Monday, December 31, 2012

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்பது பேரா. சுவாமிநாதனைத் தலைவராகக் கொண்டு நடந்துவருகிறது. அதன் ஐந்து அறங்காவலர்களில் நானும் ஒருவன். இந்த அறக்கட்டளை சார்பாக சில நிகழ்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அவை பற்றிய சுருக்கமான பதிவு இது.

பேராசிரியர் பாலுசாமி மாமல்லபுரத்தின்
மகிஷாசுரமர்தினி சிற்பத்தை விளக்குகிறார்.
(1) மாதாந்திரக் கூட்டம். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை, சென்னை, வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில், வினோபா அரங்கில் மாலை 5.30 மணி முதல் 7.30 வரை ஒரு உரை நிகழ்த்தப்படும். ஒவ்வொரு மாதமும் இது நடந்துவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இது நடந்துவருகிறது. இலக்கியம், சிற்பம், கோவில் கட்டுமானம், ஓவியம், நாட்டியம், இசை, நாட்டார் கலைகள், தனி நபர் அனுபவங்கள் என்று பலவற்றை நிபுணர்களும் ஆர்வலர்களும் பேசி வருகிறார்கள். இந்த நிகழ்வுகளின் ஒளிப்பதிவு இணையத்தில் யூட்யூப் வழியாக சேர்க்கப்படுகிறது.

மாமல்லபுரத்தின் புலிக்குகை முன் குழுமியுள்ள
ஒரு மாணவர் சுற்றுலாக் குழு எங்களை
வேடிக்கை பார்க்கும் காட்சி.
இந்நிகழ்வுகள் பற்றிய விவரங்களை நீங்கள் http://blog.tamilheritage.in/ என்ற இடத்தில் காணலாம்.

சுமார் 30-40 பேர் மட்டுமே இந்தக் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்பது சோகம். எங்களோடு சேர்ந்து வேலை செய்ய ஆர்வலர்கள் தேவை. இந்தக் கூட்டங்கள் பற்றிய தகவல்களை மக்களிட்ம கொண்டுசேர்க்க, கூட்டம் நடக்கும்போது ஒலி/ஒளிப்பதிவு செய்ய, பதிவுகளை செம்மையாக்கி, சிறிய கோப்புகளாக்கி, அவற்றை இணையத்தில் சேர்க்க என்று ஆர்வலர்கள் தேவை. விருப்பமும் நேரமும் இருப்போர் மட்டும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரவர்மனின் பகவதஜ்ஜுகம் நாடகத்தின்
ஒரு வடிவத்தை எங்கள் குழுவினர்
தெருக்கூத்து வடிவில் நிகழ்த்துகின்றனர்.
(2) Site Seminar: ஒவ்வோர் ஆண்டும் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடம் பற்றி ஓரிரு மாதங்கள் முன்னதாகவே படித்து, நிபுணர்களை அழைத்து அவர்கள் கொடுக்கும் உரைகளைக் கேட்டு, ஒரு கையேட்டைத் தயாரித்து, வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து, குறிப்பிட்ட அந்த இடத்தில் 4-6 நாட்கள் தங்கி, அங்கேயே நிபுணர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பல விஷயங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் ஒரு முயற்சி.

ஆவுடையார்கோவில் சிற்பங்களை
ஆச்சரியத்துடன் பார்க்கிறோம்.
2010-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் மூன்று நாட்கள் தங்கினோம். 2011-ல் அஜந்தா, எல்லோராவுக்கு 7 நாட்கள் பயணம். 2012-ல் புதுக்கோட்டையில் 4 நாட்கள். இப்போது 2013 ஜனவரியில் திருவரங்கத்தில் நான்கு நாட்கள். இதற்கான முன்னேற்பாடுகள் சென்ற மாதமே முடிந்துவிட்டன. சுமார் 30-35 பேர் செல்கிறோம்.

