Tuesday, March 27, 2018

தூண்டில் கயிறு - சுபா

"தமிழ்ப் புத்தக நண்பர்கள்" என்ற குழுவின் மாதாந்திரப் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் இன்று நான் பேசியது.

**

தூண்டில் கயிறு - சுபா
ஈகிள்ஸ் ஐ டீம் தூள்பறத்தும் சுபாவின் மாஸ்டர்பீஸ்!

தமிழில் பல்ப் நாவல்களுக்கு என்று ஒரு பொற்காலம் இருந்தது. ‘பல்ப்’ என்பதை நான் அதன் மோசமான பொருளில் முன்வைக்கவில்லை. எளிதில் படித்துமுடித்துவிடக்கூடிய, குறைந்தபட்ச உத்தரவாதமான மகிழ்ச்சியைத் தரக்கூடிய, படித்துமுடித்ததும் தூக்கி எறிந்துவிடக்கூடியமாதிரியான புத்தகம். விலை குறைவாக இருக்கவேண்டும். ஒரு பேருந்துப் பயணத்தில் படித்துமுடித்துவிடலாம். அருகில் உட்கார்ந்திருப்பவர் கடன் கேட்டால், தைரியமாகக் கொடுத்துவிடலாம். அவர் எடுத்துக்கொண்டு போனாலும் சேதமில்லை.

1980களின் இரண்டாம் பாதியும் 1990களின் முதற்பாதியும்தான் இந்தக் காலம். கேபிள் டிவி வந்திருக்கவில்லை. தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் ஆரம்பித்திருக்கவில்லை. திரைப்படங்கள் என்றால், திரையரங்கு சென்றுதான் பார்க்கவேண்டும். அல்லது தூரதர்ஷனில் காட்டப்படும் வாரம் ஒருமுறை தமிழ்ப் படம். அதுவும் எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று.

வார இதழ்களில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் வெளியாகின. ஆனால், நெடுங்கதைகளைப் படிக்க வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. தொடர்கதைகளையெல்லாம் வாராவாரம் கிழித்து பைண்ட் செய்துவைத்துப் படிக்கவேண்டும். அல்லது புத்தகமாக வெளியாகியிருந்தால் அவற்றை வாங்கவேண்டும். அன்றுமுதல் இன்றுவரை புத்தகப் பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை நாடு முழுதும் விற்பனை செய்வதற்கு உருப்படியாக ஒரு முயற்சியையும் செய்ததில்லை. தெருக்கோடிக் கடையிலும் வார இதழ் கிடைக்கும். அச்சிட்ட கதைப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று பெரும்பாலானோருக்குத் தெரியவே தெரியாது. மேலும் வார இதழ்களின் விலை மிகக் குறைவு. அச்சிட்ட புத்தகங்களின் விலை, மிக அதிகம். எளிய மக்கள் அவற்றை வாங்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் நெடுங்கதைகளைப் படிக்கவேண்டும் என்ற பெரும் தாகம் இருந்தது.

குமுதம் குழுமத்திலிருந்து மாலைமதி, தினத்தந்தி குழுமத்திலிருந்து ராணிமுத்து ஆகியவை மாதாமாதம் முழு நெடுங்கதைகளை வெளியிட்டன. மேற்கொண்டு ஓரிரு இதழ்கள் இதேபோல் இருந்திருக்கலாம். எனக்கு ஞாபகம் வரவில்லை. இந்தச் சில இதழ்களால் மக்களின் படிப்புத் தாகத்தைத் தீர்த்துவைக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் “மாத நாவல்கள்” என்னும் பிராண்ட் உருவானது. அடிப்படையில் ஒரு நெடுங்கதை. அழகான ஆர்ட் வொர்க், லேமினேஷனுடன் அட்டை. உள்ளே பெரும்பாலும் மோசமான சாணித்தாள்தான். கொஞ்சம் ஜோக், ஓரிரு மோசமான கவிதைகள், இதழ் எடிட்டர் மிகவும் சாமர்த்தியசாலி என்று தன்னைக் காட்டிக்கொள்ளும்விதமாக கேள்வி பதில் வேறு எழுதுவார். இந்தத் துறையில் மிகப்பெரும் முன்னோடி ஜி. அசோகன் என்பவர். இன்றும் இதே தொழிலில் இருக்கிறார். ஆனால் அந்தப் பொற்காலத்தைப் போல இப்போது இல்லை என்று சொல்லலாம்.

ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர் துப்பறியும் நெடுங்கதைகளை எழுத ஆரம்பித்தது இந்தச் சூழ்நிலையில்தான். ஜி. அசோகன் மட்டுமின்று வேறு பலரும் இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கலாம். இதன் முழுமையான வரலாறு எனக்குத் தெரியாது.

பெரும்பாலான ஆண் வாசகர்களை ஈர்க்க இந்தக் கொலைக் கதைகள் பயன்பட்டன. மென் பாலியல் சித்திரிப்புகள், சீண்டல்கள் விரவிவரும். சில கொடும் குற்றச் செயல்கள் நிகழும். ரெகுலர் ஹீரோக்கள் இந்தக் குற்றச் செயல்களைத் துப்பறிந்து குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடுவார்கள். பெரும்பாலும் காவலர்கள் டம்மிகள்தான்.

சுஜாதாவின் துப்பறியும் கதைகளில் வரும் கணேஷ்-வசந்த் இணையரை நீங்கள் பலரும் படித்திருப்பீர்கள். இருவரும் வழக்கறிஞர்கள். ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாக குற்றச் செயல்களைத் துப்புத் துலக்குவதற்குள் நுழைந்தவர்கள். இவ்விருவரை ஆர்தர் கோனான் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் வரும் ஷெர்லாக் ஹோம்ஸ் - டாக்டர் வாட்சனோடு பொருத்திப் பார்க்கலாம்.

ஹோம்ஸ் அதீத ஆற்றல்கள் பொருந்தியவர். அதி புத்திசாலி. ஆனால் அத்துடன் கடுமையான உழைப்பும் அவரிடம் இருந்தது. பல துறை வித்தகர். ரசாயனங்கள், விஷங்கள் ஆகியவை தொடர்பான அவருடைய அறிவாற்றல் அபாரமானது. சுருட்டின் சாம்பலைப் பார்த்தே அது எந்தவகைச் சுருட்டு என்று கண்டுபிடித்துவிடுவார். மண் தீற்றலைக் கொண்டே அது லண்டனின் எந்தப் பகுதியிலிருந்து வந்தது என்று அறிந்துவிடுவார். அவருடைய கூட்டாளி வாட்சன் உண்மையில் அந்தக் கூட்டணியில் எந்தப் பெரிய செயலையும் செய்துவிடவில்லை. அவர் ஒரு டம்மி. ஆனால் அவர் இந்தக் கதைகளில் இருப்பது நமக்காக. இறுதியில் கதை எப்படி நகர்ந்தது என்பதை விவரிக்க, வாட்சன் நமக்குத் தேவை. எப்போதாவது அவருடைய துப்பாக்கி பயன்படும். எப்போதாவதுதான்.

ஆனால் சுஜாதாவின் வசந்த், அப்படிப்பட்ட டம்மி கிடையாது. கணேஷுக்கு இணையானவன். இள ரத்தம் என்பதால் கொஞ்சம் அவசரப்பட்டுவிடுவான். பெண்களிடம் அதிகம் வழிவான். ஆனால் படு சுட்டியும்கூட. கணேஷுக்கு வசந்த் மிக மிக அவசியம். ஷெர்லாக் ஹோம்ஸ், வாட்சன் இல்லாமலேயே வழக்குகளை ஊதித் தள்ளிவிடுவார். பல வழக்குகளை அவர் அப்படிக் கையாண்டிருக்கிறார். ஆனால் வசந்த் என்ற பாத்திரத்தை சுஜாதா உருவாக்கியதும் கணேஷுடன் வசந்த் ஒட்டிக்கொண்டு அவர்கள் இரட்டையர் ஆகிவிட்டனர்.

