Friday, April 26, 2013

ராமதாசின் சாதி அரசியல்

தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் எல்லாம் பிரமாதமாக இருந்தது; திடீர் என்று ராமதாஸ் முளைத்தார் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது சாதி அரசியல் தலையெடுத்திருக்கும் அளவுக்கு இதற்குமுன் இல்லை என்று கட்டாயம் சொல்லலாம்.

பொதுவாக சாதி பார்த்துதான் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை நிற்கவைக்கின்றன. ஆனால் அவை யாவும் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசுவதில்லை. அதுவும் பொதுக்கூட்டங்களில், அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதி பேசுவதில்லை.

ராமதாஸ்தான் இதனை உடைத்து வெளிப்படையாக வன்னியர் சங்கம் மூலம் இட ஒதுக்கீடு கோரிப் பெரும் போராட்டம் நடத்தினார். அதுகூடப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பொது இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வேண்டிய இடம் கிடைப்பதில்லை என்று ராமதாஸ் போராடியதன் விளைவாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று 20% ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த விளைவின் காரணமாகவே போராட்டம் நியாயமான காரணங்களுக்காக ஏற்பட்டது என்று சொல்லலாம்.

ஆனால் இப்போது ராமதாஸ் இறங்கியிருக்கும் வேலை அவ்வளவு சிலாக்கியமானதாகத் தெரியவில்லை. வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சி ஆனாலும் வன்னிய அடையாளம் எப்போதுமே ராமதாசிடம் ஒட்டியபடியே இருந்தது. மாறி மாறி திமுக, அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்ததும் தனித்து அரசியல் செய்ய முடிவெடுத்தாலும் அதனாலும் பெரும் பலன் எதும் இல்லை என்ற நிதர்சனம் புரிய ஆரம்பித்ததும்தான் இப்போது சாதி அரசியல் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் பாராட்டப்படத்தக்க பல நல்ல போக்குகளைக் கொண்டுவந்தவர் ராமதாஸ். திருமாவளவனுடன் சேர்ந்து வன்னியர்களும் தலித்துகளும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அதற்காகப் பல முயற்சிகளை முன்னெடுத்தவர் ராமதாஸ். குடிப் பழக்கத்துக்கு எதிராக, சிகரெட் பழக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர். (அவருடைய கட்சி ஆசாமிகள் இதனைப் பின்பற்றுபவர்களா என்பது வேறு விஷயம். மாமல்லபுரத்தில் நேற்று அனைவரும் இளநீரும் மோரும் மட்டும்தான் பருகினர் என்று வைத்துக்கொள்வோம்.) இலவசங்கள் கூடாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார் ராமதாஸ். தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சிப் பட்டறை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராமதாஸ். மாற்று பட்ஜெட் என்ற ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர்.

தனித்தனியாக இவையெல்லாம் நல்ல கருத்துகள் என்றாலும் இவை எவையும் சித்தாந்தரீதியில் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வரவில்லை. இடதும் இல்லை, வலதும் இல்லை. மக்களிடம் இதுகுறித்து பாராட்டுதல்களும் இல்லை. தன் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள், பிளவுகள். திமுக, அஇஅதிமுகவிடமிருந்து இனி அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இவை எல்லாம் சேர்ந்து அவரை வேறு திசைக்குத் தள்ளிச் சென்றுவிட்டன போலும்.

சித்திரை முழுநிலவுப் பெருவிழா (சித்ரா பௌர்ணமி) சென்ற ஆண்டு நடந்தபோதுதான் காடுவெட்டி குருவிடமிருந்து மிகக் கொடூரமான சாதி இழிவுப் பேச்சு வெளியானது. இந்த ஆண்டு விழாவுக்குள் தர்மபுரிக் கலவரங்கள் நிகழ்ந்திருந்தன. தலித்துகளுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்க சில சாதிக் கட்சிகளைத்தூண்டி அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இருக்கிறார் ராமதாஸ்.

