செல்லுலார் தொழில்நுட்பம் வளர்ச்சியடைய அடைய, செல்லுலார் சேவை தொடங்குவதற்கான முதலீடு நன்கு குறைந்தது. மேலும் மிகக் குறைவான காலகட்டத்திலேயே இந்தச் சேவையினைத் தொடங்க முடிந்தது. இத்துடன் கூட கையில் எடுத்துச் செல்லும் செல்லுலர் தொலைபேசி அதாவது கைக்கருவியின் (handset) விலையும் நன்கு குறைந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக செல்லுலார் நிறுவனங்கள் prepaid card என்னும் முன்கூட்டியே பணத்தை செலுத்தி உடனடியாகப் பெறக்கூடிய சேவையினைத் தொடங்க ஆரம்பித்தனர். இதன் மூலம், 15ஆ நிமிடத்தில், ஒருவரால் புது (செல்லுலார்) தொலைபேசி இணைப்பைப் பெற முடிந்தது. விண்ணப்பப் படிவங்கள் இல்லை, நெருக்கும் வரிசைகள் இல்லை, காத்திருக்கும் கவலைகள் இல்லை. சில நூறு ரூபாய்கள்தான் SIM கார்டு வாங்க. வெறும் 4000 ரூபாய்தான் கைகருவி வாங்க. அதுவும் கூட சிங்கப்பூரிலிருந்து வரும் நண்பர் வாங்கிக்கொண்டு வந்தாலோ அல்லது பர்ம பஜாரில் வாங்கினாலோ, வெறும் 2500-3000 ரூபாய்தான். இன்னும் சில நூறு ரூபாய்கள் அந்தக் கார்டில் செலுத்திக் கொண்டால், இந்தப் பணம் தீறும் வரையில் பேசலாம், கேட்கலாம். இந்த prepaid card தான் செல்லுலார் சேவையில் பெரும் புரட்சியைக் கொண்டு வந்தது.
இந்த prepaid முறை வரும் முன்னர் எந்த வகையில் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன? Fixed Line, அதாவது கம்பிகள் மூலம் வழங்கப்படும் தொலைபேசியும் சரி, Mobile அதாவது செல்லுலார் தொலைபேசியும் சரி, முதலில் இணைப்பு பெறுபவரின் முகவரியை சரிபார்க்க வேண்டியிருந்தது. அதற்கு வங்கிக் கணக்கிருப்புப் புத்தகம், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் தேவை. அதன் பிறகு, விண்ணப்பம் பூர்த்தி செய்து இணைப்பு வாங்க வேண்டும். இணைப்பு வாங்கும் போது deposit தொகையாக கிட்டத்தட்ட ரூ. 3000 செலுத்த வேண்டும் (நீங்கள் பேசிவிட்டு கட்டணத்தைச் செலுத்தாது ஓடிவிட்டால் நிறுவனங்களுக்கு இது மட்டுமாவது மிச்சம்!). அதன் பிறகு செல்லுலார் தொலைபேசியானால் கைக்கருவி வாங்க வேண்டும், கம்பி இணைப்பானால் சில, பல மாதங்களுக்குப் பிறகு உங்களது வீட்டிற்கு தொலைபேசித்துறையின் ஊழியர் இணைப்புத் தருவார், ஓர் தொலைபேசிக்கருவியும் கொடுப்பார். ஒவ்வொரு மாதம் முடிந்த பின்னும் (அல்லது இரு மாதத்திற்கு ஒருமுறை) நீங்கள் உபயோகித்த நிமிடங்களுக்கான bill வீடு வந்தடையும். கம்பி இணைப்பாக இருந்தால், DoT தொலைபேசிக் கட்டணம் செலுத்துமிடத்தில், கால்கடுக்கக் காத்திருந்து, பணம் கட்டி, (சில்லரை இல்லை என்று எரிந்து விழும் ஊழியரிடம் திட்டு வாங்கி), ஒரு சில நாள் தாமதமானால் கம்பி இணைப்பு அறுக்கப்பட்டு, ஊரெல்லாம் அலைந்து திரிந்து, லஞ்சம் அழுது இணைப்பை மீண்டும் பெற வேண்டியிருக்கும். செல்லுலார் தொலைபேசியானால் மாதக்கடைசியில் chequeஐ அவர்களது கட்டிடத்தில் இருக்கும் பெட்டியில் போட்டு விட்டு வந்தால் போதும்.
இந்த prepaidதான் தொலைபேசி இணைப்புகளில் பெருவாரியான எண்ணிகையில் உள்ளது இப்போதும். கிட்டத்தட்ட 70 விழுக்காடு இணைப்புகள் prepaid என்ற முறையில்தான் விற்கப்படுகின்றன.
கடந்த ஒரு வருடத்தில், கிட்டத்தட்ட 60 லட்சம் செல்லுலார் தொலைபேசி இணைப்புகள் கொடுகப்பட்டுள்ளன, நாடு முழுவதும்.
இதைப்பற்றிய மற்ற செய்திகளை பின்னர் பார்ப்போம்.
பெங்களூர் இலக்கியத் திருவிழா
3 hours ago
No comments:
Post a Comment