Thursday, June 28, 2012

வைரமுத்து - மூன்றாம் உலகப் போர் - முன்பதிவு

வைரமுத்து ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளியான ‘மூன்றாம் உலகப் போர்’ புத்தகமாக வெளியாகிறது. ஜூலை 13-ம் தேதி மாலை 6 மணிக்கு காமராசர் அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட, ஜெயகாந்தன் முதல் படியைப் பெற்றுக்கொள்கிறார். கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

இந்தப் புத்தகத்தின் பிரதியைப் பெற முன்பதிவு செய்துகொள்ளலாம். சுமார் 400 பக்கங்கள் (கிரவுன் 1/4) கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 300/- முன்பதிவுத் தேதிக்குள்ளாக முன்பதிவு செய்வோருக்கு 10% டிஸ்கவுண்ட் உண்டு.

புத்தகத்தை வி.பி.பியிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இணையம் வழியாக ஆர்டர் செய்ய

ஃபோன் மூலம் ஆர்டர் செய்ய: 94459-01234 / 9445 979797

Tuesday, June 19, 2012

என்.எச்.எம் இணைய வணிகத்தில் வி.பி.பி முறை

கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், இணைய வங்கிச் சேவை, பே பால் ஆகிய வழிமுறைகளில் என்.எச்.எம்மின் இணைய வணிகத் தளத்தில் புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறீர்கள். இப்போது கிழக்கு பதிப்பகம் மட்டுமின்றி, தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் அனைத்தின் புத்தகங்களும் எங்களிடம் கிடைக்கிறது.

அத்துடன் இன்றுமுதல் வி.பி.பி வழியாகப் புத்தகம் வாங்கும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். வேண்டிய புத்தகங்களை உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் எடுத்துக்கொண்டு பணம் தரும் பக்கத்துக்குச் சென்று, விபிபி முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் வாங்கியுள்ள தொகைக்கு ஏற்ப, விபிபி மூலம் புத்தகம் அனுப்ப மேற்கொண்டு என்ன செலவாகும் என்பதை அந்தப் பக்கம் காண்பிக்கும்.

250 ரூபாய்க்கு மேல் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றால் விபிபி முறைக்காக நீங்கள் மேற்கொண்டு கட்டணம் ஏதும் தரவேண்டியதில்லை. ஆனால் 250 ரூபாய்க்குக் கீழ் என்றால் மேலதிகக் கட்டணம் உண்டு.

கிரெடிட் கார்ட் அல்லது இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்த விரும்பாதவர்கள், விபிபி முறையைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தச் சேவை இந்தியாவுக்குள் மட்டுமே. விபிபி சேவையை உங்களுக்குத் தருவது இந்திய அஞ்சல் துறை. புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு அஞ்சல் அலுவலரிடம் பணம் செலுத்தினால் போதும்.

மேற்கொண்டு விவரங்கள் அறிய, இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.

Monday, June 18, 2012

உத்தராகண்டம்

உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புதிய மாநிலம் உத்தராகண்டம். சென்ற வாரம் முழுதும் இந்த மாநிலத்தில் இருந்தேன். (இமயமலையின் ஒரு குன்றின்மீது ஏறச் சென்றிருந்தோம். அது பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.)

இந்திய மாநிலங்கள் பலவற்றில் சீரான வளர்ச்சி இல்லாத காரணத்தால் ஒரு பகுதியினர் மட்டும் பிரிந்து தனி மாநிலமாக ஆக விரும்புகின்றனர். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகியவை மாநிலங்களாக ஆகியுள்ளன. ஆந்திரத்திலிருந்து தெலங்கானா, மகாராட்டிரத்திலிருந்து நாகபுரி ஆகியவை பிரிய விழைவதையும் மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து என்ற பகுதி பிரிவதற்காக நடத்திய போராட்டங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

உத்தரப் பிரதேசத்தினர், உத்தராகண்ட மக்களை ‘பஹாடிகள்’ (மலை ஆசாமிகள்) என்று சற்று கேலியாகவே நடத்துவர் போலும். அப்பகுதி ஒன்றும் தனியாகவெல்லாம் போகக்கூடாது என்று யாரும் போராடவில்லை. இப்போது தெலங்கானா போராட்டத்தில் நடப்பதுபோல இல்லாமல், சத்தமே இன்றி மாநிலம் இரண்டாகப் பிரிந்தது.