ஆனால் இந்த முயற்சியின் பலனாக ஆட்சியைக் கைப்பற்ற எவ்விதத்தில் சாத்தியம் என்று நினைக்கிறார் இவர் என்று புரியவில்லை. உத்தரப் பிரதேசம் அல்லது பிகாரில் யாதவ் சாதியினரின் எண்ணிக்கை பலத்துக்கு எந்தவிதத்திலும் அருகில் வரும் நிலையில் தமிழகத்தில் வன்னியர்கள் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 20 கோடி மக்கள் தொகையில், சுமார் 20-25% பேர் யாதவ் என்ற வரையறைக்குள் வருவார்கள் என்கிறார்கள். தமிழகத்தில் 1 கோடி வன்னியர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார். (அதுவும் அத்தனை பேரும் மாமல்லபுரத்தில் கூடப்போவதாகவும் சொன்னார். எப்படித் தாங்கியதோ!) ஆனால் உண்மை எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

உத்தரப் பிரதேச பாணியில் யாதவ் vs தலித் என்பதுபோல தமிழகத்தில் வன்னியர் vs தலித் என்று ஒரு சமன்பாட்டை இவர் முன்வைக்க விரும்புகிறார்போலும். ஆனால் உள்ளதும் போச்சுடா என்று ஆகப்போகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதற்குள்ளாக தமிழகத்தை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடப்போகிறார்கள் என்றும் தோன்றுகிறது.

Saturday, April 20, 2013

நரேந்திர மோதி vs நிதீஷ் குமார்

நரேந்திர மோதி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை. குஜராத் மாடலுக்கு மாற்றாக ஏதோ பிகார் மாடல் என்று ஒன்று கண்டுபிடித்திருப்பதாக அவரும் சொல்கிறார், பிறரும் சொல்கிறார்கள். ஆனால் கண்ணுக்குத்தான் ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது.

மோதி, குஜராத்தின் பெருமை என்பதை முன்வைக்கிறார். யார் தயவும் இன்றி தன் நிதிநிலைக்கு உள்ளாகவே, தானாகவே தன் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவருவேன், ஏற்கெனவே பெருமளவு கொண்டுவந்துள்ளேன் என்கிறார். மாறாக, நிதீஷ் குமார் முன்வைப்பது பெரும் யாசகச் சட்டியை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று ஏந்துகிறார். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். உடனே ஒடிசா அடுத்து திருவோட்டைப் பெருமையுடன் ஏந்த ஒட்டுமொத்தமாக மாநில சட்டமன்றமே முன்வருகிறது. தீர்மானம் ஒன்றை இயற்றுகிறது.

இந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை. அப்படித்தான் ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக நாம் இருந்தோம். இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கையேந்து, கையேந்து, இன்னும் அதிகமாகக் கையேந்து.

மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். Right of Centre என்ற கருத்தாக்கத்தை இன்று பளிச்சென்று, ஜகா வாங்காமல், தைரியமாகப் பேசும் ஒரே அரசியல்வாதி அவர்தான். அதனை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது. கையேந்தும் அரசியலில் மேலிருந்து கீழ்வரை ஒருவர் மாற்றி ஒருவர் கையேந்திக்கொண்டே இருப்பதால், இந்நிலை மாற யாருமே அனுமதிப்பதில்லை. இலவச அரிசி, இலவச சேலை, இலவசப் பல்பொடி, மாதாந்தர நிதியுதவி என்று மாறி மாறி நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கேட்டால் நியோ லிபரல் பாலிசியால் யார் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது. ஒரு பெரும் மத்தியவர்க்கம் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இந்த நாடு இந்த அளவு முன்னேறியுள்ளது.

நிதீஷ் குமார் திடீர் என்று செகுலரிசம் பேசுகிறார். அத்வானி தேவலாம், ஆனால் மோதி கூடாது. என்றிலிருந்து அத்வானி செகுலரிசத்தின் ஏற்கத்தக்க முகமாக ஆகியுள்ளார்? பாஜகவுக்கு எந்த அளவுக்கு நிதீஷ் தேவையோ அதற்கும் அதிகமாக நிதீஷுக்கு பாஜக தேவை. லாலுவா, மோதியா, யார் பெரிய எதிரி என்பதை நிதீஷ் முடிவு செய்துகொள்ளவேண்டும். ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்.

