Sunday, November 04, 2007

தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும்

இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது.

படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீட்டாது. சமாதானத்தை நோக்கிப் போக, விடுதலைப் புலிகளின் தன்மானமும் இடம் கொடுக்காது. கடந்த ஒவ்வொரு தடவையும் சமாதானத்தை நோக்கிச் சென்றபோது புலிகளின் கையே (மிகக் குறைவான அளவுக்கு) மேலோங்கி நின்றது. சிங்கள அரசும் ராணுவமும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது குழம்பிய நிலையில் இருந்தபோதே அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.

-*-

இரு தரப்பினருமே எதிரிகளின் தலைமையை அல்லது முக்கியஸ்தர்களைத் தாக்கி அழிப்பதில் மும்முரமாகவே இருந்துள்ளனர். விடுதலைப் புலிகள் பலமுறை இலங்கை அரசின் அமைச்சர்களை, முக்கியஸ்தர்களை தற்கொலைப் படை மூலம் அழித்துள்ளனர். பிரேமதாச, ரஞ்சன் விஜெரத்னே, லலித் அதுலத்முதலி, காமினி திஸ்ஸநாயகே, குணரத்னே, லக்ஷ்மண் கதிர்காமர் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். சந்திரிகா குமாரதுங்க மயிரிழையில் கொல்லப்பட்டிருந்திருப்பார்.

நேரடியான போரல்லாது தற்கொலைப் படையால் ஏவி அழிக்கப்பட்ட ராணுவ துணைத்தளபதி பரமி குலதுங்க. கொலையிலிருந்து தப்பியவர் தற்போது ராணுவத் தலைவராக இருக்கும் சரத் ஃபொன்சேகா.

அதேபோல இலங்கை ராணுவம் போரில் நேரடியாகக் கொல்லாமல் பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை நிச்சயமாகக் கொன்றிருக்கும். இதற்கான தகவல்கள் சீராகக் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்த இலங்கை ராணுவம் முயன்றதில் பெற்ற வெற்றி கருணா.

இந்த நேரடி மற்றும் மறைமுகமான சண்டைகளில் எது நியாயம், எது அநியாயம் என்பது முற்றிலுமாக மறைந்துவிட்டது.

-*-

தமிழ்ச்செல்வன் கொலையை முதலில் கேள்விப்பட்டதும் எனக்கு இது அநியாயம் என்றுதான் தோன்றியது. போர்க்கோலம் பூணாத - குறைந்தபட்சம் இந்த நேரத்தில் போர்க்கோலம் பூணாத - ஒருவரை; பிற நாடுகளுடனும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் ராஜதந்திரப் பிரமுகரை குறிப்பிட்டு, குறிவைத்து, விமானங்களை அனுப்பிக் கொலை செய்வது முறையா? அந்த வகையில் இலங்கை அரசு கட்டாயமாகக் கண்டிக்கப்படவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மிகவும் மோசமான சண்டைகளுக்கு ஊடாகவும் சில குறைந்தபட்ச நாகரிகங்களைக் கடைப்பிடிப்பது இரு தரப்பினருக்கும் தேவையானது. ராணுவ இலக்குகள் என்று அறியப்பட்ட இலக்குகளைத் தவிர்த்து, பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது அநாகரிகமானது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வர்.

பல நேரங்களில் போர் நடக்கும் அதே நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். போர் நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் சிங்களப் பகுதிகளிலும் சரி, தமிழ்ப் பகுதிகளிலும் சரி, சிவிலியன் நிர்வாகம் நடக்கிறது. அந்த நிர்வாகத்தின் அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்படுவது அநாகரிகமான செயல் என்பதை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

-*-

தமிழர்களுக்கு இனியும் ஃபெடரல் கூட்டாட்சி முறை என்பது நடைமுறை அளவில் ஒத்துவராத விஷயம். சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையை மட்டுமே எடுக்கக்கூடியது. ஆனால் மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும். தமிழக காங்கிரஸ் தனியான ஒரு கொள்கையை எடுக்கக் கூடியதல்ல. மத்திய காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

எனவே பிற கருத்துருவாக்கங்களை முன்வைக்காமல் தனித் தமிழீழம் என்ற நிலையை இந்தியா ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய விடுதலைப் புலிகளும் தமிழகக் கட்சிகளும் முன்வரவேண்டும்.