பேராசிரியர் வால்ட்டர் ஸ்பிங்குடன்
அஜந்தாவில் ஒரு எதிர்பாராத சந்திப்பு
திருவரங்கம் கோவில் என்பது வெறும் மற்றுமொரு கோவில் அல்ல. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடம். ஊரையும் மக்களையும் உள்ளடக்கிய ஒரே கோவில். நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டது. சிலப்பதிகாரம் முதல் பேசப்பட்டு வரும் இடம். சங்க இலக்கியங்களில் இந்தக் கோவிலும் அதன் திருவிழாவும் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஹரி ராவ் போன்ற சான்றோர்கள். ஆதித்த, பராந்தக சோழன் காலம் தொட்டு (ஒன்பதாம் நூற்றாண்டு) கல்வெட்டுகள் இங்கு உள்ளன. சோழ, பாண்டிய ஆட்சியில் எண்ணற்ற கொடைகள். முஸ்லிம் படையெடுப்பில் அழிக்கப்பட்டு, மீண்டும் விஜயநகர காலத்தில் உச்சத்தைத் தொட்ட கோவில். ‘கோயில் ஒழுகு’ என்ற ஆவணத்தைக் கொண்டது. கல்வெட்டுகள், செப்பேடுகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் முதன்மைக் கோவில். வேறு எந்தக் கோவிலும் இத்தனை கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற ஆவணங்கள் கிடையாது. அனைத்து ஆழ்வார்களும் (மதுரகவி தவிர்த்து) பாடிய ஒரே கோவில். ஸ்ரீ வைணவம் என்ற மதம் (மதப்பிரிவு) இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில்தான் பிறந்தது. ராமானுசர், தேசிகர், மணவாள மாமுனி என அனைத்து வைணவ முதன்மை ஆசாரியர்களும் இங்கிருந்துதான் மதத்தைப் பரப்பினர். கோவிலின் சிற்பங்கள், நாயக்கர் கால ஓவியங்கள் எனப் பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

குடுமியான்மலையில் பேரா. சுவாமிநாதனுடன் நாங்கள்.
திருவரங்கத்தின் பாரம்பரியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, கல்வெட்டாளர்கள், ஓவிய, சிற்ப வல்லுநர்கள், மத அறிஞர்கள் எனப் பலரது உதவியுடன் செல்கிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற ஒரு பயணத்தை ஜனவரி மாதம் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

டான்கிராம் செய்யும் சிறுவர்கள்.
(3) பேச்சுக் கச்சேரி: 2011-ல் தொடங்கினோம். ஐந்து அல்லது ஆறு நாட்கள், டிசம்பர் மாதம் நடக்கும் தொடர் பேருரைகள். 2011-ல், ஜெயமோகன், ஸ்தபதி உமாபதி ஆசார்யா, பேரா. பாலுசாமி, முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஸ்வர்ணமால்யா ஆகியோர் சங்க இலக்கியம், கோவில் கட்டுமானக் கலை, பல்லவச் சிற்பம், சோழர் கோவில், நாயக்கர் நாட்டியம் எனப் பல துறைகளைத் தொட்டுச் சென்றனர். இம்முறை 2012-ல், ஓவியம் என்ற ஒற்றை விஷயத்தைச் சுற்றி ஆறு நாட்கள் பேருரைகள் நிகழ்ந்தன.

கிரிகாமி கலைமூலம் தோரணம் செய்யும் சிறுவர்கள்
சென்னையில் இசைக் கச்சேரி நடக்கும் டிசம்பரில் இசையுடன் பிற துறைகளைப் பற்றிய அறிவைப் பலருக்கும் கொண்டுசெல்லும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் அமையவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

(4) கோடை முகாம்: சிறுவர்களுக்கான நிகழ்ச்சி இது. ஏப்ரல்/மே மாதங்களில் இரண்டு நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சி. கடந்த இரு வருடங்களாக நடத்திவருகிறோம். சுமார் 30-40 சிறுவர்கள் பங்கேற்கின்றனர். (கட்டணம் உண்டு.) 10-15 வயதுக்கான சிறுவர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி இது. (பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம், அவர்களுக்கு இலவசம்!)

***

நாகேசுவரராவ் பூங்காவில் மரங்கள் பற்றித்
தெரிந்துகொள்ளும் சிறுவர்களும் பெரியவர்களும்
இந்த ஆண்டு, கடந்த ஆறு தினங்கள் நடந்த ஓவியம் பற்றிய பேருரைகள் மிகப் பிரமாதமாக இருந்தன. ஓர் ஏற்பாட்டாளனாக இல்லாமல், பார்வையாளனாக நான் சமீபத்தில் மிகவும் ரசித்த உரைகள் இவை. இந்திய ஓவிய மரபு பற்றிய புரிதலை எனக்கு அளித்தது என்று மகிழ்ச்சியுடன் சொல்வேன்.

நீங்கள் சென்னையில் இருந்தால், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளில் கலந்துகொள்ள விரும்பினால் அல்லது நிதி அளிக்க விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். மின்னஞ்சல்: bseshadri@gmail.com தொலைப்பேசி: 98840-66566

1 comment:

  1. உங்களின் முயற்சி அளவிடற்கரியது!!. நம் நாட்டு கலைகளை அறிந்துகொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஓர் அரசாங்கம் செய்யவேண்டியவை!!..வாழ்த்துகள்!!.

    //நீங்கள் சென்னையில் இருந்தால்....//

    உதவிகள் புரிய விருப்பம் ஆனால் அடியேன் இருப்பது இராமநாதபுரத்தில், ஆயினும் இப்பகுதிக்கு தாங்கள் வந்தால் உதவிகள் செய்ய தயாராக உள்ளேன்.
    நன்றி.

    ReplyDelete