Sunday, November 30, 2003

ஜெயேந்திரர் போட்ட தடை

கல்கி 30/11/2003 தேதியிட்ட இதழ் வாசகர் கடிதத்திலிருந்து ஒன்று:

'ஜயேந்திரர் போட்ட தடை' என்ற தலைப்பில் வந்த செய்தியைப் படித்தேன். 'ஞானபீடம்' என்ற நாடகத்தை ராணி சீதை ஹாலில் 15.9.2003 அன்று பார்த்தேன். நாடகத்தில் எந்த ஒரு மதத்தையோ, எந்த ஜாதியையோ, பற்றி தவறாகக் கூறாமல் ஹிந்து சமயத்தின் உயர்ந்த குறிக்கோள்களை எளிதில் புரியும்படியாக விளக்கப்பட்டிருந்தது. காலத்திற்கேற்ற இந்த நாடகத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு ஏன் தடை செய்ய வேண்டும் என்று புரியவில்லை. பல இடங்களில் நடத்தப்பட வேண்டிய நல்ல நாடகம். (டி.பானுமதி, சென்னை-61)

இதுபற்றிய என் முந்தைய வலைப்பதிவு

என் கேள்விகள் அதில் சொன்னது போலவே. யார் இப்படிப்பட்ட நாடகத்துக்குத் தடை போட முடியும்? ஜெயேந்திரர் சட்டத்துக்கு மீறிய மனிதரா?

ஏன் இதுபற்றி மற்ற செய்தித்தாள்களிலோ, பத்திரிக்கைகளிலோ செய்தியே வரவில்லை?

குருமூர்த்தி - அமெரிக்காவின் ஊதாரித்தனம் பற்றி

குருமூர்த்தியின் 'ஊதாரித்தனமும், உலகப் பொருளாதாரமும்!' பற்றி
துக்ளக் 3 டிசம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 61ஆவது பகுதியிலிருந்து

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் போகிறது கட்டுரைத் தொடர். அமெரிக்காவின் டிரேட் டிபிசிட் அதாவது உலக நாடுகளுடனான இறக்குமதி கழித்தல் ஏற்றுமதி மிக அதிகமாகிக் கொண்டு வருகிறது. மற்ற உலக நாடுகள் அமெரிக்காவிற்கு வாங்குவதை விட அதிகம் விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தை மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்வதனால் அமெரிக்காவின் நிலங்கள், பாண்டு (bonds), மற்றும் அமெரிக்கக் கம்பெனிகளின் பங்குகள் வெளிநாட்டவரிடம் போய்க்கொண்டிருக்கின்றன.

அமெரிக்க டாலரின் மதிப்பு உலக சந்தையில் குறைந்து கொண்டே வருகிறது. ஜனவரி 2002 முதல் இன்றுவரை, மற்ற நாணயங்களுக்கு முன் 12%மும், ஐரோப்பாவின் யூரோவுடன் ஒப்புநோக்குகையில் 26% குறைந்துள்ளது. இதுபற்றி பெர்க்-ஷயர் ஹதாவே என்னும் நிறுவனத்தை நிறுவிய அமெரிக்காவின் நிதித்துறை ஜாம்பவானான வாரன் பஃபெட் என்பவர் ஃபார்ச்சூன் (10 நவம்பர் 2003) பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். குருமூர்த்தியின் இந்தக் கட்டுரை பெரும்பாலும் பஃபெட்டின் கட்டுரையை விவரிக்கிறது. [ஃபார்ச்சூன் பைசா கொடுத்து படிக்க வேண்டியது. ஆனால் இந்தக் கட்டுரை இணையத்தில் வேறொரு இடத்தில் கிடைக்கிறது PDF கோப்பாக]

"வருமானத்துக்கு மேல் கடன் வாங்குவது ஒரு குடும்பத்தை எந்த நிலைக்குக் கொண்டு செல்லுமோ, அந்த நாட்டையும் அதே நிலைக்குக் கொண்டு செல்லும். அதாவது திவால் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் - என்பதுதான் அவரது [பஃபெட்டினது] தர்க்கம். ஆனால் அமெரிக்காவின் இந்தப் பொருளாதார முறை - ஊதாரித்தனம், சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது." என்கிறார் குருமூர்த்தி.

பஃபெட்டின் கட்டுரை அமெரிக்காவின் ஊதாரித்தனத்தைக் கடுமையாகச் சாடுவதுடன், மிக எளிமையான எடுத்துக்காட்டுடன் அதனை விளக்குகிறது. அத்துடன் எப்படி இந்த விற்பனைப் பற்றாக்குறையை நேரடி வரி விதிப்பின் மூலமில்லாது மற்ற வகையில் குறைக்கலாம் என்றும் விளக்குகிறார். ஆனால் இந்த முறையை உலக வர்த்தக நிறுவனம் ஏற்றுக் கொள்ளுமா என்று புரியவில்லை. சுற்றி வளைத்தாலும் இந்த இம்போர்ட் கிரெடிட் (இறக்குமதிப் பற்று) என்பது ஒருவகையில் இறக்குமதிகளின் மீதான அதிகப்படி வரிதான். இதனை மற்ற உலக நாடுகள் எதிர்க்கும். அவையும் அமெரிக்க இறக்குமதிகள் மீது இதுபோன்ற பற்றுகளை அல்லது நேரடி வரிகளை விதிக்கலாம்.

வாரன் பஃபெட்டின் கட்டுரை படிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை சுட்டிக் காட்டியதற்கு குருமூர்த்திக்கு நன்றி. இந்தக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்க்க முயல்கிறேன்.

இத்துடன் 30 நவம்பர் 2003 தி எகானமிஸ்ட் பத்திரிக்கையில் வந்துள்ள கட்டுரையையும் சேர்த்துப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

முந்தையது: மும்பை டப்பாவாலாக்கள் பற்றி

சங்கம்: மாலன், கவிஞர் ஞானக்கூத்தனொடு சந்திப்பு

இன்று சன் நியூஸ் தொலைக்காட்சிக் கன்னலில் மாலன் கவிஞர் ஞானக்கூத்தனோடு உரையாடினார். கவிஞரின் பென்சில் படங்கள் கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசும் விதமாகத் தொடங்கி தமிழ்க் கவிதைகள் பற்றி, மரபு பற்றி, நீதிநூல்கள் இலக்கியமாகுமா (கநாசு...) என்ற கேள்வி பற்றி, கவிதைகளினூடே கதை சொல்லல் பற்றி, சமகாலத்திய பலமொழிக் கவிதைகளில் எம்மொழிகளில் உயர்ந்த கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, அதில் தமிழின் இடமென்ன என்று பல தளங்களிலும் சென்றது இந்த நேர்முகம்.

முப்பது நிமிடங்கள் மிகவும் குறைவானது இதுபோன்ற சந்திப்புகளுக்கு.

இதுபோன்ற நல்ல புத்தக அறிமுக நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாக உள்ளது.

ப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்!

ப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்!
கல்கி 30/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 6

இந்தக் கட்டுரையில் சிதம்பரம் நீதிமன்றங்களைப் பற்றிப் பேசுகிறார்.

* கீழ்நிலையிலுள்ள நீதிமன்றங்களில் - முன்சீப் கோர்ட், மாஜிஸ்டிரேட் கோர்ட் அல்லது செஷன்ஸ் கோர்ட் ஆகியவற்றில் - வழங்கப்படும் தீர்ப்புகளைப் பற்றி யாரும் விமரிசனமோ, விவாதமோ செய்வதில்லை. இந்த நீதிமன்றங்களில் மிகப் பெரிய ஒழுக்கச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.

* உயர்/உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன, வெளியாகின்றன. ஆனால் இங்குள்ள பிரச்சினைகளே வேறு. தகுதியுடைய நீதிபதிகள் கிடைக்காத காரணத்தால் பல இடங்கள் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ளன. ஒருசிலர் நீதிபதிகளாக நியமிக்கப்படும் போது அவர்களுக்குத் தெரிந்தவர்களே புருவத்தை உயர்த்துகின்றனர் (அதாவது நீதிபதிகளின் தகுதியின்மை - அறிவு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் குறைபாடு இருக்கும் என்ற சந்தேகத்தால்).

* மற்ற நாடுகளில் இருப்பதைப் போலல்லாமல் இந்தியாவில் உயர்/உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசும், அரசியல் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்றும் இந்தத் தேர்வினை மூத்த நீதிபதிகளே செய்வார்கள் என்றும் சில வருடங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியும் இன்னமும் பல இடங்கள் காலியாக உள்ளன. இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. [இவ்விடத்தில் ராம் ஜேத்மலானியின் நீதி வாரியம் பற்றிய கருத்துக்களையும் நினைவு கூரவேண்டும். அதைப் பற்றிய என் இரு வலைப்பதிவுகள்: 1 | 2]

* அரசுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளில் [உயர்/உச்ச] நீதிமன்றங்கள் அரசின் பக்கமே அதிகம் சாய்வது போல் இருக்கிறது. அரசு வழங்கும் ஒப்பந்தங்கள், லைசென்ஸுகள் ஆகியவற்றில்தான் அதிக பட்ச ஊழல்கள் நடக்கின்றன. ஆகவே இந்த ஒப்பந்தங்களையும், வழங்கப்பட்ட முறைகளையும் நீதிமன்றங்கள் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்.

* நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதம் - தாமதமாக வரும் தீர்ப்பின் மேல் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. தாமதம் ஏற்படுவதால் சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றன. சாட்சிகள் இறந்துவிடுகின்றனர்.

* ஆனாலும் மக்களாட்சியின் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் நீதிமன்றங்களின் பங்கு மிகவும் பாராட்டப்படவேண்டியது.

* நீதிமன்றங்கள் வலிமையாக இருக்க வேண்டுமானால் என்ன செய்யலாம் என்று சில அறிவுரைகள் சிதம்பரத்திடமிருந்து வருகிறது. (அ) நீதிபதிகளுக்கு சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும், அப்பொழுதுதான் திறமை மிக்கவர்களைக் கவர முடியும். (ஆ) நீதிபதிகளுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையாவது தொடர் கல்வி அளிக்க வேண்டும்.

கல்கி 23/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 5

Saturday, November 29, 2003

சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1

சோ, துக்ளக் 26/11/2003 இதழ் முதல் சட்டமன்ற உரிமை மீறல் பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். கிட்டத்தட்ட இதே விஷயத்தை VR கிருஷ்ண அய்யர் 'தி ஹிந்து'வில் எழுதியுள்ளார். சோவின் கட்டுரை இன்னமும் எளிதாக, அழகாகப் புரியுமாறு செல்கிறது.

* நம் நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டம் (constitution) உருவாக்கப்படும்போது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் உரிமைகளை விரிவாக வரையறுக்க நேரமில்லாத காரணத்தால் அரசியல் சட்டம் அமலுக்கு வந்த தேதியன்று (26 ஜனவரி 1950 - குடியரசு தினம்) இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு என்ன உரிமைகள் உள்ளதோ அதே உரிமைகள் இந்தியப் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் உண்டு என்று நிர்ணயித்தனர்.

* நெருக்கடி நிலைமை சமயத்தில் 1976இல் பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் தங்களுக்குத் தேவையான உரிமைகளித் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஒரு சட்டதிருத்தத்தைக் கொண்டுவர முயற்சி நடந்தது. ஆனால் இந்த செருகல் நடைபெறும் முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

* ஆகப் பாராளுமன்றமோ, சட்டமன்றங்களோ தங்களுக்கான உரிமைகளை மூன்று இடங்களிலிருந்து பெறுகின்றன: (1) அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருப்பது, (2) ஏற்கனவே சட்டமாக பாராளுமன்றங்களில் அல்லது சட்டமன்றங்களில் இயற்றப்பட்டுள்ளவை, (3) 26 ஜனவர் 1950 அன்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு என்ன உரிமைகள் உள்ளனவோ அவை (அதற்கு முந்தைய தேதிகள் அல்லது பிந்தைய தேதிகளில் ஏதேனும் புது உரிமைகள் வந்தால் அவை கிடையாது)

* இதுவரை இந்தியப் பாராளுமன்றமோ, சட்டமன்றங்களோ தங்களுக்கென உரிமைகள் இவையென சட்டங்கள் ஏதும் இயற்றவில்லை. ஆக இதுவரை மேற்குறிப்பிட்டுள்ளவற்றுள் (1) மற்றும் (3) மூலம்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றன.

* உரிமை மீறல் எனப்படும்போது குழப்பங்கள் யாவுமே (3) இலிருந்து வருவதுதான். ஒரே மாதிரியான செய்கைகளை பாராளுமன்ற அமர்வுகளும், சட்டமன்றங்களும் வெவ்வேறு விதமாக அணுகுவதால் பொது மக்களுக்கு எப்பொழுது யார் சட்ட/பாராளுமன்றங்களின் உரிமைகளை மீறுகிறோம் என்று தெரியாமல் போகிறது. உதாரணமாக இப்பொழுது இராணுவ அமைச்சராக உள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் 'ப்ரதிபக்ஷா' என்னும் பத்திரிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி 'தரகர்கள், கேடிகள், ஃபோர்ஜரி செய்பவர்கள், விபச்சார விடுதி நடத்துபவர்கள்' என்று எழுதினாராம். இதுபற்றி உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டு இது நடவடிக்கைக்குரிய விஷயம் அல்ல என்று தீர்மானிக்கப்பட்டதாம். அப்படியானால் அந்த அளவிற்கெல்லாம் இல்லாது வெறுமனே 'stinging abuse' என்னும் வார்த்தை எப்படி உரிமை மீறல் ஆகும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான்!

* ஆக எது உரிமை மீறல் என்று தெளிவுபடுத்தப்படாத ஒரு விஷயத்தைக் கொண்டு ஒரு குடிமகனைத் தண்டிப்பது நியாயமில்லாதது.

முந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்! - 2

துக்ளக் 26/11/2003 இதழில் இண்டஸ்டிரியல் எகானமிஸ்டு பத்திரிகை ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் கட்டுரையின் இரண்டாம் பகுதி பற்றி.

ஆந்திரம் - தமிழ்நாடு ஒரு ஒப்பீடு
(2002-03 ஆம் ஆண்டு) (கோடி ரூபாய்கள்)
ஆந்திரம்தமிழ்நாடு
நிதிநிலை அறிக்கை மொத்த வருவாய்35,35330,188
நிதிநிலை அறிக்கை மொத்த செலவு35,42030,831
ஆண்டு திட்ட முதலீடு10,1005,750
மத்திய வரி வருவாயில் மாநிலத்தின் பங்கு4,5753,199
மத்திய அரசிடமிருந்து உதவி மான்யங்கள்4,1041,715
மத்திய அரசிடமிருந்து பெறும் கடன்3,8721,273
மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மொத்த
நிதி ஆதாயங்கள் (Resources)
12,5516,187
சந்தையிலிருந்து திரட்டும் கடன்2,5741,136


* ஆந்திர மாநிலம் விவசாயம், மின் உற்பத்தி, கனிம வளங்கள் பெருக்கம் ஆகியவற்றில் தமிழ்நாட்டை விட முண்ணனியில் உள்ளது. 2000-01 ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே அரிசி உற்பத்தியில் மூன்றாவது இடம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இரண்டாவது இடம், பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது.

* சந்திரபாபு நாயுடு அளித்த ஒரு புள்ளி விவரம்: இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் விழுக்காடு 21%. தமிழ்நாட்டில் 21.02%, கர்நாடகத்தில் 20.4%, ஆனால் ஆந்திரத்தில் 15.77% மட்டும்தான். (இந்தப் புள்ளி விவரத்தை சரியாகப் பரிசீலிக்க வேண்டும். பீமாரு மாநிலங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் சதவிகிதம் நிச்சயம் 21க்கு மேல் இருக்க வேண்டும். இங்குள்ளவர்களின் மக்கள் தொகையும் மிகப் பிரம்மாண்டமானது. அப்படியானால் பல மாநிலங்களில் 21% ஐ விடக் குறைந்த விழுக்காடுதான் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்க வேண்டும்.)

*1991 ஆகஸ்டு முதல் முதல் 2003 மே மாதம் வரையில் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தவர்கள் கொண்டுவருவதாகச் சொன்ன தொகை: ரூ. 1,26,271 கோடிகள். (இவ்விடத்தில் பிசினஸ் ஸ்டாண்டர்டு செய்தித்தாளின் கட்டுரை பற்றிய வலைப்பதிவையும் படிப்பது நல்லது.)

* Indian School of Business ஹைதராபாதில் நிறுவப்படக் காரணமான கதை ஒன்றையும் குறிப்பிடுகிறார். இந்தக் கதையும் Business Standard இல் வந்தது. உலகப் புகழ் பெற்ற வார்ட்டன், கெல்லாக் மற்றும் லண்டன் நிர்வாகப் பள்ளிகள் இணைந்து உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் ஒரு நிர்வாகத்துறை பற்றிய கல்லூரியை நிர்மாணிக்கத் திட்டமிட்டு இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கும் வந்தனராம். மும்பையில் பால் தாக்கரே தனது மாநிலத்தவருக்குத் தனியிடங்கள் கோரினார். அதனை நிராகரித்து சென்னை வந்தபோது தமிழக உயர் அரசு அதிகாரி வெளிநாட்டுக் குழுவினர் ஒவ்வொருவரிடமும் ஒரு மாலையைக் கொடுத்து அதனை அப்பொழுதைய முதல்வர் திரு.கருணாநிதிக்குப் போடச் சொன்னாராம். அதனையடுத்து கருணாநிதியும் ஒரு ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் 100 ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னாராம். பின்னர் ஹைதராபாத் சென்ற அந்தக் குழுவினை விமான நிலையத்திலேயே வரவேற்று ஒவ்வொருவருக்கும் மாலையிட்ட சந்திரபாபு நாயுடு, ஏன் அவர்கள் அந்தப் பள்ளியை ஹைதராபாதில் அமைக்க வேண்டும் என்று பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் காட்டி, அந்தக் கல்லூரி கட்ட வேண்டுமான நிலத்தை இலவசமாகவே கொடுப்பதோடு வேண்டிய மற்ற உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னாராம்.

