Monday, August 31, 2009

திருநெல்வேலி கிழக்கு ஷோரூம்

வரும் வெள்ளிக்கிழமை, 4 செப்டெம்பர் 2009 அன்று, திருநெல்வேலியில், சென்னைக்கு வெளியே கிழக்கு பதிப்பகத்தின் ஐந்தாவது பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது.

இடம்:

68/1, சிவன் தெற்கு ரத வீதி
தெற்கு பஜார்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி 627 002

ஏற்கெனவே ஷோரூம் உள்ள இடங்கள்: வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா

லிவிங் ஸ்மைல் வித்யா, சித்ராவுடன் பேசும் ஒரு நிகழ்ச்சி. மிகவும் இயல்பாக வந்துள்ளது.

ஒலிப்பதிவு

புத்தகம் பற்றி:

பெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல்.

அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து, ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை இது.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

     

Sunday, August 30, 2009

கிழக்கு புக் கிளப் - சூப்பர் ஆஃபர்

சில நாள்களாக சத்தமே போடாமல் ஒரு மின்வணிக ஆஃபரை எங்கள் தளத்தில் கொடுத்துவந்துள்ளோம். தானாகவே வருபவர்கள் அதைக் கண்டுபிடித்து வாங்குகிறார்களா என்ற பரிசோதனை, நன்றாகவே வேலை செய்துள்ளது.

ஒரு brainstorming சந்திப்பின்போது எங்கள் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் ஜெயின் இந்த ஐடியாவை முன்வைத்தார். இந்தியா டுடே புக் கிளப், அதுபோன்ற பல புக் கிளப் அனைத்திலும் இப்படி ஒரு ஆஃபர்தான் இருக்கும். பார்த்தவுடனேயே ஆசையைத் தூண்டக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும். ஆனால் அது வெறும் இத்தனை சதவிகித டிஸ்கவுண்ட் என்ற அளவில் மட்டும் இருக்கக்கூடாது. அதன் விளைவாக உருவானதுதான் கிழக்கு புக் கிளப். இணையம் வழியாக மட்டுமே இதனைப் பெறலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுட்டியில் சென்றால், அங்கே குறிப்பிட்ட சில புத்தகங்கள் இருக்கும். அவை குறைந்தபட்சம் ரூ 20 முதல் தொடங்கி ரூ 100 அல்லது அதற்குமேலும் செல்லும். இவற்றிலிருந்து 20 புத்தகங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நிச்சயமாக அவற்றின் விற்பனை விலை ரூ 1,000-ஐ விட மிக அதிகமாக வரும். பொதுவாக நாங்கள் பார்த்த சில தேர்வுகளில், மொத்த விலை ரூ 1,600, ரூ 1,800, ரூ 2,000 என்றெல்லாம்கூட வந்துள்ளன. ஆனால் அந்த 20 புத்தகங்களும் உங்களுக்கு ரூ 1,000 என்ற விலைக்கே கிடைக்கும். மேலும் இந்தியாவுக்குள்ளாக என்றால் இந்தப் புத்தகங்களை அஞ்சல்துறையின் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பக் கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டோம். (ஆனால் இந்தியாவுக்குள் குரியர் அல்லது வெளிநாடு என்றால் இந்தச் சலுகை கிடையாது.)

முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்குத் தேவையான புத்தகங்கள், உங்களுக்குப் பிடித்தமான விலையில் கிடைக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கடைசிக் கட்டத்தில் வேண்டாம் என்று நீங்கள் ஒதுங்கிவிடலாம்.

ஷாப்பிங் கார்ட்டில் இதனை செயல்படுத்தத்தான் மிகவும் தாமதம் ஆகிவிட்டது. அதற்கென நிறைய போராட்டங்கள் செய்யவேண்டி இருந்தது. நாகராஜனின் விடாமுயற்சியால் கடைசியில் அது நடந்துள்ளது.

Saturday, August 29, 2009

கிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்கெட்டிங் மாயாஜாலம்

நாளை மதியம் 12-1 மணி அளவில் ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, சத்யநாராயண் இருவரும் மார்க்கெட்டிங் என்னும் துறையைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்கள்.

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி மார்க்கெட்டிங் மாயாஜாலம் என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

மறக்காமல் கேளுங்கள். சில நாட்களுக்குப் பின் அதன் இணைய பாட்காஸ்ட் இங்கே கிடைக்கும்.

தமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு

‘நேசமுடன்’ வெங்கடேஷ் தன் மின்னஞ்சல் இதழில் தமிழ் பதிப்புலகம் பற்றி வெளியிட்டுள்ள பதிவு மிக முக்கியமானது. அந்தப் பதிவில் நிச்சயம் பல தகவல் போதாமைகள் உள்ளன. எனக்குத் தெரிந்த தகவல்கள் அடிப்படையில் சில சிறு மாற்றங்களைக் கொடுக்கலாம். ஆனால், ஓரிடத்தில் சில தகவல்களைச் சேகரித்துத் தருவது என்ற வகையில் இந்தப் பதிவு முக்கியமானது.

நான் வெங்கடேஷிடம் போனில் சொன்னதுபோல, அவர் இந்தப் பதிவை ஆங்கிலத்துக்கு மாற்றி, வலைப்பதிவில் சேர்க்கவேண்டும். பலருக்கு உபயோகமாக இருக்கும்.

வெங்கடேஷின் பதிவு தொடர்பான சில கருத்துகளை அவ்வப்போது இங்கே பதிய விரும்புகிறேன்.

