Sunday, January 01, 2017

மாமல்லை பேச்சுக் கச்சேரி 2016

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் 'பேச்சுக் கச்சேரி' என்றதொரு நிகழ்வை நடத்துவதுண்டு. இது இசைக் கச்சேரிகள் நிறைந்திருக்கும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடக்கும். ஆனால் 2015 டிசம்பரில் பெருவெள்ளப் பேரழிவுக்குப் பிறகு இந்நிகழ்ச்சியை நடத்தாமல் அதனை 2016 டிசம்பருக்கு நகர்த்திவைத்தோம். பெரும்புயலுக்குப் பிறகும் நிகழ்ச்சியை நடத்திவிட்டோம்.

மேலே உள்ள படத்தில் பார்ப்பது நிகழ்ச்சியைப் பின்னிருந்து நடத்திய சிலரையும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிலரையும்.

மாமல்லபுரம், யுனெஸ்கோவால் உலகக் கலாசாரச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஓரிடம். தமிழகத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள ரம்பரியக் கலைச் சின்னங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று மாமல்லை. இரண்டாவது 'வாழும் சோழர்காலக் கோவில்கள்' என்ற மூன்று கோவில்கள் அடங்கிய ஒரு தொகுப்பு: தஞ்சைப் பெருவுடையார் கோவில், கங்கைகொண்டசோழபுரப் பெருவுடையார் கோவில், தாராசுரத்தின் ஐராவதீசுவரர் கோவில். இவை முறையே முதலாம் இராசராசன், இராசேந்திரன், இரண்டாம் இராசராசன் ஆகியோரால் கட்டப்பட்டவை ஆகும்.

பேச்சுக் கச்சேரி நிகழ்வதற்கான இடத்தைக் கொடுத்து உதவியது தமிழ் இணையக் கல்விக்கழகம். சுமார் 150-160 பேர் உட்காரக்கூடிய அரங்கம் அவர்களுடையது. ஆனால் மேலும் இருக்கைகள் போடப்பட்டு பெரும்பாலும் 200 பேர் பல நேரங்களில் அரங்கினுள் அமர்ந்திருந்தனர் அல்லது நின்றபடி இருந்தனர்.

மாமல்லையைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. புரியாத புதிர்களும் பல உள்ளன. இரண்டு நாள்களாகத் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வில் கீழ்க்கண்ட உரைகள் இடம்பெற்றிருந்தன.

(1) மல்லை - ஓர் அறிமுகம். முனைவர் சித்ரா மாதவன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மாமல்லையில் என்னவெல்லாம் உள்ளன என்று அறிமுக உரையாக இது அமைந்தது. அடுத்து வரப்போகும் பல்வேறு உரைகளுக்கான நுழைவாயிலாகவும் இது அமைந்தது. சித்ரா மாதவன் வரலாற்றின் முநைவர் பட்டம் பெற்றவர். கட்டடக்கலை, கல்வெட்டுகள், வரலாறு, பக்தி, வைணவம் போன்ற பல துறைகளில் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து உரை நிகழ்த்திவருபவர். இத்துறைகளில் ஆங்கிலப் புத்தகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். இவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நிறுத்தி, நிதானமான, தெளிவான ஆங்கில உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்களுடன் பேசக்கூடியவர். வரலாறு, தொல்மரபு ஆகியவை சார்ந்த விஷயங்களை ஒருவர் முன்பின் தெரிந்திராவிட்டாலும் இவருடைய உரையில் அமர்ந்திருந்தால் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

(2) மாமல்லை சிற்பங்களின் உடல்மொழி. பேரா. சிவராமகிருஷ்ணன் தமிழில் உரையாற்றினார். இவர் சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். இந்தியக் கோவில் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அற்புதமாக விளக்கக்கூடியவர். இவருடன் மாமல்லை, புள்ளமங்கை, அஜந்தா போன்ற இடங்களுக்குச் சென்று அங்கே அவர் விளக்கம் சொல்லக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். கவின்கலைக் கல்லூரியில் ஓவியர் சந்ருவிடம் பயின்ற மாணவர். இந்த உரையின்போது மல்லையில் இருக்கும் சில சிற்பங்கள் ஒத்தமாதிரி இருந்தாலும் எவ்வாறு உடல்மொழியில் வேறுபடுகின்றன என்பதைப் படவிளக்கங்களுடன் அற்புதமாக விவரித்துச் சொன்னார். உதாரணமாக ஒன்றைமட்டும் சொல்கிறேன். கோவர்தன சிற்பத் தோகுதியில் பலராமன், பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் இடையன் ஒருவனை அணைத்து ஆறுதல் அளிப்பா ன். தர்மராஜ ரதத்தின் மேல் நிலைகளில் திருமால் அருகில் கருடன் அவரை ஏற்றிக்கொள்ளத் தயாரான நிலையில் இருப்பான். அங்கேயே இன்னொரு சிற்பத்தில் சிவபெருமான் சண்டேசரை அணைத்தபடி இருப்பார். மூன்றிலுமே அருகருகே இருவர் அணைத்தபடி இருந்தாலும், மூன்றும் வெவ்வேறுவகையான அணுக்கங்கள். அவை எப்படி உடல்மொழியாக, நுட்பமாக வெளிப்படுகின்றன என்பதைப் படமாகக் காட்டி விளக்கினார் சிவராமகிருஷ்ணன். இந்தச் சிற்பங்களைப் பலப்பலமுறை நேரிலும் படங்களிலும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் கோணத்தில் இவற்றை நான் பார்த்ததில்லை.

