Tuesday, July 24, 2007

பாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா

நேற்று எழுதிய பதிவு: பாவம் முஷரஃப்!


பாகிஸ்தானின் நான்கு பெரிய மாகாணங்கள் பஞ்சாப், சிந்த், பலூசிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவை. இவை நான்கைத் தவிர ஆஸாத் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்), வடக்குப் பிரதேசம் (Northern Territories) ஆகியவை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள். ஆனால் இங்குள்ள மக்கள் பாகிஸ்தான் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இவைதவிர, பல பழங்குடியினர் வசிக்கும் பிரதேசங்கள் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு 'நடுவண் அரசால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பிரதேசங்கள்' என்று பெயர். வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் இத்தகைய பிரதேசங்கள் ஆகும்.

வடமேற்கு எல்லை மாகாணம், பலூசிஸ்தான் இரண்டுமேகூட பழங்குடியினர் அதிகமாக வாழும் பிரதேசங்கள்தாம். வடமேற்கு எல்லை மாகாணத்தில்தான் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் காஃபார் கான் என்னும் மிகப்பெரிய தலைவர் இருந்தார். இவர் வடமேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தானுடன் சேர்வதை எதிர்த்தார். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்பினார். ஆனால் புவியியல் சதி செய்தது. வடமேற்கு எல்லை மாகாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் காஷ்மீர் இருந்தது. அந்த நேரத்தில் காஷ்மீர் எந்தப் பக்கம் போகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காஷ்மீர் தனி நாடாகவே இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தது. அதனால் இந்தியா என்று வரையறுக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து வடமேற்கு எல்லை மாகாணத்துக்கு நேரடிப் பாதை கிடையாது. இதன் காரணமாக நேருவும் படேலும் காஃபார் கானைக் கைவிட்டனர்.

சுதந்தரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வடமேற்கு எல்லை மாகாணத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டினார்கள். அடிப்படை வளர்ச்சிப் பணிகள் எதுவும் கிடையாது. பழங்குடியினர் பழமையிலேயே இருக்குமாறு பணிக்கப்பட்டார்கள். இந்த மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்க காவல்துறையெல்லாம் சரியாகக் கிடையாது, நீதிமன்றமும் கிடையாது. பழங்குடியினரின் பஞ்சாயத்துதான். ஆனால் ஓரளவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சிவில் நிர்வாகம் இந்த மாகாணத்தில் உண்டு. ஊருக்குத் தொலைவில் ஆங்காங்கே ராணுவ முகாம்கள் இருக்கும்.

வடக்கு, தெற்கு வாசிரிஸ்தான்களின் கதை வேறு. அந்தப் பக்கம் பாகிஸ்தானின் சிவில் நிர்வாகம் போகவே போகாது. ராணுவமும் போகாது. வளர்ச்சியும் கிடையாது.

இந்தப் பகுதிகள் அனைத்துமே ஆஃப்கனிஸ்தானை ஒட்டிய பகுதிகள். சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆஃப்கனிஸ்தானின் 'புனிதப் போரில்' இந்தப் பகுதிகளிலிருந்து பல பழங்குடியினரும் பிற மாகாணங்களின் மசூதிகளிலிருந்து தாடிவைத்த மாணவர்களும் (தாலிபன்கள்) கூட்டம் கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர். பின், 9/11-க்குப் பிறகு அமெரிக்காவும் நேச நாடுகளும் ஆஃப்கனிஸ்தான்மீது தாக்குதல் தொடுக்க, பாகிஸ்தான் மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

பர்வேஸ் முஷரஃப் தான் ஏன் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக, அமெரிக்காவுக்கு ஆதரவாக இறங்க முடிவு செய்தார் என்பதைப் பற்றி தனது புத்தகத்தில் தீவிரமாக அலசுகிறார். தாலிபன்களை உருவாக்கியதே பாகிஸ்தான்தான். முல்லா முகமது ஒமருக்கு ஆதரவு கொடுத்ததும் பாகிஸ்தான்தான். இன உறவுமுறைப்படி தாலிபன்கள் பலருக்கும் நெருங்கிய உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். ஆனாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா பக்கம் இருப்பதுதான் தனது நாட்டுக்கு நலனைத் தரும் (பணத்தைத் தரும்) என்று முஷரஃப் முடிவு செய்கிறார்.

ஆனால் அதே நேரம் தாலிபன்களும் ஒசாமாவும் தனக்கு எந்த அளவுக்குத் தலைவலியைத் தருவார்கள்; அந்தத் தருணத்தில் அமெரிக்கா தனக்கு எந்தவிதத்தில் உதவியைச் செய்யாது - சொல்லப்போனால் உபத்திரவத்தைத்தான் கொடுக்கும் - என்பதை முஷரஃப் யோசிக்கவில்லை.

