Saturday, May 09, 2009

உங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது?

சில நாள்களுக்கு முன் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆராய்ந்துகொண்டிருந்தோம். இவை அனைத்தும் தமிழில் உள்ளன. ஆனால் யூனிகோடில் இல்லாமல் ஏதோ ஓர் என்கோடிங்கில் உள்ளன. கூகிளில் தேடி, உங்களது பெயர் எந்தத் தொகுதியில் உள்ளது; உங்களது பெயர் உள்ளதா, இல்லையா; உங்களது வாக்குச் சாவடி எங்கே உள்ளது என எதையுமே கண்டுபிடிக்க முடியாது. ஆக மொத்தத்தில், தகவல்கள் உள்ளன; ஆனால், நமக்குத் தேவையான வகையில் இல்லை.

நாகராஜன், நான், சத்யா ஆகியோர் கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தில் உட்கார்ந்து இதைப் பற்றிப் பேசினோம். எல்காட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் இப்போது சிறுசேமிப்புத் துறையில் இருப்பவருமான உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களுடனும் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உமாஷங்கர், தொழில்நுட்பத்தில், முக்கியமாக லினக்ஸ், டேடாபேஸ் போன்றவற்றில் நல்ல அனுபவம் உள்ளவர். மக்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும், அதுவும் மொபைல் போன் மூலமாகக் கண்டுபிடிக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பேச்சு வந்தது. அதை ஒட்டி, அவர் சில தொழில்நுட்ப ஆலோசனைகளைச் சொன்னார். நாகராஜன் புரோகிராமிங்கைச் செய்துமுடித்தார்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 4 கோடிக்கும் மேற்பட்ட ரெகார்டுகள். அந்த அளவுக்குத் தகவல்களை நிர்வகிக்கும் திறனுள்ள சர்வர் கணினிகள் எங்களிடம் கிடையாது. உமாஷங்கரின் உதவியுடன் சில அரசு நிறுவனங்கள்மூலம் இதைச் செய்யலாமா என்று பார்த்தோம். நேரம் இல்லாததால் சரியாகச் செய்யமுடியவில்லை. எஸ்.எம்.எஸ் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் ஒன்றுடன் பேசி, அவர்களது கேட்வேயுடன் இணைக்கவேண்டியிருந்தது. சில நிறுவனங்கள் அதற்கு ஏகப்பட்ட பணம் கேட்டார்கள்.

கடைசியாக, சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இதனைச் செயல்படுத்தலாம் என்று முடிவுசெய்தோம். அந்த அளவுக்கு மட்டுமான தகவல்கள் என்றால் எங்கள் வழங்கிக் கணினியிலேயே செயல்படுத்தலாம். 35 லட்சம் ரெகார்டுகள்தான்.

நீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:

BOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்>

என்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.

மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)

இந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.

வரும் நாள்களில் (அடுத்த தேர்தலுக்கு முன்) சரியான ஆதரவு இருந்தால், தமிழகத்தில் 4+ கோடி வாக்காளர்களுக்கும் இதே வசதியைச் செய்துகொடுக்கலாம். அல்லது இதைத் தேர்தல் ஆணையமே செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது.

தேர்தல் விளம்பரங்கள்

திமுகவின் தொலைக்காட்சி விளம்பரம் ‘கலைஞர் ஆட்சியில்’ எல்லாமே ‘ஜோரு ஜோருதான்’ என்கிறது. கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாயக் கடன்கள் ரத்து என்று தங்களது சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு ‘நலத்திட்டங்கள் பல தந்த’ கலைஞரின் ‘நல்லாட்சி தொடர’, உதயசூரியனுக்கு வாக்களிக்கச் சொல்கிறது.

