Sunday, September 28, 2014

குற்றமும் தண்டனையும்

ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நான்காண்டு சிறை + 100 கோடி ரூபாய் அபராதம் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் சில கேள்விகள் எழுகின்றன.

அவர் ஒருவர் மட்டும்தானா ஊழல் குற்றம் புரிந்தவர்? இல்லை. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளவர்கள் என்று பார்த்தால் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அரசியல் இடைத்தரகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்தைச் சொல்லலாம். இவர்கள் அரசு அல்லது அரசுசார் துறையில் இருந்துகொண்டு அல்லது அரசில் இருப்போருடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு நிதியை அபகரித்து அல்லது பொதுமக்களிடமிருந்து பிடுங்கி அநியாயமாகப் பணம் சேர்த்தவர்கள். இப்படிச் சேர்த்த பணத்துக்கு நியாயமாக வரி கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி, இவ்வாறு பணம் சேர்த்ததே சட்டத்துக்குப் புறம்பானது. இவர்கள்மீது புகார் இருந்தால், விசாரித்து, சாட்சியங்களைச் சேர்த்து, வழக்கு தொடர்ந்து, ஜெயலலிதாவுக்குத் தந்ததுபோல் தண்டனை பெற்றுத் தரலாம்.

ஆனால் பொதுவாக வெகு சிலர் தவிர மீதி பேருக்கு இம்மாதிரி வழக்கும் நடைபெறுவதில்லை, தண்டனையும் கிடைப்பதில்லை. அம்மாவுக்கு இப்போது கிடைத்துவரும் அனுதாபம் இதன் காரணமாகவே. எவ்வளவோ பொறுக்கிகள் தண்டனை பெறாமல் வெளியே சுதந்தரமாக உலாவ, இந்தம்மா மட்டும் பாவம், இப்படி ஆகிவிட்டதே என்ற பாமரத்தனமான அனுதாபம்.

ஏன் இந்த அம்மா மட்டும் மாட்டிக்கொண்டார்கள்? ஏனென்றால், இவர்கள் ஆடிய ஆட்டம் அப்படி. விட்டுவைத்த சாட்சியங்கள் அப்படி. கூடவே அரசியல் காரணத்தால் இவர்மீது உருப்படியான ஒரு வழக்கையாவது போட்டாகவேண்டும் என்று திமுக அரசு நடந்துகொண்டதும்கூட. அப்படிச் செய்யும்போது நல்லம்மா நாயுடு என்ற திறமையான ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணைக்குப் பொறுப்பாக நியமித்ததும் ஒரு காரணம். இறுதிக் காரணம் ஜான் மைக்கேல் டிகுன்ஹா என்ற சிறப்பு நீதிபதி. இப்படிப் பல காரணங்கள் ஒன்றுசேர்ந்துதான் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. இதில் ஒன்று சறுக்கியிருந்தாலும் ஜெயலலிதா தப்பியிருப்பார். இதைப்போல் 11 வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லையா?

முந்தைய ஆட்சியிலிருந்து தற்போதைய ஆட்சியில் ஜெயலலிதா மிகவும் திருந்திவிட்டார் என்று சொல்பவர்கள் அவருடைய ஒரு முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நான் பதிப்பாளனாக இருக்கிறேன். தற்போதைய அஇஅதிமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் உச்சபட்ச ஊழல் நடந்துவருகிறது. முன்னதாகவே லஞ்சம் கொடுத்தால்தான் ஆர்டரே கிடைக்கும். கொடுக்காதவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம் அல்லது கொஞ்சமாகக் கொடுக்கப்படலாம். இதற்கு முந்தைய திமுக ஆட்சியிலும் இதில் ஊழல் இருந்தது. ஆனால் இம்முறை நடக்கும் ஊழல் மிக மோசமானது என்று பதிப்பாளர்களிடம் பேசிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.

அதேபோல சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க மாநில அரசிடம் நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற நாற்பது லட்ச ரூபாய், சமச்சீர் பள்ளி தொடங்கி எட்டாம் வகுப்பு வரை அனுமதி பெற ஆறு லட்ச ரூபாய், அதன்பின் ஒன்பது/பத்து வகுப்புகளுக்கான அனுமதிக்கும் இன்னொரு ஐந்து லட்சம், 11/12 வகுப்புகளுக்கு மேலும் ஐந்து லட்சம் என்று ரேட் கார்ட் போட்டு ஊழல் நடக்கிறது இந்த ஆட்சியில்தான்.

இது நான் பலரிடம் பேசித் தெரிந்துகொண்ட தகவல். எனக்குச் சம்பந்தமில்லாத பல துறைகள் குறித்து எனக்கு விவரங்கள் அதிகம் தெரியாது. இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடந்துகொண்டிருக்கின்றன? அரசு கேபிள் டிவி தொடர்பாக சிறு பிரசுரமே வெளியாகும் அளவுக்குப் பல கோடிகளில் ஊழல் நடந்துள்ளது.

