Friday, July 29, 2005

ஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா

இன்று என் ஆல்மா மேடர் ஐஐடி மெட்ராஸின் 42வது பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினராக வருவது திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அஹ்லுவாலியா.

இன்றைய நிகழ்ச்சிகளை இணையத்தில் சூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்போகிறார்களாம். இருந்தாலும் எனக்கு அழைப்பிதழ் வந்துள்ளபடியால் நேரடியாகவே போய்ப் பார்த்துவிடலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

Thursday, July 28, 2005

தொலை-நோக்குப் பார்வையில் தொலை-தொடர்பு

சமீபத்தில் எஸ்ஸார் நிறுவனம் பிபிஎல் மொபைல் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது. இது விரைவில் ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்று தெரிகிறது.

மற்றொருபக்கம் டாடா வி.எஸ்.என்.எல் சில மாதங்களுக்கு முன் டைகோ என்னும் கடலடியாக இணையக் குழாய்களை நிர்வகிக்கும் நிறுவனத்தை வாங்கியிருந்தது. இந்தக் குழாய்கள் மூலம் தொலைபேசி அழைப்புகள், இணைய பிட்/பைட்கள் என்று ஏகப்பட்ட போக்குவரத்தை நிர்வகிக்கலாம். இந்த வாரம் வி.எஸ்.என்.எல் டெலிக்ளோப் என்னும் கனடாவிலிருந்து வேலை செய்யும் (பஹாமாஸில் பதிவு செய்யப்பட்ட) நிறுவனத்தை வாங்கியுள்ளது. டெலிக்ளோப் உலகளாவிய சர்வதேச தொலைபேசி இணைப்புகளை நிர்வகிக்கும் நிறுவனம். இந்த நிறுவனம் சென்ற வருடம் ITXC என்னும் இணையம் மூலமான தொலைபேசிச் சேவையை அளிக்கும் (VoIP) நிறுவனத்தை வாங்கியிருந்தது. ஆக இதன்மூலம் வி.எஸ்.என்.எல் தற்பொழுது மூன்று முக்கியமான ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடிய நிறுவனங்களை வாங்கியுள்ளது.

VoIP சேவைகள் இன்னமும் சில வருடங்களின் இந்தியாவில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும். இன்னும் சில வருடங்களில் உலகிலேயே இணையம் மூலமான தொலைபேசிச் சேவைதான் பெரும்பங்கு வகிக்கும் என்று தோன்றுகிறது. அப்பொழுது வி.எஸ்.என்.எல் டைகோ, டெலிக்ளோப், ஐ.டி.எக்ஸ்.சி ஆகியவற்றின்மூலம் பெரும் லாபம் சம்பாதிக்கமுடியும்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை வி.எஸ்.என்.எல்/டாடா குழுமம் தொலை-தொடர்புத் துறையில் சற்றே குழப்பமான நிலையில்தான் உள்ளது. வேகமாக வளரும் இந்தத் துறையில் டாடா மிக மெதுவாகவே முன்னேறுகிறது.

சரி, இதெல்லாம் கிடக்கட்டும். அடுத்த நான்கைந்து வருடங்களில் இந்தியாவில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும்? எனது ஆரூடங்கள் பலிக்குமா என்று சில வருடங்கள் கழித்துப் பார்க்கலாம்.

1. இந்தியா முழுமைக்குமாக தொலைபேசிக் கட்டணம் ஒரேமாதிரியாக ஆகும். அதாவது உள்ளூர்க் கட்டணம் என்று ஒன்று. அதற்கடுத்து நீங்கள் சென்னையிலிருந்து தில்லியைக் கூப்பிட்டாலும் சரி, திருச்சியைக் கூப்பிட்டாலும் சரி, நிமிடத்துக்கு ஒரே கட்டணம்தான்.

2. மொபைல் தொலைபேசிச் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் முதலில் ஆறாகவும், பின் ஐந்தாகவும் சுருங்கும். இவை நாடு முழுவதுமாக மொபைல் சேவையை அளிக்கும். அத்துடன் National Roaming எனப்படும் சேவை தனியாக அளிக்கப்படாமல், தானாகவே எந்த அதிகக் கட்டணமுமின்றி உங்களுக்குக் கிடைக்கும். "நான் 'ரோமிங்ல' இருக்கேன், அப்புறம் கூப்பிடு" என்று யாரும் சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால் ரோமிங் என்ற வார்த்தையை வெளிநாட்டுக்குப் பயணிக்கும் 3% மக்களைத் தவிர பிறர் அறியவேமாட்டார்கள்.

3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்கள் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் ஓர் எண்ணைப் பெற்றுவிட்டால் வேறு யாரிடமும் சேவையை மாற்றினாலும் அதே எண்ணை (வேண்டுமென்றால்) வைத்துக்கொள்ளலாம்.

4. கட்டணமில்லா எண்கள் (Toll-free numbers) இப்பொழுதே இருக்கின்றன. ஆனால் சேவையை அளிப்பவர்களுக்குக் காசு அதிகம். ஆனால் வெகு விரைவில் எளிமையாக, எல்லா தொழில் நிறுவனங்களும் உபயோகிக்குமாறு குறைந்த விலையில் கட்டணமில்லா எண்கள் பெருகும்.

5. டயல்-அப் இணைய இணைப்புக்கு ஒரு ISPக்கு நாடு முழுவதற்குமான ஒரே எண்ணைப் பயன்படுத்தலாம் என்றாகும். டயல்-அப் கட்டணங்கள் வெகுவாகக் குறையும், ஆனாலும் டயல்-அப் உபயோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும். கம்பியில்லா இணைப்புகள் வழியாகவே இணையம் பெரும்பாலும் கிடைக்கும்.

6. கேபிள் டிவி வளர்ந்தது போல ஊருக்கு ஊர் சிறு தொழில்முனைவோரால் கம்பியில்லா இணைப்புகளைக் கொடுக்கும் ஐ.எஸ்.பிக்கள் தோன்றும். பின் இவற்றைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவார்கள். 60% மக்கள் வயர்லெஸ் மூலமே இணைய இணைப்பைப் பெறுவார்கள். 30% பேர் டி.எஸ்.எல், கேபிள் போன்ற அகலப்பாட்டை இணைய இணைப்பையும், 10%க்கும் குறைவானவர்களே டயல்-அப் முறையிலான இணைய இணைப்பையும் வைத்திருப்பார்கள்.

7. இந்திய மொபைல் செல்பேசிச் சேவை நிறுவனங்கள் 3G என்றெல்லாம் தொடர்ந்து பொய்பேசுவார்கள். ஆனால் மொபைல் நுகர்வோர் எண்ணிக்கை 15-20 கோடியைத் தாண்டியவுடன்தான் இதுபோன்ற அகலப்பாட்டை சேவையை அளிப்பார்கள்.

8. ஹட்ச், பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகியவை தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டதும், இந்தியாவின் மிகப்பெரிய பத்து நிறுவனங்களுள் (மார்க்கெட் கேபிடலைசேஷனில்) ஐந்து, தொலை-தொடர்பு நிறுவனங்களாக இருக்கும். மீதி ஐந்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி இருக்கும்.

Tuesday, July 26, 2005

கருட புராணம்

சேலம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான ஒரு புத்தகம் 'கருட புராணம்'.

தமிழ் அணங்கு ரஜினிகாந்த்

நம்ம நண்பர் ரஜினி ராம்கி, சந்திரமுகி பட 100வது நாளை முன்னிட்டு, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு "எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே... உன் சீரிளமை திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!" என்று ஒரேயடியாகப் புகழ, அவரது பதிவில் அடிதடி நடக்கிறது. மவனே, தமிழ்த் தாயை வாழ்த்தும் பாட்டால் ஒரு கன்னடனைப் போயா என்பது முதல் பல கோமாளித்தனமான சிரிப்பு சமாசாரங்கள் அங்கே நடந்தேற...

நாம் சும்மா இருக்கலாமா? சென்னையில் வலைப்பதிவு மீட் என்றாலே மீட் இல்லா தயிர்சாத வுட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் மட்டும்தானா என்று கலகவிரும்பி ரோசாவசந்த் தண்ணியடிக்கும் மீட் ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தார். நமக்குத்தான் பிராப்தி இல்லையே. இகாரஸ் பிரகாஷ், உருப்படாத நாராயணன், கார்டூனிஸ்ட் அருள் செல்வன், ரஜினி ராம்கி ஆகியோர் கலக்கிக்கொண்டிருக்க நான் சடாலென்று உள்ளே புகுந்து ஒரு கிளாஸ் ஆரஞ்ச் ஜூஸை ஒரே கல்ப்பில் (எதுவும் கலக்காமல் ராவாக) அடித்து, சுதி ஏற்றிக்கொள்ள கொஞ்சம் வறுத்த நிலக்கடலை, கார கொண்டக்கடலை சுண்டல் என்று மஜாவாக முழுங்க, கிக் ரொம்ப ஏறியதால்...

அதெப்படி சூப்பர் ஸ்டாரை "அணங்கு" என்று சொல்லலாம் என்று ராம்கியை சண்டைக்கு இழுத்தேன்.

அணங்கு என்பது கொஞ்சம் டேஞ்சரான சமாசாரம். சும்மா ஒரு பெண்ணின் பருவத்தை வைத்து கொடுக்கப்படும் பெயர் என்று பிரகாஷ் நினைக்கிறாப்போல விஷயம் இல்ல.

ஆய், ஊய், அணங்கு பத்தி ஜார்ஜ் ஹார்ட் (நம்மூர்ல எதாவது பெரிய விஷயம் பத்தி சொல்லனும்னா முன்னெல்லாம் ஜார்ஜ் ஹார்ட், காமில் ஸ்வெலபில் அப்பிடின்னு ரெண்டு பேரையாவது எடுத்து வுட்டாத்தான் வேலை செய்யும். வேணுமுன்னா ஏ.கே.47 ராமானுஜத்தையும் அப்பப்ப கூப்டலாம்) என்ன சொல்லிக்கிராரு தெரியுமா என்று ஃபிலிம் காட்ட நினைத்து, பக்கத்தில் அருள் செல்வன் இருப்பதைப் பார்த்து தடாலென பின்வாங்கினேன்.

