Monday, December 01, 2014

சாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ முன்பதிவு

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் நாவல் ‘புதிய எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக, ஜனவரி 2015 சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளியாகிறது. வெளியீட்டு விழா ஜனவரி 5-ல் நடக்கிறது. இதுகுறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும்.

இந்த நாவல் கிட்டத்தட்ட 1,000 பக்கங்களில், கெட்டி அட்டையில் அட்டகாசமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விலை ரூ. 1,000/-

ஆனால் சாரு கேட்டுக்கொண்டதற்கிணங்க, மிகக் குறைவான காலத்துக்கு - இன்று டிசம்பர் 1 தொடங்கி டிசம்பர் 7 வரை மட்டும் - பாதி விலையில், அதாவது ரூ. 500/-க்கு புத்தகத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய விரைந்து இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்.

ஒரு சிலர் இந்த முன்பதிவுத் திட்ட விலையை எடுத்துக்கொண்டு கேலி செய்கிறார்கள். வேண்டுமென்றே விலையை உயர்த்தி, பிறகு குறைப்பதுபோல் குறைத்து விற்பதாக எழுதுகிறார்கள். பொதுவாக நான் இதற்கு பதில் சொல்லமாட்டேன். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விளக்க முற்படுகிறேன்.

இன்று கெட்டி அட்டை தயாரிப்பில் நல்ல தாளில் அச்சாக்கப்படும் புத்தகத்துக்கு வைக்கப்படும் விலை என்ன என்று நீங்களே பாருங்கள். எங்கள் பதிப்பகத்தில் கிட்டத்தட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய் என்ற நிலையில்தான் விலை வைக்கிறோம். சில நேரங்களில் யாரும் வாங்க மாட்டார்களோ என்ற பயத்தில் விலையைக் குறைக்கிறோம். சாருவின் புத்தகம் என்பதால் அந்த பயம் இல்லை. விற்றுவிடும். (ஜீரோ டிகிரி இப்போதும் சக்கைப்போடு போடுகிறது.)

எங்கள் புத்தகங்களை நாங்கள் மும்பையில் உள்ள ரெப்ரோ நிறுவனம் அல்லது மங்களூரின் மணிபால் நிறுவனம் ஆகியவற்றில்தான் அச்சிடுகிறோம். அச்சின் தரத்தையும் பைண்டிங்கின் தரத்தையும் பாருங்கள். ஹார்ட்பவுண்ட் புத்தகங்களை மங்களூர் மணிபாலில்தான் அச்சிடப்போகிறோம். (பரத்வாஜ் ரங்கன் எழுதிய மணிரத்னம் புத்தகம் இங்குதான் அச்சிடப்பட்டது.)

பாதி விலைக்குத் தருவது என்பது கிட்டத்தட்ட லாபமின்றித் தருவதுதான். இது கட்டுப்படியாகும் என்றால் அனைத்துப் புத்தகங்களையும் இப்படியே தர மாட்டோமா? சாருவின் ரசிகர்களுக்காக மட்டும், மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் இந்தச் சலுகை. புத்தக வெளியீட்டு அரங்கிலோ அல்லது புத்தகக் கண்காட்சியிலோ நிச்சயம் இந்தச் சலுகை இருக்காது. எனவே உடனடியாக முன்பதிவு செய்துவிடுங்கள்.

Thursday, November 27, 2014

புற்று நோய்


(நேற்று மாலை காந்தி ஆய்வு மையம், புதன் புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியது)

30 ஜூலை 2014 அன்று காலை 76 வயதான என் தந்தை இறந்துபோனார். அன்று மதியமே அவரை எரியூட்டினோம். அடுத்த நாள் காலை அவரது எலும்புகளைத் தேடி எடுத்துச் சேகரித்தது ஞாபகம் இருக்கிறது. அவர் உடலை எரித்த அந்த நெருப்புதான் அவர் உடலில் பரவியிருந்த கேன்சர் செல்களை முற்றிலுமாக அழித்திருக்கும்.

அவருக்கு நான்காண்டுகளுக்குமுன் வயிற்றில் (டுவோடினம்) கேன்சர். அவருக்குக் கேன்சர் என்று நாங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை. வயிற்றில் கட்டி என்று மட்டுமே சொல்லியிருந்தோம். அதை அறுவை சிகிச்சையில் நீக்கி உலோக கிளிப் போட்டு வயிற்றைச் சுருக்கி, குடலுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தபிறகு அவர் குணமடைந்துவிட்டார் என்றே நினைத்தோம். ஆனால் கேன்சர் அவ்வளவு எளிதான நோயல்ல. வயிற்றை அது பிறகு பாதிக்கவே இல்லை. முதுகுத்தண்டில் சில பகுதிகளைப் பாதித்து சில துண்டுகளை முழுதாகக் கரைத்திருந்தது. அதனைக் கண்டுபிடிக்க வெகு நாள்களானது. அவரால் ஒரு கட்டத்தில் நிற்க முடியவில்லை. அப்போதுதான் ஸ்பைனில் ஏதேனும் பிரச்னையோ என்று பார்க்கப்போய் சிடி ஸ்கேன் தெளிவாக கேன்சர் பரவியிருந்ததைக் காட்டியது. நல்லவேளையாக, இதைக் கண்டுபிடித்த ஒரு வாரத்துக்குள் அவரது ஆயுள் முடிந்துவிட்டது. முதுகெலும்பு ஊடாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களை கேன்சர் பாதித்ததால் மூளைக்குச் செல்லும் ரத்தம் நின்றுபோய் உயிர் போயிருக்கவேண்டும்.

வயிற்றில் புற்றுக் கட்டியை நீக்கியபின் கெமோதெரபி செய்யவேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தார். ஆனால் வீட்டில் நாங்கள் எல்லோரும் கலந்துபேசி அது வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். 72 வயது. அவருடைய சுபாவமே மருந்தைக் கண்டால் பயந்து ஓடுவது. உடல் உபாதைகளைத் தைரியமாக எதிர்கொள்ள அவரால் முடிந்ததில்லை. கெமோதெரபியை அவர் கட்டாயம் எதிர்கொண்டிருந்திருக்க மாட்டார்.

***

நம் பலருக்கும் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஓர் உறவினர் இருப்பார். மருத்துவ முன்னேற்றம் அதிகமாவதால், ஆயுட்காலம் அதிகமாக அதிகமாக, கேன்சர் ஒன்றுதான் நம் வாழ்வை முடித்துவைக்கக்கூடிய ஒன்றாக இருக்கப்போகிறது. கேன்சர் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

(1) கேன்சர் என்பது எம்மாதிரியான நோய்?

நம் உடலில் பல ஆயிரம் வகையான செல்கள் உள்ளன. ஒவ்வொரு வகை செல்லும் தினம் தினம் புதிதாக உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது. ஒரு செல் இரண்டாகப் பிரிந்து, பின் அவை நான்காகப் பிரிந்து, இப்படியே இவை பெருகுகின்றன. ஆனால் இவை ஒருவிதமாக கொரியோகிராப் செய்யப்பட்ட ஒழுங்கான நடத்தை கொண்டவை. ரசாயன சிக்னல்கள் இந்த செல்களின் பிரிவைக் கட்டுப்படுத்துகின்றன. வேண்டிய அளவு செல்கள் உருவானதும் செல் பிரிவு நின்றுவிடும்.

ஆனால் ஜெனிட்டிக் மியூட்டேஷன் காரணமாக சில இடங்களில் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. மியூட்டேஷன் பற்றி சற்று விரிவாகப் பின்னர் சொல்கிறேன். இந்தத் தவறின் காரணமாக, நமக்கு வேண்டாத செல்கள் சில உருவாகின்றன. அதுமட்டுமின்றி இவை படுவேகமாகவும் கட்டுப்பாடே இன்றியும் பிரிந்து அதிகரிக்கத் தொடங்குகின்றன. விளைவுதான் கேன்சர் எனப்படும் புற்றுநோய்.

இந்த மியூட்டேஷனை உருவாக்குவது எது? சிலவகை கேன்சர் மியூட்டேஷன்களை நுண்ணுயிரிகளான வைரஸ்கள் உருவாக்கும். சில கேன்சர் மியூட்டேஷன்கள் நம் முன்னோர்களின் கொடையாக நம் உடலிலேயே இருப்பவை. ரிசசிவ் ஜீன்களான இவை இரட்டையாக ஓர் உடலில் தோன்றும்போது கேன்சர் நிகழ ஆரம்பிக்கும். இன்னும் பல நேரங்களில் நுரையீரலில் படியும் சிகரெட் கரி, தார், வாயில் குதப்பும் புகையிலை, உடலுக்குள் செல்லும் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற கார்சினோஜென்கள் நம் செல்களில் மியூட்டேஷனை ஏற்படுத்தி கேன்சரை உருவாக்கும்.

(2) கேன்சர் எங்கெல்லாம் வரலாம்?

ரத்தப் புற்றுநோய். தோல் புற்றுநோய். வயிறு, உடலின் உள் உறுப்புகள், மார்பகம், புராஸ்டேட், சிறுநீரகம், நுரையீரல், கருப்பை, சினைப்பை, பித்தப்பை, ஈரல், ஆசனவாய் என்று பல பகுதிகளிலும் புற்றுநோய் வரும்.

ரத்தத்தில் வரும் புற்றுநோய் மற்றவற்றிலிருந்து வித்தியாசமானது. இங்கு கட்டியாக ஒன்றும் இருக்காது. ரத்த வெள்ளை அணுக்கள் சரமாரியாக அதிகரிக்கத் தொடங்கும். இதனால் உடல் நிறம் வெளுக்கும். லுகேமியா என்று இந்த நோய்க்குப் பெயர். மிக அதிகமாக அதிகரிக்கும் முதிர்ச்சி அடையாத வெள்ளை அணுக்கள் ரத்தத்தின் சமநிலையைக் குலைத்துவிடும்.

பிற கேன்சர்கள் எல்லாம் திட வடிவமானவை. நண்டு போல் கிளை பரப்பிச் செல்லும் என்பதனால்தான் கேன்சர் என்ற பெயர். கட்டி என்று பொருள்தரும் ‘ஆன்கோ’ என்ற பெயரும் இதற்கு உண்டு. கரையான் புற்றுபோல் பல்கிக் கிளைப்பதால் இதற்குத் தமிழில் புற்றுநோய் என்று பெயர் வைத்திருக்கிறோம்போல.

(3) புற்றுநோயிலிருந்து தப்பிக்க முடியுமா, முடியாதா?

அடையாறு கேன்சர் மருத்துவமனை வாசலில் உள்ள தட்டியில் “புற்று நோய் தொற்று நோயல்ல. அதிலிருந்து தப்பிக்கலாம்” என்று எழுதியுள்ளது. இது முற்றிலும் உண்மையல்ல. முக்கியமாக, ‘புற்று நோய்களுக்கெல்லாம் மருந்து இருக்கிறது, தப்பித்துவிடலாம்’ என்ற பொருள் இதில் வருகிறது. இது உண்மையல்ல.

சிலவகைப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சைக்குப் பின் பல ஆண்டுகள் உயிர் வாழலாம். ஆனால் முற்றி, பரவி, மெடாஸ்டேசிஸ் ஏற்பட்டுவிட்டால், காப்பாற்ற முடியாது. பலவகைப் புற்று நோய்களை நாம் கண்டுபிடிப்பதற்குள் காலம் கடந்துவிடும்.

பொதுவாக, புற்றுநோயைத் தீர்த்துக் கட்ட கீழ்க்கண்ட வழிமுறைகள் உள்ளன.

ரத்தப் புற்றுநோய்க்குப் பெரும்பாலும் கெமோதெரபிதான் சிகிச்சை. சிலவகை ரத்தப் புற்றுநோய்களின் செயல்பாட்டைத் தடுக்க மாற்று மருந்து உள்ளது (எல்லாவற்றுக்கும் அல்ல.) இவ்வகை ரத்தப் புற்றுநோய்களில் சில என்சைம்கள் உருவாவதில்லை. எனவேதான் வெள்ளை அணுக்கள் தாறுமாறாக உருவாகின்றன. எந்த என்சைம் உருவாவதில்லையோ அதனை உடலில் ஏற்படுத்திவிட்டால் போதும். (கிட்டத்தட்ட டயபெடிஸுக்கு இன்சுலின் போட்டுக்கொள்வதுபோல.) ஆனால் இந்த மருந்தைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

பிற அனைத்துக் கேன்சரிலும் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவேண்டும்:

1. கட்டியை நீக்க ஆபரேஷன்
2. கெமோதெரப்பி
3. ரேடியோதெரப்பி

கட்டி மிகச் சிறிதாக இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது கட்டியை ஆபரேஷன் செய்ய முடியாத இடமாக இருந்தால் நேராக கெமோதெரப்பிக்குச் செல்லவேண்டியிருக்கும்.

(4) கெமோதெரப்பிக்குமுன் மியூட்டேஷன் என்பதை என்னவென்று பார்த்துவிடலாம். அத்துடன் கேன்சர் மியூட்டேஷன்களை.

நம் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் அடிப்படை ஃபார்முலா, டி.என்.ஏ எனப்படும். இது ஒரு நீண்ட பெரிய ரசாயன மூலக்கூறு. இதில்தான் நம் உடம்புக்குத் தேவையான பல்வேறு புரதங்களையும் ரசாயனங்களையும் உருவாக்குவதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு நம் செல்கள் இந்த ரசாயனங்களைத் தயாரிக்கின்றன. ஆனால் சில நேரங்களில், செல் பிளவு நடக்கும்போது டி.என்.ஏவைப் பிரதி எடுக்கும்போது ஒருசில தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. இந்தத் தவறுகளை, மாற்றங்களைத்தான் மியூட்டேஷன் என்கிறோம்.