ஒசாமா பாகிஸ்தானில்தான் ஒளிந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்க உளவுத்துறை. அதைக் கடுமையாக மறுக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷீத் மஹ்மூத் கசூரி. "எங்கே இருக்கிறார் என்று சரியாகக் குறிப்பிட்டுச் சொல்லச் சொல்லுங்கள், நாங்களே பிடித்துத் தருகிறோம்" என்கிறார் அவர். இதற்கிடையில் அமெரிக்கா, தேவைப்பட்டால் நேரடித் தாக்குதலில் ஈடுபடுவோம் என்கின்றனர். அப்படி நடந்தால் 'விளைவு மிக மோசமாக இருக்கும்' என்கிறார் கசூரி. விளைவு யாருக்கு மோசமாக இருக்கும்? பாகிஸ்தானுக்குத்தான். முஷரஃபுக்குத்தான். அமெரிக்காவுக்கு அல்ல.

இந்த நிலைமை இன்று பாகிஸ்தானுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?

ஒருமுறை கலாஷ்னிகோவ் ஏந்திய கை சும்மா இருக்காது. தாலிபன்களை உருவாக்கியது முதல் தவறு. சுதந்தரம் கிடைத்த 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் வடமேற்கு எல்லை மாகாணத்திலும் வாசிரிஸ்தானிலும் எந்தவிதமான சிவில் நிர்வாக அமைப்பையும் உருவாக்காமல் விட்டது இரண்டாவது தவறு. மக்களுக்குக் கல்வியறிவு கொடுக்காமல் விட்டுவைத்தது மூன்றாவது தவறு.

'புனிதப்போர்' என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை முஷரஃப் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பார்.

அரசியல் கட்சிகளிடமிருந்து இப்பொழுது வந்திருக்கும் எதிர்ப்பைவிட, வாசிரிஸ்தானிலிருந்து வந்திருக்கும் எதிர்ப்பு முஷரஃபை அழிக்கக்கூடும். இது ஒரு lose-lose நிலைமை.

வாசிரிஸ்தான் போக்கிரிகளை அடக்க ராணுவத்தை ஏவினால், அங்குள்ள பழங்குடியினர் கட்டாயமாக பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தானுடன் போர் தொடுப்பார்கள். இதில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்படும். இந்தப் பழங்குடிகள் அதன்பிறகு பாகிஸ்தானுடன் சேர்ந்து இருக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள். ராணுவத்தை ஏவாவிட்டால் தாலிபன்கள் வாலாட்டிக்கொண்டே இருப்பார்கள். பின் லேடன் ஒளிந்துகொள்ள சவுகரியமான இடமாகிவிடும். இதனால் அமெரிக்கா கோபம்கொண்டு தன்னுடைய ஏவுகணைகளை அனுப்பும். இதன் விளைவும் முஷரஃபுக்கு எதிராகவே அமையும்.

முஷரஃப் 'போர் விளையாட்டு' (War Game) விளையாடி என்னதொரு உத்தியைக் கடைப்பிடித்து இந்த நிலைமையைச் சமாளிக்கப்போகிறார் என்று பார்ப்போம்.

[பாகிஸ்தான் வரைபடம் பாகிஸ்தான் அரசின் இணையத்தளத்திலிருந்து எடுத்தது. இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்!]

3 comments:

 1. //இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்!]//

  :-)

  ReplyDelete
 2. //சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆஃப்கனிஸ்தானின் 'புனிதப் போரில்' இந்தப் பகுதிகளிலிருந்து பல பழங்குடியினரும் பிற மாகாணங்களின் மசூதிகளிலிருந்து தாடிவைத்த மாணவர்களும் (தாலிபன்கள்) கூட்டம் கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர்.

  பின், 9/11-க்குப் பிறகு அமெரிக்காவும் நேச நாடுகளும் ஆஃப்கனிஸ்தான்மீது தாக்குதல் தொடுக்க, பாகிஸ்தான் மிகவும் கடினமான நிலைக்குத்
  தள்ளப்பட்டது.//

  மேற்கூறப்பட்ட உங்கள் இரண்டு வாக்கியங்களுக்குள் ஒரு வரலாற்று நிகழ்வையே மறைத்துவிட்டீர். அதாவது, பின்லேடனுக்கும்-முஜாஹிதீன்களுக்கும், அமெரிக்கா அள்ளிவழங்கிய உதவிகள்.

  //இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்!]//

  பத்ரி, உங்களுக்கு வேறு பாக்கிஸ்தான் வரைபடமே கிடைக்கவில்லையா?

  ReplyDelete
 3. பாவம் முஷாரப்????
  பாக். கில் நெருக்கடி நிலை வரலாம் என்பது இன்றைய(9-8) செய்தி.
  ஆனால் பாவம் பாகிஸ்தான்! அது தேறுவதற்கு நீங்கள் குறிப்பிட்டதை விட மேலேயே ஆகும். இந்தியாவுக்கும் நிறைய சிக்கல்தான்.
  -விபின்

  ReplyDelete