Monday, August 25, 2014

பணத்தால் வாங்க முடியாதது...

கொஞ்சம் மெதுவாக, ஆனால் ஆழ்ந்து படித்துவரும் புத்தகம் மைக்கல் சாண்டெல் (Michael J. Sandel) எழுதியுள்ள What Money Can't Buy: The Moral Limits of Markets.

பணம் என்ற கருத்தாக்கம் எப்படி வந்தது என்ற மற்றொரு அற்புதமான புத்தகத்தை (Money: The Unauthorised Biography by Felix Martin) சமீபத்தில்தான் படித்து முடித்தேன். பண்டமாற்று செய்துகொண்டிருந்த மக்கள் திடீரென அதற்கு மாற்றாகக் கண்டுபிடித்த ஒன்றல்ல பணம். அதன் வரலாறு மிகச் சுவாரசியமானது. அது குறித்துப் பேச நுழைந்தால் நான் எழுதவந்த காரியம் கெட்டுப்போய்விடும்.

சந்தையும் பணமும் மனித சமுதாயத்தில் நுழைந்ததன் காரணமாக மனிதர்களின் இயல்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? அன்பு, காதல், பரிவு, பாசம் ஆகியவையெல்லாம் போய்விட்டனவா? இவை எல்லாவற்றையும் நாம் பண மதிப்பில் பார்க்க ஆரம்பித்திருக்கிறோமா? ஒவ்வொன்றையும், அவற்றுக்கான சந்தை மதிப்பு என்ன என்று தீர்மானித்து, பணமாக மாற்றிக்கொள்கிறோமா? இதன் காரணமாகப் பேராசை நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா? மனிதாபிமானம் செத்துவிடுகிறதா?

பல ஆழமான கேள்விகள் இந்தப் புத்தகத்தில் எழுப்பப்படுகின்றன. அவற்றில் இரண்டே இரண்டு விஷயங்களைப் பற்றி மட்டும்தான் பேசப்போகிறேன்.

***

முதலாவது... தன்னார்வத்தில் செய்யும் சில செயல்களுக்குப் பண மதிப்பை இட்டு, அச்செயல்களைச் செய்வோருக்குப் பணம் கொடுப்பதாகச் சொல்லும்போது அச்செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது.

பிரிட்டனில் (இந்தியாவிலும்கூட) ரத்தம், தன்னார்வத் தொண்டர்கள் தானமாகத் தருவதன்மூலமே சேர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் அத்துடன் விலைக்கும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. தானமாகத் தருவதால் உள்ளூர மகிழ்ச்சி உண்டாகிறது என்பதால் பலதரப்பட்ட மக்களும் ரத்தம் கொடுக்கிறார்கள். வேண்டிய அளவு கிடைக்கிறது. ஆனால் விலைக்கும் வாங்கப்படும்போது பலர், தானமாக ரத்தம் தரத் தயங்குகிறார்கள். ரத்தம் தருபவர்களோ பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ரத்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தொண்டு நிறுவனங்களுக்காகப் பணம் திரட்டுவதில் மாணவர்கள் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறீர்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில் மூன்று மாணவர் குழுக்கள் இச்செயலில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் குழுவில் உள்ள மாணவர்களுக்கு எந்த ஊக்கத் தொகையும் கிடையாது. இரண்டாவது குழுவினர் கொண்டுவரும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அவர்களுக்கு ஊக்கத்தொகையாகத் தரப்படும். மூன்றாவது குழுவினருக்கு ஊக்கத்தொகை சதவிகிதம், இரண்டாவது குழுவைவிட அதிகம். ஊக்கத்தொகை பெற்றவர்களில், எந்தக்குழுவுக்கு அதிக சதவிகிதம் கிடைத்ததோ அந்தக் குழு குறைந்த சதவிகிதம் பெற்ற குழுவைவிட நன்றாகச் செய்திருந்தனர். ஆனால் எந்தவித ஊக்கத்தொகையும் பெறாத முதல் குழுதான் மற்ற இருவரையும்விட அதிக அளவு பணத்தைத் திரட்டிக் கொண்டுவந்திருந்தது.

