Friday, January 30, 2009

இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்

தமிழகத்தில் அடிமட்டத்தில் இலங்கைப் பிரச்னை தொடர்பான ஒரு கொந்தளிப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. அதன் culmination-தான் நேற்று சாஸ்திரி பவனுக்கு எதிரில் நடந்த முத்துக்குமாரின் தீக்குளிப்பு.

இந்த மக்கள் கொந்தளிப்பின் ஒரு விளைவுதான் பல கல்லூரிகளில் மாணவர்கள் பாடங்களைப் புறக்கணித்து தெருவில் போராடுவது. மாணவர்கள் படிப்பின்மீது அக்கறையில்லாமல்தான் இதனைச் செய்கிறார்கள் என்று அரசுகள் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதுபோன்ற மாணவர் போராட்டங்கள்தான் இட ஒதுக்கீடு, மொழிப் போராட்டம் ஆகியவற்றில் கடுமையாக வெடித்துள்ளது.

மத்திய அரசு, இலங்கைப் பிரச்னை விஷயத்தில் கடந்த ஒரு வருடமாக நாடகம் மட்டுமே ஆடிவருகிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆர்வம் காட்டினால் இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை எளிதில் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அதற்குரிய எந்த முயற்சியையும் இந்த அமைச்சகம் எடுக்கவில்லை. “விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்துக் கட்டும் முயற்சியில் எத்தனை தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை; அதனால் எந்தப் பாதகமும் இல்லை” என்பது ராஜபக்‌ஷே மற்றும் சிங்களத் தீவிரவாதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது தமிழக, அதன் காரணமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கக்கூடாது.

ஆனால் அதுதான் நடந்துள்ளது. இதில் குற்றம் முழுவதுமே திமுக மேல்தான். பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அவர்களால் முடிந்தவரை, இந்தப் பிரச்னையை முன்னெழுப்பியுள்ளனர். ஆனால் திமுக முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மழையில் கைகோர்த்து நிற்பது, கடிதங்கள் எழுதுவது ஆகியவை பிரயோசனமில்லாமலேயேதான் இருந்துள்ளன.

இன்று காலம் சற்று அதிகமாகவே கடந்துவிட்டது. தேர்தல் இரண்டே மாதங்களில் என்ற நிலையில் இன்றைய மத்திய அரசை ஆட்டுவிக்கும் திமுகவின் பலம் குறைவுதான். ஆனால் ஆறு மாதங்களுக்குமுன், திமுக, மத்திய அரசை வற்புறுத்தி, போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்திருக்கமுடியும். செய்யவில்லை.

இலங்கைப் பிரச்னையை ஒரு காரணமாக வைத்து இன்று தமிழகத்தில் தேர்தல் நடந்தால் அதனால் விளைவுகள் தெளிவாக இருக்காது. அதற்குக் காரணம், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் அதிமுகவும் காங்கிரஸ்+திமுகவும் இலங்கைப் பிரச்னையில் கிட்டத்தட்ட ஒரே நிலையை எடுத்துள்ளதுதான். அத்துடன் மூன்றாவது அணி என்று எதுவும் வலுவாக இல்லாததுமே.

“பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோர் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்களா? அப்படிச் செய்தால் அவர்களால் என்ன சாதிக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் இதுவே சட்டமன்றத் தேர்தலாக இருந்து, இவர்கள், இலங்கைப் பிரச்னையில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் கள்ள மௌனத்தை முன்னெடுத்து வைத்தால், தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். குறைந்தபட்சம் இந்தக் கூட்டணியால் 60-70 இடங்களைக் கைப்பற்ற முடியும். அத்தகைய நிலையில் இலங்கைப் பிரச்னையில் குறிப்பிட்ட நிலையை எடுக்கவைக்க தமிழக, அதன்மூலம், மத்திய அரசைச் செலுத்தமுடியும்.

இலங்கைப் பிரச்னையை முன்வைத்து தெளிவான அரசியல் கூட்டணியை உருவாக்க முடியாததே இன்றைய ஏமாற்றங்களுக்குக் காரணம். இருக்கும் கட்சிகளில் அல்லது கூட்டணிகளில் ஏதோ ஒன்றை மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கமுடியும். அதைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள்.

***

விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.

எனவே, இலங்கைப் பிரச்னையின் ஒரு தீர்வு, வலுவான விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கை அரசுடன் அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தையில் இறங்குவதில்தான் உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. அப்போதுதான் சிங்களத் தரப்பும் போருக்கு பதில், கொஞ்சம் விட்டுக்கொடுத்தாவது அமைதி பெறுவதே மேலானது என்ற எண்ணத்துக்கு வரும்.

இந்த நிலை மீண்டும் வருவதற்கு, விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் வலுப்பெற வேண்டும். தொடர்ந்து சண்டைபோட அல்ல. தங்களால் இலங்கை ராணுவத்துக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தமுடியும் என்பதைக் காண்பிப்பதற்கு. அப்படிப்பட்ட நிலையில், இந்தியா போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை, ஃபெடரல் அமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, இடைத் தரகராக இருந்து விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் பேசவைத்து ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினால், நீண்டகால அமைதி இலங்கையில் ஏற்படச் சாத்தியங்கள் உண்டு. அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழேபோடவும், அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வலுவாகும் காலகட்டத்தில் அவர்கள் செய்யவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவது, மாற்றுக் கருத்துள்ளவர்களைக் கொலை செய்யாதிருத்தல். இரண்டாவது, பிற ஈழத்தமிழ் அமைப்புகளுக்கு நேசக்கரம் நீட்டி, கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவரவர் அவரவர் வழியில் தத்தம் இலக்கை அடைவதை ஏற்றுக்கொள்ளுதல். மூன்றாவது, இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துடனும் - முக்கியமாக, காங்கிரஸ் - உறவை வளர்த்துக்கொள்ளுதல்.

அது வரும் பத்தாண்டுகளுக்குள் நடைபெற்றால் அனைவருக்கும் நல்லது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மறைமுகமாக ராஜபக்‌ஷேவை ஜெயிக்கவைத்த சோக நிகழ்வு மீண்டும் கண்ணுக்கு முன் வருவதைத் தடுக்க முடியவில்லை.

Wednesday, January 28, 2009

பகுத்தறிவின் பகைவர்கள்

இல்லீங்க. நம்மூரு மேட்டர் இல்ல.

திங்கள் அன்று (இரண்டு நாள்களுக்கு முன்), ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான ABC-யில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ் தொகுத்து வழங்கியது. (டாக்கின்ஸ் எழுதிய சுயநல மரபணு பற்றிய என் பதிவு.)

இந்தப் படம் பிரிட்டனின் சானல் 4-க்காக எடுக்கப்பட்டு, பல மாதங்களுக்கு முன்னரே காட்டப்பட்ட ஒன்று.

டாக்கின்ஸ், நவீன அறிவியலைப் போற்றுபவர். மதங்களுக்கு எதிரான கடுமையான நாத்திகவாதி. இந்த ஆவணப்படத்தில், எப்படி அரைகுறை மருத்துவங்கள் பலவும் மேற்கத்திய உலகில் நுழைந்து, எந்தவித சோதனைகளுக்கும் உட்படாமல், கோடிக்கணக்கான பணத்தை அள்ளுகிறது என்பது பற்றி டாக்கின்ஸ் பேசுகிறார். மேலும் இந்த ‘அரைகுறை வைத்தியங்கள்’, நவீன அறிவியலின் வார்த்தைகளை ஹைஜாக் செய்து (குவாண்டம் கான்சியஸ்னெஸ், டிஸ்கண்டினியுட்டி போன்ற வார்த்தைகள்) அவற்றைப் பயன்படுத்தி மக்களை பிரமிக்கவைத்து அதன்மூலம் வியாபாரத்தைப் பெருக்குகின்றன என்பதைக் காண்பிக்கிறார்.

டாக்கின்ஸ் எடுத்துக்கொள்வது அனைத்துமே அறிவியல் பரிசோதனை முறைகளால் அன்றி, நம்பிக்கைமூலம் ‘குணப்படுத்தும்’ முறைகள். அதிலி ஹோமியோபதி உண்டு. பல்வேறு ரெய்கி, சக்கர மசாஜ், படிக குணப்படுத்தல்கள் ஆகியவையும் உண்டு. அகில உலகப் புகழ்பெற்ற மருத்துவர் தீபக் சோப்ரா முதல் அதிகம் பெயர் தெரியாத சில பிரிட்டிஷ் நம்பிக்கை ‘டாக்டர்கள்’ சிலரை டாக்கின்ஸ் கண்டு பேசுகிறார்.

இதில் ஒரு அம்மா, சர்வசாதாரணமாக, பெரும்பாலும் பலர் உடலில் டபுள் ஹீலிக்ஸ் டி.என்.ஏ உண்டு, ஆனால் சிலருக்கு மட்டும் இரண்டுக்கு மேற்பட்ட சரங்கள் கொண்ட டி.என்.ஏ உண்டு என்று சொல்லி அசத்துகிறார். இந்த ‘நம்பிக்கை வைத்தியங்கள்’ செய்யும் பலரும் தாங்கள் என்ன செய்கிறோம் என்ற சரியான புரிதல் இல்லாமலேயே செய்கிறார்கள். ஹோமியோபதி மருத்துவம் செய்யும் - அதற்குமுன் அலோபதி மருத்துவம் செய்துவந்த டாக்டரும்கூட - ஹோமியோபதி எப்படி வேலை செய்கிறது என்று தானே ஆச்சரியப்படுவதாகச் சொல்கிறார்.

ஒரு பக்கம், அலோபதி மருந்துகள்மீது, மருந்து தயாரிக்கும் கம்பெனிகள்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் ஊடகங்களும் பொதுமக்களும், அதே அளவு காட்டத்துடன் ‘மாற்று மருந்துகளை’ கவனிப்பதில்லை; லைஃப்ஸ்டைல் விஷயம் என்று சொல்லி, அவற்றை ஊக்குவிக்கவே செய்கிறார்கள், என்கிறார் டாக்கின்ஸ்.

ரெய்கி, படிகங்கள் போன்ற பலவும் பயங்கர ஃப்ராட் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் டாக்கின்ஸ் இந்த ஆவணப்படத்தில் ஒரு முழுமையைக் கொண்டுவரவில்லை. ஆனால் அவரது பிரிட்டிஷ் பிராடெஸ்டண்ட் (அங்கிருந்து நாத்திகவாதியாக அவர் ஆனாலும்) பின்னணி அதற்கு இடம் கொடுத்திருக்காது என்பதும் உண்மையே. முதலில் ‘மாற்று மருத்துவம்’ என்பதை அவர் முழுமையாக அலசிப் பார்க்கவேண்டும்.

யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இந்திய முறைகள் பலவும் அறிவியல்பூர்வமான பின்னணியில் பலருக்கும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி மருந்துக்குக்கூட இந்த ஆவணப்படத்தில் ஒரு வார்த்தை இல்லை. மிக வசதியாக, மிக எளிய இலக்குகளாகத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தாக்குகிறார். இதன்மூலம் அலோபதி தவிர ‘மாற்று மருத்துவம்’ என்ற வார்த்தையில் சொல்லப்படும் அனைத்துமே மோசம் என்ற தோற்றத்தைத் தருகிறார்.

ஹார்ட்-டாக் நிகழ்ச்சியில் கொஞ்சம் கோமாளியான எதிராளிகளைத் தாக்கும் ஸ்டீவன் சாக்குர், கரன் தாப்பர், வலுவான எதிராளியிடம் வழிந்து நிற்பதுபோலத்தான் டாக்கின்ஸ் இங்கே தென்படுகிறார். மோசமான ஜோக்கர்கள் சிலரைப் பிடித்து, அவர்கள் சொல்லும் அரைகுறை விஷயங்களைக் கொண்டு மாற்று மருந்துகள் அனைத்துமே குப்பை என்று சொல்வது டாக்கின்ஸ் தூக்கிப் பிடிக்கும் அறிவியல் சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒருவிதத்தில் இதன்மூலம் டாக்கின்ஸே பகுத்தறிவின் பகைவர்கள் கூட்டத்தில் சேர முற்படுகிறார்.

பரிணாம உயிரியல் துறையின் மிக முக்கியமான சிந்தனையாளராக இருக்கும் ரிச்சர்ட் டாக்கின்ஸ், இதைப்போன்ற பல ஆவணப்படங்களைக் கொண்டுவந்துள்ளார். அந்த விதத்தில் அவரைப் பாராட்டியே தீரவேண்டும். அதற்கான களத்தை பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் தருவது மிக அற்புதமானது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவில் (இப்போதைக்கு) சாத்தியமே இல்லை!

இணையத்தில் தேடிப்பார்த்ததில், இந்த ஆவணப்படம், முழுமையாக கூகிள் வீடியோவில் இருந்தது. அதைக் கீழே கொடுத்துள்ளேன். நேரம் இருப்பவர்கள் பாருங்கள். சுமார் 45 நிமிடம்.

The Enemies of Reasonவீடியோ தெரியவில்லை என்றால் இங்கே செல்லவும்.

Saturday, January 24, 2009

விஜய் டிவியின் நீயா, நானா

விஜய் டிவியின் ‘நீயா, நானா’ நிகழ்ச்சி விருந்தினராக நானும் என் மனைவியும் நேற்று சென்றிருந்தோம். அடுத்த இரண்டு மாதங்களில் என்றாவது ஒரு நாள் ஒளிபரப்பாகலாம்.

தொழில்முனைவர்கள், வேலையையும் சொந்த வாழ்க்கையையும் எப்படி நிர்வகிக்கிறார்கள்? தொழில்முனையும் கணவர்கள் சதா வேலை, வேலை என்று இருக்க, அவர்களது மனைவிமார்கள் நிலை எப்படி உள்ளது? தொழில்முனையும் ஆண்கள் எதை வாழ்வில் இழக்கிறார்கள்? அவர்களது மனைவிகள் எதை இழக்கிறார்கள்? எதைப் பெறுகிறார்கள்? இவர்களுக்கிடையில் என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்படுகின்றன? பணம் வந்தபின் சந்தோஷமாக இருக்கிறார்களா அல்லது பணம் வருவதற்குமுன் மகிழ்ச்சியாக இருந்தார்களா?

நிகழ்ச்சியின் ‘நங்கூர’மான கோபிநாத் எழுதிய புத்தகம் ஒன்று (“ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” - அதுதான் அந்தப் புத்தகத்தின் தலைப்பு) சமீபத்தில் புத்தகக் காட்சியில் சக்கைப்போடு போட்டது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், சொந்தமாகச் சிறுதொழில்கள் நடத்தும் சுமார் 20 பேர், அவர்களது மனைவிகளுடன் விவாதத்தில் ஈடுபடுவர். நிகழ்ச்சி பாதிக்குப் பிறகு, நானும் என் மனைவியும் சேர்ந்துகொண்டு, எங்களுக்கென சில பிரத்யேகமான கேள்விகள் இருக்கும்.

யாராவது நிகழ்ச்சியை யுட்யூபில் போடுவார்கள். அப்போது சுட்டி கிடைத்தால் தருகிறேன்.

[இதற்குமுன், இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டேன். அதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து நேரமே இல்லாமல் போய்விட்டது. அதன் யூட்யூப் சுட்டிகூட ஓரிடத்தில் குறித்துவைத்திருந்தேன். தேடிப் பார்க்கிறேன்.]

Friday, January 23, 2009

பதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை

புது தில்லி, லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஜனவரி 30, 31, பிப்ரவரி 6, 7 (இரு வார இறுதிகள்) ஆகிய தினங்களில் ஒரு பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. CII (Confederation of Indian Industry) அமைப்பின்கீழ் உள்ள CII Publishing Cell, இந்த வகுப்பை நடத்துகிறது. தில்லியின் கல்லூரி மாணவர்கள் (பதிவு செய்துகொண்டவர்கள்) இதில் பங்குபெறுகின்றனர்.

இதில் இரண்டு வகுப்புகளை நான் எடுக்கிறேன். பயிற்சி வகுப்பின் பாடத் திட்டம் உபயோகமானவை என்பதால் அதனை இங்கே தருகிறேன்.

முதல் வாரம்:

1. பதிப்புத் தொழில் குறித்த அறிமுகம், ஊர்வஷி புடாலியா, இயக்குனர், ஸுபான்

2. ஒரு புத்தகத்தின் பயணம், பி.எம்.சுகுமார், தலைமை நிர்வாகி, ஹார்பர் காலின்ஸ் இந்தியா

3. ஒரு பதிப்பகத்தில் எடிட்டரின் வேலை, வி.கே.கார்த்திகா, தலைமை எடிட்டர், ஹார்பர் காலின்ஸ் இந்தியா

4. குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பதிப்பித்தலும் சந்தைப்படுத்துதலும், அனிதா ராய், கமிஷனிங் எடிட்டர், ஸுபான் + சயோனி பாஸு, பப்ளிஷிங் இயக்குனர், ஸ்கொலாஸ்டிக் இந்தியா.

5. மின் - பதிப்பித்தல், வலைப்பதிவுகள், பிரிண்ட்-ஆன்-டிமாண்ட், பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா

6. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு விதமான புத்தகங்களை எப்படி சந்தைப்படுத்துவது என்ற கலந்துரையாடல், வழி நடத்துபவர் பிரியங்கா சௌதுரி, ஹெட் பப்ளிசிடி, வெஸ்ட்லேண்ட் லிமிடெட்

இரண்டாம் வாரம்:

1. இந்திய மொழிகளில் பதிப்பித்தலும் மொழிமாற்றலும்: ரவி சிங், எடிட்டர்/பதிப்பாளர், பெங்குவின் இந்தி + பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா + பேரா. மாலாஸ்ரீ லால், இணை இயக்குனர், தில்லி பல்கலைக்கழகம்.

2. கேஸ் ஸ்டடீஸ் - யாத்ரா புக்ஸ், நியூ ஹொரைசன் மீடியா, ஹார்பர் காலின்ஸ் (ஹிந்தி): நீதா குப்தா, யாத்ரா புக்ஸ் + பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா + மீனாக்ஷி தாகுர், கமிஷனிங் எடிட்டர், ஹார்பர் காலின்ஸ் (இந்தி)

3. கல்விப் புத்தகங்கள் பதிப்பித்தல்: அஜய் ஷுக்லா, தலைமை நிர்வாகி, மெக்ரா ஹில்

4. முதல் வாரம் மாணவர்கள் சந்தைப்படுத்தல் தொடர்பாக மேற்கொண்ட பிராஜெக்ட்களை முன்வைப்பார்கள். பிரியங்கா சௌதுரி, வெஸ்ட்லேண்ட் + அதியா ஜெய்தி, பதிப்பாளர், ரத்ன சாகர் + நீதா குப்தா, யாத்ரா புக்ஸ்

5. மாணவர் கருத்துகள் மீதான குழு விவாதம்: பிரியங்கா சௌதுரி, வெஸ்ட்லேண்ட் + ஹேமாலி சோதி, தலைமை மார்க்கெட்டிங் அலுவலர், பெங்குவின்

6. பொதுவான கேள்வி பதில்கள்: அதியா ஜெய்தி, ரத்ன சாகர் + ஷம்மி மானிக், நிர்வாக இயக்குனர், டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ்

Thursday, January 22, 2009

பன்றி வளர்ப்புஎன் பெண் படிக்காமல் தகராறு செய்யும்போது என் பெண்ணுக்கும் என் மனைவிக்கும் எப்போதும் சண்டை வரும். நான்தான் தலையிட்டு சமாதானம் செய்வேன். அப்போது, “படித்து என்ன ஆகப்போகிறது? பத்திருபது பன்றிகளை மேய்த்தாலாவது உபயோகமாக இருக்கும்” என்பேன். உடனே பன்றி மேய்ப்பது, கழுதை மேய்ப்பது என்று பேச்சு போய், குபுக்கென்று எல்லோருக்கும் சிரிப்பு வந்து, நிலைமை இலகுவாகும்.

