ஆர்கானிக் விவசாயம் (இயற்கை விவசாயம்) பற்றி மட்டும்தான் இன்று அனைவரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் நிஜத்தில் இன்று மிகப் பெரும்பான்மையான விவசாயம் ரசாயன உரத்தின் ஆதரவால்தான் நிகழ்ந்துவருகிறது. ரசாயன உரங்களை எடுத்துவிட்டால் உலகில் பட்டினியும் பஞ்சமும்தான் ஏற்படும்.
இண்டென்சிவ் விவசாயம் - அதாவது குறிப்பிட்ட ஒரு சதுர அடியில் கிடைக்கும் அதிகப் பயிர் மகசூல் வேண்டும் என்றால் தேவையான அளவு நீர், உரம் ஆகியவை வேண்டும். இந்த உரம் இயற்கை உரமாக இருக்கலாம் அல்லது பெரும் தொழிற்சாலையில் உருவான ரசாயன உரமாக இருக்கலாம். அதுதவிர, தேவைப்பட்டால் பூச்சிகளாலும், பேக்டீரிய, வைரஸ்களாலும் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கவேண்டுமா அல்லது இயற்கை மருந்துகள் பயன்படுத்தலாம என்பது இன்னொரு விஷயம்.
தாமஸ் ஹேகர் புத்தகத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன் ஷாட். |
இயற்கை உரங்களாகப் பயன்பட்டவை பறவைகளின் எச்சங்கள், விலங்கின் கழிவுகள், ஏன் மனிதனின் கழிவுகள்கூட. இவை பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை மண்ணுக்குள் அனுப்பின. பயிர்களின் வேர்கள் இவற்றை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டன. இயற்கையில் இந்த அளவுக்கு உயிரினக் கழிவுகள் கிடைக்காத நிலையில் அம்மோனியா (NH3) என்ற வேதிப்பொருளைத் தொழிற்சாலையில் உருவாக்கி, அதனைத் திடவடிவிலான வேதிப்பொருளாக ஆக்கி மண்ணில் சேர்க்கமுடியுமா என்ற ஆராய்ச்சியின் விளைவாக உருவானதுதான் யூரியா என்ற உரம். இன்று உலகெங்கும் உணவைப் பெற்றுத்தருவது யூரியாதான். இனி நம் நாட்டில் யூரியாவைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிப் பாருங்கள். தெரியும் எம்மாதிரியான அரசியல் பிரச்னை ஏற்படும் என்று.
இந்த யூரியா சிறுசிறு துகள்களாக இருக்கும். சர்க்கரைத் துகள்களைவிடப் பெரிதாக, கல்லுப்புத் துகள்களைவிடச் சிறிதாக. இவற்றை நெல் வயல்களில் தூவுவார்கள். ஆனால் இதனால் பெரும் லாபமல்ல. நீரில் கரைந்து பெருமளவு யூரியா வெளியேறிவிடும். காற்றில் பரவி மாசை விளைவிக்கும். பயிருக்கும் போய்ச் சேராது.
சீனா போன்ற நாடுகளில் பாரம்பரிய (இயற்கை) உரங்களைப் பயன்படுத்த ஒரு முறையைக் கையாண்டுவந்தார்களாம். களிமண்ணைக் கையில் பந்தாகக் குழைத்து எடுத்துக்கொள்வார்கள். அப்படியே ஆங்காங்கே விரலை அதில் வைத்து அழுத்தி, குழியை உருவாக்கிக்கொள்வார்கள். அந்தக் குழிக்குள் இயற்கை உரத்தை அப்பிவிடுவார்கள். பின் நெல் நட்டுள்ள வயலில் ஆங்காங்கே இடையிடையே சற்றே ஆழத்தில் இந்த உரக் களிமண் உருண்டைகளை நட்டுவிடுவார்கள். இதனால் உரச் சத்து கொஞ்சம் கொஞ்சமாக வேண்டிய அளவில் மண்ணூடாக பயிருக்குப் போகிறது. வீணாவதில்லை.
பங்களாதேஷில் யூரியாவை வைத்து இதே முறைப்படிப் பயன்படுத்தினால் பலன் அதிகமாக இருக்குமா என்று முயற்சி செய்தார்கள். யூரியா துகள்களை கைக்கடக்கமான உருண்டைகளாக ஆக்கி, சரியான ஆழத்தில் நெல் வயலில் சீரான இடைவெளியில் புதைத்துவைத்து முயற்சி செய்தார்கள். UDP என்று இதற்குப் பெயர். Urea Deep Placement. இது மிகச் சிறப்பான பயன் அளித்தது. 1990களில் இம்முறையை அறிமுகப்படுத்தி, விரிவாக்கியதால், பங்களாதேஷ் உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்தது.
