Friday, September 26, 2014

மேக் இன் இந்தியா - விவாதம்

நேற்று புதிய தலைமுறை 'நேர்படப் பேசு' விவாதத்தில் கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோதியின் 'மேக் இன் இந்தியா' குறித்துப் பேசினேன். ஜென்ராம் தொகுக்க, பத்திரிகையாளர் ஞாநி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், தொழில் ஆலோசகர் வெங்கட்ராமன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முழு விவாதம் இணையத்தில் வீடியோவாகக் கிடைக்கும். (சுட்டியைப் பிறகு சேர்க்கிறேன்.)

என் கருத்துகள்:

1. மேக் இன் இந்தியா என்பது அவசியமா? 

அவசியமே. இப்போதைய இந்திய சூழலில் நிறைய வேலைகளை உருவாக்கவேண்டிய தேவை இருக்கிறது. நிறைய வேலைகள், பெருமுதலீட்டினால் மட்டுமே வரும். உற்பத்தித் துறையில் நாம் வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை. பெருமுதலீட்டினால்தான் சிறிய, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களும் வளர்ச்சி அடையும். 

மேக் இன் இந்தியாவில் முதலீடு, தொழில்நுட்பம் இரண்டும் வெளியிலிருந்து வரும். சந்தை இந்தியாவிலும் இருக்கலாம், வெளிநாட்டிலும் இருக்கலாம். தொழிலாளர்கள் இந்தியர்கள். எனவே வேலை வாய்ப்பும் அது சார்ந்த வளர்ச்சியும் வரி வருமானமும் இந்தியாவை உயர்த்தும். 

2. இதனால் இந்தியாவின் வளங்கள் சுரண்டப்படுமா?

இயற்கை வளங்களைப் பயன்படுத்தாமல் எவ்வித உற்பத்தியும் சாத்தியமே அல்ல. இரும்பு, அலுமினியம், கரி, நீர் என்று பலவற்றையும் பயன்படுத்தித்தான் நாம் நுகர்பொருட்களை உருவாக்குகிறோம். இயற்கை மாசடைவதை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் மனிதர்கள் இந்தப் பூமியில் உருவான காலகட்டத்தில் பூமி எப்படி இருந்த்தோ அப்படிப்பட்ட நிலைக்கு நம்மால் ஒருபோதும் போக முடியாது.

நம் வாழ்க்கைக்காக நாம் நம்மைச் சுற்றியுள்ள வளங்களைச் சுரண்டிக்கொண்டுதான் இருப்போம். மனித மூளையும் விஞ்ஞானமும், இதனை எவ்வளவு குறைவாகச் சுரண்ட முடியுமோ அவ்வாறு செய்ய உதவினால் நலம்.

3. சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமா?

கட்டாயமாக. இத்தனை கோடி மக்களை நாம் கொண்டிருப்பதே சுற்றுச் சூழலைப் பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இம்மக்கள் அனைவரும் வயிறார உண்டு, கல்வி கற்று, அதிகம் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளும் வரை அவர்கள் காப்பாற்றப்படவேண்டுமல்லவா? அதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியை நாம் இன்னும் அடையவில்லை. அந்நிலையை நாம் எட்டுவதற்கு தொழில் வளர்ச்சி மிக மிக அவசியம்.

4. விளை நிலங்கள் பாதிக்கப்படுமா?

நிச்சயமாக. முதலில் விளை நிலங்கள் என்பவையே காடுகளை அழித்துவிட்டு உருவானவை. இன்று மிக அதிகமாக நீரைப் பயன்படுத்தும் ஒரே தொழில் விவசாயம். ஆனால் அதன் தேவை நமக்குப் புரிகிறது. உணவு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. ஆனால் இன்று உணவு மட்டும் போதாது. மின்சாரம் முதல் கல்வி வரை நமக்குப் பல அடிப்படைத் தேவைகள் உள்ளன. விளைநிலம் என்பது அப்படி ஒன்றும் புனிதமானதல்ல, அதை நாம் தொடவே கூடாது என்பதற்கு. 

நம்மிடம் உள்ள நிலங்களின் உற்பத்தி அளவை அதிகரிக்கும்போது, நமக்கு இத்தனை ஏக்கர் விளைநிலங்கள் தேவையல்ல என்று புரியவரும். தேவை ஏற்பட்டால், மேலும் கொஞ்சம் காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்க வேண்டியிருக்கும். இப்படித்தான் மனித இனம் வளர்ந்துவந்துள்ளது. உலகின் பல நாடுகளில் மக்கள்தொகை குறைந்துவருவதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலை இந்தியாவில் ஏற்படும்போது நமக்கும் நிலம் மற்றும் நீரின் தேவை குறையும். 

புதிய தொழிற்சாலைகள் கட்டப்படவேண்டும் என்றால் பயனில்லா நிலங்களை முதலிலும் தேவைப்பட்டால் விளை நிலங்களையும் பயன்படுத்துவதில் தவறே இல்லை. உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் போதும்.

5. தொழிலாளர் நலன்களில் பாதிப்பு ஏற்படுமா?

இன்று வேலையே கிடைக்காமல் ஏகப்பட்ட இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். அவர்களுடைய திறன் போதவில்லை. நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகள் இல்லை. 