நான் ஓய்வு பெறும் காலத்தில் கட்டாயமாக, பன்றி வளர்ப்பில்தான் ஈடுபடுவேன் என்று வீட்டில் அடித்துச் சொல்லிவந்திருக்கிறேன். இதுவரை விளையாட்டாகத்தான் சொல்லிவந்தேன். இன்று தீர்மானமான முடிவாகவே எடுத்துவிட்டேன்.

தி ஹிந்து செய்தியைப் படியுங்கள்.

.

Wednesday, January 21, 2009

அறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு

http://www.ariviyal.info/

வெகு நாள்களாகப் பேசிப் பேசி, இப்போது உருவாகியுள்ளது. அருண் நரசிம்மன், வெங்கட்ரமணன், அருள் செல்வன், நான் ஆகியோர் இணைந்து (தமிழில் மட்டுமே) எழுதப்போகும் அறிவியலுக்கான கூட்டு வலைப்பதிவு. இனி வரும் நாள்களில் மேலும் பலரும் இணைந்து எழுதுவார்கள்.

அறிவியல், கணிதச் சமன்பாடுகளையும் எழுத வசதியாக ‘வேர்ட்பிரெஸ்’ மூலம் நிறுவப்பட்ட வலைப்பதிவு இது.

வாசகர்கள், அறிவியல் எழுத்தாளர்கள் பேராதரவு தரவேண்டும். இந்தப் பதிவை உங்களது உற்றார், உறவினர், பள்ளிக்கூட மாணவர்கள் ஆகியோரிடம் கொண்டுசேருங்கள்.

***

தமிழில் கூட்டுப் பதிவுகளை தொடர்ந்து ஒரே தரத்தில் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. இதுவரையில் கண்ணுக்குத் தென்படும் உதாரணங்கள் வெகு குறைவே.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் தமிழில் அறிவியல் பதிவுகள் எழுத விழைந்தால் அவர்களை எனக்கு அறிமுகம் செய்யுங்கள்.

Monday, January 19, 2009

செயற்கை உயிர்?

[நான் அம்ருதா மாத இதழில் அறிவியல் கட்டுரைகள் சிலவற்றை எழுதத் தொடங்கியுள்ளேன். முதலாவது டிசம்பர் 2008-ல் வெளியான கட்டுரை, சந்திரயான் பற்றியது. அதை இங்கே வெளியிடவில்லை. ஏற்கெனவே அதைப் பற்றி வலைப்பதிவில் நிறைய எழுதிவிட்டேன் என்பதால். அடுத்து ஜனவரி 2009-ல் வெளியானது இந்தக் கட்டுரையின் ஒரு வடிவம். அதை மெய்ப்பு பார்த்து, சில வரிகளை மாற்றி இங்கே தருகிறேன். எச்சரிக்கை: மிக நீண்ட கட்டுரை.]

********

மனித சமுதாயம் தோன்றி, சிந்தனை வளர்ந்த நிலையிலிருந்தே, ‘உயிர்’ என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உருவாகத் தொடங்கின. ஆரம்பகாலத்தில் இந்தச் சிந்தனைகள் யாவுமே, உயிர் என்பது கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்தோட்டம் கொண்டதாகவே இருந்தன.

வேறு எப்படி உயிர் என்பது தோன்றியிருக்கக் கூடும்? மனிதனால் உயிரைப் படைக்க முடியுமா? புதிய ஒரு மிருகத்தையோ பறவையையோ உருவாக்க முடியுமா? உயிரைப் போக்கக்கூடிய மனிதனால், இறந்த ஒரு சடலத்துக்குள் உயிரைப் புகுத்த முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு பல நூற்றாண்டுகளாக யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பிறகு 19-ம் நூற்றாண்டு தொடங்கி துளித்துளியாக சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தன.

அவற்றுள் ஒன்று, மனிதர்களுக்குப் பெரும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. அதுதான் பரிணாம வளர்ச்சி எனப்படும் கொள்கை. சார்லஸ் டார்வின் (1809-1882) என்பவரும் ஆல்ஃபிரட் வாலேஸ் (1823-1913) என்பவரும் தனித்தனியாகக் கண்டுபிடித்த கொள்கை இது. இதன் அடிப்படையில் உருவானதே பரிணாம உயிரியல் (Evolutionary Biology) என்ற துறை.

பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்கு முந்தையதாக, மனிதனுக்கு உயிர்கள் பற்றி என்ன புரிதல் இருந்தது? உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. அவை நகராத தாவரங்களாக இருக்கலாம்; அல்லது நகரும் விலங்குகளாக (ஊர்வன, பறப்பன, ஓடுவன என்று எதுவாகவும்) இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் நம் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும் சக்தி ஒன்று (கடவுள் என்று வைத்துக்கொள்வோம்), ஒவ்வொன்றும் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, உருவாக்கியுள்ளது.

அதாவது காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டது. ஒட்டகச் சிவிங்கிக்குக் கழுத்து நீளமாக இருப்பதுவும் யானைக்குத் தும்பிக்கை இருப்பதுவும் முன்கூட்டியே பிரபஞ்ச சக்தியால் தீர்மானிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனின் கண்கள், காதுகள், ரத்த ஓட்டம், கைகள், கால்கள் என்று எதை எடுத்தாலும் குத்துமதிப்பாக இந்த நீளம், இந்த அகலம், இந்த வடிவம் என்று எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை.

சில மாறுபாடுகள் இருக்கலாம். ஒரு சிங்கத்தைப்போல இன்னொரு சிங்கம் இருப்பதில்லை. குரங்குகள் என்று இனத்துக்குள் பல கிளைகள் உள்ளன. ஒரு கிளைக்குள் இருக்கும் பல்வேறு தனிப்பட்ட குரங்குகளும் வித்தியாசமாகத் தோற்றம் அளிக்கின்றன. சில ஊனமாகப் பிறக்கின்றன. யாவுமே கடவுளின் லீலைகளே.

ஆனால், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இதை மறுத்தது. ஓர் உயிரினத்திலிலிருந்து நாளடைவில், மற்றொரு முற்றிலும் புதிய, வித்தியாசமான உயிரினம் உருவாகக்கூடும் என்றது இந்தக் கோட்பாடு. அதற்குத் துணையாக எண்ணற்ற உதாரணங்களைக் காட்டினார் டார்வின்.

கடவுள் அல்லது பிரபஞ்ச சக்தி என்ற ஒரு கோட்பாடு இல்லாமலேயே, புதிது புதிதாக உயிரினங்கள் உருவாக முடியும். இந்த உலகத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்த காலத்தில் மனிதன் என்ற உயிரினமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது மனிதன் என்ற உயிரினம் உள்ளது. இன்று இல்லாத பல உயிரினங்கள் நாளை உருவாகலாம். இன்று இருக்கும் பல உயிரினங்கள் நாளை இல்லாமல் போகலாம்.

அப்படியென்றால் எந்த அடிப்படையில் இந்தப் புதிய உயிரினங்கள் உருவாகின்றன? எந்த அடிப்படையில் அவை அழிகின்றன?

இந்த இடத்தில்தான் டார்வின் தனது கோட்பாடான ‘இயற்கைத் தேர்வு’ என்பதை முன்வைத்தார். எந்த உயிரினம் பிழைக்கிறது அல்லது எந்தப் புதிய உயிரினம் ‘தோன்றுகிறது’ என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும். ஆனால், இந்த இடத்தில் ‘இயற்கை’ என்றால் அது யாரோ ஒருவர் உட்கார்ந்து திடீரென எடுக்கும் ஒரு முடிவல்ல இது. சுற்றுச் சூழலும் பிற உயிரினங்களும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின், அந்த உயிரினத்தின் தனிப்பட்ட நபர்கள்மீது உருவாக்கும் விளைவு.

இதை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குமுன், நாம் தெரிந்துகொள்ளவேண்டிய வேறு ஒன்று உள்ளது. அதைப் பார்த்துவிட்டு இயற்கைத் தேர்வுக்கு வருவோம்.

*

ஓர் உயிரினத்துக்கும் அதில் உள்ள ஒரு தனிப்பட்ட உயிருக்கும் என்ன தொடர்பு? இரண்டு வெவ்வேறு உயிரினங்களில் உள்ள இரண்டு தனித்தனி உயிர்களுக்கு இடையே என்ன தொடர்பு? அதாவது ஒரு குறிப்பிட்ட யானைக்கும், ஒரு குறிப்பிட்ட குரங்குக்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா?

வாழை மரங்களைப் பார்த்தால் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தெரிகின்றன. தாய் மரம், குலை தள்ளியபிறகு குட்டி மரம் பக்கத்தில் தோன்றுகிறது. ஒரு மரத்திலிருந்து விழும் கனியின் விதையைக் கொண்டு, மற்றொரு மரம், கிட்டத்தட்ட முந்தைய மரம் போன்றே உருவாகிறது.

விலங்குகளுக்கு பெரும்பாலும் தாய், தந்தை என்று இரண்டு பேர் தேவைப்படுகிறார்கள். இருவரும் சேர்ந்து உருவாக்கும் பிள்ளைகள், தாய், தந்தை ஆகிய இருவருடைய பண்புகளையும் குணநலன்களையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனிதர்களை எடுத்துக்கொண்டால், சில சமயம் குழந்தை பார்க்க ‘அப்பாவைப் போல’ உள்ளது, சில சமயம் ‘அம்மாவைப் போல’. சில சமயம் மூக்கு அப்பாவைப் போலவும், உயரம் அம்மாவைப் போலவும் உள்ளது.

ஆக, பெற்றோர்களிடமிருந்து ஏதோ வழியில் பண்புகள், குணங்கள் பிள்ளைகளுக்குப் போகின்றன என்பது கண்ணால் பார்க்கும்போதே விளங்குகிறது. கிரிகோர் யோஹான் மெண்டல் (1822-1884) என்பவர் பட்டாணிச் செடிகளைக் கொண்டு செய்த சில ஆராய்ச்சிகளில் மிக நுட்பமான சிலவற்றைப் புரிந்துகொண்டார். அவர் அந்த நேரத்தில் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், பின்னர் வந்த விஞ்ஞானிகள் தெளிவாகப் புரிந்துகொண்டது இதுதான். மரபணு (gene) என்ற ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலம்தான் பெற்றோர்களின் பண்புகள் பிள்ளைகளுக்குப் போகின்றன.

தென்னை மரமானாலும் சரி, குரங்கு ஆனாலும் சரி, எருமை மாடு ஆனாலும் சரி, மனிதர்கள் ஆனாலும் சரி, இந்த மரபணுக்கள் மூலம்தான் பண்புகள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப் போகின்றன.

பிறக்கப்போகும் குழந்தை எருமையின் கொம்புகள் எப்படி வளைந்திருக்கவேண்டும், அதன் தோலின் கருமை எப்படி இருக்கவேண்டும், அது ஆணா, பெண்ணா ஆகியவை அது பிறப்பதற்கு மிக முன்னதாகவே, அந்தக் குழந்தையின் பெற்றோர் எருமைகள் இரண்டும் உடலுறவு கொண்டு ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் இணைந்து சினைமுட்டை உருவாகும்போதே தீர்மானம் ஆகிவிடுகிறது.

பெரும்பாலும் விலங்குகளுக்கு மத்தியில் ஏற்படும் உடலுறவின்போது, தாய், தந்தை இருவரிடமிருந்தும் சம அளவில் மரபணுக்கள் வந்து சேருகின்றன. (தேனீ, எறும்பு போன்ற சில விலங்குகளில் தாயும் தந்தையும் சம அளவில் மரபணுக்களைத் தருவதில்லை. அவற்றைப் பற்றி விளக்கமாக நாம் பார்க்கவேண்டாம்.) இந்த மரபணுக்கள்தான் குழந்தையின் அனைத்துத் தன்மைகளையும் முடிவு செய்கின்றன.

இந்த மரபணுக்கள் ஒருவித புரத ரசாயனங்கள். இவை டி.என்.ஏ என்று சொல்லப்படும் டி-ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் என்ற ரசாயன வடிவில் காணப்படுகின்றன.

நமது புராணங்களில் ராட்சதர்களின் உயிர் எங்கேயோ ஏழு கடலுக்கு அப்பால், ஒரு கிளியின் உடலில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் கதை வரும் அல்லவா. அப்படியல்ல இந்த டி.என்.ஏ என்பது. இது உயிரின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது.

ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால், அதன் பட்டையில், அதன் பூவில், அதன் காம்பில், அதன் கனியில், அதன் இலையில் என்று எங்கு பார்த்தாலும் உள்ளது. இரண்டு வெவ்வேறு வேப்ப மரங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஓர் இலையையும் ஒரு வேப்பங்கொட்டையையும் கொண்டுவந்து கொடுத்தால், அதில் எந்த இலையும் எந்தக் கொட்டையும் ஒரே மரத்திலிருந்து வந்தது என்பதை மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிடலாம்!

மனிதர்களிடமிருந்து ஆளுக்கு ஒரு சொட்டு ரத்தம், ஒரு முடி அல்லது துளி நகம் என்று கொண்டுவந்து கொடுத்தால், ரத்தமும் முடியும் நகமும் ஒருவருடையதா இல்லையா என்று கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த டி.என்.ஏ என்பது நமது கையெழுத்து மாதிரி, நம்முடைய கட்டைவிரல் ரேகை மாதிரி, இல்லையில்லை அவற்றைவிடவும் மேம்பட்டது. ஏமாற்றவே முடியாத தனி அடையாளம். நம் ஒவ்வொருவரின் டி.என்.ஏவும் அடுத்தவருடைய டி.என்.ஏவிலிருந்து மாறியுள்ளது. ஒரே பெற்றோருக்குப் பிறக்கும் வெவ்வேறு குழந்தைகளின் டி.என்.ஏவும் மாறி மாறித்தான் இருக்கும். (இங்கும் தேனீக்கள், எறும்புகள் வித்தியாசப்படும், அவற்றை விட்டுவிடுவோம்.)

மனிதர்களில், இரட்டைக் குழந்தைகள் பிறக்குமல்லவா? அதில் அச்சான இரட்டையர்கள் உண்டு. விந்தும் முட்டையும் இணைந்து உருவான ஒரு சினைமுட்டை, ஏதோ சில காரணங்களால் இரண்டாகப் பிரிந்து, இரண்டும் தனித்தனியாக இரு குழந்தைகளாக மாறும்போதுதான் இந்த ‘அச்சான இரட்டையர்கள்’ பிறக்கிறார்கள். இவர்கள் இருவரது டி.என்.ஏவும் ஒரே அச்சாக இருக்கும். ஆனால், இங்குகூட இவர்கள் இருவரும் ஒரே வயது வரை உயிர்வாழ்வார்கள் என்றோ, இருவரும் ஒரேமாதிரியான உடல நலத்தோடு இருப்பார்கள் என்றோ அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

இருவரும் வெளி உலகோடு உறவாடும்போது, தங்கள் வளர்ச்சியில் பெரும் மாற்றம் அடைவார்கள்.

இவர்களை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது, பொதுவாக ஒவ்வோர் உயிருக்கும் அதற்கே உரித்தான ஒரு டி.என்.ஏ உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

இப்போது நம்முடைய கேள்விக்கு வருவோம். இரண்டு எருமை மாடுகளை எடுத்துக்கொள்வோம். இவற்றின் டி.என்.ஏ-க்கள் எப்படி இருக்கும்.

கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். சில இடங்களில் மட்டும் மாற்றம் இருக்கும். அந்த மாற்றங்களின் காரணமாகத்தான் ஒன்றின் கொம்பு சற்றே நீண்டும், மற்றொன்றின் கொம்பு சற்றே சுருண்டும் இருக்கும்.

இரண்டு மனிதர்களை எடுத்துக்கொண்டால், அங்கும் அப்படியே. உயரம், அகலம், தோல் நிறம் என்று எதை எடுத்தாலும் அந்த மாற்றங்கள் டி.என்.ஏ மரபணு மாற்றங்களால் உருவானவையே.

பெற்றோர் டி.என்.ஏவுக்கும் பிள்ளைகள் டி.என்.ஏவுக்கு என்ன உறவு? தாயின் டி.என்.ஏவும் மகனின் டி.என்.ஏவும் பாதிக்குப் பாதி அச்சு அசலாக இருக்கும். மகனின் மீதிப் பாதி டி.என்.ஏ, தந்தையின் டி.என்.ஏவுடன் பாதி பொருந்திப் போகும்.

ஒரு குடும்பத்துக்குள்ளாக டி.என்.ஏ அதிகம் பொருத்தம் கொண்டதாக இருக்கும். குடும்பத்துக்கு வெளியே, பொதுவாக ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் டி.என்.ஏவில் அதிக ஒற்றுமை இருக்கும். தொடர்ந்து அவர்கள் தங்களுக்குள் மணம் முடித்து, பிள்ளைகளை உருவாக்கும் காரணத்தால் இப்படி இருக்கும். இந்தியர்களின் டி.என்.ஏ, பொதுவாக அதிக ஒற்றுமை கொண்டதாகவும், சீனர்களின் டி.என்.ஏவைவிட சற்றே வித்தியாசம் கொண்டதாகவும் இருக்கும்.

இன்னும் ஒருபடி மேலே போய், எருமை மாட்டின் டி.என்.ஏவையும் மனிதனின் டி.என்.ஏவையும் ஒப்பிட்டால், இங்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. என்ன? இரு மனிதர்களின் டி.என்.ஏ-க்களுக்கு இடையே இருக்கும் அளவுக்கான ஒற்றுமை இருக்காது.

மொத்தத்தில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் டி.என்.ஏக்களும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஓரளவுக்காவது ஒற்றுமை கொண்டதாக இருக்கும். நெருங்கிய இரு உயிரினங்கள் - அதாவது குரங்கும் மனிதனும், எருமை மாடும் பசு மாடும், நாயும் ஓநாயும், புலியும் பூனையும் - என்று எடுத்துக்கொண்டால் ஒற்றுமை அதிகமாக இருக்கும். இல்லாவிட்டால் ஒற்றுமை குறைந்துகொண்டே போகும்.

*

இப்போது, இயற்கைத் தேர்வுக்கு வருவோம். இயற்கையில் ஒரு ரசாயனம், பல காரணங்களால் வேறொரு ரசாயனமாக மாறும். பாலைக் கொதிக்கவைக்கும்போது, அது காய்ந்த பாலாக மாறுகிறது. அப்போது ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. பிறகு அந்தக் காய்ந்த பாலில் உறை ஊற்றினால், அது தயிராக மாறுகிறது. மற்றொரு ரசாயன மாற்றம்.

புளிக்கரைசலையும் தக்காளிச் சாற்றையும் மிளகாய்ப் பொடியையும் ஒருசேர அடுப்பில் வைத்துக் கொதிக்கவைத்தால் சில ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து, நாம் உண்ணும் ரசமாக மாறுகிறது. சாதம் வேகும்போதும், சப்பாத்தி தீயில் வாட்டப்படும்போதும், அப்பளம் பொறிக்கப்படும்போதும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

எவ்வளவோ இயற்கைக் காரணங்களால் இந்த ரசாயன மாற்றங்கள் நிகழலாம். மின்சாரம் பாயும்போது, சூடாக்கப்படும்போது, வேறு சில ரசாயனங்கள் மேலே படும்போது, கதிர்வீச்சு படும்போது என்று பல காரணங்கள்.

இப்படிப்பட்ட நிலையில், ஓர் உயிரினத்தின் உடலில் உள்ள சில செல்களில் உள்ள டி.என்.ஏக்கள் மாற்றம் பெறுகின்றன. இந்த மாற்றத்தை அந்த உயிரினம் பெரும்பாலும் சரி செய்துவிடும். அதாவது மாறிய டி.என்.ஏக்களைத் திரும்ப, பழையபடி, மாற்றிவிடும். ஆனால் எல்லா நேரங்களிலும் இது நிகழாது. இப்படி வெறும் ‘சான்ஸ்’ ஆக, ஏதோ ஒரு பிராணியில் ஏதோ சில டி.என்.ஏ மாற்றங்கள் நிகழ, அந்த மாற்றங்கள் அடுத்த வம்சத்துக்குச் செல்லத் தொடங்குகிறது. அதாவது இந்தப் பிராணியின் குட்டிகள் மட்டும் பிறவற்றிலிருந்து ஏதோ ஒரு டி.என்.ஏ மாறுபாட்டை அடைகின்றன.

