Tuesday, May 31, 2016

ரசாயன வண்ணச் சாயங்கள்

1856-ம் ஆண்டுதான் முதன்முதலாக நூல் இழைகள்மீது ஏற்றப்படும் வண்ணச் சாயங்கள் இயற்கையான உயிரினங்கள்மூலமாகத் தயாரிக்கப்படாமல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படத் தொடங்கியது.

1856-க்குமுன்பாக மிகச் சில வண்ணங்கள்தான் ஆடைகள் தயாரிப்பில் பயன்பட்டன. அவுரி  (Indigofera Tinctoria) செடியிலிருந்து ஆழ்நீல வண்ணம். வோட் (Isatis Tinctoria) செடியிலிருந்து இளநீல வண்ணம், மஞ்சள் (Curcuma Longa) செடியிலிருந்து, அதேநிற வண்ணம், மேடர் (Rubia Tinctorum) என்ற செடியிலிருந்து சிவப்பு வண்ணம். கொச்சினீல் (Dactylopius Coccus) என்ற பூச்சியிலிருந்து சிவப்பு வண்ணம். இப்படிச் சில வண்ணங்களை மட்டுமே கொண்டு, பருத்தி, பட்டு, கம்பளி இழைகளுக்குச் சேர்த்து, நெய்து துணிகளை உருவாக்குவார்கள்.

1856-க்கு முன்னதாகவே ஆய்வகங்களில் ஒருசில வண்ணங்கள் உருவாக்கப்பட்டாலும் பெரும் தொழிற்சாலைகளில் அவற்றை யாரும் உருவாக்க முனையவில்லை. தொழில்ரீதியாக அது சாத்தியப்படும் என்று யாரும் நினைக்கவில்லை.

ஆனால் 1856-ல் வில்லியம் பெர்கின் என்ற பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான, வேதியியல் மாணவர் ‘மாவ்’ என்று அழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணத்தை ஆய்வகத்தில் உருவாக்கினார். இதனை உருவாக்க அவர் எடுத்துக்கொண்டது நிலக்கரித் தார்க் கழிவை. கிட்டத்தட்ட அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயிரிகள் அனைத்தும் கரிம வேதிப்பொருள்களால் ஆனவை என்பதும், பெட்ரோலியம், நிலக்கரி ஆகியவை, உயிரிகள் பூமிக்கடியில் புதைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி, உருமாறியவை என்பதும் தெரியவந்திருந்தது. ஆனால் வேதிவினைகள் குறித்து ஆழ்ந்த கருத்துகள் இன்னமும் தோன்றியிருக்காத காலம். மெண்டலீவ் இன்னமும் தன் வேதி அட்டவணையை உருவாக்கியிருக்கவில்லை. அணு பற்றிய கொள்கைகள் தெளிவாகியிருக்கவில்லை. ஆனால் தாவரத்திலிருந்தோ, விலங்கிலிருந்தோ பெறப்படும் பொருள்களை, நிலக்கரி அல்லது பெட்ரோலியக் கழிவிலிருந்து தொடங்கி, சில வேதிவினைகள்மூலம் பெற்றுவிடக்கூடும் என்ற கருத்து உருவாகியிருந்தது.

பெர்கின், வண்ணச்சாயம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மலேரியா நோய்க்கு மருந்தான க்வினைன் என்பது சிஞ்சோனா என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டுவந்தது. இதனை ஆய்வகத்தில் தயாரிக்க முடியுமா என்ற முயற்சியில் பெர்கின் ஈடுபட்டபோது, அகஸ்மாத்தாக உருவானதுதான் இந்தச் சிவப்புநிறப் பொடி. இந்தப் பொடியைச் சுத்திகரித்து வண்ணச் சாயமாக மாற்றி சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கொடுத்துப் பார்த்ததில் அவர், இது ‘பத்தரை மாற்றுத் தங்கம்’ என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் ஒரு 18 வயதுப் பையன் தைரியமாக இதனைக் கையில் எடுத்துக்கொண்டு, தொழிலில் இறங்க முடிவுசெய்தது மகா ஆச்சரியம். யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஆனால் அந்தப் பையனின் தந்தை - கப்பல் கட்டும் தொழிலில் இருந்தவர் - முதலீடு செய்ய முன்வந்தார். அண்ணனும் தொழிலில் கூட்டு சேர்ந்தார். மிகப் பெரிய லாபம் ஈட்டினார்கள். 