காங்கிரஸின் விளம்பரங்களும் கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்கின்றன. இன்னொரு காங்கிரஸ் சீரிஸ் விளம்பரங்களில் முஸ்லிம், இளைஞர், பெண்கள் என்று தனித்தனி வகைமாதிரிகள் தாங்கள் எல்லாம் காங்கிரஸுக்குத்தான் வாக்களிப்போம் என்கின்றனர்.

திமுக தொலைக்காட்சி விளம்பரங்கள் சன் குழும, கலைஞர் குழும தொலைக்கட்சிகளில் வருகின்றன. காங்கிரஸ் விளம்பரங்களை ஆங்கில செய்தி சானல்களிலும் சன் குழும சானல்களிலும் பார்த்தேன்.

திமுகவின் நலத்திட்டங்கள் விளம்பரத்தை தினமணியில் பார்க்கிறேன். காங்கிரஸ் விளம்பரங்களையும் அச்சுப் பத்திரிகைகளில் பார்த்தேன்.

தயாநிதி மாறன், 32 பக்க (ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் சைஸ்) பலவண்ணப் புத்தகமாக அச்சிட்டு, ‘உலகத் தலைவர்களுடன் நான்’ என்று போட்டோக்களாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார். செய்தித்தாள்களுக்கு இடையில் வைத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தார். பராக் ஒபாமா, கார்டன் பிரவுன், விளாதிமீர் புடின் ஆகியோருடன் தயாநிதி மாறன் இருக்கும் படங்கள் மட்டும்தான் ஆப்செண்ட்.

விஜயகாந்தின் படு அபத்தமான ‘முரசு முரசு முரசு’ விளம்பரம் சன் டிவியில் பார்த்தேன். முரசு முரசு என்று கத்தினாலே எல்லோரும் அவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும்!

சரி, அஇஅதிமுக விளம்பரம் எப்படி உள்ளது என்று பார்க்க ஜெயா போனால், அங்கு உடனடியாகக் கண்ணில் ஏதும் படவில்லை. அதற்குபதில், ஜெயலலிதாவின் ஒரு முழு தேர்தல் பிரசார உரையையே ஒளிபரப்பிவிட்டனர். ஜெயலலிதா வரிசையாக திமுக அமைச்சர்கள் பேரில் உள்ள ஊழல்களைப் பட்டியலிட்டார்.

தொடர்ந்து, இப்படிச் சொன்னார்: “என் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குமா? நான் நடக்கத்தான் விடுவேனா? ஊழல் செய்யும் அமைச்சர்களை, ரவுடித்தனம் செய்யும் அமைச்சர்களை உடனடியாகத் துரத்திவிடுவேன்.”

குபுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததே இல்லை. உண்மைதான்!

ஆனால் ஸ்டாலின் போன்றோர் ஜெயலலிதாவின் பேச்சுத் திறமைக்கு அருகிலும் வரமுடியாது. பொழிந்து கட்டுகிறார். பொய்யாக இருந்தாலும். அண்ணல் அழகிரிக்கு தேர்தல் பிரசாரத்துக்கும் கட்டப் பஞ்சாயத்து மிரட்டலுக்கும் வித்தியாசம் தெரிவதே இல்லை. “அரிசி கொடுத்தோமுல்ல? வீடு கொடுத்தோமுல்ல? அப்புறம் என்ன மயித்துக்கு வேற எவனுக்காவது வோட்டுப் போடுவ? வொக்காளி, கொன்னுடுவேன்ல, ஆமா!” என்ற தொனியில்தான் அவரது வாக்குச் சேகரிப்பு அமைகிறது.

விளம்பரங்கள் பொய் என்று தெரிந்தாலும் மக்கள் ரசித்துப் பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டது. இதனால் வாக்குகள் விழுமா என்றுதான் தெரியவில்லை.

Thursday, May 07, 2009

பாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி

பல்லாவரத்துக்கு அடுத்து, கிழக்கு பதிப்பகம் பாடியில் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. குறைந்தது 10 நாட்களுக்காவது இங்கு கண்காட்சி நடைபெறும். பல்லாவரத்தில் நடக்கும் கண்காட்சி, மே மாதம் முழுவதும் தொடரும். அதன் பிறகும் தொடரலாம்.