அன்று மாலையே அந்தக் குழு ஹைதராபாதில் கல்லூரி கட்டுவதாக அறிவிப்பை வெளியிட்டது. அந்தக் கல்லூரிதான் Indian School of Business, Hyderabad. இக்கல்லூரி ஜூலை 1, 2001 முதல் நடந்து வருகிறது.

இக்கட்டுரையின் முதல் பகுதி பற்றிய வலைப்பதிவு

Thursday, November 27, 2003

டெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்

அமெரிக்காவைச் சேர்ந்த டெல் கணினி விற்பனை நிறுவனம் நுகர்வோருக்கான பிரச்சினைகளைத் தொலையழைப்பு மையங்கள் மூலம் தீர்த்து வந்துள்ளது. தொலையழைப்பு மையங்கள் மூலமாகத்தான் அவர்களது விற்பனையே நடந்து வந்துள்ளது. இப்பொழுது இணையத்தையே இதற்குப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மற்ற அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களைப் போல டெல்லும் தங்களது தொலையழைப்பு மையத்தை இந்தியாவில் பெங்களூரில் அமைத்தனர்.

தொலையழைப்பு மையங்கள் இந்தியாவிற்குப் போவது அமெரிக்காவில் உள்ள கணினிசார் தொழிலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிடிக்காததாக உள்ளது. தொலையழைப்பு மையங்களிலிருந்து ஆரம்பித்து மற்ற பல கணினிசார் தொழில்களும் இந்தியா போன்ற குறைந்த செலவாகும் நாடுகளுக்குப் போய்விடும் என்ற பயம் இதற்குக் காரணம்.

இப்படி இருக்கையில் டெல் தனது பெரும் நுகர்வோர்களான மற்ற நிறுவனங்களின் தொலையழைப்புகளை பெங்களூரிலிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கே மாற்றிக் கொண்டுவிட்டனர்; இது டெல்லின் அமெரிக்க நுகர்வோருக்கு பெங்களூர் சேவையில் ஏற்பட்ட வெறுப்பே காரணம் என்பது போல அமெரிக்க ஊடகங்களில் திங்கள் கிழமை அன்று செய்திகள் வந்தன.

இதுபற்றிய வெங்கட்டின் வலைப்பதிவு.

டெல் தொலையழைப்பு மையங்கள் மீது வந்த செய்தி தவறானது என்று புதன் கிழமை 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.

தொலையழைப்பு மையங்கள் பற்றிப் பல கருத்துக்கள் இருக்கலாம். பிற நாட்டு வேலைகளை இந்தியா பறித்துக் கொள்கிறதா?; பன்னாட்டுப் பணமுதலைகள் இந்திய உழைப்பை உறிஞ்சிச், சக்கையாக்கி, பிலிப்பைன்ஸ் ஓடி விடுவர்; இந்நாட்டு இளைஞர்கள் சார்லஸ், டயானா என்றெல்லாம் பெயரிட்டுக் கொண்டு, நுனி நாக்கால் அரைகுறை ஆங்கிலம் பேசிக் கொண்டு, கண்ட கண்ட நேரங்களில் விழித்து, மற்ற நேரங்களில் தூங்கிப், பைத்தியம் பிடித்து அலைவர்; வாரம் ஏழு நாட்களும், நாளுக்கு இருபத்தி நான்கு மணிநேரங்களும் வேலை, வேலை, வேலை - இப்படி எத்தனையோ கருத்துகளும், எதிர் கருத்துகளும் இருக்கின்றன.

ஆனால் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் வந்த செய்தியின் உள்ளார்ந்த விமரிசனம் இதுவே: "ஆளாளுக்கு இந்தியா போய் தொலையழைப்பு மையங்களை நிறுவுகின்றனர். ஆனால் உணமையில் அந்த ஊர் தொலையழைப்பு மைய ஊழியர்கள் எல்லாம் அடாசுகள். டெல்லே... டெல்லே... ஒருசில கடினமான வேலைகளை அந்த ஊர் லூசுகள் சொதப்பியதால் மீண்டும் டெக்ஸாஸ் கொண்டுவந்து விட்டனர். நம்மூர் டெக்ஸாஸ் வித்தகர்கள் நொடியில் நுகர்வோரின் பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். ஆகவே இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இந்தியா போக வேண்டாம், தரக்குறைவான ஊழியர்களை வைத்துக் கொண்டு தடுமாற வேண்டாம், டெக்ஸாஸ், டென்னஸ்ஸியில் தொலையழைப்பு மையம் அமையுங்கள், தரத்தை அதிகரியுங்கள்."

இப்படிப்பட்ட விஷமத்தனமான செய்தி தவறு என்று ஊர்ஜிதமாகி உள்ளது.ஆனாலும் அமெரிக்க ஊடகங்களில் இந்தப் பிரச்சினை பெரிதாக்கப்பட்டு இப்பொழுதும் கூட விஷமமான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆந்திரம் நிசமாகவே முந்துகிறதா?

முந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம் என்ற இரு பகுதிக் கட்டுரை இண்டஸ்டிரியல் எகானமிஸ்டு ஆசிரியர் விஸ்வநாதன் எழுதி துக்ளக்கில் வந்தது. இக்கட்டுரையின் முதல் பகுதி பற்றிய என் வலைப்பதிவு இங்கே. இரண்டாம் பகுதி பற்றிய என் வலைப்பதிவு சனிக்கிழமைதான்.

இதற்கிடையில், ஆந்திராவில் வளர்ச்சி பற்றி இரு பகுதிக் கட்டுரை பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆங்கில செய்தித் தாளில் நேற்றும், இன்றும் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியாகாத ஒப்பீட்டுப் படம் ஒன்றை செய்தித்தாளிலிருந்து வருடி இங்கே கொடுத்துள்ளேன்.

சாரம்:
* ஆந்திரா முயன்றும் அங்கிருந்து கணினி மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி கர்நாடகத்தை விடக் குறைவு. கர்நாடகம்: ரூ. 12,350 கோடி, நோய்டா (தில்லி): ரூ. 7,450 கோடி, தமிழகம்: ரூ. 6,315 கோடி; ஆந்திரம்: ரூ. 3,668 கோடி.
* கையில் உள்ள ஆனால் செயல்படுத்தப்படாத முதலீட்டு - ஆந்திரம்: ரூ. 124,000 கோடி, கர்நாடகம்: ரூ. 115,000 கோடி, தமிழகம்: ரூ. 150,000 கோடி, குஜராத்: ரூ. 140,000 கோடி.
* செயல்படுத்தப்படும் திட்டங்களின் முதலீடு - ஆந்திரம்: ரூ. 49,000 கோடி, கர்நாடகம்: ரூ. 45,000 கோடி, தமிழகம்: ரூ. 43,000 கோடி
* ஆந்திரம் கடந்த எட்டு வருடங்களில் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியை அதிகரித்திருந்தாலும் அங்கு மின்சாரக் கட்டணம் தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகம்.
* ஆந்திரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நேரடி முதலீடு மிக அதிகமாக இருக்கிறது. இதனால் மாநில அரசு கிட்டத்தட்ட போண்டியாகும் நிலையில் உள்ளது. இதைப்போன்ற மற்றொரு மாநிலம் மகாராஷ்டிரமாம்.

இதையெல்லாம் வைத்து சந்திரபாபு நாயுடு வெறும் பேச்சளவில்தான், செய்கையில் தமிழகமும், கர்நாடகமும் முன்னணியில் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நாயுடு வந்தபொழுது இருந்த நிலையிலிருந்து திட்டமிட்டு கடந்த எட்டு வருடங்களில் ஆந்திரத்தை தமிழகம் மற்றும் கர்நாடகத்துடன் தீவிரமாகப் போட்டி போடும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். சென்னையில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வந்ததன் முக்கிய காரணமே இங்கிருக்கும் துறைமுகம்தான். இதுதான் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு பாதகமாக உள்ளதொன்று. ஆனால் பெங்களூர் கணினி சார் துறையில் மிக அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆந்திரம் இதனைக் கருத்தில் கொண்டு உயிரியல் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பயோடெக் தொழிற்சாலைகள் வளர ஜீனோம் வேலி என்ற உயிரியல் பூங்காவைக் கட்டிக் கொண்டிருக்கிறார் நாயுடு.

Tuesday, November 25, 2003

அசோகமித்திரனின் கட்டுரைகள் (ஆங்கிலத்தில்)

அசோகமித்திரன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் எழுதி வரும் தொடர் கட்டுரைகள் Writer's Notes என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவருகிறது.

அசோகமித்திரன் பற்றிய என் முந்தைய குறிப்புகள்: 1 | 2 | 3 | 4

Monday, November 24, 2003

ஜெ ஜெ சில குறிப்புகள் - மாலன் பதில்

மாலனின் திசைகள் கட்டுரையைப் பற்றிய என் எதிர்வினையை எனது வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு மாலனிடமிருந்து வந்த பதில் கீழே.

அன்புள்ள பத்ரி,

உங்களது வலைப்பூவில் JJ சில குறிப்புக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களைப் படித்தேன். சில விளக்கங்கள் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவற்றை எழுதுகிறேன்.

"1. ஜெயலலிதாவின் மார்க்சியம், பெரியாரியம் பற்றிய கருத்துகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு அதன் மீதெல்லாம் கருத்து சொல்ல விருப்பமா என்றும் தெரியவில்லை. மிஞ்சிப் போனால் பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் மீது ஜெயலலிதா புகழாரம்தான் சூட்டுவார் (அப்பொழுதுதான் ஓட்டுகள் கிடைக்கும்)." என்று எழுதியிருகிறீர்கள்

பெரியார் மீதுள்ள ஜெயலலிதாவின் வெறுப்பு பல நேரங்களில் பலவிதங்களில் வெளிப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே பெரியார் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலையணிவிக்கக் கூட ஜெயலலிதா சென்றதில்லை. அது வெறும் சடங்குதான். ஆனால் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்த விமானம் ஏறிப் பசும்பொன்னுக்குப் பறக்கும் ஜெயலலிதா, போயஸ் தோட்டத்திலிருந்து மிக அருகில் இருக்கும் அண்ணா மேம்பாலம் வரை வராததற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர் தனது ஆட்சியில் மாவட்டங்களுக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ பெரியாரின் பெயரை வைத்ததில்லை. அப்படி பெயர் வைப்பது என்பது அபிமானத்தின் ஒரு வித வெளிப்பாடுதானே? இந்து மதச் சடங்குகளில் பெரியாருக்கு இருந்த வெறுப்பும், ஜெயலலிதாவிற்கு இருக்கும் அபிமானமும் நாடறிந்த செய்தி. தொழிலாளர்கள் மீது இவர் காட்டிவரும் பகையுணர்வு (டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களுக்கு கிராசுவிட்டி, பென்ஷன் கிடையாது) மார்க்சியத்தில் மரியாதை கொண்ட மனதிலிருந்து வருவதாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

2. புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியத்தில் உள்ள குறைபாடுகளாக ஒருசிலவற்றைக் காண்கிறார் ஜெயமோகன். அதில் ஒரு இலக்கிய விமரிகராகவே நடந்து கொண்டுள்ளார் ஜெயமோகன். கணையாழி நேர்காணலில் "இவ்வளவு போருக்குப் பின்னரும், பிரச்சினைகளுக்குப் பின்னரும் அவர்களின் இலக்கிய உலகம் தட்டையாகத்தான் இருக்கிறது" என்று சொன்னார் என்பதற்காக ஜெயமோகனுக்கு ஈழத்தமிழர் மீது கசப்புணர்வு என்று சொல்வது நியாயமாகாது. எனக்கு 'கிம்பெல் தி ஃபூல்' பிடிக்கவில்லை என்று (ஒரு பேச்சுக்கு) சொன்னால் நான் நாஜியாகி விடுவேனா? ஜெயலலிதாவை ஈழத்தமிழருக்கு எதிரானவராகக் காட்டுவதும் நியாயமில்லாதது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்றால் ஈழத்தமிழருக்கு எதிரானவராகி விடுவாரா?

விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல, இலங்கைத்தமிழருக்கே எதிரானவர் ஜெயலலிதா என்பதை அவரது கடந்தகால நடவடிக்கைகள் நமக்குச் சொல்லுகின்றன.காரணம் அவர் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் புலிகளாகப் பார்த்தவர். அவர் ஆட்சியில் இருந்த போது நடந்த உலகத் தமிழ் நாட்டின் போதுதான், கார்த்திகேசு, சிவத்தம்பி போன்றவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் காந்தளகம் சச்சிதானந்தம் போன்றவர்களை நாடு கடத்தும் முயற்சிகள் நடந்தன. இலங்கைத் தமிழர்கள் காவல் நிலையத்தில் சென்று தங்களது கைரேகைகளைப் பதிவு செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

ஒரு புத்தகத்தை, நிராகரிப்பதும் இலக்கியத்தின் ஒரு பிரிவினரை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதும் எப்படி ஒன்றாக முடியும்? ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களைப் பொதுமைபடுத்திப் பேசுகிறார். எழுத்தின் தரத்தை வாழ்வின் பொருளாதாரத்தோடு பிணைத்துப் பேசுகிறார். அவரது வாதம் சரியானது என்றால் வறுமையில் வாழ்ந்த பாரதியும், பு.பியும், சத்தான படைப்புக்களைத் தந்திருக்க முடியாது. அந்த வாதம் சரி என்றால் அந்த வாதத்தின் மறுதலையும் (converse) சரியாக இருக்க வேண்டும். அதாவது வளமான வாழ்வைப் பெறும் வாய்ப்புக் கொண்ட சிங்கப்பூர், மலேசிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய தமிழர்கள்தான் செழுமையான படைப்பைத் தந்திருக்க வேண்டும்.

உண்மை என்னவெனில், படைப்புகளின் தரம் என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். படைப்புகளைப் பற்றிய மதிப்பீடுகள் செய்யும் போது அது எழுதப்படும் சமூகத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொதுமைப்படுத்திப் பேசுவது மனச்சாய்வையே காட்டுகிறது.

3. அரைகுறை வரலாற்று உணர்வு. ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு (உணர்வு?) பற்றி நம்மால் இனங்காண முடியாது அவர் அதிகம் எழுதியதில்லை, பேசியதில்லை. எப்படி இவ்விருவரையும் ஒப்பிடுகிறார் என்றே தெரியவில்லை.

ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு ஊடகங்களின் உலகில் மிகப்பிரபலம். சர்க்காரியா கமிஷன் வழக்குகளிலிருந்து விடுபடுவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசும் விதமாக உச்ச நீதி மன்றத்தில் காவிரி வழக்கை வாபஸ் பெற்றார் கருணாநிதி என்று சட்ட சபையிலேயே பேசியவர் அவர். ஒவ்வொன்றும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்தவை. சர்க்காரியா விசாரணைக்குப் பிறகு 89 வரை கருணாநிதி ஆட்சியில் இல்லை. தமிழகத்தின் அண்மைக்கால அரசியல் குறித்த அவரது அறிவே அவ்வளவுதான். ஜெயமோகனின் வரலாற்று அறிவை பின் தொடரும் நிழலில் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

4. இந்துத்வா சார்பு: ஜெயலலிதா இதனைத் தன் பல செய்கைகளில் காண்பித்து விட்டார். ஆனால் ஜெயமோகனைப் பற்றி அவரை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் கொண்டுவரும் குற்றச்சாட்டு இந்த ஆர்.எஸ்.எஸ் வைக்கோல் பொம்மையாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே? அவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தால் என்ன?

அவர் ஆர்.எஸ்.எஸ்காரராக இருப்பதில் எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. அப்படி அவர் இருப்பதைக் கண்டித்து நான் என் கட்டுரையில் எதாவது எழுதியிருக்கிறேனா? அது ஜெயலலிதாவிற்கும் அவருக்கும் இருக்கும் ஒற்றுமைகளில் ஒன்று. ஆர்.எஸ்.எஸ் வைதீக மனோபாவம் கொண்டது. வைதீக மனோபாவம் கொண்டவர்களுக்கு கருணாநிதி உகப்பானவராக இருக்க முடியாது. ஜெயமோகனுக்கு இந்த மனச்சாய்வு இருப்பதால், அவரது கருத்துகளை அப்படியே ஏர்றுக் கொள்ள முடியாது. You have to take it with a pinch of salt.

அவரது ஆணவம் எத்தகையது என்பதைப் பற்றியும் அதை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பது குறித்தும் வெங்கட்டுக்கு விரிவாக எழுதியிரிக்கிறேன். அதைத் தகவலுக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.

அன்புடன்
மாலன்

டான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர்

உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து ஜெயலலிதா மீது டான்ஸி வழக்கில் குற்றம் இல்லை என்று தீர்ப்பளித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

முழு தீர்ப்பு பற்றிய விவரங்கள் இன்று மாலைக்குள் வெளியே வரலாம். நாளை செய்தித்தாள்கள் இதைப் பற்றி என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். இன்னமும் எட்டு வழக்குகள் ஜெயலலிதா மேல் உள்ளன.

கிரிக்கெட் லஞ்சம் பற்றிய பிரச்சினை

இதுபற்றி நான் தமிழோவியத்தில் எழுதிய கட்டுரை.

யூனிகோடில் இங்கே.

முரசொலி மாறன் மறைவு

நேற்றுதான் சிதம்பரத்தின் 'கற்றறிந்த' அமைச்சர்கள் பற்றி எழுதியிருந்தேன். மாறன் அப்படிப்பட்ட கற்றறிந்த அமைச்சர்களில் ஒருவர். தமிழகத்திலிருந்து கடந்த பத்தாண்டுகளில் மத்திய அமைச்சரானவர்களில் மொத்தமாகவே இரண்டு பேரைத்தான் கற்றறிந்த அமைச்சர்கள் என்று சொல்லலாம். ரங்கராஜன் குமாரமங்கலம், மாறன்.

மாறன் முறையாக எவ்வளவு கற்றிருந்தார் என்ற தகவல் என்னிடம் இல்லை. ஆனால் உலக வர்த்தக அமைப்பில் அவர் சாதித்த அளவின் அடிப்படையில் இந்தியாவில் தலைசிறந்த அமைச்சர்களில் ஒருவராக இவர் இருந்திருக்கிறார். வணிகம் மற்றும் தொழில் அமைச்சராகப் பணியாற்றிய இவர் பொருளாதாரத்தில் லிபரல் (எழுவரல் - இராம.கி) கொள்கைகளை செயல்படுத்தினார். 1996இலிருந்து தேவ கௌடா, குஜ்ரால் அமைச்சரவைகளில், பின்னர் வாஜ்பாயி அமைச்சரவையில் முதலில் தொழில், பின்னர் வணிகம் மற்றும் தொழில் அமைச்சராக இருந்தவர். செப்டெம்பர் 2002இல் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால் நினைவிழந்து கோமாவில் இருந்து நேற்று இறந்து போனார்.

