Friday, January 03, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

மனிதர்களுக்கு இரண்டு பெரும் பயங்கள் உள்ளன. முதலாவது பயம், இந்த பூமியில் மனிதர்களைவிட அறிவு மேம்பட்ட ஓர் உயிரினம் தோன்றினால் என்ன செய்வது என்பது. மனிதனுக்கு பலம் பொருந்திய பிற விலங்குகள்மீது அவ்வளவு பயம் கிடையாது. யானைகளையே பிச்சை எடுக்கச் செய்துவிடுவான். சிங்கம், புலி, விஷப்பாம்புகள், கொடூர வைரஸ்கள், பேக்டீரியம்கள் என்று பலவற்றையும் தன் மூளையின் திறத்தால் கையாளத் தெரிந்தவன் மனிதன். ஆனால் மனிதன் அளவுக்கு மூளை கொண்ட, அல்லது அதற்கு அருகே நெருங்கக்கூடிய மூளை கொண்ட ஓர் உயிரினத்தை மனிதன் விட்டுவைக்க மாட்டான். எப்படியாவது அந்த இனத்தையே நிர்மூலம் செய்துவிடத் துடிப்பான் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படி அவன் செய்யாவிட்டால் அந்தப் புதிய இனம், மனித இனத்தை அழித்துவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

இரண்டாவது பெரிய பயம், மனிதனுக்கு இணையான இப்படிப்பட்ட இனம் இந்தப் பூமியில் இல்லை என்றால், இந்தப் பெரிய பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் மற்றொரு கிரகத்தில் இருக்கலாமோ என்பது. அப்படி ஏதோ ஓரிடத்தில் அவை இருந்து, அவை பூமியை நோக்கி வந்து நம்மை எதிர்கொண்டால் என்ன ஆவது என்பது.

ஏலியன் அல்லது வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா, இல்லையா; இருந்தால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்ற பல கேள்விகள், பல கதைப் புத்தகங்களை, சினிமாக்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் இது ஒரு குடிசைத் தொழில்போல. டாப்லாய்ட் இதழ்கள், கடந்த வாரத்தில் எங்கெல்லாம் பறக்கும் தட்டுகள் வந்து இறங்கியுள்ளன, அவற்றிலிருந்து கீழே இறங்கிய ஏலியன்கள் என்னென்னவெல்லாம் சொன்னார்கள், செய்தார்கள் என்பது பற்றி பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுவார்கள்.

இப்படிப்பட்ட மூன்றாம்தர இதழ்கள் சொல்கின்றன என்பதனாலேயே ஏலியன்கள் என்பவை வெறும் புருடா ஆகிவிடமாட்டா. ஏலியன்கள் இருக்கின்றன என்று வாதாடுவோர் எவற்றையெல்லாம் சாட்சியங்களாகக் காண்பிக்கின்றனர்?

ஒரு சாட்சியமாக அவர்கள் முன்வைப்பது பயிர் வட்டங்களை (Crop Circles). உலகின் பல இடங்களில் இவை தோன்றினாலும், மிக அதிகமாக இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர், வில்ட்ஷயர் கவுண்டிகளில் ஏவ்பரி, ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற இடங்களுக்கு அருகே இந்த மர்ம வட்ட டிசைன்கள் கோதுமை, சோள, பார்லி வயல்களில் திடீர் திடீரெனத் தோன்றுகின்றன. இரவு நேரத்தில், ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாக, யாருமே பார்க்காதவகையில் இவை உருவாக்கப்படுகின்றன. இவற்றில் நிச்சயமாகப் பல, மனிதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுபவையே. ஆனால் அனைத்தையும் அப்படி ஆதாரபூர்வமாகச் சொல்லிவிட முடியாது. இதுகுறித்துப் பல அறிவியல் கோட்பாடுகள் சொல்லப்பட்டாலும், குறிப்பாகக் கையைச் சுட்டி, இப்படித்தான் பல நூறு மீட்டர் அகலத்தில் இந்தப் பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்ல முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம். மனோஜ் நைட் ஷ்யாமளனின் Signs என்ற படம் இந்தப் பயிர் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதே.