உதாரணத்துக்கு, நம் வீட்டுச் சமையலறையில் உள்ள கரப்பான் பூச்சி வகைகளை எடுத்துக்கொள்வோம். இரண்டு கரப்புகள் எப்படியோ நம் வீட்டுக்குள் நுழைந்து குட்டிகளாகப் போட்டுத் தள்ளி, அவை சமையலறையில் எங்கு பார்த்தாலும் மேய்கின்றன. நமக்கோ கடும் கோபம். நாளை கடைக்குச் சென்று ஏதாவது கரப்பு மருந்து - ‘ஹிட்’ - வாங்கிவந்து அடித்து, இவற்றைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவெடுக்கிறோம்.

இதற்குள் அந்த வம்சத்தில் இரண்டு கரப்புகள் நம் வீட்டு மைக்ரோவேவ் அவனுக்குள் நுழைந்துவிடுகின்றன. மைக்ரோவேவ் கதிர்கள் அவற்றின்மீது பட்டதும் அவற்றின் டி.என்.ஏவில் சிறிய மாற்றம். உடனே அவை தமது வடிவத்தை மாற்றி ஏதோ ஒருவித ராட்சத உருவமாக ஆகிவிடும் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். அது ஹாலிவுட் சினிமாவில்தான் நடக்கும். இங்கே கண்ணுக்கே தெரியாத சிறு மாற்றம் அதன் உடலுக்குள் உள்ள சில செல்களில் உள்ள டி.என்.ஏக்களில் நிகழ்ந்திருக்கும்.

இந்த இரண்டு மைக்ரோவேவ் சுட்ட கரப்புகளும் சாகவில்லை. அவை உடலுறவு கொண்டு, சில முட்டைகளைப் போடுகின்றன.

அடுத்த நாள், நீங்கள் ‘ஹிட்’ அடிக்கிறீர்கள். பெரும்பான்மை கரப்புகள் சாகின்றன. ஆனால் மைக்ரோவேவ் சுட்ட கரப்புகள் ஈன்ற குழந்தைகள் சில - ஏதோ காரணத்தால், அவற்றின் டி.என்.ஏ மாற்றத்தால் - பிழைத்துவிட்டன. இப்போது என்ன ஆகும்? இந்த ‘ஹிட்’டால் சாகாத கரப்புகள் பல்கிப் பெருகும். மற்றவை அதிகமாக, வேகமாகச் சாகும்.

இந்த டி.என்.ஏ மாற்றம் அந்தக் கரப்புகளைப் பொருத்தவரையில் நன்மைக்கானது. வெகு விரைவில் ‘ஹிட்’ அடித்தால் சாகவே சாகாத ஒரு கரப்புப் படை நமது சமையலறையை ஆக்ரமிக்கும். அப்போது வேறு ஏதேனும் புதிய பூச்சி மருந்தைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கவேண்டும்.

இப்படி தொடர்ச்சியான டி.என்.ஏ மாற்றங்களால், ஒரு கரப்பிலிருந்து சற்றே வித்தியாசமான கரப்பினம் உருவாவதுபோல, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவை பறக்கும் கரப்புகளாக, மிகப்பெரிய கரப்புகளாக மாறி, அங்கிருந்து, கொம்புகள் முளைத்த வண்டுகளாக மாறி, அங்கிருந்து நான்கு கால் முயலாக மாறி... பின் குரங்காக மாறி, பின் மனிதனாக மாறியிருக்கலாம்.

இதைத்தான் இயற்கைத் தேர்வு என்ற கொள்கை முன்வைத்தது. எவ்வளவோ காரணங்களால் ஒரு குறிப்பிட்ட உயிரின் டி.என்.ஏ மாறுகிறது. அந்த மாற்றம் நன்மையைத் தரும் என்ற பட்சத்தில் அந்தப் பிராணியின் குடும்பம் பல்கிப் பெருகுகிறது. இப்படி பல்வேறு மாறுபாடுகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு மாறுபாடும் பெருமளவுக்கு முதலில் குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து விலகும்போது, புதிய உயிரினம் தோன்றுகிறது.

இந்தப் புதிய உயிரினங்களின் செயல்பாடுகள், உணவுப் பழக்கம் என அனைத்தும் மாறுதலாக உள்ளன.

இந்த உயிரினங்கள் அனைத்தும் குறைவாக இருக்கும் உணவுக்காக ஒரே பகுதியில் போட்டியிடும்போது, ‘வலியது வாழ்கிறது’, ‘வலிமையற்றது சாகிறது’. இது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் பல்வேறு தனி நபர்களுக்கும் பொருந்தும். பல உயிரினங்களுக்கு இடையிலும் பொருந்தும்.

இப்படியாகத்தான் பல்வேறு புதிய புதிய உயிரினங்கள் தோன்றின. இன்றும் புதிய மாறுபாடுகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

அப்படியானால் ‘மனிதன் பாதி - மிருகம் பாதி, கலந்து செய்த கலவை’ ஒன்றைக் காண முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட ஒரு புதிய உருவம்? ம்ஹூம். சான்ஸே இல்லை.

இந்த மாறுபாடுகள் நடக்க பல ஆயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான வருடங்கள் ஆகும். இந்த மாற்றங்கள் படிப்படியாக நடப்பவை. நமது வாழ்நாளோ 100 வருடத்துக்கு உட்பட்டது. ஆனால், புதைபடிவங்களைத் தோண்டும்போது எக்கச்சக்கமான உதாரணங்கள் கிடைத்துள்ளன. நாம் சற்றும் எதிர்பார்க்காத இடைநிலை உயிர்கள் கிடைத்துள்ளன.

*

சரி, டி.என்.ஏ, மரபணு, எல்லாம் சொல்லிவிட்டோம். இதற்கும் உயிருக்கும் என்ன சம்பந்தம் என்று சற்றே அலசுவோம்.

உயிர் என்றால் என்ன?

எது ஒன்று, தானாகவே தனக்குத் தேவையான எரிபொருளை - உணவை - பெற்றுக்கொண்டு, தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொள்கிறதோ, அதுதான் உயிர். மனிதன் அதைத்தான் செய்கிறான். மாடும் அதைத்தான் செய்கிறது. பேக்டீரியமும் அதைத்தான் செய்கிறது. மாமரமும் அதைத்தான் செய்கிறது.

எல்லா உயிரின் அடிப்படை நோக்கமுமே தன்னை அப்படியே பிரதி எடுத்தல். அப்படியே என்றால், முழுவதுமாக. முடியாவிட்டால், குறைந்தது தன்னில் பாதியையாவது. இங்கே ‘தான்’ என்றால் என்ன? அதுதான் டி.என்.ஏ. எல்லா உயிரும் என்ன செய்ய முயற்சிக்கிறது? தன் டி.என்.ஏவை முழுமையாக, முடியாவிட்டால் தன் டி.என்.ஏவில் பாதியையாவது அல்லது ஒரு பகுதியையாவது பிரதி எடுத்து அடுத்த உயிருக்குள் அதை அனுப்பச் செய்கிறது.

பல உயிர்கள் இப்படி எக்கச்சக்கமான பிரதிகளை உருவாக்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்வரையில், மனிதர்கள் நான்கைந்து பிரதிகளை உருவாக்கினார்கள். இப்போதெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக, ஒன்றில் வந்து நிற்கிறது.

அறிவியல் மேம்பாடு அடைவதற்கு முன்னமேயே, செயற்கையான முறையில் புதிய உயிரினங்களை உருவாக்குவதில் மனிதன் நிறையவே முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளான். ஒட்டுவகைத் தாவரங்களை உருவாக்குவதன்மூலம், வீரிய விதைகளை உருவாக்குவதன்மூலம் அதிக விளைச்சல் தரும் நெல், பட்டாணி, பருத்தி வகைகளை மனிதன் உருவாக்கினான். அதேபோல, விலங்குகளைச் சரியான முறையில் உறவு கொள்ள வைத்து பல்வேறு வகையான நாய்கள், புறாக்கள், குதிரைகள் போன்ற தனக்கு உபயோகமான விலங்கு வகைகளை உருவாக்கினான்.

ஆனால் 1980-க்குப் பிறகான ஆராய்ச்சிகளில் குளோனிங் என்ற புதிய முறை சிந்தனைக்கு வரத்தொடங்கியது. குளோனிங் என்றால் நகலாக்கம் என்று சொல்லலாம். நகலாக்குவது என்றால் என்ன? ஏற்கெனவே இருக்கும் ஓர் உயிரை - அதாவது ஒரு பிராணியை - அப்படியே அச்சு அசலாக அதேமாதிரி ஆக்குவது.

மல்லிகா ஷெராவத் என்ற தசாவதாரம் திரைப்படத்தில் நடித்த நடிகை போல, அதேமாதிரி அச்சு அசலாக இன்னொரு மல்லிகாவை உருவாக்க முடியுமா? எடுத்த எடுப்பில் விஞ்ஞானிகள் அதை அடைய முயற்சி செய்யவில்லை. பாலிவுட் நடிகைக்கு பதிலாக, ஓர் ஆடு, ஓர் எலி, ஒரு தவளை, ஒரு மாடு என்று யோசித்தார்கள்.

இதை எப்படிச் சாத்தியமாக்குவது? ஒன்றைப் போல அச்சு அசலாக இன்னொன்று வேண்டுமானால் இரண்டுக்கும் ஒரே டி.என்.ஏ இருக்கவேண்டும். ஏற்கெனவே இருக்கும் ஒரு மாட்டின் டி.என்.ஏ போல புதிதாகக் கன்று ஈனும் ஒரு தாய்மாட்டின் வயிற்றுக்குள் எப்படிச் செய்வது?

இதற்கு சில வித்தைகளைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். அதற்கு ஏற்ற கருவிகளும் உருவாக ஆரம்பித்திருந்த காலம் இது.

முதலில் கல்யாணி என்ற மாட்டை எடுத்துக்கொள்வோம். நல்ல பசுமாடு. அதற்கு அழகான சாந்தமான முகம். கிட்டே போனால் முட்டாது. வெள்ளை வெளேரென்ற நிறம். நெற்றியில் திலகம் இட்டதுபோல பிரவுன் வண்ணத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதியில் சில இடங்களில் கறும் திட்டுகள். இந்த மாட்டின் தோலை உராய்ந்து அல்லது ரத்தம் ஒரு சொட்டு எடுத்து, அதில் உள்ள ஒரு செல்லைப் பிரித்து எடுத்து, அதையும் பிளந்து அதன் நடுவில் உள்ள டி.என்.ஏவை நம் விஞ்ஞானிகள் எடுத்துவிடுகிறார்கள்.

மற்றொரு பக்கம் ஒரு ஆண் மாடு, ஒரு பெண் மாடு. ஆண் மாட்டின் விந்து, பெண் மாட்டின் முட்டை. இவை இரண்டையும் டெஸ்ட் டியூபில் சேர்த்து கருத்தரிக்க வைக்கிறார்கள். நான்கைந்து முட்டைகள் கருத்தரிக்கின்றன.

ஆனால், இவற்றை அப்படியே விடுவதில்லை. இந்த சினைமுட்டை ஒன்றை எடுத்து, கவனமாக ஓட்டைபோட்டு, அதில் உள்ள டி.என்.ஏவை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் கல்யாணியின் உடம்பிலிருந்து எடுத்த டி.என்.ஏவைப் புகுத்துகிறார்கள். பிறகு இந்த நான்கைந்து ‘கல்யாணி’ சினைமுட்டைகளையும் நான்கைந்து மாடுகளின் கருப்பைக்குள் கவனமாக விட்டுவிடுகிறார்கள்.

சில மாடுகளில் இந்த சினைமுட்டை முழுமையான குட்டியாகக் கருத்தரிக்காமல் வெளியே தள்ளப்படலாம். அதனால்தான் நான்கைந்து. ஏதோ ஒன்றிலாவது இந்த சினைமுட்டை வளர்ந்து கருத்தரித்து, குட்டியாகப் பிறக்குமே என்பதற்காக.

ஒன்று முழுமையாக கருவாகி, குட்டியையும் ஈனுகிறது. என்ன ஆச்சரியம்? அப்படியே கல்யாணி பிறந்தபோது எப்படி இருந்ததோ அதையே உரித்துவைத்தாற்போல உள்ளதே? நெற்றியில் சாந்துப் பொட்டு அப்படியே. தோலின் நிறம் அப்படியே. உடலில் கறும் திட்டுகள் அதே அதே இடங்களில், அதே வடிவத்தில், அதே அளவில்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த மாடு வளரும்போது அப்படியே கல்யாணி வளர்ந்தவிதமாகவே உள்ளது - நீங்கள் சரியான போஷாக்கை அப்படியே அளித்துவந்தால்.

இதுதான் நகலாக்கம். கல்யாணியை நகலெடுப்பதுபோல மல்லிகா ஷெராவத்தையும் நகலெடுக்கலாம்.

ஆனால் உலக நாடுகள் யாவுமே மனிதர்களை நகலெடுப்பது அறநெறி சார்ந்த பிரச்னை என்று இதற்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. உடல் பார்க்க ஒன்றாக இருந்தாலும், மூளை, அது செயல்படும் விதம் ஆகியவை அச்சாக ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்லமுடியாது. அது வெளிப்புறச் சூழல் எப்படி உள்ளதோ அதைப் பொருத்தே அமையும். குளோன் மல்லிகா ஷெராவத், சினிமாவில் டான்ஸ் ஆடாமல், டாக்டருக்குப் படித்து யாருக்காவது ஊசி போடலாம். அல்லது நாவல் எழுதி புக்கர் பரிசு வாங்கலாம்.

*

இதுவரை செய்ததுகூட இருக்கும் உயிரை நகலாக்கி, சிருஷ்டியை நம் கையில் எடுத்துக்கொண்டது. ஆனால் சில விஞ்ஞானிகள் இத்துடன் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. புதிய உயிரைச் சமைப்போம் என்றனர்.

ஏதோ இரண்டு உயிரினங்களின் டி.என்.ஏக்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் டி.என்.ஏக்களை கண்ட இடத்தில் வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒட்டுங்கள். சிவப்பு ரிப்பன் ஒன்று, கறுப்பு ரிப்பன் ஒன்று. இரண்டையும் ஏதோ ஓரிடத்தில் வெட்டி, சேர்த்துத் தைத்தால் கிடைக்கிறதல்லவா புதிய (திமுக) ரிப்பன். அதைப்போல.

இந்த டி.என்.ஏவை ஒரு சினைமுட்டைக்குள் செலுத்தி, அது குழந்தையாகப் பிறந்தால் எப்படி இருக்கும்?

அதற்கு எத்தனை கை, கால்கள் இருக்கும்? அதற்கு எத்தனை கண்கள், மூக்குகள், வாய்கள் இருக்கும்? அதன் உடல் எப்படி இருக்கும்? நினைக்கவே பயங்கரமாக உள்ளதல்லவா?

இப்படி வெட்டி ஒட்டி உருவாக்கப்படும் டி.என்.ஏவுக்கு, ரிகாம்பினண்ட் டி.என்.ஏ என்று பெயர். ஆனால் அறிவியல் உலகம் மிகவும் பயப்படுகிறது. இப்படி, நமக்கே தெரியாத ஏதோ ஒரு புதிய உயிரினத்தை நாம் உருவாக்க, அது பிறந்தவுடன், நம்மையை கடித்து விழுங்க ஆரம்பித்துவிட்டால்? அதை நம்மால் கொலை செய்யவே முடியவில்லை என்றால்?

என்ன ஆகும்? உலகமே அழிந்துவிடாதா? மனித இனமே நசித்துப் போய்விடாதா?

இந்த உயிரினம் நம்மை விழுங்கித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. இது ஒரு சிறு வைரஸ் அல்லது பேக்டீரியமாக இருக்கலாம். கண்ணுக்கே தெரியாமல் ஏதோ ஒரு சோதனைச் சாலையில் உருவாகி, வெளியே காற்றோடு பறந்துவந்து, மனிதர்களை ஏதோ ஒரு வியாதியாகப் பீடித்து, கொத்து கொத்தாகக் கொன்று மடியச் செய்யலாம்.

எவ்வளவு நாளைக்குத்தான் விஞ்ஞானிகள் பயந்தபடி இருப்பார்கள்? நாளையே சிலர், யாருக்கும் தெரியாமல் இதைச் செய்தால் என்ன ஆகும்? இந்த நிமிடத்திலேயே யாரோ இந்த உலகின் எங்கோ ஒரு கோடியில் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் என்ன நடக்கும்?

இதில் உள்ள அறவியல் கேள்விகள் என்னென்ன? இருப்பியல் கேள்விகள் என்னென்ன? கடவுள் இருக்கிறாரா, இல்லையா? மனிதனே சிருஷ்டி செய்ய ஆரம்பித்தால், இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஆளாளுக்குப் புதிய உயிரினங்களை உருவாக்கி ஒருவர்மேல் ஒருவர் ஏவினால் என்ன ஆகும்?

கேள்விகள் பல. பதில்களே இல்லாமல்.

Saturday, January 17, 2009

இன்று வாங்கிய புத்தக லிஸ்ட்

1. Sheikh Mohammad Abdullah: Tragic Hero of Kashmir, Ajit Bhattacharjea, Lotus Collection, an imprint of Roli Books, Rs. 395

2. The Trial of Bahadur Shah Zafar, HLO Garrett, Lotus Collection, and imprint of Roli Books, Rs. 395

3. The Story of Tea, E. Jaiwant Paul, Lotus Collection, an imprint of Roli Books, Rs. 225

4. The Punjab Story (Collection of articles by several people on the Khalistani movement and the police action), Lotus Collection, an imprint of Roli Books, Rs. 295

5. The Brain: A Beginners Guide, Ammar al-Chalabi, Martin R. Turner, R. Shane Delamont, OneWorld / Viva Books, Rs. 250

6. Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation, Lynne Truss, Profile Books / Viva Books, Rs. 195

7. 36 வணிகத் தந்திர யுக்திகள் (இன்றைய தொழில் அதிபர்களுக்கான ரகசிய போர்க்கலை), சீன மொழியில் வாங் சுவான்மிங், ஆங்கிலத்தில்: ஜெரால்டின் கோ, ஒய்.என்.ஹேன், தமிழில் என்.வி.பாலு, எமரால்டு பதிப்பகம், ரூ. 120

8. India Wins Freesom (The complete version), Maulana Abul Kalam Azad, Orient BlackSwan, Rs. 250

9. Brahmin and Non-brahmin: Genealogies of the Tamil Political Present, MSS Pandian, Permanent Black, Rs. 295

10. Analysing and Fighting Caste, Dr. Ambedkar and Untouchability, Christophe Jaffrelot, Permanent Black, Rs. 295

11. Pi, A Biography of the World's Most Mysterious Number, Alfred S. Posamentier and Ingmar Lehmann, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 275

12. Gamma, Exploring Euler's Constant, Julian Havil, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 275

13. An Imaginary Tale, The Story of sqrt(-1), Paul J. Nahin, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 260

14. Stories about Maxima and Minima, V.M.Tikhomirov, Universities Press, an imprint of Orient BlackSwan, Rs. 200

===

இவை தவிர, தெருவோர பிளாட்ஃபார்மில் பொறுக்கியதில், ரூ. 75-க்கு கீழ்க்கண்ட பழைய புத்தகங்கள் கிடைத்தன.

