Friday, February 12, 2016

ஊழலை ஒழிக்கவே முடியாதா?

நேற்று இரவு புதிய தலைமுறை ‘நேர்படப் பேசு’ விவாதத்தில் கலந்துகொண்டேன். அருணன், சுப.வீ, சுபகுணராஜன் ஆகியோர் பிறர். தலைப்பு ‘50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் செழித்துள்ளதா, சீரழிந்துள்ளதா?’ என்பது.


இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் போய்வந்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். பொதுவான பார்வையில், பிற எந்த மாநிலத்தையும்விட தமிழகம் சிறப்பான நிலையில்தான் இருக்கிறது. பரவலான நகரமயமாக்கம், கல்வியிலும் தொழில்களிலும் உள்ள வளர்ச்சி, மாநில தனிநபர் மொத்த உற்பத்தி, அதிகாரப் பரவலாக்கம், சாலைகள், போக்குவரத்து வசதி, பொதுவிநியோகக் கட்டமைப்பு, மருத்துவ வசதி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இந்த வளர்ச்சியில் கட்டாயம் பங்குண்டு. இந்த வளர்ச்சிக்கு அடிபோட்ட காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டுகளும் இதற்கு ஒரு காரணம்.

1990-களுக்குமுன் வேலை வாய்ப்பு தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் உலகமயமாக்கல் கொடுத்த வாய்ப்பைப் பிற மாநிலங்களைவிடத் தமிழகம் ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டது. தனியார் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி காரணமாக நிறைய ஐடி பொறியாளர்கள் உருவாகினர். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற பெரும் ஐடி நிறுவனங்கள் தமிழகத்தையும் தமிழ்ப் பொறியாளர்களையும் நம்பின. நான்கு சக்கர வாகன உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. இதனால் பல உபதொழில்கள் தமிழகத்தில் உருவாயின. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்லூரிக்குச் செல்வோர் விகிதம் அதிகமாக இருக்கிறது. குறைந்தபட்சம் தொலைநிலைக் கல்வி வழியாகவாவது பட்டம் வாங்கிவிடவேண்டும் என்று பலர் படிக்கிறார்கள்.

ஆனால் இவற்றைக் கொண்டு நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியுமா? வளர்ச்சியுடன் கூடவே நம்முடைய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டேதானே இருக்கிறது? வெறும் தூரதர்ஷன் போதும் என்று இருக்க விரும்புகிறோமா? 100 தமிழ் சானல்களாவது வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லவா? அதுபோலத்தான்.

வளர்ந்த நாடுகளில் உள்ள வசதி வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். ஒழுங்குபடுத்தபட்ட நகர அமைப்புமுறை, சீரான சாலைகள், கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம், பலவிதமான பொதுப்போக்குவரத்து வசதிகள், வீடுகளுக்குத் தரமான 24x7 மின்சாரம், குடிநீர், பூங்காக்கள், நூலகங்கள் இவையெல்லாம் தமிழகத்தில் சாத்தியமில்லையா?

தரமான அரசுக் கல்விநிலையங்கள், தகுதியின் அடிப்படையில் (இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு) தேர்ந்தெடுக்கப்படும் பேராசிரியர்கள், கல்வித்துறையில் ஆழ்ந்த முத்திரை பதித்த துணைவேந்தர்கள் - இவற்றை நாம் ஏன் தமிழகத்தில் எதிர்பார்க்கக்கூடாது?

ஒழுங்காகக் கட்டுப்படுத்தபட்ட தனியார் கல்விநிலையங்கள், தரமற்ற கல்வி நிலையங்களை இழுத்துமூடுவது அல்லது கடுமையான அபராதம் விதிப்பது, சீரான கட்டண நிர்ணயம், கேபிடேஷன் கட்டணம் வாங்குவதைத் தடுப்பது ஆகியவை ஏன் தமிழகத்தில் சாத்தியமில்லை?

மின் உற்பத்தியில் நாம் ஏன் இவ்வளவு பின்தங்கியுள்ளோம்? ஏன் திமுகவும் அஇஅதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கின்றனர்? ஏன் மக்களின் நியாயமான தேவைகளை அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை?

மக்களால் இடைத்தரகர்களைத் தாண்டி நேரடியாக அரசை அணுக முடிகிறதா? தங்களுக்கான சேவைகளை சரியான கட்டணம் கொடுத்துப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறதா? ஏன் இவை இங்கே சாத்தியமாவதில்லை?

*

நம் வாழ்க்கைத்தரம் மேலும் உயராமல் இருப்பதற்கும் நம் மக்களுக்கான வசதி வாய்ப்புகள் வேண்டிய அளவு கிடைக்காமல் இருப்பதற்கும் மிக முக்கியமாண காரணம் ஊழல். இந்த ஊழலை சாதாரணமான ஒன்று என்று புறந்தள்ளிவிட முடியாது. இதில் என்ன சோகம் என்றால், திமுகவும் அஇஅதிமுகவும் மிக வசதியாக இதுகுறித்து விவாதத்தில் ஈடுபடவே மறுக்கிறார்கள். ஊழலை ஒழிக்கவே முடியாது; எந்த மாநிலத்தில்தான் ஊழல் இல்லை; மத்தியில் இல்லாத ஊழலா; ஊழல் என்பது ஒருவிதமான அதிகாரப் பகிர்வுதான் போன்ற பல சுவாரசியமான பதில்கள் வருகின்றன.