பிரிந்த புது மாநிலத்தில் மருந்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சி அல்லது சமாஜ்வாதிக் கட்சிக் கொடிகளையோ அலுவலகங்களையோ காண முடியவில்லை. அங்கே காங்கிரஸும் பாஜகவும் மட்டும்தான் கண்ணில் தென்பட்டன. இது ஒருவிதத்தில் எனக்கு ஆச்சரியமே. (இப்போது உத்தராகண்டத்தில் தன்னை பலப்படுத்திக்கொள்ள பாஜக எம்.எல்.ஏக்களைக் கடத்தித் தன் வசம் இழுக்கும் நாடகத்தை காங்கிரஸ் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.)


மாநிலப் பிரிவினையில், இந்துக்களுக்குப் புனிதமான பெரும்பாலான பகுதிகள் அனைத்தும் உத்தராகண்டத்தில் வந்துவிட்டது. ‘சார் தாம்’ எனப்படும் நான்கு முக்கியப் புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை அனைத்தும் உத்தராகண்ட மலைப்பகுதியில் இருக்கின்றன. இதுதவிர ரிஷிகேஷ், ஹரித்வார் எனத் தொடங்கி எண்ணற்ற இந்துத் தலங்கள் இம்மாநிலத்தில்தான். இதனால் புனித யாத்திரிகர்கள் உத்தராகண்டத்தில் வந்து குழுமுகின்றனர்.

புனித யாத்திரிகர்கள் மட்டுமின்றி, சாகச யாத்திரிகர்களும் வந்து குழுமும் இடமாக ஆகியுள்ளது உத்தராகண்டம். மலை ஏறுதல் (trekking, mountaineering), நதிநீரில் படகு வலித்தல் (rafting), உயரத்திலிருந்து நீருக்குள் குதித்தல், பஞ்சீ ஜம்ப்பிங் போன்ற பல விளையாட்டுகளை இங்கு பார்க்கலாம். ஆன்மிகத் தேடலுடன் பிற தேடல்களுக்காகவும் இந்தியா வரும் பல வெளிநாட்டவருக்கு (முக்கியமாக வெள்ளைத் தோல் ஆசாமிகளுக்கு) இந்த மாநிலம் உகந்த இடமாக உள்ளது. ரிஷிகேஷில் கண்ணில் தென்பட்ட இடமெல்லாம் வெள்ளைக்காரர்கள் நிறையப் பேர் இருந்தனர். சிலர் வேட்டி கட்டி, குடுமி வைத்திருப்போர். சிலர் வெறுமனே முதுகுப் பையுடன் ஊர் சுற்றுவோர். இந்த அளவுக்கு வெள்ளையர்கள் உள்ள ஓர் இந்திய ஊரை நான் இதற்குமுன் கண்டதில்லை.


உத்தராகண்டம், ஆள்வதற்கு மிகக் கடினமான ஒரு மாநிலம். ஏதோ ஒரு வேகத்தில் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிந்துவிட்டாலும் இருக்கும் நிதி ஆதாரங்களைக் கொண்டு எப்படித்தான் வெகு வேகமாக முன்னேறப் போகிறார்களோ என்ற கவலை இல்லாமல் இல்லை. மலைகளால் நிரம்பியிருக்கும் இம்மாநிலத்தில் சாலை வசதிகளைச் செய்து தருவது மிகக் கடினம். மலைகளில் பரவியிருக்கும் பல்வேறு கிராமங்களில் மக்கள் தொகையோ சில நூறுகளைத் தாண்டாது. இக்கிராமங்களில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டுமானால் எவ்வளவு கடினம் என்று யோசித்துப் பாருங்கள். பல கிராமங்களிலிருந்து சாலைகளுக்கு வரவேண்டும் என்றாலே ஒற்றையடிப் பாதையில் ஓரிரு மணி நேரங்கள் நடக்கவேண்டியிருக்கும். கடைகள், சந்தை, சினிமா, கல்லூரி என எதை எடுத்தாலும் பல மணி நேரங்கள்.