1. Plane Trignometry, S.L.Loney
2. The City of Joy, Dominique Lapierre
3. One of us (Biography of Margaret Thatcher), Hugo Young
4. The Sirius Crossing (a thriller novel), John Creed
5. உலகத்தின் ஆதிகாவியம் கில்காமேஷ், க.நா.சு. அல்லயன்ஸ்

Friday, January 16, 2009

புத்தகங்கள்

1. ஜைனம், அ.சுகுமாரன், ஸ்ரீ நேமிநாத் பதிப்பகம், 204 பக்கம், விலை ரூ. 60

2. இலங்கையில் சமாதானம் பேசுதல், முயற்சிகள், தோல்விகள், படிப்பினைகள், இரு தொகுதிகள், பதிப்பு: கலாநிதி குமார் ரூபசிங்க, அடையாளம், விலை ரூ. 550 (This is a Tamil translation of "Negotiating Peace in Sri Lanka", Edited by Dr. Kumar Rupasinghe.)

3. சந்தாமாமா ஆங்கிலம், ஆண்டுச் சந்தா (ரூ. 180)

4. Dilbert and the way of the weasel, Scott Adams, Boxtree, an imprint of Pan Macmillan, in India Rs. 320

5. The wonder that was India, A L Basham, Picador, an imprint of Pan Macmillan, in India Rs. 320

6. அந்நியன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ.ஸ்ரீராம், க்ரியா, ரூ. 75 (ஏற்கெனவெ நான் வாங்கியிருந்த பிரதி களவு போன காரணத்தால்)

7. வீடியோ மாரியம்மன், இமையம், க்ரியா, விலை ரூ. 150

8. மூன்று ஆஸ்டெரிக்ஸ் புத்தகங்கள் (கடைசியாக உதர்ஸோ வரைந்து எழுதியவை), எக்கச்சக்கமான லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் புத்தகங்கள்.

காமிக்ஸ் புத்தகங்கள்

ஒன்றாவது வகுப்பு ஆண்டிறுதி விடுமுறையின்போதுதான் நான் படிக்கக் கற்றுக்கொண்டேன். எதிர் வீட்டில் ஒரு பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தனர். இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்டிரேக், வேதாளம் என்று ஆரம்பித்து நீளும் பெரும் வரிசை.

முதலில் ஒரு புத்தகம். அடுத்து இன்னொன்று. அடுத்து இன்னொன்று. புரிகிறதோ, இல்லையோ, ஒன்றுவிடாமல் எழுத்துக்கூட்டி, படித்து முடித்தேன். சுமார் 70-80 புத்தகங்கள் இருக்கும். அனைத்தையும் அந்த விடுமுறையிலேயே படித்துவிட்டேன். அவை தீர்ந்ததும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தேன்.

அன்று தொடங்கியது படிக்கும் பழக்கம். பிறகு அங்கிருந்து 16, 32 பக்க சற்றே பெரிய எழுத்து மந்திரவாதிக் கதைகள், விகடன், குமுதம், மாலைமதி, ராணி முத்து, கிரைம் நாவல்கள், ஆங்கில பல்ப் நாவல்கள் என்று தொடர்ந்தது படிப்பு.

பிறகு தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணிலிருந்து காணாமல் போனது. டின் டின், ஆஸ்டெரிக்ஸ் ஐஐடி வந்தபிறகுதான் படிக்க ஆரம்பித்தேன்.

முந்தாநாள் சென்னை புத்தகக் காட்சியில், லக்கிலுக் கொடுத்த தகவலை வைத்து, நிறைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அருண் என்பவர் இன்ஃபோமேப் (P 35) என்ற கடையில் இந்தப் புத்தகங்களை வைத்து விற்கிறார். இதற்காகவே லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆசாமிகளிடம் சிவகாசியிலிருந்து புத்தகங்களை வாங்கி வைத்துள்ளார். எல்லாமே மோசமான தாளில் அச்சடிக்கப்பட்டவை. ஆனாலும் நமக்கு இன்று வேறு வழியில்லை.

காமிக்ஸ் புத்தகங்களில் பெரும் வெற்றிடம் உள்ளது. அமெரிக்கக் கதைகளை வாங்கி, உல்டா செய்த வசனங்களை நிரப்பி உருவாக்கும் கதைகள் ஒரு ரகம். ஆனால், சொந்தமாக உருவாக்கப்படும் உள்ளூர் கதைகள் தமிழில் சுத்தமாகக் காணோம். சின்னக் குழந்தைகள் காமிக்ஸ்மூலம் மட்டுமே புத்தகம் படிக்க ஆரம்பிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அங்கிருந்து பெரிய எழுத்து கதைப் புத்தகங்கள், பிறகு இன்னபிற நான்-ஃபிக்ஷன் என்று படிப்பு விரிவடையும்.

ஆனால் நல்ல காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்க நன்கு படம் வரைபவர்களும் ஜாலியாகக் கதை சொல்பவர்களும் தேவை. வெறும் கறுப்பு-வெள்ளை கோட்டோவியங்கள் போதும். அப்படிப்பட்ட ஜோடிகள் எங்கிருந்தாவது வரவேண்டும். அடுத்த கட்டமாக டின் டின், ஆஸ்டெரிக்ஸோடு ஒப்பிடக்கூடிய வண்ணப் படக் கதைகளுக்குப் போகலாம்.

ஆள் கிடைப்பார்களா?

பதற்றம்

பொதுவாக, நான் சமநிலையில் இருப்பவன். டென்ஷன் ஆவது குறைவே. மனம் சோர்ந்து இருப்பதும் வெகு குறைவே. ஆனால் சில நேரங்களில் விவரிக்கமுடியாத அளவு பதற்றத்துக்கு ஆளாவேன். பொதுவாக இது வேலை சார்ந்தே இருக்கும்.

பலருக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காரணத்தாலேயே இந்தப் பிரச்னைக்கு நான் ஆளாகிறேன். சில வேலைகளைச் செய்துதரக்கூடிய நிலையில் நானோ என் நிறுவனமோ இருக்காது. நேரப் பற்றாக்குறை. அந்த செயலைச் செய்துதருவதால் எந்தவித வணிக ஆதாயமும் எனக்கோ நிறுவனத்துக்கோ கிடையாது. ஆனாலும், எதிராளி கேட்டு, மாட்டேன் என்று சொல்ல என் மனம் இடம் கொடுக்காது. “அதனால் என்ன, செய்துவிடலாம்” என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி மாட்டிக்கொள்வேன். சில நாள்கள் கழித்துத்தான் உளைச்சல் ஆரம்பமாகும்.

செய்துமுடிக்கவே முடியாத அந்த விஷயம் முடிந்துவிடும் என்று அடுத்தவர் எதிர்பார்த்துக் காத்திருப்பார். “அதை எடுத்துக்கொண்டுவிட்டோமோ, ஐயோ, எப்படி முடிக்கப்போகிறோம்” என்ற பதற்றத்தில் நான் செய்யவேண்டிய பிற வேலைகளும் ஓடாமல் தங்கி நிற்கும். நான் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்தைச் செய்யாமல் டபாய்க்கிறேன் என்று எதிராளி கடும் கோபம் அடைய ஆரம்பிப்பார். இவருக்கு உதவப்போய் இப்படி சிக்கித் தவிக்கிறேனே என்று என்னை நானே நொந்துகொள்வேன்.

இந்தப் பதற்றத்திலிருந்து வெளி வருவது கஷ்டமல்ல. அந்த வேலையை முடித்துத் தரவேண்டும். அதனால் பிற காரியங்கள் நடப்பது தாமதமாகும். அல்லது எதிராளியின் காலில் விழுந்து, அதை வேறு யாரிடமாவது செய்து வாங்கிக்கொள்ளச் சொல்லவேண்டும். அதனால் உறவு முறியும். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதையும்கூட ஓரிரு மாதங்களில் சரிபடுத்திக்கொள்ளலாம்.

ஆனால் அந்தப் பதற்றம் நிலவும்போது படும் பாடு இருக்கிறதே. தூக்கம் வராது. செய்யவேண்டிய வேலைகள் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும். நாளை அந்த மனிதர்முன் விழிக்கவேண்டும் என்றால் என்ன பதில் சொல்வது என்று பல பதில்கள் மண்டையில் ஓடும்.

இதில் மோசம், சில பொய்களை வேறு சொல்லியிருப்பேன். “வேலை ரெண்டு நாள்ள முடிஞ்சுடும் சார்!” ஆனால் வேலை ஆரம்பித்திருக்கவே செய்யாது. எப்படி ரெண்டு நாளில் முடிக்கமுடியும்? ஏன் ரெண்டு நாள் என்று போனில் பேசும்போது வாயில் வந்தது? நாக்கில் சனி. பதற்றம் மேலும் அதிகமாகும்.

இரண்டு நாள், நான்காகி, நான்கு எட்டாகி, போனில் மேலும் பொய் சொல்லி...

இனி இன்னொரு முறை இப்படிப்பட்ட ஃபேவர் யார் கேட்டாலும் செய்யக்கூடாது என்று மனத்துக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால் இன்றுவரை தட்ட முடிந்ததில்லை.

இந்த ஆண்டு உறுதிமொழி... நிர்தாட்சண்யமாக, முடியாத ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது.

Say no, emphatically. It is simply not worth the effort.

Thursday, January 15, 2009

அல் பெருனி

இந்தியாவைப் பற்றி அல் பெருனி என்ற பாரசீகர் 11-ம் நூற்றாண்டில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அது முதலில் பாரசீக மொழியில் (பெர்சியன்) எழுதப்பட்டு, பின் அரபி மொழிக்குப் போய், அங்கிருந்து ஆங்கில மொழிக்கு எட்வர்ட் சச்சா (Edward Sachau) என்ற ஜெர்மானியரால் மொழிபெயர்க்கப்பட்டு இன்று அச்சில் கிடைக்கிறது.

கஜினி முகமது தன் சேனையுடன் இந்தியாவைத் தாக்கி பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டுபோக வந்தபோது, கூட அழைத்து வரப்பட்டவர்தான் அல் பெருனி. கஜினி ஒருபக்கம் சண்டைபோட, கொள்ளையடிக்க, அல் பெருனி, தன்னால் முடிந்தவரை சமஸ்கிருதம் கற்றார். அறிஞர்களுடன் பேசினார். தான் தெரிந்துகொண்டதை வைத்து, இண்டிகா என்ற புத்தகத்தை எழுதினார்.

இவரது முழுப்பெயர் அபு-அல்ரெய்ஹான் முகமது இப்ன் அஹ்மத் அல் பெருனி.

புத்தகம்: “Alberuni's India, Vol. 1 & 2, Edited with Notes and Indices, Edward C. Sachau, Low Price Publications, ISBN 978-81-7536-433-2”

***

சில மாதங்களாக இந்தப் புத்தகத்தை முழுதாகப் படித்துவிடவேண்டும் என்று திண்டாடிக்கொண்டிருக்கிறேன். அதற்குத் தேவையான மனக்குவிப்பு கிடைப்பதில்லை. சில பக்கங்கள் போகும். பிறகு நிறுத்திவிட்டு வேறு புத்தகங்களுக்குத் தாவி விடுகிறேன். மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தால் பழைய பக்கங்களை மறுபடியும் படிக்க வேண்டியுள்ளது.

இதேபோன்று என்னை டார்ச்சர் செய்யும் இரண்டு புத்தகங்கள், டார்வினின் ‘The Origin of Species’, சார்த்தரின் ‘Nausea’. பத்து பக்கம் போகும், அதற்குமேல் தாங்காது.

என்றாவது ஒரு நாள்!

நேற்று, ஏ.எல்.பாஷம், ‘The Wonder that was India’ வாங்கியுள்ளேன். அதைப் படிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

Tuesday, January 13, 2009

முஸ்தஃபா தாஹிர் லகடாவாலா

இன்று நாகராஜனுடன் கீழ்ப்பாக்கம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது கே.ஜே.ஹாஸ்பிடல் கண்ணில் பட்டது.

இருபது வருடங்களுக்கு முன் ஒரு நாள் நானும் மூன்று நண்பர்களும் அங்கு வந்திருந்தோம். எங்களோடு படித்துவந்த மாணவன் ஒருவனை அங்குதான் அட்மிட் செய்திருந்தார்கள்.

அவனும் மற்றொரு மாணவனும் இரவு சினிமா பார்க்க (ஈகா தியேட்டராக இருக்கும் என்று நினைக்கிறேன்) வந்திருக்கிறார்கள். முஸ்தஃபாவிடம் மோட்டார் பைக் இருந்தது. அப்போதெல்லாம் ஹாஸ்டலில் படிக்கும் பையன்களிடம் வெறும் சைக்கிள்தான் உண்டு. (என்னிடம் அரதப் பழசான ஒரு டப்பா சைக்கிள் இருந்தது.) ஆனால் முஸ்தஃபா பணக்காரன். அவனது தந்தை பம்பாயில் பிசினஸ் நடத்திவந்தார். பைக் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அன்று முஸ்தஃபா ஹெல்மெட் அணிந்துதான் சென்றிருந்தான். நடு இரவில் குடித்துவிட்ட வந்த ஒருவன் தனது காரால் முஸ்தஃபாவின் பைக்கில் மோதிவிட்டான். பின்னால் அமர்ந்துவந்த மாணவன் தூக்கி எறியப்பட, முஸ்தஃபா கீழே விழ, வேறு ஒரு வண்டி, முஸ்தஃபாவின் தலைமீது ஏறிச் சென்றது. ஹெல்மெட் உடைந்துபோனது. தலை தப்பியது.

தலை தப்பியது என்றாலும் மூளை கலங்கிவிட்டது. ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். கே.ஜே.ஹாஸ்பிடலில்தான் அட்மிட் செய்திருந்தார்கள். முஸ்தஃபாவுக்கு பல மொழிகள் தெரியும். ஆங்கிலம். மராட்டி. ஹிந்தி. உர்தூ. தமிழில் கெட்ட வார்த்தைகள் மட்டும்தான் தெரியும்.

பத்து, பதினைந்து நாள்கள் கோமாவில் இருந்த முஸ்தஃபா, பிழைத்துவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாக, பல்வேறு மொழிகளும் அவன் கற்றிருந்த வார்த்தைகளும் நினைவுக்கு வர ஆரம்பித்தது. நாங்கள் போயிருந்த அன்று, அவனுக்கு நினைவுக்கு வந்த வார்த்தை ‘fuck’. அதையே விடாமல் மந்திர உச்சாடனம் செய்தான். கண்கள் திறக்கவில்லை. அருகில் அமர்ந்திருந்த அவனது தாய், அவனை வாய்மூடச் செய்த எந்தப் பிரயத்தனமும் பலனளிக்கவில்லை.

“இப்படித்தாம்பா, வாய்க்கு வந்த வார்த்தையை சொல்லிகிட்டே இருப்பான்” என்றார் கண்கள் பனிக்க. எங்கள் யாருக்குமே பேச்சு வரவில்லை. வாய்மூடி மௌனமாக உட்கார்ந்திருந்தோம். அடுத்து புதிய ஒரு வார்த்தை மூளைக்குள் பிரண்டு, அவன் வாயிலிருந்து ஒலிக்க ஆரம்பித்தது. ‘yellow’ அல்லது ‘tree’ - ஏதோ ஒன்று, இன்று எனக்கு ஞாபகம் வரவில்லை. அதையே உச்சரித்துக்கொண்டிருந்தான்.

கனத்த இதயத்துடன் திரும்பிவந்தோம். இவன் திரும்பி வகுப்புக்கு வரப்போவதில்லை என்றே தோன்றியது. மூன்றாம் செமஸ்டர் முடிந்து, நான்காம் செமஸ்டர் ஆரம்பித்த சில நாள்கள் கழித்து முஸ்தஃபா மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்தான். பைக் கூடாது என்று சொல்லிவிட்டாராம் டாக்டர். சைக்கிள்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அவனது ரெடினாவில் விழும் பிம்பத்தை மூளை புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. கண்ணில் படும் பிம்பம் தெளிவாக அவனுக்குத் தெரிவதில்லை என்பதால் அவனது கண்கள் கூர்ந்து நோக்க முயற்சி செய்யும். அதனால் தலை சீக்கிரமே வலிக்க ஆரம்பிக்கும்.

சைக்கிள் ஓட்டும்போதுகூட அவன் தடுமாறினான். இரண்டு முறை கீழே விழுந்துவிட்டான். அதனால் சைக்கிளும் ஓட்டக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். மற்றொரு மாணவன் ஓட்ட, இவன் பின்னால் உட்கார்ந்து வருவான்.

ஒரு செமஸ்டர் பாடம் போனதால், அடுத்த வருட மாணவர்களுடன் சேர்ந்து படிக்கத் தொடங்கினான் முஸ்தஃபா. ஆனால், அவனிடம் பரிவு காட்ட யாரும் இல்லை. தனித்து இவன் மட்டும் வேறு ஹாஸ்டலில். இவனது வகுப்பு மாணவர்கள் வேறு ஹாஸ்டலில்.

நடுவில் ஒரு நாள், அவனை கோதாவரி ஹாஸ்டல் வாசலில் சந்தித்தேன். ஐஐடியை விட்டு விலகப்போவதாகச் சொன்னான். மஹாராஷ்டிராவிலேயே வேறு ஒரு பொறியியல் கல்லூரியாகப் பார்த்து சேரலாம் என்று யோசித்திருப்பதாகச் சொன்னான். அவனது தந்தையோ படிக்கவேண்டாம், குடும்பத் தொழிலுக்கு வந்துவிடு என்கிறாராம். ஆனால் இவனுக்கோ படிக்க விருப்பம்.

மிகவும் வருத்தமாக இருந்தது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்திருப்பான். யாரோ ஒரு மூடன் குடித்துவிட்டு தெருவில் கார் ஓட்டி இவனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டானே.

அதற்குப்பின் அவனைக் காணமுடியவில்லை. இன்று எங்கே இருக்கிறான் என்று தெரியாது. பொறியியல் படித்து முடித்தானா அல்லது குடும்பத் தொழிலில் இருக்கிறானா என்றும் தெரியாது.

Sunday, January 11, 2009

அச்சமுண்டு, அச்சமுண்டு

புத்தகக் காட்சி ஆரம்பித்து நேற்றோடு மூன்று நாள்கள் முடிந்துவிட்டன. சென்ற ஆண்டு, 14 நாள்கள் நடந்தது விற்பனை. இந்த ஆண்டு 11 நாள்கள்தான். சென்ற ஆண்டுகளில், அனைத்து நாள்களிலும் காட்சி வளாகத்திலேயே இருந்திருக்கிறேன். பல நாள்கள் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருக்கிறேன். இந்த ஆண்டு ஓரிரு நாள்களுக்கு மேல் போகப்போவதில்லை. கடந்த மூன்று நாள்களில் வெள்ளி அன்று மட்டும் மாலை நான்கைந்து மணி நேரம் அங்கே இருந்தேன்.

முக்கியமாகச் சொல்லவேண்டியது அருண் வைத்தியநாதனுடன் சந்திப்பு. அச்சமுண்டு, அச்சமுண்டு படத்தை முடித்துவிட்டு, ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். ஏப்ரல் மாதமாகும் என்றார்.

அருணுக்கு சினிமா மீது தீவிரமான காதல் என்பது சொல்லாமலேயே தெரியும். வணிக சினிமா, கலை சினிமா என்று தனித்துப் பார்க்காமல், பொதுஜனங்களுக்காக நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர். அதற்காக, தனது வேலையை விட்டுவிட்டு இரண்டு வருடமாக உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதில் திட்டமிடுதல் குறைவு என்பது நன்றாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் UTV-யின் World Movies சானலில் நிறைய அந்நிய நாட்டுப் படங்கள் காணக் கிடைக்கின்றன. அடிப்படை ஒழுங்கு, கதை சொல்லும் திறன், காட்சியமைப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை ஒரு பார்வையாளனால் அறிந்துகொள்ளமுடிகிறது. இவை எவையுமே பட்ஜெட் சார்ந்த விஷயங்கள் அல்ல. சொல்லப்போனால் பட்ஜெட்டைக் குறைக்கும் விஷயங்கள்.

ஆனால், தமிழ் சினிமாவில், இந்த ஒழுங்கைப் பற்றியும் நம்பகத்தன்மையைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதனால்தான் நாம் போற்றும் ராதாமோகன்கூட சின்னச் சின்ன விஷயங்களில் கோட்டை விடுகிறார்.

