Monday, February 02, 2004

ழ கணினி அறிமுகம் - 3

அதன்பின்னர் கேள்வி-பதில்கள் தொடங்கியது. மொத்தமாக 150 பேர்களாவது அரங்கில் இருந்திருப்பர். பலர் 'கற்றதும் பெற்றதும்' படித்துவிட்டு வந்தவர்கள். மற்றவர்கள் எம்.ஓ.பி வைஷ்ணவா, லயோலா கல்லூரி மாணவர்கள். ஒருவர் நெல்லையிலிருந்து இதற்காகவே வந்துள்ளதாகவும், வீட்டிற்குப் போகும்போது இந்தக் கணினியை அமைப்பதற்கான குறுந்தகடுகளை வாங்கிக்கொண்டு போவதாக நிச்சயம் செய்துள்ளேன் என்றார், ஆனால் இங்கு விற்பனைக்கு (அல்லது சும்மா) என்று எதுவும் இல்லை. பத்திரிகைகாரர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாக்கெட்டில் எனக்கு (வலைப்பதிவு எழுதியே பத்திரிகைகாரனானவன் நான்!) ழ குறுந்தகடு கிடைத்தது.

கேள்விகள் பல தளங்களில் அமைந்திருந்தன. "எனக்கு தமிழில் ஒரு இணையத்தளம் அமைக்க வேண்டும், எப்படிச் செய்வது" என்பதிலிருந்து, "லினக்ஸில் ஜாவாவில் ஒரு செயலி அமைத்தால் அதில் தானாகவே தமிழில் மெனு ஆகியவை வந்துவிடுமா" என்பதிலிருந்து, "மொழிமாற்றத்தில் சில இடங்களில் சந்திப்பிழை உள்ளது என்று ஆரம்பித்து உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை" என இலக்கணப் பாடம் நடத்தும் வரை சென்று விட்டது.

கேள்விகளுக்கு சிவக்குமார், ஜெயராதா, சுஜாதா, பாரதி, சாந்தகுமார், ஹரிஹரன் ஆகியோர் விடை கொடுத்தனர்.

இந்த அறிமுக நிகழ்ச்சி பற்றிய என் கருத்துகள்:

1. சிவக்குமார், ஜெயராதா, மற்ற குழுவினர் presentationஐ இன்னமும் திருப்திகரமாகச் செய்யவேண்டும். ஆரம்பத்தில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. கூட்ட அரங்கினுள் மக்கள் கூட்டம் வந்தபிறகும் பூச்சி, பூச்சியான எழுத்துகளை TSCu_paranarக்கு மாற்றிக்கொண்டிருந்தனர்.

2. சிவக்குமார், சாந்தகுமார் பேச்சில் ஆங்கிலம் நிறையக் கலந்திருந்தது. இது சாதாரணமாக சென்னையில் நடப்பதுதான். ஆனாலும் தமிழ்க் கணினி விற்கப்போகிறேன் என்று சொல்லும்போது தமிழிலேயே பேசுவதில் நிறைய நன்மைகள் உள்ளன, முக்கியமாக வாங்குபவர்களுக்கு, விற்பவர்களிடத்தில் நம்பகத்தன்மை அதிகமாகும்.

3. கருத்துகுழப்பம்: லீனா க்னூ/லினக்ஸ் தொகுப்புகள் பற்றிப் பேசுகையில் மிகவும் குழப்பமாகவும், பல இடங்களில் தவறாகவும் பேசினார். மொசில்லா என்பது ஒரு லினக்ஸ் தொகுப்பு என்று பொருள் தருமாறு பேசினார். (எங்குமே, யாருமே க்னூ என்பதையே பயன்படுத்தவில்லை... ஆனால் இன்றைய புழக்கத்தில் லினக்ஸ் என்பதே க்னூ/லினக்ஸ் தொகுப்பிற்குப் பெயராகப் புழங்கப்படுகிறது.) அனைவருமே சிலமுறை மீண்டும் மீண்டும் பேசிப் பழகிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