பன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)

வலைப்பதிவர், மருத்துவர் புருனோ மஸ்கரணாஸ் எழுதிய பன்றிக் காய்ச்சல் பற்றிய அறிமுகப் புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. புருனோ ஏற்கெனவே பன்றிக் காய்ச்சல் பற்றி புருனோ, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பேசியுள்ளார். அந்த பாட்காஸ்ட்டின் ஒலிவடிவம் இங்கே.

பன்றிக் காய்ச்சல் அபாயம் இன்னும் இருக்கிறது. கவனமாக நடந்துகொள்வதால் மட்டுமே இந்த அபாயத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். பீதி அடையவேண்டியதில்லை என்றாலும் கவனக் குறைவாக நடந்துகொள்ளாமலாவது இருக்கவேண்டும்.

இன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஜுரம் என்பது தெரியவந்தால், உடனேயே பெற்றோர்களை அழைத்து குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு செல்லுமாறு சொல்லிவிடுகிறார்கள். பெற்றோர்களே கவனமாக, குழந்தைகளுக்கு ஜுரம் இருக்கும்பட்சத்தில் வீட்டிலேயே வைத்திருந்து கவனித்து, ஜுரம் விட்டதும் அனுப்புவது நல்லது.

பொதுவாக, சுகாதார விஷயத்தில் நம் நாட்டில் கவனம் அதிகம் தேவையாக உள்ளது. வெளியே சென்றுவிட்டு வந்தால் கை, கால்களைச் சுத்தமாகக் கழுவுவது; சாப்பிடும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்வது; உணவு சமைக்கும் இடத்தில் சுகாதாரமாக இருப்பது; மூக்கில், தொண்டையில் சளி இருக்கும்போது சளியை சுகாதாரமான முறையில் துப்புவது, துடைப்பது, கைக்குட்டைகளை கவனமாகக் கையாளுவது; தரையில் விழுந்த பொருள்களை குழந்தைகள் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது என்று பலவிதமான விஷயங்களை நாம் சரியாகச் செய்யவேண்டும்.

கண்ட நீரைக் குடிக்காமல், பாதுகாப்பாக வடிகட்டிக் காய்ச்சிய நீரை மட்டுமே குடிப்பது; வடிகட்டிய நீரை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றையும் பின்பற்றவேண்டும்.

பன்றிக் காய்ச்சல் பயத்தை எப்படி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பதை நாம் இப்போது பார்க்கவேண்டும். குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றிய கல்வியை அழுத்தமாகப் புகட்ட இந்தத் தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

Thursday, August 27, 2009

நீதிபதிகளின் சொத்து விவரங்கள்

Why dissent is good...

ஒரு பக்கம், குடியாட்சி முறையிலான கட்சிகள் உள்ளிருந்து எழும் மாற்றுக் குரல்களைக் கண்டு கதிகலங்கி, எதிர்க்குரல் கொடுப்பவர்களைக் கட்சியில் இருந்து வெளியேற்றி வரும் நேரம், இந்திய நீதித்துறையில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது.

உச்ச, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, சில டெக்னிகல் காரணங்களால் அது இயற்றப்படவில்லை. மீண்டும் அந்தச் சட்டம் மாற்றுவடிவில் கொண்டுவரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. Campaign for Judicial Accountability and Judicial Reforms என்ற அமைப்பு இதற்காகக் கடுமையாகப் போராடி வருகிறது. இந்த அமைப்பில் உள்ள மிகச் சிறந்த ஜூரிஸ்டுகள் பலரும் நமது நீதித்துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழல்களை அகற்ற, நீதித்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என்று கூக்குரலுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் ‘ஆதரவு’ தெரிவிக்கவில்லை. ஆனால், பாலகிருஷ்ணனின் கருத்துக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பைத் தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஷைலேந்திர குமார், இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரைகள் எழுதியதோடு, தன் சொத்து விவரத்தை பகிரங்கமாக வெளியிட்டார். உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தம் சொத்து விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்று பாலகிருஷ்ணன் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாமே தவிர, அவருக்கு பிற நீதிபதிகள் சார்பாகப் பேச எந்த உரிமையும் இல்லை என்று ஷைலேந்திர குமார் ஆணித்தரமாகச் சொன்னார்.
On the legal plane, the Chief Justice of India does not have the authority to speak for all other judges of the superior courts, whether of the Supreme Court or of high courts, unless any of them have either confided in the chief justice or have authorised him to speak on behalf of others also.
இதனால் சற்றே கோபம்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஷைலேந்திர குமார் பிரபலமாக ஆசைப்பட்டு இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்று ‘சின்னப்பிள்ளைத்தனமான’ ஒரு கருத்தை வெளியிட்டார். ஆனால், அடுத்த ஓரிரு நாள்களுக்குள்ளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒரு கூட்டம் போட்டு தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

ஷைலேந்திர குமார் ஒரு மாற்றுக் கருத்தை பகிரங்கமாக வெளியிட்டு, அதனால் வரும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத காரணத்தால்தான், பிற நீதிபதிகள் ஒருவித அழுத்தத்துக்கு ஆளாகி இந்தத் தகவல்களை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர். இதுதான் எதிர்க்குரலில் பலம். (ஷைலேந்திர குமாருக்கு முன்னதாக, பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கண்ணன் தன் சொத்து குறித்த தகவல்களை வெளியிட்டார்.)