மலைப் பாதையில் 200 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க கிட்டத்தட்ட 7-8 மணி நேரம் எடுக்கிறது. (உத்தரகாசியிலிருந்து ரிஷிகேஷ் செல்ல கிட்டத்தட்ட இந்த நேரம் ஆனது.) இதனால் ஆகும் எரிபொருள் செலவைக் கணக்கில் எடுங்கள். பெரிய பெரிய பேருந்துகளை இயக்க முடியாது. எல்லாமே சின்னப் பேருந்துகள் அல்லது குவாலிஸ், இன்னோவா, மேக்ஸ் போன்ற வண்டிகள். இவற்றில் ஒண்டிக்கொண்டுதான் மக்கள் பயணம் செய்யவேண்டியுள்ளது.

சாலைகளில் எந்நேரமும் பெரும் கற்கள் வந்து விழலாம். அந்த நிமிடமே போக்குவரத்து ஸ்தம்பித்துப்போகும். மீண்டும் நிலைமையைச் சீராக்க சில நாள்கள் எடுக்கலாம். கோடையில் மலைக்காடுகளில் தீ பிடித்துக்கொள்ளும். சென்ற வாரப் பயணத்தின்போது மூன்று இடங்களில் தீ பற்றி எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தோம். திடீர் வெள்ளம், விபத்துகள், உயிர் இழப்பைச் சமாளிப்பது என்று ஏகப்பட்ட இயற்கைப் பிரச்னைகள்.

மனித வளத்தைப் பிற மாநிலங்களைப் போல எளிதில் மேம்படுத்த முடியாது. கல்லூரிகள் குறைவு. பெரும்பாலானோருக்கு தொலைக்காட்சிகள் வீடுகளுக்கு வருவதில்லை; எனவே உலகமே தெரியாது. தொழிற்சாலைகள் குறைவு. அப்படியே வந்தாலும் அவை உள்ளூரின் கனிமச் சுரங்கங்களைக் கொத்தி எடுத்துச் செல்லவே முனையும். கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் சில பல தொழிற்சாலைகள் வந்துள்ளன. ஆனால் அவையும் பெரும்பாலும் வெளி மாநிலத் தொழிலாளர்களைக் கொண்டதாகவே இருக்கும்.

இதுபோன்றதொரு மாநிலத்தை முதன்மையான ஒன்றாக மாற்ற வலுவான அரசியல் தலைமை தேவை. ஆனால் சிறு மாநிலங்களுக்கே உரித்தான் நிலையற்ற அரசியல் சூதாட்டத்தைத்தான் நாம் இங்கும் பார்க்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள், புதுச்சேரி, கோவா, ஜார்க்கண்ட் போல சிறு எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தப் பக்கமும் தாவத் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜக என இரு கட்சியிலும் உட்கட்சிப் பூசல்.

பெரும் சவால்தான்!

Tuesday, June 05, 2012

ஆழம் ஜூன் மாத இதழ் பிடிஎஃப்

ஆழம் மாத இதழ் - முந்தைய இதழ்களின் கட்டுரைகளை யூனிகோட்  வடிவில் ஆழம் இணையத்தளத்திலிருந்து படிக்கலாம். முந்தைய இதழ்களின் பிடிஎஃப் கோப்புகளையும் அங்கிருந்தே பெறலாம்.

ஜூன் மாத ஆழம் இதழ் பிடிஎஃப் கோப்பு இங்கே.

நாங்கள் பிடிஎஃப் கோப்பை உருவாக்கும் மென்பொருளில் சில பிரச்னைகள் இருக்கக்கூடும். எனவே கூகிள் க்ரோம், ஆப்பிள் சஃபாரி ஆகியவற்றில் நேரடியாக இந்த பிடிஎஃப் கோப்புகளைக் காண்பதில் எழுத்துகள் சரியாகத் தெரிவதில்லை. மாறாக அடோபி பிடிஎஃப் ரிடரில் சரியாகத் தெரிகிறது. இந்தச் சிக்கல் தீரும்வரை அடோபி பிடிஎஃப் ரீடரைப் பயன்படுத்திப் படியுங்கள். சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்துவருகிறோம்.

அச்சுப் பதிப்பில் ஆழம் இதழைப் பெற விரும்பினால் ஓராண்டுச் சந்தா | ஈராண்டுச் சந்தா

Friday, June 01, 2012

சாயிநாத்தின் பொருளாதாரப் பொங்கல் - 1

ஏழைப் பங்காளன் இதழாளர் சாயிநாத்துடைய பேனாவுக்கு அவ்வளவு சக்தி. அவர் சாட்டையைச் சொடுக்கினால் மாண்டேக் சிங் அலுவாலியாகூட அலறுவார்.