இன்னொரு வகையான பதில், மக்கள் நலக் கூட்டணி மட்டும் ஊழல் செய்யாமல் இருந்துவிடப் போகிறார்களா? அவர்களுக்கும் வாப்பு வந்தால் ஊழல் செய்யத்தான் போகிறார்கள் என்பது.

நிச்சயமாக இன்னார் ஊழல் செய்ய மாட்டார் என்று முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. ஆனால் திமுகவும் அஇஅதிமுகவும் ஊழல் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். ஊழல் குறித்து எந்த உத்தரவாதத்தையும் அவர்கள் தரத் தயங்குகிறார்கள். திமுக அதிமுகவின் ஊழலைச் சாடும். அதிமுக, திமுகவின் ஊழலைச் சாடும். அவ்வளவுதான்.

ஊழலைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்பது இன்றைய கட்டாயம். இதை முன்வைக்கும் கட்சிகளை, கூட்டணியையே நாம் ஆதரிக்கவேண்டும். கொள்கைகளில் மாறுபாடு இருந்தால் விவாதிக்கலாம். மாற்றிக்கொள்ளலாம் அல்லது அவர்களை மாற்றவைக்கலாம். ஊழல்குறித்து விவாதிக்க எதுவுமே இல்லை. மக்கள் பணத்தை மடைமாற்றுவதற்கான மோசமான வழிமுறை இந்த ஊழல். கடந்த ஐம்பதாண்டுகளில் பல்கிப் பெருகி, விரிந்து, இன்று ஊழல் தொடாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துவிட்டோம். இந்த ஊழல்தான் நாம் தொடவேண்டிய உயரங்களை நம்மைத் தொடவிடாமல் செய்கிறது. இந்த ஊழல்தான் அரசு அதிகாரிகள் மனிதத்தன்மையை இழக்கச் செய்கிறது. இதுதான் தரமற்ற சேவையை மக்களுக்குத் தர அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் தூண்டுகிறது. இதுதான் இளைஞர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது. தங்கள் பிழைப்புக்காக மோசமான வழிகளைத் தேடச் செய்கிறது.

*

Past record என்பதன் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இப்போதுதான் இப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்குகிறார்கள். அதன் தலைவர்களை நம்ப முடியுமா? அவர்கள் தங்கள் நேர்மையை மட்டுமே முன்வைத்து இந்தத் தேர்தலில் இறங்கியுள்ளனர், ஆதாயத்தை முன்வைத்தல்ல என்பது என் கருத்து. ஊழலை ஒழிப்பதன் அவசியத்தைப் பேசுவதற்காகவாவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும். மக்கள் வளத்தைக் காப்பதுகுறித்துப் பேசுவதற்காகவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும்.

இப்போது நாம் இந்தச் செயலைச் செய்யாவிட்டால், ஊழல் எதிர்ப்பின்பின் அணி சேராவிட்டால், வருங்காலச் சந்ததியினர் ஊழலற்ற சமுதாயம் சாத்தியமே இல்லை என்று கருதிவிடுவார்கள்.

11 comments:

  1. Had seen the program last night. You and other guests made valuable point. Every party tries to blame other. Often we don't discuss about these bribery and how it affects the betterment of the state.

    We need to eradicate the bribery step by step. Why TamilNadu not implementing Lok Ayukta court?

    Literally every minister in TN is corrupted. And our Industrial Opportunities are deteriorating day by day.

    I guess , these changes will happen after 20 years only. Until then TamilNadu will be mediocre state with lot of abilities sleeping inside us.

    ReplyDelete
  2. We are always discussing about corruption and scam. At the same time we need to address the bribery a common man faces for availing government services.
    We also should talk about the nexus between Politicians and Government Employees.

    ReplyDelete
  3. Not only TN even all the entire states in India are steeped in corruption so it is difficult in India to have a Ramrajya type of rule, so why lament ourselves we see the candidate and vote and if all the candidates are not good elect the better of all

    ReplyDelete
  4. சிறந்த வல்லுனர்களை, அறிஞர்களை, சமுதாய நலன்கொண்டவர்களை மக்களே தேர்ந்தெடுத்து ஆட்சி செய்யும் முறை வேண்டும். உங்களை போன்றோர்கள் இந்த முயற்சியை முன்னெடுக்கவேண்டும். (Public should identify experts from various field who are service minded and elect them to run the government. People like you should take this idea forward to the public). ---------------------------------
    கவி: 69 – பொது ஆட்சி
    Poem: 69 - GOVERNMENT BY EXPERTS