இவ்வாறு ஏற்படும் எல்லா மாற்றங்களும் கேன்சரை உருவாக்கா. ஒருசில மாற்றங்கள் கேன்சர் ஆவதும் உண்டு.

ஒவ்வொரு செல்லிலும் பல கட்டுப்பாட்டு ரசாயனங்கள் உண்டு. செல் பிரியவேண்டும் என்ற ஆணையைத் தெரிவிக்க ஒரு குறிப்பிட்ட ரசாயனம் தேவை. செல்கள் பிரிந்து ஒரு குறிப்பிட்ட அளவு செல்கள் உருவானதும் உடனே இது ஆஃப் ஆகிவிடும். ஆனால் கேன்சர் மியூட்டேஷனில் இது அடிபட்டுவிடும். ஒவ்வொரு கேன்சர் செல்லும், ‘இன்னும் பிரி, மேலும் பிரி’ என்று தறிகெட்டு, பிரிந்து பிரிந்து ஒன்று மிகப் பலவாக ஆகும். நம் டி.என்.ஏவில் இருக்கும் மற்றொரு ஜீன், டியூமர் சப்ரெஸர் ஜீன். இதன் வேலை, செல்கள் கொத்து கொத்தாக உருவாக்காமல் தடுப்பது. எல்லா செல்களிலும் இருக்கும் இந்த ஜீனின் இரண்டு பிரதிகளும் மியூட்டேஷனில் அடிபட்டால் அவ்வளவுதான். இந்த இரண்டு மியூட்டேஷன்களும் சேர்ந்து ஏற்பட்டால் கேன்சர் உருவாகும். அதாவது முதலாவது ‘ஆக்சிலரேட்டர் ஜாம் ஆவது’. இரண்டாவது, ‘பிரேக் செயலிழந்துபோவது.’ இரண்டும் சேர்ந்து காரை ஆக்சிடெண்டில் கொண்டுபோய் விட்டுவிடும்.

(5) கெமோதெரப்பி என்றால் என்ன?

சிலவகை ரசாயனங்கள், செல் பிரிவதைக் கடுமையாகத் தடுக்கக்கூடிய விஷங்கள். பலவித ஆராய்ச்சிகளின்மூலம் இம்மாதிரியான ரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை கேன்சர் செல்கள்மீது இயக்கிப் பார்த்ததில் இவை கேன்சர் செல்கள் வேகமாகப் பிளந்து பரவுவதைத் தடுக்கும் சக்தி கொண்டவை என்று கண்டறியப்பட்டன. ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், இன்னபிற புற்றுநோய்களுக்கு மிக முக்கியமான சிகிச்சை இந்த “விஷங்களே”. இவற்றை குறிப்பிட்ட டோஸில் உடலுக்குள் செலுத்தினால் படுவேகமாகப் பிளந்து பரவிக்கொண்டிருக்கும் கேன்சர் செல்களை இவை அழிக்கத் தொடங்குகின்றன. மேற்கொண்டு அவை பிரியாமல், பரவாமல் பார்த்துக்கொள்கின்றன. ஆனால் அதே நேரம் நல்ல செல்கள் வளர்வதையும் இவை தடை செய்கின்றன.

கெமோதெரப்பி என்பது மிகவும் கடுமையான வைத்தியம். மனித உயிரைக் கிட்டத்தட்ட அதன் எல்லைக்கே கொண்டுசென்று கேன்சரை மட்டும் அழித்து, உயிரை மீண்டும் மீட்க உதவும் ஓர் அபாயகரமான சிகிச்சை. இதற்கு ஓரளவுக்கு நல்ல பலன் இருக்கிறது.

ஆனால் இன்றைக்கு கெமோதெரப்பிக்குப் பயன்படும் பல்வேறு மருந்துகளைத் தாண்டி வளரும் கேன்சர்களும் உண்டு. எப்படி ஆண்டிபயாடிக் மருந்துகளைத் தாண்டிச் செழித்து வளரும் நுண்ணுயிரிகள் உள்ளனவோ, அதேபோலத்தான் கேன்சருக்கு எதிர்ப்பு கெமோதெரப்பி மருந்துகளையும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
ரேடியோதெரப்பி என்பது அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிரியக்கத்தை கேன்சர் இருக்கும் பகுதிகள்மீது அடிப்பது. ஆரம்பத்தில் கதிரியக்கப் பண்பு கொண்ட ரேடியம் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இன்று எக்ஸ் கதிர்கள்தான். கெமோதெரப்பி சில சுற்றுகளை முடித்தபின் ஒருசில சுற்றுகளுக்கு ரேடியோதெரப்பி நடக்கும்.

(6) கேன்சர் மருந்துகள் என்றால் என்ன? டயாபெட்டீஸ், ரத்த அழுத்தம் ஆகியவை உடலில் இருக்கும்போது உயிர்வாழ சில மருந்துகளை உட்கொள்வதுபோல மருந்து சாப்பிட்டே கேன்சரில் பிழைத்துவிட முடியாதா?

ஒரு குறிப்பிட்ட வகையான ரத்தப் புற்றுநோய்க்கு (க்ரோனிக் மயலோஜீனஸ் லுகேமியா), க்லைவெக் என்ற மருந்து பயன்படுகிறது. இந்த வகைப் புற்றுநோய், சில என்சைம்களை ஊக்குவித்து செல் பிளப்பதை அதிகரிக்கிறது. க்லைவெக் மருந்தை உட்கொண்டால் அது இந்த என்சைம்களைத் தடுத்து, ரத்தப் புற்றுநோயை நிறுத்துகிறது. சிலவகை வயிற்று கேன்சர் கட்டிகளையும் க்லைவெக் தடுக்கிறது என்கிறார்கள்.
ஆனால் எல்லாவிதமான கேன்சருக்கும் இதுபோன்ற மருந்து இன்னமும் வரவில்லை. இதுதான் எதிர்கால ஆராய்ச்சியில் நிகழும்.

====

சித்தார்த்தா முகர்ஜியின் புத்தகத்தை உண்மையில் கேன்சர் என்சைக்ளோபீடியா என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் வறண்ட நடை கொண்டதல்ல. எடுத்தால் புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாத அளவுக்கு சுவாரசியமானது.

அமெரிக்காவில் கேன்சர் ஆபரேஷன் செய்யும் ஆன்காலஜிஸ்ட் மருத்துவரான இவர், தன் நோயாளி ஒருவர் கேட்டுக்கொண்டதன்பேரில் இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்திருக்கிறார். என் உடலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த கேன்சர் என்னதான் செய்கிறது என்ற கேள்விக்கான பதில் இவ்வளவு அருமையாக நம்மைப்போன்ற சாதாரணர்களும் புரிந்துகொள்ளக்கூடிய புத்தகமாக, கேன்சரின் “வரலாறாக” ஆகியுள்ளது.

பொ.யு.மு 2500-ல் எகிப்தில் மருத்துவரான இம்ஹோடெப்புக்கு புற்று நோய் பற்றித் தெரிந்துள்ளது. இதற்கு மருந்து கிடையாது என்பதுடன் அவருடைய சிகிச்சை முடிந்துவிடுகிறது. பொ.யு.மு 500-ல் கிரேக்க ராணி அட்டோஸாவுக்கு மார்பகப் புற்று நோய் வந்தது குறித்துப் பதிவுகள் உள்ளன. அதை அவர் தன் அடிமையைக் கொண்டு அறுத்து எடுக்கிறார். ஆனால் அதனால் அவரது உயிர் போவதைத் தடுக்க முடியவில்லை.
அடுத்து 18-ம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சைகள் ஆரம்பிக்கின்றன. எதற்கும் பலன் கிடையாது. ஏனெனில் அறுத்து எறிந்தால் போய்விடப் போகிற நோய் அல்ல இது. கேன்சர் செல்கள் உடலில் இருக்கும்வரை அவை ரத்தம் மூலம் வேறு இடங்களுக்குப் பரவி உடலை அப்படியே அழித்துவிடும்.

20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் கெமோதெரப்பியும் ரேடியோதெரப்பியும் நடைமுறைக்கு வருகின்றன. பின்னர் இந்தச் சிகிச்சை முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு பலரது உயிர் காப்பாற்றப்படுகிறது. ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது.

இன்று ரத்தப் புற்றுநோயிலிருந்து பெரும்பாலும் ஒருவரைக் காப்பாற்றிவிடலாம். பெண்களுக்கு மிக அதிகமாக வருவது மார்பகப் புற்றுநோய். மாம்மோகிராம் மூலமாக இது வருகிறதா இல்லையா என்பதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் கெமோதெரப்பி, ரேடியோதெரப்பி மூலம் சரி செய்துவிடலாம். கொஞ்சம் பரவினாலும் மாஸ்டெக்டமி என்ற வகையில் மார்பகங்களை வெட்டி, கேன்சர் பரவிய இடங்களையெல்லாம் குடைந்து எடுத்து, தொடர்ந்து கெமோதெரப்பி, ரேடியோதெரப்பி மூலம் பெரும்பாலும் காப்பாற்றிவிடலாம்.

வயதான ஆண்கள் பலருக்கும் வரும் புரோஸ்டேட் கேன்சர் அதிக அபாயங்கள் இல்லாதது. பலர் தங்களுக்கு அந்த கேன்சர் இருப்பது தெரியாமலேயே இறந்தும் போகிறார்கள்.

சிகரெட் பிடிப்போருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

பிறவகை கேன்சர்கள் எப்படி, யாரைத் தாக்கும் என்பது குறித்து நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அது ஓரளவுக்குப் பரவிய பின்னரே நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகியவற்றில் எங்கோ ஒரு மூலையில் உள்ள சிறு கட்டியைக் கண்டுபிடிப்பது கடினம். கொஞ்சம் பெரிதாக ஆகும்போதுதான் அதைப் பார்க்கவே முடியும். அதன்பின் அது எப்படிப்பட்டது என்பதைப் பொருத்து ஆபரேஷன், கெமோதெரப்பி, ரேடியோதெரப்பி ஆகியவை நிகழும்.
சில்வர் புல்லட்டாக அனைவரும் எதிர்பார்ப்பது க்லைவெக் போன்ற அரும்பெரும் மருந்தை. அதை விழுங்கினால் அந்த மருந்து போய் மியூட்டேஷனுக்கு மாற்றான செயலைச் செய்து கேன்சரை இல்லாமல் ஆக்கிவிடும் என்று. ஆனால் அம்மாதிரியான மருந்து நம் வாழ்நாளுக்குள் சாத்தியமா என்று தெரியவில்லை. ஹியூமன் ஜீனோமை வகை செய்து தொகுத்ததுபோல் மனித கேன்சர் ஜீனோமை வகைசெய்து தொகுக்கும் வேலையில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். இந்த வேலை முடிந்துவிட்டால், குறைந்தபட்சம் ஒருவருக்கு வந்துள்ள கேன்சர் எந்த மியூட்டேஷனில் வந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அதற்கடுத்து, இவற்றுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அவற்றைப் பரிந்துரைக்கலாம்.

இன்னும் எதிர்காலத்தில் மியூட்டேஷன் ஆன ஜீன்களை ரிப்பேர் செய்யும் முறைகள் வரக்கூடும்.

ஆனால் இப்படியெல்லாம் சாவிலிருந்து தப்பித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியும் உள்ளது. முதுமை என்பதுதான் உள்ளதிலேயே மிக மோசமான நோய்.

***

The Emperor of All Maladies: A Biography of Cancer, Siddhartha Mukherjee

Wednesday, November 26, 2014

பிகாரி

ஞாயிறு மதியம் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு குருவாயூர் விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பதிவு கேரேஜ் ஒன்றில் 96 பேர் உட்காரலாம். ஆனால் உள்ளே அதற்குமேல் நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு கேரேஜிலும் இதுதான் நிலைமை. ஏறி என் இடத்தில் உட்கார்ந்திருந்தவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்தேன். நிற்க, நகர துளிக்கூட இடம் இல்லை. சீட் இல்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும், நிற்கும் எல்லோரும் இளைஞர்கள். ஆண்கள். எல்லோரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழுக்கு உடையில். பலர் கிழிந்த உடைகளில். எல்லோரிடம் முதுகில் மாட்டும் பை ஒன்று. பலர் முகத்தில் தூக்கம். உடல் சோர்வு.

கையோடு கொண்டுவந்திருக்கும் கிண்டிலில் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். திடீரென ‘பை ஆர் ஸ்கொயர்ட்’ என்றான் ஒருவன். இல்லை ‘டூ பை ஆர்’ என்றான் இன்னொருவன். அவர்கள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என் உடைந்த இந்தியில் அருகில் நிற்கும் இருவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் அனைவரும் பிகாரின் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள். திருச்சியில் ரயில்வே தேர்வு ஒன்றை எழுத வந்திருந்தார்கள். தேர்வைக் காலையில் எழுதிவிட்டு இப்போது மீண்டும் ஊர் திரும்புகிறார்கள். சென்னை போய், அங்கிருந்து எதோ ஒரு ரயிலைப் பிடித்து இதோபோல் தொத்தி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு பாட்னா சென்று அங்கிருந்து அவரவர் ஊர் செல்லவேண்டும்.

