Friday, November 23, 2012

சோனியா காந்தி போடும் நரகத்துக்கான பாதை

[எச்சரிக்கை. மிக நீண்ட போஸ்ட்.]

நரகத்துக்கான பாதை நல்லெண்ணத்துடனேயே போடப்படுகிறது.

ஒரு பக்கம் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அவ்வப்போது சுதந்தரவாதச் சிந்தனைகளுடன் சில நல்ல செயல்களில் ஈடுபடும். ஏதேனும் ஒரு துறையில் தனியார்மயம் அதிகரிக்கப்படும். ஏதேனும் ஒரு துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.

மறுபக்கம் சோனியா காந்தி தலைமையிலான சூப்பர் அரசு - இதற்கு நேஷனல் அட்வைசரி கவுன்சில் (என்.ஏ.சி) என்றும் பெயர் - மிக ஆழமாக யோசித்து அனைத்து ஏழைகளும் பலன் பெறவேண்டும் என்று சில திட்டங்களைத் தீட்டும். அதன் விளைவுகள் நாட்டை மிகக் கடுமையாகப் பாதித்து ஒட்டுமொத்த அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சோனியா/என்.ஏ.சி உருவாக்கிய இரண்டு திட்டங்களை எடுத்துக்கொள்வோம்.

முதலாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம். இதற்கு 100 நாள் வேலைத் திட்டம் என்று உள்ளூரில் பெயர். இதன்படி, கிராமப் பகுதிகளில் உள்ள வயதுக்கு வந்த மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை கட்டாயமாகத் தரப்படும். அதாவது அவர்கள் கேட்டால், அரசு வேலை கொடுத்தே ஆகவேண்டும். இது மக்களின் உரிமை. அந்த வேலைக்கு அரசு அவர்களுக்கு நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட கூலி தந்துவிடும்.

இதன் அடிப்படை மிகுந்த நல்லெண்ணம் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. யாருமே தேசம் நாசமாகப் போகவேண்டும் என்று உட்கார்ந்துகொண்டு திட்டம் தீட்டுவதில்லை. என்ன நல்லெண்ணம்? புதிய தாராளக்கொள்கை வந்ததற்குப் பிறகு, நகரங்கள் வளரும் வேகத்தில் கிராமங்கள் வளர்வதில்லை. கிராம வருமானம் அதிகமாவதில்லை. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த விலைவாசி அதிகரித்துக்கொண்டே போகிறது. விளைவாக கிராம மக்களின் வாழ்க்கை அழிந்துகொண்டே போகிறது. செல்வமானது, குறைவான இடத்திலிருந்து அதிகமான இடத்துக்குப் பாய்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் சாரி சாரியாக நகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இதனால் நகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. நகரத்துக்கு வரும் கிராமவாசிகளும் சேரிகளில் சிக்கிச் சீரழியவேண்டியிருக்கிறது.

கிராம மக்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் தரவேண்டுமானால் அவர்கள் கையில் கொஞ்சமாவது பணத்தைச் சேர்க்கவேண்டும். இதுதான் அந்த நல்லெண்ணம்.

ஆனால் என்ன நடந்தது?

இந்தப் பணத்தைத் தருவதற்கு என்.ஏ.சி கொண்டுவந்த திட்டம் எப்படிப்பட்டது? மக்கள் வேலை செய்யவேண்டும், செய்தால்தான் பணம் என்றார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? நாட்டில் பெரும்பாலான இடங்களில், பரம நிச்சயமாக தமிழ்நாட்டில், உருப்படியாக ஒரு வேலையும் நடப்பதில்லை. குழி தோண்டு, குழி மூடு என்ற அடிப்படையில் கிராமத்துக்கு டாஞ்சிபிள் சொத்து எதையும் உருவாக்காமல் இந்தப் பணம் கடைசியில் பட்டுவாடா ஆகிறது. வேலை எதுவுமே செய்யாமல் பணம் கிடைக்கிறது என்பதால் அரசு அதிகாரிகள் அடிக்கும் 30% கொள்ளையை மக்களால் தட்டிக்கேட்க முடிவதில்லை. நான் சென்னை அருகே ஒரு கிராமத்தில் எடுத்த ஒரு சர்வேயின்படி நாள் ஒன்றுக்கு 119 ரூபாய் கூலி இருந்தபோது மக்களுக்குக் கையில் கிடைத்த பணம் ரூ. 80-85 (சராசரி). ஓர் ஆண்டுக்கு வயது வந்த நபர் ஒருவருக்குக் கையில் கிடைப்பது சுமார் ரூ. 8,000/-

ஆனால் என்ன நடக்கிறது? மனத்தளவில் இது இலவசப் பணம் மாதிரிதான். விவசாயக் கூலி வேலை செய்வோர் பலரும் இதன் காரணமாகக் இனியும் கூலி வேலை செய்ய விரும்புவதில்லை. ஏற்கெனவே நசித்துப்போயிருக்கும் விவசாயம் மேலும் நசிகிறது. விவசாயிகள் இப்போது அரசிடம் தங்கள் வயல்களில் வேலை செய்வதற்கு ஈடாக 100 நாள் கூலியைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். நடைமுறையில் வேலை செய்யாமல் இருப்பதற்குத்தான் நாள் ஒன்றுக்கு 80 ரூபாய். யாருக்கும் வேலை செய்யப் பிடிக்கவில்லை. எனவே விவசாயிகள் வயல்களுக்கு இவர்கள் வேலை செய்யப் போனாலும் சும்மாதான் உட்கார்ந்திருக்கப் போகிறார்கள். இதனால் விவசாயிக்கு எந்த நன்மையும் இல்லை.

அத்துடன் கிராமப் பகுதிகளில் இருக்கும் சிறு தொழில்களில் வேலை செய்துவந்தோர் பலரும் வேலைகளுக்குச் செல்வதில்லை என்று சமீபத்தில் வந்த ஓர் அறிக்கை சொல்கிறது. ஆண்டுக்குக் கிடைக்கும் 8,000 ரூபாயை வைத்துக்கொண்டு இவர்களால் எப்படி வாழ்க்கை நடத்தமுடியும்? இவர்கள் ஏன் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை? ஏன் 8000 ரூபாய் போதும் என்றிருக்கிறார்கள்?