அதன்பின், Fertilizer Deep Placement (FDP) என்ற பெயரில், யூரியாவை மட்டுமின்றி பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களையும் வேறுசில நுண்சத்துகளையும் சரியான விகிதத்தில் சேர்த்து சரியான ஆழத்தில் வைத்து பயிர்களுக்குச் சத்தளிப்பது என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னணியில் இருந்தது IFDC - International Feritilizer Development Center என்ற அமெரிக்காவிலிருந்து இயங்கும் அமைப்பு. உலகமெங்கும் உணவுப் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் உரப் பயன்பாட்டை உலகமெங்கும் பரப்ப ஆராய்ச்சிகளைச் செய்து, அத்துடன் நிற்காமல் விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்த உதவிய அமைப்பு இது. ஐரோப்பியக் கண்டத்தில் கம்யூனிசம் வீழ்ந்தபின் இரும்புத் திரையிலிருந்து வெளியேறிய கம்யூனிச நாடுகள் பலவற்றிலும் உரங்களை உற்பத்தி செய்ய உதவி, உணவுத் தன்னிறைவை உருவாக்கிக்கொள்ள வழிவகுத்தவர்கள். ஆசியாவில் பங்களாதேஷ் அவர்களுடைய செயலுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. ஐரோப்பாவில் அல்பேனியா ஒரு எடுத்துக்காட்டு. ஆப்பிரிக்காவில் வளமற்ற மண்ணுக்கு உரங்கள்மூலம் வளம் சேர்த்து விளைச்சலை அதிகப்படுத்தியதில் பெரும் பங்கு IFDC-க்கு உண்டு.
ஹேபர்-பாஷ் முறைமூலம் அம்மோனியா (அதிலிருந்து யூரியா) உருவாக்கப்பட்ட கதையை மிக அற்புதமாக எழுதிய தாமஸ் ஹேகர், IFDC-யின் 40 ஆண்டுகளைப் படம் பிடித்து எழுதிய புத்தகம்தான் "Feeding a Hungry World".
இதன் தலைமை அதிகாரியாகப் பல ஆண்டுகள் இருந்து மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர் அமிதாவா ராய். ஐஐடியில் படித்தபின் அமெரிக்காவில் கெமிகல் எஞ்சினியரிங் துறையில், உரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இவரைப் போன்றவர் குறித்து நம் நாட்டில் அதிகம் பேசப்படுவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நான் இந்தப் பெயரையே முதன்முதலில் கேள்விப்பட்டேன். இவரைக் குறித்து மேலும் தகவல்களைத் திரட்டவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
இயற்கை விவசாயம் நன்கு வளர்ந்து செழிக்கட்டும். அதே நேரம், நம் அனைவருக்கும் உணவளிக்கும் ரசாயன உரங்களைப் போற்றுவோம். அவற்றைச் சரியான முறையில், சரியான அளவில் நம் விவசாயிகள் பயன்படுத்திப் பலனைப் பெறட்டும்.
பாலில் யூரியா, சோப் பவுடர் கலக்கப்படுவது தெரிந்ததே.
ReplyDeleteஅண்மையில் மத்தியதுறை சுகாதார அமைச்சரும் நாட்டில் கிடைக்கும் பாலில் பாலின் ப்ராண்ட் வகைகளில் யூரியா கலப்படம்
செய்து இருப்பது 75 விழுக்காடு இருக்கிறது என்றே சொல்கிறார்.
ஆவின் பாலைக் காய்ச்சும்போதும் அது ஆறும்போதும் பாலின் மேலே ஒரு பிளாட்டிங் போன்ற கொழுப்பு அட்டை படிகிறது .
இதைப் பற்றி கேட்டால் ஒன்றும் சரிவர பதில் இல்லை.
நீங்கள் சென்னையில் இருந்தால் அல்லது வரும்போது காண்பிக்கிறேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.Sury-healthiswealth.blogspot.com
பத்ரி சார்..
ReplyDeleteதகவலுக்காக... விவசாய விஞ்ஞானி ஆர்.மாதவன் நேர்காணல் : http://tamilonline.com/thendral/article.aspx?aid=10617
தற்பொழுது உள்ள புவிச்சூழலில் காற்றுவெளியில் பயிர்வளர்சிக்கான காரணிகளில் சூரிய ஒளியும், கார்பன் அள்வு சாதகமாகவும், மண்வெளியில் மண்வெளியில் பெரும்பான்மையான காரணிகள் பாதகமாகவும் உள்ளது.
ReplyDeleteமண்வெளி சூழலில் மண்ணின் வளத்தினை அதிகரிப்பதில் அங்கக சத்து ( ஆர்கானிக்கார்பன்) பங்கு முதன்மையானது. அதன் வளம் குறைவதால் மண்சார்ந்தவிவசாயம் சிக்கலில் உள்ளது.