இடதுசாரிக் கதையாடலை முன்னெடுத்துச் செல்வதில் சாயிநாத்தின் கட்டுரைகளுக்கு முக்கிய இடமுண்டு. வினவு உடனே அந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடுவதிலிருந்தே இதனை நீங்கள் உணரலாம். அதேபோல தொலைக்காட்சியில் உரையாடும் இடதுசாரிகள், சாயிநாத் கட்டுரையின் சாரத்தை மேற்கோள் காட்டும்போது நீங்கள் அந்த வாதத்தை எதிர்கொள்ளத் திணறுவீர்கள். சாயிநாத்தே சொல்லிவிட்டார், அதுவும் தி ஹிந்துவிலேயே வந்துவிட்டது. பிறகென்ன?

சாயிநாத்தின் சமீபத்தில் தி ஹிந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்திய அரசு முதலாளிகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய பட்ஜெட்டில் “ரெவின்யூ ஃபோர்கான்” (வேண்டாமென்று விடப்பட்ட வருமானம்) என்று கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தைத்தான் அவர் எடுத்துக் கொடுத்துள்ளார். எனவே சாயிநாத்தைக் குற்றம் சொல்ல முடியாது. இந்த எண்ணை முன்வைத்து சாயிநாத்தின் வாதம் இப்படியாக உள்ளது.
என்னவோ தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாயைக் கொடுப்பதற்குப் போய் மூக்கால் அழுகிறீர்களே, உங்களுக்குத் தெரியுமா பெரும் பணமுதலைகள் எவ்வளவு பெறுகிறார்கள் என்று? 25 லட்சம் கோடி ரூபாய். இப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
இதைப் படிக்கும் பலரும் நடுங்கிப் போய்விடுவார்கள். உண்மையா? முதலாளிகள் இப்படி அள்ளி எடுத்துக்கொண்டு போகிறார்களா? அடப்பாவிகளா! நாசமாப் போக! ஏழைகள் வயிற்றில் அடித்துவிட்டு, இப்படி அநியாயம் பண்ணுகிறீர்களே...

கொஞ்சம் தகவலை ஆராய்வோம். ஏழு வருடங்களுக்கு 25 லட்சம் கோடி ரூபாய். ஒரு பக்கம் ஓராண்டு எண்ணை வைத்துக்கொள்கிறார். மற்றொரு பக்கம் ஏழாண்டு எண்ணை வைத்துக்கொள்கிறார். ஆப்பிள், ஆரஞ்ச். எனவே ஓராண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம். 2011-12 ஆண்டில் சாயிநாத் கொடுத்துள்ள புள்ளிவிவரத்தின்படி,

    கார்பொரேட் வருமான வரிக்குக் கொடுத்த விலக்கு 51,292 கோடி ரூபாய்
    ஆயத்தீர்வை விலக்கு: 2,12,167 கோடி ரூபாய்
    சுங்கவரி விலக்கு: 2,23,653 கோடி ரூபாய்
    மொத்தம்: 4,87,112 கோடி ரூபாய்

கவனியுங்கள், இதில் மிகப் பெரும் பகுதி மறைமுக வரிகளில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கு. மொத்த விலக்கில் வெறும் 10% மட்டுமே நேரடி வரியில் விலக்கு.

இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவதாக சுங்க வரி (கஸ்டம்ஸ்).

முதலில் அரசு அனைத்துத் துறைகளுக்கும் சுங்க வரியை விதிக்கிறது. அதிலிருந்து எவ்வளவு வருமானம் வரும் என்று ஊகிக்கிறது. பிறகு, சில இறக்குமதிகளுக்கு மட்டும் சுங்கவரியை விலக்கிக்கொண்டால் தன் வருமானம் எவ்வளவு குறையும் என்று பார்க்கிறது. அந்தக் குறைச்சலைத்தான் ‘ரெவின்யூ ஃபோர்கான்’ என்று மதிப்பிடுகிறது.

சரி ஐயா, எதற்கெல்லாம் இந்த பட்ஜெட்டில் சுங்க வரியை விலக்கிக்கொண்டுள்ளனர் என்று பார்த்தேன்.
No change is proposed in peak rate of customs duty of 10 per cent on non-agricultural goods. Import of equipment for fertilizer projects are being fully exempted from basic customs duty of 5 per cent for 3 years. Basic customs duty is also being lowered for a number of equipment used in agriculture and related areas.