‘வேட்டையாடு, விளையாடு’வில் கமலுக்கு அமெரிக்க விசா எவ்வளவு எளிதில் கிடைப்பதாகக் காட்டப்படுகிறது என்றும், மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். தமிழ்ப் படம் எடுப்பவர் யாரும் இதுபோன்ற லாஜிக் ஓட்டைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இது மனோபாவம் சார்ந்த பிரச்னை. ‘இது போதும்’ என்ற நினைப்பு. இது மணி ரத்னத்தில் ஆரம்பித்து, கமல் வழியாகப் பரவி, ஷங்கரில் நிலைகொண்டு, தமிழ்த் திரையுலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறது.

அடுத்தது, வேலைத் திட்டத்துக்கான ஒழுங்கு. இது முழுக்க முழுக்க நிர்வாகம் தொடர்பானது. இதுதான் படம், இதுதான் கதை, இதுதான் திரைக்கதை, இதுதான் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் என்றானதும், இந்தப் படத்தில் யார் நடிக்கவேண்டும், எந்தெந்தத் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை, ஏன், பட்ஜெட் எவ்வளவு, அவர்கள் கொடுக்கும் நேரம் எப்படி என்பதைக் கண்டறிந்து, முழுமையான செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி, அவர்கள் அனைவரையும் கட்டி மேய்த்து, படத்தை உருவாக்கித் தருதல். இந்தப் புரிதல் இல்லாமலேயே, அல்லது ‘பரவாயில்லை, பார்த்துக்கொள்ளலாம்’ அல்லது ‘இது போதும்’ என்ற எண்ணத்திலேயே அனைத்துப் படங்களும் எடுக்கப்படுகின்றன. பண விரயம் ஆகிறது.

எனக்கு வாசு என்றொரு நண்பர் இருக்கிறார். விளம்பரப் படங்கள் உருவாக்கித் தருவார். சில நேரங்களில் பெரிய பட்ஜெட் படங்களில் (சிவாஜி போன்று) புரடக்‌ஷனில் வேலை செய்வார். அவரிடம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், புரடக்‌ஷன் நிர்வாகம் என்றொரு ‘அவுட்சோர்சிங்’ துறைக்கு நிறைய எதிர்காலம் உண்டு என்று. இன்று தனித்தனியாக, உதிரியாக இருக்கும் பல திறமைகளையும் ஒரு குடையின்கீழ் வழங்கும் நிறுவனம் இருந்தால், பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நிம்மதியாகப் படம் தயாரிக்க முடியும். மாற்றாக, இன்று தயாரிப்பாளர்கள் பலரும் இயக்குனர்களை நம்பிப் பணத்தை ஒப்படைக்க, பல நேரங்களில் இயக்குனர்களின் இயலாமையாலும் சில நேரங்களில் இயக்குனர்களின் திருட்டுத்தனத்தாலும் பணம் விரயமாகி, படம் நாசமாகிறது.

இந்த அடிப்படைகள் சரியாக இல்லாததால்தான், தமிழ் சினிமா, செயல் திறன் இன்றித் திண்டாடுகிறது. அடுத்தது, விநியோகம் மற்றும் மார்க்கெட்டிங். இங்கும் ஏமாற்றமே. பிரமிட் சாயிமீரா நிறுவனத்திடமிருந்து, நிறைய எதிர்பார்த்தேன். இந்தத் துறையில் கார்பொரேட் நிர்வாகத்தைக் கொண்டுவருவார்கள் என்று. ஆனால் நான் இதுவரை கேள்விப்பட்டது திருப்தியாக இல்லை. சன் குழுமம் இப்போது விநியோகத்தில் இறங்கி, விளம்பரத்தில் அடித்து நொறுக்குகிறது. ஓரிரு அதிரடிப் பாடல்கள், அவற்றை விடாது ஒளிபரப்புவதன்மூலம், மக்களை முணுமுணுக்க வைப்பது. இது நீண்டநாள் நோக்கில் உபயோகமாக இருக்குமா என்று தெரியவில்லை. நல்ல பிராடக்ட் இல்லாமல் விளம்பரம் மட்டும் செய்தால் அதனால் பலன் இருக்குமா என்று தெரியவில்லை.

தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.

***

அருணுடன் பேசும்போது அவர் ஒரு முழுப் படத்தைத் தயாரிக்க என்னவெல்லாம் செய்தார் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. சினிமா தொழில்நுட்பம் எனக்கு அந்நியம். எனவே கலர் கரெக்‌ஷன், சவுண்ட் மிக்ஸிங் போன்ற பல விஷயங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியாது; ஆனால் அவையெல்லாம் முக்கியம் என்று தெரிகிறது. எளிமையாக, ஒரு படம் எடுக்கும்போது என்னவெல்லாம் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்று அருண் ஒரு புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும்.

அவரது படம் ரிலீஸாகட்டும்.

Friday, January 09, 2009

நான் எடிட் செய்த புத்தகம் - 6: அமுல்

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை

நாங்கள் வெளியிட்டிருக்கும் (பெரும்பாலும் சொக்கன் எழுதியுள்ள) தொழில்துறை வரலாற்றுப் புத்தகங்களில், விற்பனையைப் பொருத்தமட்டில், பொதுவாகவே ஓர் அம்சம் தென்படுகிறது.

ஓர் ஆளை முன்னிறுத்தி, அட்டைப்படத்தில் அவரது முகத்தை வைத்தால் அந்தப் புத்தகம் அதிகமாக விற்கும். ஒரு நிறுவனத்தை முன்னிறுத்தி, அது தொடர்பாக எழுதினால், அந்தப் புத்தகத்தின் விற்பனை குறைவாகவே இருக்கும். இதன் லாஜிக் என்ன என்பது தனியாக ஆராயப்படவேண்டிய ஒன்று.

ஆனால், அமுல் என்பது வர்கீஸ் குரியனால் மட்டும் தொடங்கி நடத்தப்பட்ட நிறுவனமல்ல. குஜராத் கூட்டுறவு பால் விற்பனைச் சங்கம் என்ற அமைப்பில் இன்று வர்கீஸ் குரியன் இல்லை. குரியன், 2005-ல் இந்த நிறுவனத்திலிருந்து “ஓரங்கட்டப்பட்டார்.” இப்போது இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மனாக இருப்பவர் பாடோல் என்பவர். குஜராத் கூட்டுறவு பால் விற்பனைச் சங்கத்தை ஆரம்பிக்க பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டவர் திருபுவன்தாஸ் படேல். இவருக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் மொரார்ஜி தேசாய், வல்லபபாய் படேல். உருவான காலகட்டம் 1946.

அங்கிருந்து, அமுல் என்ற அடுத்த கட்டத்தை எட்டுவதற்குப் பெரும் உதவியாக இருந்தது வர்கீஸ் குரியன்தான்.

அமுல் அடைந்த வெற்றியை இந்தியாவின் வேறு எந்த பால் கூட்டுறவும் அடையவில்லை. அது ஒரு சோகமே.

அமுல் ஒருவிதத்தில் ஆச்சரியம் தரக்கூடிய அமைப்புதான். கூட்டுறவுச் சங்கங்கள் என்றாலே அரசியல், தில்லுமுல்லு, நிதி நிர்வாகத்தில் திறமையின்மை, ஊழல், அலட்சியம், பிராண்டிங் பற்றிய புரிதல் இன்மை என்பதுதான் நமக்கு முதலில் தோன்றுகிறது. ஆனால், குஜராத் பால் விற்பனை சங்கம் மட்டும் எப்படி இவற்றிலிருந்து தப்பித்தது? குரியன் என்பவருக்கு மட்டும் இந்த நிறுவனத்தை மேலும் மேலும் பெரிதாக்கவேண்டும், புதிய புதிய பொருள்களை உருவாக்கி விற்பனை செய்யவேண்டும் என்று தோன்றியது? இப்படியெல்லாம் செய்வதற்காக அவருக்கு அதிகச் சம்பளம் ஒன்றையும் அமுல் தந்துவிடவில்லை.

ஒரு முதலாளித்துவ அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பினும், அமுல் என்ற நிறுவனம் எப்படி நல்ல லாபம் சம்பாதிக்கும் நிலையை அடைந்துள்ளது என்ற ஆச்சரியத்தின் கதைதான், இந்தப் புத்தகம்.

புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது...

(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது.

பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:

1. அல் காயிதா
2. தாலிபன்
3. விடுதலைப் புலிகள்
4. உல்ஃபா
5. பிரபாகரன்
6. லஷ்கர்-ஈ-தோய்பா
7. எல்.டி.டி.ஈ (மினிமேக்ஸ்)

இந்தப் புத்தகங்கள் எல்டாம்ஸ் ரோடில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் காட்சியகத்திலும் இணையம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தின் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் கேட்கும் நிலையில் இருக்கிறோம். எனவே மேற்கொண்டு தகவல் தெரிந்ததும் எழுதுகிறேன்.

.

Thursday, January 08, 2009

என் ஜன்னலுக்கு வெளியே...

மாலனின் “என் ஜன்னலுக்கு வெளியே...” புத்தக அறிமுகம், 5/1/2009 அன்று கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் நடைபெற்றது. ஜென்ராம் புத்தகத்தை வெளியிட, சிங்கப்பூர் ஒலி எஃப்.எம்மின் பொன்.மகாலிங்கம் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.


ஒலிப்பதிவுகள்:

பத்ரியின் அறிமுகம்
ஜென்ராமின் பேச்சு
மாலனின் பேச்சு
விவாதம்

நான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்

ராமகியன்: தாய்லாந்து ராமாயணம்

ஆனந்த் ராகவ் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர். தாய்லாந்தில் பல ஆண்டுகள் வசித்த இவர் இன்று பெங்களூருவில், உலோக வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவ்வப்போது ஆனந்த விகடனில் ஒரு கதை எழுதுவார். இவரது க்விங்க் என்ற சிறுகதைத் தொகுதி கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது.

ராமாயணத்தின் மூலம் வால்மீகி சமஸ்கிருதத்தில் இயற்றியது. ஆனால் அதற்குக் கொஞ்சமும் குறைவுபடாமல், தமிழில் கம்பன் முதற்கொண்டு இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ஏகப்பட்ட ராமாயண வடிவங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் அடிப்படையில் வால்மீகியைத் தழுவி இருக்கும். ஆங்காங்கே மெருகூட்டப்பட்டிருக்கும். அதே நேரம் ராமாயண பாத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான நாட்டுபுறக் கதை வடிவில் புழங்குகிறார்கள். இன்றைய நவீன கதைசொல்லிகளும் ராமனையும் சீதையையும் அனுமனையும் வாலியையும் தங்கள் மனம் போன போக்கில் மறுகட்டமைப்பு செய்கிறார்கள்.

ஆனால் ராமாயணம் என்ற காவியம், இந்தியாவுக்கு வெளியில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியாவில் மிக நன்றாக வேறூன்றியுள்ளது. அதில் மிக முக்கியமான நாடு தாய்லாந்து.

தாய்லாந்தில் அரசருக்குப் பெயரே ராமாதான். ராமா-4, ராமா-5, ராமா-6 என்று போகும். அரசியின் பெயர் அதேபோல, சீதா. இங்கே வழங்கும் ராமாயணத்தின் பெயர்தான் ராமகியன். ராமகியன் பல இந்திய ராமாயணங்களின் கலவையாகவும், அதே நேரம் தாய்லாந்தின் பாரம்பரியத்துடன் இணைந்ததாகவும் உள்ளது.

ஆனந்த் ராகவ் இந்தப் புத்தகத்தில் தாய் ராமாயணத்தை ஆராய்ச்சி நோக்கில் விளக்குகிறார். பாத்திரப் படைப்புகளில் எங்கெல்லாம் வேறுபாடு என்று காட்டுகிறார். ராமன், சீதை, பொதுவாக ராமகியனில் பெண்கள் பாத்திரம் எப்படியுள்ளது, வாலி வதம், அனுமன், ராவணன், யுத்தகாண்டம் என்று முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு தனித்தனி அத்தியாயங்களில் சாறாக்கித் தருகிறார்.

இந்திய ராமாயணங்களில் இல்லாதமாதிரி, ராமகியனில் பெண்கள் போகப்பொருளாக மட்டுமே வருகின்றனர்; சீதை தவிர்த்து. இதில் அனுமன் ஒரு பெண் பாக்கியில்லாமல் உறவுகொண்டு குழந்தைகளையும் தோற்றுவிக்கிறான்.

பாதிப் புத்தகத்துக்கு மேல் ராமகியனைப் பற்றிப் பேசிவிட்டு, ஆனந்த் ராகவ், பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ராமாயணங்களை மேலோட்டமாக எடுத்துவைக்கிறார். பர்மா, மலேசியா, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான் என அனைத்து நாடுகளிலும் புழங்கும் ராமாயணங்கள் அல்லது ராமாயணம் போன்ற கதைகளைச் சொல்லி, அவை எந்தெந்த இடங்களில் இந்திய ராமாயணங்களிலிருந்து மாற்றம் அடைந்துள்ளன என்பதையும் விளக்குகிறார்.

தாய்லாந்தில் ராமாயணம் கோன் எனப்படும் முகமூடி அணிந்து நடிக்கப்படும் நாடகம். ஆனந்த் கொடுத்திருந்த சில படங்கள் சரியான ரெசொல்யூஷனில் இல்லாததால் சேர்க்கமுடியவில்லை. ஆனாலும் இந்தப் படங்கள் இல்லையென்றால், நன்றாக இருக்காது புத்தகம் என்று தோன்றியது. தாய்லாந்து தூதரகத்தை அணுகி, அவர்கள் வழியாக தாய்லாந்து சுற்றுலா அமைச்சகத்திடமிருந்து சில படங்களைப் பெற்று அவற்றைச் சேர்த்துள்ளோம்.

இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை எடுத்ததிலிருந்து, இரு முறை ஆனந்த் ராகவிடம் போய்விட்டு வந்து மாற்றங்கள் செய்ததுவரை, கடைசியில் பிரதியில் செய்யவேண்டிய சிறு சிறு பிழைதிருத்தங்கள் வரை ஒரு ஜாலியான அனுபவம்.

நாம் அனைவரும் ராமாயணக் கதை கேட்டே வளர்ந்திருக்கிறோம். ஆனால் இத்தனை வித்தியாசங்கள் கொண்ட எண்ணற்ற ராமாயணங்களா என்பது நமக்குப் பெருத்த ஆச்சரியத்தை வரவழைக்கிறது. அடுத்தது, ராமாயணத்தில் தெய்வீகத் தன்மை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் நம் நாட்டில் பெரும் சண்டைகளே வருகின்றன. ஆனந்த் ராகவுக்கு இந்த பயம் உள்ளது.

பல ஆயிரம் ராமாயணங்கள் (அல்லது அதுபோன்ற ஏதோ தலைப்பு) என்ற கண்காட்சி ஒன்றில் பஜ்ரங் தள் குரங்குப் படையினர் நுழைந்து அங்குள்ள காட்சிப் பொருள்களை அடித்து நொறுக்கினார்கள் என்ற செய்தி சில மாதங்களுக்குமுன் கூட வந்தது. எனவே ஆனந்த் ராகவ், இந்தப் புத்தகத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். இந்தப் புத்தகத்தை ஓர் இலக்கியத்தை அணுகுவதுபோல அணுகுங்கள்; தெய்வ நம்பிக்கைகளை மனத்தில் வைத்துக்கொண்டு படித்து டென்ஷன் ஆகாதீர்கள் என்கிறார்.

வி.ஐ.பி-க்கள் வாழ்க!

இன்று பல பெரிய மனிதர்கள் சென்னையில் புடைசூழ்ந்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாடில். பிரதமர் மன்மோகன் சிங். இருவரும் பிரவாசி பாரதீய தினத்தைக் கொண்டாட, இந்திய வம்சாவளியினர், அந்நிய நாடுகளின் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருடன் உரையாட சென்னை வந்துள்ளனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சி - 32 வருடங்களாக தொடர்ந்து நடந்துவருகிறது. இன்று இதன் ஆரம்ப விழா. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருவதாக உள்ளது. வருகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

இன்று காலை சென்னை ஐ.ஐ.டியில் நான் கலந்துகொள்ளவேண்டிய ஒரு கூட்டத்துக்கு 30 நிமிட நேரம் தாமதமாகச் செல்லவேண்டியதாயிற்று. அடையாறு சர்தார் வல்லபபாய் படேல் சாலை அவ்வளவு நெரிசல். கேட்டால், வி.ஐ.பிக்களைக் கை காட்டுகிறார்கள். நல்லவேளையாக, நான் பார்க்கவேண்டியவர்களும் தாமதமாகவே வந்தனர்.

காலையில் என் பெண்ணை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, அலுவலகம் வரும் வழியில் ஒரு ஐந்து நிமிடமோ அதற்கு மேலோ, சி.பி.ராமசாமி சாலையைக் கடக்கும் இடத்தில் நிறுத்திவைத்தனர். முதல்வர் கருணாநிதி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு விரைகிறாராம். அவரது பாதுகாப்பை விரிவாக்கியிருக்கிறார்கள். நான் தினமும் அவரது பாதுகாப்பு வளையங்களைத் தாண்டித்தான் வீட்டுக்குப் போகவேண்டும். இப்போது மேலும் ஏழெட்டு காவல் வண்டிகள் சேர்ந்துள்ளன.

ஜெயலலிதா ஆட்சியைவிட, கருணாநிதியின் ஆட்சியில், அவரது வாகனங்கள் செல்லும்போது, கெடுபிடிகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இன்று கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது.

முதல்வர் வாகனங்கள் சி.பி.ராமசாமி சாலையை வெட்டி, டி.டி.கே சாலைக்குள் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, எங்களுக்கு முன்னேறிச் செல்ல அனுமதி கிடைத்தது.

பக்கத்தில் இருந்த ஆட்டோ டிரைவர், வண்டியைக் கிளப்பிக்கொண்டே சொன்னார்: ‘இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவுல இருக்கானுவ. குண்டுவீச்சுக்கு நடுவுல இருக்கற இலங்கைத் தமிழர்கள மட்டும் காப்பாத்த மாட்டானுவ.’

Wednesday, January 07, 2009

99411-37700

கஜினி (இந்தி) பட விளம்பரங்களில் காணப்பட்ட செல்பேசி எண்ணை மக்கள் பலரும் டயல் செய்ய, அந்த எண்ணை வைத்திருந்த ஆசாமி கடுப்பாகி, அமீர் கான்மீதும் சினிமா தயாரிப்பாளர் மீதும் வழக்கு தொடுத்ததாகச் செய்தியில் படித்தேன்.

மேலே காணப்படும் எண்ணை நீங்கள் அழைக்கலாம். யாரும் வழக்கு போடமாட்டார்கள்.

இந்த எண் நியூ ஹொரைஸன் மீடியாவின் ‘குரல் பதிவு’ எண். இதை அழைத்து நீங்கள் சொல்லும் விஷயங்கள் ஒலிப்பதிவாகி எங்களை வந்தடையும். அதை ஒருவர் பரிசீலித்து, அதில் உள்ள தகவலை யாருக்கு அனுப்பவேண்டுமோ அனுப்பி, மேற்கொண்டு என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்யச் சொல்வார். எதற்கெல்லாம் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, தகவல் பதியலாம்?

1. புத்தக விமரிசனம். கவனியுங்கள். இது இலவச அழைப்பு எண் அல்ல. எனவே உங்கள் பர்ஸ் பழுக்காதவண்ணம் ஓரிரு வாக்கியங்கள் சொல்வதாக சொல்வது நலம். அந்தத் தகவல் எடிட்டர், எழுத்தாளருக்கு அனுப்பப்படும்.

2. புத்தக விற்பனை தொடர்பான தகவல். விழுப்புரத்தில் எந்தக் கடையில் இந்தப் புத்தகம் கிடைக்கும்? இந்தப் புத்தகம் ஸ்டாக் உள்ளதா? நான் புதிதாக ஒரு புத்தகக் கடை திறந்துள்ளேன்; எனக்குப் புத்தகங்கள் தேவை... இப்படி எதுவானாலும் சரி.