தென்னக ரயில்வேயில் கேங்மேன்/சிக்னல் ஊழியர் குரூப் டி தேர்வாம். ஒருவரிடமிருந்து தேர்வுத் தாள் வாங்கிப் பார்த்தேன். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வினாக்கள் இருந்தன. 90 நிமிடங்கள், 100 கேள்விகள். ஒரு சில கணக்கு வினாக்கள். ஒரு சில பொது அறிவுக் கேள்விகள். கடைசிக் கேள்வி ‘இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் யார்?’ என்றிருந்தது. இதில்தான் ஒரு கேள்வி வட்டத்தின் சுற்றளவு அல்லது பரப்பளவு என்ன என்று இருக்கவேண்டும்.

நான் பேசியவர்கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். ஒருவர் கையில் ஆண்டிராய்ட் ஃபோனில் http://www.onlinetyari.com/ என்ற தளத்தின் குறுஞ்செயலி ஒன்றை வைத்திருந்தார். அதிலிருந்து (இந்தியிலான) மல்ட்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு விடை தட்டி, சரியா தவறா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த பரீட்சைக்குத் தயாராகிறாராம்.

படித்த இளைஞர்களுக்கு பிகாரில் உருப்படியான வேலை ஒன்றுமில்லை. எனவே சில ஆயிரம் கிமீ தாண்டி வந்து ரயில்வே ஸ்டேஷனிலேயே தங்கி பரீட்சை எழுதி, என்ன வேலை கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

பிகார் அரசியல் குறித்தும் தமிழகம் குறித்தும் என்னால் முடிந்த இந்தியில் அவர்களுடன் பேசினேன். அவர்களுக்கு இந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. நிதீஷ் நிஜமாகவே மாநிலத்தை முன்னேற்றியிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் நிதீஷும் லாலுவும் ஒன்றாகச் சேர்வது சாத்தியமில்லை என்றும் சொன்னார்கள். பிகார் பாஜகவில் உருப்படியான, நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது. சுஷீல் மோதிமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்கள். அதே சமயம், மத்தியில் இருக்கும் கட்சியே மாநிலத்தில் வருவதுதான் உபயோகமானது என்றார்கள். எனவே பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள் என்றுதான் தெரிகிறது.

தமிழகத்தில் என்ன நடந்திருக்கிறது, பிகாரில் என்ன நடக்கவில்லை என்பது குறித்துக் கொஞ்சம் பேசினேன். (ஆனால் சரியான இந்தி வார்த்தைகள் தெரியாமல் ஆங்கிலம் கலந்துதான் பேசவேண்டியிருந்தது.) ஓர் இளைஞர் சொன்னார்: “பிகாரில் மக்கள் அரசை நம்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு மக்களை நம்பியிருக்கிறது.”

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிகார் போகவேண்டிய தூரம் மிக அதிகம் என்பது அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஏதேதோ காரணங்களுக்காக இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்கிறார்கள். அடிமட்ட வேலைகளிலிருந்து அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தலைவர்கள் அனைவரும் அவர்களை ஏமாற்றியுள்ளனர். பாஜகவும் நம்பத்தகுந்த வகையில் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பாஜகவும் பிகாரைக் காப்பாற்றவில்லையென்றால் இது மிகப்பெரும் மானுடச் சோகத்தில்தான் முடியும்.

Saturday, November 15, 2014

சிந்து எழுத்துகளின் முன்-திராவிடத் தன்மை

நேற்று மாலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் கிஃப்ட் சிரோன்மணி எண்டோமெண்ட் சிறப்புப் பேச்சு, டாக்டர் ஐராவதம் மகாதேவனால் வழங்கப்பட்டது. சிந்து நாகரிகப் பகுதிகளில் கிடைத்திருக்கும் பட வடிவ அச்சுகளைப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தனது கண்டுபிடிப்புகளை ஐராவதம் மகாதேவன் முன்வைத்தார்.

சிந்து பட வடிவங்கள் எழுத்துகளா அல்லது வேறு ஏதேனுமா என்ற கேள்வியும் இருக்கும் நிலையில் இந்தப் பதிவுக்காக அவற்றை எழுத்துகள் என்றே எடுத்துக்கொள்வோம். அவை எழுத்துகள் என்றால் அதன் அடிப்படை மொழி என்ன? இந்தியாவின் வரலாற்றுக் காலத்தின் மிகப் பழமையான மொழிகளான சமஸ்கிருதம் அல்லது தமிழாக (அல்லது அவற்றின் முன்னோடி மொழிகள்) அவை இருக்கலாம் என்று இரு கோணங்களில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐராவதம் இதில் திராவிடக் கட்சி. கிடைத்திருக்கும் சான்றுகளின்படி சிந்து எழுத்துகளின் அடிப்படை முன்-திராவிட மொழி ஒன்றுதான் என்பதற்கான பல வாதங்களை அவர் வைத்தவண்ணம் இருக்கிறார். அவ்வாறு தான் வைத்துள்ள வாதங்களிலேயே நேற்றைய ஆராய்ச்சிக் கட்டுரைதான் இதுவரையில் தன்னுடைய ஆகச் சிறந்தது என்ற தன் கருத்தையும் அவர் முன்வைத்தார்.

(நான் எழுதுவதில் நிச்சயம் பிழை இருக்கலாம். அவருடைய பேச்சைக் கேட்டு, குறிப்புகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமல், பின் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை இன்று காலை வாசித்து, அதன்பின் எழுதியுள்ளேன்.)

சிந்து எழுத்துகளின் முழுமையான தரவகத்தை உருவாக்கிய நால்வருள் ஐராவதம் மிக முக்கியமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக, சிந்து நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ள, இப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும் அச்சுகளை முழுவதுமாக உள்வாங்கியுள்ளவர் இவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இந்த எழுத்துகளில் நான்கு எழுத்துகள் மீண்டும் மீண்டும் திரும்ப வருவதை (ஃப்ரீக்வன்சி) எடுத்துக்கொண்டு, அந்த நான்கு எழுத்துகள் (சொற்கள்) என்னவாக இருக்கும் என்பதைக் கண்டறியும் முயற்சிதான் இந்த ஆராய்ச்சி. அந்தப் படங்கள் கீழே.


வலமிருந்து இடமாகப் படிக்கவேண்டும். இந்த நான்கையும் அவர் இவ்வாறு பெயர் கொள்கிறார்.

A = ஓநாய்
B = கொக்கி
C = நால்வழிச் சாலை
D = சாடி

சித்திர எழுத்துகளின் அடிப்படைகள் சிலவற்றை முதலில் விளக்குகிறார் ஐராவதம். ஒரே உச்சரிப்பு கொண்ட சொல், இரு வேறு பொருளைத் தருவதாக எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு பொருளைப் படமாக விளக்கிவிடலாம். இன்னொன்றைப் படமாகக் காட்டுதல் எளிதல்ல. அப்படிப்பட்ட நிலையில் இரண்டாவது கடினமான சொல்லைக் குறிப்பதற்கும் முதல் படத்தைப் பயன்படுத்துவார்கள். இதனை ஆங்கிலச் சொல்லான rebus என்பதனைப் பயன்படுத்துகிறார் ஐராவதம். தமிழில் இதற்கு இணையான, இதே பொருள் கொண்ட சொல் எனக்குத் தெரியவில்லை என்பதால் ரீபஸ் என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். இந்த ரீபஸ், ஒரு குறிப்பிட்ட மொழி சார்ந்தது. இதனை வேறு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது இந்தக் கருத்து சிதைந்துவிடும்.

உதாரணத்துக்கு, ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். I என்பது தன்னைக் குறிக்கும். அதே உச்சரிப்பு கொண்ட Eye என்பது கண்ணைக் குறிக்கும். கண்ணைக் குறிக்க விழியின் படத்தை வரைந்துவிடலாம். ஆனால் “I" என்ற தன்னைக் குறிக்க ஒரு படத்தைப் போடுவது கடினம். அதற்கு பதில் “விழி” படத்தையே வரைந்துவிட்டால், இடத்துக்கு ஏற்ப அம்மொழியின் பயனாளர்கள் சரியான இடத்தில் சரியான பொருளைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். இதுதான் ரீபஸ். ஆனால், வேற்று மொழிக்காரர்கள், தவறான பொருளைப் புரிந்துகொண்டுவிட அனைத்து சாத்தியங்களும் உள்ளன.

இதன் அடிப்படையில்தான் மேலே உள்ள சிந்து படத்தை எடுத்துக்கொண்டு ஆராய்கிறார் ஐராவதம். இதனை பழைய தமிழில் உள்ள சொற்களோடு பொருத்திப் பார்த்தால் இணையான, பொருள் பொதிந்த சொற்கள் கிடைக்கின்றன. ஆனால் ரிக் வேதச் சொற்களைக் கொண்டு ஆராய்ந்தால் இணையான சரியான சில சொற்களும், சற்றே தவறான ரீபஸ் சொற்களும் கிடைக்கின்றன. (அவற்றைக் கீழே விளக்குகிறேன்.)

எனவே, ஐராவதத்தின் கருதுகோள் (என் வார்த்தைகளில்): சிந்து மொழியானது முன்-திராவிடத்துக்கும் ரிக்வேத சமஸ்கிருதத்துக்கும் மூத்தது. சிந்து மொழி முன்-திராவிடத்தை ஒத்தது. ரிக்வேத சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது. ரிக்வேதிகள் சிந்து நாகரிக அழிவுக்கு வெகு காலத்துக்குப் பிறகுதான் ரிக்வேதத்தை உருவாக்குகிறார்கள். அப்போது சிந்து மொழியின் முழுமையான புரிதல் அவர்களிடமிருந்து அகன்று போய்விட்டது. எனவே சில சரியான மொழியாக்கம், சில தவறான மொழியாக்கம் இரண்டும் சேர்ந்து புதிய புராணக் கதைகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். ஆனால் தமிழ் மொழியின் ஆரம்பகாலச் சொற்கள் தவறின்றி அப்படியே சிந்து மொழியின் அடிப்படையிலேயே உள்ளன. ஆனால் அவற்றின் பொருள் பரிமாண மாற்றம் அடைந்துவிடுகிறது. அப்படி மேலே காணப்படும் சிந்து வார்த்தைகள் எல்லாம் பாண்டிய குலப் பெயர்களுடன் ஒத்துப்போகின்றன. எனவே மூத்த தமிழர்களான பாண்டியர்கள் சிந்து நாகரிக வழி வந்தவர்கள், சிந்து நாகரிகப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகம் வந்தவர்கள். ரிக்வேதிகளோ இந்தியாவுக்குப் பிறத்திலிருந்து சிந்து பகுதி வழியாக வந்து கொஞ்சம் சரியும் கொஞ்சம் தவறுமாக சிந்து மொழியை உள்வாங்கிக்கொண்டு தம் மொழிக்கு அவற்றை சரியும் தவறுமாக மொழிமாற்றி ரிக் வேதத்தில் வைத்திருக்கின்றனர்.

இந்தக் கருதுகோளுக்கான சில சான்றுகளைத்தான் நேற்றைய பேச்சின்போது ஐராவதம் தந்தார்.

அவருடைய முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கே தருவது என் நோக்கமல்ல. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி (அல்லது தரவிறக்கி) படித்துக்கொள்ளுங்கள்.

முதலில் ‘ஓநாய்’ சின்னத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு ஓநாய் முக்கியமல்ல. அப்படியென்றால் அதன் முகம் காண்பிக்கப்பட்டிருக்கும். அதன் பின்புறம்தான் காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே “மாறு”, “மாறி” (திரும்பி) என்னும் பொருளைக் குறிப்பிடுகிறது இச்சொல். இந்த வேர்ச்சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என ஐந்திலும் அப்ப்டியே வருகிறது. (இவ்வாறு ஒவ்வொரு வேர்ச்சொல்லுக்கும் ஐந்து திராவிட மொழிகளிலிருந்தும் கொடுக்கிறார். பின்னர் ரிக்வேதத்திலிருந்தும் கொடுக்கிறார்.) எனவே இந்தச் சின்னம் குறிப்பிடுவது பொருள்களை மாற்றிக்கொள்ளுதல் அல்லது பண்டமாற்று.

இந்த ஓநாய்ச் சின்னத்திலேயே காதுகள் வித்தியாசமாக இருப்பதை, அவர் முடியின் பின்னல் என்று எடுத்துக்கொண்டு இச்சொல், ‘குடுமி’, ‘சடை’ போன்ற சொற்களைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்கிறார்.

இரண்டாவதாக, ‘கொக்கி’. இதற்கு இரண்டு அடிப்படை தமிழ் வேர்ச் சொற்கள்.

(1) கொளுத்து/கொளுவு/கொளுக்கி/கொளுவி/கொண்டி/கொள்
(2) செடில்/செத்/செழ்

கொக்கி, கொள்ளுதல் என்பதைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டால், AB இரண்டும் சேர்ந்து ‘மாறுகொள்’ என்ற பொருள் தரும். பாரதியின் ‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்’ என்பதை உதாரணமாகக் கொள்ளலாம். பண்டமாற்று செய்வது, செய்பவன் ஆகியோரைக் குறிக்கும்.

மூன்றாவதாக நால்வழிச் சாலை. பாதை/பாடி என்று வழியை அல்லது நகரத்தைக் குறிக்கும். அல்லது நகரத்தைச் சேர்ந்தவனைக் குறிக்கும்.

நான்காவது சாடி. இது இலக்கண விதிக் குறிப்பு மட்டுமே என்கிறார். அதாவது ஆண்பால் விகுதியான அன் அல்லது அர்.

எனவே மேலே உள்ள சிந்து வடிவத்துக்கு மாற்/கொள்/பாட்/அன் அல்லது மாறுகொள்பாடியன் = Merchant of the city என்று பொருள் கொள்ளலாம் என்கிறார்.

இது அடுத்து மாபெரும் தாவுதலில், பாண்டிய குலப் பெயர்களாக ஆகிறது.

ஓநாய் என்பது மாறு = மாறன். பின்னல் உள்ள காரணத்தால், குடுமி அல்லது சடையன்.
கொக்கி என்பது செட்/செழ் என்றாகி, செழியன்.
நால்வழிப்பாதை = பாட் -> பாண்ட் -> பாண்டியன்; வழி-> வழுதி.

மாறன், செழியன், வழுதி, பாண்டியன் (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, மாறவர்மன், சடவர்மன் போன்ற பாண்டியப் பெயர்கள் நினைவுக்கு வருகின்றனவா?)

***

இதுவரை தாக்குப் பிடித்தவர்கள் வாருங்கள், அடுத்து ரிக்வேதத்துக்குள் நுழைவோம்.

இதே சின்னங்களை ரிக்வேதத்துக்குள் வரும் சொற்களுடன் அல்லது கடவுளர்களுடன் பொருத்திப் பார்க்க முடியுமா?

முதலில் நால்வழிச்சாலையை எடுத்துக்கொள்கிறார் ஐராவதம். பதஸ்பதி - பாதைகளின் கடவுள் (ரிக் 6.53.1) என்று பூஷண் என்ற கடவுள் கருதப்படுகிறார். இதே கடவுள் ரிக் வேதம் முழுவதிலும் வளமானவர், செல்வத்தின் கடவுள், இவருடைய தங்கக் கப்பல்கள் கடல் தாண்டிச் செல்லும் என்று சொல்லப்படுகிறது. அனைத்துமே மாறுகொள்ளும் வியாபாரியின், செல்வம் செழிக்கும் பின்னணியுடன் பொருந்திப்போகிறது.

வழுதி -> வழ் -> வள் -> வளமை -> செல்வம்

ஓரிடத்தில் இவர் கூழ்/கஞ்சி சாப்பிடுபவர் (கரம்பாதிதி - ரிக் 6.56.1) என்று வருகிறது. செல்வத்துக்கு அதிபதியான பூஷண் ஏன் ஏழைகளின் உணவான கஞ்சியைச் சாப்பிடவேண்டும் என்ற கேள்வியை பலர் முன்னமேயே எழுப்பியுள்ளனர். அது தொடர்பாக பின்னர் மகாபாரதத்தில் ஒரு கதை வருகிறது. தட்ச யாகத்தில் தேவர்கள் அவி பெறும்போது, தன்னைக் கூப்பிடாததால் கோபம் கொண்ட சிவன் வந்து அங்கிருக்கும் தேவர்களை அடித்து உதைக்க, பூஷணின் பல் உடைந்துவிடுகிறது. எனவே பல போன அவரால் கஞ்சி மட்டும்தான் உண்ண முடியும். இந்தக் கதையே தவறான மொழிபெயர்ப்பால் உருவானது என்கிறார் ஐராவதம்.

நான்குவழிச்சாலை கூடும் இடத்துக்கு, அனைவரும் கூடும் இடத்துக்கு தமிழிலும் பிற திராவிட மொழிகளிலும் ‘அம்பலம்’ (ambalam) என்று பெயர். (ஏழை சொல் அம்பலம் ஏறுமா? அம்பலம் = கோவில், சிற்றம்பலம் = சிதம்பரம். இந்த ஊழலை அம்பலத்துக்குக் கொண்டுவருவோம்...)

ஆனால் தமிழில் அம்பலி, கன்னடத்தில் அம்பலி/அம்பிலா, துளுவில் அம்புலி, தெலுங்கில் அம்பலி, மராட்டியில் ஆபில் என்றால் கஞ்சி என்றும் பொருள்.

அம்பலம் என்ற கூடுமிடத்தை அம்பலி என்ற கஞ்சியாக எடுத்துக்கொண்டு ரிக்வேதத்தவர்கள் மொழிபெயர்த்ததில் பூஷண் கஞ்சி குடிப்பவராக ஆகிவிட்டார் என்கிறார் ஐராவதம். அதே நேரம் வேறிடத்தில் சரியான மொழிமாற்றத்தின்படி, கூடுமிடத்தின் தலைவன் என்ற பொருளில் விதத்யா (ரிக் 7.36.8, 10.85.26) என்றும் கூறப்படுகிறது. எனவே அவர் கூடுமிடத்தின்/ பாதைகளின் கடவுளாகவும் இருக்கிறார், கஞ்சி குடிப்பவராகவும் இருக்கிறார்.

அடுத்து கொக்கி. இது கொள்/கொளுத்து என்ற சொல்லைக் குறிக்கிறது. கொளுத்து என்பது நெருப்பு என்றும் தவறாகப் பொருள் கொள்ளப்படலாம். அதே அடிப்படையில் பூஷண் அக்ரிணி (ரிக் 6.53.3) - நெருப்பு போல் ஒளிர்பவர் என்றும் வருகிறது. ஆனால் செடில்/செண்டு என்ற பொருளில் கையில் அஸ்த்ர (ரிக் 6.53.9) என்ற கொக்கி போன்ற ஆயுதத்தைக் கொண்டவர் என்றும் வருகிறது.

இப்போது ‘ஓநாய்’ சின்னத்தை கடைசியாக எடுத்துக்கொள்கிறார். மாறு என்ற சொல், தவறாக மறி என்ற பொருளைக் குறிக்கும்போது, ஆடு என்றாகிறது. பூஷண், ஆடுகளைத் தன் தேரை ஓட்டும் மிருகங்களாகக் கொண்டுள்ளவர். அவருக்கு அஜாஸ்வ (ரிக் 6.55.3) என்று பெயர் உள்ளது. இது ‘ஓநாய்’ சின்னத்தை மாறு என்பதற்குபதில் மறி என்ற ஆடாகப் பார்த்ததன் விளைவான தவறான மொழியாக்கமும் அதன்மூலம் வந்த புராணக் கதையும் என்கிறார் ஐராவதம். பூஷணுக்கு அகோஹ்ய (ரிக் 1.23.14) - எதையும் அவரிடமிருந்து மறைக்க முடியாது - என்ற பெயரும் உண்டு. மாறு - மறை என்றாகி, மறைப்பின் கடவுள் என்றாகி, எதையும் அவரிடமிருந்து மறைக்க முடியாத தன்மை கொண்ட கடவுள் என்றாகியது. இதுவும் தவறான பொருளைப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட கதை என்கிறார் ஐராவதம்.

பூஷண் கபர்தின் (ரிக் 6.55.2) என்று, அதாவது பின்னலிட்ட குடுமி வைத்துள்ளவர் என்று சொல்லப்படுகிறார். குடுமி என்று நாம் முன்பு சொன்னதையும் ஓநாய் சின்னத்தில் உள்ள பின்னலையும் சேர்த்துப் பாருங்கள்.

***

ஆக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிந்து சின்னங்கள் சிந்து நாகரிக காலத்தில் நகரத்தின் வியாபாரி என்ற பொருளையும், தமிழகத்தில் மாறன்/செழியன்/பாண்டியன் என்ற பாண்டிய குலப் பெயர்களாகவும், ரிக் வேதத்தில் பூஷண் என்ற கடவுளையும் குறிக்கிறது.

பூஷண் இவ்வாறாக வியாபாரிகளின் (வைசியர்களின்) கடவுளாக இருந்து, கொக்கி ஏராகக் கருதப்பட்டு உழவர்களின் கடவுளாகவும், கொக்கி ஆடு/மாடு மேய்ப்போரின் ஆயுதமாகக் கருதப்பட்டு மேய்ப்பர்களின் கடவுளாகவும் கருதப்பட்டதும் ரிக் வேதத்தில் வருகிறது என்கிறார்.

==== முற்றும் ====

ஐராவதம் மகாதேவனின் முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரை இங்கே.

Monday, November 10, 2014

டிராஃபிக் ராமசாமி

தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை, சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன்.

டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் நேரடியாகச் செலவிட்ட இரு நாள்கள் என் மனத்தை வெகுவாக மாற்றிவிட்டது.

இவர் கொஞ்சம் கிறுக்குதான். இன்னமும் இவரை எது உந்துகிறது என்பது முழுமையாக எனக்குப் புரியவில்லை. ஆனால் இவருடைய வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.,

இவருடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவருடைய உபநயன நிகழ்ச்சியின்போது, ராஜாஜி விருந்தினராக வந்திருக்கிறார். அப்போது ராஜாஜி கொடுத்த சில அறிவுரை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற ஒரு சிறு கரு அப்போதுதான் தோன்றியிருக்கிறது. சுமார் 14 வயதாகும்போது வயலில் அறுப்பு முடிந்து கையில் பத்து கிலோ அரிசியுடன் பேருந்தில் வந்துகொண்டிருந்தவரை தாசில்தார் ஒருவர் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அப்போது அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. ஆனால் பத்து கிலோவரை பெர்மிட் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அரிசியைக் கொடுத்துவிட்டு வந்த ராமசாமி ஒரு 3 பைசா கார்டில் கலெக்டருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து கலெக்டர் தாசில்தாரைப் பணி இடைநீக்கம் செய்ய, தாசில்தார் இவர் வீடுவரை வந்து அரிசியைக் கொடுத்து, கடிதம் எழுதி வாங்கிச் சென்று வேலையில் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இந்தப் புள்ளி மிகவும் முக்கியமானது. நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும் என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது.

படிப்பு அதிகம் இல்லாத நிலையில் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி பி&சி மில்லில் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் ஏ.எம்.ஐ.ஈ படித்து இஞ்சினியர் ஆகியிருக்கிறார். இவருக்குத் திருமணம் செய்ய இவர் தந்தை 1,500 ரூ வரதட்சிணை கேட்டிருக்கிறார். அதை எதிர்த்து, பணம் வாங்காமல் அதே பெண்ணை திருமணத்துக்குக் குறித்த நாளிலிருந்து மூன்று நாள்கள் கழித்து திருப்பதியில் மணம் செய்திருக்கிறார். தந்தை இவரையும் மருமகளையும் வீட்டில் சேர்க்கவில்லை.

பி&சி மில்லில் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய சூழல் வந்தபோது அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்று மும்பை டாடா மில்ஸில் வேலைக்குச் சேர இருந்தார். அப்போது இவர் மனைவியும் வேலையில் இருந்ததால், சென்னையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ள, முழுநேர சமூக சேவகராக ராமசாமி ஆகிறார்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குசெய்வதைத் தன் பணியாக எடுத்துக்கொண்டார். அதிலிருந்துதான் அவருக்கு ‘டிராஃபிக்’ என்ற முன்னொட்டு கிடைத்தது. விகடனின் ஜூனியர் போஸ்ட் பத்திரிகைதான் அவருக்கு இந்தப் பட்டத்தைத் தந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர் காவல்துறையோடு மோத ஆரம்பிக்கிறார். காவலர்கள் மோட்டார் வாகன ஓட்டுனர்களிடமும் கடைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்குவதைக் கவனித்தவர் அதுகுறித்துப் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்திருக்கிறார். அதனால் காவலர்கள் அவர்மீது பொய் வழக்கு போட்டு ஏழெட்டு முறை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒருமுறை லாக்கப்பில் கட்டிவைத்து அடித்துள்ளார்கள். “போறவன் வர்ரவனெல்லாம் அடிப்பான்” என்றார் என்னிடம். நான்கைந்து நாள்கள் கழித்து பெயில் வாங்கிக்கொண்டு வெளியே வருவார். அப்போதுதான் லீகல் எய்ட்மூலம் வக்கீல்களைக் கொண்டு வாதாடுவது பற்றியெல்லாம் அறிந்திருக்கிறார். இம்மாதிரியெல்லாம் பொய் வழக்குகள் போட்டாலும் ஓய்ந்துபோகவில்லை ராமசாமி.

1990-களின் நடுப்பகுதியில்தான் இவர் நீதித்துறைக்கு ஒரு வழக்கை எடுத்துச் செல்கிறார். உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதையை காவல்துறை ஒருவழிப்பாதையாக மாற்றுகிறது. அவ்வாறு செய்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 22 பேர் விபத்தில் இறக்கின்றனர். அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ராமசாமி, ஒருவழிப் பாதை கூடாது என்று ஒரு பொதுநல வழக்கைக் கொண்டுவருகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அப்போது தொடங்கி இன்றுவரை பல முக்கியமான வழக்குகளை இவர் போட்டுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

மீன்பாடி வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று இவர் போட்ட வழக்கு முக்கியமானது. உரிமம் இல்லாத அந்த வண்டிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வருவதில்லை. எனவே எந்த வண்டிகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு அல்லது பிற இழப்புக்குக் காப்பீடு கிடைக்காது. ராமசாமி வம்படியாக இந்த வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரவில்லை. ஒன்று தடை செய்யவேண்டும் அல்லது இந்த வண்டிகளுக்கு உரிமம் தரப்படவேண்டும், காப்பீடும் வேண்டும் என்றுதான் வழக்காடுகிறார். அதேபோலத்தான் நடைபாதைக் கடைகள் தொடர்பான வழக்கும். நடைபாதைக் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. அவை அகற்றப்படவேண்டும். அதே நேரம் இதனால் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு வேறு இடம் தரப்படவேண்டும். இவ்வாறுதான் அவருடைய வழக்குகள் இருக்கின்றன.