பெரும்பான்மையான பயிர் வளர்ச்சிக்கான காரணிகள் பலவும் இன்டண்சிவ் விவசாயத்தினால் இயற்கை உரத்தின் பயன்ப்பாடு குறைந்ததனால் மண்ணில் அங்கக சத்தின் அளவு மிகவும் குறைந்துள்ளது. பசுமை புரட்சி ஏற்பட்ட காலத்திற்கு முன் நிலத்தில் ஏற்கனவே கால்நடை கழிவுகளும், பயிர் கழிவுகளும் அதிக அளவில் இடப்படும் நடைமுறை இருந்து வந்ததால் மண்ணில் அங்கக சத்துகளின் அளவும் தற்பொழுதினை விட அதிக அளவில் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருந்துள்ளது. அங்கக சத்து மண்ணில் பயிர்சத்துகளினை வேர்களுக்கு ஏற்றவாறு மாற்றிடும் நுண்ணுயிரகளின் எண்ணிக்கையினை அதிக எண்ணிக்கையில் உயர்த்திடவும் உதவி உள்ளது. இதனால் பசுமைபுரட்சி ஏற்பட்ட காலத்தில் மண்ணில் இரசாய உரங்களின் மூலம் அளிக்கப்பட்ட பயிர் சத்துக்கள் பயிர்களின் வேர்மூலம் எடுத்துக்கொள்ள நுண்ணுயிரும், அங்கக சத்துகளின் அளவும் உதவியுள்ளது. கால ஒட்டத்தில் அங்கக சத்துகளின் அளவானது இயற்கை உரம்/ பயிர் கழிவு இடும் பழக்கத்தினை விவசாயிகள் நிறுத்தியதால் மிகவும் குறைந்துள்ளது. இதனால் பயிர்சத்துகளினை வேர்கள் எடுத்துக்கொள்வது குறைந்து மகசூல் சரிவினை கண்டது. மேலும் பசுமை புரட்சி ஏற்பட்ட பின் இரசாயன உரச்சத்தின் அதிக அளவில் எடுத்துக்கொள்ள பயிர்களின் தண்ணீர் தேவையும் அதிகரித்தது. இதனால் பின் வந்த காலத்தில் பாசனத்திற்கு பயன் படுத்திய நீர் அதிகரித்து மிகவும் ஆழ்கிணற்றில் இருந்து நீரினை பயன் படுத்தி விவசாயம் புரியும் நிலை ஏற்பட்டது, இதனால் மண்ணிற்கு அடியில் இருந்த பாறைகளில் இருந்து கரைந்து வந்த உப்புக்களும் மேல் மண்ணில் படிந்து விவசாய நிலத்தின் வளத்தினை குறைத்து பயிர் வளர்ச்கியினை பாதித்தது. இவ்வாறு ஏற்பட்ட நிலையினால் இயற்கை விவசாயம் என்ற தத்துவம் மீண்டும் சில இடங்களில் பிரபலடைந்து இயற்கை உர உபயோகம் அதிகரித்து இரசாயன உரம் உபயோகம் தவிர்து மண்ணின் வளத்தினை உயிர்ப்பித்து மீண்டிருந்த பயிரின் மகசூல் வீழ்ச்சியினை தடுத்து நிலை நிறுத்தியது.ஆனால் இம்முறையானது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுசெய்திட முடியாது. ம்ண்ணில் உயிர்தன்மையினை அங்கக சத்து தரும் இயற்கை உர உபயோகத்தினை அதிகரித்தும், பயிர் மகசூலுக்கான முக்கிய சத்துகளான மணிசத்து மற்றும் சாம்பல் சத்துகளுக்காக எளிய இரசாயன உரங்களாக அளிப்பதாலும் மண் வளத்தினை சீராக்கலாம். நமக்கு தேவை வளர்ச்சியே வாதமல்ல.
very good analysis.
Deletehttp://pandianinpakkangal.blogspot.in/2016/06/Iyarkaiya-rasayanama.html?m=1
ReplyDeletehttp://www.crawfordfund.org/wp-content/uploads/2014/02/CrawfordFund2009ConferenceProceedings.pdf
ReplyDeletehttp://www.fao.org/3/a-i5650e.pdf Family Farming: Meeting the Zero Hunger Challenge (276 pages)
ReplyDeletehttp://libcatalog.cimmyt.org/download/borlaug/79328.pdf Feeding a world of 10 Billion People
ReplyDeleteஅய்யா தங்களின் முதலாளித்துவ சார்பு , செயற்கை உரங்களைப் பாராட்ட வைக்கிறது. முதலாளித்துவம் தவிர்க்க இயலாதது எனில், அது பச்சை முதலாளித்துவம் ஆக வளரட்டும். சுற்றுச் சூழலைக் காப்ற வேண்டும்
ReplyDeleteஎன்ன ஏது என்று புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிகளால் கட்டமைக்கப்படும் சில விஷங்களைப் போலத்தான் இயற்கை விவசாயம் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.