In the realm of infrastructure, customs relief is being given to power, coal and railways sectors. While steam coal gets full customs duty exemption for 2 years (with the concessional counter-veiling duty of 1 per cent), natural gas, LNG and certain uranium fuel get full duty exemption this year. Different levels of duty concessions are being provided to help mining, railways, roads, civil aviation, manufacturing, health and nutrition and environment. So as to help modernization of the textile industry, a number of equipment are being fully exempted from basic customs duty, and lower customs duty is being proposed for some other items used by the textile industry.
அதாவது எங்கெல்லாம் சுங்க வரியை விலக்கிக்கொள்கிறார்கள்?
    * உரத் தயாரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் எந்திரங்களுக்கு
    * விவசாயத்துக்கும் தொடர்பான துறைகளுக்கும் தேவையான கருவிகளை இறக்குமதி செய்ய
    * மின்சார உற்பத்திக்கான இயந்திரங்கள்
    * கரியைத் தோண்டி எடுக்கும் இயந்திரங்கள்
    * ரயில்வே துறைக்குத் தேவையான இயந்திரங்கள்
    * இயற்கை எரிவாயு, யுரேனியம் எரிபொருள்
    * மொத்தத்தில் சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்துத் துறை, உற்பத்தித் துறை, மருத்துவத் துறை, சுற்றுச் சூழல் துறை ஆகியவற்றுக்குத் தேவையான எந்திர இறக்குமதிகளில்.
    * நெசவுத் தொழில் துறையின் வளர்ச்சிக்காக அந்தத் துறைக்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்வதில்.
    * கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி, பொதுவான பிற பொருள்களை விடக் குறைவு

சரி, இதனால் யாருக்கு நன்மை? உரத் தயாரிப்பு மெஷினுக்கு இறக்குமதி வரியை நீக்கினால் அதனால் நேரடி லாபம் யாருக்கு? உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிக்கு விலை குறையும். சொல்லப்போனால் இதனால் பலன் பெறப்போவது அரசுதான். எனெனில் அரசுதான் அந்த உரத்துக்கு மானியம் கொடுக்கிறது. விவசாயி கொடுக்கும் காசு குறைவுதான். சுங்க வரி விதித்து அரசு தன் வருமானத்தைப் பெருக்கிக்கொண்டால், உர நிறுவனம் உரத்தின் விலையை அதிகரிக்கும். அதிகரித்த அந்த விலைக்கு ஏற்ற மானிய அதிகரிப்பையும் அரசு கொடுத்தாகவேண்டும்.

இப்படியே ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொள்ளலாம். மின்சாரம் தயாரிக்கத் தேவையான எந்திரங்கள். ஏற்கெனவே மின்சாரத்துக்கு விலை ஏற்றினால் மக்கள் குதிக்கிறார்கள். உங்கள் ஊரில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் வாங்கப்போகும் இயந்திரத்தின் விலை சுங்கவரியால் அதிகமானால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த விலை ஏற்றத்தை உங்கள் தலையில் கட்டப்போகிறார்கள்.

நெசவு இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சுங்க வரியை அதிகரித்தால் என்ன ஆகும்? கோவை பகுதியில் வேலை வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கும். ஏற்கெனவே மின்சாரம் குறைவாலும் NREGA போன்ற பல பிரச்னைகளாலும் நெசவுத் தொழில் மிகப் பிரமாதமாக இருக்கிறது. சாயிநாத்தை நிதி அமைச்சராக்கினால், ‘ஏத்துடா வரியை!’ என்பார். கடைசியில் சாயிநாத்தின் நெருங்கிய நண்பர்களான விதர்பா பருத்தி விவசாயிகளும் சேர்ந்தே பூச்சி மருந்தைக் குடிக்கவேண்டி வரும்.

இப்படியே சுங்க வரி விலக்கு ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அந்த வரியை ஏற்றினால் நிச்சயமாக அரசின் வருமானம் அதிகரிக்கும். ஆனால் அது நேராக கட்டுமானத்தைப் பாதிக்கும் அல்லது மிக முக்கியமான துறைகளான விவசாயம், நெசவு, உடல் நலம் ஆகியவற்றைப் பாதிக்கும். அதனால் மொத்த இந்திய மக்களை - ஏழைகளையும் சேர்த்து - பாதிக்கும்.

