இன்று ட்விட்டரில் ஓர் இழையைப்பார்த்தேன். ஒரு கொரியச் சிறுவன் பள்ளிப் படிப்பின்போது அமெரிக்காவுக்குக்
குடியேறுகிறான். ஆங்கிலம் தெரியாது. அதற்கான தனிப்பயிற்சி ஒரு பக்கம்
நடந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் அறிவியல் வகுப்பில் ஆசிரியர் ஒளிச்சேர்க்கை குறித்த கேள்வித்தாளைக் கொடுக்கிறார். இந்தக் கொரியச் சிறுவனிடம், “நீ இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம், விட்டுவிடு” என்கிறார். படம்
பார்த்து, எது எது என்ன என்ன என்று எழுதவேண்டும். கேள்வித்தாளைப்
பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரியும். ஆனால் ஆங்கிலம்
தெரியாது. அவனுக்கு அந்த டெஸ்ட் கிடையாது என்றாலும் மனம் பதறுகிறது. விடுவிடுவென
தனக்குத் தெரிந்தவற்றைக் கொரிய மொழியில் எழுதி டீச்சரிடம் கொடுத்துவிடுகிறான்.
டீச்சர் அடுத்து வகுப்புக்கு வந்து அந்தக் கொரியச் சிறுவன்தான் வகுப்பிலேயே அதிக
மதிப்பெண் என்கிறார்.
அவருக்குக்
கொரிய மொழி தெரியாது. ஆனால் கொரிய மொழி கொஞ்சமே தெரிந்திருந்த கணித ஆசிரியருடன்
உட்கார்ந்து, அவர் அகராதியைப் புரட்டிப் பார்த்துச் சொன்னதை வைத்து அந்த
விடைத்தாளைத் திருத்திக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்.
இந்த
ஆசிரியரின் செய்கை எப்பேர்ப்பட்டது. இதைப் படிக்கும்போதே கண்கள் நனைகின்றன.
ஓர் ஆசிரியர்
சிறப்பாகப் பாடம் நடத்துவதால்தான் நினைவில் கொள்ளப்படுவாரா? நிச்சயமாக இல்லை. நான்
என்னுடைய ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில்
எனக்கு அறிவியல் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் நான்கு பேர். வி.டி எனப்படும்
தியாகராஜன் இயற்பியல். எல்.ஆர் எனப்படும் ராமசாமி வேதியியல். வாசன் விலங்கியல்.
விசுவநாதன் தாவரவியல். இதில் முதல் மூன்று ஆசிரியர்களும் மூத்த ஆசிரியர்கள். பிளஸ்
டூ முறை கொண்டுவரப்படுவதற்கு வெகு காலம் முன்பிருந்தே ஆசிரியர்களாக இருப்பவர்கள்.
அவர்கள் படித்திருந்தது அக்கால பி.எஸ்சி மட்டுமே. விசுவநாதன் அப்போதுதான் புதிதாக
ஆசிரியராக வந்திருந்தார். எம்.எஸ்சி படித்து வந்தவர்.
பொதுவாகவே
பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன்னரேயே அந்த ஆண்டின் பாடப் புத்தகங்களை நான் பெரும்பாலும்
படித்து முடித்திருப்பேன். ஆசிரியர்களின் உதவி எனக்கு என்றைக்குமே
தேவைப்பட்டிருந்ததில்லை. எனவே வகுப்புகளில் பெரும்பாலும் போரடித்தபடி உட்கார்ந்திருப்பேன்.
இயற்பியல்
ஆசிரியர் வி.டி மெலிந்த தேகம் கொண்டவர். மிகவும் கண்டிப்பானவர். ஆனால் யாரையும்
அடிக்க மாட்டார். அதிகம் பிரச்னை தரும் மாணவர்களை வகுப்பை விட்டுத்
துரத்திவிடுவார். அவ்வளவுதான். இயற்பியல் பாடம் பெரும்பாலான மாணவர்களுக்கு மிகவும்
கடினமாக இருந்தது. எனவே தினம் தினம் அவர் மாணவர்களுடன் நிறையப்
போராடவேண்டியிருந்தது. அதே நேரம் நானும் என் வகுப்பு நண்பர்கள் சீனிவாசன், ஶ்ரீராம்
போன்றோரும் வகுப்பறையில் வேலையின்றி உட்கார்ந்திருப்பதை அவர் நன்கு புரிந்துகொண்டார்.
நாங்கள் வகுப்பறையில் உட்காரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி, இயற்பியல் பரிசோதனைச்
சாலை சாவியை எங்களிடம் கொடுத்துவிடுவார்.
நாங்கள்
மூன்று நான்கு பேர் பெரும்பாலும் இயற்பியல் சோதனைச் சாலையில்தான் நேரம் கழிப்போம்.
எங்களுக்கு விருப்பமான எதையாவது செய்துகொண்டிருப்போம். ஓர் ஆசிரியர் தன்
மாணவர்களுக்குக் கொடுத்த சுதந்திரம் முக்கியமானது. இன்று அப்படிச் செய்துவிட
முடியுமா? “நீ என் வகுப்பில் உட்காரவேண்டிய தேவையில்லை. நீயாகவே படித்துவிடுவாய்.
போய் உனக்குப் பிடித்ததைச் செய்” என்று எந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்
அனுமதிக்கிறார்?
வகுப்பறைக்கு
வெளியே மாணவர்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார். எப்போதுமே இவருடைய பரிசோதனைச்
சாலையில் ஒரு மாணவர் கூட்டம் இருக்கும். மாணவர்களின் நலனில் மிகப்பெரிய அக்கறை
காட்டியவர் இவர்.