தன்னார்வச் செயல்பாடுகளுக்கு மதிப்பை நிர்ணயித்து பணமாகக் கொடுக்கும்போது செயல்பாட்டில் எந்தவித முன்னேற்றமும் இருப்பதில்லை, பின்னடைவுதான் இருக்கிறது என்று தெரிகிறது. அப்படியானால் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள் என்று சில இருக்கின்றனவா?

சில செயல்கள் மோசமானவை என்று சமூகம் கருதுகிறது. அந்தச் செயல்களைச் செய்ய மக்கள் அஞ்சுகிறார்கள். அப்படிச் செய்யவேண்டி வந்தால் வேதனைப்பட்டு மன்னிப்பு கோருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட செயல்களுக்குத் தண்டனையாக பண அபராதம் விதிக்கப்படும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. பகல் நேரங்களில் சிறார்களைப் பராமரிக்கும் மையத்தில் (டே கேர் செண்டர்), குழந்தைகளை அழைத்துச் செல்லக் கடைசி நேரம் இரவு 8 மணி என்று இருக்கும்போது சில நேரம் பெற்றோர்களால் அதற்குள் வர முடியாமல் போய்விடும். பெற்றோர் வரும்வரை குழந்தையுடன் பொறுப்பாளர் அங்கே காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். பெற்றோரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, கால தாமதம் ஏன் என்று காரணத்தைச் சொல்லிவிட்டுக் குழந்தையை அழைத்துச் செல்வார். இனி இப்படி நேராமல் பார்த்துக்கொள்வதாகச் சொல்வார்.

ஆனால், இந்த மையங்கள் கால தாமதத்துக்கு அபராதம் வசூலிக்கத் தொடங்கியபின் பெற்றோர்கள் தாமதமாக வருவது அதிகரிக்க ஆரம்பித்தது. ஏனெனில், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத நிகழ்வாக இருந்த ஒன்று, இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆனதோடு, அதற்குக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டாகிவிட்டது. அபராதம் என்பதை மக்கள் கட்டணம் என்று தங்கள் மனத்துக்குள் மாற்றிக்கொண்டனர். ஒரு மணி நேரம் தாமதம் என்றால் இத்தனை டாலர். இரண்டு மணி நேரம் கழித்துப் போனால் அதற்கான தொகையைக் கொடுத்தால் போகிறது!

ஆக, தவறு என்று சமூகத்தால் கருதப்பட்ட ஒரு செயலை (தாமதமாக வருவது) செய்யும்போது இருக்கும் குற்ற உணர்ச்சி, பண அபராதம் விதிக்கப்படும்போது போய்விடுகிறது.

***

ஆயுள் காப்பீட்டின் வரலாறு குறித்து எழுதுகிறார் சாண்டெல். லண்டனில் 18-ம் நூற்றாண்டில் காப்பீடும் உயிரின்மீது பணம் கட்டி விளையாடும் பந்தயமும் ஒருசேரவே தொடங்கின என்கிறார். தன் கப்பல் பத்திரமாகத் திரும்ப வராவிட்டால் இழப்பீடாவது கிடைக்கட்டுமே என்று காப்பீடு எடுப்போர் இருந்ததுபோல், இன்னாருடைய கப்பல் ஒழுங்காக வருமா, வராதா என்பதன் நிகழ்தகவின்மீது பணம் கட்ட மக்கள் இருந்தனர். இது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து, இன்னார் எப்போது சாவார் என்பதன்மீதெல்லாம் மக்கள் பணம் கட்டத் தொடங்கினர். 1774-ம் ஆண்டில்தான் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, யாரும் இன்னொருவருடைய சாவின்மீது பணம் பெட் கட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இன்று அமெரிக்காவில் இருக்கும் காப்பீட்டு வழிமுறைகளின்படி இரண்டு விஷயங்கள் சாத்தியம். பல மாகாணங்களில், உங்கள் கம்பெனி உங்கள் உயிர்மீது காப்பீடு எடுத்து, உங்கள் சாவின்மூலம் லாபம் அடையலாம். வால்மார்ட் போன்றவை தங்கள் கம்பெனியில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களின் உயிர்மீது காப்பீடு எடுத்துள்ளது. உயிர்போனால் கிடைக்கும் பணம் முழுவதும் கம்பெனிக்குத்தான். இறந்தவருடைய குடும்பத்துக்கு அல்ல. தாங்கள் இப்படியான ஒரு காப்பீட்டை எடுத்து வைத்திருப்பதாக நிறுவனம் தம் ஊழியர்களிடம் சொல்வதுகூட இல்லாமல் இருந்தது. அப்படியே சொல்லி, ஊழியரின் ஒப்புதலுடன் எடுக்கும்போதும்கூட, ஊழியர் குடும்பத்துக்கு மிகக் குறைவான பணமும் மீதம் அனைத்தும் தங்களிடம் இருக்குமாறும் பார்த்துக்கொள்கிறார்கள். இது அறமா?