3. புத்தகம் எழுத ஆசை. எனக்கு இன்ன துறையில் புத்தகம் எழுத ஆசையாக உள்ளது. அல்லது நான் ஒரு புத்தகம் எழுதிவைத்துள்ளேன். இதுபோன்ற தகவல்கள்.

4. பதிப்பாளரைத் தொடர்பு கொள்ள... இந்தத் துறையில் நீங்கள் ஏன் புத்தகம் எதையும் கொண்டுவரவில்லை. நீங்கள் கொண்டுவந்த இந்தப் புத்தகம் அடாசு, என் காசை வேஸ்ட் செய்துவிட்டீர்கள். சகிக்காமல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளன, உடனே சரி செய்யவும்... இப்படி எந்தத் தகவலாக இருந்தாலும் சொல்லுங்கள். எனக்கு வந்துசேரும்.

5. மொழிமாற்றம் செய்ய. பிற மொழிகளில் உள்ள எந்தப் புத்தகத்தையாவது தமிழுக்குக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்ற பரிந்துரை; அல்லது தமிழில் நாங்கள் வெளியிட்டிருக்கும் எந்தப் புத்தகத்தையாவது பிற இந்திய மொழிகளுக்கு எடுத்துச் செல்ல விருப்பம். இப்படி எதுவாக இருந்தாலும்.

***

கவனியுங்கள். இந்த எண், முழுக்க முழுக்க தானியங்கியாக வேலை செய்கிறது. இந்த எண்ணை ஒருவர் தொடர்புகொள்ளும்போது வேறு ஒருவர் அடித்தால், பிஸி டோன்தான் வரும். நிறையப் பேர் பேச ஆரம்பித்தால், லைன்களை அதிகரிப்போம். இந்தச் சேவை குறித்தான உங்கள் விமரிசனங்களையும் அந்த எண்ணுக்கே அனுப்பிவைக்கலாம்.

***

மற்றொரு சேவையும் சில நாள்களாகக் கிடைக்கிறது. Start NHM என்பதை 575758 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினால், எங்கள் புத்தகங்கள், மொட்டைமாடி மற்றும் பிற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை SMS மூலம் உங்கள் செல்பேசிக்கு அனுப்பிவைப்போம்.

சில படங்கள், சில கச்சேரிகள்

கடந்த ரெண்டு மாதமாக வேலை காய்ச்சி எடுப்பதால், சென்ற வாரம், சென்னை இசைக் கச்சேரி சீசனையும் சினிமா சீசனையும் விடுவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டு டைம்டேபிள் போட்டு சில நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன்.

1. மார்கழி ராகம்
2. அபியும் நானும்
3. கஜினி (இந்தி)
4. மடகாஸ்கர் - 2
5. மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரி
6. சித்ரவீணா ரவிகிரன் கச்சேரி

முதல் நான்கும் சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில். அடுத்த இரண்டும் நாரத கான சபாவில்.

லக்கிலுக் போல படம் போட்டு பாகங்களைக் குறித்து தீர்க்கமான விமரிசனங்களை நான் எழுதப்போவதில்லை. எனவே சுருக்கமான ஒரு அல்லது இரண்டு வரி விமரிசனங்கள் மட்டுமே.

மார்கழி ராகம்: புது கான்சப்ட். நிச்சயம் வரவேற்கவேண்டிய ஒன்று. முழுமையான உருப்படியான விமரிசனத்தை சிமுலேஷன் பதிவில் சென்று பார்க்கவும். பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி என்றால் நாரத கான சபாவில் டிக்கெட் விலையை இரட்டிப்பு செய்துவிடுகிறார்கள். அற்புதமான ஒலி அமைப்பு பொருந்திய சத்யம் தியேட்டர் அரங்கில் சுகமான ஓர் அனுபவம். சிமுலேஷன் சொல்வது போல, தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்துபோகும் ஆட்களை துப்பாக்கியால் சுடத்தோன்றும் எனக்கு. தியேட்டரிலும் தனி ஆவர்த்தனம் நடக்கும்போது யாராவது எழுந்திருக்கப்போகிறார்களா என்று பார்த்தேன். நல்லவேளை. அப்படி ஏதும் நடக்கவில்லை. ஜெயஸ்ரீ தனி ஆவர்த்தனத்துக்கு நேரம் ஒதுக்கி, ஆவர்த்தனமும் முடிந்து, மீண்டும் ஜெயஸ்ரீயே தொடர்வார் என்று எதிர்பார்க்கும்போது டி.எம்.கிருஷ்ணா தொடர்வது ஆச்சரியம். சினிமாத் திரையில் மட்டும்தான் இது சாத்தியம்.

இதற்கு பதில் டிவியில் காண்பித்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்பவர்கள் அபாக்கியவான்கள். கான்சர்ட்டில் உட்கார்ந்த அனுபவமும் கிடைக்கும்; நமக்கு வேண்டிய நேரத்தில் போய்க் காணும் சாத்தியமும் உண்டு என்பதை உணராதவர்கள்.

அபியும் நானும்: படத்தில் அபி இல்லை. அபியின் அப்பாதான் இருக்கிறார். “அபியின் அப்பாவும் பெண்ணும்” என்று மாற்றி வைக்கலாம். பாடல்கள் தேவையில்லை. மோசமாகவும் உள்ளன. ராதா மோகனுக்கு படத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் தெரியவில்லை. மற்றபடி ஓகே. ஆனால் அந்த பிளானிங் கமிஷன் உறுப்பினரை மதர் தெரசாவாகச் சித்திரித்து கழுத்தை அறுக்கிறார். அவருக்கு பிரதமர் ஃபோன் போடுவதெல்லாம் ரொம்ப டூ மச். தமிழ்க் குப்பைகளுக்கு நடுவில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். லக்கிலுக்கின் விமரிசனம்.

கஜினி (இந்தி): ஏன் இந்த விஷப்பரீட்சை என்று நீங்கள் நினைக்கலாம். என்னவோ தோன்றியது. முதல் நாள் படம் பார்க்கப்போய் அடுத்த நாள்தான் வெளியே வந்தோம். முதல் நாள் இரவு 10.00 மணிக்கு ஆரம்பித்த படம், அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தபோது அதிகாலை மணி 2.00. அந்த அளவுக்கு என்ன பென்ஹரா எடுத்துள்ளார்கள் என்றால், இல்லை, வெறும் குப்பைதான்.

சூர்யா, அமீர் கானைவிட நன்றாக நடித்தார். அமீர் கானுக்கு காதல் செய்யத் தெரியவில்லை. சண்டையும் போடத் தெரியவில்லை. தமிழில் பாட்டுகள் மனத்தில் நின்றன. இந்தியில் ட்யூன் எதுவும் உருப்படியில்லை. தரித்திரம். தமிழில் கிளைமேக்ஸ் படு கேவலம். இந்தியில் அதிலிருந்து 5% குறைந்த கேவலம். மற்றபடி படம் பாடாவதி. பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் இஷ்டம். அசின்... தமிழிலும் இந்தியிலும் ஒரே சேவிங் கிரேஸ் இவர்தான்.

மடகாஸ்கர் - 2: எந்த அனிமேஷன் / குழந்தைகள் படம் வந்தாலும் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு சென்று பார்த்துவிடுவேன். அந்த வரிசையில். மற்றபடி படம் சரியாக 2 மணி நேரத்துக்குள் முடிந்தது சந்தோஷமாக இருந்தது. இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் எப்போதுதான் இதனைக் கற்றுக்கொள்வார்களோ. 3, 4 மணி நேரம் உட்காரத் தாளவில்லை. மற்றபடி மனத்தில் எதுவும் நிற்கவில்லை. சுமாரான படம்தான். சிறுவர்கள் சந்தோஷமாகப் பார்த்தனர். என்னதான் இருந்தாலும் பிக்ஸாருக்கு இணையாக எஸ்.கே.ஜி டிரீம்வொர்க்ஸ் வருவதற்கு ஒரு மில்லியன் வருடங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது.

மாண்டலின் ஸ்ரீனிவாஸ், சித்ரவீணா ரவிகிரண்: ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் இருவரது கச்சேரிக்காவது செல்வது வழக்கம். எல்லா முறையும் அப்படி நடப்பதில்லை. இந்த முறை இரண்டு கச்சேரிகளையும் நாரத கான சபாவில் பிடித்துவிட்டேன். கன்யாகுமரி வயலின் கச்சேரியை இந்தமுறை தவறவிட்டேன்.

கம்பி இசைக்கருவிமீது எனக்கு தனியான நாட்டம். அறிவியலில் கம்பி இசையைப் புரிந்துகொள்வது எளிது. மேள, பறை வாத்தியங்கள் (பெர்குஷன்), குழல் வாத்தியங்கள் ஆகியவை எப்படி வேலை செய்கின்றன என்பதை விளக்குவது கடினம். இதைப்பற்றி தனியாக எழுதுகிறேன்.

Tuesday, January 06, 2009

நான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப்

உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்

இந்தப் புத்தகம் பற்றி நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன். முதல் பகுதி இங்கே.

இஸ்லாத்தில் விபசாரம் செய்த பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லுதல் வழக்கம். ஆனால், உமரின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். விபசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை உமர் முன் அழைத்து வருகின்றனர். அப்போது அங்கு அலியும் இருக்கிறார்.
அந்தப் பெண்ணிடம் கலீபா கேட்டார்: ‘இக்குற்றத்தை நீ செய்தாயா?’

‘செய்தேன்.’

அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். திருமணமானவள். கல்லெறிந்து கொல்வதுதான் அதற்கான தண்டனை. திருமணமாகாத பெண்ணாக இருந்தால் பகிரங்கமான கசையடி கொடுத்துத் தவிர்த்துவிடலாம். தகுந்த தண்டனைக்கு உத்தரவு இடப்பட்டது.

தண்டனை மேடைக்கு அவளைக் கொண்டுபோக ஆயத்தமான போது அலி கூறினார்: ‘குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால்...’

கலீபா கேட்டார்: ‘என்ன... சொல்ல வந்ததை நிறுத்தி விட்டீர்கள்?’

‘எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது.’ அலி தெளிவுபடுத்தினார். ‘இச்செயலைச் செய்ய அவளைத் தூண்டியது எதுவென அறிந்து கொள்ளக்கூடிய பொறுப்பு நமக்கு உள்ளது.’

‘சரிதான்.’ கலீபா உடன்பட்டார். அப்பெண்ணிடம் விசாரித்தார். ‘எதற்காக இந்தக் கொடிய செயலைச் செய்தாய்?’

‘நான் அபலை. என் அயல்வாசியின் வீட்டில் நிறைய ஒட்டகங்களும் குடிநீரும் உள்ளன. நானும் என் குழந்தைகளும் தண்ணீர் இல்லாமல் தவித்தோம். உடலில் நீர்த்தன்மை குறைந்து, தொண்டை வறண்டு மயங்கி விழும் நிலை ஏற்பட்டபோது, தண்ணீருக்காக அவனிடம் மன்றாடினோம். எனது உடலைத் தரவேண்டும் என்றான். இல்லாவிட்டால் ஒரு துளி தண்ணீரைக்கூடத் தரமுடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டான். இறுதியில் என் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒருபோதும் விரும்பாத...’

அந்த வார்த்தைகளை முடிக்காமல் அப்பெண் வாய்விட்டு அழுதாள். அதைக் கேட்டக் கலீபாவின் கண்கள் நனைந்தன. குரல் நெகிழ குர்ஆனின் ஒரு பகுதியைப் படித்தார். ‘எவரேனும் ஒருவன் நீதிக்குப் புறம்பானது எனத் தெரியாமல், மனப்பூர்வமாக அல்லாமல், ஒரு செயலைச் செய்தால் அவன் தவறிழைத்தவன் அல்லன். இறைவன் மிகப் பொறுமைசாலியாகவும் இரக்க குணம் படைத்தவனாகவும் உள்ளான்.’

பிறகு, அப்பெண்ணிடம் சொன்னார்: ‘சகோதரி! உண்மையான குற்றவாளி நீ அல்ல. நீ நிரபராதி. உன்னைக் குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்.’

இத்துடன் முடிந்துவிடவில்லை. தண்ணீர் தராமல் அவளைத் தீய செயலுக்குத் தூண்டிய ஆளை வரவழைத்து விசாரணை நடத்தி நீதியின் மொழியில் தண்டித்தார்.
ஆனால் எந்த அளவுக்கு நடைமுறையில் இதுபோன்ற தீர்ப்பு கூறல் இஸ்லாமிய நாடுகளில் நடக்கின்றன என்று தெரியவில்லை.

கலீஃபா உமர், தொழுகை நடந்துகொண்டிருக்கும்போது யூதன் ஒருவனால் குத்தப்பட்டு, உயிர் இழக்கும் தருவாயில் உள்ளார். அவர் இறந்தவுடன் முகமது, முதல் கலீஃபா அபுபக்கர் ஸித்திக் ஆகியோருக்கு அருகில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பது உமரின் விருப்பம். ஆனால் அந்த நிலம் முகமதுவின் துணைவியருள் ஒருவரான ஆயிஷாவுக்குச் சொந்தமானது. ஆயிஷா இதற்கு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தார். ஆனாலும் இறக்கும் நிலையில் தன் மகனை அனுப்பி, மீண்டும் ஆயிஷாவிடம் அனுமதி பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்.

ஏனெனில் முன்னர் அவர் அனுமதி பெற்றபோது, அவர் ஆட்சியாளராக இருந்தார். அதனால் அதிகாரத்துக்குக் கட்டுப்படும் வகையில் ஆயிஷாவிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கலாம். ஆனால் இப்போதோ அவர் சாதாரண மனிதன்.

ஆயிஷாவிடமிருந்து அனுமதி கிடைக்கிறது: ‘அனுமதி என்றோ தரப்பட்டுவிட்டதே! ஒரு காம்பில் மலர்ந்த மூன்று மலர்கள். அவை மலர்வதும் உதிர்வதும் ஒருசேர இருக்கவேண்டும். ஒருபோதும் வாடாத, ஒரு போதும் நறுமணம் குன்றாத பூக்கள்! அந்த நறுமணம் என்றென்றும் இவ்வுலகில் மட்டுமல்ல, பரலோகத்திலும் நன்மையாக, சிநேகமாக, தியாகமாக, விடுதலையின் வழியாக வியாபிக்கவேண்டும்.’

***

இந்தப் புத்தகம் குறித்து நான் ஒன்றைச் சொல்லமுடியும். மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு நிர்மால்யா வேலை செய்திருக்கிறார். அவர் விட்டிருந்த இடத்தை நான் சரி செய்துள்ளேன். இதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்.

பொதுவாக மொழிமாற்றல் புத்தகங்களில் மிகப்பெரிய சவாலே இதுதான். நாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்திருந்த ‘உயிர்ப் புத்தகம்’ என்ற புத்தகத்தை மீண்டும் எடிட் செய்து, இப்போது கொண்டுவந்துள்ளேன். அதில் ஆங்காங்கே ‘மொழிமாற்றம்’ என்று தெரியும் இடங்களையெல்லாம் சரி செய்துள்ளேன்.

இதுவரையில் நாங்கள் வெகு சில மொழிபெயர்ப்பு நூல்களையே செய்துள்ளோம். அவை எதிலுமே எனக்கு முழு திருப்தி என்று சொல்லமுடியாது. ஆனால் வரும் ஆண்டு, 2009-ல் நிறைய (கடுமையான வேலை வாங்கக்கூடிய) நூல்கள் இப்படி மொழிமாற்றத்தில் வரும். உதாரணம் - எஸ்.முத்தையாவின் Madras Rediscovered, ராமச்சந்திர குஹாவின் India After Gandhi, பல்லவி அய்யரின் Smoke and Mirrors, பராக் ஒபாமாவின் Dreams From My Father, பிறவும். இப்படி... அவற்றைப் படிக்கும்போது தமிழிலேயே எழுதப்பட்ட உணர்ச்சியைத் தோற்றுவித்தால்தான், அந்த மொழிபெயர்ப்பு சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளலாம். அதை அடைகிறோமா என்று பார்ப்போம்.

நான் எடிட் செய்த புத்தகம் - 3: ஒபாமா

ஒபாமா, பராக்!

ஒபாமா எழுதி வெளியான Dreams From My Father நிஜமாகவே ஒரு சுவாரசியமான புத்தகம். அதன் தமிழாக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியில் உள்ளோம்.

ஒபாமா பற்றி நான் முதலில் கவனிக்க ஆரம்பித்தது, அவர் கென்யாவுக்கு இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்றபோதுதான். அப்போது அவர் டெமாக்ரடிக் பிரைமரியில் நிற்பது பற்றிக்கூட யோசித்திருக்கவில்லை.

நான் அப்போது மைக்ரோகிரெடிட் சம்பந்தமாக எங்கு எந்தச் செய்தி கிடைத்தாலும் அதைப் படித்துவந்தேன். சிகாகோ செய்தித்தாள்கள் சில, “செனட்டர் ஒபாமா, கென்யாவின் குறுங்கடன் குழு ஒன்றைச் சந்தித்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டுவந்தனர். யார் இந்த ஒபாமா? ஏன் ஒரு அமெரிக்க செனட்டர் ஆப்பிரிக்க நாடு ஒன்றின் குறுங்கடன் வாடிக்கையாளர்களைச் சந்திக்கவேண்டும். யார் இவர் என்று தோண்டித் துருவிப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒபாமாவின் பின்னணி சுவாரசியத்தைத் தந்தது. ஆனாலும், இவர் டெமாக்ரடிக் பிரைமரியில் நிற்பேன் என்று சொன்னதும் நம்பமுடியவில்லை. இதுபோன்ற ஓர் ஆசாமியால், வெள்ளை நிறமல்லாதவரால், அமெரிக்கத் தேர்தலில் ஜெயிக்கமுடியுமா? ஏன் வெற்றுச் சவடால் என்று நினைத்தேன்.

ஆனால் நாளாக நாளாக, அவர் தனது தேர்தல் கேம்பெயினை வழிநடத்திய விதம் பிரமிக்கவைத்தது.

ஒபாமா பற்றி ஒரு புத்தகம் கொண்டுவந்தாக வேண்டும் என்ற எண்ணம் அப்போதே ஏற்பட்டது. எப்போது கொண்டுவருவது என்பதுதான் கேள்வி. தேர்தலுக்கு முன்னா, அல்லது தேர்தல் முடிந்து ஜெயித்தபிறகா? ஜெயிப்பாரா? பிரைமரியில் ஹிலரியைத் தோற்கடித்து நாமினேஷனைப் பெற்றதுமே, இவர் எழுதப்படவேண்டியவர் என்ற தீர்மானம் வலுப்பெற்றது. ஆனால் தேர்தலும் முடிந்ததும் எழுதினால் சிறப்பாக இருக்கும்; அதற்கு ஏற்றவாறு அறிமுக அத்தியாயத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

இதற்குள்ளாக சந்தைக்கு இரண்டு புத்தகங்கள் வந்துவிட்டன. ஒன்று ஆழி பதிப்பகம் கொண்டுவந்தது. மற்றொன்று வைகோ எழுதி, விகடன் வெளியீடாக வந்தது. “ஏன் நீங்கள் கொண்டுவரவில்லை” என்று பலர் கேட்டனர். விரைவில் கொண்டுவந்துவிடுவோம் என்றுதான் சொல்லமுடிந்தது.

அவசரமாக எழுதி முடிக்கவேண்டும்; அதே சமயம் நன்றாகவும் இருக்கவேண்டும் என்பது கஷ்டமான வேலைதான். புத்தகம் எழுதுவதற்கு முன்னதாகவே முத்துக்குமாரிடம் ஒவ்வோர் அத்தியாயத்தைப் பற்றியும் விளக்கமாகப் பேசினேன். ராகவன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஒபாமா வெற்றி நிச்சயமானதற்கு அடுத்த பத்து நாள்களுக்குள் முத்துக்குமார் எழுதிமுடித்துவிட்டார்.