இது ஒரு லோக்கல் மினிமம். மாதம் முழுதும் லொங்கு லொங்கென்று வேலை செய்து லோல்பட்டு, வெறும் 2,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு, பேசாமல் வீட்டோடு உட்கார்ந்திருக்கலாம். ஏதோ ஒரு கைவேலை செய்யலாம். பணம் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும். வேலை செய்தால் குறைந்தது மாதம் 6,000 ரூபாயாவது வரவேண்டும். (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வே செய்தபோது, மாதத்துக்கு 10,000 அல்லது அதற்குமேல் இருந்தால்தான் வளமான வாழ்க்கை வாழமுடியும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் சொல்லும் 6,000 என்பது சற்றுத் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில்.) அப்படிக் கிடைக்கப்போவதில்லை என்றால் அந்த வேலைக்குப் போனால் என்ன, போகாவிட்டால் என்ன?

கிராமங்களில் அதிகச் சம்பள வேலைகளை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்று அரசுக்குத் தெரியவில்லை. (ஹிண்ட்: முதலில் ஒழுங்காக கரண்ட் கொடுங்கள்!) ஆனால் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இவர்களது வழிமுறையின் விளைவு இப்படியாக இருக்கிறது:

(அ) அரசு ஊழியர்களுக்கும் பிற இடைத்தரகர்களுக்கும் அதிக லஞ்சம் (30% கட்)
(ஆ) கடைமட்ட உழைப்பாளர்கள் உழைப்பை விட்டுவிட்டுச் சோம்பேறிகளாக ஆக்குவது
(இ) வேலை செய்யாமல் வேலை செய்ததுபோலப் பொய் சொல்லலாம் என்ற கெட்ட எண்ணத்தை மக்கள் மனத்தில் விதைப்பது
(ஈ) ‘இது நம்ம பணம்தான்யா!’ என்று உரிமை கொண்டாட வைக்கிறது மக்களை. இது மிக அபாயகரமான வாதம்.
(உ) விவசாயத்தை விரைந்து அழிக்கிறது.
(ஊ) கிராமப்புறக் கைத்தொழில்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.

இப்படித்தான் நல்ல எண்ணம் நாசத்தை விளைவிக்கிறது. இனி இந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது. ஏனெனில் இடைத்தரகர்களுக்குக் கிடைக்கும் 30% கட் போவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் 8,000 ரூபாயை விட விரும்பமாட்டார்கள். தமிழ்கத்தில் ஏற்கெனவே நாள் கூலி 119 ரூபாய் என்பது 130+ என்றாகிவிட்டது. இரண்டாண்டுக்கு ஒரு முறை இது அதிகரித்துக்கொண்டே போகும். மேலும் கிராமம் என்று சொல்லப்படும் பகுதியில் யார் வேண்டும் என்றாலும் இந்தப் பணத்தை (வேலையை!) கொடுத்தே ஆகவேண்டும். ஏனெனில் இது உரிமை!

என்.ஏ.சியின் அடுத்த நல்லெண்ணத் திட்டத்தைப் பார்ப்போம்.

மக்களின் வாழ்க்கையைச் சரி செய்த கையோடு சோனியா அண்ட் கோ கல்வியைக் கையில் எடுக்க முடிவு செய்தனர். மீண்டும் புதிய தாராளமயக் கொள்கையை ஒரு பிடி பிடிக்கலாம். நாட்டில் தனியார் கல்வி நிலையங்கள் தறிகெட்டு வளர்கின்றன. இவை இரண்டு வகைப்படும். நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு, உயர் சாதி ஆட்களுக்காக மட்டும் நடக்கும் பந்தா பள்ளிகள். மறுபக்கம், அவற்றை போலி செய்து உள்ளே சரக்கு இல்லாமல், சரியான வசதிகூட இல்லாமல், மோசமான கட்டடங்களில் மோசமான கல்வி கொடுத்து ஆனால் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள். இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகளில் ஆட்கள் சேர்வதில்லை, கட்டடம் உடைந்து தொங்குகிறது, மேற்கொண்டு நிதி முதலீடு செய்தாலும் உருப்படி ஆக்கமுடியாத நிலையில் அந்தப் பள்ளிகள் உள்ளன.

என்ன செய்யலாம்?

முதலில் மோசமான தனியார் பள்ளிகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருக்கவேண்டும், என்ன மாதிரியான ஆசிரியர்-மாணவர் விகிதம் இருக்கவேண்டும், என்ன மாதிரியான வசதிகள் இருக்கவேண்டும் என்று மிரட்டுவோம். இதெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுடைய உரிமத்தைப் பிடுங்கிவிடுவோம் என்று மிரட்டுவோம்.

சரி, அப்புறம்?

அடுத்து, அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஒரு பதம் பார்ப்போம். சும்மா D.T.Ed அல்லது B.Ed இல்லாமலேயே ஆசிரியர்கள் ஆகிவிடுகிறார்கள். அதை ஒரு வெட்டு வெட்டுவோம். இனி இந்தப் பட்டங்கள் இல்லாவிட்டால் ஆசிரியர் ஆகமுடியாது.

சரி, அப்புறம்?

இது போதாது; இவர்கள் பொய்யாக பி.எட் வாங்கிவிட்டு வந்திருக்கலாம். எனவே TET (டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) என்று ஒன்றை வைத்து அதில் பாஸ் ஆனால்தான் நீ டீச்சராக ஆகலாம் என்று சொல்வோம்.

சூப்பர். அப்புறம்?

இதுபோதும், லொட்டைத் தனியார் பள்ளிகளைப் பதம் பார்க்க. இப்போது பணக்காரப் பள்ளிகளை ஒரு வாங்கு வாங்குவோம்.

எப்படி?

சிம்ப்பிள். அவர்களுடைய 25% இடத்தை ஏழை/பிற்படுத்தப்பட்டோர்/தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்காக ஒதுக்கிவைக்கவேண்டும் என்று சொல்வோம். ஏழையா அல்லது பிற்படுத்தப்பட்டவரா, யாருக்கு எவ்வளவு என்ற கேள்விகளை ஒருமாதிரி பிறகு பார்த்துக்கொள்ளலாம். இந்தக் கட்டணத்தை அரசு கொடுக்கும். ஆனால் எவ்வளவு கட்டணம், எப்போது கொடுப்போம் என்பதையெல்லாம் பிறகு மெதுவாகப் பார்த்துக்கொள்வோம். முதலில் இந்தப் பள்ளிகள் உடனடியாக இதனைச் செயல்படுத்தியே ஆகவேண்டும் என்று மிரட்டுவோம்.

செய்தார்கள். ஆனால் பூதம் வெவ்வேறு வழிகளிலிருந்து கிளம்புகிறது.