நான் வசிக்கும் பாராளுமன்றத் தொகுதியின் (மத்திய சென்னை) உறுப்பினர் இவர். இவரது மறைவுக்கு இரங்குவோம்.

தி ஹிந்து பிசினெஸ் லைன் இரங்கல் கட்டுரை

Sunday, November 23, 2003

குருமூர்த்தி - மும்பை டப்பாவாலாக்கள் பற்றி

குருமூர்த்தியின் 'இவர்கள் படிக்காத மேதைகள்!' பற்றி
துக்ளக் 26 நவம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 60ஆவது பகுதியிலிருந்து

நவம்பர் முதல் வாரத்தில் பிரிட்டனின் பட்டத்து அரசர் சார்லஸ் இந்தியா வந்திருந்தார். அப்பொழுது அவர் மும்பை நகரத்தில் அலுவலகங்களுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்லும் 'டப்பாவாலா' என்று அழைக்கப்படுபவர்களைச் சந்தித்தார். இது பெரிய நிகழ்ச்சியாகப் பேசப்பட்டது. உண்மையில் அப்பொழுதுதான் நான் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இவர்களைப் பற்றிய கட்டுரைதான் இந்த இதழில் குருமூர்த்தி எழுதியது.

இந்த டப்பாக்காரர்களின் தொழில் என்ன? மும்பை அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வீட்டுச் சாப்பாட்டைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் அலுவலகம் செல்லும்போது வீட்டில் உணவு தயாராயிருக்காது. சென்னையில் வெறும் தயிர் சாதத்தை மட்டும் டப்பாவில் பிசைந்து அவசர அவசரமாக அள்ளி எடுத்துச் செல்பவர்களைப் பார்த்திருக்கிறோம், அல்லது இதைப் படிக்கும் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால் மும்பை மக்கள் இதை வேறு விதமாகக் கையாளுகின்றனர். வீட்டிலிருப்பவர்கள் சமையலை முடித்து அதனை டப்பாக்களில் வைத்து இந்த டப்பாக்காரர்களிடம் ஒப்படைக்கின்றனர். டப்பாக்காரர்கள் இப்பாத்திரங்களை வீடுகளில் இருந்து சேகரித்து, அதன் மீது பிரத்யேகமான ஒரு குறியிட்டு, பக்கத்தில் உள்ள இரயில் நிலையத்துக்கு எடுத்து வந்து அனுப்புகிறார்கள். இது போய்ச் சேர வேண்டிய இரயில் நிலையத்தில் சேகரிக்கப்பட்டு, உணவு உட்கொள்பவருக்குப் போய்ச்சேர்ந்து அவர் உண்டுமுடித்தபின் வந்த வழியைப் பின்தொடர்ந்து உண்டவர் வீட்டுக்குள் வருமுன் தான் போய்ச் சேர்ந்து விடுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒருநாளைக்கு மொத்தமாக 2 லட்சம் டப்பாக்கள் பயணிக்கின்றன. இவற்றைப் பார்த்துக் கொள்வது 5000 டப்பாக்காரர்கள்.

இதுவும் ஆச்சரியமானதொன்றல்ல. ஆனால் ஃபோர்ப்ஸ் என்னும் நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது என்னவென்றால் இம்மாதிரியான ஒரு விஷயத்தில் இரண்டு மாதங்களில் அதிக பட்சமாக ஒரு தவறுதான் நிகழ்கிறது! அதாவது சிக்ஸ் சிக்மா நிறுவனங்களை விடப் பதினாறு மடங்கு உயர்வு பெற்றதாக இருக்கிறது இவர்களது தொழில் திறன்!

முந்தையது: அகப்படுவாரா நம் நாட்டு பின்லேடன்

ப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு!

ப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு!
கல்கி 23/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 5

அமைச்சர்கள் பற்றிய சில முக்கியக் கருத்துகளை இந்தக் கட்டுரையில் வைக்கிறார் சிதம்பரம்.

1. அமைச்சர்களின் தகுதி: ஆரம்ப நாட்களில் தகுதியான, விஷயம் அறிந்த அமைச்சர்களையே பிரதம மந்திரியோ, முதலமைச்சரோ தேர்ந்தெடுத்தனர். ஆனால் இப்பொழுது அமைச்சர்களாக இருப்பவர்களின் தகுதி கேவலமானதாக உள்ளது. ஒரு சில மேற்கோள்கள்:

"இருபத்தியோராம் நூற்றாண்டில் யார் வேண்டுமென்றாலும், அந்தத் துறையை வேண்டுமென்றாலும் ஏற்று நடத்தி விட முடியும் என்பது மூட நம்பிக்கை."

"யார் எந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் அதை நாம் சகித்துக் கொள்கிறோம்."

இம்மாதிரி வருத்தபடக் கூடிய பல நிகழ்வுகள் சமீபத்தில் நடந்து வருகின்றன. ஆனாலும் ஒருசில சட்டமன்றங்களில் (ஆந்திரா போல்) கற்றறிந்த பலர் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர். மத்திய அமைச்சரவையில் முக்கியமாகத் திறமை வாய்ந்த ஒருசிலர் இருக்கின்றனர். தமிழக அமைச்சரவையில் இதுபோன்ற அதிர்ஷ்டம் நமக்குக் கிடைக்கவில்லை!

2. அமைச்சர்களைப் பந்தாடுவது: இந்தச் சாதனை முழுக்க முழுக்க ஜெயலலிதாவையே சாரும். அவரது அமைச்சரவையில் யார் எந்தத் துறைக்கு அமைச்சர் என்று அந்தந்த அமைச்சர்களுக்கே சில சமயம் தெரிவதில்லை.

சிதம்பரம் சொல்லாது விட்ட விஷயம் ஜெயலலிதாவின் பந்தாடல் அமைச்சரவையில் மட்டுமல்ல, நிர்வாகத்திலும்தான். தலைமைச் செயலராக இருக்கட்டும், சென்னைக் காவல்துறை கமிஷனராக இருக்கட்டும். நில் என்றால் நில், செல் என்றால் செல். இது மாதிரி இந்தியாவில் வேறு எந்த அரசும் நடந்துகொண்டதில்லை.

3. நிழல் அமைச்சரவை: இங்கிலாந்து போன்ற நாடுகளில் எதிர்க்கட்சிகள் நிழல் அமைச்சரவை நடத்தி வரும் தேர்தலில் வென்றால் யார் எந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கப் போகிறார்கள் என்பதனை வாக்காளர்களுக்கு உணர்த்தி விடுவார்கள். அதிலிருந்து மக்கள் வாக்களிக்கும்போது நல்ல வேட்பாளரோடு, இந்த வேட்பாளர் ஒரு நல்ல அமைச்சராகவும் இருப்பாரா என்று தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும். நாம் முதலமைச்சர்/பிரதமர் ஆகியோரைப் பற்றி கவலைப்படும் அளவிற்கு அமைச்சர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

கல்கி 16/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 4

அஸ்ஸாமும், பீஹாரும் - 2

இந்திய இரயில்வே வேலைவாய்ப்பு வாரியம் கிழமேற்குப் பகுதிகளுக்கான வேலைக்கான தேர்வை அஸ்ஸாமில், 9 நவம்பர் 2003 அன்று நிகழ்த்தியது. இதில் பீஹாரைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களை அஸ்ஸாம் மாணவர்கள் அடித்ததாகவும், தேர்வு நுழைவுச் சீட்டைக் கிழித்துப் போட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 11 நவம்பர் 2003 அன்று பீஹார் திரும்பிய இந்த மாணவர்கள் இனி இரயில்வே தேர்வினை தங்கள் மாநிலத்திலேயே வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு இரயில் நிலையம் ஒன்றைச் சூறையாடி, ஒரு சில இரயில் வண்டிகளைப் போகவிடாமல் தடுத்துக் குழப்பமும் விளைவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மறுநாளும் பீஹாரி மாணவர்கள் அஸ்ஸாமுக்குச் செல்லும் இரயில்களை அடித்து நொறுக்கிக் கொள்ளை அடித்துள்ளனர்.

இப்படி ஆரம்பித்த விவகாரம் இன்று மிகப் பெரிய அளவிற்குச் செல்லக் காரணம் உல்ஃபா. ஏதேனும் ஒரு காரணத்துக்காகக் காத்திருந்த இந்தத் தீவிரவாத அமைப்பு இதனைக் கையில் எடுத்துக் கொண்டு அஸ்ஸாமில் இருக்கும் ஏழை பீஹாரித் தொழிலாளர்களைக் குறிவைத்துக் கொன்று குவிக்கத் தொடங்கியது. பீஹாரில் நடந்தது வெறும் அடிதடி வன்முறையே. உயிர் சேதம் இல்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து இதுவரை அஸ்ஸாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பீஹாரிகளை உல்ஃபா தீவிரவாதிகள் கொன்று விட்டனர்.

இன்னமும் கொலைகள் நிகழும் என்றுதான் தோன்றுகிறது. உல்ஃபா ஹிந்தி பேசுபவர்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேறச் சொல்லியுள்ளது. பீஹாரிகள் கூட்டமாக வெளியேறத் துவங்கி விட்டனர்.

இந்தியாவின் கிழமேற்குப் பகுதிகள் மிகவும் வளர்ச்சி குன்றிய பிரதேசங்கள். இளைஞர்கள் அனைவரும் அரசாங்க வேலையை நம்பியே இருக்க வேண்டிய கட்டாயம். இம்மாதிரிப் பற்றாக்குறை இருக்கும்போதுதான் அஸ்ஸாமியன், பீஹாரி என்ற எண்ணங்கள் தோன்றுகிறது, இந்தியன் என்ற எண்ணம் மறைகிறது. மேலும் அஸ்ஸாம், பீஹார் இரு மாநிலங்களும் கல்வியில் மிகவும் பின்தங்கியவை. பீஹார் ஊழல் மற்றும் வன்முறை மலிந்த ஒரு இடம். அஸ்ஸாம் தீவிரவாதிகள் நிறைந்த இடம். பல வங்காள மொழி பேசுபவர்களைக் கொலை செய்த இடம். இப்படிப்பட்ட இடத்தில் இதுமாதிரி ஒரு வன்முறை வரும் என்பதை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

  1. உல்ஃபா தீவிரவாதிகளை ஒடுக்க இராணுவம் முயல வேண்டும்.
  2. பீஹார், அஸ்ஸாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளித்து அங்கு கல்வியறிவை வளர்க்கத் தேவையான முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும். மேலும் வேலை வாய்ப்புகள் பெருகுமாறு தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்குக் கொடுக்க வேண்டும்.
  3. இன்னமும் ஒருபடி மேலே போய் தனியார் நிறுவனங்கள் உருவாக்கும் ஒவ்வொரு வேலைக்கும் இத்தனை ரூபாய்கள் என்று அந்த நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கலாம். அதாவது ஒரு நிறுவனம் 20 உள்ளூர்க்காரர்களுக்கு வேலை வழங்கினால் அந்த நிறுவனத்துக்கு ஒவ்வொரு வேலைக்கும் வருடத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக ரூ. இரண்டு லட்சம் வழங்கலாம். இந்தச் சலுகையை ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்கலாம்.
  4. அரசு நிறுவனங்கள் மூலமாக இணையம், தொலைபேசி ஆகியவற்றின் கட்டணங்களை இந்த மாநிலங்களில் கணிசமாகக் குறைக்கலாம். பீ.எஸ்.என்.எல் போன்ற அரசின் தொலைதொடர்பு நிறுவனமோ, அல்லது தனியார் நிறுவனமோ இணையக் கட்டணம் 1mbps க்கு ரூ. பத்து லட்சம் ஒரு வருடத்திற்கு என்றால், அதனைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சத்திற்குக் கொடுத்து, மீதி ஐந்து லட்சத்தை மத்திய அரசிடமிருந்து பெறலாம். இதனால் அறிவு சம்பந்தமான தொழில்கள் பீஹார், அஸ்ஸாம் போன்ற இடங்களில் அதிகமாகும். BPO மற்றும் இதர IT தொழில்கள் அதிகமாகும்.
  5. தனியார் நிறுவனங்கள் நடத்தும் கல்லூரிகள் மற்றும் கணினிப்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் தரலாம்.


இதிலும் ஊழல் நடக்கலாம். ஆனால் ஊழலைக் கட்டுப் படுத்துமாறு நிதியுதவிகள் மத்திய அரசிலிருந்து மாநில அரசுக்கும், அங்கிருந்து கீழ்நிலைப் பஞ்சாயத்துகளுக்கும் போகாமல் நேரிடையாக மக்களுக்குப் போய்ச்சேருமாறு செய்யலாம்.

இதே முறையை ஏழை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். நக்சல் தொல்லையால் அவதிப்படும் ஆந்திரப்பகுதிகள், ராஜஸ்தான், ஒரிஸ்ஸா என்று மாவட்ட வாரியாக, மாநில வாரியாக அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் இந்தியா இரத்தக் களறியாக ஆகிவிடும்.

பகுதி 1

அஸ்ஸாமும், பீஹாரும் - 1

இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கப் பல நாச சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பலர் கேள்விப்படுத்தியுள்ளனர், அவர்கள் அனைவரையும் நாச சக்திகள் என்று சொல்ல மாட்டேன்.

ஒரு காலத்தில் 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று கோஷம் எழுப்பப்பட்டது. அப்பொழுது சோஷியலிச முறையில் மத்தில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும் வாக்குகள் கிடைக்கும் வட மாநிலங்களுக்கே அளித்து வந்தது. உத்திரப் பிரதேசத்தில் 80க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்; தமிழகத்திலோ 32 இடங்கள்தான். ஆனால் தாராளமயமாக்கல், மத்தியில் கூட்டாட்சி, தொழில் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் வளர்ச்சி ஆகியவையினால் இன்று தென் மாநிலங்களின் வளர்ச்சி வட மாநிலங்களை விட அதிகமாகவே உள்ளது.

வளர்ச்சியில்லாமை, சரியான அளவில் வேலை வாய்ப்பு இல்லாமை ஆகிய காரணங்கள் சேர்ந்தே பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவை வளரக் காரணமாயிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் போன்ற இடங்களில் ஏற்பட்ட வன்முறைகள், பிரிவினை வாதம் ஆகியவைக்கு மற்ற காரணங்கள் முன்னிலை வகித்தாலும் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் ஆகியவை அடிப்படையாக உள்ளன. அஸ்ஸாமில் இன்னமும் இருக்கும் உல்ஃபா தீவிரவாதம் முழுக்க முழுக்க பொருளாதாரம் சம்பந்தப்பட்டதே.

இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே பெரிய அளவில் பல்வேறு பிரச்சினைகள் வந்துள்ளன. மஹாராஷ்டிரத்தில் 'மண்ணின் மைந்தர்கள்' போராட்டம் அம்மாநிலத்தில், முக்கியமாக மும்பை நகரத்தில், குஜராத் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் சொந்த மாநிலத்தாரின் வேலை வாய்ப்புகளையும், வாழ்க்கையையும் பறித்து விட்டது என்றதனால் எழுந்தது. இது வன்முறையாகிப் பல வெளி மாநிலத்தார் உயிர், உடைமைகளைத் துறக்க நேரிட்டது. இப்பொழுதும் அந்தக் கலவரங்களை உருவாக்கிய சிவசேனை தேவைப்படும் போதெல்லாம் இந்தத் தீவிரவாதத்தை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்று மும்பையில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இப்பிரச்சினை அடிதடியிலோ, உயிரிழப்பிலோ போய் முடிவதில்லை. மேற்கு வங்கத்திலிருந்து (சிவசேனை பங்களாதேஷ் என்கிறது, பாஜபாவும் ஒத்து ஊதுகிறது) வந்து பிழைப்பைத் தேடும் ஏழைகளை ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சிலநாட்களுக்கு முன்னால் சிவசேனை தாண்டவமாடியது. அது இப்பொழுது ஓரளவுக்கு அமுங்கிப் போயிருக்கிறது.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்குமிடையே காவிரிப் பிரச்சினையைத் தொடர்ந்து பெரிய கலவரங்கள் வெடித்து பெங்களூரில் தமிழர்கள் உயிர், உடைமைகளை இழக்க நேரிட்டது. அப்பொழுதும் காவிரியோடு, வேலை வாய்ப்புகள் பறிபோவதும் பெரிதாகக் காட்டப்பட்டது.

உல்ஃபா (ULFA) அஸ்ஸாமில் பங்களாதேஷிலிருந்து பிழைக்க வந்தவர்கள் அஸ்ஸாமியர்களை விட அதிகமாகி தங்கள் வாழ்வுக்கே உலை வைத்து விடுவார்களோ என்று பயந்ததால்தான் ஆரம்பித்தது. அப்பொழுது அஸ்ஸாமிய மாணவர் இயக்கம் (All Assam Student's Union) வலுவடைந்து ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாகி, ஆட்சியைக் கைப்பற்றியது, அப்படி முதல்வரான பிரஃபுல்ல குமார் மொஹந்தா இப்பொழுது பேரே தெரியாமல் இருக்கிறார். உல்ஃபா மட்டும் கணிந்து கொண்டே இருந்தது இப்பொழுது பீஹாரிகளின் மேல் வன்முறையைத் திருப்பியுள்ளது.

பத்து நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரம் இது. இதன் பின்னணி என்ன?

கவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்

கவிதைக்கணம் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரை (கே.எஸ்.சுப்பிரமணியன்) இம்மாதக் கணையாழியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட மற்றுமொரு கட்டுரை (பாரதிராமனுடையது) அப்பொழுதே ராயர் காபி கிளப்பில் போடப்பட்டது.