4. எங்களுக்குக் கிடைத்த 'பத்திரிகை செய்தி - இணைப்பு' கையேட்டில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன:
தமிழ் திறந்த நிரல் இயக்கம்:

1997களில் தமிழ் ஓப்பன் சோர்ஸ் இயக்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் முயற்சியால் துவங்கியது. இதன் முக்கிய நோக்கம் உலகில் உள்ள அத்தனை இலவச மென்பொருள்களையும் தமிழில் தரவேண்டும் என்பதே. இந்தக் குழுவில் முக்கிய அங்கத்தினர்கள் கேடியி வசீகரன் குழுவினர், ஜீனோம் தினேஷ் நடராஜன் குழுவினர், சிவராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர். இவர்களது முயற்சியால் தமிழ் லினக்ஸ் துவங்கியது. இது தொடர்பான விவரங்கள் http://groups.yahoo.com/group/tamillinux வலைமனையில் கிடைக்கும்.


மேற்சொன்னதில் http://groups.yahoo.com/group/tamilinix என்றிருந்திருக்க வேண்டிய சுட்டி, தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தத் தவறு தெரியாமல் நடந்தது என்றே நினைக்கிறேன். மற்றபடி முன்னோடிகளை மறைக்கும் முயற்சி எதுவும் இல்லை.

5. இந்த முயற்சியை நான் புரிந்து கொள்வது இப்படியே: ஏற்கனவே பிரபு ஆனந்த் என்பவரது முயற்சியில் மாண்டிரேக் லினக்ஸ் தொகுப்பு (Mandrake 9.0) வெளியே வந்துள்ளது. அதுதான் எனக்குத் தெரிந்து முதலில் வெளிவந்த முழுமையானதொரு க்னூ/லினக்ஸ் தொகுப்பு. முதலில் டிஸ்கி எழுத்துருவில் கேடிஈ தமிழ்ப்படுத்தப் பட்டிருந்தது. அத்துடன் மாண்டிரேக் installation பற்றிய உதவிக்கோப்புகள், கணினியில் மாண்டிரேக்கைப் பொருத்தும் போது ஒவ்வொரு திரையிலும் தோன்றும் செய்திகள் ஆகியவையும் தமிழ்ப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் யூனிகோடுக்கு மாற்றம் செய்தபோது வெளியான மாண்டிரேக் (Mandrake 9.1) குட்டையைக் குழப்பி விட்டது. மாண்டிரேக்கில் அப்பொழுது இருந்த கேடிஈ யால் யூனிகோடை சரியாகக் காண்பிக்க முடியவில்லை. (அதன் அடிப்படையான QTயினை இந்திய மொழிகளுக்கான யூனிகோடுக்குத் தேவையானவை செய்யப்பட்டிருக்கவில்லை.)

அப்பொழுது கேடிஈ 30%தான் தமிழ்ப்படுத்தப்பட்டிருந்ததாம். இப்பொழுது ழ குழு 95% தமிழ்ப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட தமிழ்ப்படுத்திய கேடிஈ கூட ழவின் சொந்த சொத்து அல்ல இனி. இதனை வசீகரன் அதிகாரபூர்வ கேடிஈ உடன் சேர்த்து விட்டார். இனி நாம் யாரும் தமிழ் கேடிஈ வேண்டினால் நமக்குக் கிடைப்பது இந்த 95% தமிழாக்கப்பட்ட கேடிஈ தான். மேலும் இதிலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் (ஒற்றுப்பிழைகள் பலவிடங்களில் களையப்பட வேண்டும். "Save" என்பது "சேமி" என்றும், "Save as" என்பது "சேமி போல" என்றும் தமிழாக்கப்பட்டிருக்கிறது. "Save as" என்பதற்கு ஒத்த தமிழாக்கம் "வேறு பெயரில் சேமி..." என்று சொல்வதே ... என நான் நினைக்கிறேன். இதுபோல் முழுவதுமாகப் பார்க்கும் போது நம் அனைவருக்கும் பல புதிய திருத்தங்கள் தோன்றலாம். அப்பொழுது நாம் இதனை தமிழாக்கக் குழுவிற்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். யார் இந்த அவர்கள்? ழ குழுவினரா? இல்லை வசீகரனா என்ற கேள்விக்கு என்னிடம் சரியான விடை இல்லை. வசீகரன் என்றுதான் நினைக்கிறேன்.