(அ) முதலில் இந்த எந்தச் சட்டமும் அரசுப் பள்ளிகளைக் கட்டுப்படுத்தாது. ஒரே ஒன்றைத் தவிர. அதாவது அரசுப் பள்ளியில் சாக்கடை, மலசலக்கூடம் எல்லாம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றிக் கவலையில்லை. அதெல்லாம் தனியார் பள்ளிகளுக்குத்தான். ஆனால் அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுதியாகவேண்டும். இது என்ன பெரிய விஷயம் என்று ஆர்.டி.ஈ சட்டம் இயற்றியோர் நினைத்திருக்கவேண்டும். ஆனால் இதில்தான் முதல் சனியே பிடிக்கப்போகிறது.

ஏற்கெனவே நடந்த டெட் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால் ஒரே ஜோக். நம் ஆசிரியச் செல்வங்களால் இந்தப் பரீட்சையை இந்த நூற்றாண்டில் எழுதி பாஸ் செய்ய முடியாது. இந்த டெஸ்டே தப்பு என்று ஒரு பக்கம் போராட்டம். தமிழக அரசு TET, TRB என்ற இந்த இரண்டு பரீட்சையையும் குழப்பி, ஒன்றாக்கிவிட்டது. ஒன்று ஆசிரியர்களிடம் இருக்கவேண்டிய தகுதி. இன்னொன்று, இருக்கும் அரசுப் பள்ளிக் காலி இடங்களில் யாரைக்கொண்டு வேலை பார்க்கவைப்பது என்று தீர்மானிப்பது. முந்தைய பரீட்சையை ஆர்.டி.ஈ சட்டப்படி, ஏற்கெனவே வேலையில் இருக்கும் ஆசிரியர்களும் எழுதியாகவேண்டும்.

இப்போது அனைத்து ஆசிரியர்களும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் ஏற்கெனவே பி.எட் படித்துவிட்டுத்தானே வருகிறோம், இப்போது இன்னொரு டெஸ்ட் எல்லாம் எழுதமுடியாது என்கிறார்கள். சிலர் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள்.

டெட் எழுதியே ஆகவேண்டும் என்று அரசு வற்புறுத்தினால் அடுத்த முறை தேர்தல் நடக்கும்போது இது குறித்து தேர்தல் வாக்குறுதி வருமாறு செய்துவிடுவார்கள். ஆசிரியர்கள் பலம் மிக்க ஒரு வாக்கு வங்கி.

(ஆ) டெட், ஆர்.டி.ஈ போன்றவற்றை சமூக நீதிக்கு எதிரானதாகவும் ஃபெடரலிசத்துக்கு எதிரானதாகவும் இந்த ஆசிரியர்களும் அறிவுஜீவிகளும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இது ரொம்ப டேஞ்சர். சமூக நீதி சிறக்கத்தானே இதைச் செய்தோம், இப்படி ஆகிவிட்டதே என்று சோனியா காந்தி துடித்துப் போய்விடுவார். டெட் எப்படி சமூக நீதிக்கு எதிரானது என்று கேட்கிறீர்களா? டெட் எதிர்பார்க்கும் 60% மதிப்பெண்ணை தாழ்த்தப்பட்டோரால்/ பிற்படுத்தப்பட்டோரால் பெற முடியாது; எனவே அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காது என்கிறார்கள் இவர்கள். இது எப்படி ஃபெடரலிசத்துக்கு எதிரானது? டெட் வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை மிரட்டிப் பணிய வைத்துள்ளது. (இது உண்மையே.)

(இ) தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும், உன்னால் முடிந்ததைச் செய், நான் 25% கொடுக்கமாட்டேன் என்று தான் பாட்டுக்கு நடந்துகொள்கின்றன. இவர்களை யார் கண்காணிக்கப்போவது? அதற்கான ஆள்பலம் மாநில அரசுகளிடம் இல்லை.

(ஈ) இத்தனை ஏக்கர் நிலம் வேண்டும் என்றெல்லாம் மிரட்டினால் பள்ளிக்கூடமே நடத்தப்போவதில்லை, பேசாமல் அங்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்க்கலாம் என்று சிலர் முடிவு செய்வார்கள். (எல்டாம்ஸ் ரோட்டில் எங்கள் அலுவலகம் முந்தி இருந்த இடத்துக்கு எதிரில் உள்ள ஒரு பள்ளி இப்படித்தான் இழுத்து மூடி அந்த இடத்தை ஆஃபீஸ் ஆக்கிவிட்டார்கள்!) சப்ளை குறையும்; அதிகரிக்காது.

(உ) இன்னும் இரண்டாண்டுகளில் தனியார் ஸ்கூல்களை மிரட்டி சைட் பிசினஸ் செய்து ஏற்கெனவே பார்க்கும் வருமானத்தைவிட அதிகம் பார்க்கக் கல்வித்துறைக்கு வழி பிறக்கும்.

(ஊ) தனியார் பள்ளியில் காசு கொடுத்துப் படிக்கும் மாணவர்களின் கட்டணம் உயரும். தமிழக அரசின் கட்டணக் கட்டுப்பாட்டுச் சட்டம் அத்துடன் மல்லுக்கு நிற்கும். மொத்தத்தில் தினசரிப் போராட்டமாக இது ஆகும். கிட்டத்தட்ட அனைவருமே நீதிமன்றம் போவார்கள்.

(எ) வேண்டிய அளவு பி.எட், டி.டி.எட் கல்லூரிகள் இப்போது இல்லை. ஆனால் ஆர்.டி.ஈ முழுமையாகச் செயல்படுத்தப்படவேண்டும் என்றால் எக்கச்சக்கக் கல்வியியல் கல்லூரிகள் திறக்கப்படவேண்டும். இப்போது உள்ள கல்லுரிகளில் பி.எட் என்பதே பெரும் பஜனைதான். பெரும் தொகை வாங்கிக்கொண்டு ஓராண்டு கழித்து கையில் டிகிரி கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அப்படி வெளியே வருபவர்கள், சிடெட் அல்லது டெட் பரீட்சையில் ஆப்பு வாங்குகிறார்கள்.

ஆக, ஒட்டுமொத்தமாக கல்வித் துறையில் உள்ள அனைவரது வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்ள ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு.

நரகத்துக்கான பாதை நல்லெண்ணத்துடனேயே போடப்படுகிறது.

23 comments:

  1. தலைப்பை பார்த்ததும் ஏதோ பயங்கரமாக சொல்லப் போகிறீர்கள் என நினைத்தேன். ஏற்கனவே பரவலாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தான்.

    ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தால் வேலை நடக்கிறதோ இல்லையோ, விவசாயக் கூலிகளின் ‘பார்கெயினிங் பவர்’ கூடும் என்பது எனது கணிப்பு. சில்லறைய விட்டெறிஞ்சா வேலைக்கு வந்துடுவாங்கன்னு இருந்த மனோநிலை மாறிவிட்டது. கூலி அதிகமாக கேட்பதால், விவசாயம் நசித்து விடும் என்பதை விட, விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை கேட்க வேண்டிய நிலைக்கு விவசாயியும் தள்ளப்படுவதும் நடக்கலாமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. உண்மையே. நான் ஒன்றையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் பழைய விஷயம். RTE இப்போதைய ஹாட் நியூஸ். இப்படி NAC முன்வைக்கும் ஒவ்வொன்றும் ஒரு முழுத் துறையை அழித்தபின், என்ன ஆகும்?

      பார்கெய்னிங் பவர் என்றெல்லாம் சொல்கிறீர்களே, அது எப்போது நடக்கப் போகிறது? யார் யாருடன் பார்கெய்ன் செய்யப்போகிறார்கள்? அரசிடம் விவசாயி பார்கெய்ன் செய்து விலையை உயர்த்தி, பின் அவர் தன் ஊரில் உள்ள கூலியாட்களிடம் பார்கெய்ன் செய்வதற்குள் அந்தத் தொழில் நசித்துப் போய்க்கொண்டே இருக்கிறதே?

      இப்படி நடக்கலாம் என்றாவது யோசித்தார்களா NAC? இப்போது இதில் உள்ள பிரச்னைகளைச் சரி செய்யப் போவது யார்? சோனியாவா, மன்மோகன் சிங்கா அல்லது மாநில அரசுகளா?

      மேலே நான் சொல்லியுள்ள இரண்டு திட்டங்களும் மத்திய அரசு வலுக்கட்டாயமாக மாநில அரசுகள்மீது திணித்தவையே. ஆனால் மத்திய அரசுக்கு ground realities தெரிவதில்லை. பிரச்னைகளைத் தீர்க்கவேண்டியது மாநில அரசுகளின் வேலையாகப் போய்விடுகிறது. எல்லா வேலைகளுக்கும் நடுவில் அது ஒரு எக்ஸ்ட்ரா வேலை!

      Delete
  2. நீங்க தான் இதை எழுதினீர்களா என்பதே சந்தேகப்பட்டு சந்தோஷமாக வாசித்தேன். காரம் குறைவு என்றாலும் கூட சொல்ல வந்த விசயத்தை கவனமாக கையாண்ட விதமே பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. அரசு பள்ளிகளுக்கு RTE கிடையாதா
    யார் சொன்னது
    கேந்திரிய வித்யாலயாவில் SC /ST இட ஒதுக்கீடு உண்டு .வகுப்புக்கு 6 மற்றும் மூன்று
    RTE படி 10 இடங்கள் ஒதுக்க வேண்டும்.வசதியாக KV நிர்வாகம் 9+1 என்று RTE கீழ் இடங்களை ஒதுக்கியது போல காட்டியது
    இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் இது தவறு பொதுவில் 25 சதவீத இடங்கள்.ஒதுக்கீட்டின் உள் 25 சதவீதம் என்று தீர்ப்பு வந்துள்ளது
    மாநில அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பான்மையானோர் ஏற்கனவே ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் தான்.அங்கு 25 சதவீதத்தால் என்ன பயன்
    மத்திய,மாநில அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் எந்த அளவு இருக்க வேண்டும்,ஆசிரியர் எவ்வளவு பேர்,,சத்துணவு ஊழியர்கள் எவ்வளவு பேர் என்று விதிமுறைகள் உண்டு.அவை பெரும்பான்மையான இடங்களில் விதிமுறைகளுக்கு ஏற்ப தான் இருக்கிறது
    எத்தனை தனியார் பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன .விரல் விட்டு எண்ணி விடலாம்
    விடுதியோடு கூடிய தனியார் பள்ளிகளுக்கு RTE கிடையாது .அதனால் அதிக பணம் வாங்கும் தனியார் பள்ளிகள் விடுதியோடு கூடிய பள்ளிகளாக மாறி கொண்டு இருக்கின்றன

    ReplyDelete
  4. கடந்த சில ஆண்டுகளாக உணவு உற்பத்தி அதிகரித்து தான் வருகிறது.எங்கிருந்து இந்த ஆட்கள் கிடைக்கவில்லை கதை உற்பத்தி ஆகிறது
    ஏழைகளுக்கு அரசின் திட்ட பணம் கிடைத்தால் அவர்கள் சோம்பேறி ஆகிறார்கள் எனபது என்ன சிந்தனையோ
    பணம் யாரையும் சோம்பேறி ஆக்குவது கிடையாது.மாறாக குறைந்த பண வரவு அதிக பணத்திற்கான ஆசையை தூண்டுவது தான் நடக்கிறது

    ReplyDelete
  5. திருவாளர் பத்ரி அவர்களுக்கு,
    ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை விட்டுத்தள்ளுங்கள். காசு வாங்கிக்கொண்டு ஒட்டுப் போட்டவர்கள் அதன் பலனை பின்னர் அனுபவிப்பது போல, உழைக்காமல் ஊதியம் பெறுவதற்கான பலனை அவர்கள் நிச்சயம் அடைவார்கள். பிரச்சினையே கல்விதான்! காளான் போல முளைத்துவிட்ட தனியார் பள்ளிகள், தங்களிடம் தான் நல்ல கல்வி கிடைக்கும், நூறு சதவீத தேர்ச்சி கிடைக்கும் போன்ற மாய பிம்பத்தை பெற்றோரிடம் உருவாக்கிவிட்டன. விளைவு பெரும்பான்மை நடுத்தர வர்க்கம் கல்வியை எத்துனை விலை கொடுத்தேனும் வாங்கத் துணிந்துவிட்டது. அரசுப்பள்ளிகளின் இன்றைய தரம் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததுடன் ஒப்பிட்டால் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது! திறமையுள்ள மாணவனுக்கு நல்ல கல்வி கிடைப்பதை பணம் தான் முடிவு செய்கிறது!
    நல்ல கல்வி வேண்டுமா பணம் வேண்டும்!
    நல்ல மருத்துவம் வேண்டுமா பணம் வேண்டும்!
    நல்ல குடிநீர் வேண்டுமா பணம் வேண்டும்!
    உலகின் மாபெரும் ஜனநாயக நாடு, தன் குடிகளுக்கு தரமான எதையும் தரவில்லை!
    அட தரமான சரக்கை கூட தருவதில்லை! டாஸ்மாக்கில் வரும் பெரும்பான்மை சரக்குகள் போலி!
    110 கோடி மக்களை கட்டியாள வழிநடத்த பரந்த மனமும் பெருந்தன்மையும் தன்னலமின்மையும் வேண்டும்?
    அது இங்கே யாரிடம் உள்ளதென்று சொல்லுங்கள்?