**
இப்போது சுபாவுக்கு வருவோம்.

இன்று தமிழ் சினிமாவில் கதை-திரைக்கதை-வசனத்தில் கோலோச்சிக்கொண்டிருக்கும், பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கும் சுரேஷ் - பாலா இரட்டையர்களுக்குப் பல முகங்கள்.

நாம் மேலே பார்த்தபடி துப்பறியும் மாத நாவல்கள் பலவற்றை எழுதியுள்ளனர். நல்ல பத்திரிகையாளர்களும்கூட. நல்ல பல சிறுகதைகள் எழுதியுள்ளனர். பக்தித் தொடர்கள் எழுதியுள்ளனர். ஜக்கி வாசுதேவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடர் விகடனில் வெளியானது. அதனை எழுதியவர்கள் சுபா. கல்கியில் எக்கச்சக்கமான சினிமா விமரிசனங்கள் எழுதியுள்ளனர்.

புகைப்பட நிபுணரான கே.வி.ஆனந்த் சினிமாத்துறைக்குள் நுழைந்தபோது அவருடனான நட்பின் வழியாக அத்துறைக்குள் புகுந்தவர்கள் சுபா (என்று நினைக்கிறேன்). அது அவர்களுக்குப் பெரிய வாய்ப்பாகப் போனது. அவருடைய சமகாலத்தவர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் ஆகியோர் திரைத்துறையில் பிரகாசிக்க முடியவில்லை. சீரியலும் அவர்களுக்கு அவ்வளவாக செட் ஆகவில்லை. தேவிபாலா, இந்திரா சௌந்தரராஜன் ஆகியோர் சீரியல் எழுதுவதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். ஒருவிதத்தில் ‘பல்ப்’ துப்பறியும் கதைகள் வழியாக சினிமாவுக்குள் நுழைந்து அங்கே வலுவான ஓரிடத்தில் தொடர்ந்துகொண்டிருப்பது சுபா மட்டும்தான்.

**

சுபாவின் துப்பறியும் கதைகளில் ‘ஈகிள்ஸ் ஐ’ என்றதொரு டிடெக்டிவ் நிறுவனம் வரும். முதன்மையானவர்கள் நரேந்திரன், வைஜயந்தி. ராஜேஷ் குமாரின் விவேக் - ரூபலா ஜோடியைப்போல. பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் - சுசீலா போல. ஹோம்ஸ் - வாட்சன், கணேஷ் - வசந்த் இருவருமே ஆண் ஜோடிகள். ஆனால், ஒரு ஆண்-பெண் ஜோடியைக் கொண்டுவந்தால் அவர்களுக்கிடையிலான சில்மிஷங்கள், சண்டைகள் போன்றவைமூலம் ஆண் வாசகர்களுக்கு மேலும் கொஞ்சம் கிளுகிளுப்பூட்டலாம். இதனை சுபாவும் புரிந்துகொண்டதனால் உருவானவர்கள்தான் நரேந்திரன் - வைஜயந்தி இணையர்கள். ஆனால் பல நேரங்களின் வைஜயந்தி ஒரு லயபிலிட்டியும்கூட. இவ்விருவர் தவிர, ஜான் சுந்தர், அனிதா என்று இன்னொரு ஜோடித் துப்பறிவாளர்கள் + ஈகிள்ஸ் ஐயின் நிறுவனர் ராம்தாஸ். ஆனால் பின்னே சொன்ன மூவரும் கொஞ்சமாகத்தான் கதைக்குப் பங்களிப்பார்கள்.

தூண்டில் கயிறு கதைக்கு வருவோம். மாத நாவலாக மூன்று பாகங்களாக வெளியானது. பொதுவான மாத நாவல்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் நீண்ட கதை.

ரஞ்சித் என்ற இளைஞனின் கொலையுடன் கதை தொடங்குகிறது. ஆனால் கதையில் ரஞ்சித்தின் இடம் மிகக் குறைவுதான். வெகு விரைவில் ராஜபூபதி என்ற கதையின் முக்கியக் கதைமாந்தரைச் சந்திக்கிறோம். பெயரைப் பார்த்தால் ஜமீந்தார் மாதிரி இருக்கிறது என்றாலும், நவீனத் தொழில் ஒன்றைச் செய்கிறார். மீன்பிடித் தூண்டில்களை உருவாக்கி உலகம் முழுவதும் விற்பனை செய்யும் தொழிலதிபர். அவருடைய ஒரே மகள் சுபத்ராவைத்தான் ரஞ்சித் காதலிக்கிறான். ஆனால் கொலை செய்யப்படுகிறான்.

