Wednesday, April 11, 2018

சிலை அரசியல்

தமிழகத்தில் பெரியார், அண்ணா சிலைகள். இந்தியா முழுதும் அம்பேத்கர், காந்தி, நேரு, இந்திரா காந்தி சிலைகள். இவற்றில் பெரியார், அம்பேத்கர், காந்தி சிலைகள் சில கருத்தாக்கங்களுக்கான குறியீடாகவும் பார்க்கப்படுகின்றன. எனவே இச்சிலைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக இருப்பதையும் பார்க்கமுடிகிறது.

அம்பேத்கர் சிலை, தலித் முன்னேற்றத்தின், தலித் போராட்டத்தின் குறியீடாக இருக்கிறது. பெரியார் சிலை, திராவிட இயக்கத்தின் குறியீடாக உள்ளது. காந்தி, இந்திய சுதந்தரப் போராட்டத்தின் குறியீடாகவும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் குறியீடாகவும் உள்ளார். சிலைகளை அவமதிப்பதன்மூலம், குறிப்பிட்ட கருத்தாக்கத்தையும் அந்தக் கருத்தாக்கத்தைப் பின்பற்றுபவர்களையும் அவமதிப்பதாக சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். அதனைச் செயலிலும் செய்துகாட்டுகிறார்கள். ஆனால் இச்செயலின் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கின்றன. போராட்டம், கலவரம், உயிரிழப்பு என்று முடிகிறது. சமூகங்களுக்கிடையே தேவையற்ற கசப்பு உருவாக்கப்பட்டு, நிலைநிறுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த மூன்று வருடங்களில் சிலைகள் சார்ந்து சில போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. 2015-ல், சார்ல்ஸ்டன் என்ற இடத்தில் வெள்ளை இன வெறியன் ஒருவன் கறுப்பர்கள் வழிபாடு செய்யும் கிறிஸ்தவ தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் தென் மாகாணங்கள் அடிமை முறையை ஆதரித்தவை என்பதை நீங்கள் படித்திருக்கலாம். ஆபிரகாம் லிங்கன் காலத்தில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அப்படியானால் நாங்களெல்லாம் அமெரிக்காவை விட்டுப் பிரிந்து தனி நாடாக இருப்போம் என்று அடிமை முறையை ஆதரிக்கும் தெற்கு மாகாணங்கள் முடிவெடுத்தன. இம்மாகாணங்கள் பிரிவதை அனுமதிக்க மாட்டோம் என்று லிங்கன் இந்த மாகாணங்கள்மீது போர் தொடுத்தார். உள்நாட்டுப் போர் நிகழ்ந்து, அதன் முடிவில் தெற்கு மாகாணங்கள் தோற்றன. ஒருங்கிணைந்த அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

ஆனால் அப்போது தொடங்கி கடந்த 150 வருடங்களாக கறுப்பர்கள் வெள்ளை இனவெறிக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர். கறுப்பர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. கறுப்பர்களும் வெள்ளையர்களும் திருமணம் செய்வதற்குத் தடை இருந்தது. கறுப்பர்களும் வெள்ளையர்களும் தனித்தனிப் பள்ளிகளில் படிக்கவேண்டியிருந்தது. பொது இடங்களில் அவர்கள் நீர் அருந்துவதற்குத் தனித்தனி இடங்கள். இருவரும் பயன்படுத்தத் தனித்தனிக் கழிப்பிடங்கள்.

பல்வேறு போராட்டங்கள் வாயிலாக மேலே சொல்லப்பட்ட இழிவுகள் அனைத்தும் வெள்ளையர்களின் முழு ஆதரவோடு நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் சில வெள்ளையர்களிடையே இனவெறுப்பு இன்னமும் கனன்றுகொண்டிருக்கிறது. அவர்களைப் பொருத்தமட்டில் தென் மாகாணப் படைகளின் தளபதியாக இருந்த ராபர்ட் லீ என்பவர் ஓர் உன்னதத் தலைவர். அவருக்கு அமெரிக்காவில் பொது இடங்களில் ஏகப்பட்ட சிலைகள் உள்ளன. எண்ணற்ற பள்ளிக்கூடங்கள், சாலைகள், பூங்காக்கள், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வெள்ளை இனவெறியைப் பலர் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் லீதான் முதன்மையானவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அமெரிக்காவின் ஆரம்பத் தந்தைகள் அனைவருமே கறுப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தவர்கள்தாம். ஆனால் இன்று லீ வெள்ளை இனவெறியர்களால் முன்வைக்கப்படுவதாலேயே அவருடைய சிலைகளை அகற்றவேண்டும், அவருடைய பெயரை பொது இடங்களிலிருந்து நீக்கவேண்டும் என்ற எதிர்க்குரல் எழும்பியது. சார்ல்ஸ்டன் தேவாலயத்தில் நிகழ்ந்த கறுப்பர் படுகொலையைத் தொடர்ந்து இந்தக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. பல்வேறு இடங்களில் சட்டபூர்வமாக, நகரசபைத் தீர்மானங்கள் வாயிலாக லீயின் சிலைகள் அகற்றப்பட்டன.

சார்லட்ஸ்வில் என்ற நகரில் உள்ள ராபர்ட் லீ சிலையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு மாபெரும் ஊர்வலத்தை 11 ஆகஸ்ட் 2017 அன்று நடத்த சில குழுக்கள் முடிவுசெய்தன. இல்லை, அந்தச் சிலையை அகற்றக்கூடாது என்று எதிர் ஊர்வலம் நடத்த வெள்ளை இனவெறிக் குழுக்கள் பலவும் அதே நகரில் ஒன்றுகூடத் தொடங்கின. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு எதிரெதிர் குழுக்களும் கையில் துப்பாக்கிகளுடன் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். இறுதியில் அன்று ஓர் அசம்பாவிதம் மட்டும்தான் நிகழ்ந்தது. வெள்ளை இனவெறியன் ஒருவன் தான் ஓட்டிவந்த காரை கூட்டத்தின் நடுவில் விட்டதில் சிலையை அகற்ற விரும்பும் கூட்டத்தில் இருந்த ஒரு வெள்ளைப் பெண்மணி கொல்லப்பட்டார்.