சாதாரணப் பொதுமக்கள் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் போன்றவற்றை மட்டும்தான் பார்க்கிறார்கள். முந்தைய ஆட்சியில் ஊழலை இந்த ஆட்சியின் ஊழலோடு வரிக்கு வரி ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு நம்மிடம் தரவுகள் இல்லை. இந்த ஊழல்கள் நடைபெறாத, நியாயமான ஓர் அரசு சாத்தியமே இல்லை என்ற அளவுக்கு நாம் பழகிப் போய்விட்டோம்.

ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் ஒரு தாளைத் தள்ளப் பணம் கேட்பார்கள், கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று அடித்துப் பேசுகிறார்கள் என் உறவினர்கள். இல்லை, கொடுக்காமலேயே நடந்திருக்கிறது, நடக்க வைக்க முடியும் என்று நான் சில உதாரணங்களைச் சொன்னாலும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. பேசாமல் கொடுத்துவிட்டு, சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம் என்பதுதான் இவர்கள் கருத்தாக இருக்கிறது.

இந்த மாபெரும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு சிறு சறுக்கலால், அதுவும் சுமார் இருபதாண்டுகளுக்குமுன் செய்துள்ள சறுக்கலால் மாட்டிக்கொண்டவருக்கு அனுதாபம் தரத் தேவையே இல்லை. மாட்டாதவர்களையெல்லாம் எப்படி மாட்டவைப்பது, எப்படி ஊழல் புதைகுழிக்குள் சிக்கியுள்ள நம் சமூகத்தை மீட்டெடுப்பது என்பது குறித்துத்தான் நாம் சிந்திக்கவேண்டும்.

22 comments:

  1. முதலில் எழுத்தாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ராயல்டியை பதிப்பகத்தார்கள் ஒழுங்காகக் கொடுக்கட்டும். பிறகு பேசலாம் அடுத்தவரை குறை!

    ReplyDelete
    Replies
    1. neenga yen sir,sombari thanam pattu self publishing pannama,publisher kitta poitu kodutitu aparam polambareenga!
      Fault is yours.

      Delete
  2. அனைத்து என்று எல்லா அரசு ஊழியர்களை குற்றம் சாட்டுவதும், ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் ஒரு தாளைத் தள்ளப் பணம் கேட்பார்கள் என்பதும் சரியல்ல என்றாலும், 'யாரும் கேட்கத் தயாராக இல்லை.' என்று நீங்களே கூறியதால், நான் உண்மை விளம்பவில்லை.

    ReplyDelete
  3. நியாயமாகக் கொடுக்க வேண்டிய ராயல்டியை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பதும் ஊழல் தான். இந்த மாதிரி கயவர்களை எப்படி தண்டிப்பது என்பது குறித்தும் ஒரு பதிவு எழுதவும். நம் சமூகத்தை மீட்டெடுப்போம் வாருங்கள்.

    ReplyDelete
  4. இந்த கமெண்ட்டெல்லாம் ரிலீஸாவாதே மிஸ்டர் யோக்கியர்?

    ReplyDelete
  5. I am into construction business. Even if apply thru online for approval of building plan in chennai corporation, we hv to pay bribe to either of AEEs. Else your file will be kept pending.

    In towns, either EO or President will approve the building plan only if we pay them as per no of kitchens in an apartment or house

    ReplyDelete
  6. Hi Badri, Totally agree with your take on this. Govind
    Govindaraj20@gmail.com

    ReplyDelete
  7. அலெக்ஸ் ஜெயபால்Sun Sep 28, 02:43:00 PM GMT+5:30


    தற்காலத்துத் தமிழர்களின் பிரச்சினை உங்களுக்கும் இருக்கிறது. இந்தக் கேஸ் போடப்படக் காரணமாக இருந்த சுப்பிரமணியன் ஸ்வாமி பற்றி எதுவும் பேசாமல் அப்படியே இருட்டடிப்பு செய்துவிடுவது.

    ReplyDelete
  8. Truth spoken plainly. But, this is the TN model of governance. It has to do with both parties. The previous education minister was a polite educated person who oversaw an equally corrupt regime. The regime remains the same. This is how the Dravidian polity works.

    ReplyDelete
  9. நம்ம ஊர் பிரச்சினையே இதுதான். பேசும் விஷயத்தை மறந்துவிட்டு நீ யோக்கியனா என்ற கேள்விகள்.

    இந்தியாவில் ஐன்ஸ்டீன் இருந்திருந்தால்... பதிவு செஞ்ச பேடன்ட் பத்தி எல்லாம் ஒன்னும் பண்ணக் காணோம். வந்துட்டார் ரிலேட்டிவிட்டி பத்தி பேச...

