Monday, June 02, 2014

இரண்டு கூட்டங்கள்

கடந்த மூன்று நாள்களில் இரண்டு கூட்டங்களுக்குப் போயிருந்தேன். முதலாவது, 30 மே 2014 அன்று ஷ்யாம் சேகர், அவருடைய ithought முதலீட்டு நிறுவனத்தின் சார்பாக நடத்தியது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் அஸெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திலிருந்து வெங்கடேஷ் சஞ்சீவி என்பவர் வந்திருந்தார். வங்கித் துறையில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிதியை (ICICI Prudential Banking & Financial Services Fund) நிர்வகிக்கும் .

ஆட்சி மாற்றம், வங்கித் துறையில் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அவர் எந்த அடிப்படையில் முதலீடு செய்கிறார் போன்றவை குறித்துப் பேசினார். இவர் பேசுவதற்குமுன் ஷ்யாம் சேகர் பேசியதும் முக்கியமானது. தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகள் நீண்டகால நோக்கில் பலன் தரக்கூடியவை. ஆனால் எவ்வளவுதான் எண்களோடு விளக்கினாலும் இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்பவர்களைத்தான் நாம் பார்க்கிறோம்; அல்லது செய்கூலி, சேதாரத்தோடு தங்க நகைகளை வாங்குபவர்களைத்தான் நாம் பார்க்கிறோம்.

எக்கச்சக்கமான உள்கட்டுமானத் திட்டங்கள் சென்ற அரசின் செயலற்ற தன்மையால் முடங்கிக்கிடந்தன. அவற்றுக்குப் பல்வேறு வங்கிகள் கடன் அளித்துள்ளன. இந்தத் திட்டங்கள் முன்னேறவில்லை என்றால் வங்கிகளின் NPA (பலனளிக்கா சொத்துகள்) அதிகமாகிவிடும். இது எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற ரீடெய்ல் வங்கிகளைத் தவிர பிற அனைத்து வங்கிகளையும் பாதிக்கும். ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில் பிற வங்கிகள் அனைத்தும் இம்மாதிரியான திட்டங்களுக்குக் கடன் கொடுத்துள்ளன.

மற்றொரு பக்கம், புதிய அரசு கட்டுமானத் திட்டங்களை ஊக்குவிக்கும் என்றால், அதன் காரணமாக ஒட்டுமொத்த நிதித் துறையும் வளர்ச்சி காணும். வங்கிகள் மட்டுமல்ல, வங்கியல்லா நிதி நிறுவனங்களும் (Non-banking Finance Corporations) வளர்ச்சி அடையும். வீட்டுக்கடன் நிறுவனங்கள், வண்டிக்கடன் நிறுவனங்கள் போன்றவை.

புதிய அரசின் கொள்கைகள் காரணமாக, வங்கித் துறையிலும் உள்கட்டுமானத் துறையிலும் நிச்சயமாகப் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது.

***


1 ஜூன் 2014 அன்று Associated Chamber of Capital Markets சார்பில் எம்.ஆர்.வெங்கடேஷ் பேசும் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன, இப்போது பெரும் ஆதரவுடன் வந்திருக்கும் அரசு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்துப் பேச்சு இருந்தது. வெங்கடேஷின் பேச்சு நான் எதிர்பார்த்ததைவிட அதிகப் பரப்பைத் தொட்டுச் சென்றது. உணவு உற்பத்தியில் தொடங்கி மனித வளக் குறியீட்டு எண், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சில புள்ளிவிவரங்களுடன் தொட்டுச் சென்ற வெங்கடேஷ், இத்துறைகளில் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும் என்ற தன் கருத்தை முன்வைத்தார். பிறகு வருமான வரி, கடன்பத்திரச் சந்தை, கம்மாடிட்டி சந்தையில் உணவுப்பொருள்கள் மீதான ஃபியூச்சர்ஸ் டிரேடிங் போன்றவை குறித்தும் புதிய நகரங்கள், ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துதல் (அதிவேக புல்லட் ரயில்கள் அல்ல, இப்போதிருக்கும் ரயில்களின் வேகத்தை இரட்டிப்பாக்குதல்), சரக்குப் பாதை, தூத்துக்குடி-ஹம்பண்டோட்டா துறைமுக இணைப்பு போன்ற சில உள்கட்டுமான விஷயங்கள் குறித்துப் பேசினார்.

எதில் மாற்றம் வேண்டும் என்பது குறித்து அவருடைய கருத்துகளில் எனக்கு ஒப்புதல் உண்டு. எப்படி அந்த மாற்றங்களைச் செய்யவேண்டும் என்பதில் பல இடங்களில் மாறுபடுகிறேன். ஆனால் வந்திருந்தோரின் கவனத்தை முழுமையாகக் கவர்ந்த மிக நல்ல பேச்சு.

5 comments:

  1. பத்ரி, இவற்றின் ஒளிக்கோப்பு வடிவம் இருந்தால் பகிரலாமே?

    ReplyDelete
  2. Hi Badri,
    Could you please share this speech videos
    Thanks
    Anand

    ReplyDelete
  3. முதல் கூட்டம் பொதுமக்களுக்காக அல்ல்; ஒரு மூடிய கூட்டம். எனவே ஒளிப்பதிவு செய்யப்படவில்லை. யாரும் ஒளிப்பதிவு செய்ததை நான் பார்க்கவில்லை. இரண்டாவது, ஒளிப்பதிவு ஆகியுள்ளது. அவர்கள் அதனை வலையேற்றம் செய்யும்போது சொல்கிறேன்.

    ReplyDelete
  4. // ஆனால் எவ்வளவுதான் எண்களோடு விளக்கினாலும் இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்பவர்களைத்தான் நாம் பார்க்கிறோம் //

    ஆமாம், உண்மை தான். வீட்டு மனை, வீடு போன்றவை நமது எதிர்காலத்துக்கும், குழந்தைகள் எதிர்காலத் தேவைக்கும் உதவும் என்ற நம்பிக்கை தருகின்றன. மறுபுறம், இந்த ஸ்டாக் மார்கெட், மியூச்சுவல் பண்ட் போன்ற சமாசாரங்களை சந்தேகமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. பூட்டான் லாட்டரி நினைவு தான் வருகிறது. உண்மை எதுவாக இருந்தாலும், இப்படித்தான் உணர்கிறேன்!

    ReplyDelete
  5. போதாது பத்ரி. அவர் என்ன பேசினார், உங்கள் உடன்பாடு என்ன விதத்தில், உடன்படாதது எந்த விததில்.. நிறைய தகவல்கள் தேவை. உணவுப் பொருள் கமோடிடி வர்த்தகத்தில் ப்யூடர்ஸ், ஆப்ஷன்ஸ் குறித்து விவாதம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete