Monday, January 31, 2011

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்

ஜனவரி மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக் கடற்படை வீரர்களால் கொல்லப்பட்டார்கள் என்று மீனவர்கள் சொல்கின்றனர். இதில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், மற்றொருவர் கழுத்தில் சுருக்கிடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டிலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்லும்போது இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் மிகச் சிறு சலசலப்பே ஏற்பட்டது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலரும் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதராக இருந்தவருமான நிருபமா ராவ் இன்று (திங்கள், 31 ஜனவரி 2011), இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இலங்கை செல்கிறார். இதற்கிடையே இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் வெளியுறவு அமைச்சகத்தால் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் துயரம் பற்றி நான் எழுதிய கட்டுரை

நிருபமா ராவ் பற்றிய தி ஹிந்து செய்தி

இந்த விவகாரம் தமிழக மீனவர்களுக்கும் இலங்கையின் தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான ஒரு பிரச்னை என்பதுபோல செய்தி வழங்குகிறது தி ஹிந்து. பேராசிரியர் சூரியநாராயணனின் இந்தக் கட்டுரையும் அப்படியேதான் சொல்கிறது. இலங்கையிலிருந்து வரும் ஒரு பதிவும் இதைத்தான் முன்வைக்கிறது.

அதே நேரம் தாங்கள் இந்தப் படுகொலைகளைச் செய்யவே இல்லை என்று இலங்கைத் தரப்பு மறுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில மூன்றாம்தரக் கட்சிகள் இலங்கை-இந்திய உறவில் மண்ணைப் போடவே இப்படிச் செய்வதாக இந்தச் செய்தி கூறுகிறது.

இணையத் தமிழர்கள் இந்த விவகாரத்தை இப்படியே விடக்கூடாது என்பதில் மும்முரமாக உள்ளனர். முக்கியமான சில சுட்டிகள்:

ட்விட்டரில் இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக நடக்கும் விவாதம்
தமிழக மீனவர்களைக் காக்கவேண்டும் என்னும் வலைத்தளம்
இணையம் வழியாக இந்திய அரசுக்கு பெட்டிஷன்

இப்போது நமக்கு முன் இருக்கும் கேள்விகள் இவை:

1. இந்தியத் தமிழ் மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையில் இலங்கைக் கடற்படையினர் மட்டும் துப்பாக்கியைத் தூக்குவது ஏன்? இந்திய-பாகிஸ்தான் மீனவர்கள் இடையிலும் ஜூரிஸ்டிக்‌ஷன் பிரச்னைகள் உள்ளன. அங்கெல்லாம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்படும் நிலையில் இலங்கைக் கடற்படை மட்டும் கொலையில் ஈடுபடுவது ஏன்? அதுவும் மனிதாபிமானமற்ற முறையில், மிருகத்தனமாக கழுத்தில் சுருக்கிட்டு, ஆடைகளைக் களைந்து, வதைஇய்ல் ஈடுபடுவது ஏன்? இதனைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்துள்ளது? இந்திய மீனவர்கள்மீது கோபம் கொள்ளும் இலங்கை மீனவர்கள்கூட இந்தச் செயலை என்றும் நியாயப்படுத்த மாட்டார்கள்.

2. இலங்கைக் கடற்படை இந்தக் கொலைச் செயல்களில் ஈடுபடவில்லை என்று இலங்கைத் தரப்பு கூறுகிறது. அப்படியானால் யார் பொய் சொல்கிறார்கள்? தமிழக மீனவர்களா? இந்திய அரசு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டுவரட்டுமே? ஜனவரியில் இரு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது நிஜம். அவர்களது பிணங்களே சாட்சி. அவர்களது பிணங்களுக்கு ஈடாக தமிழக அரசு கொடுத்துள்ள இழப்பீட்டுப் பணம் சாட்சி. அப்படியானால் இந்த மீனவர்களைக் கொன்றது யார்?

3. கடந்த முப்பது வருடத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாறாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் எந்த மீனவரும் கொல்லப்படவில்லை. ஒரு இலங்கை மீனவர்கூட இந்தக் காலகட்டத்தில் இந்தியக் கடற்படையால் கொல்லப்படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? யார் பொய் சொல்கிறார்கள்?

4. நாடு கடந்து செல்லும் இந்தியர்கள் இன்னலில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு உதவத்தானே இந்தியத் தூதரகங்கள் உள்ளன? ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல், அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகத்தில் சிக்கிய இந்தியர்கள் படும் பாடு, எகிப்தில் நடக்கும் புரட்சியில் சிக்கியிருக்கும் இந்தியர்களைக் காத்தல் - ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடும் இந்திய அரசு, தமிழக மீனவர்களின் துயர் துடைக்க இதுவரை என்ன செய்துள்ளது? ஒரு ஆதரவான வார்த்தைகூடக் கிடையாதே? கடந்த வாரத்தில் இடிச்ச புளிபோலத்தானே மன்மோகன் சிங்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இருந்துள்ளனர்? தமிழகத்திலிருந்து சென்றுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமிருந்து ஒரு வார்த்தை வெளிவரவில்லையே? நடந்துகொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் பிரச்னை அவர்கள் கண்களில் படவேயில்லையா?

இந்தப் பிரச்னை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்?

1. நீங்கள் தமிழகக் கடலோர மாவட்டங்களில் வசித்தால், அங்குள்ள மீனவர் சமுதாயத்திடம் பேசி பிரச்னைகளைப் புரிந்துகொண்டு இணையத்தில் பதிவுகளைக் கொண்டுவாருங்கள். இவை எழுத்தாக, படங்களாக, வீடியோவாக இருக்கலாம்.

2. உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் சொல்லி, அவர்கள் இந்தச் சிக்கல் குறித்து ஒரு முடிவுக்கு வருமாறு செய்யுங்கள்.

3. ஊடகத்துறையில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் பேசி, இது குறித்து ஊடகங்களில் வரும் தகவல்கள் போதுமானவையாக இல்லை; அவை திருப்திகரமாகவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுமாறு செய்யுங்கள். ஊடகங்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்று அழுந்தச் சொல்லி உறைக்கவையுங்கள்.

4. அரசியல்வாதிகளிடம் தொடர்புள்ளவர்கள், உங்கள் அதிருப்தியைத் தெரிவியுங்கள். தேர்தல் வருகிறது என்றும், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதும், அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாதிருப்பதும் தேர்தல் பிரச்னை ஆக்கப்படும் என்றும் அரசியல்வாதிகள் தத்தம் கட்சிகளிடம் பேசி, இதற்குத் தக்க பதிலை வைத்திருக்குமாறும் அறிவுரை கூறுங்கள்.

5. இணையத்தில் இது தொடர்பாக நடத்தப்படும் கேம்பெய்னில் பங்குகொண்டு, உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள். உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.

[நேற்று சென்னை மெரினா கடற்கரையில் இது தொடர்பான ட்வீட்-அப் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோது நடந்த விவாதத்தின் தொகுப்பு:

நான் ட்விட்டரில் எழுதியது
கும்மியின் வலைப்பதிவு]

Saturday, January 29, 2011

புது தொலைதொடர்புக் கொள்கை

ஊழல் ஊழல் என்று ஊதிப் பெருக்கிய எண்ணை வைத்து அனைவரும் கத்தியதன் விளைவு, தொலைதொடர்புக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கெடுதலைக் கொண்டுவரும் தொலைதொடர்புக் கொள்கை மாற்றம். இன்று கபில் சிபல் புதிய தொலைதொடர்புக் கொள்கையை அறிவித்துள்ளார்.

ஊழல் செய்த, ஊழல் செய்யாத அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் இதனால் பெரும் தீமை. விளைவாக நம் அனைவருக்கும்தான். அரசின் வருமானம் அதிகரிக்கும். அழைப்புக் கட்டணமும் அதிகரிக்கும்.

ஸ்பெக்ட்ரத்துக்கு என்ன விலை கேட்கலாம் என்பதில் மத்திய அரசு சந்தோஷமாக இறங்கும். பல்லாயிரம் கோடிகள், பல லட்சம் கோடிகள். நாடு சுபிட்சம் அடையுமா என்பதுதான் கேள்வியே.

Friday, January 28, 2011

தமிழக மீனவர்களின் துயரம்

தமிழ்பேப்பரில் நேற்று இரவு எழுதி, இன்று வெளியான என் கட்டுரை.

கருப்புப் பணம் தொடர், திங்கள் முதல் தொடரும். இடையில் இரு நாள்கள் அஜந்தா குகைகளைக் காணச் சென்றிருந்தேன்.

அடுத்த வாரம் வியாழக்கிழமை (3 பிப்ரவரி 2011) அன்று, காந்திகிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தினமலர் ராமசுப்பையர் நினைவு உரை ஆற்றுகிறேன். இன்றைய தமிழ் ஊடகங்கள் (தினசரி, வார/மாத இதழ்கள், தொலைக்காட்சி) செய்திகளை அளிப்பது பற்றியும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்துமான என் கருத்தை அதில் பதிவு செய்யப்போகிறேன்.

Friday, January 21, 2011

கருப்புப் பணம் - 2

கருப்புப் பணம் தொடர்பாக கடந்த தேர்தல் தொடங்கி அத்வானி பேசுவது தொடர்பாகவும், இப்போது உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரிக்க ஆரம்பித்திருப்பதாலும்தான் இந்தத் தொடரை நான் ஆரம்பித்திருக்கிறேன்.

மொத்தம் நான்கு கேள்விகள் உள்ளன:

  1. கருப்புப் பணத்தை மீட்டுவிட்டால் மட்டும் போதும்; இந்தியா உலகின் நாலைந்து நாடுகளில் ஒன்றாகிவிடும் என்ற கூற்று முன்வைக்கப்படுகிறது. இந்தியா முதன்மை நாடாகவேண்டும் என்பதுதானே அனைவரின் எண்ணமும். எனவே இப்படி ஒரு கூற்றை முன்வைத்தவுடன், இந்தப் பிரச்னை முதல் பக்கத்துக்கு, தலைப்புச் செய்தியாக வந்துவிடுகிறது. இது உண்மையா என்பதை விசாரிப்பது என் முதல் நோக்கம்.
  2. கருப்புப் பணம் முதலில் எப்படி வெளிநாடுகளுக்குப் போனது? அப்படிப் போன பணம் எவ்வளவு இருக்கும்? சில மதிப்பீடுகள் சொல்வதுபோல 1.4 டிரில்லியன் டாலர் இருக்குமா? இந்தப் பணம் யாருக்குச் சொந்தம்? இதில் அரசாங்கம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் அரசு இழந்த தொகைதான் என்ன? இது இரண்டாவது கேள்வி.
  3. கருப்புப் பணம் எப்படி உருவாகிறது? உள்நாட்டில், வெளிநாட்டில் எப்படி பதுக்கப்படுகிறது? இது மூன்றாவது கேள்வி.
  4. கடைசியாக, கருப்புப் பணம் ஏன் உருவாகிறது, அதனை எப்படித் தடுப்பது? பிற நாடுகள் என்ன செய்கின்றன, நாம் என்ன செய்திருக்கலாம், என்ன செய்யவில்லை.
இந்த நான்கு கேள்விகளில் எதை முதலில் எடுத்துக்கொள்வது என்பதை நான் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத்தான் தீர்மானித்தேன். மக்கள் உணர்ச்சியை அதிகரித்து, அவர்கள் கோபத்தை அதிகரிக்க, ஓர் எளிமையான சூத்திரத்தை முன்வைக்கவேண்டும். அதனை சில அரசியல்வாதிகள் மிக அழகாகச் செய்கிறார்கள். இதோ பார், நம் நாடு ஏழைமையில் உழல்வதற்குக் காரணமே இந்தக் கருப்புப் பணப் பதுக்கல்காரர்கள்தான். அவர்கள் அப்படியே பணத்தை அலேக்காகக் கொண்டுபோய் சுவிஸ் நாட்டு லாக்கரில் வைத்துவிட்டார்கள். அதோ பார் ராஜிவ், இதோ பார் சோனியா. இதுதான் காரணம். அதனால்தான் நாடு அழிந்துவிட்டது. இந்தப் பணம் நம்முடைய பணம். இதோ வந்துவிட்டால், நாடே நம்பர் ஒன்.