(3) மல்லையின் வடமொழிக் கல்வெட்டுகளின் முழுப் பின்னணியை விளக்கிப் பேசினார் பேரா. சங்கரநாராயணன். காஞ்சி சந்திரசேகரேந்திரர் பல்கலையில் சமஸ்கிருதத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர். உண்மையில் மிகச்சிறந்ததொரு கல்விமான். வடமொழி இலக்கணம், காவியங்கள், ஆகமங்கள், கல்வெட்டியல், வரலாறு போன்ற பலதுறைகளில் வல்லவர். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் நன்றாக எழுதுபவர். பல்வேறு புராதன வரிவடிவங்களை (கிரந்தம், பிரமி, வட்டெழுத்து, தமிழெழுத்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம், நாகரி போன்றவற்றை) எளிதாகப் பார்த்தமாத்திரத்திலேயே படிக்கக்க்கூடியவர். வடமொழி தவிர, தமிழுடன் பிற தென்னிந்திய மொழிகளில் கவிதைகள் எழுதக்கூடியவர். முறையாகப் பரதம் பயின்றவர். கல்வெட்டின் எழுத்தமைதிகொண்டு அதன் காலத்தைச் சட்டென்று கணிக்கக்கூடியவர். சிலைகளின் வடிவமைதி கண்டு அதன் காலத்தைச் சட்டென்று சொல்லக்கூடியவர். ஏதேனும் சிலை என்னவென்று தெரியவில்லை என்றால் இவரைக் கேட்டால் போதும். சட்டென்று அது என்ன என்பதைச் சொல்லக்கூடியவர். மல்லையின் பல்வேறு வடமொழிக் கல்வெட்டுகளையும் முறையாகப் பட்டியலிட்டு, அவை சொல்லும் தகவல்கள், அவற்றில் உள்ள பட்டப்பெயர்களின் பொருள், அவை பிற இலக்கியங்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்தால் அந்த மூலம் எது, மூல வடிவம் என்ன போன்றவற்றை தெள்ளுதமிழில் அற்புதமாக விவரித்தார். ஒரு பெரும் புயல் அடித்தாற்போல் இருந்தது இவர் பேசி முடித்தபோது.

(4) காணாமல் போன மல்லையை மீட்டெடுத்த வரலாறு பற்றி ஆர்.கோபு. கோபு அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருளாளராகப் பணியாற்றிவிட்டு ஓர் எழுத்தாளர் ஆக விரும்பி இந்தியா திரும்பிவந்தவர். இன்று பேச்சாளர் ஆகிவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் பாரம்பரியம், கலை பற்றியும் அறிவியல், தொழில்நுட்பம் பற்றியும் பல சொற்பொழிவுகளைச் செய்தவர். இவருடைய ரசிகர் கூட்டமும் பெரியதுதான். அதிகம் படிப்பவர். குறைவாக எழுதுபவர், இப்போது நிறையப் பேச ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி. பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மல்லைக் கோவில்கள் பலவற்றுக்கும் சோழர் காலத்திலும் பின்னர் விஜயநகர நாயக்கர்கள் காலத்திலும் கொடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திடீரென்று ஒரு கட்டத்தில் அனைத்தும் மறக்கப்பட்டு, இங்குள்ள சிற்பங்களும் குடைவரைகளும் மண்மூடிக் காணாமல் போயின. பிறகு 18-ம் நூற்றாண்டு தொடங்கி பிரிட்டிஷ்காரர்கள் சிலரால் அவை அகழப்பட்டன. உள்ளூர் மக்கள் ஆளுக்கொரு கதைகளைச் சொன்னார்கள். அவர்களுக்கு அங்குள்ள கல்வெட்டுகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை. மொத்தத்தில் நாம் நம் வரலாற்றை மறந்துபோனோம். மகேந்திரனையும் தெரியாது, நரசிம்மனையும் தெரியாது. பல்லவர்கள் என்றால் யார் என்றே தெரியாது. அவர்கள் உருவாக்கிய கலைச்செல்வங்களுக்கு ஈடு, இணை ஏதும் இல்லை என்பதும் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வெட்டுகள் படிக்கப்பட்டன. தவறாகப் பொருள் கொள்ளப்பட்டன. பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. யார் இவற்றைக் கட்டியிருக்கலாம் என்று பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு பெற்ற்றாலும் இன்றுவரை பல விஷயங்களில் குழப்பமே நிலவுகிறது. இருந்தும் இதுவரை நமக்குத் தெரிந்துள்ளது எப்படித் துப்பறிந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பதை கோபு சுவைபட விளக்கினார்.