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட்டால் நீதித்துறையில் ஊழல்கள் போய்விடுமா என்று கேட்கலாம். ஆனால் இது முதல் படிதான். எப்படி இன்று எம்.எல்.ஏ, எம்.பி கோஷ்டிகளில் சொத்து விவரங்கள் நமக்குத் தெரிகிறதோ அதேபோல நீதிபதிகளின் சொத்தும் வெறும் ஒரு விவரமே. ஆனால் அந்த விவரத்தை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் என்ன கருத்துகளை உருவாக்கிக்கொள்கிறார்கள், என்ன முடிவுகளை எடுக்கப்போகிறார்கள் என்பது இனிவரும் ஆண்டுகளில்தான் தெரியவரும்.

பணக்காரர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைகள் அனைவரும் ஐந்து வருடம் தாண்டியதும் எப்படி கோடிக்கணக்கான சொத்துகளை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்ற தகவல் மக்களுக்குக் கிடைக்கும்போது மக்கள் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நல்ல பாடம் புகட்டலாம். மாற்றுகள் முன்வைக்கப்படலாம். ஆனால் அனைத்துக்கும் முதலாவதாகத் தேவை தகவல்கள். இப்போதைய போராட்டமே, தகவல்கள் தடங்கல்கள் இன்றி வெளியே வரவேண்டும் என்பதே.

ஷைலேந்திர குமார் பிரபலமாகிவிட்டார். நியாயமாகவே.

தமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்

காசி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அவரது கேள்விகளுக்கான பதில்கள் கீழே.


1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தேவையான அளவு இல்லை. தமிழில் தரமான தகவல் தளங்கள், செய்தித் தளங்கள், கருத்துத் தளங்கள், துறை சார்ந்த தளங்கள்/ பதிவுகள்/ களஞ்சியங்கள், கருத்துப் பரிமாற்ற மேடைகள் ஆகியவை இல்லை. முடிந்தவரை இவை தயாராவதை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் கணினியும் இணையமும் உள்ளவர்கள் தமிழில் அதிகமாகப் புழங்குவார்கள். தாங்களும் இந்தத் தளங்களுக்கு எழுதவேண்டும் (அல்லது இவை போன்ற தளங்களைத் தாமே தயாரிக்கவேண்டும்) என்று நினைப்பார்கள்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இல்லை. குறுஞ்செய்தி தமிழில் முடியாத நிலையே பெரும்பான்மைத் தமிழர்களுக்கு உள்ளது. மின்னஞ்சல் தமிழில் முடியும் என்றே பலருக்கும் தெரிவதில்லை. அரட்டை அடிப்பவர்கள் இன்னமும் குறைவு. மின்வணிகம் செய்வோர் அவ்வளவாகத்தமிழை எதிர்பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். அரசின் சேவைகளைப் பெறுவதில் பெரும் சுணக்கமே உள்ளது. அரசின் தளங்களில் தமிழ் தேவையான அளவுக்கு இல்லை. செய்தி வாசிப்பு தேவலாம். நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெப் 2.0 சேவைகள் அந்த அளவுக்கு இல்லை.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

விக்கிப்பீடியா இன்னமும் தேவையான அளவு உபயோகமாக இல்லை என்றே நினைக்கிறேன். (அதில் தேவையான அளவு தகவல்கள் இல்லாததற்கு என்னைப் போன்றோர் ஒன்றும் செய்யாததும் காரணம்; அத்துடன் கொஞ்சம் அதீதமான தமிழ் ஆர்வலர்கள் ஐதரசன் என்று ஹைட்ரஜனைப் பிய்த்துப் பிடுங்குவது எனக்கு பயத்தைத் தருகிறது என்பதையும் குறிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.) தன்னார்வலர்களின் பங்களிப்பால்தான் இதுவரையில் முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அமைப்புரீதியாக இதுவரையில் யாரும் பங்கே அளிக்கவில்லை என்றுதான் சொல்வேன் (அதாவது அரசு, பல்கலைக் கழகங்கள், பெரும் நிறுவனங்கள்).

தன்னார்வலர்கள் என்ன செய்யவேண்டும்?

(அ) அரசை, பல்கலைக்கழகங்களை மேலும் இணையத்தில் தங்கள் சேவைகளைத் தருமாறு ஊக்குவிக்கவேண்டும்.
(ஆ) துறை சார்ந்த தகவல் களஞ்சியங்களைப் பெருமளவு உருவாக்கிடவேண்டும்.
(இ) கணினி பயன்படுத்தும் நண்பர்களை தமிழைப்பயன்படுத்துமாறு ஊக்குவிக்க, மென்பொருள்களை நிறுவித்தர, கற்றுத்தர முயற்சிகளைச் செய்யவேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

(அ) நிறைய பொருட்செலவில், அரசின் அனைத்துத் துறைகளது செயல்பாடு குறித்த தகவல்களையும் இணையத்தில் யூனிகோடில் தமிழில் ஏற்ற வகை செய்வேன்.

(ஆ) அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டக் கலெக்டர்கள், தாசில்தார்கள், இன்னபிற முக்கியமான அரசு அலுவலர்கள் அனைவரையும் இணையதளங்கள்மூலமாக குறைகள், புகார்கள் கேட்பது, இணையம் மூலம் மக்களுடன் உறவாடுவது, மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது, தங்கள் துறையில் நடக்கும் தகவல்களை வெளியிடுவது போன்றவற்றைச் செய்யச் சொல்வேன்.