சுப்பிரமணியனுடைய கட்டுரை வாசிக்கப்பட்ட போது மிகவும் நீண்டு இருந்ததால் அலுத்துப் போனது எனக்கு - அதுவும் அப்பொழுது வைதீஸ்வரன் கவிதைகள் பற்றிய ஒரு பரிச்சயமும் இல்லாததால். ஆனால் இப்பொழுது படிக்கையில் மிகவும் நன்றாக உள்ளது (இதற்கிடையில் நானும் வைதீஸ்வரன் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாங்கிக் கொஞ்சம் புரட்டியும் விட்டேன் என்பதையும் சொல்லிவிட வேண்டும்).

அந்தக் கூட்டம் பற்றிய என் எண்ணங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

ஜெயலலிதா மீதான வழக்குகள்

தினமலர் இன்றைய தாளில் முதல்வர் ஜெயலலிதா மேலுள்ள பத்து வழக்குகள் பற்றியும் அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பதையும் சுருக்கமாக வெளியிட்டுள்ளனர். யூனிகோடில் உலக மக்கள் அனைவரும் தேடிப் பயன்பெறும் விதமாக அங்கிருந்து எடுத்து இங்கு போட்டுள்ளேன் (கொஞ்சம் சந்திப் பிழைகளைக் களைந்து). இதெல்லாம் நாளைக் காலை டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூற இருக்கும் தீர்ப்பு ஏற்படுத்திய பரபரப்பில்.

ஜெயலலிதா மீது பத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன. இவை அனைத்துமே கடந்த 91-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தின் நிகழ்வுகளோடு தொடர்புடையவை.

  1. பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு: கொடைக்கானலில் ஏழு மாடிக் கட்டிடம் கொண்ட ஓட்டலைக் கட்ட ஜெயலலிதா அனுமதி வழங்கினார். அரசு விதிகளை மீறி இதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக வழக்கு குறிப்பிடுகிறது. கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் ஜெயலலிதாவிற்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்தது.

    தற்போதைய நிலை: மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

  2. கலர் "டிவி' வழக்கு: தமிழகப் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வாங்கப்பட்ட 40 ஆயிரம் கலர் டெலிவிஷன் செட் விவகாரத்தில் லஞ்சம் பெறப்பட்டதாகக் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

    தற்போதைய நிலை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

  3. நிலக்கரி இறக்குமதி வழக்கு: சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்தது.

    தற்போதைய நிலை: மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

  4. ஸ்பிக் பங்கு விற்பனை வழக்கு: ரூ.28.18 கோடி சம்பந்தப்பட்ட ஸ்பிக் பங்குகள் விற்பனை தொடர்பான வழக்கை சி.பி.ஐ கையாண்டது.

    தற்போதைய நிலை: இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

  5. அனாமதேயப் பரிசு வழக்கு: வெளிநாட்டில் இருந்து அனாமதேயமாக மூன்று லட்சம் டாலர் பரிசு பெற்றுக் கொண்டதாக வழக்கு. இதனை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

    தற்போதைய நிலை: இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

  6. மீனா அட்வர்டைசிங் வழக்கு: இரண்டு கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விளம்பரம் தொடர்பான வழக்கு.

    தற்போதைய நிலை: விசாரணை செய்து வரும் அமைப்பு இன்னும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை.

  7. கிரானைட் குவாரி முறைகேடு: பல கோடி ரூபாய் தொடர்புள்ள வழக்கு.

    தற்போதைய நிலை: சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

  8. வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு: வருமானத்தை விட அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு.

    தற்போதைய நிலை: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பையடுத்து, கர்நாடக மாநலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதும் வழக்கு விசாரணை தினந்தோறும் நடக்கும்.

  9. டான்சி வழக்கு (இரு வழக்குகள்): உச்சநீதிமன்றத்தில் நாளைக் காலை (திங்கட்கிழமை) தீர்ப்பு.

Saturday, November 22, 2003

குருமூர்த்தி - தாவூத் இப்ராஹிம் பற்றி

குருமூர்த்தியின் 'அகப்படுவாரா நம் நாட்டு பின்லேடன்' பற்றிய கருத்துகள்
துக்ளக் 19 நவம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 59ஆவது பகுதியிலிருந்து

தாவூத் இப்ராஹிம், பின் லேடன் போன்ற ஒரு தீவிரவாதி என்கிறார். இந்தக் கட்டுரையில் அதிகம் விஷயம் ஒன்றுமில்லை. தாவூத் இந்தியாவின் எதிரி மட்டுமல்ல, அமெரிக்காவின் எதிரி என்று சொல்லி 'உலகக் காவலர்' அமெரிக்காவின் துணை கொண்டு தாவூதை எப்படியாவது பிடித்துவிட முடியும் என்று நினைக்கிறார் குருமூர்த்தி. அமெரிக்காவே இப்பொழுது தாவூதைத் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்று அறிவித்து விட்டது. "அமெரிக்காவை எதிர்த்து தாவூத் தப்பிக்க முடியுமா என்பது சந்தேகம்" என்கிறார் குருமூர்த்தி.

ஆனால் உலகக் காவலர் அமெரிக்காவினால் இன்னமும் பின் லேடனையும் பிடிக்க முடியவில்லை, சதாம் ஹுசேனையும் பிடிக்க முடியவில்லை. அமெரிக்காவிற்கு தாவூத் சிறு மீன்தான் இப்பொழுது.

ஆனால் குருமூர்த்தியின் இந்த வரிகள் எனக்குக் கவலையை அளிக்கிறது. "அமெரிக்காவோ, இந்தியாவோ, இஸ்ரேலோ, சோட்டா ராஜனோ தாவூதை தீர்த்துக் கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆக, நம் நாட்டு பின் லேடன் அகப்படுவாரா? அல்லது தீர்த்துக் கட்டப்படுவாரா? என்பது கூடிய விரைவிலேயே தெரிந்துவிடும்." என்னும் வரிகளே இவை. ஜனநாயக நாடுகள் இந்த "தீர்த்துக் கட்டுதலை" ஒரு யுக்தியாக வைத்துக் கொண்டு செயல்படுவது அசிங்கமானது. அதிலும் சொந்தக் காரணங்களுக்காக நடக்கும் சோட்டா ராஜன் - தாவூத் இப்ராஹிம் போன்றவர்களின் பகையையும், தாவூத் இப்ராஹிம் மீது இந்திய அரசின் நிலைமையையும் ஒன்றாக்கிக் கூறுவது இந்திய அரசினை அவமதிப்பது போன்றது. அதிலும் தாவூதைக் கைப்பற்ற முடியாத நம் கையாலாகாத்தனத்தை இப்படி இஸ்ரேல், அமெரிக்கா துணை கொண்டு சரிக்கட்டுவது இன்னமும் கேவலம். நாளை வீரப்பனைப் பிடிக்க இஸ்ரேல், அமெரிக்கா துணையையா நாம் நாடப்போகிறோம்?

முந்தையது: பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம் 1 | 2

தமிழகக் காங்கிரஸின் புதுமுகம்

நேற்று வாசனை வரவேற்க ஒன்றும் கூட்டம் அதிகமில்லை என்று எழுதியிருந்தேன். அது சரியல்ல என்று இன்றைய தினமலரைப் படிக்கும்போது தெரிகிறது.

மேலும், தற்போதைக்கு கோஷ்டிப்பூசல் வெளியே தெரியா வண்ணம் இளங்கோவன் முதல், சோ.பாலகிருஷ்ணன் வரை அனைவரும் பதவியேற்புக்கு வந்திருந்தனர் என்று தெரிகிறது.

தமிழகக் காங்கிரஸ் வலுவானதொரு அணியாக வேண்டும் என்பது என் விருப்பம். ப.சிதம்பரமும் இந்தக் காங்கிரஸ் அணியோடு இணைந்து, திமுக, அஇஅதிமுக வுக்கு மாற்றாக ஒரு சக்தியை உருவாக்க வேண்டும்.

கர்நாடகத்தில் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் இருந்தது. இப்பொழுது கிருஷ்ணா தலைமையில் இந்தக் குழப்பங்கள் ஏதும் இல்லாது வலுவாக இருப்பதால்தான் அந்த மாநிலத்தின் அரசாங்கம் சகிக்கும்படியாக உள்ளது. மேலும் வலுவான மூன்று அணிகள் - காங்கிரஸ், பாஜபா, ஜனதா ஆகியவை - இருப்பதும் அரசினாலும், ஆளுங்கட்சியினாலும் ஜனநாயக நெறிமுறைகளை மீறாது இருப்பதற்கு உதவியாக உள்ளது.

ஆந்திராவில் காங்கிரஸ் வலுவிழந்து போயிருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஒரேயொரு கட்சி - தெலுகு தேசம் - மட்டும் வலுவாக இருந்தும் இப்பொழுதைக்கு ஏதோ சந்திரபாபு நாயுடு நல்ல மனிதராக இருப்பதால் ஜனநாயகப் பண்புகளாவது காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கருணாகரன் போன்ற கிழட்டுப் பதவி ஆசைக்காரர்களின் கோஷ்டிப்பூசலினால், நியாயமான அந்தோணியின் ஆட்சி கேரளத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் "மேலிடம்" இன்னமும் ஏன் கருணாகரனின் அடத்தை சகித்துக் கொண்டிருக்கிறது?

Friday, November 21, 2003

ஜெயலலிதா பதவி விலக வேண்டுமா?

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றக் கூறிய தீர்ப்புக்குப் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து யார் யார் என்ன சொல்கிறார்கள்?

SM கிருஷ்ணா, முதலமைச்சர், கர்நாடகம்: நான் இன்னமும் தீர்ப்பைப் படிக்கவில்லை. அதைப் படித்து விட்டு, தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் ஆகியோருடன் பேசி விட்டுத்தான் கருத்து சொல்ல முடியும். தனி நீதிமன்றம் அமைக்க முடியும்.

கருணாநிதி, மற்றும் இதர எதிர்க்கட்சித் தலைவர்கள்: ஜெயலலிதா பதவி விலக வேண்டும். இனியும் இவர் பதவியில் நீடிப்பது சரியல்ல.

சுப்ரமணியம் சுவாமி: கர்நாடகா என்னைப் 'பிராசிக்யூட்டராக' நியமிக்கட்டும். செலவு மிச்சம். (இந்தாளுக்கு நெசமாலுமே புத்தி ஜாஸ்தி)

ஜெயலலிதா ஒன்றும் 'நேர்மை' போன்ற தவறான கருத்துகளால் பதவி விலகக் கூடியவர் அல்ல. அவரது கட்சியில் இம்மாதிரி விஷயங்களைப் பேசும் அளவிற்கு யாருக்கும் துணிச்சல், புத்திக் கூர்மை மற்றும் நியாய உணர்ச்சிகள் ஆகியவை கிடையாது. இதே இடத்தில் மற்ற எதிர்க்கட்சி ஆசாமிகள் இருந்தாலும் அவர்களும் நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் சொல்லிப் பதவியைத் துறந்தது கிடையாது. அந்தக் காலமெல்லாம் போயிற்று. சட்டப்படி ஜெயலலிதா பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி, நேர்மை ஆகியவை அரசியலில் இப்பொழுதைக்கு இல்லாதபடியால் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு தனி நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கட்டும்.

வாசன் தமிழக காங்கிரஸ் தலைவர்

இன்று GK வாசன் தமிழக காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்கிறார். கத்திப்பாரா சந்திப்பில் நேருவுக்கு மாலையிட வருகிறாராம். அந்தப் பக்கமாகப் போகவேண்டிய வாய்ப்பு வந்தது. தெருவோரத்தில் பலர் நாதசுரம் முழங்கிக் கொண்டிருந்தனர் (அபஸ்வரம்தான்). இரண்டு கலைஞர்கள் முகத்தில் சந்தோஷத்துடன் பொய்க்கால் குதிரை ஆடிக்கொண்டிருந்தனர். மொத்தமாக 25 பேர்கள் இருப்பர். நான்கு காவலர்கள் அந்த (மாபெரும்) கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.

தெருவெங்கும் சுவரொட்டிகள். தினமலரில் இன்று பல விளம்பரங்கள். ஒரே மகிழ்ச்சியும், கும்மாளமும்.

அதற்குள் சோ.பாலகிருஷ்ணனும், EVKS இளங்கோவனும் தங்களது ஆதரவாளர்களுடன் எந்த விதத்தில் கோஷ்டிப் பூசலை அதிகரிக்கலாம் என்று கலந்தாலோசித்துள்ளனராம். இன்றைய 'பதவி ஏற்பு விழா'வினைப் புறக்கணிக்கப் போகிறார்களாம்.

எப்பொழுதுதான் இந்தக் குழு கூட்டி, குழி பறிப்பதை விடுத்து ஒழுங்காக ஒரு தலைமையில் ஒன்றினைந்து போராடப் போகிறார்கள் இவர்கள். புத்தி வரவே வராதா?

Thursday, November 20, 2003

என்.விட்டலின் 'Empowering the deserving'

"Empowering the deserving" என்ற என்.விட்டலின் பேச்சை இங்கே கொடுத்துள்ளேன். இது நானி பால்கிவாலா நினைவுப் பேச்சில் இரண்டாவதாக, சென்னையில் ஜூன் 2003இல் நடைபெற்றது.

என்.விட்டலின் பேச்சு

Indian Liberal Group - இந்திய முற்போக்குக் குழு

இந்த 'இந்திய முற்போக்குக் குழு'வின் சென்னைக் கிளையின் ஆதரவில் இன்று (20 நவம்பர் 2003, வியாழக் கிழமை) மாலை ஆறு மணி அளவில், பாரதீய வித்யா பவன், மைலாப்பூரில் என்.விட்டல் "Corruption mocks at liberalisation" என்னும் தலைப்பில் பேச உள்ளார். சென்னையில் உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் (+ மற்றவர்கள் கூட) இதற்குப் போகலாமே?

நான் போகப் போகிறேன்.

விட்டல், நானி பால்கிவாலா நினைவுப் பேச்சில் பேசியதைக் கேட்க நேர்ந்தது. 'Empowering the deserving' என்னும் தலைப்பில் பேசினார். அந்தப் பேச்சினை வலைப்பதிவில் போட வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், இன்னமும் வேளை வரவில்லை.

Wednesday, November 19, 2003

ஜெயலலிதாவின் மேலுள்ள வழக்குகள்

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் மீதுள்ள வழக்குகளை தமிழக நீதிமன்றங்களிலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றியுள்ளது. அரசுத் தரப்பு வழக்கறிஞரும் கர்நாடக அரசினால் நியமிக்கப்படுவார்.

திமுகவின் அன்பழகன் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா மற்றும் தமிழக அரசின் மீதுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமாக ஆகியுள்ளது.

ஜெயலலிதா பெங்களூரில் அமைக்கப்படும் தனி நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்தால் என்னவாகும்? ஜெயலலிதாவுக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி உண்டா என்று தெரியவில்லை.

Monday, November 17, 2003

புகையிலை இல்லாத 'வர்தான்' பீடி

இன்று தினமலரில் ஒரு சுவையான 'பீடி' விளம்பரம் வந்துள்ளது. இதற்கு முன்னர் இதைப் பார்த்ததில்லை. பக்கத்தில் இருக்கும் சின்னப் படத்தைச் சொடுக்கி சற்றே பெரிதாக்கிய விளம்பரப் படத்தைப் பார்க்கவும்.

"இப்போது உலகுக்குக் கிடைத்தது வர்தான் ஒரு சக்திவாய்ந்த பீடி அது உங்களுக்கு அளித்திடுமே மஜா உங்கள் குடும்பத்தினருக்கு தந்திடுமே நிம்மதி." (நிறுத்தக் குறிகள் ஏதும் விளம்பரத்திலேயே இல்லை.) இவ்வாறு ஆரம்பிக்கும் இந்த விளம்பரம், மேற்கொண்டு இவ்வாறு செல்கிறது.

"அறிமுகம் ''வர்தான்'' - புகையிலை இல்லாத பீடி. இதில் உள்ளது ஓர் புதுமையான கலவை அது தருமே, நீங்கள் தற்போது புகைக்கும் பீடி தரும் அதே தம்ம அதனால் இப்போது ஆரோக்கியம் பற்றி கவலையே இல்லை, வேறெந்த போதைப் பொருட்களும் இல்லை. இப்போது சொல்லுங்கள் இது நிஜமாகவே நல்ல வர்தான் (வரம்) தானே?" (அச்சுப்பிழை, இலக்கணப் பிழைகள் மற்றும் நிறுத்தக்குறிப் பிழைகள் எல்லாம் விளம்பரத்திலே வந்தவையே, என்னுடையதல்ல)

இப்படிச் சொன்னதற்குப் பிறகு வந்த வரிதான் என் ஆர்வத்தை மிகவும் தூண்டியது. அது "உலக சுகாதார நிறுவனம் மூலம் நிரூபணமான புகையிலை இல்லாத இயற்கைக் கலவை" என்னும் வரி.

உடனே உலக சுகாதார நிறுவனத்தின் இணைய தலம் சென்று தேடிப் பார்த்தேன். அங்கு இதுபற்றி எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால் கூகிள் எனக்குப் பல சுட்டிகளைக் கொடுத்தது.

டால்மியா கன்சூமர் கேர் என்னும் நிறுவனம் இந்தப் பொருளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அவர்களது இணைய தளத்தில் தேடியதில் WHO விலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாக எந்தவொரு சான்றிதழும் இல்லை. இது மட்டும்தான் கிடைத்தது: "The formulation has been tested for total absence of nicotine and tobacco specific nitrosoamines by the leading Institute in India and the world renowned Labs in USA.(sic)" இதில் "leading Institute in India" எது? "the world renowned Labs in USA" எவை என்று எந்தத் தகவலும் இல்லை. இதுபற்றி WHO வுக்கு எழுதி மேற்கொண்டு தகவல் கேட்டிருக்கிறேன். பதில் வருமா பார்க்கலாம்.

[USSA என்று தவறாகக் கொடுத்திருந்ததை மாற்றி விட்டேன்]

படித்த இரு கதைகள்

சனி, ஞாயிறு சமயத்தில் இரு கதைகளைப் படித்து முடித்தேன். இரண்டும் தேடித் தேடிக் களைத்துப் போனது. பாராவின் புண்ணியத்தில் கிடைத்தது. ஜி.நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' - குறுநாவல், அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' நாவல்.

