Thursday, February 11, 2016

ஆரியம் குறித்த மூன்று புத்தகங்கள்

இது தமிழ்நாட்டு அரசியல் விவகாரம் கிடையாது:-) இரண்டு புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டேன். மூன்றாவது படித்துக்கொண்டிருக்கிறேன். மூன்றையும் முடிந்தபின்னரே இவைகுறித்து எழுதவேண்டும் என்றிருந்தேன். அதற்கான முன்னெச்சரிக்கைப் பதிவு:
 1. Aryans and British India, Thomas R. Trautmann: ஆரியர்கள் என்ற இன/மொழிக்குடும்பத்தவர் குறித்த கருத்தாக்கம் எவ்வாறு கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாகி வளர்ந்தது என்பது குறித்த முழுமையான பதிவு.
 2. The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, Edwin Bryant: கிழக்கிந்திய கம்பெனியின் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளுக்கிடையேயான ஒற்றுமையைப் புரிந்துகொண்டதிலிருந்து ஆரம்பிக்கும் மொழியியல் துறையில் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் குறித்து இதுகாறும் நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகள், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பரவியிருக்கும் பகுதியில் நிகழ்ந்துள்ள அகழ்வாய்வுகள், இந்தியாவில் ஆரியம் தொடர்பாக நிலவும் விவாதங்கள், அரசியல் பிரச்னைகள் என்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்து, தன் முடிவு என்று எதையும் சொல்லாமல் பின்புலங்களை மட்டும் விளக்கிச் சென்றிருக்கும் மிக அற்புதமான புத்தகம். இதில் பேசப்பட்டிருக்கும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்ததில் ஒரு நன்மை, நான் தீவிரமாக சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்பதுதான்.
 3. The Roots of Hinduism: The Early Aryans and the Indus Civilization, Asko Parpola. இன்னும் பாதிப் புத்தகம் பாக்கி இருக்கிறது. பிரையண்ட் நடுவோடு சொல்லிச் செல்வதற்கு மாற்றாக பர்ப்போலா அடித்து விளையாடுகிறார். அருகிலேயே நின்று பார்த்தவர்போல இப்படித்தான் நடந்தது, அப்படித்தான் நடந்தது என்று சொல்கிறார். அவருக்குத் துளிக்கூடச் சந்தேகமே இல்லை! 

முதலில் முக்கியமானது மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைவரும் அறிஞர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள். ஆராய்ச்சி இதழ்களில் எழுதுவதோடு நிற்காமல், சாதாரணர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்று முனைந்து பாபுலர் புத்தகங்களும் எழுதுகிறார்கள். அதனால்தான் அமெச்சூர் ஆசாமிகளான நமக்கும் கொஞ்சம் தெரிந்துகொள்ளக் கிடைக்கிறது.

இரண்டாவது, ஆரியம் குறித்த பிரச்னை அவ்வளவு எளிதானதல்ல என்பது. இது பல ஆயிரம் அறிஞர்கள் வேலை செய்துகொண்டிருக்கும் துறை. அதில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் மிக மிகக் குறைவானவர்கள். அவர்களில் பலரும் உண்மையில் அறிஞர்கள் இல்லை, அரைவேக்காடுகளே. இதுபற்றி ஓரளவு விஷயஞானம்கூடத் தமிழகக் கல்வி நிலையங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. Philology என்ற துறையில் கல்வி கற்பிக்கும், ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் இந்தியாவில் இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியாவில் அரசியல் சமூக வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதெல்லாம் பெரும்பாலும் அந்நிய நாட்டு அறிஞர்களே.

மூன்றாவது, இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் பரவியிருந்த பகுதிகளில் மிக விரிவான அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. கண்டுபிடிப்புகள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றைக் குறித்து பிரையண்ட், பர்ப்போலா புத்தகங்களில்தான் நான் முதலாவதாகக் கேள்விப்படுகிறேன். நம் வரலாற்றுப் புத்தகங்கள் எல்லாமே வேஸ்ட். நாம் மேலோட்டமான சில விஷயங்களை முற்றுமுழுதான முடிவுகளாக நம் பாடப் புத்தகங்களில் போதித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போதைக்கு இது போதும். முடிந்தவரை இந்தப் புத்தகங்களைப் பற்றி பின்னர் எழுதப் பார்க்கிறேன்.

5 comments:

 1. :-) சிறு கட்டுரையாக இருந்தாலும், அழகாக வந்திருக்கிறது - ஆனால், இதனை ஒரு மெடா-கட்டுரை என்று எடுத்துக்கொள்கிறேன்! பின்னொரு சமயம் விரிவாக எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

  என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் கொஞ்சமாவது ஆங்கிலம் அறிந்த ஒவ்வொரு தமிழரும் இந்த ட்ராட்மன் புத்தகத்தைப் படிக்கவேண்டும்; எனக்குப் பல திறப்புகளை அளித்த புத்தகம் இது. நம்முடைய வரலாற்றைப் பற்றிய காத்திரமான, திடமான வாதங்களை முன்வைக்கும் அழகு இது. முடிந்தால், கிழக்கு இதன் தமிழாக்கத்தைக் கொணர முடிந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்!