ReplyDeleteமுன்பு விவசாயம், கால்நடை வளர்ப்பு எல்லாம் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக இருந்தது அதனால் இயற்கை விவசாயம் சாத்தியமாயிற்று, மேலும் அன்றைய விவசாயி தனக்கும் தனது கால்நடைகளுக்கும் கிடைத்தால் போதும் என்று திருப்தி அடைந்து கொண்டான். இப்போது இருக்கும் சொற்ப விவசாயிகள் அனைவருக்கும் சேர்த்து உற்பத்தி செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளான், அதனால் மாற்று வழிகள் கட்டாயம் அவசியம்.
யூரியா எளிதில் நீரிலும் காற்றிலும் கரையும். அதனால் பெருமளவு வீணாவது உன்மைதான். இதை தவிர்க்க நமது விவசாயிகள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் [உம் நெல் வயல்] வாயலில் நீரை தேய்க்கி வைக்காமல், சகதியாக இருக்கும் போது தூவுவார்கள். எளிதாக கரைந்து மண்ணுக்குள் சென்று விடும், நல்ல பலன் கொடுக்கும்.
யூரியாவில் நைட்ரஜன் NH2 வடிவில் உள்ளது அது NH3 ஆக மாறி பயிர்களின் வேர்களுக்கு நைட்ரஜனை அளிக்கிறது. அமோனியாவாக மாறும் போது காற்று மாசுபடுவதை தவிர்க்க இயலாது.
இதை தவிர்க்க அமோனியம் உப்புகள் [அமோனியம் சல்பேட், அமோனியம் குளோரைடு, அமோனியம் நைட்ரேட், அமோனியம் உப்பு கலந்த காம்ப்ளக்ஸ் உரங்கள்] பயன்பாட்டிற்கு வந்தன. அமோனியம் உப்பில் நைட்ரஜன் NH4 வடிவில் உள்ளது. இது நீரில் எளிதில் கரையாது. இதன் ப்ளஸ் மைனஸ் வேலன்ஸியால் மண்ணில் எளிதாக ஒட்டிக்கொள்ளும், மெதுவாக அமோனியாவாக மாறி வேர்களுக்கு நைட்ரஜனை கொடுக்கும்.
யூரியா, வயலில் தூவப்பட்ட மூன்றாம் நாள் பயிரில் மாற்றம் தெரியும், ஆனால் 15/20 நாட்களுக்குள் அது தனது வீரியத்தை இழந்து விடும்.
அமோனியம் உப்பு வயலில் தூவப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் பயிரில் மாற்றம் தெரியும். 40/50 நாட்கள் வரை வீரியத்தை இழக்காது.
நமது அரசு யூரியாவிற்கு அதிக மானியம் கொடுப்பதால் விலை குறைவு என்று சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்கள்.
நாம் எதை நோக்கி செல்ல வேண்டும் என்றால், வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் உள்ளது, அதை பயிர்களின் வேர்கள் கிரகித்தாலே போதும் வேறு உரங்கள் தேவையில்லை.
தக்கை பூண்டு என்று ஒரு தாவரம் உண்டு. வேகமாக உயரமாக வளரக்கூடியது, அது 40ஆம் நாளில் பூக்கும், அந்த சமயத்தில் அதன் வேர்களில் பாக்டீரியாக்கள் நிலைகொண்டிருக்கும், இந்த பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் இருந்து நைட்ரஜனை கிரகித்து பயிர்களின் வேர்களுக்கு அளிக்ககூடியது. இந்த தாவரம் பூக்கும் பருவத்தில் நெல் வயலில் சகதிக்குள் மக்க செய்யப்பட்டு, பின்னர் நெல் நடவு செய்யப்படும். இது நெல்லுக்கு அதிக அளிவில் தழைச்சத்தை கொடுக்கிறது. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு பாதியாக குறையும் வாய்ப்புள்ளது.
அசோஸ்பைரில்லம், ரைஸோபியம் போன்ற உயிர் உரங்கள் கிடைக்கின்றன இதுவும் வளிமண்டலத்திலும் மண்ணிலும் உள்ள தேவையான அங்கக சத்துகளை பயிர்களின் வேர்களுக்கு தருகின்றது.
ஆக நாம் "பயோ டெக்னாலஜி" துறையில் இதை எப்படி மேம்படுத்துவது என்ற சிந்தனையில் சென்றால் சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தவிர்க்கலாம் உற்பத்தியையும் பெருக்கலாம்.