(5) முனைவர் சுவர்ணமால்யா குழுவினரின் 'மத்தவிலாசப் பிரகசணம்' நாட்டிய நாடகம். சுவர்ணமால்யா ஒரு நடனக் கலைஞர். நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். யுனிவெர்சிடி ஆ கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்செல்ஸுக்கு ஃபுல்பிரைட் ஃபெல்லோஷிப் பெற்ற வருகைதரு பேராசிரியராகச் சென்றிருக்கிறார். வடமொழிப் பரிச்சயம் நன்கு உள்ளவர். மகேந்திரவர்மப் பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரகசணம், பகவதஜ்ஜுகம் போன்றவற்றையும் பல்லவ மன்னர்களின் கலைச் சாதனைகளையும் சற்றே கலந்து தமிழும் ஆங்கிலமுமாக ஒரு கேலிநாடக நாட்டிய வடிவத்தைத் தன் குழுவினருடன் செய்துகாட்டினார். ஓரளவுக்கு இந்த நாடகங்களின் பிரதியைப் படித்தவர்களால்தான் இதனைப் புரிந்துகொள்ள முடியும். பார்வையாளர்கள் எந்த அளவுக்கு நாடகப் பாத்திரங்களைப் புரிந்துகொண்டனர் என்று தெரியவில்லை. ஆனாலும் மகேந்திரன் திருச்சி மலைக்கோட்டைக் குடைவரையில் உருவாக்கியுள்ள கங்காதரர் சிற்பம் போன்றவற்றை அபினயித்துக் கண்முன் கொண்டுவந்தது அனைவருக்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.

(6) மல்லையின் துர்கை/கொற்றவை வடிவங்கள். முனைவர் பாலுசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியர். மாமல்லை பற்றி சீரிய ஆய்வுகள் செய்துவருபவர். அருச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் என்ற இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இப்போது மாமல்லையின் துர்கை பற்றி ஒரு நூலை எழுதிவருகிறார். இவருடைய பேச்சு அரங்கில் உள்ளோரைக் கட்டிப்போடக்கூடிய ஒன்று. மல்லையின் மிகப் புகழ்பெற்ற ஒரு சிற்பம் மகிஷனை தேவி சமரில் எதிர்கொள்ளும் மிக அற்புதமான புடைப்புச் சிற்பம். இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பங்களுள் மேலிடத்தில் இருக்கும். இந்தியாவின் அனைத்து துர்கை சிற்பங்களையும் எடுத்துக்கொண்டால் இதனைவிடச் சிறப்பான ஒரு துர்கை இருக்கமுடியுமா என்பது சந்தேகமே. ஒரு போர்க்காட்சி என்று எடுத்துக்கொண்டால் இதைவிடச் சிறப்பாக ஒரு போர்க்காட்சியை ஒரு செவ்வகத்தில் வடிவமைத்திதிருக்க முடியுமா என்பதும் சந்தேகமே. தேவி மகாத்மியத்தில் தொடங்கி மல்லையில் பதினொரு இடங்களில் தேவிக்கு இருக்கும் கோயில்கள் அல்லது சிற்பங்களைப் பட்டியலிட்டு, அவற்றின் நுட்பங்களைத் தொட்டுப்பேசி, தேவியின் வாகனமான சிம்மத்தையே கோவிலாக வடித்திருக்கும் மல்லைச் சிற்பியின் திறனைப் பேசி, இறுதியில் தனிச் சிற்பங்களாக பூட்டிய இடத்தில் இருக்கும் சாமுண்டிவரை விளக்கிப் பேசி, அரங்கில் உள்ளோரைத் திக்குமுக்காடவைத்தார் பாலுசாமி.