எல்லாவிதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடுகளின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பரத் தட்டிகள், ஊருக்கு நடுவே வைக்கப்படும் வெடிக் கடைகள் போன்றவற்றுக்கு எதிராக ராமசாமி தொடுத்துள்ள வழக்குகள் மிக முக்கியமானவை. இந்த வழக்குகளை இவர் தொடர்கிறார். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் “வைகோ பல இடங்களில் அனுமதியின்று ஹோர்டிங் வைத்ததனால அவர்மீது வழகு போடப்போறேன்” என்றார். ஏற்கெனவே அஇஅதிமுக, திமுக, தேமுதிக என்று கட்சி வித்தியாசம் இன்றி வழக்கு தொடுத்துள்ளார்.

இவர் தொடுத்த வழக்குகளில் சகாயம் வழக்கு மிக முக்கியமானது. தொடர்ந்து சகாயம், அன்ஷுல் மிஸ்ரா என்று மதுரை கலெக்டர்கள் கிரானைட் முறைகேடுகள் குறித்து அறிக்கைகள் அனுப்பியபின், அவர்கள் மர்மமான முறையில் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதனை அடிப்படையாக வைத்து ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். உயர்நீதிமன்றம் சகாயத்தின் தலைமையில் இந்தப் பிரச்னைகளை ஆராயவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்கிறது. ராமசாமி கேவியட் மனு தாக்கல் செய்கிறார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறது. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. கோர்ட் தமிழக அரசுமீதே அபராதம் விதிக்கிறது. இன்று சகாயம் ஐ.ஏ.எஸ் முழுமையான அதிகாரத்தோடு முறைகேடுகளை விசாரிக்கப் போகிறார்.

ஒருமுறை கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குபோடக் கிளம்புகிறார். காவல்துறை ஏவி விடப்பட்டு அவர் பொய் வழக்கில் ரயிலிலிருந்து கைதுசெய்யப்படுகிறார். சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்கப்படாமல், அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மேஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்படுகிறார். வெள்ளிக்கிழமை இரவு. மேஜிஸ்திரேட் தானே ஒரு பேப்பரை அவரிடம் கொடுத்து அதில் “எனக்கு பெயில் கொடுங்கள்” என்று எழுதி வாங்கி திங்கள் அன்று பெயில் கொடுத்து செவ்வாய் விடுவிக்கப்படுகிறார். அந்தக் காவல்துறை அதிகாரிமீது வழக்கு தொடுக்கிறார் ராமசாமி. மூன்றாண்டுகள் கழித்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் வற்புறுத்தலின்பேரில் அந்த அதிகாரி மன்னிப்பு கோருகிறார்.

இப்போது அஇஅதிமுக ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுக்க அடுத்த வாரம் தில்லி செல்வதாக என்னிடம் சொன்னார் இவர்.

கொஞ்சம் அதீதமான ஆசாமிதான். ஆனால் சட்ட விதிமீறல்கள் என்றால் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தயாராக உள்ளார். தன் வழக்குகளைத் தானே வாதாடுகிறார். கோர்ட் ஸ்டாம்ப் டியூட்டி தவிர ஒரு பைசா செலவு செய்வதில்லை இவர். சில வழக்கறிஞர்கள் இப்போது இவர் சார்பாக வாதாட வருகிறார்கள். காசு வாங்கிக்கொள்ளாமல். மனுவை இவரே தயாரிக்கிறார். இவருக்கு அலுவலகம் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. கணினி, பிரிண்டர் எல்லாம் இலவசமாகக் கிடைத்துள்ளது. சில உணவகங்கள் இவருக்கு தினமும் இலவசமாக உணவு கொடுத்துவிடுகின்றன. இவருக்கு மட்டுமல்ல, இவருடன் செல்வோர் அனைவருக்கும் அந்த உணவகங்களில் உணவு இலவசம். இவருக்கு வாகனம் சில வியாபாரிகளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரும் ஒரு பைசா வாங்காமல் தினமும் வேலைக்கு வந்துசெல்கிறார்.

இவர்மீதான தாக்குதல்கள் காரணமாக, இவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் காவல் தரப்பட்டுள்ளது.

விகடன் பிரசுரம் இவருடைய வாழ்க்கையை ‘ஒன் மேன் ஆர்மி’ என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.

82 வயதில் இவ்வளவு சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கும் ஒரு நபரை நான் வேறு எங்கும் கண்டதில்லை. சட்டம் குறித்தும் அரசியலமைப்பு ஷரத்துகள் குறித்தும் இவர் தானாகவே படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இன்னும் சில இளைஞர்களை, முக்கியமாகப் பெண்களை தயார் செய்துகொண்டிருக்கிறார். ஃபாத்திமா என்ற அப்படிப்பட்ட ஒரு பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தினார் ராமசாமி.

அபூர்வமான மனிதர். நாங்கள் பேசியதில் ஒருசில பகுதிகள் மட்டும்தான் ராஜபாட்டை நிகழ்ச்சியில் வந்துள்ளது. முழுமையாகப் பாருங்கள்.


Tuesday, November 04, 2014

மதிப்புரை.காம்

நாங்கள் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் ஒரு “சமூக” வலைச் சேவை மதிப்புரை.காம். தமிழ்ப் புத்தகங்களின் மதிப்புரைகளுக்காக என்று தொடங்கப்பட்டிருக்கிறது. இது முழுவதும் வலைஞர்கள் பங்குபெற்று உருவாக்கும் தளம். சில புத்தகங்களை நாங்கள் வாசகர்களுக்குத் தரத் தயாராக உள்ளோம். அவை கிழக்கு பதிப்பகம் பதிப்பித்திருக்கும் புத்தகங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு மதிப்புரை வேண்டி வரும் புத்தகங்களும் அதில் அடங்கும். அவற்றின் பட்டியலை தளத்தில் சேர்க்கிறோம். அந்தப் புத்தகங்களில் எவையேனும் உங்களைக் கவர்ந்தால் அவற்றை வேண்டி நீங்கள் கோரலாம். எங்கள் செலவில் புத்தகத்தை இலவசமாக உங்கள் முகவரிக்கு அனுப்பிவைப்போம்.


நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். அதன் மதிப்புரையைக் குறிப்பிட்ட சில தினங்களுக்குள் எங்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். அதனை மதிப்புரை.காம் இணையத்தளத்தில் சேர்த்துவிடுவோம். புத்தகத்தை நீங்கள் வாழ்த்தலாம், திட்டலாம், என்னவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் குறைந்தபட்ச நாகரிகத்தை மட்டும் வேண்டுகிறோம். Libel, defamation ஆகியவை தவிர்த்து கருத்துகளை மட்டும் வெளியிடுகிறோம். கொஞ்சம் மொழியைச் சரிபடுத்தும் எடிட்டிங் உண்டு. அவ்வளவுதான்.

இதனை ஏன் ஆரம்பித்தோம்?

(1) பொதுவாக தமிழ் தினசரி, வார, மாத இதழ்களில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு. சில இலக்கியச் சிற்றிதழ்கள் தங்களுக்கு விருப்பமான சிலர் எழுதும் புத்தகங்களைத் தவிரப் பிற புத்தகங்களை சீண்டக்கூட மாட்டார்கள். தினசரிகள் பத்து வரிகளுக்குமேல் புத்தக மதிப்புரைகள் எழுதுவதில்லை. இன்னும் பலர் வரப்பெற்றோம் என்று பட்டியல் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

ஆனால் இணையம் கொடுத்திருக்கும் சுதந்தரமோ ஏராளம். விஸ்தாரமாக ஆயிரம் சொற்களில் நீங்கள் ரசித்துப் படித்த ஒரு புத்தகத்துக்குக் கறாராக அல்லது தாராளமாக ஒரு மதிப்புரையை எழுதிவிடலாம். அதனைப் படிக்கவும், படித்து முடித்தவுடன் அந்தப் புத்தகத்தை வாங்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள்.

(2) பல பதிப்பகங்கள் (எங்களையும் சேர்த்து) இதழ்களுக்கு தலா இரண்டிரண்டு பிரதிகள் அனுப்பி நொந்துபோயிருக்கிறோம். பெரும்பாலானவர்கள் நாங்கள் அனுப்பும் புத்தகங்களைக் கண்டுகொள்வதுகூடக் கிடையாது. அதில் மிக நல்ல புத்தகங்கள் இருந்தால் அவற்றை அள்ளி எடுத்துக்கொண்டு போக ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். இரண்டு வார்த்தை எழுதத்தான் ஆள் கிடையாது. அதற்கு இந்தத் தளம் பெரியதொரு மாற்றாக இருக்கும்.

(3) மதிப்புரைக்கான புத்தகங்களை எழுத்தாளரோ அல்லது பதிப்பாளரோ, யார் வேண்டுமானாலும் அனுப்பலாம். நாங்கள் ஒரு விஷயத்துக்கு கேரண்டி. நீங்கள் எங்களுக்கு அனுப்பிவைக்கும் புத்தகங்களின் பட்டியலை ஆன்லைனில் போட்டுவிடுவோம். அதை இந்தியாவுக்குள் யார் கேட்டாலும் எங்கள் செலவில் அஞ்சல் செய்துவிடுவோம். மதிப்புரை வந்ததும் உடனே அவற்றைப் பதிப்பித்தும் விடுவோம்.

(4) நீங்களாகப் படித்த புத்தகங்களின் மதிப்புரைகளையும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம். நாங்கள் தரும் புத்தகங்களுக்காக நீங்கள் காத்திருக்கவேண்டியதில்லை.

மதிப்புரைகள் தமிழ்ப் புத்தகங்களுக்கு மட்டுமே. மதிப்புரைகள் தமிழில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

இந்தத் தளத்தின்மூலம் உங்கள் புத்தகங்கள் சில நூறு அல்லது சில ஆயிரம் பிரதிகள் அதிகம் விற்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

Saturday, November 01, 2014

கருப்புப் பணத்தின் நதிமூலம் எது? - தி இந்து எடிட்டோரியல்

இன்று தி இந்து பத்திரிகையில் வந்த தலையங்கம் இது. முழுவதுமாகப் படித்துவிடுங்கள்.

இந்தத் தலையங்கத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. இதில் உள்ள சில தவறுகளைச் சுட்டிக்காட்ட முனைகிறேன்.
\\முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது. வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம். முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம். அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன! முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்?\\
நான்கைந்து விஷயங்களை ஒன்றாகச் சேர்த்துப் போட்டுக் குழப்பும் வித்தை இது.

1. “கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது.”

உண்மையே.

2. “வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம்.”

இந்த வாக்கியம் இங்கு ஏன் வருகிறது? வரிச் சலுகை வேறு, வரி ஏய்ப்பு வேறு. கணக்கில் காட்டப்படாத பணம்தான் கருப்புப் பணம். இங்கே அரசு தரும் வரிவிலக்கு, வரிச் சலுகை போன்றவை கணக்கில் தெளிவாகக் காட்டப்படுவதுதானே. அது எப்படிக் கருப்புப் பணத்தில் சேரும்? அதை ஏன் இங்கே போட்டு சேர்க்கிறார்கள்?

3. “முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம்.”

ரசீது தருகிறார்களா இல்லையா என்பதைவிட, வரும் வருமானத்தைச் சரியாகக் கணக்கு காண்பிக்கிறார்களா, நியாயமான வரி கட்டுகிறார்களா என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும். (ரசீது தரவேண்டியது குறித்து வேறு சட்டங்கள் உள்ளன. அது வேறு விஷயம்.) இங்கு “பெரிய பெரிய கடைகள்” என்ற ஆபரேட்டிவ் வார்த்தை இருப்பதைக் கவனியுங்கள். உண்மையில் சிறிய கடைகள்தான் இந்த ஜகஜ்ஜால வித்தையைச் செய்கிறார்கள். பெரிய கடைகள் நான் பார்த்தவரை நியாயமாக கம்ப்யூட்டர் பில் போட்டுத்தான் தருகிறார்கள். பில் இல்லாமல், விற்பனை வரி இல்லாமல் கேஷுக்குத் தங்கம் வாங்குவது நம்மூரில் சாதாரணமாகப் பெரும்பாலான கடைகளில் நடக்கிறது. ஆனால் தனிஷ்க்கில் அது சாத்தியம் இல்லை.

இந்த இடத்தில் “பெரிய” கடை என்று போட்டு யார்மீதோ பழியைத் தள்ளிவிடப் பார்க்கிறார்கள் தி இந்து நண்பர்கள். பிரச்னை பெரிய கடைகளில் இல்லை. சின்னக் கடைகளில்தான்.

4. “அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன!”

அரசியல்வாதிகள் - சரி.

அதிகாரவர்க்கத்தினர் - என்றால் அரசு அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டால் - ஓகே.