கச்சா எண்ணெயைப் பற்றி நாம் சொல்லவே வேண்டியதில்லை. இன்னும் குறையுங்கள் என்றுதான் சொல்கிறோம். அப்போதுதான் நம் கையில் கிடைக்கும் பெட்ரோலின் விலை குறையும்.

இந்த ஆண்டு தங்கத்தின்மீது சுங்க வரி விதிக்கப்படுவதாக இருந்தது. அதனை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். ஆனால் தங்க வியாபாரிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து அதனை எதிர்த்தனர். கடை அடைத்துப் போராடினர். சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினர். சுங்க வரி வாபஸ் பெறப்பட்டது. இது தவறு. தாலிக்குத் தங்கம் விலை அதிகரித்தாலும் தங்கத்தின்மீதான சுங்க வரியை நீக்கியிருக்கக்கூடாது. நான் நிதி அமைச்சராக இருந்தால் கட்டாயமாக இதை நீக்கியிருக்க மாட்டேன்.

இதைத் தவிர, உபயோகமான எதன்மீதாவது சுங்க வரி நீக்கப்பட்டு அம்பானி, டாடா பணத்தில் கொழிக்கிறார்கள் என்று சாயிநாத் காட்டுவாரா?

அடுத்து எக்சைஸ் எனப்படும் ஆயத்தீர்வை.

சுங்கத்துக்கு இணையானது ஆயத்தீர்வை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருள்களுக்கு உற்பத்தி ஆகும் இடத்திலேயே விதிக்கப்படும் வரி ஆயத்தீர்வை. இதில் எந்தெந்தப் பொருள்களுக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டது?

* ஆறு உயிர் காக்கும் மருந்துகள், தடுப்புசிகள் ஆயத்தீர்வை நீக்கம்.
* அயோடின் மீதான ஆயத்தீர்வை 6%-லிருந்து 2.5% குறைப்பு.
* LED விளக்குகளுக்கு குறைவான ஆயத்தீர்வை
* மின்சார வண்டிகள் அல்லது ஹைப்ரிட் வண்டிகளுக்குக் குறைக்கப்படுகிறது
* பிராண்டட் வெள்ளி நகைகளுக்கு நீக்கப்படுகிறது.
* பிராண்ட் இல்லாத தெருவோரத் தங்க நகைகளுக்கு ஆயத்தீர்வை சேர்க்கப்பட்டு, போராட்டத்துக்குப் பின் கைவிடப்பட்டது.
* (ஆயத்தீர்வை மொத்தமாக 10%-லிருந்து 12%-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் வைக்கவும்!)

வேறு எதற்கெல்லாம் ஆயத்தீர்வை விலக்கு? ஒரு சில பகுதிகளில் எந்தத் தொழில்துறையைத் தொடங்கினாலும் அதற்கு ஆயத்தீர்வை விலக்கு உண்டு என்று அறிவிப்பார்கள். பொதுவாக ஒரு மாநில அரசு மத்திய அரசைக் கெஞ்சி இதைச் செய்துகொள்ளும். உதாரணம் உத்தராகண்ட் மாநிலம். புதிதாக உருவான அந்த மாநிலத்தில் தொழில் துறையே இல்லை. எனவே மாநில அரசு கேட்டுக்கொண்டு மத்திய அரசு இதனைச் செய்கிறது. இதேபோலத்தான் ஹிமாசலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவை. ஒரு கட்டத்தில் உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அங்கு பல தொழில் அமைப்புகள் சென்றன. அதேபோலத்தான் உத்தராகண்ட். ஆனால் தமிழகத்திலோ ஆந்திரத்திலோ குஜராத்திலோ இதுபோன்ற பிளாங்கெட் விலக்கு கிடையாது. பாண்டிச்சேரியில் சில தொழில்துறைகளுக்கு இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற விலக்குகள் காலக்கெடுவுடன் கூடியவை. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் தொழில் துறைகள் வளர்ந்துவிடும். அதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதனை இடதுசாரிகள் ஏற்க மறுத்தால் நேராக அந்த மாநில அரசுடன் போராடி, இப்படியெல்லாம் கேட்காதீர்கள் என்று சொல்லுங்கள். ஊருக்குள்ளேயே உங்களை விடமாட்டார்கள்!