இந்தக் கதையைக் கட்டாயமாக நம்ப விரும்புகிறார்கள் மக்கள். இது உண்மையா பொய்யா என்பதற்குள் போக இப்போது நான் விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் முதலிலேயே சொல்ல விரும்புகிறேன். மக்கள் எதிர்பார்ப்பதுபோல பணம் வந்துவிட்டால் ஒரே நாளில் இந்தியா சொர்க்கபுரியாகும் என்றெல்லாம் பாஜக சொல்வதுபோல ஒன்றும் நடக்கப்போவதில்லை. இது குறித்துத் தனியாக விவாதிக்கலாம். (பழைய விவாதங்களைப் போல, அப்படியானால், எல்லோரும் கொள்ளை அடிக்கவேண்டும், சுவிஸ் வங்கியில் கொண்டுபோய் பணத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்றா சொல்கிறாய் என்றால், நிச்சயமாக இல்லை.)

அடுத்த பதிவில், பணம் எப்படி வெளியேறுகிறது என்பதை எனக்குத் தெரிந்த வகையில் ஆராய்கிறேன்.

Wednesday, January 19, 2011

கருப்புப் பணம்

கருப்புப் பணம் மேட்டர் இப்போது தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்திருக்கும் ஒரு புது விவகாரம். பழசுதான்; ஆனால் இப்பப் புதுசு. அதனால் நானும் இதில் கருத்து சொல்லியே ஆகவேண்டும்.

கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால் அதைக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பலரும் பல லிஸ்டுகளைப் போட்டாயிற்று. அது, தெருவெங்கும் டாய்லட் கட்டுவதில் ஆரம்பித்து, இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பதற்குச் சென்று, நாட்டின் 45 கோடி ஏழை மக்களுக்கு ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் அளிப்பதுவரையில் நீள்கிறது.

இந்தக் கருப்புப் பணம் ஏதோ அந்நிய நாட்டில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது அல்லவா? அந்தப் பணம், ஒரு பேச்சுக்கு அமெரிக்க டாலராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் இந்திய ரூபாய்களாக மாற்றினால்தான் இந்தியாவில் டாய்லெட் கட்டமுடியும்; ஒவ்வோர் ஏழைக்கும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கமுடியும். (அந்நியக் கடன் மேட்டரை மட்டும் இப்போதைக்கு கன்வீனியண்டாக விட்டுவிட்வோம். பின்னர் ஒரு சமயம் அதனை எடுத்துக்கொள்வோம்.)

கேள்வி 1: திடீரென இத்தனை அமெரிக்க டாலர்களை டாலர்-ரூபாய் சந்தையில் இறக்கினால் என்ன ஆகும்.

பதில்: அமெரிக்க டாலர் சல்லிசாகப் போய், டாலருக்கு 45 ரூபாய் என்ற நிலைமை மாறி, டாலருக்கு 15 ரூபாய் அல்லது அதற்கும் கீழ் என்று சடாரென ஆகிவிடும். இந்த அதகளத்தில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற பெரும்பாலும் டாலரில் சம்பாதிக்கும் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் கூண்டோடு கைலாசம் போவார்கள். சாஃப்ட்வேர் கனவான்கள் எல்லாம் நடுத்தெருவில் பிச்சை எடுப்பார்கள். ஏன் என்று புரியவில்லை என்றால், பொருளாதாரம் தெரிந்த ஒருவரிடம் சாவகாசமாக உட்கார்ந்து கேளுங்கள்.

இது நடக்கக்கூடாது என்றால், இந்தியா வேறு ஒரு காரியத்தைச் செய்யவேண்டும். இந்த டாலர் சுமார் 1 டிரில்லியன் என்கிறார்கள். அதாவது 45 லட்சம் கோடி ரூபாயாம். அதற்கு இணையான ரூபாய்களை ரிசர்வ் வங்குமூலம் உருவாக்கி, ஒரு ஸ்பெஷல் பர்பஸ் வெஹிகிள் மூலம் உள்ளே வரும் டாலருக்கு பதில் இந்த ரூபாய்களை அளித்து, அரசே அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போது மட்டும்தான் டாலர்-ரூபாய் சந்தையில் மாற்றங்கள் இருக்காது. நம் டாலர் கையிருப்பு சடாரென உயரும். அதே நேரம், 45 லட்சம் கோடி ரூபாய் புதுப் பணம் இந்தியச் சந்தையில் பாயும். இந்தப் பணத்தை ஒரு ஆண்டிலோ இரண்டு ஆண்டுகளிலோ இந்திய அரசு செலவழிக்க முனைந்தால் நாட்டின் பணவீக்கம் நாம் இதுவரை கண்டிராத அளவு மிகக் கடுமையாக உயரும். (இந்தியாவின் ஜிடிபியும் இந்தப் பணமும் கிட்டத்தட்ட ஒரே அளவு என்பதைக் கருத்தில் வையுங்கள்.) அப்போதும் அழிவுதான். இதுவும் ஏன் என்று புரியாவிட்டால் மீண்டும், பொருளாதாரம் படித்துள்ள உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேளுங்கள்.

கேள்வி 2: பணத்தை எங்கிருந்தோ எடுத்து வருவதற்கு மாற்றாக, அதற்கு இணையான 45 லட்சம் கோடி ரூபாய்களைப் புதிதாக அச்சடித்து, ஏழைகள் ஒவ்வொருவருக்கும் ஏன் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கக்கூடாது?

பதில்: மேலே சொன்னதற்கும் இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம், அந்நியச் செலாவணிக் கையிருப்பில் ஏற்படும் மாற்றம் மட்டுமே. அதனால்தான் பிரச்னை மிகப் பெரிது என்கிறேன்.

கேள்வி 3: அப்படியானால் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டாமா? பத்ரி ஏன் இப்படி ஒரு வில்லங்கமான ஆளாக இருக்கிறார்? ராஜா உத்தமன், ராணி உத்தமி என்கிறார். இப்போது கருப்புப் பணத்தைக் கொண்டுவரவேண்டாம் என்கிறார்.

பதில்: இல்லை. எப்படி இராசா ஊழலில் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் பேசப்பட்டதோ, அதேபோலத்தான், கருப்புப் பணம் மேட்டரிலும் எகனாமிக்ஸ் புரியாமல் ஆளாளுக்குக் கொதித்துக் கொந்தளிக்கிறார்கள்.

கருப்புப் பணத்தால் (அது இந்தியாவில் இருக்கும் பணமோ, வெளிநாட்டுக்குப் போன பணமோ), அரசுக்கு வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் வராமல் போகிறது. அந்தப் பணத்தை மட்டும்தான் அரசு திரும்பப் பெற முனையவேண்டும். ஒரு நாட்டின் அடிப்படைப் பொருளாதாரம், அதாவது உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் விரிவடையாமல் அரசின் கைகளுக்குப் பெருமளவு பணம் போய்ச் சேரக்கூடாது. அப்படிப் போய்ச் சேர்ந்தால், பொருளாதாரத்துக்கு ஏற்படும் விளைவுகள் விபரீதமானவை. அரபு நாடுகளில் எண்ணெய் மூலம் வரும் ராயல்டி வருமானம் இந்த வகையைச் சார்ந்தது. அதன் காரணமாகவே அது ஒரு ‘மாயப் பொருளாதாரத்தை’ அங்கே உருவாக்கியது. இன்று துபாய் தத்தளிக்கிறது. அதேபோலத்தான் இந்தக் கருப்புப் பணம் ஏற்படுத்தும் ‘மாயப் பொருளாதாரமும்’.

அடிப்படை உற்பத்தியை அதிகப்படுத்த என் நண்பன் சத்யா சொன்ன ஒரு கருத்தை மட்டும் இங்கே விதைக்கிறேன். இந்தக் கருப்புப் பணத்தை ஏதோ விதத்தில் கைப்பற்றினாலும், அதனை இந்தியாவுக்குக் கொண்டுவரக்கூடாது. மாறாக, முற்றிலுமாக வெளிநாடுகளில் செலவுசெய்து, மின் உற்பத்தி நிலையங்களை முழுதாக வாங்கவேண்டும். அவற்றைக் கொண்டு இந்தியாவில் மின் உற்பத்தியை வெகுவாக அதிகரித்து, சந்தையில் இறக்கவேண்டும். இதன் காரணமாக இரண்டு விஷயங்கள் ஏற்படும். மின்சாரக் கட்டணம் வெகுவாகக் குறையும். மக்கள் அனைவருக்கும் மின்சாரம் மட்டின்றிக் கிடைக்கும். உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். அதன் விளைவாக, கடுமையான பணவீக்கத்துக்கு பதிலாக, நல்ல உற்பத்திப் பெருக்கமும் அதன் விளைவாக நியாயமான பணவீக்கமும் ஏற்படும். (ஆனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடும்... எல்லாம் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின்படி எண்ட்ரோபி படுத்தும் பாடு!)

இப்படி புத்திசாலித்தனமாகச் செய்யாவிட்டால், இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

***

இது தொடர்பான சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்.

Monday, January 17, 2011

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி

துக்ளக் ஆண்டுவிழா பேச்சின்போது குருமூர்த்தி சற்றே விஸ்தாரமாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கக்கூடும் என்பது பற்றி விளக்கினார்.

மொத்தம் ஆறு புதிய கம்பெனிகளுக்கு லைசென்ஸ் கிடைத்துள்ளது. சில பழைய நிறுவனங்களுக்கு புதிய வட்டங்களுக்கான லைசென்ஸ்/ஸ்பெக்ட்ரம் கிடைத்துள்ளது. புது நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆளுக்கு ரூ. 300 கோடியும் அவர்கள் உருவாக்கும் நிறுவனத்தில் 20% பங்குகளும் தரவேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக குருமூர்த்தி சொல்கிறார்.

அதை மேலும் தொடர்ந்து, 20% பங்குகள் என்றால் அவற்றின் மதிப்பு தலா ரூ. 3,000-4,000 கோடி இருக்கும். எனவே மொத்த லஞ்சம் = 18,000 - 24,000 கோடி ரூபாய் என்று முடிக்கிறார்.

இந்த 20% பங்கு என்பதே ஒருவித afterthought என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போதுதான் லஞ்சம் என்பது பத்தாயிரம் கோடிகளைத் தொடும். 1 லட்சம் கோடி என்றெல்லாம் சொன்னபின், பத்தாயிரங்களிலாவது இருக்கவேண்டும் அல்லவா?

உண்மையைப் பார்ப்போம். ஒவ்வொருவரிடமும் 300 கோடி ரூபாய் கேஷாகத் தரவேண்டும் என்று பேசப்பட்டது என்கிறார் அல்லவா குருமூர்த்தி? நடந்திருக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் அதுபோன்ற பணம் இங்கு கைமாறக்கூடிய ஓர் அளவில்தான் உள்ளது. ஆனால் பங்குகள் 20% என்று பேசப்பட்டாலும் ஒரே ஒரு நிறுவனம் தவிர வேறு யாரும் அதைத் தந்ததாகத் தெரியவில்லை. நிச்சயமாக யூனிநாரில் அப்படி ஏதும் இல்லை. (ஏதேனும் பினாமி ஹோல்டிங் = > பிற்காலத்தில் தரப்படும் என்றெல்லாம் சொன்னால் அதைப் பற்றி விளக்க எனக்கு திராணி இல்லை.) ஸ்வானில் சுமார் 5% பங்குகள் சந்தேகாஸ்பதமான ஒரு நிறுவனத்துக்குப் போய், அதன் விலை சுமார் 350 கோடி ரூபாய், பிற நபர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. எனக்கு என்னவோ, இந்த 5% = 350 கோடி என்பதுதான் பேசப்பட்ட பேரமோ என்று தோன்றுகிறது. செயல்படுத்தியதும் இந்த ஒரு நிறுவனம்தான். பிறர் ஒருவேளை பணமாகக் கொடுத்திருக்கலாம்.

அதற்குமேல் பணம் பெயர இந்த வகையில் வாய்ப்பே இல்லை. இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்திருக்கிறேன். ஆறு கம்பெனிகளும் சேர்ந்து குருமூர்த்தி சொன்னாற்போல ஆளுக்கு தலா 300 கோடி ரூபாய் கொடுத்தால், இங்கு நாம் பேசும் தொகை 2,000 கோடி ரூபாய்க்குள் உள்ளது. பழைய பெருச்சாளிகள் (டாடா சேர்த்து) எத்தனை கொடுத்தார்கள், என்ன பேசப்பட்டது என்று தன்னிடம் விவரம் ஏதும் இல்லை என்கிறார் குருமூர்த்தி. டாடா பற்றி நீரா ராடியா ஒலிப்பதிவில் செய்திகள் உள்ளன. உதாரணமாக பெரம்பலூர் மருத்துவமனை ஒன்றுக்கு டாடா அறக்கட்டளை மூலமாக சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் அனுப்புவது பற்றிய ஒரு துண்டு கிடைக்கிறது.

