Wednesday, July 02, 2014

ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...

ஜெயமோகனின் பதிவை முதலில் படித்துவிடுங்கள்.

சில ஆண்டுகளுக்குமுன் என் தந்தைக்கும் இப்படியாகத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. அவரும் கடுமையான நீரிழிவு நோய்க்காரர். உணவுக் கட்டுப்பாடும் கிடையாது, மருந்து எடுத்துக்கொள்வதும் கிடையாது என்று தான் போனபோக்கில் நடந்துகொள்பவர்.

கடுமையான மாரடைப்பு வந்து ஒரு நாள் முழுதும் அல்லல்பட்டிருக்கிறார். ஆனால் என் பெற்றோர்கள் இருவரும் வாயுக் கோளாறு, பித்தம் என்றெல்லாம் வாய்க்கு வந்ததைச் சொல்லியபடி நாளைக் கழித்திருக்கிறார்கள். உணவு போகவில்லை. உயிரும் போகவில்லை. ஓரிரு நாள்கள் இப்படியே திண்டாடியபின், ஏதோ போலி மருத்துவரைப் போய்ப் பார்த்து, அவர் காளான் மாத்திரை என்று ஏதோ ஃப்ராட் சமாசாரத்தைத் தலையில் கட்டி, அதையும் சில நாட்கள் தின்று, நிலைமை மோசமாகிக்கொண்டேதான் இருந்திருக்கிறது.

நான் கடுமையான பணியிடையே இருந்ததால் என் பெற்றோர்கள் இருக்கும் ஊருக்குப் போக முடியவில்லை. ஆனால் ஏதோ ஆபத்து என்றும் இதனை என் பெற்றோர்களின் அரைகுறை மருத்துவப் புரிதலையும் அஷ்டசூர்ணம் போன்றவற்றையும் கொண்டு தீர்க்க முடியாது என்றும் எனக்குத் தோன்றியது. உடனடியாக அவர்களை சென்னை வரச் சொன்னேன். ஆனால் அப்படி உடனேயெல்லாம் அவர்கள் வரவில்லை. அஷ்டமி, நவமி என்றெல்லாம் நாள் பார்த்து மெதுவாகத்தான் சென்னை வந்துசேர்ந்தனர். வந்த அன்றே ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தோம். அவர் சில டெஸ்டுகளை எழுதித் தந்தார். அதில் ஒன்று டிரெட்மில் டெஸ்ட்! என் தந்தை டிரெட்மில்லில் ஏறிய உடனேயே அவருடைய உயிர் போயிருக்கவேண்டும். ஆனால் ஆயுசு கெட்டி. நெஞ்சைப் பிடித்துக்கொண்டிருந்த அவரை டிரெட்மில்லிலிருந்து காப்பாற்றி மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்தேன்.

அப்போதுதான் எதிர்வீட்டிலேயே இருக்கும் டாக்டர் ஒரு இதயநோய் நிபுணர் என்று தெரியவந்தது. அவர் என் தந்தையைப் பார்த்த உடனேயே, அவருக்கு ஒரு மாதத்துக்குமுன் வந்தது ஹார்ட் அட்டாக்தான் என்று சொல்லிவிட்டார். உடனேயே அவர் பணியில் இருந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னார். என் தந்தை விடவில்லை. மீண்டும் நாள், நட்சத்திரம் பார்த்து ஒரு வாரம் கழித்துத்தான் சேர்ந்தார். ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்ததில் ஏகப்பட்ட இடங்களில் அடைப்பு.

எதிர்வீட்டு டாக்டரின் வழிகாட்டுதலில் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து, அனுபவம் வாய்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் 7 மணி நேரம் ஆபரேஷன் செய்து 7-8 இடங்களில் கிராஃப்டிங் செய்தபின் இன்றும் உயிரோடு இருக்கிறார் என் தந்தை. அதன்பின் வேறு சில உடல் பாகங்களில் பிரச்னைகள், அறுவை சிகிச்சை, மருந்துகள் என்றெல்லாம் ஆனாலும் இந்த மாரடைப்பை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் பித்தம், கபம், வாய்வு, அஷ்டசூரணம் என்று சொல்லிக்கொண்டு, அதையும் பெரும்பாலும் தானே வீட்டில் செய்துகொள்வது, கூடவே ஜாதகம், நாள், நட்சத்திரம் என்று முற்றுமுழுதான மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டிருப்போரை என்னதான் செய்ய முடியும்?