ழ குழு, ரெட் ஹாட்டின் பெடோராவை எடுத்துக்கொண்டு பிரபு ஆனந்த் மாண்டிரேக்கில் செய்தது போல் செய்ய முற்பட்டிருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே இருந்த ஒருசில குறைபாடுகளை முழுமையாக முதலில் களைவது அவசியம் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. முக்கியமாக கேடிஈ யைத் தமிழ்ப்படுத்த வேண்டும், தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதில் TAM/TAB/TSCII/Unicode ஆகிய அனைத்துக் குறியீடுகள், TamilNet 99, Typewriter (old/nes), Anjal அல்லது Phonetic உள்ளிடும் முறை ஆகியவற்றை கிராபிகல் முறையில் மாற்றும் வகையில் ஒரு செயலியைச் செய்திருப்பது [மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களில் முரசு அஞ்சல், எ-கலப்பை ஆகியவை இதைச் செய்கின்றன] ஆகியவையே இவை. மற்றபடி ழ குழுவினருக்கு அதிகாரபூர்வ மென்பொருள் நிர்மானிப்போரின் தயவு தேவை. வசீகரன் கேடிஈ மாற்றங்களுக்குத் தேவை. முகுந்த் மொசில்லா உலாவியின் மாற்றங்களுக்குத் தேவை. ரெட்ஹாட் நிறுவனத்தின் உதவி பெடோரா வைத் தமிழ்ப்படுத்தத் தேவை.

இவர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் சேர்ந்து இயங்கினால்தான் நம்மைப் போன்ற பயனர்களின் தேவையும் நிறைவு பெறும்.

ஒன்று | இரண்டு | நான்கு

ழ கணினி அறிமுகம் - 2

ழ குழுவினராக, ஜெயராதா, மா.சிவக்குமார், சாந்தகுமார், ஹரிஹரன், லீனா, பாரதி ஆகியோர் அரங்கில் இருந்தனர்.

மா.சிவக்குமார்
ஜெயராதா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். முதலில் மா.சிவக்குமார் 'திறந்த நிரலும் தமிழும்' என்ற தலைப்பில் பேசினார். திறந்த நிரல் செயலிகள் பல உரிமைகளை நமக்கு வழங்குகின்றன: (1) எத்தனை படிகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் (2) எத்தனை பேர்க்கு வேண்டுமானாலும் பகிர்ந்தளிக்கலாம் (3) மூல நிரலையும் சேர்த்தே பெறும் உரிமை உள்ளது (4) மூல நிரலை ஒருவர் தன்னுடைய தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த உரிமைகளோடே வரும் கடமை: அவ்வாறு மாற்றிய எந்த நிரலையும், அதன் மூலத்துடன் மேற்சொன்ன அத்தனை உரிமைகளுடன் பிறருக்கு வழங்கவேண்டும் என்பதே அது. ரிச்சர்ட் ஸ்டால்மேன், லினஸ் டோர்வால்ட்ஸ் ஆகியோரது பங்களிப்பு பற்றிப் பேசியபின்னர், தமிழ்லினக்ஸ் குழு வழியே மற்ற ஆர்வலர்களின் பங்களிப்பு என்ன என்றும் சொன்னார். [KDE, Gnome, Mandrake Linux, Keyboard drivers, fonts, Mozilla etc.]