வில்லியம் பெர்கினின் இந்த வண்ணச் சாயக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ரசாயன வண்ணங்களைத் தயாரிக்கக் கடும் போட்டி நடைபெற்றது. ஜெர்மனி ஆழ்நீல வண்ணத்தை உருவாக்கியது. அது இந்தியாவின் அவுரிப் பயிர்களையும் வர்த்தகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்தது. காந்தியடிகள் இந்தியாவில் ஈடுபட்ட முதல் பெரும் பிரச்னை, அவுரி பயிரிட்ட இந்திய விவசாயிகளுக்கும் அதனை வாங்கி வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டு, பின்னர் ஜெர்மனியின் கண்டுபிடிப்பினால் பின்வாங்கிய பிரிட்டிஷ் வர்த்தகர்களுக்கும் இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்படுத்த முயற்சித்தது. நாளடைவில் இயற்கை வண்ணச் சாயம் என்ற ஒன்று முற்றிலுமாகக் காணாமல் போனது.

நிலக்கரி, பெட்ரோலியக் கழிவிலிருந்து வண்ணச் சாயங்கள் மட்டுமல்ல, ஆண்டிபயாடிக் என்ற நோய்க்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடிக்கலாம் என்பதை நோக்கி அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் இறங்கின. சல்ஃபா வகை மருந்துகளைக் கண்டுபிடித்ததன்மூலம் கெர்ஹார்ட் டோமாக் (Gerhard Domagk) இந்தத் துறையைத் தொடங்கிவைத்தார். இன்னொரு பக்கம் அம்மோனியாவைத் தயாரிக்கும் முயற்சியில் ஹேபர் ஆய்வகத்தில் வெற்றிபெற, பாஷ் அதனைப் பெருமளவில் தொழிற்சாலையில் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். இவ்வாறாக செயற்கை உரங்கள் உருவாக்கப்படலாயின. லேக்கர் என்னும் இயற்கைப் பிசின், மின்கடத்தாப் பொருளாகப் பயன்பட்டது. அதற்கு மாற்றாக பேகிலைட் என்னும் செயற்கைப் பொருள் உருவாக்கப்பட்டது. அதன்பின் பிளாஸ்டிக் வகைகள் உருவாக்கப்பட்டன. நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகள் உருவாக்கப்பட்டன. 

இப்படியாக எதிர்பாராத வகையில் உருவான வண்ணச் சாயம் ஒன்றிலிருந்து மாபெரும் ரசாயனத் தொழிற்சாலைகள் உருவாகின. இவை சுற்றுச் சூழலுக்குக் கேடுகளை விளைவித்தன. உணவுப் பொருள்களில்கூட இவ்வகைச் சாயங்கள் கலக்கப்பட்டன. மக்களின் எதிர்ப்பை அடுத்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டன. உணவு மற்றும் மருந்து ஆகியவற்றில் நிறையக் கட்டுப்பாடுகள் உருவாகின. ஆனாலும் இன்றும் இத்தொழிற்சாலைகள் பிரச்னைகளுக்கு உரியவையாக இருப்பதைப் பார்க்கிறோம். இப்பொருள்கள் பலவற்றுக்கும் பக்கவிளைவுகள் இருப்பதையும் காண்கிறோம்.