16 comments:

  1. பொதுமக்களின் அறியாமையை விட நர்சிங் ஹோம் டாக்டர்களின் பணப்பித்தும் பொறுப்பின்மையும் இன்னும் கொடியவை. இப்படிப்பட்ட அராஜகமான சூழலில் வாழ்பவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொண்டால் தான் உண்டு. ஜெயமோகன் அதைச் சொல்லித்தான் புலம்புகிறார்

    ReplyDelete
  2. அருமையான மருத்துவப் பதிவு. நண்பர்கள் இந்த பதிவை படிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது உண்மை தான். என் வீட்டில் உள்ள பெரியவர்களும், டாக்டர் மருந்து எழுதித்தந்தால், அதில் பாதியை மட்டுமே வாங்கிவர சொல்கிறார்கள். இதற்கு அழகான விளக்கம் வேறு - ‘அவன் கிடக்கறான். உடம்பு 2 நாள்ல சரியாச்சுன்னா பாக்கி மருந்தெல்லாம் தூர தான் கொட்டனும்..’

    என் மாமனாருக்கும் இதயத்தில் அடைப்பு இருக்கிறது. அவரும் டாக்டர் மாற்றி, மாற்றி (உங்களுக்கு ஆப்பரேஷன் தேவையில்லைன்னு சொல்ற ஒருத்தரை பார்க்கும் வரை) பார்த்தார்.ம்கூம்.கடைசியாக இப்போது வேறு எதோ ‘பதி’யில் செட்டில் ஆகியிருக்கிறார்

    இன்று வரை சைவ உணவு, நிதானமான வாழ்கை முறை, பிராணாயாமா, வாகிங் - இதை வைத்துக்கொண்டு ஓடும் வரை ஓடட்டும் என்றே பிடிவாதமாக இருக்கிறார்.

    ReplyDelete
  4. பத்ரி ஸார் வாதம் பித்தம் கபம் என்பதெல்லாம் ஆயுர்வேத சித்த மருத்துவ சொற்கள். வாயுத்தொல்லை என்பது பொதுவாக நம் பேச்சு வழக்கில் இருப்பது. இந்த பதிவில் ஆயுர்வேத சித்த மருத்துவத்தை படித்த மேட்டுக்குடி வர்க்க மனநிலையில் கிண்டல் அடித்திருக்கிறீர்கள். உங்கள் தந்தை போன்று ஒரு சிலரி பழமைவாத மனோபாவத்திற்கும் அந்த மருத்துவமுறைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உங்கள் தந்தையின் பிற்போக்கு ஒருவித வியாதி என்றால் உங்களின் முற்போக்கு இன்னொரு வகையான வியாதி..

    ReplyDelete
  5. உங்கள் தந்தையின் நிலைமை வேறு.துரதிர்ஷ்ட வசமாக இறந்து போன திரு.ஜெயமோகனின் நண்பரின் நிலைமை வேறு. அந்த நண்பர் முதலில் மருத்துவரிடம் தான் போயிருக்கிறார்.அவரின் தவறான வழிகாட்டுதலால் தான்,இறக்க நேரிட்டு இருக்கிறது.

    ReplyDelete
  6. திரு. பத்ரி அவர்களுக்கு,

    மருந்தில்லா மருத்துவ முறையில், உடலின் இயற்கையான தேவைகளை உணர்ந்து பசி, தூக்கம், தாகம், ஓய்வு போன்றவற்றை தேவைக்கேற்ப உடலிற்கு அளித்து வந்தோமானால் ரசாயன மருந்துகள் மற்றும் நவீன பரிசோதனைகளின் தேவையின்றி முழுமையான உடல்நலம் பெற முடியும். இது குறித்து அறிந்து கொள்ள இந்த லிங்குகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி.

    ராதாகிருஷ்ணன்.

    ============
    உடலின் மொழி - விவாதங்கள்

    http://maatruu.blogspot.in/search/label/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20-%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    http://maatruu.blogspot.in/search/label/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D

    நோய்களிலிருந்து விடுதலை:

    http://maatruu.blogspot.in/search/label/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88

    நோய்களின் உளவியல்:

    http://maatruu.blogspot.in/search/label/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

