங்கு உயர்த்திச் சொல்லி, அடுத்து உலகமே அழிந்துவிடப் போகிறதோ, பிரளயம் வந்துவிட்டதோ என்ற மாதிரியெல்லாம் செய்தி படிக்கிறார்கள். அத்துடன் தமிழக அரசு உஷாராக இருந்தால் இந்த அழிவையெல்லாம் தடுத்திருக்கலாம் என்பது போலச் செய்திகள். இதைவிட அநியாயம் வேறொன்றும் இருக்க முடியாது. என்ன செய்து மேலிருந்து கொட்டும் மழையைத் தடுப்பது? இந்த வரலாறு காணாத மழையில் மக்கள் அனைவருக்கும் பாதிப்பு. எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே கைகாட்டுவது நியாயமில்லை.

அரசு நிவாரணம் என்று சென்னையில் நடக்கும் கூத்தில் பொதுமக்களை மட்டும்தான் குற்றம் சாட்டமுடியும். சென்னை மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு ரூ. 2,000, 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணை என்று அரசு கொடுக்க உத்தரவிட்டது. இதை வாங்கச் சென்றபோதுதான் வியாசர்பாடியில் கூட்ட நெருக்கடியில் சிலர் இறந்தனர். வெள்ளமே இல்லாத பகுதிகளிலும் (எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும்) பலரும் போராடி தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வேண்டும் என்று சண்டையிடுகின்றனர். இதற்காக இரண்டு நாள்களுக்கு முன்னர் பலர் கூட்டமாகச் சென்று ராதாகிருஷ்ணன் சாலையில் சோழா ஹோட்டல் முன் அமர்ந்து தர்ணா. அதைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து ரகளை செய்ய முயற்சி செய்ய, அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர். பின் காவல்துறை அவர்களிடம் நயமாகக் கெஞ்சி அடையாறு எங்கேயோ சென்று அங்குள்ள அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும் என்று சொல்ல, மக்கள் அனைவரும் அடையாறு சென்றிருக்கின்றனர்.

அடையாறில் உள்ள அலுவலகத்தில் அனைவரையும் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்பச் சொல்ல, எழுத்தறிவில்லா மக்கள் (ஆமாம்!) அதைச் செய்யத் தெரியாமல் வாசலில் இதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் ஆளுக்கு ரூ. 10 கொடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பியுள்ளனர். ஆனால் படிவங்களைப் பெற அதிகாரிகள் நேரடியாக வருவார்களாம். அதனால் கூட்டம் மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

அவர்களை இடைமறித்த ஓர் இடைத்தரகர் ஆளுக்குக் கிடைக்கும் ரூ. 2,000 பணத்தில் ரூ. 500ஐ வெட்டினால் பணம் கிடைக்கத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியுள்ளார்.

இப்படி ஒவ்வோர் ஊரிலும் நிவாரணப் பணம் தேவையற்றவர்களுக்குப் போய்ச் சேருகிறது. அது தமக்கு வந்தே ஆகவேண்டும் என்பது போல மக்களும் வெட்கமில்லாமல் போராட முனைகிறார்கள். அந்தப் பணத்தில் ஒரு பங்கு இடைத்தரகர்களுக்குப் போய்ச்சேருகிறது.

Thursday, November 24, 2005

குறும்படங்கள் திரையிடல் - சனிக்கிழமை

குறும்பட, 'நல்ல சினிமா' ரசிகர்களுக்கு...

நீங்கள் சென்னையில் இருந்தால் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் திரையரங்கில் (ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில், ராணி சீதை ஹாலுக்கு அருகில்) வரும் சனிக்கிழமை, 26 நவம்பர் 2005 அன்று ஆறு குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

மாலை 3.30 மணிக்கு ஒரு காட்சி. மாலை 6.30 மணிக்கு இரண்டாவது காட்சி.

காட்சி நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவாவது செல்வது நல்ல இடத்தைத் தேடிப்பிடித்து நண்பர்களுடன் கூடி உட்கார்ந்து கொள்ள உதவும்.

திரையிடப்பட இருக்கும் படங்கள்:

படம் 1: கிர்னி, மராத்தி, 22 நிமிடங்கள், இயக்குனர்: உமேஷ் குல்கர்னி (FTII பூனா)
படம் 2: பர்த்டே, தமிழ், 22.40 நிமிடங்கள், இயக்குனர்: கே.முத்துக்குமார் (VIS.COM ஐஐடி மும்பை)
படம் 3: The Solitary Sandpiper, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: அஜிதா சுசித்ரா வீரா (FTII பூனா)
படம் 4: Distance, தமிழ்/ஆங்கிலம், 27 நிமிடங்கள், இயக்குனர்: மாமல்லன்
படம் 5: Pre Mortem, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)
படம் 6: 00:00, ஆங்கிலம், 11 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)

மாலை 6.30 காட்சிக்கு வந்தால் சிறப்பு விருந்தினர் P.C.ஸ்ரீராமையும் பார்க்கலாம்.