I did speak to Krishna Kumar, I did speak to him, he was supposed to tell the...take the...you see, let me tell you where they are coming from...they’re going ahead, they want to do that, they (are) doing the hospital in Perambalur, no problem right? But what they want to do is, and because the charter of the trust allows them to do it only in a particular manner, what they have to do is, they have to provide equipment for the hospital.

...

Or they provide say, certain wards, they’ll build certain wards or something. So the letter that we have to do, it’s not a cheque-cheque that we give, we actually have to give a letter, and based on that letter, when they start working on the hospital, on certain areas that I decided, between the wards or equipment, then those disbursements start happening.

*

வெறும் 2,000 கோடிதானே என்றெல்லாம் நான் சொல்வது அநியாயம் என்று என் புத்தகத்தைப் படித்த ஒரு நண்பர் எழுதியிருந்தார். பேசப்படும் தொகையுடன் ஒப்பிடும்போது வித்தியாசம் எங்கிருந்து வருகிறது என்பதை காட்டப் பயன்படுத்தப்பட்ட சொல் அது. ஊழலை நான் condone செய்யவில்லை.

இனி விஷயத்துக்கு வருவோம். சி.ஏ.ஜி கோமாளித்தனம் வெகு விரைவில் அம்பலமாகிவிடும். அவர்கள் எந்த கவனமும் செலுத்தாமல் காமாசோமாவென்று கணக்கு வழக்கு பார்த்துள்ளனர் என்பது புலனாகிவிடும். அடுத்து இராசா உண்மையில் ஏதேனும் ஊழல் செய்திருந்தார் என்றால் அதுவும் எத்தனை என்பது தெரிந்துவிடப்போகிறது. லஞ்சம் கொடுத்த கம்பெனிகளே இந்த விவரத்தைத் தெரிவிக்கப்போகிறார்கள். அதன்பின் பிரஷாந்த் பூஷண், சுப்ரமணியம் சுவாமி வழக்குகளை உச்ச நீதிமன்றம் கவனித்துக்கொள்ளும்.

இவற்றை மறந்துவிட்டு, நாம் முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்தலாம். அது, ஸ்பெக்ட்ரத்துக்கு ஏலம் வேண்டுமா, வேண்டாமா என்ற அடிப்படையான பொருளாதார, ஆட்சி முறையைப் பற்றியது. அதைப் பற்றி தனியாக விரிவாக எழுதவேண்டிய நேரம் இப்போதுதான் வந்துள்ளது. இதுவரையில் 1,75,000 கோடி ஊழல் என்ற அபத்தம் 99% மக்களைக் குழப்பியடித்தபடி இருந்தது. இந்த எண் அளவுக்கு ஊழலும் அல்ல ஒன்றும் அல்ல என்பதை இப்போது ஓரளவுக்குத் தெளிபடுத்தியாயிற்று என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் மீண்டும் ஒருமுறை குருமூர்த்தியின் ஆடியோவைக் கேட்டுவிடுங்கள்.

புத்தகக் கண்காட்சி பதிமூன்றாம் நாள்




.

Thursday, January 13, 2011

புத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்

நேற்று கண்காட்சிக்கு பா. ராகவன் உடல்நிலை காரணமாக வரவில்லை. மருதனின் நெருங்கிய உறவினர் மரணம் காரணமாக கடந்த இரு நாள்களாக கண்காட்சிக்கு வரவில்லை. எனவே நானும் பிரசன்னாவும் மட்டும்தான்.

.

Wednesday, January 12, 2011

கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது

தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை, மென்பொருள் விருது ஒன்றை கணியன் பூங்குன்றனார் பெயரில் உருவாக்கி வைத்துள்ளது. 2007-ம் ஆண்டிலிருந்துதான் இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அப்போது பனேசீ சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த தமிழ் இடைமுகம் கொண்ட அலுவல் செயலித் தொகுப்புக்கு அது தரப்பட்டது என்று ஞாபகம். அப்போது அறிவிக்கப்பட்டாலும், விருது 2010 கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்தான் தரப்பட்டது.

அடுத்து 2008, 2009 ஆண்டுகளுக்கான விருது பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. 2009-ம் ஆண்டுக்கான விருதுக்கு NHM Writer தமிழ் (மற்றும் பிறமொழிகள்) எழுதியை அனுப்பியிருந்தோம். அது தொடர்பான கூட்டம் இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது. பல்வேறு மென்பொருள்களையும் பரிசீலிக்க ஒரு நிபுணர் கூட்டம் வந்திருந்தது. ஐஐடி கான்பூர் சேர்மன் எம்.ஏ.ஆனந்தகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் டேவிதார், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராசேந்திரன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் எழிலரசு, உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் குணசேகரன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயதேவன், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத் தலைவர் செல்லப்பன், விஷ்வக் சொலுஷன்ஸ் வெங்கட்ரங்கன், இன்னும் பலரும் அரங்கில் இருந்தனர். ஒரு மென்பொருளுக்கு சுமார் 15 நிமிடங்கள் என்றுதான் செயல்விளக்கத்துக்கு நேரம் இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான விண்ணப்பங்கள் என்பதால் குறைந்தது 20-25 செயல்விளக்கங்கள் இருந்தன. நாங்கள்தான் கடைசி!

நாகராஜனும் நானும் நுழையும்போது அனைவரும் சோர்ந்துபோயிருந்தனர். பாவம்! நாங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. நாகராஜன் மென்பொருளை இயக்கிக்காட்ட, நான் மென்பொருளின் அருமை பெருமைகளை விளக்கிப் பேசினேன். உண்மையில் இதனை விளக்குவது எளிதாகவே இருந்தது. ஏனெனில் அறையில் இருந்த பலர் அந்த மென்பொருளை ஏற்கெனவே பயன்படுத்துபவர்கள். அதிலும் ஜெயதேவன் போன்ற இந்தியவியல் துறையைச் சேர்ந்தவர்கள் டயாக்ரிடிக் பயன்பாட்டைப் பெரிதும் சிலாகித்தார்கள். பொற்கோ உடனடியாக அதைச் செயல்படுத்தச் சொல்ல, அதிலேயே அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. டேவிதார் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியம் தரவில்லை. தான் அந்த லோகோ உள்ள மென்பொருளைப் பல மாதங்களாகப் பயன்படுத்துவதாகவும் ஆனால் அதன் பெயர்தான் என்.எச்.எம் ரைட்டர் என்று தனக்கு அப்போதுதான் தெரியவந்துள்ளது என்றும் சொன்னார். ஒரு பொருளை பிராண்டிங் செய்வது எளிதல்ல. பயன்பாட்டில் இருந்துகொண்டே இருந்தாலும்கூட அது எந்தப் பொருள் என்றே தெரியாது பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

நாங்கள் சந்தித்ததிலேயே உள்ள கடுமையான கேள்வி, இந்த மென்பொருளுக்கு தமிழில் ஏன் பெயர் இல்லை என்பது. அதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று தடுமாறினோம். அடிப்படையில் தமிழ் எழுத என்று உருவானாலும் இந்தியாவின், அதையும் தாண்டி உலக மொழிகள் பலவற்றையும் எளிதில் எழுத வகை செய்யும்படியே இந்த மென்பொருள் உள்ளது. உதாரணமாக இதைக் கொண்டுதான் பர்மிய மொழியில் இன்று பலரும் எழுதுகிறார்கள். பர்மிய ஆன்லைன் தளங்களில் இது தொடர்பான விவாதங்களை நீங்கள் பார்க்கலாம். சிங்களம், தாய், லாவோஸ், வியட்னாமிய, கம்போடிய, கொரிய மொழிகள் என கிட்டத்தட்ட (சீனம் தவிர்த்த) அனைத்து ஆசிய மொழிகளையும் இதைக்கொண்டு எழுதலாம். அந்த மொழிகளுக்கான கீபோர்ட் அமைப்புகளை உருவாக்குவது எளிது. ஆனால் இதனை நாங்கள் இதுகாறும் பெரிதாக விளம்பரப்படுத்தியதில்லை.

*

சரி நீண்ட பீடிகைக்குப் பின் விஷயத்துக்கு வருகிறேன். இன்று காலை தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து தொலைபேசிச் செய்தி. 2009-ம் ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருதுக்கு NHM Writer மென்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த விருதும் 16 ஜனவரி 2011 அன்று (சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகளுடன் சேர்த்து) வள்ளுவர் கோட்டம் விழாவில் தரப்படுமாம்.

இதன் ஆக்கியோன் என்ற முறையில் நாகராஜனுக்கும், இதனைப் பயன்படுத்தி, மேம்பாடுகளைக் கேட்டுப் பெற்றவர்கள் என்ற முறையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருதுக்கான பங்கு உள்ளது.

இதற்கான ஒரே கைம்மாறு, மேலும் பல இலவச மென்பொருள்களை உருவாக்கி உங்களுக்கு அளிப்பதே.

புத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்

தமிழ்பேப்பரில் நான் எழுதியது

இட்லிவடையில் ஹரன்பிரசன்னா எழுதியது

தன் வலைப்பதிவில் பா. ராகவன் எழுதியது

Tuesday, January 11, 2011

2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருதுகள்

2009-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல் விருதுகளை நேற்று தமிழக அரசு அறிவித்தது. விருதுபெற்ற நூல்கள் பல்வேறு துறைகளை (மரபுக் கவிதை, புதுக் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சுற்றுப்புறவியல், கணினிவியல், நாட்டுப்புறவியல், இதழியல், விளையாட்டு) சார்ந்தவை. தினமணி செய்தித்தாளிலிருந்து, விருது பெற்ற நூல்கள், ஆசிரியர்/பதிப்பாளர் தகவல் இதோ:

  1. பெரியார் காவியம், இரா. மணியன், சீதை பதிப்பகம்
  2. பூட்டாங்கயிறு, கவிஞர் கவிமுகில், வனிதா பதிப்பகம்
  3. ஏழரைப் பங்காளி வகையறா, எஸ். அர்ஷியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  4. ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள், ஆண்டாள் பிரியதர்ஷினி, ஏகம் பதிப்பகம்
  5. செம்பியன் தமிழவேள், சி. செந்தமிழ்ச்சேய், மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை
  6. பச்சைக்கிளியே பறந்துவா, பாவண்ணன், அன்னம் பதிப்பகம்
  7. அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ்
  8. செந்தமிழ் வளம்பெற வழிகள், கனகரத்தினம் (இலங்கை), மணிமேகலைப் பிரசுரம்
  9. கடவுள் ஒரு பொய் நம்பிக்கை, கு.வெ.கி. ஆசான், கயல்கவின்
  10. கம்போடியா நினைவுகள், கே.ஆர்.ஏ. நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ்
  11. தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வே.ரா. மணியம்மை, ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம்
  12. நீதிக்கட்சி வரலாறு, க. திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம்
  13. வளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல், ஆர்.வி. ஜெபா ராஜசேகர், ஈடன் பதிப்பகம்
  14. சந்திரயான், சி. சரவணகார்த்திகேயன், கிழக்கு பதிப்பகம்
  15. பெரியாரைக் கேளுங்கள், மா. நன்னன், ஏகம் பதிப்பகம்
  16. காப்புரிமை, எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம்
  17. தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள், கி. முப்பால் மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  18. கற்றலும் கற்பித்தலும், ஜவகர் சு. சந்தரம், கங்காராணி பதிப்பகம்
  19. வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு, ம. சுவாமியப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  20. தமிழ் இணையம், தமிழ் வலைதளங்கள்: பங்களிப்பும் பயன்பாடும், ம.செ. இரபிசிங், நர்மதா பதிப்பகம்
  21. நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை, சு. சண்முக சுந்தரம், காவ்யா பதிப்பகம்
  22. ஒரு பைசாத் தமிழன் அயோத்திதாச பண்டிதர், வே. பிரபாகரன், திருவள்ளுவர் ஆய்வு நூலகம்
  23. ஒன்றே சொல், நன்றே சொல் (3 தொகுதிகள்), சுப. வீரபாண்டியன், வானவில் புத்தகாலயம்
  24. ஒலிம்பிக் சாதனையாளர்கள், ப்ரியா பாலு, நர்மதா பதிப்பகம்

நியூ செஞ்சுரி/பாவையின் நான்கு புத்தகங்கள், நர்மதா, கிழக்கு, ஏகம் ஆகியவற்றுக்குத் தலா இரண்டு புத்தகங்கள் என விருதுகள் கிடைத்துள்ளன.

புத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்



மருதன் நேற்று கண்காட்சிக்கு வரவில்லை. முத்துக்குமார் எழுதியது.