    நன்றி.
    'நியுட்' நண்டு!

    ReplyDelete
    Replies
    1. "உலகின் மாபெரும் ஜனநாயக நாடு, தன் குடிகளுக்கு தரமான எதையும் தரவில்லை!"

      Who is responsible? A society is as good as its people. It's the people who make the place. If you look at the developed and democratic western nations, it's the people who ensure that their rulers serve the interests of the society.

      I think it's easy to pass to buck on politicians and officials. But who elected them in the first place? Why can't people do their homework when they vote to make sure that the politicians and officials serve their interests? Why is that people vote for those who are corrupt/criminal? If people do not care if their representatives are corrupt and inefficient, why blame the politicians?

      I know it gives comfort to blame others for the problems and it's part of human nature. But in a democratic society, we the people are the owners and if the society is corrupt and inefficient, and as owners of the society, we the citizens should take the ultimate responsibility. The buck should stop with us.

      To use a metaphor, if you own a shop, it's your responsibility to ensure that the employees you recruit are not crooks. Moreover, you will closely supervise them so that they do your bidding. If you do not mind your store, the employees will become sloppy and start stealing things and bankrupt your store. Who is to be blamed for the sorry state of affairs?

      Indians are unwilling/unable to take the basic responsibility to ensure that the people they vote for are competent and continue to monitor the performance of elected officials.





      Delete
    2. [[To use a metaphor, if you own a shop, it's your responsibility to ensure that the employees you recruit are not crooks. Moreover, you will closely supervise them so that they do your bidding. If you do not mind your store, the employees will become sloppy and start stealing things and bankrupt your store. Who is to be blamed for the sorry state of affairs?

      Indians are unwilling/unable to take the basic responsibility to ensure that the people they vote for are competent and continue to monitor the performance of elected officials. ]]

      என்ன செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

      என்னுடைய மாணவப் பருவத்தில் இருந்து லஞ்சம் கொடுக்காமல் தான் எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டும் என்று கொள்கையோடே இருந்தேன். அதனால் ஒரு சாதிச் சான்றிதழ் வாங்குவதிலிருந்து, பல இக்கட்டுகளைத்தான் சந்திக்க நேர்ந்தது.
      மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் கொடுக்கப் போனால் அவர் அறையில் அவர் எப்போது இருப்பார் என்று தெரிந்து கொள்ள அலுவலக உதவியாளருக்கு கையூட்டு கொடுக்க வேண்டியதிருந்தது.!!

      இது பதினைந்து வருடத்திற்கு முந்தைய கதை. சமீப காலங்களில் பணம் தெரிகிற சட்டையைப் போட்டுக் கொண்டு ஒரு ஐநூறு ரூபாயாவது தெரிகிற மாதிரி வைத்துக் கொண்டு போனால்தான் அரசு அலுவலகங்களில் நுழையவே முடிகிறது.

      இதே நிலையில் சிங்கப்பூரில் சென்ற 8 ஆண்டுகளாக வசிக்கிறேன். மொத்தமே மூன்று முறைதான் நான் ஒரு அரசு அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டியதிருந்தது; அதுவும் சான்றிதழில் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் என்னுடையதுதானா என்று அதிகாரி சரி பார்க்க மட்டுமே..

      மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது மக்களால் நிச்சயம் முடியாது;இந்தியத் தேர்தல் அமைப்பில் நல்ல வேட்பாளரே இப்போது இல்லை.

      இந்தியா போன்ற ஒரு அமைப்பில் மேலிருந்து கீழ் முறையில்தான் மாற்றங்கள் வர முடியும்.ஒரு நல்ல தலைவர் எங்காவது எதிர்பாராமல் கிளம்பி முதல்வராகவோ பிரதமராகவோ அமர்ந்தால் மாற்றங்கள் சாத்தியம்.

      சிங்கப்பூரில் மாற்றம் அப்படித்தான் வந்தது;குஜராத்தில் அப்படித்தான் நடந்தது.இன்னும் உலகெங்கும் நல்ல மாற்றங்கள் வந்த இடங்களில் எல்லாம் அதுதான் நடந்தது.

      நமக்கு நல்ல தலைவர் வேண்டும் என்று பெரும்பான்மை சமூகம் விரும்பி இந்த நிலை வருவதற்கு இந்தியாவில் இன்னும் 50 ஆண்டுகளாவது ஆகும் !!!!!

      மற்றபடி பத்ரி இந்தப் பதிவில் எழுதிய முதல் மற்றும் கடைசி வரிகளைத் தவிர அனைத்தும் சரி. கல்வி உரிமைச் சட்டமும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளும்,நியமணத் தேர்வுகளும் இதே உறுதியுடன் கடுமையுடனும்தான் நடைபெற வேண்டும்.ஒழுங்கீனத்தைச் சகித்துக் கொள்ளாத ஒரு அமைப்புதான் முன்னேற்றத்தின் கீற்றையாவது பார்க்க முடியும் !

      தமிழில் எழுதும் ஒரு பதிவில், தமிழில் எழுதியதைப் படிக்கத் தெரிந்த நீங்கள் எதற்கு முழ நீளத்தில் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை !

      Delete
  6. இன்றைய அரசாங்க அதிகரிகளுக்கு மக்களுடன் இருந்த தொடர்பு முழுவதுமக துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களால் மக்களின் பிரச்சனைகளை உணர முடிவதில்லை. உதாரணமாக, அரசாங்க உயர் அதிகாரிகள் போக்குவரத்து பேருந்தகளை பயன்படுத்துவதில்லை. அவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிப்பதில்லை. நமக்கு தேவை Right to education அல்ல. நமக்கு தேவை Right Education.

    ReplyDelete
    Replies
    1. /// நமக்கு தேவை Right to education அல்ல. நமக்கு தேவை Right Education.///

      நமக்கு தேவை Right To Right Education :-)

      Saravanan

      Delete
    2. [[இன்றைய அரசாங்க அதிகரிகளுக்கு மக்களுடன் இருந்த தொடர்பு முழுவதுமக துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களால் மக்களின் பிரச்சனைகளை உணர முடிவதில்லை. உதாரணமாக, அரசாங்க உயர் அதிகாரிகள் போக்குவரத்து பேருந்தகளை பயன்படுத்துவதில்லை. ]]

      மிகச் சரியான கருத்து. அவர்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதில்லை என்பதோடு, ஆய்வுக்கும் கூட பொதுக் கட்டுமானங்களின் நிலையைப் பற்றி எவரும் சோதித்து அறிவதில்லை. ஆனால் ஒவ்வொரு அரசு வரும் போதும் 800 பேருந்துகள், 1200 பேருந்துகள் என்று பொதுக்கட்டுமானங்களுக்கு புதிய செலவுகள் செய்கிறார்கள்.