இதை நீட்டித்து, என் தெருவில் உள்ள அனைவரின் உயிரின்மீதும் நான் பிரீமியம் கட்டி (அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ) அவர்களுடைய சாவிலிருந்து பணம் பார்க்கலாமா?

ஆயுள் காப்பீடு எடுத்திருக்கும் ஒருவர் கொடிய நோய் (எய்ட்ஸ், கேன்சர் போன்று) வந்திருக்கிறது என்று அறிந்துகொள்கிறார். அவருடைய ஆயுள்காலம் முடியப்போகிறது. அவருக்கோ பணத்தேவை. இதைப் புரிந்துகொள்ளும் ஒரு நிறுவனம் அவரிடம் உள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கிக்கொண்டு அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறது. அவருடைய இன்ஷூரன்ஸ் பாலிசி 100,000 $ என்றால், அந்நிறுவனம் அவருக்கு 50,000 $ கொடுத்துவிட்டு பாலிசியை வாங்கிக்கொள்கிறது. அவர் இறந்தால் கிடைக்கும் முழுப் பணமும் இந்த முதலீட்டு நிறுவனத்துக்குப் போய்ச் சேரும். அவர் அதிக காலம் வாழ்ந்தார் என்றால் முதலீட்டு நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம் குறையும். சீக்கிரமே போய்விட்டார் என்றால் கொள்ளை லாபம். இந்த நிறுவன முதலீட்டாளர்கள் என்ன செய்வார்கள்? தினமும் காலை எழுந்தவுடன், ‘அப்பனே முருகா, ஞானபண்டிதா (அல்லது இயேசுவே), நான் முதலீடு செய்திருக்கும் இந்த சீக்காளி இன்றைக்கே மண்டையைப் போட அருள்புரிவாய்!’ என்று வேண்டிக்கொள்வார்களா?

தன் ஊழியர்கள்மீது ஆயுள் காப்பீடு எடுத்திருக்கும் வால்மார்ட், அவர்கள் உயிரோடு இருப்பதால் பெறும் லாபத்தைவிட சாவதால் அதிக லாபம் பெறக்கூடும். அப்படி நடப்பதை ஒருவேளை அவர்கள் ஊக்குவிப்பார்களா?

புதிய தொழில்களை ஊக்குவிக்கும் அதே நேரம், எதுவரை போதும், எது கூடவே கூடாது என்று எப்படி முடிவு செய்வது?

எல்லாமே சந்தைமயம், எல்லாமே பணம் என்று இருக்க முடியுமா?

***

இதுபோன்ற பல கேள்விகளை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. இந்திய அனுபவத்தை வைத்துக்கொண்டு எங்கெல்லாம் சந்தையின் தாக்கத்தால் அறப்பிறழ்வு ஏற்படுகிறது என்று பார்க்கவேண்டும்.

3 comments:

  1. Blood donation in the US, happens mostly at corporate work places and it is a well streamlined process (done every 3 months). There could be some instances where cash is paid for blood but that happens in India as well.

    ReplyDelete
  2. என் தெருவில் உள்ள அனைவரின் உயிரின்மீதும் நான் பிரீமியம் கட்டி (அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ) அவர்களுடைய சாவிலிருந்து பணம் பார்க்கலாமா? Not possible as it fails the Insurable interest test

    ReplyDelete
  3. Viatical settlements became popular in th 1980s

    ReplyDelete