இதற்கான சில வழிமுறைகள்:

1. விடுதலைப் புலிகள் offense அன்பதை விடுத்து defense என்ற நிலைக்கு மாறவேண்டும். இன்று சிங்கள அரசின் கையே ஓங்கியுள்ளது. 'சரியான பதிலடி கொடுப்போம்' என்று பேசுவது அபத்தம். நாலைந்து தற்கொலைத் தாக்குதல்களால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. இலங்கை விமானப் படை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்திகொண்டே இருக்கும்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொல்லி பேச்சுவார்த்தை மேசைக்குத் தயாராக வேண்டும். இதன்மூலமும் சர்வதேச அழுத்தம் மூலமும் தமிழர் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடைபெறாவண்ணம் செய்யவேண்டும்.

2. இன்று விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு ஆதரவு தமிழகத்தின் தமிழ் தேசியவாதிகளிடமிருந்தே வருகிறது. இது வருத்தம் தரத்தக்க வகையில் தனித் தமிழீழத்துக்கு எதிரானதாகவே இருக்கும். தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் மத்திய அரசுக்கு கிலியூட்டக்கூடியவர்கள். தமிழகத்தைத் துண்டாக்கி, ‘அகண்ட தமிழ்நாடு' என்ற கருத்தை முன்வைப்பவர்கள் என்று அவர்களைக் காரணம் காட்டி மத்திய அரசை பயமுறுத்த சில திறமையான பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் முன்வருவர்.

இதை மாற்றவேண்டுமானால் விடுதலைப் புலிகள் தங்களது ஆதரவை இந்திய மைய நீரோட்டக் கட்சிகளிடமிருந்து பெற வேண்டும். இதில் சில கட்சிகள் தமிழகத்துக்கு வெளியே உள்ள பிற மாநிலக் கட்சிகளாக இருக்கலாம். உதாரணத்துக்கு தெலுகு தேசம், ஜனதா தளம் (செகுலர் மற்றும் இதர சில்லறைகள்), பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியோருடன் புலிகள் தொடர்பு கொண்டு, தங்களது நிலையை விளக்கவேண்டும்.

3. பாரதீய ஜனதா கட்சி, கம்யூனிஸ்டுகள் ஆகியோரோடு நேரடித் தொடர்பு தேவை. இந்தக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்குப் பரிந்து பேசினால்தான் இந்தியா ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்கும். இந்திய நேரடியாக யுத்த தளவாடங்களை அனுப்பி விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என்பதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு சீரிய விவாதம் வந்தால் அதுவே நல்லது. இலங்கையில் தமிழர்கள் நலன் என்பது தனித் தமிழீழத்தில்தான் சாத்தியமாகும் என்பது பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தால் அதை உலகம் கூர்ந்து கவனிக்கும்.

-*-

விடுதலைப் புலிகள் இனியும் தமது சொந்த முயற்சியால், படை பலத்தால் தனி ஈழத்தைப் பெறக்கூடும் என்று என்னால் நம்பமுடியவில்லை.

எவ்வளவு விரைவில் பிரபாகரனுக்கும் இந்த எண்ணம் தோன்றும் என்பதை வைத்தே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லமுடியும்.

Saturday, November 03, 2007

பாகிஸ்தானில் நெருக்கடி நிலை

கிட்டத்தட்ட அனைவருமே எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று நடந்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வீஸ் முஷரஃப், நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளார்.

அவரது கோணத்திலிருந்து இதை மட்டும்தான் அவரால் செய்திருக்க முடியும். ஆனால் இது பாகிஸ்தானைப் பெரும் உள்நாட்டுப் போரில் கொண்டுபோய் சேர்க்கப்போகிறது.

1. நீதிபதிகள் ஒடுக்கப்படுவர். ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கப்படுவர். சிலர் தீர்த்துக்கட்டப்படலாம். தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரி நிச்சயமாக சிறையில் தள்ளப்படுவார்.

2. முக்கியமான சில வக்கீல்கள் - முஷரஃபை எதிர்ப்பவர்கள் - காணாமல் போகலாம். உயிருடன் திரும்பி வந்தால் பெரிய விஷயம்.

3. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிச்சயமாக ஒடுக்கப்படுவர். நவாஸ் ஷரீஃப், பேநசீர் புட்டோ இருவருக்கும் தலைவலி.

பாகிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளர்கள் கொடுத்த நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ள ஆட்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். முஷரஃபின் முதல் நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ளதற்கும்கூட வித்தியாசங்கள் உண்டு. முதல்முறை முஷரஃபை மக்கள் ஆதரித்தனர். இப்போது முஷரஃபுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஆனால் முஷரஃபின் பெரும் தலைவலி மதத் தீவிரவாதிகளிடமிருந்துதான் வரும். அவர்களைத்தான் முஷரஃப் தாக்குவார். அவர்கள் பதில் தாக்குதல் தொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சியினரும் மக்களில் சிலரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவார்கள். விளைவு... பாகிஸ்தான் அரசியலே தீவிரவாதத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளும்.

பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலி. விளைவாக, இந்தியாவுக்கும் தலைவலிதான்!

Tuesday, October 30, 2007

லா.ச.ராமாமிருதம் மறைவு

91 வயதான தமிழ் எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் இன்று காலை உயிர்நீத்தார். லா.ச.ரா பற்றி பா.ராகவன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சின்ன பிட்:

**

நேற்றிரவு, மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைப் பிரதி - ஒரு கட்டுரைக்காக அவசரமாக வேண்டியிருந்தது. பதினொரு மணிக்கு அதைத் தேடத் தொடங்கி, அதைத் தவிர வேறு என்னென்னவோ அகப்பட்டன. அவற்றுள் ஒரு போஸ்ட் கார்டும் அடக்கம்.

சுமார் பதினேழு வருடங்கள் முன்பு எனக்கு ஒரு பெரியவரால் எழுதப்பட்ட போஸ்ட் கார்டு அது. பார்த்ததும் என் கண்கள் நிறைந்து ததும்பிவிட்டன. கால ஓட்டத்தில் எத்தனையோ விஷயங்கள் மனத்தின் ஞாபகத்தட்டுகளிலிருந்து விழுந்து உதிர்ந்தே போய்விடுகின்றன. திரும்ப எடுத்துக் கோக்கும்போது உள்ளம் சொல்லமுடியாத நெகிழ்ச்சியையும் வேதனை கலந்த பரவசத்தையும் அடைந்துவிடுகிறது. அந்த போஸ்ட் கார்டுக்கு அன்று நான் எழுதிய பதிலும் வரி வரியாக நேற்று நினைவுக்கு வந்தது. வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சந்திப்போமா என்று என்னை ஏக்கம் கொள்ளச் செய்த நபர் அவர். என் விருப்பத்தை அவருக்கு எழுதியபோது, அதற்கு பதிலாகத்தான் அவர் அந்த கார்டைப் போட்டிருந்தார். பதிலுக்கு பதிலாக, மறுவாரம் கிளம்பி வந்து அவரைப் பார்ப்பதாகத்தான் எழுதினேன்.

ஆயிற்று, பதினேழு வருடங்கள். இன்னும் போகப்போகிறேன்! ஏன் நான் அவரைச் சந்திக்கப் போகவில்லை என்பதைச் சொல்லுவதற்கு முன் அவரது கடித வரிகள் இங்கே:

அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன்,

உன் கடிதம் கிடைத்தது. என்னை வந்து பார்ப்பதற்கு எதற்கு இத்தனை நடுக்கமும் தயக்கமும்? நீ எப்போது வேணுமானாலும் வரலாம். அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஞானமூர்த்தி நகர் எங்கே என்று கேள். குத்து மதிப்பாக வழி சொல்லுவார்கள். ஆட்டோ பிடித்தால் பத்து ரூபாய் கேட்பான். தவறியும் என் பேர் சொல்லிக் கேளாதே. யாருக்கும் இங்கே என்னைத் தெரியாது. ஸ்ரீக்காந்தின் அப்பா என்றால்தான் தெரியும். நீ, ஸ்ரீகாந்த் வீடு என்றே கேட்கலாம். இந்த ஊரளவில் என் கீர்த்தியைக் காட்டிலும் அவனுடையது பெரிது. நீ வா. நேரில் நிறையப் பேசலாம். பின்புறம் அம்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து ஞானமூர்த்தி நகரை அடைவதற்கு வரைபடம் ஒன்று எழுதியிருக்கிறேன். அதன்படி கிளம்பி வந்து சேர்.

ஆசீர்வாதம்.
லா.ச. ராமாமிருதம்.