    ReplyDelete
  10. இப்போது முன்பு நடக்கவில்லையா என்று பலர் பேசுவது,எழுதுவதைப் பார்த்தாலே கோபம்தான் வருகிறது.முன்பு இதுபோல் மாட்டிக்கொண்டு குற்றவாளி என்று தீர்ப்பும்,தண்டனையும் பெறவில்லையே.ஜெயல்லிதாதானே கையுங்களவுமாக பிடிபட்டுள்ளார்.முன்பு நடக்கவில்லையா என்று வக்காலத்து வாங்குவது சரியா? எதாவ்து ஒரு ஊழல் பூனைக்கு யாராவது ஒருவர் மணிக்கட்டினால்தானே அடுத்த வர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்? அவர் செய்யவில்லையா?இவர் செய்யவில்லையா?என்றால் என்னதான் நடக்கும்?திமுகவினர் மீதும் 2ஜி வழக்கு நடக்கத்தானே செய்கிறது .தீர்ப்பை பார்க்கலாம்.ஆனால் அதில் இப்போது திரை விலகி பெரிய புதிய முகங்கள் மன்மோகன் சிங்,ப.சிதம்பரம்,சோனியா என்று அணி வகுத்து வருகிறது.

    ReplyDelete
  11. ராயல்டி பற்றிப் எழுதிய Anonymous அவர்களுக்கு: என் தந்தையார் ஓர் எழுத்தாளர். ”பெரிய எழுத்தாளர்” அல்லர். கிழக்கு மற்றும் ஒருசில பதிப்பாளர்கள் வந்த பிறகு கசப்பான அனுபவங்கள் ஏதும் இல்லை. இவற்கள் ஏமாற்றுவதில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்கு முந்தைய காலத்தில் ராயல்டி வந்தால் தான் உண்டு - அதுவும் தவணை முறையில். தவணையில் கிடைப்பதும் அற்பமாக இருக்கும்.

    ReplyDelete
  12. அப்போ இது?

    http://idlyvadai.blogspot.in/2014/09/blog-post_26.html

    ReplyDelete
  13. If Prevention of Corruption Act is made applicable to private sector, 90% of the Industrialists and Senior Executives will be behind the bar with confiscation of ill gotten wealth amassed by these persons. Further, most of the times, the Government employees are lured to corruption by these private individuals who go scot-free. After all these Chairmen and Directors are trustees of public money and hence the PCA should be made applicable to these persons also.

    ReplyDelete
    Replies
    1. Absolutely. Badhri has forgotten Private Higher Educational Sector. There huge funding goes into the kitties of the individuals.

      Delete
  14. நீ யோக்கியனான்னு கேக்கறதிலே என்ன தப்பு.?

    ReplyDelete
    Replies
    1. இப்படியே அடுத்தவன் முதுகை காட்டிக்கொண்டு இருங்கள், நாடு உருப்பட்டுவிடும்.

      Delete
  15. After your article in swarjyamag i thought, why Badri supports Jaya, even though we all knew how corrupt, arrongant and communal she is (dmk too). Thank you for your honest opinion here. Zero tolerance towards any forms of corruption is what we need. Be the change you want to see!

    ReplyDelete
  16. பார்றா, 'ரொம்ப காலமாய் "ஏசு வருகிறார் வருகிறார்' ன்னுவாங்க.

    ஏசு வந்து தமிழ் இணையத்துல அநாநியாக உலவுகிறார் போலிருக்குது. "பாவம் செய்யாதோரே கல்லெறியுங்கள்" என முன்னாடி சொன்னதை மாற்றி போட்டு "ராயல்டி கொடுக்காதோரே, பேசாதீங்க"ன்னு அடிக்குறாரு பாருங்க!!! ஆமீன்!!!

    ReplyDelete
  17. WHAT ABOUT 2 G CASE. WHAT IS GOING TO HAPPEN. THE MONEY
    HAS BEEN ALREADY DISTRIBUTED AND SHARED BY THE FAMILY
    MEMBERS. THE MONEY HAS BEEN INVESTED IN REAL ESTATE AND
    STASHED IN FOREIGN BANK ACCOUNTS. WHETHER THE BJP WHICH IS A SO CALLED "HONEST" PARTY ALLOW 2G CASE TO
    PROGRESS SEND THE CULPRITS TO JAIL AS THEY HAVE DONE TO
    JAYA. THEIR OWN YEDDIURAPPA AND REDDY BROS ARE ALSO THERE.

    ReplyDelete
  18. all of u go and do your own work... man only the creator and destroyer of the world.... he is responsible for everything likewise he is responsible for selecting the good government. he is only reason for destroying the society not for empowering.

    ReplyDelete