நாம அருள் செல்வன் எதைப் படிச்சு வச்சிருக்காருன்னு தெரியாம ஜார்ஜ் ஹார்ட் அத்தைச் சொன்னாரு, இத்தைச் சொன்னாருன்னு சொல்லப்போக, வண்டவாளம் வெளில தெரிஞ்சுட்டா என்னாவறதுன்னு, அதெல்லாம் இப்ப வேண்டாம், ரோசாவசந்த் இளையராஜாவோட திறமையைப் பத்தி பேசிக்கிட்டிருக்கறதத் தொடரட்டும்னு, சும்மா ஒக்காந்துட்டேன்.

அப்புறம் பிரகாஷும், ரோசாவசந்தும் இளையராஜாவோட சினிமாப் பாட்டுங்களை பிச்சு எடுத்துகிட்டிருந்தாங்க. கீழ லேடஸ்ட் தீம்தரிகிட இதழ். அதுல நிறைய பியர் சிந்தி இருந்துச்சு! நடுநடுவுல அருள் செல்வன் அமைதியா ஆழமா ஏதோ சொல்லிகிட்டிருந்தாரு. நாராயணன் அமைதியா ரோசாவசந்த் தட்டுல இருக்கற மீன ஒரு கை பாத்துகிட்டிருந்தாரு. ரஜினி ராம்கி தன்னோட சீட்டை எனக்குக் கொடுத்துட்டு கொஞ்சம் குள்ளமான சேர்ல உட்கார்ந்துகிட்டு பேச்சை ரஜினி படம் பாக்கற ஆர்வத்தோட கவனிச்சிகிட்டிருந்தாரு.

திடீர்னு, "பிரேம்-ரமேஷ் இளையராஜாவப் பத்தி என்னதான் சொல்லவரார்"னு பிரகாஷ் கேட்க, ரோசாவசந்த் "இப்படி 'என்னதான் சொல்ல வரார்னு' சாராம்சத்தை கேட்டு பிரேம்-ரமேஷ் இருவரையும் கேவலப்படுத்தாதீங்க. Essense என்னன்னு கேக்கக்கூடாது"ன்னு கண்டிச்சார். பின் நவீனத்துவத்தின் முக்கியமான பாடத்தை பிரகாஷ் அப்பத்தான் கத்துகிட்டார். அங்கேர்ந்து அ.மார்க்ஸ் (கார்ல் மார்க்ஸ் இல்லை), குணசேகரன், இளையராஜா, தேவா, திருவாசகம் ன்னு மிகத் தீவிரமா பேசப்பட்ட விஷயங்களை நான் அரை மணி நேரம் கேட்டுட்டு, "நாளைக்கு ஈகோ-ட்ரிப் ப்ளாக்ல ஜார்ஜ் ஹார்ட் அணங்கு பத்தி என்ன சொன்னார்னு சொல்றேன்"னு இடத்தைக் காலி பண்ணிட்டு வந்துட்டேன்.

அதனால் நண்பர்களே... George Hart சொல்வது என்னவென்றால், "Any woman who had come of age and was sexually attractive was thought to be filled with aNangu. This sacred power was thought to reside in her breasts and, to a lesser extent, in her loins." - The Poems of Ancient Tamil, University of California Press, 1975, (Chapter 5, The Role of Sacred Power in Ancient Tamil Culture).

Monday, July 25, 2005

மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகள்

கடந்த சில வாரங்களில் மன்மோகன் சிங் பாஜக, கம்யூனிஸ்ட்கள் வாயில் விழுந்து புறப்பட வேண்டிய நிலைமை. தப்பு செய்த சிறுவனை ஆசிரியர் கையைத் திருப்பிக் காட்டச்சொல்லி முட்டியில் பிரம்பால் அடிப்பதைப் போல அடிக்க விரும்புகிறார்கள் கம்யூனிஸ்டுகள். கூட சேர்ந்து கோஷ்டிகானம் பாட "Letters to the Editor" ரிடையர் ஆன மாமாக்கள், தி ஹிந்து எடிட்டோரியல் எழுதும் கூட்டத்தவர்.

முதலில் மன்மோகன் வாங்கிக் கட்டிக்கொண்டது அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவின் போது பேசிய பேச்சால். அந்தப் பேச்சில் அவர் ஒரேயடியாக பிரிட்டனைப் புகழ்ந்தார் என்று கம்யூனிஸ்டுகளும், தேச பக்தியில் ஊறித் திளைத்த பாஜகவினரும் திட்டுகிறார்கள். இப்படிச் சொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சிலர் வரலாற்றின் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்த்துச் சொல்லிவிடக்கூடும்! நடுப்பக்கக் கருத்துப் பத்திகளில் மன்மோகனை அனைவரும் திட்டித் தீர்த்தாயிற்று! நான் இரண்டு மூன்று முறைகள் மன்மோகனின் பேச்சைப் படித்துப் பார்த்தேன். ஒருவேளை எனக்குத்தான் அவரது பேச்சு புரியவில்லையோ என்னவோ? மன்மோகன் பிரிட்டிஷ்காரர்களை எங்குமே அளவுக்கு மீறிப் புகழ்ந்துவிடவில்லை. காலனியாதிக்கத்தையோ, ஏகாதிபத்தியத்தையோ கட்டிப்பிடித்துப் புளகாங்கிதம் அடையவில்லை.

விருப்பு வெறுப்புகளன்றி, பிரிட்டிஷ் ஆட்சியின் நல்லவை, கெட்டவை என்று சீர்தூக்கிப் பார்த்து சரியாகவே சொல்லியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். "வங்காளத்தில் பஞ்சம்! 25 லட்சம் பேர் சாவு! அதெப்படி வெள்ளைக்காரன் ஆட்சி நல்ல ஆட்சி என்று சொல்லலாம்" என்று பலரும் சொல்கின்றனர். காலனியாதிக்கம் என்றாலே காலனியை அடிமையாக நடத்துவதுதான். இதில் என்ன நல்ல ஆட்சி, கெட்ட ஆட்சி என்று இரண்டு வகை என்று பலரும் கேட்கலாம். ஆனால் நல்லது, கெட்டது எல்லாமே "ரிலேடிவ்" - எதை ஒப்பிடும்போது எது அதிக நல்லது, கெட்டது என்பது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான் நமக்கு நாடளாவிய ஆட்சிமுறை, தேர்தல் முறை, குடியரசு முறை, மேற்கத்திய அறிவியல்பூர்வமான கல்விமுறை, மதங்களைக் கேள்வி கேட்கும் தனி மனிதனை முன்னிலைப்படுத்தும் கருத்தாக்கம், ஆங்கிலக் கல்வி போன்ற பல நல்ல விஷயங்கள் கிடைத்தன. ரயில்வே பிரிட்டிஷ்காரர்களின் சொந்த உபயோகத்துக்காக, அவர்களது வர்த்தகத்துக்காக என்றாலும்கூட, அதனால் இன்றைய அளவில் நன்மைகளைப் பெறுவது நாம்தான். மற்றபடி நாட்டைக் கொள்ளையடித்தார்கள் என்பது உண்மைதான். அதை முதலிலேயே சொல்லிவிட்டுத்தான் தன் கதையை ஆரம்பிக்கிறார் மன்மோகன். காந்தி முதல் பெரியார், அம்பேத்கார் வரையிலான அறிஞர்கள் நமக்குக் கிடைத்ததும் பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான். யாரோ சொன்னது போல, ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ்காரன் நாட்டை ஆண்டிருந்தால் இவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிவிட்டு 1975-ல் நாடு மொத்தமாக சவக்கிடங்காக இருக்கும்போது விடுதலை கொடுத்துவிட்டுப் போயிருப்பான்.

அப்படியொன்றும் மன்மோகன் தவறாகப் பேசியதாக எனக்குத் தோன்றவில்லை.

அடுத்து மன்மோகனின் அமெரிக்கா பயணம். அமெரிக்கா போவதற்கு முன்னமேயே கம்யூனிஸ்டுகளுக்கு எங்கே மன்மோகன் இந்தியாவை விற்றுவிடுவாரோ என்று பயம். "இல்லை அய்யா, இந்தியா விற்பனைக்கு இல்லை" என்று மன்மோகன் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவதா என்ன? மன்மோகனின் பூர்விகத்தை அலசி அவர் "ஐ.எம்.எஃப் டாய்லெட்டில் ஒண்ணுக்கடித்தவர்தானே" என்று ஒரேயடியாக அவரை மறுதலித்துவிடலாம்!

அமெரிக்காவில் மன்மோகன் மூன்று பெருந்தவறுகளைச் செய்துவிட்டாராம். ஒன்று: அணு மின்சாரம் தயாரிக்கும் சிவிலியன் பணிகளில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெறுவதற்காக இந்திய சிவிலியன் அணு உலைகளை சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படுத்த ஒப்புக்கொண்டிருப்பது. இரண்டு: பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்கு ஏற்ற ஆசாமி அல்ல என்று சொல்லியிருப்பது. மூன்று: இரான்-இந்தியா எரிவாயுக் குழாய்கள் அமைப்பதன் மீதான் சில சந்தேகங்களை முன்வைத்திருப்பது.