பெருமுதலாளிகள் என்று போடுவதன் நியாயம் என்ன? பெரு, சிறு, நடு முதலாளிகள் என அனைவரையும் போடுங்கள். ஏன் ஓரவஞ்சனை? உண்மையில் இன்றைய புதிய கார்ப்பரேட் முதலாளிகள்தான் அதிகமாக ‘கிளீன்’ ஆக இருப்பவர்கள். அதிலும் பட்டியலிடப்பட்ட பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தைக் கொண்டிருப்பவர்கள் என்றால், தம் நிறுவனத்தின் முழு வருவாயையும் ஒழுங்காகக் காட்டினால்தான், லாபத்தைச் சரியாகக் காட்டினால்தான், அவர்களுடைய நிறுவனப் பங்குகளின் விலை உயரும். பங்கு விலைகள் உயர்வதால் அவர்களுக்குக் கிடைக்கும் பணம் அதிகம். எனவே வருவாயைக் குறைத்துக் காட்டுவதில் அவர்களுக்கு லாபம் ஏதும் இல்லை. மேலும் சிறுபான்மைப் பங்குதாரர்கள் இந்த விஷயம் தெரிந்தால் கொதித்தெழுந்துவிடுவார்கள்.

ஆனால் பங்குச்சந்தைப் பட்டியலில் இல்லாத நிறுவனங்களின் விஷயம் வேறு. அங்கு லாபத்தைக் குறைத்துக் காட்டினால் அதன் பலன் முழுதும் முதலாளிக்கே போய்ச் சேரும். அவர்கள் இரண்டு கணக்குப் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றுவது எளிது.

5. “முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்?”

என்ன செய்யவேண்டும்? தடுத்து நிறுத்தவேண்டும். இதனால் நம் அரசுக்கு ஏற்படும் நட்டம், வரி வருமான இழப்பு மட்டுமே. ஆனால் இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு ஏதோ ஒருவிதத்தில் நாட்டுக்கு நன்மை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டுக்கு ஓடும் பணம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் ஓட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறது.

கேள்வி இதுவா, அதுவா என்பதில்லை. இரண்டையுமே அடைக்கவேண்டும்.
என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு தி இந்து தலையங்கம் உருப்படியான வழிமுறை எதையும் சொல்லவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை வரம்பை விரிவாக்கவேண்டும், கடுமையான தண்டனை தரவேண்டும் போன்ற பொதுப்புத்தி விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. அதைவிட மோசம், இறுதிப் பத்தியில் உள்ள இந்த அறிவுரை:
\\நாம் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகளும் பொருளாதார அமைப்பும் தேர்தல் ஜனநாயகமும் வரி ஏய்ப்பையும் கருப்புப் பணத்தையும் அவ்வளவு லேசில் ஒழித்துவிடாது என்பதே உறுதி.\\
இதைப்போல ஜனநாயகத்துக்கு எதிரான, அபத்தமான கருத்தை எங்குமே பார்க்க முடியாது. கம்யூனிச நாடுகளில்தான் வரி ஏய்ப்பும் கருப்புப் பணமும் இருக்காது என்பதுபோன்ற கருத்தை இந்தத் தலையங்க எழுத்தாளர் கொண்டிருக்கிறார். கருப்புப் பணத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ள பெரும்பாலான மேலை நாடுகள் எல்லாமே தேர்தல் ஜனநாயகத்தையும் முதலீட்டிய உற்பத்தி முறைகளையும் பொருளாதார அமைப்பையும் கொண்டவையே. நம்மாலும் அதனைச் செய்ய முடியும்.

Thursday, October 23, 2014

கத்தி கபடா

நான் கத்தி படத்தை இன்னமும் பார்க்கவில்லை. இன்று திமுக அன்பர்கள் ஒரு சின்ன பிட் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார்கள். அதில் 2ஜி பற்றி வருகிறது. மேலும் தொலைக்காட்சியில் டான்ஸுக்கு மார்க் போடுவீர்களே தவிர, ஒரு விவசாயியின் தற்கொலையைப் பற்றிப் பேச மாட்டீர்கள் என்று வருகிறது. அது கலைஞர் டிவியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியைக் குறிக்கிறது என்று அன்பர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு. என் கவலை எனக்கு.

அந்த ஆறு நிமிடப் பேச்சு முழுவதுமே அபத்தம். எதை சினிமாட்டிக்காகச் சொன்னால் மக்கள் கை தட்டுவார்கள், வசூல் அள்ளும் என்பதுதான் தமிழ் சினிமாவின் இலக்கணம். யாருக்கும் மனத்தில் எதுவும் பதியப்போவதில்லை. என் பங்குக்கு, அதில் உள்ள சில உளறல்களை மட்டும் குறிப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

(1) ஆறு நதிகளை மூடிட்டாங்க, இத்தனை குளத்தை மூடிட்டாங்க, அத்தனை ஏரியை மூடிட்டாங்க....

யாருங்க சார்? கார்ப்பரேட்டா? இந்த கார்ப்பரேட் என்ற பாவப்பட்ட வில்லன் இந்தக் கோமாளிகளிடம் மாட்டிக்கொண்டு படவேண்டிய துன்பம் இருக்கிறதே, தாங்க முடியவில்லை. நீர்வளம் காக்கப்படாமல் போனதில் பெரும் பங்கு அரசுகளுக்கும் கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும்தான். கார்ப்பரேட் பாவிகளை மன்னித்துவிடுவோம். சில இடங்களில் ஆற்று நீரை மாசுபடுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அதை விடுத்துப் பார்த்தால் மக்கள் தங்கள் பாரம்பரிய நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறியுள்ளனர். மழை நீர் சேமிப்பு என்பதை கிராமங்கள் முழுவதுமாக மறந்தன. இன்று திண்டாடுகிறார்கள். ஆற்று நீரைப் பொருத்தமட்டில், மேல்நிலையில் அதிக நிலம் விவசாயத்துக்கு வருவதால் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நகரங்கள் பெரிதாகும்போது நகர மக்கள் குடிக்கத் தண்ணீர் வேண்டும். ஒரு சில வகைத் தொழிற்சாலைகளுக்கு நிறைய தண்ணீர் தேவை. எலெக்ட்ரானிக் சிப், சிமெண்ட், உரம் போன்ற அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் நீர் தேவை. மொபைல் ஃபோன் வேண்டாம், வயலுக்கு உரம் வேண்டாம், வீடு கட்ட சிமெண்ட் வேண்டாம் என்று விஜய் உரக்கச் சொல்லட்டும். தண்ணீரை வயல்கள் வேண்டும் அளவுக்குத் தந்துவிடலாம்.

நீர்ப் பங்கீடு என்பது முக்கியமான பிரச்னை. நீண்டகால நோக்கில் நீரைச் சேமித்துவைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியமானது. ஆனால் அபத்தக் களஞ்சியமாய் வீரவசனம் பேசிவிட்டுப் போவதில் பிரயோசனமே இல்லை.

(2) மீத்தேன் பிரச்னை

இது உண்மையான பிரச்னை. நாகை/தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் பெட்ரோலியம் தோண்டுவதால் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனைச் செய்தது ஏதோ ‘தனியார்’ கார்ப்பரேட் அல்ல. நம் அரசின் ஓ.என்.ஜி.சி. அதாவது நமக்கு நாமே குழிதோண்டிக்கொள்ளும் திட்டம் இது. ஆயில் வேண்டுமென்றால் வயல்கள் பாதிப்படையும். வேறு வழியே இல்லை. பிரச்னை, அரசும் அரசியல்வாதிகளும் மக்களிடம் கலந்து பேசாமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதன் விளைவு. இதில் அரசியல்வாதிகளை நோக்கிச் சுட்டாமல், யாரோ ஒரு தனியார் கார்ப்பரேட்மீது கை காண்பித்துவிட்டு தப்பிப்பது சாமர்த்தியம் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

மீத்தேனைக் கடத்தப் பதிக்கும் குழாய்கள் வயல்கள் ஊடாகச் செல்லலாமா கூடாதா? சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபத்தைப் பார்க்கும்போது, இந்தக் குழாய்களை வயல்கள் வழியாகப் பதிக்காமல் சாலைகள் அல்லது தரிசுகள் வழியாகப் பதிக்கலாம். எண்ணெய்க் குழாய்களும் எரிவாயுக் குழாய்களும் அமைப்பது முக்கியம். நம் விவசாயிகளுக்கும் இவை பயன் தரும். இதற்கும் போய் கார்ப்பரேட்டுகள்மீது எதற்குத் தாக்குதல்? மீத்தேன் வாயுக் குழாய் பதிக்கும் வேலையை அரசு நிறுவனமான கெயில்தான் செய்கிறது.

மாயவரத்தான் ஃபேஸ்புக் பதிவை அடுத்து, புதிதாக எழுதிச் சேர்த்தது:

“மீத்தேன் விவகாரம்” என்று நான் எழுதியதில், கொச்சியிலிருந்து பெங்களூருக்கு தமிழகம் வழியாக அரசு நிறுவனமான கெயில் நிறுவனம் பதிக்கும் குழாய்களைப் பற்றிய பிரச்னை என்று நான் எடுத்துக்கொண்டேன். மாறாக படம், தஞ்சாவூர் மாவட்டத்தில் கோல் பெட் மீத்தேன் எடுக்கும் திட்டம் குறித்துப் பேசுகிறது. அதில் ஒரு தனியார் கம்பெனி ஈடுபட்டிருக்கிறது. தரையிலிருந்து ஹைட்ராலிக் பிராக்கிங் மூலம் மீத்தேன், ஷேல் எரிவாயு ஆகியவற்றை எடுக்கும்போது கட்டாயமாக அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும். நரிமணத்தில் எண்ணெய் எடுக்கும்போது இதுதான் நிகழ்ந்தது. இங்கு அரசோ, தனியாரோ, இதனைச் செயல்படுத்துவதை அனுமதிக்காமல் மக்கள் போராடினால், அதில் மக்கள் பக்கம் முழு நியாயம் உள்ளது.

(3) கோக கோலா, தாமிரவருணி

நியாயமான பொங்குதல். அதே கோக கோலா கம்பெனிக்காக விஜய் விளம்பரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று நான் சொல்ல மாட்டேன், வினவு சொல்லும். தண்ணீரைப் பங்கிடுவதில், கோக கோலா போன்ற கம்பெனிகளுக்கு முதல் உரிமையாக இல்லாமல் கடைசி உரிமையாகத் தருவதில் எனக்குப் பிரச்னை இல்லை. எந்த அளவுக்குத் தண்ணீர் எடுக்கிறார்களோ அதைவிட அதிகமாகச் சேமிக்கவேண்டும் என்ற கடுமையான கட்டளைகளை அவர்களுக்கு இடலாம்.

(4) தொழிற்சாலையே வேண்டாம்னு சொல்லலை... கேரட்டிலிருந்து செய்யும் ஃபேர்னெஸ் கிரீம் வேண்டாம்னு சொல்றோம், etc. etc.

யார் எந்தத் தொழிற்சாலையைக் கட்டலாம், கூடாது என்று சொல்லும் உரிமை கதாநாயகர்களுக்கு வேண்டுமானால் சினிமாவில் இருக்கலாம். அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்துள்ள உரிமைகளுள் ஒன்று, சட்டத்துக்கு உட்பட்டு எந்தத் தொழிலையும் செய்து பணமீட்டலாம் என்பது. எனவே எதற்குத் தொழிற்சாலை கட்டவேண்டும், எதற்குக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் எந்தப் பொருளைப் பயன்படுத்துவது, எதை பகிஷ்கரிப்பது என்று யார் வேண்டுமானாலும் முடிவு செய்யலாம்.

(5) 5,000 கோடி கடன் வாங்கிய ஒரு தொழிலதிபர், இல்லைன்னு கைவிரிச்சான். தற்கொலை பண்ணிக்கலை. கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்துக்கலை. ஆனால் 5,000 வாங்கின விவசாயி, பூச்சி மருந்து குடிச்சுச் சாகறான்.

சிறு விவசாயி, சிறு தொழில்முனைவோன், நடுத்தர வர்க்க மாதச் சம்பளக்காரன் என்று எல்லோருக்குமே கடன்களைக் கட்டுவதில் உள்ள சிரமம் பெரும் பணக்காரர்களிடம் இல்லை. முதலில் விஜய் மல்லையா நேரடியாகக் கடன் வாங்கவில்லை. அவருடைய நிறுவனம் வாங்குகிறது. இந்த நிறுவனங்களுக்கு limited liability companies என்று பெயர். இந்த நிறுவனத்தின் கடன்களுக்காக இந்த நிறுவன உரிமையாளர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியாது. (அவர்கள் சொந்த கேரண்டி கொடுத்திருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னை எழும்.) அதே உரிமையாளர்கள் வேறு சில கம்பெனிகளை நடத்தி அவற்றில் லாபம் சம்பாதித்து சந்தோஷமாக இருக்கலாம். கம்பெனி சட்டம் இப்படித்தான் சொல்கிறது.

ஆனால் சொந்தப் பெயரில் கடன் வாங்கும்போது அதைக் கட்டவேண்டிய தேவை அந்தத் தனி நபரிடம் இருக்கிறது. அதனால்தான் வான் பொய்க்கும்போது அல்லது விவசாயம் திண்டாடும்போது கடன் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பல சிறு விவசாயிகளின் பிரச்னையே subsistence farming. அவர்களின் மிகச் சிறிய விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானம் அவர்கள் உயிர் வாழப் போதுமானதல்ல. அவர்கள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதுதான் நல்லது. இதனை உணர்வுரீதியாக மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல.

ஆண்டுக்காண்டு விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவதுதான் பொருளாதாரத்தின் அவசியமுமாகும். அவர்கள் திறன்களைப் பெற்று உற்பத்தி அல்லது சேவைத் துறையில் வேலை பெறவேண்டும். நாட்டின் 20% அல்லது அதற்குக்கீழ்தான் விவசாயத்தில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், பிறருக்கும் நல்ல வேலை இருக்கும். விவசாயத்திலிருந்து வெளியேறிய மக்கள் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு ஒரே வருத்தமாக செண்டிமெண்ட் போடவேண்டிய அவசியம் என்ன? அவர்கள் அனைவரும் சரியான செயலைச் செய்திருக்கிறார்கள் என்று பாராட்டவேண்டும்.

விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்கள் சரியான திறன் இல்லாவிட்டால் நிச்சயம் கஷ்டப்படுவார்கள். எனவேதான் விவசாயக் கூலிகளாக இருப்போர் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வேறு வேலைகளை நோக்கி அனுப்பவேண்டும். இதில் அமைப்புரீதியாகப் பல சிக்கல்கள் உள்ளன. லைக்கா, முருகதாஸ், விஜய் ஆகியோர் இந்தச் சினிமாவிலிருந்து பெறும் லாபத்தின் ஒரு பகுதியை விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் நன்கு படித்துத் திறன் பெறும் வகையில் செலவிட்டார்கள் என்றால் நாம் உண்மையிலேயே மகிழ்வோம்.

Tuesday, October 21, 2014

அம்மா மொபைல்?

நோக்கியாவின் சென்னைத் தொழிற்சாலை மூடப்படப்போகிறது. இந்த ஆலையின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆட்சியாளர்களைச் சந்தித்து இந்த ஆலையைத் தமிழக அரசே எடுத்துக்கொண்டு, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொருள்களில் செல்பேசியையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்கிறார்கள். அம்மா மொபைல் என்று அழைக்கவேண்டுமாம்.

எந்த ஆலை மூடப்பட்டாலும் அது சோகமே. பல ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும். நோக்கியா வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. இதன் காரணமாக, நோக்கியா தன்னையே மைக்ரோசாஃப்டுக்கு விற்கும்போது இந்த ஆலையையும் சேர்த்து விற்க முடியவில்லை. ஏனெனில் ‘தலைவலி’ ஒன்றை விலைக்கு வாங்க மைக்ரோசாஃப்ட் தயாராக இல்லை.
இந்நிலையில் சென்னை (திருப்பெரும்புதூர்) நோக்கியா தொழிற்சாலையின் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்?

(1) முற்றிலுமாக இழுத்து மூடுதல். இதனால் நோக்கியா பங்குதாரர்கள் பாதிப்படைவார்கள். ஆனால் அவர்களைப் பொருத்தமட்டில் ஜான் போனாலென்ன, முழம் போனாலென்ன நிலைதான். ஏதோ எப்படியோ கம்பெனியை மைக்ரோசாஃப்டுக்கு விற்று, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் இப்போது சென்னை ஆலையை மறந்தேபோயிருப்பார்கள்.

அடுத்து தொழிலாளர்கள். தனிப்பட்ட முறையில் வேலையை இழப்பது என்பது எப்போதுமே ஒரு நபருக்குக் கடினமானதுதான். அந்த 4,000/5,000 ரூபாயை நம்பித்தான் ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் அதற்காக அந்த ஆலையை அப்படியாவது திறந்து வைத்திருக்கவேண்டும் என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை. இந்தத் தொழிலாளர்கள் வேறு வேலை தேடிப்போவதுதான் உசிதம். நோக்கியா ஆலையில் வேலை செய்தவர் என்பதால் வேறு மின்னணுப் பொருள் உற்பத்தி ஆலையில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கிடைக்கும் வேறு வேலையை எடுத்துக்கொண்டு, சிறிது சிறிதாக வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவேண்டும்.

(2) அரசு இந்த ஆலையைக் கையகப்படுத்துதல். இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு தனியார் நிறுவனமே, அதுவும் ஒரு காலத்தில் மொபைல் உலகைக் கட்டியாண்ட ஒரு நிறுவனமே இம்மாதிரியான சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் அரசு முதல் நாளே ஆடிப்போய்விடும். எத்தனை கோடியை இதில் கொட்டினாலும் அரசுக்கு ரிட்டர்ன்ஸ் இருக்கவே இருக்காது. நம்மூர் இடதுசாரிகள் இதைச் சிந்திக்கவே மாட்டார்கள். உண்மையில் இந்த ஆலையில் வேலை இழக்கப்போகும் அனைவருக்கும் மாதா மாதம் சம்பளத்தை வெறும் உதவித்தொகையாகக் கொடுத்தால் அரசுக்கு என்ன பனம் செலவாகுமோ அதைப் போலப் பல மடங்கு பணம் இந்த ஆலையைக் கையகப்படுத்தி நடத்துவதால் இழக்கப்படும். எனவே தொழிற்சங்கத் தலைவர்களின் ‘அம்மா மொபைல்’ திட்டத்தை நாம் எதிர்க்கவேண்டும்.

மேலும் இன்று ‘அம்மா’ எதிர்கொண்டிருக்கும் இருப்பியல் பிரச்னைகளில் ‘அம்மா மொபைல்’ போன்ற அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்பே இல்லை.

(3) வேறு தனியார் நிறுவனத்துக்கு இந்த ஆலையை விற்பது. இது நடக்கச் சாத்தியம் இப்போது குறைவு என்று தோன்றுகிறது. இன்று பெரும்பாலான ஃபோன்கள் சீனா, தாய்வான், கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. நோக்கியா தன் ஆலையை சென்னையில் அமைக்க முன்வந்தபோது அதனிடம் ஒரு பெரும் தொலைநோக்குத் திட்டம் இருந்தது. (அது உருப்படாமல் போனது என்பது வேறு விஷயம்.) எனவே வேண்டிய அளவு பணத்தை முதலீடு செய்ய அது அப்போது தயாராக இருந்தது. இன்றைய இந்திய மொபைல் ஃபோன் விற்பனையாளர்கள் எவ்வளவு பணத்தை ஓர் ஆலையில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் விரும்பியிருந்தால் இத்தனை நாள்களில் தமிழக அரசிடமும் நோக்கியாவிடமும் பேசியிருப்பார்கள். ஏமாற்றிய வரியை ஒழுங்காகக் கட்டிவிட்டு, ஆலையை விற்றுவிட்டுப் போகலாம் நோக்கியா. அப்படி வாங்க யாரும் தயாராக இல்லை என்பது தெரிகிறது.

(4) வேறு மின்னணுப் பொருளைத் தயாரிக்கும் ஆலையாக இந்த ஆலையை மாற்றுவது. இதுவும் சாத்தியமா என்று தெரியவில்லை.

கடைசியில், இந்தத் தொழிற்சாலையின் பல்வேறு இயந்திரங்கள் காயலான் கடைக்கு அடிமாட்டு விலையில் விற்கப்படப்போகின்றன என்றுதான் தோன்றுகிறது.


இதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் வெறும் போராட்டங்களை நிகழ்த்துவதால் பயன் ஏதும் இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இதனைக் காரணமாகக் காட்டி புதிய பொருளாதாரக் கொள்கையில் பயனற்ற தன்மை பற்றிப் பேசுகிறார்கள். லிபரல் பொருளாதாரக் கொள்கையில் ஆலைகள் திறக்கப்படும், மூடப்படும். எதுவும் சாசுவதம் கிடையாது. அவை உருவாக்கும் பொருள்கள் மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கும்வரைதான் அந்த நிறுவனத்துக்கு மதிப்பு. அதில் வேலை செய்வோருக்குச் சம்பளம். நோக்கியா தன் ஸ்ட்ரேட்டஜியில் பிழை செய்த காரணத்தால் மக்கள் நோக்கியாவை விட்டு நகர்ந்தார்கள். 

இந்த ஆலை தொடரவேண்டும் என்று விரும்பும் எத்தனை பேர் இந்த ஆலை உருவாக்கும் மொபைலை மட்டுமே வாங்குவோம் என்று சொல்லத் தயார்?

Creative destruction என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

Wednesday, October 15, 2014

புத்தக வாசிப்பு வாரம்

இன்று காலை பிர்லா கோளரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். வாசிப்புத் திறன் மேம்பாட்டுக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் விதத்தில் பள்ளிக்கூடங்களில் புத்தக வாசிப்பு வாரம் என்று நடத்துகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொடக்க விழா இது. சென்ற ஆண்டு இதே நிகழ்ச்சிக்காக சில பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளிடம் கதைகள் படித்துக் காண்பித்தேன். அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வண்ணக் கதைப் புத்தகம் கொடுத்தேன்.

இன்றைய நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் இரா.நடராசன், பாஸ்கர் சக்தி, விழியன் ஆகியோரும், சினிமா இயக்குநர் பா.ரஞ்சித்தும் கலந்துகொண்டனர். வேறு இருவர் கலந்துகொள்வதாக இருந்து சில அபத்த அரசியல் காரணங்களுக்காகக் கலந்துகொள்ளவேண்டாம் என்று வற்புறுத்தப்பட்டதால் மேடைக்கு வரவில்லை. அதில் ஒருவர் பார்வையாளராகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் பின்னர் உரையாடினார்.

விழா இறுதியில் நான் கோட்டூர் மாநகராட்சிப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மிக சுவாரசியமான கலந்துரையாடல் அது. அதிலிருந்து ஒரு சில துளிகள் மட்டும்:

* அனைவருக்கும் பிரிட்டானியா ஆரஞ்ச் கேக் பேக்கெட்டும் ஆப்பிள் ஜூசும் கொடுத்திருந்தார்கள். சில மாணவர்கள் குப்பைகளைக் கீழே போட்டிருந்தனர். நானும் சில மாணவர்களும் கீழே விழுந்துகிடந்த குப்பைகளையெல்லாம் எடுத்து குப்பைத்தொட்டியில் போடப்போனோம். உடனே அனைத்து மாணவர்களும் அருகில் இருந்த குப்பைகளைத் திரட்டி எடுத்துக்கொண்டனர். ‘பிரதமரின் தூய்மை இந்தியா’ திட்டம் பற்றி உடனே பலர் நினைவுகூர்ந்தனர்.

* படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்ற கேள்வியை ஒரு மாணவி எழுப்பினார். வேலை என்றால் என்ன, படிப்புக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு ஆகியவை குறித்து விளக்கினேன். அவர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றேன். அவர்கள் 12-ம் வகுப்பு வரும்போது இலவசமாக கம்ப்யூட்டர் தருவார்கள், அதனை அவர்கள் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றேன். உடனேயே ஒரு மாணவன் “இப்பத்தான் அம்மாவை ஜெயிலில் போட்டுவிட்டார்களே, இனி கம்ப்யூட்டர் எப்படிக் கிடைக்கும்?” என்று கேட்டான். அதற்கு நான், வேறு யார் முதல்வராக இருந்தாலும் இந்தத் திட்டம் தொடரும், உங்களுக்கெல்லாம் கட்டாயமாக கம்ப்யூட்டர் கிடைக்கும் என்றேன். [இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும்...] அந்த மாணவனும் இன்னும் சிலரும் இதனை நம்பவில்லை. இனி வரும் அரசுகளும் இப்போதிருக்கும் அரசும் தொடர்ந்து இந்த நற்செயலை மட்டுமாவது தொடர்ந்தால் நல்லது.

* நான் பேசிய அனைவருக்கும் சினிமா பிடித்திருக்கிறது, தொலைக்காட்சி பிடித்திருக்கிறது. ஆனால் உண்மையில் புத்தகங்கள் குறித்து அவர்களுக்கு அவ்விதமான சந்தோஷம் இல்லை. ஒரு சினிமாவைப் பார்க்கவேண்டும் என்று எதை வைத்துத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டேன். தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் திரை விமர்சனம் நிகழ்ச்சியை வைத்து என்று பலர் சொன்னார்கள். அதற்கு இணையான புத்தக விமர்சன நிகழ்ச்சி ஏதும் இல்லாதது ஒரு பெரிய குறைபாடுதான். தொலைக்காட்சியில் இல்லாவிட்டாலும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

* நான் பேசிய மாணவர்கள், வகுப்பறை உண்மையிலேயே போரடிக்கிறது என்றார்கள். அனைவரும் தங்களுக்குப் பிடித்தமானவை என்று சொன்னது: விளையாடுதல், சினிமா பார்த்தல், தொலைக்காட்சி பார்த்தல், படம் வரைதல், பாட்டு கேட்டல், வெட்டிக்கதை பேசுதல். (வெட்டிக்கதை என்ற பதம் அவர்களுடையது. என்னுடையதல்ல.) புத்தகங்கள் அறிவைத் தரும், புத்தகங்கள் உன்னைச் சிறந்தவனாக்கும் என்றெல்லாம் சொல்லாமல், புத்தகங்களும் மகிழ்ச்சியைத் தரும் என்றேன். எம்மாதிரியான புத்தகங்களைப் படித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதைப் பற்றி கோடிட்டுக் காட்டினேன். கையோடு கொண்டு சென்றிருந்த கிண்டில் கருவியை அவர்களிடம் கொடுத்து அதில் எம்மாதிரியான புத்தகங்களை வைத்துப் படித்துவருகிறேன் என்று காட்டினேன். தேவை: ஆளுக்கு ஒரு கிண்டில் போன்ற (புத்தகம் மட்டும் படிக்க உதவும்) கருவி + பல ஆயிரம் தமிழ்ப் புத்தகங்கள். சில லட்சம் மாணவர்களுக்கு இக்கருவியை இலவசமாகக் கொடுப்பதன்மூலம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். (நடக்ககூடிய காரியமா என்று தெரியவில்லை...)