அடுத்து எடிட் செய்ய காலம் பிடித்தது. நிறைய மாற்றங்கள் தேவையாக இருந்தன. பேக்கிரவுண்ட் தகவல்கள் நிறையச் சேர்க்கவேண்டியிருந்தது. அமெரிக்கத் தேர்தல் பற்றி அறிமுகம் நிறைய வேண்டியிருந்தது. காபிரைட் உள்ள படங்களை வாங்கி அவற்றைப் புத்தகத்துக்கு நடுவில் வண்ணப்படங்களாகக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு நேரம் பிடித்தது. புத்தகத்தை மதுரை புத்தகக் கண்காட்சியில் கொண்டுவருவது என்ற டெட்லைன் வைத்துக்கொண்டு வேலை செய்தோம். கொண்டுவர முடிந்தது.

ஒபாமாவின் வெற்றி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். உலக மக்களும்தான்.

ஒபாமா பற்றி மேலும் சிறந்த ஒரு புத்தகம் தேவை. கிழக்கின் இந்தப் புத்தகம் ஒருவிதத்தில் மேலோட்டமானதே. இந்த ஆண்டு, முத்துக்குமாரே இதன் இரண்டாம் எடிஷனை எழுதுவார். ஒருவேளை அடுத்த புத்தகக் கண்காட்சியின்போது அதனைக் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கலாம். ஓராண்டு ஆட்சியில் ஒபாமா என்ன செய்தார்; அமெரிக்கர்கள் பொருளாதாரச் சுணக்கத்தை எப்படி எதிர்கொண்டார்கள் ஆகியவற்றையும் அதில் கொண்டுவரலாம்.

நான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரின் பணி அனுபவம்

நேரு முதல் நேற்று வரை

B.S.ராகவன் (ப.ஸ்ரீ.ராகவன் என்றே தமிழில் எழுதுகிறார்), ஏற்கெனவே கலைஞன் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டிருந்த நூல்தான் இது. மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகம் வாயிலாக வருகிறது. ஆனால் முழுமையான மாற்றம் கண்டுள்ள நூல். கொஞ்சம் புது விஷயங்கள், நிறைய மாற்றி எழுதப்பட்ட நூல். படிக்க எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த ராகவன், தனது பயிற்சிக்காலத்தை விவரித்தபின், மேற்கு வங்கத்தில் சப்-கலெக்டராகத் தான் சேர்ந்ததுமுதல் பல்வேறு பணிகளை மேற்கொண்டதை அழகாக விளக்குகிறார். மேற்கு வங்கத்தில் ‘பவர் கமிஷனராக’ பணியாற்றும்போது அங்கு நிலவிய மின் பற்றாக்குறையை எப்படிச் சமாளித்தார் என்பது இந்தக் கட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் முதல் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. இதைப்பற்றி முன்னர் குறிப்பிட்டு நான் எழுதியிருந்த பதிவு இதோ. அவரது புத்தகத்திலிருந்து ஒரு சிறு துண்டு இங்கே:
நான் [மேற்கு வங்க மின்சார] வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, மின் உற்பத்தித் திறன் சீரழிந்த நிலையில் இருந்தது. சில மின் நிலையங்கள் மூடிக்கிடந்தன. சிலவற்றின் உற்பத்தி 30, 40 சதவிகிதத்துக்கு மேல் எழவில்லை. ஆனால், பொக்காரோவிலிருந்து தினமும் வந்த அறிக்கையில், அங்கிருந்த மூன்று மின் நிலையங்களும் 95 சதவிகிதம் உற்பத்தி செய்துகொண்டிருந்தன என்று தெரிந்தது. அங்கு மட்டும் இந்த ஆச்சரியம் நிகழ்வதற்குக் காரணம் என்ன?

இந்த ரகசியத்தை நேரில் போய்த் தெரிந்துகொள்ளத் தீர்மானித்தேன். நான் வரப்போகும் நாளைக் குறித்து அங்கு பொறுப்பிலிருந்த பொது மேலாளருக்கு எழுதினேன். பொக்காரோ ரயில் நிலையத்தில் இறங்கிச் சுற்றும் முற்றும் பார்க்கிறேன். வரவேற்க ஒரு ஈ, காக்காய்கூட இல்லை. வாரியத்தின் தலைமையில் இருப்பவருக்கு அவர் முதன்முதலாக வருகை தரும் இடத்தில் இப்படி ஓர் அவமதிப்பா என்று குமுறினேன்.

திடீரென ஒர் ஆள் என்னை நோக்கி வந்து, ‘ராகவன் ஐயாவா?’ என்றார். முழங்கால் வரை நிஜார். சாக்கு போன்ற துணியினால் ஆன அரைக்கை சட்டை. இரண்டுமே கிழிசல். கறுப்பு எண்ணெய்க் கறை. காதறுந்த செருப்பு. பரட்டைத் தலை. சவரம் செய்யாத முகம். ‘நான்தான் சஹாய், பொது மேலாளர். பொறியாளர்கள் முக்கியமான பணிகளில் இருப்பதால், உங்களை வரவேற்க அழைத்துவரவில்லை. வாருங்கள் போகலாம்!’ என்றார். சாதாரணமாக ஒரு மூத்த அதிகாரி வருகை தந்தால், விருந்தினர் விடுதிக்கு முதலில் அழைத்துப் போய் உபசாரம் செய்வது வழக்கம். சஹாய் என்னை நேராக மின் நிலைய வளாகத்துக்கு இழுத்துக்கொண்டுபோய் மூன்று மணி நேரம் ஒவ்வொரு இடமாகக் காட்டினார். மலை போல் சேமித்து வைத்திருந்த நிலக்கரிக் குவியலின் மேலும் ஏறச் செய்தார்.

பொக்காரோவில் நான் தங்கியிருந்த இரண்டு நாள்களிலும் எனக்கு கிருஷ்ண குமார் சஹாயின் மேலாண்மை முறைகளில் நல்ல பாடம் கிடைத்தது. காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே கிளம்புவார். வாசலில் இருக்கும் ஒரு மரத்தின் கிளையை உடைத்துக் கையில் எடுத்துக்கொள்வார். அடுத்த 3, 4 மணி நேரத்துக்கு மின் நிலையத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்வார். எண்ணெயோ, தண்ணீரோ ஒழுகிக் கொண்டிருந்தால் அதைச் சரிசெய்வார். தூசியைத் துடைப்பார். மேலாளர் செய்வதைப் பார்த்து வெட்கமடைந்து பணியாளர்கள் ஓடிவருவார்கள். ஏதாவது ஒரு பொறி இயங்கவில்லை என்றாலோ அல்லது தூசி படிந்திருந்தாலோ அதன்மீது பலமாக மரத்தின் கிளையால் அடித்துப் பணியாளர்களைக் கவனிக்கச் சொல்லுவார். மதியம் 12 மணிக்குத் திரும்பி வந்து, புத்தகங்கள் படிப்பார். சங்கீதம் கேட்பார். இல்லையென்றால் பீர் குடித்து நேரத்தைப் போக்கிக்கொண்டிருப்பார்.

அதுதான் பொக்காரோ மின்நிலையத்தின் உற்பத்தியின் ரகசியம்.
ராகவன், மாநிலத்திலிருந்து மத்திய உள்துறை செயலகத்துக்கு வேலை செய்ய வந்தார். பல காலம் உள்துறை செயலகத்தில் பணிபுரிந்தார். நேரு, சாஸ்திரி ஆகியோர் காலத்தில் உள்துறைச் செயலகத்தில் வேலை செய்த அனுபவங்களை நினைவுகூர்கிறார். பின்னர் மீண்டும் மேற்கு வங்கம். இந்திரா காந்தி காலத்தில் திரிபுராவில் தலைமைச் செயலர். பின்னர் மத்திய உணவு அமைச்சகத்தில் வேலை. சி.சுப்ரமணியன் வேளாண் மந்திரியாக இருந்தபோது நடந்த பசுமைப் புரட்சி பற்றி, இத்தாலியில் இருக்கும் ‘உலக உணவு பாதுகாப்புக் குழுவில்’ வேலை செய்தது பற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஃபெல்லோவாகச் சென்றது பற்றி, என்று தனது பணி அனுபவங்களை விரிவாகவே, அதே சமயம் எளிமையாகப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு எழுதுகிறார்.

புத்தகத்தின் கடைசிப் பகுதியில் தான் அரசுப் பணியில் இருந்தபோது கற்ற மேலாண்மை அனுபவங்கள், நெகோஷியேஷன் செய்வது எப்படி என்பது பற்றிய பாடங்கள் ஆகியவை, புத்தகத்துக்கு ஒரு மேலாண்மைப் பாடநூலின் தகுதியைக் கொண்டுவருகின்றன.

ராகவன் ஒரு ஆப்டிமிஸ்ட். “எங்க காலத்துல எல்லாம்...” என்று போரடிப்பதில்லை. “இப்ப நாடே கெட்டுப்போச்சு...” என்று புலம்புவதில்லை. (அரசியல்வாதிகளைப் பற்றி கொஞ்சமாகக் குறைசொல்லும்போது மட்டும், இந்தப் புலம்பல் எட்டிப்பார்க்கிறது.)

இன்றும், 80 வயதுக்கு மேலானபோதும், படு சுறுசுறுப்பாக தமிழகத்தின் சில குடிமைச் செயல்பாடுகளுல் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும், ஆட்சிப் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் புத்தகத்தை பரிந்துரைப்பேன். இந்திய நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விழைபவர்களுக்கும் இதைப் பரிந்துரை செய்வேன்.

ராகவனைப் போன்றே தமிழகத்தைச் சேர்ந்த பிற ஐ.ஏ.எஸ் அலுவலர்களும் ஓய்வுபெற்றபின் தங்களது பணி அனுபவங்களைச் சுவைபட எழுதினார்கள் என்றால் நன்றாக இருக்கும்.

நான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா

கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு

கோக-கோலாவின் வரலாறு சென்ற புத்தகக் கண்காட்சியின்போதே வரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கொண்டுவர நேரம் இல்லை என்பதால் கைவிடப்பட்டது.

பின்னர் அதைக் கையில் எடுக்க நேரம் வரவில்லை. மீண்டும் தூசு தட்டி எடுத்து, படித்து, எடிட் செய்து கொண்டுவந்தேன். ஜான் பெப்ம்பர்டன் என்ற அமெரிக்கர் 1886 சமயத்தில் ஏதோ வயிற்று வலி மருந்தைத் தயாரித்து விற்கப்போக, அமெரிக்கர்கள் அதை மடக் மடக் என்று குடம் குடமாக, கேன் கேனாக, பாட்டில் பாட்டிலாகக் குடித்துவைக்க, கோக-கோலா என்ற பேரரசு உருவானது.

ஆனால் தோற்றுவித்த ஜான் பெம்பர்டன் போதை மருந்துப் பழக்கம் கொண்டவர். அவரது மகன் ஒரு உதவாக்கரை. அவர்கள் கையிலிருந்து அசா கேண்ட்லர் என்ற தொழிலதிபர் எப்படி நிறுவனத்தை வாங்கி, 1895-ல் ஒன்றாகச் சேர்க்கிறார் என்பது கோக-கோலாவின் அடுத்த கட்டம்.

அதற்கடுத்து, 1919-ல் ஜார்ஜியாவின் சில பணக்காரர்கள் அசா கேண்ட்லரிடமிருந்து கோக-கோலாவை வாங்குகிறார்கள். 1923-ல் ராபர்ட் வுட்ரஃப் நிறுவனத்தின் தலைவராகிறார். கோக-கோலா அமெரிக்கப் படைவீரர்களுடன் இரண்டாம் உலகப்போரை வலம் வருகிறது. கோக், பாட்டிலுக்குள் புகுகிறது. அடுத்து 1980-களில் ராபர்டோ கொய்ஸ்வெட்டா கோக் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வருகிறார்.

கோக-கோலா - பெப்ஸி சண்டைகள், இருவரும் எடுக்கும் வியூகங்கள், விளம்பரப் போர்கள், ‘புது கோக்’, மக்கள் அதை எதிர்த்து சிலிர்த்து எழுவது, கோக-கோலா கையில் இருந்த காசை வீணாக்கி கொலம்பியா பிக்சர்ஸை வாங்குவது, பின் அதை விற்றுவிட்டு மீளுவது என்று கோக-கோலா நிறுவனத்தின் முழு வாழ்க்கையையும் விவரித்துச் செல்கிறது என்.சொக்கன் எழுதியுள்ள இந்தப் புத்தகம்.

லீனியர் கதைகூறல்தான். பெரும் தரிசனங்கள் ஏதும் கிடைக்காது. ஆனால் உலகத் தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தொடராக கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ள இந்தப் புத்தகத்தில் தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.

Monday, January 05, 2009

நான் எடிட் செய்த புத்தகங்கள் - 0

கிழக்கு பதிப்பகத்துக்காக 2008-ல் நான் எடிட் செய்த புத்தகங்கள் இவை:

1. கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு, என்.சொக்கன்
2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை, என்.சொக்கன்
3. ஒபாமா, பராக்!, ஆர்.முத்துக்குமார்
4. ரத்தன் டாடா, என்.சொக்கன்
5. ஆகஸ்ட் தியாகி அப்புசாமி, பாக்கியம் ராமசாமி
6. சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி, பாக்கியம் ராமசாமி
7. உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல், நூறநாடு ஹனீஃப், தமிழில் நிர்மால்யா
8. ராமகியன்: தாய்லாந்து ராமாயணம், ஆனந்த் ராகவ்
9. நேரு முதல் நேற்று வரை, ப.ஸ்ரீ.ராகவன்
10. மக்களாகிய நாம்!, அ.கி.வேங்கட சுப்ரமணியன்
11. என் ஜன்னலுக்கு வெளியே..., மாலன்
12. ஓ பக்கங்கள் 2007, ஞாநி
13. அள்ள அள்ளப் பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள், சோம.வள்ளியப்பன்

(இவற்றில் சில இப்போதுதான் அச்சாகி வருகின்றன. சில இன்னமும் இணையத்தில் ஏற்றப்படவில்லை. அதனால் கிளிக் செய்து வாங்க இப்போது முடியாது.)

பொதுவாக நான் முழுநேர எடிட்டர் கிடையாது. எடிடிங் துறையில் நான் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம். பெரும்பாலும், நான் வேலை செய்து முடித்த புத்தகங்கள்மீது வேறு யாராவது சில நகாசு வேலைகளைச் செய்வார்கள். ஆனால் என் கையை விட்டுப் போகும்போது கட்டுமானம் சரியாக இருக்கும்; தகவல்கள் விடுபட்டுப் போய்விடாமல் பார்த்துக்கொள்வேன்; எழுத்தாளருடன் பேசி, சரிசெய்யவேண்டியவற்றைச் சரி செய்திருப்பேன்; ஸ்பெல்லிங் தவறுகளைக் களைந்திருப்பேன். லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்திருப்பேன். ஆங்கிலப் பெயர்களுக்கான சரியான தமிழ் உச்சரிப்புகளைச் சேர்த்திருப்பேன்.

அடுத்துவரும் சில பதிவுகளில் இந்தப் புத்தகங்கள் பற்றிய என் பார்வையை வைக்கிறேன். நீங்கள் பணம் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், இவை அனைத்தையுமே வாங்கலாம் என்று பரிந்துரைப்பேன்.

Sunday, January 04, 2009

ராமன்

கார்னல் பல்கலைக்கழகத்தில், சிப்ளி ஸ்கூல் ஆஃப் மெக்கானிகல் அண்ட் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் அறைகளும் வகுப்புகளும், அப்சன் ஹால் என்ற கட்டடத்தில் அமைந்திருந்தன. தரைத்தளத்திலும் அதன்மேல் இரண்டு மாடிகளிலும். நான்காம் மாடியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் துறை இருந்தது.

நான் ஆராய்ச்சி செய்யச் சேர்ந்தது மெக்கானிகல் அண்ட் ஏரோஸ்பேஸ் துறையில். லிஃப்டைப் பயன்படுத்தும் இடத்தில்தான் ராமனைப் பார்ப்பேன். ராமன் கம்ப்யூட்டர் சயன்ஸ் துறையில் பிஎச்.டி செய்துவந்தார். அவரது அறை நான்காம் மாடியில். எனது அறை தரைத்தளத்தில்.

கார்னல் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்களும் செல்லப்பிராணிகளைக் கூடவே கூட்டிக்கொண்டு வருவார்கள். ஆனால் கட்டடங்களுக்குள் அழைத்துக்கொண்டு வரமுடியாது. வாசலில் கட்டிப்போட இடம் இருக்கும். அங்கே கட்டிவைத்துவிட்டு மீண்டும் வெளியே போகும்போது அழைத்துச் செல்லலாம்.

ஆனால் ராமன், தனது நாயை கூடவே அழைத்துச் செல்லலாம் என்று அனுமதி கொடுத்திருந்தார்கள். நன்கு கொழுகொழுவென்று வளர்ந்த நாய். அது எந்த ஜாதி நாய் என்றெல்லாம் பார்த்தவுடனே அடையாளம் சொல்வது அன்றும் சரி, இன்றும் சரி, எனக்குக் கைவராத ஒன்று. அந்த நாய் கடிக்காது என்றாலும் எனக்கென்னவோ அதனருகில் நெருங்கவே பயமாகத்தான் இருக்கும்.

*

கார்னல் இந்தியன் அசோசியேஷன் என்ற, சி.ஐ.ஏ என்று செல்லமாக அழைக்கப்பட்ட, முதுநிலை படிப்பு படிக்கும் இந்திய மாணவர்களுக்கான சங்கத்தில் நான் இரண்டாம் ஆண்டு முதல் ஏதோ பணியில் இருந்து வந்திருக்கிறேன். அப்போது பொருளாளராக இருந்தேன். செலவைக் குறைத்து வருமானத்தைப் பெருக்கவேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்காகவும் சுமார் 200-250 கடிதங்களை உறுப்பினர்களுக்கு அனுப்பவேண்டும். அதற்கு செலவானது. அச்சிடச் செலவு, அஞ்சலில் அனுப்பச் செலவு.

செலவைக் கட்டுப்படுத்த, அஞ்சலில் அனுப்புவதற்கு பதில், மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்த்து, தகவல்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் அனுப்பிவிடலாமே என்ற யோசனையை முன்வைத்தேன். கவனியுங்கள். இது 1992-ல். அனைவரும் ஏற்றுக்கொள்ள, மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்க்கும் வேலை ஆரம்பமானது.

சுமார் 150 மின்னஞ்சல் முகவரிகள் கிடைத்ததும் சந்தோஷமாக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். அந்தச் செய்தியில் தேவையற்ற அலங்காரங்கள் (ஹைஃபன், டில்டா) எல்லாம் இருந்தன. கவனியுங்கள்... அப்போது எச்.டி.எம்.எல் கிடையாது, கிராஃபிக்ஸ் கிடையாது. மின்னஞ்சல் fixed width font-ல் ஆங்கிலத்தில் மட்டும்தான் வரும். அதனால் அழைப்பிதழ் “look and feel” வரவேண்டும் என்பதற்காக சில அபத்தங்களைச் செய்திருந்தேன்.

முதல் பதில் ராமனிடமிருந்துதான் வந்தது. சற்றே காட்டமாக. இந்தத் தேவையற்ற அபத்தங்கள் எதற்கு. வெறும் செய்தி மட்டும் இருந்தால் போதுமே. என் மானிட்டர் கன்னாபின்னாவென்று கத்துகிறது.

இதென்னடா இது! சந்தோஷமாக ஒரு விஷயத்தை, ஒரு சாதனையைப் பகிர்ந்துகொண்டால் இப்படி இந்த ஆள் காட்டுக் கத்தல் கத்துகிறாரே. அதென்ன இவரது மானிட்டர் கத்துகிறதாமே? உடனே “அய்யா, மன்னிக்கவும்” என்று ஒரு செய்தியை அனுப்பினேன். அடுத்த விநாடி, அவரிடமிருந்து பதில். “பரவாயில்லை. இனி இப்படி அனுப்பாதே.”