நான் ரிஷியென மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் எனக்கெழுதிய கடிதம் அது! காலத்தின் பேய்ப்பாய்ச்சலில் காணாமல் போகாமல் திரும்பக் கிடைத்ததில் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

லா.ச.ராவை எழுத்துமூலம் எனக்கு அறிமுகப்படுத்தியவர் அமரர் நா.சீ. வரதராஜன். அவர் லாசராவின் மிக நெருங்கிய நண்பர் வட்டத்தில் ஒருவர். அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது ஜனனி தொகுப்பைப் படித்துவிட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலத்தில்தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு போஸ்ட் கார்டு போட்டேன். அதற்கு அவர் எழுதிய பதில் தான் மேலே இருப்பது.

லாசராவின் இந்தக் கடிதம் வந்தபின், மீண்டும் அவரது தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக ஒருமுறை படித்தேன். எத்தனை முறை படித்தாலும் ஜிவ்வென்று ஏறும் போதை எழுத்து அவருடையது. அவரது எழுத்துகளினூடாக அவரது பிம்பம் ஒன்றை என் மனத்துக்குள் நான் எப்போதோ வரைந்துவைத்திருந்தேன். எப்போதும் கண்மூடி ஏகாந்தத்தில் லயித்திருக்கும் தோற்றமாக எனக்குள் அவர் அந்தக் காலங்களில் வீற்றிருந்தார். நிஜத்திலும் அவர் அப்படித்தான் இருப்பாரா என்று நா.சீ.வவிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன்.

"ம்ம்..சொல்லலாம். உள்முகமாவே யோசிச்சிண்டிருக்கறவர்தான். ஆனாலும் பேச ஆரமிச்சுட்டா உன் வயசுக்கு, உன் பக்குவத்துக்கே இறங்கி வந்துடுவார்"

அந்த ஆசையில்தான் கடிதம் எழுதிப் போட்டேன்.

ஆனால் அவர் வரச்சொல்லி உத்தரவு கொடுத்தபின் ஏனோ தயக்கம் பற்றிக்கொண்டது. நேரில் பார்க்காமல் நானாக உருவாக்கிக்கொண்ட என் மனத்துக்கான பிரத்தியேக லாசரா எங்கே, நேரில் பார்த்ததும் காணாமல் போய்விடுவாரோ என்கிற பயம் காரணம். ஒருவாரம் தள்ளிப்போட்டேன். அது தானாக ஒருமாதம் ஆனது. பிறகு ஆறுமாதம் ஆனது. ஆறு வருடங்கள். அப்படியே மறந்தும் விட்டேன்.

அந்த ஒரு கடிதம் எனக்குப் போதுமானதாக இருந்தது அப்போது. அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன். ஆசீர்வாதம்.

போதாது? பதினேழு வருடங்கள் கழித்து, நேற்றுக் கிடைத்தது, மீண்டும் அந்தக் கடிதம். லாசராவைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மீண்டும் எழுந்திருக்கிறது. இப்போதும் ஒரு கடிதம் எழுதிப்போடலாம். வரச்சொல்லி அவசியம் பதில் வரும்.

பார்க்கலாம். என்ன அவசரம்?

**

லா.ச.ராவின் 'அபிதா' ஆங்கிலத்தில் கே.எஸ்.சுப்ரமணியத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு இப்பொழுது எங்களது 'Indian Writing' இம்ப்ரிண்டில் எடிடிங்கில் உள்ளது. புத்தகம் அச்சில் வருவதைப் பார்க்க லா.ச.ரா இருக்கமாட்டார் என்பது வருத்தம் தரக்கூடியது.

====

இட்லிவடை பதிவு

Friday, October 26, 2007

கலைஞர் டிவியால் சன் டிவிக்கு என்ன நஷ்டம்?

சில மாதங்களுக்குமுன் மாறன் - கலைஞர் குடும்பங்களுக்கு இடையே சண்டை வந்தபோது சன் டிவி பங்குகள் பயங்கரமாக அடிவாங்கின. தொடர்ந்து கலைஞர் குடும்பம் ராஜ் டிவி ஆசாமிகளுடன் சேர்ந்து புதிதாகத் தொலைக்காட்சி நடத்தலாம் என்று புரளிகள் வந்ததும், ராஜ் டிவி பங்குகள் உயர உயரப் பறந்தன. கடைசியில் கலைஞர் தொலைக்காட்சி என்று ஒன்று (ராஜுடன் உறவு வைத்துக்கொள்ளாமல்) தனியாகப் பிறந்தது.