சில வாரங்களுக்கு முன்னர் (அதாவது மன்மோகன் அமெரிக்கா செல்வதற்கு முன்னதாகவே), Observer Research Foundation, சென்னைக் கிளை ஏற்பாடு செய்திருந்த ஒரு வாராந்திரப் பேச்சில் எல்.வி.கிருஷ்ணன் அணு ஆயுதங்கள் பற்றி, அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது (Non-proliferation), அணு ஆயுதக் குழுவில் இன்னமும் சேர்த்துக்கொள்ளப்படாத இந்தியாவின் நிலை, இந்தியா என்ன செய்யவேண்டும் ஆகியவை பற்றி ஆழ்ந்து விளக்கினார். அதன் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. சோம்பல் காரணமாக அதை மேலே ஏற்றவில்லை. இந்த வாரத்தில் அதைச் செய்கிறேன். அவரது கருத்து, இந்தியா தனது சிவிலியன் அணு ஆராய்ச்சி ஸ்தாபனங்களை, அணு மின் நிலையங்களை IAEA-வின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது சரிதான் என்பதே. மன்மோகன் சிங் அதைத்தான், "தன்னிச்சையாக" - அதாவது அமெரிக்காவின் வற்புறுத்தல் ஏதுமின்றி - ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். உண்மையில் அமெரிக்காவே வற்புறுத்தியிருந்தாலும், இது தேவையானதே.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் IAEA கண்காணிப்பு சிவிலியன் அமைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். சிவிலியன் அமைப்புகளில் அணு ஆயுத உற்பத்தி ஏதும் நடக்காது இருப்பதையும் சரியான முறையில் பொதுவாழ்வுக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா என்று கண்காணிப்பதையும் செய்வதுதான் IAEA. இதனால் இந்திய மக்களுக்குத்தானே நன்மை? இந்தியா தனியாக வேறோர் இடத்தில் வேண்டுமானால் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யலாமே? அதைத்தானே பிற அணு ஆயுத நாடுகளும் செய்கின்றன? அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையோ அல்லது அணு உலை எரிபொருளையோ இந்தியாவுக்குத் தர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்த எரிபொருள்கள் வழிமாறி, இடம் மாறி, அணு ஆயுதங்களாக உருவெடுப்பதை ஏற்றுக்கொள்ளாதுதானே? எனவேதான் உபகாரத்துக்குப் பிரதியாக சர்வதேச அளவிலான கண்காணிப்பு தேவை என்று அமெரிக்கா வலியுறுத்தியிருக்கவேண்டும். தவறு ஒன்றுமில்லை! அமெரிக்காவே கேட்டுக்கொள்ளாமல் இருந்தாலும் கல்பாக்கம் (சென்னை), கூடங்குளம் போன்ற பல்வேறு அணு மின் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் மக்கள், தம்முடைய சொந்தப் பாதுகாப்பைக் கருதி, இந்தியா IAEA கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது தேவை என்று கேட்டாலும் அதிலும் தவறில்லை!

இரண்டாவது பாகிஸ்தான் பற்றியது. இன்றைய தி ஹிந்து கருத்துப் பத்தியில் மாலினி பார்த்தசாரதி கம்பை எடுத்து மன்மோகனை நாலு சாத்து சாத்தியிருக்கிறார்! பாகிஸ்தானை மன்மோகன் சிங் ஏதோ குறை சொல்லிவிட்டாராம். என்ன சொன்னாராம்? "குடியாட்சி முறையில் நடக்கும் நாடு என்பதாலும், அணு ஆயுதங்கள் முழுக்க முழுக்க சிவிலியன் அரசு கையில் இருப்பதாலும் (அதாவது ராணுவத்தில் கையில் இல்லாததாலும்) இந்தியா தனது பக்கத்தில் உள்ள நாடுகளை விட (அதாவது பாகிஸ்தானை விட) அணு ஆயுதங்களைப் பொறுத்தவரையில் அதிக பொறுப்புடன் நடந்துகொள்கிறது" என்று சொல்லியிருக்கிறார். இது முழுக்க முழுக்க சத்தியம்தானே?

அணு ஆயுதமே கூடாது என்ற நிலைதான் எனது நிலை என்றாலும் ஒருவகையில் இந்தியத் துணைக்கண்டத்தில் அணு ஆயுதம் பரவ இந்தியாவும் காரணம் என்பது அப்பட்டமான உண்மை. இந்திரா காந்தி காலத்திலிருந்து கவிஞர் வாஜ்பாய் காலத்தைத் தாண்டி இன்று நாம் ஓர் அணு ஆயுத நாடு. அதே சமயம் போட்டிக்குப் போட்டியாக பக்கத்து நாடு பாகிஸ்தான் உலகின் பல பாகங்களிலிருந்தும் அணு ஆயுதத் தயாரிப்புக்காகவென கடத்தல்கள் பல செய்து, பொய்யான கம்பெனிகளை உருவாக்கி, BCCI என்ற வங்கியின் உதவியால் AQ கானை வைத்து அணு குண்டுகள் செய்து, பின் அதே வேகத்தில் இரான், லிபியா என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு ஆளுக்கு ஒன்று என்று விற்கத் தயாரானது அனைவருக்கும் தெரிந்ததுதானே?

நாளை உலகின் ஏதோ ஒரு பாகத்தில் தீவிரவாதிகள் அணு ஆயுதம் கொண்டு தீவிரவாதத்தை நிகழ்த்தினால் அதற்கு பாகிஸ்தான் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும் என்பதும் அப்பட்டமான உண்மை. அதை வெளியே சொல்வதில் என்ன தவறு? நாம் பாகிஸ்தானுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற காரணத்தால் AQ கான் என்ற ஒரு நபர் - உலகின் முதல் ந்யூக்ளியர் டெரரிஸ்ட் - இந்த உலகிலேயே இல்லை என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

மூன்றாவது: இரான்-இந்தியா பைப்லைன். இது பற்றி பேச்சுவார்த்தை வந்ததுமே இது முட்டாள்தனமான செய்கை என்று எனக்குத் தோன்றியது. ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் வழியாக எரிவாயுவை குழாய் மூலமாக நாம் இந்தியாவுக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறோம் என்பது எத்தனை முட்டாள்தனமானது? இதில் அமெரிக்கா எனும் நாடு ஒன்று இருப்பதை நாம் மறந்துவிடுவோம். உலக சட்டாம்பிள்ளை இரானைப் பிடிக்கவில்லை என்று கண்டதையும் பேசுவதை மறப்போம். இந்தத் திட்டம் நடப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எத்தனை இடைஞ்சல்கள்? திடீரென ஒரு ஜிஹாத் குழு பாதிக் குழாயை நோண்டி ஓர் அணையாத பீடியைச் சொருகினால் எப்படியிருக்கும்? எத்தனை பில்லியன் டாலர்கள் காலி?

இரானுடன் கடல்வழியாக ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்த்து அதைச் செய்யலாம். அல்லது சீனா, நேபாளம் வழியாக மலையைக் குடைந்து ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கலாம். அதை விட்டுவிட்டு பாகிஸ்தானுடனான பிரச்னை முடிவதற்கு முன்னால் அந்த வழியாகக் குழாய் போடுகிறேன் என்று நினைப்பதே முட்டாள்தனம். அதைத்தான் மன்மோகன் சிங் சொன்னார். ஏதாவது வங்கி இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுத்தால் அந்த வங்கியை நடத்துபவனும் முட்டாள். இந்தத் திட்டத்துக்கு காப்பீடு செய்யும் இன்ஷூரன்ஸ் கம்பெனியும் முட்டாள். தி ஹிந்து எடிட்டோரியலில் இன்று இதற்குமாகச் சேர்த்து ஒரு குட்டு மன்மோகனுக்கு.

நியாயவான், புத்திசாலி - இப்படியெல்லாம் யாரும் நாட்டுக்குப் பிரதமராகவே வந்துவிடக்கூடாதே?

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்

இன்றைய 'தி ஹிந்து'வில் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை, தமிழக வழக்கறிஞர்களின் போராட்டத்தால் (அதைத் தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகள் எழுப்பிய சத்தத்தால்) திடீரென நிறுத்தி வைத்தது பற்றி ஒரு கருத்துப் பத்தி வந்துள்ளது. தமிழகத்தில் நடந்த போராட்டத்தால் ஒருவகையில் இந்தியாவுக்கு நன்மைதான். ஏன் பிற மாநிலங்களில் போராட்டம் இவ்வளவு வலுவாக இல்லை என்று புரியவில்லை. நல்லவேளையாக தமிழக கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் இந்தச் சட்டத் திருத்தம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நான் ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியிருந்த சிலவற்றைப் பற்றி விளக்குகிறார் சித்தார்த் நாராயண். அத்துடன் இன்னமும் சில புது விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். இதைப்பற்றிய எனது புரிதல் குறைவுதான். வலைப்பதிவுலக வக்கீல்கள் இதைப்பற்றி மேலும் விளக்கினால் நல்லது.

Friday, July 22, 2005

கார்ல் மார்க்ஸ்

'தி ஹிந்து'வில் இன்றைய கருத்துப் பத்தி ஒன்றில் (கார்டியனிலிருந்து கடன் வாங்கியது) ஃபிரான்சிஸ் வீன் என்பவர் 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.

சுவாரசியமான கட்டுரை. நம் உள்ளூர் கம்யூனிஸ்டுகளின் தொந்தரவு இல்லாமல் மார்க்ஸ் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.

ஃபிரான்சிஸ் வீன், கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதியுள்ளார். [அமேசான் | ஃபாப்மால்]

Tuesday, July 19, 2005

சேரன் எக்ஸ்பிரஸ் தீவிபத்து

சென்னை -> கோவை சேரன் எக்ஸ்பிரஸில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் கருகிச் செத்துள்ளார். அவர், ஓடும் ரயிலில் கழிப்பறையில் தன்னைக் கொளுத்தித் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று சந்தேகிக்கிறார்களாம். தொடர்ந்து ரயில் கேரேஜ் பற்றி எரிந்துள்ளது, ஆனால் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தப்பித்துவிட்டனர்.

இரண்டு வாரங்கள் கழித்து திருப்பூர் செல்வதற்காக (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது விழாவுக்காக) நேற்றுத்தான் சேரன் எக்ஸ்பிரஸில் பதிவு செய்துள்ளேன். அய்யா! தற்கொலை செய்ய விரும்புபவர்கள் ஓடும் ரயிலை தயவுசெய்து விட்டுவிடுங்கள். உங்கள் வீடாகப் பார்த்து செய்துகொள்ளுங்கள்! பாவம் பொதுமக்கள்!

Monday, July 18, 2005

குழந்தைகள், கேமராக்கள், அண்டங்காக்கைகள்

நேற்று ஆனந்த் ராகவின் முதல் புத்தகம் - க்விங்க் என்னும் சிறுகதைத் தொகுப்பு - வெளியிடப்பட்டது. மாலன் வெளியிட, இரா.முருகன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். மாலன், முருகன், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் ஆனந்த் ராகவின் சிறுகதைகளைப் பற்றிப் பேசினர். இணைய நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

-*-

துளிவிஷம் கதையிலிருந்து:

[குழந்தைகள் பாட்டியிடம் மேளாவின் கதையைக் கேட்கிறார்கள்.]