Sunday, January 09, 2011

தெலங்கானா

ஆந்திரத்தைப் பிரிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அரசியலாக்குதல் என்று சொல்லுக்கான எதிர்மறைப் பொருளை மட்டும்தான் நாம் பொதுவாகப் பார்த்திருக்கிறோம். அதற்கு நல்ல அர்த்தம் தரக்கூடிய ஒரு பொருளும் உண்டு. பொதுக்களத்துக்கு வராத, பொதுமக்கள் அனைவரையும் பாதிக்காத, ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை பொதுக்களத்துக்குக் கொண்டுவந்து அனைத்து மக்களையும் யோசிக்கவைத்து, குறைந்தபட்சம் இதுதான் எனக்கு வேண்டும் என்று முடிவெடுக்கவைத்து விவாதங்களை நிகழ்த்தி, அதன் விளைவாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவைத்தலே அரசியலாக்குதல். அப்படிப் பல போராட்டங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தின் மொழி உரிமைப் போராட்டங்கள் அப்படிப்பட்டவையே. இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் அப்படிப்பட்டதே. மொழிவாரி மாநிலப் போராட்டங்கள் அப்படிப்பட்டவையே. ஜேபி இயக்கம் என்று சொல்லப்பட்ட எமர்ஜென்சிக்கு முந்தைய குஜராத், பிகார் மாணவர் போராட்டங்கள் அப்படிப்பட்டவையே. ராமஜன்மபூமி/இந்து எழுச்சி இயக்கம் அப்படிப்பட்டதே. வங்காள மொழி பேசுபவர்களைத் துரத்த முயன்ற அஸாம் மாணவர் இயக்கம், காஷ்மீர் பிரிவினை இயக்கம், சீக்கியப் பிரிவினை இயக்கம் ஆகியவையும் இப்படிப்பட்டவையே.

இந்த எல்லா இயக்கங்களும் போராட்டங்களும் முடிவில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நன்மையைத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. சில நாட்டையே பிளவுபடுத்தும். ஒருவரை ஒருவர் துவேஷத்துடன் பார்க்கச் செய்யும். அடையாளத்தை முன்வைத்துச் செய்யும் போராட்டங்கள் அனைத்துமே இப்படித்தான் முடியும்.

இந்த இயக்கங்கள், போராட்டங்களில் சில அடிப்படை குணாதிசயங்கள் இருக்கும். ஒருவித வஞ்சிக்கப்பட்ட மனநிலையை ஒரு பெரும் மக்கள் குழுவின்மீது இந்த இயக்கங்கள் சுமத்தும். அப்படி வஞ்சிக்கப்பட்டதாக நினைத்த மக்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் திரளவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டும். ஆரம்பத்தில் இந்த இயக்கத்தில் சேராத பலரும் நாளடைவில் சேர ஆரம்பிப்பார்கள். முன்னர் சேர்ந்த சிலர் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்; ஆனால் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றாமல் வேண்டுமானால் போகலாம். எப்படியாயினும் நாளடைவில் கூட்டம் அதிகமாகத்தான் போகும். வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றாலே, எதிராக வஞ்சிப்பவர்கள் என்று ஒரு கூட்டத்தை அடையாளம் காட்டியாகவேண்டும். இதில் உண்மை இருக்கவேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சில புள்ளிவிவரங்கள் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வஞ்சிப்பு என்பது தெளிவற்றதாக இருந்தால் மேலும் நல்லது. என்ன, நமது கூட்டம் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அது மட்டும் போதும்.

அதன்பின், மிக முக்கியமானது, மாணவர் குழுக்களை இதில் ஆத்மார்த்தமாக இறங்கவைப்பது. பொதுவாகவே மாணவர்கள் தங்கள் வயதுக்குரிய கொதிப்பிலும் கொந்தளிப்பிலும் இருப்பார்கள். பகுத்து ஆயும் மனநிலை அவர்களிடம் கிடையாது. அதை நம் கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருவதும் இல்லை. எனவே அவர்களை எளிதில் தூண்டிவிடலாம். இயக்கம் ஆரம்பித்தபிறகு அதைத் தடுக்க முனையும் காவலர்களையே வஞ்சிப்புக்கு உதாரணமாகக் காட்டிவிடலாம். பாருங்கள், நம்மை அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், ரப்பர் புல்லட்டுகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள்... ரத்தம்! ஆனால் மாணவர் கூட்டம் செய்யும் எதுவுமே நியாயம். பஸ்ஸைக் கொளுத்துவது, பொதுவாக எதிரிகள் என்று கருதுவோரை அடிப்பது, உதைப்பது, துரத்துவது... எல்லாமே நியாயம்.

இப்படி தெரு வன்முறையாக்கப்படும் அரசியல், தங்களது முக்கிய நோக்கத்திலிருந்து பிறழமுடியாதபடி முக்கியத் தலைவர்களே வாக்குக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் தெலங்கான ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் போன்றோர் தம் மாணவர்களிடம் வாக்களித்துவிட்டனர். தெலங்கானா பெற்றே தீருவோம்; அதிலிருந்து வழுவமாட்டோம். எனவே அவர்கள் வழுவ, மாணவர்கள் விடமாட்டார்கள். புலிவாலைப் பிடித்த சந்திரசேகர ராவ், அதன்மேல் சவாரி செய்தே தீரவேண்டும். ஒன்று அவர் இறக்கும்வரை, அல்லது புலி இறக்கும்வரை.

இந்த நிலையில் தெலங்கானாவுக்கு எதிரான இயக்கம் என்று ஒன்றுமே இல்லை. எதிர்ப்பு அனைத்துமே ஹைதராபாத் பற்றியதாகத்தான் இருக்கிறது. பிற ஆந்திரர்களின் ஒரே கவலை ஹைதராபாத்துக்கு என்ன ஆகும் என்பதே. கொட்டிக் கொட்டிச் செலவழித்த ஒரு நகரம் எதிராளிக்குப் போய்விடுமோ என்ற ஒரே கவலை. அதில் உள்ள நம் சொத்துகள் என்ன ஆகும் என்ற கவலை.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அளித்துள்ள ஆறு வழிகளில் தெலங்கானா பிரிவினையைத் தவிர வேறு எதுவும் நடைமுறைக்கு ஒவ்வாதது. தெலங்கானா மாணவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தெலங்கானா கிடைக்காததே அவர்களைப் பிறர் வஞ்சிப்பதன் காரணமாகத்தான் என்று அவர்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. எனவே வஞ்சிக்கப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு பெரும் மாணவர் கூட்டம் கொத்தித்துத்தான் எழும். வன்முறை வெடிக்கத்தான் செய்யும்.

எனவே சுவிட்சர்லாந்தில் நடப்பதுபோல, தைரியமாக அந்த மாநிலத்தைப் பங்கிட்டு இரண்டாக அல்லது மூன்றாக ஆக்கிவிடலாம். தவறே இல்லை. இதற்கு மத்திய அரசு செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். மற்ற இரண்டு நகரங்களை (அல்லது ஒரு நகரத்தை) ஹைதராபாத் அளவுக்கு மாபெரும் தரத்தில் கொண்டுவரத் தேவையான பெரும் தொகையை புது மாநிலத்துக்கு வழங்குவது. அது ஒன்றே போதும், எதிர்ப்பைச் சமாளிக்க.

இதைச் செய்யாமல் ஏன் மத்திய அரசு தடுமாறுகிறது?

இதேபோன்ற நிலை, நாளை தமிழகத்தில் ஏற்படுமா? கொங்கு மக்கள் பேரவை போன்றவை சும்மா குரல் கொடுக்கின்றனவே தவிர, அங்குள்ள மக்கள் தாம் வஞ்சிக்கப்பட்டதாக நிஜமாகவே நினைக்கிறார்களா?

புத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்




Saturday, January 08, 2011

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ‘ராஜா உத்தமன், ராணி உத்தமி’ என்று நான் எழுதியதாக ஒரு நண்பர் அங்கும் இங்கும் எழுதியபடி உள்ளார். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

நேற்று கபில் சிபல் தெளிவாக சில வாதங்களை எடுத்து முன்வைத்தார். அதில்கூட அவர் பலவற்றை முழுவதும் தெளிவாக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு, என் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை கீழே கொடுக்கிறேன்:

யூனிடெக்  கட்டுமான நிறுவனம், யூனிடெக் டெலிகாம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறது. அதற்குத் தேவையான பணத்தை முதலீடு செய்கிறது. யூனிடெக் டெலிகாம்தான் 1,658 கோடி ரூபாய் கொடுத்து உரிமத்தை வாங்குகிறது. இந்த யூனிடெக் டெலிகாமை அந்நிய நிறுவனம் ஒன்று யூனிடெக் கட்டுமான நிறுவனத்துக்கு 9,100 கோடி ரூபாய் கொடுத்து முற்றிலுமாக வாங்கிவிட்டால்தான் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 9,100  கோடி ரூபாய் என்று சி.ஏ.ஜி முடிவெடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அடிப்படையான ஒரு தவறைச் செய்துள்ளனர்.

யூனிடெக் டெலிகாம் நிறுவனம் புதிதாக வெளியிடும் சில பங்குகளை வாங்கி அந்தப் பங்குகளுக்காக 6,120 கோடி ரூபாயை யூனிடெக் டெலிகாமிடம் கொடுத்துள்ளது டெலிநார் நிறுவனம். அதாவது இந்தப் பணம் யூனிடெக் கட்டுமான நிறுவனத்துக்குப் போகவில்லை. மாறாக யூனிடெக் டெலிகாமுக்குப் போகிறது. அந்த நிறுவனம் யூனிநார் என்று பெயர் மாற்றம் பெறுகிறது. இப்போது யூனிநார் என்ற இந்தப் புதிய நிறுவனத்தின் சொத்து என்ன? மிகவும் தவறாக, சி.ஏ.ஜி, இந்தப் புதிய நிறுவனத்தின் சொத்து வெறும் ஸ்பெக்ட்ரம்தான் என்று முடிவு கட்டுகிறது. ஆனால், உண்மையில் இந்த நிறுவனத்தின் சொத்து, ஸ்பெக்ட்ரம் + 6120 கோடி ரூபாய் பணம். அதற்கான மொத்த மதிப்புதான் 9,100  கோடி. அப்படியானால் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 2,980 கோடி ரூபாய்தான். (இதனை முதலீட்டுத்துறை பரிபாஷையில் ப்ரீ-மனி வேல்யுவேஷன், போஸ்ட்-மனி வேல்யுவேஷன் என்பார்கள்.) யூனிடெக் கட்டுமான நிறுவனம் செய்திருக்கும் இன்னபிற செலவுகளையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், உண்மையில் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 2,500 கோடிக்கு மேலாக இருந்திருக்காது. நிச்சயமாக, ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு அதிகமாகியுள்ளது, ஆனால் சி.ஏ.ஜி செய்துள்ள எளிமையான தவறு காரணத்தினால், இந்த மதிப்பு 5 மடங்கு அதிகமானாற்போலக் காட்டப்படுகிறது.

ஆக, யூனிடெக் 1,658 கோடி ரூபாய் செலவு செய்து 2,500 கோடி மதிப்புள்ள பங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதைக்கூட அவர்கள் வெறும் பேப்பராகத்தான் கையில் வைத்துள்ளனர்; பணமாக அல்ல. இதைப் பணமாக அவர்களால் எப்போது பெறமுடியும்? தம் கையில் இருக்கும் பங்குகளை விற்கும்போதுதான். யார் அந்தப் பங்குகளை வாங்குவார்கள்? இன்றைய தேதியில் யாரும் வாங்கமாட்டார்கள். ஆனால் யூனிநார் நாடெங்கும் கிளை பரப்பி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, ஏகப்பட்ட முதலீடுகளைச் செய்து, அதன்பின்னர் நிறைய வருமானம் பார்த்து, பின் லாபம் அடைந்து, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படும் நிலைக்கு வந்தால்தான் (அல்லது வேறு யாராவது யூனிடெக் கையில் உள்ள பங்குகளை வாங்குவதாக முடிவு செய்தால்தான்) அவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
ஸ்பெக்ட்ரத்தை இந்தப் பக்கம் வாங்கி, அந்தப் பக்கம் நகர்த்தியதால், அது திடீரென ஐந்து மடங்கு மதிப்புஉயர்ந்துவிட்டதாக சி.ஏ.ஜி காட்டும் கணக்கு அடிப்படை அக்கவுண்டன்சி விதிகளுக்குப் புறம்பானது. எப்படி இதனை நாட்டின் உயர்ந்த அதிகாரி முன்வைத்துள்ளார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
அரசுக்கு நஷ்டம் என்ற வாதத்தை நான் மறுத்திருக்கிறேன். சி.ஏ.ஜி அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் அக்கவுண்டன்சி அரிச்சுவடி தெரியாதவர்கள் செய்தது என்று என் புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சி சென்று இந்தப் புத்தகத்தை வாங்கி, மேலும் நான் என்ன எழுதியுள்ளேன் என்பதைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

புத்தகக் கண்காட்சி நான்காம் நாள்



ஹரன்பிரசன்னா இட்லிவடை இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார் போலும்! ஹரன்பிரசன்னா எழுதி அனுப்பிவிட்டாராம்.