அனுமதி இலவசம் என்கிறார்கள் அமைப்பாளர்கள். அத்தனை படங்களும் அற்புதமானவை என்றும் கேள்விப்படுகிறேன். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். (நான் 6.30 காட்சிக்குச் செல்லவிருக்கிறேன்.)

பூக்குட்டி - சுஜாதாவின் சிறுவர் நூல்

தேசிகன் பதிவிலிருந்து: பூக்குட்டி !

சுஜாதா விகடனில் குழந்தைகளுக்காக எழுதிய தொடரை புத்தக வடிவில் அவரே வெளியிடுகிறார்.

தேசிகன் வலைப்பதிவு வழியாகப் புத்தகம் வாங்குபவர்களுக்கு (ரூ. 90), சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் கிடைக்கும்.

சிறுவர் நூல்கள் நிறையக் கொண்டுவரவேண்டும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.

எனக்கும் ஆசைதான். பார்ப்போம்...

Wednesday, November 23, 2005

மீத்ரோகின் ஆவணங்கள்

இதைப்பற்றி நான் ஏற்கெனவே எழுதிய பதிவை ஒருமுறை படியுங்கள். அப்பொழுது புத்தகம் என் கைக்கு வந்திருக்கவில்லை. இப்பொழுது இரண்டு தொகுதிகளும் என் கையில் உள்ளன. இரண்டாம் தொகுதியை முதலில் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தியா பற்றிய பகுதி, அடுத்து ஆசிய கண்டத்தின் பிற நாடுகள் பற்றி, பின் அங்கும் இங்குமாக சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் முதல் தொகுதி வந்து சேர்ந்தது. உடனடியாக அதைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்!

நாளை நாடாளுமன்றத்தில் இந்த விஷயத்தின் மீது விவாதம் நடக்க உள்ளது. சண்டை போட, பாஜகவுக்குப் பல விஷயங்கள் கையில் உள்ளன. மீத்ரோகின், வோல்க்கர், உச்ச நீதிமன்றத்தின் பீஹார் சட்டசபைக் கலைப்பு மீதான இடைக்காலத் தீர்ப்பு, பீஹாரில் காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்வி - இப்படிப் பல பல.

காங்கிரஸ் கட்சி எல்லாவற்றைப் பற்றியும் பேச விரும்புகிறார்களாம், மீத்ரோகின் ஆவணங்கள் தவிர. மீத்ரோகின் ஆவணங்கள் புதினம் போல எழுதப்படிருப்பதால் அதையெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்பது சோனியா காந்தி/மன்மோகன் சிங்கின் வாதமாம். இது முழு அபத்தம்.

முதலில் மீத்ரோகின் ஆவணங்கள் புதினமாக எழுதப்படவில்லை! காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாருமே இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். (சொல்லப்போனால் பாஜகவினர் யாராவது படித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!)

அதே சமயம் மீத்ரோகின் ஆவணங்கள் முழுமையான உண்மை என்று யாரும் சொல்லவும் முடியாது.

வாசிலி மீத்ரோகின் என்பவர் கேஜிபியில் பணியாற்றியவர். முதலில் களப்பணியில் இருந்தவர், சில காரணங்களால் ஆவணக் காப்பாளராக - தண்டனையாக - மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு கேஜிபி உளவாளிகள், அலுவலர்கள் அனுப்பும் தகவல் அறிக்கைகளைச் சேமித்து வைப்பது அவரது வேலை. தன் கடைசி 12 வருடங்களில் அந்த ஆவணங்களிலிருந்து பலவற்றை நேரம் கிடைக்கும்போது நகலெடுத்து வீட்டில் சேர்த்து வைத்திருக்கிறார். பின் சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா + பிற நாடுகளானபோது பக்கத்து நாட்டு பிரிட்டிஷ் தூதரகத்துக்கு வந்து தஞ்சம் கோரியுள்ளார். பிரிட்டன் உளவுத்துறையினர் மீத்ரோகின் வீட்டில் இருந்த ஆவணங்களை பத்திரமாக பிரிட்டனுக்குக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர்.

1992-லிருந்து பிரிட்டனின் உளவுத்துறையினர் இந்த ஆவணங்களைத் தோண்டித் துருவியுள்ளனர். அதன்மூலம் தமது நாட்டிலுள்ள சில ரஷ்ய/சோவியத் உளவாளிகளைக் கண்டுபிடித்தனர். (அதில் ஒருவர் 87 வயதான பாட்டி. அது தனிக்கதை!) 1995-ல் பிரிட்டனின் MI6, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமகால வரலாறு பேராசிரியரான கிறிஸ்டோபர் ஆண்டிரூவை அழைத்து இந்த ஆவணங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதக் கேட்டனர். (ஏன்? இந்தப் புத்தகங்கள் வெளியாவதில் MI6க்கு என்ன லாபம்?) 1999-ல் மீத்ரோகின் ஆவணங்கள் முதல் தொகுதி வெளியானது. அதில் அமெரிக்கா, ஐரோப்பா பற்றிய விஷயங்கள் வெளியாகியிருந்தன. இது பல ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

பின்னர் இப்பொழுது இரண்டாவது தொகுதி வெளியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் அமெரிக்கா, ஐரோப்பா தவிர்த்த பிற நாடுகளில் கேஜிபி என்னென்ன செய்தனர் என்று வெளியாகியுள்ளது.