ஆரம்பகட்டத்தில் குறைந்த சம்பளம் தரக்கூடிய அடிமட்ட வேலைகளைத்தான் நம்மால் உருவாக்க முடியும். அதிக சம்பளம் தரக்கூடிய வேலைகள் உருவானாலும் அவ்வேலைகளைச் செய்யக்கூடிய திறன்களைப் பெற்றவர்களாக நம் இளைஞர்கள் ஆகவேண்டும்.

ஒப்பந்த வேலைகள் என்பவை அவசியமாக இருக்கவேண்டியவை. ஒரு தொழிற்சாலை திடீரென உற்பத்தி விரிவாக்கத்திலும் குறைத்தலிலும் ஈடுபடவேண்டியிருக்கும். அப்போது தொகுப்பூதிய முறையில் வேலை செய்வோர் தேவைப்படுவார்கள்.

இன்று எல்லோரும் பெருமையுடன் பேசும் விவசாயத்தில் இருப்போர் தினக்கூலிகள் மட்டுமே. அதுவும் எத்தனை நாட்கள் வேலை இருக்கும் என்று தெரியாது. தினசரி நூறு ரூபாய் கூலிகூடக் கிடைக்காத நிலை. அத்துடன் ஒப்பிடும்போது தொழில்துறையில் கிடைக்கும் எந்த வேலையுமே உயர்வானதுதான்.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படவேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். பணவீக்கத்துக்கு நிகராக அவ்வப்போது இந்த ஏற்றம் செய்யப்படவேண்டும். பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி போன்றவை, மருத்துவக் காப்பீடு ஆகியவையும் தேவை. இவற்றைக் கட்டாயமாக்க, அரசு முயற்சி எடுக்கவேண்டும்.

6. மன்மோகன் சிங் எடுத்த முயற்சிகளுக்கும் இப்போது மோதி எடுக்கும் முயற்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?

முதல் வித்தியாசம் intent. இதனைச் செயல்படுத்தியே தீரவேண்டும், இதன்மூலம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிற வெறி மோதியிடம் தெரிகிறது. அதற்கான திட்டம் தீட்டுதலில் ஒரு தெளிவு தெரிகிறது. ஆறு மாதம், ஒரு வருடம் கால அவகாசம் கொடுத்துப் பார்த்தால்தான் மாற்றம் வந்திருக்கிறதா இல்லையா என்பது தெரியும். 

7. உள்ளூர் தொழிலதிபர்களுக்கு இதனால் ஏதேனும் நஷ்டமா?

உள்ளூர் பெரும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்பரீதியில் அப்டேட் செய்துகொண்டால், அவர்களும் கவலைப்படவேண்டிய தேவையில்லை. நிறைய வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன. மாற்றத்துக்கு அவர்கள் தயாராகவேண்டும்.

8. கல்வியில் மாற்றம் வராதவரை பயனுண்டா?

உண்மையே. கல்வியில் பெருமளவு மாற்றம் வரத்தான் வேண்டும். இப்போதுள்ள கல்வி முறை மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆனால் கல்வியில் மாற்றம் செய்துவிட்டு, பிறகு மற்ற மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் என்று சும்மா இருக்க முடியாதே? மாற்றம் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலையை ஆரம்பித்துவிடவேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. மத்திய அரசின் ஈடுபாடு அடிப்படைக் கல்வியில் குறைவுதான். ஒரு சில மாநிலங்களாவது கல்வி முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

3 comments:

  1. 3. சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமா?

    கட்டாயமாக.
    4. விளை நிலங்கள் பாதிக்கப்படுமா?

    நிச்சயமாக.

    இந்த இரு அச்சத்திற்கும் நீங்கள் அளித்துள்ள மாற்றுப்பார்வை வரவேற்கத்தக்கதே.
    ஆனால் இந்தியாவில் கொள்கை தயாரிப்போர் யாரும், இது போல் ஒரு ' பல்கோணத் தாக்கம் குறித்த அலசலில்' ஈடுபடுவதில்லை.
    மோடி 'மேக் இன் இந்தியா' என்று சொல்லிவிட்டால் அனைவரும் 'மேக் இன் இந்திய' 'மேக் இன் இந்தியா' தான். 'மேக் இன் இந்தியாவிற்காக'
    கையகப்ப்டுத்த போகும் விளை நிலங்களின் விளைச்சலுக்கு ஒரு நிரந்தர மாற்று ஏற்பாடு செய்யும் விழிப்புணர்வு இங்கே யாருக்கும் இல்லை.
    இப்படி யே கழுதை தேய்ந்து கட்டெறும்பான பின்பு தான் தெரியும், நம் உணவை நாம் 'மேக் இன் இந்தியா' வாகவே செய்யும் வளங்களை திட்டமில்லாமல் இழந்துவிட்டோம் என்று.
    முதலில், நீங்களே கூறியது போல் விழிப்புணர்வான நீடு நிலைத்திறன் கொண்ட ஒரு உணவுச்சூழலை இந்தியாவில் மேக் செய்து விட்டு, வேறு என்ன வேண்டுமானாலும் மேக் இன் இந்தியா செய்து கொள்ளலாம்.

    ReplyDelete