மருதனும் தூக்கத்தில்தான் .

Wednesday, January 05, 2011

கதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி

அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினங்கள் - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு - எப்போது நாட்டுடைமையாயினவோ, அன்றுமுதல் பல பதிப்பகங்களும் அவற்றைப் பதிப்பித்து வருகின்றன. இன்று குறைந்தது 15 பதிப்பகங்கள் எனக்குத் தெரிந்து இவற்றைப் பதிப்பிக்கின்றன. விலை அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. ஆனால், தாளும் அச்சும் மார்ஜினும் எழுத்துரு அளவும் அனைவருக்கும் பிடித்துள்ளதா என்றால் இல்லை. எனவே விலையைப் பற்றிக் கவலைப்படாத, நல்ல தரமான புரொடக்‌ஷனை விரும்புபவர்களுக்காக என்று இவற்றைக் கொண்டுவருவதில் நாங்களும் இறங்கியுள்ளோம்.

பொன்னியின் செல்வன் மாபெரும் வேலை. அதை மெய்ப்புப் பார்ப்பது நடந்துகொண்டிருக்கிறது. அதற்குள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மற்ற இரண்டும் வெளியாகின்றன. சிவகாமியின் சபதம் வந்துவிட்டது என்று அரங்கிலிருந்து பிரசன்னா சொன்னார். கெட்டி அட்டைப் பதிப்பு. 1200 பக்கங்களுக்கு மேல். ஆனால் விலை ரூ. 350 மட்டுமே. பார்த்திபன் கனவு சுமார் 400-த்தி சொச்சப் பக்கங்கள். விலை ரூ. 100 மட்டுமே (பேப்பர்பேக்) - இது அடுத்த ஓரிரு தினங்களில் ஸ்டாலுக்கு வந்துவிடும்.

பொன்னியின் செல்வனும் விரைவில் கிடைக்கும். மே மாதம் ஆகிவிடலாம்.


  

கதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்

மேற்கு வங்க முதல்வர் காம்ரேட் ஜோதிபாசு மறைந்தவுடன் கொண்டுவந்த புத்தகம், என். ராமகிருஷ்ணன் எழுதிய அணையாத ஜோதி பாசு. ஆரம்பகால கம்யூனிஸ்டுகள் எல்லோருமே வசதியான வாழ்க்கை பின்னணியிலிருந்துதான் வந்துள்ளனர். பாசுவும் விதிவிலக்கல்ல. மேற்கு வங்கத்தை கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக ஆக்கியதில் பெரும் பங்கு பாசுவுடையது. பாசு தன் இறுதிக்காலம் வரை தரைமீதுதான் நடந்தார்; வானில் பறக்கவில்லை. அப்பழுக்கற்ற தன்மை, பணிவு ஆகியவை கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்களுக்கு எப்போதுமே பண்புகளாக இருந்துள்ளன.

பாசுவின் வாழ்க்கை வரலாறை எழுதிய என். ராமகிருஷ்ணன் கட்சிக்காரர். சி.பி.எம் அலுவலகத்திலேயே இருப்பவர். எனவே கிரிடிகலாக பாசுவின் வாழ்க்கையைப் பற்றி அலசி அராய்ந்து தவறுகள் இருந்தால் அவற்றைப் பட்டியலிட்டு... என்றெல்லாம் இருக்காது. பாசுவின் வாழ்க்கையும் அரசியலும் பணியும் ஒரு நேர்மறை... அய்யோ இலவசக் கொத்தனார் திட்டுவார்... நல்லவிதமான முறையில் கொடுக்கப்பட்டிருக்கும்.

மருதன் கம்யூனிஸ்ட் பார்ட்டியில் கார்டு வைத்திருக்கும் உறுப்பினர் அல்லன். ஆனாலும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்! சீன அதிபர் ஹூ ஜிந்தாவ் பற்றிய புத்தகம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வ வல்லமை பொருந்திய தலைவர் பற்றிய ஓர் ஓவியத்தை நமக்கு அளிக்கிறது. நம் ஊரில்தான் காலம் மாறும், காட்சிகள் மாறும், தலைவர் மாறுவர், கொள்கைகள் மாறும். சீனாவில் தலைவர்கள் அப்படியெல்லாம் எளிதில் மாறிவிடுவதில்லை. அவர்களாகப் போனால்தான் உண்டு.

உலகின் மிக முக்கியமான, அதி வல்லமை படைத்த தலைவர் என்ற பட்டம் அமெரிக்க அதிபரிடமிருந்து சீன அதிபரிடம் வரப்போகும் இந்தக் காலகட்டத்தில், அந்த இடத்தில் இருக்கும் மனிதரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

அறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்

புலி வருது புலி வருது என்று சொல்லி இப்போது வந்தேவிட்டது! சில மாதங்களாகவே மின் புத்தகப் படிப்பான் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். அது ஜவ்வு போல இழுத்துக்கொண்டே சென்றது.

அமேசான் கிண்டில் முதல் நம்மூர் விங்க் வரை ஏகப்பட்ட மின் படிப்பான் கைக்கருவிச் சாதனங்கள் இருக்கும்போது, இப்போது இது என்ன என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு கைக்கருவி அன்று. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயக்குதளத்தில் இயங்கும் ஒரு மென்பொருள் மட்டுமே. (ஆண்டிராய்ட், ஐபேட் ஆகியவற்றுக்குப் பின்னர் கிடைக்கும்.) சரி, அப்படியே என்றால்கூட புதிதாக ஒன்றை உருவாக்கவேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். நாங்களும் தேடிப் பார்த்தோம். எதுவும் சரியாகச் சிக்கவில்லை.

எங்கள் தேவை இப்படியாக இருந்தது: அச்சில் இருப்பதைப் போன்றே லுக் அண்ட் ஃபீல் இருக்கவேண்டும். ஆனால் யூனிகோட் லேயர் சப்போர்ட் இருக்கவேண்டும் - அதாவது யூனிகோடில் தேடினால் தேடிய வார்த்தை புத்தகத்துக்குள் கிடைக்கவேண்டும். படிப்பது மட்டுமல்ல, புத்தகம் வாங்குவதும் எளிதாக இருக்கவேண்டும். அதாவது ஐட்யூன்ஸ் போல, படிக்கும் மென்பொருளுக்கு உள்ளாகவே e-commerce வசதியும் இருக்கவேண்டும். என்னென்ன புத்தகங்கள் மின்-வடிவில் கிடைக்கும் என்பது தெரியவேண்டும், உடனேயே அவற்றைச் சொடுக்கி, வாங்கும் வசதி இருக்கவேண்டும்.

எழுத்தாளர்கள் தரப்பில் இருந்து பார்த்தால், DRM வசதி இருக்கவேண்டும். ஒருவர் டவுன்லோட் செய்து அடுத்தவருக்கெல்லாம் இலவசமாக அனுப்புவது மாதிரி இருக்கக்கூடாது. அதே நேரம் ஒருவர் காசு கொடுத்து வாங்கினால் குறைந்தது இரண்டு மெஷினிலாவது அவர் படிப்பதாக இருக்கவேண்டும்.


நாங்கள் அறிமுகப்படுத்தும் NHM Feedle இவற்றைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்கிறது. இதற்கு ஆல்ஃபா டெஸ்டர்களை எதிர்பார்க்கிறோம். எங்களுக்குத் தேவை 100 பேர். feedle@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் செய்யும் முதல் 100 பேருக்கு மென்பொருளைத் தரவிரக்கம் செய்யும் சுட்டியை அனுப்புவோம். மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 2003, 7 ஆகியவற்றில் மட்டுமே இயங்கக்கூடியது. நீங்கள் ஏற்கெனவே NHM இணையக் கடையில் பதிந்திருந்தால் உங்கள் பதிவு ஐடியை (கவனியுங்கள், ஐடி மட்டும், பாஸ்வேர்ட் அல்ல) feedle@nhm.in மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் இப்போது பதிவுசெய்து, அந்த ஐடியை எங்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு ரூ. 200 மதிப்புள்ள இணையக் கூப்பனை அனுப்புவோம். அதைக் கொண்டு எங்கள் மின் புத்தகச் சந்தையில் கிடைக்கும் சில புத்தகங்களை நீங்கள் வாங்கி அவற்றைப் படித்துப் பார்த்து, இந்த முறை பயனுள்ளதாக இருக்கிறதா என்றும் இந்த மென்பொருளில் என்னென்ன முன்னேற்றங்கள் செய்யலாம் என்றும் எங்களுக்குச் சொல்லலாம்.

உங்களது கருத்துகளை ஏற்று, மென்பொருளில் வேண்டிய மாற்றங்களைச் செய்து, அடுத்த 15 நாள்களில் ஒரு பீட்டா வெர்ஷனை வெளியிடுவோம். அப்போது, அனைவரும் அதனைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு நாங்கள் வெளியிட்டுள்ள பெரும்பாலான புத்தகங்கள் அனைத்தும் அப்போது இணையச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் நாங்கள் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களும் (எவற்றுக்கு மின் புத்தக உரிமையும் உள்ளனவோ, அவை மட்டும்தான்) இந்த வழியில் கிடைக்கத் தொடங்கும்.

மின் புத்தகங்களுக்கான விலை, அச்சுப் புத்தகங்களின் விலையைவிடக் குறைவாக இருக்கும். எவ்வளவு குறைவு என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. பீட்டா ரிலீஸின்போது முடிவாகிவிடும்.

உலகம் முழுதும் பரவியிருக்கும் கிழக்கு பதிப்பக வாசகர்கள், இப்போது புத்தகம் அச்சாவதற்கு முன்னரேயே மின் புத்தகங்களை வாங்கிவிட முடியும் என்பது மாபெரும் வசதி. மேலும் தமிழகத்தின் பிற பதிப்பாளர்களிடமும் பேசி, அவர்களது புத்தகங்களும் இந்த வகையில் கிடைக்குமாறு செய்யப்போகிறோம்.

முடிவாக:

NHM Feedle ஆல்ஃபா சோதனையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் செய்யவேண்டியது: feedle@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அனுப்பவேண்டியது.

ஆல்ஃபா சோதனையின்போது தேவை 100 பேர் மட்டுமே.

கதம்பம் - 5

ஒரு நாள் ரீடிஃப்.காம் இணையத்தளத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண்ணைப் பற்றிய கதை இருந்தது. அவர் எப்படி, குடும்ப வன்முறையில் சிக்கி, பின் கணவரைப் பிரிந்து, இருக்கும் கொஞ்சம் காசைக் கொண்டு கடற்கரையில் பஜ்ஜி போட்டு விற்று, பின் படிப்படியாக முன்னேறி உணவகத்தை நடத்தி வருகிறார் என்று அதில் விளக்கியிருந்தார்கள். அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றது கட்டுரை. உடனே பா. ராகவனைத் தொடர்புகொண்டேன். இந்தப் பெண்மணியைத் தொடர்புகொண்டு இந்தக் கதையைப் புத்தகமாகக் கொண்டுவரமுடியுமா என்று கேட்டேன்.

அடுத்த இரண்டே நாள்களுக்குள் பேட்ரீஷியா நாராயணைத் தேடிப் பிடித்துப் பேசியாகிவிட்டது. ராம்கிதான் அவருடன் பேசி, புத்தகத்தை எழுத்து வடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் என்பது முடிவாகியது. அதன்பின் நடந்தது எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் ஒரு மாதத்துக்குள் ஒருவிதமாக அடிப்படை மேனுஸ்க்ரிப்ட் தயாராகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கரு உதித்த நேரத்திலிருந்து அதை இவ்வளவு சீக்கிரம் செயல்படுத்திவிட முடியும் என்பதே மனநிறைவைத் தந்தது.