இரண்டைப் பற்றியும் விரிவாகப் பின்னர் எழுதுகிறேன். கரைந்த நிழல்கள் அருமையான கதை. இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.

இது போல் விளக்கமான விமரிசனம் நமது வாசக அனுபவத்தைப் பெரிதும் விரிவுபடுத்த உதவுகிறது.

எப்படியாவது தேடிப்பிடித்துப் படித்து விடுங்கள்.

மாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்

கருத்துப்பரிமாறல் பகுதி இணைத்தபின் அதுவே வலைப்பதிவின் திசையை கொஞ்சம் இழுத்துச் செல்லுமோ என்று தோன்றுகிறது. இதனை நான் வெங்கட்டின் வலைக்குறிப்பில் பார்த்திருக்கிறேன்.

ரவியா மாலனின் ஜெ-ஜெ சில குறிப்புகள் கட்டுரையைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டிருந்தார். வெங்கட் இதுபற்றி தனது வலைக்குறிப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். வெங்கட்டின் கருத்துகளுக்குப் பெரும்பாலும் உடன்படுகிறேன்.

இந்தக் கட்டுரை மூலம் மாலன் ஜெயமோகனுக்கு அநீதி இழைத்துள்ளார் என்றே சொல்லுவேன். மாலன் இரு 'ஜெ' க்களுக்கும் ஒற்றுமைகளாகக் காண்பிப்பது: (அ) ஆணவம் (ஆ) தன்னைப் பற்றிய மிகையான எண்ணம் (இ) இந்துத்வாவை நோக்கிச் சாய்ந்த ஆர்.எஸ்.எஸ் மனோபாவம் (ஈ) ஈழத்தமிழர் மீதுள்ள உள்ளார்ந்த கசப்பு (உ) மார்க்சியம், பெரியாரியம் மீது எதிர்ப்புணர்வு (ஊ) அரைகுறை வரலாற்று உணர்வு.

1. ஜெயலலிதாவின் மார்க்சியம், பெரியாரியம் பற்றிய கருத்துகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு அதன் மீதெல்லாம் கருத்து சொல்ல விருப்பமா என்றும் தெரியவில்லை. மிஞ்சிப் போனால் பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் மீது ஜெயலலிதா புகழாரம்தான் சூட்டுவார் (அப்பொழுதுதான் ஓட்டுகள் கிடைக்கும்). ஆனால் ஜெயமோகன் அவைகளைப் பற்றிய தனது கருத்துகளை பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார். மார்க்சியம், பெரியாரியம் மீது எதிர்ப்புணர்வு இருப்பது தவறு என்பது போலச் சொல்கிறார் மாலன். அத்துடன் என்னால் ஒத்துப் போக முடியாது.

2. புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியத்தில் உள்ள குறைபாடுகளாக ஒருசிலவற்றைக் காண்கிறார் ஜெயமோகன். அதில் ஒரு இலக்கிய விமரிகராகவே நடந்து கொண்டுள்ளார் ஜெயமோகன். கணையாழி நேர்காணலில் "இவ்வளவு போருக்குப் பின்னரும், பிரச்சினைகளுக்குப் பின்னரும் அவர்களின் இலக்கிய உலகம் தட்டையாகத்தான் இருக்கிறது" என்று சொன்னார் என்பதற்காக ஜெயமோகனுக்கு ஈழத்தமிழர் மீது கசப்புணர்வு என்று சொல்வது நியாயமாகாது. எனக்கு 'கிம்பெல் தி ஃபூல்' பிடிக்கவில்லை என்று (ஒரு பேச்சுக்கு) சொன்னால் நான் நாஜியாகி விடுவேனா? ஜெயலலிதாவை ஈழத்தமிழருக்கு எதிரானவராகக் காட்டுவதும் நியாயமில்லாதது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்றால் ஈழத்தமிழருக்கு எதிரானவராகி விடுவாரா?

3. அரைகுறை வரலாற்று உணர்வு. ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு (உணர்வு?) பற்றி நம்மால் இனங்காண முடியாது அவர் அதிகம் எழுதியதில்லை, பேசியதில்லை. எப்படி இவ்விருவரையும் ஒப்பிடுகிறார் என்றே தெரியவில்லை.

4. இந்துத்வா சார்பு: ஜெயலலிதா இதனைத் தன் பல செய்கைகளில் காண்பித்து விட்டார். ஆனால் ஜெயமோகனைப் பற்றி அவரை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் கொண்டுவரும் குற்றச்சாட்டு இந்த ஆர்.எஸ்.எஸ் வைக்கோல் பொம்மையாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே? அவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தால் என்ன? அசோகமித்திரன் கூட ஆர்.எஸ்.எஸ் நலவிரும்பி என்பது போல அ.மார்க்ஸ் எழுதியுள்ளார். அப்துல் ரகுமானும் அதையே நினைக்கலாம் (கலைஞருக்கு வணக்கம் சொல்லாமல் நேரடியாக இளையபாரதியின் புத்தகங்களைப் பற்றி பேச வந்துவிட்டார் என்று அமுதசுரபியில் காய்கிறார்).

5. ஆகக் கடைசியில் ஆணவம், தன்னைப் பற்றிய மிகையான எண்ணம் ஆகியனவே மிஞ்சுகிறது. அது பலருக்கும் அப்படியே. கிட்டத்தட்ட நம்நாட்டு மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் ஆணவமும், தன்ன்னைப் பற்றிய மிகையான எண்ணமுமே. (மீதி பேருக்குத் தங்களைப் பற்றிய உயர்வான எண்ணத்தைச் சிந்தனை செய்யுமளவிற்குத் திறன் இல்லை.)

விமரிசனப் பகுதி

கிட்டத்தட்ட வலைப்பதிய ஆரம்பித்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஹாலோஸ்கேன் என்னுமிடத்திலிருந்து விமரிசனப் பகுதியை இணைத்துள்ளேன். Blogger/Blogspot.com இந்தப் பகுதியை ஆரம்பித்தவுடன் அதற்கு மாறிவிடுவேன். ஒருவேளை பின்னர் blogspot ஐ விட்டுவிட்டு சொந்தத் தளத்திற்குப் போவதா என்பதையும் யோசிக்க வேண்டும்.

Sunday, November 16, 2003

முந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்

துக்ளக் 19/11/2003 இதழில் இண்டஸ்டிரியல் எகானமிஸ்டு என்னும் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் மேற்கண்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதன் இரண்டாம் மற்றும் நிறைவு பகுதி அடுத்த இதழில் வரும். இதில் எப்படி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வரான பின்னர் ஆந்திரப்பிரதேசத்தை தமிழகத்தோடு ஒப்பிடுகையில் முன்னுக்குக் கொண்டுவந்துள்ளார் என்று விளக்குகிறார்.

முக்கியமாக மூன்று துறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1995இல் ஆந்திரா தமிழகத்தை விட இத்துறைகளில் பின்தங்கியிருந்ததாம். இப்பொழுது வெகு முன்னே.

ஆந்திரம்தமிழ்நாடு
2002-03 ஆண்டுக்கான மொத்த வருமானம் (கோடி ரூபாய்கள்)35,35330,188
2002-03 திட்ட முதலீடு (கோடி ரூபாய்கள்)10,1005,750
மின்சார உற்பத்தித் திறன் (31 ஜனவரி 2003 அன்று, மெகாவாட்டில்)9,4679,291


1966-67 ஆண்டிலிருந்து 2001-02 வரையில் ஆந்திர மாநிலத்தின் உணவு உற்பத்தி 77 லட்சம் டன்களிலிருந்து 148 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டில் இதுவே 58 லட்சம் டன்களிலிருந்து 85 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. (அதாவது ஆந்திரா 92% அதிகரித்துள்ளது, தமிழ் நாடு வெறும் 46.5% தான். பஞ்சாப் இதே நேரத்தில் 490% அதிகரித்துள்ளது)

மொத்தத்தில், மற்றவர்கள் உழைக்கும்போது தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வீண்சண்டை போட்டுக் கொண்டு தங்கள் வயிற்றை மட்டும் வளர்த்துக் கொண்டுள்ளனர். அண்ணாதுரை முதல் ஆரம்பித்து ஜெயலலிதா வரையிலான அத்தனை முதலமைச்சர்களும் தமிழகத்துக்கு சரியான தலைமையைக் கொடுக்கவில்லை. முன்னணியில் இருந்த ஒரு மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.

இந்தக் கட்டுரை இணையத்தில் இல்லை. ஆனால் இதே ஆசிரியர் எழுதியுள்ள மற்றுமொரு கட்டுரை 'தி ஹிந்து'வில் முன்னர் வந்துள்ளது.

இனியும் வெட்டிச் சண்டைகளை விடுத்து, பழிவாங்கலை மறந்து, ஜெயலலிதா வளர்ச்சிப் பணிகளில் மாநிலத்தைச் செலுத்த வேண்டும்.

ப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை

ப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை
கல்கி 16/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 4

போன இதழில் எப்படி அரசியல், குற்றம் புரிபவர்களினால் சீரழிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், குடிமக்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றியும் பேசியிருந்தார். இந்த இதழில் வாக்கு வங்கிகள் பற்றி மீண்டும் பேசுகிறார். அவரது கருத்துகள்:

* மக்கள் ஒரு கட்சிக்கு 'இது எம்.ஜி.ஆர் கட்சி, இது இந்திரா காந்தி கட்சி' என்பதனால் வாக்களிக்கிறார்கள், இன்னம் சிலர் 'இது எங்கள் சாதிக்கு/மதத்துக்கு உகந்த கட்சி' என்று வாக்களிக்கின்றனர். பொருளாதார வறுமைக்கு ஆளான பலர் 'பணம், பொருள், உணவு' ஆகியவற்றுக்காக வாக்களிக்கின்றனர்.

* பொருளாதாரப் பிரச்சினை பற்றி அரசியல் தலைவர்களுக்கு இடையே அறிவுபூர்வமான விவாதங்கள் நிகழ்வதே இல்லை. வேட்பாளர், வாக்காளர்களுக்கு இடையேயும் அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே, பொருளாதாரப் பிரச்சினை பற்றியும் தீவிரமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

* தேர்தலுக்குத் தேர்தல் நம்முடைய நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களின் தரம் குறைந்து கொண்டே வருகிறது.

* இதிலிருந்து எப்படி மீள்வது? ஐந்து வழிமுறைகளைக் குறிப்பிடுகிறார்:

  1. எல்லோரும் வாக்களிக்கப் போக வேண்டும்.
  2. ஒரு தொகுதிக்கான வேட்பாளர்களில், கட்சி பற்றி கவலைப்படாமல், உள்ளதிலேயே சிறந்தவருக்கு வாக்களிக்க வேண்டும்.
  3. எக்கச்சக்கமாக செலவு செய்யாமல், விதிமுறைகளுக்குள்ளாக செலவு செய்பவருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
  4. ஒருவர் எந்த வகையிலாவது குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் (குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் கூட) அவருக்கு வாக்களிக்கக் கூடாது.
  5. தேர்தல் விதிகளை மாற்ற விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் - இந்த விதிமாற்றமானது ஒருவரது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கால வரையறுப்பது.

எல்லாம் நல்ல கருத்துகள்தான்.

கல்கி 9/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 3

புதிய தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர்

தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனராக சங்கர நாராயணன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பொன்னவைக்கோ வேலையிலிருந்து விலகியபின் (விலக்கப்பட்ட பின்) வந்திருப்பவர்.

தினமலர் செய்தி ஆன்லைனில் இல்லை. அச்சுத்தாளிலிருந்து இங்கு உங்களுக்காகவே:

"இவர் அண்ணா பல்கலைக்கழக ராமானுஜன் கணினி மையத்தின் இயக்குனர், தகவல் மற்றும் தொலை தொடர்பு புலமைத் துறையின் தலைவர், தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சிறப்பு அலுவலர், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உறுப்பினர் செயலர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். புதிய இயக்குனராக பதவியேற்கும் முன்பு கிரசன்ட் பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் தலைவராக இருந்தார்."

"இவர் 66ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ., பட்டம் பெற்றார். கிண்டி பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்சி., (பொறியியல்) பட்டத்தையும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பிஎச்.டி., பட்டத்தையும் பெற்றார். பெங்களூரில் உள்ள 'இஸ்ரோ' வட்டார தொலை உணர்வு சேவை மையத்தில் மென்பொருள் தொகுப்புகளை சோதித்தல் மற்றும் ஏற்புடையதாக்கலில் மாற்றுத் தலைவராக பணிபுரிந்துள்ளார்."

"கடந்த 84ஆம் ஆண்டு தொழில் கல்வி நுழைவுத் தேர்வின் தொடக்க காலத்தில் இருந்து அதனை நடத்தும் பொறுப்பை வகித்தார். பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளராக பணிபுரிந்துள்ளார். இவர் தலைமையின் கீழான குழு அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய மென்பொருள் தொகுப்பே 97ஆம் ஆண்டு வரை கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கைக்கு பயன்பட்டது."

"தமிழக அரசின் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் தேர்வு வல்லுனர் குழுவில் ஓர் உறுப்பினராக உள்ளார். 78க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார். இவர் நெல்லை மாவட்டம் பரமேசுவரபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர்."

(நன்றி: தினமலர், 15 நவம்பர் 2003)

தி ஹிந்துவில் இது பற்றி செய்தி எதுவும் வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். என் தவறு. நான்தான் சரியாகக் கவனிக்கவில்லை. 'Briefly' பகுதியில் வந்திருக்கிறது (புகைப்படத்துடன்). ஆன்லைன் சுட்டி கண்டுபிடிக்க முடியவில்லை. Brief செய்திகளெல்லாம் ஆன்லைனில் வருவதில்லையோ?

Saturday, November 15, 2003

இலக்கியப்பீடம் கட்டுரை

எனது "வலையில் விழலாம் வாங்க!" கட்டுரை இலக்கியப்பீடம் என்னும் இதழில் வெளியாகியுள்ளது.

இந்தப் பத்திரிகை இணையச் சிறப்பிதழாக இந்த இதழையும், இதற்கடுத்த இதழையும் வெளியிடுகிறது.

குருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்' - 2

இந்தக் கட்டுரை பற்றிய என் கருத்து:

1. இஸ்லாமிய நாடுகள் அனைத்துக்கும் எண்ணெய் வளம் கிடையாது. அப்படி எண்ணெய் வளம் இருக்கும் நாடுகளில் மட்டுமே அமெரிக்கா புகுந்து குழப்பம் விளைவிக்கிறது. [முன்னர் ஆஃப்கானிஸ்தானத்தில் ரஷ்யாவிற்கு எதிராக இருப்பதற்காகக் குழப்பம் விளைவித்தது.] அதைப்பற்றிய ஒரு கண்டனத்தையும் குருமூர்த்தி முன்வைக்கவில்லை. அமெரிக்கா செய்வது அனைத்தும் சரி என்றும், அதனைப் புகழுமாறு எவ்வாறு பல்வேறு 'அர்த்த சாத்திர' சாம, தான, பேத, தண்ட முறைப்படி ஒவ்வொரு எண்ணெய் வள முஸ்லிம் நாட்டையும் அமெரிக்கா தன் கைக்குள் போட்டு வைத்துள்ளது என்று விவரிக்கிறார். முக்கியமாக அமெரிக்கா இராக்கில் புகுந்து இப்பொழுது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்.

2. மாறுபட்ட எரிபொருள்கள் என்னவோ ஒரேயடியாக எண்ணெயின் மீதுள்ள சார்பைக் குறைத்து விடும் என்று எண்ணுவது மிகவும் ஆபத்தானது. அப்படித்தான் 'அணுப்பிளவு' மற்றும் 'அணுக்கூடல்' மூலமாக மின்சாரம் தயாரிப்பது பற்றிய ஒரு கருத்து நிலவி வந்தது. இன்று உலகில் ஓரிரண்டு நாடுகளில்தான் இவ்வகையால் தேவையான அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது (உம்: ஃபிரான்ஸ்). அதுபோலவே சூரிய ஒளியினால் ஆன சக்தி போன்றவையும். இவற்றிலிருந்து உருப்படியான வகையில் சக்தியைப் பெறுவது, அதனை மின்சாரம் போன்ற சக்திக்கு மாற்றுவது ஆகியவை வெகு தொலைவில் உள்ளது. அதுவரை உலக நாடுகள் எண்ணெய் மீதான் சார்பிலிருந்து விடுபட முடியாது. ஆனால் இதனை அமெரிக்கா தன் பலத்தால், குயுக்தியால் மற்றும் குழப்பம் விளைவிப்பதால் தனக்கு சாதகமாக எண்ணெய் வள நாடுகளை வைத்திருப்பது உலக நாடுகளுக்குக் கெடுதலையே விளைவிக்கும்.

3. குருமூர்த்தியின் அரபு நாடுகளுக்கான அறிவுரை சற்றே சிரிப்பையும் எரிச்சலையும் வரவழைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர இந்து அடிப்படைவாதக் குழுக்களின் முஸ்லிம் எதிர்ப்பு நிலையைத்தான் நம்மால் அதில் பார்க்க முடிகிறது. ஏதோ இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும், அதுவும் அவர்களது பிறமதங்களின் மீதான நிலைப்பாடுகளினால்தான் இவற்றைச் செய்வதாகவும் நினைப்பது, உண்மைக்கு மிகவும் புறம்பானது. 'நீ மரியாதையாக உன் நினைப்பை மாற்றிக்கொள், இல்லாவிட்டால் உம்மாச்சி உன்னிடமிருந்து எண்ணெய் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்' என்பது போல பூச்சாண்டி காட்டுகிறார்.