      தனியார் துறையின் புதிதாக வாங்கப்பட்ட ஒரு பேருந்து குறைந்தது 5 அல்லது 7 வருடங்களுக்கு புதுக்கருக்கு குலையாமல் செயல்படுகிறது.

      ஆனால் அரசுத் துறையின் புதிய பேருந்து இரண்டு வருடங்களுக்குப் ஒருமுறை கூட துடைக்கப்படாது, கழுவப்படாத பெருமையுடன் காயலான் கடை வண்டி மாதிரி மாறுகிறது.

      ஒழுங்கீனத்தை வேரோடு அறுத்தால் ஒழிய இந்தியாவில் எதுவும் மாறப்போவதில்லை.

      Delete
    3. ///இன்றைய அரசாங்க அதிகரிகளுக்கு மக்களுடன் இருந்த தொடர்பு முழுவதுமக துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களால் மக்களின் பிரச்சனைகளை உணர முடிவதில்லை. ///
      மிக தவறான கருத்து. அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு நிலைமை நன்றாக தெரியும். அதனால் தான் அவர்கள் அரசு பேருந்துகளை, மருத்துவமனைகளை பயன்படுத்துவதில்லை. தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அடுத்தவன் எக்கேடு கேட்டால் என்ன, நாம் நன்றாக இருக்கிறோம்! என்ற நினைப்பு. தான், தன் குடும்பம் இதற்கு மேல் சிந்திக்க தெரியாத தற்குறிகள், நம் அதிகாரிகள்.

      Delete
  7. //
    இதன் அடிப்படை மிகுந்த நல்லெண்ணம் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. யாருமே தேசம் நாசமாகப் போகவேண்டும் என்று உட்கார்ந்துகொண்டு திட்டம் தீட்டுவதில்லை. என்ன நல்லெண்ணம்? ..............

    ஆனால் என்ன நடந்தது?

    இந்தப் பணத்தைத் தருவதற்கு என்.ஏ.சி கொண்டுவந்த திட்டம் எப்படிப்பட்டது? மக்கள் வேலை செய்யவேண்டும், செய்தால்தான் பணம் என்றார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? நாட்டில் பெரும்பாலான இடங்களில், பரம நிச்சயமாக தமிழ்நாட்டில், உருப்படியாக ஒரு வேலையும் நடப்பதில்லை. குழி தோண்டு, குழி மூடு என்ற அடிப்படையில் கிராமத்துக்கு டாஞ்சிபிள் சொத்து எதையும் உருவாக்காமல் இந்தப் பணம் கடைசியில் பட்டுவாடா ஆகிறது. வேலை எதுவுமே செய்யாமல் பணம் கிடைக்கிறது என்பதால் அரசு அதிகாரிகள் அடிக்கும் 30% கொள்ளையை மக்களால் தட்டிக்கேட்க முடிவதில்லை.

    ஆனால் என்ன நடக்கிறது? மனத்தளவில் இது இலவசப் பணம் மாதிரிதான். விவசாயக் கூலி வேலை செய்வோர் பலரும் இதன் காரணமாகக் இனியும் கூலி வேலை செய்ய விரும்புவதில்லை. ஏற்கெனவே நசித்துப்போயிருக்கும் விவசாயம் மேலும் நசிகிறது. விவசாயிகள் இப்போது அரசிடம் தங்கள் வயல்களில் வேலை செய்வதற்கு ஈடாக 100 நாள் கூலியைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். நடைமுறையில் வேலை செய்யாமல் இருப்பதற்குத்தான் நாள் ஒன்றுக்கு 80 ரூபாய். யாருக்கும் வேலை செய்யப் பிடிக்கவில்லை. எனவே விவசாயிகள் வயல்களுக்கு இவர்கள் வேலை செய்யப் போனாலும் சும்மாதான் உட்கார்ந்திருக்கப் போகிறார்கள். இதனால் விவசாயிக்கு எந்த நன்மையும் இல்லை.

    அத்துடன் கிராமப் பகுதிகளில் இருக்கும் சிறு தொழில்களில் வேலை செய்துவந்தோர் பலரும் வேலைகளுக்குச் செல்வதில்லை என்று சமீபத்தில் வந்த ஓர் அறிக்கை சொல்கிறது. ஆண்டுக்குக் கிடைக்கும் 8,000 ரூபாயை வைத்துக்கொண்டு இவர்களால் எப்படி வாழ்க்கை நடத்தமுடியும்? இவர்கள் ஏன் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை? ஏன் 8000 ரூபாய் போதும் என்றிருக்கிறார்கள்?

    இது ஒரு லோக்கல் மினிமம். மாதம் முழுதும் லொங்கு லொங்கென்று வேலை செய்து லோல்பட்டு, வெறும் 2,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு, பேசாமல் வீட்டோடு உட்கார்ந்திருக்கலாம். ஏதோ ஒரு கைவேலை செய்யலாம். பணம் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும். வேலை செய்தால் குறைந்தது மாதம் 6,000 ரூபாயாவது வரவேண்டும். (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வே செய்தபோது, மாதத்துக்கு 10,000 அல்லது அதற்குமேல் இருந்தால்தான் வளமான வாழ்க்கை வாழமுடியும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் சொல்லும் 6,000 என்பது சற்றுத் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில்.) அப்படிக் கிடைக்கப்போவதில்லை என்றால் அந்த வேலைக்குப் போனால் என்ன, போகாவிட்டால் என்ன?

    (அ) அரசு ஊழியர்களுக்கும் பிற இடைத்தரகர்களுக்கும் அதிக லஞ்சம் (30% கட்)
    (ஆ) கடைமட்ட உழைப்பாளர்கள் உழைப்பை விட்டுவிட்டுச் சோம்பேறிகளாக ஆக்குவது
    (இ) வேலை செய்யாமல் வேலை செய்ததுபோலப் பொய் சொல்லலாம் என்ற கெட்ட எண்ணத்தை மக்கள் மனத்தில் விதைப்பது
    (ஈ) ‘இது நம்ம பணம்தான்யா!’ என்று உரிமை கொண்டாட வைக்கிறது மக்களை. இது மிக அபாயகரமான வாதம்.
    (உ) விவசாயத்தை விரைந்து அழிக்கிறது.
    (ஊ) கிராமப்புறக் கைத்தொழில்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.