தொடக்கத்தில் திறந்த நிரல் பற்றிப் பேசுகையில், இதை இலவசமாகக் கிடைக்கிறது என்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இங்கு "freedom" (பரிச்செயலி - இராம.கி) என்ற பொருளிலேயே வருகிறது என்றும், ழ-கணினி குறுந்தகடுகள் ரூ.1000க்கு விற்றால், மற்றொருவர் அதனை அப்படியே நகல் எடுத்து ரூ.800க்கு விற்கலாம் என்றும், பின்னொருவர் அதனையே மீண்டும் நகலெடுத்து, ஒரு சில மாறுதல்களைச் செய்யவேண்டுமானால் செய்து, மீண்டும் ரூ. 200க்கு விற்கலாம் என்றும், நாளடைவில் இந்த விலை இந்தக் குறுந்தகடுகளை பயனருக்குக் கொண்டுசெல்வதற்கான distribution செலவே ஆகும் என்றும் சொன்னார்.



ழ கணினித் திட்டம் எதைப் பற்றியது: (1) திறந்த நிரல் பயன்பாடுகள் பற்றித் தமிழருக்குத் தொகுத்தளித்தல் (2) ஏற்கனவே பணியாற்றும் ஆர்வலர்களுடன் இணைந்து மொழிபெயர்ப்புப் பணிகளைத் துரிதப்படுத்துதல் (3) ஏற்கனவே பங்களிப்பவர்களுக்கு இந்தப் பெரிய முயற்சி மிகவும் சோர்வையும், அயர்வையும் தரக்கூடியது என்பதால் ("தன்னால் ஒரு நாளைக்கு நூறு சொற்களுக்கு மேல் மொழிபெயர்க்க முடியவில்லை" என்றார்) தமிழ்நாட்டில் ஆர்வலர்களை - முக்கியமாக மாணவர்களை - பெரிய அளவில் திரட்டுதல் என்றார்.

சாந்தகுமார்
அடுத்துப் பேசிய சாந்தகுமார் ழ கணினியை சந்தையில் விற்க நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றார். IDC அறிக்கை ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டி, கணினிச் சந்தை விரிவாகும் போது வரும் வருடங்களில் அதிக அளவு B/C நகரங்கள்தான் முக்கியமான சந்தையாக இருக்கப்போகிறது என்றார். அப்பொழுது தமிழ்ப்படுத்தப்பட்ட கணினி விற்பனையாகும் வாய்ப்புகள் அதிகமாகும் என்றார். இதற்காகத் தாங்கள் ஒரு வியாபாரத் திட்டம் (business plan) எழுதியிருப்பதாகவும், முதலீடு வரவேற்கப்படுகிறது என்றும் சொன்னார்.

முதலீடு செய்யும் முறை:
(அ) தமிழ் இணையப் பல்கலைக் கழகம் போல 'passive investor' - அதாவது முதலீடு செய்துவிட்டு, ழ கணினி ஒருங்கிணைப்பாளர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுவது; ழ-கணினி ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முதலீட்டினை வைத்து distribution infrastructureஐக் கட்டுவது
(ஆ) HCL போன்ற பெரிய நிறுவனம் தமிழ்க்கணினியை ஒவ்வொருவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வண்ணம் முழுமையாகவே இந்தத் திட்டத்தை தாங்களே ஏற்றுக்கொள்ளலாம்
(இ) மற்ற வகையில்...

ஹரிஹரன்
பின்னர் ஹரிஹரன் என்பவர் ழ கணினியைச் செயல்படுத்திக் காண்பித்தார். கணினியில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து உள்ளே போனதும் கேடிஈ திரை எப்படி இருக்கும், எவ்வாறு மின்னஞ்சல் அனுப்புவது, ஓப்பன் ஆஃபீஸ், கே-மைன்ஸ்வீப்பர் எனும் விளையாட்டு ஆகியவற்றைச் செய்து காட்டினார்.