(இ) அரசின் அனைத்து மட்டங்களிலும் தகவல் தொடர்பு இணையம் மூலம் - முதலில் மின்னஞ்சல் மூலமும், பிறகு இண்ட்ராநெட் மூலமான அரசு WAN அளாவிய சேவை மூலமும் நடக்குமாறும், பல முக்கியமான புள்ளிவிவரங்களை அவ்வப்போது பொதுமக்கள் இந்த நெட்வொர்க் மூலம் பெறும் வகையிலும் செய்வேன்.

(ஈ) அரசுடன் நடக்கும் பணம் சார்ந்தவற்றை முழுவதும் இணையம் மூலம் செய்யுமாறு (பல்வேறு வரிகள்) வசதிகளை ஏற்படுத்துவேன்.

(உ) அரசாணை மூலம், தமிழக அரசின் நிதி உதவி பெறும் அனைத்துக் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் கட்டாயமாக தமிழில் இணையத் தளங்களும் வலைப்பதிவுகளும் வைத்திருக்கவேண்டும் என்பதைச் செயல்படுத்துவேன்.

(ஊ) கல்விக்கூடங்கள் அனைத்தும் தங்களது பாடத்திட்டங்கள், கற்பிக்கும் வழிமுறைகள், கேள்வித்தாள்கள் ஆகியவற்றை இணையத்தில் சேர்க்குமாறு வற்புறுத்தப்படுவார்கள்.

(எ) பள்ளிகள் அனைத்திலும் தமிழ் இணையத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான பாடம் ஆப்ஷனலாக இணைக்கப்படும். கல்லூரிகளில் கட்டாயமாக்கப்படும்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

ஒரு சாதாரண வலைப்பதிவர் பெரிய முன்யோசனை ஏதும் இன்றியே வலைப்பதிய ஆரம்பிக்கலாம். எதையாவது தொடர்ந்து எழுதவேண்டும் என்ற உந்துதல் இருந்தால் போதும். அவர்கள் ஏதேனும் துறை அறிஞர்களாக இருக்கும்பட்சத்தில் இணையத்தில் கட்டாயமாக தங்கள் கருத்துகளைப் பதித்தல் அவசியம் என்பதை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் ஒரு எனேபிளர். அந்த வகையில் வலைப்பதிவுகளை இணைத்து ஓரிடத்தில் காண்பிக்க ஆரம்பித்ததே பெரிய விஷயம்தான். ஆனால் அதற்குமேல் தமிழ்மணம் என்ற இணைய அமைப்பால் செய்யக்கூடியது அதிகமாக இருக்கும் என்று தோன்றவில்லை. களத்தில் வேலை செய்பவர்கள்தான் மேலும் அதிகமாகப் பலரை இணையத்துக்குக் கொண்டுவரமுடியும். தமிழ்மணம் அதற்கு எந்தவகையில் உதவினாலும் அது நலமே. உதாரணமாக தமிழ்மணம், தமிழ் இணையத்துக்குள் நுழைய ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதை சிடியாக, சிறு கையேடாகச் செய்து விநியோகிக்கலாம். பல இடங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம். ஏற்கெனவே சில நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ததைப் போல், மேலும் பரவலாக இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க உதவலாம்.

Tuesday, August 25, 2009

சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு

மெட்ராஸ் புக் கிளப், கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்திய வெளியீட்டு விழாவில் வரலாற்றாளர் எஸ். முத்தையாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு நூல், 23 ஆகஸ்ட் 2009, ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது. முனைவர் வா.செ.குழந்தைசாமி வெளியிட, முனைவர் இறையன்பு (இ.ஆ.ப) நூலைப் பெற்றுக்கொண்டார். குழந்தைசாமி மிக அற்புதமான தலைமை உரையை ஆற்றினார். சி.வி. கார்த்திக் நாராயணனும் இறையன்புவும் பேசினர். இறுதியில் முத்தையா, இந்தப் புத்தகம் எப்படித் தோன்றியது என்பது பற்றி பேசினார்.

இந்தப் பேச்சுகளின் ஒலிப்பதிவைக் கீழே கொடுத்துள்ளேன். என் ஒலிப்பதிவுக் கருவி, என் சட்டைப் பையில் இருந்ததாலும், நான் அங்கும் இங்கும் சற்றே நகர்ந்தபடி இருந்ததாலும், ஒலிப்பதிவின் தரம் சுமார்தான்.

கார்த்திக் நாராயணன்
இறையன்பு
குழந்தைசாமி
முத்தையா

Friday, August 21, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டாக்டர் முத்து செல்லக்குமார்

இந்தியாதான் உலகின் சர்க்கரை நோய் தலைமையகம்! அதிலும் தென்னிந்தியாவில்தான் சர்க்கரை நோய் அதிகமாகத் தாக்குகிறது. நமது உணவு முறையே சரியில்லை; அல்லது சமீபகாலத்தில் நம் உணவுமுறையிலும் நம் வாழ்க்கைமுறையிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்து, அதனால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். அல்லது நமது மரபணுவிலேயே ஏதோ கோளாறு.

சிறு வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு. அதனால் இன்சுலின் அல்லது டயாமைக்ரான்; தினசரி உடலைக் குத்தி ஒரு சொட்டு ரத்தம் எடுத்து வீட்டிலேயே பரிசோதனை; சர்க்கரை இல்லாத காப்பி. அல்லது இது எதையும் செய்யாமல், எப்படி வந்தது என்ற சுவடே தெரியாமல் கொலஸ்ட்ரால், நெஞ்சுவலி. நெஞ்சுவலி வரும்போதுகூட சர்க்கரை நோய் இருப்பதால், அதன் சிக்னல்கள் ஏதும் சரியாக மூளைக்குச் செல்லாமல், அதனால் உயிரிழப்பு. அதைத்தவிர கண் திரை பாதிப்பு, கால்கள் பாதிப்பு - கால்களை வெட்டவேண்டிய நிலையேகூட வரலாம்.