  எட்வின் ப்ரையன்ட் அவர்கள் ஒரு மேதை. அவரால் - 'க்ருஷ்ணர்' பற்றிய பலப்பல மூலங்களிலிருந்து கோர்த்தெடுக்கப்பட்ட 'Krishna - A Sourcebook' எனும் அழகான புத்தகமும், பதஞ்சலியின் யோகசூத்திரம் பற்றியதும் அவசியம் படிக்கப்படவேண்டியவைகள்; பின்னதை நான் இரண்டு வருடங்களாகப் படிக்கிறேன், படிக்கிறேன் - இன்னமும் படித்துக்கொண்டே இருக்கிறேன்! :-(

  /*பர்ப்போலா அடித்து விளையாடுகிறார். அருகிலேயே நின்று பார்த்தவர்போல இப்படித்தான் நடந்தது, அப்படித்தான் நடந்தது என்று சொல்கிறார். அவருக்குத் துளிக்கூடச் சந்தேகமே இல்லை! */

  ஆஸ்கோ பர்ப்போலா அவர்கள், தன்னுடைய இம்மாதிரி மனப்பான்மையிலன் மூலமாகத்தான் தமிழ்மொழிசெம்மொழி மானாட்டுமயிலாட்டில் முக்கியத்துவம் பெற்றார். அவருடைய மேதமைக்கு இம்மாதிரி அற்ப விஷயங்களும், அவருடைய சிலபல ஆராய்ச்சிகளும் பெருமை சேர்ப்பவையே அல்ல!

  ஸ்ரீ தரம்பால் அவர்களுடைய ஆராய்சிகளாலும் அவருடைய நண்பர்களாலும் + கிஷோரிஸரண் லால், ப்ரஜ்பாஸி லால் போன்றவர்களாலும் கவரப்பட்டு ​ பல இளைஞர்கள் இம்மாதிரி ஃபைலாலஜி, ஃபினோமினாலஜி, லிங்க்விஸ்டிக்ஸ், ஆர்கயோ-பாடனி, ஹிஸ்டாரியொக்ராஃபி வகையறா இன்டர்-டிஸ்ஸிப்ளினரி ஆராய்ச்சிகள் செய்ய முயன்றனர். அதுவும் இந்தியப் பல்கலைக்கழகங்களில், 1980-90களில், இப்படிச் செய்ய முனைந்தனர். தகுந்த போஷகமோ (பெரும்பாலான இந்தியப் பல்கலைக் கழகங்களில் சுயசிந்தனைகளில்லாத மார்க்ஸீயப் பார்வை அறிஞர்(!) பட்டாளங்கள் மட்டுமே பொறுப்பில் இருந்ததால்/இருப்பதால் இந்தப் பிரச்சினை) அறிவார்ந்த விவாதமோ இல்லாத நிலையில், இவர்களில் பலர் நிபந்தனையற்று அமெரிக்காவையும், கனடாவையும் சரணடைந்துவிட்டனர். சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுள்ளனர். இது சோகம்தான். அங்கும் இவர்களில் பெரும்பாலோர் தனித்துவம் பெற்று பெரிய புத்தகங்களை எழுதிவிடவில்லை - ஆனால் பலப்பல தரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

  /* நம் வரலாற்றுப் புத்தகங்கள் எல்லாமே வேஸ்ட். நாம் மேலோட்டமான சில விஷயங்களை முற்றுமுழுதான முடிவுகளாக நம் பாடப் புத்தகங்களில் போதித்துக்கொண்டிருக்கிறோம். */

  உண்மைதான். ஆனால், பாடபுத்தகங்கள் மட்டும்தான் இப்படியென்றல்ல. ரொமிலா தாபர் போன்றவர்களின் அவரலாற்றுப் புத்தகங்களும் அப்படித்தான். சுயசிந்தனையும், செயலூக்கமும், ஆய்ந்தறியும் திறனும், பரந்த படிப்பறிவும் உள்ள இளைஞர்குழாம் மேலெழும்பி வந்தால்தான் நமகு. கதி மோட்சம்.

  வளாவளாவென்றிருக்கிறது இப்பின்னூட்டம். மன்னிக்கவும். நல்ல புத்தகங்களைப் பற்றி எழுதியதைப் படிக்கும்போது கொஞ்சம் புளகாங்கிதம் அதிகமாகவே ஆகிவிட்டதுபோலும்.

  ReplyDelete
 2. மிக மிக தூண்டலான விக்ஷயம். கணடிப்பாக கூடிய விரைவில் வாங்குவேன்! நன்றி. வெ.ரா.ஆனந்த்

  ReplyDelete
 3. இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதெல்லாம் பெரும்பாலும் அந்நிய நாட்டு அறிஞர்களே.///
  இது என்ன சாபக்கேடா?
  நீங்கள் எழுதுங்கள் இன்னும் பிரமிப்பாய் இருக்கிறது...

  ReplyDelete
 4. இந்தியக் கல்விச்சூழலில் ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டைப் பொய் என்று முறையிடுவோரின் வாதங்கள் பிரதானப்படுத்தப்பட்டும் ஆரியக்கலப்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை முடக்கவும் Conspiracy நடப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். இங்கிருக்கும் பிராமணர்களின் இருப்பை அது ஆபத்துக்குள்ளாக்கும் என்று அஞ்சுகிறார்களோ என்னவோ! உதாரணமாக DNA testing எடுத்தால் மொத்த இனங்களின் ஒற்றுமை வேற்றுமைகள் தெளிவாகக் கிடைக்கும். யார் எப்போது உள்ளே வந்தார்கள், எவ்வளவு யாரோடு கலந்திருக்கிறார்கள் என்ற விவரங்களெல்லாம் தெரியவரும். ஆனால் அதை வைத்துக்கொண்டு பல ஜாதிகள் இங்கே சண்டையிடக்கூடும்.

  ReplyDelete
 5. பிராமணர்களுக்கும், யூதர்களுக்கும் தொடர்பு இருந்தது என்று இவர்களில் யாரேனும் எழுதியுள்ளார்களா பற்றி சார்?

  ReplyDelete