உலகின் பல பாகங்களிலும், செயற்கையிலிருந்து விலகி மீண்டும் இயற்கையான பொருள்களை நாடிச் செல்லும் பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கை இழைகள், இயற்கை வண்ணங்கள் போன்றவைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நான் ஏற்கெனவே ஹேபர்-பாஷ் + உரங்கள் பற்றியும் டோமாக் + மருந்துகள் பற்றியுமான இரண்டு அற்புதமான புத்தகங்களைப் படித்திருந்தேன். இரண்டுமே தாமஸ் ஹேகர் எழுதியவை. The Alchemy of Air: A Jewish Genius, a Doomed Tycoon, and the Scientific Discovery that Fed the World but Fueled the Rise of Hitler என்பது ஹேபர், பாஷ் கதையைச் சொல்வது. The Demon Under the Microscope: From Battlefield Hospitals to Nazi Labs, One Doctor's Heroic Search for the World's First Miracle Drug என்பது டோமாக்கின் கதையைச் சொல்வது.

இந்தப் புத்தகங்கள் அளவுக்கு அறிவியலையும் வாழ்க்கையையும் எளிதாகவும் அருமையாகவும் சொல்லிச் செல்வது கடினம் என்று எண்ணியிருந்தேன். சைமன் கார்ஃபீல்ட் எழுதியுள்ள Mauve: How One Man Invented a Colour that Changed the World அந்தத் தரத்தில் நின்று வில்லியம் பெர்கினின் கதையையும் வண்ணங்களின் ரசாயனத்தையும் சொல்லிச் செல்கிறது.

அறிவியல் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த மூன்று புத்தகங்களையும் படிக்கப் பரிந்துரைப்பேன்.

3 comments:

  1. இது மாதிரியான வரலாற்றுக்குறிப்புகள் கணிதம், பௌதிகம், இராசயனம், உயிரியல் பாடங்களுடன் தொடர்பு படுத்தப்படும்போது, மாணவர்களின் ஆர்வம் தூண்டப்படும். இதை பள்ளி ஆசிரியர்கள் மட்டும் செய்யமுடியாது. ஒவ்வொரு பாடத்திலும் வரும் அறிவியல் கோட்பாடுகளையும், அறிவியல் கண்டுபிடுப்புகளையும், அதை முன்னெடுத்த அறிவியலாளர்கள் பற்றியும் சிறுசிறு வரலாற்றுக்குறிப்புகள், அதுவும் பாடத்திட்டதை ஒட்டி தங்களைப் போன்றவர்களால் எழுதப்படும்போது, அது ஆசிரியர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கலாம். ஆசிரியர் பயிற்சியில் இதுமாதிரியான அணுகுமுறைகளை கற்றுத்தந்தால் காலப்போக்கில் அது நடைமுறை சாத்தியமாகும். எல்லாவற்றிலும் அரசியல் இருப்பதை இப்போது நமக்கு புரிகின்ற மாதிரி, எல்லாவற்றிலும் வரலாறு இருக்கின்றது என்ற புரிதல் ஏற்படும்போது பாடங்களே சுவாரசியமாகப் போகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் தொடர்பு கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு மாணவர், தன்னுடைய இளங்கலையில் கணித வரலாற்றை (Not pure maths) பிரதான பாடமாகப் படித்ததாகச் சொன்னார். மேலை நாட்டு பாடத்திட்டத்தில் வரலாறு பற்றிய பன்முகப்பார்வை பாரவலாக்கப்பட்டது போல் நமது நாட்டிலும் பரவலாக்கப்பட்டால் கற்றுக்கொடுக்கவும், கற்பதும் சுவாரசியமானதாகிவிடும்

    ReplyDelete
  2. Very informative at the same time interesting article. Thank you.

    ReplyDelete
  3. இந்த வரலாறுகளை படித்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பலருக்கு வருவதில்லை. நம்மைவிட இந்த வெள்ளைக்காரர்கள் எப்படி முந்தினார்கள் என்ற ஒரு காழ்ப்பு உணர்ச்சி பரவலாக இந்தியாவில் உள்ளது. ஏதோ போனாபோகட்டும், பிழைப்புக்காக இதையெல்லாம் கொஞ்சம் கற்றுக்கொள்வோம், ஆனால் முழு முதல் உண்மைகள் வேதத்திலோ சித்தர் பாடல்களிலோ உள்ளது என்ற நம்பிக்கை லேசில் மாறுவதில்லை

    ReplyDelete