"தேவர்களும் ராட்சஸர்களும் மந்தார மலையைப் பாம்பால் கடைந்து எடுத்த அமிர்தம் அசுரர்கள் கையில் சிக்காம கருடன் எடுத்துகிட்டு போகும்போது கொஞ்சம் சிந்தி இந்த நதி புனிதம் ஆயிடுச்சி. இங்க குளிச்சா நாம செஞ்ச தப்பெல்லாம் கரைஞ்சி போயிடும் முன்னா."

"இதுக்கப்புறம் தப்பு செஞ்சா?"

"இதுக்கப்புறம் தப்பு செய்யாம இருக்கணும் பேட்டா"

"நான் தப்பு எதுவும் பண்ணல. நான் குளிக்க வர்ல படி நானி"

இதைப்பற்றிப் பேசும்போது திருப்பூர் கிருஷ்ணன் மற்றொன்றை நினைவு கூர்ந்தார். திருப்பூர் கிருஷ்ணனின் தந்தை, இரண்டு மாதங்களுக்கு முன்னர், தனது 97 வயதில் காலமானார். கண்டிப்பானவராம். அவரது கடைசி நாள்களில் அவரைப் பார்க்க ஒரு நான்கு வயதுக் குழந்தை வருகிறது. வாயில் விரலைக் கடித்தபடி.

"சீ, வாயிலிருந்து கையை எடு. கடிக்கக் கூடாது!"

குழந்தை பதில் சொல்கிறது:

"அங்... என்னோட விரலைத்தானே கடிச்சேன்? உன் விரலையா கடிச்சேன்?"

நேற்று, நானும் என் மகளும் லாண்ட்மார்க் சென்று ஹாரி பாட்டர் புத்தகங்களை வெறுமே புரட்டிப் பார்த்துவிட்டு (வாங்கவில்லை), இளையராஜாவின் திருவாசகமும் வால்ட் டிஸ்னியின் 'பாம்பி'யும் வாங்கிக்கொண்டு வந்தோம். வந்தவுடன் என் மகள் 'பாம்பி' பார்க்கத் தொடங்கினாள். பாதியில் நான் அவளிடம்

"என்ன, எதாவது புரியுதா?"

"நான் பாக்கறதுக்குத்தான் வாங்கினேன், புரியறதுக்கு இல்ல"

-*-

இரா.முருகன் தாய்லாந்தில் பார்க்க விடுபட்டுப்போன மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசினார்: வாட் அருண் (சூரியன் கோவில்), உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆரின் இரண்டரையாவது கதாநாயகி (பச்சைக்கிளி, முத்துச்சரம், முல்லைக்கொடி), ஆனந்த் ராகவ்.

"வாட் அருண் போகப் பலதடவை முயற்சி செய்தும் நடக்கவில்லை. நண்பர்கள் வாட் அருண் போவதாக இருந்தால் காலை வேளைகளில் வேண்டாம், பொழுதுசாயும் நேரமாகப் போனால்தான் கேமராவில் படம் எடுக்க நன்றாக இருக்கும் என்றனர். எண்ணூறு ஆண்டுப் பழமை, கலாசாரத்தின் காலடிச்சுவடு, ஏன் இந்த உலகமே - எல்லாமே - நாம் ஏதோ நமது டிஜிட்டல் கேமராவில் பிடிப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டதுபோல மக்கள் நினைக்கின்றனர்."

["I find it astonishing — not to say macabre — that virtually the first thing a lay person would do after escaping injury in an explosion in which dozens of other human beings are killed or maimed is to film or photograph the scene and then relay it to a broadcasting organisation." - John Naughton on Citizen Reporters in The Hindu (Via Guardian)]

-*-

அண்டங்காக்காக் கொண்டக்காரி
அச்சுவெல்லத் தொண்டக்காரி
ஐ.ஆர்.எட்டு பல்லுக்காரி
அயிரை மீனு கண்ணுக்காரி

யை நேற்று பார்த்தேன்.

ஆனால் அண்டங்காக்கைகளின் கொடூர குணத்தை இன்று பார்த்தேன்.

இரண்டு கழுத்து கருத்த அண்டங்காக்கைகள் சேர்ந்து ஒரு கழுத்து சாம்பலான சாதா காக்கையை கைமா பண்ணிக்கொண்டிருந்தன. அவை நான் விரட்டும் தூரத்தில் இல்லை. என் கேமராவின் 'ஸூம்' எவ்வளவு தூரம் போகுமோ, அவ்வளவுக்குக் கொண்டுசென்று படங்களைப் பிடிக்கமட்டும்தான் என்னால் முடிந்தது.சுற்றி பிற சாம்பல் கழுத்துக் காக்கைகள் கையாலாகாத்தனத்துடன் கதறிக்கொண்டு மட்டுமே இருந்தன. அந்தக் கதறலைச் சற்றும் லட்சியம் செய்யாமல் இரண்டு அண்டங்காக்கைகளும் தமது கொலைவெறியை சிறிதும் குறைக்காமல் கொத்திக் குதறி உயிர் போகுமட்டும் அருகிலேயே இருந்து செத்தவுடன்தான் அங்கிருந்து சென்றன.செத்த தமது சகோதரனைப் பார்த்துக் கதறமட்டும்தான் முடிகிறது இந்த சாம்பல் கழுத்துக் காக்கையால்.அழகான பெண்கள் இனியும் தமது கொண்டைக்கு அண்டங்காக்கைகளை உவமையாக்க விரும்பமாட்டார்கள்.

Sunday, July 17, 2005

ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்ட சுபா சுந்தரம் - புகைப்படப் பத்திரிகையாளர் - நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்பு துலக்கியது பற்றி ஒரு விசிடி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. K.ரகோத்தமன் - Chief Investigating Officer - இந்தப் படக் குறுந்தட்டை உருவாக்கியிருக்கிறார். எங்கு கிடைக்கிறது போன்ற தகவல்கள் இல்லை. கிடைத்ததும், பார்த்ததும், இதைப்பற்றி எழுதுகிறேன்.

ராஜீவ் கொலை வழக்கு பற்றி கார்த்திகேயன் எழுதிய புத்தகம் பற்றிய என் முந்தைய பதிவு

சுப்ரமணியம் சுவாமி எழுதிய (தமிழாக்கம்: சுதாங்கன்) "ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகத்தைப் பற்றிய என் பதிவுகள்: ஒன்று | இரண்டு

Saturday, July 16, 2005

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்

நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பற்றிய விவாதம் நடந்தபோது யாரும் பெரிதாக ஆட்சேபித்ததாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாள்களாக தமிழக வழக்கறிஞர்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். பல இடங்களில் வேலை நிறுத்தமும் செய்துவருகிறார்கள்.

தமிழகத்துக்கே உரித்தான திமுக, அதிமுக குழப்பங்களும் இதில் உண்டு.

மேற்படி சட்டத்திருத்தத்தை "தாமதப்படுத்த வேண்டும்" என்று தயாநிதி மாறன் தலைமையில் ஒரு வழக்கறிஞர் குழு சோனியா காந்தியைச் சந்தித்து மனு கொடுத்ததாம். இந்த மசோதாவின் வரைவை சட்ட அமைச்சர் H.R.பாரத்வாஜ் கேபினெட்டில் சமர்ப்பித்தபோது தயாநிதி மாறன் என்ன செய்துகொண்டிருந்தார்? இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது திமுக, தோழமை உறுப்பினர்கள் என்ன செய்தனர்? இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் திமுகவின் சட்ட நிபுணர்கள் ஈடுபடமாட்டார்களா என்ன?

ஜெயலலிதாவும் உடனே, சட்டம் ஒழுங்கு என்பது concurrent list-இல் இருப்பதால், மத்திய அரசின் சில விரும்பத்தகாத திருத்தங்களை அழிக்கும்வண்ணம் தான் ஓர் அவசரச்சட்டம் இயற்றுவேன் என்றும் அதை உடனே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவேன் என்றும் சூளுரைத்தார். மேற்படி சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அதிமுக உறுப்பினர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

தமிழகம் தவிர பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு எதிர்ப்பு இருப்பதுபோலத் தெரியவில்லை.

எனக்கு இதுநாள்வரையில் பிரச்னையே புரியாமல் இருந்தது. நேற்றைய துக்ளக் இதழில் வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஓரளவுக்கு பிரச்னையைப் பற்றி விளக்கியுள்ளார். சுருக்கமாக:

* குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

* மேற்படி சட்டத் திருத்தங்களில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. (1) டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒருவரைக் கைதுசெய்யும்போது காவல்துறையினர் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று வழிகாட்டியிருந்தனர். அது இப்பொழுது சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறையினர் யாரையாவது கைதுசெய்யும்போது அந்த நபரின் உறவினரிடம் என்ன காரணம், கைது செய்யப்படுபவர் எங்கு கொண்டுசெல்லப்படுகிறார் போன்ற விவரங்களை எடுத்துரைக்கவேண்டும். (2) பெண்களை மாலை 6.00 மணியிலிருந்து காலை 6.00 மணியிலான நேரத்தில் கைதுசெய்யமுடியாது. தவிர்க்க முடியாத சூழலில், மாஜிஸ்டிரேட் அனுமதி பெற்றால்தான் பெண்களை இந்த நேரத்தில் கைதுசெய்யமுடியும்.

(ஆனால் போராடும் சில பெண் வழக்கறிஞர்கள் பெண்களுக்கு பெரிய அளவில் ஏதோ அநீதி இழைக்கப்பட்டதுபோலச் சொன்ன சில துண்டுகளை சன் டிவியில் காண்பித்தார்கள். ஒரே குழப்பம்!)

* சட்டத் திருத்தத்தில் கெட்டவை என வழக்கறிஞர்கள் எடுத்துக்காட்டுவது: (1) முன் ஜாமீன் கேட்பவர் நேரடியாக ஆஜர் ஆக வேண்டியதில்லை என்று இருந்தது. ஆனால் மேற்படி சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் முன் ஜாமீன் கேட்பவர் நேரடியாக நீதிமன்றத்துக்கு வரவேண்டும். அப்பொழுது நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் காவல்துறையினர் அவரை அங்கேயே அப்பொழுதே கைதுசெய்யமுடியும். மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குக் கூட அவகாசம் இல்லாமல் கைது நடக்கலாம். அப்படிப் பார்க்கும்போது முன் ஜாமீன் என்ற ஒரு விஷயமே அடிபட்டுப் போகிறது. (2) அடையாள அணிவகுப்பு நடத்துவதில் ஏதோ விரும்பத்தகாத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன போலத் தெரிகிறது. (3) ஒரு குற்றம் நடந்துள்ளது என்று அரசு அதிகாரிகள் தரும் சாட்சியங்களை அந்த அரசு அதிகாரிகளை குறுக்கு விசாரணை செய்யாமலேயே ஏற்றுக்கொள்ளும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன போலத் தெரிகிறது. (விஜயன் இதைப்பற்றி முழுமையாக எழுதவில்லை.)