பொதுவாக வெற்றிக்கதைகள் எழுதும்போது ஆதார விஷயங்கள் பல வெளியில் வரா. இப்பிடித்தாங்க கஷ்டப்பட்டேன், அப்புறம் இப்படி வெற்றி அடைஞ்சிட்டேன் என்று பொதுவாகச் சொல்லிவிடுவார்கள். அதனால் வளரும் தலைமுறையினருக்கு எந்தப் பயனும் இல்லை. ஈரோட்டில் இப்படிப்பட்ட வெற்றியாளர் ஒருவரைச் சந்தித்தேன். மிகச் சாதாரணப் பின்னணியில் இருந்து நல்ல உயரத்தை அடைந்துள்ள் கோடிசுவரர். அவரது கதையை எழுதுவதுபற்றிப் பேசியபோது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஜகா வாங்கிவிட்டார். இன்னும் பலரை அணுகவே முடிவதில்லை. அதனால்தான் திரும்பத் திரும்ப பில் கேட்ஸ், வாரன் பஃபட் என்று அமெரிக்கர்களைப் பற்றி எழுதவேண்டியிருக்கிறது. லயன் டேட்ஸ், கோல்ட்வின்னர் சன் ஃப்ளவர் ஆயில், கே.பி.என் டிரான்ஸ்போர்ட் போன்றோர்தான் நமக்கு உத்வேகம் ஊட்டவேண்டியவர்களாக இருக்கவேண்டும். அவர்களைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை என்பது சோகம்.

பேட்ரீஷியாவின் கதை பிரமாதமான கதை. அதில் சாதனைகள் உண்டு. பல சோகங்களும் உண்டு. ஆனால் சோகங்களையும் மீறி அவர் சாதனைகள் தொடர்கின்றன.

சோம. வள்ளியப்பன் எழுதிய புத்தகம் எதுவுமே இல்லையா என்று கேட்டிருந்தார் ஒரு வாசகர். 2010-ல் அவர் எழுதி நாங்கள் வெளியிட்டது ஒரேயொரு புத்தகமே. ‘தள்ளு’ என்ற மோடிவேஷன் பற்றிய புத்தகம். பல நேரங்களில் நமக்கு வேலையே ஓடுவது இல்லை. ஏன் என்று தெரியாது. சுரத்தே இல்லாமல் உட்கார்ந்திருப்போம். ஆனால் சில நாள்களில் வேலை படு சுறுசுறுப்பாகச் செல்லும். சில அலுவலகங்களில் மேனேஜராக இருப்பவருக்கு கீழே இருப்பவர்களிடமிருந்து எப்படி வேலை வாங்குவது என்றே தெரியாது. வேறு சிலரோ நைஸாகப் பேசி, தாஜா பண்ணி, ஊக்குவித்து வேலையைச் செய்யவைத்துவிடுவார்கள். இந்த ‘ஊக்கம்’ என்பது என்ன, ‘ஊக்குவிப்பது’ எப்படி? தனியாளாக நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்வது எப்படி?

இதுபோன்ற சில விஷயங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது. சுய முன்னேற்றப் புத்தகங்களைப் படித்தால் போதாது. அவற்றின் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களையாவது தீவிரமாக முயற்சி செய்து பார்க்கவேண்டும். அப்போதுதான் பலன்கள் கிடைக்கின்றனவா, இல்லையா என்று தெரியும்.

சென்ற பதிவில் சமையல் சுல்தான் பற்றிச் சொல்லியிருந்தேன். அப்போதே சொல்ல நினைத்து சொல்ல மறந்துபோன பா. ராகவன் புத்தகம் உணவின் வரலாறு. வேத காலத்திலிருந்து ஆரம்பித்து எப்படி பல்வேறு கலாசாரங்களில் உணவைப் பார்த்திருக்கிறார்கள் என்பது பற்றிய தொடர், குமுதம் ரிப்போர்ட்டரில் வந்தது. இதில் டெர்ரரிஸ்டுகள் குண்டுகளை வெடிக்கமாட்டார்கள். அதிகம் சாப்பிட்டால் உங்கள் தொப்பைதான் வெடிக்கும்!

உணவு பற்றி நினைக்கும்போது நாஞ்சில் நாடனும் நினைவுக்கு வந்துவிடுகிறார். நாஞ்சில் நாடன் பற்றிச் சொல்லும்போது ஜெயமோகன் சொன்னார்... நாஞ்சில் நாடன் வெறுமனே உப்புமா என்று எழுதுவதில்லை; கடுகு, உளுந்து தாளித்துச் செய்த உப்புமா என்றுதான் எழுதுவார். உணவை அவர் ருசியுடன் மட்டும் சேர்த்து எழுதுவதில்லை, சமையல் செய்பவரின் பார்வையிலிருந்தும் எழுதுகிறார்.

பா. ராகவன் உணவின் வரலாறு அத்தியாயம் அத்தியாயமாக எழுதும்போது பத்திரிகைக்கு அனுப்புவதற்குமுன் அவற்றை அலுவலகத்தில் தனிச் சுற்றுக்கு விடுவார். மதிய உணவின்போது அந்த அத்தியாயம் அலசப்படும். உணவு மட்டும்தான் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும் என்றில்லை, உணவு செய்யும் ரெசிப்பியும் உணவு பற்றிய அனைத்துத் தகவல்களும்கூட.

கேபிள் சங்கர் எனப்படும் சங்கர் நாராயணின் சினிமா வியாபாரம் நூல் பற்றி பெரும்பாலானோர் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். அது பகுதி பகுதியாக அவரது வலைப்பதிவில் வந்தது. ஏதோ ஒரு மொட்டைமாடிக் கூட்டத்தின்போது அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதற்கான கரு உருவானது. அதன்பின் சிலமுறை அதன் அவுட்லைன் பற்றி மின்னஞ்சல் பரிமாறிக்கொண்டோம். சங்கர் ஒரு சில அத்தியாயங்களை அனுப்பினார். அதனை நான் பார்க்க நேரம் ஆனது. ஒரு கட்டத்தில் தாமதம் ஆகும் என்று தோன்றியபோது அவரிடம் நான் அனைத்தையும் பகுதி பகுதியாக வலைப்பதிவில் எழுதிவிடுங்கள் என்று சொன்னேன். பின்னர் வலைப்பதிவில் ஏகப்பட்ட வரவேற்பு. பின்னர் அவற்றைத் தொகுத்து அவர் அனுப்பிவைத்தார். எடிட்டிங்கின்போது மேலும் சில தகவல்கள் தேவைப்பட, அவற்றையும் சேர்த்து புத்தகமாக ஆக்கப்பட்டது. என்னைப் பொருத்தமட்டில் இது மிக எளிமையான ஆரம்பம் மட்டுமே. இந்தப் புத்தகத்தையே மேலும் விரிவாக்கவேண்டும். சொல்லாமல் விட்ட பல செய்திகள் உள்ளன. சினிமா உலகின் சூட்சுமங்கள் வெளியில் இருப்பவர்களுக்குத் துளியும் தெரிவதில்லை. உள்ளே இருப்போர்தான் அவற்றை வெளியில் உள்ளோருக்குத் தெரிவிக்கவேண்டும்.

(தொடரும்)

புத்தகக் கண்காட்சி முதல் நாள்

இங்கே எழுதப்போவதில்லை. தினம் தினம் குட்டி வீடியோவுடன் தமிழ்பேப்பரில் வெளியாகும். நேற்றைய ரிப்போர்ட் இங்கே.



Tuesday, January 04, 2011

கதம்பம் - 4

நமது கலாசாரம் என்றுமே பணத்தை வெறுத்ததில்லை. லட்சுமி என்று பணத்தைத் தெய்வமாக வழிபடுவதுதான் நம் இயல்பு. பணம் பெருகவேண்டும் என்றுதான் சொல்கிறேமோ தவிர, பணத்தைக் கொள்ளையடிக்கவேண்டும் என்று சொல்வதில்லை. மோசமான வழியில் ஈட்டிய செல்வம் தங்காது என்றுதான் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லித்தந்துள்ளனர். அதே நேரம், சரியான, நியாயமான வழியில் செல்வம் ஈட்டவேண்டும்; அப்படி ஈட்டியபின் அதனை படாடோபமாகச் செலவழித்து அல்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது; ஈட்டிய செல்வத்தை வறியவர்களுக்கு வாரி வழங்கவேண்டும் என்றும் நாம் நீதிநூல்களிலிருந்து அறிகிறோம்.

இந்தச் செல்வத்தை எப்படி ஈட்டுவது? வெறும் கடின உழைப்பு போதாது. சினிமாவில்தான் பால்கார அண்ணாமலை ஒரு பாடலின் ஆரம்பத்தில் பால் கறக்க ஆரம்பித்து பாட்டின் முடிவில் பணக்காரர் ஆவார். தேவை நிறைய முதலீடும் அல்ல. தேவை சரியான யோசனைகள். சட்டெனத் தோன்றும் சின்னஞ்சிறு பொறி, உங்களைத் தூண்டவேண்டும். செலுத்தவேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தி, வெற்றிகரமாக ஆக்க நீங்கள் உழைக்கவேண்டும். அதாவது உழைப்பு தேவை; ஆனால் சரியான யோசனை அதற்குமுன் தேவை. சும்மா மாடு போல் உழைத்தால் அலுப்புதான் மிஞ்சும். ப்ரஸன்னாவின் பணமே ஜெயம் என்ற இந்தப் புத்தகம் பல நிஜ வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லி, உங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் சில ஐடியாக்களை வெளியே கொண்டுவரக்கூடும்.

முத்துராமலிங்கத் தேவர் பற்றிய புத்தகத்தை எங்கள் வாசகர்கள் வெகுநாள்களாகக் கேட்டபடி இருந்தனர். சில பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை, இந்த முறை முத்துராமலிங்கத் தேவர் புத்தகம், பாலு சத்யா எழுத்தில் வெளியாகிறது. தேவர் ஒரு தேசியத் தலைவராக, காங்கிரஸ்காரராக, சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளராக, தமிழகத்தில் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் ஒரே முகமாக வளைய வருகிறார். குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார் தேவர். இதன் பலனாக, தென் தமிழகத்தின் பல சாதிகள் விடுதலை பெறுகிறார்கள். இந்தப் புத்தகம் சர்ச்சைகள் பற்றியதல்ல. இருந்தாலும் இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கு, முதுகுளத்தூர் கலவரம் ஆகியவை பற்றியும் தகவல்கள் இருக்கின்றன.

இன்று தேவர் பெயரைச் சொல்லி குருபூஜையில் கலந்துகொள்ளாத கட்சிகளே இல்லை. தேவர், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குக் கடவுள். அவர் முருகனுடன் ஐக்கியமாகிவிட்டதாகவே இவர்கள் நம்புகின்றனர். அந்த அளவுக்கு ஒரு சமுதாயப் பிரிவினர் ஒருவர்மீது வைத்திருக்கும் மதிப்பு, மரியாதையின் காரணம் என்ன? இந்தப் புத்தகம் ஓரளவுக்கு அதனை ஆராய்கிறது.

இரா. முருகன் 2006-ல் எழுதி வெகு நாள்களாக வைத்திருந்து, இந்த ஆண்டு வெளியாகிறது, அவரது ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய புத்தகம். இரா. முருகனை இலக்கியவாதியாக மட்டுமே உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். மென்பொருள் துறையில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கும் இவர் எழுதிய மூன்று விரல் புத்தகம் ஒரு புரோகிராமரின் வாழ்க்கையை சுவைபடக் கூறுகிறது. ப்ராஜெக்ட் ‘எம்’ என்பது முருகன் தினமணி கதிரில் தொடராக எழுதியது. கடினமான ஒரு சப்ஜெக்டைச் சொல்ல, இரா. முருகன், ஒரு டிஜிட்டல் சாமியாரை உருவாக்கியிருப்பார். அந்த சாமியாருடன் அவருடைய சிஷ்யர்கள் நடத்தும் உரையாடலின் வழியாக ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்டின் சூட்சுமங்கள் வெளிவரும். இது சாமானியர்களுக்கான புத்தகம் அல்ல. ஆனால், ஏதோ நிறுவனத்தில் மென்பொருள் புரோகிராமர்களாக இருந்தீர்கள் என்றால், ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக விரும்புகிறீர்கள் என்றால் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் வாங்குங்கள். உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

சென்ற பதிவில் எழுத மறந்த சொக்கனின் புத்தகம், கம்ப்யூட்டர் கையேடு. கிழக்கிலிருந்து கம்ப்யூட்டர் தொடர்பாக ஒரு புத்தகமும் வரவில்லை. இது கம்ப்யூட்டர் வாங்க விரும்பும், கம்ப்யூட்டரை இப்போதுதான் வாங்கியிருக்கும் ஒருவருக்கான புத்தகம். வெகு நாள்களுக்குமுன் நான் இந்தப் புத்தகத்தை எழுத விரும்பினேன்! அதற்கான அவுட்லைனும் போட்டிருந்தேன். ஆனால் எழுதும் பக்குவமும் சுறுசுறுப்பும் வரவில்லை. பெரும்பாலானோர் தவறு செய்வது சரியான கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதில்தான். எங்கள் அலுவலகத்திலேயே இரண்டு பேர் மாகிண்டாஷ் கம்ப்யூட்டர் வாங்கவேண்டும் என்று துடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. சொக்கனின் புத்தகம் அங்குதான் ஆரம்பிக்கிறது.