மோதி எதிர்ப்பாளர்கள், மோதிக்கு பாஜக உள்ளேயே பெரும் எதிர்ப்பு இருக்கும், எனவே அவர் அதைத் தாண்டி வரட்டும் என்கிறார்கள். அந்த எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே இருக்கின்றன. வரிசையாக பாஜக தலைவர்கள் மோதியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பாஜகவின் வேறு எந்த முதல்வரும் ஊடகங்களின் ஆசைப்படி நடக்கப்போவதில்லை. அத்வானி, சுஷ்மா சுவராஜ் இருவரும்தான் இன்னும் தெளிவாகத் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை. வரும் சில மாதங்களில் அது தெளிவாகத் தெரிந்துவிடும். பாஜக மோதியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.

மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும். இதனால் பாஜக தலைமையில் மோதி பிரதமராக, ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சிக்கு வரும். அதை வைத்துக்கொண்டு மோதியால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதிலிருந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும். அப்போதுதான் இந்தியாவில் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும். முக்கியமாக சோஷலிசக் கட்டமைப்புகள் பலவற்றை இழுத்து மூடவேண்டும். முதலாவதாக திட்டக் குழு. இதற்கு இன்று தேவையே இல்லை. நாடாளுமன்ற அமைப்புக்குள் இல்லாத இந்தத் தனி அமைப்புகளை ஒழிக்கவேண்டும். அதேபோல சோனியா காந்தி கொண்டுவந்துள்ள NAC.

கல்வி, தொழில்துறை, வரி போன்ற பலவற்றிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அரசாங்கத்தைச் சுருக்கிச் சிறிதாக்கவேண்டும். ஊழல் பெருகும் இடங்களைத் தேடி தேடி அடைக்கவேண்டும்.

ஆனால் அதற்கு முன்னதாக பாஜக உள்ளேயே சில சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும். கோட்பாட்டுத் தெளிவு இல்லாத தலைவர்கள் ஒதுக்கப்படவேண்டும். பாஜக ஒரு உண்மையான வலதுசாரி இயக்கமாக, குழப்பங்கள் இன்றி, உருவாகவேண்டும்.

Tuesday, April 16, 2013

மின்சாரம்: இனி சூரியனே கதி

தமிழகத்தில் மின் நிலைமை சீராவதற்கு அடுத்த சில வருடங்களிலும் வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தச் சிக்கலுக்கு கருணாநிதியைக் குறை சொல்வதா, ஜெயலலிதாவைக் குறை சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருக்கும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். சென்னையில் இருக்கும் நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம், மாதம் ஒன்றுக்கு ஒரு நாள் 8 மணி நேரம் கட். மாநிலத்தின் பிறர் எல்லோரும் பாவப்பட்டவர்கள்.

எப்படி தண்ணீருக்கு private solution ஒன்றைத் தேடிக்கொள்கிறோமோ, அதேபோல மின்சாரத்துக்கும் பிரைவேட் தீர்வு ஒன்றை நோக்கி நாம் செல்லவேண்டியிருக்கும். அது தொடர்பாகத் தகவல் அறிந்துகொள்ளப் பலவற்றையும் படித்து வருகிறேன். சிலருடன் பேசிவருகிறேன். இந்த வேலைகளைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிரண்டோடு பேச ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்வது, செலவு எஸ்டிமேட் என்ன என்பது தொடங்கி நிறையப் பேசியுள்ளோம். இதில் யாராவது ஒருவரை முடிவு செய்து, எப்படியும் மே மாதத்துக்குள்ளாக சூரிய ஒளி மின் அமைப்பை என் வீட்டில் பொருத்திவிடுவேன் என்று நினைக்கிறேன். இதில் மாநில அரசின் சப்சிடி பற்றியெல்லாம் நான் கவலைப்படப்போவதில்லை. வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை.

தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வீடுகள் ஆளுக்கு ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின் “ஆலைகளை” நிறுவ முடியும். சுமாராக ஒவ்வொரு வீடும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 யூனிட்டுகள்வரை தயாரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் யூனிட்டுகளை மக்களே உற்பத்தி செய்ய முடியும்.

தமிழக அரசின் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்கள் எதிர்பார்த்தபடிச் செல்லவில்லை என்கிறது இந்தக் கட்டுரை. நிறுவனங்களை ஈர்க்கும்விதமாக தமிழக அரசு சரியானமுறையில் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. பேச்சு இருக்கும் அளவுக்குச் செயலில் நம் அரசியல்வாதிகள் ஈடுபடுவதில்லை.

கூடங்குளம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது. புதிதாகப் பெரிய அளவுக்கு அனல் மின் நிலையங்கள் வரப்போவதாகத் தெரியவில்லை. ஜெயங்கொண்டத்தில் வருவதாக இருந்த அனல் மின் நிலையத் திட்டத்திலிருந்து என்.எல்.சி பின்வாங்கிவிட்டது. இப்போது யார் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்நிலையில் ஆண்டுக்கு ஆண்டு மின் தேவை அதிகமாகிவரும் நேரத்தில், ஏற்கெனவே கடுமையான பற்றாக்குறை நிலவும்போது, அவற்றையெல்லாம் தாண்டி உற்பத்தியைப் பெருமளவு அதிகரிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவேதான் நாம் அனைவரும் அவரவர்களால் முடிந்த அளவு சொந்த உபயோகத்துக்கு மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ளவேண்டியிருக்கும்.

நான் ஒரு கிலோவாட் இன்ஸ்டலேஷனைப் பொருத்தினாலும், அதில் ஏசி, மைக்ரோவேவ் ஆகியவற்றை இயக்க முடியாது. பொதுவாக அவை ஒவ்வொன்றும் 2300 வாட் அளவுக்கு மின்சாரத்தை உறிஞ்சக்கூடியவை. அதேபோல இண்டக்‌ஷன் ஸ்டவ் ஒன்று என் வீட்டில் உள்ளது. அது அதிகபட்சமாக 2000 வாட் அளவு மின்சாரம் எடுத்துக்கொள்ளக்கூடியது. தண்ணீரை ஒவெர்ஹெட் டேங்கில் சேர்ப்பதற்கும் அதிக அளவு மின்சாரத்தை இழுக்கும் பம்ப் பயன்படுகிறது. இதற்கெல்லாம் மெயின்ஸிலிருந்துதான் மின்சாரம் தேவைப்படும். குறைந்த வாட்டேஜ் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய ஏசி, பம்ப், மின் அடுப்பு ஆகியவற்றைத் தயாரிப்பது குறித்து பொறியாளர்கள் யோசிக்கவேண்டும்.

ஒருவிதத்தில் வரும் காலங்களின் அறிவியல் முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்தால், ஒரு வீடு முழுவதுமாக சூரிய ஒளி மின்சாரத்தின்கீழ் தன்னிறைவு பெற்றதாக ஆக முடியும் என்று தோன்றுகிறது.

Monday, April 15, 2013

உலகப் புத்தக நாள் பெருவிழா 2013

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி, சர்வதேச புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும்விதமாக, சென்னை புத்தக சங்கமம் என்ற அமைப்பு சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. 18 ஏப்ரல் 2013 முதல் 27 ஏப்ரல் 2013 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.

கிழக்கு பதிப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. ஸ்டால் எண் 12.

நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, இந்தக் கண்காட்சிக்கோ அல்லது சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவுக்கோ வந்துசெல்லுங்கள். கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்!


சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013

ஆமாம், இதுதான் இதன் அதிகாரபூர்வப் பெயர். சென்னையில் குறைந்தபட்சம் நான்கு நல்ல புத்தகக் கண்காட்சிகளை நடத்தமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் ஜனவரி புத்தகக் கண்காட்சி ஒன்றுமட்டுமே பதிப்பாளர் சங்கம் பபாசியால் தொடர்ந்து நடத்தப்பட்டுவந்துள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக, சென்னையில் இரண்டாவது புத்தகக் கண்காட்சி ஒன்றை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. இப்போது சென்னையில் ஒரே நேரத்தில் இரண்டு புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் லேடி வெலிங்க்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஒரு கண்காட்சி நடைபெறுகிறது. நேற்றே (14 ஏப்ரல் 2013, தமிழ்ப் புத்தாண்டு அன்று) இந்தக் கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 28 வரையில் இந்தக் கண்காட்சி தொடரும்.


கிழக்கு பதிப்பகம், கடை எண் 130-131 என்ற இடத்தில் உள்ளது. கோடை விடுமுறை உள்ளவர்கள் சாவகாசமாக கண்காட்சிக்குச் சென்றுவிட்டு, அப்படியே பீச்சில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு வரலாம்.

மற்றொரு கண்காட்சியும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் நடைபெற உள்ளது. அதுகுறித்த தகவல்களை இங்கே காணலாம்.

Thursday, April 11, 2013

ஆண்டிராய்டிலும் என்.எச்.எம் ரீடர்

இப்போது என்.எச்.எம் ரீடர் மின்-படிப்பான் செயலி, ஆண்டிராய்டு செல்பேசிகள், சிலேட்டுக் கணினிகளிலும் வேலை செய்கிறது. கடந்த சில தினங்களாகவே இது கூகிள் பிளேயில் கிடைத்துவந்தாலும் அதனைப் பயன்படுத்தியவர்கள் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். அவற்றில் சில களையப்பட்டு, புதிய வெர்ஷன் இப்போது கிடைக்கிறது. மேலும் நிறைய மாறுதல்கள் செய்யப்படவேண்டும். செயல்பாடு மேம்படுத்தப்படவேண்டும். இருந்தாலும் இப்போது இருக்கும் செயலி ஒரளவுக்குத் திருப்தி தருவதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். Google Play சென்று NHM Reader என்று தேடி, கிடைக்கும் பொதியை இறக்கி, சோதித்துப் பாருங்கள்.

மேலும் புத்தகங்களைச் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மெதுவாகத்தான் நடக்கிறது. கொஞ்சம் சிக்கலான வேலைதான் இது.

இப்போது பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்), சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய மூன்று புத்தகங்களும் இலவசமாக என்.எச்.எம் ரீடருக்குள் படிக்கக் கிடைக்கின்றன. இலவசப் புத்தகங்களாக எண்ணற்ற புத்தகங்களைச் சேர்ப்பதற்கான திட்டத்தைப் பற்றி இன்றி விரிவாகப் பேசியுள்ளோம். வரிசையாக அவை கிடைக்கத் தொடங்கும்.

Saturday, April 06, 2013

புறநானூறு காட்டும் மானுடமும் அறமும்

தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கலை, இலக்கியம், பாரம்பரியம் தொடர்பாக ஒரு உரை நிகழ்ச்சியை நடத்திவருகிறது. தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா பள்ளியில் விநோபா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்று மாலை நிகழ்ச்சியில் பேரா. ஜம்புநாதன், புறநானூறு காட்டும் மானுடம் பற்றிப் பேச உள்ளார்.

ஜம்புநாதன் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.

இவருடன் சேர்ந்து நான்கு நாட்கள் நாங்கள் ஒரு குழுவாக புதுக்கோட்டையின் பல இடங்களுக்குச் சென்றுவந்தோம். இவர் புதுக்கோட்டையிலேயே பிறந்து வளர்ந்தவர். படித்தவர். அங்கேயே வேலை செய்தவர். ஒரு சைக்கிளிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுவந்தவர். அப்பகுதியின் பல பெருங்கற்காலப் புதைகுழிகளைக் கண்டுபிடித்த பெருமை பெற்றவர். அவற்றின் எண்ணிக்கைகளை அடிப்படையாக வைத்து தமிழகத்திலேயே மாந்தன் தோன்றிய பகுதி புதுக்கோட்டையாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு (சற்றே விந்தையான!) கோட்பாட்டையும் கொண்டுள்ளவர்.