(7) மல்லையின் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் குறித்து பேரா. சுவாமிநாதன் பேசவேண்டும். சுவாமிநாதன் தில்லி ஐஐடியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் ஏற்படக் காரணம் இவரே. பேச்சுக் கச்சேரி என்பதையும் சைட் செமினார் என்பதையும் திட்டமிட்டு உருவாக்கியவரும் இவரே. மாமல்லை குறித்து காஃபிடேபிள் புத்தகம் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகியுள்ளது. மாமல்லையில் இருக்கும் ஒவ்வொரு கல்லையும் செடியையும் முழுமையாக அறிந்தவர். ஆனால் பாலுசாமி பேசிய பிற்பாடு மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதியைப் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொல்லிவிட்டார்! முதல்நாள் பேசிய சிவராமகிருஷ்ணன்கூட, தன் உரையை எப்போதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், ஆனால் பாலுசாமிக்கு அடுத்து மட்டும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்! சுவாமிநாதன் எடுத்துக்கொண்டது வராகமண்டபத்தில் உள்ள வராகச் சிற்பத்தொகுதி, திரிவிக்கிரமச் சிற்பத்தொகுதி மற்றும் மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தின் அநந்தசயன சிற்பத்தொகுதி மற்றும் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதி. இவற்றுள் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதியின் கதையை பாலுசாமி ஏற்கெனவே விவரித்திருந்தார். அதுதவிர பிற மூன்று கதைகளையும் பகிர்ந்துகொண்ட சுவாமிநாதன், இந்தச் சிற்பத்தொகுதிகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஆலீஸ் போனர் விவரித்திருக்கும் முறையை விளக்கிக்காட்டினார். ஆலீஸ் போனர் ஸ்விஸ் நாட்டவர். ஓவிய, சிற்பக் கலைஞர். இந்திய நாட்டியத்தின்மீது பேரார்வம் கொண்டு இந்தியா வந்தவர். நாட்டியத்திலிருந்து இந்தியச் சிற்பங்களைப் படிக்க ஆரம்பித்தார். சுமார் 20 ஆண்டுகளாக தென்னிந்தியாவின் சுமார் 20 சிற்பங்களைத் தீவிரமாக ஆராய்ந்து, Principles of Compositions in Hindu Sculpture: Cave Temple Period என்ற புத்தகத்தை எழுதினார். அந்த ஆராய்ச்சியில் நாம் மேலே சொன்ன மல்லையின் நான்கு சிற்பத்தொகுதிகளும் அடங்கும். ஆலீஸ் போனரின் ஆராய்ச்சிகள் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை மட்டுமே சுவாமிநாதன் அளித்தார்.

(8) மல்லை குறித்து ஆழ்வார்கள். பேரா. மதுசூதனன் கலைச்செல்வன். மதுசூதனன் தொழிலால் கட்டடக்கலை பேராசிரியர். ஆனால் அவர் சென்னையில் அதிகம் அறியப்பட்டிருப்பது அரையர் சேவை, ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தங்கள் ஆகியவை குறித்த அவருடைய சொற்பொழிவுகளால். திருவரங்கத்தின் அரையர் சேவை குறித்து அவர் சென்னை மியூசிக் அகாடெமியில் இரு வாரங்களுக்குமுன் நிகழ்த்திய உரை இந்த ஆண்டின் சிறந்த "லெக்-டெம்" என்று தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. முதலாழ்வார்களில் பூதத்தாழ்வார் மல்லையில் உதித்ததாகக் கருதப்படுகிறார். ஆனால் மல்லையைப் பற்றி அதிகம் பாடியிருப்பது திருமங்கை ஆழ்வார்தான். வேறு சில ஆழ்வார்கள் அங்குமிங்கும் தொட்டுச் சென்றுள்ளனர். இந்த ஆழ்வார்கள் மல்லை வந்து அங்கு பல்லவர்கள் செதுக்கிய சிற்பங்களைக் கண்ணுற்றார்களா? நமக்குத் தெரியாது. காலக்கணக்கின்படி திருமங்கை ஆழ்வார் அங்கு வந்தபோது மல்லையின் கற்றளிகள் எல்லாம் எழும்பியிருக்கும். மதுசூதனன் மல்லையின் சிற்பங்களையும் ஆழ்வாரின் வரிகளையும் அருகருகே காட்டி, எவற்றையெல்லாம் ஆழ்வார் குறிப்பிட்டிருக்கக்கூடும் என்ற தன் கருதுகோளை முன்வைத்தார். அவருடைய உரையின் வீரியத்தில் உண்மையிலேயே திருமங்கை ஆழ்வார் இந்தச் சிற்பங்களையெல்லாம் பார்வையிட்டிருக்கத்தான் வேண்டும் என்று நம்மை நம்பவைத்துவிட்டார்.