    மருந்துகளிலிருந்து விடுதலை:

    http://maatruu.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88

    ReplyDelete
    Replies
    1. ராதாகிருஷ்ணன், நீங்கள் குறிப்பிடும் கட்டுரைகள் சுத்த உளறல்களாக உள்ளன. மில்லி கிராமுக்கும் மைக்ரோ கிராமுக்கும் வித்தியாசம் தெரியாமல் மனிதனுக்கு தினமும் 120 மி.கி. குரோமியம் வேண்டும் என்கிறார்கள்! (உண்மையில் 120 மை.கி. கூடத் தேவையில்லை, 35 மை.கி. போதும் என்பது வேறு விஷயம்) எல்லா கட்டுரைகளிலும் 19ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்ட்டி வேக்ஸின் லீக் பற்றி மெய் மறந்து பேசுகிறார்கள். ஐயா, மேற்குலகில் உலகம் உருண்டை என்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்களின் ஃபிளாட் எர்த் சொஸைட்டி கூடத்தான் இருக்கிறது. மாநாடு, ஆய்வ்க்கட்டுரை, இதழ் வெளியீடு எல்லாம் செய்கிறார்கள். அந்த மாதிரிநான் இதுவும். தலைவலிக்கு 100 காணங்கள் இருக்க முடியும் என்று அலோபதிக்குத் தெரியாமல் (!) காரணத்தைத் 'தலையிலேயே தேடிக்கொண்டு' இருக்கிறதாம். சுத்த பேத்தல்.

      சரவணன்

      Delete
    2. சரவணன் நீங்கள் சொல்லியிருந்தீர்கள்:
      எல்லா கட்டுரைகளிலும் 19ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்ட்டி வேக்ஸின் லீக் பற்றி மெய் மறந்து பேசுகிறார்கள். ஐயா, மேற்குலகில் உலகம் உருண்டை என்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்களின் ஃபிளாட் எர்த் சொஸைட்டி கூடத்தான் இருக்கிறது. மாநாடு, ஆய்வ்க்கட்டுரை, இதழ் வெளியீடு எல்லாம் செய்கிறார்கள். அந்த மாதிரிநான் இதுவும்.

      என்னுடைய பதில்:
      பழமையான இரு விஷயங்களை, ஒன்றன் பின் ஒன்றாக சொல்லி, அவற்றில் ஓன்று தவறு என்பதால் (ஃபிளாட் எர்த் சொஸைட்டி), இன்னொன்றும் தவறாகவே (ஆண்ட்டி வேக்ஸின் லீக்) இருக்கும் என்பது எனக்கு சரியாகப் படவில்லை. இயற்கையால் படைக்கப்படாத எதுவும், மனித உடலுக்குள் செல்லும் போது மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பது என்னுடைய கருத்து.

      Delete
    3. சரவணன் நீங்கள் சொல்லியிருந்தீர்கள்:
      மில்லி கிராமுக்கும் மைக்ரோ கிராமுக்கும் வித்தியாசம் தெரியாமல் மனிதனுக்கு தினமும் 120 மி.கி. குரோமியம் வேண்டும் என்கிறார்கள்! (உண்மையில் 120 மை.கி. கூடத் தேவையில்லை, 35 மை.கி. போதும் என்பது வேறு விஷயம்).

      என்னுடைய பதில்:
      நீங்கள் சொல்லியிருப்பது சரி.

      சரவணன் நீங்கள் சொல்லியிருந்தீர்கள்:
      தலைவலிக்கு 100 காணங்கள் இருக்க முடியும் என்று அலோபதிக்குத் தெரியாமல் (!) காரணத்தைத் 'தலையிலேயே தேடிக்கொண்டு' இருக்கிறதாம். சுத்த பேத்தல்.

      என்னுடைய பதில்:
      அலோபதிக்கு தெரியாத விஷயங்கள் இருக்கின்றன என்று சொன்னால் அதனை பேத்தல் என்று சொல்வது சரியில்லை. நம்முடைய உடல் பற்றிய அனைத்தையும், அலோபதி தெரிந்து கொண்டு விட்டதா?

      Delete
  7. உடலியல் நிகழ்வுகளின், நோய்களுக்குரிய தோற்றுவாய்களின் காரண-விளைவுத் தொடர்பை கறாரான புறநிலை ஆய்வுமுறையின் மூலம் கண்டறிந்து, அதற்கேற்ற தீர்வுகளை முன்வைப்பதே ஆங்கில மருத்துவம் எனப்படும் நவீன மருத்துவத்தின் தனிச்சிறப்பு. மெய்நிலையைச் சரியாகப் பிரதிபலிக்காத, அகநிலையான கற்பிதங்களின்மூலம் அரைகுறையான காரண-விளைவுத் தொடர்பை உருவாக்கிக்கொள்வது பாரம்பரிய மருத்துவத்தின் உள்ளடக்கம். ஏறத்தாழ முழுக்கவே அறிவற்ற, போலியான காரண-விளைவுத் தொடர்பைக் கற்பித்து, அதற்குப் போலியான தீர்வையும் அருள்வது திடீர் அதிரடி உடனடி முறைகளாகும்.