ஜம்புநாதன் இன்று புறநானூறு குறித்துப் பேசுவதைக் கேட்க அவசியம் வருக.


Wednesday, April 03, 2013

புத்த தம்மம்

நான் வளர்ந்தது நாகப்பட்டினத்தில். நான் அங்கு வசித்த காலம்வரை நாகை புத்த மத மையமாக ஒருகாலத்தில் விளங்கியது என்பதை நான் அறிந்திருக்கவே இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். முதன்மை நோக்கம், அங்கு இருக்கும் நடராஜர் வெண்கலச் சிற்பங்களைப் பார்ப்பதுவே. அற்புதமான திருவாலங்காட்டு நடராஜரையும் காளையின்மீது சாய்ந்த நிலையில் (காளை இல்லை) இருக்கும் வெண்கல அர்தநாரியையும் பார்த்தபின் சுற்றிவரும்போது திடீரெனக் கண்ணில் பட்டன பல்வேறு வெண்கல புத்தர்கள். அனைத்தும் சோழர் வெண்கலச் சிலைகள். அனைத்தும் (அல்லது கிட்டத்தட்ட அனைத்தும்) நாகப்பட்டினத்தின் சுற்றுப்புறங்களில் கண்டெடுக்கப்பட்டவை.

பொன்னியின் செல்வன் கதையில் நாகையின் புத்த விகாரை பற்றிப் படித்திருப்பீர்கள்.

10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ தேசத்தில் நன்றாகப் பரவியிருந்த புத்தமதத்துக்குப் பிறகு என்ன ஆனது? எங்கே போனது? கவனியுங்கள். இது பக்தி இயக்கம் பரவிய காலகட்டத்துக்குப் பிறகான காலகட்டம்.

சில ஆண்டுகளுக்குமுன் அஜந்தா குகைகளின் புத்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் காணச் சென்றிருந்தேன். மிக அற்புதமான ஓவியங்கள். அவைபோன்று இந்தியாவில் வேறு எங்கும் இல்லை எனலாம். போதிசத்வ பத்மபானி, போதிசத்வ அவலோகிதேஸ்வரா ஆகிய உலகப்புகழ் பெற்ற ஓவியங்களைத் தவிர கணக்கற்ற முழுக்கதை ஓவியங்கள் அஜந்தாவில் உள்ளன. புத்தரின் வாழ்க்கையிலிருந்து; பல்வேறு புத்த ஜாதகக் கதைகளாக. சரியான வழிகாட்டுதல் இன்றி இந்த ஓவியங்கள் சொல்லும் கதைகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. சிபி ஜாதகம், மகா கபி ஜாதகம், மகா ஜனக ஜாதகம், சிம்ஹல அவதானம் என்று எதையுமே நீங்கள் பள்ளிக்கூடத்திலோ வேறு எங்குமோ படித்திருக்க மாட்டீர்கள். இந்தியாவின் ஒரு பெரும் பாரம்பரியம் நமக்கு வெகு அருகில், ஆனால் நம் கைக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது.

அஜந்தா சென்றுவந்தபின் நான் இலங்கையில் சில புத்தத் தலங்களுக்குச் சென்றுவந்தேன். அனுராதபுரம், பொலனருவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி ஆகிய இடங்களுக்குச் சென்றுபார்த்தேன். அஜந்தா பற்றியும் புத்த புராணக் கதைகள் பற்றியும் ஓரளவு புரிதல் ஏற்பட்டிருந்ததால் இந்த இடங்களில் உள்ள சிலைகள், ஓவியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அஜந்தா போலல்ல இலங்கையின் புத்தக் கோவில்கள். அவை வழிபாட்டில் உள்ளவை.