கடைசியில் லீனா என்பவர் ழ கணினிக் குறுந்தகட்டை எப்படிக் கணினியில் உட்செலுத்துவது என்று செய்முறை விளக்கம் போலச் செய்து காட்டினார். முதலில் ஒருவரிடம் க்னூ/லினக்ஸ் ஏற்கனவே இருக்கவேண்டும் (ஆனால் எந்தத் தொகுப்பாக இருந்தாலும் பரவாயில்லையா என்று சொல்லவில்லை - இவர்கள் பெடோரா பயன்படுத்தியுள்ளனர்.), பின்னர் ழ குறுந்தகட்டில் உள்ள கோப்பு ஒன்றில் கொடுத்துள்ளது போல, அடியொட்டிச் செயல்பட்டால் (முதலில் கேடிஈ "மேற்படுத்துதல்", இரண்டாவதாக 'ழ விசைப்பலகை', மூன்றாவதாக 'ழ ஓப்பன் ஆஃபீஸ்') ழ கணினி கிடைத்து விடும் என்றார்.

ஒன்று | மூன்று | நான்கு

ழ கணினி அறிமுகம் - 1

நேற்று சென்னை லயோலா கல்லூரி லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் 'ழ கணினி' பற்றிய அறிமுகம் நடந்தது. 'ழ கணினி'யின் இலக்கு க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை முடிந்தவரைத் தமிழ்ப்படுத்தி தமிழர்களிடம் கொண்டுசேர்ப்பது என்று புரிகிறது. இந்த அறிமுக நிகழ்ச்சியின் இலக்குகள்:
  • இதுவரை இவர்கள் செய்துள்ளவற்றைப் பொதுமக்களிடம் காட்டுவது
  • ழ கணினி ஆர்வலர்களுடன் இணைந்து பங்காற்றக் கிடைக்கும் வணிக வாய்ப்புகள்
  • கேள்வி-பதில்கள்
[சிறு முன்குறிப்பு: க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஆரம்பத்தில் வெறும் (ஆங்கில) எழுத்துகளால் ஆன 'டெர்மினல்' எனப்படும் இடைமுகமே இருந்து வந்தது. இந்த டெர்மினல்கள் மூலம் சொற்களால் ஆன ஆணைகளை மட்டுமே கணினிக்குப் பிறப்பிக்க முடியும். இதே கதிதான் மற்றைய யூனிக்ஸ் இயங்குதளங்களுக்கும். பின்னர் எக்ஸ் விண்டோஸ் எனப்படும் திறந்த நிரல் படத்தினால் ஆன இடைமுகம் வந்தது. இந்த பட இடைமுகம் மைக்ரோசாஃப்ட் விற்றுவந்த விண்டோஸ் 3.11, விண்டோஸ் 95, 98, ME, 2000, XP போன்றது. மௌஸ் கிளிக் மூலமும் கணினிக்கு ஆணைகளை இட முடியும். இந்த எக்ஸ் விண்டோஸ் மேலாக எழுப்பப்பட்டதே கேடிஈ எனப்படும் திறந்த நிரல் கணினி இடைமுகச்சூழல். மைக்ரோசாஃப்டின் கிராபிகல் இடைமுகத்தைப் போல, அல்லது அதையும் மிஞ்சிய வகையில் பார்வைக்கு அழகாக, கண்களுக்கு இதமாக, பயன்படுத்த இயற்கையாக, எளிதாக இருக்குமாறு அமைக்கப்பட்டதே கேடிஈ. கேடிஈ வருகைக்கு முன்னர், யூனிக்ஸ்+எக்ஸ் விண்டோஸ் பார்வைக்கு மைக்ரோசாஃப்டை விட மட்டமானதாகவே இருந்து வந்தது. இன்றைய தேதியில், எனக்குத் தெரிந்தவரை, க்னூ/லினக்ஸ், எக்ஸ், கேடிஈ இணைந்தது மைக்ரோசாஃப்டை விட ஒரே ஒரு இடத்தில்தான் பின்தங்கியுள்ளது: Anti-aliased எழுத்துருக்களை வழங்குவதில். (மைக்ரோசாஃப்ட் கிராபிகல் திரையில் எழுத்துருக்கள் பார்க்க அழகாக இருப்பதன் காரணம் எழுத்துகளை அழகாக, வழுவழுப்பாக, முனைகளை மழுக்கிக் கொடுப்பதே. ஆரம்ப நாள் முதலே எக்ஸில் bitmap எழுத்துருவே இருந்து வந்தது. இப்பொழுது எக்ஸ்/கேடிஈ யிலும் முனைமழுங்கிய, வழுவழுப்பான எழுத்துருக்களைக் காண முடியும், ஆனால் அவ்வளவு சுலபமாகச் செய்ய முடிவதில்லை.)