    நவீன மருத்துவம்தான் நம்பகமானது என்பது கண்கூடு. ஆனால், அதைப் பயின்ற நவீன மருத்துவர் ஒருவரின் தனிப்பட்ட அணுகுமுறையானது - அதாவது அவரது சேவை மனப்பான்மையின் அளவும் தரமும், நோயைக் கண்டறிவதில் அவருக்கிருக்கிற முனைப்பும் ஆர்வமும் திறமும் வேகமும், மருத்துவம் குறித்த அவரது சமூகப்பார்வையும் புரிதலும் - அவரது தனியாளுமையும் சமூகாளுமையும் சேர்ந்து தீர்மானிக்கிற சமூகவியல் விஷயமாகும்.

    எங்களூரிலுள்ள ஓர் எம்டி மருத்துவர், பதினான்காண்டுகளுக்கு முன் என் தமக்கையின் வயிற்றில் உருவாகியிருந்த மூன்று மாதக் கருவை “கேஸ்ட்ரிக் ட்ரபிள்” என்று கண்டறிந்து மருந்தளித்தார்.! அந்த கேஸ்ட்ரிக் ட்ரபிள் இந்தாண்டு பத்தாம் வகுப்புக்குச் சென்றுவிட்டது..! :) அதே மருத்துவர், எட்டாண்டுகளுக்குமுன் என் தாய்க்கு வந்த லேசான மாரடைப்புக்கும் “கேஸ்ட்ரிக் ட்ரபிள், ஒன்னும் பயப்படவேணாம்” என்று கூறி எம்மை அநியாயத்துக்கு ஒரு வாரம் வீட்டில் இருத்தச்செய்தார். நெஞ்சுவலி அதிகமாகி பின்பு முகப்பேர் டிரிபிள் எம்மில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யநேர்ந்தது வேறுகதை. அதே மருத்துவர் அதே “கேஸ்ட்ரிக் ட்ரபிள்” மந்திரத்தைப் பிரயோகித்து வேறுசிலரையும் சிவனடியிலும் கர்த்தருக்குள்ளும் நித்திரைகொள்ள வழியனுப்பிவைத்தார் என்று கேள்வியுற்றேன். அவரது தனிப்பட்ட இந்நடத்தை நவீன மருத்துவத்தின் எல்லைக்குள் அடங்குகிற பிரச்சினையன்று..! மாறாக, அது அவரது தனியாளுமைக் கோளாறு. கற்றல் கோளாறு. என் தாயின் வலதுகண்ணைப் பரிசோதித்த கண்மருத்துவர் ஒருவர், “அது பூட்ட கேஸ், எதுக்கு கண்ணாடியெல்லாம்” என்று அலட்சியமாகக் குண்டைப் போட்டார். புரையிருந்தது. காஞ்சி அகர்வாலில் அறுவைசெய்தபின் அம்மா நன்றாகவே பார்க்கிறார். கும்முகிற கூட்டத்தில் ஒரு நோயாளிக்கு அதிகபட்சம் ஐந்து நிமிடங்களைக் கூட ஒதுக்கமுடியாமல், கொஞ்சமும் தொழில்தர்மமின்றி ஒரு தீர்ப்பை அம்மருத்துவர் சிடுசிடுப்பாய் எறிந்தார். ஹாஹா.. நவீன மருத்துவத்தின் விளைவா அது? இல்லை. அதீத லாபக் கண்ணோட்டத்தின் விளைவு. பணங்காய்ச்சி மரங்களாக மருத்துவமும் கல்வியும் உருமாறியிருப்பதன் விளைவு. அது ஒரு சமூகவியல் பிரச்சினை. சமூகவியலாய் எதிர்கொள்ள்ப்படவேண்டிய பிரச்சினை. அதற்காக, நவீன மருத்துவத்தின் அறிவியல் உள்ளடக்கத்தின்மீது நம்பிக்கையிழக்கவேண்டியதில்லை. இரண்டும் வெவ்வேறு தளங்கள்.