இன்று இந்தியாவில் புத்தமதச் சின்னங்களைத் தேடிச் சென்றால் அவை அனைத்துமே அழிந்துபோன இடங்களாகவே இருக்கும். தமிழகத்துக்குள்ளோ, காஞ்சிபுரம் அல்லது நாகப்பட்டினத்தில் தேடினால்கூட இன்று எதுவுமே கிடைக்காது. ஏன், சென்னை அருங்காட்சியகத்திலேயே அமராவதிச் சிற்பங்கள் உள்ள பகுதி பூட்டப்பட்டிருக்கிறது - பல ஆண்டுகளாக.

இந்நிலையில் தமிழகத்தில் புத்தமதத்தின் வேர்கள் பற்றித் தேடவேண்டியது அவசியமாகிறது.

அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலை இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். புத்தர் ஏன் அரச பதவியை விடுத்து சந்நியாச வாழ்க்கையை வாழச் சென்றார் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களை அம்பேத்கர் மறுக்கிறார். மூப்பு, சாவு, நோய் ஆகியவற்றைக் காண்பிக்காமல் ஓர் இளவரசனை வளர்த்துவிட முடியாது என்பது அம்பேத்கரின் வாதம். அம்பேத்கர் சித்தார்த்தனை உயரத் தூக்குகிறார்.

இளவரசன் சித்தார்த்தன் சாக்கியக் குலக்குழுவைச் சேர்ந்தவன். சாக்கிய சங்கத்தின் உறுப்பினன். சாக்கியர்களுக்கும் அவர்களுக்கு அருகிலேயே வசிக்கும் கோலிய குலக்குழுவுக்கும் பிரச்னை. என்ன பிரச்னை? தண்ணீர்ப் பிரச்னை. தமிழகம்-கர்நாடகம், தமிழகம்-கேரளம் போன்று ஓர் ஆற்றின் நீரைப் பங்கிடுவது குறித்த பிரச்னை. கோலியர்களை அடித்து நொறுக்க விரும்புகிறார்கள் சாக்கியர்கள். சித்தார்த்தன் மட்டும் எதிர்க்கிறான். வாக்கெடுப்பு நடக்கிறது. சித்தார்த்தனின் வாதங்கள் தோற்கின்றன. போர் என்று முடிவாகிறது. அப்போதும் அதனை ஏற்க மறுக்கிறான் சித்தார்த்தன். அதனால் சாக்கிய சங்கத்தின் விருப்பத்தின்படி ராஜ்ஜியத்தைத் தியாஜம் செய்துவிட்டு சந்நியாசியாகச் செல்கிறான் சித்தார்த்தன்.

நாட்டைவிட்டுச் செல்லும் சித்தார்த்தனை அவனுடைய மக்கள் தடுக்கிறார்கள். தாங்களும் கூடவருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களை மீண்டும் தத்தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொல்லும் சித்தார்த்தன் அவர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றைத்தான். சண்டை வேண்டாம். சாக்கிய சங்கத்தை வற்புறுத்தி, சண்டையை எதிர்க்குமாறு அம்மக்களிடம் சொல்கிறான். மக்கள் மனம் திருந்தி, போரை விடுத்து, தமக்குள்ளாகத் தண்ணீரைப் பங்கிட்டுக்கொண்டு சச்சரவுகளை சுமுகமாக arbitration முறையில் தீர்த்துக்கொள்ள ஒரு முறை ஏற்படுமானால், அதனால் தன் தியாகத்துக்கு உண்மையிலேயே பலன் இருக்கும் என்கிறான். பின்னர் அப்படியே நடந்தது என்பதை சித்தார்த்தன் வேறு சில சந்நியாசிகளிடமிருந்து தெரிந்துகொள்கிறான்.

தண்ணீர்ப் பங்கீடு தொடங்கி பல ஆயிரம் பிரச்னைகள் நம்மிடையே இன்று உள்ளன. சுமுகமான முறையில் இவற்றைத் தீர்க்க புத்த தம்மம் உதவும் என்றால், அதற்காகவும் புத்த தத்துவத்தைத் தமிழகத்தில் தேடிக் கண்டடையவேண்டிய தேவை இருக்கிறது.