உயிர்மை வெளியீடான ராஜ் சிவாவின் ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்ற புத்தகம் பயிர் வட்டங்களில்தான் ஆரம்பிக்கிறது. கணிசமான பக்கங்கள் பயிர் வட்டங்களைப் புரிந்துகொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் பல இடங்களில் எங்கெல்லாம் பயிர் வட்டங்கள் தோன்றியுள்ளன, இவை குறித்து எம்மாதிரியான கதைகள் பரவியுள்ளன, இவற்றின் உண்மை என்னவாக இருக்கும் என்பதை எளிமையாக விளக்குகிறார் ராஜ் சிவா. அடுத்து, இவை ஏலியன்களால் பூமியின் மனிதர்களுக்கு ஏதேனும் தகவல் சொல்வதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி அதுகுறித்துப் பேசுகிறார் ராஜ் சிவா.

வேற்று கிரக உயிரினங்கள் உண்மையிலேயே இருந்தால் அவை பூமியை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது முக்கியமான கேள்வி. ஒளியின் வேகம், ஐன்ஷ்டைனின் சார்பியல் கொள்கை ஒரு விண்கலத்தின் வேகம் குறித்துப் போடும் கட்டுப்பாடுகள், ஒளியை நெருங்கும் வேகத்தில் செல்லும் ஒரு விண்கலத்தில் காலத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் போன்ற அடிப்படை அறிவியல் கருத்துகளை ராஜ் சிவா அறிமுகம் செய்கிறார்.

வேற்று கிரக உயிரினங்களைத் தேடும் SETI என்ற திட்டம் குறித்துப் பேசும் ராஜ் சிவா, கார்ல் சேகன் உருவாக்கிய சமிக்ஞைப் படம், அதில் இருக்கும் குறியீடுகளின் பொருள் ஆகியவற்றைக் கொஞ்சமாக விளக்குகிறார். இவற்றைத் திரும்பவும் பயிர் வட்டங்களுடன் தொடர்புபடுத்துகிறார். கார்ல் சேகனின் சமிக்ஞைக்கு பதிலாக இருப்பதுபோன்ற வேறு ஒரு சமிக்ஞை பயிர் வட்டமாக ஓரிடத்தில் தென்பட்டதைக் குறித்துப் பேசுகிறார்.

ஏலியன்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அடிப்படையில் இதற்கான பதில் என்னவாக இருக்கும்?

பூமியில் உயிர்கள் தோன்றியதே அகஸ்மாத்தான ஒரு நிகழ்வுதான். இதே நிகழ்தகவின்படி இன்னோர் இடத்திலும் இந்த விபத்து நடக்கலாம். அப்படிப்பட்ட உயிர் - தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ளும் டி.என்.ஏ போன்ற ஒரு கரிம வேதிப்பொருள் - அது கரி அல்லாத சிலிக்கான் சேர்மமாகக்கூட இருக்கலாம் - இன்னொரு கோளில் ஏன் உருவாகக்கூடாது? அப்படி உருவானால், அதுவும் டார்வின் கொள்கைப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து மூளை வளர்ச்சி அடைந்து, இன்று நம்மைவிட அதிக மூளைத்திறன் கொண்டதாக இருக்கலாம்.

பயிர் வட்டங்கள் குறித்து எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. ஏன் இவை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நெல் வயல்களிலோ கோதுமை வயல்களிலோ காணப்படுவதே இல்லை? ஏன் இந்த ஏலியன்கள் நம்மை வெறுக்கின்றன? ஏன் அவை பொதுவாக மேலை நாடுகளிலும் குறிப்பாக இங்கிலாந்திலும் அதிகமாக உருவாகின்றன? மாறாக இந்தியாவில் பிள்ளையார் பால் குடிப்பது, சித்தர் பறந்துசெல்வது போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மட்டுமே நடக்கின்றன? ஏன் ஏலியன்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே பேசுவதற்கே ஆசைப்படுகின்றன? ஏன் மன்மோகன் சிங்கையோ, நரேந்திர மோதியையோ, ஜெயலலிதாவையோ தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை?

அடுத்து ராஜ் சிவாவின் முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்று கேட்கிறார் அவர். உண்மைகள் என்று அவர் சொல்பவை, ஏலியன்கள் குறித்து அமெரிக்காவில் வந்த பல்வேறு செய்திகள். ஏலியன்களையும் பறக்கும் தட்டுகளையும் கண்ணால் கண்டதாகப் பல சாட்சியங்கள் சொல்ல, அந்தத் தகவல்கள் வெளியே தெரியாமல் இருக்க, அமெரிக்க அரசும் அதன் ராணுவமும் மிகுந்த பிரயத்தனத்தைச் செய்கின்றன என்று எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.