சன் டிவி காலி என்று பலரும் நினைத்தனர். 15 மே 2007 அன்று நான் எழுதிய பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் சன் டிவியின் வருமானமும் லாபமும் சடாரெனக் குறைந்துவிடும் என்று கணக்கு செய்யவே கூடாது. அதற்கான 'நிரூபணம்' ஏதும் சந்தையிடம் இல்லை.

...

இரண்டு நிறுவனங்களின் [அதாவது ராஜ், சன்] அடுத்த இரண்டு காலாண்டு வருமானத்தையும் லாபத்தையும் கவனிப்பது நல்லது.
இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகு சன் குழுமத்தின் இரண்டு காலாண்டு வருமானமும் வெளியாகியுள்ளது.

ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் 2007 காலாண்டில், சன் தொலைக்காட்சி குழுமம் பெற்ற வர்த்தக வருமானம் ரூ. 194.45 கோடி. நிகர லாபம் ரூ. 80.16 கோடி. அதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன் 2007) பெற்ற வர்த்தக வருமானம் ரூ. 202.34 கோடி. நிகர லாபம் 93.07 கோடி.

வர்த்தக வருமானத்தில் சுமார் ரூ. 8 கோடி குறைந்துள்ளது. அவ்வளவே. லாபத்தில் ரூ. 13 கோடி குறைந்துள்ளது; இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மார்க்கெட்டிங்கில் நிறையச் செலவுகளை செய்திருக்கலாம். (இதர செலவுகள் என்ற தலைப்பில் ரூ. 8 கோடி அதிகமாகச் செலவாகியுள்ளது.)

ஆக, சன் டிவி வருமானம், கலைஞர் டிவி வரவால் சொல்லிக்கொள்ளும்படிக்கு பாதிக்கப்படவில்லை. சுவாரசியமான விஷயம்... சன் டிவி குழுமத்தின் சம்பளச் செலவுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. ரூ. 22.4 கோடியிலிருந்து ரூ. 17.5 கோடியாக - அதாவது 22% குறைந்துள்ளது. இதற்கு ஒரே காரணம், நிறைய ஊழியர்கள் சன் டிவியை விட்டுவிட்டு, கலைஞர் டிவியில் சேர்ந்துள்ளனர் என்பதாக மட்டுமே இருக்கமுடியும்!

இந்த நிலையையும், வேறு சில தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது, அடுத்த இரண்டு காலாண்டுகளில் சன் டிவியின் வருமானமும் லாபமும் வெகுவாக அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

சரி, இதனால் சிறு முதலீட்டாளர்களுக்கோ என்ன வந்தது என்கிறீர்களா, அதுவும் சரிதான். ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறு முதலீட்டாளர் வசம் இருந்தது வெறும் 0.91% சன் டிவி பங்குகள் மட்டுமே. இப்பொழுதோ அது வெறும் 0.8%தான்!

Thursday, October 25, 2007

நீதித்துறையின் அதிகார வரம்பு

அக்டோபர் 7, 2007 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தின் ஒலிப்பதிவு. இதைப்பற்றிய என் கருத்துக்களை முன்னமே எழுதியுள்ளேன்.

இரவிக்குமார், எம்.எல்.ஏ - அறிமுகம் (தமிழில்) - MP3, 5.5 min, 2.67 MB | other formats
கனிமொழி, எம்.பி - முன்னுரை (தமிழில்) - MP3, 12.27 min, 5.7 MB | other formats
அ.ராசா, மத்திய அமைச்சர் (தமிழ் + அவ்வப்போது ஆங்கிலம்) - MP3, 32.54 min, 15 MB | other formats
பிரிந்தா காரத், எம்.பி (ஆங்கிலம்) - MP3, 37.24 min, 17.1 MB | other formats
மனோஜ் மிட்டா, டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆங்கிலம்) - MP3, 21.05 min, 9.65 MB | other formats
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி AS ராஜன் (ஆங்கிலம்) - MP3, 30.56 min, 14.1 MB | other formats
என்.ராம், தி ஹிந்து (ஆங்கிலம்) - MP3, 35.36 min, 16.3 MB | other formats