பாடி கண்காட்சி நடக்கும் இடம்:

பார்வதி ராமசாமி திருமணக் கூடம்,
டிவிஎஸ் லூகாஸ் அருகில்,
புதிய எண் 69, (பழைய எண் 6),
எம். டி. எச். ரோடு,
பாடி, சென்னை - 600 050

நாள்: மே 7-ம் தேதி முதல்.

நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

இதுவரையில் கிழக்கு சிறப்புக் கண்காட்சிகள் நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம்.

குடும்ப அரசியல் (Dynasty politics)

இன்று NDTV விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது “குடும்ப அரசியல் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்களா இல்லை கண்டுகொள்வதில்லையா”.

மூன்று ‘அரசியல் பிள்ளைகள்’ - ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப் தீக்ஷித், காலம் சென்ற ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், ஜஸ்வந்த் சிங்கின் மகன் மானவேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். என்.ராம், ஷோபா டே என்ற இரு பத்திரிகையாளர்கள் (ஒன்றுக்கும் உதவாத) கருத்துகளைச் சொன்னார்கள்.

சந்தீப் தீக்ஷித் வெளிப்படையாகவே ஒன்றை ஒப்புக்கொண்டார். இன்றைய அரசியல் சூழலில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு அரசியலில் நுழைவது எளிதாக உள்ளது.

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலில் நுழையவே கூடாது என்று சொல்வது நியாயமல்ல. ஆனால் அதே சமயம், ஏன் சினிமாவில் இல்லையா, தொழில்துறையில் இல்லையா, அரசியலில் மட்டும் ஏன் இதனை எதிர்க்கவேண்டும் என்ற அபத்தமான கேள்வி எழுப்பப்பட்டது. அடுத்த அபத்தம், அமெரிக்காவிலும்தான் குடும்ப அரசியல் உண்டு என்று கஷ்டப்பட்டுத் தேடிய கென்னடி குடும்பம் உதாரணமானது. (கிளிண்டன் குடும்பம், புஷ் குடும்பம் என்றெல்லாம் டக்கென்று யாரும் யோசிக்கவில்லை.)

தொழில்துறையிலோ, சினிமாவிலோ போட்டிகள் சமதளத்தில் நடைபெறுகின்றன. முன்போல இப்போது இல்லை. பணம் இல்லாதவர்களாலும் இன்று பணத்தைச் சம்பாதிக்கமுடிகிறது. சினிமா குடும்பத்திலிருந்து வந்தால்தான் சினிமாவுக்குள் நுழையமுடியும் என்பது இப்போது இல்லை. எத்தனை சினிமாக்களை வேண்டுமானாலும் எடுக்கமுடியும். எத்தனை தொழில் நிறுவனங்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம், யாரும் தடுக்க முடியாது. ஆனால் இன்று கட்சிகளின் நடப்பது என்ன? ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைக்குள்தான் உள்ளது. (பாஜக போன்ற ஓரிரு கட்சிகள் தவிர்த்து.)

சினிமாவிலோ, தொழில்துறையிலோ சொல்வதுபோல, இஷ்டம் இல்லை என்றால் வேறு கட்சியை நீயே ஆரம்பித்துக்கொள் என்று அரசியலில் சொல்லமுடியாது. சொல்லப்போனால், இப்படி ஒருவரோடு ஒருவர் முறைத்துக்கொண்டு நூறு கட்சிகளை உருவாக்கியதன் விளைவுதான் குழப்பமான அரசியல் நிலையை இன்று நாட்டில் உருவாக்கியுள்ளது.

சந்தீப் தீக்ஷித் ஒருவர்தான் உட்கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசினார்.