எல்.ஆர் பெரிய
மீசை வைத்திருப்பார். அவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஓங்கி
அறைந்துவிடுவார். ஏன் அவ்வளவு கடுமையாக அவர் மாணவர்களிடம் நடந்துகொள்வார் என்று எங்கள்
யாருக்குமே புரிந்ததில்லை. அவர் வந்தால் வரும் வழியில் யாருமே நிற்க மாட்டோம். அவரிடம்
பேசவே பயப்படுவோம். இப்படி அப்படி அவர் கண்ணில் படாமல் ஓடிவிடுவோம். இவரும்
வகுப்பில் பாடம் நடத்துவதற்குப் போராடுவார். நாங்கள் பெயருக்கு ஆங்கில மீடியம்
என்ற ஒன்றில் படித்தோம். ஒரு நாலைந்து பேரைத் தவிர மற்றவர்கள் ஆங்கிலம் எழுதத்
திணறும் மாணவர்கள்தாம். ஆங்கிலத்தில் படித்து, பொருளைத் தமிழில் சொல்லிக்கொடுப்பது
ஆசிரியர்களுக்கு நிஜமாகவே கடினம்தான். ஆனால் உயிரை விட்டுச் சொல்லிக்கொடுத்தார்கள்.
எப்படியாவது மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்பதில் ஆத்மார்த்தமாக
உழைத்தார்கள்.
பள்ளி
முடிந்து ஐஐடி மெட்ராஸ் சேர்ந்து ஓராண்டு கழித்து மீண்டும் என் ஆசிரியர்களைப்
பார்க்கப் போனேன். எல்.ஆர் என்னிடம் ஐஐடி பற்றி விரிவாகக் கேட்டுக்கொண்டார்.
சட்டென்று, “ஏன்யா, உண்மையைச் சொல்லுய்யா, நான் பாடம் சொல்லிக்கொடுத்தா நீ ஐஐடில
சேர்ந்தே?” என்றார். எனக்குச் சட்டென்று கண்ணீர் வந்துவிட்டது. அவர்
பதறிப்போய்விட்டார். நாங்கள் வெகுநேரம் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தோம். ஓர்
ஆசிரியனிடம் மாணவனாக நாம் வெறும் பாடப் புத்தகத்தை மட்டுமா படிக்கிறோம்?
வாசன், ஒரு
மேவரிக் ஆசிரியர். வி.டி, எல்.ஆர் போன்றோர் கல்லூரியில் படித்ததிலிருந்து பாடம்
சொல்லித்தரவேண்டிய சிலபஸ் நிறைய மாறியிருந்தது. இருவருமே தாங்கள் பாடங்களைச் சொல்லித்தர
சிரமப்பட்டதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். விலங்கியல் அப்படியல்ல. சிலபஸ்
மாற்றம் என்று ஏதும் இல்லை. வாசன் அநாயாசமாக வகுப்பெடுப்பார். அருமையாகப் படம்
வரைவார். அவர் கையில் புத்தகமோ, குறிப்புகளோ இருந்து நான் பார்த்ததில்லை. முதல்
நாள் அவர் வகுப்பு எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. நேராக உள்ளே
நுழைந்ததும் மூச்சுவிடாமல் கடகடவென்று ஒப்பிக்க ஆரம்பித்தார்.
புரோட்டோசோவா,
போரிஃபெரா, சீலண்டெரேட்டா, பிலாட்டிஹெல்மிந்தஸ், ஆஸ்கெல்மிந்தஸ், ஆர்த்ரோபோடா,
அன்னலீடா, மொலுஸ்கா, எக்கினோடெர்மேடா, கார்டேடா.
இப்போதுகூட
இதை நான் மனப்பாடமாகத்தான் எழுதியிருக்கிறேன். (இப்போது விலங்குகளை வகை
பிரிப்பதில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது 1985 புத்தகத்தில்
இருந்தது.)
பரிசோதனைச்
சாலையிலும் வாசன் ‘சிலபஸ்’ என்ற வரையறையைத் தாண்டி நடந்துகொள்வார். சிறுநீரில்
சர்க்கரை உள்ளதா என்ற சோதனையைச் செய்ய அனைவரையும் அவரவர் சிறுநீரைப் பிடித்துவரச்
செய்து ஒவ்வொரு மாணவரையும் தானாகவே இந்த சோதனையைச் செய்யவைத்தது எனக்கு நன்கு
ஞாபகம் இருக்கிறது. இத்தனைக்கும் அது சிலபஸில் இல்லை என்று நினைக்கிறேன். வகுப்பறை
தாண்டி, தன் வீட்டுக்கு அனைத்து மாணவர்களையும் வரவழைத்து விலங்கியலுக்குத் தேவையான
படங்கள் வரைந்து பழகுவதற்கு உதவி செய்வார்.
Great memories...
ReplyDeletequiet interesting that you have come from ordinary town to IIT.
When You get time, Please share how did you prepare for IIT?
It would be very useful for modern days kids...
Because most of us believe that we need city infrastructure, elite schools and extra-ordinary coaching centres to get into IITs.
Rajasekaran
ஆசிரியர்களுக்கான மரியாதை ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteExcellent article, tells the importance of the teacher in our life, also students have to respect the teachers, then only can receive the knowledge and other virtues from them.
ReplyDeleteThanks,
Venu
Nostalgia !!. I still remember the way V.T.Sir comes in his Suvega vehicle with 'Kanchi potta' half hand shirt. He is very diligent and so honest to his work. L.R is super strict. Heard he came from Military services. But he would melt if he hear the word "vazhga valamudan".He teaches the subject beautifully. No one can forget the word "medulla oblongata" in the manner that Vasar sir enact and the energy he had while he teaches and the charisma he carried are matchless. Visu sir is a gentleman in all aspect.
ReplyDelete