இப்படி சர்க்கரை நோயின் அபாயங்கள் எவ்வளவோ. சர்க்கரை நோயை தவிர்க்க அல்லது தாமதிக்க என்ன செய்வது? வந்துவிட்டால் நாம் என்ன செய்யவேண்டும்? பல கேள்விகளுக்கான விடைகள் டாக்டர் முத்து செல்லக்குமாருடன் நிகழ்ந்த இந்த பாட்காஸ்ட்டில் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆடியோவுக்குச் செல்ல இங்கு சுட்டவும்.

தொடர்புள்ள புத்தகங்கள்:

           
           

ஜின்னா, ஜஸ்வந்த், ஜிங்குச்சா

ஆகஸ்ட் 1 அன்று வெளியான புத்தகம், நான் இன்றுதான் வாங்கவே போகிறேன். அதன்பின், அந்த சுமார் 500+ பக்கம் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க எவ்வளவு நாள்கள் ஆகப்போகிறதோ, தெரியவில்லை. ஏற்கெனவே கையில் ஏழெட்டு உடனடியாகப் படித்துமுடிக்கவேண்டிய புத்தகங்கள் உள்ளன.

ஜஸ்வந்த் சிங் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதன் நோக்கம் என்ன, ஏது என்பது வேறு விஷயம். பரபரப்பாக எதையோ எழுதி, அதை விற்று நாலு காசு பார்த்துவிடவேண்டும் என்ற நிலையில் அவரது நிதி நிலை இல்லை என்று நினைக்கிறேன். அப்படியே ரூபா அண்ட் கோ வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் எத்தனை பிரதிகள் விற்றுவிடும்? ஒரு 10,000? ஒரு புத்தகம் ரூ. 625/- என்கிறார்கள். ராயல்டி 10% என்ற கணக்கில், இவருக்குக் கிடைக்கக்கூடியது 62.5*10000 = ரூபாய் 6,25,000. வரி போக 4 லட்ச ரூபாய் மிஞ்சுமா? அதற்காக பதவியை இழக்கும் அளவுக்கு லூசா அவர்?

ஆக, பணம்தான் அவரை இதை எழுதத் தூண்டியது என்று நான் நம்பவில்லை. ஐந்து வருடங்கள் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார் என்றால் தன் வாழ்க்கையில் இறுதி காலத்தின் பெரும் பகுதியை இதில் செலவழித்துள்ளார்.

காந்தி முதற்கொண்டு யாருமே புனிதப் பசு கிடையாது. நிச்சயமாக காந்தி தன்னை அப்படிப் பார்க்கவில்லை. தன் காலத்திலேயே தன்னை அனைவரும் விமரிசிக்க வழி செய்துகொடுத்தவர் அவர். வல்லபபாய் படேல் உத்தமரும் கிடையாது; ஜின்னா வில்லனும் கிடையாது. நேரு, படேல், ஜின்னா, காந்தி என்ற நால்வருக்கும் இரு பக்கங்கள் இருந்தன. இதில் நாம் எதையும் மறைக்கவேண்டிய அவசியமே இல்லை. மீதி எல்லாமே interpretations-தான். ஜஸ்வந்த் சிங் தான் பார்த்ததை எழுதுகிறார். பிடிக்கவில்லையா, பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். வேண்டுமென்றால் கட்சியின் முக்கியமான பதவிகளில் இருந்து தூக்கலாம். ஆனால் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து அவரை விலக்குவது, மோடி குஜராத்தில் அந்தப் புத்தகத்தைத் தடை செய்வது எல்லாம் பைத்தியக்காரத்தனம்.

நீதிமன்றத்தில் மோடியின் தடை செல்லாது என்று எளிதில் சாதித்துவிடலாம். அதுதான் நடக்கவும் போகிறது. புத்தகத்தை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பது இந்தியர்கள் அனைவரையும் சென்றடைய உதவும்!

ஜிங்குச்சா அடிப்பவர்கள் மட்டும்தான் கட்சிக்கு வேண்டும் என்று பாஜக நினைத்தால், பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஐக்கியமாகிவிடலாம். எதிர்க்கருத்து என்பது ஜனநாயகத்தில் ஒரு கட்சிக்கு மிகவும் அவசியம். காங்கிரஸில் அது இல்லை. வருமா என்பது சந்தேகமே. பாஜகவிலும் அது இல்லை. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றான, மைய நீரோட்டக் கட்சி ஒன்றை உருவாக்குவது மிக மிக அவசியமாகிறது.

இடதும் வலதும் சாராத, பலவிதக் கருத்துக்களுக்கும் இடம் தரக்கூடிய, முழுமையான ஜனநாயக நோக்கில் அமைக்கப்பெற்ற, இந்திய நோக்குடன் (பிராந்தியக் கட்சியாக இல்லாமல்) ஒரு கட்சி மிக அவசியம். அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்.

Thursday, August 20, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற்றி பா.ராகவன்

கிழக்கு பாட்காஸ்ட் மூன்றாம் நிகழ்ச்சி 9 ஆகஸ்ட் 2009 அன்று ஒலிபரப்பானது. பா.ராகவன், சித்ரா, சந்திரமௌளி ஆகியோர் பங்குபெற்றனர்.

அதன் ஆடியோ வடிவம் இங்கே.