(9) மல்லையின் தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி கி. ஶ்ரீதரன். ஶ்ரீதரன் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் வேலைசெய்து ஓய்வுபெற்றவர். கல்வெட்டுகள் குறித்தும் கோவில்கள் குறித்தும் தமிழ்ச் செய்தித்தாள்களிலும் இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருபவர். மாமல்லையின் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்களைக் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

(10) இறுதியாக முனைவர் ஆர். நாகசாமி மாமல்லை குறித்த தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தமிழகத்தில் மாநில அரசின்கீழ் தொல்லியல் துறை ஒன்றை உருவாக்கி அதன் முதல் இயக்குனராகப் பணியாற்றியவர் நாகசாமி. தொல்லியல் துறையில் மூத்த அனுபவசாலி. வடமொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். வடமொழி, தமிழ் இரண்டிலும் பெருத்த ஞானம் உள்ளவர். அகழ்வாய்வு, நாணயவியல், படிமவியல், சிற்பம், ஆகமம், சாத்திரங்கள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர். மாமல்லபுரம் குறித்து இவர் ஐம்பதாண்டுகளுக்கும் முன்னால் எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை மிகுந்த பெயர் பெற்றது. சர்ச்சைக்கும் உரியது. இவர் தான் ஐம்பதாண்டுகளுக்குமுன் பார்த்த மாமல்லபுரம் எத்தகையது, இப்போது அங்கு வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள், உலகப் பாரம்பரியச் சின்னம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஓர் இடம் எப்படிப் பாதுகாக்கப்படவேண்டும், இது எப்படி உலகின் ஒரு பெரும் சொத்து என்று தன் ஆழ்மனத்திலிருந்து வேதனையுடன் பேசினார். அதே நேரம், இதுபோன்ற ஒரு விஷயத்தைக் குறித்து நடக்கும் பேச்சுகளைக் கேட்க சுமார் 200 பேர் வந்திருப்பது ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது என்றும் சொன்னார்.

===

இதுவரை நாங்கள் நடத்தியுள்ள பேச்சுக் கச்சேரிகளிலேயே இதுதான் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழ் இளையக் கல்விக்கழக வளாகத்தில் வண்டிகளை நிறுத்திவைக்கப் போதிய இடம் இருந்தது. நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் 180 பேர்வரை எளிதில் உட்காரமுடியும். வேண்டுமென்றால் 200 பேர்களைத் திணித்துவிடலாம். மதிய நேரத்தில் உணவு உண்ண இடம், தேநீர் அருந்த இடம், புத்தகங்களை வைத்து விற்க இடம், கழிவறை வசதிகள் என்று அனைத்துக்கும் ஏற்றது. நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து நேரடியாக இணையம்மூலம் ஒளிபரப்ப அவர்களிடம் வசதி உள்ளது. ஒவ்வொருமுறை இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்யும்போதும் கூட்டம் வருமா அல்லது அரங்கில் கால் பாதிகூட நிறையாமல் பேச்சாளர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துமா என்று நடுங்கிக்கொண்டிருப்பேன். அதற்கு வாய்ப்பே இல்லாமல் பெருங்கூட்டம். அதற்கு ஒரு காரணம், இணையம் மூலமாகவும் அச்சுப் பத்திரிகைகள் மூலமாகவும் இந்நிகச்சிக்குக் கிடைத்த பரவலான கவனம். பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்து நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த நாட்களிலேயே குறிப்புகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டனர். மல்லை குறித்து நாங்கள் விற்பனைக்கு வைத்திருந்த காலச்சுவடு, கிழக்கு பதிப்பகப் புத்தகங்கள் நன்கு விற்பனையாயின. தமிழ்ப் பாரம்பரிய அற்க்கட்டளையின் தன்னார்வலர்களுடன் காந்தி படிப்பு மையத்தின் இளம் மாணவர்கள் சிலர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நன்கு கையாண்டனர்.

இனிவரும் ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சியை விஞ்சும் விதமாக எப்படித் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம், பேச்சாளர்களைக் கண்டுபிடிக்கப்போகிறோம் என்பது மலைப்பாக உள்ளது.

6 comments:

 1. Hello - Do you have the audio recording of the speeches ?

  ReplyDelete
 2. Dear Badri, please upload complete video coverage / audio recordings asap. Nakeeran

  ReplyDelete
 3. Sir, Could you please upload the vidoes in youtube?

  Thnks
  Murugesan

  ReplyDelete
 4. Sir, please upload the audio recordings
  Regards
  Senthil

  ReplyDelete