சில விஷயங்கள் முக்கியமானவை:
  1. கிறிஸ்டோபர் ஆண்டிரூ தனக்குக் காண்பிக்கப்பட்டதை மட்டும் வைத்து எழுதியுள்ளார்.
  2. அவர் எழுதியுள்ளதை பிரிட்டனின் சீக்ரெட் சர்வீஸ் தணிக்கை செய்து, தங்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் அனுமதித்துள்ளனர்.
ஆக, இதனைக் காரணம் காட்டியே இந்தப் புத்தகத்தை முழுமையான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள யாருமே மறுக்கலாம்.

அதைப்போலவே மற்றொரு விஷயம்... கேஜிபியினர் பல்வேறு நபர்களுக்கும் தனித்தனியாக எழுத்துக்குறியீடுகளை வைத்து அழைத்துள்ளனர். (இந்திரா காந்தி = VANO) இதனால் மீத்ரோகின் ஆவணங்களில் சங்கேதக் குறியீடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே கேஜிபி உளவாளிகள் என்று முடிவு செய்யக்கூடாது. ஆண்டிரூவும் இதையேதான் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

காங்கிரஸைப் பொருத்தவரை இந்தப் புத்தகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:
  1. இந்திரா காந்தி சோவியத் யூனியன் தூதரகத்திலிருந்து தன் கட்சிக்காகப் பணம் பெற்றார்.
    The Prime Minister [Indira Gandhi] is unlikely to have paid close attention to the dubious origins of some of the funds which went into Congress's coffers. This was a matter she left largely to her principal fundraiser, Lalit Narayan Mishra, who - though she doubtless did not realize it - also accepted Soviet money. On at least one occasion a secret gift of 2 million rupees from the Politburo to Congress (R) was personally delivered after midnight by the head of Line PR in New Delhi, Leonid Shebarshin. Another million rupees were given on the same occasion to a newspaper which supported Mrs. Gandhi. Short and obese with several chins, Mishra looked the part of the corrupt politician he increasingly became. Indira Gandhi, despite her own frugal lifestyle, depended on the money he collected from a variety of sources to finance Congress (R). (பக்கங்கள் 322-323)
  2. காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த பலர் கேஜிபி ஏஜெண்டுகளாக இருந்தனர். ஓர் அமைச்சர் தான் கொடுக்கவிருக்கும் தகவலுக்காக $50,000 கேட்டதாகவும் அதற்கு அப்பொழுதைய கேஜிபி தலைவர் ஆன்டிரோபோவ் (பின்னாள் சோவியத் யூனியன் தலைவர்) அத்தனை பணம் கொடுக்கமுடியாது என்றும், எக்கச்சக்கமான தகவல்கள் அவ்ர்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது என்றும் சொன்னதாகவும் ஒரு குறிப்பு வருகிறது.
  3. இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த பேட்ரிக் மொய்னிஹான் எழுதிய A Dangerous Place, பக்கம் 41ல் வரும் தகவலாக,
    Both times the money was given [by CIA] to the Congress Party which had asked for it. Once it was given to Mrs Gandhi herself, who was then a party official.

    Still, as we were no longer giving any money to her, it was understandable that she should wonder to whom we were giving it. It is not a practice to be encouraged.
இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இது மேற்கொண்டு விசாரிக்கப்படவேண்டும் என்று பாஜக கேட்பதில் நியாயமுள்ளது. காங்கிரஸ் இதைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

காங்கிரஸைத் தவிர CPI கட்சி தொடர்ச்சியாக சோவியத் பொலிட்புரோ கொடுக்கும் பணத்தை நிறையப் பெற்றதாக இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆனால் இதில் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. உலகத்தில் அத்தனை நாடுகளிலும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சோவியத் யூனியன் அப்பொழுது பணம் கொடுத்து வந்தது. இது வேறுவிதமான பிரச்னை. இந்தியாவில் சட்டபூர்வமாக இயங்கும் ஓர் அரசியல் கட்சி வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்து ரகசியமாகப் பணம் பெறுவது சட்டப்படி குற்றமா என்பது ஒரு விஷயம். அப்படிப்பட்ட ஒரு கட்சியை மக்கள் நம்பலாமா; அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கலாமா என்று கேள்வி கேட்பது வேறு விஷயம்.

ஆனால் இந்த விவகாரத்தை "ஏதோ புனைகதைப் புத்தகம்" என்று சோனியா காந்தி சொல்வது போல அலட்சியமாக ஒதுக்கிவிடக் கூடாது. அதே சமயம் இந்தப் புத்தகத்தை மட்டுமே முன்வைத்து மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மை என்றும் முடிவுகட்டிவிடக் கூடாது.

The Mitrokhin Archives II - The KGB and the World, Christopher Andrew and Vasili Mitrokhin, Allen Lane (Penguin), 2005 - UK Edition

The Sword and the Shield - The Mitrokhin Archive and the Secret History of the KGB, Christopher Andrew and Vasili Mitrokhin, Basic Books, 1999 (Paperback Edition 2001) - US Edition