நான்காம் வார நிகழ்ச்சியாக டாக்டர் எஸ். முத்து செல்லக்குமார், டயாபெடீஸ் (நீரிழிவு நோய்) பற்றி உரையாடினார். அதன் ஆடியோவை நாளை சேர்க்கிறேன்.

வரும் ஞாயிறு அன்று (அப்போதுதான் சென்னை மறுகண்டுபிடிப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெறும்), லிவிங்ஸ்மைல் வித்யா பங்குபெறும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். சென்னையில் இருப்பவர்கள் மறக்காமல் கேளுங்கள். 12.00 - 1.00 மணிக்கு, ஆஹா FM, 91.9 MHz.

தொடர்புள்ள புத்தகங்கள்:

           
           
       

Wednesday, August 19, 2009

சென்னை - மறுகண்டுபிடிப்பு

வரலாற்றாளர் எஸ்.முத்தையாவின் magnum opus, சென்னை - மறுகண்டுபிடிப்பு என்ற இந்தப் புத்தகம். ஆங்கிலத்தில், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பல பதிப்புகள் கண்டுள்ள புத்தகம் இது. இதன் தமிழாக்கத்தை வரும் ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2009 அன்று கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. 640 பக்கங்கள், ரூபாய் 300 என்ற விலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். இதில் 32 பக்கங்கள், சென்னையின் பல இடங்கள் கறுப்பு-வெள்ளை புகைப்படங்களாக இருக்கும்.

ஆகஸ்ட் 2 அன்று ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு - காந்திக்கு பிறகு: பாகம் 1 என்ற நூலை வெளியிட்டபின், வேறு எந்த வேலைக்குமே நேரம் வைக்காமல் இந்த நூலில் பணியாற்றவேண்டி இருந்தது. சென்ற ஆண்டு சென்னை வாரத்திலேயே இந்தப் புத்தகத்தை வெளியிட நினைத்தோம். இந்த நூலில் மொழிபெயர்ப்பாளர் சி.வி.கார்த்திக் நாராயணன் அப்போதே தமிழாக்க வடிவத்தைக் கொடுத்திருந்தார். ஆனால், மேற்கொண்டு காபி எடிடிங் வேலைகள் இருந்தன. அதற்குள் முத்தையா அவரது புத்தகத்தின் மறு பதிப்பைக் கொண்டுவரும் வேலையில் இருந்தார். அதனால், அதில் வந்திருந்த சில மாற்றங்களையும் மீண்டும் தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்தார் மொழிபெயர்ப்பாளர்.

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது இந்தப் புத்தகத்தைக் கொண்டுவரலாம் என்று நினைத்ததிலும் வேறு சில இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அதனால், அடுத்த நியாயமான கட்டம், இந்த ஆண்டு சென்னை தின, வாரக் கொண்டாட்டத்தின்போது.

புத்தக வெளியீட்டு விழா, மெட்ராஸ் புக் கிளப்புடன் இணைந்து சென்னை கன்னிமரா ஹோட்டலில் நடைபெறுகிறது. ஞாயிறு காலை மணி 10.30-க்கு. முனைவர் வா.செ.குழந்தைசாமி புத்தகத்தை வெளியிட முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப, பெற்றுக்கொள்கிறார். அவர்கள் இருவருடன், கார்த்திக் நாராயணன், எஸ். முத்தையா ஆகியோரும் சில வார்த்தைகள் பேசுவார்கள்.

இந்த விழாவுக்கு மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்களும், கிழக்கு பதிப்பக சார்பில் அழைப்பிதழ் பெற்றவர்களுமே கலந்துகொள்ளமுடியும். எனவே நண்பர்கள் யாராவது இதற்கு வருகை தர விரும்பினால், எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களுக்காக அழைப்பிதழ்களை வைத்திருக்கிறேன்.

இந்தப் புத்தகம் பற்றி, சற்றே விரிவாக பின்னர் எழுதவேண்டும்.

[இன்று மாலை, Prodigy Books வரிசையில், Madras - Chennai என்ற சிறு ஆங்கிலப் புத்தகம் (விலை ரூ. 25) வெளியிட்டோம். சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் இயக்குனர் நந்திதா கிருஷ்ணா எழுதிய இந்தப் புத்தகத்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் ராமன் பெற்றுக்கொண்டார்.]

Thursday, August 13, 2009

கிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’!

நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னை வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடியை அடையாளம் காணும் வகையில் ஒரு வசதியைச் செய்துகொடுத்திருந்தோம். அதேபோல, இப்போது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்கள் நடக்க உள்ளதால், அந்தத் தொகுதிகளின் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள எண்ணைக் கொண்டு தங்களது வாக்குச் சாவடி தொடர்பான தகவல்களைப் பெறும் வகையில், ஒரு புதிய சேவையைக் கொண்டுவந்துள்ளோம்.

ஓட்டு போடு!

இந்தச் சேவையைப் பயன்படுத்தி, உங்களது கருத்துகளை மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிவிக்கலாம்.

Monday, August 10, 2009

இந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்

இன்று ரீடிஃப்.காம் தளத்தில் சுவாரசியமான செய்தி ஒன்றைப் படித்தேன். சீன நிபுணர் ஸாங் குவோ ஸான் லூ காங் என்பவர், சீனா எப்படி இந்தியாவின் பல எத்னிக் குழுக்களுடன் சேர்ந்து அவர்களது தேசிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, இந்தியாவின் அண்டைநாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவை 20-25 நாடுகளாகத் துண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போதுதான் சீனா வலுவடையுமாம். இல்லாவிட்டால், இந்தியா ஆசியாவைத் தன் பின்னால் அழைத்துச் சென்றுவிடுமாம்.