எண்ணெய் வள இஸ்லாமிய நாடுகளுக்குள் பல குழப்பங்கள் உள்ளன. சவுதி அரேபியா தற்போது தீவிரவாதத்தின் பலனை அனுபவிக்க ஆரம்பித்து விட்டது. அங்கு குடியரசு ஆட்சி கிடையாது. மக்களுக்கான உரிமைகள் மிகவும் குறைவு. சுற்றியுள்ள மற்ற எண்ணெய் வள நாடுகளில் முக்கியமான இராக் தற்பொழுது கடும் குழப்பத்தில் மாட்டியுள்ளது - அத்தனையும் சதாம் ஹுசேன் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியினால் ஆன குழப்பம். புதை சேறு. இதிலிருந்து அவர்களுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும் என்று தெரியவில்லை. குவைத், சவுதியைப் போன்று சர்வாதிகார ஆட்சியில் இருக்கும் அமெரிக்கக் கைக்கூலி நாடு. அங்கும் குழப்பம் வர நாள் அதிகம் இல்லை. பல முன்னாள் சோவியத்தில் இருந்த நாடுகள் (அசர்பைஜான், கசக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் போன்றவை) எண்ணெய் வளங்களைக் கைப்பற்றிக் கொள்ள ரஷ்யாவும், அமெரிக்காவும் பெரும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. ஆஃப்கானிஸ்தானின் குழப்பங்கள் அத்தனைக்கும் காரணம் இந்த முன்னாள் சோவியத் நாடுகளின் எண்ணெய் வளங்களே என்ற உண்மையும் பலரால் வெளியிடப்பட்டுள்ளது.

எனக்கென்னவோ இந்த எண்ணெய் வளமே 'கடவுள்' கொடுத்த தண்டனை என்று தோன்றுகிறது. அரபு நாடுகள் எப்பொழுது குடியாட்சி முறையை மேற்கொள்கிறதோ, எப்பொழுது தனிமனித சுதந்திரத்துக்கு வழி கொடுக்கிறதோ, அப்பொழுதுதான் அவர்களுக்கும், உலகுக்கும் நிம்மதி. அவர்களது மத நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதால் மட்டும் எந்த விதமான நன்மையும் அவர்களுக்கோ, பிற நாடுகளுக்கோ ஏற்படப் போவதில்லை.

====

முந்தையது: கிராமப்பஞ்சாயத்து 1 | 2 | 3 &       மிருகபலி

குருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்' - 1

குருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்' பற்றிய கருத்துகள்
துக்ளக் 12 நவம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 58ஆவது பகுதியிலிருந்து

சுருக்கம்: பெட்ரோல் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்று முன்னேறிய நாடுகள், முக்கியமாக அமெரிக்க வல்லரசு, எவ்வாறு அதை பெரும் அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளோடு உறவு வைத்திருக்கின்றனர் என்று எழுதுகிறார். 1970இல் எண்ணெய் வள நாடுகள் அமெரிக்காவிற்கு பெட்ரோல் தர மாட்டோம் என்று மிரட்டியதையும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா எவ்வாறு சாம, தான, பேத, தண்டத்தைப் பிரயோகித்து இந்த எண்ணெய் வள நாடுகளைத் தன் கையில் போட்டு வைத்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார். கட்டுரையை முடிக்கும்போது இவ்வாறு சொல்கிறார்:

"பெட்ரோலுக்கு மாற்று வந்தால் அரபு நாடுகளின் செல்வம் மங்கும். அரபு நாடுகளின் செல்வம் மங்கினால் இஸ்லாமிய தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு கிடைக்கும் உந்துதல் குறையும். ஆக, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இறுதியான முடிவு பெட்ரோலுக்கு இருக்கும் பண, அரசியல், மத சம்பந்தப்பட்ட அதிகார பலம் குறைவதுதான். இப்படி போகிறது அமெரிக்காவின் சிந்தனை. இந்த முயற்சியில்யௌலக நாடுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் பக்கம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது."

மேலும், இந்தக் காரணத்தினால்தான் அமெரிக்கா "பெட்ரோலுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (Hydrogen fuel cells) மற்றும் சோலார் எரிபொருள் செல்கள் (Solar fuel cells), தவிர bio-fuel என்கிற இயற்கை தாவர எரிபொருள்கள் மிக தீவிரமாகவும் விரைவாகவும், மலிவாகவும், வேண்டிய அளவிலும் கிடைக்க ஆய்வுகள், பரிசோதனைகள், முயற்சிகள்" ஆகியவற்றை பல கோடி ரூபாய்கள் செலவில் நடத்தி வருகிறது என்றும் சொல்கிறார்.

கடைசியாக இஸ்லாமிய அரபு நாடுகளுக்கு அறிவுரையும் கூறுகிறார்:

"இந்த [மேற்கூறிய பெட்ரோலுக்கு இணையான மாறுபட்ட எரிபொருள்களுக்கான] முயற்சிக்கு இப்போதுள்ள முக்கிய உந்துதல், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்கிற எண்ணம்தான். இதை இஸ்லாமிய நாடுகளும், அந்த மதத் தலைவர்களும், முஸ்லிம் அறிவு ஜீவிகளும் உணர வேண்டும். இறைவன் அளித்த செல்வத்தை, பலத்தை துஷ்பிரயோகம் செய்தால், அதற்கு மாற்றை இறைவனே அளிப்பான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இஸ்லாமிய மதத்தின் தீவிரவாதத்தை அவர்கள் கூட்டு முயற்சியால் குறைக்க வேண்டும். மற்ற மதங்கள் பொய்யானவை, அந்த மதத்தவர்கள் காஃபீர்கள் என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும். அப்போதுதான் தீவிரவாதமும், பயங்கரவாதமும் இஸ்லாமிய மதத்திலிருந்து விலகும். அது அவர்களுக்கும் நல்லது; உலகுக்கும் நல்லது."

Friday, November 14, 2003

தி ஹிந்து கருத்துப் பக்கம்

இன்னும் மூன்று வாரங்களுக்கு பத்திரிக்கைக்காரர்களின் கைது பற்றி பிறரது கருத்துகள் தவிர அதிகாரபூர்வமாக ஒன்றும் நடக்காது. மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்கப் போகிறது. ஆனால் அதுவரையில் அரசியல்வாதிகள் கூச்சலிட, மற்ற அறிஞர்கள் (intellectuals) சட்டமன்றத்தின் அதிகாரங்கள் வரம்புக்குள் இருக்குமாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று பேசத் தொடங்கி விட்டனர். இதில் வியப்பு என்னவென்றால், 'இல்லை, சட்டமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்க வேண்டும்' என்று எதிர்க்குரலிட யாருமே இல்லை. அப்படியும் இதுநாள் வரையில் எப்படி சட்டமன்றங்களின் - முக்கியமாக தமிழக சட்டமன்றத்தின் - நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ... நாளை இப்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக ஒரு சட்டத்தை இயற்றி எந்த வகையில் 'சட்டமன்ற உரிமை மீறல்' பற்றிய நடவடிக்கைகள் இருக்கும் என்று செய்வார்களா?

இன்று தி ஹிந்துவில் வந்திருக்கும் இரு கட்டுரைகள் மிகவும் ஆழமானவை, அழகானவை. படிக்க வேண்டியவை.
1. Privilege unlimited, ராஜீவ் தவான்
2. Need for reformulating the law, T.R. அந்த்யார்ஜுனா

ராஜீவ் தவான் கட்டுரையிலிருந்து அழகானதொரு மேற்கோள்: "தங்களை ஆட்சி செய்யும் சட்டமன்றங்களை, இந்தியர்கள் மற்றும் இந்திய செய்திப்பத்திரிக்கைகள் விமரிசனம் செய்யாது, வேறு யார்தான் செய்ய முடியும்?" ஆக இந்தியர்களுக்கு இந்த உரிமை 'சட்டமன்ற உரிமை மீறல்' என்றவகையில் மறுக்கப்படும்போது எப்படி அதனை நாம் பொறுத்துக் கொள்வது?

வரம்பு மீறியே ஒருவர் சட்டமன்றத்தை, அதன் அவைத்தலைவரை, உறுப்பினர்களை, அமைச்சர்களை (முதலமைச்சர் சேர்த்து) விமரிசித்தாலும், தகாத வார்த்தைகளால் திட்டினாலும், உள்நோக்கோடு அவையின் கௌரவத்தைக் குறைக்குமாறு தாக்கினாலும், அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் மூலம் தண்டனை தருவது சிறிது கூட ஒத்துக் கொள்ள முடியாதது. இப்படிச் செய்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் கூட, அவை நடவடிக்கையைத் தடுக்காது, வாயால், எழுத்தால் அவர் இதனைச் செய்தால், அவரைத் தண்டிக்கும் அதிகாரம் கூட சட்டமன்றத்துக்கு இருக்கக் கூடாது. வேண்டுமானால் அவரை சட்டமன்றத்திற்குள் வரவிடாது தண்டனை அளிக்கலாம், ஆனால் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டமன்றத்துக்கு அதிகாரம் இருக்கவே கூடாது.

நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதற்கான உரிமைகள் இருக்க வேண்டும். இந்தியக் குடியுரிமைச் சட்டம் இதற்கான வழிமுறைகளைக் கொடுக்கவில்லையாயின், அவைகளைக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் (constitutional amendment) மூலம் கொண்டுவர வேண்டும்.

முந்தையது
தி ஹிந்துவின் முழு கவரேஜ்

பெங்களூர் ஒருநாள் போட்டி

நேற்றைக்கு முந்தைய நாள் இந்திய-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியைப் பார்க்க பெங்களூர் சென்றிருந்தேன். இந்திய அணியின் பந்துவீச்சு கவலைக்கிடமாக உள்ளது. அன்றைய போட்டியில் முரளி கார்த்திக் ஒருவர்தான் ஓரளவுக்குத் திறமையுடன் பந்து வீசினார். நேஹ்ரா, ஜாகீர் கான் இருவரும் மிகவும் தாறுமாறாக, ஓர் இலக்கின்றி வீசினர்.

ஆடம் கில்கிறிஸ்ட், மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் மிக அருமையாக ஆடினர். கில்கிறிஸ்ட் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடக்கூடியவர்; ஆடினார். பாண்டிங் ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினார். கார்த்திக்கின் பந்து வீச்சில் திராவிட் ஒரு ஸ்டம்பிங்கைச் செய்திருந்தால் அவரை ஆட்டமிழக்க வைத்திருக்கலாம். பாண்டிங் தான் சந்தித்த முதல் ஐம்பது பந்துகளில் கிட்டத்தட்ட 25 ஓட்டங்களே எடுத்திருந்தார். ஆனால் அடுத்த ஐம்பது பந்துகளில் விளாசு விளாசி 75 ஓட்டங்கள் குவித்து 99 பந்துகளிலேயே சதத்தை எட்டினார் என்று ஞாபகம். இதில் ஆறு 'ஆறுகளும்' அடக்கம்.

சேவாக் துவக்கப் பந்து வீச்சாளர்களின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெகுவாகத் திணறினார். பிராட் வில்லியம்ஸ் மற்றும் மைக்கேல் காஸ்பரோவிச் இருவரும் கிட்டத்தட்ட மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார்கள். சேவாக்கினால் தனது மட்டையை பந்தின் அருகில் சரியாகக் கொண்டுபோகவே முடியவில்லை. பின்னர் வேகம் குறைவாக வீசும் பிக்கெல், சைமாண்ட்ஸ், ஹார்வே போன்றவர்கள் வந்த பின்னர்தான் சேவாக்கினால் ஓட்டங்கள் பெற முடிந்தது. அவரது 'ஸ்கொயர் கட்' அடியை அடிக்கவே முடிந்தது. ஆனால் சச்சின் டெண்டுல்கர், வில்லியம்ஸை நன்கு அடித்து ஆடினார். சேவாக், டெண்டுல்கர் இருவரையும் ஒப்பிட்டுப் பேசுபவர்கள் இதை முக்கியமாக கவனிக்க வேண்டும். திறமை (மற்றும் வேகம்) குறைவாக உள்ள பந்து வீச்சாளர்களை சந்திக்கும் போது மட்டும்தான் சேவாக்கினால், டெண்டுல்கர் அளவிற்கு அடிக்க முடிகிறது.

நிற்க. இந்தியா படுதோல்வி அடைந்தது. இதைப் பற்றி இங்கு, இப்பொழுது பேசிப் பிரயோசனமில்லை.

ஆட்டம் பார்க்க வந்தவர்களைப் பற்றி சிறிது சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒருநாள் போட்டி ஆட்டத்தைப் பார்க்க வருபவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்க வருபவர்கள் போலத் தெரிவதில்லை. ஒரு திருவிழாவிற்கு வருவது போலத்தான் வருகின்றனர். கோமாளித்தனமான உடைகள் பரவாயில்லை, அவ்வப்போது பன்றியின் குரல்வளையை அறுக்கும்போது எழும் குரலை எழுப்பினாலும் பரவாயில்லை - மன்னித்து விடலாம். கேவலமாக 'மெக்சிகன் அலை' எழுப்பினாலும் பரவாயில்லை, விட்டு விடுவோம். கொடுமையிலும் கொடுமை, ஒரு இந்திய மட்டையாளர் பந்தை உள்வட்டத்திற்கு சற்று வெளியே தட்டிவிட்டாலும் போதும், நமக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேரும் வீரமுழக்கம் இட்டுக்கொண்டு எழுந்து நின்று ஏதோ பந்து எல்லைக்கோட்டைத் தாண்டிப் போய்விட்டது என்பது போல் நடந்து கொள்வதும், அந்தப் பந்தைப் பொறுமையாக எதிரணிக்காரர் பிடித்து எறிந்து ஒரு ஓட்டம் மட்டும் நம் அணிக்குக் கிடைக்கும் போது அத்தனை உற்சாகமும் போய் கீழே உட்காரும் போதும், நமக்கு வெறுப்பைத் தவிர வேறெதுவும் வருவதில்லை. மிக அருமையாகப் பந்து வீசிக்கொண்டிருப்பார் எதிரணிக்காரர். பின்னாலிருந்து ஒரு 8 வயதுச் சிறுவன் சேவாக் 'ஆறு' அடிக்க வேண்டும் என்று சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எங்கே, பந்து பேட்டில் பட்டால் போதாதா என்றவாறு சேவாக் தடவிக் கொண்டிருப்பார் அங்கே.

நல்ல ஆட்டத்தை ரசிக்க வேண்டுமென்றால், பார்வையாளர்கள் முதலில் எழுந்து நின்று குதிக்கக் கூடாது. பந்து எல்லைக் கோட்டைக் கடந்தபின் குதிக்கட்டும், கரகோஷம் முதல் 'பீப்பீ' ஊதுவது வரை எல்லாம் செய்யட்டும். பந்து வீச்சாளர் அடுத்த பந்து போடத் தொடங்கும்போது ஒழுங்காக உட்கார வேண்டும். பின்னால் உட்கார்ந்திருப்பவரும் அதே காசு கொடுத்துதான் ஆட்டத்தைப் பார்க்க வந்துள்ளார்.

ஆட்டத்தை நேரில் போய் பார்ப்பதற்கும், தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலில் இந்திய அரங்கங்களில் (சென்னை நீங்கலாக) 'மறுகாட்சி' (replay) காண்பிக்கச் செய்யும் வசதிகள் கிடையாது. ஒரு விக்கெட்டையோ, நான்கு/ஆறையோ கோட்டை விட்டால் அவ்வளவுதான். ஆனால் அரங்கத்தில் இருக்கும்போது அத்தனை தடுப்பாளர்களும் கண்ணுக்குத் தெரிவார்கள். தடுப்பு வியூகம் எவ்வாறு மாறுகிறது, எங்கெல்லாம் தடுப்பு வியூகத்தில் ஓட்டைகள் இருக்கின்றன, அதனை எப்படி மட்டையாளர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை ரசிக்க அரங்கு சென்றால் மட்டுமே முடியும்.

ஆனால் இதையெல்லாம் மக்கள் பார்த்து வியந்ததாகத் தெரியவில்லை. தொண்டை கிழியக் கத்தி விட்டு, இந்தியாவின் தோல்வி நிச்சயமானவுடனே (யுவ்ராஜ் சிங் ஆட்டமிழந்ததும்) அனைவரும் கிளம்பி விட்டனர்.

Tuesday, November 11, 2003

பத்திரிக்கையாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றத் தடை

கீழ்க்கண்ட செய்தி தினமலரில் வெளியாகியுள்ளது.

முட்டாள் என்று திட்டினால் அவதூறா? சால்வே கதையால் பரபரப்பான நீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தில் நேற்று ஹிந்து பத்திரிக்கையாளர்கள் தாக்கல் செய்த மனு மீது காரசாரமாக விசாரணை நடந்து கொண்டிருந்த போது அவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் உதாரணத்திற்கு சொன்ன ஒரு சம்பவம் வழக்கின் திசையையே அசைத்துக் காட்டியது. நீதிபதிகளை நிமிர்ந்து அமர வைத்த ஹரீஷ் சால்வேயின் உதாரண உரை வருமாறு:

இங்கிலாந்து நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு தீர்ப்பளித்தது.

உடனே அந்த தீர்ப்பை விமர்சித்து ஒரு பத்திரிக்கை, "தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளும் வயதான முட்டாள்கள்," என்று குறிப்பிட்டது. பின்னர் சில வக்கீல்கள் இதனை நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அந்த பத்திரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று வக்கீல்கள் கேட்டனர்.

இதற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். "அந்த பத்திரிக்கை எங்களைப் பற்றி இரண்டு விவரங்களைக் கூறியுள்ளது. ஒன்று நாங்கள் வயதானவர்கள் என்பது. இது உண்மை தான். ஏனென்றால் நாங்கள் வயதானவர்கள் தான். இரண்டாவது நாங்கள் முட்டாள்கள் என்பது. எங்களைப் பற்றிய அபிப்ராயத்தை கூறும் போது முட்டாள்கள் என்று அந்த பத்திரிக்கை விமர்சனம் செய்துள்ளது. இது அந்த பத்திரிக்கையின் கருத்து. இது எப்படி அவதூறாக முடியும்? வயதான முட்டாள்கள் என்று எழுதுவதற்கு பதிலாக வயதான 'ஊழல்' முட்டாள்கள் என்று எழுதியிருந்தால் அது தான் குற்றம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உள்நோக்கம் இல்லாத பட்சத்தில் எந்த வாசகமும் சட்டமன்ற அவமதிப்பு ஆகாது.

இவ்வாறு ஹரீஷ் சால்வே கூறியதும், ஜனரஞ்சகமான இந்த உரையின் போது நீதிமன்றத்தில் கலகலப்பு நிலவியது. நீதிபதிகளும் நிமிர்ந்து அமர்ந்தனர். அப்போது வழக்கின் கோணமே திசைமாறிப் போனது.