இந்த கேடிஈ சூழல் - மற்ற மென்பொருட்களைப் போலவே - முதலில் ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் பிறமொழி பேசும் மக்களும் இருக்கிறார்கள் என்ற கவனம் மென்பொருள் உருவாக்குபவர்களிடையே தோன்றத் தோன்ற internationalization/localization ("சர்வதேசமயமாக்கல்", "உள்ளூர்ப்படுத்துதல்" ??) என்னும் கருத்தும் உருவாக ஆரம்பித்தது. இதன்படி மென்பொருள் எழுதுவோர் தங்கள் நிரல்களில் உள்ள ஆணைகளில் பலமொழிகளிலும் சொற்கள் வருமாறு அமைப்பர். பின்னர் ஒவ்வொரு மொழிக்காரரும் இந்த நிரலில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு ஈடாகத் தத்தம் மொழிகளில் உள்ள இணக்கமான சொற்களை மொழிமாற்றி, வடிவமைத்து, மீண்டும் நிரலியினை 'compile' செய்து இயங்கும் செயலியாக மாற்றுவர்.]

சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா (ரங்கராஜன்) ழ-கணினித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார். கேடிஈ சூழலில் உள்ள ஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழாக்குவது, அதற்காக தன்னார்வலர்களை ஓரிடத்தில் சேர்த்து அவர்களை வழி நடத்துவது, இம்முயற்சியில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பது, தான் எழுதும் கட்டுரைகள் (கற்றதும், பெற்றதும் - ஆனந்த விகடன்) மூலம் ழ-கணினித் திட்டம் பற்றிப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவது ஆகியவையே இவை. சுஜாதா இந்த விழாவின் தொடக்கத்தில் இதைப் பற்றிப் பேசினார். லயோலா கல்லூரி, எம்.ஓ.பி வைஷ்ணவா மாணவர்கள் இந்த மொழியாக்கத் திட்டத்தில் பெருமளவு ஈடுபட்டதை சிலாகித்தார். ("எம்.ஓ.பி பெண்களுக்கு தமிழே தெரியாது என்று நினைத்திருந்தேன், ஆனால் பெருமளவில் அவர்கள் இந்தத் தமிழாக்கத்துக்கு உதவினர்"). தான் ஆனந்த விகடனில் லினக்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதியதையும் ('பில் கேட்ஸ் விரித்த டாலர் வலை'), அதைத் தொடர்ந்து தனக்கு வந்த பல மின்னஞ்சல்களையும் பார்த்தபின்னர், வெறும் எழுத்தளவோடு விட்டுவிடாது, செயலிலும் காட்டித் தீரவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தத்திட்டத்தில் ஈடுபட ஆசைப்பட்டவர்களை ஒன்றுதிரட்டியதாகச் சொன்னார். இப்படி மொழிமாற்றம் செய்ய வேண்டிய சொற்கள் தொடக்கத்தில் 700ஆக இருந்து, இறுதியில் கேடிஈயை சேர்த்து 70,000 ஆனதாம். தமிழ் இணையப் பல்கலைக் கழகம் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்றார். கேடிஈ இப்பொழுது 95% மொழிபெயர்க்கப்பட்டு விட்டது என்றும், ஓப்பன் ஆஃபீஸ் என்னும் இலவச, திறந்த நிரல் அலுவல் செயலி தொடக்கநிலை மொழிபெயர்ப்பு முடிந்துள்ளது என்றும் இன்னமும் முழுமையாக்க வேலைகள் மீதி உள்ளது என்றும் சொன்னார்.