உண்மையில் ஏலியன்கள் பூமியின் மனிதர்களைத் தொடர்புகொள்கின்றன என்றால் அதை எந்த அரசுமே மறைக்கவேண்டிய தேவை இல்லை. உதாரணமாக, பயிர் வட்டங்கள் ஏலியன்களால் உருவாக்கப்பட்டன என்றே வைத்துக்கொள்வோம். அவற்றை இழுத்து மூட அரசுகள் முயற்சி செய்யவேயில்லை. மற்றபடி பறக்கும் தட்டுகள் குறித்தோ, ஏலியன்களின் உடல்கள் கிடைத்தது குறித்தோ நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் அவற்றை இப்போதைக்கு நம்பத் தயாராக இல்லை. மக்களிடையே ஏலியன்கள் குறித்த அச்சம் அதிகமாகி, அதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதித்துவிடும் என்று ஓர் அரசு பயந்தால்தான் இந்தத் தகவல்களையெல்லாம் மூடி மறைக்கப் பார்ப்பார்கள். அமெரிக்காவில் கான்ஸ்பிரசி தியரிகளுக்குப் பஞ்சமே இல்லை.

ஏலியன்கள் தொடர்பாக அறிவியல் அடிப்படையில் தமிழில் கிட்டத்தட்ட ஒன்றுமே எழுதப்படவில்லை என்று சொல்வேன். அருண் நரசிம்மன் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். (ஒரு புத்தகமும் எழுதினார்; அது வெளியே வராததற்கு நான்தான் காரணம். இனி வெளியாகும் என்று நம்புவோம்.) ராஜ் சிவாவின் புத்தகம் தமிழர்களின் ஆர்வத்தைக் கட்டாயம் தூண்டும்வண்ணம் இருக்கும். அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை கூகிளில் தேடி எடுத்து மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அது கட்டாயம் படிப்போரிடம் விதைக்கும். புத்தகம் எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.

வாங்கிப் படியுங்கள். சிறுவர்களைப் படிக்க ஊக்குவியுங்கள்.

15 comments:

 1. நல்ல கட்டுரை. 'போட்டிப் பதிபகம்' இன்ன கறபிதங்களை உடைக்கும் ஒரு நல்ல பரிந்துரை. வாழ்க!

  ReplyDelete
 2. SETI (search for extra terrestrial intelligence) எனும் தலைப்பில் தமிழில் ஒரு புத்தகம் உள்ளது சார். 15 வருடம் முன்பு எங்கள் கிராமத்து நூலகத்தில் படித்தேன். அந்நூலின் உள்ளடக்கம் இதனுடன் பொருந்துகிறது . அதன் பதிப்பகம் , ஆசிரியர் பெயர் நினைவில்லை . நிச்சயமாக இந்த நூலை வாங்கி படித்து பகிர்வின்.

  ReplyDelete
 3. இது போன்ற கான்ஸ்பிரசி தியரிகளை முன்வைத்து அவை உண்மை என்று காட்ட முயலும் நூல்களை நீங்கள் எப்படி ஆதரித்து பரிந்துரை செய்ய முடியும்.கார்ல் சாகன் போன்ற அறிவியலாளர்களின் நூற்கள் தமிழில் இல்லை.ஆனால் இந்த நூல் வரவேற்ப்பை பெற்று நன்றாக விற்றால் இது போன்ற நூல்கள் தமிழில் அதிகமாக வெளியாகி படிக்கப்படும்.அது வரவேற்க்கப்பட வேண்டியா ஒன்றா.

  ReplyDelete
 4. எனக்கு இந்த கட்டுரையில் கூறியுள்ளது போன்ற பயம் இல்லை. நான் பயப்படுவது பாழாய்போன
  அரசியல்வாதிகளுக்கும், பல நாக்குகளை கொண்ட மனிதர்களுக்கும் மட்டுமே.