ராஜபூபதி வாழ்க்கையில் இரண்டு பேய்கள் குறுக்கிடுகின்றன. அவை அவருடைய சகோதரன் சுந்தர பூபதியும் அவனுடைய மனைவி அமராவதியும். இந்தப் பேய்கள் உண்மையில் யார் என்பதைக் கண்டறிய ராஜபூபதி ஈகிள்ஸ் ஐ நிறுவனத்தை நாடுகிறார். நரேந்திரன் உள்ளே வருகிறான்.

சுந்தர பூபதியும் அமராவதியும் மின்விபத்தில் இறந்துபோயிருக்கின்றனர். ஆனால் ராஜபூபதிதான் இவ்விருவரையும் கொலை செய்ததாக ஒரு பேச்சும் உள்ளது. இவை இரண்டும் உண்மையில் பேய்தானா என்பதைக் கண்டறிவதற்குள் மேலும் பல மர்மங்கள். புதிய திருப்பங்கள். மேலும் சில கொலைகள்.

இறுதியில், சுபாவுக்குப் பிடித்தமான ஹெராயின் கடத்தலும் சேர்ந்துகொள்கிறது. மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்படுகின்றன. ராஜபூபதிதான் உண்மையான வில்லன். பேய்கள் பேய்கள் கிடையாது. அந்த வேஷம் போட்டுக்கொண்ட இருவர். அவர்கள் இருவரும் யார்? தொழிற்சாலையில் என்ன நடக்கிறது? ராஜபூபதிக்குப் பணம் கொழிப்பதன் மர்மம் என்ன? ஒரு படுபயங்கர சினிமாத்தனமான கார், லாரி சேஸ் சென்னையின் தெருக்களில் நடக்கிறது. வில்லன் ராஜபூபதி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறான். கடைசியில் சுபத்ராவுடன் நரேந்திரன் செய்யும் சில வழிசல்களுடன் கதை முடிகிறது.

**

இந்தக் கதையைத் தனியாக விமர்சிப்பது என்றால், இதில் விமர்சிக்க அதிகம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தத்துவார்த்தச் சிக்கல்கள் கொண்ட தஸ்தாயேவ்ஸ்கியின் கதையல்ல இது. எளிய மக்கள், விரைவாகப் படித்து, இன்புற நினைக்கும் ஒரு கதைதான். படித்தவுடன் அதிகம் நினைவில் இருக்கக்கூடிய கதைகள் அல்ல இவை.

குறிப்பிட்ட வணிகச்சூழல், படிப்போரின் பின்புலம் இரண்டையும் மனத்தில் வைத்துத்தான் இம்மாதிரிக் கதைகளை அலசவேண்டும். பெரும்பாலும் ஓரிரு மாதங்களுக்குள்ளாக எழுதப்பட்டிருக்கவேண்டும். கம்ப்யூட்டர் காலத்துக்கு முந்தைய கதைகள் இவை என்று கருதுகிறேன். எனவே கையால் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

களம், சூழல், பாத்திரங்கள் ஆகியவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. புத்தகம் ஹெராயின் கடத்தல் பற்றியதல்ல. அது வெறும் ஒரு ஊறுகாய் மட்டும்தான். கதை படிப்போருக்கு ஹெராயின் என்பதே அந்நியமானது. அதுகுறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. நாம் கொலம்பியாவிலும் இல்லை, அமெரிக்காவிலும் இல்லை. இந்தியாவிலும் ஹெராயினும் போதைப்பொருளும் நிச்சயம் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்தியா ஹெராயின் ஏற்றுமதிக் களமாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