மணிக்கணக்கில் நடந்த சட்டச் சிக்கல்களின் சர்ச்சை ஒரு உதாரணத்தின் மூலமாக தீர்வுக்கு வந்தது.


இந்தக் கதை பற்றி நான் கூகிள் மூலம் தேடிய போது எனக்கு குல்தீப் நயார் எழுதிய சில கட்டுரைகள் கிடைத்தன. இவை தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ரீடிஃப் இல் வெளியானவை. தி ஹிந்துவில் VR கிருஷ்ண ஐயர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இது பற்றி மேலும் சில விவரங்கள் தெரிய வருகின்றன. அதன் மொழிமாற்றம்:

திரு.நாரிமன் அந்தப் பேச்சின் நடுவே ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். இங்கிலாந்தின் பிரபுக்கள் அவையில் அனுபவத்தில் முதிர்ந்தவரான லார்டு டெம்பிள்மேன் இந்தியா வந்திருந்தார். அவர் பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் நீதிமன்ற அவதூறு பற்றிப் பேசினார். பேச்சு "ஸ்பைகேட்சர்" என்ற புகழ்பெற்ற வழக்கை நோக்கித் திரும்பியது. டெய்லி மிர்ரர் என்ற பத்திரிக்கை அந்த வழக்கைக் விசாரித்த மூன்று நீதிபதிகளின் புகைப்படத்தைத் தலைகீழாக வெளியிட்டு அந்தப் படத்தின் கீழே "கிழ முட்டாள்கள்" என்று எழுதியிருந்தது. நாரிமன் டெம்பிள்மேனிடம், "ஏன் அந்தப் பத்திரிக்கை மீது அவதூறுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கேட்டார். அதற்கு டெம்பிள்மேன் அளித்த பதில் நாரிமனை வெகுவும் கவர்ந்தது. டெம்பிள்மேன் சிரித்துக் கொண்டே, சிறிதும் காழ்ப்புணர்ச்சியின்றி, "இங்கிலாந்தில் நீதிபதிகள் தங்கள் மீது உள்நோக்கமின்றி உதிர்க்கப்படும் வசைச் சொற்களைப் பொருட்படுத்துவதில்லை. உண்மையில் நான் கிழவன்தான்; நான் முட்டாள் இல்லை என்று நான் நினைத்தாலும் மற்றொருவர் மிகவும் தீவிரமாக நான் முட்டாள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன வேண்டுமானாலும் கருத உரிமை இருக்கிறது." என்றார்.


முந்தையது
தி ஹிந்துவின் முழு கவரேஜ்

Monday, November 10, 2003

பத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய தற்காலிகத் தடை

எதிர்பார்த்தது போல தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களைக் கைது செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தப் பிரச்சினையின் அடுத்த கட்டம்: சட்டமன்றங்களின் "உரிமை" என்ன? அவர்கள் நினைத்தால் உரிமை மீறல் என்ற பெயரில் யார் மீது வேண்டுமானாலும் தண்டனை விதிக்கலாமா? Checks & balances என்று ஏதாவது ஒன்று வேண்டாமா என்பதைப் பற்றியெல்லாம் கேள்விகள் வரும். இதற்கு உச்ச நீதிமன்றம் பதில் தர வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு காளிமுத்துவுக்கும், ஜெயலலிதாவுக்கும் நன்றி கூறுவோம்.

இங்கு முக்கியமாக நினைவு கூற வேண்டியது அதிமுக/திமுக வின் நிலைப்பாடுகளைப் பற்றியல்ல. ஒரு சட்டமன்றத்தின் செய்கையைப் பற்றி. அது எந்தக் கட்சியின் பெரும்பான்மையில் இருந்தாலும் சரி.

என் பயமெல்லாம் ஒரு தலைவர், அவரின் வாய்ச்சொல்லுக்கு பயந்து சட்டமன்றத்தை நடத்தும் ஒரு அவைத்தலைவர், பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டும் அந்தக் கட்சியின் அவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் பிரயோசனமில்லாத பெரும்பான்மை வலு ஆகியவை பற்றியே.

பத்திரிக்கையாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனை ஒரு கமிட்டி ஆராய்ந்து பத்திரிக்கையாளர்கள் செய்தது தவறு என்றது. உடனடியாக தண்டனை வாசிக்கப்பட்டு, ஆளுங்கட்சியினர் கையைத் தூக்கி தண்டனை உடனடியாக அமலுக்கும் வந்தது.

பதில் சொல்லப் பத்திரிக்கையாளர்களுக்கு உரிமை கொடுக்கப்படவில்லை.

இதுதான் பயங்கரம்.

மேல்முறையீடுக்கு சரியான வழி இருப்பதாகத் தெரியவில்லை. (இப்பொழுது உச்ச நீதிமன்றம் வந்துள்ளது, இனிப் போகப்போகத்தான் நிலை விளங்கும்.)

முதலில் சட்டமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை மீறல் தொடர்பான மற்றும் அதேபோல் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 'நீதிமன்ற அவதூறு' (contempt of court) சம்பந்தமான உரிமைகள் நீக்கப்பட வேண்டும். இவை அரசியலமைப்புச் சட்டம் மூலம் இந்தியக் குடிமக்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பதுபோல் உள்ளது.

முந்தையது
தி ஹிந்துவின் முழு கவரேஜ்

Sunday, November 09, 2003

தமிழ் வசவுச் சொற்கள்

காளமேகம் மற்றும் மற்ற தனிப்பாடல் வித்தகர்களின் வசவுச் சொல்லாண்மை பற்றி ராயர் காபி கிளப்பில் பேசிக்கொண்டிருக்கையில், நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் இலக்கியச் சிந்தனை 2002 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள் (வானதி பதிப்பகம் வெளியீடில்) புத்தகத்தில் மதிப்புரை எழுதும் ராஜரங்கன் சொல்வது இது:

"ஒளிவு மறைவற்ற பேச்சு என்றதும், தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு சாராரின் போக்கு நினைவுக்கு வருகிறது. இடக்கரடக்கலை பூர்ஷ்வாக்களின் குறியீடாக எடுத்துக் கொள்வதால் இவர்களுடைய எழுத்தில் 'நாலெழுத்து மந்திரங்கள்' தாராளமாகவே புழங்குகின்றன. வட்டார வழக்கோ, வெளிநாட்டுத் தமிழ்க் கதைகளோ எதுவாயினும் "பச்சை" இச்சைக்குரிய நடையாகப் பயில்வது சகஜமாகி விட்டது. "எல்லோரும் வாழி என்பதற்கு எதுகையான ஒரு வசவு மொழியை அவன் பிரயோகித்தான்" என்று ஒரு பிரபல எழுத்தாளர் முன்பு எழுதிய போது முகிழ்த்த புன்முறுவல், படித்த, ஆனால், வம்புகளில் ஆர்வம் கொண்ட, மத்தியதர வர்க்கத்தின் ரசிப்பைக் காட்டியது. இன்று அந்த எதுகையில்லாமலே சரளமாக வசவு மொழிகளைக் கையாளும் இயல்பும், பக்குவமும் சில தமிழ் எழுத்தாளர்களுக்கு வந்திருப்பது அவர்களாக எடுத்துக் கொண்ட சுதந்திரம்."

'நாலெழுத்து மந்திரங்கள்' - இவையெல்லாம் ஆங்கில நாலெழுத்து சமாச்சாரங்கள். தமிழில் வசவு வார்த்தைகள் இரண்டெழுத்தில் ஆரம்பித்து, ஐந்தெழுத்திற்கும் மேற்பட்டவைகள். மேற்சொன்னதைப் படிக்கும் போது அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு' பத்தி ஒன்று நினைவுக்கு வந்தது. உங்களுக்காக இதோ:

"ஆங்கில மொழியின் நான்கு எழுத்துச் சொற்களைத் தாராளமாக உபயோகிப்பார்கள். அதற்கு ஒரு பொருத்தமே இருக்காது. கல் தடுக்கினால் நான்கெழுத்து, புல் தடுக்கினால் நான்கெழுத்து. கில்லிதாண்டுலில் தவறினால் நான்கெழுத்து, பம்பர ஆட்டத்தில் தவறினால் நான்கெழுத்து, மரமேறினால் நான்கெழுத்து. மாடு போனால் நான்கெழுத்து, பிளாசா கொட்டகைக்குப் போய் இரண்டு மணிநேரம் கியூவில் நின்று ஜான் ஹால்-மரியா மாண்டஜ் சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால் நான்கெழுத்து.

மாரிஸுக்குப் பல சகோதரர்களிடையில் இரு அக்காக்களும், ஒரு தங்கையும் உண்டு. அவர்களோடு மாரிஸுக்கு அபிப்ராய பேதமேற்பட்டாலும் நான்கெழுத்து. இதில் ஒரு குறிப்பிடத்தக்கது, அப்பெண்களும் இந்த நான்கெழுத்துச் சொற்களைப் பதிலுக்கு வீசுவார்கள்."

பல ஆண்டுகளுக்கு முன்னர் soc.culture.tamil இல் தமிழ் வசவு வார்த்தைகள் அனைத்தையும் திரட்டும் அரும்பெரும் பணி ஒன்று நடந்தது. அந்தப் பொக்கிஷக் குவியல் இப்பொழுது கூகிளோ அல்லது வேறெங்கோ கிடைக்குமா என்று தெரியவில்லை.

Saturday, November 08, 2003

தமிழக சட்டசபையும் பத்திரிக்கை சுதந்திரமும்

தமிழக சட்டசபையின் பெயரில்தான் 'தி ஹிந்து' பதிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், முரசொலியின் ஆசிரியர் ஆகியோருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவருக்கும் தெரியும் இதில் முழுப்பொறுப்பும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கே என்று.

[விஷயம் தெரியாதவர்களுக்கு: தி ஹிந்து நாளிதழ் சட்டமன்ற நிகழ்வுகளை தினமும் தன் பத்திரிக்கையில் பதிவு செய்து வந்தது. அதில் தகாத, கேவலமான வார்த்தைகள் வந்துள்ளதாகவும், இதனால் அவை மரியாதை கெட்டுப் போய் விட்டதாகவும் உரிமைப் பிரச்சினை எழுப்பப் பட்டது. இதனை விவாதிக்க துணையவைத் தலைவர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப் பட்டிருந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எவ்வாறு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்து தி ஹிந்து ஒரு தலையங்கம் வெளியிட்டிருந்தது. அதனையும் கருத்தில் கொண்டு அந்தத் தலையங்கத்தை நிரூபிக்கும் வகையில் ஒட்டு மொத்தமாக தி ஹிந்துவின் ஊழியர்கள் ஐந்து பேருக்கு சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது தமிழக சட்டமன்றம். இந்த மேற்குறிப்பிட்ட தலையங்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட முரசொலியின் ஆசிரியருக்கும் சிறை தண்டனை. இந்த தண்டனைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. இன்று, இப்பொழுது வரை இவர்கள் யாரையும் காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.]

இதில் வெட்கக்கேடு அவைத்தலைவர் காளிமுத்துவுக்கே. இவர் பெயரில்தான் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பில் இதை ஆமோதித்த அஇஅதிமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் வெட்கக்கேட்டில் பங்கு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இப்பொழுது பல கண்டனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத்துக்கு செல்கிறார் 'தி ஹிந்து' ராம். இதன் மூலம் ஒரு குடியுரிமைச் சட்டப் பிரச்சினை உண்டாகும். சட்டமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டா என்று நீதிமான்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். எல்லோரும் உண்ணாவிரதப் போராட்டமும், வாயில் கருப்புத் துணி கட்டிய போராட்டமும் நடத்தி விட்டு மீண்டும் வீட்டு/அலுவலக வேலையைக் கவனிக்கப் போவார்கள்.

எப்பொழுதாவது அரிதாகத் தோன்றும் பிரச்சினை இது. இது தோன்றுவதற்கு முக்கியமாக சர்வாதிகாரத் திமிர் பிடித்த, ஜனநாயகத்தைச் சிறிதும் மதிக்காத, ஜனநாயகத்தின் எந்த ஒரு உறுப்பினிடமும் சிறிதும் பயமே இல்லாத ஒருவர் வேண்டும். இப்பொழுது அப்படி இருப்பதால்தான் இதெல்லாம் நடக்கிறது.

இப்பொழுதைய தமிழக முதல்வருக்கு தன் கட்சியில் எவரிடமும் பயம் இல்லை. மக்களிடம் பயம் இல்லை. சட்டத்தினிடம் பயம் இல்லை. கடவுளிடம் பயம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஏன், தன் மனசாட்சியிடமே பயம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஹிட்லருடன் பலரும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளையாக இராணுவம் எதுவும் இவரது ஆளுகைக்குள் இல்லை. இதுவரைப் பலரை சிறையில் போட்டிருக்கிறாரே ஒழிய வெளிப்படையாகக் கொலை எதுவும் செய்தது போல் தெரியவில்லை. மற்றபடி ஜனநாயகத்துக்கு மிகவும் எதிரானவர் என்பது பல செய்கைகளில் தெரிய வருகிறது.

பாதியில் ஆட்சியைக் கலைக்க முடியாது - கலைப்பதும் தவறாகும். தமிழக மக்கள் செய்த தவறை நினைவில் வைத்திருந்து இனி மீதி இருக்கும் ஆட்சி நேரத்தில் மேற்கொண்டு கொடுமைகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலின் போது இம்மாதிரி தவறு ஏதும் நேராத வண்ணம் தமிழக மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

Wednesday, November 05, 2003

ப.சிதம்பரம் - கட்டாய வாக்குப் பதிவு

கல்கி 9/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 3

இந்த இதழில் சிதம்பரம் எழுதுவது குடிமக்களுக்கு இருக்கும் வாக்குரிமையைப் பற்றி.

1. வாக்கு சதவிகிதம் கிராமங்களை விட நகரங்களிலேயே குறைந்து இருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்.

"நகர்ப்புற நாகரிகமோ, கல்வித் தகுதியோ நமக்கு ஜனநாயக உணர்வுகளை அதிகரித்து விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், மெத்தப் படித்தவர்களும், மேற்கத்திய உலகியல்களை ஏற்றுக் கொள்பவர்களும், தங்களுக்குள்ள குறைந்தபட்ச சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுகிறார்கள். அரசியல் என்பது வெறுக்கத்தக்கது என்றும், அரசியல்வாதிகளில் யாருமே ஒழுக்கமானவர்கள் அல்ல என்றும், அவர்களிடையே ஓர் உணர்வு பரவியிருக்கிறது."

"இந்தியாவில் வாக்குப் பதிவு எப்பொழுது எண்பது சதவிகிதத்தைத் தாண்டுகிறதோ, அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகத் தேர்தல் நடைபெறுகிறது என்று நான் கருதுவேன்."

80% எட்ட முடியுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் பிரச்சினைகள் நிறைந்த ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளை விடுத்து, கிட்டத்தட்ட 60% அல்லது அதற்கு மேல் தான் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இது நிச்சயமாக அதிகமாக வேண்டும். புதிதாக வாக்குரிமை பெறும் இளைஞர்களை (இருபாலரும்) ஜனநாயகக் கடமைகளில் ஈடுபடச் சொல்லி வற்புறுத்த வேண்டும். நகர்ப்புறங்களில், சிதம்பரம் சொன்னது போல, "மெத்தப் படித்தவர்கள்" மெத்தனத்தோடே அரசியலில் ஈடுபடாமல் உள்ளனர். இந்த "மெத்தப் படித்தவர்கள்" வாக்களிப்பதோடு நில்லாமல் சென்னை கார்ப்பரேஷன் அல்லது தங்களூர்ப் பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி தேர்தலிலாவது நிற்கவும் வேண்டும்.

முழுநேர வேலையில் ஈடுபடாதவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் இதனை முயற்சிக்கலாமே?

2. வாக்களிப்பவர்கள் எவ்வாறு தகுதி அடிப்படையில் வாக்களிக்காமல் சாதி, மத அடிப்படையிலும், பணத்துக்காகவும் வாக்களிக்கின்றனர் என்று வருத்தப்படுகிறார்.

3. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதோடு மட்டாமல் ஜெயித்து அமைச்சர்களாகவும் உள்ளனர் என்கிறார். இதெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால் என்னை அதிர வைத்தது இந்த மேற்கோள்:

"ஆந்திர மாநிலத்தில் இரட்டைக் கொலை வழக்கில் (இபிகோ பிரிவு 302) குற்றம் சாட்டப்பட்டவர் ராமசுப்பாரெட்டி. அவர் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆயினும் அவர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஓர் அமைச்சர்!"

பீஹாரோ, உத்திரப் பிரதேசமோ, நம்ப முடியும். ஆனால் நான் மிகவும் மதிக்கும் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் இப்படியா? இது பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்கி 2/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 2

தமிழ் மின்-புத்தகங்கள் - 2

தற்போதைக்கு இரண்டு இடங்களில் தமிழில் மின்-புத்தகங்கள் கிடைக்கின்றன.

சுலேகா தமிழ் மின்-புத்தகங்கள்

இங்கு சுஜாதாவின் சில சிறுகதைகள் கிடைக்கின்றன. சாம்பிளாகக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில பக்கங்களைப் பார்க்கையில் சில எழுத்துப் பிழைகள் இருந்தன. சுஜாதாவின் எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுதி US$ 5 க்கு வாங்கினேன். எல்லாமே PDF கோப்புகள். ஒருவர் காசு கொடுத்து வாங்கினால் அதை பல பேருக்குத் தானம் செய்ய முடியும். ஒவ்வொரு சிறுகதையும் கிட்டத்தட்ட 1-1.5 MB அளவுக்கு வருகிறது. காசைக் கடனட்டை மூலம் கட்டிய உடனே கோப்புகளைக் கீழிறக்கிக் கொள்ளலாம்.

கீழிறக்கி இதுவரை ஒரு சிறுகதைதான் படித்திருக்கிறேன் ('அச்சம் தவிர்'). இந்தப் PDF கோப்பில் உள்ள தமிழ் எழுத்துரு என்னவென்று தெரியவில்லை. சுமார்தான். அச்சுக்கோர்த்ததில் எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளன. 'ந' க்குப் பதில் 'ன' பல இடங்களில் உள்ளது. அகர உயிர்மெய் இருக்க வேண்டிய சில இடங்களில் மெய் உள்ளது. நிறுத்தக் குறிகள் பலவிடங்களில் காணாமல் போய்விடுகிறது.