மேற்படி சட்டத் திருத்தங்கள் சரியல்ல, ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று புரிகிறது. ஆனால் இந்தச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது ஏன் மந்தையாடுகள் போல உறுப்பினர்கள் 'ஆம்' என்று சொல்லி ஏற்றுக்கொண்டார்கள்? பாரத்வாஜ் முதல் சிதம்பரம் வரையில், அருண் ஜெயிட்லி முதல் கபில் சிபல் வரை இந்திய நாடாளுமன்றத்தில் இல்லாத வழக்கறிஞர்களா? ஏன் அத்தனை பேரும் இப்படிப்பட்ட கேவலமான திருத்தங்களை அனுமதித்தனர்?

கம்யூனிஸ்டுகள் எதற்கெல்லாமோ சண்டை போடுவார்கள் - மன்மோகன் சிங் ஆக்ஸ்ஃபோர்டில் பேசியது எல்லாம் முக்கியம் அவர்களுக்கு - ஏன் இதைக் கோட்டை விட்டார்கள்? ஏற்கெனவே காவல்துறை கையில் அகப்பட்டுக்கொண்டு பொதுமக்கள் திண்டாடுகின்றனர்.

ஏன் எந்தப் பொதுநல அமைப்பும் இந்தச் சட்டத் திருத்தங்களில் உள்ள குழுப்பங்களை முன்னதாகவே எடுத்துப் பேசவில்லை? ஏன் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா இதைப்பற்றி அப்பொழுதே சண்டைக்கு வரவில்லை?

இதே கேள்வியை பாரத்வாஜ் கேட்கிறார். (The lawyers resorted to strikes. This is not the way they should have behaved. In Parliament none had spoken out against it at the discussion stage.) ஆனால் அவர் கேட்டால் அது படு அபத்தம். இவரது மூளை எங்கே போனதாம்? மந்தையாடுகள் மாதிரி நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கெடுத்தாலும் கொறடாவின் பேச்சைக்கேட்டு வாக்களித்துக்கொண்டிருந்தால் நமது பாடு படு திண்டாட்டம்தான்!

அப்துல் கலாம் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறார். இந்தச் சட்டத்தில் கையெழுத்து போடமாட்டேன் என்று மனசாட்சியோடு செயல்படுவாரா?

பார்க்கலாம்.

[ouch. கவனமாகப் படித்துப் பார்த்ததில், குடியரசுத் தலைவர் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்து இட்டாயிற்று. ஆனால் இப்பொழுது நடந்துவரும் எதிர்ப்புகளைப் பார்க்கும்போது அரசே இந்த மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் மாற்றுக்கருத்துகள் என்ன என்று சிந்திக்கப்போவதாகவும் சொல்லியுள்ளார்கள்! ஆக சட்டமாக குடியரசுத் தலைவரால் கையெழுத்தான ஒன்றை, இப்படியெல்லாம் தள்ளிவைக்க முடியும் என்ற புதுமை நிகழ்கிறது... நடக்கட்டும்!]

Thursday, July 14, 2005

தமிழ்மணம் திரட்டியின் எதிர்காலம்

நான் கடந்த சில நாள்களாகத் தமிழ்மணம் திரட்டியின் எதிர்காலம் பற்றி யோசித்து வருகிறேன். இப்பொழுது தமிழ்மணம் மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆரம்பிக்கும் முன்னதாகவே.

தமிழ்மணம் திரட்டி ஒரு முடிவான தீர்வல்ல. சொல்லப்போனால் தமிழ்மணத்தில் பதிவாகியிருக்கும் பதிவுகள் 3,000-4,000-ஐ எட்டும்போது இப்பொழுதிருக்கும் சேவை முற்றிலுமாக உருக்குலைந்துபோகும். பதிவுகள் 1,000ஐத் தாண்டும்போதே திரட்டியை நாளுக்கு ஒருதடவை படிக்க வருபவர் தடுமாறுவார்.

தானியங்கி முறையில் இன்னமும் சில வசதிகளை ஏற்படுத்துவதன்மூலம் இந்த உருக்குலைதலை தள்ளிப்போடலாம். அவ்வளவே.

நாளடைவில் ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான பதிவுகளைத் திரட்டவேண்டியிருக்கும். அல்லது சில மனிதர்கள் (இயந்திரங்கள் அல்ல) திரட்டிக் கொடுக்கும் செய்தியோடைச் சேவையைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். உதாரணத்துக்கு India Uncut, DesiPundit போன்ற வலைப்பதிவுகளைக் கவனிக்கவும். இதில் 'தேசி பண்டிட்' Wordpress-ஐப் பயன்படுத்துவதன்மூலம் இன்னமும் சிறப்பான சேவையை (பகுதிவாரியாகப் பிரிப்பது) கொடுப்பதை கவனிக்கலாம்.

மற்றுமொரு விஷயம்... இதைப்போலக் கோர்த்தெடுத்துக் குறிக்கும் பதிவுகளை இப்பொழுது தமிழுக்கென பிரத்யேகமாகச் செய்யமுடியாது. அதற்குக் காரணம் தமிழ் வலைப்பதிவுலகில் நல்லது என்று குறிப்பிடக்கூடிய பதிவுகள் இப்பொழுதைக்கு மிகவும் குறைவு. ஆனால் மொத்தப் பதிவுகள் 2,000ஐத் தாண்டும்போது தானாகவே ஒரு நாளைக்கு பத்து நல்ல பதிவுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

தமிழ்மணத்தின் மிக முக்கியமான பணி தமிழ் வலைப்பதிவுகளை 100இலிருந்து 1000க்கு எடுத்துச் செல்வதாகத்தான் என்று நான் நினைக்கிறேன்.

ஒருவகையில் தமிழ் வலைப்பதிவுகள் 500, 600களிலேயே தேங்கி இருக்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது. இப்பொழுதே ஆயிரத்தைத் தாண்டியிருக்கவேண்டும். ஆனால் சமீபகாலங்களில் நடைபெற்றுவரும் சில கூத்துகள், இன்னமும் தமிழில் எழுதுவதில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள், தமிழில் எழுதத் தெரிந்தவர்கள், விரும்புபவர்களுக்கு கணினி கையில் கிடைக்காதது என்று சிலவற்றால் வளர்ச்சி பெருமளவில் தடைபட்டுள்ளது.

Tuesday, July 12, 2005

ஃபலூஜாவும் லண்டனும்

லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகையில் கேரி யங் என்பவர் எழுதிய பத்தி இன்று தி ஹிந்துவில் பல சுருக்கங்களுடன் மறுபதிப்பு செய்யப்பட்டது. சொல்லப்போனால், தி ஹிந்து சுருக்கம் மூலத்தைவிட அழகாக எடிட் செய்யப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது. அதிலிருந்து சில துண்டுகள் என்னுடைய தமிழாக்கத்தில்:

லண்டன் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவர, புள்ளிவிவரக் கணக்குகள் மறைந்து, நிஜமான மனித இழப்புகள் - தாய்மார்கள், சகோதரர்கள், காதலர்கள், குழந்தைகள் - ஆக உருவெடுக்கின்றன. இந்த இழப்புகளுக்காக துக்கம் அனுஷ்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் அதே நேரம் இந்தச் சம்பவம் ஏன் நடந்தது, என்ன செய்தால் இதைப்போன்று மீண்டும் நடக்காமல் தவிர்க்க முடியும் ஆகியவற்றை பகுத்தறிவுடன் ஆராய்வதே தவறு என்பது போலப் பேசுபவர்களை எதிர்க்கவேண்டும்.

ஏன் நடந்தது என்று விளக்குவது, தீவிரவாதிகள் செயலுக்கு அங்கீகாரம் கொடுப்பதாக ஆகிவிடாது. அரசின் செயல்களைக் கேள்விக்கு உள்ளாக்குவது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அடிபணிவது ஆகாது.

என்ன நடந்தது என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. ஒரு சிலர், சட்டத்துக்கும் நமது வாழ்க்கை முறைக்கும் புறம்பாக, நம் நகர் மீது தாக்குதல் நடத்தினர். மனித இழப்புகள், அரசியல் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், வன்முறை மூலம் மட்டும்தான் இவர்களை வற்புறுத்தமுடியும் என்று அப்பாவி மக்களை, வித்தியாசம் பாராமல் கொன்று குவித்தனர்.

பிரச்னை என்னவென்றால் மேலே சொன்ன ஒவ்வொரு சொல்லையும் லண்டனில் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஃபலூஜாவில் இருப்பவர்களும் சொல்லலாம்! என்றாலும் லண்டன், ஃபலூஜா இரண்டிலும் நடந்துள்ள அழிவுகள் ஒரேமாதிரியானவை என்று சொல்லமுடியாதுதான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாவுகள், காயங்கள், பாதிக்கு மேற்பட்ட வீடுகள் நாசம், நகரில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூடமும், மசூதியும் தரைமட்டம் என்று பார்க்கும்போது அமெரிக்கப் படைகள், பிரிட்டிஷ் துருப்புகளின் உதவியோடு ஃபலூஜாவில் நிகழ்த்தியிருப்பதுதான் பலமடங்கு கொடுமையானது!

ஆனால் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுத்தான் ஆகவேண்டும். வலி, இழப்பு, கோபம், தளராமை ஆகியவை நமக்கு மட்டுமே சொந்தமா என்ன?

ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானத்திலும் உள்ளவர்களை விட நமது ரத்தம் அதிகம் சிவப்பானதல்ல, நமது முதுகெலும்புகள் அதிகம் வலுவானதல்ல, நம் கண்ணீர் சுரப்பிகள் அதிகம் சுரப்பதல்ல. இதுநாள் வரையில் வளைகுடாவில் நாம் உருவாக்கியுள்ள துன்பங்களைக் கண்டு மனம் இரங்காதவர்கள் இப்பொழுது நமக்கு வெகு அருகில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ளவாவது முடியும். "பக்கவிளைவுகள்" என்று புறந்தள்ளிவிட்டுப் போகமுடியாது. பக்கவிளைவுகளுக்கும் மனித முகமுண்டு. அம்மனிதர்களின் உறவினர்களுக்கும் சோகம் உண்டு. அந்தச் சமூகத்தினருக்கும் நினைவுகள் உண்டு. அவர்களும் நியாயம் கேட்கிறார்கள்.

அடிப்படைவாதத்தின் முதல் பலி இந்த மனிதநேயக் கருத்துகள்தாம். சென்ற வாரம் லண்டனில் குண்டுகளை வெடித்தவர்களிடம் இந்த எண்ணங்கள் துளிக்கூட இல்லை. கடந்த நான்கு வருடங்களாக 'பயங்கரவாதத்தின் மீதான போர்'களை நிகழ்த்துபவர்களிடமும் கூடத்தான்!

Thursday, July 07, 2005

நியூ யார்க், மேட்ரிட், லண்டன்

இது நிற்காது.

எல்லா பயங்கரவாதங்களுக்கும் ஊற்றுக்கண் அரசுகள் தன் நாட்டினர் மீதும் பிற நாட்டினர் மீதும் நிகழ்த்தும் வன்முறைகள் என்பது என் கருத்து. அப்படிப் பார்க்கும்போது கடந்த நாநூறு வருடங்களில் இங்கிலாந்து/பிரிட்டன் பதவியில் இருந்தவர்கள் தன் நாட்டவர் மீதும் பிற நாட்டவர் மீதும் எண்ணற்ற அட்டூழியங்களை நிகழ்த்தியுள்ளனர். உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்னைகளுக்கான காரணம் பிரிட்டன். மீதிக்கு, அமெரிக்கா. 1950க்கு முந்தைய பிரச்னைகளுக்கான காரணம் பிரிட்டன். அதற்குப் பிறகான பிரச்னைகளுக்கு முதல் காரணம் அமெரிக்கா, இரண்டாவது காரணம் பிரிட்டன்.

தொழில்நுட்பம் பரவப்பரவ, பாதிக்கப்பட்டவர்கள் - நாடுகளோ, தனி மனிதர்களோ - தாங்களும் சக்திமிக்க நாடுகள் மீது தாக்குதலைத் தொடுக்க முடியும் என்று காண்பித்து வருகின்றனர். நியூ யார்க், மேட்ரிட், லண்டன் - நகரங்களை முழுமையாக ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்று அல் கெய்தா காண்பித்துள்ளது. அல் கெய்தாவையும் மிஞ்சும் பயங்கரவாத அமைப்புகள் நாளை தோன்றும்.

இன்று சோகம் ததும்பிய குரலுடன் பேசும் டோனி பிளேர் தன் நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறித் தாம் எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று குவித்துள்ளோம் என்பதை இன்று இரவு தூங்கப்போகும்போது நினைத்துப் பார்ப்பாரா? ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷைவிடப் புத்திசாலியானவர், இதை யோசித்துப் பார்ப்பது நல்லது.

தங்கள் நாடுகளின் கொள்கைகளை நிலைநாட்ட பிற நாடுகளை வேரறுப்பது பாவமல்ல என்னும் politics of expediency கருத்தாக்கத்தை முன்வைக்கும் கிஸ்ஸிங்கர், நியோ-கான்கள் ஆகியோரே உலகில் தீவிரவாதம் வளரக் காரணமானவர்கள்.

சோவியத் யூனியனைக் கழுவேற்ற, பாகிஸ்தான் போன்ற நாடுகளை உள்ளூர பயங்கரவாதத்தை ஆதரிக்க வைத்தது, அதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தொடுக்கும் பயங்கரவாதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டது, ஆப்கானிஸ்தானைக் கொலைக்கூடாரமாக ஆக்கியது, ஈராக்கை இன்றும் நாசமாக்கிக்கொண்டிருப்பது, லத்தீன் அமெரிக்காவில் கொடுமைகள், ஆப்பிரிக்காவில் கொடுமைகள், ஆசியாவில் கொடுமைகள் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் நாசமாக்காத கண்டமே கிடையாது. (இந்தியா ஒன்றும் பரிசுத்தம் அல்ல. உள்நாட்டிலேயே மாநிலம் மாநிலமாகப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகள் ஏராளம். அதைத்தவிர அண்டை நாடுகளில் குழப்பம் ஏற்படுத்துவதும் நிச்சயமாக இருக்கும்.)

இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா? பிளேர் போன்ற அரசியல்வாதிகளைத் தடுக்காத, நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி உருவாக்கப்படும்போது அதற்கு நானும் இதைப்படிக்கும் நீங்களும் காரணம். அதைப்போலவேதான் ஒவ்வொரு அமெரிக்கனும் 9/11க்குக் காரணம். ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனும் இன்றைய குண்டுவெடிப்புகளுக்குக் காரணம்.

லண்டன் பயங்கரவாதத் தாக்குதல்கள்

லண்டனில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் பற்றிய தகவல்களை பிபிசி ஆன்லைன் தளத்தில் பெறலாம். அத்துடன் பிபிசி உலகச்சேவை வானொலியை இணையம் வழியாகவும் கேட்கலாம்.

Wednesday, July 06, 2005

கலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்

The Hindu: The literary world of Swadesamitran, Deepam

கலைஞன் பதிப்பகம் சிற்றிதழ் தொகுப்புகளை வெளியிடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சுதேசமித்திரன், தீபம் இதழ்களின் தொகுப்புகள் வெளியானதையொட்டி தி ஹிந்து இரண்டாம் பக்கத்தில் வந்திருக்கும் செய்தியே மேலே உள்ளது.

ஹிந்து கூட தமிழ் இலக்கியம் பக்கம் எட்டிப்பார்க்கிறது, படம் போடுகிறது என்பது சந்தோஷமான விஷயம்!

இதுவரையில் கணையாழி, சரசுவதி, சுபமங்களா போன்ற இதழ்களுக்கும் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்னமும் பலவற்றுக்கும் தொகுப்புகள் உண்டு.

தீபம் இதழைத் தொகுத்தவர் வே.சபாநாயகம்.

Tuesday, July 05, 2005

தில்லி இன்னமும் தள்ளி...

தில்லி இன்னமும் தூரத்தில்... ஆனால் தொடர்ந்து நடந்தே ஆகவேண்டும் (ஹிந்தி வலைப்பதிவு)

ஏப்ரல் மாதம் தமிழ் எழுத்துவடிவங்கள், சில மென்பொருள்கள் ஆகியவற்றை வெளியிட்ட தயாநிதி மாறன், சென்ற மாதம் ஹிந்தியில் அதே காரியத்தைச் செய்துள்ளார். இம்முறை குறுந்தட்டில் கருணாநிதி படம் மட்டும் இல்லை. மன்மோகன் சிங், சோனியா காந்தி, தயாநிதி மாறன் மட்டும்தான்.

இந்தக் குறுந்தட்டில் உள்ள மென்பொருள்களும் கருவிகளும் "பயனர்களின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளதா அல்லது ஏமாற்றிவிட்டதா" என்பதைக் கண்டறிய வினய் ஜைன் என்பவர் அவற்றைப் பரிசோதித்து மேற்படி ஹிந்தி வலைப்பதிவில் எழுதியதிலிருந்து சில கருத்துகள்:

* மொத்தத் தொகுப்பில் மிகவும் உபயோகமானது எழுத்துவடிவங்கள் என்று தோன்றியது... ஆனால் முக்கால்வாசி எழுத்துவடிவங்கள் படிக்க வசதியானதாக இல்லை. எழுத்துவடிவங்களின் தரம் சராசரி அல்லது அதற்குக் குறைவாக உள்ளது. இப்படி ஏகப்பட்ட எழுத்துவடிவங்களைக் கொடுப்பதற்கு பதில் ஒன்றிரண்டு வடிவங்கள் மீது கவனம் செலுத்தி நல்ல தரத்தில் கொடுத்திருக்கலாம்.

* ஹிந்தி ஒளிவழி எழுத்துணரி (OCR) இதுவரையில் வேலை செய்யவில்லை. கணினியில் நிறுவவே முடியவில்லை.

* ஃபயர்ஃபாக்ஸ் - வேலை செய்கிறது. ஆனால் ஹிந்தியாக்கத்தில் நிறைய முன்னேற்றம் தேவைப்படுகிறது.

* கொலும்பா - நிறுவி முடித்தபின் வேலை செய்யவில்லை.

* ஓப்பன் ஆஃபீஸ் - நன்றாக உள்ளது. ஆனால் உள்ளடங்கிய ஹிந்தி அகராதி தப்பும் தவறுமாக உள்ளது.

* இன்ஸ்டண்ட் மெசஞ்சர் - கைம் ("சிறகு வெட்டப்பட்ட புறா" என்கிறார்!): நிறுவியபின் சரியாக வேலை செய்யவில்லை. திறந்த சில விநாடிகளில் தானாகவே மூடிவிடுகிறதாம்.

இன்னமும் சில மென்பொருள்களின் குறைகளையும் பட்டியலிடுகிறார். கடைசியாகச் சொல்கிறார்: "இன்னமும் செய்யவேண்டியது நிறைய பாக்கி இருக்கிறது. பயனர்-சோதனை என்று எதுவும் நடந்ததுபோலத் தெரியவில்லை. எண்ணமும் முயற்சியும் பாராட்டப்படவேண்டியதுதான் ஆனால் இந்த முயற்சி வெற்றியடையத் தேவையான செயல்பாடுகள் சரியாக எடுக்கப்படவில்லை. ஏதோ அவசரகதியாகச் செய்தது போலிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னதாக அரசு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து மென்பொருள்களைக் கேட்டதாகத் தெரிகிறது. எக்கச்சக்கமான அழுத்தம் காரணமாக இந்த நிறுவனங்கள் அரைகுறை மென்பொருள்களை அரசிடம் கொடுத்ததுபோலத் தெரிகிறது. மேற்படி அமைச்சரின் தாய்மொழி தமிழ். ஹிந்தி மென்பொருள் குறுந்தட்டுடன் வெளியான தமிழ் மென்பொருள் குறுந்தட்டும் இதேபோல மோசமாக இருந்தால், நாம் அதிகம் வருத்தம் கொள்ளவேண்டியதில்லை."