    இப்படித்தான் நல்ல எண்ணம் நாசத்தை விளைவிக்கிறது. இனி இந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது. ஏனெனில் இடைத்தரகர்களுக்குக் கிடைக்கும் 30% கட் போவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.தமிழ்கத்தில் ஏற்கெனவே நாள் கூலி 119 ரூபாய் என்பது 130+ என்றாகிவிட்டது. இரண்டாண்டுக்கு ஒரு முறை இது அதிகரித்துக்கொண்டே போகும். மேலும் கிராமம் என்று சொல்லப்படும் பகுதியில் யார் வேண்டும் என்றாலும் இந்தப் பணத்தை (வேலையை!) கொடுத்தே ஆகவேண்டும். ஏனெனில் இது உரிமை! //

    எங்கயோ இடிக்கிற மாதிரி தெரியல?
    அப்படியே திருப்பி இந்த லாஜிக்க இட ஒதுக்கீட்டுக்கும் பொருத்திப்பார்க்கலமோ?

    ReplyDelete
  8. எந்த நாட்டில் எந்த அரசு எந்த திட்டம் போட்டு அதனால் மக்கள் வாழ்வு முன்னேறியது? அதனால் தான் ரேகன் சரியாக சொன்னார் "The nine most terrifying words in the English language are, 'I'm from the government and I'm here to help.' என

    ReplyDelete
  9. அரசு வேலை வாய்ப்புத் திட்டத்தில் கிடைப்பது ஆண்டுக்கு ரூ. 8000 - 10,000 மட்டுமே. நல்லபடி வாழ மாதத்துக்கே அவ்வளவு பணம் தேவை. அப்படியிருக்கும்போது இதனால் யாரும் எப்படி சோம்பேறியாகவோ, மற்ற வேலைக்குச் செல்லாமல் இருக்கவோ முடியும் என்று புரியவில்லை.

    சரவணன்

    ReplyDelete
  10. You need to read widely before jumping to conclusions. Read the election manifestos of 2004 elections. Employment Guarantee Scheme was first tried in Maharastra when drought struck. It was the left and progressive forces that articulated the demand much before NAC. As a scheme it has merits as it ensures a minimum income to poor families in rural areas and thereby prevents the need to migrate (to some extent). Moreover as the employment is guaranteed only for a number of days it does not end up as an disincentive to work elsewhere. There could be issues in implementation and execution at local level but that has more to do with state and local conditions than the concept as such. Are there no field studies on this scheme and how is that you rely on one field work (done by you) to come to such conclusions. Please spend sometime in reading and understanding and go through the literature on rural employment and rural poverty.

    ReplyDelete
  11. தும்பை விட்டு வாலை பிடித்திதனால் என்ன ஆகபோகிறது
    ஜெயமோகன் முதல் எத்தனை பேரு சொல்லிவிட்டார்கள்
    நம் அரசை பாலிசி விஷயத்தில் வழி நடத்துவது http://en.wikipedia.org/wiki/Centre_for_Policy_Research இதன் முக்கிய அங்கம் http://en.wikipedia.org/wiki/PRS_Legislative_Research இதற்கு fund செய்வது
    போர்ட் மற்றும் கூகிள்; நம் இந்தியர்களில் ஒரு நிறுவனமும் இதற்கு நிதி கொடுக்க முடியாதா என்ன ? பாலிசி யாருக்கு வசதியாக போடப்படும் என்று வேர்ல்ட் பேங்க் தொடர்பான செய்திகளை பாருங்கள்.
    முடமான முட்டாள் இந்தியர்களுக்கு எல்லாமே வேணும் !

    ReplyDelete
  12. CPR is funded by Indian government also as it is a center recognized by ICSSR. At least two former secretaries are associated with that. In any case to think that CPR lays down the policy is a good fiction. It current chief Bhanu Mehta in fact disagrees with many of the policies of UPA.
    Has Jeyamohan or the one who put that comments ever bothered to understand how think tanks like CPR function. Do they at least know that ICSSR funds CPR. CPR is not a left oriented think tank. Its current chief is a liberal while it provides space for critics like Ramasamy P.Iyer. Iyer was ex-Secretary, Water resources and is a bitter critic of the government. CPR gives space to him,and, B.G.Verghesse and Rangachary whose views are at odds with his views on water resources. That is possible because CPR is a think tank. It is not a fan club run by an author for promote himself/herself.

    ReplyDelete
  13. //நரகத்துக்கான பாதை நல்லெண்ணத்துடனேயே போடப்படுகிறது.//

    நல்ல கட்டுரை; இந்தக் கடைசிவரியைத்தவிர. Alliteration is another Tamil trait. :)
    ஜாவா குமார்

    ReplyDelete
  14. திரு.பத்ரி அவர்களுக்கு,
    ஒரு பானை சோற்றுக்கு இரு! சோறு பதம் என்பதுபோல இரு திட்டங்களைக் குறித்து எழுதியுள்ளீர்கள். 100 நாள் வேலை திட்டத்தைப் பொறுத்தவரை நீங்கள் கூறுவதை
    100 சதவிகிதம் வழிமொழிகிறேன்.

    அனைவர்க்கும் கல்வி உரிமைச்சட்டத்தைப் பற்றி பேசும்பொழுது சில விவரங்களை
    பேசியாக வேண்டும். நீங்கள் மட்டுமல்ல, பொதுவெளியில் பேசும், எழுதும் பலரும்
    ஜாக்கிரதையாக கையாளவேண்டிய விஷயம் பல விஷயங்களில் இதுவும் ஒன்று
    என்றாகிவிட்டது. நான் இந்த "இலவச கல்வி", "இலவச மருத்துவம்", "மானியங்கள்"
    என்று அமைக்கப்படும் சமூகங்கள் இந்தியாவை மட்டுமல்ல, மொத்த உலக
    நாடுகளையும் பாதித்துள்ளன என்று ஒரு இணைய தளத்தில் எழுதியுள்ளேன். அதற்கு
    மிகப்பெரிய நிந்தனைகளையும் பெற்றுள்ளேன். நிற்க!