இதுபோன்ற கோக்குமாக்கான எண்ணங்கள் அமெரிக்காவில் திங்டேங் என்ற பெயரில் நிறுவனங்களை நிர்வகித்து வருபவர்களுக்குத்தான் வரும். Project for the New American Century என்ற பெயரில் இருந்த அமைப்பு (டிக் செனி, பால் உல்ஃபோவிட்ஸ், டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், பில் கிறிஸ்டல்...) ஜார்ஜ் புஷ் குடியரசுத் தலைவராக வருவதற்குச் சில ஆண்டுகள் முன்னரே, பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோதே, தங்கள் திட்டத்தைத் தெளிவாக முன்வைத்தனர். எந்த நாட்டை அடித்து நொறுக்கவேண்டும்; எந்த நாட்டில் உள்குழப்பங்களை உருவாக்கவேண்டும்; எந்த ஆட்சிகளை மாற்றம் செய்யவேண்டும் போன்ற அதி உன்னதமான திட்டங்கள்.

ஆட்சிக்கு வந்ததுமே இந்த மூவர் குழு அதில் பல திட்டங்களை நடத்தவும் ஆரம்பித்தது.

இப்போது உலக அரங்கில் சீனா முன்னணியில் வரும்போது அதற்கும் இதுபோன்ற வலதுசாரி கிறுக்கு எண்ணங்கள் வந்துள்ளது.

இந்தியா என்ற நாடு சாத்தியமே அல்ல என்றுதான் உலகில் பலரும் நினைத்தனர், என்கிறார் ராமச்சந்திர குஹா, தன் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ என்ற புத்தகத்தின் முன்னுரையில். என்ன, ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நாசமாகிப் போய்விடும் என்ற ஆரூடங்களைப் பொய்த்து இந்தியா இன்னும் இந்தியாவாகவே, (காஷ்மீர் தவிர்த்து) எந்தவிதத்திலும் பெரிய அளவில் நில மாற்றங்களைக் காணாமலே முடிந்த அளவுக்கு ஒற்றுமையாக வளர்ந்துவருகிறது. என்னென்னவோ பிரச்னைகள் இருந்தாலும், மிக மிக மெதுவாக, ஆனாலும் மிக மிக உறுதியாக முன்னேறிச் செல்ல முயன்று வருகிறது.

சீனா ஒன்றும் சுகபோகமாக இல்லை. அங்கும் எண்ணற்ற பிரச்னைகள். சீனா, அமெரிக்க கிடையாது என்பதை சீன ஸ்ட்ரேட்டஜி வல்லுனர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்தவனை அழித்தால்தான் தான் வாழமுடியும் என்ற காலனியாதிக்க மனநிலையிலிருந்தும் சீன ஸ்ட்ரேட்டஜி வல்லுனர்கள் விடுபடவேண்டும்.

அந்த ரீடிஃப் கட்டுரை சொல்வதைப்போல, சீன அரசு, இந்தக் கருத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வரலாற்றுரீதியாக பல பிரச்னைகள் உள்ளன. அதன் ஆரம்பங்களை ராமச்சந்திர குஹா மிக அழகாகத் தன் புத்தகத்தில் விளக்குகிறார். அதேபோல, பல்லவி அய்யரின் சமீபத்திய புத்தகமான ‘சீனா - விலகும் திரை’யும் இந்திய-சீன உறவை சமகாலக் கண்ணோட்டத்தில் விவரிக்கிறது.

இந்தியாவும் சீனாவும் கரம் கோத்து முன்னேறவேண்டிய காலகட்டம் இது. இரு நாட்டு மக்களும் வர்த்தகத்திலும் உற்பத்தியிலும் ஒருவரோடு ஒருவர் போட்டிபோடவேண்டும் என்றாலும் அந்தப் போட்டி நியாயமானதாகவே இருக்கலாம். அடுத்தவரை அடுத்துக் கெடுக்கவேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.

வரும் நாள்களில் தி ஹிந்து, இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்:-)

பல்லவி அய்யர் - சீனா: விலகும் திரை
ராமச்சந்திர குஹா - இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு - பாகம் 1

இன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)

இன்று சென்னையில் இன்ஃப்ளுயென்சா A (H1N1)-ஆல் ஒரு குழந்தை இறந்ததாகவும், இந்தியாவில் இதுவரை ஆறு பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்ஃப்ளுயென்சா A (H1N1) பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ் கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் (28 மே 2009 அன்று) விரிவாகப் பேசியிருந்தார். அதன் ஒலிப்பதிவை நான் அப்போதே தந்திருந்தேன்.

அதைக் கேட்கமுடியாமல் போனவர்கள் இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பதற்றம் அடையவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய தருணம் இது.

Friday, August 07, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்

வாராவாரம் ஞாயிறு அன்று சென்னை பண்பலை வானொலி, ஆஹா எஃப்.எம் 91.9 MHz-ல், மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி முதல், கிழக்கு பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தகங்கள், எழுத்தாளர்கள், சூடான விஷயங்கள் பற்றி விவாதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரண்டாம் வாரம் - 2 ஆகஸ்ட் 2009 அன்று - ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சொக்கனும், பல சினிமா உலகத்தினரைப் பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ள தீனதயாளனும், ரஹ்மானைப் பற்றியும், இளையராஜாவைப் பற்றியும், தமிழ்த் திரைப்பட இசை பற்றியும் பேசுகின்றனர். இடை இடையே சில தொலைபேசி உரையாடல்களும் உள்ளன.