  ReplyDelete
 5. vikkiravaandi ravichandran translated erich von daniken's book in tamil long back...-shri

  ReplyDelete
 6. ஏலியன்ஸ் அதாவது வேற்றுலகவாசிகள் எல்லாம் புருடா.இவை எல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன என்பதால் அவற்றுக்கு மதிப்பும் நம்பகத்தன்மையும் ஏற்பட்டன.ஏலியன்ஸ் ஏன் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரவில்லை.அப்போது பூமியையே கைப்பற்றியிருக்கலாமே. பறக்கும் தடடுகள் ஏன் அமெரிக்காவில் மட்டும் தெரிகின்றன..இவ்வித சமாச்சாரத்தைக் கிளப்ப அங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். நம்பவும் ஆள் இருக்கிறார்கள். செவ்வாயிலிருந்து பச்சை மனிதர் படையெடுப்பு என்பதை நம்பியவர்கள்தானே. இப்போதும் சரி செவ்வாயில் பச்சை மனிதன் இருப்பதாக ந்ம்பும் ஆசாமிகள் அமெரிக்காவில் பத்து பேராவது இருப்பார்கள்
  வேற்றுலகவாசிகள் --ஏலியன்ஸ் பற்றி யார் வேண்டுமானாலும் கதை எழுதட்டும். சினிமா படம் எடுக்கட்டும்.ஆனால் அது நிஜம் என்று நம்புவது தவறு
  சூரிய மண்டலத்தின் எல்லை குறைந்தது 1800 கோடி கிலோ மீட்டர். மனிதனால் இவ்வளவு தூரம் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு போக முடியாது. அந்த தூரம் வரை உயிரினமே கிடையாது, அந்த எல்லை வரை போக வேண்டுமானால் பலப்பல ஆண்டுகள் ஆகும்
  ஆனால் ஏலியன்ஸால் மட்டும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வர முடியுமாம். என்ன கதை இது?

  ReplyDelete
  Replies
  1. http://www.youtube.com/watch?v=KeJoVeKSsyA

   Delete
  2. உங்களைப்போன்றவர்கள் தான் விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் ”மனிதன் வானத்தில் பறப்பது சாத்தியாமா?.. வேடிக்கையான ஒன்றாக உள்ளது” என்று எள்ளி நகையாடினார்கள்.. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு வாயடங்கினர்... அதேபோன்று இன்னும் ஏராளமான விசயங்களில் நடந்துள்ளன.. இனிப்பு என்பது எவ்வளவு அருமையானது என்று நாம் குழந்தைகளுக்கு(சிறு வயது முதல் இனிப்பையே கொடுக்காமல்) வாயால் கூறும்போது அது விலங்காது.. அவர்கள் உண்ணும்போதே அதன் சுவை அறிவர்..

   Delete
 7. In America, the foreigners are called 'Aliens' (atleast by USCIS forms and media) as resident alien, illegal alien and so forth.

  ReplyDelete
 8. மிக சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ....சார் .! பூமிக்கு வெளியே ஒரு உயிரினம் இருந்திருந்தால் இன்னுமா அது அல்லது அவர்கள் வெளிப்படுத்தாமல் இருப்பார்கள் ..?

  ReplyDelete
 9. SETI secreats hide in american president secreat box

  ReplyDelete
 10. நமக்கு வேண்டுமானால் ஒளிவேகத்தில் பயணிப்பது சாத்தியமில்லாது இருக்கலாம். ஆனால் வேற்றுகிரகவாசிகள் stargate போன்ற portal வசதி ஏதேனும் ஒன்றை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம். அம்மால் அறிந்துகொள்ளமுடியாத ஒன்று என்பதால் அது இல்லை என்று கூறிவிட முடியாது. மனிதனுக்கு 3dimension முப்பரிபாண அறிதல் மட்டுமே சாத்தியம். அதுபோக 4,5D பரிமாணங்கள் உள்வாங்கி கொண்ட ஜீவராசிகளால் நம்மை காண இயலும், பயணிக்க இயலும் என்று நான் நம்புகிறேன்!

  ReplyDelete
 11. இதையெல்லாம் குழந்தைகல் படிப்பதால் ஒரு நன்மை உண்டு. அது என்னவென்றால் ஹாலிவுட் படங்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். அவ்வளவே. இப்பொழுதெல்லாம் ஹிஸ்டரி டி.வி. 18 சேனலில் இதைப் போன்ற அபத்தத் தியரிக்களை சுவாரசியம் குறையாமல் காட்டுகிறார்கள். ஏன்சியண்ட் ஏலியன்ஸ் என்றெல்லாம் கதைகள் சொல்வார்கள். டார்வினின் பரிணாமவியலை எதிர்ப்பது தான் இதன் கடைசி முடிவு.

  ReplyDelete
 12. வேதாத்திரி மகரிஷியின் "பிரபஞ்ச உயிரினத் தோற்றம்" என்ற நூலைப் படித்து, சிந்தித்து புரிந்து கொண்டால் இத்தகைய பயங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பது மிகத் தெளிவாய் விளங்கும்.

  ReplyDelete