உங்கள் ஒருநாள் கருத்தரங்கு சிறக்க வாழ்த்துகள்.

[Philosophical Revisit to Buddhism in Tamil Nadu என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கை வாழ்த்திப் பேசியதின் தமிழ் வடிவம்.]

Tuesday, April 02, 2013

மாணவர் போராட்டம்

இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் ஆசிரியர் மாலன், ஏழு மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலின் டிரான்ஸ்கிரிப்ட் வெளியாகியிருந்தது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் நிகழ்ந்த பல மாணவர் போராட்டங்களின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

போராட்டம் எதிர்பார்த்தபடியே, தனித் தமிழ் ஈழம், ராஜபட்சேவைத் தூக்கிலிடு, (இலங்கையில்) பொது வாக்கெடுப்பு, தனித் தமிழ்நாடு, காங்கிரஸை ஒழிப்போம், துரோகி கருணாநிதி, அமெரிக்காவின் இரட்டை வேடம் என்று போகத் தொடங்கியிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புரிதல் பற்றி அவர்களின் ஆரம்பக்கட்ட ஒன்பது கோரிக்கைகளைப் பார்த்தவுடனேயே எனக்குப் பெரும் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இறுதிவரை இந்த வருத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதவகையிலேயே மாணவர் பிரதிநிதிகளும் நடந்துகொண்டதுபோலவே தோன்றியது.

புதிய தலைமுறை கலந்துரையாடலில் ஒரு மாணவர் தினேஷ் (சென்னை சட்டக்கல்லூரி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு) சொல்லியுள்ள ஒரு கருத்து மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.
தினேஷ்: தலைநகர் தில்லியில், குறிப்பாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்கள் எப்போதுமே மிக வலுவாக இருக்கின்றன. காரணம், அங்கு அந்த மாணவர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொடர்ச்சியாக விவாதிக்கிறார்கள். அரசியல், சமூகப் பிரச்னைகள் மீதான ஆர்வமும் அரசியல் உணர்வும் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால்தான் அங்கு மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அப்படிப்பட்ட சூழல், தமிழகக் கல்வி நிலையங்களில் கிடையாது.
ஜே.என்.யூவில் எந்த அளவுக்கு மாணவர்கள் அரசியல் நிகழ்வுகளையும் பிரச்னைகளையும் அலசுகின்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாணவர் தினேஷ் சொல்லியுள்ளபடி, தமிழகக் கல்லூரிகளில் இந்த அலசல் ஆரம்பித்துவிட்டாலே போதும். அவர்கள் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் இந்தப் பிரச்னைகளை அலசட்டும் - திராவிட, தலித், பிராமண, வலது, இடது என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். பேச ஆரம்பித்துவிட்டார்கள், வலுவாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலே அவர்களோடு பிறரால் உரையாட முடியும். அதிலிருந்து மாணவர்கள் ஏதேனும் ஓரிடத்தை அடைந்து அந்த அரசியலை முன்னெடுக்கட்டும்.

பாலச்சந்திரனின் படம் ஏற்படுத்திய அதிர்வுகள் சில நாளைக்குள் மறைந்துபோகலாம். ஆனால் கார்டன் வெய்ஸ் அல்லது ஃபிரான்செஸ் ஹாரிசன் எழுதிய புத்தகங்களைப் படித்து அவைபற்றி ஆழ்ந்து சிந்தித்து, மனத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தாக்கம் வெகு நாள்களுக்கு இருக்கும்.

பொறியியல் கல்லூரிகளைவிட கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளில்தான் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாணவர் போராட்டத்தின் ஒரு பெரும் நன்மையாக, மாணவர்கள் தினமும் நாட்டு அரசியலை விவாதிக்கத் தொடங்கிவிட்டாலே, ஒருவிதத்தில் நமக்கான விடிவு பிறந்துவிடும்.