சொக்கனின் புத்தகம் சிறு குழந்தைக்குச் சொல்லித்தருவதுபோல, கம்ப்யூட்டரில் எந்தெந்தப் பிரச்னை வந்தால், எப்படிச் சரி செய்யவேண்டும், வைரஸ் என்றால் என்ன, அது எப்படி கணினியைத் தாக்கும், அதிலிருந்து மீள்வது எப்படி, இணையச் சேவைகள் என்னவெல்லாம் உள்ளன, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது போன்ற பலவற்றையும் அழகாகச் சொல்லித்தருகிறது.

(தொடரும்)

நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா

நேற்று ரஷ்ய கலாசார மையத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில், 2010-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படத்துண்டுகள் கீழே. நாஞ்சில் நாடன் பேச வருவதற்குள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிவிட்டதால், அவர் பேசுவதை வீடியோ எடுக்கமுடியவில்லை. ஆடியோ மட்டும்தான்.


வரவேற்புரை, சிறில் அலெக்ஸ்


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக வாசகர் ராஜகோபாலன்


நாடக நடிகர் பாரதி மணி


இயக்குனர் பாலு மகேந்திரா


பத்திரிகையாளர் ஞாநி


எழுத்தாளர் ராஜேந்திர சோழன்


எழுத்தாளர் கண்மணி குணசேகரன்


எழுத்தாளர் ஜெயமோகன்


எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ஏற்புரை

Monday, January 03, 2011

கதம்பம் - 3 - வரலாறு முக்கியம்

இந்திய வரலாறின் அனைத்துப் பகுதிகளையும் புத்தகங்களாக நிரப்புவது எங்கள் விருப்பம். முகில், சென்ற புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவந்த புத்தகங்கள் முகலாயர்கள், அகம் புறம் அந்தப்புரம். அடுத்து எழுதுவதாகச் சொன்னது கிழக்கிந்திய கம்பெனி. ஆனால் அது தயாராகவில்லை. அதற்கு பதில் நடந்தது இரண்டு. ஒன்று முகிலின் திருமணம். அடுத்தது கிளியோபாட்ரா பற்றிய புத்தகம். (இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.) ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லச் செல்ல, நமக்குக் கிடைப்பது குழப்பமான சித்திரம்தான். முழுமையான வரலாறல்ல. அந்தச் சித்திரத்தில் நிறைய சுவையான கதைகள் இருக்கலாம். அதே அளவுக்குக் கட்டுக் கதைகளும் கலக்க நேரிடுகிறது. புராண காலம் தாண்டி, வரலாற்றுக் காலத்தில் உலக வரலாற்றில் மிக அதிக அதிகாரம் கொண்டிருந்தவளாக நாம் அறியும் பெண் கிளியோபாட்ராதான். அவள் அடிமையா, ராணியா? சூழ்ச்சியில் வீழ்ந்தவளா, சூழ்ச்சி செய்தவளா? அவளுடைய வம்சம் என்ன ஆனது? அனைத்தையும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.

பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய இந்திய வரலாறை எழுதுவது கடினம். நம் அரசர்களைப் பற்றி சில மேலோட்டமான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்படும் மெய்கீர்த்திகள் மட்டும்தான். அவற்றிலிருந்து வரலாறைத் தெளிவாக எழுதுவது எளிதல்ல. ஆனாலும் மிக முக்கியமான இந்திய வரலாற்று அறிஞர்கள் அதனைச் செய்துள்ளனர். பிற்காலச் சோழர்கள் (விஜயலயன் தொடங்கி), அதிலும் முக்கியமாக ராஜராஜன் காலம்தொட்டு நமக்கு நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன. சோழர்கள் காலம் தமிழகக் கல்வெட்டுகளின் பொற்காலம். ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரியகோயிலே ஒரு மாபெரும் ஆவணம். அதன் வெளிப்புறச் சுவர்கள் ஒரு மாபெரும் புத்தகம். இந்தக் கோயில் மட்டுமல்ல, சோழர் காலக் கோயில்கள் அனைத்திலும் மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுகின்றன. ச.ந.கண்ணன் எழுதியுள்ள ராஜராஜ சோழன், ஒரு பாபுலர் புத்தகம். எளிதாகப் படிக்கக்கூடியவகையில், சுவாரசியம் குன்றாத வகையில், தேவையான அளவு தகவல்களுடன் வெளிப்படுகிறது இந்தப் புத்தகம்.

கதம்பம் - 2

சொக்கன் எங்கள் ஆஸ்தான எழுத்தாளர். அவர் எந்த நிறுவனத்திலாவது வேலை செய்கிறாரா அல்லது முழு நேர எழுத்தாளரா என்று நான் பல நேரங்களில் சந்தேகப்பட்டதுண்டு.

இந்த ஆண்டு அவர் எங்களுக்கு எழுதிய புத்தகங்கள் முன் ஆண்டுகளைவிடக் குறைவுதான். அவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.

2010-ல் சொக்கனின் முதல் புத்தகம் மணிமேகலை. கோவை செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக சில புத்தகங்களைச் செய்தோம். அதில் ஐம்பெருங்காப்பியங்களில் கதை அறியத் தெரிந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய மூன்றையும் முதலில் கொண்டுவர முடிவெடுத்தோம். சொக்கன் தவிர மீதி இருவரும் முதல்முறை எழுத்தாளர்கள். கே.ஜி.ஜவர்லால் சிலப்பதிகாரத்தையும், சொக்கன் மணிமேகலையையும் ராம் சுரேஷ் (எனப்படும் பெனாத்தலார்) சீவக சிந்தாமணியையும் எளிய தமிழில் கொண்டுவந்தனர். பாராட்டையும் பெற்றதோடு இந்தப் புத்தகங்கள் வேகமாக விற்பனையும் ஆயின என்பது சந்தோஷமான செய்தி. சொக்கன் ஏற்கெனவே முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய தமிழில் எழுதிவந்தார். அது மடலாடற்குழுக்களிலா அல்லது தினம் ஒரு கவிதை குழுவிலா, எதில் வந்தது என்று இப்போது ஞாபகம் இல்லை. (உலா என்னும் தமிழ் பிரபந்த வகையின் ஆரம்பம் இதில்தான் உள்ளது.) பின்னர் ஜவர்லால் திருக்குறளை எளிய உரைநடை மாதிரியில் எழுதினார்.

இந்தப் புத்தகங்கள் ஒரு பியூரிடனுக்குக் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் எங்கள் நோக்கம், தமிழர்கள் தம் இலக்கிய வகைகளை சம்பிரதாயமான முறையில் அணுகாமல் அவற்றின் சுவைக்காகவும் கருத்துக்காகவும் அணுகவேண்டும் என்பது. அதற்கு, அதன் முந்தைய பழந்தமிழ் நடையை முற்றிலும் விலக்கவேண்டிய அவசியமாகிறது. புதிய வடிவ உத்திகளை மேற்கொள்ளவேண்டியதாகிறது. இந்த அளவுக்கு சுதந்தரத்தை எடுத்துக்கொள்ளும்போது சில தவறுகளும் அசம்பாவிதங்களும் ஏற்படலாம். அவை சுட்டிக்காட்டப்பட்டால் நிச்சயமாகத் திருத்திக்கொள்வோம். இந்த இலக்கியங்களை எந்தவிதமான ஐடியலாஜிகல் முன்முடிவுகளுடன் நாங்கள் அணுகவில்லை.




           

சொக்கன் சினிமா எடுப்பவராக இருந்தால், அம்பானி ட்ரைலாஜி எடுத்திருப்பார்! திருபாய் அம்பானி பற்றிய சொக்கனின் புத்தகம் சுமார் 40,000 பிரதிகளுக்குமேல் விற்றுள்ளது; 50,000-ஐத் தாண்டிவிட்டதா என்று தெரியவில்லை. பார்க்கவேண்டும். அடுத்து 2009-ல் முகேஷ் அம்பானி பற்றிய புத்தகத்தை எழுதியிருந்தார். அப்போதே அனில் அம்பானி பற்றி எழுதவேண்டுமா என்று யோசித்து, கைவிட்டு, பிறகு மீண்டும் தட்டி எடுக்கப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் இது.

சொக்கன் எழுதி 2010-ல் வராமல் 2011-ல் வரப்போகும் சில புத்தகங்கள் கைவசம் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்ப்போம். இந்த ஆண்டின் முக்கியமான கிழக்கு புத்தகங்களில் இரண்டில் ஒன்று அந்தமான் சிறை பற்றிய சொக்கனின் புத்தகம். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்ததும், அவர்களுடைய சில அரக்கத்தனங்களைக் கூடவே எடுத்துவந்தனர். மரணதண்டனை தராமல், ஆனால் அதேபோன்ற அளவுக்கு, அல்லது அதைவிடக் கடுமையான தண்டனையாக அவர்கள் உருவாக்கியதுதான் தொலைதூரத் தீவு ஒன்றில் ‘கைதி’களை அடைத்துவைப்பது. அப்படித்தான் அவர்கள் ஆஸ்திரேயாவைப் பயன்படுத்தினார். அதேபோல இந்தியக் கைதிகளுக்காக அவர்கள் உருவாக்கியதுதான் அந்தமான் தீவுச் சிறை. இந்தியாவின் சில முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்கள் அந்தமானில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். சொக்கனின் புத்தகத்தில் இந்தச் சிறை பற்றிய முழுமையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

இதில் ஒரு சோகம் என்னவென்றால், இன்றும்கூட அந்தமான் இந்திய அரசால் சிலரை ஒளித்துவைக்கப் பயன்படுகிறது என்பதுதான். அந்தமானில் நடக்கும் பல நிழலான காரியங்களை இந்திய அரசு அல்லது அதன் உளவுத்துறையினர் நடத்துகின்றனர். அதன் சில குரூரங்களில் ஒன்றை நந்திதா ஹக்சரின் புத்தகமான வஞ்சக உளவாளியில் நீங்கள் படிக்கலாம்.

சென்ற ஆண்டு, சென்னை புத்தகக் கண்காட்சியில் சக்கைப்போடு போட்டது ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய ரகோத்தமனின் புத்தகம். இந்த ஆண்டு வெளியீடு சொக்கன் எழுதியுள்ள மகாத்மா காந்தி கொலை வழக்கு. மகாத்மா காந்தி கொலையில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. சுட்டது நாதுராம் வினாயக் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். பள்ளிக்கூடப் புத்தகத்தில் இதை நாம் படிக்காமல் பாஸ் பண்ணுவது இல்லை. அதனைத் தாண்டி மாலன் எழுதிய ஜனகணமன என்ற புதினத்தில் இது தொடர்பான பல செய்திகள் உள்ளன. இந்தப் புத்தகத்தில் சொக்கன், முழுக் கதையை, உயிரோட்டத்துடன் எழுதியுள்ளார். காந்தி கொலையில்தான் மர்மம் இல்லையே தவிர, ஏன் கொல்லப்பட்டார், இந்தக் கொலை அவசியம்தானா? கொலைகாரர்களும் கூடத் திட்டமிட்டவர்களும், இந்தக் கொலையைத் தவிர்த்திருக்க முடியாதா? காந்தி என்ற முரட்டுப் பிடிவாதக்காரர் ஏன் தனக்கு யாரும் பாதுகாப்பு தருவதை விரும்பவில்லை? காந்தி உயிரோடு இன்னும் சில காலம் இருந்திருந்தால் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

(தொடரும்)

கதம்பம் - 1

நாளை புத்தகக் கண்காட்சி ஆரம்பம். நேற்றே மழை பெய்துவிட்டது என்பதால் இனி மழை இருக்காது என்பது பிரசன்னாவின் கருத்து. அதுவும் நாளை அனுமத் ஜெயந்தியாம்! அதனால் அனுமன் எந்தவித இடையூறும் இல்லாமல் காப்பாராம். பொதுவாக புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு நான் போகமாட்டேன். ஒன்று மழை பெய்யும். அல்லது கருணாநிதி வருவதால் தாங்கமுடியாத கெடுபிடியாக இருக்கும். இம்முறை போகலாம் என்றிருக்கிறேன். சென்றமுறை கருணாநிதி ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ புத்தகத்தைத் திட்டி அதற்கு பிரசித்தி தேடித் தந்தார். அதற்கு முந்தைய ஆண்டு, சென்னைக் காவல்துறையினர், பிரபாகரன் புத்தகத்தை அரங்கில் வைத்து விற்கக்கூடாது என்று தடைபோட்டுவிட்டுப் போனார்கள். இம்முறை சர்ச்சைகள் இல்லாத ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். நானே ஒரு நாள் (10 ஜனவரி 2011) அரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இம்முறை தினம் ஒரு வீடியோ என்று புத்தகக் கண்காட்சியைப் படமெடுத்துப் போடலாம் என்றும் நினைத்துள்ளேன்.