அமெரிக்க அரசியல் கட்சிகள் ‘பிரைமரி’ முறையை ஒழுங்காகப் பின்பற்றுகின்றன. அது நகராட்சி வார்ட் தேர்தலாகட்டும், குடியரசுத் தலைவர் தேர்தலாகட்டும். இந்தியாவில் இந்த முறை இல்லாதவரை, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எத்தனைதான் தகுதியற்றவர்களாக இருந்தாலும் பதவிகளைக் கைப்பற்றுவார்கள். எப்போது கட்சி உறுப்பினர்களுக்கு தங்கள் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான அதிகாரம் உள்ளதோ, எப்போது மேலிடம் என்ற ஒன்று தன்னிச்சையாக நடக்கமுடியாத நிலை வருமோ, அப்போதுதான் இந்திய ஜனநாயகம் ‘வயதுக்கு வரும்’.

பிரைமரிக்கு இணையான நிலை இந்தியக் கட்சிகளிடையே வந்துவிட்டால், குடும்ப அரசியல் பற்றி யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்.

Tuesday, May 05, 2009

தேவன் நினைவுப் பதக்கங்கள் - 2009

ஒவ்வோர் ஆண்டும், தேவன் அறக்கட்டளை ஒரு விழாவை நடத்தி அதில், நகைச்சுவைக்குப் பங்களிப்பவர்களுக்குப் பதக்கங்கள் கொடுத்து வருகிறது.

இந்த ஆண்டு, கார்ட்டூனிஸ்டுகள் இருவருக்குப் பாராட்டும் பதக்கமும் கொடுக்கப்பட்டன. தி ஹிந்துவின் கேஷவ், தினமணியின் மதி. இருவருக்கும் கோபுலு பதக்கங்கள் அணிவித்துப் பாராட்டிப் பேசினார்.

தேவன் அறக்கட்டளையின் சாருகேசி, கோபுலு, மதி, கேஷவ்


கோபுலு ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இல்லஸ்ட்ரேஷன் வரைவதில் ஆரம்பித்து, ஜோக், அரசியல் கார்ட்டூன்கள் என்று வரைந்துள்ளார். ஆனால் கார்ட்டூன்கள் வரைவதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டதாகச் சொன்னார். பலமுறை அரசியல்வாதிகள் போன் செய்து நான் என்ன சிம்பன்ஸி மாதிரியா இருக்கேன் என்றெல்லாம் சண்டை போடுவார்களாம். ஒரு கட்டத்தில் பத்திரிகையை விட்டுவிட்டு, கோபுலு விளம்பரத் துறைக்குச் சென்றுவிட்டார். (கோபுலுவின் வாழ்க்கை வரலாறு கிழக்கு பதிப்பகம் வெளியீடாக: கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை)

கேஷவ், விகடனில்தான் வேலையை ஆரம்பித்துள்ளார். இசைக்கலைஞர்களைப் படமாக வரைய ஆரம்பித்து, பின்னர் தி ஹிந்துவுக்கு கார்ட்டூனிஸ்டாகப் போனவர்.

மதியும் விகடன் மாணவர் நிருபர் திட்டத்தில் தேர்வாகி, பின் கார்ட்டூனிஸ்டாகி, நியூஸ் டுடே, துக்ளக், கல்கி வழியாக, தினமணி/ நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் என்று இப்போது தினமணியில் மட்டும் கார்ட்டூன்கள் போட்டு வருகிறார்.

கேஷவ் குறைவாகப் பேசினார். மதி எழுதி வந்து விரிவாகவே பேசினார். எப்படி அரசியல்வாதிகள் பஞ்சமே இல்லாமல் தனக்கு ஐடியாக்களை வாரி வழங்குகிறார்கள் என்பதை விவரித்தார். மதியின் அடடே கார்ட்டூன்களின் தொகுப்பு ஆறு தொகுதிகளாக கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது. [ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து | ஆறு]

தேவனின் புத்தகங்கள், கிழக்கு பதிப்பக வெளியீடாக
.