குற்றச் செயல் புரிபவர்கள், அதுவும் கூடவே பல குண்டர்களை வைத்துக்கொண்டு கொலை செய்வதில் அஞ்சாதவர்கள், ஈகிள்ஸ் ஐ டிடெக்டிவ் ஏஜென்சி போய் நரேந்திரனை அழைத்துக்கொண்டுவந்து பேய் உண்மையா இல்லையா என்றெல்லாம் கண்டுபிடிக்கச் சொல்வது, வேட்டிக்குள் ஓணானை விடுவதற்கு ஒப்பானது. ஆனாலும் நம் கதைகளில் இவை தொடர்ந்து நடக்கின்றன. சம்பவம் நடக்கும் இடத்தைச் சுற்றி பத்து தடியர்களை கையில் துப்பாக்கியுடன் உலவவிட்டால் உண்மையைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் கதை இல்லாமல் போயிருக்கும்.

சுபா இணையர்கள் புத்திசாலிகள். அவர்களால் நிச்சயமாக மிகச் சுவாரசியமான துப்பறியும் கதைகளை எழுத முடியும். அதற்கு ஆழமான ஆராய்ச்சி தேவை. களம் பற்றிய புரிதல் தேவை. சென்னைக்கு அருகில் எண்ணூரில் ஒரு எஸ்டேட்டில் ரப்பர், தேக்கு, மிளகு ஆகியவையெல்லாம் விளையுமா என்று எனக்குத் தெரியாது. சாத்தியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். மேலும் இணையம், கூகில் ஆகியவற்றின் பெரும் வளர்ச்சிக்குமுன் ஆராய்ச்சி செய்வது என்பதே கடினமானது என்பதை மனத்தில் இருத்திவைத்துக்கொள்ளுங்கள்.

கூகில் பெருவளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இம்மாதிரியான கதைகளை எழுதுவதை விட்டுவிட்டு சினிமாத்துறைக்குள் சுபா நுழைந்துவிட்டனர். இப்போது இம்மாதிரியான கதைகளை எழுதுவதில் இவர்களுக்குப் பெரிய நாட்டம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படியே இன்று தீவிர ஆராய்ச்சிக்குப்பின் சுவாரசியமான துப்பறியும் கதை எழுதினால் புத்தகங்கள் பல ஆயிரம் விற்கும் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை.

ஒருவிதத்தில், கேபிள் டிவியின் அசுர வளர்ச்சிக்குப்பிறகு, மாத நாவல்கள் அழிந்துபோயின என்றுதான் சொல்லவேண்டும். இன்று அவை விற்பது மிக மிகக் குறைவு. ராஜேஷ் குமார் மட்டும்தான் தொடர்ந்து புதிதாக இவ்வகைக் கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இன்றைய சூழலும் களமும் புதியவை. குற்றச் செயல்களும் புதியவை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, துப்பு துலக்கும் வழிமுறைகளிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆங்கிலத்தில் எண்ணற்ற புதிய மர்ம நாவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் உட்கார்ந்துகொண்டே பிரிட்டிஷ் புனைபெயரில் இங்கிலாந்தில் நடப்பதுபோல எழுதும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அமேசான் மின்புத்தகமாக வெளியிட்டே கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கேள்வி.


அத்தகைய வாய்ப்பு தமிழிலும் விரைவில் ஏற்படலாம். கோடிகளில் இல்லாவிட்டாலும் லட்சங்களிலாவது சுபாவுக்கு வாய்க்க வாழ்த்துவோம்.

1 comment:

  1. முதல் பத்தியில் வரும் பல்ப் கதைகளுக்கான விளக்கம் அருமை.
    பல்ப் என்பதற்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் தேடவேண்டும்.
    படிக்கும் பழக்கம், மேலும் சீரியவைகளைப் படிக்கும் பழக்கம் பரவலாக ஏற்படவேண்டும், அதற்கான அடிப்படைத் தேவைகளாக இம்மாதிரிப் படைப்புகள் பயன்படும் என்கிற தங்கள் கருத்து நிற்கும். தற்போதைய காலகட்டத்தில் இவற்றின் இடத்தை நிரப்புவது எது, அல்லது எதனால் நிரப்பமுடியும் என்பது ஒரு கேள்வி.

    ReplyDelete