Monday, October 06, 2014

ராஜபாட்டை - தந்தி டிவி - நேர்காணல்கள்

நான் தந்தி தொலைக்காட்சியில் வாராந்திர நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறேன். இதுவரை ஐந்து பேருடன் பேசியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் யூட்யூபில் கிடைக்கின்றன.

அனைத்தையும் தொகுத்து என் வலைப்பக்கம் ஒன்றில் வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

சுப்பிரமணியன் சுவாமி, சத்குரு ஜக்கி வாசுதேவ், சரத்குமார், க்ரேஸி மோகன், விக்கு விநாயக்ராம் ஆகியோர் முதல் ஐந்து வாரத்தின் விருந்தினர்கள்.

நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை செல்லும். கடந்த வார நிகழ்ச்சிகள்  சனி மதியம் மறு ஒளிபரப்பாகும்.

Friday, October 03, 2014

அமேசான் - நெட்ஃப்லிக்ஸ்


சமீபத்தில் படித்து முடித்த இரண்டு புத்தகங்கள், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் இரண்டு நிறுவனங்களும் உருவான கதையை விளக்குவன.

கடந்த சில ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிய நிறுவனங்கள் சிலவற்றில் இவ்விரண்டையும் சொல்லலாம்.

நாம் பொருள்களை வாங்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது அமேசான். அதன் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைவு என்றாலும் அடுத்த பத்தாண்டுகளில் இணையம் வழி வர்த்தகம்தான் கோலோச்சப்போகிறது என்பது தெளிவு. திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் என்று கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தையும் இப்போதும் இனியும் நாம் எப்படி நுகரப்போகிறோம் என்பதை முற்றிலுமாக மாற்றியமைத்த நிறுவனம் நெட்ஃப்லிக்ஸ். இந்தியாவில் அமேசானைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக்கூட நெட்ஃப்லிக்ஸ் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் அமேசானைவிட நெட்ஃப்லிக்ஸ்தான் இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என்றால் அந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல. அவைபோன்ற, அவற்றின் வழிமுறையில் தொழிலில் இறங்கியிருக்கும் பிற நிறுவனங்களும்தான். ஆனால், இந்த இரண்டும் அவரவர் துறையில் முன்னோடிகள் என்பதால் அவர்கள்தான் தம் துறையின் பாதையைக் கட்டியமைக்கிறார்கள்.

மக்கள் வாங்கும் அனைத்துப் பொருள்களையும், அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு க்ளிக்கில் வாங்க, பொருள்கள் அவரவர் வீடுகளுக்குக் போய்ச் சேரும் இணைய வணிக முறையை அமேசான்தான் உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசென்றது. இன்று நானும்கூடத்தான் இணையம் வழியாகத் தமிழ்ப் புத்தகங்களை விற்கிறேன். ஆனால் அமேசானும் நானும் ஒன்றாக முடியுமா? இது நிகர விற்பனை பற்றியதல்ல. அதன் அடிப்படையில் இருக்கும் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் தகவல்களிலிருந்து அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போலப் பொருள்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது, பிற போட்டியாளர்களைவிட வாடிக்கையாளரின் தேவையை மிகச் சரியாக நிறைவேற்றுவது என்று பலவற்றைச் சொல்லலாம்.

அமேசான் புத்தகங்களை விற்பதிலிருந்து தொடங்கினாலும் இன்று பலவிதப் பொருள்வகைகளையும் விற்பனை செய்கிறார்கள். சோனி போன்றோர் மின்புத்தகங்களை அறிமுகப்படுத்தினாலும் அமேசானுக்கு மட்டும்தான் அதனை எப்படி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பது தெரிந்திருந்தது. இன்று கிண்டில் மின்புத்தகப் படிப்பான் கருவிக்குப் போட்டியாக சந்தையில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றுமே இல்லை. இது வெறும் கருவி வடிவமைப்பு பற்றியது மட்டுமல்ல. புத்தகம் படிப்பவர்களின் மனத்தைப் புரிந்து அவர்களுடைய தேவையை மிகச் சரியாக வடிவமைப்பது, அவர்கள் விரும்பும் அனைத்துப் புத்தகங்களையும் அவர்களிடம் கொண்டுசேர்ப்பது என அனைத்தையும் உள்ளடக்கியது.

கிண்டில் படிப்பான் இல்லாவிட்டால் இன்று நான் படிக்கும் புத்தகங்களின் ஒரு சிறு விழுக்காட்டுக்குமேல் நான் படித்திருக்க மாட்டேன். அச்சாகிக் காணாமல் போன பல புத்தகங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறது கிண்டில்.

அமேசான் எவ்வாறு உருவானது, அதனை உருவாக்கிய ஜெஃப் பேய்சோஸ் எப்படிப்பட்ட நபர், அமேசான் தன் நிலையை அடைந்தது எப்படி, அதன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன போன்ற பலவற்றையும் பிராட் ஸ்டோன் ஆராய்ந்து மிக அற்புதமாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். 

இந்தியாவின் ஃப்லிப்கார்ட், அமேசானின் தரத்திலானதா? அதன் அடிப்படைத் தொழில்நுட்பத்தால் அமேசானுடன் போட்டி போட முடியுமா? அமெரிக்காவில் சிறப்பாக ஒரு தொழிலைச் செய்வதாலேயே இந்தியாவிலும் அமேசானால் வெல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இனி வரும் காலத்தில்தான் நமக்குக் கிடைக்கும்.
அமேசான், லாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடக்கும் கம்பெனி. அது தன் பணத்தையெல்லாம் மேற்கொண்டு தொழிலில் முதலீடு செய்துகொண்டே வருகிறது. ஜெஃப் பேய்சோஸால் அவரது பங்குதாரர்களைச் சமாளிக்க முடிகிறது. குறைந்தபட்சம் இப்போதைக்காவது. ஃப்லிப்கார்ட்டால் அது சாத்தியமா, இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

இணைய வர்த்தகத்தின் ஆர்வம் கொண்டவர் என்றால் நீங்கள் கட்டாயம் இந்தப் புத்தகத்தைப் படித்தே ஆகவேண்டும்.


இணைய வர்த்தகத்துக்கு அமேசான் எப்படியோ, திரைப்படங்களுக்கு நெட்ஃப்லிக்ஸ் அப்படிப்பட்டது. பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் என்ற புத்தகக் கடைச் சங்கிலியை இணைய வர்த்தகத் திறனால் அழித்து வளர்ந்தது அமேசான். பிளாக்பஸ்டர் என்ற வீடியோ வாடகைக் கடைச் சங்கிலியை அழித்து வளர்ந்தது நெட்ஃப்லிக்ஸ்.

இந்தியாவில் ஒரு கட்டத்தில் தெருவுக்குத் தெரு ஒரு வீடியோ வாடகைக் கடை இருந்தது. A2 சசிகலாகூட அப்படியொரு கடை வைத்திருந்தவர்தான். வி.எச்.எஸ் கேசட்டுகளை வாடகைக்கு எடுத்துவந்து வீடியோ பிளேயர்மூலம் படம் பார்த்துவந்தோம். அமெரிக்காவில் இப்படிப்பட்ட பல சிறு சிறு கடைகள் இருந்தன. இவற்றுக்கிடையே, பிளாக்பஸ்டர் என்ற சங்கிலி நாடு முழுதும் பரந்துவிரிந்த ஒரு வீடியோ வாடகைக் கடையாக இருந்தது.

வீட்டில் இருந்துகொண்டே படம் பார்க்க விரும்புவோருக்கான சேவையை நெட்ஃப்லிக்ஸ் கொடுக்க விரும்பியது. ஆனால் வி.எச்.எஸ் கேசட்டை அவ்வாறு அனுப்பவது சிரமமானதாகவும் செலவு அதிகம் பிடிப்பதாகவும் இருந்தது. அவர்களுடைய அதிர்ஷ்டம், டிவிடி தொழில்நுட்பம் அப்போதுதான் அறிமுகமானது. திரைப்பட நிறுவனங்கள் தம் படங்களை டிவிடியில் வெளியிட, நெட்ஃப்லிக்ஸ் டிவிடியை வாடகைக்குத் தர ஆரம்பித்தது. அமெரிக்க அஞ்சல் துறை நம்மூர் உருப்படாத அஞ்சல் துறை போல் கிடையாது. நெட்ஃப்லிக்ஸிலிருந்து உங்கள் வீட்டுக்கு டிவிடியை எடுத்து வந்து தெருவார்கள்; கூடவே நீங்கள் பார்த்து முடித்த டிவிடியை உங்கள் வீட்டிலிருந்து எடுத்து, நெட்ஃப்லிக்ஸ் அலுவலகத்துக்கு அனுப்புவதையும் செய்வார்கள். ஒரு கட்டத்தில் அமெரிக்க அஞ்சல் துறையின் நம்பர் ஒன் கஸ்டமராக நெட்ஃப்லிக்ஸ் இருந்தது.

சாதாரண டிவிடி வாடகைத் தொழிலை வேறு யாரேனும் நெட்ஃப்லிக்ஸைவிடச் சிறப்பாகச் செய்திருக்க முடியாதா? ஏன் அமேசானே செய்திருக்க முடியாதா? அமேசான் முயற்சி செய்தது. ஆனால் வெல்ல முடியவில்லை. ஏனெனில் நெட்ஃப்லிக்ஸ் இரண்டு, மூன்று அருமையான திட்டங்களைக் கொண்டுவந்திருந்தார்கள்.

அதற்குமுன்புவரை ஒவ்வொரு டிவிடியை வாடகைக்கு எடுக்கும்போது அதற்குப் பணம் செலுத்தவேண்டும். பின்னர் குறிப்பிட்ட தினத்தில் அதனைத் திருப்பித் தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும். நெட்ஃப்லிக்ஸ் இவற்றை ஒழித்தது. அபராதமே கிடையாது. மாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டால் போதும். வேண்டிய டிவிடிக்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் அல்ல. இரண்டு அல்லது நான்கு டிவிடிக்களை எடுத்து, பார்த்துவிட்டு, திரும்ப அனுப்பினால் அடுத்து உங்கள் தேர்வு உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். நீங்கள் பார்த்துவிட்டு அனுப்ப அனுப்ப, உங்கள் வீட்டுக்கு அடுத்த டிவிடிக்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த கியூ வரிசை முறை வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது.

அடுத்தது சினிமேட்ச் என்னும் மிகச் சிக்கலான ஒரு கணக்குமுறை. நீங்கள் எம்மாதிரியான படத்தைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கொண்டு,. அதேபோன்ற படத்தைப் பார்க்கும் பலர் வேறு எந்தெந்தப் படங்களையும் பார்க்கிறார்கள் என்பதை வைத்து, நீங்கள் அடுத்து இந்த இந்தப் படங்களையெல்லாம் பார்க்கலாம் என்ற பரிந்துரையை முன்வைக்கும் ஒரு அல்காரிதம். இதுவும் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது.
டிவிடி வாடகை என்று தொழிலை ஆரம்பித்தாலும், இணையம் வழியாக ஸ்ட்ரீமிங் செய்ய முடியும் என்று கணித்தவுடனேயே தன் தொழிலை மாற்றிக்கொண்டு முன்னேறியது நெட்ஃப்லிக்ஸ். மாறாக, பழைய தொழிலையே கட்டிக்கொண்டு அழுத ப்ளாக்பஸ்டர், அல்லது அதுபோன்ற வீடியோ வாடகைக் கம்பெனிகளெல்லாம் அழிந்துபோயின.

இந்தியாவில் திருட்டி விசிடி பரவலாகக் கிடைக்க ஆரம்பித்ததும் வீடியோ வாடகை நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. சேரனின் சி2எச் அவ்வப்போது சத்தம் போடுகிறது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிடி அடித்துத் தருவோம் என்கிறது. எனக்கென்னவோ இது வேலைக்கு ஆகாதது என்றுதான் தோன்றுகிறது. பிராட்பாண்ட் இணைப்பு வெகு சீக்கிரமே ஒவ்வொரு வீட்டுக்கும் வந்துவிடும். தற்போதைய நெட்ஃப்லிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வீடியோ சேவைதான் ஒரே வழி.

அதனைச் செயல்படுத்த மிகச் சிறப்பான அடிப்படைத் தொழில்நுட்பம் வேண்டும். கிரெடிட் கார்ட் இல்லாவிட்டாலும் மக்கள் அருகில் ஓரிடத்தில் மாதக் கட்டணத்தைச் செலுத்துவதாக வைத்துக்கொள்ளலாம். மாதம் 100 அல்லது 200 ரூபாய்க்கு, வேண்டிய படத்தை வேண்டியபோது பார்த்துக்கொள்ளலாம். புதுப்படம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் வீட்டுக்கு வரும். இப்படி இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு இந்தத் தொழில் ஜெயிக்கும். கவனியுங்கள், இந்தப் படங்களுக்கு நடுவே விளம்பரக் குப்பைகள் எவையும் இருக்காது. விட்ட இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பார்த்துக்கொள்ளலாம். எச்.டி தரத்தில் படங்களைத் தர முடியும். முதலில் பெரு நகரங்கள், பிறகு சிறு நகரங்கள், அடுத்து சின்னச் சின்ன கிராமங்களுக்குக்கூட 4ஜி சேவை பரவப் பரவ நல்ல பேண்ட்விட்த் கிடைத்துவிடும்.

இதனால்தான் அமேசானைவிட நெட்ஃப்லிக்ஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என்று நான் நம்புகிறேன். நாம் படிக்கும் நாடு கிடையாது. பார்க்கும் நாடுதான்.