ஆக, சுங்கமோ, ஆயத்தீர்வையோ, பொதுமக்களுக்கு நன்மை என்பதால் மட்டும்தான் விலக்கு அளிக்கப்படுகிறது. சாயிநாத் சொல்வதுபோல பெரு வியாபாரிகள் கொள்ளை அடிப்பதற்காக அல்ல.

அடுத்து கடைசியாக மொத்த விலக்கில் வெறும் 10% மட்டுமே இருக்கும் கார்பொரேட் இன்கம் டாக்ஸ் விஷயத்துக்கு வருகிறேன். அது தனிப் பதிவாக.

சாயிநாத்தும் பிற இடதுசாரிகள் அனைவரும் கெப்பல்ஸ் (கோயபல்ஸ் என்றி தமிழகத்தில் அழைக்கப்படுவார்) விதியைப் பயன்படுத்தி ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பதன்மூலம் மக்களைக் குழப்புகிறார்கள்.

இது தொடர்பாக சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை கட்டாயமாகப் படிக்கப்படவேண்டியது.

மீதம் அடுத்த பதிவில்.

டயல் ஃபார் புக்ஸ் - தமிழ்ப் புத்தகங்களை வாங்க

டயல் ஃபார் புக்ஸ் என்ற பெயரில் நாங்கள் தமிழ்ப் புத்தகங்களை விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருந்த இடத்திலிருந்தே இணையம் மூலம் நீங்கள் புத்தகங்களை வாங்கலாம். அல்லது ஃபோனில் (94459-01234 / 9445 979797) பேசி வாங்கலாம். அல்லது இப்போது தியாகராய நகரில் நாங்கள் தொடங்கியிருக்கும் கடைக்கு (G-5, நாராயணா அபார்ட்மெண்ட், 23, ராமேஸ்வரம் ரோடு, தி.நகர், சென்னை 17) நேராக வந்து வாங்கலாம். தி.நகர் கடை தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகியுள்ளது. முதல் மாதமே மிகச் சிறப்பான விற்பனை நடந்துள்ளது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பிட்ட சில இலக்குகளை நாங்கள் எட்டிவிட்டால் மேலும் பல இடங்களில் புத்தகக் கடைகளைத் திறக்க உள்ளோம்.

டயல் ஃபார் புக்ஸ் - இணையம்/தொலைபேசி/செங்கல் கடையில் கீழ்க்கண்ட தமிழ்ப் பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும். வாங்கிப் பயன் பெறுங்கள்.
 1.  அகல் வெளியீடு
 2.  அடையாளம்
 3.  அமர் சித்திர கதை
 4.  அம்ருதா
 5.  அருணோதயம்
 6.  அல்லையன்ஸ்
 7.  அறிவு பதிப்பகம்
 8.  ஆப்பிள் புக்ஸ்
 9.  உயிர்மை
 10.  எதிர் வெளியீடு
 11.  எல்.கே.எம் பப்ளிகேஷன்
 12.  என்.சி.பி.எச்
 13.  கடலங்குடி
 14.  கண்ணதாசன் பதிப்பகம்
 15.  க்ரியா
 16.  கவிதா
 17.  காலச்சுவடு
 18.  கிழக்கு பதிப்பகம்
 19.  குமரன் பதிப்பகம்
 20.  சக்தி புக்ஸ்
 21.  சந்தியா பதிப்பகம்
 22.  சவுக்கு வெளியீடு
 23.  சிக்ஸ்த் சென்ஸ்
 24.  சொல்வனம்
 25.  ஞாநபானு பதிப்பகம்
 26.  தமிழினி
 27.  திருமகள் நிலையம்
 28.  நர்மதா
 29.  நலம் வெளியிடு
 30.  நற்றிணை
 31.  நாகரத்தினா புக்ஸ்
 32.  ப்ராடிஜி புத்தகங்கள்
 33.  பாரி நிலையம்
 34.  பாவை பப்ளிகேஷன்ஸ்
 35.  மஞ்சுல்
 36.  மருதா பதிப்பகம்
 37.  லிப்கோ
 38.  வம்சி
 39.  வரம் வெளியீடு
 40.  வாசல்
 41.  வானதி
 42.  விகடன் பிரசுரம்
 43.  விடியல்
 44.  வைரமுத்து புத்தகங்கள்