***

குறிப்பிடவேண்டிய பல புத்தகங்கள் உள்ளன. எனவே புத்தகக் கண்காட்சி தொடங்கினாலும், என் புத்தகக் குறிப்புகள் தொடரும்.

பேய்! பேயை நம்பும் ஒரு சமூகமாகவே நாம் உள்ளோம். இப்போது நிறைய வயதானதற்குப்பின், பகுத்தறிவுத் திறன் வளர்ந்துள்ளது என்பதால் நான் பேயை நம்புவதில்லை. அமானுஷ்யம் என்பதே கிடையாது என்பது என் இப்போதைய கருத்து. ஆனால் எங்கள் அலுவலகத்தில் பேய் என்னும் கருத்தை நம்புபவர்கள்தான் அதிகம் என்று பா.ராகவன் ஒரு நாள் மதிய உணவின்போது கண்டுபிடித்தார். அதிலிருந்தே பேய் பற்றி ஒரு புத்தகம் வேண்டும் என்று முயற்சி செய்து சஞ்சீவி என்பவரைக் கொண்டு எழுதவைத்தார். சஞ்சீவி, பாக்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருந்தவராம். புத்தகத்தின் அட்டையைப் பற்றி மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். அட்டையைப் பார்த்தாலே பகீர் என்று பயமாக இருக்கிறது; இதை வாங்க மக்கள் பயப்படலாம் என்கிறார்கள். எனக்கு இது விசித்திரமாகத் தோன்றுகிறது. அட்டையப் பார்த்தால் நீங்கள் பயந்தா நடுங்குகிறீர்கள்? பேயை நம்புபவரா நீங்கள்? நம்பினாலும் நம்பாவிட்டாலும் வாங்கிப் படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்!

மாமல்லபுரத்துக்கு கடந்த ஒரு வருடத்தில் 20 முறையாவது சென்று வந்திருப்பேன். அதுதவிர தமிழகத்தின் வேறு சில கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்றுவந்திருப்பேன். தஞ்சாவூரோ, கங்கைகொண்ட சோழபுரமோ, புகளூரோ, புதுக்கோட்டையின் எண்ணற்ற சிற்பக் களஞ்சியங்களோ, முத்தரையர்கள், அதியமான்கள் உருவாக்கிய திருச்சி, சேலம் மாவட்டக் கலைச்செல்வங்களோ, எதுவாக இருந்தாலும் அதுபற்றிய தகவல் அந்த இடங்களில் துளிக்கூட உருப்படியாக இருக்காது. ஓர் ஊருக்குப் போனால் அந்த ஊரில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது பற்றிய தகவல் சொற்பமே. இதில் ஒரு சிறு முயற்சியாக, மிக மிக அடிப்படை முயற்சியாக, ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளோம். தமிழக சுற்றுலா வழிகாட்டி எனப்படும் இந்தப் புத்தகம் எங்கள் அலுவலகத்தின் ப்ராடிஜி தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருக்கும் தமிழ் சுஜாதா எழுதியது. (தமிழ்பேப்பரில் பெண் மனம் தொடரை எழுதுபவர்.) இனி வரும் நாள்களில் தனித்தனியாக, பல்வேறு தமிழக சுற்றுலா இடங்கள் பற்றி மிக விரிவான புத்தகங்கள் வெளியாகும். இந்தப் புத்தகத்தில் மேற்கொண்டு என்ன சேர்க்கலாம், எப்படி விரிவாக்கலாம் என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம்.

அரவிந்தன் நீலகண்டனின் நம்பக்கூடாத கடவுள், தமிழ்பேப்பரில் தினசரி வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. பொதுவாக எனக்கு தனிப்பட்ட முறையில் கட்டுரைத் தொகுப்புகள் வெளியிடுவதில் நம்பிக்கை குறைவு. எனக்குப் படிக்கப் பிடிக்கும் என்றாலும், பொதுவாக வாசகர்கள் கட்டுரைத் தொகுப்புகளை வாங்குவதில்லை என்பது வணிக நிதர்சனம். இலக்கியவாதிகள் எழுதும் கட்டுரைத் தொகுப்புகள் விற்பனை ஆவதுண்டு. ஆனால் அ-இலக்கியவாதிகள் விஷயம் அப்படி இல்லை. அரவிந்தன் நீலகண்டன் விஷயத்தில் வேறுவிதமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். தமிழ்பேப்பரின் கட்டுரைகள் வெளியானபோது மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணிய கட்டுரைகள் இவை. அரவிந்தன் நீலகண்டன், இந்துத்துவச் சிந்தனையாளர். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதனை ஓர் இந்துத்துவப் பார்வையுடன் விமரிசிப்பவர். அவருடைய பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையல்ல. என் பல கருத்துகளுக்கு காட்டமான முதல் வினை அவரிடமிருந்து வந்துள்ளது. ஆனால் பொருட்படுத்திப் படிக்கவேண்டிய சிந்தனைகள் அவருடையவை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. (இப்போது ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் இருவரும் எழுதியுள்ள ஒரு பெரிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கத்தை எடிட் செய்துகொண்டிருக்கிறேன். ஜனவரியில் வெளியாகவேண்டும்.) தமிழ்பேப்பரின் கட்டுரைகள் அடங்கிய அரவிந்தனின் புத்தகம் ‘நம்பக்கூடாத கடவுள்’ என்ற பெயரில் வெளியாகிறது.

பாலா ஜெயராமன். இவரும் தமிழ்பேப்பரில் பத்தி எழுதுகிறார் (உலக மகா வில்லன்கள் பற்றி). அது அவரது மூன்றாவது கிழக்கு வெளியீடாக வெளியாகும். அதற்குமுன் இரண்டு, முழுமையான புத்தகமாக எழுதி வெளியாகியுள்ளன. ஒன்று: கடல் கொள்ளையர் வரலாறு. அடுத்தது அணுகுண்டின் அரசியல் வரலாறு. அவர் எழுதியுள்ள ஆங்கிலப் புத்தகம் ஒன்றும் என்.எச்.எம் வெளியீடாக 2011-ல் வெளிவரும்.

   

சமையல் புத்தகங்கள் பலவற்றை 2009-ல் பதிப்பித்தோம். 2010-ல் கொஞ்சமாக விடுமுறை. வெகுசில புத்தகங்கள்தான் கொண்டுவந்துள்ளோம். ஆனால், நேரடியான சமையல் புத்தகமாக இல்லாமல், மிக சுவாரசியமான புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளோம். சமையல் சுல்தான் என்ற இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஃபைவ் ஸ்டார் செஃப் சுல்தான் என்பவர். இது தொடராக 1990-களில் ஆனந்தவிகடனில் வெளியானது. 2010-ல் ஒரு நாள் மதியம் சுல்தான் என்னைப் பார்க்க வந்தார். தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தான் ஷெராடன் குழுமத்தின் பணியாற்றியதாகவும் இப்போது தனியாளாக காண்ட்ராக்ட் வேலைகள் செய்வதாகவும் சொன்னார். உதாரணமாக தில்லி காமன்வெல்த் போட்டிகளின்போது சமையல் ஒப்பந்தம் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். பில் கிளிண்டன், சதாம் ஹுசேன் போன்ற வெளிநாட்டுப் பிரபலங்கள் முதல், சென்னையின் பல அரசியல்வாதிகள், மந்திரிகள், நடிகர்கள் என்று பலருக்குச் சமையல் செய்துபோட்டிருக்கிறார். திப்பு சுல்தான் காலத்துச் சமையல் குறித்தும் பாண்டியர் காலத்துச் சமையல் குறித்தும் ஆராய்ச்சிகள் செய்துவருகிறார். அவ்வளவு சுவாரசியமான மனிதர். தன் அனுபவம் ஒவ்வொன்றுடன் ஒரு பிரத்யேக ரெசிப்பியும் சேர்த்துக் கொடுத்துள்ளார் இவர். சமைக்கத் தெரியுமோ அல்லது சாப்பிட மட்டும் தெரியுமோ, எப்படியாயினும் இந்தப் புத்தக்த்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.

(தொடரும்)

Saturday, January 01, 2011

திராவிட இயக்க வரலாறு

திராவிட-ஆரிய வரலாற்றாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்தியாவில் பெரும்பாலும் கேள்வி கேட்கப்படாமல் உருவான இருமைப் புலம் இது. இந்தியாவின் பிற பகுதிகளில் எப்படியோ, தமிழ்நாட்டில் கோலோச்சும் ஒரே கோட்பாடு இதுதான்!

ஆரியம் - திராவிடம் என்ற பிரிவு உண்மையா, யார் எங்கிருந்து வந்தனர், யாரது பண்பாடு எப்படிப்பட்டது என்பது பற்றிப் பேசவேண்டிய பதிவு இதுவல்ல. ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பார்ப்பனர் அல்லாத சாதிப்பிரிவினர் சிலர் தாங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் பிரிட்டிஷ் அரசின் வேலைகளிலும் படிப்பிலும் மிகவும் பின்தங்கி இருப்பதையும், ஆனால் எண்ணிக்கையில் குறைவாக இருந்தும் பார்ப்பனர்கள் வேலைகளில் மிக அதிகமாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து, அரசியல் உணர்ச்சியால் உந்தப்பட்டு ஓர் அமைப்பை உருவாக்கினார்கள்.

தமிழகத்தின் வரலாறு மாறியது.

ஜஸ்டிஸ் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கம், பின்னர் பெரியார், அண்ணா என்று நீண்டு, தமிழகத்தின் அரசியலில் முக்கியமான இடம் வகிப்பதோடு இந்திய அரசியலின் போக்கையும் மாற்றியுள்ளனர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பெரியார், அண்ணா பெயர் சொல்லாத அரசியல் கட்சி தமிழகத்தில் வாக்குகளை வாங்கவே முடியாது; இடங்களைப் பிடிக்கவே முடியாது என்பதுதான் இன்று தமிழகத்தின் நிலவரம். காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்று சூளுரைக்கும் காங்கிரஸ் கட்சி, திமுக, அஇஅதிமுக இரண்டுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்துப் பிழைக்கவேண்டியதுதான் நிலை. சமூகநீதி, இட ஒதுக்கீடு என்ற வார்த்தைகளைச் சொல்லாத கட்சி தமிழகத்தில் இருப்பதற்கே இடமில்லை.

ஆக, திராவிட இயக்கம் எனப்படும் இந்த நூறாண்டு கருத்தாக்கத்தின் வரலாறு என்ன? இதன் முக்கிய பாத்திரங்கள் எப்படி இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றனர். அவர்களுக்கு இடையேயான பூசல்கள் எப்படி வரலாற்றின் திசையை மாற்றின. இவற்றை விரிவாகச் சொல்லும் புத்தகம்தான் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு - இரு பாகங்கள்.

முதலில் ஒரு பெரும் புத்தகமாகக் கொண்டுவருவதாகத்தான் முடிவு செய்திருந்தோம். சுமார் 900 பக்கங்கள் வருவதாக இருந்தது. பின்னர் வாசகர்களையும் அவர்களது மனிபர்ஸையும் மனத்தில் வைத்துச் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இரண்டு தொகுதிகளாக, கெட்டி அட்டை இல்லாமல், பேப்பர் பேக் வடிவில் வருகிறது. இரண்டும் சுமார் 400, 400 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ. 200/-

ராமச்சந்திர குஹாவின் எழுத்து நடையால் உந்தப்பட்டு முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் ஒரிஜினல் மேற்கோள்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார். நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்கள் முதற்கொண்டு பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், பாரதிதாசனும், கண்ணதாசனும், சம்பத்தும், மதியழகனும், நெடுஞ்செழியனும், வைகோவும், ராமதாசும், இன்னும் பலரும் அவரவர் வார்த்தைகள் ஊடாகவே கதையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

புத்தாண்டில் நீங்கள் படிக்கவேண்டிய முக்கியப் புத்தகங்களில் இது கட்டாயம் இருக்கவேண்டும். இந்திய வரலாற்றுடன் தமிழகத்தின் தனி அரசியல் வரலாறையும் முழுமையாகக் கொண்டுவருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

2011-ம் ஆண்டு மிக நல்ல ஆண்டாக அமைய உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

பாகம் 1 | பாகம் 2
.