அதன் ஒலிவடிவம் இங்கே.

தொடர்புள்ள புத்தகம்:முதலாவது நிகழ்ச்சி

Tuesday, August 04, 2009

மேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி

அயோத்யா மண்டபம் எதிரில், வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்குப் பக்கத்தில், கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இடம்:

108, ஆரிய கௌடா ரோடு
மேற்கு மாம்பலம்
சென்னை 600033

தற்போது மைலாப்பூரிலும் குளக்கரையில், (அல்லயன்ஸ் புத்தக நிறுவனத்துக்குப் பக்கத்தில்), புத்தகக் கண்காட்சி தொடர்கிறது.

Monday, August 03, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்

வாராவாரம் ஞாயிறு அன்று சென்னை பண்பலை வானொலி, ஆஹா எஃப்.எம் 91.9 MHz-ல், மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி முதல், கிழக்கு பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

புத்தகங்கள், எழுத்தாளர்கள், சூடான விஷயங்கள் பற்றி விவாதம். இதில் முதல் வாரமாக 26 ஜூலை 2009 அன்று நான், சோம.வள்ளியப்பனுடன் பங்குச்சந்தை பற்றியும் அவர் அது தொடர்பாக எழுதியுள்ள புத்தகங்கள் பற்றியும் பேசினேன். கூடவே வலைப்பதிவர் வண்ணத்துப்பூச்சியாரும் அவரது மனைவி திருமதி ராஜேஸ்வரியும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர்.

அதன் ஒலிவடிவம் இங்கே.

தொடர்புள்ள புத்தகங்கள்:

           

Sunday, August 02, 2009

ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’

இன்று சென்னை லேண்ட்மார்க்கில், ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கம் (முதல் பாகம் மட்டும்) வெளியிடப்பட்டது.

ராமச்சந்திர குஹாவை அறிமுகம் செய்து ஆ.இரா.வேங்கடாசலபதி பேசினார்.

அதையடுத்து, ராமச்சந்திர குஹா பேசினார்.

படங்களை நாளை சேர்க்கிறேன்.

Saturday, August 01, 2009

அணு நீர்மூழ்கிக் கப்பல்

இந்தியா அணு நீர்மூழ்கிக் கப்பல் (Nuclear Submarine) ஒன்றை உருவாக்கி, கமிஷன் செய்துள்ளது. அதன் பெயர் ஐ.என்.எஸ். அரிஹந்த். இது தொடர்பாக, சிங்கப்பூர் வானொலி என்னிடம் ஓரிரு வார்த்தைகள் கேட்டிருந்தனர். அப்போதே இதைப் பற்றி ஒரு பதிவு எழுத எண்ணியிருந்தேன்.

அணு நீ.க என்றால், அது அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பயன்படுவது என்று நினைக்கக்கூடாது. அந்தக் கப்பலுக்குத் தேவையான சக்தியை ஓர் அணு உலை கொடுக்கும். அவ்வளவுதான். அந்த நீ.கப்பல், கடலுக்கு அடியில் வெகு நாட்கள், ஏன் மாதங்கள், வருடங்கள் இருக்கமுடியும். சில கிலோ அணு எரிபொருளைக் கொண்டு ஓரிரு ஆண்டுகளுக்குத் தேவையான அளவு சக்தியை அதனால் உருவாக்கிக்கொள்ளமுடியும்.

குடிப்பதற்கான நல்ல நீரை கடல் நீரிலிருந்து சுத்திகரித்துப் பெற்றுக்கொள்ள முடியும். சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனைக்கூட எலெக்ட்ராலிசிஸ் மூலம் நீரை உடைத்து பெற்றுக்கொள்ள முடியும். அதனால் வெளியே தலையைக் காட்டாமல் பல மாதங்கள் நீருக்கு அடியில் இருக்கலாம். தேவையான அளவு உணவு மட்டும் இருந்தால் போதும். அந்த நீ.கப்பல் எதற்காகவும் கரையைத் தேடி வரவேண்டிய அவசியம் இல்லை. அதனால் பல மாதங்கள் கடலுக்கு வெகு ஆழத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடமுடியும்.

இதற்கிடையில், இந்த நீ.கப்பல் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என்றும் இது இந்தியாவின் வறட்டு ஜம்ப அறிவிப்பு என்றும் சில மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருக்கலாம். இப்போதைக்கு, கப்பலின் உள்ளே வைக்கும் அளவுக்கு சிறியதான அணு உலையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அவ்வளவே. ஆனால் அதுவே மாபெரும் நுட்ப சாதனைதான். இந்தக் கப்பல் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லவேண்டுமா; அது பிற நாடுகள்மீது அணுகுண்டுகளை வீசவேண்டுமா என்பது இப்போதைக்குத் தேவையில்லாத கேள்விகள்.

ஒரு அணு நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுதம் இருக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. அத்துடன், சில ஜைனர்கள், அந்தக் கப்பலுக்கு அரிஹந்த் என்று அவர்களது அருகக் கடவுள் பெயரை வைத்ததால் கோபம் கொண்டுள்ளனர். அமைதி விரும்பிகள் ஜைனர்கள். அஹிம்சைவாதிகள். இந்த அணு நீர்மூழ்கிக் கப்பலும் அமைதிப் பணிகளுக்கு மட்டுமே (அணு ஆயுதம் ஏதும் இல்லாமல்) பயன்படும் என்று நாமும் நம்புவோம்.