பேரா.கிருஷ்ணமூர்த்தி
இன்னமும் செய்ய வேண்டியதாகச் சொன்னது: ரெட்ஹாட் தொகுப்பினைத் தமிழ்ப்படுத்துதல்.

பின்னர் சுஜாதா ழ-கணினி குறுந்தகட்டை வெளியிட பேரா.கிருஷ்ணமூர்த்தி அதனைப் பெற்றுக்கொண்டார். பேரா.கிருஷ்ணமூர்த்தி பொன்விழி (தமிழ் OCR), பொன்மொழி (தமிழ் அலுவல் செயலி, spellchecker வசதியுடன்), பொன்மடல் ஆகிய செயலிகளை உருவாக்கியவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

இரண்டு | மூன்று | நான்கு

பொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை

நாளை தூரதர்ஷன் (பொதிகை) சானலில் 12.30 மணி முதல் 13.30 வரை தொலைக்காட்சி நேயர்களுடன், கிரிக்கெட் பற்றித் தமிழில் நான் உரையாடுகிறேன்.

சானல் கிடைப்பவர்கள், விரும்பினால் பார்க்கவும். என்னைப் பிடிக்காதவர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோழி, ஆடு, மாடு, சாராயம்

என்னவோ காரணத்தால் இன்று கண்ணில் பல வித்தியாசமான செய்திகள் பட்டுக்கொண்டிருக்கின்றன.

முதலாவதாகக் கோழியை எடுத்துக் கொள்வோம். பறவை-சுரம் விவகாரத்தில் இன்று WHO மனிதர்களுக்கிடையிலும் இந்த வைரஸ் பரவலாம், பரவியிருக்கக்கூடும் என்று சொல்லியுள்ளது. ஆனால் தினமலரில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பலவாறாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தினமலரும் அதைப் பெரிய செய்தியாக இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் போட்டுக்கொண்டிருக்கிறது. (எடுத்துக்காட்டு 1, மற்றொரு நேற்றைய பேட்டிக்கு இணையத்தில் சுட்டி கிடைக்கவில்லை.)

ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இருவரும் தம் விமானத்தில் வழங்கும் உணவில் கோழிக்கறி சேர்க்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளனர்.

கோழி சுரம் பற்றிய முந்தைய பதிவு

கோழியிலிருந்து ஆட்டுக்கு

இன்று பக்ரீத். குர்பானிக்காக கறி ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவிலிருந்து வந்து குவியும் ஆடுகளைப் பற்றி தினமலரில் படமும், கதையும் வந்துள்ளது. ஆனால் இணையத்தில் கதை கிடைக்கவில்லை. இந்த ஆடுகள் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் போகின்றனவாம்.

இதுபற்றி சிலநாட்கள் முன்னர் ஆசாத் எழுதிய ஒரு கதைக்-கட்டுரைதான் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது.

அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள்.

ஆட்டிலிருந்து மாட்டிற்கு

மாடுகளை வெட்டுவதற்கு எதிராக ஒரு இஸ்லாமிய மத 'நிறுவனம்' ஃபாத்வா அளித்துள்ளதாம். தாருல்-உலூம் என்னும் இந்தக் குழு இன்று ஈதின் பொழுது மாடுகளைத் தவிர மற்ற எதையும் வெட்டிகொள்ளலாம் என்று மத ஆணை (ஃபாத்வா) வழங்கியுள்ளதாக 'தி ஹிந்து' செய்தி கூறுகிறது. ஜமாயத்-உலேமா-இ-ஹிந்தும் தாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னரேயே இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்ததாகச் சொல்கின்றனர். இந்த வெவ்வேறு இஸ்லாமிய மதக்குழுக்கள் யாவர் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.