    ReplyDelete
  8. "AnonymousFri Jul 04, 10:16:00 AM GMT+5:30" - இவர் கொஞ்சம் நியாயமாக பதில் தருகிரார்... (இந்த பதிவிர்க்கும், ஜெயமோகன் தொடர்பான பதிவிர்க்கும் சம்பந்தமான பதில்)

    வேறு சிலரிடம் கேட்க வேண்டும், இல்ல... நீங்க serious-ஆ தான் இந்த பதில் போடரீங்களா??

    உங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா அந்த அவஸ்த புரியுமோ என்னவோ. பொழப்புக்கு ஒரு ஊருல குப்ப கொட்டிக்கிட்டு இப்படி பாசமான அப்பா, நம்மை நன்றாக வளர்த்த அப்பா, அவர் ஊரில் அழுசாட்டியம் பன்னும் அப்பாவை என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. Raghav நீங்கள் சொல்லியிருந்தீர்கள்:
      வேறு சிலரிடம் கேட்க வேண்டும், இல்ல... நீங்க serious-ஆ தான் இந்த பதில் போடரீங்களா??
      உங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா அந்த அவஸ்த புரியுமோ என்னவோ.

      என்னுடைய பதில்:
      என்னுடைய அனுபவத்தில் இல்லாத எந்த விஷயத்தையும் நான் அடுத்தவர்களுக்கு சொல்வதில்லை.

      Delete
  9. பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் நிச்சயம் ஒத்துக் கொள்கிறேன்.
    ஆனால் உங்கள் கட்டுரையின் பொத்தாம் பொதுவான மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய கிண்டல் ஒத்துக் கொள்ள இயலாதது. ஆங்கில(அலோபதி) மருத்துவ முறை திட்டமிட்டு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளைக் கிட்டத்தட்ட சிதைத்து விட்டது. ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவ முறையில் தீர்வற்ற சில நோய்களுக்கு இந்திய பாரம்பரிய முறைகளில் தீர்வு இருப்பதை நான் நேரடியாவும் நெருங்கிய நண்பர்கள் குடும்ப நிகழ்வு மூலமும் உணர்ந்திருக்கிறேன்.

    இது போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அமையாமல் போன 'நிறுவனப் படுத்தலில்' தான் குறை இருக்கிறதே தவிர அந்த மருத்துவ முறைகளில் அல்ல.
    அலோபதியில் 5000 ரூபாய் தேவைப் படும் சிகிச்சைக்கு 500 ரூபாய்க்குள் சித்த மருத்துத்தில் தீர்வு இருக்கிறது. நமது வாழ்வியல் அறிவுக் கருவூலத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத் தேவை நமது இன்றைய சமூகத்திற்கு இருக்கிறது.

    எனது வகுப்புத் தோழன் மற்றும் மீடியாவில் பணியாற்றும் கௌதமின் கட்டுரையையும், மூலிகைமணி கண்ணப்பரின் நம்நாட்டு மூலிகைகள் கட்டுரைகளையும் நேரம் உண்டாக்கிக் கொண்டு அவசியம் படியுங்கள்.

    தயவு செய்து உங்களைப் போன்ற 'படித்தவர்கள் தோற்றம் கொண்டவர்கள்' கூட பொத்தாம் பொதுவாக அடித்து விடுவதை செய்யாதீர்கள்.

    இந்தியாவைத் தவிர பல ஆசிய நாடுகளில் தத்தம் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பேணி வளர்க்கிறார்கள்;அவற்றால் பயன் பெறுகிறார்கள்.

    tcm மருத்துவ முறைகளைப் பற்றி இணையத்தில் தேடுங்கள்,சிறிது தெளிவும் சீன, சீனம் சார்ந்த நாடுகள் அவற்றை எப்படிப் பேணுகின்றன என்பதும் தெரியும்.

    ReplyDelete
  10. திரு. பத்ரி அவர்களுக்கு,
    திருவள்ளுவரின் இந்த ஒரு திருக்குறளை நடைமுறைப்படுத்தினால், நமது வாழ்க்கையில் மருத்துவம் செய்ய வேண்டிய அவசியமே வராது என நினைக்கிறேன்.

    "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்."

    இதன் பொருள் :
    ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

    இது என்னுடைய சொந்த அனுபவம்.

    ReplyDelete
  11. புற்று நோயை குனமாக்குகிறேன் என்று சொல்லி பாரம்பரிய (?)மருத்துவர்கள் காட்டு சீதா பழம்,மலேசிய ரங்குட்டன்பழம்,தாய்லாந்து புளியம்பழ் ம் என்று எத்தனை கதைவிட்டு காசு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?

    ReplyDelete