    ஊர்நகர, மாகாண, தேச, ஆட்சி
    ஒன்றுக்குமேல் ஒன்றாய் உள்ளதைப்போல்
    ஓர் உலக ஆட்சி அனைத்திற்கும் மேலாய்
    உருவாக்கி பொறுப்புடனே நிர்வகிப்போம்
    நேர்மையுள்ள தொழில் நிபுணர் விஞ்ஞானத்தார்
    நினைவறிந்த ஞானியார்கள் மருத்துவர்கள்
    தேர்ந்தெடுக்கப் படுவார்கள் இவ்வாட்சிக்கு
    திறமையுடன் உயர்தரமாய் அமையும் ஆட்சி.

    ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சி, தேச ஆட்சி என்று ஒன்றின் மேல் ஒன்றாக இருந்து, ஆட்சி நடை பெறுவது போல, எல்லா தேசங்களுக்கும் மேலான பொது உலகப் பேராட்சி ஒன்று ஏற்படுத்துவோம்.

    அந்த ஆட்சியை நிர்வாகம் செய்ய நேர்மையுள்ள தொழில் நிபுணர்கள், அறிவறிந்த ஞானிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் இத்தகையவர்களை உலக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் மனித இனம் நலமுடன் ஒன்று கூடி வாழ்வதற்குப் பற்றற்ற முறையில் பல திட்டங்களை வகுப்பார்கள், செயலாற்றுவார்கள்.

    - வேதாத்திரி

    Poem: 69. Government by Experts

    At present, political administration is set up as a hierarchy; village administration, town municipalities, state government and over all the union government of the nation. They all are linked to do their duties, one over the other. Similarly one Supreme World Government would link all the national governments.

    For the administration of the World Government the experts of all fields of life such industrialist, scientists, doctors and spiritually enlightened people will be selected and given due responsibilities.

    - Vethathiri Maharishi

    https://www.facebook.com/mdu.arivu.thirukoil/photos/a.721248074641630.1073741854.411787648921009/749293618503742/?type=1&theater

    ReplyDelete
  5. Not only TN even all the entire states in India are steeped in corruption so it is difficult in India to have a Ramrajya type of rule, so why lament ourselves ..//

    நான் மறுக்கிறேன்.

    நாற்பது ஆண்டு உத்தியோகத்தில் எட்டு ஆண்டுகள், தமிழகத்திலும் முப்பந்திரண்டு ஆண்டுகள் பிற மாநிலங்களிலு ம் பணி ஆற்றியவன். ஊழலை அளக்க முடியாது தான்; புள்ளி விவரம் கொடுக்க முடியாது தான். ஆனால் நம் உள்மனதுக்கு ஒரு தோராய அளவு கோல் தென்படும்:
    என்னைப் பொறுத்தவரை லஞ்சத்தில் மகாராஷ்டிரா, தமிழகம் இரண்டும் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பர்.
    பிற மாநிலங்களில் ஊழல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி முன்பு ஜுஜுபி.

    ReplyDelete
  6. Dear Badhrisesha,
    You are talking about only corruption in government. But the so called corporates growth also in a corrupt way. They are lootin public money through psu banks. Corporate accountability is rarely seen.

    ReplyDelete
  7. Do you think MDMK, VC, CPI & CPM are not corrputive?

    ReplyDelete
  8. தேவையான பதிவு சார். தமிழகத்தில் இன்னொரு-முறை தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வந்தால், அதைவிட பேரழிவு வேறெதுவும் இருக்க முடியாது. நல்லகண்ணு,வை.கோ போன்ற நேர்மையான தலைவர்கள் இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு தாராளமாக ஒரு வாய்ப்பு அளிக்களாம். I support மக்கள் நலக் கூட்டணி...

    ReplyDelete
  9. Corruption starts from people not politicians.

    ReplyDelete
  10. நான் திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ வக்காலத்து வாங்கவில்லை. மிக முக்கியமாக இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி நிலையான ஆட்சியை அளித்துள்ளன.கோஷ்டிப் பூசல் கிடையாது. நிலையான ஆட்சியின் அருமை பலருக்கும் தெரியாது. நிலையற்ற ஆட்சி என்பது மிக மோசமான ஒன்று. நிலையற்ற ஆட்சியில் ஊழல் மிக அதிகமான அளவுக்கு இருக்கும்.
    நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி இந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி நடத்தி இரு கட்சி ஆட்சி முறையைத் தோற்றுவித்துள்ளனர்.
    அறியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.எனவே இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது தான் உத்தமம்.
    ஊழல் இரண்டாம் பட்சம். நிலையான ஆட்சி தான் முக்கியம்.இந்த இரண்டு கட்சிகளும் நாம் நன்கு அறிந்தவை. இவற்றைத் தவிர வேறு எந்த ஏற்பாடும் இப்போதைக்கு சரிப்பட்டு வராது.

    ReplyDelete