===

தமிழோவியம் மின்-புத்தகங்கள்

இங்கு பல புத்தகங்கள் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர். நான் சொக்கனின் 'முதல் பொய்' தொகுதி வாங்கினேன். US$ 3 ஆனது. மொத்தம் 141 பக்கங்கள் உள்ள புத்தகம் 810 kb அளவிற்கு மைக்ரோசாஃப்ட் கணினிகளில் இயங்கும் ஒரு exe கோப்பாக வருகிறது. அதையும் zip செய்து குறுக்கி அனுப்புவதால் பாதிக்குப் பாதி குறைகிறது. இது தானியங்கி மென்பொருள். இதனை வாங்குவதற்கு கடனட்டையைப் பயன்படுத்தி காசைக் கட்டியவுடன் கீழிறக்கிக் கொள்ளும் பக்கம் கிடைக்கிறது. கீழிறக்கியவுடன் முதல்முறை இயக்குகையில் ஒரு எண்ணும், (ஆங்கில) எழுத்தும் கலந்த சரம் தெரிகிறது. இதனைத் தமிழோவியம் இணைய முகவரிக்கு அனுப்பி அவர்கள் தரும் கடவுச்சொல்லைப் பெற்றுக் கொண்டு அதனை உள்ளிட்டால்தான் புத்தகத்தைப் படிக்க முடிகிறது.

ஒருமுறை கடவுச்சொல் உள்ளிட்டதும் மீண்டும் இந்தத் தானியங்கி மின்-புத்தகத்தை சொடுக்கும் போதெல்லாம் கடவுச்சொல்லைக் கேட்பதில்லை. இந்தப் புத்தகத்தை வேறெந்தக் கணினிக்குக் கொண்டுபோயும் படிக்க முடியாது. ஒரு கணினிக்கான படிக்கும் அனுமதிதான் உங்களுக்குக் கிடைக்கிறது.

PDF கோப்புடன் ஒப்பிடுகையில் தமிழோவியத்தின் ebookedit முறை பாதுகாப்பு அதிகமானது. ஒருவர் வாங்கிப் பலருக்கு கடன் கொடுக்க முடியாது. ஆனால் ஒருவரே இரு கணினிகளை வைத்திருந்தாலும் ஒன்றில் மட்டும்தான் படிக்க முடியும். கணினியை மாற்றும்போது மீண்டும் தமிழோவியத்தைத் தொடர்பு கொண்டு வேறொரு கடவுச்சொல்லைப் பெற வேண்டும்.

TSCII எழுத்துருக்களைப் பயன்படுத்தி HTML முறையில் எழுதப்பட்டுள்ள கோப்பினை உள்ளடக்கிய தானியங்கி மென்பொருள்தான் தமிழோவியம் வழங்கும் மின்-புத்தகத்தின் வடிவம். லினக்ஸ், மேக் போன்றவைகளில் இதனைப் படிக்க முடியாது.

இந்த மின்-புத்தகத்தில் உள்ள எழுத்துருக்கள் தேவலாம். இன்னமும் நல்ல எழுத்துருக்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். இதுவரை நான் படித்ததில் எழுத்துப் பிழைகள் ஏதுமில்லை.

இனி இவர்கள் செய்ய வேண்டியது இன்னம் பல எழுத்தாளர்களின் புத்தகங்களை மின்- ஆக்குவது.

ராயர்காபிகிளப்பில் இருக்கும் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை (இலவசமாக இணையத்தில் வைக்காத பட்சத்தில்) மின்-பதிப்புகள் ஆக்கலாமே. உங்கள் படைப்பாளி நண்பர்களையும் இதனைச் செய்யத் தூண்டலாமே? அது போல இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் வாசகர்களும் இந்தப் புத்தகங்களை வாங்கிப் பலனடையாலாமே?

===

பி.கு: காசே கொடுக்காமல் நான் போன வாரம் கீழிறக்கிய ஒரு மின்-புத்தகம் நாதுராம் கோட்சேயின் "May it please your honour", பல வருடங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு, பின்னர் - 1991இல் என்று நினைக்கிறேன் - கோபால் கோட்சேயினால் வெளியிடப்பட்டது.

தமிழ் மின்-புத்தகங்கள் - 1

E-books என்பதை மின்-புத்தகங்கள் அன்று அழைக்கலாம் என நினைக்கிறேன். E-mail = மின்னஞ்சல் போல. (electron = மின்னணு; electricity = மின்சாரம்; electronic book = மின் புத்தகம்)

சரி, இந்த அளவுக்கு விஸ்தாரமாக இதைப் பற்றி என்ன பேச்சு? இப்பொழுதெல்லாம் அஞ்சல் என்றாலே நம்மில் பலருக்கு அது ஈமெயில் தான் என்றானது போல இனி வரும் நாட்களில் புத்தகம் என்றாலே அது முதலில் மின்-புத்தகமாகவும் பின்னரே தாள் புத்தகமாகவும் இருக்கப் போவதில் ஆச்சரியமில்லை.

மின்னஞ்சல் பயனாளர் எவரிடம் கேட்டாலும் அவர் உடனடியாக அதன் அருமை பெருமைகளைச் சொல்லுவார்: (அ) உடனடியாகப் பெறுதல் முடியும். (ஆ) கணினியில் சேர்த்து வைத்து வேண்டும்போது தேட முடியும். (இ) ஒரு கடிதத்தை அனுப்பும்/பெறும் செலவுகள் மிகக் குறைவு.

ஆனால் ஒரு கணினி மற்றும் இணைய இணைப்புக்கான மூலதனம் தேவை அல்லது இதெல்லாம் இருக்கும் ஒரு அலுவலகத்தில் வேலை தேவை, அல்லது அருகாமையில் 20 ரூபாய்க்கு ஒரு மணி நேரம் இணையத்தை மேய ஒரு கணினி மையம் தேவை.

ஆனால் ஒரு நீண்ட புத்தகத்தை - நாவலோ, சிறுகதைத் தொகுப்போ, கட்டுரைத் தொகுப்போ - படிக்கக் கணினியில் சாத்தியப்படுமா? அவ்வாறு படிப்பதை நீங்கள் விரும்புவீர்களா? இலவசமாக அல்ல. காசு கொடுத்து. படைப்பாளிக்குக் கொஞ்சமாவது பணம் போய்ச் சேர வேண்டுமல்லவா?

எனக்கு இரவு படுக்கப் போகுமுன் படுக்கையில் சாய்ந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். மடிக்கணினியானாலும் தடிக்கணினியாய் இருப்பதால் இது சாத்தியமல்ல. இப்பொழுது விற்பனையில் இருக்கும் எழுதுபலகை போன்ற கணினியைக் கண்ட காசு கொடுத்து வாங்குமளவிற்கு விருப்பமும் இல்லை. ஆனாலும் இந்த மின்-புத்தகங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏன் என்று பார்க்கலாமா?

1. படைப்புகளை வெளிக்கொணர்வது மிக எளிது, சிரமம் குறைவு, செலவும் குறைவு.

சாதாரணமாக ஒரு படைப்பாளி புத்தகத்தை எழுதி முடித்த பின்னர் புத்தக வெளியீட்டாளரைத் தேடிப் போக வேண்டும். பெயர் தெரியாதவராயிருந்தால் கைக்காசைக் கொடுத்தால்தான் வெளியிடுவேன் என்பார்கள். போன வாரம் தமிழ்-உலகம் யாஹூ குழுமத்தில் ஒருவர் தனது நண்பர் புத்தகம் வெளியிட கிட்டத்தட்ட இலங்கை ரூ. 20,000 சேர்த்து விட்டதாகவும், இன்னும் மேற்கொண்டு ரூ. 20,000 சேர்த்துக் கொண்டிருப்பதாகவும், குறைந்த விலையில் பதிப்பு செய்து தர ஏதேனும் பதிப்பகம் உண்டா என்றும் கேட்டிருந்தார்.

அப்படி பதிப்பித்தும் எவ்வளவு கஷ்டங்கள்? நூலகங்கள் வாங்கிக் கொள்ளுமா என்று அதன் பின்னர் ஓட வேண்டும். புத்தகம் விற்குமா, போட்ட பணம் திரும்பி வருமா என்றெல்லாம் கேள்விகள்.

அதெதுவும் கிடையாது இங்கே. கணினியிலே அடித்து, அங்கேயே பிழைதிருத்தம் செய்து, அப்படியே மின்-புத்தகம் ஆக்கி, இணையச் சந்தை நடத்துபவரிடம் கொடுத்துவிட்டால் போதும்.

நன்றாக ஓடுகிறதா? பின்னர் அச்சுப் பதிப்பு செய்து, தாளில் போட்டுவிடலாம் - வேண்டுமானால்....

2. சர்வதேசச் சந்தையை உடனடியாகப் போய்ச் சேரலாம்.

சினிமா மாதிரியோ, அல்லது ஆங்கிலப் புத்தகங்கள் மாதிரியோ இருந்தால் இந்திய உரிமை, உலக உரிமை என்றெல்லாம் பேசலாம். நூறோ, இருநூறோ விற்கும் புத்தகங்களை இந்தியாவிலிருந்துதான் வெளிநாட்டுத் தமிழர்கள் வாங்குகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் புத்தகக் கடைகளுக்கு எழுதிப்போட்டு, இங்குள்ளவர்கள் அதனை எடுத்துக் கட்டிவைத்து தபாலில் அனுப்ப ஏகக் கட்டணம் (உடனடியாக வேண்டுமானால்). குறைந்த தபால் செலவில் வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு மேல் பொறுத்திருக்க வேண்டும்.

மின்-புத்தகங்களாக இருந்தால், காசைக் கொடுத்தவுடன் கீழிறக்க வேண்டியதுதான்.

குருமூர்த்தியின் "Legalising a fraud, the TRAI way" கட்டுரை - 2

ஆக, 1992 முதல் 2002 வரையிலான பத்து வருடங்களில் எண்ணற்ற மாற்றங்கள். 1992க்கு முதல் அரசு மட்டும்தான். நாட்டில் செல்பேசியே கிடையாது. 2002இல் ISD சேவையை அளிப்பது தனியார் நிறுவனங்கள் மட்டுமே! (அரசுக்கும் VSNLஇல் கொஞ்சம் பங்கு இருக்கிறது என்றாலும் நிறுவனத்தின் நிர்வாகம் முழுதும் டாடா கைகளில்). கம்பி மூலம் கிடைக்கும் தொலைபேசியை விட செல்பேசிதான் வெகு வேகமாக விற்கிறது. இன்னும் சில நாட்களில் நாட்டில் செல்பேசிதான் கம்பி-பேசிகளை விட அதிகமாக இருக்கும்.

இதைத்தான் disruptive technology என்கிறோம். அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெருங்குழப்பத்தை உண்டுபண்ணி, கலக்கியடித்து, மீண்டும் அமைதி ஏற்படும் போது எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

இப்பொழுது ரிலையன்ஸ் மீதுள்ள குற்றச்சாட்டைப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் பெட்ரோகெமிக்கல் முதல் பாலியெஸ்டர் யார்ன் செய்வதிலிருந்து, மின்சாரம் உற்பத்தி செய்து அதனை மும்பை, தில்லி நகரங்களுக்கு வழங்குவதில், பூமிக்கடியிலிருந்து எண்ணெய், எரிவாயு தோண்டி எடுப்பது என்று பிரம்மாண்டமான திட்டங்களில் இறங்கும் மிகப்பெரிய நிறுவனம். எல்லாமே பத்தாயிரம் கோடு ரூபாய்களுக்கு மேற்பட்ட திட்டங்கள். இந்த நிறுவனத்தின் மேல் பல புகார்கள் - சட்டங்களில் ஓட்டைகளையெல்லாம் எப்படி ஆராய்ந்து அதனைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர் என்று.

தொலைதொடர்பு என்று எடுத்துக் கொண்டால் ரிலையன்ஸ் வெகு நாட்களுக்கு இதில் சரியாக ஒன்றும் ஈடுபடவில்லை. C வட்டம் என்று சொல்லக்கூடிய விலை குறைந்த லைசென்ஸ் தொகையுள்ள இடங்களில் மட்டுமே GSM முறையிலான செல்பேசிச் சேவையை அளித்து வந்தனர் - மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில்தான் இருந்து வந்தனர். VSNL விற்பனைக்கு வந்தபோதும் டாடா நிறுவனத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

இதற்கு முன்னரே அரசு கம்பி மூலம் தொலைபேசிச் சேவையை வழங்குவதை தனியார்ப்படுத்த முற்பட்டது. அப்படிச் செய்கையில் "limited mobility" என்றொரு பதத்தை இந்த 'Basic Telephony License'க்குள் விதைத்தது. அதுவரை basic telephony ஆனது கம்பி மூலம் கட்டிடங்களுக்கு இணைப்பு கொடுப்பது என்று இருந்தது. சென்னை ஐஐடியில் அஷோக் ஜுன்ஜுன்வாலா என்னும் பேராசிரியரின் ஆராய்ச்சிக் குழு corDECT என்னும் முறைப்படி 'wireless in the Local Loop' என்னும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது. இதேபோல் அமெரிக்காவிலும் மொடொரொலா போன்ற நிறுவனங்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கையாண்டு வந்தனர். இதன்படி கட்டிடங்களுக்கு தொலைபேசி இணைப்பு வழங்குகையில் கடைசி மைல் (அதாவது தெருக்கோடியில் உள்ள தொலைபேசி இணைப்பகப் பெட்டியிலிருந்து உங்கள் வீட்டுகு வரும்) இணைப்பை கம்பி மூலம் செய்யாது வயர்லெஸ் மூலம் செய்வதுதான் இது.

இது செலவைக் குறைக்கக் கூடியதொன்று. தாமிரக் கம்பிக்கான காசுக்கு இந்த மாதிரி கார்டெக்ட் டப்பாவை ஒவ்வொரு வீட்டிலும் வைத்துவிட்டுப் போகலாம். நகராட்சிக் காரர்கள் ரோடுகளைத் தோண்டும் போது உங்கள் வீட்டுத் தொலைபேசி இணைப்பு கெட்டுப்போகாது. மழையினால் தொல்லை இல்லை.

இதை மனதில் வைத்துதான் மத்திய அரசு 'limited mobility' என்பதையும் இந்த அடிப்படைத் தொலைபேசி இணைப்பாளர்கள் (basic telephony companies) கொடுக்கலாம் என்று முடிவு செய்தது.

ஆனால் நடந்தது வேறு.

International Engineering Consortium இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது:

"Sometimes called radio in the loop (RITL) or fixed-radio access (FRA), WLL is a system that connects subscribers to the public switched telephone network (PSTN) using radio signals as a substitute for copper for all or part of the connection between the subscriber and the switch. This includes cordless access systems, proprietary fixed radio access, and fixed cellular systems."

இந்த "fixed cellular systems" ஐ மனதில் வைத்துக் கொண்டு ரிலையன்ஸ் நாடு முழுவதற்குமான அடிப்படைத் தொலைபேசி லைசென்ஸுகளை வாங்கிக் குவித்தது. பின்னர் நாடு முழுவதும் தனது CDMA முறையிலான "fixed cellular systems" செல்பேசிச் சேவையினை அளிக்க ஆரம்பித்தது. இதுவரை செல்பேசிச் சேவையினை அளித்து வந்த நிறுவனங்கள் இதை எதிர்த்தன. TDSAT எனப்படும் தொலைபேசி சம்பந்தமான பிரச்சைனைகளின் தீர்வாயத்திற்குச் சென்று முறையிட்டன. TRAI எனப்படும் தொலைதொடர்பு நிறுவனச் சேவைகளை கண்காணிக்கும் குழுமத்திடம் சென்று முறையிட்டன. அரசிடம், அமைச்சர்களிடம் புகார் செய்தன. உச்ச நீதிமன்றம் வரை சென்று சண்டை போட்டன.

இப்பொழுது கடைசியாக அரசு என்ன முடிவெடுத்துள்ளது? அடிப்படைத் தொலைபேசி நிறுவனங்கள் மேலும் லைசென்ஸ் தொகை செலுத்தி ஒருமித்த லைசென்ஸுகளை வாங்கி அடிப்படை [கம்பித்] தொலைபேசி, செல்பேசி என எது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்பதுதான் அது.

இதை எதிர்த்துதான் குருமூர்த்தி தன் கட்டுரையில் எழுதியுள்ளார்.

எனக்கு குருமூர்த்தியின் கருத்தில் உடன்பாடில்லை. ரிலையன்ஸ் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் தேக்கம் அடைந்துள்ள தொலைதொடர்புத் துறையில் இதுவரை பணம் போட்டவர்கள் தீர்க்கமான திட்டம் எதையும் கையில் வைக்காமல், மிகக் குறுகிய நோக்கிலேயே செயல்பட்டுள்ளனர். இதனால்தான் ரிலையன்ஸ் மிகக் குறுகிய காலத்தில் (ஒரு வருடத்திற்குள் குறைவாகவே) 50 லட்சம் உறுப்பினர்களைப் பெற முடிந்துள்ளது.

100 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில் 20 கோடி மக்களாவது தொலைபேசி இணைப்பைப் பெற விரும்புகின்றனர். ஆனால் விடுதலை ஆகி 50 ஆண்டுகள் வரையிலும் இன்னமும் வெறும் 6 கோடிதான் தொலைபேசி இணைப்பைப் பெற முடிந்துள்ளது. அதிலும் 2 கோடிப்பேர் செல்பேசியினால் - கடந்த 3 ஆண்டுகளில் இணைப்பு பெற்றவர்கள். அதிக மூலதனம் தேவை, அதே சமயம் நாடு முழுதும் இதுபோன்ற பெரிய திட்டங்களை நிறைவேற்றக் கூடிய மனப்பான்மையும் தேவை.

தொலைபேசி இணைப்பு அதிகமாக அதிகமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகமாகும் என்பது கண்கூடாகக் காணக்கூடியது. அதற்காக ஒருசில சட்டத்தின் ஓட்டைகளை நெம்புவது தவறென்று எனக்குத் தோன்றவில்லை.

[பி.கு. இதுபற்றிய என் கருத்துகள் கடந்த ஆறு மாதங்களில் நிறைய மாற்றம் அடைந்துள்ளது.]