அடுத்த ஐந்து நிமிடங்களில் பத்து முறை மாறி மாறி மின்னஞ்சல் பரிமாறிக்கொண்டோம்.

பிறகுதான் உரைத்தது. ராமனுக்குக் கண் பார்வை இல்லை. அவர் கணினித் திரையில் எதையும் பார்ப்பதில்லை. அவருக்கு அதற்கு பதில் ஒரு பேசுகருவி உண்டு. அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அதில் “Raman, how are you” என்று இருந்தால், அவரது கருவி, படுவேகமாக ஆர்-ஏ-எம்-ஏ-என்-கமா-ஸ்பேஸ்-எச்-ஓ-டபிள்யூ-ஸ்பேஸ்-ஏ-ஆர்-ஈ-ஸ்பேஸ்-ஒய்-ஓ-யூ என்று சொல்லும். அத்துடன் பழகிய ராமனால் அதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த மின்னஞ்சலில் நான் -------------------------- போன்றவற்றை அனுப்பினால், அவரது மானிட்டர் டேஷ்-டேஷ்-டேஷ்-டேஷ்-டேஷ்-டேஷ் என்று கத்த, அவருக்குக் கோபம் வருவது நியாயம்தான்!

*

ஒருமுறை சகுந்தலா (இவரைக் கணிதமேதை என்று சொன்னால் அடுக்குமா என்று தெரியவில்லை) கார்னல் வந்திருந்தார். அவரை எப்படியாவது மடக்கிவிடுவது என்று ராமன் தனது கம்ப்யூட்டரை முடுக்கிவிட்டார். பிரைம் ஃபேக்டரைசேஷன் என்று ஒரு விஷயம். மிகப்பெரும் இரு பகா எண்களை - ஒவ்வொன்றும் 10-12 இலக்கங்கள் கொண்டதாக இருக்கலாம் - எடுத்துக்கொண்டு அவற்றைப் பெருக்குங்கள். இப்படிக் கிடைக்கும் விடையை ஒரு கணினியிடம் கொடுத்து எந்த இரு பகா எண்களைப் பெருக்கி இந்த விடை வந்துள்ளது என்று கேளுங்கள். கணினி, இதற்கான விடையைக் கண்டுபிடிக்க பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். (இதை வைத்துத்தான் இணையத்தில் செக்யூரிட்டி விஷயங்கள் நடைபெறுகின்றன.)

இப்படி பல எண்களை உருவாக்கி, அவற்றிலிருந்து சிலவற்றை சகுந்தலாவிடம் கொடுத்து அவரால் தனது மூளையைப் பயன்படுத்தி பிரைம் ஃபேக்டரைசேஷன் செய்ய முடிகிறதா என்று பார்க்க விரும்பினார் அவர். சுமார் 200-300 பேர் நிரம்பியிருந்த அறை. சகுந்தலா கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி பெரும்பாலும் அபத்தமாகவே இருந்தது. ராமன் ஓர் எண்ணை வீசி, பிரைம் ஃபேக்டரைசேஷன் செய்யமுடியுமா என்றார். அந்த எண்ணை மனத்தாலேயே குறித்துக்கொண்ட சகுந்தலா, விடைக்குப் பின்னர் வருகிறேன் என்று சொல்லிவிட்டு பிற கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.

சில பல கேள்விகளுக்குப் பிறகு, அரை மணி நேரம் ஆகியிருக்கலாம், ராமனின் கேள்விக்கு வந்தார். சட்டென சரியான விடையைச் சொன்னார். அது ஒன்றுதான் அன்றைய நிகழ்ச்சியின் ஹை பாயிண்ட்.

எப்படி சகுந்தலாவால் அந்தக் கடினமான பிரைம் ஃபேக்டரைசேஷனைச் செய்யமுடிந்தது என்பது எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம்தான்.

*

இன்று காலை தி ஹிந்துவைப் பிரித்ததும் கடைசிப் பக்கத்தில் ராமனும் ராமனுடைய நாயும் தென்பட்டனர். நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையின் மறுபதிப்பு அது. இப்போது கூகிளில் வேலை செய்கிறாராம். ஜிஃபோனை கண் பார்வையற்றோர் உபயோகிக்க வசதியாக எப்படி மாற்றுவது என்பதில் அவரது ஆராய்ச்சிகள் இப்போது உள்ளனவாம்.

*

இன்று ஏன் இந்தச் செய்தி என்று யோசித்தேன். இன்றுதான் லூயி பிரெய்ல் (4 ஜனவரி 1809) பிறந்த தினம். அவர் பிறந்தநாளின் 200-வது வருடக் கொண்டாட்டம்.

கண் பார்வையற்றோர் படிப்பதற்காக பிரெய்ல் (Braille) என்ற முறையைக் கையாள்கிறார்கள் அல்லவா? அழுத்தமான ஒரு தாளில் (கிட்டத்தட்ட 200 gsm) குண்டூசியால் குத்துவதால் அல்லது அடியிலிருந்து அழுத்துவதால் புடைத்து எழும் புள்ளிகள். இந்தப் புள்ளிகளை மாறி மாறி அமைப்பதன்மூலம் ரோமன் எழுத்துகள் அனைத்துக்கும் குறியீடுகளைக் கொண்டுவந்தார் லூயி பிரெய்ல்.

இந்தப் புள்ளிகளைத் தொட்டுத் தடவிப் பார்த்து, அவை ஒவ்வொன்றும் என்ன எழுத்து என்பதை அறிந்துகொள்வதன்மூலம் ஒரு கண்பார்வையற்றவரால் படிக்கமுடியும்.

சமீபத்தில்தான் தமிழுக்கும் பிரெய்ல் குறியீடுகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்டேன். மாடுலர் இன்ஃபோடெக் (ஸ்ரீலிபி எழுத்துரு) நிறுவனம், அவர்களது எழுத்துருவில் எழுதப்பட்டிருப்பதை பிரெய்ல் அச்சிடக்கூடிய தயார் நிலைக்கு மாற்றும் ஒரு மென்பொருளை வெளியிட்டுள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம். சென்னையில் பிரெய்ல் அச்சடிக்கும் சில பிரிண்டர்களுடனும் பேசிவருகிறோம்.

ஆனால் பிரெய்ல் புத்தகங்கள் உருவாக்குவது செலவு அதிகம் எடுக்கும் விஷயம். உதாரணத்துக்கு 80 பக்கம் கிரவுன் 1/8 புத்தகம் ஒன்று, பிரெய்லாக மாறும்போது, 240-250 பக்கம் கொண்டதாக, A4 அளவுக்கு, மிகவும் தடிமனாக இருக்கும். பொதுவாக எங்களுடைய 80 பக்கப் புத்தகங்களுக்கு 60 gsm தாளைப் பயன்படுத்துகிறோம். (அதாவது ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள தாளை எடை போட்டால், அது 60 கிராம் இருக்கும்.) ஆனால், பிரெய்ல் அச்சிட, 200 gsm தாள் வேண்டும் என்று ஏற்கெனவே சொன்னேன். எனவே மூன்று மடங்குக்கு மேல் பக்கங்கள், ஒவ்வொரு தாளும் மூன்று மடங்குக்கு மேல் கனம் அதிகம். பரப்பளவு சுமார் இரண்டு மடங்கு அதிகம்... என்றால் மொத்தம் 20 மடங்கு எடை அதிகமாகிவிடும்.

அச்சிடும் செலவும் அதிகம்.

எனவே சாதாரண 80 பக்க புத்தகம் ரூ. 25-க்கு விற்பனை ஆகிறது என்றால், இந்த பிரெய்ல் புத்தகத்தைத் தயாரிக்க மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 300 அல்லது அதற்குமேல் ஆகிவிடும். இதுவே 200 பக்க, டெமி 1/8 புத்தகம் என்றால், அது கிட்டத்தட்ட 800 பக்க A4 அளவுக்கு வந்துவிடும்! தயாரிப்பு விலை மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 1,000 ஆகிவிடும்.

அதன் பிறகு, கண்பார்வையற்றோர் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கக்கூடிய அளவு சந்தை தமிழகத்தில் உள்ளதா என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆனால் சந்தை பற்றிய கேள்விகளைத் தவிர்த்து, குறைந்தபட்சம் பிரெய்லில் சில புத்தகங்களையாவது கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

பார்ப்போம்.

Saturday, January 03, 2009

மாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

திங்கள் - 5.1.2009 - அன்று மாலை 6.00 மணிக்கு, மாலனின் “என் ஜன்னலுக்கு வெளியே...” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட உள்ளது. கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோட், மொட்டை மாடியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிங்கப்பூர் தமிழ் முரசு, புதிய பார்வை, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், திசைகள், மாலனின் வலைப்பதிவு, கில்லி விருந்தினர் பக்கம் ஆகியவற்றுக்காக எழுதியது ஆகியவை அரசியல், சமூகம், இலக்கியம், இரங்கல், மொழி என்று துறை வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ள. 392 பக்கம், விலை ரூ. 200.

நிகழ்ச்சி
பத்ரி சேஷாத்ரி வரவேற்பு + அறிமுகம்.
புத்தகத்தை வெளியிட்டு ஜென்ராம் பேசுகிறார்.
மாலன் ஏற்புரை.
பார்வையாளர்களுடன் விவாதம்.

அனைவரும் வருக.

மார்கழி சாத்துமுறை

சிறு வயதில், மார்கழி மாதம், ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் விடாமல், காலையில் கோயிலுக்குப் போயிருக்கிறேன்.

தெருவைச் சுற்றி வந்து பஜனை செய்வோம். அந்தக் குளிரில் வக்கீல் சந்தானத்தின் மனைவி, எங்களைப் போன்ற சிறுவர்களை நான்கு மாட வளாகங்களையும் சுற்றி அழைத்து வருவார். நாங்கள் எல்லோரும் ‘குள்ளக் குளிரக் குடைந்து’ நீராடியிருப்போம் என்று சொல்வதற்கில்லை. ஸ்வெட்டர், மஃப்ளர் ஆகியவற்றுடன்தான் சுற்றல். பஜனை முடிவது சௌந்தர்யராஜப் பெருமாள் கோவிலில். அடுத்து பொங்கல். கொஞ்ச நேரம் வெட்டி அரட்டை முடித்து, வீட்டுக்கு வந்து குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்கூடம் போக அவ்வளவு நேரம் கையில் இருக்கும்.

இதே மாமியின் வழிகாட்டுதலில், வைகுண்ட ஏகாதசி அன்று இரவு, பெருமாள் கோவிலில் நாடகம் போடுவோம். நாகை பொது நூலகத்தில் எடுத்துவந்த அபத்தமான சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் - இப்படி எது கிடைத்தாலும். மாமியே நாடகங்களை எழுதியதும் உண்டு. நாடகம்தான் ஹை பாயிண்ட். அதற்குமுன், சிறு குழந்தைகள் சினிமாப் பாட்டு நடனம் என்று இல்லாமல் ஏதோ ஆடுவார்கள்; சிலர் பாடுவார்கள். பல வருடங்களுக்குப் பின், அறுசுவை பாபு, தானே எழுதி, சிறுவர்களை வைத்து நாடகம் போட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இப்படி தெரு பஜனை செய்வதற்கு நான் போவது நின்றுபோனது. ஏன் என்று காரணம் தெரியவில்லை. வயதும், தெருப்பெண்கள் பார்ப்பார்களே என்ற வெட்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் தொடர்ச்சியாக தேசிகர் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினேன்.

வடகலை, தென்கலை சம்பிரதாயத்தினருக்கு இடையே அழுத்தமாகவும், ஆழமாகவும் பதிந்துகிடந்திருந்த பிரிவு இது. சௌந்தர்யராஜன் தென்கலை கட்டுப்பாட்டில் இருந்த கோவில். மாட வளாகச் சுற்றில் இருந்த சற்றே சிறிய கிருஷ்ணன் கோவிலும் தென்கலை. இவற்றுக்குப் போட்டியாக, தென்மேற்கு மாட வளாக மூலையில் உதித்ததே தேசிகர் கோவில். பெயர் தேசிகர் கோவில் என்றாலும், லக்ஷ்மி நரசிம்மன்தான் முதன்மைத் தெய்வம். காலையில் இங்குதான் வடகலையினர் ஆஜராவார்கள்.

பஞ்சகச்சம் கட்டி, பனிரெண்டு திருமண் சார்த்தி, மேலுடம்பில் வஸ்திரம் அணியாமல், டாக்டர் விஜயராகவன் வந்து நிற்பார். அவர் இருந்தால்தான் சாத்துமுறையே ஆரம்பிக்கும். ஆடிட்டர் வரதராஜன் மற்றும் வரதாச்சாரி. ஊர்ப் பெரிய மனிதர்கள் இவர்கள்தான். (அதாவது ஊர்ப் பெரிய வடகலையினர். ஊர்ப்பெரிய தென்கலையினர் சௌந்தர்யராஜன் கோவிலிலும், ஊர்ப்பெரிய ஐயர்கள் அவரவர்க்குரிய கோவிலிலும் நிற்பார்கள். ஊர்ப்பெரிய அ-பிராமணர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது.) வேறு சில வடகலையினரும் ஊர்ப்பெரிய மனிதர்கள்தாம். ஆனால் அவர்கள் இரவு மூக்கு முட்டக் குடித்த காரணத்தால், காலையில் மார்கழி சாத்துமுறைக்கு வரமாட்டார்கள். வந்தாலும் வாயைத் திறந்து எதையும் சொல்லத் தெரியாது.

பொதுத்தனியனில் ஆரம்பிக்கும். பிறகு தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி. பிறகு ஆண்டாள் தனியன்களும் திருப்பாவையும். ஆண்கள் இரண்டு பக்கமாகப் பிரிந்து நிற்பார்கள். ஆசாரமானவர்கள் கோஷ்டியின் தலையில் - அதாவது பஞ்சகச்சம், 12 திருமண். அடுத்து பஞ்சகச்சம் அல்லாத வெறும் கச்ச வேஷ்டியினர். அடுத்து மேலே சட்டை போட்டவர்கள். அடுத்து என்னைமாதிரி அரை டிராயர் சிறுவர்கள். பெண்கள் எல்லாம் தாங்களாகவே விலகி, தள்ளி உட்கார்ந்துகொள்வார்கள். அதில் ஆசார எட்டு கெஜ மடிசார் மாமியும் உண்டு, சாதா புடைவைக் கட்டும் உண்டு. அப்போதெல்லாம் சல்வார் கமீஸ் இருக்கவில்லை.

கோஷ்டியில் வலப்பக்கம் (அதாவது கர்ப்பகிருகத்தை நோக்கி நீங்கள் நிற்கும்போது உங்கள் வலது பக்கம் இருப்பவர்கள்) தொடங்குவார்கள். எட்டடிப் பாடலில் முதல் நான்கு அடி அவர்களது:

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்

“அறிவுராய்” என்று வல கோஷ்டி முடிக்கும் முன்னரே, இட கோஷ்டி ஆரம்பிக்கவேண்டும். அம்பரம் ஊடறுத்து...

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

“எம்பாவாய்” என்று இட கோஷ்டி முடிக்கும்போது, அடுத்த திருப்பாவைக்குத் தாவிச் செல்ல வல கோஷ்டி தயாராக இருக்கவேண்டும்.

சிலர், இரண்டு கோஷ்டியிலும் சேர்ந்து சேர்ந்து அனைத்து வரிகளையும் பாடுவார்கள். எந்த இடத்தில் நிறுத்துவது, எந்தப் பாடலை இரண்டுமுறை சேவிப்பது - இதெல்லாம் மிக முக்கியமான விஷயங்கள். மாற்றிப் பாடினால், மூத்தோர் முறைப்பர். எனவே சின்னதுகள், அடங்கி, குரலை உயர்த்தாமல் கூடப் பாடி, அப்படியே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

திருப்பாவை முடியும். இல்லை, முடியாது. சிற்றஞ்ச்சிறுகாலே, வங்கக்கடல் இரண்டையும் பாடமாட்டார்கள். அது கடைசியாக.

நான் வியாழன் அன்று போயிருந்த ராயப்பேட்டை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வடகலை என்பது மனைவியோடு உள்ளே நுழைந்ததும்தான் தெரிந்தது. அதற்குமுன் அங்கே ஒரு முறை போயிருந்தாலும் மனத்தில் நிற்கவில்லை. காலை 5.30-க்கு சாத்துமுறை ஆரம்பிக்க, பல ஆண்டுகளாக தேசிகர் கோவில் சாத்துமுறையில் ஊறிய என்னால் உடனடியாக அவர்களுடன் சேரமுடிந்தது.

நான் பஞ்சகச்சம் கட்டியிருக்கவில்லை. 12 என்ன, ஒரு திருமண்கூட நெற்றியில் இல்லை. சிறிய சந்நதி. எனவே இரண்டாம் வரிசையில் உட்கார்ந்தேன். மனைவி defiant-ஆக, பெண்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குப் போய் உட்காராமல், என் அருகில் உட்கார்ந்துகொண்டார்.

திருப்பள்ளியெழுச்சி தாண்டி, திருப்பாவை முடிந்து, தேசிகரின் அடைக்கலப்பத்துக்குள் புகுந்தார்கள். அது நான் மனப்பாடம் செய்யாதது. அடுத்து வரிசையாக பாஞ்சராத்ர ஆகமப்படியான சில உபசாரங்களை சிலைகளுக்குச் செய்யவேண்டும். அந்தக் கட்டத்தில் கோஷ்டியினர், ஆங்காங்கே சிறு குழுக்களாகப் பிரிந்து, வம்பளக்கலாம். அன்று ஆங்கிலப் புதுவருடப் பிறப்பு என்பதால் பெண்கள் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டனர். நல்ல கூட்டம்.

அடுத்து சிற்றஞ்சிறுகாலே, வங்கக்கடல், அடுத்து அன்றைய நாள் பாட்டான அம்பரமே தண்ணீரே. அடுத்து தீபாராதனை. ஸ்ரீவைஷ்ணவக் கோவில்களில் தீபாராதனை என்பது பக்தர்கள் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்வதற்காக அல்ல. தீப ஒளியில் அர்ச்சாவதார ரூபத்தைப் பார்த்து தரிசிப்பதற்கு மட்டுமே. அடுத்து தீர்த்தம். திருத்துழாய். தலைக்குப் பாதுகை. அதற்கு ஏற்றார்போல கூட்டம் இரு சாரியாகப் பிரிந்து இருக்கும் இடத்தையெல்லாம் ஆக்ரமித்தது.

இது ஒவ்வொரு சந்நிதியிலும் - அலர்மேல் மங்கை, ஆண்டாள் - நடந்தது. ஒவ்வொரு சந்நிதியிலும் அம்பரமே தண்ணீரே சேவிக்கப்பட்டது.

அடுத்து பிரசாதம். எல்லோரும் வரிசையாக உட்கார்ந்துகொள்ள, பாக்குமட்டை தட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சுக்குவெல்லம், வெண்பொங்கல், புளி அவல். கூட ஆங்கிலப் புத்தாண்டுக்காக யாரோ செய்யச் சொல்லியிருந்த ஒரு ஸ்வீட் மைதாமாவு கேக்!

நாகை தேசிகர் கோவில்போலன்றி - அங்கே நாங்கள் சாப்பிடத் தொடங்கிவிடுவோம் - கோதாஸ்துதி சொல்ல ஆரம்பித்தார்கள். புதுமையாக இருந்தது. எனக்கு கோதாஸ்துதி தெரியாது. நான் சாப்பிட ஆரம்பித்தேன். நான் மட்டும்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

***

சென்னை என்பதால் நான் பார்த்த ஒரு பெரும் வித்தியாசம், கோஷ்டியில் சிவப்பழங்கள் இருவர், பஞ்சகச்சம், ஆனால் 12 திருமண் அல்ல, உடலெங்கும் திருநீறு, முதலில் நின்று திருப்பாவையை மட்டுமல்ல, தேசிகர் ஸ்தோத்திரங்களையும் சொன்னது.