(நாம் அவருக்குச் சொல்லவேண்டியது இதுதான்! தமிழும் மோசம்தான். எங்கள் அமைச்சர் ஹிந்தியின்மீது பாரபட்சம் காட்டவில்லை!)

வினய் மேலும் சொல்கிறார்: "யூனிகோடை அரை மனதுடன் ஏற்றுக்கொண்டது மாதிரி உள்ளது."

-*-

தயாநிதி மாறனின் ஆர்வத்தைப் பாராட்டும் அதே நேரத்தில், அவர் இப்படி அவசரப்பட்டு அரைகுறைத் தரத்தில் குறுந்தட்டுகளை வெளியிடுவது அவரது பெயருக்குத்தான் இழுக்கு என்பதையும் நாம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா எங்கிலும் மானம் போகிறது. சற்றே நிறுத்தி, கவனமாகச் சிந்தித்து, தன் அமைச்சகத்தின் அதிகாரிகளைக் கூப்பிட்டு, நாலு திட்டு திட்டி, இனியும் பணத்தை வீணடிக்காமல் நல்ல (மென்)பொருளாகச் செய்து நேர்த்தியுடன் அதை மக்களுக்குத் தர முனையவேண்டும் தயாநிதி மாறன்.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005

ஞாயிறு காலை நெய்வேலிக்குச் செல்ல நான், சுரேஷ் கண்ணன், இகாரஸ் பிரகாஷ் மூவரும் முடிவு செய்தோம். அதிகாலை 5.30க்கு ஜே.எஸ்.ராகவனும், பா.ராகவனும் காரில் செல்வதாக இருந்தார்கள். 6.30க்கு சத்யாவும் காரிலேயே செல்ல முடிவு செய்திருந்தார். ஞாயிறு காலை அத்தனை சீக்கிரம் எழுந்திருப்பது உடம்புக்கு ஆகாது என்று பிடிவாதமாக பிரகாஷும், சுரேஷும் முடிவு செய்தனர். அதனால் பஸ்ஸிலேயே போவது என்று தீர்மானம்.

இருந்தாலும் சுரேஷ் காலை 5.00 மணிக்கே எழுந்திருந்தால்தான் கோயம்பேடுக்கு 8.00 மணிக்குள் வர முடியும் போல. காலை 7.35க்கு நான் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழையும்போது பொதுத்தொலைபேசி ஒன்றில் சுரேஷ் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு என் செல்பேசியை அழைப்பதைப் பார்த்தேன். அந்த அழைப்பை எடுக்காமல், சுரேஷுக்கு ஒரு ரூபாயை மிச்சம் செய்தேன். பின் இருவரும் அங்குள்ள ஒரு கடையில் இட்லி, வடை பலகாரம் செய்தோம். அந்தச் சட்னியின் காரம் நான் ஆறு வயது இருக்கும்போது திருப்பதியில் மொட்டை அடித்துக்கொண்டபின் சாப்பிட்ட சட்னியின் காரத்தை ஒத்திருந்தது என்று சுரேஷிடம் சொன்னேன். பிறகு எல்லோரையும் போல, குடிநீர் என்று எழுதியிருந்த இடத்தில் கைகளைக் கழுவிக்கொண்டு, பிளாஸ்டிக் புட்டியில் ஒரு லிட்டர் நீர் 13 ரூபாய்க்கு வாங்கிக் குடித்தோம். 'அக்வாஃபினா இருக்கிறதா' என்று கேட்க, அவரும் 'இருக்கு சார்' என்று சொல்லி பிஸ்லெரி பிராண்டைக் கொடுத்தார்.

பின் பிரகாஷுக்காகக் காத்திருந்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடுத்த தெருவில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டே ஆள் உள்ளே வந்தபோது மணி 8.10. அவர் சாப்பிட்டாரா இல்லையா என்றேல்லாம் குசலம் விசாரிக்காமல் நேராக நெய்வேலி செல்லும் பேருந்து ஒன்றைப் பிடித்து மூன்றுபேர் உட்காரும் இருக்கையில் ஏறி அமர்ந்தோம். சின்னக்குழந்தைகள் சன்னல் சீட்டுக்குச் சண்டை போடுவது போல உள்ளே ஏறியதுமே பிரகாஷ் சன்னலோரம் உட்கார்ந்து கொண்டார். நான் நடுவில், சுரேஷ் கடைசியாக.

கையில் தினமணி கதிர் (மட்டும்), தி ஹிந்து இரண்டும் எடுத்து வந்திருந்தேன். தினமணி கதிரில் இரா.முருகன் எழுதும் சற்றே நகுக என்னும் கடைசி இரண்டு பக்கப் பத்தி வருகிறது. அதைப் பார்த்த பிரகாஷுக்கு குஷி தாங்கவில்லை. "இதையெல்லாம் ப்லாக்ல போடாம ஏன் ஏதோ ஆலப்புழை அம்பலப்புழைன்னே எழுதிகிட்டிருக்காரு" என்றார். முருகன் காதில் கேட்டிருக்கவேண்டும், அதனால் தொடரின் முதல் கட்டுரையை இப்பொழுது வலைப்பதிவில் ஏற்றியுள்ளார்.

வண்டி 8.30க்குக் கிளம்பியது. அடுத்த ஐந்து மணிநேரத்தில் நான்கு மணிநேரம் நான் பேசியிருப்பேன். நடுநடுவே ஆளுக்கு அரை மணிநேரம் என்று இருவரும் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏறி ஒரு மணி நேரத்துக்குள் பசியெடுத்தது. முதலில் கையில் மாட்டியது வெள்ளரிப்பிஞ்சுகள். அடுத்து கொய்யாக்காய்கள். அடுத்து பலாச்சுளைகள். நடுவில் விழுப்புரத்தில் இன்னொரு தண்ணீர் பாட்டில் தேவைப்பட்டது. பிரகாஷுக்கு ஒரு தம். அங்கே வண்டியை விட்டுக் கீழே இறங்கிய இரண்டு பெண்கள் ஏறுவதற்கு முன்னரேயே வண்டி கிளம்பிவிட்டது. பின் சுற்றியுள்ள ஜனங்கள் சத்தம்போட வண்டி ஓட்டுனர் மீண்டும் ஒருமுறை, மூத்திர நாற்றம் தாங்க முடியாத அந்த பஸ் ஸ்டாண்டை வலம் வந்தார். அசட்டுச் சிரிப்புடன் அந்த இரண்டு பெண்களும் வண்டியில் ஏறினர். பெண்களாக இருந்ததால்தான் அவர்களுக்குத் திட்டு ஏதும் கிடைக்கவில்லை என்றார் சுரேஷ்.

குலுங்கிக் குலுங்கி வண்டி நெய்வேலி வந்து நின்றபோது மணி மதியம் 1.30. புத்தகக் கண்காட்சி அரங்கில் இருக்கும் சேகரைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் எங்களை நெய்வேலி பேருந்து நிலையத்திலேயே சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். புத்தகக் கண்காட்சி வளாகத்தில் சாப்பாட்டு வசதிகள் குறைவு என்றார்.

நல்ல எச்சரிக்கையினால், பஸ் ஸ்டாண்டிலேயே மதியச்சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தோம். அடுத்தமுறை சென்னைக்கு யாராவது வந்தால் பிரகாஷுடன் சாப்பிடப் போகவும். சென்னையில் எங்கு எந்த ஹோட்டலில் எப்படிப்பட்ட சிறப்பான உணவு இருக்கும் என்பதை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார். 'தி ஹிந்து'வில் ரேஷ்மி உதய் சிங் எழுதும் உணவுப் பத்தி முதல் ஒன்றுவிடாமல் படித்து எங்கெங்கு என்ன சாப்பாடு கிடைக்கும் என்று ஒரு மினி என்சைக்ளோபீடியாவாக இருக்கிறார். சுரேஷ் கண்ணன் தொப்பையைப் பார்த்து அவர் சாப்பாட்டுப் பிரியர் என்று எடைபோடவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். அது பியர் தொப்பையாம். உடனே பிரகாஷும் சுரேஷும் அடுத்து தனியாக ஒரு பியர் ரவுண்டு போடவேண்டும் என்று அங்கேயே ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

ஒருவழியாக இரண்டு கிலோமீட்டர் நடந்து 'அந்நியனை' துவம்சம் செய்துகொண்டே புத்தகக் கண்காட்சி அரங்கைச் சென்றடைந்தோம். உள்ளே நுழைந்ததும் சுரேஷ் புத்தகக் கடைகளை ஒரு பார்வை பார்க்கக் கிளம்பிவிட்டார். பிரகாஷ் "நல்லவேளையாக நான் கையில் பைசா கொண்டுவரவில்லை" என்று சொல்லிக்கொண்டே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்.தொளதொள சட்டையும் அரை டிராயரும் அணிந்து - நானில்லை - பா.ராகவன் பான் பராக் பல்லுடன் சிரித்தபடி வந்தார். (யோவ்! பான் பராக் வேற, நான் போடறது வேற என்று அவர் மற்றொரு லெக்சர் கொடுக்கும் முன்னர் நீங்களாகவே அதை இங்கே படித்துத் தெரிந்துகொள்ளவும்!)

சிறிதுநேரம் புத்தகப் பதிப்புலக வம்புதும்புகளை அவசர அவசரமாக பரிமாறிக்கொண்டோம்.