    (1)மனிதன் ஏன் சமூகமாக வாழ ஆரம்பித்தான்? குழுவாக வாழ்ந்தால் பலருக்கு
    இலாபம். அந்த பலரில் தானும் இருப்போம் என்ற உத்வேகம்தான் (Statistical Probability).
    சுயநலம்தான். கருணை போன்று இன்று தெரியும் பல நிகழ்வுகள் அப்பட்டமான
    சுயநலத்திற்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டன.

    (2)அனைவர்க்கும் இலவச கல்வி சமூகத்திற்கு நன்மையா? இல்லை என்பதுதான்
    உண்மையான பதில். கல்வி பெறும் அனைவரும் சமூகம் உயர பங்களிக்க சாத்தியம்
    உண்டா என்பதைக் கொண்டு மட்டுமே முடிவு செய்ய முடியும். உதாரணமாக 25
    வயது வரை இலவச உயர்கல்வி வரை பெற்றவர்கள் "கைப்புள்ள" போல ஊர்சுற்ற
    ஆரம்பித்தால், அக்கல்விக்கு சமூகம் அளித்த பங்கீடு உபயோகமற்றதாகிவிட்டது
    என்பதுதான் பொருள்.

    (3)கல்வி இலவசமாக தரப்படவே கூடாதா? நான் அப்படி கூறவேயில்லை. யார்
    யாருக்கெல்லாம் இலவசமாக தரவேண்டும் என்று "தரப்படுத்த வேண்டும்"
    என்கிறேன். உதாரணமாக அறிவியலின் பல துறைகள், சிற்பம், ஓவியம், எழுத்து
    போன்ற பல்கலைத்துறைகள், ஆன்மீகம், மொழியாராய்ச்சி போன்றவற்றில் "சாதிக்கும்
    சாத்தியம் கொண்ட" அதிபுத்திசாலிகளுக்கு மட்டும் (மட்டுமே) இலவசக்கல்வி
    அளிக்கப்பட வேண்டும். மற்றவர்களில் பெரும்பாலானோர் Software Engineerஆகத்தானே
    படிக்கிறார்கள். அவர்களுக்கு இலவசக்கல்வி தேவையே கிடையாது. அம்பேத்கருக்கும்
    சரி, கணித மேதை சீனிவாசன் இராமானுஜமும் சரி, வறுமையில் வாடியவர்கள்.
    ஆனாலும் அதிபுத்திசாலிகள்.
    (தொடரும்)

    ReplyDelete
  15. (4)சரி, நான் கூறுவதை முழுமையாக நிராகரித்து, என்னை "ஏழைகளின் விரோதி"
    என்று கட்டம் கட்டினார்கள். இந்தியாவில் உள்ள 121 கோடி மக்களில், 22 கோடி
    குழந்தைகள் 3 முதல் 14 வயதுவரை உள்ளனர். இலவசக்கல்வி அளிக்க வருடத்திற்கு
    25000 செலவாகும் என்று கணக்கு போட்டால் தலை சுற்றும். அவ்வளவு
    பணமெல்லாம் இந்தியாவில் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் உடனடித்தேவைக்கு
    கேட்கும் 35000 கோடி ரூபாய்கள் கூட இந்திய கஜானாவில் இல்லை. பல இலட்சம்
    கோடி ரூபாய்க்கு எங்கு போவது?

    (5)அடுத்து, அமேரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இலவச கல்வி திட்டங்கள்.
    உண்மைதான் 2ம் உலகப்போருக்கு பின்னர் ஐரோப்பாவில் இலவச கல்வி, இலவச
    மருத்துவம் என்ற இரு மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு இருந்த
    பெரிய தொழில்நுட்ப வசதியால் விளைந்த பணவளம், மக்கள்தொகை குறைவு என்ற
    காரணங்களால், கிட்டத்தட்ட 70 வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது. தற்பொழுது
    ஒவ்வொரு நாடாக திவாலாகிக்கொண்டிருக்கிறது. அமேரிக்காவிலோ, கேளிக்கை
    தேவைகளைக்கூட Student Loanன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற மோசமான
    நிலை. மொத்த கடன் தொகை 1 ட்ரில்லியன் டாலரை தொட்டு விட்டது.

    (6)அடுத்து போட்டி. பரிணாம வளர்ச்சியை பொறுத்தவரை போட்டியே
    வெற்றியாளர்களை தீர்மானிக்கும். கைப்புள்ள போன்று ஊர்சுற்றும் நம்மவர்களில்
    சிலர் "குழந்தை பெற்றுக்கொள்ளும்" கலையில் மட்டும் அதிபுத்திசாலிகள்.
    அக்குழந்தைகளுக்கு "இலவச கல்வி", "இலவச மருத்துவம்", மேலும் சமூக
    பங்களிப்பை அளிப்பவர்களின் குழந்தைகளையும் அதே தரத்தில் நடத்தினால், அது
    எப்படி நியாயமான சமூகமாக இருக்க முடியும்?

    கடைசியாக இப்படி முடிக்கிறேன். அரசு கஜானாவிலிருந்து பணத்தை செலவழிக்க
    வேண்டுமென்றால், அதனால் சமூகத்திற்கு பயன் இருக்கவேண்டும். அனைவர்க்கும்
    கல்வி என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும், நாம் அனைவரும்
    "கருணைக்கடல்" என்று நமக்கு நாமே வெற்று உதார் விட்டுக் கொள்ளவும் மட்டுமே
    பயன்படும். சமூக நியாயங்களின்படி இது தவறு. அப்படியே சரி என்று வாதிட்டாலும்
    அதை செய்ய இந்தியாவில் துட்டு இல்லை. ஏற்கெனவே செய்தவர்கள் திவாலாகி
    வருகிறார்கள்.

    அதிபுத்திசாலிகளுக்கு மட்டும் இலவச கல்வி. மற்றவர்களுக்கு அந்தந்த பிராந்தியங்களில் உள்ள, கோயில்
    அறக்கட்டளைகள், சர்ச்சுகள், ஜாதி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கொடையாளிகள் போன்றோர் பார்த்துக்
    கொள்வார்கள். அரசாங்கம் முட்டுக்கட்டைகளை போடாமல் இருந்தாலே இவை நடந்துவிடும்.

    நீங்கள் இந்த "புதிய கல்வி சட்டத்தின் ஓட்டைகள்" பலவற்றை பேசுகிறீர்கள். நான் அடிப்படையில் இந்த சட்டமே ஒரு
    மாபெரும் ஓட்டை என்கிறேன்.

    R Balaji

    ReplyDelete
    Replies
    1. Mr.R.Balaji,

      What you've written is complete rubbish. You don't have to spread such non-sense just because you have access to internet. If you are really serious in engaging a debate on issues, pls take your time to study them thoroughly.

      Delete