சரியாக ஊகித்து விட்டீர்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் இதனை பலமாக வரவேற்றுள்ளனர். மத நல்லிணக்கம் ஓங்குக. அடுத்த செய்திக்குப் போவோம்.

காவல்துறையினரிடம் 'மாட்டடி' வாங்கும் சட்டத்துக்குப் புறம்பானவர்கள் ஒரு புது யுத்தியைக் கண்டுபிடித்துள்ளனராம். காவல்துறையினர் பிடியில் மாட்டுவதற்கு முன், இரண்டு 'உறை' (பாக்கெட் சாராயத்துக்கு 'தமிழ்'ச்சொல்) அடித்துவிட்டு, ஒரு கப் மாட்டுவால் சூப் போட்டுவிட்டுப் போனால் எவ்வளவுதான் அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காதாம். இறைச்சிக்காக வெட்டப்படும் எருமை மாடுகளின் (எருமைதானே? பசு இல்லையே? ஆர்.எஸ்.எஸ் கோச்சுக்காது) வால்களை சேகரித்துத் தயாரிக்கப்படும் இந்த சூப்பின் பெருமையை ஒரு காவல் அதிகாரியே இப்படிச் சொல்கிறார்: "'மாட்டு வால் சூப்' சாப்பிடும் பழக்கம் உள்ள குற்றவாளிகளை அடித்தால் அடிக்கும் போலீசார் கைதான் வலிக்கும். குற்றவாளிக்கு ஒன்றுமே ஆகாது." இது நம்பும்படியாக இல்லை. கையால் அடித்தால் சரி, கம்பால் அடித்தால்? ஆசனவாயில் மிளகாய்த்தூள் தடவிய பிரம்பை நுழைத்தால்? (உபயம்: பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை). தினமலர் இணைய எடிஷனில் இந்தச் செய்தி இல்லை.

மாட்டிலிருந்து சாராயத்துக்கு

இன்றைய சாரய ஸ்பெஷல் (ஒரு பக்கம் நிரம்பக்கூடிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளது தினமலர்) பகுதியில் அரசு நடத்தும் மதுக்கடைகளில் உள்ள 'அட்டாச்ட் பாரில்', அவித்த முட்டை, வெள்ளரிப் பிஞ்சு, பாக்கெட் தண்ணீருடன் அமோக விற்பனையாம். மாட்டுக் கால் சூப் + சாராயம் - நல்ல காம்பினேஷன் போலத்தான் தெரிகிறது. ஆனால் அரசு ஏன் தங்கள் சாராயக் கடைகளில் இந்தக் காம்பினேஷனைக் கொடுப்பதில்லை?

எரி சாராயம் குடித்து 18 பேர் சிலநாட்களுக்கு முன்னர் திருவள்ளூரின் இறந்து போயினர். ஏன் அரசு முன்னர் சூப்பராக ஓடிக்கொண்டிருந்த 'கடா மார்க்' சாராயத்தை மீண்டும் கொண்டுவரக் கூடாது என்று கேட்கிறது தினமலர். நல்ல யோசனை. என்னைக் கேட்டால் 'மாட்டு வால்' பிராண்ட் சாராயம் கொண்டுவரலாம் என்பேன். கடா மார்க் சாராயத்தை மாட்டுவால் சூப்போடு கலந்து அப்படியே அடிக்கும் வகையில் பாக்கெட்டில் போட்டு விற்கலாம்.

மற்ற செய்திகளில் கர்நாடக அரசின் சாராய பாக்கெட்டுகளை தமிழ்நாட்டிற்குக் கடத்தி வந்தவர்கள் கைதாம். யோவ்!, நாங்க கேக்குறது இந்தத் தண்ணிய இல்ல, அந்தத் தண்ணிய, காவேரித் தண்ணிய.