இம்முறை நெய்வேலி புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். மேலே கூரை அமைத்திருக்கிறார்கள். அதனால் வெய்யிலின் கொடுமை நன்றாகக் குறைந்துள்ளது. சென்னையைப் போலவே கீழே கார்பெட் போட்டிருக்கிறார்கள். அதனால் செம்புழுதி பறந்து புத்தகங்களை நாசமாக்குவது வெகுவாகக் குறைந்துள்ளது.கூட்டம் சென்னையைப் போல இல்லை. குறைவுதான். நெய்வேலியின் சுற்றுப்புறத்திலிருந்து பலரும் வந்திருந்தனர். எழுபத்தொரு வயதான சபாநாயகம் வந்திருந்தார். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதற்கு இருக்கிறார். அந்த நேரத்தில் நெய்வேலிக் கண்காட்சி வந்துவிடுமோ என்று பயந்திருந்தாராம். இப்பொழுது திருப்தியாக கண்காட்சியைப் பார்த்து முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்புகிறார். தினமணி ஆசிரியர் எம்.சந்திரசேகரன், தினமணி கதிரின் ஆசிரியர் சிவக்குமார் இருவரும் வந்திருந்தனர்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடும் இதழ் ஒன்றில் கடைசிப் பக்கங்களில் சுகுமாரன் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை படிக்கக் கிடைத்தது. நம்பூதிரிகளின் வாழ்க்கை முறை, அந்தர்ஜனம், தாத்ரிக்குட்டி என்று செல்லும் அற்புதமான அந்தக் கட்டுரை இணையம் மூலம் பலரையும் சென்றடையவேண்டும்! அனுமதி கிடைத்தால் அதை இணையத்தில் இடுகிறேன்.

ஆறு மணிக்கு விழாவில் கிழக்கு பதிப்பகத்துக்கு பாராட்டுப் பத்திரம். ஆறு மணிக்கு முன்னதாகவே அரங்கில் நான், ராகவன், சுரேஷ், பிரகாஷ் ஆகியோர் வந்து உட்கார்ந்தோம். விழா ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை. என்னைத் தவிர அனைவரும் அன்று இரவே சென்னை சென்றடைய விரும்பினர். அதனால் 6.15க்குக் கிளம்பி விட்டனர். 6.30க்கு மேல் முக்கியப்பட்டவர்கள் வந்தவுடன் என்னை அழைக்க, மேடைக்குச் சென்றேன்.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் சற்றே வித்தியாசமானவை. அவர்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் பலரையும் திருப்தி செய்யவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருக்கிறது. அதைப் பல இடங்களில் காணமுடிகிறது. முதலிரண்டு வரிசைகள் பெரிய மனிதர்கள் உட்கார என்று உள்ளது. அதுவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் வி.ஐ.பி என்றும் மற்றொரு பகுதியில் யூனியன் என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் தலைவர்கள் வரும்பொதும் மேடையில் விழாவை வழிநடத்துபவர், "எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் எஞ்சினியர் சங்கப் பிரதிநிதிகளை வரவேற்கிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் ஓ.பி.சி சங்கத் தலைவரை வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது எந்த நேரமானாலும் சரி, அதாவது ஒரு பேச்சாளர் பேசி முடித்ததும், அடுத்தவர் பேச்சை ஆரம்பிக்கும் முன்னர் என்றாலும் இந்த "வரவேற்பு" அவசியமாம். அப்படி இல்லாவிட்டால் "நிகழ்வுகள்" விபரீதமாக இருக்குமாம்! அதேபோல மேடையில் ஏழு பேர் உட்கார்ந்திருந்தால் அந்த ஏழு பேருக்கும் கை குலுக்கி, கையில் பூச்செண்டு கொடுக்க ஏழு பேர் வருவார்கள். பின் கடைசியில் நினைவுப்பரிசு கொடுக்க இன்னுமொரு ஏழு பேர். ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து மேடையில் பேச ஏழு பேர்.

அதேபோல விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்கப்படுபவர்கள் என்.எல்.சியின் சில பெருந்தலைகள். அவர்களைப் பற்றிப்பேசும்போது "டாட் டாட் டாட், ஐ.பி.எஸ், சி.வி.ஓ" என்று பட்டம், பதவி என்று அத்தனையையும் பெயருடன் சேர்த்துச் சேர்த்தே வரிக்கு வரி சொல்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஓர் எழுத்தாளர், ஒரு பதிப்பகம் என்று தேர்ந்தெடுத்து மரியாதை செய்கிறார்கள். ஒரு புதிய புத்தகம் வெளியிடப்படுகிறது. ஒரு சிறப்புப் பேச்சாளர் பேசுகிறார். பின்னர் 'கலை நிகழ்ச்சி'.

இத்தனையையும் பார்த்துக்கொண்டு மேடையில் உட்கார்வது சற்று கஷ்டம்தான். அதிலும் என்னையும், தினமணி கதிர் ஆசிரியர் சிவக்குமாரையும் தவிர மீதி அனைவருக்குமாவது மைக்கைக் கையில் பிடித்துக்கொண்டு பொதுமக்களை ரம்பம் போடும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் சிவக்குமாருக்கும் அந்த வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லை.

எனக்குக் கிடைத்த 'பொன்னாடை', பூச்செண்டு, ஒரு புத்தகம், ஓர் அன்பளிப்பு ஆகிய அனைத்தையும் ஒருவர் பணிவாகக் கையில் வாங்கிக்கொண்டு கிழக்கு பதிப்பகம் கடை வரை கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார். இதுபோன்ற மரியாதைகள் தேவையில்லை.

-*-

இரவு உணவுக்கு ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம். அங்கே எதைக் கேட்டாலும் தீர்ந்துவிட்டது என்று பதில். தமிழகத்தின் தேசிய உணவான (நன்றி: இரா.முருகன்) பரோட்டா கூட கிடைக்க நேரமாகும் என்கிறார்கள். பின் அவர்களிடம் என்ன இருக்கிறதோ (சன்னா பட்டூரா - உண்மையில் அது மட்டர் பட்டூரா) அதைக்கொடுங்கள் என்று கேட்டு சாப்பிடுகிறோம். மெதுவாக தங்கும் இடம் நோக்கி நடையைக் கட்டுகிறோம். வழியில் ஒரு வேன் எங்களை நிறுத்தி ஏற்றிக்கொண்டு தங்கிமிடத்தில் இறக்கி விடுகிறது. கிழக்கு பதிப்பகத்தின் பிற பணியாளர்களுடன் நெய்வேலி புத்தகக் கண்காட்சியினர் ஏற்பாடு செய்திருந்த அறையில் இரவு தூக்கம். நல்ல வசதியான இடம். தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது. குழாயிலிருந்து வரும் தண்ணீரை அப்படியே குடிக்கவும் செய்யலாம் என்று அறிந்ததும் சென்னையிலிருந்து வரும் எனக்கு திடுக்கென்று இருக்கிறது.

காலையில் தங்குமிடத்திலேயே காலையுணவு கிடைக்கிறது. இட்லி, வடை, பொங்கல் என்று வயிறாரச் சாப்பிட்டு ஒரு டீயையும் குடித்தால் மொத்தம் பதிமூன்று ரூபாய்தான் என்கிறார்கள்! ஒருவேளை வெளியே உலகம் மாறிவிட்டது என்று உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியவில்லை போலும்.

பத்து மணி அளவில் மீண்டும் வேனில் ஏறி புத்தகக் கண்காட்சி வளாகத்துக்கு வருகிறோம். திங்கள் கிழமையாதலால் பொதுமக்கள் வருகை குறைவு. அரங்கைச் சுற்றி வந்து சில படங்களை எடுத்துக்கொள்கிறேன். சிலரிடம் பேசுகிறேன். ஓரத்தில் அமர்ந்துகொண்டு கையில் எடுத்துவந்திருந்த குர்ச்சரண் தாஸ் எழுதிய India Unbound புத்தகத்தைப் படிக்கிறேன். மதியம் ஆனதும் அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருக்கும் மதிய உணவுக்குப் போகிறோம். பிரிஞ்சி, தயிர் சாதம். அருமையான சாப்பாடு. சாப்பிட்டு வந்ததும் தூக்கம் கண்களைச் சுற்ற, விடா முயற்சியுடன் புத்தகப் பக்கங்களைப் புரட்டுகிறேன்.

மதியம் 2.30க்கு போரடிக்கிறது. முதுகில் பையை மாட்டிக்கொண்டு சென்னைக்குத் திரும்ப முடிவு செய்கிறேன். அரை மணிநேரம் நடந்து பஸ் ஸ்டாண்ட் வந்து நெய்வேலி-சென்னை P2P பேருந்து ஒன்றில் ஏறி அவர்களது குழப்பமான விதிகளுக்கு இணங்க கடைசி சீட்டில் அமர்ந்து சென்னைக்கு வருகிறேன். வர நான்கு மணிநேரங்கள்தான் ஆகிறது.

-*-

நெய்வேலி, புத்தக வாசம் மிகுந்த ஊர் என்று சொல்லமுடியாது. தமிழ்ப் புத்தகங்களுக்கான சந்தை குறைவுதான். என்.எல்.சியில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பதில் நாட்டம் உள்ளவர்கள் என்று தோன்றவில்லை. கண்காட்சிக்கு வருபவர்கள் மிளகாய் பஜ்ஜி, ராட்சச ராட்டினம், டில்லி அப்பளம் என்றுதான் செலவழிக்கின்றனர். இந்தமுறை பல முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் நெய்வேலிக்கு வரவில்லை!

ஆனாலும் என் குறைந்த அனுபவத்தில் சென்னைக்கு அடுத்து நெய்வேலி புத்தகக் கண்காட்சி முக்கியமானதாக இருக்கிறது என்றே தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம் மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் சென்னைக்கு ஒப்பாக புத்தகக் கண்காட்சிகளை யாரும் நடத்தாததே! இந்தப் பெருநகரங்களில் பெரும் சந்தை உள்ளது. ஆனால் நல்ல புத்தகக் கண்காட்சியினை நடத்தக்கூடிய விருப்பமோ, திறமையோ யாருக்கும் இல்லை. மற்றொரு புரம் பார்த்தால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினரோ தம் சிற்றூரில் நடக்கும் கண்காட்சிக்கு தம்மால் முடிந்த அளவு வசதிகளைச் செய்துதருகின்றார்கள்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி போன்ற பிற பெரிய நிறுவனங்கள், பிற பெருநகரங்களிலும் இந்தக் காரியத்தைச் செய்துதரும் என்று எதிர்பார்ப்பது தவறு. சென்னையைப் போன்றே தமிழகத்தின் முக்கிய நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளை பெரிய அளவில் ஏற்பாடு செய்வது பபாசியின் வேலையாக இருக்கவேண்டும்.

பபாசியின் உள்-அரசியலைப் பார்க்கும்போது இப்பொழுதிருக்கும் கமிட்டி உறுப்பினர்கள் இதையெல்லாம் செய்வார்கள் என்று தோன்றவில்லை.