தொடர்ந்து நகரசபை, ராபர்ட் லீ சிலையை கருப்புத் துணி கொண்டு மூடிவைத்தது. அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மூடிவைத்த துணியை எடுத்துவிடவேண்டும் என்று பிப்ரவரி 2018-ல் தீர்ப்பு வந்தது. துணியும் நீக்கப்பட்டது.

இந்தியாவில் சமீபத்திய சிலைப் பிரச்னை ஆரம்பித்தது, திரிபுராவில். மார்ச் 2018-ல், பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவந்த கம்யூனிஸ்ட் கட்சி தோற்று, பாரதிய ஜனதா தேர்தலில் ஜெயித்தது. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, அம்மாநிலத்தின் இரு நகரங்களில் தெருவில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலைகள் பாஜக ஆதரவாளர்களால் அகற்றப்பட்டன. இதனைக் கொண்டாடிய பாஜகவின் சிலர் அடுத்து தமிழகத்தில் பெரியாரின் சிலையைத் தூக்குவோம் என்றார்கள். அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் இரு இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை ஒன்று உடைக்கப்பட்டது. பாஜகவின் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சிலை தாக்கப்பட்டது. பெரியார் சிலை உடைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த விவகாரங்களில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத பார்ப்பனர்கள் பலரின் பூணூல் சென்னையில் அறுக்கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் சரிசெய்த உத்தரப் பிரதேச பாஜக அரசு, அதன்மீது காவி வண்ணத்தை அடித்தது! இதனால் வெகுண்ட பகுஜன் சமாஜ் கட்சியினர், அந்தச் சிலைமீது முன்னரே இருந்த நீல வண்ணத்தை அடித்தனர்.

அமெரிக்கச் சிலை விவகாரத்துக்கும் இந்தியச் சிலைத் தாக்குதல்களுக்கும் இடையேயான வித்தியாசங்கள் என்னென்ன?

என்னதான் இருந்தாலும் அமெரிக்கா சட்டதிட்டங்களைப் பின்பற்றும் நாடு. இந்தியர்களுக்கோ, சட்டத்தின்மீது எந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது கிடையாது. சிலையை வைக்கவேண்டும் என்றாலும் எடுக்கவேண்டும் என்றாலும் அமெரிக்கர்கள் நகரசபைக் கூட்டங்கள், அரசாணை ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுவார்கள். உணர்ச்சிப் பெருக்கு இருந்தாலும் சட்டம் என்பதை மதிப்பார்கள். ஆனால் இந்தியர்களோ நடு இரவில் சிலைகளை உடைத்துவிட்டு ஓடிவிடுவார்கள். அல்லது பெரும் கும்பலாகச் சென்று அராஜக முறையில் சிலைகளை நீக்குவார்கள். ஏனெனில் கும்பல் எதற்கும் இந்தியாவில் தண்டனை வழங்கப்பட்டதே கிடையாது.

மொத்தத்தில் இந்தியர்கள் கோழைகள். இந்தியர்களுடையது கும்பல் கலாசாரம். நம்முடைய போராட்ட வடிவங்கள் அனைத்துமே அடிப்படையில் அராஜகத்தை மையமாகக் கொண்டவை. ஆனால் பொய்யாக காந்தியைத் துணைக்கு அழைத்துக்கொள்வோம். வன்முறையில்லா அறவழிப் போராட்டங்கள் வேண்டிய பலனைத் தரவில்லை என்பதால் வன்முறையை நோக்கிச் செலுத்தப்பட்டோம் என்று பொய்ச்சாக்கு சொல்வோம். நமக்கு சட்டம் ஒழுங்கின்மீது எள்ளளவும் நம்பிக்கை இருந்ததில்லை. நீ ஒரு வன்முறையில் இறங்கினால், நான் பதில் வன்முறையில் இறங்குவேன் என்பதுதான் நம்முடைய ஆதார குணம்.

பெரியாரோ, லெனினோ, அம்பேத்கரோ, காந்தியோ, அவர்களை நாட்டு மக்கள் யாருமே முழுமையாக ஆதரிக்கப்போவதில்லை. இந்த ஆளுமைகளை எதிர்ப்போரும் உண்டு, ஆதரிப்போரும் உண்டு. கருத்தளவில் அல்லது உணர்வளவில் இந்த எதிர்ப்பு இருக்கும்வரை சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் ஒரு சிலையாக வடிக்கப்பட்டு, ஓரிடத்தில் சட்டபூர்வமாக நிறுவப்படும்போது அச்சிலை ஒரு பொதுச்சொத்தாக மாறிவிடுகிறது. மனிதர்களால் நிறுவப்பட்ட சிலைகளை மனிதர்கள் எப்போதுவேண்டுமானாலும் நீக்கலாம். ஆனால், அதனையும் சட்டத்தின்பாற்பட்டே செய்யவேண்டும்.


ஒரு சிலையை உடைத்ததன்மூலம் அல்லது அகற்றியதன்மூலம் ஒரு தனி நபர் தான் பெரியதொரு சாதனையைச் செய்துவிட்டதாக நினைத்தால் அதனைவிடப் பெரிய மடமை ஏதும் இருக்கமுடியாது.

2 comments:

  1. Please write your opinion on North south disparities caused by finance commission's formula, which got flashed much on national TV channels.

    ReplyDelete