செல்லுலார் தொலைபேசிகள் உலகில் 1980ஆம் ஆண்டு முதல் உபயோகத்தில் இருந்து வருகின்றன. முதன் முதலில் செல்லுலார் தொலைபேசிச் சேவைகள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில்தான் தொடங்கப்பட்டது. இத்தொலைபேசிகள் அனலாக் (analogue) என்ற தொழில்நுட்ப முறையில் இயங்கி வந்தன. ஆனால் பல்வேறு நாடுகளில் இயங்கிவந்த இந்த செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பம் ஒன்றோடு ஒன்று இணங்காமல் தனித் தனி திசைகளில் சென்றுகொண்டிருந்தன. 1982-83இல், அப்பொழுது இந்த சேவையினை அளித்து வந்த ஒரு சில நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Groupe Speciale Mobile (GSM) என்ற ஒரு தரம் நிர்ணயிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கின. 1988இல் GSM ஒரு பொதுவான செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பத்தை உருவாக்கி, உபயோகிக்கத் தொடங்கினர். அதுவே இப்பொழுது Global System for Mobile Communication (GSM) என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த GSM தொழில்நுட்பம், டிஜிட்டல் (digital) மற்றும் TDMA (Time Division Multiple Access) ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இயங்குகிறது.
1992ஆம் ஆண்டு இந்திய அரசு தனியார் நிறுவனங்களை செல்லுலார் தொலைபேசிச் சேவையை அளிக்க அனுமதிக்க முடிவு செய்தது. 1994ஆம் ஆண்டு, தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களில், நகருக்கு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி (license) அளிக்கப்பட்டது. அதன்பிறகு, 1995ஆம் ஆண்டில் தமிழகம் (சென்னை இல்லாமல்), மஹாராஷ்டிரம் (மும்பை இல்லாமல்), மேற்கு வங்காளம் (கொல்கத்தா இல்லாமல்), மற்றும் இதர மாநிலங்களுக்கு முழுமையாகவும் ஒரு வட்டத்திற்கு (circle) இரு நிறுவனங்கள் வீதம் என்று செல்லுலார் தொலைபேசிச் சேவை வழங்க அனுமதி தரப்பட்டது.
இச்சேவை ஆரம்பிக்க, தனியார் நிறுவனங்கள் அரசுக்கு அனுமதித் தொகையாக (license fee) பெரும் அளவில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், பெருமளவில் கருவிகளை நிர்மானிக்க முதலீடும் செய்ய வேண்டியிருந்தது. இதனால், இந்த சேவை ஆரம்பித்த காலகட்டங்களில், இந்நிறுவனங்கள் உள்ளூரில் பேச ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 36 ரூபாய் வரை வசூலித்து வந்தன. இதற்கும் மேலாக, இந்த சேவையினைப் பெற விரும்புவோர் கையோடு எடுத்டுச் செல்லுமாறு உள்ள செல்லுலார் தொலைபேசியினை ரூ. 20,000 வரை செலவு செய்து வாங்க வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்கள் இந்த சேவை பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இதன் பக்கம் கூட நெருங்கவேயில்லை.
1996 முதல் 2000ஆவது ஆண்டு வரை அரசின் போக்கிலும், இந்நிறுவனங்களின் போக்கிலும் பலத்த மாறுதல் ஏற்பட்டது. 1999ஆம் ஆண்டு இந்திய அரசு புதிய தேசியத் தொலைதொடர்புக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, செல்லுலார் தொலைபேசி நிறுவனங்கள் அனுமதித்தொகையை, முழுத்தொகையாக இல்லாமல், நிகர வருமானத்தில் ஒரு பங்காகச் செலுத்த அரசு அனுமதித்த்து. இதனை மேற்கொண்டு, செல்லுலார் நிறுவனங்களும் கட்டணத் தொகையை வெகுவாகக் குறைக்க ஆரம்பித்தன.
ஆனாலும், செல்லுலார் தொலைபேசிக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு ரூ. 3-8 வரை இருந்து வந்தது. இதுவும் கூட Airtime, அதாவது செல்லுலார் தொலைபேசி உபயோகத்தில் இருக்கும் நேரத்திற்கான கட்டணம் ஆகும் - வெளிச்செல்லும் மற்றும் உள்ளே வரும் இணைப்புகள் இரண்டிற்குமே உபயோகிப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதன் மேலும், நிலம் சார்ந்த தொலைபேசியினைக் (fixed line அல்லது land line) கூப்பிட இன்னும் அதிகக் கட்டணம் கூடச் சேர்த்து செலுத்த வேண்டியிருந்தது.
இப்படி கட்டுக்கடங்காத கட்டணம் இருந்தபோதும் வியாபாரப் பெருமக்களும், அரசியல்வாதிகளும் இந்த செல்லுலார் சேவையினைப் பெரிதும் உபயோகித்து வந்தனர். இதன் மூலம், அவர்கள் எங்கு இருந்தாலும், அவர்களைக் கூப்பிட முடிந்தது. செல்லுலார் தொலைபேசிச் சேவையின் இன்னுமொரு முக்கிய அம்சம் Roaming (அதாவது "உலாவுதல்") என்பது. இதன்மூலம், கையிலே எடுத்துச் செல்லும் செல்லுலார் தொலைபேசியினை இந்தியாவில் உள்ள எந்த ஊருக்கும், ஏன்? உலகில் GSM தொழில்நுட்ப முறையில் செல்லுலார் சேவை நடந்துகொண்டிருக்கும் எந்த நாட்டிற்கும் எடுத்துச் செல்ல முடிந்தது. உலாவும் செல்லுலார் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவரை, அதே தொலைபேசி எண் மூலம், அவர் எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் இருந்தாலும் கூப்பிட முடிந்தது.
மேல்மட்டத்திலே ஆடம்பரப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும் இருந்து வந்த செல்லுலார் தொலைபேசி எப்படி சாதாரண மனிதர்களின் அத்தியாவசியத் தேவையாகவும், தினமும் உபயோகிக்கும் ஒரு சாதனமாகவும் மாறத்தொடங்கியுள்ளது என்பதை நாளை பார்ப்போம்.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
7 hours ago
Good Essays... thank you !
ReplyDelete